மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலம் முப்பத்தி மூன்றாம் ஞாயிறு
மூன்றாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
மலாக்கி 4: 1-2a | 2 தெசலோனிக்கர் 3: 7-12 | லூக்கா 21: 5-19

வில்லியம் மில்லர் என்ற பிரிவினை சபைப் போதகர் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். 1843ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி முதல் 1844ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதிக்குள் உலகம் அழியும் என்றார். ஆயிரக் கணக்கானோர் இந்தப் போதனையைக் கேட்டு நிலபுலன்களை விற்று, வீட்டையும் விற்று செலவு செய்து அந்த நாளுக்காகக் காத்திருந்தனர். ஆனால் அவர் சொன்னதுபோல ஒன்றும் நடக்கவில்லை .

இதேபோல் எத்தனையோபேர் உலகம் முடியும் என்றும், சீக்கிரம் இயேசு வருவார் என்றும் போதித்தனர். போதித்தும் வருகிறார்கள். ஏன் புனித பவுல் அடிகளார் காலத்திலே, தெசலோனிய மக்கள் தொடங்கிவிட்டார்கள். இஸ்ரயேல் மக்களைப் பொறுத்தவரையில் எருசலேம் ஆலயம் அழிவு உலகத்தின் முடிவுக்கு அடையாளம். எனவேதான் இயேசு எருசலேம் அழிவை முன்னறிவித்தபோது உலகமும் முடிவுக்கு வரும் என்று யூதர்கள் நம்பினார்கள்

உலகம் முடியும் என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது. அந்த நாளையும், வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர (மாற்கு 13:32) மகனுக்கோ , விண்ண கத் தூதர்களுக்கோ கூடத் தெரியாது. "இதோ சூளையைப்போல் எரியும் அந்த நாள் வரும்" என்கிறார் இறைவாக்கினர் மலாக் (முதல் வாசகம்). போர்க்குழப்பங்களையும், குழப்பங்கள் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள். ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது. பல இடங்களில் பஞ்சமும், கொள்ளை நோயும் ஏற்படும். அச்சுறுத்தக் கூடிய பெரிய அடையாளங்கள் வானில் தோன்றும் (லூக். 21:9-12) என்கிறார் இயேசு (மூன்றாம் வாசகம்).

இயேசுவின் வருகைக்காக நாம் செய்ய வேண்டியவை:
1. நிகழ்காலத்தில் வாழ வேண்டும் ஆண்டவரின் நாள் எப்போது வரும் என்று தெரியாத காரணத்தால் நாம் மனப்பக்குவத்துடன் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நாளை மனம் திரும்பிக் கொள்ளலாம், அடுத்த வாரத்தில் புதிய வாழ்வு வாழலாம், பின்னால் ஆண்டவரைத் தேடிக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவதுதான் மடமை, முட்டாள் தனம். மூடி (Moodi) என்ற உலகப் புகழ் பெற்ற போதகர் எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பார். இதன் இரகசியம் என்ன? என்று கேட்டபோது, "நான் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த மறையுரையை முடிக்கும் முன்பே ஆண்டவர் வந்தாலும் வந்து விடுவார் என்ற மனநிலையோடு வாழ்கிறேன்" என்றாராம். விழிப்பாக இருங்கள், அந்த நேரம் எப்போது வரும் என்று தெரியாது (மாற். 13:33).

2. கடின உழைப்புத் தேவை
புனித பவுல் அடிகளாரின் போதனையைக் கேட்ட தெசலோனிக்கிய மக்களில் சிலர் உழைப்பதை விட்டு விட்டு, இயேசுதான் விரைவில் வரப்போகிறாரே பின் ஏன் உழைக்க வேண்டும் ? கடின உழைப்பு உழைக்கத் தேவையில்லை என்று திருச்சபையின் பொதுச் சொத்தில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தனர். இப்படிப்பட்ட மக்களுக்குச் சாட்டையடி கொடுக்கும் வகையில் தான் இந்த இரண்டாம் திருமுகத்தை எழுதுகிறார் புனித பவுல். உழைக்க மனமில்லாதவன் எவரும் உண்ணலாகாது. ஒழுங்காகத் தங்கள் வேலையைச் செய்து, தாங்கள் உண்ணும் உணவுக்காக உழைக்க வேண்டும் என்றார் (இரண்டாம் வாசகம்).

3. சான்று பகரக்கூடிய வாழ்வு உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள். என் பெயரின் பொருட்டு அரசரிடமும், ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள், சிறையில் அடைப்பார்கள் (லூக். 21:12-13). இவை எனக்குச் சான்று பகர உங்களுக்கு வாய்ப்பளிக்கும் என்கிறார் இயேசு. ஆண்டவருக்குச் சான்று பகரும் வாழ்வு வாழ்ந்தோம் என்றால் நாம் வாழ்வின் நாளை எதிர்நோக்கி இருப்போம். இல்லையென்றால் அந்த நாள் அழிவு நாளாகத்தான் இருக்கும். எனவே ஆண்டவரின் வருகையை எதிர்பார்த்திருக்கும் நீங்கள் மாசுமறுவற்றவர்களாய் நல்லுறவு கொண்டவர்களாய் காணும் வகையில் முழு முயற்சி செய்யுங்கள் (2பேதுரு :3:10-14) என்று கூறுகிறார் திருத்தூதர் பேதுரு .

ser

இயேசுவே, எங்களுக்கு ஞானத்தைத் தாரும்

இன்றைய நற்செய்தியிலே இயேசு நமக்கு ஞானத்தைத் தருவதாகக் கூறுகின்றார். இயேசு வாக்கு மாறாதவர். ஆகவே நம் நல்வாழ்விற்குத் தேவையான ஞானத்தை இயேசுவிடம் கேட்போம்.

இதோ ஞானம் என்றால் என்ன? என்பதைச் சுட்டிக் காட்ட ஒரு நிகழ்வு

பெரிய ஞானி ஒருவர் ஒரு காட்டுக்குள்ளே வாழ்ந்து வந்தார். அவரிடம் ஞானம் பெறச் செல்கின்றவர்கள் ஐந்து ஆண்டுகள் அவர் சொல்லும் பாடத்தைக் கவனிக்க வேண்டும். இது ஒரு நிபந்தனை.

அவரிடம் அந்த சமயத்தில் ஐம்பது சீடர்கள் இருந்தார்கள். அன்று ஐந்து வருடங்களின் கடைசி நாள். மறு நாள் சீடர்கள் வீட்டுக்குச் செல்லும் நாள்.

ஞானம் பெற்றுவிட்டீர்களா? என்று குரு சீடர்களைப் பார்த்துக் கேட்டார். எல்லாரும், கடந்த ஐந்து ஆண்டுகளாக கற்க வேண்டிய அனைத்தையும் உங்களிடமிருந்து கற்றுக்கொண்டோம் என்றார்கள். குரு , உங்களைச் சோதித்துப் பார்க்கலாமா? என்றார். சீடர்கள், நிச்சயமாக என்றார்கள்.

குரு அவர்களைப் பார்த்து, இரண்டுபேர் ஒரு சாலையின் வழியாக சென்றுகொண்டிருந்தார்கள் ! திடீரென மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. இருவரில் ஒருவர் மட்டும் நனைந்தார். இன்னொருவர் நனையவில்லை. அது எப்படி? என்றார்.

சீடர்களிடமிருந்து பலவிதமான பதில்கள் வந்தன ! சிலர், ஒருவரிடம் குடை இருந்திருக்கும் என்றனர். யாரிடமும் குடையில்லை என்றார் குரு. சிலர், ஒருவரிடம் மழை கோட் இருந்திருக்கும் என்றனர். குருவோ , யாரிடமும் மழை கோட் இல்லை என்று சொல்லிவிட்டார். சிலர், அவருக்கு உதவி செய்ய மரங்களோ , வீடுகளோ , தங்கும் விடுதிகளோ இருந்திருக்கும் என்றனர். குருவோ , பாதையிலே மரங்களோ , வீடுகளோ , சாத்திரங்களோ இல்லை என்று சொன்னார்.

எல்லாச் சீடர்களும் எந்தப் பதிலையும் கூறமுடியாமல் விழித்தனர். அப்போது குரு , அவர்களுக்கு உதவி செய்ய எதுவுமே இல்லை, யாருமே இல்லை என்று நான் சொன்னேன். பிறகு எப்படி ஒருவர் மட்டும் நனையாமல் இருந்திருக்க முடியும்? இரண்டு பேருமே மழையில் நனைந்தார்கள். இதுதான் உண்மை . ஒருவர் மட்டும் நனைந்தார் என்று நான் சொன்னது பொய். நீங்கள் என்னைப் பார்த்து, குருவே, நீங்கள் சொல்வது பொய் என்று சொல்லியிருக்க வேண்டும் என்றார்.

சொல்வதையெல்லாம் உண்மை என்று நம்புகின்றீர்கள் ! சொல்வதில் உண்மையிருக்கின்றதா? என்பதை ஆராய்ந்து தெளியும் ஆற்றல் உங்களிடம் இல்லை! எது பொய் , எது உண்மை என்பதை அறிந்துகொள்ளும் ஆற்றலுக்கும், அறிவுக்கும் பெயர்தான் ஞானம்.

நீங்கள் இன்னும் ஞானம் பெறவில்லை. இன்னும் ஐந்து ஆண்டுகள் என்னோடு தங்குங்கள் என்று கூறிவிட்டார்.

கிறிஸ்துவுக்குச் சான்று பகர நமக்கு ஞானம் தேவை. முக்கியமாக நம்மை வெறுக்கின்றவர்கள், நம் மீது பழி சுமத்துகின்றவர்கள் நடுவில் நாம் நிறுத்தப்படும் போது அவர்களுக்குச் சரியான பதிலைத் தர நமக்கு ஞானம் தேவை (நற்செய்தி).

ஞானம் என்பது நாம் படிப்பதினால், பார்ப்பதினால், தொடுவதினால், நுகர்வதினால், கேட்பதினால் மட்டும் நமக்குக் கிடைக்கும் உலக அறிவு அல்ல. மாறாக ஞானம் என்பது கடவுளால், ஆண்டவரின் ஆவியாரால் நமக்குக் கொடுக்கப்படும் கொடை.

ஞானம் நமக்குச் சொல் வளத்தை அருளும் (1 கொரி 12:8); ஞானம் கடவுளுக்கு அஞ்சி நடக்கும் அறிவை நமக்குத் தரும் (முதல் வாசகம்) ; ஞானம் புனித பவுலடிகளாரைப் போல, திருத்தூதர்களைப் போல எப்படி வாழவேண்டும் என்பதை நமக்குக் கற்பிக்கும் (இரண்டாம் வாசகம்).

இன்று இதுவே நமது மன்றாட்டாக இருக்கட்டும் : இறைவா, சாலமோனைப் போன்று, இன்று உம்மிடம் ஞானத்தைப் கேட்கின்றோம். எது பொய்? எது உண்மை ? எது சரி? எது நீதி? எது அநீதி? எது பாவம்? எது புண்ணியம்? எது நல்லது? எது உகந்தது ? எது நிறைவானது? என்பதைப் புரிந்துகொள்ளும், தெரிந்துகொள்ளும், உணர்ந்துகொள்ளும் மனத்தைத் தாரும். எங்களை ஞானத்தால் நிரப்பி உம் திருமுன் நாங்கள் என்றும் ஞானிகளாக வாழ அருள் புரிந்தருளும். ஆமென். மேலும் அறிவோம்:

உலகம் தழீஇய(து) ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு (குறள் 425).

பொருள் : உலகச் சான்றோருடன் தழுவிச் செல்வதே ஒருவருக்குரிய இயல்பான அறிவாகும். அவ்வாறு பொருத்தி வாழும்போது, இன்பத்தில் மகிழ்வதும் துன்பத்தில் வருந்துவதும் இல்லாததே சிறந்த அறிவாகும்.

ஆடி மாதத்தில் ஏன் பலத்தக் காற்று வீசுகிறது? ஆடி மாதத்தில் புதுத் தம்பதியர்களைப் பிரித்து விடுகின்றனர். பெண் தமது அம்மா வீட்டுக்குப் போய்விடுகிறார். இவ்வாறு பிரிந்திருக்கும் தம்பதியர் ஒருவர் மற்றவரை நினைத்து ஏக்கப் பெருமூச்சு விடுகின்றனர். அதுதான் பலத்தக் காற்றாக வீசுகிறதாம்! புதுமையான மற்றும் புதிரான விளக்கம்!

மணமகன் கிறிஸ்து விண்ணகம் சென்றபின், அவரைப் பிரிந்த மணமகளாகிய திருச்சபை அன்றிலிருந்து இன்றுவரை அவருடைய மறு வருகைக்காக ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது. தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கூறியது: “மாரனாத்தா", அதாவது, 'ஆண்டவரே வருக' (1 கொரி 16:22). விவிலியத்தின் இறுதி ஏக்க மன்றாட்டு: "ஆண்டவராகிய இயேசுவே, வாரும்" (திவெ 22:20). ஒவ்வொரு திருப்பலியிலும் திருச்சபை ஏக்கத்துடன் கூறுவது: "எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்."

திருவழிபாட்டு ஆண்டின் இறுதிக் கட்டத்தில், திருச்சபை உலக முடிவையும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும் நமக்கு நினைவூட்டுகின்றது. இன்றைய முதல் வாசகத்தில், கடவுள் உலகுக்குத் தீர்ப்பு வழங்கும் நாளை "அந்தநாள்" என்று குறிப்பிடுகின்றார் இறைவாக்கினர் மலாக்கி, அந்தநாள் நெருப்பின் நாளாகவும் கடவுளுடைய வெஞ்சினத்தின் நாளாகவும் அமையும். அந்த நாளில் ஆணவக்காரர் சுட்டெரிக்கப்படுவர். அந்த நாளில், பதிலுரைப்பாடல் கூறுவதுபோல, கடவுள் உலகுக்கு நீதி வழங்கி, மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார் (திபா 98:9) புதிய ஏற்பாடும் தீர்ப்பின் நாளை 'அந்நாள்கள்' என்றும் (மாற் 13:24 ), "ஆண்டவருடைய நாள்" என்றும் (1 தெச 5:2) அழைக்கிறது.

ஆனால், அந்நாள் எப்போது வரும் என்றும், எப்படி வருமென்றும் எவர்க்குமே தெரியாது. நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார் (மத் 24:44), ஆண்டவருடைய நாள் திருடனைப் போலவும் (1 பேது 3:10), கருவுற்றிருப்பவருக்கு வேதனை வருவது போலவும் (1 தெச 5:3) வரும். அந்த நாளைப் பற்றி அறிய முயற்சி எடுப்பது முட்டாள்தனம் மட்டுமல்ல, இறை நிந்தையுமாகும். “என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல” (திப 1:7) என்று கிறிஸ்துவே நமக்குத் தெளிவாகக் கூறியுள்ளார்.

இன்றைய நற்செய்தியிலே (லூக் 21:5-19). கிறிஸ்து எருசலேம் ஆலயத்தின் அழிவையும் உலக முடிவையும் இணைத்துக் கூறுகிறார். அவர் கூறியபடி கி.பி. 70-ஆம் ஆண்டிலே எருசலேம் ஆலயம் தரை மட்டமாக்கப்பட்டது; எருசலேம் நகரும் எரியூட்டப்பட்டது. எனவே உலக முடிவும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும் உடனடியாக நிகழப்போகிறது என்று பலர் எதிர்பார்த்தனர். புனித பவுலும் கூட அத்தகைய எண்ணம் கொண்டிருந்தார். ஆனால் காலப்போக்கில் அவர் தம் எண்ணத்தை மாற்றிக் கெண்டார். கிறிஸ்துவின் இரண்டாம் வருகை விரைவில் வரப்போகிறது என்ற எண்ணத்தில் தாங்களும் உழைக்காமல், மற்றவர்களையும் உழைக்க விடாமல் தடுத்த ஒரு சிலருக்குப் பவுல், “உழைத்து வாழ வேண்டும்; உழைக்காதவன் உண்ணக்கூடாது" என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் அறிவுரை வழங்குகின்றார் ( 2 தெச 3:10).

கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக இயற்கையில் பல்வேறு விபரீ தங்கள் நிகழும் என்று கிறிஸ்து இன்றைய நற்செய்தியில் கூறுகிறார். அவை முறையே, போலி இறைவாக்கினர்களின் பொய்ப்பிரச்சாரம், போர்கள், நிலநடுக்கம், பஞ்சம், கொள்ளை நோய் முதலியன. இவையாவும் உலகில் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அண்மையில் பல்வேறு நாடுகளில் மக்களைப் பீதியில் சிக்கவைத்துக் கொண்டிருக்கும் நிலநடுக்கம், வெள்ளப் பெருக்கு, ஆழிப்பேரலைகள் என்று அழைக்கப்படும் சுனாமி போன்றவை இதற்குச் சான்றாகும். எனினும் "உடனே முடிவு வராது" (லூக் 21:9).

இத்தகைய சூழ்நிலையில் தமது மனநிலையும் செயல்பாடும் எப்படியிருக்க வேண்டுமென்பதையும் கிறிஸ்து நமக்குச் சுட்டிக் காட்டியுள்ளார். “நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்" (லூக் 21:19). எனவே நமக்குத் தேவைப்படுவது பொறுமையும் மனஉறுதியுமாகும். புனித யாக்கோபு கூறுகிறார்: “சோதனையை மன உறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போது, தம்மீது அன்பு கொண்டுள்ளோருக்குக் கடவுள் வாக்களித்த வாழ்வாகிய வெற்றிவாகையினை அவர்கள் பெறுவார்கள்” (யாக் 1:12).

"இக்காலக் குருக்களிடம் பொறுமை என்னும் அருட்சாதனம் இல்லை” என்று ஒருவர் என்னிடம் கூறினார். பொறுமை என்ற பண்பை அவர் ஓர் அருளடையாளத்துக்கு ஒப்பிட்டுக் கூறியது எனக்கு வியப்பாக இருந்தது. இல்லறத்தார்க்கும் துறவறத்தார்க்கும் இன்று அதிகமாகத் தேவைப்படுகிறது பொறுமை. ஒருவர் நிறைவு உடையவராக இருக்க வேண்டுமென்றால், அவர் பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும் என்கிறார் வள்ளுவர்,

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப்படும். (குறள் 154)

வானகத் தந்தை நிறைவுள்ளவர் (மத் 5:48); ஏனெனில் அவர் 'நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்' (திபா 103:8). நிலக்கரி, வைரம் ஆகிய இரண்டுமே பூமிக்கு அடியிலுள்ள கரிவகை. பூமியின் அழுத்தம் தாங்காமல் விரைவில் வெளிவருவது தான் நிலக்கரி. ஆனால் பல நூறு ஆண்டுகளாகப் பூமியின் அழுத்தத்தைப் பொறுத்துக் கொண்ட நிலக்கரிதான் வைரமாக மாறுகிறது. சோதனைகளை மன உறுதியுடன் தாங்கினால், நமது விசுவாச வாழ்வு வைரமாகும். சோதனைகள் வருவது நம்மைச் சிரமப்படுத்த அல்ல, மாறாகப் பட்டைதீட்ட என்பதை அறிவோம்.

தாம் அடையவிருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்ட இயேசுவின்மீது நம் கண்களைப் பதிய வைப்போம் (எபி 12:2). கடவுளுடைய வார்த்தையைச் சீரிய செம்மனத்தில் ஏற்று மன உறுதியுடன் பலன் தருவோம் (லூக் 8:15).

கடவுளுக்கு ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் இருக்கின்றன. அவர் காலம் தாழ்த்துவதில்லை . பொறுமையாக இருக்கிறார். எவரும் அழியாமல், எல்லாரும் மனம் மாற விரும்புகிறார் ( 2 பேது 3: 8-9).

‘இறுதிவரை மனவுறுதியோடு இரு’

நிகழ்வு
கொரியாவில் ஜூன்-கோன் கிம் (Joon-Gon Kim) என்றொரு கிறிஸ்தவத் தலைவர் இருந்தார். கிறிஸ்துவின்மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்த அவர், கிறிஸ்துவைக் குறித்து மக்களிடம் மிகத் துணிச்சலாக அறிவித்து வந்தார். நாள்கள் செல்லச் செல்ல, ஜூன்-கோன் கிம் மட்டுமல்லாது, அவருடைய தந்தையும் அவருடைய மனைவியும் கிறிஸ்துவைக் குறித்து நற்செய்தியை மக்கட்கு அறிவிக்கத் தொடங்கினார்கள்.

இது அங்கிருந்த கம்யூனிஸ்ட்கட்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. அவர்கள் ஜூன்-கோன் கிம்மிடமும் அவருடைய தந்தையிடமும் மனைவியிடமும் கிறிஸ்துவைக் குறித்து நற்செய்தியை யாருக்கும் அறிவிக்கக்கூடாது... மீறினால் கொலைசெய்யப்படுவீர்கள் என்று எச்சரிக்கப்பட்டார்கள். அவர்கள் அதற்கெல்லாம் அஞ்சாமல் கிறிஸ்துவைக் குறித்து நற்செய்தியை மக்கட்குத் தொடர்ந்து அறிவித்து வந்தார்கள். ஒருநாள் ஜூன்-கோன் கிம்மின் தந்தையும் அவருடைய மனைவியும் ஒரு பொது இடத்தில் கிறிஸ்துவைக் குறித்து நற்செய்தியை அறிவித்துக் கொண்டிருக்கும்போது, அங்கு வந்த கம்யூனிஸ்டுகள், அவர்கள் இருவரையும் அடித்தே கொன்றார்கள்; அதைப் பார்த்துவிட்டுக் கூட்டம் சிதறி ஓடியது. செய்தி அறிந்த ஜூன்-கோன் கிம் மிகுந்த வேதனை அடைந்தார். ‘தன்னுடைய தந்தையையும் மனைவியையும் கயவர்கள் இப்படிக் கொன்றுபோட்டுவிட்டார்களே’ என்று அவர் அவர்களைப் பழித்துரைத்துக் கொண்டிருக்காமல், அவர்களை மனதார மன்னித்தார். மட்டுமல்லாமல், அவர்கள் மனமாற்றம் பெறவேண்டும் என்று இறைவனிடம் மன்றாடிவந்தார்.

இதற்குப் பின்பு அவர் புதிய உத்வேகத்துடன் கிறிஸ்துவைக் குறித்து நற்செய்தி அறிவிக்கத் தொடங்கினார். எல்லாம் நன்றாகச் சென்றுகொண்டிருந்த தருணத்தில், ஒருநாள் அவர் நற்செய்தியை அறிவித்துவிட்டு, தன்னுடைய இல்லத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, முன்பு அவருடைய தந்தையையும் மனைவியும் கொன்றுபோட்ட அதே கயவர்கள் அவர்மீது பாய்ந்து, அவரை அடித்துக் குற்றுயிராய்ப் போட்டுவிட்டுச் சென்றார்கள். அந்த நேரத்தில் தற்செயலாக அங்கு வந்த ஜூன்-கோன் கிம்மிற்கு அறிமுகமான ஒருவர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்று, காப்பாற்றினார். இந்தக் கொடிய நிகழ்விற்குப் பிறகு ஜூன்-கோன் கிம்மிற்குத் தெரிந்தவர்களெல்லாம், அவரிடம் கிறிஸ்துவைக் குறித்து நற்செய்தி அறிவிப்பதை விட்டுவிடுமாறு கெஞ்சிக்கேட்டார்கள். அவரோ, “நற்செய்தி அறிவிப்பது என்னுடைய கடமை. அந்தக் கடமையை என்னுடைய உயிர் உள்ளவரை ஆற்றுவேன்” என்றார்.

நன்றாக உடல்நலம் தேறியதும் ஜூன்-கோன் கிம் முன்பைவிட மிகுந்த வல்லமையோடு கிறிஸ்துவைக் குறித்து நற்செய்தி அறிவிக்கத் தொடங்கினார். இதைப் பார்த்துவிட்டு அவருடைய எதிரிகள் ஆச்சரியப்பட்டார்கள். நாள்கள் மெல்ல நகர்ந்துகொண்டு சென்றன. ஜூன்-கோன் கிம் கிறிஸ்துவைப் பற்றித் தொடர்ந்து நற்செய்தி அறிவித்துவந்தார். அதே நேரத்தில் தன்னுடைய எதிரிகட்காக இறைவனிடம் மன்றாடியும் வந்தார். இதனால் யாரெல்லாம் அவருடைய தந்தையுயையும் மனைவியையும் கொன்றுபோட்டு, அவரை அடித்துத் துன்புறுத்தினார்களோ, அவர்களே அவரிடம் வந்து மன்னிப்புக் கேட்டு, கிறிஸ்துவைத் தங்களுடைய ஆண்டவராகவும் மீட்பராகவும் ஏற்றுக்கொண்டார்கள்.

ஜூன்-கோன் கிம், ‘எதிரிகள் தன்னுடைய தந்தையையும் மனைவியையும் கொன்றுபோட்டுவிட்டார்கள்... அதனால் கிறிஸ்துவைக் குறித்து நற்செய்தியை அறிவிப்பதை விட்டுவிடவேண்டும்’ என்று நினைக்காமல், மனவுறுதியோடு கிறிஸ்துவின் நற்செய்தியை மக்கட்கு அறிவித்து வந்தார். இதனால் எதிரிகளே அவர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு மனம்மாறினார்கள். ஜூன்-கோன் கிம்மைப் போன்று நாமும் இறுதிவரை மனவுறுதியோடு இருந்து ஆண்டவர்க்குச் சான்றுபகரவேண்டும். அதைத்தான் இன்றைய இறைவார்த்தை எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஏமாறவேண்டாம்!
இன்றைய நற்செய்தி வாசகம் எருசலேம் திருக்கோயிலின் அழிவு குறித்தும் மானிடமகனுடைய வருகையின்போது நிகழும் அடையாளங்கள் குறித்தும் இறுதி நாளைக் குறித்தும் எடுத்துக் கூறுகின்ற அதேவேளையில், நாம் நம்முடைய வாழ்வை எப்படி வாழவேண்டும் என்பது குறித்த ஒருசில தெளிவுகளைத் தருகின்றது. அவை குறித்து இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசு கிறிஸ்து, இறுதிநாளைக் குறித்துப் பேசுகின்றபோது சொல்லக்கூடிய முதலாவது செய்தி, ‘ஏமாறவேண்டாம்’ என்பதாகும். யாரிடம் ஏமாறவேண்டும் என்பதையும் இயேசு மிக அழகாக எடுத்துச் சொல்கின்றார். இயேசுவின் காலத்தில் பலர் தாங்கள்தான் மெசியா... காலம் நெருங்கிவந்துவிட்டது... என்றுசொல்லி மக்களை மூளைச் சலவை செய்து ஏமாற்றிவந்தார்கள். இன்றைக்கும் பலர் அப்படியொரு செயலில் ஈடுபடுவதைக் காணமுடிகின்றது. இவர்களிடம்தான் யாரும் ஏமாறவேண்டாம் என்று இயேசு உறுதியாகச் சொல்கின்றார். காரணம், அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தை ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது (மத் 24: 36). தந்தை ஒருவருக்குத்தான் அந்த நாளைப் பற்றி, அந்த வேளையைப் பற்றித் தெரியும் என்பதால், யாரும் ஏமாறவேண்டாம் என்று இயேசு கூறுகின்றார்.

திகிலுறவேண்டாம்!
இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்கின்ற இரண்டாவது செய்தி, திகிலுறவேண்டாம் அல்லது அஞ்சவேண்டாம் என்பதாகும். எவற்றைக் குறித்துத் திகிலுறவேண்டாம் என்றால், உலகில் ஏற்படும் இயற்கைப் பேரிடர்கள், போர்கள், கலவரங்கள் போன்றவற்றைக் குறித்து ஆகும். ஒருசிலர் உலகில் நடைபெறும் போர்கள், இயற்கைப் பேரிடர்கள் ஆகியவற்றைக் கண்டு, ‘கடவுள் இவ்வுலகை அழிப்பதற்குத்தான் இதுபோன்ற இயற்கைப் பேரிடர்களை அனுப்புகின்றார்’ என்று பேசுவதுண்டு. இத்தகையோர் கடவுள் தன் திருமகன் இயேசுவை இந்த உலகை அழிப்பதற்கு அல்ல, வாழ்வுகொடுக்கவே அனுப்பினார் (யோவா 10:10) என்ற உண்மையை உணர்வது நல்லது.

மேலும் புனித பவுல் எபேசியர்க்கு எழுதிய திருமுகத்தில் கூறுவதுபோல், கடவுள் தமது திருவுளத்தின் திட்டத்தின்படி அனைத்தையும் செயல்படுத்தி வருகின்றார் (எபே 1:11). ஆகையால், நிகழும் பலவகையான இயற்கைச் சீற்றங்களைக் குறித்து அஞ்சிக் கொண்டிருக்காமல், அஞ்சாமல் ஆண்டவரிடம் நம்பிக்கைகொண்டு வாழ்வது சிறப்பானது.

கவலைப்படவேண்டாம்!
நற்செய்தியில் இயேசு சொல்கின்ற மூன்றாவது செய்தி, கவலைப்படவேண்டாம் என்பதாகும். எவற்றைக் குறித்த கவலை என்றால், கிறிஸ்து இயேசுவைக் குறித்து அறிவித்து, சான்று பகர்கின்றபோது மக்களிடமிருந்தும் சொந்தக் குடும்பத்திடமிருந்தும் வரும் எதிர்ப்புகள், துன்பங்கள், வேதனைகள் ஆகியவற்றால் வரும் கவலை. இவற்றிற்காக நாம் கவலைப்படவேண்டாம் என்பதுதான் இயேசு நமக்குச் சொல்லும் செய்தி.

நாம் ஏன் கவலைப்படவேண்டாம் என்பதற்கான காரணங்களையும் இயேசு சொல்கின்றார். அவைதான் இறைவன் தரும் நாவன்மை, பாதுகாப்பு, உடனிருப்பு ஆகியவையாகும். ஆம், இறைவன் தருகின்ற பாதுகாப்பையும் உடனிருப்பையும் ஆசியையும் ஒருவர் உணர்ந்துகொண்டால், அவர் யாருக்கும் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. இவற்றைவிட இன்னொரு முக்கியமான செய்தியையும் இயேசு சொல்கின்றார், அதுதான் இறுதிவரை மனவுறுதியோடு இருப்பது. கிறிஸ்துவின் மதிபிடுகளின்படி வாழ்கின்றபோது எதிர்வரும் துன்பங்கள், சாவால்கள் யாவற்றைக் கண்டு அஞ்சாமல், மனவுறுதியோடு இருந்தால், நம்மால் நிச்சயம் நம்முடைய வாழ்க்கைக் காத்துக்கொள்ளலாம். ஆகையால், நாம் இறுதிவரை மனவுறுதியோடு இருந்து ஆண்டவர்க்குச் சான்றுபகர முயற்சி செய்வோம்.

சிந்தனை ‘சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள்; எனவே அஞ்சாதிருங்கள்’ (மத் 10: 31) என்பார் இயேசு. ஆகையால், நாம் ஆண்டவரைத் தவிர வேறு யாருக்கும் எதற்கும் அஞ்சாமல், மனவுறுதியோடு இருந்து, ஆண்டவர்க்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser

வாழ்வின் மறுபக்கம்

சில ஆண்டுகளுக்கு முன் கவிதை ஒன்றை வாசித்தேன். கவிதையின் தலைப்பு 'மற்றும்.' அதை ஒரு டைரியில் குறிப்பும் எடுத்தேன். அந்த வரிகள் இவை:

'நாம் அனேகமாய்ப்
பார்ப்பதில்லை - பார்த்ததில்லை
ஒரு சருகு இலையின் பின்புறத்தை
ஒரு மரப்பாச்சியின் பின்புறத்தை
ஒரு மலையின் பின்புறத்தை
ஒரு சூரியனின் பின்புறத்தை
மற்றும்
நம்முடையதை'

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் பள்ளத்தாக்கின் அந்தப் பக்கத்திலிருந்து எருசலேம் ஆலயத்தைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களையும் அவர்களோடு சேர்ந்து கோவிலையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் சத்தமாகச் சொல்கிறார்: 'என்னே கோவிலின் அழகு! என்னே கவின்மிகு கற்கள்! என்னே அழகு!' இயேசுவின் காதுகளில் இவ்வார்த்தைகள் விழ, அவர் உடனே திரும்பிப் பார்த்து, 'இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும். அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்' என்கிறார்.

இது எப்படி இருக்கு தெரியுமா?
நம்ம வீட்டுல உள்ள ஒருத்தருக்கு குழந்தை பிறந்திருக்கு. அந்தக் குழந்தையைப் பார்க்க குடும்பத்தாரோடு நாம் செல்கிறோம். குழந்தையின் சிரிப்பு, நிறம், அழகு, மென்மை, முக அமைப்பு ஆகியவற்றை வியந்து பார்த்துக்கொண்டிருக்கும் நேரம், நம்மோடு கூட்டத்தில் வந்திருந்த ஒருவர், 'இந்தக் குழந்தை ஒருநாள் இறந்துபோகும்!' என்று சொன்னால் நமக்கு எப்படி இருக்கும்? அந்த மனிதரை எதிர்மறையாளர் என்றும், கோணல்புத்திக்காரர் என்றும் சாடுவதோடு, அவருடைய இருப்பை நாம் உடனே தவிர்க்க முயற்சிப்போம். ஆனால், கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அவர் சொன்னதில் தவறில்லையே. பிறக்கின்ற எல்லாக் குழந்தைகளும் ஒருநாள் இறக்கத்தானே வேண்டும்!

'இந்தக் கோவில் இடிபடும்!' என்ற இயேசுவின் வார்த்தைகள், 'இந்தக் குழந்தை இறந்து போகும்' என்று அந்த நபர் சொன்ன போது ஏற்பட்ட அதிர்வையே இயேசுவின் சமகாலத்தவர்நடுவே ஏற்படுத்தியிருக்கும்.

பட்டினத்தார் திரைப்படத்தில் ஒரு காட்சி உண்டு.

பட்டினத்தார் வீட்டின் வாசலருகில் வந்து நிற்பார். அப்போது எம்.ஆர். ராதா தன்னுடைய தோழியுடன் நின்றுகொண்டு அவரைச் சந்திப்பார். எம்.ஆர். ராதா தன்னுடைய தோழியின் அழகை வர்ணிப்பதாகவும் அதற்கு பட்டினத்தார் எதிர்வினை ஆற்றுவதாகவும் அமைகிறது அக்காட்சி:

'கண்ணைக் கவரும் கார்முகில் கூந்தலைப் பார்'
'ஈறும் பேனும் குடியிருக்கும் கூந்தலா கார்முகில்?'
'வேலைப் பழிக்கும் கண்ணழகைப் பார்'
- 'காலையில் பார்த்தால் பீளை வடியும் கண்கள்'
'மதுரசம் தரும் கனியிதழ்'
- 'எச்சில் நாற்றத்தைத் தரும் கனியிதழ் கனிரசமாம் கற்கண்டாம்!'
'நிலவு போன்ற கன்னத்தைப் பார்'
- 'வரிவரியாய்த் தோன்றி வாடிப்போகும் அந்த நிலவு'

காட்சியில் இத்தனை வரிகள் தாம் இருக்கின்றன. ஆனால், பட்டினத்தாரின் பாடலில் பதினெட்டு வரிகளாக பாடல் நீண்டிருக்கும்.

மேற்காணும் பாடலில் எம்.ஆர். ராதாவின் கூற்றும் உண்மைதான். பட்டினத்தாரின் கூற்றும் உண்மைதான். அல்லது எம்.ஆர். ராதா பார்க்க முடியாதவற்றை பட்டினத்தார் பார்த்தார். மேற்காணும் பாடல் வரிகள் பெண்ணுக்கு மட்டுமல்ல. ஆணுக்கும் பொருந்தும்.

நம்மிடம் ஒரு நாணயம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த நாணயத்தைக் கஷ்டப்பட்டு இரண்டாக உடைத்துவிடுகிறோம். அந்த நாணயத்தை எடுத்துக்கொண்டு கடைக்குச் செல்கின்றோம். நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் அருகருகே வைத்து பண்டமாற்றம் செய்ய முயல்கின்றோம். கடைக்காரர் நாணயத்தைச் செல்லாக்காசு என்கிறார். நாணயம் இரண்டு பக்கங்களாகப் பிரிக்கப்பட்டாலும் செல்கின்ற நாணயம் தங்க நாணயத்தைத் தவிர வேறு நாணயங்கள் இல்லை.

நாணயங்களின் மறுபக்கம் ஒருபக்கத்தோடு ஒட்டியிருந்தால்தான் நாணயத்திற்கு மதிப்பு.
இன்றைய இறைவாக்கு வழிபாடு வாழ்வின் மறுபக்கத்தை நாம் கண்டுணர அழைக்கின்றது.
இயேசு, மருத்துவமனைக்கு வந்திருந்த அந்த நபர், பட்டினத்தார் இந்த மூன்று பேருமே வாழ்வின் மறுபக்கத்தைக் கண்டவர்கள்.
புதிய செல்ஃபோனை வாங்கிக் கொண்டு வந்து இவர்களிடம் நீட்டினால், 'இது ஒரு நாள் உடைந்து போகும்' என்பார்கள்.
புதிய புத்தகத்தை எழுதிக்கொண்டு போய் இவர்களிடம் நீட்டினால், 'இது ஒரு நாள் காலாவதியாகிவிடும்' என்பார்கள்.
புதிய ஆடையை எடுத்துக்கொண்டு போய் இவர்களிடம் நீட்டினால், 'இது ஒரு நாள் கிழிந்துவிடும்' என்பார்கள்.
தட்டுநிறைய பிரியாணி வைத்து நீட்டினால், 'இது காலையில் கழிவறைக்குச் சென்றுவிடும்' என்பார்கள்.
இவர்கள் பேசுவதைக் கேட்க நமக்கு நெருடலாக இருக்கும். ஏனெனில், வாழ்வின் மறுபக்கத்தைப் பார்ப்பதும் நெருடலாகவே இருக்கும். ஆகையால்தான் பல நேரங்களில் நாம் வாழ்வின் மறுபக்கத்தைப் பார்ப்பதைத் தவிர்க்கின்றோம். அல்லது தள்ளி வைக்கின்றோம்.

திருவழிபாட்டு ஆண்டின் ஏறக்குறைய இறுதிப்பகுதிக்கு வந்துவிட்டோம். இன்றைய வாசகங்கள் வாழ்வின் முடிவைப் பற்றிப் பேசுகின்றன. வாழ்விற்கு முடிவு கிடையாது. மறுபக்கம்தான் உண்டு.

வாழ்வின் மறுபக்கத்தை எப்படிக் காண்பது?
இன்றைய முதல் வாசகம் (காண். மலா 4:1-2) மலாக்கி இறைவாக்கினர் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எபிரேய விவிலியத்தில் இறைவாக்கினர்கள் நூலை நிறைவு செய்பவர் மலாக்கி. பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பின், புதிய ஆலயம் கட்டப்பட்டதன் பின்புலத்தில், புதிய ஆலயத்தில் நிலவிய சமய சடங்குகளைக் கண்டிக்கின்ற மலாக்கி, வரப்போகும் மெசியா பற்றி முன்னுரைக்கின்றார். அந்த நாளை 'ஆண்டவரின் நாள்' என அழைக்கின்றார். அந்த நாளில் ஆண்டவர் உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பு அளித்து அமைதியையும் ஒருங்கியக்கத்தையும் மீண்டும் சரி செய்வார்.

இன்றைய முதல் வாசகம் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், கடவுள் ஆணவக்காரரை அழிக்கும் நிகழ்வை எடுத்துரைக்கிறார் மலாக்கி. நெருப்பு என்ற உருவகத்தைக் கையாளும் இறைவாக்கினர், ஆணவக்காரர் அனைவரும் அந்த நெருப்புக்குள் தூக்கி எறியப்படுவர் என்று எச்சரிக்கின்றார். அவர்கள் வேர்களோடும் கிளைகளோடும் எரிக்கப்படுபவர். அதாவது, அவர்களில் ஒன்றும் மிஞ்சாது. உலகத்தின் முகத்திலிருந்து தீமை முற்றிலும் துடைத்து எடுக்கப்படும். இரண்டாவது பகுதியில், கடவுளின் பெயருக்கு அஞ்சி நடப்பவர்கள் பெறும் பரிவைப் பற்றிச் சொல்கிறார் இறைவாக்கினர். 'நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கைகளில் - அதாவது கதிர்களில் - நலம் தரும் மருந்து இருக்கும்.' இவரின் இறைவாக்குப் பகுதி மிகவும் எளிதாக இருக்கிறது. ஒரே நெருப்புதான். அது ஒரு பக்கம் ஆணவக்காரருக்கு அழிவாக இருக்கிறது. மறு பக்கம் நீதிமான்களுக்கு நலம் தரும் மருந்தாகவும், நீதியின் ஆதவனாகவும் இருக்கிறது.

வாழ்வில் எல்லாம் ஒன்றுதான். ஒரு பக்கம் அழிவு என்றால், மறு பக்கம் நலம். ஒரு பக்கம் தீமை என்றால், மறு பக்கம் நன்மை. இரண்டும் அப்படியே இருக்கும். இரண்டையும் எடுத்துக்கொள்ளும் பக்குவம் நமக்குத் தேவை.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 2 தெச 3:7-12) தெசலோனிக்கருக்கு எழுதப்பட்ட இரண்டாம் திருமுகத்தின் இறுதி அறிவுரைப்பகுதியாக இருக்கிறது. பவுல் தெசலோனிக்காவில் நற்செய்தி அறிவிக்கின்றார். அவருடைய நற்செய்தி அறிவிப்பில் இயேசுவின் இரண்டாம் வருகை பற்றிப் போதிக்கின்றார். அவர் சென்ற சில மாதங்களில் அங்கே வருகின்ற வேறு சிலர் பவுல் அறிவித்த நற்செய்திக்குப் பிறழ்வான நற்செய்தி ஒன்றை அறிவித்து நம்பிக்கையாளர்களின் மனத்தைக் குழப்புகின்றனர். இவர்கள் இறுதிநாள் விரைவில் வருகிறது என்று அறிவித்ததோடு, 'இனி யாரும் வேலை செய்யத் தேவையில்லை. இருப்பதை அமர்ந்துகொண்டு உண்போம். அல்லது இருப்பவர்களிடம் வாங்கி உண்போம்' என்று சொல்லி எல்லாரையும் ஊக்குவிக்கின்றனர். ஆக, எங்கும் சோம்பல் பெருகுகிறது. ஒருவர் மற்றவரை ஏமாற்றி அல்லது பயமுறுத்தி உண்கின்றனர். 'எல்லாமே அழிந்துவிடும். இனி எதற்கு வேலை செய்ய வேண்டும்?' என்று ஓய்ந்திருக்கின்றனர்.

இதை அறிகின்ற பவுல் இவர்களின் இச்செயலைக் கண்டித்துக் கடிதம் எழுதுகின்றார். முதலில், தன்னுடைய எடுத்துக்காட்டான வாழ்வை அவர்களுக்கு எடுத்தியம்புகின்றார்: 'உங்களிடையே இருந்தபோது நாங்கள் சோம்பித்திரியவில்லை. எவரிடமும் இலவசமாக உணவருந்தவில்லை. மாறாக, உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, இராப்பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம். எங்களுக்கு வேண்டியதைப் பெற உரிமை இல்லை என்பதால் அல்ல. மாறாக, எங்களைப் போல நடப்பதற்காக உங்களுக்கு முன்மாதிரி காட்டினோம்.' ஆக, பவுல், தனக்கு உணவை இலவசமாகப் பெற உரிமை இருந்தும் அந்த உரிமையைப் பயன்படுத்தவில்லை என்கிறார். இரண்டாவதாக, 'உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது' என்று தான் ஏற்கனவே கொடுத்திருந்த கட்டளையை அவர்களுக்கு நினைவூட்டுகிறார். இதன் வழியாக மற்றவர்களின் உழைப்பு சுரண்டப்படுவதையும், மற்றவர்கள் ஏமாற்றப்படுவதையும் தடுக்கின்றார் பவுல். ஆண்டவரின் இரண்டாம் வருகைக்காக காத்திருக்கின்ற வேளையில் ஒழுக்கமான, நேர்மையான வாழ்வை வாழவும் வேண்டும் என்றும், கடின உழைப்புடன் வேலை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார் பவுல்.

ஆக, தங்கள் வாழ்வின் ஒரு பக்கத்தை - அதாவது, உலக அழிவை - மட்டுமே கண்டு, வாழ்வின் மறுபக்கத்தை - உழைப்பை, அன்றாட வாழ்வின் இன்பத்தை - மறந்து போன தெசலோனிக்க நகர மக்களை வாழ்வின் மறுபக்கத்தையும் காண அழைக்கின்றார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 21:5-19) எருசலேம் அழிவைப் பற்றி லூக்கா இரண்டாவது முறை பேசும் பகுதியாக இருக்கிறது (காண். 19:43-44). எருசலேம் ஆலயத்தின் இறுதி அழிவு கி.பி. 70இல் நடந்தது. இது யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மிகப்பெரிய எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் பேரழிவு இயேசுவை ஏற்றுக்கொள்ளாததால்தான் என்று முந்தைய பகுதியில் மக்களை எச்சரிக்கிறார் லூக்கா. ஆனால், இன்றைய நற்செய்தி வாசகப் பகுதியில், வரப்போகும் தீங்கை முன்னுரைக்கின்ற இயேசு, அதை எதிர்கொள்ளத் தன் சீடர்களைத் தயாரிக்கின்றார். போலி மெசியாக்கள் தோன்றுவார்கள் என்றும், போர்களும், எதிர்ப்புக்களும், கொந்தளிப்புக்களும், கொள்ளை நோய்களும், பஞ்சமும், துன்புறுத்தல்களும், வருத்தங்களும், மறைசாட்சியப் போராட்டங்களும் வரும் என்றும் எச்சரிக்கின்றார் இயேசு.

இப்படி எச்சரிக்கின்ற இயேசு, 'நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்' என்றும், 'உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழாது' என்றும் நேர்முகமாக நம்பிக்கை தருகின்றார்.

இதுதான் இயேசு காட்டுகின்ற வாழ்வின் மறுபக்கம். வாழ்வின் ஒருபக்கம் துன்பம் என்றால், போராட்டம் என்றால், மறுபக்கம் இன்பம் அல்லது அமைதி உறுதியாக இருக்கும்.

வாழ்வின் மறுபக்கத்தை நாம் கண்டறிய மூன்று தடைகள் உள்ளன:

1. ஒற்றைமயமாக்கல்
வாழ்க்கை என்ற நாணயத்தை நாம் பல நேரங்களில் வலிந்து பிரிக்க முயல்கின்றோம். பிரித்து ஒரு பகுதியை வைத்துக்கொண்டு மற்ற பகுதியைத் தூக்கி எறிய நினைக்கிறோம். நன்மை, ஒளி, நாள் என சிலவற்றை உயர்த்தி, தீமை, இருள், இரவு ஆகியவற்றை அறவே ஒதுக்கிவிடுகின்றோம். ஆனால், இரண்டு பகுதிகளும் இணைந்தே வாழ்வு நகர்ந்துகொண்டிருக்கும். இதையே சபை உரையாளர், 'வாழ்க்கை இன்பமாய் இருக்கும்போது மகிழ்ச்சியோடிரு. துன்பம் வரும்போது நீ நினைவில் கொள்ள வேண்டியது: 'அடுத்து என்ன நடக்கும் என்பதை நீ தெரிந்துகொள்ளா வண்ணம் கடவுள், இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி வரவிடுகின்றார்'' (சஉ 7:14). ஆக, வாழ்வின் இருபக்கங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வரட்டும். ஒரு பகுதியை மட்டும் பிடித்துக்கொண்டு இன்னொரு பகுதியை விட வேண்டாம். ஏனெனில், சூரியனின் ஒரு பக்கம் ஆணவக்காரரைச் சுட்டெரிக்கிறது என்றால், அதன் மறுபக்கக் கதிர்களில் நேர்மையாளர்களுக்கான நலம் தரும் மருந்து இருக்கும்.

2. அவசரம் அல்லது சோம்பல்
ஒற்றைமயமாக்கலில் நாம் வாழ்வின் மறுபக்கத்தை வெறுத்து ஒதுக்குகின்றோம் என்றால், அவசரத்தில் மறுபக்கத்தை நாம் அப்படியே எடுத்துக்கொள்ள நினைக்கிறோம். இதுவும் தவறு. எல்லாக் குழந்தைகளும் ஒருநாள் இறக்க வேண்டும் என்பதற்காக பிறந்த குழந்தைகளைக் கொல்வது போன்றது அவசரம். எல்லாக் கட்டிடங்களும் ஒருநாள் இடிந்துபோகும் என்பதற்காக எல்லாக் கட்டிடங்களையும் இடிக்க நினைப்பது அவசரம். தெசலோனிக்கத் திருஅவையில் இதே பிரச்சினைதான் இருந்தது. 'கடவுள் வரப் போகிறார், உலகம் முடியப் போகிறது' என்ற அவசரத்தில், ஆடு, கோழிகளை அடித்து சாப்பிட்டுவிட்டு, ஓய்ந்திருந்தனர். அவசரத்துடன் சோம்பலும் வந்துவிடுகிறது. பல நேரங்களில் நாம் வாழ்வின் மறுபக்கத்தை யூகித்துக்கொண்டே விரக்தியும் அடைகிறோம். 'இது இப்படி ஆகுமோ? அது அப்படி ஆகுமோ?' என்னும் வீணான குழப்பங்களும் அவசரத்தின் குழந்தைகளே.

3. பயம்
இதைப் பற்றி இயேசு நற்செய்தி வாசகத்தில் அறிவுறுத்துகின்றார். மனித அல்லது இயற்கைப் பேரழிவுகள் பயத்தைக் கொண்டுவரலாம். நம்முடைய உடைமைகள் அல்லது உயிரும் பறிக்கப்படலாம். ஆனால், இந்தப் பயத்தைப் போக்க இயேசு நம்பிக்கையும் எதிர்நோக்கும் தருகின்றார்: 'உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழாது!' - ஒருநாள் தைராய்டு மாத்திரை எல்ட்ராக்சினை நிறுத்தினால், ஒருநாள் வேறு தண்ணீரில் குளித்தால், ஒரு நாள் ஷாம்பு மாற்றிப் போட்டால் தலைமுடி கொட்டுகிறது. ஆனால், இயேசு சொல்வது இந்த முடி கொட்டுவதை அல்ல. பயத்தால் ஒரு முடி கூட கொட்டாது. அல்லது பயம் நம் வாழ்வில் ஒரு முடியையும் உதிர்க்க முடியாது.

வாழ்வின் மறுபக்கத்தை நாம் பார்ப்பதற்குத் தடையாக இருக்கின்ற ஒற்றைமயமாக்கல், அவசரம்-சோம்பல், பயம் ஆகியவற்றை விடுத்தல் அவசியம்! இவற்றை விடுத்தலே ஞானத்தின் முதற்படி! இந்த ஞானத்தை அடைந்தனர் இயேசுவும் பட்டினத்தாரும்.

இவற்றை விடுக்கும் எவரும், வாழ்வின் இருபக்கங்களையும் கொண்டாட்ட முடியும். அந்தக் கொண்டாட்டத்தில் திருப்பாடல் ஆசிரியரோடு இணைந்து, 'யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள். யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்' (திபா 98:5) என்று பாட முடியும்.

ser

sunday homily


முகப்பு பக்கம்
வத்திக்கான் வானொலி
கத்தோலிக்க இதழ்கள்
ஞாயிறு வாசகம்
விருந்தினர் பக்கம்
உம் வாக்கே விளக்கு!
சென்னை பங்குதலங்கள்
நூலகம்
திருத்தலச் சுற்றுலா
தவக்கால சிந்தனைகள்
ஒலியும் ஒளியும்
அன்னை தெரேசா
கிறிஸ்மஸ் மலர்கள்
பொங்கல்
செபமாலை
பாடல்கள்
செபமே ஜெயம்A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com