மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

திருக்குடும்பப் பெருவிழா
முதலாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
சீராக் ஞானம் 3: 2-7,12-14 | கொலோசையர் 3: 12-21 | மத்தேயு 2: 13-15, 19-23

ser

திருக்குடும்பப் பெருவிழா

இன்று, நாசரேத்தில் வாழ்ந்த திருக்குடும்பத்தை நினைவு கூறுகிறோம். தேவ ஆவியால் நிரப்பப் பெற்று கருவுற்று ஆண்டவர் இயேசுவை, குழந்தையாகப் பெற்ற மரியாவும், வளர்ப்புத் தந்தையாகத் தரப்பட்ட புனித சூசையப்பரும் குழந்தையைத் தாலாட்டி, சீராட்டி கையில் எடுத்து ஏந்தி, ஏரோதிடம் தப்புவிக்க எகிப்துக்கு ஓடி, பின் திரும்ப எருசலேம் வந்து, இறுதியாக நாசரேத்தில் அன்பால், பாசத்தால் இயேசுவை உடல் வளர்ச்சியில் மட்டுமல்ல ஞானத்திலும், அறிவிலும் வளர்த்து, 12 வயதில் எருசலேமில் தவறவிட்ட போதும் ஏக்கத்தோடு இருவரும் தேடிக் கண்டடைந்த பின், 30 வயது வரை வளர்த்து உருவாக்கி, மனித குலத்திற்காக மகனையே பலியாக அர்ப்பணித்த குடும்பம் தான் இந்த திருக்குடும்பம் (லூக் 2:40- 52).

இத்திருக்குடும்பத்தில் மூவரும் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து செயல்பட்டார்கள். நீ பெரியவனா, அல்லது நான் பெரியவனா என்ற பட்டி மண்டபத்திற்கே இடம் தரவில்லை. இந்தக் குடும்பத்தின் வெற்றிக்கு அடித்தளமே கூட்டு முயற்சியும், விட்டுக் கொடுக்கும் மனநிலையும் ஆகும். இறைவார்த்தையை ஆழ்ந்து சிந்திக்கும் உள்ளம் கொண்டவர்கள் (லூக். 2:19). இறைமகன் பிரசன்னம் இருக்க, இவர்களில் நிறை அன்பும், நிறை மகிழ்ச்சியும் உன்னதமான அர்ப்பணமும் வெளிப்பட்டது.

தாய் தந்தையைப் போற்றி மதித்து வாழ்பவன் எல்லா ஆசீரையும் பெற்றவன். தாய் தந்தையை மதித்து நடப்பது பாவ மன்னிப்புக்குச் சமம். அவர்கள் எல்லா செல்வங்களையும் நிறைவாகப் பெற்று, நீடூழி வாழ்வர் எனக் கூறுகிறது (சீரா:3:3-6) முதல் வாசகம். மனத்தாழ்ச்சி, கனிவு, பொறுமை குடும்பத்தில் மேலோங்கி நிற்க வேண்டியவை. இவை அனைத்திற்கும் மேலாக நிறை அன்பு தேவை என்பதை (கொலோ 3:12-14) இரண்டாம் வாசகம் எடுத்துரைக்கிறது. கணவன் மனைவியை அன்பு செய்தல், மனைவி கணவனுக்குப் பணிந்து நடத்தல், பெற்றோருக்குப் பிள்ளைகள் கீழ்ப்படிதல் குடும்பத்தை நிறைவு செய்யும் எனத் திருத்தூதர் பவுல் கூறுகிறார் (கொலோ 3:18-21).

குடும்பம் என்பது அன்பு உள்ளங்களின் சங்கமம். பின் ஆழமான உறவுகளின் அர்ப்பணம். சமுதாய கூட்டமைப்பின் அடிப்படையான ஓர் அங்கம். குடும்பம் ஒரு கோயில். அங்கே இறைவன் பிரசன்னமாகிறார். பாலோடு கலந்த நீர் பாலாகுவது போல , ஆணும், பெண்ணும் திருமணத்தால் ஓருடலாகிறார்கள். இது இறைவனால் அமைக்கப்பட்ட ஒரு தெய்வீக அமைப்பு.

ஒரு மனிதன் கடைக்குச் சென்று தலைக் கவசம் (Helmet) ஒன்று வாங்கி வந்தான். "ஏனப்பா இந்தக் கவசம்? மோட்டார் சைக்கிள் வாங்கி விட்டாயா?" என்று கேட்டார் வழியில் சந்தித்த நண்பர். "இல்லையடா! நேற்று என் மனைவி பூரிக்கட்டை வாங்கி வந்து விட்டாள். அதனால் தான் இந்த ஹெல்மட் வாங்கினேன்" என்றான் இந்த மனிதன். இப்படி வாழ்வது அல்ல குடும்ப வாழ்வு!

ஒரு மாணவன் ஆசிரியரிடம் சொன்னான், "சார் எங்க அப்பா ஆபிசிலே ரொம்ப பெரியவர். ஏனெனில் 5000 பேருக்கு போலீஸ் அதிகாரி அவர். ஆனால் எங்க வீட்டிலே எங்க அம்மாதான் பெரியவுங்க. ஏன்னா, எங்க அப்பாவையே எங்க அம்மா அடக்கிவிடுவாங்க!" இதுவும் சரியல்ல!

ஒரு ஆசிரியர் மாணவன் ஒருவனிடம், "தம்பி! பரிணாம வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு கூறு" என்றார். "சார்! நான் சிறுவனாக இருந்த போது என் அப்பா என்னைப் பார்த்து வாடா கன்னுக்குட்டி ! என்று செல்லமாகக் கூப்பிடுவார். ஆனால் இப்போ போடா எருமைமாடு என்று திட்டுகிறார். இதுதான் பரிணாம வளர்ச்சியென்றான்" மாணவன். இதுவும் சரியல்ல!

மாறாக குடும்பம் மனித மாண்பை வளர்க்க வேண்டும் அன்பும், அரவணைப்பும், நிலையான பண்புகள் என்பதை குடும்பம் எண்ணிப்பார்க்க அழைக்கப்படுகிறது. அதற்கு திருக்குடும்பம் நமக்கெல்லாம் வழிகாட்டும் ஒளிவிளக்கு!

ser ser

மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்


வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்த்த திருச்சபைத் தாய் ஒரு குடும்பத்திற்கு மட்டுமே திருக்குடும்பம் என்ற பெயரைச் சூட்டினாள். அந்தக் குடும்பம்தான் இயேசுவும், மரியாவும், யோசேப்பும் வாழ்ந்த குடும்பம். இயேசு, மரியா, யோசேப்பு இவர்கள் வாழ்ந்த குடும்பம் மட்டும் குன்றின் மீது ஏற்றப்பட்ட விளக்காகத் திகழக் காரணமாக அமைந்தது அந்த மூவரிடமும் நின்று நிலவிய மூன்று முத்தான குணங்கள். திருக்குடும்பம் என்னும் பேரொளி ஒளிர்வதற்குக் காரணமாக இருந்தவை திரி என்னும் இயேசுவின் பணிவு, எண்ணெய் என்னும் மரியாவின் அன்பு, விளக்கு என்னும் யோசேப்பின் அமைதி.

பணிவோடு துவங்கிய இயேசுவின் வாழ்க்கை கீழ்ப்படிதலோடு முடிந்தது. பின்பு அவர் (சிறுவன் இயேசு) அவர்களுடன் (பெற்றோர்) சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார் (லூக் 2:51அ) என்று நற்செய்தியில் படிக்கின்றோம். இயேசுவின் வாழ்க்கையின் கடைசி அத்தியாயம். அங்கே நாம் காண்பதென்ன? கெத்சமனி தோட்டத்தில் துயரமும் மனக்கலக்கமும் (மத் 26:37), ஆழ்துயரமும் (மத் 26:38) இயேசுவை ஆட்கொண்டிருந்தன. அவர் வானகத் தந்தையைப் பார்த்து, என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக் கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும் (மத் 26:42) என்றார்.

புனித பவுலடிகளார் கிறிஸ்து இயேசு சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார் (பிலி 2:8) என்று கூறுகின்றார். இயேசு அவருடைய பெற்றோரின், விண்ணகத் தந்தையின் திருவுளத்தோடு தன் ஆசைகளைச் சங்கமமாக்கிக் கொண்டார். இயேசுவின் கீழ்ப்படிதலுக்கு அடுத்தபடியாக திருக்குடும்பத்தை அலங்கரித்த பண்பு அன்னை மரியாவின் அன்பு.

மரியா மங்கள வார்த்தைத் திருநாளன்று (லூக் 1:26-38) தம் சம்மதத்தை கடவுளுக்குக் கொடுத்து உலக மக்களை அன்பு செய்தார்.

எலிசபெத்தைச் சந்தித்து, அவரை வாழ்த்தி, அவரது அன்பைப் பெற்றார் (லூக் 1:39-45).

எகிப்திற்குப் புறப்பட்டபோது பேசாமடந்தையாக யோசேப்பின் வழி நடந்து (மத் 2:14), யோசேப்பை அன்பு செய்தார்.

சிறுவன் இயேசுவைத் தேடியபோது (லூக் 2:41-50) இயேசுவை அன்பு செய்தார்.

கானாவிலே திருமண வீட்டாரை அன்பு செய்தார் (யோவா 2:1-11).

கல்வாரியிலே சிலுவையிலே துடித்த இயேசுவின் அருகிலிருந்து (யோவா 19:25) கண்ணீ ர் சிந்திய கர்த்தருக்கு (எபி 5:7) ஆறுதல் என்னும் அருமருந்தைத் தந்து, அவரை அன்பு செய்தார்.

இறுதியாக, தம் மகனைக் கொன்றவர்களுக்குத் தாயாகி பாவிகளை அன்பு செய்தார் (யோவா 19:26-27).

சுயநலம் என்ற சொல்லுக்கே அன்னை மரியாவின் வாழ்க்கையில் இடமில்லை. அன்பே கடவுள் என அன்னை மரியா வாழ்ந்தார்.
 

அன்னை மரியாவின் அன்பிற்கு அடுத்த படியாக திருக்குடும்பத்தை அழுகுபடுத்தியது யோசேப்பின் அமைதி.

அன்று வானதூதர் மரியாவிற்கு நற்செய்தி கொண்டு வந்தார் - கன்னி அன்னையானார் - புனித யோசேப்பு பேசவில்லை!

இயேசு பிறக்க இடமில்லை என்றார்கள். அப்போதும் புனித யோசேப்பு பேசவில்லை.

குழந்தை இயேசுவை விண்ணகத்தூதரும், இடையர்களும், ஞானிகளும் வாழ்த்தினார்கள். அப்போதும் புனித யோசேப்பு பேசவில்லை !

இயேசு கோயிலிலே அர்ப்பணிக்கப்பட்டார். அப்போதும் புனித யோசேப்பு பேசவில்லை!

எகிப்துக்குத் தப்பி ஓடிச்செல்லும் என்று தூதர் சொன்னார். அப்போதும் புனித யோசேப்பு பேசவில்லை!

இஸ்ரயேல் நாட்டுக்குத் திரும்பிச் செல்லுமாறு தூதர் சொன்னபோதும் புனித யோசேப்பு எதுவும் பேசவில்லை!

யூதேயாவில் அர்க்கலா, எரோதின் மகன்! புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? ஆகவே அங்கே போக வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டபோதும் புனித யோசேப்பு ஒன்றும் பேசவில்லை! சிறுவன் இயேசு காணாமல் போனபோதும் புனித யோசேப்பு ஒன்றும் பேசவில்லை !

நாம் அமைதியில்தான் நமது தாயின் கருவில் வளர்ந்தோம். இறந்த பின் அமைதியில்தான் இறைவனைச் சந்திக்கப் போகின்றோம்.

இப்படியிருக்க, பிறப்புக்கும், இறப்புக்கும் நடுவே ஏன் சத்தம்? எல்லாம் கடவுள் பார்த்துக்கொள்வார். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் எனச் சொல்லாமல் சொல்லி புனித யோசேப்பு எங்கும், எதிலும், எப்பொழுதும் அமைதி காத்தார்.

மன்றாடுவோமா?

வானகத் தந்தையே, இயேசுவும் மரியாவும் யோசேப்பும் வாழ்ந்த திருக்குடும்பம் போலவே எங்கள் குடும்பமும் திகழவேண்டும். இந்த நல்ல நேரத்தில் எங்களது கீழ்ப்படியாமையையும், பகையையும், அளவுக்கு மீறிய பேச்சையும் பாராமல், நாங்கள் வாழ விரும்புகின்ற பணிவு வாழ்வையும், அன்பு வாழ்வையும், அமைதி வாழ்வையும் மட்டும் கண்ணோக்கி எங்கள் குடும்பங்களை இயேசுவின் பணிவினாலும், மரியாவின் அன்பினாலும், யோசேப்பின் அமைதியினாலும் அருள்பொழிவு செய்து எங்களை வளமுடன் வாழவைத்தருளும். ஆமென்.

மேலும் அறிவோம் :அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது (குறள் : 45).


பொருள் : ஒருவர் குடும்ப வாழ்வு அன்பின் இயல்பையும் அறச் செயலையும் கொண்டிருக்குமானால் அவை முறையே பண்பாகவும் பயனாகவும் திகழும். கணவனும் மனைவியும் கருத்து ஒருமித்து வாழ்ந்தால் அன்பே பண்பாகவும் அறமே பயனாகவும் விளங்கும்.

ser ser

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்

திருமணத்திற்கு என் ஆடுமாடுகளை அழைப்பதில்லை? ஏனெனில் திருமணம் ஆயிரங்காலத்துப் பயிர், ஆடுமாடுகளை அழைத்தால் அவை ஆயிரங்காலத்துப் பயிரை மேய்ந்து விடுமாம். ஆனால், இன்று பல்வேறு தீயசக்திகள் திருமணத்தை மேய்த்து கொண்டிருக்கின்றன. ஆயிரங்காலத்துப் பயிர் குறுவைப் பயிராக மாறிவிட்டது. மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தால் மணமுறிவு அதிகரித்துவிட்டது. மேற்கத்திய நாடுகளில் நடப்பது என்ன? திங்கள்கிழமை காதல், செவ்வாய்கிழமை நிச்சயதார்த்தம். புதன் கிழமை திருமணம்; வியாழக்கிழமை தேனிலவு: வெள்ளிக்கிழமை விவாகரத்து; சனிக்கிழமை Resi' (ஓய்வு): ஞாயிறு 'Next' (மறுமணம்). இப்பின்னணியில் இன்று நாம் திருக்குடும்பத் திருவிழாவைக் கொண்டாடுகிறோம்.
ஆண்டவருக்கு உகந்த குடும்ப வாழ்க்கையை வாழ்வது எப்படி என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் அருமையாகக் கூறுகிறார். அதன்படி நடந்தால், ஒவ்வொரு குடும்பமும் திருக்குடும்பமாகத் திகழும். இல்லையெனில் தெருக்குடும்பமாகத் திண்டாடும், குடும்பத்தில் கோலோச்ச வேண்டிய நற்பண்புகள்: பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத் தாழ்மை, கனிவு, பொறுமை, அனைத்திற்கும் மேலாக இந்நற்பண்புகளை எல்லாம் பிணைத்து நிறைவு செய்யும் அன்பு (கொலோ 3:12-14),


கிறிஸ்துவுக்குள் குடும்ப வாழ்வு நடத்தும் கணவர் தம் மனைவியை அன்பு செய்ய வேண்டும்; மனைவி தன் கணவருக்குப் பணிந்து நடக்க வேண்டும். பிள்ளைகள் அனைத்திலும் பெற்றோர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் (கொலோ 3:18-21). அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம் "தான்" (ego) என்ற ஆணவம். அங்கேபார். இங்கேபார். மேலேபார். கீழே பார்! கலக்கப்போவது யார்? நீயா? நானா? என்ற நிலைப்பாடு கணவனா? மனைவியா? காமமா? காதலா? மாமியாரா? மருமகளா? என்ற பட்டி மன்றம் குடும்ப வாழ்வைச் சீரழித்துக் கொண்டிருக்கிறது.


குடும்பத்தில் யார் கை ஒங்குகிறது? அப்பா கையா? அம்மா கையா? - என்று ஒரு சிறுவனைக் கேட்டதற்கு அவன் கூறிய பதில்: அப்பா கை ஓங்குகிறது. அம்மா கை வீங்குகிறது. குடும்ப வாழ்வைப் பாதுகாக்க வேண்டுமென்றால், - நீயா? நானா?" என்ற பிரிவினைப் போக்கினைக் கைவிட்டு விட்டு, 'நீயும் நானும்' என்ற சமரசப் போக்கினைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆணில்லாமல் பெண்ணும், பெண்ணில்லாமல் ஆனும் வாழ முடியாது. எனவே ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து இனியதோர். இல்லறம் நடத்த வேண்டும்.


இல்வாழ்வில் கணக்கைவிட (maths), வேதியல் (Chemistry) முக்கியமானது. மூளைக்கு அதிகம் வேலை கொடுக்காமல், இதயத்துக்கு அதிகம் வேலை கொடுக்க வேண்டும். மூளை அறிவின் ஊற்று; காரணம் - காரியம் அடிப்படையில் வேலை செய்து வீண் விவாதத்தை உருவாக்கும். இதயம் அன்பின் ஊற்று; பாசத்தின் அடிப்படையில் வேலை செய்யும். மற்றவரிடம் குறைகளைப் பார்க்காமல் நிறைகளைப் பார்க்கும். அன்புக்கு மசியாதது எதுமில்லை. அன்புக்கு அடிபணிந்தால் ஆனந்தமான இல்வாழ்வு வாழ முடியும். அன்பு ஒருபோதும் அழியாது.
திருக்குடும்பத்தில் சமத்துவ அன்பும், மதிப்பும், மரியாதையும் நிலவியது. யோசேப்பு, மரியா, இயேசு ஆகிய மூவரும் ஒருவர் மற்றவரைச் சொல்லாலோ செயலாலோ புண்படுத்தவில்லை. அவர்களிடம் 'cgo' பிரச்சினை இல்லை (cgo என்றால் ecking God out என்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதாவது, கடவுளை வெளியேற்றுதல்) கடவுள் வாழ்த்த அக்குடும்பத்தில் அறிவுக்கு எட்டாத அமைதி நிலவியது.


திருமண அன்பின் கனி குழந்தை, இன்றைய பதிலுரைப் பாடல் (திபா 128) கூறுவதுபோல, கடவுளுக்கு அஞ்சி வாழுகின்ற மனிதனுக்குக் கிடைக்கும் பேறுகள் இரண்டு நல்ல மனைவி, நல்ல குழந்தைகள். ஒரு குடும்பத்தின் விளக்கு மனைவி, அக்குடும்பத்தில் அணிகலன்கள் குழந்தைகள் என்கிறார் வள்ளுவர்.


மங்களம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு (குறள் 60 )

திருக்குடும்பத்தைப் பின்பற்றிப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டவேண்டும். குழந்தை இயேசுவைக் கொடுங்கோல் மன்னன் ஏரோது கொல்லத் தேடுகிறான் என்று வானதூதர் யோசேப்புக்குக் கனவில் எச்சரித்தபோது, யோசேப்பு தம் மனைவி மரியாவுடன் குழந்தையை யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு எடுத்துச் சென்று காப்பாற்றினார் என்று இன்றைய நற்செய்தி வாசகம் கூறுகிறது (மத் 2:3-15). சிறுவன் இயேசு பன்னிரண்டு வயதில் காணாமற்போனபோது, யோசேப்பும் மரியாவும் அவரை மிகுந்த கவலையோடு தேடிச் சென்றனர் (லூக் 2:41-48),


இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் எங்கே போகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று கவலைப்படுகின்றனரா? சில பெற்றோர்கள், "வந்த மாட்டைக் கட்டுவதில்லை, போன மாட்டைத் தேடுவதில்லை" என்ற நிலைப்பாட்டை எடுக்கின்றனர். ஒரு பெரியவர் ஓர் அப்பாவிடம் "உங்கள் முதல் பையன் என்ன செய்கிறான்?" என்று கேட்டதற்கு, 'அந்தக் குரங்கு எந்த மரத்தில் இருக்கிறதோ?" என்றார். இரண்டாவது பையனைப் பற்றிக் கேட்டதற்கு, "அந்த எருமைமாடு எங்கே கத்துதோ?" என்றார். மூன்றாவது பையனைப் பற்றிக் கேட்டதற்கு, 'அந்தப் பன்றி எங்கே புரளுதோ?" என்றார். அதிர்ச்சியடைந்த பெரியவர் அப்பாவிடம், 'உங்கள் வீட்டில் பிள்ளைகள் இல்லையா? மிருகக் காட்சிதான் இருக்கிறதா? என்று கேட்டார். பெற்றோர்கள் பிள்ளைகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்று புனித பவுல் கூறுவது: "பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். அப்படிச் செய்தால் அவர்கள் மனம் தளர்ந்து போவார்கள்" (கொலோ 3:21),


பிள்ளைகள் தங்களது வயதான பெற்றோர்களை எவ்வாறு தடத்த வேண்டுமென்று இன்றைய முதல் வாசகம் நடைமுறை விதிகளைக் கொடுக்கிறது. ஆண்டவருக்கு அஞ்சும் மனிதர் தம் தாய் தந்தையை மதிப்பர்; அவர்கள் நிலவுலகில் நீண்ட காலம் வாழ்வர். அன்னை இல்லம் என்று வீட்டுக்குப் பெயரிட்டு, அன்னையை முதியோர் இல்லத்தில் சேர்ப்பவர்களுக்குக் கடவுளின் ஆசீரும் கிடைக்காது. அவர்களுடைய பிள்ளைகளிடமிருந்து அன்பும் ஆதரவும் கிடைக்காது என்பது உறுதி.
ஒரு தாத்தா தன் பேரனிடம், "என் நாக்குச் செத்துப் போயிட்டது" என்று கூற, போன் அவரிடம், "செத்த நாக்கை எரிக்கலாமா? அல்லது புதைக்கலாமா?" என்று கேட்டான் வயது ஆக ஆக நாக்கு மட்டுமல்ல, எல்லா உறுப்புகளுமே செயல் திறனை இழந்து விடுகின்றன; அறிவாற்றல் குறைந்து போகிறது. இதைப் பிள்ளைகள் புரிந்து கொண்டு வயதான பெற்றோர்களை மனங்கோணாமல் நடத்த முயல வேண்டும். திருமணம் புனிதத்துக்கு வாய்க்கால்; திருமணமென்னும் திருவருட் சாதனத்தால் தம்பதியர் திருநிலைப்படுத்தப்படுகின்றனர். இம்மையில் முறையான திருமண வாழ்வு வாழ்கின்றவர்கள், தெய்வீக வாழ்வு வாழ்கின்றனர்,


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்   (குறள் 50)

 

ser ser

இதுவே மிக அழகானது

அவன் ஒரு கலைஞன். உலகிலேயே மிகவும் அழகானதை ஒவியமாக்கத் துடித்தான். அப்படி உலகிலேயே மிக அழகானது எது?

வழியில் குரு ஒருவரைச் சந்தித்தான். அவர் சொன்னார்: “உலகிலேயே மிக அழகானது நம்பிக்கைதான். அதனை ஒவ்வொரு ஆலயத்திலும் உணரலாம். சிறிது தூரம் சென்றான். புதிதாக மணமுடித்த இளமங்கை எதிரே வந்தாள். “அன்புதான் அழகானது அன்பு இருந்தால் வறுமை கூட வளமைதான். கண்ணீர் கூடக் களிப்புத்தான்” என்றாள். அடுத்து ஒரு போர்வீரன் : 'சமாதானம்' அதுபோல அழகானது வேறு எது? போர், யுத்தம், சண்டை , சச்சரவு எல்லாமே அசிங்கமானது”.

நம்பிக்கை... அன்பு.... சமாதானம்... இவற்றையெல்லாம் எப்படி ஓர் ஓவியத்துக்குள் கொண்டு வருவது? சிந்தித்துக் கொண்டே தன் வீட்டிற்குள் நுழைகிறான். 'அப்பா' என்று ஆர்வம் பொங்க ஓடிவந்து அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்ட குழந்தைகளின் கண்களில் நம்பிக்கை மின்னியது. 'என்னங்க' என்ற தன் மனைவியின் கனிவான குரலில் அன்பு பொங்கியது. அந்த நம்பிக்கையும் அன்பும் கட்டி எழுப்பிய ஓர் அமைதி, சமாதானம் அவன் வீடு முழுவதும் ஒளிர்ந்தது.

ஆம், இப்போது அவன் கண்டு கொண்டான் உலகிலேயே மிக அழகானது எதுவென்று. அதை ஓவியமாக்கினான். அதன் கீழே எழுதி வைத்தான் “இல்லம் என்று.

அன்பு, நம்பிக்கை, சமாதானம் பூத்துக் குலுங்கும் அந்த நாசரேத்து இல்லத்திற்குள் நுழைகிறோம். குடும்பத்தின் புனிதத் தன்மையைப் போற்றிப் பேணும் மூன்று உள்ளங்களையும் வாழ்த்தி வணங்கிவிட்டு வெளியே வருகிறோம். புதிய உணர்வுகளோடு, நமது இல்லமும் இத்தகையதொன்றாகாதா என்ற புனித ஏக்கத்தோடு,

ஒவ்வொரு கிறிஸ்தவக் குடும்பமும் ஒரு திருக்குடும்பமாக - ஏன் அந்த நாசரேத்து குடும்பத்தை விடச் சிறந்த ஒன்றாகத் திகழ வேண்டும். யோசேப்புக்கும் மரியாவுக்கும் கிட்டாத பேறும் தெய்வ அருளும் கிறிஸ்தவ மணமக்களுக்குக் கிடைக்கின்றன. யோசேப்பும் மரியாவும் இணைந்தது, இல்லறத்தில் புகுந்தது இயற்கை ஏற்பாடான திருமணத்தால்! திருமணத் திருவருள் சாதனத்தால் அன்று! மீட்பின் அருளும் ஆசிரும் பொங்கி ஊற்றெடுக்கும் ஏழு சுனைகளில் ஒன்று அல்லவா இயேசு நிறுவிய திருமணத் திருவருள் சாதனம்!

நாசரேத்துக் குடும்பத்தை ஏன் திருக்குடும்பம் என்கிறோம்? அது ஓர் இலட்சியக் கணவன், ஓர் இலட்சிய மனைவி, ஓர் இலட்சியத் தந்தை, ஓர் இலட்சியத் தாய், ஒர் இலட்சியக் குழந்தை இவர்களின் கூட்டாகத் திகழ்கிறது என்பதாலா? அந்த நிலை ஓர் இலட்சியக் குடும்பமாக மாற்றுமே தவிர ஒரு திருக்குடும்பமாக்காது. அந்த இலட்சியக் குடும்பம் எப்படி ஒரு திருக்குடும்பமானது?

அங்கே இருப்பது வெறும் குழந்தையா? அன்று, கடவுள்! ஆக உங்கள் குடும்பம் குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் கோவிலாகட்டும். கணவன் - மனைவி - கடவுள்... அப்படிக்கூட அன்று, கடவுள் - கணவன் - மனைவி (கடவுளுக்கு முதல் இடம்)... இதுதான் திருக்குடும்பம்!

சோதனைக்கும் வேதனைக்கும் இடையே திருக்குடும்பம் மகிழ்ச்சியோடும் மனஉறுதியோடும் இருந்ததற்குக் காரணம் இயேசு அங்கே இருந்தது. இயேசுவோடு அவர்கள் இணைந்ததே! அகந்தை கலந்த தன்முனைப்பு - EGO அதாவது Edging God Out - கடவுளை ஓரங்கட்டுவது குடும்பச் சிக்கலில், சீரழிவில் கொண்டு போய் நிறுத்தும். குடும்பச் செயம் நல்ல குடும்பத்தைக் கட்டி எழுப்பும். (தி.பா.127:1)

கிறிஸ்துவும் திருச்சபையும் போலக் கணவனும் மனைவியும் வாழட்டும் (எபே.5:25) திருச்சபை மீது கிறிஸ்து பொழிந்த அன்பும் திருச்சபைக்காக உயிர்நீத்த அவரது தியாகப் பண்புமே இல்லறத்தை இன்பம் கமழச் செய்யும்.

இன்பத்தைப் பகிர்வது அன்பின் முதற்படி. துன்பத்தைப் பகிர்வது அன்பின் அடுத்தப்படி. குற்றத்தைப் பகிர்வது அன்பின் நிறைவுப் படி, இன்பத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது இன்பம் இரட்டிப்பாகிறது? துன்பத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது துன்பம் பாதியாகிறது. குற்றத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது குற்றமே இல்லாமல் போகிறது.

எதையோ எழுதிக் கொண்டிருக்கும் தந்தைக்கு முன்னே காப்பியை வைத்து விட்டுப் போகிறார் குடும்பத் தலைவி. அங்கே வந்த மகன் தெரியாமல் காப்பிக் குவளையைத் தட்டி விடுகிறான். அந்த நிலையில் அந்தச் சிறுவன் “அப்பா மன்னித்து விடுங்கள். தெரியாமல் செய்துவிட்டேன் என்கிறான். அப்பாவோ “உன் தவறு இல்லை மகனே, என் தவறு தான். அம்மா கொண்டு வந்ததும் எடுத்துப் பருகியிருந்தால் இப்படி நேர்ந்திருக்குமா?” என்கிறார். அதைக் கேட்ட அம்மா “அது உங்கள் இருவருடைய தவறுமல்ல. எனக்கென்ன அப்படித் தலைபோகிற அவசரம்? அப்பா அதைப் பருகிற வரை அங்கு நான் இருந்திருந்தால்...." என்கிறாள். இப்போது யாருடைய தவறு? மூன்று பேருமே மற்ற இருவர் மீதும் பழிபோடாமல் தானே தவறுக்குப் பொறுப்பேற்கிற விந்தையைப் பார்க்கிறோம். யாருடைய தவறு என்று முடிவு கட்ட முடியாமல் முடியைப் பிய்த்துக் கொள்கிறோம்.

நமது பாவத்தைத் தன்மேல் ஏற்றுக் கொண்ட (எசா.53:6, மத்.8:17) இயேசுவின் அந்தத் தெய்வீக அன்புக்குச் சான்று பகரும் வாய்ப்பும் பொறுப்பும் இல்லறத்தினருக்கு உரியது.

கிறிஸ்துவும் திருச்சபையும் போல மட்டுமல்ல, கிறிஸ்துவோடும் திருச்சபையோடும் கணவனும் மனைவியும் வாழட்டும். அந்த நிலையில் பெத்லகேமின் ஏழ்மையா, நாசரேத்தின் தனிமையா, கல்வாரியின் துயரமா, எதையும் சந்திக்கும், தாங்கிக் கொள்ளும் அருளும் ஆற்றலும் பெறுவார்கள், கானாவூரில் தண்ணீ ரை இரசமாக மாற்றிய இயேசு நம் கண்ணீரை மகிழ்ச்சியாக மாற்றுவார்.

அன்புத்தாயின் மகவே அருள்!

அன்பும் அறனும் (அருளும்) உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. (திருக்குறள் 45)


கிறிஸ்துவும் திருச்சபையும் போல வாழும் போது தெய்வ அன்பைச் சுவைக்கிறோம். கிறிஸ்துவோடும், திருச்சபையோடும் வாழும் போது தெய்வ அருளில் திளைக்கிறோம்.

ser ser

அனைத்திற்கும் மேலாக அன்பையே கொண்டிருங்கள்

நிகழ்வு
          கடைத்தெருவிலிருந்து கையில் பொட்டலத்தோடு நடந்து வந்துகொண்டிருந்த முகிலனைப் பார்த்து, அவனுடைய நண்பன் அகிலன், “கையில் என்ன பொட்டலம்...?” என்றான்.  “அதுவா... மனைவிக்காக வாங்கியிருக்கும் மல்லிகைப் பூ பொட்டலம்” என்றான் முகிலன். உடனே அகிலன் சிரித்துக்கொண்டே, “மனைவியின்மீது அவ்வளவு பிரியமா...? மல்லிகைப் பூவெல்லாம் வாங்கிக்கொண்டு போகிறாய்...?” என்றான். “என் மனைவி என்னுடைய வெற்றிக்குக் காரணமாக இருந்திருக்கின்றாள். அப்படிப்பட்டவள்மீது பிரியமில்லாமலா இருக்கும்” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினான் அகிலன்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த அகிலன், “உன்னுடைய வெற்றிக்கு மட்டுமல்ல... பலருடைய வெற்றிக்கும் அவர்களுடைய மனைவியே காரணமாக இருந்திருக்கின்றார்கள். முன்னாள் அமெரிக்க அதிபர் ஆன்ட்ரு ஜான்சனுக்கு திருமணத்திற்கு முன்பாக எழுதப் படிக்கத் தெரியாது. அவருடைய மனைவிதான் அவருக்கு எழுதப் படிக்கச் சொல்லிக்கொடுத்து, அவருக்கு அமெரிக்க அதிபராகும் தகுதியை உருவாக்கித் தந்தார்... மோட்டார் மன்னர் ஹென்றி போர்ட் தெரியுமல்லவா... அவர் தன்னுடைய தொழிலில் தொடர் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டுவந்தார். இப்படிப்பட்ட சமயத்தில் அவரோடு இருந்த எல்லாரும் அவரை விட்டுப் போய்விட்டார்கள்; அவருடைய மனைவிதான் அவரோடு இருந்து, அவருக்குப் புதுத் தெம்பூட்டி, உற்சாகப்படுத்தி அவரைத் தொழிலில் வெற்றிபெறச் செய்தார். இப்படிப் பலருடைய வெற்றிக்கும் அவர்களுடைய மனைவிதான் உறுதுணையாக இருந்திருக்கின்றார்கள்” என்றான்.

இப்படிச் சொல்லிவிட்டு அகிலன் முகிலனிடம், “அது சரி நண்பா! உன்னுடைய வெற்றிக்கு உன்னுடைய மனைவி எந்த விதத்தில் காரணமாக இருந்தாள்” என்றான். “ஓர் அருமையான நாவலை எழுதுவதற்குக் காரணமாக இருந்தாள்” என்றான் முகிலன். “அது எப்படி?” என்று மீண்டுமாக அகிலன் கேள்வி கேட்டபோது, “ம்ம்ம் நாவலை எழுதி முடிக்கும் வரைக்கும் என் மனைவி அவளுடைய அம்மா வீட்டில் இருந்தாள்” என்றான் முகிலன். இதைக் கேட்டுவிட்டு அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான் அகிலன்.

குடும்பங்களில் ஒருசிலர் அருகில் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்; ஒருசிலர் அருகில் இல்லாமல் இருந்ததால்தான் மகிழ்ச்சியாக இருக்கும் என்ற உண்மையை வேடிக்கையாக பதிவுசெய்யும் இந்த நிகழ்வு நமது சிந்தைக்குரியது. இன்று நாம் திருக்குடும்பப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்சிகின்றோம். இந்த மகிழ்வான தருணத்தில், நம்முடைய குடும்பத்தை, திருக்குடும்பமாகக் கட்டியெழுப்ப இன்றைய இறைவார்த்தை என்ன செய்தியைத் தருகின்றது என்பதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

பெற்றோரின் கடமை

          ஒரு குடும்பத்தின் இருபெரும் தூண்கள், அக்குடும்பத்தில் இருக்கும் தாயும் தந்தையும்தான். அவர்கள் இருவரும் கடவுளுக்கு ஏற்ற வழியில் நடந்து, கடவுள் தங்களுக்குக் கொடுக்கும் குழந்தையையும் கடவுளுக்கு ஏற்ற வழியில் நடத்தினால் அந்தக் குடும்பத்தை விட மகிழ்ச்சியான குடும்பம் இந்த உலகத்தில் இருக்க முடியாது.

திருக்குடும்பத்தில் உள்ள யோசேப்பும் மரியாவும் கடவுளுக்கு அஞ்சி, அவருடைய திருவுளத்தின்படி வாழ்ந்துவந்தார்கள். இன்னும் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டால், யோசேப்பு தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இறைத்திருவுளத்தின்படியே நடந்தது, குழந்தை இயேசுவுக்கும் மரியாவிற்கும் பாதுகாப்பளித்து, அரணாக இருந்தார். இன்றைய நற்செய்தியில் ஏரோது மன்னன் குழந்தை இயேசுவைக் கொல்ல நினைத்தபோது, அவர் குழந்தையையும் அதன் தாய் மரியாவையும் தூக்கிக்கொண்டு எகிப்துக்கு ஓடுகின்றார். இவ்வாறு யோசேப்பு இறைத்திருவுளத்தின்படி நடந்து, ஓர் எடுத்துக்காட்டான தந்தையாய் மிளிர்ந்தார். மரியாவும் அப்படியே இறைத்திருவுளத்தின்படி நடந்து ஓர் எடுத்துக்காட்டன தாயாய் மிளிர்ந்தார். இதனாலேயே இயேசுவும் இறைத்திருவுளத்தின் நடப்பவராக விளங்கினார். அப்படியானால், ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும். அப்பொழுதுதான் அவர்களைப் பார்த்து வளர்கின்ற அவர்களுடைய பிள்ளைகளும் எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழ்வார்கள்.

நிறையக் குடும்பங்களில் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்குமுன் எடுத்துக்காட்டன வாழ்க்கை வாழாமல், இன்றைய இரண்டாம் வாசகத்தில் நாம் வாசிப்பது போல, தங்களுடைய நடத்தையாலும் சொல்லாலும் எரிச்சல் மூட்டக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். இதனாலேயே பிள்ளைகளும் தவறான வழியில் செல்கின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில் ஒவ்வொரு பெற்றோரும் யோசேப்பு, மரியாவைப் போன்று தங்களுடைய பிள்ளைகளுக்குமுன் எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழ்வது இன்றியமையாதது.

கணவன் மனைவின் கடமை

          ஒரு குடும்பத்தின் இருபெரும் தூண்களாக இருக்கும் தாயும் தந்தையும் எப்படி எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழவேண்டும் என்பது பற்றிச் சிந்தித்த நாம், அந்த தாயும் தந்தையும் அல்லது கணவனும் மனைவியும் ஒருவரோடு ஒருவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை இன்றைய இரண்டாம் வாசகத்தின் வழியாக அறிந்துகொள்வோம்.

இரண்டாம் வாசகத்தில் புனித பவுல், மனைவி தன்னுடைய கணவருக்குப் பணிந்திருக்கவேண்டும் என்றும் கணவர் தன்னுடைய மனைவியை அன்பு செய்யவேண்டும் என்றும் கூறுகின்றார். இதில் நாம் கவனிக்க வேண்டிய செய்தி, மனைவிதான் கணவருக்குப் பணியவேண்டும், கணவர்தான் மனைவியை அன்பு செய்யவேண்டும் என்று இல்லை. கணவன் தன்னுடைய மனைவிக்குப் பணிந்திருக்கவேண்டும்; அதேபோல் மனைவி தன்னுடைய தன்னுடைய கணவரை அன்பு செய்யவேண்டும். இப்படி ஒருவர் மற்றவருக்குப் பணிந்து நடந்து, ஒருவர் மற்றவரை அன்பு செய்து வாழ்ந்தால் அந்தக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், நிறையக் குடும்பங்களில் இத்தகைய பணிவும் அன்பும் இல்லை. அதனால்தான் பல குடும்பங்கள் சிதைந்து கிடக்கின்றன.

ஒரு குடும்பத்தில் மனைவி தன் கணவரோடு கோபித்துக்கொண்டு பெட்டி படுக்கையைத் தூக்கி, அவளுடைய அம்மா வீட்டுக்குக் கிளம்பினாள். அதைப் பார்த்து அவளுடைய கணவனும் பெட்டி படுக்கையைத் தூக்கிக் கொண்கொண்டு அவனுடைய வீட்டுக்குக் கிளம்பினான். தன் கணவன் இப்படி நடந்துகொள்வான் என்று சிறிதும் எதிர்பார்த்திராத மனைவி அவனிடம், “இப்படி இருவரும் நம்முடைய அம்மா வீட்டிற்குக் கிளம்பிப் போய்விட்டால், பிள்ளைகள் எங்கே போவார்கள்...?” என்றாள்.  அதற்கு அவளுடைய கணவன், “வேறு எங்கு போவார்கள்...? நடுத்தெருவிற்குத்தான் போவார்கள்” என்றான். உடனே அவள் தன்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டு வீட்டிலேயே இருக்கத் தொடங்கினாள்.

இப்படித்தான் நிறையக் குடும்பங்கள் அன்பில்லாமலும் பணிவில்லாமலும் சிதைந்து கிடக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் ஒரு குடும்பம் திருக்குடும்பமாக மாற, ஒருவர் மற்றவர்மீது அன்பு காட்டி, ஒருவர் ஒருவருக்குப் பணிந்து நடப்பது நல்லது.

பிள்ளையின் கடமை

          பெற்றோர், கணவன் மனைவி எப்படி இருக்கவேண்டும், அவர்களுடைய கடமை என்ன என்பன பற்றி சிந்தித்த நாம், பிள்ளைகளின் கடமை என்ன என்பதைச் சிந்தித்துப் பார்ப்போம். சீராக்கின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், பிள்ளைகள் தங்களுடைய தாய், தந்தையை மதித்து வாழவேண்டும் என்றும் அவர்களை மேன்மைப்படுத்தவேண்டும் என்றும் அப்படிச் செய்தால், அவர்களுடைய மன்றாட்டு கேட்கப்படும்; மகிழ்ச்சி கிட்டும்; இன்னபிற ஆசியும் கிடைக்கும் என்று எடுத்துக்கூறுகின்றது.

இன்றைய காலக்கட்டத்தில் பல பிள்ளைகள் தங்களை ஏற்றிய ஏணிகளாகிய பெற்றோர்களை மதிக்காமலும் அவர்களை மேன்மைப்படுத்தாலும் புறக்கணிப்பதுதான் மிகவும் வேதனையாக இருக்கின்றது. ஆண்டவர் இயேசு, தான் இறந்தபிறகு தன் தாய் மரியா தனித்துவிடப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவரை யோவானிடம் ஒப்படைத்தார். அந்தளவுக்கு அவர் தன் தாய்மீது அக்கறையாய் இருந்தார். அவரைப் போன்று ஒவ்வொரு மகனும் மகளும் தன்னுடைய பெற்றோருக்கு மதிப்பளித்து, அவர்களுடைய கடைசிக் காலத்தில் கைநெகிழ்ந்து விடாமல், கண்ணும் கருத்துமாய்க் காத்திடல் வேண்டும். அப்படிக் செய்தால், அவர்கள் கடவுளின் ஆசியைப் பெறுவது உறுதி.

ஆகையால், இந்தத் திருக்குடும்பப் பெருவிழாவில் ஒவ்வொருவரும் - அது தாயாக, தந்தையாக, பிள்ளையாக யாராக இருந்தாலும் – ஒருவர்மீது அன்பு செலுத்தி, ஒருவர் ஒருவருக்குப் பணிந்து நடந்து, நல்லதொரு குடும்பத்தைக் கட்டியெழுப்பி, இந்த மண்ணில் விண்ணகத்தைக் காண்போம்.   

சிந்தனை

‘குடும்பம் என்பது கடவுள் நமக்காகப் பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் விண்ணகம் (சொர்க்கம்). அதை விண்ணகமாக்குவதும் பாதாளமாக்குவதும் (நரகம்) நம் கையில்தான் உள்ளது’ என்பர் சான்றோர் பெருமக்கள். ஆகையால் நாம், அன்பை அடித்தளமாகக் கொண்டு, குடும்பங்களைக் கட்டி எழுப்புவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

 

ser ser ser

sunday homily


முகப்பு பக்கம்
வத்திக்கான் வானொலி
கத்தோலிக்க இதழ்கள்
ஞாயிறு வாசகம்
விருந்தினர் பக்கம்
உம் வாக்கே விளக்கு!
சென்னை பங்குதலங்கள்
நூலகம்
திருத்தலச் சுற்றுலா
தவக்கால சிந்தனைகள்
ஒலியும் ஒளியும்
அன்னை தெரேசா
கிறிஸ்மஸ் மலர்கள்
பொங்கல்
செபமாலை
பாடல்கள்
செபமே ஜெயம்A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com