மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

ஆண்டவரின் இரவு விருந்து - பெரிய வியாழன்
(மூன்றாம் ஆண்டு)


இன்றைய வாசகங்கள்:-
I. வி.ப. 12:1-8, 11-14
II. 1 கொரி. 11:23-26
III. யோவா. 13:1-15

இன்றைய தினம் மீட்பின் வரலாற்றில் ஓர் அன்பின் நாள். தன் குருத்துவத்தில் சாதாரண மனிதர்களுக்கு இயேசு பங்கு கொடுத்து, தன் உடலையும், குருதியையும் உணவாகக் கொடுத்த புனித நாள். அன்பின் தத்துவத்தைச் செயல் வடிவில் எண்பித்துக் காட்டிய உன்னதமான தினம் என்று கூறலாம். எனவேதான் இந்த நாளை பெரிய வியாழன் என்று அழைக்கிறோம்.

இன்றைய தினத்தில் நான்கு நிலைகளில் சிந்திப்பது நல்லது :-

எத்தனையோ மதங்கள் நமது பாரத நாட்டிலே, உலகத்திலே உள்ளன. அன்பைப் பற்றிப் போதிக்காத மதமே இல்லையென்று கூறலாம். ஆனால் இயேசுவின் அன்புக் கலாச்சாரம் ஒரு புதிய கலாச்சாரம். எந்த மதத்திலும் காணக் கிடைக்காத புதிய கட்டளை என்றால் அது மிகையாகாது. ஏனெனில் நான் உங்களிடம் அன்பு காட்டியது போல, நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் (யோவா. 13:34) என்ற புதிய கட்டளை வழங்குவதைக் கல்வாரியில் தானே நிறைவு செய்கிறார். தன் பாடுகளால், மரணத்தால், தன்னலமற்ற தியாகம் நிறைந்த, நிபந்தனையற்ற அன்பைக் காட்டுகிறார் இயேசு.

1. ஒரு போர் வீரன் - போர் முனையிலிருந்து தன் தாய் தந்தையுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினான். அப்பா! போர் முடிந்துவிட்டது. உடனடியாக ஊருக்கு வருகிறேன். பெற்றோருக்கு மிக்க மகிழ்ச்சி. என்னோடு என் நண்பன் ஒருவனையும் அழைத்து வருகிறேன். என்னை விட்டால் அவனுக்கு யாருமில்லை. போரில் இரண்டு கால்களையும் இழந்துவிட்டான். இதைக் கேட்ட பெற்றோரின் மனம் கசந்தது. ஒரு நாள், இரு நாள் என்றால் பரவாயில்லை . இரண்டு கால்களையும் இழந்தவனை எப்படிப் பராமரிப்பது என்று தடை செய்தார்கள். ஒரு வாரம் கழித்து பெற்றோருக்கு இந்த மகன் கடிதம் எழுதினான். இரண்டு கால்களையும் இழந்த ஒருவனை வைத்துக் கொண்டு சமாளிப்பது எவ்வளவு சிரமம் என்பது எனக்குப் புரிகின்றது. அதனால் நான் இங்கேயே தங்கிக் கொள்வதாக முடிவு எடுத்து விட்டேன். அங்கு உங்களுக்குப் பாரமாக இருக்க விரும்பவில்லை என்று எழுதினான். அப்போதுதான் இரண்டு கால்களையும் இழந்தவன் தன் மகன் என்பதை அறிந்துகொண்டார்கள்.

ஒருவனுக்கு ஊனம் என்றவுடன் அவனைப் பராமரிப்பதில் நிபந்தனை குறுக்கிடுவதை இந்த நிகழ்ச்சி காட்டுகிறது.

நம்மில் பலரிடம் உண்மையான அன்பு இல்லை. எல்லாம் நிபந்தனையோடு கூடிய அன்புதான். சில சமயங்களில் நம் கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால்தான் அடுத்தவர் மீது அன்பு வைப்போம். அவர்களைப் புகழ்வோம்.

பணிவிடை பெறுவதற்கன்று, பணிவிடை புரியவே வந்தேன் (மத். 20:28) என்ற தன் வாக்கிற்கு ஏற்ப, செயல்படுவதற்கு இறங்கி புரட்சியை உண்டாக்குகிறார். ஏனெனில் தலைவர்களின் கால்களைப் பிடிக்கும் இக்காலக் கட்டத்தில், தலைவருக்கெல்லாம் தலைவராம் இயேசு இங்கு சீடர்களின் கால்களைக் கழுவுகிறார். காலம் காலமாக இந்த உலகில், இந்த மனித சமுதாயத்தில் தலைவர்களுக்கு என்றுமே பஞ்சம் வந்ததில்லை. ஆனால் இன்றைய தலைமைத்துவம் எங்கே சென்று கொண்டிருக்கிறது? 400 ஆண்டுகளில் முகலாயர்கள் கொள்ளை யடித்ததைவிட, 150 ஆண்டுகள் வெள்ளையர்கள் சுரண்டிச் சென்றதைவிட, சுதந்திரம் பெற்ற இந்த 63 ஆண்டுகளில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அதிகார வர்க்கத்தினரே அதிக அளவில் கொள்ளையடித்து வருகிறார்கள்! இந்தத் தலைவர்களுக்குச் சுரண்டுவதற்காகவே சுதந்திரம் வழங்கப்பட்டதாக நினைக்கிறார்கள்! மதங்களைக் காப்பாற்ற மதவாதிகள் உண்டு. மொழிகளைக் காப்பாற்ற பண்டிதர்கள் உண்டு. கட்சிகளைக் காப்பாற்ற அரசியல்வாதிகள் உண்டு. ஆனால் மக்களைக் காப்பாற்ற யார் இருக்கிறார்கள்? சவப்பெட்டி ஊழல், அரசு நில ஊழல், மாட்டுத் தீவன ஊழல், முத்திரைத்தாள் மோசடி , காமன்வெல்த் மோசடி, விளையாட்டில் சூதாட்டம் என்றெல்லாம் மக்களைச் சுரண்டி வாழும் தலைவர்கள்!!

ஆனால் இயேசு சீடர்கள் மத்தியிலே மவுனமாக, புரட்சியின் செயலாகத் தன் சீடர்களின் கால்களைக் கழுவுகிறார். தோட்டி என்றாலே முகம் சுழிக்கும்! அதேபோலத்தான் இயேசு சீடர்களின் பாதங்களைக் கழுவிய போது சீடர்களே முகம் சுழித்தார்கள்.

ஒரு நாள் பட்டிமன்றம் நடந்தது. திருவள்ளுவர் சிறந்தவரா? அல்லது இயேசு சிறந்தவரா? என்று. தலைப்பே தவறாக இருந்தாலும் வாதத்திற்கு எடுத்துக் கொள்வோம். இரு அணிகளும் சிறப்பாக வாதிட்டார்கள். ஏனென்றால் திருக்குறளிலும் கவின்மிகு கருத்துகள் உண்டு. விவிலியத்திலும் சிறப்பு மிக்கச் சிந்தனைகள் உண்டு. ஆனால் இறுதியில் நடுவர் அவர்கள் இயேசுவே சிறந்தவர் எனத் தீர்ப்பு வழங்கினார். காரணம், இயேசு சொன்னதை வாழ்ந்து காட்டினார் என்பதற்கு விவிலியம் சாட்சி. ஆனால் வள்ளுவர் தான் சொன்னதைச் செய்துக் காட்டினாரா என்பதற்குச் சாட்சியம் இல்லை என்றார் நடுவர்.

ஆம்! இயேசு போதித்ததை வாழ்ந்தார்.

அன்று இரவு அப்பத்தையும், இரசத்தையும் எடுத்து, "இது என் உடல், இது என் இரத்தம்" என்று பிட்டு, பகிர்ந்து கொடுத்தார். மனித வரலாற்றில் இறைவன் தொடர்ந்து நம்மோடு இருக்கவே நற்கருணையை ஏற்படுத்தி கிறிஸ்தவ வாழ்வின் ஊற்றாகவும், உச்சகட்டமாகவும் தந்தார். நம்மை வாழ வைக்க தன்னையே பிட்டுக் கொடுத்தார்.

ஒரு பிச்சைக்காரன் வீடு வீடாகச் சென்று சோறு கேட்பான். ஒரு நாள் ஒரு வீட்டில் சோறு வாங்கியவுடன் வேகமாக நடந்து சென்றான். சோறு கொடுத்த அம்மையார் ஆச்சரியப்பட்டார் மறுநாள் பிச்சை எடுக்க வந்தவனைப் பார்த்து என்னிடம் சோறு வாங்கிக் கொண்டு வேகமாக எங்கே சென்றாய் என்று கேட்டபோது, வீதியின் கடைசியிலே ஒரு மரத்தின் அடியிலே ஊனமுற்ற பிச்சைக்காரன் சாப்பிட்டு நான்கு நாட்கள் ஆகிவிட்டது. நீங்கள் கொடுத்ததை அவனிடம் கொடுக்க வேகமாகச் சென்றேன் என்றான் அந்த பிச்சைக்காரன். பார்த்தீர்களா அன்பின் பகிர்தலை! ஆம்! இந்த நற்கருணை வாழ்வு நம்மையும் பிறருக்குப் பகிர்ந்து கொடுக்க இட்டுச் செல்ல வேண்டும். இயேசு செய்த இந்த மகத்தான பாஸ்காவைத் தொடர்ந்து நிறைவேற்ற குருத்துவத்தை ஏற்படுத்தினார். ஆம்! குருக்கள் அல்லாதோர் பொதுக் குருத்துவத்தில் திருமுழுக்கால் பங்கு பெறுகிறீர்கள். நாங்களோ பணிக்குருத்துவத்தால் இத் திருநிகழ்ச்சியை நிறைவேற்ற அழைக்கப்பட்டுள்ளோம்.

ஏழைகள், தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், கைம்பெண்கள், வலிமையற்றோர், பிணியுற்றோர், ஊனமுற்றோர், முகவரி இல்லாதவர்களின் வாழ்வுக்காக இயேசுவைப் போல பலிப் பொருளாக ஒவ்வொரு நாளும் மாறுவதே நம் குருத்துவ வாழ்வு. போதகரும், ஆண்டவருமாகிய நான் உங்கள் பாதங்களைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவரின் பாதங்களைக் கழுவ வேண்டும் (யோவா. 13:14) என்றார் இயேசு. நாம் உட்கொள்ளும் நற்கருணை நம் மத்தியில் அன்றாடம் வாழும் நம் அடித்தட்டு மக்களின் நலனில் அக்கறை காட்டும் செயல்பாட்டிற்கு நம்மை இட்டுச் செல்ல வேண்டும். இயேசுவின் சீடர்கள் தொண்டராக, பணியாளராகத்தான் இருக்க முடியும். இல்லையேல் அவர்கள் சாத்தானின் சீடர்கள்!

ser

இவர்களே என் உண்மையான சீடர்கள்

நமது ஆண்டவர் இயேசுவின் வாழ்க்கையின் கடைசி நாள்கள்.

இயேசு தாம் அன்பு செய்த பன்னிரெண்டு சீடர்களை அழைத்து, பந்தியிலே அமர்ந்து, துண்டைத் தமது இடுப்பில் கட்டிக்கொண்டு, அவர்களது பாதங்களைக் கழுவினார்!

கால்களைக் கழுவுதல் என்பதற்கு அர்த்தமென்ன? கால்களைக் கழுவுவதற்கு அன்பு செய்தல் என்பது அர்த்தமாகும். இயேசு பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, இறந்து, உயிர்த்த இஸ்ரயேல் நாட்டிலே இஸ்ரயேல் மக்கள் அவர்களால் அன்பு செய்யப்படுகின்றவர்களின் கால்களைத் தண்ணீரால் கழுவி அவர்களை வீட்டிற்குள் வரவேற்று உபசரிப்பார்கள்.

நமது ஆசியா கண்டத்திலே பல நாடுகளில் இந்தப் பழக்கம் இன்றும் நடைமுறையில் உண்டு! சில ஆண்டுகளுக்கு முன்னால் நான் ஒரு பங்கிற்கு பங்குத் தந்தையாக நியமிக்கப்பட்டேன்!

நான் அப்பங்கில் முதன் முதலில் கிராமத்துக்குள் நுழைந்தபோது ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் என்னை நிற்க வைத்து என் பாதங்களைக் கழுவினார்கள்! பிறகுதான் வீட்டுக்குள் வரவேற்று உபசரித்தார்கள்! ஆகவே பாதம் கழுவுதல் என்பது அன்பிற்கு அடையாளம்.

புனித யோவான் எழுதிய முதல் திருமுகத்தில் 4:8- இல் கடவுள் அன்புமயமானவர் என்று படிக்கின்றோம்.

அன்பிலே இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று நம்மை அன்பு செய்பவர்களை நாம் அன்பு செய்வது! இதற்குப் பெயர் மனித அன்பு. மற்றொரு அன்பு நம்மை அன்பு செய்யாதவர்களையும், வெறுப்பவர்களையும், பகைப்பவர்களையும் நாம் அன்பு செய்வது! இதற்குப் பெயர் இறை அன்பு. இதோ இன்று அவரை வெறுத்தவர்களின், அவரைத் தனியாக விட்டுவிட்டு ஓடக்காத்திருந்தவர்களின் பாதங்களை இயேசு கழுவி, பகையாளர்களை அன்பு செய்ய அழைக்கின்றார்.

இயேசு 12 திருத்தூதர்களின் பாதங்களைக் கழுவப் போகின்றார்! இன்று எப்படிப்பட்டவர்களின் பாதங்களை இயேசு கழுவுகின்றார் எனப் பாருங்கள்.

முதலில் திருத்தூதர்களின் தலைவராக விளங்கிய புனித பேதுருவை எடுத்துக்கொள்வோம். இவர் மூன்று முறை இயேசுவை மறுதலித்தவர்!

உனக்கு இயேசுவைத் தெரியுமா? என்று கேட்டபோது, தெரியாது, தெரியாது, தெரியவே தெரியாது என்று சொன்னவர்.

* இயேசு அவரை மன்னித்து அவருடைய பாதங்களைக் கழுவினார்!

யூதாஸ் காசு காசு என்று பிசாசு போல அலைந்தவன்! முப்பது வெள்ளிக்காசுகளுக்காக இயேசுவைக் காட்டிக்கொடுத்தான்! முத்தம்! அது அன்பின் அடையாளம்! சரியான ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி இயேசுவை சிலுவைச் சாவுக்குக் கையளித்தவன் யூதாஸ். ஆனால் இயேசு அவனை மன்னித்துவிட்டார்! அவனுடைய பாதங்களைக் கழுவினார்.

செபதேயுவின் மக்கள் யாக்கோபும், யோவானும் பதவி ஆசை பிடித்தவர்கள்! (மாற் 10:35 - 41). அம்மாவைத் தூண்டிவிட்டார்கள்! நான் எருசலேமுக்குப் போகவேண்டும்! குற்றமற்ற என்னைக் குற்றவாளியாக்கி, பாவமற்ற என்னைப் பாவியாக்கி, என்னைச் சிலுவையில் அறைந்து கொன்றுபோடுவார்கள்! ஆனால் நான் உயிர்த்தெழுவேன் என்றார் இயேசு. அப்பொழுது சீடர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? நீங்க கவலைப்படாதீர்கள் ஆண்டவரே! நாங்க உங்களுக்கு ஆறுதலாக இருப்போம் என்று சொல்லியிருக்கவேண்டும்!

ஆனால்! அப்படியெல்லாம் யாக்கோபும், யோவானும் சொல்லாமல், அம்மாவைத் தூண்டிவிட்டு, பதவி கேட்கச் சொன்னார்கள்.

அந்த அம்மா சோகமே உருவாக நின்ற இயேசுவிடம் போய், ஆண்டவரே நீங்க செத்து உயிர்த்த பிறகு என் மகன்கள் இருவரையும் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் உட்கார வச்சிக்கிருங்க அப்படின்னாங்க.

வீடு பற்றி எரிந்து கொண்டிருந்தது! ஒரு தாத்தா போயி வீட்டுகாரருகிட்டே, நெருப்பை அணைச்சிடாதேப்பா, கொஞ்சம் சுருட்டைப் பத்தவச்சிக்கிறேன் அப்படின்னாராம்.

இயேசு பதவி ஆசை பிடித்த யோவானையும் யாக்கோபையும் மன்னித்து விட்டு அவர்களுடைய பாதங்களையும் கழுவினார்.

மாற்கு 9 : 33 - 37; திருத்தூதர்கள் அத்தனை பேரும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று சொல்லி, நீனா, நானா என்று சண்டை போட்டார்கள்.

ஆனால் இயேசு எல்லாரையும் மன்னித்துவிட்டார். மன்னித்து அவர்களுடைய பாதங்களைக் கழுவினார்.

பாதங்களைக் கழுவிய பிறகு இயேசு திருத்தூதர்களைப் பார்த்து, நான் உங்களுக்கு முன் மாதிரி காட்டினேன் ! நீங்களும் என்னைப் போலவே வாழுங்கள் என்றார்!

ஆம். இன்று நம் பகைவர்களை அன்பு செய்ய, இயேசு ஆண்டவர் நம்மை அழைக்கின்றார்! முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்பதற்கு இதோ ஓர் உதாரணம் :

23-02-2002-ஆம் ஆண்டு மாலை மலர் என்னும் பத்திரிகையில் வந்த செய்தி இது ! அமெரிக்காவில் வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் என்னும் பத்திரிகை ஒன்று உண்டு! அதற்கு செய்தி சேகரிப்பதற்காக டேனியேல் என்பவர் பாகிஸ்தானிலுள்ள கராச்சி நகருக்குச் சென்றார்! அவரைத் தீவிரவாதிகள் கடத்திச் சென்றார்கள்.

ஒரு நாள் தீவிரவாதிகள் டேனியேலின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்கள். கொலை செய்யப்பட்ட காட்சியை வீடியோ எடுத்தார்கள். பாகிஸ்தான் அரசுக்கு அனுப்பிவைத்தார்கள். செய்தி அமெரிக்க அரசுக்கு எட்டியது. அப்போது அமெரிக்க நாட்டின் அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் கொலையாளிகளை சும்மா விடமாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்தார்.

டேனியேலின் மனைவியின் பெயர் மரியேன் - மாதாவின் பெயர். அவருக்கு 38 வயது. ஏற்கனவே ஒரு குழந்தை உண்டு! அப்போது 7 மாத கர்ப்பிணி.

அவர் கண்ணீர் மல்க அறிக்கை ஒன்றை பத்திரிகைளில் வெளியிட்டார். "என் கணவரை ஈவு இரக்கமின்றி கொலைசெய்துவிட்டார்கள். அவர் எந்தக் குற்றமும் செய்யாதவர்! அவரைக் கொன்று விடாதீர்கள் என்று கடத்தல்காரர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன். ஆனால் அவர்கள் நான் சொன்னதைக் கேட்கவில்லை.

என் கணவரைக் கொன்றவரைப் பழிவாங்க வேண்டாம். பழிவாங்குவது மிகவும் எளிது! தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் வெல்ல முடியாது. அன்பு, மனித நேயம் இவற்றால் மட்டுமே வெல்ல முடியும்" என்றார்.

இவர் ஓர் உண்மையான கிறிஸ்தவர்.

இந்தப் பெண்ணைப் போல வாழத்தான் இன்று நம்மை இயேசு அழைக்கின்றார்!

சில நேரங்களில் சில மனிதர்களைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்தால் சிரிப்பு வரும். காரணம் இவர்கள் எதையாவது சாதிக்க வேண்டும் என்பதற்காகப் பேசுவதில்லை! எதையாவது பேச வேண்டும் என்பதற்காகப் பேசுகின்றார்கள்.

இயேசு! அவர் போதித்ததைச் சாதித்துக் காட்டினார். அவர் மலைப் பொழிவில் மத் 5: 39-இல் உனது வலது கன்னத்தில் யாராவது அறைந்தால் உன் இடது கன்னத்தைத் திருப்பிக்காட்டு என்கின்றார். திருப்பி அறையாதவர்களைப் பார்த்து அறைந்து பாருங்கள்!

. யாராவது நம்மை அறைந்தால் அது நமது வலது கன்னத்தில் விழாது! இடது கன்னத்தில் தான் விழும்! இஸ்ரயேல் நாட்டிலே யாராவது ஒருவர் நான்கு பேர் நடுவிலே ஒருவரை அவமானப்படுத்த விரும்பினால் அவரை அவர் புறங்கையால் அறைவார் அல்லது அவரது இடது கையால் அறைவார்.

இயேசு நம்மைப் பார்த்து, சாதாரணமாக திடீரெனக் கோபப்பட்டு உங்களை அறைபவர்களை நீங்கள் மன்னித்தால் மட்டும் போதாது; திட்டமிட்டு உங்களைப் பகைப்பவர்களையும் அன்பு செய்யுங்கள் என்கின்றார்.

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் - இது பழைய கட்டளை! எதிரிகளை அன்பு செய் - இது புதிய கட்டளை.

நாம் புதிய கட்டளையைப் பின்பற்றினால் கடவுள், இதோ இந்த மக்கள் வழிபாட்டை வாழ்க்கையாக்கியிருக்கின்றார்கள் ! இவர்களை நான் வாழவைப்பேன். இவர்களே என் உண்மையான சீடர்கள், கிறிஸ்தவர்கள் எனச் சொல்லி நம்மீது பாசத்தைப் பொழிவார். எதிரிகளை மன்னிக்கும் மனத்தை நற்கருணை ஆண்டவரிடம் கேட்போம் (இரண்டாம் வாசகம்). முதல் வாசகம் சுட்டிக்காட்டும் ஆட்டின் இரத்தமாக நமது மன்னிப்பு இருக்கட்டும்.

மேலும் அறிவோம் :

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்

பொறுத்தாரைப் பொன் போல் பொதிந்து (குறள் : 155).

பொருள் :

அயலார் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்ளாமல் அவரைத் தண்டிப்போரைச் சான்றோர் ஒரு பொருளாகக் கருதி மதிக்கமாட்டார்கள். ஆனால் அயலார் செய்திடும் தீமையைப் பொறுத்தாற்றிக்கொள்வோரை அறவோர் அருமையும் அழகும் மதிப்பும் மிக்க பொன்னைப் போன்று போற்றிப் பேணிக்கொள்வர்.

உறவுகளின் கொண்டாட்டம்

சில ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் முத்துக் குளிப்பவர்கள் கடலுக்கடியில் 400 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிப் போன ஸ்பெயின் நாட்டுக் கப்பல் ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதில் பல விலை உயர்ந்த பொருள்கள் இருந்தன. அழகான கலைநயமிக்க வேலைப்பாடு கொண்ட தங்க மோதிரம் ஒன்று கிடைத்தது. நீட்டிய கை ஒன்று இதயத்தை ஏந்தியிருப்பது போன்ற சித்தரிப்பு. அதனடியில் "இதைவிட மேலாக உங்களுக்குக் கொடுப்பதற்கு வேறொன்றும் இல்லை" என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. திருமண நாளன்று அளிக்கப்பட்ட மோதிரம் அது.

இன்றைய விழாவின் உட்பொருள் உணர்த்துகின்ற வார்த்தைகள். இயேசு தன் உடலையும் இரத்தத்தையும் நமக்கு வழங்கி ''இதைவிட மேலாக உனக்குக் கொடுப்பதற்கு என்னிடம் வேறொன்றும் இல்லை” என்று நம் ஒவ்வொருவரிடமும் கூறுகின்ற நாள் இது!

ஆண்டவராய், மீட்பராய் நாம் ஏற்றுக்கொண்ட தலைவன் இயேசு - நமக்காகத் தன்னையே பலியாக்குபவர். நற்கருணை என்பது தியாகப்பலி - நமக்காகத் தன்னையே உணவாக்குபவர். நற்கருணை என்பது திருவிருந்து. - நம்மோடு என்றும் உடன் இருப்பவர். நற்கருணை என்பது இறைப் பிரசன்னம்.

இந்த முப்பரிமாணம் கொண்ட நற்கருணையை இப்போதெல்லாம் இந்த முப்பரிமாணத்தையும் உள்ளடக்கிய புதியதொரு கோணத்தில் பார்க்கிறோம். நற்கருணை என்பது "ஒரு சமுதாய உறவின் கொண்டாட்டம்" என்ற கருத்து வளர்ந்து வலுப்பெற்று வருகிறது. உணவு உடலையும் உயிரையும் மட்டுமா வளர்க்கிறது? மாறாக நம் உறவையும் உணர்வையும் வளர்க்கிறது.

இயேசு தன் இறுதி இரவுணவைப் பாஸ்கா உணவாகக் கொண்டாடினார் என்கின்றனர் நற்செய்தியாளர்கள் (மத். 26:17, மார்க்.14:12, லூக்.22:15). எனவே இயேசுவின் இறுதி உணவுக்கும் இஸ்ரயேலரின் பாஸ்கா விழாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

தொழில் ரீதியாக இஸ்ரயேலில் இரு பிரிவினர். ஆடு மேய்ப்பவர்கள், விவசாயம் செய்பவர்கள். ஆடு மேய்த்தவர்கள் மேய்ப்பு நிலம் தேடி இடம் விட்டு இடம் மாறும்போது ஆடுவெட்டி வழிபட்ட விழா பாசா' என்பதாகும். விவசாயம் செய்தவர்கள் அறுவடையின்போது புதிய தானியங்களிலிருந்து அப்பம் செய்து கொண்டாடிய விழா மசோது' எனப்படும். இரு சமுதாயத்தினரும் தங்கள் கூட்டு உணர்வைக் கொண்டாடும் வகையில் காலப் போக்கில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டன.

எகிப்தியரின் அடிமைத் தளையில் இணைந்த இச்சமுதாயம் தங்கள் விடுதலைக்கு முந்திய இரவு இவ்விரு விழாக்களையும் இணைத்துத்தான் பாஸ்கா' வாகக் கொண்டாடியது. இவ்வாறு யூத சமுதாயத்தின் விடுதலை விழாவாக உருப்பெற்றது பாஸ்கா . ஒரு சமுதாயத்தின் ஒட்டு மொத்தப் பங்கேற்பாக, பகிர்ந்து கொண்ட உணவில் பூத்த புதிய உறவாக இஸ்ரயேலரிடையே நிலவி வந்த அந்த விடுதலை விழாவைத்தான் இயேசு கொண்டாடினார். தனது தியாக வாழ்வின் அருள் சின்னமாக மாற்றினார் - விடுதலை வாழ்வே இலட்சியம், பணி வாழ்வுக்கே அர்ப்பணம், தியாகப் பலி வாழ்வே செயல்பாடு என்ற உணர்வோடு.

அப்படியானால் நமது நற்கருணை வழிபாடு ஒரு சமுதாய உறவுக் கொண்டாட்டமாக இருக்க வேண்டாமா? இயேசு தமது 12 சீடர்கள் அடங்கிய சிறு சமுதாயத்துடன் பாஸ்காவைக் கொண்டாடினார். தன்னைக் காட்டிக் கொடுக்கப் போகும் யூதாசையும் தன்னை மறுதலிக்கப் போகும் பேதுருவையும் கூடப் பந்தியில் பங்கெடுக்க அழைத்தார். துரோகி யூதாசைக் கூட நண்பா' என்று அழைத்த அன்பு இயேசுவினுடையது. அன்பு செய்பவர்களை அன்பு செய்வது எளிது. அன்பு செய்யாதவர்களை அன்பு செய்வது கடினம். இத்தகைய கடினமான உறவுக்கு அனைவரையும் அழைக்கிறார். இயேசுவின் பந்தியில் ஏற்றத்தாழ்வுக்கு, பிரிவினைக்கு இடமில்லை. பலி செலுத்த வரும்போது மனத்தாங்கலா , முதலில் சமாதானம் பிறகுதான் காணிக்கை. இதுதானே இயேசுவின் அருள்வாக்கு, அணுகுமுறை!

"அன்பின் அருள் அடையாளம்” என்ற திருத்தந்தை 16ஆம் ஆசீர்வாதப்பரின் திருத்தூது மடலில் 3 முக்கிய உண்மைகளைச் சுட்டிக் காட்டுகிறார்.


1. நற்கருணை நம்பப்பட வேண்டிய மறைபொருள்.
2. நற்கருணை கொண்டாடப்பட வேண்டிய மறைபொருள்.
3. நற்கருணை வாழப்பட வேண்டிய மறைபொருள்.

நற்கருணையில் இயேசு பிரசன்னமாய் இருக்கிறார், பலியாக ஒப்புக் கொடுக்கப்படுகிறார், உணவாக உட்கொள்ளப்படுகிறார். நாம் இவற்றை நம்புகிறோம். இதில் பெரிய பிரச்சனை இல்லை. அவ்வாறே ஒவ்வொரு கணமும் உலகின் எங்கோ ஒரு மூலையில் நற்கருணை கொண்டாடப்படுகிறது. இதிலும் சிக்கல் எதுவுமில்லை. ஆனால் நற்கருணை மறைபொருளை நாம் வாழ்ந்து காட்டுகிறோமா?

திருத்தந்தை 2ஆம் அருள் சின்னப்பர் தான் இறப்பதற்கு முன் பெரிய வியாழனன்று குருக்களுக்கு வழங்கிய மையச் செய்தி: ''இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் உடல், சிந்தப்படும் இரத்தம். இந்த வார்த்தைகள் வெறும் வாய்ப்பாடாக மட்டும் அமையாமல் வாழ்க்கை முறையாக வடிவெடுக்க வேண்டும். எனவே நற்கருணை வழிபாட்டில் பங்கேற்கும் குருக்களாகட்டும் பொது நிலையினராகட்டும் தங்கள் வாழ்வைப் பிறருக்காகப் பலியாக்க வேண்டும்.”

தமிழகத்தின் வடக்கு மாவட்டம் ஒன்றில் ஒரு பங்கு. ஆலயத்தின் முன் வாசலில் ஒரு பெரிய பாறாங்கல். அதனைத் தொட்டுக் கும்பிட்டு விட்டுத்தான் திருமணமாகும் இளைஞன் கோவிலுக்குள் நுழைய வேண்டும். இது ஏன்? எப்படி இந்தப் பழக்கம் வந்தது? யாருக்கும் பதில் தெரியவில்லை . மிக வயதான ஒருவர் விளக்கினார். ''இது இளைஞனின் வீரத்தை எண்பிப்பதற்காக. இது தமிழ்க் கலாச்சார மரபும் கூட. அந்தக் கல்லைத் தூக்கித் தலைக்குமேல் கொண்டு போய் பின்னால் போட வேண்டும். அதன்பிறகுதான் ஆலயத்தில் தாலி கட்டுவர். காலப்போக்கில் தலைக்கு மேல் தூக்கிப் பின்னால் போட்ட நிலை மாறி, தலைவரை, கழுத்துவரை, இடுப்பு வரை, முட்டி வரை என்றாகியது. கடைசியாகத் தூக்க முடியாத நிலை. தூக்க முடியவில்லை என்பதற்காகத் திருமணத்தை நிறுத்த முடியுமா? எனவே தொட்டுக் கும்பிட்டாவது கோவிலுக்குள் நுழையட்டும் என்றானது.

தூக்க முடியவில்லை என்பதால் தொட்டுக் கும்பிடுவது போல, நற்கருணையை வாழ முடியவில்லை என்பதால் வணங்கி ஆராதித்துத் திருப்தி அடைகிறோமா?


வாழ்க்கை என்பது உறவுகளின் சங்கமம்!
வழிபாடு என்பது உறவுகளின் கொண்டாட்டம்!

பேருந்து ஒன்றில் ஒரு பிச்சைக்காரன் கையை நீட்டி பயணிகளிடமிருந்து காசு வாங்கிக் கொண்டிருந்தான். அதே பேருந்தில் நடத்துனரும் கையை நீட்டி பயணிகளிடமிருந்து காசு வாங்கிப் பயணச் சீட்டைக் கொடுத்துக்கொண்டிருந்தார். நடத்துனர் பிச்சைக்காரனிடம், "நீயும் கையை நீட்டி காசு வாங்கிக் கொண்டிருக்கிறாய். நானும் கையை நீட்டி காசு வாங்கிக் கொண்டிருக்கிறேன், யார் பிச்சைக்காரன? யார் நடத்துனர் ? என்ற வேறுபாடு தெரியாமல் போய்விட்டது. மரியாதையாய் பேருந்திலிருந்து கீழே இறங்குடா!" என்று கூறினார்.

இக்காலத்தில் குருக்கள் செய்துவரும் பல பணிகளைப் பொதுநிலையினர் செய்து வருவதால், பொதுநிலையினர்களுக்கும் குருக்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு மங்கிக்கொண்டு வருகிறது. இக்காலக்கட்டத்தில் பெரிய வியாழனாகிய இன்று குருக்களின் தனித்தன்மை என்ன என்பதையும், அவர்கள் தங்கள் தனித்தன்மையை இழக்காமல் பொதுநிலையினருடன் இணைந்து செயல் ஆற்றுவது எவ்வாறு என்பதையும் பற்றிச் சிந்திப்பது நல்லது.

பொதுநிலையினர், திருப்பணியாளர்கள் இதுவரை ஆற்றிவந்த ஒரு சில பணிகளைச் செய்வதால் அவர்கள் திருப்பணியாளர்கள் ஆவதில்லை . ஒருவரைத் திருப்பணியாளராக ஆக்குவது அவர் பெறும் திருப்பட்டம், திருப்பட்டங்கள் மூன்று. அவை முறையே, திருத்தொண்டர் பட்டம், குருப் பட்டம், ஆயர் பட்டம். இப்பட்டங்களில் ஏதாவது ஒன்றைப் பெறாதவர்கள் திருப்பணியாளர்கள் அல்ல என்பதை உணர்க,

இன்றையச் சூழலில் குருக்கள் தேவையா? நற்கருணை இன்றித் திருச்சபை இல்லை; குருக்கள் இன்றி நற்கருணை இல்லை, எனவே குருக்கள் திருச்சபைக்குத் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இரண்டாவது வத்திக்கான் சங்கம் மிகவும் தெளிவாகக் கூறுகிறது: விசு வசிப்போருக்கு எவரும் திருமுழுக்கு அளிக்கலாம் என்றாலும், குரு ஒருவரே மறையுடலை உருவாக்கும் அலுவலை நற்கருணைப்பலி மூலம் நிறைவேற்ற முடியும் (திருச்சபை, எண் 17).

குருத்துவம் என்னும் திருவருள்சாதனத்தால் குருக்கள் அழியா முத்திரையுடன் திருப்பணியாளர்கள் ஆகின்றனர். கிறிஸ்துவின் பெயரால் மக்களுக்குப் போதித்து, மக்களைப் புனிதப்படுத்தி, மக்களை வழிநடத்து கின்றனர். இப்பணிகளை அவர்கள் கிறிஸ்துவின் பெயரால், மறு கிறிஸ்துவாக, கிறிஸ்துவின் ஆளுமையில் ஆற்றுகின்றனர். குருக்கள் மட்டுமே திருப்பலியில் அப்பத்தையும், இரசத்தையும் கிறிஸ்துவின் திருவுடலாகவும், திரு இரத்தமாகவும் மாற்ற முடியும்,

அவர்கள் மட்டுமே ஒப்புரவு அருள் அடையாளத்தில் மக்களின் பாவங்களை மன்னிக்க முடியும். எனவே பொதுநிலையினர் ஒருக்காலும் குருக்களின் இடத்தை நிரப்ப முடியாது. குருக்கள் திருச்சபைக்குத் தேவையில்லை என்ற நிலை உருவாக முடியாது,

நற்கருணை எவ்வாறு விசுவாசத்தின் மறைபொருளோ, அவ்வாறே குருத்துவமும் விசுவாசத்தின் மறைபொருள், விசுவாசமின்றிக் குருத்துவத்தையோ குருக்களையோ ஏற்க முடியாது. எந்தக் குருவும் குருத்துவப் பணிக்குத் தகுதியற்றவர், திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "எங்களுக்குத் தகுதியில்லை . எங்கள் தகுதி கடவுளிடமிருந்தே வருகிறது." (2 கொரி 3:5). கடவுள் தகுதியற்ற மனிதர்களைத் தேர்ந்தெடுத்து தன்னுடைய பணிக்குத் தகுதியுள்ளவர்களாக மாற்றுகிறார். இரண்டாம் நற்கருணை மன்றாட்டில், "உம் திருமுன் நின்று ஊழியம் புரியத் தகுந்தவர்களென எங்களை ஏற்றுக்கொண்டீர். எனவே உமக்கு நன்றி செலுத்துகிறோம்" என்று குரு கூறுகின்றார். குருக்களை மக்கள் மதித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்கள் கிறிஸ்துவின் பிரதிநிதிகள், கிறிஸ்து தம் சீடர்களிடம் கூறினார், "உங்களுக்குச் செவிசாய்ப்பவர் எனக்குச் செவிசாய்க்கிறார். உங்களைப் புறக்கணிப்பவர் என்னைப் புறக்கணிக்கிறார். என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்" (லூக் 10:16).

ஒரு குரு யார்? அவருடைய பணிகள் எத்தகையவை என்பதைப் பிரஞ்சுக் குரு லக்கோடர் பின்வருமாறு விவரிக்கிறார். "குரு உலகில் வாழ்கின்றவர். ஆனால் உலகத்தைச் சாராதவர். எந்தக் குடும்பத்தையும் சாராது எல்லாருக்கும் உறவினர். துன்பம் துடைத்து இன்பம் பெருக்கும் இறை அன்பர். இரகசியம் அறிந்து இறைபணி ஆற்றுகின்றவர், அன்பை வழங்க அவருக்கு ஓர் அனல் நெஞ்சம். கற்பைக் காக்க அவருக்கு ஒரு கல் நெஞ்சம். திருமறை நவின்று அருட்கரம் வழங்கும் ஆன்மவேடர், அருள் சாதனங்களை வழங்கி அவனியோர் கரைசேர விழைபவர், கடவுளே! இது என்ன வாழ்வு! அது உம்முடைய வாழ்வு! ஓ இயேசு கிறிஸ்துவின் குருவே!"

"இயேசுவின் இதய அன்பே குருத்துவம்" என்று குருத்துவத்திற்கு இலக்கணம் வகுத்த புனித ஜான் மரிய வியான்னி கூறுகின்றார். “ஒரு குரு யார்? என்பதை இம்மையில் முழுமையாக உணர்ந்தோமென்றால், நாம் இறந்துவிடுவோம், பயத்தினால் அல்ல. அன்பினால்." கிறிஸ்துவின் பன்னிரு சீடர்களில் ஒருவர் அவரைக் காட்டிக்கொடுக்க, ஒருவர் அவரை மறுதலிக்க, பாடுகளின்போது மற்றவர்கள் அனைவரும் (யோவானைத் தவிர) ஓடிப்போனார்கள். எனவே, இக்காலத்திலும் ஒருசில குருக்கள் திசைமாறிச் செல்வதைக் கண்டு அதிர்ச்சி அடையத் தேவையில்லை. குருத்துவ அழைத்தலை உதறிவிட்டு ஓடிப்போனக் குருக்களைப்பற்றிக் கடுமையாக விமர்சனம் செய்வதைவிட தங்கள் அழைத்தலில் நிலைத்து நிற்கும் குருக்களுக்காகக் கடவுளுக்கு நன்றி கூறவேண்டும். கிறிஸ்து, "தந்தையே! என் சீடர்களை உலகிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் மன்றாடவில்லை. தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன்" (யோவா 17:15) என்று மன்றாடியதுபோன்று, நாமும் மன்றாடுவோம்.

குருக்களின் பணிக்குருத்துவம் பொதுநிலையினரின் பொதுக்குருத்துவத்திலிருந்து தன்னியல்பிலேயே வேறுபட்டது 61னினும், இரண்டும் ஒன்றை ஒன்று தழுவியுள்ளது. ஓர் இளங் குருமட அதிபர் மாணவர்களிடம், "நீங்கள் ஒழுங்காக நடக்கவில்லையென்றால் உங்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவேன்" என்று கூற, ஒரு மாணவன் எழுந்து அதிபரிடம், "எங்களை அனுப்பிவிட்டு நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று திருப்பிக் கேட்டபோது, அதிபர் வாயடைத்து நின்றார். அவ்வாறே பொதுநிலையினர் இல்லையென்றால், குருக்கள் என்ன செய்ய முடியும்? பொதுநிலையினரின் பொதுக் குருத்துவத்தைச் செயல்படுத்தவே குருக்களின் பணிக்குருத்துவம் உள்ளது. பொதுநிலையினரும் தங்கள் வாழ்க்கை நிலைக்கேற்ப, கிறிஸ்துவின் போதிக்கும். புனிதப்படுத்தும், வழிநடத்தும் முப்பெரும் பணிகளிலும் பங்கு பெறுகின்றனர். அனைத்துக் காரியங்களிலும் குருக்களுக்குப் பொதுநிலையினரின் ஒத்துழைப்புத் தேவை. எனவே குருக்கள் பொதுநிலையினரின் அழைத்தலையும் பணியையும் ஏற்று, மதித்து, ஊக்கவிக்க வேண்டும்,

இல்லறமும் துறவறமும் திருச்சபைத் தாயின் இரண்டு நுரையீரல்கள் போன்றவை. இவற்றில் ஒன்று பாதிக்கப்பட்டாலும் மற்றொன்றும் பாதிக்கப்படும். குருக்களும் பொதுநிலையினரும் தம்தம்) தனித்தன்மையை மதித்து, இருவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே திருச்சபை மக்கள் நடுவில் கிறிஸ்துவின் அருளடையாளமாகச் செயல்பட முடியும். அதாவது. மீட்பைக் குறித்துக் காட்டும் அடையாளமாகவும் அம்மீட்பை வழங்கும் கருவியாகவும் செயல்பட முடியும்.

பொதுநிலையினரும் குருக்களும் பெரிய வியாழன் அன்று தீவிரமாகச் சிந்தித்து செல்பட வேண்டியவை பின்வருமாறு:

1.பெரிய வியாழன் மட்டும் பன்னிருவரின் பாதங்களைக் கழுவும் சடங்கை நடத்தினால் போதாது. ஒவ்வொரு நாளும் நாம் நம்மோடு இருப்பவர்களின் பாதங்களைக் கழுவ வேண்டும், அதாவது. மற்றவர்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டும், ஏனெனில், "கிறிஸ்து தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்காக வந்தார்" (மாற் 10:45).

2.“இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்," "இது உங்களுக்காகச் சிந்தப்படும் என் இரத்தம்." இவ்வார்த்தைகள் வசீகர வாய்ப்பாடாக மட்டுமல்ல, அவையே நமது வாழ்க்கை முறையாகவும் மாற வேண்டும். நாள்தோறும் நாம் நம்மை பிறரின் மேம்பாட்டிற்காகக் கையளிக்க வேண்டும். அதாவது, பலிவாழ்வு வாழ வேண்டும். பலி ஒப்புக்கொடுப்பவர்களாக மட்டுமல்லாமல், பலிப்பொருளாகவே மாற வேண்டும்

உங்களுக்குப் புரிந்ததா?

ஆண்டவரின் இராவுணவுக் கொண்டாட்டத்தில், நற்கருணை ஏற்படுத்தப்பட்ட இந்த நாளில், இயேசு தம் சீடர்களுக்குப் புதிய கட்டளை கொடுத்த இந்நாளில், பணிக்குருத்துவம் ஏற்படுத்தப்பட்ட இந்த நாளில், 'பாதம் கழுவும் நிகழ்வு' நடப்பது ஏன்? பாலை நிலத்தில் நடந்து களைத்துப்போன பாதங்கள் வீட்டிற்குள் நுழையுமுன் அடிமை ஒருவன் அல்லது அடிமைப் பெண் ஒருத்தி ஓடி வந்து கழுவித் துடைக்கும் அழுக்கான நிகழ்வை, வீட்டின் மேல் தளத்தில் உள்ள அறையில் விருந்து நடக்கும் நேரத்தில் இயேசு செய்தது ஏன்? நற்கருணை, அன்பு, பணிக்குருத்துவம் இந்த மூன்றையும் அடையாளப்படுத்த இயேசு பாதம் கழுவும் சடங்கைத் தெரிந்துகொண்டது ஏன்?

தான் செய்ததை இயேசு, 'முன்மாதிரி காட்டினேன்' என்கிறார். முன்மாதிரி, அதாவது, சாம்பிள் அல்லது அடையாளம். பெரிய விடயத்தை சிறிய அடையாளம் வழியாகச் சொல்கிறார் இயேசு. நாற்பது ஆண்டுகள், ஐம்பது ஆண்டுகள் இணைந்து வாழும் திருமண பந்தத்தை ஒரு சின்ன மோதிரமோ, மஞ்சள் தோய்த்த மாங்கல்ய முடிச்சோ அடையாளப்படுத்துகிறது. வாழ்நாள் முழுவதும் தன்னையே அர்ப்பணித்து இறைப்பணி செய்யும் ஒரு அருள்பணியாளருக்கு அடையாளமாக அவருடைய தலைமேல் கைகள் வைக்கப்படுகின்றன. அவருடைய உள்ளங்கைகளில் திரு எண்ணெய் பூசப்படுகிறது. எளிமை, கன்னிமை, கீழ்ப்படிதல் என்று வார்த்தைப்பாடு கொடுத்து துறவற அர்ப்பணம் செய்யும் இளவல்கள் மோதிரம் அணிந்துகொள்கின்றனர். பிறந்தது முதல் பயிற்சி, ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி, இறுதியில் ஒலிம்பிக்கில் வெற்றி என்று வெற்றிமேடை மேல் ஏறி நிற்பவரின் தலையில் ஒலிவ இலைக் கிரீடம் வைக்கப்பட்டு, அவருக்கு தங்கப்பதக்கம் அணிவிக்கப்படுகிறது. ஆக, வாழ்நாள் முழுவதும் நாம் செய்வதை, சொல்வதையும், அல்லது நாம் பெறுகின்ற வெற்றி, அடைந்த முன்னேற்றம் அனைத்தையும் ஒரு சிறிய அடையாளம் வழியாக வெளிப்படுத்துகிறோம்.

இயேசுவின் இந்தச் செயலைத்தான் முதல் ஏற்பாட்டு இறைவாக்கினர்கள் செய்தனர்.

எப்படி?

மோசேயும் யோசுவாவும் இறைவனின் பிரசன்னத்தின்முன் தங்கள் மிதியடிகளை அகற்றுகிறார்கள் (காண். விப 3:5, யோசு 5:15). சவுல் இரண்டு காளைகளை வெட்டி அவற்றின் துண்டுகளை இஸ்ரயேல் முழுவதும் அனுப்புகின்றார் (காண். 1 சாமு 11:7). சாலமோன் தன் இரு கைகளையும் விரித்து நின்று புதிய ஆலயத்தில் அர்ப்பண செபம் செய்கின்றார் (காண். 1 அர 8:22). எலியா யோர்தானின் தண்ணீரைத் தன் போர்வையால் அடித்துப் பிரிக்கிறார் (காண். 2 அர 2:8). எலிசா கசப்பான நீருக்கு உப்பிடுகின்றார் (காண். 2 அர 2:19-21). ஆபிரகாம் பறவைகளை இரண்டு துண்டுகளாக வெட்டி வைக்கின்றார் (காண். தொநூ 15:10). மெல்கிசெதேக்கு அப்பமும் இரசமும் ஆபிரகாமுக்குக் கொடுக்கின்றார் (காண். தொநூ 14:17). மோசே ஒரு மரத்துண்டைக் கசப்பான தண்ணீரில் போடுகின்றார் (காண். விப 15:22-25). எரேமியா மண் கலயத்தை உடைக்கின்றார் (காண். எரே 19:10). யோசுவா ஆயி நகரை நோக்கி ஈட்டியை நீட்டுகின்றார் (காண். யோசு 8:18-19). இறைவாக்கினர் அகியா தன்னுடைய புதுச் சால்வையை பன்னிரண்டு துண்டுகளாய்க் கிழிக்கின்றார் (காண். 1 அர 11:29-31). எசாயா, 'மகேர் சாலால் கஸ்பாசு' என்று ஒரு வரைபலகையில் எழுதி தன் மனைவியோடு உடலுறவு கொள்கிறார் (காண். எசா 8:1-4). எரேமியா கற்களை மறைத்து வைக்கின்றார் (காண். எரே 43:8-13). எசேக்கியேல் சுருளேடு ஒன்றைச் சாப்பிடுகிறார் (காண். எசே 2:8-3:6). எசேக்கியேல் தன் தலையையும் தாடியையும் மழித்துக் கொள்கிறார் (காண். எசே 5:2). எரேமியா கழுத்தில் நுகத்தைப் பூட்டிக்கொள்கிறார் (காண். எரே 27-28). எசேக்கியேல் தன் வீட்டிலிருந்து அகதியாகப் புறப்படுகிறார் (காண். எசே 12:1-16). ஓசேயா விலைமாதுவை மணக்கின்றார் (ஓசே 1, 3:1-5). எசேக்கியேல் தன் மனைவியின் இறப்புக்காக அழவில்லை (காண். எசே 24:19). எரேமியாவுக்கு திருமணம் மறுக்கப்பட்டது (காண். எரே 16:1-12).

இவ்வாறாக, முதல் ஏற்பாட்டுக் கதைமாந்தர்கள் பலர், குறிப்பாக இறைவாக்கினர்கள் எசாயா, எரேமியா, எசேக்கியேல், ஓசேயா, நிறைய அடையாளங்கள் வழியாக பல கருத்துருக்களை மக்களுக்குப் புரியவைக்கின்றனர். நாடகத்தனமான ஒரு செயலைச் செய்யும்போது, அச்செயலைச் செய்பவர், அச்செயலைக் காண்பவர், அச்செயல் பற்றிக் கேள்விப்படுபவர் எனப் பலர் நேரிடையாக அச்செயலில் பங்கு பெறுகின்றனர். எனவே அச்செயலின் பொருள் மிக எளிதாகவும் மிக ஆழமாகவும் அவர்கள் மனத்தில் பதிந்துவிடுகிறது. பேசுகின்ற அல்லது கேட்கின்ற வார்த்தைகளைவிட இவை அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தக் காரணம், இவைகளை நாம் நேருக்கு நேராக பார்க்கவும் கேட்கவும் முடிகிறது என்பதால்தான். மேலும், நடித்துக்காட்டப்படும் ஒன்று வெறும் உரைவீச்சைவிட அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும். 'நீங்கள் அந்நிய தெய்வங்களை வழிபட்டு விபச்சாரம் செய்யாதீர்கள்' என்று இறைவாக்கினர் சொல்வதைவிட, விலைமாது ஒருவருடன் உடலுறவு கொள்கின்ற இறைவாக்கினர், 'நீங்கள் செய்யும் சிலைவழிபாடு இப்படித்தான் இருக்கிறது!' என்று அடையாளமாகக் காட்டும்போது அவர்களில் ஏற்படுத்தும் அதிர்ச்சி மனமாற்றத்திற்கான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், அடையாளங்களைச் செய்பவரின் அங்க அசைவுகளையும் அவை தரும் செய்தியையும் காண்பவர் எளிதாகப் புரிந்துகொள்வார்.

மேற்காணும் இறைவாக்கினர் அடையாளங்களில் மூன்று கூறுகள் பொதுவாக உள்ளன:

அ. இவை யாவும் கடவுளிடமிருந்து ஊற்றெடுக்கின்றன. கடவுளால் நேரிடையாக உந்தப்பட்டோ, அல்லது மறைமுகமாக அறிவுறுத்தப்பட்டோ கதைமாந்தர்கள் அடையாளச் செயல்கள் செய்கின்றனர்.

ஆ. இறைவாக்கு அடையாளங்கள் ஒரு சம்பிரதாய செய்கையாகவோ, அசைவு அல்லது நகர்வாகவோ, தோற்றப்பாங்காகவோ, அல்லது நாடகப்பாணியில் அமையும் செயலாகவோ இருக்கிறது.

இ. இவ்வடையாளங்கள் இவற்றைக் காண்பவர்களைக் காண்கின்ற ஒன்றிலிருந்து காணாத ஒன்றிற்கு அழைத்துச் செல்கிறது. எடுத்துக்காட்டாக, எரேமியாவின் கழுத்தில் நுகத்தைக் காணும் மக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்தின் நுகத்தைப் புரிந்துகொள்வார்கள்.

இந்த மூன்று கூறுகளும் இயேசுவின் பாதம் கழுவும் நிகழ்விற்குப் பொருந்துவதாக இருக்கின்றன.

அ. 'இரவுணவு வேளையில், தந்தை அனைத்தையும் தன் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்தது போல அவரிடமே திரும்பிச் செல்ல வேண்டும் என்பதையம் அறிந்த இயேசு பந்தியிலிருந்து எழுகின்றார்.' ஆக, இயேசுவின் செயல் தன் தந்தையைப் பற்றிய அறிவால் தூண்டப்பட்டதாக இருக்கின்றது.

ஆ. இயேசு தன் சமகாலத்து மக்கள் நடுவே புழக்கத்தில் இருந்த ஒரு சாதாரண செயலைக் கைக்கொள்கின்றார். அதை ஒரு நாடகப் பாணியில் - சீடர்களோடு பேசிக்கொண்டு, பேதுருவோடு விவாதித்துக்கொண்டு - செய்கின்றார்.

இ. 'ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு உங்களுக்கு நான் முன்மாதிரி காட்டினேன்' என்கிறார் இயேசு. ஆக, சீடர்கள் தாங்கள் காணும் இந்தச் செயலைத் தங்கள் வாழ்வில் செய்ய, இயேசுவைப் போல பணி செய்ய அழைக்கப்படுகிறார்கள்.

முதல் ஏற்பாட்டு இறைவாக்கினர்கள் தங்களின் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை தங்களுடைய அடையாளச் செய்கைகளால் வெளிப்படுத்துகின்றனர். இயேசுவின் பாதம் கழுவும் நிகழ்வு அவருடைய சீடர்களின் பிரச்சினைகளுக்கு எப்படித் தீர்வாகிறது?

1. அவரிடமிருந்து வந்தார் - அவரிடமே திரும்பிச் சென்றார்

'உலகின் ஒளி நானே' என்று தன்னைப் பற்றி யூதர்களுக்கு அறிவிக்கின்ற இயேசு, தொடர்ந்து, 'நான் எங்கிருந்து வருகிறேன் என்றும் எங்குச் செல்கின்றேன் என்பதும் எனக்குத் தெரியும். நான் எங்கிருந்து வருகிறேன், எங்குச் செல்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது' என்கிறார் (காண். யோவா 8:12-14). இயேசுவின் பாதம் கழுவும் நிகழ்வை, பவுலின் கிறிஸ்தியல் பாடலோடு (காண். பிலி 2:6-11) பேராயர் ஷீன் பின்வருமாறு ஒப்பீடு செய்கின்றார்: இயேசு பந்தியிலிருந்து எழுந்து - கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை விடுத்து, மேலுடையைக் கழற்றி - தம்மையே வெறுமையாக்கி, துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார் - அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார், குவளையில் தண்ணீர் எடுத்து காலடிகளைக் கழுவித் துடைத்தார் - சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார், கழுவியபின் மேலுடையை அணிந்துகொண்டு - இறந்து உயிர்த்து, பந்தியில் அமர்ந்து - கடவுளும் அவரை உயர்த்தி. மேற்காணும் ஒப்புமை சீடர்களுக்கு இயேசுவின் மனுவுருவாதல், இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்றம் ஆகிய அனைத்தையும் கற்றுக்கொடுப்பதாக இருக்கிறது. இவ்வாறாக, இயேசு கடவுளிடமிருந்து வந்தார் என்பதையும், அவர் கடவுளிடமே திரும்பிச் செல்கிறார் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.

2. சீடர்களின் காலடிகளைக் கழுவி

இயேசுவின் சீடர்கள் நடுவில் விளங்கிய மிகப் பெரிய பிரச்சினை, 'நம்மில் பெரியவர் யார்?' என்பதுதான் (காண். மாற் 9:33-34, 10:35-37, லூக் 22:24). இயேசு சிறு குழந்தையை அடையாளமாக நிறுத்தி அவர்களுக்கு விளக்கியிருக்கிறார். ஆனால், அவர்கள் இறுதிவரை அதைப் புரிந்துகொள்ளவில்லை. ஆகையால்தான், இயேசு பாதம் கழுவும் நிகழ்வின் வழியாக சமத்துவத்தைக் கற்பிக்கின்றார். எப்படி? பாதம் கழுவும் நிகழ்வு ஓர் அடிமை எஜமானனுக்குச் செய்யும் வேலை என்றாலும், இயேசு அந்த அர்த்தத்தில் எடுக்கவில்லை. ஏனெனில், இயேசுவைப் பொறுத்தவரையில் சீடர்கள் என்பவர்கள் அடிமைகள் அல்லர். மாறாக, அவருடைய நண்பர்கள் (காண். யோவா 13:1-20). இந்த நட்பு அவருடைய தற்கையளிப்பிலும் வெளிப்படுகிறது (காண். யோவா 15:13-14). ஆக, சீடர்களுக்குள் இருக்கின்ற எல்லா பேதங்களையும், பிரிவுகளையும், பிரிவினைகளையும், ஏற்றத்தாழ்வுகளையும், விருப்பு, வெறுப்புக்களையும் உடைக்கின்ற இயேசு, அவர்கள் அனைவரையும் நண்பர்கள் என்ற நிலையில் வைத்து அவர்களின் பாதங்களை ஒரு நண்பனாகக் கழுவுகின்றார். ஆக, சமத்துவம் என்பது இயேசுவைப் பொறுத்தவரையில் நட்பில் மலர்கிறது. பேதுரு அவருடைய காலடிகளைக் கழுவ இயேசுவுக்கு அனுமதி மறுத்தபோது, 'நான் உன் பாதங்களைக் கழுவாவிடில் உனக்கு என்னோடு பங்கில்லை' - அதாவது, 'என் நட்பில் உனக்கு இடமில்லை' என்கிறார் இயேசு. 'நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்' என்று சொல்கின்ற இயேசு, சீடர்கள் நடுவில் திகழ வேண்டிய நட்பில் மலரும் சமத்துவத்தை வலியுறுத்துகின்றார்.

3. முன்மாதிரி காட்டினேன்

இயேசு செய்தது ஒரு முன்மாதிரி. அந்த முன்மாதிரியில் ஒரு அறிவுரையும் கட்டளையும் இருக்கிறது. 'நட்பாக இருங்கள்' என்பது அறிவுரை. 'நான் செய்ததுபோல நீங்களும் செய்யுங்கள்' என்பது கட்டளை. ஏறக்குறைய இதே வார்த்தைகளில்தான் இயேசுவின் புதிய அன்புக் கட்டளையும் அமைந்திருக்கிறது: 'நான் உங்களிடம் அன்பு செலுத்தியதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்கிறார் இயேசு. 'நான் உங்கள் பாதங்களைக் கழுவியது போல நீங்கள் என் பாதங்களைக் கழுவுங்கள்' என்றோ, 'நான் உங்களிடம் அன்பு செய்தது போல நீங்கள் என்னை அன்பு செய்யுங்கள்' என்று தன்மையமாக இயேசு எதையும் செய்யவோ, சொல்லவோ இல்லை. ஆக, அவரிடமிருந்து பெற்ற சீடர்கள் அதை மற்றவர்களுக்கு வழங்க வேண்டும். அதில்தான் சீடத்துவத்தின் அடையாளம் இருக்கிறது - 'நீங்கள் ஒருவர் மற்றவருக்குக் காட்டும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர்.

ஆக, இயேசுவின் 'பாதம் கழுவுதல்' என்னும் இறைவாக்கினர் அடையாளம் சீடர்களைப் புதிய புரிதலுக்கு இட்டுச் செல்கிறது.

இத்தீர்வுகள் நற்கருணை, அன்பு, பணிக்குருத்துவம் பற்றிய புரிதல்களை எப்படி விரிவுபடுத்துகின்றன?

நாம் இன்று கொண்டாடும் நற்கருணை, அன்புக் கட்டளை, மற்றும் பணிக்குருத்துவம் ஆகிய மூன்றுமே இறைவாக்கினர் அடையாளங்கள். இவை தங்களையும் தாண்டிய பொருளைத் தங்களுக்குள் கொண்டுள்ளன. இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 11:23-26), கொரிந்து நகரத் திருஅவையில் நிலவிய பிளவுகள், ஏற்றத்தாழ்வுகள், வேற்றுமை பாராட்டுதல் ஆகியவற்றைக் கடிந்துகொள்கின்ற பவுல், இறுதியாக, 'ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக் கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன்' என்று சொல்லி, 'இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய இறப்பை அவர் வரும் வரை அறிக்கையிடுகிறீர்கள்' என்று அறிவுறுத்துகின்றார். ஆக, ஒவ்வொரு நற்கருணைக் கொண்டாட்டமும் ஆண்டவருடைய இறப்பை கொரிந்து நகர மக்களுக்கு நினைவூட்ட வேண்டும். ஆண்டவருடைய இறப்பு பிரிவினைகள் அகற்றியது. ஆக, பிரிவினைகள் அகற்ற நற்கருணை அவர்களைத் தூண்ட வேண்டும். அதே போல, முதல் வாசகத்தில் (காண். விப 12:1-8, 11-14) இஸ்ரயேல் மக்கள் கொண்டாடும் பாஸ்கா வெறும் விருந்து அல்ல. மாறாக, ஆண்டவராகிய கடவுள் எகிப்தில் நடத்திய அருஞ்செயலின் அடையாளம். இவர்கள் ஒவ்வொரு முறையும் இதைக் கொண்டாடும்போது அந்நிகழ்வை நினைவில் கொள்ள வேண்டும். 'அன்பு' என்பது சீடத்துவத்தின் அடையாளம் (காண். யோவா 13:35). பணிக்குருத்துவம் என்பது இயேசுவைப் போல ஒருவர் ஒத்திருக்க முன்வருகிறார் என்பதன் அடையாளம். ஆகையால்தான், அருள்பணி நிலைக்குள் வரும் ஒருவர் தன் குடும்பம், சாதி, பின்புலம் என்ற மேசையிலிருந்து எழுந்து, தன்னுடைய விருப்பு, வெறுப்பு என்னும் மேலாடையைக் கழற்றிவிட்டு, இறைத்திருவுளம் நிறைவேற்றுதல் என்ற துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு ஒருவர் மற்றவரின் காலடிகளைக் கழுவுதல் வேண்டும்.

ஆக, இன்றைய நாளில் நற்கருணை, அன்பு, பணிக்குருத்துவம் ஆகியவற்றை நாம் வெறும் சடங்குகள் அல்லது வழிபாட்டு அடையாளங்கள் என்பதைப் பார்ப்பதைத் தவிர்த்து, அவற்றை இறைவாக்கினர் அடையாளங்களாகப் பார்த்தல் வேண்டும். அல்லது நற்கருணை, அன்பு, பணிக்குருத்துவம் நம்மில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
நற்கருணை, அன்புக் கட்டளை, பணிக்குருத்துவம் என்னும் இறைவாக்கினர் அடையாளங்களை நாம் எப்படி வாழ்வது?

1. தாழ்வானது மேலானதாக மாற வேண்டும்
கோதுமை அப்பமாக மாறுகிறது. திராட்சைக் கனிகள் இரசமாக மாறுகின்றன. நாம் நற்கருணை வழிபாட்டில் கோதுமையையும், திராட்சைக் கனிகளையும் இறைவனுக்குக் காணிக்கையாக்குவதில்லை. மாறாக, நம் உழைப்பால் உருமாறிய அப்பத்தையும், இரசத்தையும் காணிக்கையாக்குகிறோம். அப்பமும் இரசமும் இயேசு கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுகின்றன. அவற்றை உட்கொள்ளும் நாம் இயேசுவின் உடலாக இரத்தமாக மாறுகின்றோம். ஆக, ஒவ்வொரு நிகழ்விலும் தாழ்வான ஒன்று மேலானதாக மாறுகிறது. பாதம் கழுவும் நிகழ்வில் முதலில் மேசையில் அமர்ந்த இயேசுவும் பாதம் கழுவிய பின் அமர்ந்த இயேசுவும் ஒன்றா? இல்லை. ஏனெனில், இவ்விரண்டுக்கும் இடையேதான் தாழ்வானது - அதாவது, ஏற்றத்தாழ்வு - உயர்வானதாக - சமத்துவம் மற்றும் நட்பு - மாறுகிறது. ஆக, இன்று நாம் நற்கருணை கொண்டாடும்போது என்னுடைய தாழ்வானது உயர்வானதாக மாறுகிறதா? அல்லது நான் இன்னும் தாழ்ந்துகொண்டே போகின்றேனா?

2. பாதம் கழுவும் அன்பு
இன்று அன்பில் பிரச்சினைகள் எழுக் காரணம் ஒருவர் மேலிருப்பதும் மற்றவர் கீழிருப்பதும்தான். பாதம் கழுவும் நிகழ்வில் இயேசு தம் சீடர்கள் அனைவரையும் நண்பர்களாக்கி அதே நிலையில் தானும் நண்பராக நிற்கின்றார். நண்பர்-நண்பர் என்ற நிலையில் மட்டுமே அன்பு சாத்தியமாகும். மேலும், நண்பர்-நண்பர் நிலையைச் சீடர்கள் மற்றவர்களை நோக்கி நீட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றார். கணவன்-மனைவி, மாமியார்-மருமகள், ஆசிரியர்-மாணவர், காதலன்-காதலி, கடவுள்-பக்தன், பெற்றோர்-பிள்ளைகள் என எந்த அன்புறவிலும், 'மேல்-கீழ்' நிலைதான் இருக்கிறது. 'என் பிள்ளை நான் சொல்வதைக் கேட்க வேண்டும்' என நினைக்கின்ற பெற்றோர் ஏன் பிள்ளை சொல்வதைக் கேட்பதில்லை? தனக்கு எல்லாம் தெரியும் என்பதாலா? நாம் எல்லாருமே நம் இருப்பு என்ற பந்தியை விட்டு எழ வேண்டும். நம் ஈகோ என்ற மேலாடையைக் கழற்ற வேண்டும். நம் குறைவு என்ற துண்டை இடுப்பில் கட்ட வேண்டும். இனிய சொற்களைத் தண்ணீராய் எடுத்து, கனிவான செயல்களால் காலடிகளைத் துடைக்க வேண்டும்.

3. புரிந்துகொள்ளும் பணிக்குருத்துவம்
பணிக்குருத்துவத்தைப் பற்றிய புரிதல் அருள்பணியாளர்களுக்கும் அருள்பணியாளரின் பணி யாருக்குச் செய்யப்படுகிறதோ அவர்களுக்கும் இருக்க வேண்டும். சீடர்களின் காலடிகளைக் கழுவிவிட்டு மீண்டும் பந்தியில் அமரும் இயேசு, 'நான் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா?' எனக் கேட்கிறார். பாதம் கழுவும் நிகழ்விலும் பேதுருவிடம், 'நான் செய்வது இன்னதென்று உனக்கு இப்போது புரியாது. பின்னரே புரியும்' என்கிறார். இந்தப் பின்னர் எது? அதுதான் திருஅவையின் தொடர் வாழ்வு. இயேசு சீடர்களை விட்டுச் சென்றபின் அவர்கள் செய்யப்போகின்ற பணிகளில்தான் அவர்கள் இயேசுவின் அடையாளத்தைப் புரிந்துகொள்ள முடியும். இன்று அருள்பணியாளர்கள் அருள்பணி நிலை என்றால் என்ன என்பதை சில நேரங்களில் புரிந்துகொள்கின்றனர், சில நேரங்களில் தவறாகப் புரிந்துகொள்கின்றனர், சில நேரங்களில் புரிந்துகொள்ள மறுக்கின்றனர். இந்த மூன்று நிலைகளும் இருக்க வாய்ப்பு இருக்கிறது. புரிந்துகொள்ள வேண்டுமெனில் அருள்பணியாளர்கள் தங்கள் காலடிகளைக் கழுவுமாறு இயேசுவிடம் நீட்ட வேண்டும். அப்போதுதான் 'அவரோடு நமக்குப் பங்கு உண்டு!' அவரால் காலடிகள் கழுவப்படாமல் அருள்பணியாளர் மற்றவரின் காலடிகளைக் கழுவ முடியாது. இன்று பணிக்குருத்துவம் 'வலிந்து பற்றிக்கொண்டிருக்க ஒன்றாகக் கருதப்படுகிறதே தவிர,' அந்த நிலையை விட்டு இறங்குவதையும், தாழ்ச்சியுடன் கீழ்ப்படிந்து சிலுவையைத் தழுவிக்கொள்வதையும் அது ஏற்க மறுக்கிறது. வெறும் வழிபாட்டு அடையாளமாக மாறிவிடுகிறதே தவிர, ஆன்மீகமாக - அதாவது உள்ளும் வெளியிலும் ஒரே மாதிரி - இருக்கத் தயங்குகிறது. 'புரிந்துகொள்தல்' நடக்க ஒருவர் ஒரே தளத்தில் நிற்க வேண்டும், தான் பேசுவதை நிறுத்த வேண்டும், பிறர் பேசுவதைக் கேட்க வேண்டும், முற்சார்பு எண்ணம் அகற்ற வேண்டும், தீர்ப்பிடாமல் இருக்க வேண்டும். இந்ந நிகழ்வில் தான் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும் தன் புரிந்துகொள்தலை அருள்பணியாளர் நிறுத்தவிடக் கூடாது.

இறுதியாக,
இயேசுவின் பாதம் கழுவும் நிகழ்வு நற்கருணை, அன்புக் கட்டளை, பணிக்குருத்துவம் ஆகியவற்றின் இறைவாக்கினர் அடையாளமாக இருக்கின்றது. இயேசுவின் இறைவாக்கினர் அடையாளம் மற்ற இறைவாக்கினர் அடையாளங்களைப் போல உடனடி மாற்றத்தைக் கொண்டுவரவில்லை என்றாலும், இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் பெரிய மாற்றத்தைச் சீடர்களில் ஏற்படுத்தியது. மாற்றத்தை ஏற்படுத்தாத எந்த அடையாளமும் - திருமண மோதிரம், அருள்பணி நிலையின் அருள்பொழிவு, துறவற நிலையின் வார்த்தைப்பாடு - வெறும் சுமையே. மாற்றத்தை ஏற்படுத்தும் அடையாளங்களாக நம் அடையாளங்கள் இருந்தால் எத்துணை நலம்!

உயிர் தரும் உணவு

பிரபல ஆங்கில எழுத்தாளரான கேனன் டோய்ல் (Canon Doyle) எழுதிய “The Great Boer War” என்ற புத்தகத்தில் வரும் நிகழ்வு.

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இங்கிலாந்து நாட்டவருக்கும், எதிரி நாட்டவருக்கும் இடையே கடுமையான போர் நிகழ்ந்தது. அந்தப் போரில் இங்கிலாந்துப் படையானது பெரிய இழப்பைச் சந்தித்தது. எதிரி நாட்டுப் படை, இங்கிலாந்து நாட்டுப் படையை துவம்சம் செய்தது. அந்தப் படையில் வெகுசிலரே உயிர் தப்பினர்.

அப்படி உயிர் தப்பிய படைவீரர்களில் ஒருவர், எதிரி நாட்டுப் படைவீரர்கள் மீண்டும் தங்களைத் தாக்காமல் இருக்க, வித்தியாசமான ஒரு யோசனை செய்தார். அதாவது, போர்புரியும்போது தான் கொண்டுவந்த பெரிய வெள்ளைத் துணியில், தன்னுடைய உடலிலிருந்து வழியும் இரத்தத்தை எடுத்து, சிலுவை அடையாளம் வரைந்தார். அதேபோன்று தன்னோடு இருந்த படைவீரர்களையும், தங்களுடைய உடலிலிருந்து வழியும் இரத்தத்தை எடுத்து சிலுவை அடையாளம் வரையச் சொன்னார். இப்போது அந்த வெள்ளைத் துணியில் மிகப்பெரிய அளவில் வரையப்பட்ட சிலுவை அடையாளமானது, செஞ்சிலுவை சங்கத்தின் கொடியைப் போன்று இருந்தது.

எதிரி நாட்டுப் படையினர் எஞ்சியிருந்த கொஞ்சம் இங்கிலாந்துப் படையினரை அழிக்க விரைந்து வந்தபோது, அங்கே செஞ்சிலுவைச் சங்கத்தின் கொடியைத் தாங்கி வீரர்கள் இருப்பதைக் கண்டு, இவர்கள் போரில் காயப்பட்டுக் கிடக்கும் படைவீரர்களுக்கு உதவ வந்தவர்கள் என்று நினைத்து, அவர்களை ஒன்றும் செய்யாமல் அப்படியே திரும்பிவிட்டார். தங்களது இரத்தத்தால் வெள்ளைத் துணியில் சிலுவை அடையாளம் வரைந்த அந்தப் படைவீரர்களோ எதிரிகளிடமிருந்து உயிர்தப்பினார்கள்.

எப்படி படைவீரர்கள் இரத்தத்தால் வரைந்த சிலுவை அடையாளம் அவர்களைக் காப்பாற்றியதோ, அதே போன்று இயேசுவின் இரத்தம் இந்த உலகமனைத்தையும் பாவத்திலிருந்து, அழிவிலிருந்தும் விடுவித்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

பெரிய வியாழனான இன்று, ஆண்டவர் இயேசு நற்கருணை ஏற்படுத்தியதை சிறப்பாக நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றோம். எனவே அதைப் பற்றி ஒரு சில கருத்துகளை நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

“திருச்சபை, தனது வாழ்வை நற்கருணையிலிருந்து பெறுகிறது” என்கிறது இரண்டாம் வத்திக்கான் சங்கம் (LG 11). ஆம், திருச்சபையின் வாழ்வுக்கு ஊற்றும், உச்சமுமாக இருப்பது இந்த நற்கருணைதான். இந்த நற்கருணையில் இயேசு தன்னுடைய உடலையும், இரத்தத்தையும் நமக்கு உணவாகத் தருகின்றார்.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் யூதர்கள் கொண்டாடிய பாஸ்கா விழாவில் ஓர் ஆடானது பலியிடப்பட்டு, அது வீட்டிலுள்ள எல்லோராலும் உண்ணப்பட்டது. ஆனால் இயேசு கொண்டாடி புதிய பாஸ்கா விழாவில் ஆட்டிற்குப் பதிலாகன இயேசு தன்னுடைய உடலையும், இரத்தத்தையும் நமக்கு உணவாகத் தருகின்றார். கொரிந்தியருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் நாம் படிக்கக் கேட்பதுபோன்று, இயேசு தனது உடலையும், இரத்தத்தையும் நமக்கு உணவாகத் தந்து, இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்கிறார்.

ஆகவே, நாம் உட்கொள்ளும் இந்த நற்கருணையானது இயேசுவின் திருவுடல், திருஇரத்தம் என்ற உண்மையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். அதேவேளையில் நற்கருணை ஒரு வழிபாட்டுக் கொண்டாட்டமாக அல்லாமல், வாழ்க்கை நிலையாக இருக்கவேண்டும் என்பதுதான் இயேசுவின் திருவுளமாக இருக்கின்றது. அதனால்தான் இயேசு தனது இறுதி இராவுணவின் போது சீடர்களின் பாதங்களைக் கழுவுகிறார்; “ஆண்டவரும், போதகருமான நான் உங்கள் பாதங்களைக் கழுவிகிறேன் என்றால், நீங்களும் ஒருவர் மற்றவரது காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்” என்கிறார். அதாவது, நாம் ஒவ்வொருவருமே பிறருக்குப் பணிவிடை செய்து வாழவேண்டும் என்றதொரு அழைப்பினத் தருகின்றார்.

இன்றைக்கு கிறிஸ்தவர்களாகிய நாம் ஒருவர் மற்றவருக்குப் பணிவிடை செய்யும் மக்களாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பணத்திலும், குலத்திலும் நான் மற்றவரை விடப்பெரியவன், எனவே நான் எதற்கு பிறருக்குப் பணிவிடை செய்யவேண்டும்? பிறர்தான் எனக்குப் பணிவிடை செய்யவேண்டும் என்று நினைக்கின்றோம். இது உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை நெறியாக இருக்காது.

இரக்கமும், மன்னிப்பும்தான் கிறிஸ்தவத்தின் இரண்டு கண்கள் என்பார்கள் பெரியவர்கள். எனவே நாம் நாமோடு வாழும் தேவையில் இருப்போர், வறியோர்மீதும் இரக்கம்கொண்டு, அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் உண்மையான கிறிஸ்தவ நெறியாகும் என்ற வாழவேண்டும்.

கடந்த நூற்றாண்டில் ‘மதுரா பாபு’ என்ற ஒரு பணக்காரர் இருந்தார். அவர் ஒருமுறை புனித பூமிக்குச் (பனாரஸ்) சென்று, இறைவனை வழிபடவேண்டும் என்று நினைத்தார். அதனால் அவர் கையில் கொஞ்சம் பணமும், உணவையும் எடுத்துக்கொண்டு கால்நடையாக நடந்து சென்றார்.

அவர் போகிற வழியில் ஒரு கிராமத்தில் வாழ்ந்த மக்கள் போதிய உணவில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டார்கள். எனவே, அவர்களுக்கு தான் கொண்டுவந்த உணவை பகிர்ந்து கொடுத்தார். அதோடு மட்டுமல்லாமல், தான் வைத்திருந்த பணத்தையும் அவர்களுக்குக் கொடுத்து அவர்கள் வறுமை நீங்க உதவினார். இவ்வாறு அவர் ஒருசில மாதங்கள் அவர்களோடு தங்கியிருந்து, அவர்களுக்காக உழைத்து அதிலே இன்பம் கண்டார்.

ஒருகட்டத்தில் மக்கள் அனைவரும் போதிய வசதிகளைப் பெற்று மகிழ்ச்சியோடு வாழ்வதைக் கண்டபிறகு, இறைவனை இந்த மக்களில் தரிசித்தபிறகு, இன்னும் எதற்கு புனிதபூமி செல்லவேண்டும் என்று அப்படியே வீடு திரும்பினார்.

எளியவருக்கு செய்கின்ற உதவிகள் யாவும், இறைவனுக்கே செய்யப்படுகின்றன என்பதை இந்த நிகழ்வானது நமக்கு மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. உண்மையான வழிபாடு என்பதும் இதுவாகத்தான் இருக்கின்றது.

ஆகவே, நற்கருணைப் பற்றி ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும் இந்த வேளையில், அதனை ஒரு வழிபாடாக மட்டும் பார்க்காமல், வாழ்க்கை நிலையாகப் பார்ப்போம். நம்மோடு வாழும் மக்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்வோம், அவர்களுக்கு பணிவிடை புரிந்துவாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

“நற்கருணை பாமரர் அநீதி எதிர்ப்பு, பாதகமிகு சாதிய எதிர்ப்பு; பெண்ணிய சமநிலை ஏற்பு; பழைய ஏற்பாட்டுக் கடப்பு” - தந்தை ஜெரி.

ser

sunday homily
A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com