மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலம் முப்பத்து ஒன்றாம் ஞாயிறு
மூன்றாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
சாலமோன் ஞானம் . 11:22-12:2 | 2 தெசலோனிக்கர். 1:11-2:2 | லூக்கா 19:1-10

இன்று இவ்வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று

இன்றைய நற்செய்தியிலே அறிமுகப்படுத்தப்படும் சக்கேயு, யூத மக்களால் மூன்று நிலைகளிலே வெறுக்கப்பட்டவர். குள்ளமான மனிதன் என்பதாலும், அந்நியர் உரோமை பேரரசுக்குக் கைக்கூலியாக இருந்து, வரி வசூலித்து கொடுத்ததாலும், கெடுபிடியாக, அநியாயமாக வரி வசூலித்ததாலும் யூத மக்களின் நன்மதிப்பை இழந்து, தீண்டத்தகாதவன் போல , ஆயக்காரன், பாவி என்ற பட்டம் சூட்டப்பட்டு, உனக்கு மீட்புக் கிடையாது என்று மக்களால் ஓரங்கட்டப்பட்டவர் இந்த சக்கேயு. சக்கேயு என்பது தூய்மை எனப் பொருள்படும்.

பள்ளத்தாக்கிலிருந்து எரிக்கோ வழியாக இயேசு கடந்து சென்றார். மக்கள் திரளாய் கூடியிருந்தார்கள். குட்டையான சக்கேயு இயேசுவைப் பார்க்க முடியவில்லை . தன் சுய மரியாதையைக் கூட மறந்து, தான் ஒரு பணக்காரன் என்பதையும் பொருள்படுத்தாது, முன்னே ஓடி ஒரு முசுக்கட்டை மரத்தில் ஏறிக்கொண்டார். இயேசுவை நன்றாகப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவரை செயலில் ஈடுபட வைத்தது. மக்களின் ஏளனத்தையும் நினைக்கவில்லை . ஏனெனில் இயேசுவின் தரிசனம் தனக்கு வேண்டுமென்று ஏங்குகிறார்.

ஆண்டவனை நோக்கி நாம் ஓரடி எடுத்து வைத்தால் அவர் ஓராயிரம் அடிகள் எடுத்து வைத்து நம்மை அரவணைத்துக் கொள்பவர் அல்லவா! எனவே இயேசு அந்த இடத்திற்கு வந்ததும் அண்ணாந்து பார்த்தார். இயேசுவின் அன்புப் பார்வை கருணையின் பார்வை, பாசமுள்ள பார்வை, கனிவான பேச்சும் சக்கேயுவின் உள்ளத்தை ஊடுருவின . "சக்கேயுவே, விரைவாய் இறங்கி வாரும்! (லூக். 19:5). இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்" என்று இயேசு அழைத்தார். சக்கேயு' என்று பெயர் சொல்லி உரிமையோடு அழைக்கிறார் இயேசு . சக்கேயு அழைப்புகொடுக்கு முன்பே, தாமே முன் வந்து அவர் வீட்டில் தங்க, அவரோடு உறவு கொள்ள முனைகிறார். சக்கேயு பாவி என்று அறிந்திருந்தும், எவ்வித நிபந்தனையுமின்றி இயேசு அவரது வீட்டில் தங்கச் சென்றார். ஏனெனில் அவர் பாவிகளைத் தேடி வந்தவர் அல்லவா! (மத். 9:13).

இயேசுவின் இந்த அன்பு மொழிகளைக் கேட்ட சக்கேயு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அன்போடு தன் வீட்டில் வரவேற்றார். போயும் போயும் இவர் இந்த பாவியின் வீட்டில் தங்கப் போயிருக்கிறாரே என்று முணு முணுத்தனர் பரிசேயர், சதுசேயர் கூட்டம். ஆனால் புனிதம் தன் வீட்டிற்கு வர, மாபெரும் மனமாற்றம் பெற்று பாவியாகிய சக்கேயு புனிதம் அடைகிறார். அதற்குப் பரிகாரமாகத்தான், என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன். எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி, எதையாவது கவர்ந்திருந்தால் அதை நான்கு மடங்காக திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என்றும் அறிக்கையிடுகிறார் சக்கேயு.

சிந்தனை


1. இயேசுவை 'ஆண்டவரே' என்று அழைப்பதின் மூலம் தன் பணப்பற்றை விட்டு, இறைப்பற்று உள்ளவராக மாறுகிறார்.
2. தன் உடைமைகளை ஏழைகளுக்கு இலவசமாக கொடுப்பதின் மூலம், அயலாரோடு உறவை வளர்த்துக் கொள்கிறார்.
3. அநியாயமாக சேர்த்த சொத்துக்கு பரிகாரமாக நான்கு மடங்கு திருப்பிக் கொடுத்து, நீதியை நிலை நாட்டுகிறார் சக்கேயு. நாமும் இயேசுவைச் சந்திப்போமா ? இறை உறவில் புனிதம் பெறுவோமா?

ser

சந்திப்போமா?

சில பிரச்சினைகளை மற்றவர் உதவி கொண்டு தீர்த்துக்கொள்ளலாம். சில பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்ளலாம். சில பிரச்சினைகளைக் கடவுளால் மட்டும்தான் தீர்த்துவைக்க முடியும். அப்படிப்பட்ட பிரச்சினைகளில் ஒன்று பாவ மன்னிப்புப் பெறும் பிரச்சினை. பாவ மன்னிப்பு என்பது கடவுளால் மட்டுமே அருளப்படும் ஒரு விண்ணகக் கொடை. கடவுளைப் பற்றி அறியாதவர்களுக்கு பாவ மன்னிப்பு என்பது ஒரு பெரிய பிரச்சினையே! கடவுளைப் பற்றி அறிந்து அவரைச் சந்தித்தாலன்றி நமக்குப் பாவ மன்னிப்பு சாத்தியமில்லை!

இதோ சக்கேயு நம்முன்னே நின்று நம்மோடு இவ்வாறு பேசுகின்றார்: என் இனிய நெஞ்சங்களே ! என் பெயர் சக்கேயு. சக்கேயு என்ற எபிரேயச் சொல்லுக்கு தூய்மை, நேர்மை என்பது பொருள். ஆனால் என் பெயருக்கு எதிர்மாறான வாழ்க்கையை நான் வாழ்ந்து வந்தேன். யூத மக்களின் பணத்தை வரியாக வசூலித்து உரோமையருக்குக் கொடுத்து வந்தேன். என்னிடம் பணமிருந்தது. ஆனால் எல்லாராலும் வெறுக்கப்பட்டேன். வீட்டுக்குள்ளே பொன்னகை இருந்தது. ஆனால் என் முகத்தில் புன்னகை இல்லை ! பணத்தை வைத்து எல்லாவற்றையும் வாங்கிவிட்டேன். ஆனால் என் நெஞ்சுக்கு வேண்டிய நிம்மதியை என்னால் எங்கேயும் வாங்கமுடியவில்லை! என் மனம் பாவ மன்னிப்பிற்காக ஏங்கியது. என்னைச் சுற்றியிருந்தவர்களால் எனக்கு உதவி செய்ய முடியவில்லை. காரணம் எல்லாரும் பாவிகளாயிருந்தார்கள்.

ஒரு நாள் பாவமற்ற இயேசுவைப் பற்றிய அறிவு எனக்குக் கிடைத்தது. அவரைச் சந்திக்க ஆசைப்பட்டேன்; சந்தித்தேன்; அவர் என்னைச் சந்தித்தார். வசந்த சந்திப்பு! என் பாவங்களை இயேசு மன்னித்து எனக்கு மீட்பு அளித்தார். மீட்பு என்றால் நீதி, மீட்பு என்றால் அமைதி, மீட்பு என்றால் மகிழ்ச்சி.

நீங்களும் என்னைப்போல இயேசுவைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்; அவரைச் சந்தியுங்கள். சாலமோனின் ஞானம் கூறுவதுபோல கடவுள் அவரால் படைக்கப்பட்ட மனிதர்கள் எல்லாரும் வாழ வேண்டுமென்று விரும்பி எல்லாருடைய பாவங்களையும் மன்னிக்கின்றார். அவர் நமது அழைப்புக்கு ஏற்ப நம்மைத் தகுதியுள்ளவராக்குவார் என்கின்றார் புனித பவுலடிகளார் (இரண்டாம் வாசகம்).

நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே! நாம் அவரது அன்பைப் பெற ஆவலாக இருக்கின்றோம் என்பதைக் கடவுளுக்கு வெளிப்படுத்தினால் போதும்! மற்றவை அனைத்தையும் அவர் பார்த்துக்கொள்வார்.

இதோ ஒரு கதை!
அன்பு நிறைந்த ஆயன் ஒருவன்! சூரியன் சாயும் வேளையிலே ஆட்டுமந்தையிலுள்ள ஆடுகளை எண்ணினான். ஓர் ஆடு குறைந்தது! அது ஓர் ஊதாரி ஆடு! குறும்புக்கார ஆடு!

அது சுதந்தரமாக மேய எங்கோ சென்றுவிட்டது ! சென்ற இடத்தில் ஒரு குன்றின் மீது நடந்து சென்ற போது தவறி முள்புதர் ஒன்றுக்குள் விழுந்தது! அந்தப் புதரை விட்டு அந்த ஆட்டினால் வெளியே வரமுடியவில்லை! ஆயன் தேடி அலைந்தான்! அவனால் அந்த ஆட்டைக் கண்டுபிடிக்கமுடியவில்லை ! இரவு பிறந்தது! ஆட்டுக்குப் பயம்! தன் பலம் கொண்டவரை கத்தியது ! தான் இருக்குமிடத்தை எப்படியாவது ஆயனுக்குத் தெரியப்படுத்த விரும்பியது ! ஆயன் காதில் சத்தம் விழுந்தது! சந்திப்பு நிகழ்ந்தது. அந்த ஆடு காப்பாற்றப்பட்டது! அந்த ஆட்டை தன் தோளில் சுமந்து அந்த ஆயன் மந்தைக்குத் திரும்பினான்! இந்தக் கதையில் வந்த ஆட்டைப்போன்று வாழ நாம் முன் வந்தால் நாம் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் இயேசு நம்மைத் தேடிவந்து மன்னித்து அவரது மந்தையிலே நம்மைச் சேர்த்துக்கொள்வார்.

மேலும் அறிவோம் :

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. (குறள் : 7)

பொருள் :
தன்னிகரற்ற அருளாளனாகிய இறைவன் திருவடி சேர்வோர் உள்ளத்தில் துன்ப துயரங்கள் நீங்கிவிடும். ஏனையோர் மனக்கவலை மாறாது.

பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ

ஒரு தம்பதியர் தங்களுடைய ஒரே மகளின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்க வேண்டுமென்று அல்லும் பகலும் அயராது உழைத்தனர். ஆனால் தங்களுடைய மகளுடன் பேசிச் சிரித்து விளையாட அவர்களுக்கு நேரமில்லை . ஒருநாள் அச்சிறுமி அழுது கொண்டு, "இந்த வீட்டில் நான் ஓர் அனாதை" என்றாள். இன்றைய உலகைப் பீடித்துள்ள மாபெரும் சாபக்கேடு ஒருவன் தன் சொந்த வீட்டிலேயே அன்னியனாக வாழும் அவலநிலை. அன்னை தெரசா அடிக்கடி கூறியது: “இவ்வுலகில் பெரிய சாபம், எவராலும் விரும்பப்படாமல் புறக்கணிக்கப்படும் நிலை." எனவேதான் அவர் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு மட்டுமல்ல அன்பையும் வழங்கினார். "சாக்கடையில் தள்ளப்பட்டோரின் புனிதர்" (Saint of tie Gutters) என்று அவர் அழைக்கப்பட்டார்.

இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் சக்கேயு, தான் வாழ்ந்த சமுதாயத்தில் அன்னியமாக்கப்பட்டிருந்தார். அவருக்குப் பணமும் மற்ற எல்லா வசதிகளும் இருந்தன. இருப்பினும் அவர் சமுதாயத்தில் தனிமைப்படுத்தப்பட்டார். அவர் எல்லாராலும் புறக்கணிக்கப்பட்டு, “பாவி" என்று முத்திரை குத்தப்பட்டார். ஏனெனில், அவர் உரோமைப் பேரரசின் கைக்கூலியாகச் செயல்பட்டார். அவர் வரிதண்டுபவர். மக்களைக் கசக்கிப் பிழிந்த சமுதாய விரோதி. இருப்பினும் கிறிஸ்து அவரையும் அன்பு செய்தார்; கடவுள் அவருக்கும் அந்நியர் அல்ல, நெருக்கமானவர். ஏனெனில் கடவுள் பாவத்தை வெறுத்தாலும் பாவிகளை அன்பு செய்கிறார்.

இன்றைய முதல் வாசகம் கூறுகிறது: கடவுள் தாம் படைத்த அனைத்தையும் அன்பு செய்கிறார்; அவற்றில் எதையும் அவர் வெறுப்பதில்லை; கடவுள் ஒருவரை வெறுத்தால் அவரைப் படைத்திருக்கவே மாட்டார் (சாஞா 11:24). இன்றைய பதிலுரைப் பாடலும் கூறுகிறது: “ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்;... தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார்; தாழ்த்தப்பட்ட யாரையும் தூக்கிவிடுகிறார் " (திபா 145:8,14).

கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தது, எவரையும் அழிக்காமல் எல்லாரையும் மீட்கவே (யோவா 3:16). கிறிஸ்துவைப் பார்த்தாலே போதும் என்று ஒரு முசுக்கட்டை மரத்தில் ஏறிய சக்கேயுவைப் பார்த்து கிறிஸ்து கூறியது: "சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும். இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்" (லூக் 19:5). நாம் கடவுளுக்கு அன்னியராய் வாழ்ந்தாலும் கடவுள் நமக்கு நெருக்கமாய் இருக்கிறார். நம் உள்ளத்தில் குடிகொள்ள விரும்புகிறார். “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்" (யோவா 14:23),

திருமணமான ஒரு பெண் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தாள். அவ்வீட்டின் உரிமையாளரைப் பார்த்து, "இவர்தான் என் வீட்டுக்காரர்" என்று அவர் கேலியாகச் சொன்னது பெரிய சண்டையில் முடிந்தது. "வீட்டுக்காரர்" என்று அவர் கூறியதின் பொருள்: இவர் இந்த வீட்டின் சொந்தக்காரர்; ஆனால், "வீட்டுக்காரர்" என்ற சொல்லைக் “கணவர்" என்ற பொருளில் எடுத்துக் கொண்டதால் பெரிய புயல் கிளம்பிவிட்டது!

நமது வீட்டுக்காரர் யார்? கிறிஸ்துவே நமது வீட்டுக்காரர். நமது உள்ளத்தில் குடியிருக்க வேண்டியவர். கிறிஸ்து நமது உள்ளத்தில் குடியிருக்க வேண்டுமென்றால், சக்கேயு மரத்திலிருந்து கீழே இறங்கி வந்தது போல நாமும் நமது ஆணவம், பணம், பதவி, பட்டம் ஆகியவற்றிலிருந்து கீழே இறங்கி வர வேண்டும். அதற்கு நாம் தயாராய் இருக்கின்றோமா?

சக்கேயு கிறிஸ்துவைச் சந்தித்தபின் அவர் புது மனிதராக மாறிவிட்டார். கிறிஸ்துவின் பிரசன்னம் அவரை முற்றிலுமாக மாற்றி விட்டது. தனது உடைமைகளில் பாதியை ஏழைகளுக்கு கொடுக்கவும், தான் செய்த அநீதிகளுக்கு நான்கு மடங்காகப் பரிகாரம் செய்யவும் அவர் முன்வந்தார். "ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ " (2கொரி 5:17).

கிறிஸ்துவின் பிரசன்னமும் அவருடைய அருள்வாக்கும் நம்மை முற்றிலுமாக மாற்ற வேண்டும். ஆனால் நாமோ பழைய குட்டையிலே ஊறிய மட்டைகளாக இருக்கின்றோம்.

தூக்கத்தில் நடக்கும் வியாதியால் துன்புற்ற ஒருவர் ஒரு மருத்துவரிடம் ஆறு மாதங்கள் சிகிச்சை பெற்றார். அதன் பிறகு அவர் மருத்துவரிடம் கூறியது; "டாக்டர், உங்களிடம் சிகிச்சை பெறும் முன் நான் தூங்கிக்கொண்டே நடந்தேன். இப்போது நடந்துகொண்டே தூங்குகிறேன்." ஒரு முன்னேற்றமும் இல்லை. அவ்வாறே நாமும் தவறு செய்துகொண்டே திருப்பலிக்கு வருகின்றோம். திருப்பலி முடிந்த பின் மீண்டும் மீண்டும் அதே தவறுகளைச் செய்ய வீடு திரும்புகிறோம்.

கிறிஸ்துவை நாம் உண்மையிலேயே சந்தித்தோம் என்றால், நாம் பழைய மனிதராக இருக்க முடியாது. கிறிஸ்துவைச் சந்தித்த பிறகு நாம் நாமாக இருக்க முடியாது. திருத்தூதர் பவுலைப் போல, "இனி வாழ்பவன் நானல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்” (கலா 2:20) என்று கூறக்கூடிய மனமாற்றம் நம்மில் நிகழ வேண்டாமா? "இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று" (லூக் 19:9) என்று இயேசு சக்கேயுவிடம் கூறினார். அதே இயேசு நம்மிடம் கூறுவதென்ன? “இதோ. நான் கதவு அருகில் நின்று தட்டிக் கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன். அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்” (திவெ 3:20).

நமது இதயக் கதவை ஆண்டவருக்கு அகலத் திறந்து விடுவோம். இழந்து போனதைத் தேடி மீட்க வந்த ஆண்டவர் (லூக் 19:10) நமக்குள் வந்து, அவரது பிரசன்னத்தால் நம்மை முற்றிலும் மாற்றிப் புதுவாழ்வு அளிப்பாராக. இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுவது போல, கடவுள் நம்மை அவர் விடுக்கும் அழைப்புக்குத் தகுதியுள்ளவர்களாக்கி, நம் நல்லெண்ணம் ஒவ்வொன்றையும், நம்பிக்கையால் தூண்டப்படும் ஒவ்வொரு செயலையும் தம் வல்லமையால் நிறைவுறச் செய்வாராக (2 தெச 1:11).

இ(ற)ழந்துபோனதை மீட்க வந்த இயேசு

நிகழ்வு
ஒரு சிற்றூரில் கிறிஸ்தவர் ஒருவர் இருந்தார். அவர் பெயருக்குத்தான் கிறிஸ்தவராக இருந்தாரே ஒழிய, மிகவும் தாறுமாறாக வாழ்ந்து வந்தார்; அவருடைய மனைவி இவர்க்கு முற்றிலும் மாறாக, எல்லார்க்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்து வந்தார். அவர் தன்னுடைய கணவரிடம் எவ்வளவோ அறிவுரைகள் சொன்னபோதும்கூட, அவை விழலுக்கு இறைத்த நீர்போன்று வீணாய்ப்போயின.

அந்தக் கிறிஸ்தவர் ஒவ்வொருநாளும் காட்டிற்குச் சென்று விறகுகளை வெட்டி, அவற்றைக் கொண்டு சந்தையில் விற்று, அதன்மூலம் பிழைப்பை ஓட்டிவந்தார். ஒருநாள் அவர் வழக்கம்போல், தன்னுடைய தோள்மேல் கோடாரியைப் போட்டுக்கொண்டு காட்டுக்கு விறகு வெட்டச் சென்றார். அன்று அவருடைய பார்வைக்கு காய்ந்து, பட்டுப்போன ஒரு மரம் வெகு சீக்கிரத்திலேயே தென்பட்டது. உடனே அவர் அந்த மரத்திற்கு அருகில் சென்று, அதை வெட்டத் தொடங்கினார். அப்பொழுது அவர்க்குள் இருந்து ஒரு குரல், “நீயும் காய்ந்து. பட்டுப்போன மரம்போன்றுதானே இருக்கின்றாய்...! கடவுள் உன்னையும் வெட்டியெறிய நினைத்தால் நீ என்ன செய்வாய்...?” என்று ஒலித்தது. அவர் திடுக்கிட்டுப் போனார். ‘என்ன இது...? இப்படியொரு குரல் ஒலிக்கின்றதே...?’ என்று ஒருகணம் சிந்திக்கத் தொடங்கினார். பின்னர் அவர் அந்தச் சிந்தனையை ஓரம்கட்டிவிட்டு, மரத்தை வெட்டத் தொடங்கினார்.

சிறிதுநேரம் கழித்து, முன்புகேட்ட அதே குரல் கேட்டது. அவர் ஆடிப்போனார். ‘என்ன இது...? முன்பு கேட்ட அதே குரல் கேட்கின்றதே...?’ என்று சிந்திக்கத் தொடங்கிய அவர், ‘இதையே நினைத்துக் கொண்டிருந்தால் இன்றைக்குப் பட்டினி கிடக்கவேண்டியதுதான்!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டு, மரத்தை வெட்டத் தொடங்கினார். சிறிதுநேரத்தில் முன்பு கேட்ட அதே குரல் மீண்டுமாக அவர்க்குக் கேட்டது. அவர் அப்படியே மூர்ச்சையானார். ‘நிச்சயமாக இது இறைவனுடைய குரலாகத்தான் இருக்கும்’ என்று முடிவுசெய்துகொண்டு, வீட்டிற்கு வேகமாக ஓடிவந்து, திரு இருதய ஆண்டவரின் படத்தின் முன்னம் முழந்தாள்படியிட்டு, கண்ணீர் மல்க வேண்டத் தொடங்கினார்: “இறைவா! பட்டுப்போன மரமாகிய என்னை இத்தனை நாள்களும் நீர் உயிரோடு வைத்திருக்கின்றாயே! உன்னுடைய இரக்கம் மிகப்பெரியது. இனிமேலும் நான் தவறான வழியில் செல்லமாட்டேன்; உமக்குகந்த வழியில் நடப்பேன். இது சத்தியம்.”

தன்னுடைய கணவர் இப்படிக் கண்ணீர்விட்டு இறைவனிடம் வேண்டுவதைப் பார்த்த அந்தக் கிறிஸ்தவ விறகுவெட்டியின் மனைவி, “இறைவன் இவர்க்கு நல்ல புத்தியைக் கொடுத்துவிட்டார்’ என்று மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

ஆண்டவராகிய இயேசு இ(ற)ழந்துபோனதைத் தேடி மீட்க வந்தார். அப்படிப்பட்டவரிடம் பாவத்தால் இறந்துபோன அல்லது பட்டுப்போன யாவரும் அவருடைய அருள்பெருக்கை எண்ணி அவரிடம் திரும்பி வந்தால், அவர்க்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்! பொதுக்காலத்தின் முப்பது ஒன்றாம் ஞாயிற்றுக் கிழமையில் இருக்கும் நமக்கு, இன்றைய நாளில் நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம், ‘இ(ற)ழந்துபோனதை மீட்கவந்த இயேசு’ என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

பெயருக்கு ஏற்ப வாழாத சக்கேயு
நற்செய்தியில் சக்கேயுவைக் குறித்து வாசிக்கின்றோம். சக்கேயு என்றால் ‘நேர்மையாளர்’ என்று பொருள். ஆனால், சக்கேயுவோ தன்னுடைய பெயருக்கு ஏற்ப நேர்மையாக வாழாமல், மக்களிடமிருந்து அதிகமான வரிவசூலித்து வந்தார் (லூக் 3: 12-13). இதனால் அவர் யூதர்களின் வெறுப்புக்கு உள்ளானார். யாராவது உரோமையர்களிடம் பணிபுரிந்தால், அவரைத் துரோகியாகப் பார்த்த யூதர்கள், சக்கேயு மக்களிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட வரியைவிடவும் அதிகமான வரியை வசூலித்து வந்ததால், அவர்களுடைய வெறுப்புக்கு இன்னும் அதிகமாக உள்ளானார். இவ்வாறு சக்கேயு தன்னுடைய பெயருக்கு ஏற்ப வாழாது, அதற்கு முரணான வாழ்க்கை வாழ்ந்து வந்ததால், ஏராளமாகப் பணம் இருந்தபோதும், உள்ளத்தில் வெறுமையோடு வாழ்ந்து வந்தார்.

இன்றைக்கும் கூட பல கிறிஸ்தவர்கள் தங்களுடைய பெயருக்கு ஏற்ப வாழாமலும் பெற்றுக்கொண்ட அழைப்பிற்கு ஏற்ப வாழாமலும் அதற்கு முரணான வாழ்க்கை வாழ்ந்து வருவது மிகுந்த வேதனையளிப்பதாக இருக்கின்றது. இவர்கள் சக்கேயுவைப் போன்று தங்களுடைய வாழ்வைத் தன்னாய்வுக்கு உட்படுத்திப் பார்ப்பது நல்லது.

சிறுகுழந்தையைப்போன்று மாறிய சக்கேயு
‘தன்னிடம் ஏராளமான பணம் இருந்தும் நிம்மதியில்லையே!’ என்று சக்கேயு புலம்பிக்கொண்டிருந்த தருணத்தில், பாவிகளை ஏற்று, அரவணைத்துக் கொள்கின்ற இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கக்கூடும். ஒருவேளை முன்பு வரிதண்டுபவராக இருந்து, பின் இயேசுவின் சீடராகிய மாறிய மத்தேயுவிடமிருந்து (லூக் 5: 27-39) அவர் கேட்டிருக்கலாமோ! தெரியவில்லை. ஆனால், அவர் இயேசுவைக் குறித்து கேட்டறிந்த பின்பு, ‘மற்றவர் என்ன நினைப்போரோ?’, ‘சமூகம் என்ன நினைக்குமோ?’ என்று எண்ணிக் கொண்டிருக்காமல், ஒரு குழந்தையைப் போன்று ஓடிப்போய், இயேசு கடந்து போகவிருந்த வழியில் இருந்த மரத்தில் ஏறிக்கொள்கின்றார்.

இங்கு ‘அவர் (சக்கேயு) ஓடிப்போய்’ என்ற வார்த்தைகள் சிந்தனைக்குரியவையாக இருக்கின்றன. குழந்தைகள்தான் ஓடும் ஆடும். சக்கேயு ஒரு குழந்தையைப் போன்று ஓடுகின்றார். அப்படியானால் அவர், இயேசு சொல்வதைப் போன்று, இறையாட்சியை ஒரு சிறுபிள்ளையைப் போன்று ஏற்றுக்கொண்டார் (லூக் 18: 17) என்றுதான் சொல்லவேண்டும். சக்கேயு ஒரு குழந்தையாய் மாறி, தன்னைப் பார்க்க வந்ததை அறிந்த இயேசு அவரிடம், “சக்கேயு! விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் தங்கவேண்டும்” என்று சொல்லி அவரை வியப்படைய வைக்கின்றார்.

குள்ளமாக இருந்து, பெரியவரான சக்கேயு
இயேசு சக்கேயுவிடம், உம்முடைய வீட்டில் நான் தங்கவேண்டும் என்று சொன்னதும் அவர் இயேசுவை மகிழ்ச்சியோடு தன்னுடைய வீட்டிற்கு வரவேற்கின்றார். வழக்கமாக பாவம் செய்த யாரும் கடவுளிடமிருந்து மறைந்துகொள்வது வழக்கம் (தொநூ 3: 1-10) ஆதாமும் ஏவாளும் இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு. ஆனால், சக்கேயு அப்படியில்லாமல் ஆண்டவரைத் தேடிச் செல்கின்றார். அந்த விதத்தில் சக்கேயு மற்றவரிடமிருந்து வித்தியாசப்படுகின்றார்.

அடுத்ததாக, இயேசு சக்கேயுவின் வீட்டிற்கு வருவதாகச் சொன்னதும் சக்கேயு இயேசுவிடம், என் உடைமைகளில் பாதியை ஏழைகட்கும் எவரிடமிருந்தாவது, எதையாவது கவர்ந்திருந்தால் நான்கு மடங்காத் திருப்பிக் கொடுத்துவிடுகின்றேன் என்று கூறுகின்றார். மோசேயின் சட்டம், ஒருவர் இன்னொருவரை ஏமாற்றிப் பொருளைக் கவர்ந்திருந்தால், அவர் அந்தப் பொருளையும் அந்தப் பொருளின் ஐந்தில் ஒரு பகுதியையும் திருப்பித் தரவேண்டும் என்றும் (லேவி 6: 5), திருடியதைத் திருப்பித் தரமுடியாவிட்டாலும் நான்கு மடங்காகத் தரவேண்டும் (விப 22: 1) என்றும், திருடும்போது பிடிபட்டால் இரண்டு மடங்காகக் கொடுக்கவேண்டும் (விப 22:4) என்றும் கூறுகின்றது. சக்கேயுவோ இப்படிப்பட்ட மோசேயின் சட்டம் அல்லது சட்டங்களைக் கடந்து சென்று தன்னிடம் இருப்பதைத் திரும்பித் தரமுன் வருகின்றார். ஆகையால்தான் இயேசு அவரிடம், “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று... இழந்துபோனதைத் தேடி மீட்கவே, மானிடமகன் வந்திருக்கின்றார்” என்று கூறுகின்றார்.

இங்கொரு முக்கிய உண்மையைத் தெரிந்துகொள்ளவேண்டும். அது என்னவெனில் குள்ளமாக இருந்த சக்கேயு (பாவம் செய்யும் ஒவ்வொருவரும் குள்ளம்தான் உரோ 3:23) இயேசுவிடம் வெளியிட்ட அறிக்கையினால் உயர்ந்துநிற்கின்றார்; மீட்பினைக் கொடையாகப் பெறுகின்றார். அப்படியானால், பாவிகள் யாவரும் தங்களுடைய குற்றங்களை ஆண்டவரிடம் அறிக்கையிட்டு, அவரோடு ஒப்புரவானால், அவர்கள் இறைவனுடைய பார்வையில் பெரியவர்கள் ஆவார்கள் என்பது உறுதி. நாம் நம்முடைய குற்றங்களை உணர்ந்து, அவற்றை ஆண்டவரிடம் அறிக்கையிட்டு, அவரோடு ஒன்றிணையத் தயாரா? சிந்திப்போம்.

சிந்தனை
‘மனம்மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும்’ (லூக் 15: 7) என்பார் இயேசு. ஆகையால், பாவிகளின் மனமாற்றத்தில் மிகுந்த மகிழ்ச்சியடையும் இயேசுவிடம், பாவிகளாக நாம் நம்முடைய குற்றங்களை உணர்ந்து, அவரோடு ஒன்றிணைந்து வாழ்வோம். அதன் வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser

செல்ஃபி வித் சக்கேயு!

அவன் ஒரு மெழுகுதிரி வியாபாரி. ஆலயத்திற்குத் தேவையான தேன் மெழுகுதிரிகளைச் செய்து விற்றான் அவன். அவனை யாருக்கும் பிடிப்பதில்லை. 'அவன் மீதமான மெழுகைத் திருடி புதிய மெழுகோடு கலக்கிறான்' என்றும், 'அவன் விலையைக் கூட்டி விற்கிறான்' என்றும், 'அவன் தனக்குக் கீழிருப்பவர்களின் உழைப்பைச் சுரண்டுகிறான்' என்றும் சொல்லி மக்கள் அவனை வெறுத்தார்கள். அவனுடைய பங்கு ஆலயத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் வருவதாகச் சொல்லப்பட்டது. திருத்தந்தையைப் பார்க்க இவனுக்கு ஆசை. எப்படியாவது அவரைப் பார்த்துவிடலாம் என நினைக்கிறான். ஆனால், நாள்கள் நெருங்க நெருங்க நிறையக் கூட்டம் வந்து சேர்கிறது. 'பார்க்க முடியாமல் போய்விடுமோ?' என்ற அச்சம் இவனுக்கு வர ஆரம்பிக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஆலயத்திற்குள் வெகுசிலரே அனுமதிக்கப்படுவர் என்றும், அதற்கான முன்பதிவு செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டது. சொல்லப்பட்ட சில நொடிகளில் முன்பதிவும் முடிந்தது. பங்குத்தந்தையிடம் சென்று முறையிட்டான். கெஞ்சிக் கேட்டான். ஆலயத்திற்குள் எப்படியாவது சென்றுவிட வேண்டும் என நினைக்கிறான். திருத்தந்தை வரும் நாள் வந்தது. சட்டென்று ஒரு முடிவு எடுக்கிறான். திருத்தந்தைக்கான ஆளுயர மெழுகுவர்த்தி என்று ஒன்றை உருவாக்கி, அந்த மெழுகுதிரிக்குள் தானே நின்றுகொள்கின்றான். பவனியில் வந்த திருத்தந்தையைக் கவர்கிறது மெழுகுதிரி. ஒரு நிமிடம் நிற்கின்றார். 'இதை யார் செய்தது?' எனக் கேட்கிறார். 'நான்தான்!' எனத் துள்ளிக்குதித்து அதிலிருந்து வெளியே வருகிறான் வியாபாரி. 'இங்கே என்ன செய்கிறாய்?' 'நான் உங்களைப் பார்க்க வேண்டும்' 'நானும் உன்னைப் பார்க்க வேண்டும்.'

ஏறக்குறைய இக்கற்பனை நிகழ்வைப் போலத்தான் அரங்கேறுகிறது இன்றைய நற்செய்தி வாசகத்தின் (காண். லூக் 19:1-10) கதையாடல். 'இயேசுவைத் தன்னுடைய குட்டிக் கேமராவில் எப்படியாவது ஃபோட்டோ எடுத்துவிட வேண்டும்!' என்று நினைக்கின்ற சக்கேயுவின் அருகில் வருகின்ற இயேசு, 'நான் உன்னோடு ஒரு செல்ஃபி எடுக்க வேண்டும்!' எனக் கேட்கின்றார். சக்கேயுவின் மனதில் எவ்வளவு ஆனந்தம்! 'என்னோடவா?' 'செல்ஃபியா?' 'ஐயோ! என்னால் தாங்க முடியவில்லையே! நான் இந்த செல்ஃபியை வாட்ஸ்ஆப் டிபியாக வைத்துக்கொள்வேன்! ஃபேஸ்புக்கில் பதிவேற்றுவேன்! இயேசுவுடைய ஃபோன் நம்பர் வாங்கி அவருடைய கான்டக்ட் ப்ரொஃபைலாக வைத்துக்கொள்வேன் ... இல்லை! இல்லை! என் ஃபோனில் வால்பேப்பராக வைத்துக்கொள்வேன்!' என்று சக்கேயுவின் மனத்தில் கம்பி மத்தாப்பு ஆயிரம் எரிகிறது.

'சக்கேயு' என்ற இடத்தில் உங்களையோ என்னையோ வைத்துப் பார்ப்போம்.
'செல்ஃபி வித் சக்கேயு' என்று இயேசு சொல்வதுபோல, நம்மை நினைத்து அவர், 'செல்ஃபி வித் எக்ஸ்,' 'செல்ஃபி வித் ஒய்' என்று சொன்னால் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்?

1. சக்கேயு என்றால் யார்?
'சக்கேயுஸ்' என்றால் அரமேயம் மற்றும் எபிரேயத்தில் 'புனிதம்' அல்லது 'தூய்மை' அல்லது 'குழந்தையுள்ளம்' என்று பொருள். லூக்கா இந்தப் பெயரைத் தெரிந்தெடுத்தாரா? அல்லது கதைமாந்தரின் இயல்பான பெயரே இதுவா? என்பது நமக்குத் தெரியவில்லை.
இவரை மூன்று வார்த்தைகளால் வர்ணிக்கிறார் லூக்கா: (அ) சக்கேயு என்பவர் செல்வர் - வரிதண்டுபவர்களுக்குத் தலைவர், (ஆ) சக்கேயு இயேசுவைக் காண விரும்பினார், (இ) சக்கேயு குட்டையாய் இருந்தார்.

அ. சக்கேயு என்பவர் செல்வர் - வரிதண்டுபவர்களுக்குத் தலைவர்
லூக்கா நற்செய்தியைப் பொறுத்தவரையில் செல்வமும் கடவுளும் நேர்-எதிராக இருப்பவை(வர்). செல்வர் விண்ணரசில் நுழைவதில்லை (காண். 16:19-31), செல்வர் இயேசுவைப் பின்பற்றத் தயங்குகின்றனர் (காண். 18:18-27). இங்கே, சக்கேயுவை செல்வர் என்று சொல்வதோடல்லாமல், அவரை 'வரிதண்டுபவர்களின் தலைவர்' என அறிமுகம் செய்கிறார் லூக்கா. சக்கேயுவின் செல்வம் மட்டுமல்ல, அவர் அச்செல்வத்தை எப்படி ஈட்டினார் என்பதும் இங்கே சொல்லப்படுகிறது. சக்கேயு யூதராக இருந்தும், தன் யூத மக்களிடம் வரிவசூலிக்கும் உரோமை அரசின் கைக்கூலியாக இருக்கின்றார். ஆக, உரோமைக்கும் இவர் அடிமையாக இருக்க வேண்டும், வரி தராவிட்டால் தன் இனத்து மக்களையும் கொடுமைப்படுத்த வேண்டும். மேலும், வரிதண்டுபவர்கள் சரியாகக் கணக்குக் கொடுப்பதில்லை. இவ்வாறு, இவர் அநீத செல்வத்திற்குச் சொந்தக்காரராக இருக்கின்றார். தன்னுடைய சொந்த மக்களால் புறக்கணிக்கப்படுகின்றார். இவ்வாறு, செல்வர் என்ற நிலையில் கடவுளிடமிருந்தும், வரிவாங்குபவர் என்ற நிலையில் தன் சொந்த மக்களிடமிருந்தும் அந்நியப்பட்டு நிற்கின்றார் சக்கேயு.

ஆ. சக்கேயு இயேசுவைக் காண விரும்பினார்
லூக் 17:15ல் தான் நலம் பெற்றதை உடலில் 'காண்கின்ற' சமாரியத் தொழுநோயாளர் உடனடியாக இயேசுவிடம் திரும்புகின்றார். இதற்கு முந்தைய பகுதியில் (காண். 18:35-43) பார்வையற்ற ஒருவர் பார்வை பெறுகிறார். இங்கே சக்கேயு இயேசுவைக் 'காண' விரும்புகிறார். 'காணுதல்' என்பது லூக்காவின் ஒரு முக்கியமான கருத்துரு. இயேசு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட நிகழ்வில் இதை சிமியோன் வழியாக மிக அழகாக அறிமுகம் செய்கிறார் லூக்கா: 'மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன' (2:30-31). சக்கேயு நிகழ்விலும் 'மக்கள் அனைவரும் காணுமாறு மரத்தில் ஏறி நின்ற சக்கேயுவின் கண்கள் இயேசுவைக் கண்டுகொள்கின்றன.' இயேசுவும் நிகழ்வின் இறுதியில், 'இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று' என்கிறார். ஆக, காணுதல் என்பது மீட்பைத் தேடுதல் அல்லது தேடிக் கண்டடைதல் என்றும் பொருள்கொள்ளப்படுகிறது.

இ. சக்கேயு குட்டையாய் இருந்தார்
இது அவருடைய உடல்தன்மையை மட்டும் குறிப்பது அல்ல. மாறாக, அவர் அனுபவித்த உள்ளத்து உணர்வுகளான வெட்கம், பொய், போலித்தன்மை, அவமானம் ஆகியவற்றையும் குறிக்கின்றன. நாமே இதை அனுபவித்திருப்போம். தவறு செய்யாதபோது நம்மை அறியாமலேயே நாம் நேராக நிற்போம், நெஞ்சம் நிமிர்ந்து நிற்கும். நாம் எல்லாரையும் விட பெரியவர்களாகத் தெரிவோம். ஆனால், ஏதாவது பொய் அல்லது களவு செய்யும்போது, தவறு செய்யும்போது நாம் என்னதான் நம் மனச்சான்றைச் சாந்தப்படுத்த நினைத்தாலும் நம் உடலின் தன்மையையை அது கூனாக்கிவிடும். அடுத்தவர் முன் நாம் மிகச்சிறியவர்களாகத் தெரிவது போல உணர்வோம். ஆக, சக்கேயு உடல் அளவில் குட்டையாக இருந்தாலும், உள்ளத்து அளவிலும் குட்டையாக உணர்கின்றார். மற்றவர்கள் முன் சேர்ந்து நிற்பதற்குப் பதிலாக - அவர்கள் ஒருவேளை அவரை விரட்டிவிடக் கூடும் - மரத்தில் ஏறி நின்றுகொள்கின்றார். அல்லது, தன்னுடைய தாழ்வு மனப்பான்மையை இப்படிப் போலியாக உயர்வு மனப்பான்மையாக ஈடுகட்டிக்கொள்ள விரும்புகின்றார்.

2. மற்றவர்கள் சக்கேயுவை எப்படிப் பார்த்தார்கள்?
முதலில் கூட்டத்தினர். கூட்டத்தினர் இவரை வெறுத்தார்கள். சிலர் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். சிலர் அவரிடம் இணக்கமாக இருந்தால் தங்களுக்கு இவர் உதவி செய்வார் என்று போலியாக அன்பு காட்டினர். இவ்வாறாக, மற்றவர்களிடமிருந்து இவர் வெறுப்பையும், கண்டுகொள்ளாத்தன்மையையும், போலியான அன்பையும் மட்டுமே பெற்றார். மேலும், கூட்டத்தினர், 'பாவியோடு தங்கப்போயிருக்கிறாரே இவர்' என்று இயேசுவையும் வெறுக்கின்றனர்.

இரண்டாவது இயேசு. ஆனால், இயேசு அவரை 'ஆபிரகாமின் மகன்' என்றும், 'இழந்து போனதைத் தேடி மீட்டவர்' என்றும், 'குட்டையாக இருக்கும் உயர்ந்த உள்ளத்தினர்' என்றும் காண்கின்றார். மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவை மட்டுமே 'ஆபிரகாமின் மகன்' என அழைக்கிறார் (காண். 1:1). இங்கே, அதே தலைப்புடன் சக்கேயு அழைக்கப்படுகின்றார். 'ஏழை லாசர்' ஆபிரகாமின் மடியில் இளைப்பாறுகிறார். சக்கேயு தன்னுடைய பெயரின்படி தூய்மையாக இருந்ததால் கடவுளைக் கண்டுகொள்கிறார். நேர்மையாளர்களுக்கும் நீதிமான்களுக்கும் என ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த தலைப்பை கடவுளின் இரக்கத்தைப் பெற்ற சக்கேயுவுக்கும் தருகின்றார் இயேசு. அடுத்ததாக, தான் பெற்றபோது அல்லது தான் இழந்தபோதே சக்கேயு மீட்பைக் கண்டுகொள்கின்றார். இதில் கடவுளின் லாஜிக்கைப் பார்க்கிறோம். இவ்வுலகின் பார்வையில் நம்முடைய சேமிப்புக் கணக்கில் முதலில் எண்ணும் தொடர்ந்து நிறைய பூஜ்யமும் இருந்தால்தான் பணக்காரர் அல்லது ஆசிர்வதிக்கப்பட்டவர் என்ற பட்டம் கிடைக்கிறது. ஆனால், கடவுளின் பார்வையில் இழப்பவரே - ஜீரோ பேலன்ஸ் வைத்திருப்பவரே - ஆசிர்வதிக்கப்பட்டவர் என அழைக்கப்படுகின்றார். தொடர்ந்து, 'தன்னிடம் உள்ளதன் பாதியை ஏழைகளுக்குக் கொடுப்பதன் வழியாகவும், தான் ஏமாற்றியவர்களுக்கு நான்கு மடங்கு திருப்பிக் கொடுப்பதாகவும்' சொல்லும்போது, குட்டையான அவரில் உயர்ந்த மனிதரைப் பார்க்கிறார் இயேசு.

ஆக, மக்களின் பார்வையும் இயேசுவின் பார்வையும் ஒன்றிற்கொன்று முரண்படுவதாக இருக்கிறது.

3. சக்கேயு எடுத்த செல்ஃபி 'செல்ஃபி வித் சக்கேயு' என்று தலைப்பு கொடுத்துவிட்டு, 'சக்கேயு எடுத்த செல்ஃபி' என்று எழுதுவது முரணாகத் தெரியலாம். செல்ஃபி எடுக்க அழைத்தவர் என்னவோ இயேசுதான். ஆனால், இயேசுவோடு செல்ஃபி எடுத்தவர் சக்கேயுதான்.
எப்படி?
செல்ஃபியை முதலில் புரிந்துகொள்வோம். நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்நிமிடத்தில் ஏறக்குறைய 17000 செல்ஃபிகள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் என்பது கூகுள் கணக்கு. ஏன் நாம் செல்ஃபி எடுக்கிறோம்? யோசித்துப் பார்த்தால் மூன்று காரணங்கள் தெரிகின்றன: (அ) 'நானும் அழகுதான்' - நம்முடைய அழகியல் புரிதலைப் புரட்டிப்போட்டது செல்ஃபி எனலாம். கொஞ்ச வருடங்களுக்கு முன்னால் சின்னத்திரையிலும், வண்ணத்திரையிலும் காட்டப்பட்ட சிகப்புத் தோல் அல்லது வெள்ளைத் தோல், நீண்ட முகம் அல்லது சதுர முகம் அல்லது வட்டமுகம்தான் அழகு என்று காட்டப்பட்டது. இவர்கள்தாம் அழகின் 'மாடல்கள்' என்றும் அழைக்கப்பட்டனர். ஆனால், 'நானும் அழகுதான்' என்று எல்லாரையும் சொல்ல வைத்தது செல்ஃபி. (ஆ) 'எந்த இரண்டு செல்ஃபிக்களும் ஒன்றல்ல' - நான் அடுத்தடுத்து என்னை இரண்டுமுறை எடுத்தாலும் அவற்றை ஒப்பிட்டுப்பார்த்தால் இரண்டும் ஒன்றல்ல. ஏனெனில், நான் மாறுகிறேன் அல்லது மாற்றிக்கொள்கிறேன் என்று எனக்கு உணர்த்துவது செல்ஃபி. (இ) 'செல்ஃபி ஒரு உறைந்த கண்ணாடி' - கண்ணாடியில் நாம் பார்க்கும் உருவம் நாம் மறைந்தவுடன் மறைந்துவிடுகிறது. ஆனால், செல்ஃபி அந்த பிம்பத்தை உறைய வைக்கிறது. என்னை என்னோடு ஒப்பிட அழைக்கிறது செல்ஃபி.
இந்த செல்ஃபியை இயேசுவோடு சக்கேயுவும் நானும் எடுக்க என்ன செய்ய வேண்டும்?
அ. 'எழுந்து நிற்க வேண்டும்'
'எழுந்து நிற்றல்' என்பது 'நான் அடிமையல்ல' என்பதைக் குறிக்கிறது. இதுவரை தன்னுடைய கள்ளத்தனத்திற்கும், பொய்மைக்கும், ஏமாற்று வேலைக்கும், பணத்திற்கும் அடிமையாய் இருந்த சக்கேயு எழுந்து நிற்கிறார். ஆக, தீமையை வெறுத்தவுடன் நம்மை அறியாமலேயே நம்முடைய கான்ஃபிடன்ஸ் லெவல் கூடுகிறது. நாம் நம் உள்ளத்திலும் உடலிலும் உயர்ந்தவராகின்றோம். இன்று நான் அமர்ந்திருக்க அல்லது படுத்திருக்கக் காரணமான தீமை எது? இயேசுவை அன்றாடம் எதிர்கொள்ளும் நான், அவரை நற்கருணையில் என் உள்ளத்தில் வரவேற்கும் நான் ஏன் இன்னும் எழுந்து நிற்க முடியவில்லை?

ஆ. 'இயேசுவுக்காக இடத்தை க்ளியர் செய்ய வேண்டும்'
செல்ஃபிக்குள் எதுவெல்லாம் வரக்கூடாதோ அதை நான் அகற்ற வேண்டும். தன்னிடமிருந்த நிறையச் சொத்து இயேசுவின் இடத்தை அடைத்துக்கொள்வதாக நினைக்கின்ற சக்கேயு உடனடியாக அவற்றை அகற்றுகின்றார். இயேசுவுக்கும் இடம் ஒதுக்குவதற்கு நான் என்னிடம் உள்ள சிலவற்றைக் க்ளியர் செய்ய வேண்டும். 'இதுவும் வேண்டும் அவரும் வேண்டும்' என்று சொன்னால் இயேசு 'அவுட் ஆஃப் ஃபோகஸ்' ஆகிவிடுவார்.

இ. 'வரிசையைச் சரி செய்ய வேண்டும்'
'இது இங்கே ... அது அங்கே' என்று சரி செய்ய வேண்டும். சரி செய்யும்போது தவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும், ஈடுகட்ட வேண்டும். களவை இரண்டு மடங்கு சரிசெய்ய வேண்டும் என்று சட்டமுறைமை சொன்னாலும், சக்கேயு 'நான்கு மடங்கு' சரிசெய்ய நினைக்கின்றார். இன்று நான் யாரையாவது ஏமாற்றினால் அவற்றுக்கு ஈடு செய்கிறேனா? எத்தனை மடங்கு?

இம்மூன்றும் நான் செய்தால், இயேசுவும் இன்று என்னோடு செல்ஃபி எடுப்பார். என்னோடு இறங்கி நிற்கும் கடவுள் அவர் என்றும், அவர் என்னை வெறுப்பதில்லை என்றும், எனக்கு அவர் இரங்குகிறார் என்றும் என் கடவுளைப் பற்றிய புதிய புரிதலைத் தருகிறது இன்றைய முதல் வாசகம் (காண். சாஞா 11:22-12:2). என்னோடு இறங்கி நிற்கும் அவர், என்மேல் இரங்கி, என் 'நல்லெண்ணத்தையும் நம்பிக்கையால் தூண்டப்படும் நற்செயலையும் நிறைவுசெய்து,' 'என் அழைப்புக்கு என்னைத் தகுதியுள்ளவராக்குகிறார்' என்று இரண்டாம் வாசகமும் (காண். 2 தெச 1:11-2:2) என்னை அழைக்கிறது. அவரருகில் செல்லும்போது, 'செல்ஃபி வித் ...' என்று அவர் நம்மைத் தழுவிக்கொள்வார். அப்போது திருப்பாடல் ஆசிரியர் போல, நாமும், 'ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர். எளிதில் சினம் கொள்ளாதவர். பேரன்பு கொண்டவர் ... தடுக்கி விழும் யாவரையும் அவர் தாங்குகின்றார், தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார்' (திபா 145) என்று பாட முடியும்.

செல்ஃபி எடுக்கத் தயாரா? ஸ்மைல் ப்ளீஸ்! க்ளிக்!

ser

sunday homily


முகப்பு பக்கம்
வத்திக்கான் வானொலி
கத்தோலிக்க இதழ்கள்
ஞாயிறு வாசகம்
விருந்தினர் பக்கம்
உம் வாக்கே விளக்கு!
சென்னை பங்குதலங்கள்
நூலகம்
திருத்தலச் சுற்றுலா
தவக்கால சிந்தனைகள்
ஒலியும் ஒளியும்
அன்னை தெரேசா
கிறிஸ்மஸ் மலர்கள்
பொங்கல்
செபமாலை
பாடல்கள்
செபமே ஜெயம்A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com