பாஸ்கா காலம் 6- ஆம் ஞாயிறு மூன்றாம் ஆண்டு

இன்றைய வாசகங்கள்


திருத்தூதர் பணிகள் 15:1-2, 22-29 | திருவெளிப்பாடு 2:10-14, 22-23 | யோவான் 14:23-29


இன்றைய மூன்று வாசகங்களும் நம்மை உண்மையின் வழியில் நடக்கச் சொல்லி அதற்குத் துணையாய் இருப்பவர் தூய ஆவியாரே என்று எடுத்துரைக்கிறது. யோவான் நற்செய்தி தூய ஆவியாரைத் துணையாளர் என்றும், உண்மையை வெளிப் படுத்துவார் என்றும் கூறுகிறது. நானும் தந்தையைக் கேட்பேன், தந்தை மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருவார், அவர் உங்களோடு என்றும் இருப்பார் (யோவா. 14:16-17). அதே ஆவியானவர் நன்மை தீமைகளை அறிந்து கொள்ள நமக்கு கற்றுத் தருவார் என்றும், இன்றைய நற்செய்தி கூறுகிறது. தூய ஆவியானவர் நம்மை தந்தையோடு இணைக்கும் பாலம் போன்றவர். தடுமாறும் மனிதனை நிலை நிறுத்துபவர், வழி தவறிய மனிதனை புதிய பாதைக்கு அழைத்து வருபவர். தந்தையின் விருப்பத்தை நிறைவு செய்ய இயேசு தொடங்கிய பயணம், இறுதியில் தந்தையின் கரங்களில் ஆவியை ஒப்படைக்கும் வரை அவருக்கு உறுதுணையாக இருந்து ஊக்கம் தந்தவர் தூய ஆவியானவர். ஆதித்திருச்சபையில் நெருக்கடி நேரங்களில், குழப்ப காலங்களில் திருத்தூதர்களை உறுதியாகச் செயல்படச் செய்தது மட்டுமல்ல, அவர்களிடம் தோன்றிய பிரிவினைகளைத் தகர்த்து, ஒற்றுமையில் ஒருங்கிணையச் செய்தவர் தூய ஆவியானவர்.

நாம் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டால்தான் பலவற்றை அறிந்து கொள்ள முடியும் (இரண்டாம் வாசகம்). விருத்தசேதனமா , விருத்தசேதனமின்மையா என்பதல்ல, மாறாக நான் இயேசுவை முழுமையாக அன்பு செய்கிறேனா? தூய ஆவி என்னில் வாசம் செய்கிறாரா? என்பதுதான் நற்செய்தியிலும் கூறப்பட்டுள்ளது. திருத்தூதர்கள் உள்ளம் கலங்காமல், இறுதி மூச்சு வரை நற்செய்திக்குச் சான்று பகர தூய ஆவியானவர்தான் துணையாகச் செயல்பட்டார். விருத்தசேதனம் என்ற வெளிப்படையான சடங்குகளை விட ஆண்டவரை நேசிப்பதுதான் உண்மையான வழிபாடு என்பதையும் உணர்ந்து கொண்டார்கள். அந்த பரஸ்பர அன்புதான் அவர்களின் கண்களைத் திறந்து விட்டன. இதயங்களும் திறக்கப்பட்டன. தூய ஆவியும் அவர்களின் உள்ளங்களில் குடி கொண்டார். தந்தை என் பெயரால் அனுப்பப் போகிற தூய ஆவியான துணையாளர் உங்களுக்கு எல்லாம் அறிவுறுத்துகிறார் (யோவா.14:26) என்று இயேசு தம் சீடர்களிடம் கூறுகிறார். இயேசு தம் சீடர்களின் உள்ளங்களில் இருக்கும் இருளை நீக்கி தூய ஆவியின் ஏவுதலுக்குப் பணிந்து நடந்தனர். இந்த தூய ஆவியின் ஆற்றலால் பிறந்ததுதான் ஒருமனப்பட்ட ஆதித் திருச்சபையாகும்.

ஓர் ஊரில் தையற்காரர் ஒருவர் இருந்தார். அதிகம் படிக்காவிட்டாலும் கேள்வி ஞானம் உடையவர், நீண்ட காலமாக இரு பிரிவினர்களிடையே இருந்த பிரச்சனையைத் தீர்த்து நியாயமான தீர்ப்பு வழங்கினார். இதைக் கேள்விப்பட்ட அந்த நாட்டு அரசன் அவரை அரண்மனைக்கு அழைத்துப் பாராட்டி, விலை மதிப்பில்லாத வைரத்தால் உருவாக்கப்பட்ட பெரிய கத்தரிக்கோலைப் பரிசாகத் தந்தார். தையற்காரர் அதை வாங்க மறுத்துவிட்டார். இது விலையுயர்ந்த பரிசாயிற்றே, ஏன் மறுக்கிறாய்? இதைவிட மேலானப் பரிசை விரும்புகிறாயா? அப்படியானால் தயங்காமல் கேளும் தருகிறேன் என்றார். தையற்காரர், அரசே! எனக்கு இந்த கத்தரிக்கோல் வேண்டாம். எனக்கு ஒரு சிறிய ஊசியைப் பரிசாகக் கொடுங்கள். அதுவே நான் விரும்பும் பரிசு என்றார். விலைமதிப்பற்ற இந்த வைர கத்தரிக்கோலைவிட நீ கேட்கும் ஊசி எவ்விதத்திலே உயர்ந்தது என்று கேட்டார் மன்னர்! கத்தரிக்கோல் எவ்வளவு விலை உயர்ந்த பரிசாயினும் அதன் பணி வெட்டுவதே, பிரிப்பதே. ஆனால் ஊசியோ வெட்டுண்டதை, பிரிந்ததை இணைப்பதே. ஒன்று சேர்ப்பதே என் வேலை. நான் வெட்டுவது அல்ல, இணைப்பதை மட்டுமே விரும்புகிறேன் என்றார் தையற்காரர். அரசனும் புதியதொரு செய்தியைக் கற்றுக் கொண்டான். தூய ஆவியின் செயல்பாடானது பிரிந்ததை இணைப்பது. வேற்றுமையில் ஒற்றுமைக் காண்பது. ஆதிக்கிறிஸ்தவர்கள் வேறுபாடுகளால் பிளவுப்பட்டிருந்தபோது, அவர்களை ஒரே குடும்பமாக , இயக்கமாக இணைக்கும் மகத்தான பணியை தூய ஆவியார் மேற்கொண்டார்.

தூய ஆவியின் கொடைகளால் ஒருங்கிணைக்கப் படவில்லையென்றால் அங்கு சண்டை , சச்சரவு, பிளவுகள், பிரிவினைகள் குடிகொள்ளும். இன்றைய முதல் வாசகமும் இதே கருத்தை வெளிப்படுத்துகிறது.

அன்று ஆதித்திருச்சபையை வழிநடத்திய அதே ஆவியானவர் நம் இதயங்களில் பொழியப்பட்டு நம் ஒவ்வொரு வரையும் இயக்கிக் கொண்டிருக்கிறார். அவரின் ஒருங்கிணைப்பு, செயல்பாடு இவைகள் நமது இதயங்களில் வாசம் செய்யவில்லை என்றால் அங்கே சண்டை , சச்சரவுகள், பிரிவினைகள் வளர்கின்றன என்பதே பொருள். ஒருங்கிணைப்பை உருவாக்க அவரின் கனிகளை நிறைவாய்ப் பெற்று வாழ முன்வருவோம்.

நமது எண்ணங்களில், செயல்பாடுகளில், அணுகு முறைகளில் வேறுபாடுகள் இருந்தாலும், ஒருங்கிணைந்த சாட்சிய வாழ்வை நம் வாழ்விலும், பணிகளிலும் செயல்படுத்த முன் வருவோம். இத்தகைய இணைந்த செயல்பாடுகளில் மட்டுமே தூய ஆவியின் துணை நம்மோடு இருக்கும். இறையரசும் சாத்தியமாகும். நானும் தந்தையைக் கேட்பேன் தந்தை மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருவார். அவர் உங்களோடு என்றும் இருப்பார் (யோவா. 14:16-17).


இயேசுவின் மீது அன்பு கொண்டவர் யார்?

இன்றைய நற்செய்தியில் என் மீது அன்பு கொண்டவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார் என்று இயேசு கூறுகின்றார்.

இயேசு தமது சொல்லாலும், செயலாலும் உலக மக்களுக்குப் போதித்தது என்ன? நீங்கள் அன்பு செய்யுங்கள் - இதுதான் உலக மக்களுக்கு இயேசு விடுத்த அறை கூவல். அன்பு என்றால் என்ன? என்பதைச் சுட்டிக்காட்ட இதோ ஒரு கதை! ஐந்து வயதுச் சிறுவனை அழைத்துக் கொண்டு மாலை வேளையில் பூங்கா ஒன்றிற்குப் பெற்றோர் சென்றனர்.

அந்தப் பூங்காவிலே ஒரு மரக்குதிரையிருந்தது. மரக்குதிரையில் ஆடுவது அந்தச் சிறுவனுக்கு மிகவும் பிடிக்கும். அந்தக் குதிரையில் அமர்ந்து அந்தச் சிறுவன் ஆடத்துவங்கினான். ஐந்து மணிக்கு ஆடத்துவங்கினான். ஆறுமணி ஆகியது. தாய் எவ்வளவோ சொல்லியும் வீட்டுக்குக் கிளம்ப அவன் மறுத்துவிட்டான். அப்பா அடித்தார். அவன் அசையவில்லை. இதையெல்லாம் ஒரு தாத்தா பார்த்துக்கொண்டிருந்தார். அவர் பெற்றோர் பக்கம் சென்று, நீங்கள் சற்றுநேரம் இருக்கையில் அமருங்கள்! உங்களை நான் அழைக்கும் போது வரலாம் என்றார்.

பெற்றோரும் அவ்வாறே செய்தனர். சிறுவனிடம் சென்று, உனக்குக் குதிரையில் ஆடுவது பிடிக்குமா? என்றார். அச்சிறுவன், ஆம் என்றான். உடனே தாத்தா, நான் குதிரை மாதிரி கீழே குனிஞ்சிக்கிறேன். என் மீது உட்கார்ந்து ஆடுறியா? என்றார். அவன், சரி என்றான். அந்தத் தாத்தா குனிந்துகொள்ள அவர் முதுகின் மீது உட்கார்ந்து அந்தச் சிறுவன் ஆடினான். கொஞ்ச நேரம் கழித்து, என்னை உனக்குப் பிடிச்சிருக்கா? என்றார். சிறுவன், ரொம்ப பிடிச்சிருக்கு என்றான். தாத்தா, அப்படின்னா நான் சொல்றதைக் கேட்பியா? என்றார். சிறுவன், நிச்சயமாக என்றான்.

அப்போது தாத்தா, உங்க அம்மா பாவம்தானே! உனக்கும் உங்க அப்பாவுக்கும் சமைக்கணும்லே! நேரமாயிடுச்சு, வீட்டுக்குப் போறியா? அப்படின்னு கேட்டாரு. ஓ ரெடின்னு சொல்லிட்டு அவரைவிட்டு இறங்கி அம்மா அப்பாகிட்டே ஓடிட்டான்.

கதையில் வந்த தாத்தா கொண்டிருந்த மனநிலைக்குப் பெயர்தான் அன்பு! இத்தகைய அன்பைத்தான் வாழ்நாள் முழுவதும் இயேசு தனது சொல்லாலும் செயலாலும் பிரதிபலித்தார் (பிலி 2:1-11).

பர்னபாவைப் போல, பவுலைப் போல நமது உயிரைக் கொடுக்கும் அளவுக்கு மற்றவர்களை அன்பு செய்ய வேண்டும் (முதல் வாசகம்).

இப்படி நாம் ஒருவர் ஒருவரை அன்பு செய்தால் நாம் ஒளிமயமான விண்ணகத்திற்குள் நுழைவோம் (இரண்டாம் வாசகம்).

மேலும் அறிவோம் :

அன்புநாண் ஒப்பரவு கண்ணோட்டம் வாய்மையொ(டு)
ஐந்துசால் (4) ஊன்றிய தூண் (குறள் : 983).

பொருள் : அனைவரிடமும் அன்பு பாராட்டுதல், இழிந்த செயல்புரிய நாணுதல், பொதுநலத் தொண்டில் ஈடுபடுதல், பிறரிடம் பரிவு இரக்கம் கொள்ளுதல், உண்மையே பேசுதல் ஆகிய ஐந்து செயல்களும் சால்பு என்னும் நிறை பண்பாகிய மாளிகையைத் தாங்கும் பெரிய தூண்களாகும்.

திருச்சபை என்னும் படகு

இயேசு ஆண்டவர் தன் உயிர்ப்பால் நம்மோடு பகிர்ந்து கொள்ள விரும்பும் புதுவாழ்வு பற்றிச் சிந்திக்கும் காலம். அந்தப் புதுவாழ்வு நிறைவு பெறுவது நமது உயிர்ப்பிலும் விண்ணகத்தில் இயேசுவோடு காணும் ஒன்றிப்பிலுமே. வானகம் நோக்கிய அந்தப் பயணத்தில் தூய ஆவியே நம்மை வலுப்படுத்தி வழிநடத்துகிறார்.

காலங்காலமாகத் திருச்சபையைப் படகோடு ஒப்பிடும் மரபு நமக்கு உண்டு. திருச்சபையின் தலைவனாக பேதுரு என்ற மீனவர் பொறுப்பேற்றதன் விளைவோ என்னவோ! எனினும் பொருத்தமான ஓர் ஒப்பீடுதான். கடலில் பயணமாகும் கப்பலுக்கு வலுவான இயந்திரம் (Engine) வேண்டும். சீறி எழும் அலைகளைக் கீறி எதிர்த்து ஊடுருவிச் சரியான பாதையில் செல்ல வேண்டும் அன்றோ! அவற்றில் குறைபாடுகள் இருந்தால் அழிவுக்குரிய பேராபத்தைச் சந்திக்க நேரும்.

பேதுருவின் படகான திருச்சபைக்கும், எதிர்வரும் எதிர்ப்புக்கள் இன்னல்கள் என்ற அலைகளை உடைத்து ஊடுருவ உறுதியான சக்திமிக்க இயந்திரம் வேண்டும். இலக்கு நோக்கி அதனை இயக்க தனித்திறமை கொண்ட நிபுணர் தேவை. அவர்தான் தூய ஆவி.

வெறும் அறிவார்ந்த நிலையில் மனித முயற்சியால் மட்டும் கிறிஸ்துவைப் பின்பற்றி, நல்லதொரு கிறிஸ்தவ வாழ்வு நடத்த இயலாது. அதற்கு இறைவனுடைய அருள்துணை வேண்டும். அதனால்தான் என் பெயரால் தந்தை அனுப்பப் போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்." (யோவான் 14:26) என்கிறார் இயேசு.

தூய ஆவியின் எழுச்சியில் திருச்சபை பிறந்தது. உடனிருந்து தூய ஆவி வல்ல செயல்களைச் செய்தார். திருச்சபை வளர்ந்தது. அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத யூதச்சங்கம் கட்டு மீறிய வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. கிறிஸ்தவர்கள் சிதறிப் போனார்கள். சிதறிப் பறக்கும் தீப்பிழம்பு விழுந்த இடமெல்லாம் பற்றிக் கொள்வது போல, சிதறுண்ட திருச்சபை சென்ற இடமெல்லாம் வேரூன்றி வளரத் தொடங்கியது. இதனால் எருசலேம் யூதக் கிறிஸ்தவர்களின் மையமாகவும், அந்தியோக்கியா புறவினக் கிறிஸ்தவர் களின் மையமாகவும் அமைந்துள்ளன. பேதுரு யூதக் கிறிஸ்தவர்களுக்கு வழிகாட்டியாகவும், பவுல் புறவினக் கிறிஸ்தவர்களுக்கு வழிகாட்டி யாகவும் பணிபுரிந்தனர்.

திருச்சபை ஒன்றாக இருந்தாலும் சட்டங்கள் இரண்டாக இருந்தன. அதன் விளைவாகச் சிக்கல் எழுந்தது. திருமுழுக்குப் பெற்ற யூதர்கள் மோசேயின் சட்டத்தை விடாமல் கடைப்பிடித்து வந்தனர். திருமுழுக்குப் பெற்ற புற இனத்தார் மீதும் மோசேயின் சட்டத்தைத் திணித்தனர். யூதரோ புறவினத்தாரோ அனைவரும் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தினர். கிறிஸ்துவின் கட்டளை பெரிதா? மோசேயின் சட்டம் பெரிதா? விசுவாசம் தேவையா விருத்தசேதனம் தேவையா? என்ற பெரிய சர்ச்சை எழுந்தது. திருச்சபை யில் குழப்ப அலைகள்! தீர்வு தேடிப் பவுல் எருசலேம் புறப்பட்டார்.

பிரச்சனை ஒன்றுமில்லை என்று போலி முலாம் பூசவில்லை திருச்சபை. பிரச்சனை வந்துவிட்டதே என்று அதைப் பெரிதாக்கவும் இல்லை. இச்சிக்கலுக்கு முடிவு காண முதல் எருசலேம் பொதுச் சங்கத்தைக் கூட்டினார் பேதுரு. 'விசுவாசத்தினால் நாம் மீட்படை கிறோமே தவிர விருத்தசேதனத்தினால் அல்ல" என்பதில் அனைவரும் ஒருமனப்பட்டனர். ''சுமக்க இயலா நுகத்தை இப்போது நீங்கள் இந்தச் சீடருடைய கழுத்தில் வைத்துக் கடவுளை ஏன் சோதிக்கிறீர்கள்? (தி.ப. 15:10). புறவினத்தாரும் சரி நாமும் சரி மீட்புப் பெறுவது ஆண்டவராகிய இயேசுவின் அருளினால் தான். இதுவே நமது நம்பிக்கை" என்று பேதுரு தீர்ப்பளித்தார்.

குழப்பம் நீங்கித் திருச்சபையில் அமைதி பிறந்தது. இளந்திருச் சபையின் உயிராக தூய ஆவி எப்படியெல்லாம் செயல்பட்டார். முதல் பொதுச் சங்கம் சொல்கிறது: ''இன்றியமையாதவற்றைத் தவிர அதிகமான வேறு எந்தச் சுமையையும் உங்கள் மேல் சுமத்தக் கூடாது என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம்” (தி.ப.15:28). சிக்கல்களால் கிறிஸ்தவன் நிலைதடுமாறித் தவிக்கும் நேரங்களில் ஒளி தந்து வழிகாட்டித் தேற்றித் திடப்படுத்துபவர் தூய ஆவியே! தனி வாழ்வில், குடும்ப வாழ்வில், பொது வாழ்வில் மோதல்கள் தலைதூக்கும் போதெல்லாம் "தூய ஆவியாரும் நாங்களும் முடிவெடுக் கிறோம்” என்ற ஒரு நிலை ஏற்பட்டால் வாழ்வு எப்படி இருக்கும்! அதனால்தான் "தூய ஆவியின் துணைகொண்டு கிறிஸ்து - வைப் பின்பற்றுவதே கிறிஸ்தவ வாழ்க்கை" என்று வத்திக்கான் திருச்சங்கம் வலியுறுத்துகிறது. திருமறைச் சுவடியும் அதை நினைவூட்டு கிறது. கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கான மனத்தெளிவும் உறுதியும் நமக்கு அருள்பவர் தூய ஆவியே!

சமாதானம் இல்லாத திருச்சபை இயேசுவின் சபையாக இருக்க முடியாது. பூசலுக்கும் மோதலுக்குமிடையே கூட தூய ஆவி வழியாக இயேசு சமாதானத்தை வாக்களிக்கிறார். ''என் அமைதியை உங்களுக்கு அளிக்கிறேன். அது உலகம் தரும் அமைதி போன்றதல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்” (யோவான் 14:27). அந்தத் திருச்சபையைத்தான் யோவான் புதிய எருசலேமாகக் காட்சியில் காண்கிறார். ''தூய ஆவி என்னை ஆட்கொள்ளவே அந்த வானதூதர் ஒரு பெரிய உயர்ந்த மலைக்கு என்னைக் கொண்டு சென்றார். திருநகரான எருசலேம் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கி வருவதை எனக்குக் காட்டினார்” (தி.வெ.21:10).

உரோசினி என்பவர் புகழ்வாய்ந்த இத்தாலி நாட்டு இசை அமைப்பாளர். அவரது திறமையைப் பாராட்டிப் பிரான்சு நாட்டு மன்னன் கைக்கடிகாரம் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார். அரசன் கொடுத்ததால் அதை மதிப்புமிக்கதாக எண்ணி பத்திரப்படுத்தினார். சில ஆண்டுகள் கழித்துத்தான் நெருங்கிய நண்பரைச் சந்தித்த போது மன்னன் கொடுத்த பரிசைப் பெருமிதத்தோடு காட்டினார். நண்பர் அதைப் புரட்டிப் பார்த்தார்.

"இத்தனை காலம் நீர் இந்தக் கடிகாரத்தை வைத்திருந்தும் இதன் உண்மையான சிறப்பை, மதிப்பை நீர் கண்டுணரவில்லையே'' என்று கூறி கடிகாரத்தில் மறைந்திருந்த ஒரு பொத்தானை அழுத்தினார். கடிகாரத்தின் ஒரு பெட்டகம் திறந்தது. அதனுள் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் அமைந்த உரோசினியின் உருவம் ஒளிர்ந்தது. பார்த்து வியந்து நின்றார் உரோசினி. இப்படித்தான் நமக்குள்ளே இருக்கும் பேராற்றல்கள் நம் கண்களுக்குப் புலப்படுவது இல்லை. அத்தகைய பேராற்றல்களில் சிறப்பானது திருமுழுக்கின் வழியாக நாம் பெற்ற தூய ஆவி. அந்தப் பேராற்றலை உணர்வோம். அப்போது இம்மண்ணகத்திலேயே விண்ணக எருசலேம் உருவாகும்.

ஒரு கிராமவாசி ஒரு பெரிய காய்கறிக் கூடையைத் தமது தலைமேல் வைத்துக் கொண்டு சந்தைக்குப் போய்க் கொண்டிருந்தார், அவ்வழியே லாரி ஓட்டிச் சென்ற ஓட்டுனர் அக்கிராமவாசியைத் தமது லாரியில் ஏற்றிக் கொண்டார், ஆனால் அக்கிராமவாசி லாரியில் ஏறினாலும், தலைமேல் காய்கறிக் கூடையைச் சுமந்து கொண்டிருந்தார். கூடையைக் கீழே இறக்கி வைக்குமாறு லாரி ஓட்டுனர் அவரைக் கேட்டதற்கு அவர், "என் சுமையை நான்தானே சுமக்கவேண்டும்" என்றார்; தமது சுமையை இறக்கி வைக்க அவருக்கு மனமில்லை .

இன்று நம்மில் பலர் தேவையற்ற சுமைகளைச் சுமந்து நொந்து நூலாகிப் போகிறோம். எல்லாமே சுமை; குறிப்பாக, மதம் ஒரு மாபெரும் சுமை, கடவுள் கொடுத்த பத்துக் கட்டளைகள் காலப் போக்கில் பத்தாயிரம் கட்டளைகளாகப் பலுகிப் பெருகிவிட்டன, கிறிஸ்து ஒரே ஒரு கட்டளையை, அன்புக் கட்டளையைக் கொடுத்து, நமது சுமையை எளிதாக்கியுள்ளார்.

தொடக்கக் காலத் திருச்சபை ஒரு பிரச்சினையை எதிர் கொண்டது. இதைப் பற்றி இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக் கின்றது. பிற இனத்திலிருந்து கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவர் களும் யூதச் சட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டனர். இந்நிலையில் திருத்தூதர்கள் ஒன்றுகூடி ஒரு முக்கியமான தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அதன்படி, பிற இனத்தார் மீது தேவையற்ற சுமையைத் திணிக்கக்கூடாது. அவர்கள் யூதர் களுடைய சட்டங்களைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை. சிலைவழிபாடு மற்றும் கெட்ட நடத்தையை (பரத்தைமை) விட்டு விலகவேண்டும் (திப 15:28-29).

கடவுளுடைய கட்டளை மற்றும் திருச்சபைக் கட்டளையின் நோக்கம் என்ன? மக்களின் நலனே மாபெரும் சட்டம் (திச 1752), சட்டம் இருப்பது மனிதனுக்காக, மனிதன் இருப்பது சட்டத்துக்காக அன்று (மாற் 2:27). எனவே, மனித நலனைக் கட்டிக் காக்காத சட்டங்கள் தேவையற்றவை, அவை தேவையற்ற சுமை, கிறிஸ்துவின் சட்டம் அன்பின் சட்டம். அவரின் நுகம் அழுத்தாது (இனிது): அவரின் சுமை எளிது (மத் 11:30).

"அன்பு செய்; அதன் பிறகு வேறு எது வேண்டுமென்றாலும் செய்" (புனித அகுஸ்தினார் ). ஏனெனில் அன்பு செய்பவர் தவறான வழியில் செல்ல மாட்டார். "அன்பே திருச்சட்டத்தின் நிறைவு" என்கிறார் திருத்தூதர் பவுல் (உரோ 13:10).

இன்றைய நற்செய்தியில், கிறிஸ்து தமது அமைதியை, உலகம் தர இயலாத அமைதியைத் தம் சீடர்களுக்கு இறுதிக் கொடையாக அளிக்கிறார் (யோவா 14:27). இவ்வுலகம் தரும் அமைதி உண்பதிலும் குடிப்பதிலும் அடங்கியுள்ளது. ஆனால் கிறிஸ்து தரும் அமைதியோ நீதியிலும், உண்மையிலும், தூய ஆவி தரும் மகிழ்ச்சியிலும் அடங்கியுள்ளது (உரோ 14:7). அது கடவுளின் கொடை. இவ்வுலகம் தரும் அமைதி முதலில் இனிக்கும், முடிவில் கசக்கும். ஆனால் கடவுள் தரும் அமைதியோ முதலில் கசக்கும், முடிவில் இனிக்கும். இவ்வுலகம் தரும் அமைதி தற்காலிகமானது. ஆனால் கிறிஸ்து தரும் அமைதி நிரந்தரமானது. அதை எவரும் நம்மிடமிருந்து பறிக்க முடியாது.

இவ்வுலகம் தரும் அமைதி மக்களைப் பிரித்தாள்வது; ஆனால் கிறிஸ்து தரும் அமைதியோ மக்களை ஒன்றிணைப்பது. கிறிஸ்துவே நமக்கு அமைதி அருள்பவர்; அவர் யூத இனத்துக்கும் பிற இனத்துக்கும் இடையே நின்று கொண்டிருந்த பகைமை என்னும் சுவரைத் தமது சிலுவையால் தகர்த்தெறிந்து இரு இனத்தாரையும் ஒன்றுபடுத்தியவர் (எபே 2:14). இவ்வுலகம் காட்டும் அமைதி பகைவர்களை அழிக்கும் அமைதி: ஆனால் கிறிஸ்துவின் அமைதி மன்னிக்கும் அமைதி, ஒரு கன்னத்தில் அறைபவர்களுக்கு மறுகன்னத்தைக் காட்டும் அமைதி (மத் 5:39).

ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம், "மூன்றாம் உலகப்போர் மூண்டால் உலகம் எப்படி இருக்கும்?” என்று கேட்டதற்கு ஒரு மாணவன், "மூன்றாம் உலகப்போர் மூண்டால், எப்படி சார் உலகம் இருக்கமுடியும்?" என்று திருப்பிக் கேட்டான். ஆம், மூன்றாவது உலகப்போர் மூண்டால் உலகம் இருக்காது. உலகமெல்லாம் ஓர் இடுகாடாக, சுடுகாடாகக் காட்சி அளிக்கும். அப்போது நிகழவிருக்கும் அமைதி மயான அமைதியாகத்தான் இருக்கும்.

மார்ட்டின் லூத்தர் கிங் கூறினார்: "ஒன்று நாம் நண்பர்களாகக் கூடி வாழவேண்டும்; இல்லையென்றால் முட்டாள்களாகக் கூடி மாளவேண்டும்", இன்று உலக நாடுகள் நண்பர்களாகக் கூடி வாழ்வதற்குப் பதிலாக, முட்டாள்களாகக் கூடி மாள்வதையே விரும்புகின்றன. பல நாடுகள் மற்ற நாடுகளை அழிப்பதற்குத் தேவையான அணுகுண்டுகளைத் தயாரிப்பதில் முனைப்புடன் செயல்படுகின்றன. ஒவ்வொரு அணுகுண்டும் ஏழை மக்களுக்கு எதிரான மபெரும் பாதகமாகும்.

உலகில் செயல்படும் சக்திகள் மூன்று. அவை முறையே வன்முறை. நீதி, அன்பு.

வன்முறை அடுத்தவரிடம் சொல்லுகிறது: "உன்னுடையது என்னுடையது: கொடு, இல்லையென்றால் உன்னைக் கொன்று உனது உடைமையைப் பறித்துக் கொள்வேன்", வன்முறை மிருகத் தன்மையுடையது.

நீதி அடுத்தவரிடம் சொல்லுகிறது: "உன்னுடையது உன்னுடையது: என்னுடையது என்னுடையது, உனது உடைமையை நான் பறிக்க மாட்டேன்: எனது உடைமையை நீ பறிக்காதே". நீதி மனிதத் தன்மையுடையது.

அன்பு அடுத்தவர்களிடம் சொல்லுகிறது: "என்னுடையதும் உன்னுடையது. என்னுடைய உடைமையையும் நீ தாராள மாக எடுத்துக் கொள்ளலாம்". அன்பு தெய்வத் தன்மையுடையது.

வன்முறையைக் களைந்து, நீதிநெறிநின்று, நீதியையும் கடந்து அன்பை அணிந்து கொள்வோம். புதியதோர் உலகம் செய்வோம் - கெட்டப் போர் புரியும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்!

வெறுமையை நிரப்பும் இறை அமைதி!

உளவியல் அறிஞர் பிராய்டின் முதன்மைச் சீடர் கார்ல் யுங் அவர்கள் கண்டுபிடித்த முக்கியமான உளவியல்கூறு 'ஆர்க்கிடைப்' (archetype) ('ஆர்கே' என்றால் கிரேக்கத்தில் 'தொடக்கம்' என்றும் 'டிப்போஸ்' என்றால் 'மாதிரி' அல்லது 'பண்பு' என்றும் பொருள்). இதை 'தொடக்கமாதிரி' என்று மொழிபெயர்த்தல் சால்பன்று. ஆக, நம் புரிதலுக்காக, இதை 'உள்ளுறை உணர்வு' என மொழிபெயர்த்துக் கொள்வோம். மனித மனத்தில் 12 ஆர்க்கிடைப்புகளைக் கண்டுபிடிக்கிறார் யுங். இந்த ஆர்க்கிடைப்பில் எது மேலோங்கி இருக்கிறதோ அதுவே ஒரு மனிதரின் ஆளுமையை ஆள்கிறது.

இந்த 12 ஆர்க்கிடைப்புகளைச் சுருக்கி 6 உள்ளுறை உணர்வுகளாக, தன் 'ஹீரோ விதின்' என்ற நூலில் பதிவு செய்கின்றார் கேரல் பியர்சன்: 'குழந்தையுள்ள உணர்வு' (இன்னசன்ட்), 'அநாதை உணர்வு' (ஆர்ஃபன்), 'சாட்சிய உணர்வு' (மார்ட்டர்), 'நாடோடி உணர்வு' (வாண்டரர்), 'போராளி உணர்வு' (வாரியர்) மற்றும் 'மந்திரவாதி உணர்வு' (மேஜிசியன்). நம்மை ஹீரோவாக மாற்ற நாம் நெறிப்படுத்த வேண்டிய முதல் உணர்வு 'அநாதை உள்ளுறை உணர்வு' (ஆர்ஃபன் ஆர்க்கிடைப்). இந்த உணர்வு நம் எல்லாரிடமும் இருக்கிறது. இந்த உணர்வுதான் அடுத்தவர்களை நோக்கி நம்மையும், நம்மை நோக்கி மற்றவர்களையும் இழுக்கிறது. மற்றொரு பக்கம், இந்த உணர்வுதான் மற்றவர்கள்மேல் சந்தேகத்தையும் வருவிக்கிறது. நாம் ஒரு புதிய நண்பரிடம் பழகுகிறோம் என வைத்துக்கொள்வோம். பழகத் தொடங்கிய பொழுதில் நம்மை அறியாமல் ஒரு புதிய உணர்வு மேலோங்கி நிற்கும். நாவில் எப்போதும் ஒரு பாட்டு ஒலிக்கும். அல்லது உதடுகள் சிரித்துக் கொண்டே இருக்கும். அல்லது கண்ணாடியை நாம் அடிக்கடி பார்த்துக் கொண்டிருப்போம். ஓரிரு வாரங்கள் கழித்து, நாம் அந்த புதிய நண்பரிடம் பேச வேண்டும் என அவரை அழைக்க, அவர் அலைபேசி அழைப்பை ஏற்கவில்லை என்றால், அல்லது நம்மை திரும்ப அழைக்கவில்லை என்றால், நம் மனதில் ஒருவித பயமும், கலக்கமும் தொற்றிக் கொள்கிறது. 'அவர் என்னைவிட்டு போய்விடுவாரோ?' 'நானாக தப்பு கணக்கு போட்டுவிட்டேனோ?' 'நான் எதுவும் தவறாகப் பேசிவிட்டேனோ?' என்று கேள்விகள் வரிசையாக எழுகின்றன. 'நான் எதற்குமே லாயக்கில்லை!' 'நான் அன்பு செய்யப்பட தகுதியற்றவள்,' 'என்னை எல்லாருமே வெறுக்கிறார்கள்' என்று நம்மேலே நமக்கு தன்னிரக்கம் (செல்ப் பிட்டி) உருவாகும். இந்த உள்ளுறை உணர்வைக் கையாள நம்பிக்கையும், எதிர்நோக்கும், குழந்தையுள்ளமும் அவசியம்.

எதற்கு இந்த உளவியல் பின்புலம்?

இன்று நாம் வாசிக்கக் கேட்ட நற்செய்தி வாசகம் (யோவான் 14:23-29), இயேசுவின் இறுதி இராவுணவு பிரியாவிடை உரையின் (14:1-31) ஒரு பகுதி. 'அன்பு செய்வதை' மையமாக வைத்து இயேசு பேசும்போது, 'நான் உங்களை திக்கற்றவர்களாக விடமாட்டேன்' (14:18) என்கிறார். முதல் மொழிபெயர்ப்பில் 'அநாதைகளாக' என்ற வார்த்தை இப்போது 'திக்கற்றவர்களாக' என்று மாற்றப்பட்டுள்ளது. 'அநாதை' என்ற வார்த்தை 'அ,' 'நாதி' என்ற இரண்டு வார்த்தைகளின் சுருக்கமாகவே இருக்க வேண்டும். அதாவது, 'வழியில்லாதவர்,' 'திசையில்லாதவர்,' 'திக்கில்லாதவர்'தான் அநாதை.

தான் தன் சீடர்களைவிட்டுப் போனவுடன், அவர்களின் உள்ளுணர்வு எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே உணர்கிறார் இயேசு. இன்றைய நற்செய்தி வாசகத்தில் 'அநாதை' அல்லது 'திக்கற்றவர்' என்ற வார்த்தை இடம்பெறவில்லையென்றாலும், 'செல்கிறேன்,' 'நான் போகிறேன்,' 'என் தந்தையிடம் செல்கிறேன்' என்னும் இயேசுவின் வார்த்தைகள் அவரது உடனடிப் பிரிவை எடுத்துக்காட்டுகின்றன. மேலும், இந்தப் பிரிவை ஈடுசெய்ய இயேசு 'தூய ஆவியானவர் என்னும் துணையாளரை' வாக்களிப்பதும், இந்தப் பிரிவின் வலியை நமக்கு உணர்த்துகிறது.

'வெறுமையை நிரப்பும் இறை அமைதி' - என்று இன்றைய சிந்தனைக்கு நாம் தலைப்பிடுவோம்.

இன்றைய மூன்று வாசகங்களும் இந்த ஒரு கருத்தையே மையமாகக் கொண்டிருக்கின்றன. முதல் வாசகத்தில் 'நம்பிக்கை கொண்டவர்கள் ஏற்றுக்கொள்ளப்படாததால்' அவர்கள் மனத்தில் வெறுமை உருவாகிறது. இரண்டாம் வாசகத்தில் 'கோவிலும், கதிரவனும், நிலாவும்' இல்லாத வெறுமை. நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் பிரிவு உருவாக்கும் வெறுமை.

ஒவ்வொரு வாசகமாகப் பார்ப்போம்.

இன்றைய முதல் வாசகம் (திப 15:1-22, 22-29) திரு அவை வரலாற்றின் முதல் திருச்சங்கம், 'எருசலேம் திருச்சங்கம்' கூட்டப்பட்டதன் நோக்கத்தையும், அதில் எடுக்கப்பட்ட முடிவையும் பற்றிச் சொல்கிறது. தொடக்கத் திருஅவையில், கிறிஸ்தவ நம்பிக்கையைத் தழுவிய யூதரல்லாதவர்கள் (புறவினத்தார்கள்) ஒரு பிரச்சினையைச் சந்திக்கின்றனர். ஒருவர் யூதராக மாற விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும். கிறிஸ்தவராக மாற என்ன செய்ய வேண்டும்? இங்கே இரண்டு விதமான கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இயேசு மற்றும் இயேசுவின் திருத்தூதர்கள் யூதர்களாக இருந்ததால், யூத மரபு மற்றும் சட்டங்களைக் கடைப்பிடிப்பது கிறிஸ்தவர்களுக்கும் கடமை என்று நினைத்த சிலர், கிறிஸ்தவர்களாக மாறும் அனைவரும் முதலில் யூதராக வேண்டும் என நினைக்கின்றனர். அப்படி ஆனால் என்ன ஆகும்? இங்கே இயேசுவின் மேல் உள்ள நம்பிக்கை ஓரங்கட்டப்படும். அதாவது, மீட்பு என்பது நம்பிக்கையால் அல்ல. மாறாக, செயலால்தான் என்ற தவறான புரிதல் உருவாகும். பவுல் மற்றும் பர்னபாவைப் பொறுத்தமட்டில், இயேசுவின்மேல் கொண்ட நம்பிக்கையால்தான் மக்கள் மீட்பு பெறுகிறார்களே அன்றி, அவர்களுடைய செயல்களால் அல்ல. இந்தப் பிரச்சினை எருசலேமுக்குக் கொண்டுவரப்பட்டபோது பேதுருவும், யாக்கோபுவும் ஒரு மனத்துடன் இதை அணுகுகின்றனர். 'நாம் சுமக்க இயலாத சுமையை இச்சீடருடைய கழுத்தில் எப்படி ஏற்ற முடியும்?' என்று பேதுருவும், 'இன்றியமையாதவை தவிர வேறொன்றையும் சுமத்தக் கூடாது' என்று யாக்கோபுவும் தீர்ப்பு வழங்கி, 'விருத்தசேதனம் செய்யாமலேயே ஒருவர் கிறிஸ்தவராக மாறலாம்' என்கிறார். இந்தத் தீர்ப்பால்தான் இன்று வரை நாமும் விருத்தசேதனம் இன்றி கிறிஸ்தவர்களாகின்றோம்! மேலும், இது எதைக் காட்டுகிறது என்றால், இயேசுவின் மேல் உள்ள நம்பிக்கையே போதுமானது என்ற இறையியலையும் முன்னிறுத்துகிறது. கடவுளுக்கு நாம் ஏற்புடையவராக நம் நம்பிக்கை போதுமானது.

இதைவிட மேலாக, கொள்கைகளுக்காக மக்களை இழந்துவிடக்கூடாது என்றும், மக்களுக்காக கொள்கைகளையும் இழக்கலாம் என்று இவர் மனிதர்களுக்குத் தரும் முன்னுரிமை, 'ஓய்வு நாள் இருப்பது மனிதருக்காக, மனிதர் இருப்பது ஓய்வுநாளுக்காக அல்ல' என்ற இயேசுவின் போதனையின் தாக்கத்தை உணர்த்துகிறது. 'எங்களுள் சிலர் அங்கு வந்து தங்களுடைய பேச்சால் உங்களது மனத்தைக் குழப்பி உங்களைக் கலக்கமுறச் செய்தனர்' (15:24) என்று தான் கேள்விப்பட்டதாக எழுதுகின்றார் யாக்கோபு. இந்தக் கலக்கத்தை அவர் போக்கி, 'அமைதி உரித்தாகுக!' 'நல்லா இருங்க!' (15:29) என வாழ்த்துகிறார்.

ஆக, கலக்கம் உருவாக்கிய வெறுமை நீங்கி அமைதி பிறப்பதைச் சொல்கிறது இன்றைய முதல் வாசகம். இதையே தூய பவுல் தன் திருமடலில், 'அவர் வந்து, தொலைவில் இருந்த உங்களுக்கும், அருகிலிருந்த அவர்களுக்கும் அமைதியை நற்செய்தியாக அறிவித்தார்' (எபே 2:17) என எழுதுகின்றார்.

'புதிய வானகம், புதிய வையகம்' என்று கடந்த வார இரண்டாம் வாசகத்தில் கண்ட யோவானின் காட்சி இன்றுழற வாசகத்தில் (காண். திவெ 21:10-14, 22-23) 'புதிய எருசலேம்' என்று தொடர்கின்றது. மண்ணக எருசலேமில் 12 நுழைவாயில்கள் இருந்தன. இஸ்ரயேல் இனத்தில் இருந்த 12 குலங்களின் அடையாளமாக இந்த 12 வாயில்கள் இருந்தன. புதிய இஸ்ரயேலில் 12 வானதூதர்கள் இந்த வாயில்களில் நிற்கின்றனர். மேலும், புதிய இஸ்ரயேலாகிய இயேசுவின் 12 திருத்தூதர்களின் பெயர்கள் அங்கே இடம்பெற்றிருக்கின்றன. மண்ணக எருசலேமில் மிக முக்கியமாக இருந்தது திருக்கோவில். இந்தத் திருக்கோவிலில் பகலில் கதிரவனும், இரவில் நிலவும் ஒளிவீசின. ஆனால், புதிய எருசலேமில் கோவிலும் இல்லை. கதிரவன் மற்றும் நிலா என்னும் ஒளிச்சுடர்களும் இல்லை. 'இல்லை' என்ற 'வெறுமையை' நிறைவு செய்வது யார்? 'எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவரும் ஆட்டுக்குட்டியுமே' (21:22). இந்த 'ஆட்டுக்குட்டியே ஒளிதரும் விளக்காகவும்' இருக்கின்றது. பாபிலோனியாவிலிருந்து நாடு திரும்பிய இஸ்ரயேல் மக்கள் எஸ்ரா மற்றும் நெகேமியா தலைமையில் இரண்டாம் ஆலயத்தைக் கட்டி எழுப்புகின்றனர். இந்த இரண்டாம் ஆலயம் உரோமையர்களால் கி.பி. 70ஆம் ஆண்டு தரைமட்டமாக்கப்படுகிறது. இந்தப் பின்புலத்தில் நாம் யோவானின் காட்சியைப் பார்க்க வேண்டும். எருசலேமில் ஆலயம் இல்லாத குறையை இனி இயேசுவே நிரப்புவார் என்று தன் திருஅவை மக்களுக்கு நம்பிக்கை தருவதற்காகவே, 'ஆட்டுக்குட்டியை கோவில்,' என்றும், உரோமையரின் படையெடுப்பால் உருவான 'இருளை' அகற்றும் 'ஒளி' என்றும் முன்வைக்கின்றார்.

ஆட்டுக்குட்டி எப்படி கோவிலாக முடியும்? அல்லது ஒளியாக முடியும்? எருசலேம் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் 'பாவ மன்னிப்பு பலியை' ஒப்புக்கொடுப்பார் தலைமைக்குரு. தன் பாவக்கழுவாய்க்கென ஒரு ஆட்டுக்குட்டியும், தன் மக்களின் பாவக்கழுவாய்க்கென ஒன்றும் என இரண்டு ஆட்டுக்குட்டிகளோடு, திருத்தூயகம் செல்வார் அவர். அந்தப் பலி வழியாக, மக்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் இழந்த அமைதியும், ஒளியும் மீண்டும் திரும்பும். ஆனால், இயேசு தலைமைக்குரு மட்டுமல்ல. அவரே ஆட்டுக்குட்டி. இந்த ஆட்டுக்குட்டி தன் இறப்பால் ஒரே முறை எக்காலத்திற்குமான முழுமையான பலியைச் செலுத்தி இழந்த அமைதியையும், ஒளியையும் மீட்டுக்கொடுத்துவிட்டது.

ஆக, உரோமையரின் படையெடுப்பு விட்டுச் சென்ற வெறுமையை நீக்கி நிறைவையும், ஒளியையும் தருகின்றார் இயேசு என எடுத்துரைக்கிறது இரண்டாம் வாசகம்.

'ஆண்டவரே, நீர் உம்மை உலகிற்கு வெளிப்படுத்தாமல் எங்களுக்கு வெளிப்படுத்தப் போவதாகச் சொல்கிறீரே, ஏன்?' என்று யூதா கேட்க (14:22), அதற்கு இயேசு சொல்லும் விடையே இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 14:23-29).

யூதாவின் கேள்விக்கும், இயேசுவின் விடைக்கும் நேரிடையான தொடர்பு இருப்பது போலத் தெரியவில்லை(!). 'என்மீது அன்பு கொண்டிருத்தல்' என்று தொடங்கி, அதே சொல்லாடல்களோடு முடிகிறது இயேசுவின் விடை. இயேசுவின் விடையின் மையமாக இருப்பது: 'அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்' என்னும் வார்த்தைகள்தாம்.

இயேசு தம் சீடர்களிடமிருந்து விடைபெறுகின்றார். இவரின் இந்தப் பிரிவு திருத்தூதர்கள் நடுவில் நான்கு வகை உணர்வுகளை ஏற்படுத்துகிறது: (அ) அவர்கள் அறியாதவர்களாகவும், புரியாதவர்களாகவும் இருப்பர் ('துணையாளர் கற்றுத்தருவார்'), (ஆ) அவர்கள் பயத்தில் அனைத்தையும் மறந்துவிடுவர் ('துணையாளர் நினைவுறுத்துவார்'), (இ) அவர்கள் கலக்கம் அடைவர் ('நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்'), (ஈ) அவர்கள் அச்சம் கொள்வர் ('நீங்கள் மருள வேண்டாம்'). மொத்தத்தில் இந்த நான்கு வகை உணர்வுகளும் திருத்தூதர்களின் உள்ளத்து வெறுமையின் வெளிப்பாடாக இருக்கிறது. இந்த வெறுமைக்கு மாற்றாக இயேசு முன்வைப்பது அமைதி.

'அமைதி' ('எய்ரேனே' - 'ஐரின்' என்ற பெயர் இதிலிருந்தே வருகிறது!) என்ற வார்த்தையை யோவான் இங்கேதான் தன் நற்செய்தியில் முதன்முதலாகப் பயன்படுத்துகிறார் (காண்க. 20:19, 21, 26). யூதர்கள் ஒருவர் மற்றவரை வாழ்த்தி விடைபெறும்போது 'ஷலோம்' ('அமைதி') என்று சொல்வர். ஆக, இயேசுவின் பிரியாவிடை உரையில், 'சரி போய்ட்டு வர்றேன்' என்ற பொருளை இது மேலோட்டமாகக் காட்டினாலும், இதற்கு ஆழமான பொருளும் இருக்கிறது.

அது என்ன ஆழமான பொருள்? முதலில், இயேசு அமைதியை 'தருகின்றார்.' ஆக, இது ஒரு கொடை. திருத்தூதர்கள் தங்களின் நற்செயலால் பெறும் ஊதியம் அல்லது வெகுமதி அல்ல இது. இதை இயேசுவே கொடையாகத் தருகின்றார். இரண்டாவதாக, 'அமைதியை தருகிறேன்' என்று சொல்லாமல், 'என் அமைதியைத் தருகிறேன்' என்கிறார் இயேசு. தன் கதவருகில் காத்திருக்கும் மரணமும் அந்த அமைதியை பறித்துவிட முடியாது. மூன்றாவதாக, 'அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்' என்ற வாக்கியத்தை, 'நாங்கள் அவருடன் குடிகொள்வோம்' என்ற வாக்கியத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டும். ஆக, 'அமைதி' என்பது வெறும் 'ஷலோம்' என்னும் வார்த்தை அல்ல. மாறாக, தந்தை-மகன்-தூய ஆவியானவரின் ஒருங்கிணைந்த பிரசன்னம் மற்றும் உடனிருப்பு. ஆக, இறைவனே அமைதி. ஆகையால்தான், 'நான் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல' என்கிறார் இயேசு.

யோவான் நற்செய்தியில் 'உலகம்' என்பது 'கடவுளுக்கு எதிரான எல்லாவற்றின் ஒட்டுமொத்த உருவகம்.' உங்களுக்கு அமைதி தருவது எது? - என்று நான் உங்களைக் கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? 'இயற்கை காட்சி,' 'புதிய இடம்,' 'மௌனம்,' 'சலனமற்ற நிலை,' 'மெல்லிசை,' 'பறவைகளின் கீச்சு,' 'குழந்தைகளின் கொஞ்சல்,' 'நண்பர்' என நீங்கள் நிறைய சொல்லலாம். அல்லது, 'போர் இல்லாத நிலை,' 'தன்னலமில்லாத நிலை,' 'வன்முறை இல்லாத நிலை' என்றும் சொல்லலாம். இயேசுவின் காலத்தில் உரோமையர்கள், 'உரோமையின் அமைதி' (பாக்ஸ் ரொமானா) என்ற ஒரு கருதுகோளை வைத்திருந்தனர். அதாவது, உரோமையர்களின் காலனிக்குள் யாரும் எங்கும் பயணம் செய்யலாம். குற்றங்கள் தண்டிக்கப்படும். நீதி நிலைநாட்டப்படும்.

உலகம் தரும் அமைதியை, (அ) அரசியல் அமைதி, (ஆ) உறவு அல்லது நட்பில் அமைதி, (இ) உள்மன அமைதி அல்லது உளவியல் அமைதி என மூன்று கட்டங்களுக்குள் அடக்கிவிடலாம். இவற்றில் எந்த அர்த்தத்தையும் இயேசுவின் 'அமைதி' குறிக்கவில்லை. ஏனெனில் இந்த மூன்று வகை அமைதியும் நீடிக்க இயலாதவை. ஒரு அரசு மற்ற அரசோடு போர் தொடுத்தால் அரசியல் அமைதி குலைந்துவிடும். நண்பர்களுக்குள் புரிதல் குறையும்போது உறவில் அமைதி போய்விடும். சின்ன எதிர்பார்ப்பு-ஏமாற்றம்கூட நம் உள்மன அமைதியைக் குலைத்துவிடும். இவ்வாறாக, உலகம் தரும் அமைதி, 'நீடிக்க இயலாததது,' 'குறையுள்ளது,' 'ஏமாற்றக்கூடியது.' இயேசுவின் அமைதி நீடித்திருக்கக் கூடியது, நிறைவானது, ஏமாற்றம் தராதது. எப்படி? இயேசுவின் அமைதி ஒரு அனுபவம். எப்படிப்பட்ட அனுபவம்? இறைவனே குடியிருக்கும் அனுபவம். அந்த அனுபவம் அன்பு, மகிழ்ச்சி, மற்றும் வார்த்தையைக் கேட்டலில் அடங்கியிருக்கிறது.

ஆக, தன் பிரிவால் ஏற்படும் வெறுமையை தன் தந்தை-மகன்-தூய ஆவியார் என்னும் உடனிருப்பு கொண்டு வரும் அமைதியால் நிறைவு செய்கிறார் இயேசு.

இவ்வாறாக, முதல் வாசகத்தில், 'நம்பிக்கையா? அல்லது விருத்தசேதனம் என்னும் செயலா?' என்ற கேள்வி உருவாக்கிய வெறுமை தூய ஆவியாரின் செயல்பாட்டால் களையப்பட்டு, சீடர்களின் மனத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிரப்பப்படுகிறது. இரண்டாம் வாசகத்தில், நகரில் கோவில் இல்லாத வெறுமையை ஆட்டுக்குட்டி நிரப்பி கடவுளின் உடனிருப்பை மக்களுக்குத் தருகின்றார். நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் பிரிவு கொண்டுவரும் வெறுமை, 'நாங்களும் அங்கு வந்து குடிகொள்வோம்' என்று கடவுளின் பிரசன்னத்தால் நிரப்பப்படுகிறது.

இவற்றை நாம் வாழ்வோடு எப்படி பொருத்திப் பார்ப்பது?

1. கருத்து வேறுபாட்டிலிருந்து ஒருமைப்பாட்டிற்கு

கருத்து வேறுபாடுகள் வராமல் எந்த அமைப்பும் இயக்கமும் இயங்க முடியாது. மேலும், கருத்து வேறுபாடுகளே ஒரு இயக்கத்தின் வளர்ச்சிக்கு வித்திடுபவை. இன்றைய முதல் வாசகத்தில் நாம் காணும் புறவினத்தார்கள் வெறுமனே நம்பிக்கையை ஏற்றுக்கொண்டு சரணாகதி அடையவில்லை. 'இது எப்படி? அது எப்படி?' என்று கேள்வி எழுப்புகின்றனர். அந்தக் கேள்வியே தொடக்கத் திருச்சபையின் திருப்புமுனையாக அமைகிறது. ஆக, கருத்து வேறுபாடுகள் வருவதில் தவறில்லை. அதே வேளையில், கருத்து வேறுபாடு எழும்போது அதை ஏற்று அதற்கான ஒருமைப்பாட்டு வழியைக் கண்டுபிடித்தல் தலைவர்களின் கடமையாக இருக்கிறது. பேதுருவும் யாக்கோபுவும், 'நீங்கள் எப்படியும் செய்துகொள்ளுங்கள். நாங்கள் இப்படித்தான் இருப்போம்' என்றோ, அல்லது 'நீங்களும் எங்களைப் போல இருக்க வேண்டும்' என்றோ சொல்லியிருந்தால், யூதக் கிறிஸ்தவர்கள், புறவினத்துக் கிறிஸ்தவர்கள் என்று பிளவு ஏற்பட்டிருக்கும். இதைத் தவிர்க்க, திருத்தூதர்கள் கிறிஸ்துவைப் போல சிந்திக்கிறார்கள். ஆக, கிறிஸ்துவைப் போல சிந்திக்கும் உள்ளம் ஒருபோதும் தடுப்புச்சுவர் கட்டாது. மாறாக, பாலம் மட்டுமே அமைக்கும். யூத கிறிஸ்தவம் மற்றும் புறவினத்துக் கிறிஸ்தவத்தின் பாலமாக இருக்கிறது முதல் திருச்சங்கம். இன்று, நம் வாழ்வில் நாம் சுவர் கட்டும் நேரமெல்லாம் வெறுமையும் விரக்தியுமே மிஞ்சும். ஆனால், பாலம் கட்டும்போது மனத்தில் அமைதி உருவாகும்.

2. கோவில் இல்லா நகரம்

நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்நேரம் நம் நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 'மறுபடியும் முதல்ல இருந்தா?' என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கிறது. 'கடவுள் இருக்காரா? இல்லையா?' என்ற கேள்வியும் சிலரிடம் வருகிறது. 'இவங்க வரக்கூடாதுன்னு நாம பூச வச்சோம், நற்கருணை ஆராதனை வச்சோம், கடவுள் கேட்கலயா?' என்றும் சிலர் கேட்கின்றனர். தன் சொந்த மக்களைச் சரி செய்ய கடவுள் முதல் ஏற்பாட்டில் நினிவே என்ற அசீரிய நகரைப் பயன்படுத்துகின்றார். காயத்தை விட மருந்து ஆபத்தானது என்ற ஒரு நிலைக்கு அழைத்துச் செல்கின்றார். கடவுள் நம்மைவிட்டுப் போய்விடுவதில்லை. அவர் காணக்கூடிய குத்துண்ட ஆட்டுக்குட்டியாக நம் முன் நிற்கிறார். ஆக, சிதைக்கப்படும், ஒடுக்கப்படும் மனிதத்திலும் அவர் இருக்கிறார். நம் வெறுமை உணர்வை நாம் ஏற்றுக்கொள்ளும்போது அதை எதிர்ப்பதற்கான வல்லமை நமக்குப் பிறக்கிறது. ஆக, குத்துண்டு கிடக்கும் ஆட்டுக்குட்டியே வெற்றி பெறும். கோவில் இல்லா நகரமே ஒளி பெறும்.

3. நாங்கள் அவருடன் குடிகொள்வோம்!

நம் வெறுமை நீங்க வேண்டுமெனில் அவர் குடிகொள்ள நாம் இடம் தர வேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? இயேசுவின் வார்த்தைகளைக் கேட்க வேண்டும். வார்த்தைகள் கேட்க முதலில் நம் உள்ளம் அமைதியாக இருக்க வேண்டும். அமைதியை நாம் அடையும்போது அமைதியைப் பெற்றுவிடுகிறோம்.

இறுதியாக,
நம் தனிநபர், குடும்பம், சமூகம் என்னும் தளங்களில் நாம் உணரும் அநாதை உணர்வை அமைதி உணர்வாக மாற்றும் ஆற்றல் இறைவனிடம் உண்டு. தூரமாகத் தெரியும் நேரத்தில்தான் அவர் நம் அருகில் இருக்கிறார். யூதா, சீலா என்னும் காணக்கூடிய தூதர்கள் வடிவிலும், தூய ஆவியார் என்னும் காண இயலாத வடிவிலும் அவர் இன்றும் வருகிறார் நம் வெறுமையை நிரப்ப!

கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து, அவரது அன்பில் நிலைத்திருப்போம்.

ராஜா என்ற பதின்வயது நிரம்பிய ஏழைப் பையன் ஒருவன் இருந்தான். அவனது தந்தை விபத்து ஒன்றில் இறந்துபோனதால், அவன் தன்னுடைய (விதவைத்) தாயின் பாதுகாப்பிலும், அரவணைப்பிலும் வளர்ந்து வந்தான். அந்தத் தாயானவள் தன்னுடைய மகனுக்கு தகப்பன் இல்லாத குறையைப் போக்கி, அவன்மீது உண்மையான அன்பு காட்டி வந்தாள்.

ராஜாவிற்கு ஜிம்மி என்ற ஒரு பணக்கார வீட்டுப்பையனின் நட்பு கிடைத்தது. ஜிம்மியின் பெற்றோர் நகரில் இருக்கக்கூடிய மிகப்பெரிய தொழிலதிபர்கள். அவர்களுக்கென்று நிறைய சொத்துக்கள், தொழிற்சாலைகள் உண்டு. ஆனால் அவர்களுக்கு நிறையச் சொத்துகள் இருந்ததனால் என்னவோ ஜிம்மியோடு அவரோடு பேசுவதற்கு, அவன்மீது அன்புகாட்டுவதற்கு போதிய நேரம் ஒதுக்கவில்லை. இதனால் அவன் அன்பு கிடைக்காத ஏக்கத்திலே இருந்தான்.

ஒருநாள் ஜிம்மி தன்னுடைய வீட்டிலிருந்து எங்கோ ஓடிபோய்விட்டான். இச்செய்தியை ராஜா தன்னுடைய தாயிடம் பகிர்ந்துகொண்டு வருந்தினான். அதற்கு அவனுடைய தாய் அவனிடம் சொன்னாள், “ஜிம்மிக்கு நிறைய சொத்துகள், வாய்ப்பு வசதிகள் இருந்து என்ன பயன்?. அவன்மீது அன்பு காட்டுவதற்கு ஓர் ஆளில்லையே. ஆனால் என் அன்பு மகனே! உன்மீதான என் அன்பு ஒருபோதும் குறையாது. உனக்கு நான் போதிய வாய்ப்புகளையும், வசதிகளையும் ஏற்படுத்தித் தராவிட்டாலும்கூட, உனக்கு நான் ஓர் அன்புமயமான சூழலை ஏற்படுத்தித் தருவேன்” என்றாள்.

உண்மையான அன்பிற்காகத் தான் இந்த உலகமே ஏங்கிக்கொண்டிருக்கிறது என்பதை இந்தக் கதையானது நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

“அன்பு ஒன்றுதான் இந்த உலகத்தை அழகாக்கும், அன்பு ஒன்றுதான் இந்த உலகத்தை வாழ்விக்கும்” என்பான் வித்தகக் கவிஞன் பா.விஜய். பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு இன்றைய நாள் வாசகங்கள் தரும் அழைப்பு “இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவரது அன்பில் நிலைத்திருப்போம்” என்பதாகும்.

பொதுவாக ஒருவர்மீது நமக்கு இருக்கும் அன்பினை பலவிதங்களில் காட்டலாம். நமது அன்புக்கு உரியவர்களுக்கு பிடித்தமான ஒரு பொருளை வாங்கித் தரலாம், அல்லது அவர்கள் மனம் மகிழுமாறு நடந்துகொள்ளலாம். ஆனால் இவற்றையெல்லாம்விட உயர்ந்தது அவரது கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வதுதான். ஒருவரின் சொல்பேச்சைக் கேட்டு நடத்தல்தான், அவர்மீது நமக்கு இருக்கும் அன்பை வெளிக்காட்ட சிறந்த வழி.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு அதனை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறார் “என்மீது அன்புகொண்டுள்ளவர், நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார்” என்று. ஆகவே இயேசுவின் மீது நமக்கு இருக்கும் அன்பினைக் காட்ட மிகச்சிறந்த வழி அவருடைய கட்டளைக் கடைப்பிடிப்பதுதான்.

இப்போது இயேசுவின் கட்டளைகள் என்ன? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இயேசு நமக்கு பல்வேறு கட்டளைகளைத் தந்திருக்கலாம். ஆனால் அவற்றில் எல்லாம் தலைசிறந்தது, மணிமகுடமாக விளங்குவது அவரது அன்புக் கட்டளையே. “ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” என்ற புதிய கட்டளைதான் இயேசுவின் எல்லாக் கட்டளைகளையும் விடச் சிறந்ததாக இருக்கின்றது. எனவே அத்தகைய அன்புக் கட்டளையை நமது வாழ்வில் கடைபிடிக்கிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நகரிலே ஒரு பெரிய பணக்காரர் இருந்தார். அவர் திடிரென்று ஒருநாள் தன்னுடைய வாழ்வில் வெறுமையை உணர்ந்தார். இவ்வளவு சொத்துக்கள், செல்வங்களும் இருந்தும் வாழ்வில் நிம்மதியில்லையே என்பதைக் கண்டுகொண்டார். அதனால் அவர் தனக்குத் தெரிந்த ஒரு மனோதத்துவ நிபுணரிடம் தொடர்புகொண்டு என்ன செய்வது என்று கேட்டார். அதற்கு அவர், “நீங்கள் உடனடியாக அருகே இருக்கும் இரயில் நிலையத்திற்குச் சென்று, யாராவது ஒருவருக்கு உதவுங்கள்” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

பணக்காரரும் மனோதத்துவ நிபுணரின் அறிவுறுத்தலின் பேரில் அருகே இருந்த இரயில் நிலையத்திற்குச் சென்றார். அங்கே காத்திருப்போரின் அறையில் ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு வயதான மூதாட்டி ஒருத்தி அழுதுகொண்டிருந்தார். பணக்காரர் அவரிடம் சென்று, என்ன? என்று காரணத்தைக் கேட்டார். அதற்கு அந்த மூதாட்டி, தான் பெங்களூரில் இருக்கும் தன்னுடைய மகளைப் பார்ப்பதற்காக ஊரிலிருந்து வந்திருப்பதாகும், அவளுடைய தொலைப்பேசி எண்ணை கீழே தவற விட்டுவிட்டதால் என்ன செய்தென்று புரியாமல் விழிப்பதாகும், போதிய பணம் இல்லாததால் ஊருக்குப் போகக்கூட கஷ்டமாக இருக்கிறது என்று காரணத்தைச் சொன்னாள்.

உடனே பணக்காரர் அருகே இருந்த தொலைப்பேசி நிலையத்திலிருந்து தொலைப்பேசி வழிகாட்டியை (Telephone Directory) எடுத்து, அதில் மூதாட்டியின் மகளது எண்ணைத் தேடினார். சிறுது நேரத்தில் அதனைக் கண்டுகொண்டார்.

பின்னர் அந்த மூதாட்டியிடம் அவளது மகளின் தொலைப்பேசி எண்ணைக் கொடுத்து பேசச் சொன்னார். அது மூதாட்டியின் மகள்தான் என்பதை உறுதிசெய்துகொண்ட பிறகு அவளை ஒரு ஆட்டோவில் ஏற்றிவிட்டு, போதிய பணமும் கொடுத்து, வழியனுப்பிவிட்டு வீடு திரும்பினார்.

அன்று இரவு அந்தப் பணக்காரர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அப்போது அவர் காலையில் தனக்கு ஆலோசனை சொன்ன மனோதத்துவ நிபுணருக்குத் தொலைப்பேசி செய்து, இப்போது தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகச் சொன்னார்.

முன்பின் அறிமுகமில்லாத ஒருவர்மீது நாம் செலுத்தும் அன்பு, நமக்கு அளவில்லா மகிழ்ச்சியைத் தருகிறது என்பதைக் இக்கதையானது எடுத்துக்கூறுகிறது. முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவருக்கும் நாம் செலுத்தும் அன்பு, கடவுளுக்குச் செலுத்தும் அன்பு என்பதை இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டும் (1 யோவான் 4:20-21).

அடுத்ததாக இயேசுவை அன்புசெய்தல் என்று சொல்கிறபோது, அவருடைய (கடவுளுடைய) சாயலாகப் படைக்கப்பட்ட சக மனிதரையும் அன்புசெய்து, அவர்களை மனித மாண்போடு நடத்துதல் என்ற பொருளையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது என்ற உண்மையையும் நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் யூதேயாவிலிருந்து வந்த ஒருசிலர், “மோசேயின் சட்டப்படி விருத்தசேதனம் செய்தால்தான் மீட்படைய முடியும்” என்று வாதம் செய்கிறனர். இதனால் யூதருக்கும், யூதரல்லாத பிற இனத்தைச் சார்ந்த கிறிஸ்தவர்களும் இடையே மிகப்பெரிய குழப்பம் வெடிக்கிறது. இறுதியில் பவுல், பர்னபா ஆகியோரின் முயற்சியால் கி.பி.50 ல் கூட்டப்பட்ட எருசலேம் திருச்சங்கத்தில் இப்பிரச்சனை விவாதிக்கப்பட்டு, கிறிஸ்தவ நெறியைப் பின்பற்றும் யூதரல்லாத புறவினத்தார் விருத்தசேதனம் செய்யத் தேவையில்லை என்ற ஒரு நிலை உருவாகிறது.

ஆகவே இயேசுவை/ கடவுளை அன்பு செய்கிறோம் என்றால் அவருடைய சாயலாகப் படைக்கப்பட்ட அனைவருக்கும் அவரது மீட்பும், அருளும் உண்டு என்பதை உணர்ந்துகொண்டு, அவர்களை மனித மாண்போடு நடத்தவேண்டும். அப்படி நாம் ஒருவர் மற்றவரை அன்பு செய்து, அவர்களை மனித மாண்போடு நடத்தும்போது, திருவெளிப்பாடு நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இன்றாம் வாசகத்தில் படிப்பது போன்று “புதிய விண்ணகம்” இந்த மண்ணகத்தில் உருவாகும்.

மேலும் நற்செய்தியில் இயேசு ஆண்டவர் கூறுவதுபோன்று, இயேசுவை அன்பு செய்வோரை தந்தையும் அன்பு செய்வார், அப்போது தந்தை, மகன், தூய ஆவியாக இருக்கக்கூடிய மூவொரு கடவுளும் அவரிடம் வந்து குடிகொள்ளும் நிலை ஏற்படும். எனவே நாம் நம்மோடு வாழும் சகமனிதர்களை நிறைவாக அன்புசெய்து இறைவனின் அருள் நம்மில் குடிகொள்ளச் செய்வோம்.

பக்கத்துக்கு ஊருக்குச் செல்வதற்காக காட்டுவழியாக மூன்று வழிப்போக்கர்கள் போய்கொண்டிருந்தார்கள். அப்போது இரவுநேரம் நெருங்கி வந்துவிட்டதால், எங்கே தங்குவது என்று யோசித்தார்கள். அப்போது தூரத்தில் ஒரு குடிசை அவர்களது கண்ணுக்குத் தென்பட்டது. எனவே அந்தக் குடிசையில் உள்ள மனிதர்களிடம் கேட்டு, அங்கேயே இரவு தங்கலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி அந்தக் குடிசையை நோக்கி மூவரும் பயணமானார்கள்

.

குடிசையை அடைந்ததும், கதவைத் தட்டினார்கள். கதவு தட்டப்படும் சத்தம்கேட்டு உள்ளே இருந்து ஒரு கணவனும், அவனுக்குப் பின்னால் அவனது மனைவியும் வெளியே வந்தார்கள். அம்மூவரும் அவர்களிடத்தில் எல்லாவற்றையும் சொல்ல, “சரி, இந்த இரவில் எங்களோடு தாங்கிக்கொள்ளுங்கள்” என்று அவர்களை அவர்கள் உள்ளே அழைத்தார்கள். வீடுதேடி வந்தவர்களுக்கு அந்தக் கணவனும், மனைவியும் நல்ல உணவு கொடுத்து, அவர்களை சிறப்பாகக் கவனித்துக் கொண்டார்கள். தூங்குவதற்கு நல்ல இடமும் தந்து கவனித்துக்கொண்டர்கள்.

அடுத்த நாள் காலையில் அம்மூவரும் அவர்களிடமிருந்து விடைபெறும் நேரத்தில், அவர்களுக்கு ஒரு பரிசு கொடுக்க முடிவுசெய்தனர். எனவே அவர்களிடத்தில், “உங்களது விருந்தோம்பலை நினைத்து பெருமைப்படுகிறோம். ஆதலால் உங்களுக்கு எதாவது ஒரு பரிசுதர முன்வந்திருக்கிறோம். பொன், பணம், அன்பு என்ற மூன்று பரிசுகள் எங்களிடத்தில் இருக்கிறது. இதில் உங்களுக்கு எதுவேண்டுமோ அதைத் தருகிறோம்” என்றார்கள்.

அதற்கு அவர்கள், “எங்களுக்கு பொன்னோ, பணமோ எதுவும் வேண்டாம். அன்பு மட்டும் போதும்” என்றார்கள். அதைக்கேட்டு மிகவும் மகிழ்ந்த அவர்கள், “நீங்கள் அன்பைக் கேட்டதால் அன்போடு பொன்னையும், பணத்தையும் சேர்த்துத் தருகிறோம். ஏனெனில், அன்பு இருக்கும் இடத்தில் எல்லாமும் இருக்கும்” என்று சொல்லி அவர்களுக்கு நிரம்ப பொன்னையும், பொருளையும், அருளையும் கொடுத்து, ஆசிர்வதித்துவிட்டுச் சென்றார்கள்.

அன்பு இருக்கும் இடத்தில் எல்லா ஆசிர்வாதமும் இருக்கும் என்பதை இக்கதையானது நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

எனவே பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நாம் இயேசு நமக்குத் தந்திருக்கும் அன்புக் கட்டளையைக் கடைப்பிடித்து, அவரை அன்புசெய்யும் மக்களாவோம். இறையருள் நம்மில் தங்கச் செய்வோம்.sunday homilyA Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com