பாஸ்கா காலம் 2-ஆம் ஞாயிறு
மூன்றாம் ஆண்டு

இன்றையவாசகங்கள்


I. திருத்தூதர் பணிகள் 5:12-16 II. திருவெளிப்பாடு 1:9-13,17-19 III. யோவான் 20:19-31உயிர்த்த ஆண்டவர் இயேசு தனது திருத்தூதர்களுக்குத் தோன்றிய போது, தோமையார் இல்லாத நிலையில் மாபெரும் உண்மை ஒன்று கற்பிக்கப்படுகிறது. கண்ணால் கண்டு, தொட்டு உணர்ந்து ஏற்று வாழ்வதைவிட கண்ணால் காண முடியாத நிலையில், ஆழமான, அசைக்க முடியாத நம்பிக்கையோடு வாழும் வாழ்வே பேறு பெற்றது என்ற பேருண்மையை இயேசு வெளிப்படுத்துகிறார். இயேசுவோடு இறப்போம் (யோவா. 1:16) என்றவர் தோமா.

இயேசுவைக் கண்டால்தான் நம்புவேன் என்பது, அம்மா ஊட்டினால்தான் சாப்பிடுவேன் என்று அடம்பிடிக்கும் குழந்தையைப் போன்று இருக்கிறது. ஆனால் ஆண்டவர் இயேசுவை, அவரது காயங்களைப் பார்த்தவுடன் தோமா, என் ஆண்டவரே, என் கடவுளே எனக் கதறினார்.

புனித தோமாவின் பெயரைக் கேட்டவுடன் நம்மில் பலருக்குத் தோன்றுவது அவர் சந்தேகப் பேர்வழி என்பதுதான். ஆனால் இயேசுவைச் சந்தித்த பின் தோமாவைத் தவிர வேறு யாரும் இவ்வாறு விசுவாச அறிக்கை வெளியிடவில்லை. ஊனக் கண்களால் இயேசுவைக் காண வேண்டும் என்று தோமா துடித்தாலும், இயேசுவைக் கண்ட பிறகு உள்ளத்தில் ஆழமாக விசுவாசித்தார். இந்த விசுவாச ஆழத்தால் தான் இந்திய நாட்டில் திருச்சபையின் விசுவாசக் கண்களை திறந்துவிட்ட பெருமையை தோமா பெறுகின்றார்.

புனித தோமாவைப்போல, இயேசுவைச் சந்திப்பதற்கு முன்பு, அவரைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள், சந்தித்த பிறகு புதுப்படைப்பாக மாறினார்கள் என்பதை விவிலியத்தில் பல இடங்களில் பார்க்கிறோம். இயேசுவைச் சந்திப்பதற்கு முன் சமாரியப் பெண், பிறவிக் குருடன், புனித பவுல், சக்கேயு போன்றவர்கள் இருந்த நிலை மாறி, இயேசுவைச் சந்தித்த பின் புதுப்படைப்பாக, புது வாழ்வு, புது வசந்தம் பெற்று இயேசுவின் சாட்சிகளாய் மாறினார்கள் என்பதை விவிலியத்தில் வாசிக்கிறோம்.

இன்றைய சூழலில் விசுவாசத்தோடு துன்ப துயரங்களை ஏற்றுக்கொண்டு மகிழ்வையும், சமாதானத்தையும் தேடும் மக்கள் உயிர்ப்பின் மக்களாவர். இயேசுவின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கை, விசுவாசம் ஆழமானதாக இல்லாதவரை, நம்முடைய ஆன்மீக வாழ்வு மேலோட்டமானதாகவும், நுனிப்புல் மேய்வதாகவும் தான் இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நல்லவர்களாகப் பிறந்து தனக்கும் இறைவனுக்கும் மட்டுமே நல்லுறவை ஏற்படுத்தி, யாருக்கும் எந்தப் பயனும் இல்லாமல் வாழ்ந்து இறப்பதைவிட, நல்லவராகப் பிறந்து, சூழ்நிலையின் காரணமாக சில தவறுகள் புரிந்து, அதன் பிறகு மனம் மாறி புது வாழ்வைத் தழுவிக் கொண்டவர்களே இந்த உலகில் அதிகம் சாதித்தவர்கள் ஆவார்கள். அதற்கு தோமா ஒரு சான்றாகத் திகழ்கின்றார்.

இயேசு விரும்புவது சண்டை சச்சரவை அல்ல, அமைதியையே !

உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கடைசி நாள்கள். மரணப்படுக்கையில் படுத்திருந்தார். அவரிடம் சில பத்திரிகையாளர்கள் பேட்டி காணச் சென்றார்கள். அவரைப் பார்த்து, விஞ்ஞானி அவர்களே, மூன்றாவது உலகப்போர் ஒன்று உருவானால் மக்கள் எத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்தி சண்டை போடுவார்கள்? போர் புரிவார்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அந்த ஞானி, அந்த விஞ்ஞானி இவ்வாறு கூறினார்: மூன்றாவது உலகப் போரின் போது என்ன ஆயுதங்களை மனிதர்கள் பயன்படுத்துவார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான்காவது உலகப்போரின் போது என்ன ஆயுதங்களை மனிதர்கள் பயன்படுத்துவார்கள் என்று எனக்குத் தெரியும் என்றார்.

உடனே அந்தப் பத்திரிகையாளர்கள், மக்கள் நான்காவது உலகப்போரின் போது எத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்துவார்கள்? என்று கேட்டனர்.

அதற்கு அந்த விஞ்ஞானி, நான்காவது உலகப்போரின்போது மக்கள் மரக்கிளைகளைப் பயன்படுத்தி சண்டை போடுவார்கள் என்றார்.

அந்த விஞ்ஞானி சொல்ல விரும்பாதது என்ன? மூன்றாவது உலகப்போர் ஒன்று உருவானால் உலகத்திலுள்ள எல்லா மனிதர்களும் போரில் மடிந்து போவார்கள். இந்த உலகத்தில் எந்த நாட்டு மனிதர்களும் உயிரோடு இருக்கமாட்டார்கள். கடவுள் புதிய ஆதாமையும், புதிய ஏவாளையும் உருவாக்குவார். அவர்கள் வழியாக கற்கால மனிதர்கள் தோன்றுவார்கள்.

அவர்களிடம் ஏ.கே.47 இருக்காது; அணுகுண்டுகள் இருக்காது, மாறாக மரக்கிளைகள் இருக்கும்!

ஆம். மூன்றாவது உலகப்போர் ஒன்று உருவானால் நாம் எல்லாரும் அழிந்து போவோம். சண்டை சச்சரவுக்கு ஒருபோதும் ஆக்கும் சக்தி கிடையாது, அழிக்கும் சக்தி மட்டுமே உண்டு.

அதனால்தான் இன்றைய நற்செய்தியில் இயேசு, வாழ ஆசைப்படும் நம் அனைவரையும் பார்த்து, உங்களுக்கு அமைதி உரித்தாகுக! உலகம் தராத அமைதியை உங்களுக்கு நானின்று தருகின்றேன் என்கின்றார்.

இந்த உலகத்திற்குள்ளே போரும் பூசலும் எப்போது நுழைந்தன? ஆதாம், ஏவாள் காலத்திலேயே சண்டையும், சச்சரவும் இந்த உலகத்திற்குள் புகுந்துவிட்டன.

தொநூ 3-இல் கடவுள் ஆதாமைப் பார்த்து, விலக்கப்பட்ட கனியை ஏன் உண்டாய்? என்று கேட்கின்றார். அப்போது ஆதாம் என்ன செய்திருக்க வேண்டும்? நான் செய்தது தவறுதான்; என்னை மன்னித்துவிடுங்கள் என்று சொல்லியிருக்கவேண்டும். ஆனால் அவன் அப்படிச் சொல்லவில்லை. நான் அப்படி செய்வதற்கு, கடவுளே நீர்தான் காரணம் என்றான். கடவுளோ, நானா? என்றார். ஆதாம், ஆமாம் நீர்தான். நீர்தான் இந்தப்பெண்ணை என்னிடமிருந்து உருவாக்கினீர். உம்மால் விலக்கப்பட்ட கனியை என்னிடம் தந்து அவள்தான் என்னை உண்ணச் சொன்னாள் எனச் சொல்லி அவன் தப்பித்துக்கொள்ளப்பார்த்தான்.

இப்படி தன்னைக் காப்பாற்ற நினைக்காது, தன்னைக் காட்டிக்கொடுக்க நினைத்த ஆதாமை அன்றிலிருந்து ஏவாள் ஓரங்கட்டத் தொடங்கினாள். முதல் கணவனுக்கும், முதல் மனைவிக்குமிடையே முதல் சண்டை உருவானது.

ஆதாமும் ஏவாளும் ஒருவரையொருவர் வெறுக்கத் தொடங்கினர். அவர்கள் வெறுப்பு, பகை அவர்களது குழந்தையைப் பாதித்தது. அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பிள்ளை தப்பாது பிறந்தது. வெறுப்பு நிறைந்த அந்த அண்ணன் தனது தம்பியைக் கொன்றான்.

இப்படி அன்று தொடங்கிய போர், பூசல், சண்டை சச்சரவு இன்றும் நம்மைத் தொடர்கின்றன.

இன்று எத்தனையோ வீடுகளில், தெருக்களில், மாநிலங்களில், நாடுகளில் சண்டை சச்சரவுகளால் எத்தனையோ பேர் பலியாகின்றனர்.

குழந்தை பிறக்கும் போதே அதன் தொப்புள் கொடியை அறுக்கும் சமுதாயத்தை குழந்தை வெறுக்கத் தொடங்குகின்றது. அந்த வெறுப்பை அழுகை மூலம் வெளிப்படுத்துகின்றது.

நான் எங்க அம்மாவோட எவ்வளவு சுகமா வாழ்ந்துகிட்டிருந்தேன்! எனக்கும் என் அம்மாவுக்குமிடையேயுள்ள உறவை ஏன் அறுத்தீர்கள்? என்று கேட்டு அந்தக் குழந்தை அழுகின்றது.

பிறப்பிற்கும், இறப்பிற்குமிடையே மனிதர்கள் வாழும்போது எத்தனை சண்டைகள். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அமைதியில்லாத இல்லங்களுக்கு, உள்ளங்களுக்கு கடவுள் இயேசு ஒருபோதும் ஆசியளிப்பதில்லை.

இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கின்றேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கின்றேன் என்கின்றார் இயேசு.

இம்மானுவேல் என்று அழைக்கப்படும் இயேசு நம்மோடு வாழவேண்டுமென்றால் நாம் சமாதானமாக வாழ்ந்துதான் ஆகவேண்டும்.

மத் 5:23-24 நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதர சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து, உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள் என்கின்றார் இயேசு.

இயேசுவுக்கு அமைதி என்றால் மிகவும் பிடிக்கும். அதனால்தான் அவர் பிறந்தபோது உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக; உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகும் என்றார் வானதூதர்.

இதனால்தான் அவர் வாழும்போது திருத்தூதர்களைப் பார்த்து, நீங்கள் எந்த வீட்டுக்குள் நுழைந்தாலும் முதலில் உங்களுக்கு சமாதானம் என்று சொல்லுங்கள் என்றார்.

இதனால்தான் இயேசு உயிர்த்த பிறகு மூன்று முறை அவரது சீடர்களைப் பார்த்து, உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்றார்.

எங்கும், எதிலும், எப்பொழுதும் எனக்குப் பிரியமானது சமாதானமே என்று சொல்வோம்.

நமக்கு எது முக்கியம்?

கர்வம், வைராக்கியம், போட்டி, பொறாமை, பகை ஆகியவையா நமக்கு முக்கியம்? இல்லை. இயேசுவின் ஆசிகளான நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவைதான் நமக்கு முக்கியம்.

ஒன்றை மட்டும் நமது உள்ளத்திலே நன்றாகப் பதிய வைத்துக்கொள்வோம். இயேசு விரும்புவது சண்டை சச்சரவை அல்ல, அமைதியையே !

மேலும் அறிவோம் :
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும் (குறள் 214).
பொருள் : உலக நலம் கருதி வாழ்பவனே உயிர்வாழ்பவன் ஆவான். பிறருக்கு உதவாத தன்னல நாட்டமுடையவன் இறந்தவர் பட்டியலில் சேர்க்கப்படுவான்!


"நீரே என் ஆண்டவர். நீரே என் கடவுள்”.

"நீரே என் ஆண்டவர். நீரே என் கடவுள்”. உயிர்ப்பின் உண்மைக்கு இவ்வாறு சரணடைவதுதான் இறைநம்பிக்கை. அப்படிச் சரணடைவதற்கு முன்னே ஒரு போராட்டத்தை அல்லவா கடக்க வேண்டி நேருகிறது.

தோமாவுக்கு அப்படித்தான் தற்காலிகமாக ஒரு சோதனை, ஒரு போராட்டம். போராட்டத்தில்தானே இறைநம்பிக்கை வெளிப்படுவதாக விவிலியத்தில் பார்க்கிறோம்,

பக்திப் பரவசமான உணர்ச்சி நிலைகளிலா, அல்லேலூயாக் கூத்திலா கூச்சலிலா, துன்பதுயரம் போன்ற அவலங்களிலா, ஆபிரகாம் நம்பிக்கையின் தந்தை என்றும் அன்னை மரியா நம்பிக்கையின் தாய் என்றும் போற்றப்படுகிறார்கள்? ஒரு மனப்போராட்டத்தில் அன்றோ! 'சொந்த நாட்டை விட்டுத் தூர் நாட்டுக்குப் போ', 'உன் ஒரே மகனைக் கொண்டு போய் ஓரேப் மலையில் பறிகொடு'... இந்த வார்த்தைகளில் ஆபிரகாமின் பக்திப் பரவசத்தையோ, துன்ப துயரத்தையோ அல்ல, போராட்டத்தைப் பார்க்கிறோம். 'கன்னியாயிற்றே இது எப்படி இயலும்' என்ற வார்த்தைகளில் மரியா வெளிப்படுத்தியதும் போராட்டமே!

தோமாவின் இறைநம்பிக்கையும் அப்படியே ஒரு போராட்டத்தில் தான் மலர்கிறது. அறிவியலின் உச்சத்திலிருந்து இறைநம்பிக்கையின் உச்சத்தை அடைகிறார். புலன்களாலே அறிய இயலாக் குறையை நீக்க இறைநம்பிக்கையின் உதவியை நாடுகிறார். “நீரே என் ஆண்டவர், நீரே நான் கடவுள்” இயேசுவின் இறைத்தன்மையை இவ்வளவு தெளிவாக, வெளிப்படையாக வேறு எவருமே வெளியிட்டதில்லை. தோமாவில் அறிவியலும் இறைநம்பிக்கையும் ஒன்றிணைந்து விடுகிறது. அந்த வேளையில்தான் இயேசு மொழிந்த இறுதிப்பேறு - ஒன்பதாவது பேறு பிறக்கிறது: “காணாமலே நம்புவோர் பேறு பெற்றோர்” (யோவான் 20:29) நாமும் இறைநம்பிக்கைக் குடும்பத்தில் பேறுபெறும் பெருமை அடைகிறோம்.

இயேசுவின் காயங்கள் அடையாளப்படுத்துபவை மட்டுமல்ல அடைக்கலம் தருபவை மட்டுமல்ல, நலமளிப்பவை, மீட்புத் தருபவை, குணப்படுத்துபவை. இயேசுவின் பாடுகளாலும், மரணத்தாலும் தோமாவின் மனத்திலும் காயம். நாமும் கூடப் பலவிதத் துயரங்களால் புண்பட்டு இரத்தம் கசிந்து நிற்கிறோம். அந்த நேரத்தில் எல்லாம் காயமில்லாத கடவுள் அல்ல இயேசுவைப் போன்ற காயங்கள் நிறைந்த கடவுளே ஆறுதல் அளிக்கிறார். வாழ்வுக்குப் பொருள் கொடுக்கிறார்.

“அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார். நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார். நமக்கு நிறைவாழ்வு அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார். அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்" (எசா.53:5)

“சிலுவையின் மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள். (1 பேதுரு 2:24)

இயேசுவின் காயங்கள் நலம் தருபவை மட்டுமல்ல, எல்லையற்ற இறையன்பை உணர்த்துபவை.

கை அறுவைச் சிகிச்சையில் தேர்ச்சி பெற்ற மருத்துவர் ஒருவர் ஒவ்வொரு அறுவைச் சிகிச்சையின் போதும் "நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்” என்று சொல்வாராம். அதற்கான பின்னணி? வியட்நாம் போரின் போது ராணுவ வீரர் ஒருவருடைய கையில் பாய்ந்திருந்த துப்பாக்கித் தோட்டாவை அகற்றும்படி அழைக்கப்பட்டிருந்தார். அந்த அறுவைச் சிகிச்சை அவரது இதயத்தை ஆழமாய்த் தொட, போர் முடிந்ததும் கை அறுவைச் சிகிச்சையில் சிறப்புத் தேர்ச்சியும் பயிற்சியும் பெற்றார். துப்பாக்கிக் குண்டுகளினாலோ, வேறு கூர்மையான ஆயுதங்களினாலோ, கைகளின் சதையையும் எலும்பையும் துளைக்கின்ற காயங்களையும் அதனால் ஏற்படுகின்ற வேதனைகளையும் நன்கு உணர்ந்திருந்தார்.

அதனால், இயேசுவின் திருக்கைகள் சிலு போதெல்லாம் நெஞ்சு பதைப்பதாகக் கூறுகிறார். "நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்" என்று தோமா அறிக்கையிடுவதை விசுவாசத்தின் அடையாளமாக மட்டுமே அவர் பார்க்கவில்லை; இயேசுவின் கிழிக்கப் பட்டிருந்த திருக்கைகளில் காயத்தின் ஆழத்தைப் பார்த்த அதிர்ச்சியிலும் தோமா கதறியிருக்கக் கூடும் என்ற முடிவுக்கு வந்தார். 41ன வே அவர் உறுதியோடு சொல்லும் வார்த்தைகள்: “ஒவ்வொரு முறையும் காயம்பட்ட மனிதனுடைய கையை அறுவைச் சிகிச்சை செய்யும் பொழுதெல்லாம், கிறிஸ்து தனது திருக்கையை என்னிடம் தருவதாக 1681னக்கிறேன். எனவே நானும் தோமாவோடு சேர்ந்து “நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்” என்று சொல்வதைப் பழக்கமாகக் கொண்டிருக்கிறேன்''

நம் நண்பர்களின் நம்பிக்கை நமக்கு உதவலாம். ஆனால் அது மட்டும் போதாது. அந்தக் கை அறுவைச் சிகிச்சை நிபுணரும் தூய (தோமாவும் செய்ததைப் போல நாமும் இயேசுவிடம் கொண்ட தனிப்பட்ட சிறப்பு அனுபவத்தால் நமது இறைநம்பிக்கையைக் கட்டி எழுப்ப வேண்டும்.

ஒரு சுவையான கட்டுக்கதை. கலிலேயக் கடலில் சீடர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது உயிர்த்த இயேசு கடலில் நடந்து வந்தார். சீடர்கள் உற்சாகத்தோடு "ஆண்டவரே வாரும் படகில் ஏறும் என்று அழைக்க சில அடிகள் எடுத்து வைத்ததும் இயேசு மூழ்கத் தொடங்கினார். அவரை இழுத்துப் பிடித்துப் படகில் ஏற்றிக் கொண்டார்கள். அப்பொழுது தோமா, ''என்ன ஆச்சு ஆண்டவரே? பேதுருவை கூட அன்றொருநாள் மூழ்காமல் காப்பாற்றினீரே! இப்போது நீரே ...” தோமா முடிக்கவில்லை. உணர்ச்சிக் குழப்பத்தோடு இயேசு சொன்னார்: “இப்போது என் கால்களில் காயத்தால் ஏற்பட்ட துளைகள் இருக்கின்றன''.

இயேசுவின் காயங்கள் முழ்கடிப்பவை அல்ல. கரை சேர்ப்பவை.

இயேசுவின் ஊனுடல் மட்டுமல்ல. அவரது மறைஉடலாகிய திருச்சபையும் அதே பாடுகளின் காயங்களைத் தாங்கியிருக்கும், தூய ஆவியின் ஆற்றலால் அது என்றும் உலகம் என்னும் பெருங்கடலில் மூழ்கிவிடாமல் மக்களைக் கரை சேர்த்துக் கொண்டிருக்கும்!

1. இறைவார்த்தையைக் கேட்கும் போது (in the spoken word) "வழியிலே அவர் நம்மோடு பேசி மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா? (லூக்.24:32). சீடர்கள் இயேசுவை அடையாளம் காணாவிட்டாலும் இயேசுவின் வார்த்தைகள் ஆறுதல் அளித்தன. இறைவார்த்தைக்குத் தனி ஆற்றல் உண்டு. ஞாயிறு வழிபாடு முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள் வயதான மூதாட்டி. அவளைக் கண்ட இளைஞர்கள் கிண்டலாக, ''பாட்டி, இன்று மறையுரையில் சாமியார் என்ன சொன்னார்?'' என்று கேட்டார்கள். வயதான பெண்மணி நினைத்துப் பார்த்தாள். ஒன்றும் நினைவுக்கு வரவில்லை. "சாமியார் சொல்வது ஒன்றும் நினைவில் பதிவதில்லை என்றால் எதற்காகக் கோவிலுக்குப் போகிறாய்?' என்று கேட்டுச் சிரித்தனர். ஒரு மூங்கில் கூடையை அவர்களிடம் கொடுத்து அருகில் உள்ள நீரோடையில் அமிழ்த்தித் தண்ணீர் கொண்டு வரச் சொன்னாள். அவர்கள் கொண்டு சென்று நீரில் அமிழ்த்தி வெறுங் கூடையைக் கொண்டு வந்தனர். “இந்தக் கூடையில் எத்தனை ஓட்டைகள். இதில் எப்படித் தண்ணீர் தங்கும்?” என்றனர். அவள் சொன்னாள்! ''உண்மைதான். கூடையில் தண்ணீர் தங்காது. ஆனால் கூடையை இப்போது பாருங்கள். நீரில் நனைந்ததும் அதன்மேல் படிந்திருந்த தூசி அகலவில்லையா? கூடை இப்போது சுத்தமாக இல்லையா? அதுபோல் இறைவார்த்தை எனக்குள்ளே பதியவில்லை என்றாலும் அதைக் கேட்கும் போது நான் தூய்மையாவதை உணருகிறேன்''.

2. அப்பத்தைப் பிட்கும் போது (in the broken bread) “அவர் அப்பத்தைப் பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது... அவர்களும் அவரை அடையாளம் கண்டு கொண்டார்கள்” (லூக்.24:30,31) இயேசுவை இனம் காண, உணர்ந்து ஏற்க இறைவார்த்தை மட்டும் போதாது. நற்கருணை என்னும் அருள்சாதனம் வேண்டும். இறைவார்த்தை - மனித சொல்லுரு எடுத்தது. அது விவிலியம் - மனித உடலுரு எடுத்தது. அது நற்கருணை கத்தோலிக்குத் திருச்சபை வைத்திருக்கும் கருவூலம் திருவருள் சாதனம், எவ்வளவு பெருமைக்குரியது!

ஒருவர் ஒரு பெரிய அங்கா படிக்குச் சைக்கிளில் சென்றார். சைக்கிளைப் பூட்டி வைக்க மறந்து விட்டார், தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு நீண்ட நேரம் கழித்து வெளியே வந்தபோது, சைக்கிள் திருடு போகாமல் வைத்த இடத்திலேயே இருந்ததைக் கண்டு வியப்படைந்தார். கடவுளுக்கு நன்றி செலுத்தும் வண்ணம் அருகாமையிலிருந்த கோவிலுக்குச் சென்றார். ஆனால் இப்போது சைக்கிளைப் பூட்டி வைத்தார். கோவிலை மூன்று முறை வலம் வந்து, ஒரு தேங்காயை உடைத்துவிட்டு வந்தபோது, சைக்கிள் திருட்டுப் போய்விட்டது.

அவர் கடைக்குச் சென்றபோது அவருக்குக் கடவுளின் மேல் நம்பிக்கை இருந்தது; பூட்டின் மேல் நம்பிக்கை இல்லை; சைக்கிள் பத்திரமாக இருந்தது. அவர் கோவிலுக்குச் சென்றபோது, அவருக்குப் பூட்டின் மேல் நம்பிக்கை இருந்தது, கடவுளின் மேல் நம்பிக்கை இல்லை. எனவே சைக்கிள் காணாமல் போய்விட்டது.

கடவுள்மீது நம்பிக்கை வைத்தால், எல்லாம் பாதுகாப்பாக இருக்கும். மாறாக, பணம், பட்டம், பதவி ஆகியவற்றிலும், மனைவி மக்களிடமும் நாம் நம்பிக்கை வைக்கும்போது, நமது உடல்நலம், மனநலம், அமைதி ஆகிய அனைத்துமே திருடப்படும், எல்லாவற்றையும் பெற்றுக் கடவுளை இழப்பதைவிட, எல்லாவற்றையும் இழந்து கடவுளைத் தக்க வைப்பது சாலச் சிறந்தது. ஏனெனில் கடவுள் ஒருவரே நமது கற்பாறை, கோட்டை, கேடயம் மற்றும் அரணும் ஆவார் (திபா 18:1-2),

இன்றைய அருள்வாக்கு வழிபாடு கடவுள் நம்பிக்கையை வலியுறுத்துகிறது. கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி நமது கிறிஸ்தவ வாழ்வு நான்கு தூண்களில் தோன்றியுள்ளது எனக் கூறியுள்ளது. அவை முறையே: 1, நாம் அறிக்கையிடும் நம்பிக்கை (விசுவாசப் பிரமாணம்);
2. நாம் கொண்டாடும் நம்பிக்கை (அருளடையாளங்கள்);
3. நாம் கடைப்பிடிக்கும் நம்பிக்கை (பத்துக் கட்டளைகள் );
4. நாம் செபிக்கும் நம்பிக்கை (இயேசு கற்றுத்தந்த இறைவேண்டல்).

இன்றைய முதல் வாசகம் கிறிஸ்தவர்களை, "ஆண்டவரில் நம்பிக்கை கொண்டவர்களின் கூட்டம்” என்றழைக்கிறது (திப 5:14). கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டோர் பல்வேறு பிணிகளிலிருந்து விடுதலை பெற்றனர். பிணியாளர்கள் மீது பேதுரு நிழல் பட்டதாலேயே அவர்கள் குணமடைந்தார்கள். கிறிஸ்துவின் நிழல்பட்டு யாரும் குணம் அடைந்ததாக நற்செய்தியில் குறிப்பிடப்படவில்லை, ஆனால் பேதுருவின் நிழல்பட்டு மக்கள் குணமடைந்தனர். "நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார் " என்ற ஆண்டவரின் அருள்வாக்கு நிறைவேறியது (யோவா 14:12).

புதிய ஏற்பாட்டின் முதல் பேறும், இறுதிப் பேறும் நம்பிக்கையைப் பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. முதல்பேறு, "ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" (லூக் 1:45). மரியா நம்பினார்; நம்பிக் கருவுற்றார். உடலால் கருவுறுமுன் உள்ளத்தால் கருவுற்றார். இறுதிப்பேறு, "தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" (யோவா 20:29). நாம் கடவுளைக் காணாமலேயே அவரை நம்புகிறோம். "நீங்கள் அவரைப் பார்த்ததில்லை . எனினும் அவர் மீது அன்பு செலுத்துகிறீர்கள்" (1 பேதுரு 1:8). முகக்கண் கொண்டு காண முடியாத கடவுளை அகக்கண் கொண்டு காண்கிறோம். மேலும் கிறிஸ்துவைக் காண்பது கடவுளைக் காண்பதாகும் (யோவா 14:9),

தோமாவிடம் அறிவியல் மூளை இருந்தது. எனவேதான் அவர் எதையும் கண்டு, கேட்டு, தொட்டுப் பார்த்த பின்னரே நம்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தார். எனவே அவர் அவநம்பிக்கையின் பாதாளத்தில் விழுந்தார். இருப்பினும், நம்பிக்கையின் சிகரத்தை எட்டிப் பிடித்தார், நம்பிக்கையை அறிவியலுக்கு அடைமானம் வைத்த அவர், அறிவியலுக்கு அப்பாற்சென்று கிறிஸ்துவின் இறைத்தன்மையை அறிக்கை யிட்டார். அவர் கண்ணால் கண்டது கிறிஸ்து என்னும் மனிதரை, ஆனால் அவர் அறிக்கையிட்டதோ கிறிஸ்து என்னும் கடவுளை, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்" (யோவா 20:28) நற்செய்தியில் தோமாவைத் தவிர வேறு யாரும் கிறிஸ்துவை “என் கடவுளே" என்று அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவியலுக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் இடையே உண்மையான முரண்பாடு இருக்க முடியாது. ஏனெனில் இவ்விரண்டிற்கும் கடவுள்தான் ஊற்று. கல்வியின் பயன் கடவுளைச் சரணடைவதாகும்.

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் (குறள் 2).
முழுமையான அறிவு சூன்யத்தில் அல்ல, பூரணத்தில் சங்கமிக்கும். அறிவியல் மேதைகள் எல்லாம் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

'கிறிஸ்து உயிர்த்து விட்டார்' என்பதை தோமா முதலில் நம்ப மறுத்தார். அதற்குக் காரணம்: அவர் மற்றச் சீடர்களிடமிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டார். அவர் மீண்டும் மற்றச் சீடர்களுடன் இணைந்த பிறகுதான் அவருக்கு உயிர்த்த கிறிஸ்துவைக் காணும் பேறு கிடைத்தது.

இக்காலத்தில் பல கிறிஸ்தவர்கள் தங்கள் கிறிஸ்தவ நம்பிக்கையை இழக்கக் காரணம், அவர்கள் திருச்சபையின் வழிபாட்டிலிருந்து தங்களைத் துண்டித்துக் கொள்கின்றனர். எட்டாம் நாள் என்றாலும் வாரத்தின் முதல் நாள் என்றாலும் ஒன்று தான், அது ஞாயிற்றுக்கிழமையைக் குறிக்கும்.

ஞாயிறு அன்றுதான் கிறிஸ்து தம் சீடர்களுக்குத் தோன்றினார். இன்றைய இரண்டாம் வாசகத்தில், ஒரு ஞாயிறு அன்றுதான் தூய ஆவி தம்மை ஆட்கொண்டு திருவெளிப்பாடு நூலை எழுதக் கூறியதாக யோவான் குறிப்பிடுகிறார் (திவெ 1:10). ஒவ்வொரு ஞாயிறும் ஒரு சிறிய பாஸ்கா ஞாயிறு, ஞாயிறு வழிபாட்டைப் புறக்கணிப்போர் காலப்போக்கில் கிறிஸ்துவ நம்பிக்கையை இழப்பர் என்பதில் ஐயமில்லை .

ஒரு கிராமத்திலிருந்து ஒரு குடும்பத்தினர் தீப்பந்தங் களுடன் ஒரு திருமணத்திற்குச் சென்றார்கள். ஏனெனில் திருமண அழைப்பிதழில், "சொந்த பந்தங்களுடன் திருமணத்திற்கு வரவும்' என்று குறிப்பிடப்பட்டிருந்ததாம். ஞாயிறு அன்று நாம் சொந்த பந்தங்களுடன் செம்மறியின் விருந்தில் கலந்து கொண்டு நமது கிறிஸ்தவ நம்பிக்கையை ஆழப்படுத்துவோம். தோமாவுடன் இணைந்து நற்கருணையில் மறைந்துள்ள கிறிஸ்துவை "நீரே என் ஆண்டவர்; நீரே என் கடவுள்" என்று அறிக்கையிடுவோம்.

“சிலர் வழக்கமாக நம் சபைக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. நாம் அவ்வாறு செய்யலாகாது; ஒன்று கூடி ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக” (எபி 10:25) என்னும் எபிரேயர் திருமுகத்தின் அறிவுரையை ஏற்றுச் செயல்படுத்துவோம்.

"கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும். உலகை வெல்லுவது நம்பிக்கையே" (1 யோவா 5;4), நம்பிக்கை யின்றி இவ்வுலகை நாம் வெல்லமுடியாது!

கூட்டிலிருந்து வெளியே

போன வாரம் உயிர்ப்பு பெருவிழா அன்று நீங்கள் யாருக்காவது 'ஈஸ்டர் முட்டை' பரிசளித்தீர்களா? கிறிஸ்துமஸ் அன்று 'கிறிஸ்துமஸ் மரம்' வைக்கும் வழக்கம் எப்படி வந்தது என்று நமக்கு காலப்போக்கில் மறந்துவிட்டதுபோல, உயிர்ப்பு பெருநாள் அன்று 'ஈஸ்டர் எக்' எப்படி வந்தது என்றும் மறந்து வருகிறது. இன்று பேக்கரிகளையும், சூப்பர் மார்க்கெட்டுகளையும் அலங்கரிக்கும் ஈஸ்டர் முட்டைகள் பல பொறிக்காமலேயே போய்விடுகின்றன. ஈஸ்டர் முட்டையின் பொருளை நாம் அறிந்துள்ளோமோ இல்லையோ, இன்றைய கார்ப்பரெட் உலகம் அறிந்திருக்கிறது. ஆகையால்தான் அதையும் ஒரு பரிசுப்பொருளாக, விற்பனைப் பொருளாக மாற்றிவிட்டது.

ஈஸ்டர் முட்டை இரண்டு விடயங்களை அடையாளப்படுத்துகிறது. ஒன்று, இயேசு. சிலுவையில் அறையப்பட்ட இறந்த அவர் கல்லறையில் அடக்கம் செய்யப்படுகின்றார். ஆக, கல்லறையில் வைக்கப்பட்ட இயேசுவை முதலில் அடையாளப்படுத்துகிறது முட்டை. இரண்டு, திருத்தூதர்கள். இயேசு சிலுவையில் அறையப்பட்ட இறக்க, தங்களையும் கைது செய்துவிடுவார்களோ என்று அஞ்சிய திருத்தூதர்கள் பூட்டிய அறைக்குள் ஒளிந்துகொள்கின்றனர். திருத்தூதர்கள் அறைக்குள் அடைந்து கிடந்ததை இரண்டாவதாக அடையாளப்படுத்துகிறது முட்டை. கல்லறை என்ற முட்டையை இயேசு தாமே உடைத்து வெளியேறுகின்றார். புதிய வாழ்வுக்குக் கடந்து செல்கின்றார். பூட்டிய அறை என்ற முட்டையை திருத்தூதர்கள் உடைத்து வெளியேற இயேசு என்ற தாய்க்கோழியின் துணை தேவைப்படுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 5:12-16), தூய ஆவியானவரின் வருகைக்குப் பின் துணிவுடன் இயேசுவுக்குச் சான்று பகர்ந்த திருத்தூதர்களின் வாழ்க்கை முறை பற்றி பதிவு செய்கின்ற லூக்கா, அவர்கள் வழியாக நடந்தேறிய அருஞ்செயல்கள் மற்றும் அரும் அடையாளங்கள் பற்றி இங்கே குறிப்பிடுகின்றார். இயேசுவுக்கும், திருத்தூதர்களுக்குமான இடைவெளியை மிக அழகாக பதிவு செய்கின்றார் லூக்கா. அதாவது, இயேசு அறிகுறிகளை செய்தார். ஆனால், இங்கே திருத்தூதர் வழியாக அறிகுறிகள் செய்யப்படுகின்றன. 'நம்பிக்கை கொண்டவர்கள்' ஒரே மனத்தோடு கூடி வருகின்றனர்.இந்தக் கூடிவருதல் அவர்கள் தங்கள் நம்பிக்கையில் நிலைத்திருப்பதற்கு உதவி செய்ததோடு, நம்பிக்கை குன்றியவர்களுக்கு துணிவையும் தந்தது. தங்களின் குடும்பம், பின்புலம், சமூக அந்தஸ்து, வேலை போன்றவற்றில் வேறுபட்டிருந்தாலும், இயேசுவின் மேல் உள்ள நம்பிக்கை ஒருமனத்தோடு இவர்கள் வாழ வழிசெய்கிறது. திருத்தூதர் பேதுருவை முதன்மைத் திருத்தூதராக தொடக்கத் திருஅவை ஏற்றுக்கொள்ளத் தொடங்குகிறது. அவரின் நிழல் பட்டாலே நலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் பெறுகின்றனர். இயேசு செய்த அறிகுறிகள் பெரும்பாலும் அவரின் தொடுதலால் செய்யப்பட்டவை. இயேசு விண்ணேறிச் சென்றிபின் அவரின் தொடுதல் இனி சாத்தியமில்லை. மேலும், விண்ணேறிச் சென்ற இயேசுவால் தன் திருத்தூதரின் நிழலை வைத்துக்கூட குணம் தர முடியும். இவ்வாறாக, இங்கே முதன்மைப்படுத்தப்படுவது இயேசுவின் ஆற்றலே.

'ரிலே' ஓட்டத்தில் ஓடுவதுபோல கையில் இறையாட்சி என்னும் தீபத்தை எடுத்துக் கொண்டு ஓடிய இயேசு, அதைத் தன் சீடர்களின் கையில் கொடுத்துவிட்டார். இனி அவர்கள்தாம் அதை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும். 'அவர்களிடம் கொடுத்துவிட்டோம். நம் பணி முடிந்துவிட்டது' என அவர் ஓய்ந்துவிடாமல், நிழலாக இன்றும் தொடர்கின்றார். இவ்வாறாக, தன்னுடைய தொடர் உடனிருப்பின் வழியாக இயேசு திருத்தூதர்களை அவர்களின் மூடிய கதவுகளிலிருந்து வெளியேற்றுகின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். திவெ 1:9-13, 17-19) பத்முதீவுக்கு நாடுகடத்தப்படும் திருத்தூதர் யோவான் கிறிஸ்துவைக் காட்சியாகக் காண்பதையும், கிறிஸ்துவைக் கண்டபோது அவரிடம் எழுந்த உள்ளுணர்வுகளையும், இந்தக் காட்சியை எழுதி வைக்குமாறு அவருக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையையும் முன்வைக்கிறது. தான் திருத்தூதராக இருந்தாலும், கிறிஸ்துவையே காட்சியில் கண்டாலும், நம்பிக்கை கொண்ட நிலையில் அனைவரோடும் 'வேதனையிலும், ஆட்சியுரிமையிலும், மனவுறுதியிலும்' ஒன்றித்திருப்பதாகச் சொல்கின்றார் யோவான். ஆக, கிறிஸ்து தான் தரும் நம்பிக்கையால் இன்னும் பலரை அழிவிலிருந்து வெளியேற்றுகிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், கூட்டிலிருந்து வெளியே தம் சீடர்களை அழைக்கும் இயேசு நம்மையும் நம்முடைய சௌகரிய மையங்களிலிருந்து வெளியேற அழைக்கின்றார்.

எப்படி?

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 20:19-31) மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது:
20:19-23 இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
20:24-29 இயேசு தோமா மற்றும் மற்ற சீடர்களுக்குத் தோன்றுதல்
20:30-31 நற்செய்தி முடிவுரை

இந்நற்செய்தி வாசகத்தின் பின்புலத்தை முதலில் புரிந்துகொள்வோம்:
இயேசு பிறந்த ஆண்டு '0' என வைத்துக் கொள்வோம். அவர் இறந்த ஆண்டு 33. யோவான் நற்செய்தி எழுதப்பட்ட ஆண்டு '100.' ஒரு தலைமுறை என்பது 40 ஆண்டுகள். இயேசுவின் இறப்புக்குப் பின் ஏறக்குறைய இரண்டு தலைமுறைகள் கடந்துவிடுகின்றன. இயேசுவைப் பார்த்த அவரின் சமகாலத்தவருக்கு அவரையும், அவரின் உயிர்ப்பையும் நம்புவது பெரிய விஷயமல்ல. ஆனால், அடுத்தடுத்த தலைமுறை வரும்போது கூடவே நம்பிக்கை சிக்கல்களும் எழுகின்றன. அப்படி முதன்மையாக எழுந்த சிக்கல்கள் மூன்று: (1) இயேசு உயிர்த்தார் என்றால், அவர் உடலோடு உயிர்த்தாரா? அல்லது ஆவியாக உயிர்த்தாரா? ஆவியாக உயிர்த்தார் என்றால், அதை உயிர்ப்பு என்று நாம் சொல்ல முடியாது. உடலோடு உயிர்த்தார் என்றால் அவர் எப்படிப்பட்ட உடலைக் கொண்டிருந்தார்? பூட்டிய அறைக்குள் நுழைந்த அவர் எப்படி உடலைப் பெற்றிருக்க முடியும்? - 'உடலா' 'ஆவியா' என்பது முதல் கேள்வி. (2) கிரேக்க தத்துவ இயல் மேலோங்கி நின்ற இயேசுவின் சமகாலத்தில், 'புலன்களுக்கு எட்டுவது மட்டுமே உண்மை' (எம்பிரிசிஸ்ட்) என்று சொன்ன தத்துவம் மேலோங்கி நின்றது. இந்த தத்துவயியலார்கள், கண்களுக்குத் தெரிவதை மட்டுமே நம்பினார்களே தவிர, கண்ணுக்குத் தெரியாத கடவுள், ஆவி, மறுபிறப்பு, மோட்சம், நரகம், வானதூதர் என எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்தினர்.

இப்படிப்பட்டவர்களுக்கு இயேசுவின் மேலுள்ள நம்பிக்கையை எப்படி உருவாக்குவது? - இது அடுத்த பிரச்சினை. மற்றும் (3) திருத்தூதர்கள் பல நாடுகளுக்குப் பயணம் செய்து இயேசுவுக்குச் சான்று பகர்கின்றனர். திருத்தூதர் தோமா தான் அதிக தூரம் பயணம் செய்து நம் ஊர் வரைக்கு வருகின்றார். இப்படி இவர்கள் போகும் இடத்தில் இவர்களுக்கு வரும் புதிய சிக்கல் என்னவென்றால், இந்த தூர நாடுகளில் வசிப்பவர்கள், இயேசு என்ற வரலாற்று எதார்த்தத்திடமிருந்து காலத்தாலும், இடத்தாலும் அந்நியப்பட்டவர்கள். 'நீங்க அவரைப் பார்த்திருக்கிறீங்க! நம்புறீங்க!' 'ஆனா, நாங்க அவரைப் பார்த்ததில்லை. அவரை எதுக்கு நம்பணும்?' என அவர்கள் கேள்வி கேட்டால், அவர்களுக்கு சொல்வதற்காக கண்டுபிடித்த ஒரு பதில்தான்: 'கண்டதாலா நம்பினாய்! காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்.' தோமாதான் அதிக தூரம் செல்ல வேண்டியிருந்ததால், தோமாவே இந்நிகழ்வின் கதைமாந்தராக்கப்படுகின்றார்.

தோமா - இயேசு - விரல் நிகழ்வு தோமாவின் நற்செய்தியிலும், அவரின் பணிகள் பற்றிய குறிப்பேட்டிலும் இல்லை. மேலும், தோமாவைப் பற்றிய மற்ற நிகழ்வுகள் (யோவா 11:16, 14:5, 21:2) அவரை 'சந்தேகிப்பவராக' நமக்கு அடையாளப்படுத்தவில்லை. மேலும், இயேசு தோமாவுக்குத் தோன்றும் நிகழ்வு ஒரு பிற்சேர்க்கை போலவே அமைந்துள்ளது. அதாவது, இயேசு தன் சீடர்களுக்குத் தோன்றி தூய ஆவி கொடுக்கின்றார். பாவம் மன்னிக்கும் அதிகாரம் கொடுக்கின்றார். அப்புறம் மறைந்துவிடுகின்றார். நற்செய்தியாளர் டக்கென்று தன் குரலை மாற்றி, 'ஆனால் இயேசு வந்தபோது தோமா அங்கு இல்லை' என்கிறார். அப்படியெனில் தோமா தூய ஆவியைப் பெறவில்லையா? அல்லது பாவ மன்னிப்பு அதிகாரம் அவருக்கு கொடுக்கப்படவில்லையா? 'சீடர்கள்' என முதலில் சொல்லுமிடத்திலேயே, 'தோமாவைத் தவிர மற்ற சீடர்கள்' என்று அவர்கள் சொல்லியிருக்கலாமே? இந்த பாடச் சிக்கல்களை வைத்துப் பார்க்கும்போது, யோவானின் திருஅவை கொண்டிருந்த இறையியல் கேள்விகளுக்கு விடையாக, தன் கற்பனைத்திறத்தால் நற்செய்தியாளர் உருவாக்கிய நிகழ்வே 20:24-31.

இந்நிகழ்வு இயேசு உயிர்த்த அன்றே மாலை நேரத்தில் நடப்பதாக எழுதுகிறார் யோவான். 'மூடிய கதவுகள்' என்னும் சொல்லாடல் கதையில் இறுக்கத்தை அதிகரிக்கிறது. யோவான் நற்செய்தியாளர் திருத்தூதர்களை பன்னிருவர் என அழைப்பதில்லை. யூதாசு காட்டிக்கொடுப்பவனாக மாறிவிட்டதால், அவரை உள்ளிழுக்கும் பெயரை இவர் தவிர்க்கிறார். இங்கே 'சீடர்கள்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக!' என்று இயேசு சீடர்களை வாழ்த்துகிறார். இது ஒரு சாதாரண வாழ்த்து என்றாலும், இங்கே இயேசு நிறைவேற்றும் முதல் வாக்குறுதியாக இருக்கிறது (காண். யோவா 14:27). உலகின் பகையையும், எதிர்ப்பையும் தாங்க வேண்டிய தன் சீடர்களுக்கு (15:18-25) அமைதியை பரிசளிக்கின்றார் இயேசு. சீடர்கள் தோமாவிடம், 'ஆண்டவரைக் கண்டோம்' என்று சொல்கின்றனர். இந்த வார்த்தைகள் வழியாக யோவான் இந்நிகழ்வை 'நான் ஆண்டவரைக் கண்டேன்' என்ற (20:18) மகதலாவின் வார்த்தைகளோடு இணைக்கின்றார். அங்கே மரியாள் இயேசுவைக் கட்டிப்பிடிக்கின்றாள். இங்கே தோமா அவரின் உடலை தன் விரலால் ஊடுருவுகின்றார். இந்த இரண்டு நிகழ்வுகளும் இயேசு உடலோடு இருந்தார் என்பதற்குச் சான்றாக அமைகின்றன. இயேசுவை நேரில் கண்ட தோமா, 'நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்' என அறிக்கையிடுகின்றார். இதுதான் யோவான் நற்செய்தியின் இறுதி நம்பிக்கை அறிக்கை. 'என்னைக் கண்டவர் தந்தையைக் கண்டார்' (14:9) என்ற இயேசுவின் வார்த்தைகள் இங்கே உண்மையாகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் மூன்று வகையான நகர்வுகள் இருக்கின்றன:
அ. பூட்டிய அறைக்குள்ளிருந்து வெளியே
'தந்தை என்னை அனுப்பியதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்' என்கிறார் இயேசு. அழைத்தலின் மறுபக்கம்தான் அனுப்புதல். அழைக்கின்ற அனைவரும் அனுப்பப்படுவர் என்பதே நிதர்சனமான உண்மை. அழைப்பு என்பது வெறும் உரிமை அல்ல. அதில், அனுப்பப்படுதலின் கடமையும் இருக்கிறது. இன்று, திருமணம், அருள்பணிநிலை என நாம் எந்த அழைப்பைப் பெற்றிருந்தாலும் அதில் அடங்கியிருக்கும் அனுப்புதலையும் நாம் உணர வேண்டும். அனுப்பப்படாமல் இருக்கும் வாழ்வு - முட்டைக்குள் அடைந்த கோழிக்குஞ்சு முட்டைக்கும் தனக்கும் ஆபத்தாய் மாறுவது போல - ஆபத்தாய் மாறிவிடும்.

இன்று நான் அடங்கியிருக்கும் பூட்டிய அறை எது? பூட்டிய அறையின் இருள், பாதுகாப்பு, மற்றவர்களின் உடனிருப்பு என்னுடைய சௌகரிய மையமாக மாறிவிடும்போது என்னால் வெளியே செல்ல முடிவதில்லை. வெளியே செல்வதற்கு நான் என் சௌகரிய மையத்தை விட்டு வெளியே வர வேண்டும். 'கடவுள் தன்மை' என்ற சௌகரிய மையத்திலிருந்து இயேசு வெளியேறியதால்தான் அவரால் மனித தன்மையை ஏற்க முடிந்தது. மேலும், நான் என்னையே அடுத்தவரிடமிருந்து தனிமைப்படுத்திப் பூட்டிக்கொள்ளும்போது என் வாழ்க்கை முழுமை அடைவதில்லை.

ஆ. கோபத்திலிருந்து மன்னிப்புக்கு
சீடர்கள்மேல் ஊதி தூய ஆவியை அவர்கள்மேல் பொழிந்த இயேசு பெந்தெகோஸ்தே திருநாளின் முன்சுவையை அளிக்கின்றார். மேலும், முதல் ஆதாமின்மேல் கடவுள் தன் மூச்சைக் காற்றி ஊதி அவனுக்கு வாழ்வு தந்தது போல. இங்கே தன் சீடர்களின்மேல் ஊதி அவர்களுக்குப் புதுவாழ்வு அளிக்கின்றார் இயேசு. 'நீங்கள் எவருடைய பாவங்களை மன்னிப்பீர்களோ' என்ற வாக்கியத்தை நாம் பெரும்பாலும் ஒப்புரவு அருள்சாதன உருவாக்கம் என்று மேற்கோள் காட்டுகின்றோம். அல்லது இது அருள்பணியாளர்களுக்கு மட்டுமே பொருந்துகிறது என்று சொல்கிறோம். ஆனால், இங்கே இயேசு மன்னிப்பு என்ற மதிப்பீட்டை அனைவருக்குமான மதிப்பீடாகப் பதிவு செய்கின்றார். சீடர்கள் அறைக்குள் ஒளிந்து நிற்கக் காரணம் யூதர்களின் மேல், உரோமையரின் மேல் கொண்டிருந்த பயமும் கோபமுமே. தங்கள் தலைவரை இப்படிக் கொன்றுவிட்டார்களே என்ற கோபம், தங்களையும் அதே போல செய்துவிடுவார்களோ என்ற பயம். இந்தப் பின்புலத்தில்தான் அவர்களுக்குத் தோன்றுகின்ற இயேசு அவர்களை மன்னிப்பிற்கு அழைத்துச் செல்கின்றார். ஆக, மன்னிப்பின் வழியாக நாம் நம்முடைய கூட்டை உடைத்து வெளியே செல்கிறோம்.

மன்னிக்க மறுக்கும் உள்ளம் மற்றவர்களை உள்ளே வராமல் பூட்டிக்கொள்கிறது. மேலும், அமைதியின் தொடர்ச்சியாகவே இயேசு மன்னிப்பை முன்வைக்கின்றார். மன்னிக்கின்ற மனம் அமைதியை அனுபவிக்கும். அமைதியை அனுபவிக்கும் மனம் மன்னிக்கும்.

இ. சந்தேகத்திலிருந்து நம்பிக்கைக்கு
'கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபேற்றோர்' என்கிறார் இயேசு. இயேசுவின் வெற்றுக் கல்லறையை நோக்கி ஓடும் யோவான் 'கண்டார், நம்பினார்' (20:8). இங்கே தோமா இயேசுவைக் 'கண்டார், நம்பினார்.' ஆனால், இனி வரப்போகும் தலைமுறைகள் காணாமல்தான் நம்ப வேண்டும் முதல் ஏற்பாட்டில் ஈசாக்கின் பார்வை மங்கியிருந்தபோது, யாக்கோபு ஏசாவைப்போல உடையணிந்து, அவரை ஏமாற்றி தன் தந்தையின் ஆசியை உரிமையாக்கிக் கொள்கின்றார். ஈசாக்கு தன் கண்களையும், தொடுதலையும் நம்பியதால் ஏமாற்றப்பட்டார். ஆனால், ஆபிரகாம் காணாமலேயே இறைவனின் வாக்குறுதியை நம்பினார். அவரே நம்பிக்கையால் இறைவனுக்கு ஏற்புடையவராகிறார். 'நம்பிக்கை கொள்கிற உள்ளம் நஞ்சையும் எதிர்கொள்ளும்' என்பது பழமொழி. நம்பிக்கை ஒன்றே நம்மைச் செயல்படத் தூண்டுகிறது. முதல் வாசகம் சொல்லும் அறிகுறிகள் அல்லது அரும் அடையாளங்கள், இரண்டாம் வாசகம் சொல்லும் காட்சி - இந்த இரண்டும் நமக்கு நடக்கவில்லையென்றாலும், நாம் காணாமலே நம்பினால், இன்றும் என்றும் பேறுபெற்றவர்களே.

இறுதியாக, இன்று நம் ஒவ்வொருவரையும் நாம் ஒளிந்திருக்கும் அல்லது அடைந்திருக்கும் ஈஸ்டர் முட்டையிலிருந்து வெளிவர அழைக்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு. இன்றைய ஞாயிற்றை நாம் இறைஇரக்கத்தின் ஞாயிறு என அழைக்கின்றோம். இயேசுவில் நாம் இறைவனின் இரக்கத்தின் முகத்தைக் காண்கிறோம். இதையே நாம் இன்று மற்றவர்களுக்கு அளிக்கவும் அழைக்கப்படுகிறோம். இன்றைய உலகின் தேவை இரக்கமே. தன் கூட்டைவிட்டு தான் வெளியேறும் ஒருவர் தன் கட்டின்மையில், மன்னிப்பில், நம்பிக்கையில், சரணாகதியில் இரக்கம் காட்ட முடியும்.

இயேசுவே இறைமகன் என நம்பி வாழ்வு பெறுவோம்

நிகழ்வு
சில ஆண்டுகளுக்கு முன்பாக யூகோஸ்லாவியாவில் நீதிபதி ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் தன்னுடைய வீட்டுக்குளியறையில் குளித்துக்கொண்டிருந்தபொழுது மின்சாரம் தாக்கி, மயக்கம் போட்டுக் கீழேவிழுந்தார். உடனே அவருடைய மனைவி அவரை மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு போனார். மருத்துவமனையிலோ அவரைச் சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் இறந்துபோய்விட்டதாக அறிவித்தார்கள். இதனால் அந்த நீதிபதியின் மனைவி உட்பட, அவருடைய குடும்பமே துக்கத்தில் ஆழ்ந்தது. நீதிபதி இறந்த செய்தி சிறிதுநேரத்துக்குள் பண்பலைகளிலும் (FM) தொலைக்காட்சிகளிலும் வெளிவரத் தொடங்கி, எல்லாரையும் கவலைக்குள்ளாக்கியது. இதைத் தொடர்ந்து இறந்துபோன அந்த நீதிபதியின் உடலானது, மறுநாள் மின் குமிழில் (Electric Cramotorium) வைத்து எரிக்கப்படுவதற்காகப் பிணவறையில் (Mortuary) வைக்கப்பட்டது.

நள்ளிரவில் திடிரென்று சுயநினைவுக்கு திரும்பிய அந்த நீதிபதி, தான் பெட்டியில் வைக்கப்பட்டு, பிணவறையில் இருப்பதை நினைத்து அதிர்ந்துபோனார். உடனே அவர் வெளியேவந்து, பிணவறையைக் காவல் காத்துக்கொண்டிருந்த காவலாளியிடம், தான் இறக்கவில்லை உயிரோடுதான் இருக்கிறேன் என்று எடுத்துச்சொன்னார். அவரோ தன்னிடம் பேசுவது பேய்தான் என்று நினைத்துக்கொண்டு, அங்கிருந்து அலறியடித்து ஓடினார். இதற்குப் பின்பு அவர் தன்னுடைய மனைவியைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, தான் உயிரோடு இருக்கின்ற செய்தியை அவரிடம் சொன்னார். அவரும் தன்னிடம் பேசுவது பேய்தான் என நினைத்துத் தொடர்பைத் துண்டித்தார். இப்படி அவர் அந்த நள்ளிரவில், நகரில் இருந்த தன்னுடைய நண்பர்கள், தெரிந்தவர்கள் எல்லாருடைய வீட்டுக்கதவைத் தட்டி, தான் இறக்கவில்லை என்பதை அவர்களிடம் எடுத்துச்சொன்னபோதும் அவர்கள் அவர் சொன்னதை நம்பாமல், பேய் என்று நினைத்து, கதவைச் சாத்திவிட்டு உள்ளே சென்றனர்.

இதனால் அவர் பக்கத்து நகரில் இருந்த தன்னுடைய நண்பருக்குத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசினார். அவரோ, இவர் இறந்துவிட்டதாக வந்த செய்தியைக் கேள்விப்படாதவர். அவரிடம் நீதிபதி நடந்த எல்லாவற்றையும் சொல்ல, அந்த நண்பர் நீதிபதியின் மனைவி மற்றும் நண்பர்களைத் தொடர்புகொண்டு உண்மையை எடுத்துச் சொன்னபின்பு அவர்கள் நீதிபதி இறக்கவில்லை உயிரோடுதான் என்று நம்பினார்கள்.

இந்நிகழ்வு, இயேசு உயிர்த்தெழுந்தபின்பு, தன்னுடைய சீடர்களுக்குத் தோன்றியபொழுது, அவர்கள் ஏதோ ஆவியைக் கண்டதுபோல் திகிலுற்றதை (லூக் 24: 37-39) நினைவூட்டுவதாக இருக்கின்றது. ஓர் ஆவியை கண்டதுபோல் திகிலுற்று இருந்தவர்களிடம் இயேசு, “நானேதான்” என்று சொல்லி, அவர்களிடம் இருந்த அவநம்பிக்கையை விளக்கி நம்பிக்கையை ஏற்படுத்துகின்றார். இப்படி உயிர்த்த இயேசு தன்னுடைய சீடர்களுக்குத் தோன்றிய இந்நிகழ்வு நமக்கு என்னென்ன செய்தியை எடுத்துச் சொல்கின்றது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

பயத்திலிருந்த சீடர்களுக்கு அபயம் தந்த இயேசு யூதர்கள், இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொன்றதைப் பார்த்துவிட்டு, எங்கே தங்களையும் அவர்கள் பிடித்துக் கொன்றுவிடுவார்களோ என்று பயந்து, சீடர்கள் தாங்கள் இருந்த அறையின் கதவை மூடிவைத்திருந்தார்கள் (யோவா 20:1) இப்படிப்பட்ட சூழ்நிலையில் இயேசு அவர்களுக்கு முன்பாகத் தோன்றி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என்று வாழ்த்துகின்றார். இயேசு உயிர்த்து, தன்னுடைய சீடர்களுக்குத் தோன்றியபோது, தன்மீது அவர்கள் நம்பிக்கைகொள்ளவில்லை என்றோ, தன்னை விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள் என்றோ அவர்களைத் திட்டவில்லை. மாறாக, ‘அமைதி உரித்தாகுக’ என்ற ஆறுதல் அளிக்கும் வார்த்தைகளைப் பேசுகின்றார். அதுமட்டுமல்லாமல், தூய ஆவியாரை அவர்மேல் ஊதி, தன்னுடைய பணியைச் செய்ய மீண்டுமாக அவர்களை அழைக்கின்றார். இவ்வாறு இயேசு பயந்துகொண்டிருந்த சீடர்களுக்கு அபயம் தந்து – துணிவைத் தந்து – வல்லமையோடு பணியைச் செய்ய வழி வகுக்கின்றார். இந்நிகழ்விற்குப் பிறகு சீடர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்பட்டதைக்கொண்டே இயேசு தன் சீடர்களுக்கு தந்த அபயம், துணிவு எத்துணை உயர்ந்தது என்பதை புரிந்துகொள்ளலாம்.

அவநம்பிக்கையோடு இருந்தவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டிய இயேசு இயேசு உயிர்ந்தெழுந்த செய்தியை இயேசுவின் பெண் சீடர்கள் திருத்தூதர்களிடம் சொன்னபோது, திருத்தூதர்கள் அவர்கள் சொன்னதை நம்பாமல், ஏதோ பிதற்றுகிறார்கள் (லூக் 24: 11) என்று இருந்தார்கள். இப்படி நம்பிக்கை இல்லாமல் இருந்த சீடர்கள் மத்தியில்தான் இயேசு தோன்றி, அவர்கள் அவர்மீது நம்பிக்கைகொள்ளச் செய்கின்றார். மேலும் தோமா சீடர்கள் சொன்னதைக் கேட்டும், அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல் இருந்ததால், இயேசு அவருக்குத் தன்னை வெளிபடுத்தி, “ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்” என்று சொல்ல, அவரும் இயேசுவிடம் நம்பிக்கைகொள்கின்றார். இவ்வாறு அவநம்பிக்கையோடு இருந்த சீடர்களுடைய உள்ளத்தில் நம்பிக்கையை ஊட்டி, அவர்களைப் புதுப்படைப்பாக மாற்றுகின்றார் இயேசு.

இங்கு ஒரு சிறிய தகவல். இயேசு உயிர்த்தெழுந்த செய்தியை மற்ற சீடர்கள் தோமாவிடம் எடுத்துச் சொன்னபோது, அவர் அதை நம்பவில்லை. இந்தத் தோமா அல்லது திதிம் என்றால் இரட்டையர்கள் (Twin) என்று அர்த்தம். தோமாவோடு உடன்பிறந்த சகோதரரைக் குறித்த குறிப்புகள் எங்கினும் இல்லை. இது குறித்து ஒருசில விவிலிய அறிஞர்கள் சொல்லும்பொழுது, தோமோவோடு உடன்பிறந்த சகோதர் நீங்களோ, நானோ இருக்கலாம் என்றும் தோமா எப்படி அவநம்பிக்கையோடு இருந்து, இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டாரோ, அதுபோன்று நாம் ஒவ்வொருவரும் இயேசுவிடம் நம்பிக்கைகொண்டு வாழவேண்டும் என்றும் சொல்வார்கள். ஆகவே, இயேசுவின் சீடர்கள் எப்படி அவர்மீது கொண்டுவாழத் தொடங்கினார்களோ அதுபோன்று நாமும் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு வாழ முயற்சிப்போம்.

சாவிலிருந்து வாழ்விற்கு அழைக்கும் இயேசு இன்றைய நற்செய்தி வாசகம், இயேசு திருத்தூதர்களுக்கு தோன்றி, அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியதோடு நின்றுவிடவில்லை. மாறாக, நாமும் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதற்காக, “இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்கும் நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பட்டுள்ளன” என்ற செய்தியோடு முடிகின்றது. யோவான் நற்செய்தியாளர் தன்னுடைய நற்செய்தி நூலின் வழியாக, இயேசுவை இறைமகன் என ஒவ்வொருவரும் நம்பி ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற செய்தியைத் திரும்பத் திரும்ப வலியுறுத்திக்கூறுகின்றார்.

ஆகையால், இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம் அவர்மீது நம்பிக்கை கொண்டால் வாழ்வு, அவநம்பிக்கை கொண்டால் தாழ்வு என்ற உண்மையை உணர்ந்து, அவர்மீது நம்பிக்கை வைத்து, அதை வாழ்வாக்கி, அவர்தரும் ஆசியைப் பெற முயற்சி செய்வோம்.

சிந்தனை ‘இயேசு ஆண்டவர் என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள்’ என்பார் தூய பவுல் (உரோ 10:9). ஆகவே, நாம் இயேசுவே இறைமகன்/ ஆண்டவர் என்று நம்பி, அவருடைய விழுமியங்களை வாழ்வாக்குவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.sunday homilyA Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com