மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலம் முப்பத்தி இரண்டாம் ஞாயிறு
மூன்றாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
2 மக்கபேயர் 7: 1-2, 9-14 | 2 தெசலோனிக்கர் 2: 16-3: 5 | லூக்கா 20: 27-38

மறுவாழ்வு

ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு மேல்நிலைப் பள்ளியில் தியானம் கொடுத்துக் கொண்டிருந்த போது மறுவாழ்வு பற்றி விளக்கம் கொடுத்தேன். ஒரு மாணவன் எழுந்து, "பாதர் ! என் அண்ணன் 14 வயதில் இறந்துவிட்டான். என் அம்மா 40 வயதில் இறந்துவிட்டார்கள், என் அப்பா 42 வயதில் இறந்துவிட்டார்கள். நான் 74 வயதில் இறந்தால் மறுவாழ்வில் அவர்களைச் சந்திக்கின்றபோது நான் அவர்கள் மூவரையும் விட முதிர்ந்தவனாகக் காட்சி தருவேனா?" என்று கேட்டான். இன்னும் ஒரு வேடிக்கையான பதில் கிடைத்தது. "ஆகாய விமானத்தில் பறக்க விரும்புகிறீர்களா?" என்று கேட்டபோது, ஒரு மாணவன் எழுந்து, "நான் பறக்க அஞ்சுகிறேன் , ஆகாய விமானம் கீழே விழுந்து நொறுங்கினால், என் எலும்புகளும் நொறுங்கிவிடும். எலும்புகளை மறுவாழ்வில் ஒன்று சேர்க்க கடவுள் கஷ்டப்படுவார்" என்றான். இதே போலத் தான் இயேசு வாழ்ந்த காலத்தில் இரு கட்சிகள் இருந்தன. ஒன்று பரிசேயர் கட்சி, இரண்டாவது சதுசேயர் கட்சி. இந்த இரு கட்சிகளுமே யூத நாட்டின் பொருள் படைத்த ஆளும் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். இதில் சதுசேயர், புதுமைகள், வானதூதர், மறுவாழ்வு என்பவையெல்லாம் நம்பாதக் கூட்டம். எனவே இயேசுவை சோதிக்கும் நோக்குடன், ஏழு பேருக்கு மனைவியாக இருந்து, இறந்த பின் யாருக்கு மனைவியாக இருப்பார் என்ற குறுக்குக் கேள்வியைக் கேட்டார்கள் இந்தச் சதுசேயர்கள். உள்ளங்களை அறியும் ஆற்றல் படைத்த இயேசு, "விண்ணகத்தில் பெண் கொள்வதுமில்லை, கொடுப்பதுமில்லை. வானதூதர்கள் போல் (லூக். 20:27-36) உயிர் பெற்றிருப்பார்கள்" என பதில் கூறுகிறார். ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் என்று தெளிவுப்படுத்தும் கிறிஸ்து, அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக அவர் வாழ்வோரின் கடவுள் (மத். 22:32) என்று உறுதிப்படுத்துகிறார். உயிர்த்தெழுதலும், வாழ்வு தருபவனும் நானே. என்னில் நம்பிக்கை கொள்ளும் எவரும் இறப்பினும் வாழ்வர் (யோவா. 11:25) என்றும் தெளிவுப்படுத்துகிறார்.

இறப்பு என்பது மனிதனுக்கு முடிவு அல்ல . உயிர்ப்பு ஒன்று இருப்பதால் தான் இறப்பு அர்த்தம் பெறுகிறது. இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி , உங்களுள் குடி கொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே, சாவுக்குரிய உங்கள் உடல்களையும், உயிர்பெறச் செய்வார் (உரோ. 8:11). இப்படி இயேசு உயிருடன் எழுப்பப்பட வில்லையென்றால், நாம் பறைசாற்றிய நற்செய்தியும், நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் பொருளற்றதே (1கொரி. 15:14), என்று திருத்தூதர் பவுல் தெளிவுப்படுத்துகிறார். இந்த ஒரு விசுவாசத்தின் அடிப்படையில்தான் அன்று யூத வீரத்தாயும் அவரது ஏழு மகன்களும் பன்றி இறைச்சியை உண்ண மறுத்து, தாங்கள் சாகத் தயங்கவில்லை . இரண்டாவது மகன் பலியாகுமுன், இறந்தபின், என்றென்றும் வாழும் அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார் (2 மக்கபே. 7:9) என்று வீர முழக்கமிட்டு பலியானான் (முதல் வாசகம்).

பணக்காரன் ஒருவன், எல்லா சுக போகங்களையும் அனுபவித்தவன், தான் இறந்தபின் என் செல்வங்கள் அனைத்தையும் என் ஊருக்கே சொந்தம் என்று உயில் (பத்திரம்) எழுதி வைத்தான். யாரும் இதைக் கண்டு ஆச்சரியப்படவும் இல்லை. அவனைப் பாராட்டவும் இல்லை. இதைக் கண்ட பணக்காரன், ஞானியிடம் சென்று, "ஏன் மக்கள் என்னைப் பாராட்ட வில்லை ?" என்று கேட்டான். ஞானியோ, "பன்றியையும், பசுவையும் பார். பன்றியை மக்கள் வெட்டிச் சமைத்து உண்டாலும், சீ பன்றி என்று அது உயிரோடு இருக்கும் போது வெறுக்கிறார்கள். ஆனால் பசுவை மக்கள் தெய்வம் போல் வாழ்த்துகிறார்கள். காரணம் பசு உயிரோடு இருக்கும்போதே பால் கொடுத்து, இறந்த பின்னும் பயன் தருகிறது. ஆனால் பன்றியோ இறந்த பின் தான் பயன் தருகிறது." அதுபோல விண்ணகம் என்பது உலகில் உள்ள இன்ப துன்பங்களைத் தாங்கிக் கொண்டு , நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து வாழவும், உறவுக்கு அர்த்தம் கொடுப்பதாக அமைதல் தேவை. இவைதான் அழிவுக்குரிய உடல் அழியாமையையும், வலுவற்ற உடல் வலுவுடையதாயும், மனித இயல்பு கொண்ட உடல் ஆவிக்குரிய உயிர்பெற்று எழும் (1கொரி. 15:42-44) என்று நம்பலாமன்றோ !.

ser

நாம் உயிர்ப்போம் என்று நம்புவோம்

2- ஆம் மக்கபேயர் நூலிலே உள்ளத்தை உருக்குகின்ற நிகழ்ச்சி ஒன்றைப்பற்றி படிக்கின்றோம் (2 மக் 7:1-41). திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து நடப்போருக்குக் கடவுள் கைம்மாறு அளிப்பார் என்னும் மையக்கருத்தை இந்நூல் விளக்குகின்றது; நீதிமான்களின் உயிர்ப்பைப் பற்றி தெளிவாக எடுத்துரைக்கின்றது. இந்த நூல் கி.மு. 124 - இல் எழுதப்பட்டது. இதோ நமது நம்பிக்கை வாழ்வை அலசிப்பார்க்கவைக்கும் அந்த நிகழ்ச்சி.

ஒரு தாய்க்கு ஏழு குழந்தைகள் ! அந்த ஏழு பேரும் கடவுளே கதி என்று வாழ்ந்த அந்தத் தாயின் அற்புதக் குழந்தைகள் ; தாய் சொல்லைத் தட்டாதவர்கள்.

அந்த ஏழு பேரும், அவர்களுடைய தாயும் கைது செய்யப்பட்டு அந்தியோக்கு மன்னன் முன்னால் நிறுத்தப்பட்டார்கள். அந்த அரசன் அரக்க குணம் கொண்டவன்.

சட்டத்தால் தடுக்கப்பட்ட இறைச்சியை உண்ணும்படி அரசனிடமிருந்து கட்டளை பிறந்தது. ஏழு சகோதரர்களும் அரச ஆணைக்குக் கீழ்ப்படிய மறுத்தார்கள்.

முதல் சகோதரனின் நாக்கு துண்டிக்கப்பட்டது; அவனுடைய கை கால்கள் வெட்டப்பட்டன.

இரண்டாவது சகோதரனின் தலையின் தோல் முடியோடு உரிக்கப்பட்டது.

மூன்றாவது சகோதரனின் நாக்கு அறுக்கப்பட்டது; கைகள் வெட்டப்பட்டன.

நான்காவது சகோதரனையும் மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கினார்கள்.

ஐந்தாவது சகோதரனையும் வதைத்தார்கள். ஆறாவது சகோதரனையும் வதைத்தார்கள். ஏழாவது சகோதரன் மற்ற அனைவரையும் விட அதிகம் வதைக்கப்பட்டான்.

ஏழு சகோதரர்களும் கொல்லப்பட்டார்கள். இறுதியாக தம் மக்களைத் தொடர்ந்து அந்தத் தாயும் இறந்தாள் (2 மக் 7:41).

இந்த எட்டு பேரும் உயிர்ப்பின் மீதும் மறுவாழ்வின் மீதும் நம்பிக்கை வைத்திருந்தவர்கள். இரண்டாவது மகன், நாங்கள் இறந்தபின் என்றென்றும் வாழுமாறு அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார் (2 மக் 7:9) என்றான்.

நான்காவது சகோதரன், கடவுள் மீண்டும் உயிர்த்தெழச் செய்வார் என்னும் நம்பிக்கை எனக்கு இருப்பதால், மனிதர் கையால் இறக்க விரும்புகின்றேன் (2 மக் 7:14) என்றான்.

தாய், அவரே (உலகைப் படைத்தவர்) உங்களுக்கு உயிரையும் மூச்சையும் மீண்டும் கொடுப்பார் என்றார்.

அந்தத் தாயின் மனத்தில், அந்தச் சகோதர்களின் மனத்தில் மறுவாழ்வின் மீது, உயிர்ப்பின் மீது ஆழமான, அழியாத , மாறாத , மங்காத, வைரம் பாய்ந்த இறை நம்பிக்கை இருந்ததால் அவர்களை மரணத்தால் கூட ஒன்றும் செய்யமுடியவில்லை!

கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து நடக்க, கடவுளுக்கு உகந்த மக்களாக அவர்கள் வாழ அவர்களுக்கு உதவியது அவர்கள் மறுவாழ்வின் மீது, உயிர்ப்பின் மீது வைத்திருந்த நம்பிக்கை.

இன்றைய நற்செய்தி நமது கடவுள், இறந்தோரின் கடவுள் அல்ல, மாறாக வாழ்வோரின் கடவுள் (லூக் 20:38) என்கின்றது.

ஆம். நமது கடவுள் இறந்தவர்களின் கடவுள் அல்லர். அவர் நாம் மண்ணோடு மண்ணாகிவிடாமல் நம்மை உயிர்த்தெழச் செய்வார்.

மக்கபேயர் குடும்பமும், இயேசுவும் கற்பிப்பதை நாம் ஏற்றுக்கொண்டால் மரணத்தைப்பற்றிய அச்சம் நம்மை விட்டு அகன்றுவிடும். அச்சமில்லாத இடத்திலே அன்பு இருக்கும் (1 யோவா 4:18). நாம் ஒவ்வொருவரும் அன்பு நடமாடும் கலைக்கூடமாக மாறுவோம்.

மரணத்தைப் பற்றிய அச்சத்திற்கு நாம் நமது மனத்தில் இடம் கொடுத்தால், மரணத்திலிருந்து, இறப்பிலிருந்து தப்புவதிலேயே நாம் நமது நேரத்தைச் செலவழித்து எதையுமே இந்த உலகத்தில் சாதிக்காமல், யாரையுமே அன்பு செய்யாமல் இறந்துவிடுவோம். இம்மையும் நம் கையைவிட்டுப் போய்விடும், மறுமையும் நம் கையைவிட்டுப் போய்விடும். ஆகவே நம்புவோம். நமக்கு ஊக்கமளிக்கும் (இரண்டாம் வாசகம்) இயேசுவின் வார்த்தைகளின் மீது நம்பிக்கை வைத்து நமது நம்பிக்கை வாழ்வில் நாளும் வளர்வோம்

இறை நம்பிக்கை என்பது கடையில் வாங்கக்கூடிய பொருள் அல்ல. அது தூய ஆவியார் நமக்குத் தருகின்ற அருள் (1 கொரி 12:9, கலா 5:22). அது கேட்பவர்களுக்குக் கொடையாக அருளப்படும் (லூக் 11:9-13).

மேலும் அறிவோம் :

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவ(து)
அஞ்சல் அறிவார் தொழில் (குறள் : 428).

பொருள் : பழி பாவங்களுக்குப் பயப்படாதிருப்பது அறிவில்லாமை ஆகும்! அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சுவது அறிஞர் செயல் ஆகும்!

வள்ளுவரின் இன்பத்துப் பாலில், கணவர் மனைவியிடம், இந்தப் பிறவியில் நாம் பிரியவே மாட்டோம்" என்று கூறியபோது மனைவி, அப்படியானால் மறு பிறவிகளில் நாம் பிரிந்து விடுவோமா?" என்று கேட்டு அழுகின்றார்.

"இம்மைப் பிறப்பில் பிரியோம் என்றேனாக்
கண்நிறை நீர் கொண்டனாள்" (குறள் 1315)

உண்மைக் காதல் என்றென்றும் நீடிக்கும்; அதற்குச் சாவு என்பதே கிடையாது. மனிதக் காதலுக்கு இவ்வளவு வலிமை இருக்குமேயாயின் தெய்வீகக் காதலுக்கு எவ்வளவு வலிமை இருக்க வேண்டும்! பழைய ஏற்பாட்டில் கடவுள் தம் மக்களுக்குக் கூறியது: “உனக்கு முடிவில்லாத அன்பு காட்டியுள்ளேன்; எனவே பேரன்பால் உன்னை ஈர்த்துள்ளேன். கன்னிப் பெண்ணாகிய இஸ்ரயேலே! உன்னை நான் மீண்டும் கட்டி எழுப்புவேன்; நீயும் கட்டி எழுப்பப்படுவாய்" (எரே 31:3-4). புதிய உடன்படிக்கையில் இயேசு கூறுவது: "உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்" (யோவா 11:26). கடவுள் நம்மை இம்மையில் மட்டுமல்ல, மறுமையிலும் அன்பு செய்கிறார். அவரது அன்பு என்றும் நிலையானது; முடிவில்லாதது.

திருவழிபாட்டு ஆண்டின் இறுதிக் கட்டத்தில், இன்றைய அருள்வாக்கு வழிபாடு உடலின் உயிர்ப்பையும் மறுமை வாழ்வையும் நினைவூட்டுகிறது. இன்றைய முதல் வாசகம் மக்கபேயர் இரண்டாம் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஒரு தாய் தனது ஏழு பிள்ளைகளுடன் சாகின்றார். ஏன்? பன்றி இறைச்சியை உண்பதைவிடச் சாவதே மேல் என்ற காரணத்திற்காக! ஏழு மகன்களில் நான்காவது மகன் சாவதற்கு முன் தன்னைக் கொடுமைப் படுத்தியவனிடம் கூறுகிறார்; "கடவுள் மீண்டும் உயிர்த்தெழச் செய்வார் என்னும் நம்பிக்கை எனக்கு இருப்பதால், மனிதர் கையால் இறக்க விரும்புகிறேன்" (2 மக் 7:14), எனவே உடலின் உயிர்ப்பை மக்கபே நூல் தெளிவாக எடுத்துரைக்கிறது. இன்றைய பதிலுரைப் பாடலும், "விழித்தெழும்போது, ஆண்டவரே உம் உருவம் கண்டு நிறைவடைவேன்" (திபா 17:15) என்று கூறுகிறது.

உடலின் உயிர்ப்பையும் மறுமை வாழ்வையும் மறுத்த சதுசேயர் இன்றைய நற்செய்தியிலே கிறிஸ்துவிடம் ஒரு சிக்கலான வழக்கை முன் வைக்கின்றனர். அடுத்தடுத்து ஏழுபேரை மணந்து கொண்ட பெண் ஒருவர் மறுமையில் யாருக்கு மனைவியாக இருக்க முடியும்? எனவே உயிர்த்தெழுதலும் மறுமை வாழ்வும் வெறும் அபத்தமானது, அதை ஏற்க முடியாது என்று வாதிடு கின்றனர். கிறிஸ்து விவிலியத்தை மேற்கோள் காட்டிப் பரிசேயரின் வாயை அடைக்கின்றார். எரியும் முட்புதரில் மோசேக்குக் காட்சி கொடுத்த கடவுள் தான் ஆபிரகாம். ஈசாக்கு. யாக்கோபின் கடவுள் என்று கூறினார். எனவே கடவுள் வாழ்வோரின் கடவுள். அவர் திருமுன் இறந்தவர்களும் உயிர் வாழ்கின்றனர் என்பதை உணர்த்தி, கிறிஸ்து மறுவாழ்வை உறுதிபட வலியுறுத்தினார்.

மறுவாழ்வு உண்டு என்பதைத் தெளிவுபடுத்திய பின்பு, அந்த வாழ்வு எத்தகையது என்பதையும் தெளிவுபடுத்துகிறார் கிறிஸ்து. விண்ணகத்தில் ஊனுடல் வாழ்வுக்கு இடமில்லை; அங்குள்ளவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை; அவர்கள் வானதூதர்களைப் போல் இருப்பர் என்கிறார் கிறிஸ்து.

திருமணமான பெண் ஒருவர் தமது பங்குத் தந்தையிடம், "சுவாமி, ஏன் விண்ணகத்தில் பெண் கொடுப்பதுமில்லை, எடுப்பதுமில்லை?" என்று கேட்டதற்குப் பங்குத் தந்தை திருவாய் மலர்ந்து கூறியது: “பெண்கள் எவரும் விண்ணகம் செல்லமாட்டார்கள். எனவே, அங்கு பெண் எடுக்கவோ கொடுக்கவோ வாய்ப்பு இருக்காது!" அதற்கு அப்பெண்மணியோ, "விண்ணகத்தில் எண்ணிக்கையில் அடங்காத ஆண்களும் பெண்களும் இருப்பார்கள். ஆனால் திருமணத்தை மந்திரிக்க குரு ஒருவர்கூட அங்கு இருக்கமாட்டார்; குருக்கள் தான் விண்ணகம் செல்லமாட்டார்கள்" என்று பதிலடி கொடுத்துப் பங்குத் தந்தையை திக்குமுக்காடச் செய்துவிட்டார்!

விண்ணகத்தில் திருமணம் இருக்காது. ஏன்? திருமணத்தின் இரண்டு நோக்கங்கள்: ஒன்று மணமக்களின் சங்கமம்; இரண்டு குழந்தை பிறப்பு. இந்த இரண்டுக்குமே விண்ணகத்தில் வேலை இருக்காது. ஏனெனில் விண்ணகத்தில் எல்லாருமே கடவுளுடன் சங்கமம் ஆகிவிடுவதால், கணவன்-மனைவி சங்கமம் தேவையில்லை . மேலும் விண்ணகத்தில் இறப்பே இருக்காது; எனவே குழந்தைப் பிறப்புக்கும் அவசியமில்லை, எல்லாவற்றிற்கும் மேலாக விண்ணகத்தில் கிறிஸ்துவே அனைவர்க்கும் மணமகனாய்த் திகழ்வார். இது வெறும் கற்பனையல்ல, உண்மை என்று திருவெளிப்பாடு நூல் கூறுகிறது. "வா, ஆட்டுக்குட்டி மணந்து கொண்ட மணமகளை உனக்குக் காட்டுவேன்” (திபெ 21:9).

உடலின் உயிர்ப்பு மற்றும் மறுமை வாழ்வு உண்டு என்பது தீர்க்கமான முடிவு: விசுவாசக் கோட்பாடு. உடலின் உயிர்ப்பையும் மறுவாழ்வையும் விசுவாசப் பொருளாய் நம்புகிறோம். இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம்... ஆனால் அவர் தோன்றும் போது நாமும் அவரைப்போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பது போல் அவரைக் காண்போம்" (1 யோவா 3:2). "இப்போது நாம் கண்ணாடியில் காண்பது போல் மங்கலாய்க் காண்கிறோம். ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம்" (1 கொரி 13:12),

நாம் எந்த அளவுக்கு மறுமை வாழ்வை விரும்புகின்றோமோ அந்த அளவுக்கு நாம் இம்மை வாழ்வை விரும்ப வேண்டும். ஏனெனில் இம்மை வாழ்வே மறுமை வாழ்வாக மலர்கிறது. பின்வரும் தாகூரின் கீதாஞ்சலி (எண் 91) நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது: “மரணமே! வாழ்வு கடைசியில் உன்னிடம்தான் நிறைவடைகிறது. நாள்தோறும் உனக்காகவே காத்து வந்திருக்கிறேன். உனக்காகவே வாழ்வின் இன்பங்களையும் வேதனைகளையும் தாங்கி வந்திருக்கிறேன். பூக்கள் தொடுக்கப் பெற்று மணமகனுக்கு மாலை தயாராக இருக்கிறது. திருமணம் முடிந்ததும் மணப்பெண் தன் இல்லம் துறந்து தன் நாயகனை இரவின் அமைதியில் சந்திப்பாள். நான் இந்த வாழ்வை விரும்பும் காரணத்தாலேயே மரணத்தையும் நேசிக்கிறேன். குழந்தைக்குப் பால் கொடுக்கும் தாய் வலது கொங்கையிலிருந்து எடுத்தவுடன் குழந்தை வீரிட்டு அழுகிறது: மறுகணத்தில் இடது கொங்கையில் ஆருயிர்க்கு அமிழ்தம் கிடைக்கும் என்பதை அது உணர்வதில்லை."

அவர் வாழ்வோரின் கடவுள்

நிகழ்வு
மலைமேல் இருந்த கிறிஸ்தவக் கிராமம் அது. அந்தக் கிராமப்புறத்தில் ஒரு மேனிலைப்பள்ளி இருந்தது. ஒருநாள் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவ மாணவிகளிடம் ஓவியப்போட்டி ஒன்றை அறிவித்து, அதில் எல்லா மாணவர்களும் கலந்துகொள்ளவேண்டும் என்றும் வரையப்படும் ஓவியம் உயிர்ப்பை எடுத்துரைக்கும் விதமாக இருக்கவேண்டும் என்றும் கூறினார்.

தலைமையாசிரியரிடமிருந்து இப்படியோர் அறிவிப்பு வந்ததைத் தொடர்ந்து எல்லாரும் மிகவும் மகிழ்ச்சியடைத்தார்கள்; நொவினா என்ற ஒரே ஒரு மாணவியைத் தவிர. அவளுக்கு ஓவியம் நன்றாக வரையத் தெரிந்திருந்தாலும்கூட, அடிக்கடி உடல்நலமின்றிப் போனதால், ஓவியப் போட்டியில் ஆர்வமின்றி இருந்தாள். இருந்தாலும், தலைமை ஆசிரியர் ஓவியப்போட்டியில் எல்லாரும் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும் என்று சொன்னதால், வித்தியாசமாக ஏதாவது முயற்சிக்கலாம் என்று அவள் யோசித்துக் கொண்டிருந்தாள்.

அவள் தன்னுடைய வகுப்பறையில் சன்னலோரமாய் இருக்கும் இருக்கையில் அமர்வது வழக்கம். அங்கு அமர்ந்துகொண்டு அவ்வப்பொழுது அவள் வெளியே கண்களைப் படரவிடுவதுண்டு. சன்னலுக்கு அந்தப் பக்கம் ரோஜாச் செடி ஒன்று இருந்தது; அது எப்பொழுதும் பூத்துக் குலுங்கும்; பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். ஆனால், ஏனோ சில மாதங்களாகவே அது கவனிப்பாரின்றிக் காய்ந்துபோய்க் கிடந்தது. நொவினா அந்தச் செடியைக் கூர்ந்து பார்த்தபோது, கம்பளிப்பூச்சி ஒன்று அதில் மெல்ல ஊர்வதும் காய்ந்துபோன அதன் இலைகளைத் திண்பதுமாக இருந்தது. இக்காட்சியைப் பார்த்துவிட்டு ‘இந்தக் கம்பளிப்பூச்சியைப் போன்றுதான் நானும் மெலிந்து காணப்படுகின்றன்’ என்று அவள் மிகவும் வேதனையடைத்தாள்.

இதற்குப் பின் வந்த நாளில் மலை உச்சியில் நல்ல மழை பெய்தது. இதனால் காய்ந்துகிடந்த அந்த ரோஜாச் செடி மெல்லத் தளிர்க்கத் தொடங்கியது; ஓரிரு வாரங்களிலேயே அந்த ரோஜாச் செடியில் வெள்ளை நிறத்தில் ஒரு ரோஜா பூத்தது. நொவினா அந்த ரோஜா மலரைப் பார்த்தபோது மிகவும் பரவசமடைந்தாள். தொடர்ந்து அவள் அந்தச் செடியைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அந்தச் செடியிலேயே வளர்ந்த கம்பளிப்பூச்சி, இப்பொழுது வண்ணத்துப்பூச்சியாய் மாறி ரோஜா மலரில் தேன்குடிக்க, அதன்மேல் வந்து அமர்ந்தது

இக்காட்சியைக் கண்டதும் நோவினா, ‘உயிர்ப்பை எடுத்துரைக்க இதைவிட வேறென்ன காட்சி வேண்டும்?’ என்று நினைத்துகொண்டு, ஒரு வெள்ளைக் காகிதத்தையும் பென்சிலையும் எடுத்துகொண்டு, மேற்பகுதியில் காய்ந்துபோன ரோஜாச் செடியையும் அதன்மீது கம்பளிப்பூச்சியையும் வரைந்து, அதற்குக் கீழ் மலர்ந்திருந்த ரோஜாவைப் பூவையும் அதன்மேல் வண்ணத்துப் பூச்சி தேன்குடிப்பதுபோன்றும் வரைந்து தலைமையாசிரியரிடம் கொடுத்தாள். அதைப் பார்த்து வியந்துபோன தலைமையாசிரியர் நொவினாவிற்கே முதல் பரிசு கொடுத்தார்.

மனித வாழ்க்கை, இந்நிகழ்வில் வருகின்ற காய்ந்துபோன ரோஜாச் செடியைப் போன்று இறப்போடு முடிந்துவிடுவதல்ல. மாறாக. காய்ந்துபோன ரோஜாச் செடி எப்படி மீண்டுமாகப் பூப்பூத்ததோ, கம்பளிப்பூச்சி எப்படி வண்ணத்துப் பூச்சியானதோ, அதுபோன்று இறப்புக்குப் பின்னும் வாழ்வு உண்டு. அத்தகைய உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய இறைவார்த்தையும் நமக்கு இதையே எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

உயிர்த்தெழுதலை மறுத்துவந்த சதுசேயர்கள்
இன்றைய நற்செய்தியில்> இயேசுவை எப்படியாவது சிக்கலில் மாட்டிவிடவேண்டும் என்று அவரிடம் வருகின்ற சதுசேயர்கள்> மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்தால்> அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு> தன் சகோதரர்க்கு வழிமரபு உருவாக்க வேண்டும் (தொநூ 38; இச 25: 5-10) என்ற மோசேயின் சட்டம் தொடர்பான ஒரு கேள்வியோடு வருகின்றார்கள். தன்னிடம் இப்படியொரு குதர்க்கமான கேள்வியோடு வந்த சதுசேயர்கட்கு இயேசு என்ன மறுமொழி கூறினார் என்று சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னம்> முதலில் யார் இந்தச் சதுசேயர்கள்…? இவர்களுடைய நம்பிக்கை என்ன…? என்பவற்றைக் குறித்துத் தெரிந்துகொள்வோம்.

சதுசேயர்கள் யூத சமூகத்திலிருந்த உயிர்குடியினர். அதனால் எருசலேம் திருக்கோயில் தொடர்பான நிர்வாகத்தில் முக்கிய இடம் வகித்தவர்கள் (திப 4:1-2) இவர்கட்கு வானதூதர்கள்மீதோ> உயிர்ப்பின்மீதோ நம்பிக்கை கிடையாது (திப 23:8); பழைய ஏற்பாட்டில் வருகின்ற முதல் ஐந்து நூல்களைத்தான் ஏற்றுக்கொண்டார்கள். இப்படிப்பட்டவர்கள்தான் இயேசுவிடம் வந்து> உயிர்ப்பு தொடர்பான கேள்வியைக் கேட்கிறார்கள். இவர்கட்கு இயேசுவிடமிருந்து பதிலைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதைவிடவும்> அவரைச் சிக்கலில் மாட்டிவிடவேண்டும் என்பதுதான் முதன்மையான நோக்கமாக இருந்தது. இத்தகையோரிடம் இயேசு என்ன மறுமொழி கூறினார் என்பதை இப்பொழுது பார்ப்போம்.

சதுசேயர்களின் கண்களைத் திறந்த இயேசு
சதுசேயர்களின் எண்ணமெல்லாம்> ‘உயிர்த்தெழுதலைப் பற்றி ஐநூல்களில் எங்கேயும் இல்லை… அதனால் இயேசுவை எப்படியும் சிக்கலில் மாட்டிவிடலாம்’ என்பதாகத்தான் இருந்திருக்கும்! இயேசுவோ அவர்களின் எண்ணங்களை அறிந்து அவர்களிடம், இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் என்பதே கிடையாது; அவர்கள் வானதூதர்களைப் போன்று இருப்பார்கள்; கடவுளின் மக்களாகவும் இருப்பார்கள் என்று தீர்க்கமாய்;க் கூறுகின்றார். இவையெல்லாவற்றிற்கும் மேலாக> எந்த ஐநூல்களில் உயிர்ப்பு பற்றி> வானதூதர்கள் பற்றி எதுவுமே இல்லை என்று சதுசேயர்கள் நினைத்திருந்தார்களோ> அந்த ஐநூல்களிலேயே உயிர்ப்பு பற்றியும் வானதூதர்களைப் பற்றியும் தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றன என்று கூறுகின்றனர்.

இயேசு சதுசேயர்கட்கு அளித்த மறுமொழியைக் கேட்டு> அவர்கள் உயிர்ப்பின் மீதும் வானதூதர்கள்மீதும் நம்பிக்கை கொண்டார்களா? என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் நாம் நம்பி ஏற்றுக் கொள்ளவும் அதன்படி வாழ்வதற்கும் நமக்கொரு செய்தி இருக்கின்றது. அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

நம் கடவுள் வாழ்வோரின் கடவுள்
இயேசு சதுசேயர்கள் கேட்ட கேள்விக்கு மறுமொழி கூறுகையில்> “அவர் இறந்தோரின் கடவுள் அல்ல;; மாறாக வாழ்வோரின் கடவுள்” என்று கூறுவார். கடவுள் வாழ்வோரின் கடவுள் எனறால்> அந்த வாழ்வோரின் கடவுளுடைய மக்களாக நாம் மாறவேண்டும் என்றால் அல்லது இறந்து> உயிர்த்தெழ வேண்டும் என்றால்> அதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பது குறித்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

யோவான் நற்செய்தியில் இயேசு கூறுவார்: “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே;; என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்” (யோவா 11:25). இந்த இறைவார்த்தையிலேயே நாம் என்ன செய்யவேண்டும் என்பதற்கான விடை இருக்கின்றது. ஆம்> நாம் இறந்து உயிர்ந்தெழுந்து> வாழும் கடவுளின் மக்களாக மாறவேண்டும் என்றால்> உயித்தெழுதலும்; வாழ்வுமான இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளவேண்டும். இதுதான் நாம் செய்யவேண்டிய முதன்மையான செயலாக இருக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில் ஒரு தாயும் அவருடைய ஏழு மகன்களும்; ஆண்டவர் தங்களை உயிர்த்தெழச் செய்வார் என்று நம்பினார்கள். நாமும் அவர்களைப் போன்று நம்பி> இயேசுவின் வழியில் நடந்தால்> உயிர்த்தெழுந்து கடவுளின் மக்களாவோம் என்பது உறுதி.

சிந்தனை
இயேசுவே ஆண்டவர்’ என் வாயார அறிக்கையிட்டு> இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளுர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள்’ (உரோ 10:9) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் வாழ்வோரின் கடவுளான ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டு> அவர்க்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வோம். அதன்மூலம் கடவுளின் அன்புமக்களாக மாறும் பேறுபெறுவோம்.

ser

இறப்பை நிரப்பும் நம்பிக்கை!

நான் என்னுடைய முனைவர் பட்ட ஆய்வில் சபை உரையாளர் 11:4-12:8 மற்றும் பட்டினத்தாரின் உடற்கூற்றுவண்ணம் என்னும் இரண்டு பாடல்களை ஒப்பீடு செய்தேன். ஆய்வின் ஒரு கட்டத்தில், 'வீண் முற்றிலும் வீண். எல்லாமே வீண்' என்னும் சபை உரையாளரின் முடிவுரையும், பட்டினத்தாரின், 'ஓர் பிடி நீறும் இலாத உடம்மை நம்பும் அடியேனை இனி ஆளுமே!' என்னும் இறைவேண்டலும் எல்லா நேரத்திலும் சரி என்று சொல்லிவிட முடியாது என்று கண்டேன். ஏன்? நாம் கட்டுகின்ற அனைத்தும் ஒருநாள் உடையும் என்று தெரிந்தும் நாம் ஏன்னும் இன்னும் கட்டிடம் கட்டுகிறோம்? நாம் சேர்க்கின்ற செல்வங்கள் எதையும் நம்மால் கொண்டு செல்ல முடியாது என்று தெரிந்தும் ஏன் செல்வம் சேர்க்கிறோம்? நாம் படிக்கின்ற அனைத்தையும் ஒருநாள் மறப்போம் என்று தெரிந்தும் ஏன் படிக்கிறோம்? நாம் உண்கின்ற உணவு சில மணி நேரங்களில் செரித்து மீண்டும் பசிக்கும் என்று தெரிந்தும் ஏன் உண்கின்றோம்? நாம் உடுக்கின்ற உடை அந்த நாளின் மாலையில் அழுக்காகிவிடும் என்று தெரிந்தும் நாம் ஏன் தூய்மையாக ஆடை அணிகின்றோம்? நாளின் இறுதியில் எல்லாம் உடையும், களையும், மறக்கும், செரிக்கும், அழுக்காகும், இறக்கும். ஆனால், நாள் முழுவதும் அது வாழ்கிறதே அந்த ஒன்றிற்காகத்தான் நாம் அனைத்தையும் செய்கின்றோம். நாம் கட்டுகின்ற போது காட்டுகின்ற உழைப்பு, செல்வத்தைச் சேர்க்க நாம் மேற்கொள்ளும் முயற்சி, படிப்பதற்கு நாம் காட்டும் ஆர்வம், உணவில் நாம் பெறும் ஆற்றல், ஆடையில் நாம் பெறும் தன்மதிப்பு போன்றவைதாம் நாளின் இறுதியில் நாம் அனுபவிக்கும் இறப்பு அனுபவத்தை நிரப்பும் நம்பிக்கை நீரூற்றுக்களாக இருக்கின்றன.

இறப்பு என்னும் நிகழ்வு எல்லாவற்றையும் வெறுமையாக்கிவிடுகிறதோ என்ற அச்சம் அன்று முதல் இன்று வரை எல்லாருக்கும் இருக்கிறது. இறப்புக்குப் பின் ஒன்றும் இல்லை என்று சொன்னால் நாம் வாழ்வது எல்லாம் வீணாகி விடுமே என்ற கவலையும் அத்தோடு சேர்ந்துவிடுகிறது.

இறப்பு என்னும் வெறுமையை நம்பிக்கை நிரப்புகிறது என்று நமக்கு முன்மொழிகிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

இன்றைய முதல் வாசகம் (காண். 2 மக் 7:1-2,9-14) இணைத்திருமுறைநூல்களில் ஒன்றான மக்கபேயர் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கி.மு. 168ஆம் ஆண்டு இஸ்ரயேல்-பாலஸ்தீனத்தை ஆளுகின்ற அந்தியோக்கஸ் எபிஃபேனஸ் என்ற மன்னன் கிரேக்க கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை யூத மக்கள்மேல் புகுத்தி, யூத சமயத்திற்கும், கடவுளுக்கும் பிரமாணிக்கமாக இருந்த அனைவரையும் கொல்கின்றான். அவர்கள் தங்களுடைய சட்டங்களைப் பின்பற்றுவதிலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்துகின்றான். அவர்கள் விலகிவிட்டார்களா என்று பார்ப்பதற்கான ஒரு வழியாக அவர்களை பன்றியின் இறைச்சி உண்ணுமாறு கட்டளையிடுகின்றான். இப்படியாக, ஒரு குடும்பத்தில் உள்ள ஏழு மகன்களையும் அவர்களின் தாயாரையும் பன்றி இறைச்சி உண்ணச் செய்யும் நிகழ்வே இன்றைய முதல் வாசகம். தங்களுக்கு எந்த தீங்கு வந்தாலும், தாங்கள் எவ்வித சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டாலும் தங்களுடைய சட்டத்தை விட்டுவிட மறுக்கிறார்கள் இவர்கள். முதல் சகோதரர், 'கடவுளின் திருச்சட்டத்தை மீறுவதைவிட சாவதே மேல் என்றும், கடவுள் அவர்மேல் நம்பிக்கை கொண்டவர்கள் நிலைவாழ்வுக்கு உயிர்ப்பிப்பார்' என்றும் சொல்லிக்கொண்டு உயிர் துறக்கிறார். இரண்டாமவரின் நாக்கும் கைகளும் வெட்டப்பட்டபோதும் குறைவான அவருடைய உடலை கடவுள் உயிர்ப்பின்போல் நிறைவானதாக்குவோர் என்று சொல்லி இறக்கிறார். மூன்றாமவர் கடவுளின் நீதியையும் மற்றும் நேர்மையையும் முன்னிறுத்தி, கடவுளுக்காக இறப்பவர்கள் வாழ்வைப் பெறுவார்கள் என்றும், தீய அரசன் உயிர்ப்பை அனுபவிக்க மாட்டான் என்றும் எச்சரிக்கின்றார்

.

இவர்களுடைய இந்த வார்த்தைகள் வீண் பிடிவாதத்தால் எழுந்த வார்த்தைகள் அல்ல. மாறாக, அவர்கள் கடவுளையும் கடவுளின் மறைநூலையும் அறிந்திருந்த அறிவின், அனுபவத்தின் பின்புலத்தில் எழுந்த வார்த்தைகள். கடவுள் தம்மை நம்பும் அடியார்களை நீடித்த அழிவுக்கு உட்படுத்தமாட்டார் என்று அவர்கள் புரிந்துவைத்திருந்தார்கள். இறப்புக்குப் பின் வாழ்வு அல்லது நிலைவாழ்வு பற்றிய நம்பிக்கை இஸ்ரயேல் மக்கள் வரலாற்றில் மிகவும் பிந்தைய காலத்தில்தான் உருவாகிறது. 'இறந்த உம் மக்கள் உயிர்பெறுவர். அவர்களின் உயிரற்ற உடல்கள் மீண்டும் எழும்' என்று எசாயாதான் இந்த நம்பிக்கையை முதன்முதலில் விதைக்கிறார் (காண். 26:19). தொடர்ந்து எசா 25:8, ஒசே 13:14, திபா 16:9-11, 17:15 ஆகிய இடங்களிலும் இதையொத்த குறிப்புக்களைப் பார்க்கின்றோம். இறப்புக்குப் பின் நிகழும் தண்டனைத் தீர்ப்பு பற்றிய புரிதல் தானியேல் 12:2ல் இடம் பெறுகிறது: 'இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர். அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர். வேறு சிலரோ வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவர்.' இது ஏறக்குறைய மக்கபேயர் நூல் காலத்தில் எழுதப்பட்டதே. தங்களுடைய கடவுளின் நன்மைத்தனம் பற்றியும், அவருடைய பேரன்பு பற்றியும் அனுபவித்த இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய கடவுள் தங்களை எதிரியின் பிடியில் விட்டுவிட்டாலும், எதிரியை நீடித்த அழிவிற்கும், தங்களை நீடித்த வாழ்விற்கும் உயிர்ப்பிப்பார் என்று உறுதியாக நம்பினார்கள். ஏழு சகோதரர்களும், அவர்களுடைய தாயாரும் இறக்கத் துணிந்தது இந்த நம்பிக்கையால்தான். ஆக, இவர்களுடைய இறப்பை நிரப்பியது 'இறப்புக்குப் பின் வாழ்வு' என்ற நம்பிக்கையே.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 2 தெச 2:16-3:5), ஆண்டவரின் இரண்டாம் வருகை பற்றிய போலிப் போதனையை விலக்கும் நோக்குடன் அவர்களுக்கு அறிவுறுத்தும் பவுல், அவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்காக இறைவேண்டல் செய்கின்றார். 'ஆண்டவர் விரைவில் வருகிறார்' என்ற எண்ணத்தில் 'வாழ்வில் எதுவுமே நிலையானது அல்ல' என்று சொல்லிச் சிலர் சோம்பித் திரிந்தனர். 'ஆண்டவர் வரக் காலம் தாழ்த்துகிறார்' என்ற எண்ணத்தில் இன்னும் சிலர், 'இப்போது இருக்கும் பாவ நிலையிலேயே தொடர்ந்து இருப்போம்' என்றனர். இந்த இரண்டுமே தவறான எண்ணங்கள் என்று அறிவுறுத்துகின்ற பவுல், 'ஆண்டவர் நம்பிக்கைக்குரியவர். அவர்கள் உங்களை உறுதிப்படுத்தி, தீயோனிடமிருந்து காத்தருள்வார். கடவுளின் அன்பையும், கிறிஸ்துவின் மன உறுதியையும் அடைய ஆண்டவர் உங்களைத் தூண்டுவாராக!' என்று ஆசீர்வதிக்கின்றார்.

ஆக, இரண்டாம் வருகை அல்லது உலக அழிவு என்னும் இறப்பின் வெறுமையை நிரப்புவது கடவுளின் அன்பும் கிறிஸ்துவின் மனஉறுதியுமே.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 20:27-38) சதுசேயர்களுக்கும் இயேசுவுக்கும் இடையே நிகழ்ந்த விவாதத்தை நம் கண்முன் கொண்டுவருகிறது. சதுசேயர்கள் இயேசுவின் சமகாலத்தில் உள்ள யூத சமூகத்தின் ஒரு பிரிவினர். இவர்கள் செல்வந்தர்கள். ஆளும் வர்க்கத்தினர். மேட்டுக்குடியினர். எருசலேம் ஆலயத்தையும் அதன் வரவு செலவுகளையும் இவர்களே மேலாண்மை செய்தார்கள். உரோமை அதிகார வர்க்கத்தோடு தோளோடு தோள் கொடுத்து நின்றனர். விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களை (தொடக்கநூல், விடுதலைப் பயணம், லேவியர், எண்ணிக்கை, இணைச்சட்டம்) மட்டுமே தூண்டப்பட்ட நூல்களாக ஏற்றுக்கொண்டனர். அவற்றில் சொல்லப்படாத எதையும் நம்பாதவர்கள். உயிர்ப்பு, இறப்புக்குப் பின் வாழ்வு, வானதூதர்கள் ஆகியவற்றில் நம்பிக்கை இல்லாதவர்கள். இந்தப் பின்புலத்தில் 'உயிர்ப்பு' அல்லது 'இறப்புக்குப் பின் வாழ்வு' என்னும் நம்பிக்கை ஐந்நூல்களுக்கு முரணாக இருப்பதை இயேசுவிடம் உணர்த்த விரும்புகிறார்கள்.

இச 25:5 அறிவுறுத்தும் 'லெவிரேட் திருமணம்' ('சகோதரர் திருமணம்') என்னும் கூற்றை எடுத்து, ஒரு பெண் இவ்வுலகில் திருமணத்திற்காக ஏழு சகோதரர்களை மணந்தால், இறப்புக்குப் பின் ஏழு பேரை மணமுடிக்க வேண்டுமே, அது யூதச் சட்டத்திற்கு எதிரானதாகுமே என்றும் கேள்வி எழுப்புகின்றனர் சதுசேயர்கள். அவர்களின் வாக்குவாதம் ஆதாரமற்றது என எண்பிக்கிறார் இயேசு. முதலில், மறுவாழ்வில் இறப்பு இல்லை என்பதால் திருமணம் முடிக்கவும், குழந்தை பெற்றுக்கொள்ளவும், குழந்தைகள் வழியாகப் பெற்றோர்கள் வாழவும் தேவையில்லை. அவர்கள் 'சாகமுடியாத', 'வானதூதரைப் போல இருக்கின்ற' ஒரு நிலையை அடைவார்கள். இது பூமியில் நாம் வாழ்க்கையைவிட வித்தியாசமானது. இரண்டாவதாக, சதுசேயர்கள் தங்களுடைய மறைநூலை அறியாதவர்களாக இருப்பதை அவர்களுக்கு உணர்த்துகிறார் இயேசு. விப 3:1-6, எரியும் முட்புதர் நிகழ்வில், தம்மை மோசேக்கு வெளிப்படுத்தும் கடவுள், தம்மை குலமுதுவர்களின் - ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் - என்று வெளிப்படுத்துகின்றார். கடவுள் வாழ்வோரின் கடவுளாக இருப்பதால் இறந்தவர்களும் அவரோடு வாழ்வார்கள். ஆக, இறப்புக்குப் பின் வாழ்வு இல்லை என்பது பொருளற்றது.

ஆக, இறப்பு என்னும் வெறுமையை கடவுள் நிரப்புகிறார்.

இவ்வாறாக, இன்றைய முதல் வாசகத்தில் இறப்பு என்னும் வெறுமையை 'இறப்புக்குப் பின் வாழ்வு' என்ற நம்பிக்கையும், இரண்டாம் வாசகத்தில் 'கடவுளின் அன்பும் கிறிஸ்துவின் மனஉறுதியும்,' நற்செய்தி வாசகத்தில் 'வாழ்வோரின் கடவுளில் நாம் வாழ்கிறோம்' என்ற நம்பிக்கையும் நிரப்புகின்றன.

இறப்பு ஏற்படுத்தும் வெறுமையை நாம் எளிதாகச் சொல்வதுபோல நிரப்பிவிட முடியாது. அதற்குச் சில நாள்கள் ஆகலாம், மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகலாம். அதே வேளையில் இது சாத்தியமில்லை என்றும் சொல்லிவிட முடியாது.

நம்முடைய வாழ்விற்குப் பொருள் இல்லை என்று புலம்புவதை விடுத்து, நம் வாழ்விற்குப் பொருள் கொடுப்பது நம் கையில் என்ற பொறுப்புணர்விற்குக் கடந்தால், திருப்பாடல் ஆசிரியர் போல், 'நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன். விழித்தெழும்போது உமது உருவம் கண்டு நிறைவுபெறுவேன்' (17:15) என்று நாமும் சொல்ல முடியும்.

ser

sunday homily


முகப்பு பக்கம்
வத்திக்கான் வானொலி
கத்தோலிக்க இதழ்கள்
ஞாயிறு வாசகம்
விருந்தினர் பக்கம்
உம் வாக்கே விளக்கு!
சென்னை பங்குதலங்கள்
நூலகம்
திருத்தலச் சுற்றுலா
தவக்கால சிந்தனைகள்
ஒலியும் ஒளியும்
அன்னை தெரேசா
கிறிஸ்மஸ் மலர்கள்
பொங்கல்
செபமாலை
பாடல்கள்
செபமே ஜெயம்A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com