மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா (இரவில் திருப்பலி)
முதலாம் ஆண்டு

ser

இழந்து போனதைத் தேடி

இருள் நிறைந்த இரவு. பிச்சைக்காரன் ஒருவன் ஓர் ஊருக்குள் உறங்க இடமின்றி அலைகிறான். ஒவ்வொரு வீடாகத் தட்டி, தங்க இடம் கேட்டும் யாவரும் கதவைத் திறக்க முன் வரவில்லை . ஊருக்கு வெளியே ஒரு ஓலை குடிசையில் ஒரு வயது முதிர்ந்தவர். தங்க இடம் கேட்டபோது, தாராளமாக வாரும் என்ற அந்த முதியவர் தான் தூங்கும் இடத்தைப் பிச்சைக்காரனுக்குக் கொடுத்து முதியவர் வெளியே தூங்கினார். காலையில் எழுந்த முதியவர், பிச்சைக்காரன் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து ஒரு கடிதம் மட்டும் தலைமாட்டில் இருப்பதைப் பார்த்தார். பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:

நான் இந்நாட்டு அரசன். மாறுவேடம் பூண்டு வந்தேன். யாரும் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை நீ மட்டும் அன்போடு ஏற்றுக் கொண்டீர். எனவே அரண்மனைக்கு வந்து வெகுமதி பெற்றுக் கொள்ளும்.

அரசர்களுக்கெல்லாம் அரசராம், முடிவில்லா ஆட்சிபுரியும் இயேசு வந்தார். இதைத் தான் தாவீதின் ஊரிலே உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா (லூக்:2:10), என்று வானதூதர்கள் அறிவித்தார்கள். ஆனால் இறை மகன் மண்ணகம் வந்தபோது அவருக்கு உரியவர்களோ அவருக்கு இடம் தரவில்லை (யோவா. 1:11). சாமக்காவல் புரியும் ஒடுக்கப்பட்ட இடையர்கள் தான் வரவேற்கிறார்கள். எனவே இந்த கிறிஸ்மஸ் விழா ஒரு புறக்கணிப்பு விழா.

மனிதன் புறக்கணித்தாலும் இறைவன் நம்மைப் புறக்கணிக்க மாட்டார் என்பதின் வெளிப்பாடாக , அவர் நம்மிடையே குடி கொண்டார் (யோவா. 1:14). இழந்து போனதைத் தேடி மீட்கவே வந்தேன் (லூக். 19:10) என்ற திருவார்த்தை நிறைவு பெறும் விழா எனவே இப்பெருவிழா இறைவனும், மனிதனும் இணைந்த பெருவிழா. தெய்வீக அன்பின் பெருவிழா (எசா.54:10).

உருவமற்ற இறைவன் மனுவுரு எடுக்கிறார். செல்வந்தராய் இருக்கின்ற தெய்வம் வறியவராக, வலிமையற்றவராகப் பிறந்து கிடக்கிறார். எனவே கிறிஸ்மஸ் பெருவிழா முரண்பாடுகளின் விழா . ஆனால் இந்த முரண்பாட்டினுள் முரண்பட்ட மனிதனை உயர்ந்த நிலைக்கு உயர்த்த பெண்ணிடம் பிறந்தவராக வந்தார் (கலா.4:45). எனவே மனிதத்தைப் புனிதமாக்கும் பேரின்பப் பெருவிழா . வானதூதர்கள் அறிவித்தது போல (லூக் 2:10-11) இது நற்செய்திப் பெருவிழா . உலகிற்குப் பகிர்வை வெளிப்படுத்தும், அறிமுகப் படுத்தும் பகிர்வுப் பெருவிழா.

இன்று நாம் என்ன செய்ய வேண்டும்?

 • ஆட்டம், பாட்டம், அலங்கார குடில், புத்தாடை குடி களியாட்டம் என்பதில் அல்ல, மாறாக நம் உள்ளம் என்ற குடிலை எளிமை, தியாகம், அன்பு, மன்னிப்பு, பகிர்வு இவைகளை அணிகலன்களாகக் கொண்டு அலங்கரிக்க வேண்டும்.
 • முறிந்த உறவுகளைச் சரிசெய்யும் காலம் இது. யார் யாரை மன்னிக்க மறுத்து, பழிவாங்கும் நிலையில் இருக்கிறோமோ அவர்களையெல்லாம் மன்னிக்க அழைக்கப்படுகிறோம்.
 • அன்னை மரியாள் அன்பு இயேசுவை நமக்குத் தந்தது போல, திருத்தூதர் பவுல் கிறிஸ்துவை நம்மில் உருவாக்க பேறுகால வேதனை அனுபவித்தது போல (கலா.4:19), நாமும் கிறிஸ்துவை மற்றவருக்கு அறிவிக்கும் சீடர்களாக அர்ப்பணித்து அதனால் வரும் துன்ப துயரங்களை ஏற்கத் தூண்டுகின்ற காலம் இது.
 • தீவனத்தொட்டியிலே கிடந்த இயேசு, (லூக் 2:16) தன்னையே நமக்காக பிட்டுக் கொடுக்க வந்தார். நாமும் நம்மிடம் இருப்பதில் இல்லாதவருக்குப் பகிர்ந்து கொடுக்க வேண்டும். முகவரி இல்லாதவர்களை அரவணைத்து வாழ்வு கொடுக்க அழைக்கப்படுகிறோம். தெருக்களில் அனாதைகளாகக் கிடந்தவர்களையெல்லாம் தூக்கி அரவணைத்து, இயேசுவின் அன்பைக் கொடுத்த அன்னை தெரசா கொண்டாடிய கிறிஸ்மஸ் பெருவிழா நமது விழாவாக அமையட்டும்.
ser ser

என்றும் மகிழ்ந்திருப்போம்

இது இருபத்தோராம் நூற்றாண்டு இன்று மீட்புக்காக ஏங்கித்தவிக்கும் உள்ளங்கள்தான் எத்தனை! எத்தனை!!


வறுமையிலிருந்து மீட்பு வேண்டும்.
நோயிலிருந்து மீட்பு வேண்டும்.
பாவத்திலிருந்து மீட்பு வேண்டும்.
மரணத்திலிருந்து மீட்பு வேண்டும்.
அலைமோதும் ஆசைகளோடு இன்றைய மனிதர்கள் அலைந்து திரிவதைப் பார்க்கின்றோம். உனக்கு மீட்பு அளிக்கின்றேன்; உனக்கு விடுதலை தருகின்றேன். என்னிடம் வா என்று அழைக்கும் வானொலிப்பெட்டி, தொலைக்கட்சி, அலைபேசி, இன்டர்நெட், சினிமா, சி.டி. இவையெல்லாம் ஒருபுறம்! புகைபிடியுங்கள், மது அருந்துங்கள், போதைப் பொருள்களைப் பயன்படுத்துங்கள்; விரும்புவதையெல்லாம் அனுபவியுங்கள்; அப்போது நீங்கள் விரும்பும் விடுதலை உங்களைத் தேடிவரும் என்று விளம்பரம் செய்யும் மனிதர்கள் மறுபுறம்!

ஒரு புறம் நெருப்பு, மறுபுறம் நாகம்! மனிதர்கள் எறும்பாய் தத்தளித்து துரும்பாய்த் தேய்ந்து கொண்டிருக்கும் நிலையை நாம் கண்கூடாய்க் காண்கின்றோம். இப்படிப்பட்ட வாழ்க்கையிலிருந்து நமக்கு மீட்பே கிடையாதா? என ஏங்கும் இதயங்களுக்கு இதம் அளிக்க முதல் வாசகத்தின் வழியாக இறைவாக்கினர் எசாயா ஆறுதல் கூறுகின்றார் : ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார் ; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள் மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ வியந்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும் (எசா 9:6).

எசாயா சுட்டிக்காட்டும் குழந்தை யார் ? இன்றைய நற்செய்தி கூறுவதுபோல, நம் நடுவே பிறந்திருக்கும் ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பரே, இயேசுவே அக்குழந்தை.

இனி நமக்குத் துன்பமில்லை , துயரமில்லை, இன்னலில்லை, இடையூறு இல்லை. புனித பவுலடிகளார் இன்றைய இரண்டாவது வாசகத்தில் குறிப்பிடுவது போல இயேசு உலக மக்கள் அனைவருக்கும் மீட்பளிக்கும் அருளாகச் செயல்படப் பிறந்திருக்கின்றார்.

நாம் இப்போது செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே. நம் நடுவே பிறந்திருக்கும் இயேசுவின் பக்கம் சென்று, அவரது பாதம் பணிந்து அவரது அருளை நாடவேண்டும்.

கிறிஸ்து பிறப்பு விழாக்கள் எத்தனையோ ஓடி மறைந்துவிட்டன! ஆனால் நம் வாழ்க்கை என்னும் பொழுது இன்னும் ஏன் விடியவில்லை?

எகிப்திற்குத் திருக்குடும்பம் ஓடியது பற்றிய கதை ஒன்று உண்டு. இக்கதை இன்னும் ஏன் நாம் விடுதலை அடையவில்லை என்பதற்குப் பதில் சொல்லக்கூடும். யோசேப்பும், மரியாவும் குழந்தை -இயேசுவோடு எகிப்து நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்தனர். திடீரென கொள்ளைக்கூட்டமொன்று அவர்களைச் சுற்றி வளைத்தது. அந்தத் திருடர்கள் கூட்டத்துக்குள்ளே தீஸ்மாஸ் என்னும் ஒரு திருடன் இருந்தான். அவன் அன்னை மரியாவின் தங்கக் கைகளிலே தவழ்ந்த வைரக்குழந்தையைப் பார்த்துவிட்டான். அந்தக் குழந்தையின் அழகில் மனத்தைப் பறிகொடுத்தான். மற்ற திருடர்களைப் பார்த்து : இவர்களை ஒன்றும் செய்யாதீர்கள். இவர்களை விட்டுவிடுங்கள் என்றான்.

எல்லாத் திருடர்களும் தீஸ்மாஸின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர். குழந்தை இயேசுவை விட்டுப் பிரிவதற்கு முன் தீஸ்மாஸ் குனிந்து அந்தக் குழந்தையிடம், என்னை நினைவில் வைத்துக்கொள்; ஒருபோதும் இந்த நேரத்தை மறந்துவிடாதே எனச்சொல்லிச் சென்றான்.

கதையின்படி தீஸ்மாஸ்தான் பெரிய வெள்ளிக்கிழமையன்று இயேசுவின் வலப் பக்கத்தில் சிலுவையில் தொங்கிய நல்ல திருடன்.

அன்றொருநாள் தீஸ்மாஸ் அவருக்கு விடுத்த வேண்டுகோளை இயேசு மறக்கவில்லை. அந்தத் திருடனின் விருப்பத்தைக் கல்வாரியிலே நிறைவேற்றி வைத்தார். லூக் 23:43-இல் நாம் படிப்பது போல இயேசு நல்ல திருடனைப் பார்த்து, நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கின்றேன் என்றார். இன்று குழந்தை இயேசுவைப் பார்த்து நாம் ஒவ்வொருவரும், இயேசுவே என்னை நினைவில் கொள்ளும் என்று சொன்னால் போதும், நம் வாழ்வில் வழி பிறக்கும், ஒளி பிறக்கும், வாழ்வு சிறக்கும்.

இந்தக் கிறிஸ்துமஸ் விழா எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியான விழாவாக அமையட்டும். குழந்தை இயேசுவோடு நாம் பேசுவோம். நாம் அவரோடு பேசி , அவரது ஆசிரை மனமுவந்து கேட்காதவரை அவரின் பிறப்பால் நமக்கு எந்தப் பயனும் விளையப்போவதில்லை.

யோவா 2:1-11 - இல் எல்லாருடைய பெயராலும் அன்னை மரியா உதவி கேட்டபோது கானாவில் அரும் அடையாளம் நிகழ்ந்தது, வறுமை மறைந்தது, மகிழ்ச்சி பிறந்தது.

மத் 9:27 - 31-இல் பிறவியிலிருந்தே பார்வையற்ற இரண்டு மனிதர்கள், தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும் என்று கத்தியபோது, நோய் மறைந்தது, மகிழ்ச்சி பிறந்தது.

லூக் 7:36 - 50-இல் பாவியொருத்தி கண்ணீ ரால் இயேசுவின் கால்களைக் கழுவியபோது, அவளுக்குப் பாவமன்னிப்புக் கிடைத்தது. பாவம் மறைந்தது, மகிழ்ச்சி பிறந்தது.

யோவா 11:1-44-இல் மார்த்தாவும், மரியாவும் அழுததால் இலாசர் கல்லறையிலிருந்து உயிரோடு வெளியே வந்தார். உயிர்ப்பு மலர்ந்தது, மகிழ்ச்சி பிறந்தது.

இதோ அன்று இஸ்ரயேல் நாட்டில் வலம் வந்த இயேசு , இன்று நம் நடுவிலே பிறந்திருக்கின்றார். குழந்தை இயேசுவுக்கு நமது இதயத்தைத் திறப்போம். நமது குறைகளை அவரிடம் எடுத்துச் சொல்வோம். கேளுங்கள் கொடுக்கப்படும் என்ற இறைவன் நம் குரல் கேட்டு, குறை நீக்கி, நமது வாழ்வை


வளர்பிறை போல் வளர வைப்பார்;
வாழைபோல் தழைக்க வைப்பார்;
கரும்பு போல் இனிக்க வைப்பார்;
சந்தனம்போல் மணம் கமழ வைப்பார்;
நாம் என்றும் மகிழ்ந்திருப்போம்.

மேலும் அறிவோம் :

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று  (குறள் : 655).

பொருள் : இழிவான செயல் புரிந்துவிட்டோம் என்று தாமே பின்னர் வருந்தத்தக்க செயலை ஒருவர் செய்யக்கூடாது. ஒருவேளை தவறிச் செய்துவிட்டால் மீண்டும் அப்படிப்பட்ட செயலை ஒருபோதும் செய்யாதிருப்பது சிறந்தது!

ser ser

அவர் திருப்பெயரோ - அமைதியின் அரசர்

இரவில் தூங்கும்போதுகூட ஒருவர் மூக்குக்கண்ணாடி அணிந்திருந்தார். ஏன் என்று அவரைக் கேட்டதற்கு, "இரவில் காணும் கனவு சரியாகத் தெரியவில்லை ' என்றார். நாம் இரவில் மட்டுமல்ல, பகலிலும் கூட கனவு காண்கிறோம். அவற்றில் பெரும்பாலானவை நினைவில் நிற்பதில்லை.

கடவுளும் கனவு காண்கிறார். அவரின் கனவு உலகிற்காக அவர் தீட்டியுள்ள மறைவான திட்டம், கடவுளின் கனவைப் பற்றி இறைவாக்கினர் எசாயா பின்வருமாறு கூறியுள்ளார். 'ஒரு நாடு மற்றொரு நாட்டிற்கு எதிராகப் போர் தொடுக்காது; போர்ப் பயிற்சி அளிக்கப்படமாட்டாது: போர்க்கருவிகள் விவசாயக் கருவிகளாக மாற்றப்படும்" (காண். எசா 2:4). சிங்கமும் செம்மறியாடும் ஒன்றாகப் படுத்துறங்கும் (காண். எசா 2:4),

கடவுளுடைய கனவைத் தமிழ்க் கவிஞர் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், "புதியதோர் உலகம் செய்வோம்; கெட்ட போர் புரியும் உலகத்தை வோரோடு சாய்ப்போம்." கடவுள் தமது கனவை தளவாக்க தமது ஒரே பேறான திருமகன் இயேசு கிறிஸ்துவை இவ்வுலகிற்கு அனுப்பினார். கிறிஸ்துவின் பிறப்புப் பெருவிழாவை இன்று கொண்டாடுகிறோம். இப்பெருவிழாவிற்குரிய வருகைப் பல்லவி கூறுகிறது: "அனைவரும் ஆண்டவரில் அகமகிழ்வோம்! ஏனெனில் நம் மீட்பர் உலகில் பிறந்துள்ளார். விண்ணகம் நின்று உண்மை அமைதி வந்தது இந்தநாள்," எனவே கிறிஸ்துப் பிறப்புப் பெருவிழா அமைதியின் நாள்.

இன்றைய முதல் வாசகம் வழங்கும் செய்தியும் அமைதியின் செய்தி "ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளது ... அவர் திருப்பெயரோ - அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும்" (எசா 9:8). கிறிஸ்துப் பிறப்பின்போது வானகத் தூதர்கள் வையக மாந்தருக்கு வழங்கிய இன்னிசை: "உன்னத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக" (லூக் 2:13-14). நற்செய்தியை அறிவிக்கும்படி அனுப்பப்பட்ட தம் சீடர்களுக்குக் கிறிஸ்து வழங்கிய அறிவுரை: "நீங்கள் எந்த வீட்டுக்குச் சென்றாலும், "இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக' என்று முதலில் கூறங்கள்" (லூக் 10:5), கிறிஸ்து வழங்கிய மலைப் பொழிவின் ஏழாவது பேறு: "அமைதியை ஏற்படுத்துவோர் பேறபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுவா" (மத் 5:9).

கிறிஸ்து அமைதியைப் போதித்ததோடு நிற்கவில்லை. அவர் அமைதியை உருவாக்கினார் என்று திருத்தூதர் பவுல் கூறுகிறார். "கிறிஸ்துவே நமக்கு அமைதி அருள்பவர். அவர் யூத இனத்திற்கும் பிற இனத்திற்கும் இடையே தின்று கொண்டிருந்த பகைமை என்னும் தடைச்சுவரைத் தமது சிலுவையால் தகர்த்து எறிந்து, இரண்டு இனத்தாரையும் ஒன்று சேர்த்தார்" (காண்க எபே 2:11-16).

இன்றைய உலகம் கிறிஸ்து கொண்டுவந்த அமைதியை பரப்பாமல், அழிவுப் பாதையில் சென்று. அணு குண்டுகளையும் ஏவுகணைகயுைம் பெருக்குகிறது. ஒரு பெண் குரங்கு ஒரு குட்டியை ஈன்றதும் அழ ஆரம்பித்தது. "ஏன் அழுகிறாய்?" என்று அதை ஆண் குரங்கு கேட்டதற்கு அது கூறிய பதில்: "நமக்குப் பிறந்துள்ள குட்டியின் முகம் குரங்கு முகம் அல்ல, மனிதன் முகம்," ஆண் குரங்கு அதனிடம், "பயப்டாதே! காலப்போக்கில் தமது முகம் வந்துவிடும்" என்று கூறி அதற்கு ஆறுதல் அளித்தது.

இன்றைய மனிதன் மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயர்வதற்குப் பதிலாக, மனித நிலையிலிருந்து மிருக நிலைக்குத் தாழ்ந்து போய்க்கொண்டிருக்கின்றான். இவ்வாறு சென்றால் என்ன நடக்கும் என்று திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "நீங்கள் ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குவதை நிறுத்தவிட்டால், ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள். எச்சரிக்கை " (கலா 5:15),

மதம்பிடித்து ஓடிய யானைகூட வழியில் ஒரு பச்சிளம் குழந்தையைக் கண்டு, அதை முகர்ந்து அதன் பக்கத்தில் படுத்துக்கொண்டது. குழந்தையின் முல்லைச் சிரிப்பால் மனிதருடைய மூர்க்ககுணம் தவிடுபொடியாகிவிடுகிறது. அப்படியிருக்க, பாவன் இயேசுவின் முகத்தைக் காணும் நாம். நம் உள்ளத்தில் பகைமையையும் பழிவாங்கும் உணர்வையும் தக்கவைப்பது முறையா? இன்று குழந்தை இயேசு நம்மிடம் கேட்பது ஒருவர் ஒருவரோடு ஒப்புரவு ஆகுங்கள்." கணவரும் மனைவியும், பெற்றோரும் பிள்ளைகளும், மருமகளும் மாமியாரும், ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் ஒப்புரவு ஆக வேண்டும்.

ஒரு கணவர் பங்குக் குருவிடம், 'எனது மனைவியை அடக்குவது எப்படி? என்று சொல்லிக் கொடுங்கள்" என்று கேட்டதற்கு, பங்குக்குரு அவரிடம், "அது தெரிஞ்சா நான் என் சாமியார் ஆனேன்" என்றாராம். பிறரை அடக்குவது எப்படி என்று கிறிஸ்து நமக்குக் கற்றுத்தரவில்லை . மாறாக, நமக்கு எதிராக குற்றம் புரிகின்றவரை ஏழு எழுபது முறை மன்னிப்பது எப்படி என்றும் (மத் 18:22) வலக்கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தைக் காட்டுவது எப்படியென்றும் (மத் 5:39) கற்றுத் தந்துள்ளார்.

கிறிஸ்து பிறப்பதற்கு அன்று விடுதியில்கூட இடமில்லை (லூக் 2:7), 'கிறிஸ்து தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை ' (யோவா 1:11), இத்தகு கசப்பான நிகழ்வு இன்றும் ஒரு தொடர் கதையாக நீண்டுகொண்டு போகிறது. கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ள மறுக்கமாட்டார். ஆனால் நாம் கடவுளை ஏற்றக்கொள்ள மறுக்கிறோம்.

கிறிஸ்து அழகான குடிலில் பிறப்பதைவிட நமது உள்ளத்தில் பிறக்க விரும்புகிறார். நாம் நமது இதயக் கதவைத் திறந்தால், அவர் உள்ளே வருவார். நம்முடன் விருந்துண்பார் (திவெ 3:20).

கிறிஸ்துவுக்கு நாம் உதவி செய்யவேண்டுமென்றால், எழைகளுக்கு உதவி செய்ய வேண்டும். ஏனெனில் சிறிய சகோதர சகோதரிகளுக்கு நாம் செய்வதையெல்லாம் கிறிஸ்துவுக்கே செய்கிறோம் (மத் 25:49). இன்று சிறப்பாகத் தெருவோரச் சிறுவர்களுக்கு உதவி செய்வோம்.

கிறிஸ்து பிறப்பதற்கு தம் உள்ளத்தில் இடமுண்டா? அவர் கொண்டுவந்த அமைதியின் தூதுவர்களா நாம்? ஏழை எளியவர்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்றோமா? இக்கேள்விகளுக்கு நாம் கூறும் பதிலைப் பொறுத்தே நமது கிறிஸ்து பிறப்பு விழா பொருளுடையதாக அமையும். கிறிஸ்து பிறப்பு பெருவிழா இனிய நல்வாழ்த்துகள்!

ser ser

கடவுள் நம்மோடு! நாம் யாரோடு?

சிறில் ஈகன் என்பவர் அமெரிக்கக் கவிஞர். 1963ல் அமெரிக்கா என்ற இதழில் “ஒருவகைச் செபம் - a kind of prayer" - என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது.

போகிற இடமெல்லாம் ஒருவர் எதையோ தேடிக் கொண்டே போகிறார். தேடுதல், தேடுதல், தேடுதலே அவரது வேலையாக, வேட்கையாக இருக்கிறது. ஒருநாள் அவரைச் சந்தித்த - எதிரில் வந்த வழிப்போக்கர் “என்ன தேடுகிறீர்கள்?” என்று கேட்கிறார். “கடவுளைத் தேடுகிறேன்” என்று சொல்லிவிட்டு, அடுத்தவரைப் பேச விடாமல் தொடர்கிறார்: “உனது உள்ளத்திலேயே கடவுளைக் காணலாமே என்று சொல்லாதீர்கள் (ஒரு வகையில் அது உண்மையே என்றாலும் கூட) உன் அயலானில் கடவுளைக் காணலாமே என்று சொல்லாதீர்கள் (ஒரு வகையில் அதுவும் உண்மையே தான்) மனிதனின் ஐம்புலன்களையும் ஊடுருவக் கூடிய கடவுளையே, ஐம்புலன்களுக்குள் அடங்கும் பருப்பொருளான பரம் பொருளையே நான் தேடிக் கொண்டிருக்கிறேன்”. அதாவது பார்த்துத் தொட்டு அறியக் கூடிய கடவுளை அவர் தேடிக் கொண்டிருக்கிறாராம்.

இத்தகைய கடவுளைத் தாம் கண்டதாகத் தூய யோவான் எப்படியெல்லாம் பெருமிதம் கொள்கிறார்! “தொடக்க முதல் இருந்த வாழ்வு அளிக்கும் வாக்கை நாங்கள் கேட்டோம். கண்ணால் கண்டோம். உற்று நோக்கினோம். கையால் தொட்டுணர்ந்தோம்”. (1 யோ.1:1) என்பது தானே யோவானின் சாட்சியம்! இயேசுவின் நெஞ்சில் சாய்ந்து அதன் இதயத் துடிப்பிலே தன்னை இழந்த அனுபவம் இது. அப்படியானால் அன்னை மரியா தன் வயிற்றில் தன் சதையின் சதையாகக் கருவாகச் சுமந்த அனுபவம் எப்படி இருந்திருக்கும்? தோமாவைக் கூட 'இதோ என் விலா.... உன் விரலை இடு' என்று அழைத்தார் என்றால் சந்தேகம் தீர மட்டுமா? தெய்வீகத்தைத் தொடும் மெய்சிலிர்க்கும் அனுபவத்தைக் கொடுக்கவும் அன்றோ !

உரோமை சிஸ்டர்சியன் ஆலய உள்முகட்டில் - உச்சி முகட்டில் கடவுள் படைப்புப் பற்றிய மைக்கிள் ஆஞ்சலோவின் வியக்க வைக்கும் அற்புத ஓவியங்கள். ஜெர்மானியக் கலைஞர் ஒருவர் மேலே நிமிர்ந்து மெய்மறந்து பார்த்துக் கொண்டே இருந்தார். பைத்தியமான, வெறியான இரசனை. பசி நோக்காத, உடல் வருத்தம் பாராத, கண் சோர்வு காணாத, கழுத்து நோவு உணராத இரசனை. இதனைக் கண்ட ஒரு சுற்றுலாப் பயணி பரிவோடு அருகில் சென்று ஒரு மேசையை இழுத்துப் போட்டு அதன்மீது ஒரு கண்ணாடியைச் சரிவாகச் சாய்த்து வைத்து அதில் பிரதிபலித்த ஓவியத்தைக் குனிந்து பார்த்து மகிழுமாறு சொன்னார்.

தொலைவில் இருந்த காட்சி இப்போது மிக அருகில். சிரமப்பட்டு பார்த்த காட்சி இப்போது மிக எளிதில். இதுகூட நிழலே. ஆனால் இறைவனைப் பொருத்தவரை எவ்வளவு உண்மை!

மறையுரை மேதை புல்டன் ஷீன் ஆண்டகை பழைய ஏற்பாட்டை வானொலியோடும் புதிய ஏற்பாட்டைத் தொலைக் காட்சியோடும் ஒப்பிட்டுச் சிந்திப்பார். பழைய ஏற்பாட்டில் கடவுளின் வார்த்தையைக் கேட்க முடியும் - கேட்க மட்டுமே முடியும். புதிய ஏற்பாட்டிலோ அந்த வார்த்தை மனித உடல் எடுத்ததை வண்ண வண்ண நிறத்தில் பார்க்க முடியும். இது மனிதனை நோக்கிய கடவுளின் அசுரத்தாவல், “என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்" (யோ.14:9) என்றார் இயேசு. இயேசுவே நிறைவான இறைவெளிப்பாடு. அறியவும் நம்பவும் வேறென்ன வேண்டும் நமக்கு?

கடவுள் நம்மோடு என்பதை மட்டுமல்ல. கடவுள் நம்முள் என்பதை வெளிப்படுத்துவதே உண்மையான கிறிஸ்மஸ் பெருவிழா. மனிதமும் புனிதமும் இயேசு பாலனில் உருக்கொண்டது, ஒன்றிணைந்தது. புனிதம் மனிதமானது என்பது இறைவனின் முயற்சி. மனிதம் புனிதமாவது என்பது மனிதனின் முயற்சி. மனிதர்களாகிய நாம் புனிதமான வாழ்வு வாழ குழந்தை இயேசுவின் அருளோடு வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம். பாதை கடினமானதுதான் ஆனால் பயணம் புனிதமானது!

மனிதனைக் கடவுளாக்கக் கடவுள் மனிதனானார் என்பார் தூய அகுஸ்தீனார்.

பனிக்கட்டியையும் தண்ணீரையும் ஒன்று சேர்க்க வேண்டுமானால் பனிக்கட்டி தண்ணீராக மாற வேண்டும் அல்லது தண்ணீர் பனிக்கட்டியாக மாற வேண்டும்! அருவமாகிய ஆண்டவனை நாம் அடைய வேண்டுமென்றால் அவர் உருவமாக மாற வேண்டும் அல்லது நாம் அருவமாக மாற வேண்டும்! நாம் அருவமாவது அவ்வளவு எளிதான செயல் அன்று. ஆகவே ஆண்டவன் நம்மீது இரங்கி உருவமாகி அருள்தருகிறார்!!

“உலகில் ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும் கடவுள் இந்த உலகைத் தொடர்ந்து அன்பு செய்ய மறக்கவில்லை என்பதைத் தெரிவிக்கின்றது” என்றார் தாகூர். சாதாரணக் குழந்தைகளின் பிறப்பே கடவுளின் அன்பைப் பறைசாற்றுகிறது என்றால், இயேசுவின் பிறப்பு, கடவுளின் அன்பு எவ்வளவு உயர்ந்தது, ஒப்பிட முடியாதது என்பதை எப்படியெல்லாம் எடுத்துக்காட்டும்!”.

இயேசு பிறப்பு விழாவால் நமக்கு எத்தனை பெருமைகள்! இது நம்மில் ஒருவராகி நம்மிடையே குடிகொள்ளும் இம்மானுவேலின் விழா! அன்றாட வாழ்வின் சலிப்பினிடையே புதுத்தெம்பூட்டி நம்மை மகிழ வைக்கும் விடுதலை விழா! படைப்பின் இறுதிக் கட்டமாகிய புதிய வானம் புதிய பூமியின் அரங்கேற்ற விழா! இறைவனுக்கு மகிமையும் நல்மனத்தோருக்கு அமைதியும் தரும் ஆனந்த விழா!

தேடிவரும் தெய்வம் இயேசு பிறந்த இனிய நாளில்
அன்பு ஆளட்டும்! அமைதி வாழட்டும்!
புதுமை தவழட்டும்! புனிதம் கமழட்டும்!
இன்பம் பொழியட்டும்! இதயம் குளிரட்டும்!
வார்த்தை பிறக்கட்டும்! வாழ்வு மலரட்டும்!

 

ser ser

 

 

கிறிஸ்து பிறப்பு பெருவிழா

கடவுள் மனுக்குலத்தோடு எடுத்த செல்ஃபி

கடவுள் யார்?

செல்ஃபி என்றால் என்ன?

மனுக்குலம் என்றால் யார்?

இயேசுவின் பிறப்பு முக்கியத்துவம் பெறுவது ஏன்?


 1. கண்களால் பார்ப்பதை விடுத்து மனத்தால் பார்ப்பது

 2. முன்புறத்தோடு பின்புறத்தையும் பார்ப்பது

 3. பொருள்களைப் பார்க்காமல் மனிதர்களைப் பார்ப்பது

 4. நீங்கள்தான் உங்கள் மகிழ்ச்சியின் பொறுப்பாளர்

 5. இன்னும் கொஞ்சம் சேர்ந்து நடங்கள்
மற்றொன்று...

அயர்லாந்து நாட்டில் ஒரு டிசம்பர் மாதம். குளிர்காலம். மாலை நேரத் தேநீரைக் குடித்துக்கொண்டிருக்கிறார் ஒரு பெண்மணி. திடீரென அழைப்பு மணி ஒலிக்கிறது. யார் வந்திருப்பார்கள்? என்று கதவின் துவாரம் வழியே பார்க்கின்றார். வாசலில் ஒரு சிறுவனும், சிறுமியும் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்தாலே 'ஏழைச் சிறுவர்கள்' என்று சொல்லிவிடலாம். ஏனோ, தானோவென்ற ஆடை, அழுக்குப்படிந்த முகம், சிக்கு விழுந்த தலை. 'என்ன வேண்டும்?' - 'உங்கள் வீட்டில் பழைய நியூஸ்பேப்பர் இருந்தால் கொடுப்பீர்களா?' - 'ஏன்?' 'ரொம்ப பனி பெய்கிறது. குளிர் அதிகமாக இருக்கிறது. இந்தப் பனியில் நடப்பதற்காக பழைய செய்தித்தாள்களை நாங்கள் எங்கள் பாதங்களில் கட்டிக்கொள்வோம். எங்கள் ஆடைகளுக்குள்ளும் வைத்து குளிர்போக்கிக்கொள்வோம்'. அந்தப் பெண்மணி குனிந்து அவர்களின் பாதங்களைப் பார்க்கின்றாள். அவர்கள் பாதங்களில் கட்டியிருந்த பழைய செய்தித்தாள்கள் பனியில் நனைந்து கிழிந்துகொண்டிருந்தன. விரைவாக அவர்களை வீட்டிற்குள் அழைக்கின்றாள் அவர்களை சோஃபாவில் அமரச் செய்துவிட்டு அவர்களுக்கு தேநீர் கொண்டு வருகின்றாள். தேநீர்க் கோப்பையைக் கையில் எடுத்தவுடன் சிறுவன், 'அம்மா, நீங்கள் பணக்காரரா?' என்று கேட்கின்றான். அந்தப் பெண்மணி, 'எப்படிக் கேட்கிறாய்?' என, சிறுவன் சொல்கிறான், 'பணக்காரர்கள் வீட்டில்தான் கப்பும், சாசரும் மேட்ச்சாக இருக்கும்' என்கிறான். அப்போதுதான் அந்தப் பெண்மணிக்குத் தோன்றுகிறது: 'மற்றவரிடம் இல்லாத பல தன்னிடம் இருக்கிறது. அதை நான் உணராமல் அன்றாடம் என் குறைகளையே நினைத்து புலம்புகிறேனே' என்று. தன் வீட்டில் இருந்த குழந்தைகளின் பழைய காலணிகளை அவர்களுக்குக் கொடுத்து, ஆடைகளும் கொடுத்து அனுப்புகின்றாள். கதவை அடைத்து விட்டு உள்ளே வந்து அவர்கள் விட்டுச் சென்ற தேநீர்க் கோப்பையை எடுத்துப் பார்க்கின்றாள். ஆம். அது மேட்ச்சாக இருந்தது. சோஃபாவின் அருகில் அந்தச் சிறுவர்களின் காலடித்தடங்கள் பழைய நியூஸ்பேப்பரின் ஈரத்தோடு ஒட்டியிருக்கின்றன. அதைத் துடைக்காமல் அப்படியே விடுகின்றாள்.

இரண்டாயிரத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பெத்லகேம் மாடடைக்குடிலில், ஒரு குளிர் இரவில் தன் பிஞ்சுப் பாதங்களைப் பதித்த பாலஸ்தீனத்தைக் குழந்தையும் நமக்கு இதைத்தான் நினைவுபடுத்துகின்றது: 'நாமெல்லாம் செல்வந்தர்கள்'. 'அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்' (2கொரி 8:9). இறைவனின் பாதப்பதிவுகள் மனுக்குலத்திற்குச் சொந்தமான நாள் இந்நாள். காலங்களையெல்லாம் கடந்த கடவுள் மனித நேரத்திற்குள் நுழைந்த இரவு இந்த இரவு. பெயர்களையெல்லாம் கடந்த இறைவன் இம்மானுவேல், இயேசு என்று பெயர் பெற்ற நாள் இந்த நாள். இந்தப் பாதச்சுவடுகள் நம் உள்ளங்களிலும், இல்லங்களிலும் பதிய வேண்டும் என்று குடில் ஜோடித்து அழகு பார்க்கின்றோம். அவரது பிறப்பை அடையாளம் காட்டிய நட்சத்திரம் நமக்கும் நல்வழி காட்ட வேண்டும் என ஒளியால் அலங்கரித்துள்ளோம். கீழ்த்திசை உதித்த ஆதவனாய், பாவம் போக்க மனுவுரு எடுத்த நம் மன்னவனின் ஒளி அகஇருள் போக்கி நிறைஒளி தர வேண்டிநிற்கின்றோம். 'வார்த்தை மனிதரானார். நம் நடுவே தன் காலடிகளைப் பதித்தார்' (யோவா 1:18).

'நற்செய்தி அறிவிப்பவரின் பாதங்கள் எத்துணை அழகானவை' (எசா 52:7) என்று எசாயா முன்னுரைத்தது இன்று நிறைவேறுகின்றது. இந்த நற்செய்தி அறிவிப்பவர் இயேசுவே. அவர் கொண்டு வந்த நற்செய்தி அன்பு, மகிழ்ச்சி, அமைதி, நம்பிக்கை. 'நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா?' (எசா 63:1) என்று வேட்கை கொண்ட எசாயா இஸ்ராயேல் மக்களின் எதிர்பார்ப்பை எடுத்துரைக்கின்றார். இயேசுவின் பிறப்பு மட்டுமல்ல, அவரது பணிவாழ்வும் கூட அவர் இம்மண்ணுலகில் காலூன்றி நின்றதை நமக்குக் காட்டுகின்றது. பாவியான ஒரு பெண் அவரது காலடிகளில் கண்ணீர் வடிக்கின்றார் (லூக் 7:38). மீன்பாட்டைக் கண்டவுடன் சீடர்கள் இயேசுவின் காலடிகளில் விழுகின்றனர் (மாற் 5:22). திருமுழுக்கு யோவான் இயேசுவின் காலடிகளைத் தொடக்கூடத் தகுதியில்லை எனத் தம் வெறுமையை ஏற்றுக்கொள்கின்றார். தொழுகைக்கூடத் தலைவர் யாயீர் காலடிகளில் பணிகின்றார் (மாற் 5:33). சக்கரியாவும் தனது பாடலில் 'நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும், இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகின்றது' (லூக் 1:79) என்று பாடுகின்றார். தன் இறுதி இராவுணவில் தம் சீடர்களின் காலடிகளைக் கழுவியதோடு மட்டுமல்லாமல் அதையே அவர்களும் செய்ய வேண்டும் எனக் கட்டளையிடுகின்றார் (யோவா 13:14). இயேசுவின் காலடிகளைப் பற்றி விவிலியம் பேசும் இடத்திலெல்லாம், மனுக்குலத்தில் அவர் வேரூன்றி நின்றதுதான் வெளிப்படுகின்றது.

கிறிஸ்து மனுக்குலத்தில் காலூன்றிய இந்த நிகழ்வு நமக்கு மூன்று பாடங்களைக் கற்பிக்கின்றது:
 • உடனிருப்பு. இறைவன் மனுக்குலத்தோடு உடனிருக்க இறங்கி வருகின்றார். பழைய ஏற்பாட்டு காலத்திலிருந்து இறைவன் உடனிருக்கும் இறைவனாகவே மக்கள் நடுவே திகழ்கின்றார். இறைவன் நம்மோடு உடனிருக்கிறாரெனில், நாம் ஒருவர் மற்றவரோடு உடனிருக்கின்றோமா? நம் உடனிருப்பு மற்றவரின் பிரசன்னத்திற்கு அழகு சேர்க்கின்றதா? அல்லதா அழித்து விடுகின்றதா?
 •  வாழ்வில் வேரூன்றல். இன்றைய பல தீமைகளில் மிகக் கொடுமையானது 'நம்பிக்கையிழப்பது.' தோல்வியைவிட, தோல்வியைக் குறித்த பயம்தான் நம்மை அதிகமாக பயமுறுத்துகின்றது. கடவுள் மனிதவுரு ஏற்றார். மனிதம் மேன்மையானது. மனிதம் சார்ந்த அனைத்தும் வாழ்வு தருவது. ஆகையால், எதையும் துணிச்சலோடு எதிர்கொள்தல் அவசியம். நம் இறைவன் நாம் அழிவுற நினைக்கும் இறைவனல்லர். நம் வாழ்வு ஒரு கொடை. அந்தக் கொடையைப் பெறுதலே பெரிய பாக்கியம். அதில் மகிழ்வோம்.
 • பிரிவினைகள் அழிந்தன. இறைவன் - மனிதன், ஆண் - பெண், வளமை – வறுமை, நிறைவு – குறைவு என்று மனிதர் வைத்திருந்த அனைத்துப் பிரிவினைகளும் இயேசுவின் பிறப்பில் அழிந்தன. வலுவற்றதை வல்லமை தழுவிக் கொண்டதால் அனைத்துமே வல்லமை பெற்றது. நம் நடுவில் அவர் காலடிகளைப் பதித்தார். விண்ணகத்தில் நாம் கால்பதிப்பதும் அரிதன்று.
இன்னும் ஒன்று...

பிரபல தமிழ் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், 'துறவியும் மீனும்' என்ற ஐந்து நிமிட ஜென் குறும்படத்தைப் பற்றித் தன் வலைப்பக்கத்தில் எழுதுகின்றார்: 'புத்த மடாலயம் ஒன்றில் ஒரு நீர்த்தேக்கம் இருக்கிறது. ஒருநாள் ஒரு புத்த பிக்கு அதில் அழகாக நீந்திக் கொண்டிருக்கும் ஒரு மீனைப் பார்க்கிறான். உடனே அதைப் பிடிக்க வேண்டும் என நினைத்து ஒரு தூண்டில் எடுத்து வந்து மீன்மேல் வீசுகிறான். மீன் தப்பி ஓடுகிறது. பின் வலையை விரிக்கிறான். வலையிலும் அது விழவில்லை. இரவெல்லாம் அவனுக்குத் தூக்கமேயில்லை. அந்த மீனை எப்படிப் பிடிப்பது என சிந்தித்துக் கொண்டே இருக்கிறான். அடுத்த நாள் தன் நண்பர்களிடம் அதைப்பற்றியே பேசுகிறான். மீன் பிடிப்பது எப்படி? என்று புத்தகங்களைத் தேடிப் படிக்கிறான். ஆனால் அவனால் மீனைப் பிடிக்கவே முடியவில்லை. அம்பு விட்டு;ப் பார்க்கிறான். உள்ளே இறங்கி அதை விரட்டிப் பிடிக்கப் பார்க்கிறான். முடியவேயில்லை. இறுதியாக, மீனைப் பிடிக்க நினைப்பது முட்டாள்தனம், அதன் போக்கில் நாமும் கலந்துவிட வேண்டும், அதுவே மீனைப் புரிந்துகொள்ளும் வழி என நினைத்து மீனோடு நீந்துகிறான். அவனும் மீனும் நெருக்கமாகி விடுகிறார்கள். மீன் அவனோடு சேர்ந்து நீந்துகிறது. துள்ளுகிறது. இருவரும் ஒன்றாக முடிவற்ற புள்ளியை நோக்கி மகிழ்ச்சியாக வானில் தாவி மறைகிறார்கள்'.

இறைமை மனிதத்தோடும், மனிதம் இறைமையோடு கைகோர்த்துக்கொண்ட ஒரு அற்புத நிகழ்வே கிறிஸ்துமஸ். முதல் கிறிஸ்துமஸ்! காலண்டரில் குறிக்கப்படவில்லை. பலூன்கள் ஊதப்படவில்லை. நட்சத்திரங்கள் கட்டப்படவில்லை. வானவேடிக்கை இல்லை. விடுமுறை இல்லை. வாழ்த்து அட்டைகள் பரிமாறப்படவில்லை. கேக்குகள் இல்லை. கேரல்ஸ் இல்லை. ஸ்வீட்ஸ் இல்லை. யாருமே எதிர்பார்க்கவில்லை. 'பழைய ஏற்பாட்டின் எல்லாப் பக்கங்களிலும் அவர் நிழல் தெரிந்தது. யாரும் அவர் வருவதைக் கண்டுகொள்ளவேயில்லை. யாரும் எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத விதத்தில் இறைமை மனிதத்தைத் தழுவிக் கொண்டது.

மரியாள், வானதூதர், பெத்லகேம், அகஸ்டஸ் சீசரின் கணக்கெடுப்பு, ஏரோதின் பொறாமை, 'இடம் இல்லை' என்று சத்திரத்தில் தொங்கிய 'போர்டு', வானதூதர்கள், இடையர்கள், கீழ்த்திசை ஞானியர், நட்சத்திரம், ஒட்டகம், மாடு, கழுதை, குகை என எண்ணற்றவைகளை நாம் கேட்டுவிட்டோம். இவைகளைப் பற்றிச் சொல்லத் தொடங்குமுன் இவை என்னவென்று நமக்குத் தெரியும். இன்று நாம் எவ்வளவு கேட்டாலும் நாம் கேட்பது போலக் கேட்கின்றோம். 'அதிகமாகக் கேட்டல்' அலுப்புத் தட்டுகிறது.

'துணிகளில் குழந்தையைச் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அடையாளம்.' (லூக் 2:12) இந்த வார்த்தைகளை மட்டும் இன்று சிந்திப்போம். 1) துணிகளில் சுற்றி, 2) தீவனத் தொட்டியில், 3) கிடத்தியிருப்பது என்ற இந்த மூன்று அடையாளங்களும் நமக்குச் சொல்வது இதுதான்:

கண்ணால் காண முடியாத இறைவன் கண்ணால் காணும், நாவால் ருசிக்கும், கையால் தொடும், மூக்கால் நுகரும், காதால் கேட்கும் வகையில் கைக்கெட்டும் துரரத்தில் கால் பதிக்கின்றார் கடவுள்.
ser ser ser

sunday homily


முகப்பு பக்கம்
வத்திக்கான் வானொலி
கத்தோலிக்க இதழ்கள்
ஞாயிறு வாசகம்
விருந்தினர் பக்கம்
உம் வாக்கே விளக்கு!
சென்னை பங்குதலங்கள்
நூலகம்
திருத்தலச் சுற்றுலா
தவக்கால சிந்தனைகள்
ஒலியும் ஒளியும்
அன்னை தெரேசா
கிறிஸ்மஸ் மலர்கள்
பொங்கல்
செபமாலை
பாடல்கள்
செபமே ஜெயம்A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com