மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

கன்னி மரியாவின் விண்ணேற்பு
மூன்றாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
திருவெளிப்பாடு. 11:19, 12:1-6,10 | 1கொரிந்தியர். 15:20-26 | லூக்கா. 1:39-56

பழைய ஏற்பாட்டிலே கடவுளின் பேழையைத் தாவீது அரசர் மேளதாளத்துடன் தாரை தப்பட்டைகள் முழங்க (2 சாமு. 6:1-23) எருசலேம் நகருக்கு எடுத்துச் சென்றது போல இறைவனும் தன் திருமகன் இயேசுவின் பேழையாகிய அன்னை மரியாவை ஆரவாரத்தோடும், மகிழ்ச்சியோடும் தம் திருநகராகிய விண்ணகத்திற்கு அழைத்துச் சென்ற திரு நிகழ்வை நாம் இன்று விழாவாகக் கொண்டாடுகிறோம். நம் பாரத நாடு சுதந்திரம் அடைந்த இந்த நாளில் நம் தாய் மரியா முழுமையான விடுதலையும் சுதந்திரமும் பெற்ற ஆண்டு விழாவை நாம் இன்று கொண்டாடுகிறோம்.

1) மரியன்னைக்கு என உள்ள விழாக்களில் மூன்று மிகவும் குறிப்பிடத்தக்கவை. மரியாவின் அமல உற்பவப் பெருவிழா (டிசம்பர் 8). மங்கள் வார்த்தைப் பெருவிழா (மார்ச் 25). விண்ணேற்புப் பெருவிழா (ஆகஸ்ட் 15). இவை மூன்றும் மீட்பின் வரலாற்றோடு தொடர்பு கொண்டவை. அருள் மிகப் பெற்றவளே வாழ்க (லூக். 1:28) என்று வானதூதரால் அழைக்கப்பட்ட நம் அன்னை மரியா, தான் பெற்ற அருளை முழுவதுமாக இவ்வுலகின் மீட்புக்காகச் செலவழித்தார். தன் மகனோடு இணைந்து இவ்வுலகின் மீட்புப் பணியில் ஈடுபட்டார்.

2) ஒரு பெண்ணால் (முதல் ஏவாள்) இழந்த விண்ணக வாழ்வும், மகிழ்வும் மற்றொரு பெண்ணால் (மரியாவின் வழியாக) மீண்டும் கிடைக்க வேண்டும் என்ற இறைவனின் திட்டத்தை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார் அன்னை மரியா .

3) தீயோனின் வார்த்தையைக் கேட்டு அதைச் செயல்படுத்தி அதன் விளைவாக அழிவைத் தேடிக் கொண்டவள் முதல் ஏவாள். அதனால் கடவுளுக்கும், மனித குலத்திற்கும் இடையில் தடையாக முடிச்சுப் போட்டாள். ஆனால் இரண்டாம் வத்திக்கான் சங்கம் திருச்சபை (திருச்சபை 56) என்ற ஏட்டிலே கூறுவதுபோல, கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு, அதை ஏற்று. அதைத் தன் உள்ளத்தில் இருத்திச் செயல்படுத்தி வாழ்வைத் தேடிக் கொண்டவள் மரியா. போடப்பட்ட முடிச்சை தன் தாழ்ச்சி கீழ்ப்படிதலால் அவிழ்த்தவள் மரியா.

4.கடவுளைப்போல் ஆகவேண்டும் என்ற அகந்தையால் சுயநலத்தால் தூண்டப்பட்டவள் முதல் ஏவாள் . இதோ உமது அடிமை (லூக். 1:38) என்று சொல்லி, தன்னையே தாழ்த்தி அர்ப்பணம் ஆக்கியவள் மரியா.

நான் தவறு ஏதும் செய்யவில்லை. பாம்புதான் என்னை வஞ்சித்து ஏமாற்றியது என்று பிறர் மேல் குற்றம் சாற்றித் தன்னை நிரபராதியாக்க விரும்பியவள் முதல் ஏவாள். ஆனால் தான் கடவுளால் குற்றமற்றவராகப் படைக்கப்பட்டும், மனுக்குல மீட்பிற்காக, அதன் குற்றங்களை ஏற்றுக்கொண்ட தியாக தீபம் மரியா.

மரியா தன்னைத் தாழ்த்திக் கொண்டாள். எப்படியெனில் ஆற்று மணலில் முளைத்து வளர்ந்த நாணல் வெள்ளம் புரண்டு ஓடியபோது தண்ணீரோடு அடித்துச் செல்லப்படாமல் வளைந்து கொடுப்பது போல மரியா பணிந்து நின்றார்கள். கடவுளுக்கு ஏற்ற வாழ்க்கை நடத்திய ஏனோக்குக்கும் (தொநூ . 5:22) எலியாவுக்கும் (2 அரச 2:11) விண்ணேற்பு கொடையை இறைவன் வழங்கியது போல, தனிப்பெரும் சீடராகத் தாழ்ச்சி நிறைந்த மரியாவுக்குக் கிடைத்த பரிசுதான் விண்ணேற்பு. எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பேறுடையாள் எனப் போற்றுமே (லூக். 1:48). ஏனெனில் நெஞ்சிலே செருக்குற்றோரைச் சிதறடித்து வருகிறார் (லூக். 1:50 - 53). தாழ்ந்தோரை உயர்த்தினார் என்று மரியா பாடிய பாடல் அவர்கள் வாழ்வில் நிறைவேறியது. இந்த உண்மையை, சத்தியத்தைத்தான் 12 - ஆம் பத்திநாதர் விசுவாசச் சத்தியமாக 1950 - ஆம் ஆண்டு பிரகடனம் செய்தார்.

முடிவு
இந்தியா 1947-ஆம் ஆண்டு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைப் பெற்றது என்று எல்லோரும் இன்று ஆனந்தம் அடைகிறோம். ஆட்சி கைமாறியதே தவிர, அடிமைத்தனம் மாறவில்லை. கொள்ளையும், ஊழலும் குறையவில்லை. சனநாயகம் என்பதெல்லாம் சொல் அளவில் மட்டுமே. மக்கள் நலம் அரசு என்பது எதிர்பார்க்க முடியாதது என்ற மாயையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்நிய நாட்டின் ஆதிக்கம் உலக வற்கியின் ஊடுருவல் இந்தியாவை மறு காலனியாக்கி வருகிறத. உலகமயம், தனியார்மயம், தாராளமயம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கைகள் ஏழைகளின் குரல்வளைகளை நெருக்கிப் பிடிக்கிறத. இதனால் ஏமைகள் பூச்சி மருந்தைத் தேடுகிறார்கள். தூக்குக் கயிற்றைத் தேடுகிறார்கள். பெண்ணடிமை, சாதியம் தலைவிரித்து ஆடுகிறது. அடக்கு துறையால் மக்கள் அழிக்கப்படுகிறார்கள். எங்கே விடுதலை?

கடவுள் வடிவில் விளங்கிய கிறிஸ்து சாவை ஏற்கும் அளவுக்கு,. அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவிற்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்தினார். எனவே கடவுளும் அவரை மிகவும் உயர்த்தி எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அளித்தார். (பிலி. 2:6-9) என வாசிக்கிறோம். இந்த உன்னத நிலையைக் பெற்றவர் தான் நம் அன்னையாம் மரியா. நாமும் ஒருநாள் இந்த மகிமையான வாழ்வை அடைய பாவ வாழ்வை விட்டு விடுதலையை நோக்கிப் பயணம் ஆவோம்.

ser

வாழ்க்கையில் உயர்வது எப்படி?

அன்னை மரியா எவ்வளவுக்கு எவ்வளவு தன்னையே தாழ்த்திக் கொண்டாரோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர் உயர்த்தப்பட்டார்; விண்ணகம் வரை உயர்த்தப்பட்டார். தாழ்ச்சி என்றால் என்ன? இந்தக் கேள்விக்கு உவமை ஒன்று பதில் சொல்லும்!

காட்டாற்று மணலிலே விழுந்த ஒரு நாணல் விதை! முளைத்தது, அது தழைத்தது! காட்டாற்றுக்கும் கருணை உண்டு! நாணல் வளர்ந்தது! நாணல் சில நாள்களில் கிளைகள் விட்டு புதரானது! அதன் மீது காற்றுக்கென்ன கோபமோ! அது சுற்றிச் சுற்றி அடித்தது !

காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுத்தது நாணல்! விவேகமுள்ள நாணல் வளைந்து கொடுத்தது! ஆகவே நிமிர்ந்து நின்றது! திடீரென வானம் கருத்தது! எங்கு பார்த்தாலும் அடை மழை! காட்டாற்றில் வெள்ளம்! வெள்ளத்திற்கு நாணல் மீது என்ன கோபமோ! அதனை அடித்துச் செல்லத் துடித்தது! அதன் எண்ணம் நிறைவேறவில்லை! காரணம் விவேகமுள்ள நாணல் அதன் பாணியைக் கையாண்டது. வெற்றி நாணலுக்கே! ஆற்றிலே அடித்து வரப்பட்ட அத்தனைச் செடிகளும் கொடிகளும் அந்த நாணல் புதரை அழைத்துச் செல்ல விரும்பின! முடியவில்லை! காரணம் நாணல் போர் தொடுக்க விரும்பவில்லை! சற்று நேரப் பணிவு போதும், சற்று நேர விவேகம் போதும் எனச் சொல்லி வளைந்து கொடுத்தது ; பொறுமையாக நிமிர்ந்து நின்றது. யார் மீதும் அதற்கு எந்தக் கோபமும் இல்லை! அதன் ஆசையெல்லாம் நீண்ட நாள் வாழவேண்டும் என்பதே!

புனித கன்னிமரியாவிடம் பணிவு இருந்தது (லூக் 1:38); அவரிடம் விவேகம் இருந்தது (லூக் 2:51); அவரிடம் பொறுமையிருந்தது (யோவா 19:23-27). தாழ்ச்சி என்றால் பணிவு; தாழ்ச்சி என்றால் விவேகம் ; தாழ்ச்சி என்றால் வளைந்து கொடுத்தல்; தாழ்ச்சி என்றால் பொறுமை! மரியாவிற்கு விண்ணேற்பு என்பது அவருடைய தாழ்ச்சிக்கு கடவுள் அளித்த பரிசு. எல்லாத் தலைமுறையினரும் அன்னை மரியாவைப் பேறு பெற்றவர் எனப்போற்றுகின்றனர் என்றால் அதற்குக் காரணம் அவரது தாழ்ச்சிதான் (லூக் 1:48). உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைக் கடவுள் சிதறடிப்பார் (லூக் 1:50 - 53). நாம் கழுகைப் போல் உயர, உயரப் பறந்தாலும், விண்மீன்களின் நடுவில் நமது வீட்டைக் கட்டி வாழ்ந்தாலும், நம் உள்ளத்தில் இறுமாப்பு இருந்தால் நாம் வீழ்த்தப்படுவோம் (ஒப 1:4).

இன்று இயேசுவுக்கு உலகிலுள்ள எல்லாம் அடிபணிகின்றன (1 கொரி 15:27). இந்த உன்னதமான நிலையில் அவரிருக்கக் காரணம் என்ன ? காரணம் அவரது தாழ்ச்சிதான். புனித பவுலடிகளார், கடவுள் வடிவில் விளங்கிய அவர் (கிறிஸ்து) சாவை ஏற்கும் அளவுக்கு அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார் (பிலி 2:6-9) என்று கூறுகின்றார். இதுவே நமது மன்றாட்டாக இருக்கட்டும் : சூரியனைப் போல் ஒளி பொருந்தியவராய், சந்திரனைப் போல் அழகுள்ளவராய்; விண்மீன்களைத் தலைமீது சூடி, அழகுக்கு அழகு செய்து அதிசயமாய், ஆனந்தமாய், ஆருயிராய் விளங்குகின்ற விண்ணக , மண்ணக அரசியே! உமது விண்ணேற்பில் நாங்களும் பங்குகொண்டு, உம்மோடு என்றும் இணைந்து வாழ எங்களுக்குத் தேவையான தாழ்ச்சியை உமது கைகளிலே தவழும் குழந்தை இயேசுவிடமிருந்து பெற்றுத்தாரும். ஆமென்.

மேலும் அறிவோம் :

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை. (குறள் 439).
பொருள் : எந்தச் சூழ்நிலையிலும் ஒருவன் தன்னைத்தானே உயர்வாகக் கருதும் தற்பெருமை கொள்ளக்கூடாது! அவ்வாறே நன்மை எதுவும் தராத செயல் புரிவதற்கு விரும்பவும் கூடாது!

ஆகஸ்டுத் திங்கள் 14ஆம் நாள் நான் ஓர் இளம் பெண்ணிடம், "நாளை சுதந்திரத்தினம்: சுதந்திரத்தைப் பற்றி என்ன மறையுரை ஆற்றுவது?" என்று கேட்டதற்கு அவர் என்னிடம், "சுதந்திரத தினத்தன்றாவது மறையுரை ஆற்றாமல் மக்களைச் சுதந்திரமாக விடுங்கள்" என்றார். - மக்கள் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி சுதந்திரப் பறவையாகப் பறக்க விரும்புகின்றனர். "ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா? கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா? தாலி கட்டி பிள்ளை குட்டி பெத்துக்கலாமா? பிள்ளை குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா?" என்று பாடும் அளவுக்கு சுதந்திரம் இன்று இறக்கை கட்டிப் பறக்கின்றது. கட்டுப்பாடு இல்லாத வாழ்வு பகுத்தறிவின் கடிவாளத்தில் இல்லை. பகுத்தறிவின் பயன்பாடு என்ன? மனதைத் தீமையிலிருந்து விலக்கி, நன்மையின்பால் செலுத்துவதாகும்.

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.(குறள் 422)

சுகத்தை நாடி சுதந்திரத்தை இழக்கக்கூடாது. ஓர் ஊரில் ஒரு வியாபாரி புழுக்களை விற்றுக் கொண்டிருந்தார், ஒரு சிட்டுக்குருவி அவரிடம் ஒரு புழுவைக் கேட்டது. ஒரு புழுவுக்கு விலையாக ஓர் இறகு கொடுக்க வேண்டுமென்று வியாபாரி கேட்டால், அந்தச் சிட்டுக் குருவியும் தனது இறக்கைகளில் இருந்த இறகுகளை யெல்லாம் ஒவ்வொன்றாகக் கொடுத்து புழுக்களை வாங்கிச் சாப்பிட்டு, இறுதியில் இறக்கைகளை இழந்து பறக்க முடியாத நிலையை அடைந்தது. மற்றப் பறவைகள் அந்தச் சிட்டுக் குருவியைக் கொத்திச் சாப்பிட்டன!

அந்தப் பறவையைப் போலவே நாமும் சிற்றின்பங்களுக்கும். தீய பழக்க வழக்கங்களுக்கும் அடிமையாகி, "நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா? பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?" என்று பாடிப்பாடி, காலமெல்லாம் கண்ணீர் வடிக்க வேண்டியுள்ளது. எல்லா அடிமைத்தளைகளிலும் கொடிய அடிமைத்தளை பாவத்திற்கு அடிமையாவதாகும். "பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை" (யோவா 8:34).

உண்மையான சுதந்திரம் கடவுளின் பிடியிலிருந்து நம்மை விடுவிப்பதன்று; மாறாக, கடவுளிடம் சரணடைவதாகும், சுதந்திரப் பள்ளுப் பாடிய பாரதி, "பாரினில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்; பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம் என்று பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

"நான் ஆண்டவருடைய அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக் 1:38) என்று கூறி, மரியா தம்மை முழுவதுமாகக் கடவுளுடைய திட்டத்திற்குக் கையளித்தார். கடவுளிடம் சரணடைந்தார். எனவேதான், "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகிறது” (லூக் 1:47) என்ற விடுதலைக் கீதத்தை அவரால் பாட முடிந்தது (நற்செய்தி),

மரியா 'மீட்டாரின் தாய்' என்ற அழைத்தலைப் பெற்றிருந்ததால், கடவுள் அவரைப் பாவமாக அணுகாமல் பிறப்பிலிருந்தே பாதுகாத்தார். பாவ மாசில்லாத அவரைக் கல்லறையில் அழிவுறாமல் விண்ணக மகிமைக்கு எடுத்துக் கொண்டார். இந்த இறையியல் உண்மையை இன்றைய திருப்பலியின் நன்றியுரை பின்வருமாறு எடுத்துரைக்கின்றது. "உயிருக்கெல்லாம் ஊற்றாகிய உம் திருமகனுக்குச் சொல்லற்கரிய முறையில் மனித உடல் கொடுத்துப் பெற்றெடுத்த அப்புனித அன்னையை, நீர் கல்லறையில் அழிவுறாமல் மத்தது பொருத்தமே".

உடலின் உயிர்த்தெழுதலைப்பற்றி இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் பின்வருமாறு குறிப்பிடுகிறார். "ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர் பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர் பெற்றார். அடுத்து கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர்” (1 கொரி 15:23)

உடலோடு உயிர்த்தெழ. மரியா கிறிஸ்துவின் இரண்டாம் வருகைவரைக் கல்லறையில் காத்திருக்க அவசியமில்லை . மரியா அவரது மண்ணக வாழ்வின் பயணம் முடிவடைந்தபோது விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார், இம்மண்ணகத்தில் மரியா இயேசுவோடு கொண்டிருந்த தோழமை விண்ணகத்திலும் தொடர்கிறது. தாயைச் சேயிடமிருந்து பிரிக்க முடியாது,

திருவெளிப்பாடு நூலில் (முதல் வாசகம் ) கதிரவனை ஆடையாக அணிந்து. நிலாவைக் காலடியில் கொண்டு, பன்னிரு விண்மீன்களைத் தலைமீது குடிக் காட்சியளிக்கும் பெண்ணிடத்தில் (திவெ 12:1) திருச்சபை மரியாவைக் காண்கிறது. அவ்வாறே, "ஓபீரின் பொன் அணிந்து வடிவாக வலப்புறம் நிற்கின்ற பட்டத்து அரசியாகவும்" திருச்சபை மரியாவைப் பார்க்கிறது (பதிலுரைப்பாடல், திபா 45:9). சுருக்கமாக, மரியா விண்ணக மகிமையை அடைந்து விட்டார் எனத் திருச்சபை நம்புகிறது.

மரியாவின் விண்ணேற்பு நமது மகிமைக்கு முன் அடையாளமாகவும் சாசனமாகவும் விளங்குகிறது. இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுவதுபோல், "தூய்மைமிகு கன்னிமரியில் திருச்சபை கறை திரை ஏதுமில்லாத் தாய்மையின் நிறைவை ஏற்கெனவே அடைந்துவிட்டது" (திருச்சபை, எண் 65) மரியாவின் மகிமை நமது மகிமை. மரியா எங்கே எப்படி இருக்கிறாரோ அங்கே அப்படியே நாமும் இருப்போம் என்ற நம்பிக்கையை இன்றையப் பெருவிழா நமக்கு அளிக்கிறது,

கடவள் ஆணவக்காரரை அழித்து எளியோரை வாழ வைக்கிறார், பசித்தவர்களை நலன்களால் நிரப்பி, செல்வரை வெறுங்கையராக்குகிறார் (லூக் 1:50-53). மரியாவின் இந்த இறைவாக்கு இறையரசின் கனவு. இக்கனவை நனவாக்குவது நமது கடமை. ஆதிக்க சக்திகளின் அச்சாரியை முறித்து உள்ளம் உடைந்தவர்களைக் குணமாக்கி, ஒடுக்கப்பட்டவர்களுக்கு உரிமை வாழ்வு வழங்கி, வீழ்ந்து கிடப்போரைத் தூக்கி நிறுத்துவது நமது அழைத்தலாகும்.

மக்களுக்கு விடுதலை வாழ்வு வழங்க வேண்டிய அரசே இன்று மனிதர்களைப் பல்வேறு அடக்கு முறைகளால் கசக்கிப்பிழிந்து கொண்டிருக்கிறது. "கள்ள ஓட்டுப்போட்டால், ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை. நல்ல ஓட்டுப்போட்டால், ஐந்து ஆண்டுகள் தண்டனை" என்று சொல்லும் அளவுக்கு அரசு மக்களைத் துன்புறுத்தி வருகிறது. வேலியே பயிரை மேய்ந்து கொண்டிருக்கிறது.

மரியாவின் விண்ணேற்பு விழா நாளில் சுதந்திரம் அடைந்த நம் பாரத நாடு, எல்லாவித அடிமைத்தளைகளிலிருந்தும் விடுதலை அடைந்து, முழுமையான பொருளாதார, சமூக, கலாச்சார, ஆன்மீக விடுதலை பெற மரியன்னையின் வேண்டுதல் என்றும் துணை நிற்பதாக!

மரியன்னையின் விண்ணேற்பு

மரியன்னையின் விண்ணேற்பைக் குறித்து சொல்லப்படும் தொன்மம். மரியா தன்னுடைய கடைசி காலத்தை சியோன் மலையருகிலே இருந்த ஓர் இல்லத்தில் செலவழித்தார். அவருக்கு 60 வயது நடந்துகொண்டிருந்தபோது ஒருநாள் வானதூதர் அவருக்குக் காட்சி கொடுத்து, அவர் எப்படி இறப்பார், இறந்த பிறகு என்ன ஆவார் என்பது குறித்து சொல்லிவிட்டுச் சென்றார். அதுபோன்று ஒரு குறிப்பிட்ட நாளில் மரியாள் இறந்துபோனார். அவருடைய இறப்புச் செய்தியைக் கேள்விப்பட்டு எல்லாச் சீடர்களும் அங்கு வந்தார்கள், தோமாவைத் தவிர. பின்பு அவர்கள் மரியாவைக் கல்லறையில் அடக்கம் செய்துவிட்டுத் திரும்பிவிட்டார்கள். இதற்குள் மரியாவின் இறப்புச் செய்தி தோமாவின் காதுகளை எட்டியது. அவர் சீடர்களிடம் வந்து, “நான் இறந்த மரியன்னையின் உடலைக் கண்டால் ஒழிய எதையும் நம்பமாட்டேன்” என்று சொன்னார். உடனே சீடர்கள் தோமாவை, மரியா அடக்கம் செய்து வைக்கப்பட்ட கல்லறைக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். அங்கு கல்லறையைத் திறந்து பார்த்தபோது, மரியாவின் உடல் இல்லாததைக் கண்டு, அவர் உடலோடும், ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை நம்பத் தொடங்கினார்கள்.

வரலாற்றுப் பின்னணி
இன்று நாம் கொண்டாடும் மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவிற்கு நீண்ட நெடிய பாரம்பரியங்கள் உண்டு. மரியாவின் விண்ணேற்பைக் குறித்து தொடக்கத்தில் தூய ஜெர்மானுசும், தமஸ்கு நகர யோவானும்தான் பேசத் தொடங்கினார்கள். அவர்கள்தான் மரியாவின் விண்ணேற்பைக் குறித்து மறையுரை ஆற்றினார்கள். மூன்றாம் நூற்றாண்டில் மரியா விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதைக் குறிக்கும் விதமாக மக்கள் விண்ணகம் நோக்கி ஜெபிக்கத் தொடங்கினார்கள். ஐந்தாம் நூற்றாண்டில் இவ்விழா மரியாவின் துயில் என்ற பெயரில் கொண்டாடப் பட்டது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த அதிரியான் என்பவர் மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா என்ற பெயரிலேயே ‘மரியாவின் விண்ணேற்பைக் கொண்டாடத் தொடங்கினார்.

இப்படி வளர்ந்து வந்த இவ்விழா 1950 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள் திருத்தந்தை பனிரெண்டாம் பத்திநாதர் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டது. அவர் எழுதிய Magnificatissimus Deus’ என்னும் திருமடலில் அதனை இவ்வாறு உறுதி செய்தார்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தினாலும், தூய திருதூதர்களான பேதுரு, பவுலின் அதிகாரத்தினாலும், நமது தனிப்பட்ட அதிகாரத்தினாலும் நாம் எடுத்தியம்பி, அறிவித்து கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட மறைகோட்பாடாக வரையறுப்பது என்னவென்றால், அமல உற்பவியாகிய கடவுளின் தாய், எப்பொழுதும் கன்னியான மரியா தனது மண்ணக வாழ்க்கைப் பயணத்தை முடித்தபின், விண்ணக மகிமைக்கு ஆன்மாவோடும் உடலோடும் எடுத்துக்கொள்ளப்பட்டார். எனவே, யாராவது வரையறுக்கப்பட்ட இதை மறுத்தாலோ, சந்தேகித்தாலோ, அவர் இறை விசுவாசத்திலிருந்தும் கத்தோலிக்க விசுவாசத்திலிருந்தும் பிரண்டு விட்டார் என்று அறிந்து கொள்ளட்டும்”. திருத்தந்தை அவர்கள் மரியாவின் விண்ணேற்பை ஒரு விசுவாசப் பிரகடனமாக அறிவித்ததில் இருந்து இன்றுவரை மரியாவின் விண்ணேற்பை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் நாள் கொண்டாடி மகிழ்கின்றோம்.

விவிலியப் பின்னணி
மரியா விண்ணகத்திற்கு உடலோடும் ஆன்மாவோடும் எடுத்துக்கொள்ளப்பட்டது என்பது, அவர் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்ததால், கடவுள் அவருக்குக் கொடுத்த மிகப்பெரிய கொடை என நாம் புரிந்துகொள்ளலாம்.

கடவுளால் படைக்கப்பட்ட மனிதனுடைய உடலும் அவனுடைய ஆன்மாவும் தூயது, மாசற்றது (தொநூ 2: 1-7) அப்படிப்பட்டதை மனிதன் தன்னுடைய தவற்றால் தூய்மையற்றதாக, மாசு உள்ளதாக மாற்றிக்கொண்டான். எனவே பாவத்தின் சம்பளம் மரணம் (உரோ 5:12) என்பதைப் போன்று மரணமில்லா பெருவாழ்வைக் கொடையாகப் பெற்றிருந்த மனிதன், தான் செய்த பாவத்தினால் அக்கொடையை இழந்தான்; மரணத்தைத் தழுவினான். இது ஒரு பக்கம் இருந்தாலும் பாவக்கறையோடு இந்த மண்ணுலகத்தில் பிறந்தாலும், கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்தனால் மரணத்தைத் தழுவாமல் விண்ணகத்திற்கு இருவர் எடுத்துக்கொள்ளப்பட்டனர். அவர்கள் வேறுயாருமல்ல ஏனோக்கும், இறைவாக்கினர் எலியாவுமே ஆவார் (தொநூ 5:24, 2 அர 2:1). ஏனோக்கு கடவுளோடு நடந்தார். அதனால் அவர் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். இறைவாக்கினர் எலியா கடவுளுக்கு உகந்த இறைவாக்கினராய் விளங்கினார். அதனால் அவரும் நெருப்புத் தேரோடு விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.

மரியாவைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும்போது அவர் கருவிலே பாவக்கறையில்லாமல் பிறந்தாள், ஆண்டவரின் தூதரால் ‘அருள்மிகப் பெற்றவளே’ என அழைக்கப்பட்டாள் (லூக் 1:28). அது மட்டுமல்லாமல் ஆண்டவர் இயேசுவையே தன்னுடைய உதிரத்தில் தாங்கிடும் பேறுபெற்றாள், இறைவனுக்கு உகந்த வாழ்ந்தாள். இத்தகைய பேற்றினால் மரியாள் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என நாம் உறுதியாகச் சொல்லலாம். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர்” (யோவா 12:26). மரியா தலை சிறந்த சீடத்தியாக வாழ்ந்ததனால் அவர் இயேசு இருக்கும் விண்ணக வீட்டில் இருப்பார் என நாம் உறுதிபடச் சொல்லலாம்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் மரியன்னையின் விண்ணேற்புப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் பாடம் என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

கடவுளுக்கு உகந்த வாழ்ந்த வாழ்தல் மரியாவின் விண்ணேற்பு என்பது அவர் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்ததனால் கிடைத்த மிகப்பெரிய பேறு என்று சொன்னால் அது மிகையாகாது. மரியா தன்னுடைய வாழ்வை கடவுளுக்கு உகந்த தூய, மாசற்ற பலிபொருளாகத் தந்தார்; தாழ்ச்சிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கினார்; தேவையில் இருந்த மக்கள்மீது அன்பும் அக்கறையும் கொண்டு அவர்களுடைய தேவைகளை நிவர்த்தி செய்தார்; எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனுடைய திருவுளத்தை இறுதி வரைக்கும் கடைப்பிடித்து வாழ்ந்தார்; அதற்காக பல்வேறு இன்னல்களையும் இடையூறுகளையும் சந்தித்தார். இத்தகையதோர் வாழ்க்கை வாழ்ந்ததால்தான் மரியாவை இறைவன் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொண்டார். நாம் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழும்போது இறைவன் அளிக்கும் விண்ணக மகிமையைப் பெறுவோம் என்பது உறுதி.

லேவியர் புத்தகம் 19:2 ல் வாசிக்கின்றோம், “தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமான நான் தூயவராக இருக்கின்றேன்” என்று. ஆம், கடவுளின் மக்களாகிய நாம் அனைவரும் கடவுளைப் போன்று தூயவராக இருக்கும்போது அவர் மரியாவுக்கு அளித்த அதே பேற்றினை நமக்கும் அளிப்பார் என்பது வெள்ளிடை மலை. ஆகவே, நாம் ஒவ்வொருவரும் தூய மாசற்ற வாழ்க்கை வாழ முற்படுவோம்.

நம் அன்னையருக்கு மதிப்பளிப்போம் மரி(அன்னை)க்கு விழா எடுத்து அவரை மகிமைப்படுத்தும் இந்த நாளில் நம்மோடு வாழும் நம் அன்னையருக்கும் நாம் மதிப்பும் மரியாதையும் செலுத்துவோம். ஏனென்றால் பல நேரங்களில் நாம், பல்வேறு இடங்களில் உள்ள அன்னையின் ஆலயங்களுக்குச் சென்று, அவரை வழிபடுகிறோம். அவர் முன்பாக உருகி நிற்கின்றோம். ஆனால் நம் அன்னையரை நாம் சரியாகக் கவனிக்கத் தவறிவிடுகின்றோம். இது ஒருவிதத்தில் வெளிவேடம்தான். மரியன்னையின் மீது அன்பு வைத்திற்கும் நாம், நம்மைப் பெற்றெடுத்த அன்னையின்மீது அன்புகொண்டு அவருக்கு தக்க உதவிகளைச் செய்யவேண்டும். அப்போதுதான் நாம் அன்னையின் பிள்ளைகள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்ளமுடியும்.

இன்றைக்கு நாம் நம்முடைய அன்னையரை எப்படி பார்த்துக்கொள்கிறோம் என்பதைச் சுட்டிகாட்ட வேடிக்கையாகச் சொல்லப்படும் நிகழ்வு. அன்று அன்னையர் தினம்! தங்கள் அன்னையை எங்கேனும் வெளியே சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்று மகிழ்விக்கவேண்டும் என்று விரும்பிய அவள் பிள்ளைகள், குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து சுற்றுலா செல்வதற்கு ஏற்றவகையில் ஓர் வாகனத்தை ஏற்பாடு செய்தார்கள். சுற்றுலாவுக்கு எடுத்துச் செல்லவேண்டிய தின்பண்டங்கள் தயாரிப்பதில் அவர்களின் அன்னை மிகவும் மும்முரமாக ஈடுபட்டிருக்கப் (பாவம்! அந்தத் தாய்க்கு அன்றுகூட ஓய்வு இல்லை!) பிள்ளைகள் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு வாகனத்தில் இடம்பிடித்து அமர்ந்தார்கள். கடைசியில் மிஞ்சியிருந்ததோ ஒரே ஓர் இடம்! ஆனால் அங்கே அமர்வதற்காக எஞ்சியிருந்ததோ இருவர்!

ஒருவர் அந்த அன்னையின் கடைசிப் பிள்ளையான மரியான் எனும் சிறுவன், இன்னொருவர் ’விழா நாயகியான’ அந்த அன்னை. இருவரில் யாரை அழைத்துச் செல்வது என்று புரியாமல் வண்டியில் அமர்ந்திருந்தோர் விழிக்க, சுற்றுலாச் செல்லவேண்டும் என்று மிகுந்த ஆசையோடு புத்தாடைகளையெல்லாம் அணிந்துகொண்டு வண்டியில் ஏறத் துடித்துக் கொண்டிருந்த அந்தக் கடைக்குட்டிப் பையன் மரியான், தன் அன்னையின் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தான். அந்தப் பார்வையின் பொருளை உடனே புரிந்துகொண்டுவிட்டாள் அன்புவடிவான அந்த அன்னை!. உடனே அவள், ”நான் வயதானவள்; பிறிதொரு சமயம் சுற்றுலாவுக்கு வருகிறேன். மரியானை அழைத்துச் செல்லுங்கள்! அவன் மகிழ்ச்சியாக இருக்கட்டும்!” என்று அன்போடு கூறித் தன் மகனை வாகனத்தில் ஏற்றி அமரச் செய்தாள். வாகனத்தில் அமர்ந்திருந்த அனைவருக்கும் அந்த அன்னை அன்போடு கையசைத்து விடைகொடுக்க, அவளை ஏற்றிக்கொள்ளாமலேயே அந்த வாகனம் மற்றவர்களோடு சுற்றுலாவுக்குப் புறப்பட்டுச் சென்றது. அன்னைக்கு விழா எடுத்த நாளில் அன்னையையே மறந்துபோனது வேதனையிலும் வேதனையான ஒரு செயல். பல நேரங்களில் நாமும் இதே தவற்றைத்தான் செய்துகொண்டிருக்கிறோம்.

ஆகவே, மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவான இன்று மரியன்னைக்கு மகிமை செலுத்துவோம், அதே நேரங்களில் நம்முடைய அன்னையருக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் செலுத்துவோம். இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

ser

விண்ணேற்பும் விடுதலையும்

'மனிதன் கட்டின்மையோடு பிறக்கிறான். பிறந்தவுடன் எல்லாக் கட்டுக்களுக்கும் ஆளாகிறான்' என்று 'சமூக ஒப்பந்தம்' என்னும் தன் நூலைத் தொடங்குகிறார் ரூசோ. மனிதர்கள் தங்கள் சுதந்திரத்தை இந்தச் சமூகத்திற்கு விற்றுத்தான் தங்கள் வாழ்வை நகர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்பது இவரின் எண்ணம்.

நான் பிறந்தவுடன் - என் குடும்பம், என் நாடு, என் மொழி, என் சமயம், என் இனம், என் கலாச்சாரம், என் உணவுப் பழக்கம், என் ஆதார், என் கடவுச்சீட்டு, என் பான் எண், என் வாகன எண், என் ஓட்டுரிம எண் என என்னைக் கேட்காமலே நான் கட்டுக்களால் கட்டப்படுகிறேன். நான் விரும்பியும் இந்தக் கட்டுக்களை என்னால் உடைக்க முடியாது. உடைக்க நினைத்தாலும் நான் ஒரு கட்டிலிருந்து இன்னொரு கட்டிற்கு மாற்றப்படுவேன். 'இந்தியன்' என்ற என் தேசிய அடையாளம் பிடிக்கவில்லை என்று நான் இத்தாலியில் குடியேறினால் நான் 'இத்தாலியன்' என்ற கட்டைக் கட்டியாக வேண்டும். கட்டின்மை சாத்தியமே அன்று.

அப்படி என்றால், கட்டுக்களோடு இருக்கும், இயங்கும், இறக்கும் எனக்கு கட்டின்மையே கிடையாதா?

உண்டு. கட்டுக்களுக்குள் கட்டின்மை.

அதாவது, நான் ஒரு மாடு என வைத்துக்கொள்வோம். அந்த மாட்டை ஒரு கயிறு கட்டி கம்பத்தோடு இணைத்திருக்கிறது. அந்தக் கயிறு தரும் கட்டின்மைக்குள் நான் இரை தேடிக்கொள்ளலாம். இன்பம் தேடிக்கொள்ளலாம். அவ்வளவுதான்.

ஆனால், இந்தக் கட்டிற்கு நான் என்னையே சரணாகதி ஆக்க வேண்டும்.

நாம் கொண்டாடுகின்ற விண்ணேற்படைந்த அன்னை மரியாள் சொல்லும் வாழ்க்கைப் பாடமும் இதுதான்.

நாசரேத்தில் பிறந்தவர், யூதர், பெண், திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றவர் என இவருக்கு நிறைய கட்டுக்கள் இருந்தாலும், அந்தக் கட்டுக்களுக்குள் இறைத்திட்டத்திற்கு - கட்டுக்கள் இல்லாதவர்க்கு - 'ஆம்' என்று சொன்னதால் கட்டுக்களை வென்றவர் ஆகிறார். பாவம் இல்லாத அவருடைய உடலை இறப்பும் தன் கட்டுக்குள் வைத்திருக்கவில்லை.

ஆங்கிலேயரிடமிருந்து 72 ஆண்டுகளுக்கு முன் நாம் கட்டின்மை அடைந்தோம். ஆனால், இன்று நான் என்னையே அநீதி என்னும் கட்டுக்களுக்குக் கையளிக்காமல், இக்கட்டின்மை தரும் வாய்ப்பைப் பயன்படுத்தி என் கட்டுக்களை நீக்கி, பிறர் கட்டுக்களைகத் தளர்த்த உதவினால், என் விடுதலையும் விண்ணேற்பே.

அனைவருக்கும் விடுதலை மற்றும் விண்ணேற்பு பெருவிழா வாழ்த்துக்கள்.

ser

sunday homily
A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com