மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலம் இருபத்திஆறாம் ஞாயிறு
மூன்றாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
ஆமோஸ் 6: 1, 3-7 | II 1 திமொத்தேயு 6: 11-16 | III லூக்கா 16: 19-31

ஏழை இலாசர் - பணக்காரன்

இன்றைய நற்செய்தியிலே வருகின்ற உவமையில் ஏழை பணக்காரன் என்ற இரு நபர்கள் முன் நிறுத்தப்படுகிறார்கள். ஏழைக்கு பெயர் தரப்பட்டுள்ளது. பணக்காரனுக்குப் பெயர் தரப்படவில்லை . பணக்காரர்கள் நிரந்தரமான முகவரி அற்றவர்கள் என்பதே இயேசுவின் செய்தி. பணக்காரர்கள் விண்ணுலகிலும் நிலையான இடம் பெற வேண்டுமெனில் தங்களுக்கு உள்ளதெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டுத் தன்னைப் பின்பற்ற வேண்டும் என்பதே இயேசுவின் உறுதியான போதனை. ஏழைகள் இந்த உலகத்திலே இருக்கிறார்கள் என்றால் நிச்சயமாக அதற்குக் காரணம் பணக்காரன்தான். உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க உறைவிடமும் இல்லாமல் வாடுகின்ற ஏழைகள் இருக்கின்ற நிலையில் பணக்காரர்களை வாழ அனுமதிப்பதே குற்றமாகும். எனவே ஆமோஸ் இறைவாக்கினர் சீயோன் குன்றின் மீது இன்பத்தில் திளைப்போரே, இஸ்ரயேல் மக்கள் தேடி வரும் அளவுக்குப் பெருமை வாய்ந்தவர்களே உங்களுக்கு ஐயோ கேடு! (ஆமோஸ். 6:1) என்று அச்சத்தை விளைவிக்கும் இறைவாக்கு உரைக்கின்றார் (முதல் வாசகம்).

"தன் தேவைக்கு மேல் பொருள் சேர்த்து வைத்திருப்பவன் திருடன்” என்றார் காந்தியடிகள். “தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதி. பணக்காரர்களின் பெரிய தவறு தனக்குக் கீழே பசியினால் வாடி இருப்பவர்களைப் பார்க்க மறுக்கும் கோழைத்தனம்தான்.

கடையில் ஒரு மனிதன் தங்க நாணயங்களை விற்றுக் கொண்டிருந்தான். திருடன் ஒருவன் தன் பையில் தங்கங்களை அள்ளிப் போட்டு வேகமாக ஓட ஆரம்பித்தான். அருகில் நின்ற போலீஸ்காரர் இந்த திருடனைப் பிடித்து வந்து சிறையில் அடைத்தான். இவ்வளவு ஆட்களும், நிற்க உன்னால் எப்படி இந்தத் திருட்டு வேலையைச் செய்ய முடிந்தது என்று கேட்ட போது, நான் யாரையும் பார்க்கவில்லையே, நான் பார்த்தது தங்கப் பொருட்கள் மட்டுமே என்றான்.

1) ஜடப் பொருளாக இலாசர் கருதப்படுதல்
பணக்காரனைப் பொறுத்தவரையில் இலாசர் ஒரு ஜடப் பொருளே தவிர மனிதன் அல்ல. ஆடம்பர வாழ்வில் மூழ்கி இருக்கும் பணக்காரன் வாசலில் கிடந்த இலாசரைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவனை விரட்டி அடிக்கவும் இல்லை . இலாசரின் தேவைகளை அறியாத குருடன்தான் இந்தப் பணக்காரன். ஆமோஸ் வாழ்ந்த காலத்தில் இருந்த பணக்காரர்கள் நாட்டில் வாழ்ந்த ஏழைகள், வறியவர்கள் மட்டில் கொஞ்சமும் கவலைப்படவில்லை. இவர்களைப் பொறுத்தவரை மற்ற மனிதர்கள் உயிர் அற்ற ஜடங்களே ஒழிய மனிதர்கள் அல்ல. வாழக்கூடிய சகோதர சகோதரிகள் துன்பத்திலும், துயரத்திலும் வாழ்ந்தாலும் அவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், கண்டு கொள்ளாமல் குதிரைக்குக் கண் அடைப்பு இட்டதுபோல், தங்களது இன்பத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுவார்கள்.

2) ஏழைகள் இறைவனின் பிள்ளைகள்
புனித பவுல் திமோத்தேயுவைப் பற்றிக் குறிப்பிடும்போது கடவுளின் மனிதனாகிய நீ என்று குறிப்பிடுகிறார். இலாசர் ஒரு ஜடம் அல்ல. மாறாக கடவுளின் பிள்ளை என்ற உண்மையைப் பணக்காரன் மிகத் தாமதமாகப் புரிந்து கொண்டான். ஆப்ரகாம் மடியில் இலாசர் இருந்தபோதுதான் இந்த உண்மையைப் புரிந்துகொண்டான். திருப்பாடல், மனிதர்களைக் கடவுள் தன் மாட்சிமையினாலும், மேன்மையினாலும் நிரப்பியுள்ளார் (தி.பா.62:6) எனப் பறைசாற்றுகிறது. இந்த உண்மையை இந்த மேலான பார்வையை நாம் கொண்டிருக்க வேண்டும். மக்கள் பார்வையில் அருவருக்கத்தக்க இலாசர், கடவுள் பார்வையில் உயர்ந்தவன் ஆனார். இயேசு, செல்வத்தை முறையாகப் பயன்படுத்த அழைக்கிறார். நிலையான செல்வத்தைத் தேடிக் கொள்ளுங்கள் (லூக்.12:33). அந்த செல்வத்தைக் கொண்டு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள் (லூக்.16:9) என்கிறார்.

ser

நீ என் கையாகச் செயல்படு

செல்வந்தன் ஏன் தீப்பிழம்பில் வேதனையுற்றான்? அந்தப் பணக்காரனிடம் ஏழை இலாசர் பிச்சைக் கேட்டதாகவோ, அவன் தர்மம் செய்ய மறுத்ததாகவோ நாம் படிப்பதில்லை. எந்தக் குற்றமும் செய்யாத ஒருவன் வேதனையுறுவது போலத் தோன்றுகின்றது. ஆனால் ஆழ்ந்து சிந்தித்துப்பார்த்தால் செல்வந்தன் செய்த பாவம், கடமையில் தவறிய பாவம் என்பது நமக்குப் புரியும்.

இன்றைய நற்செய்தியின் வழியாக இயேசு இந்த உலகத்தில் வாழும் ஒவ்வோர் ஆணையும், ஒவ்வொரு பெண்ணையும் பார்த்து, தான் உண்டு. தன் வேலை உண்டு என்று வாழாமல், உங்கள் வீட்டை விட்டு வெளியே வாருங்கள், உலகத்திலே என்ன நடக்கின்றது என்று பாருங்கள் என்கின்றார்.

பணக்காரன் ஏன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை? பல காரணங்கள் இருக்கலாம். ஒருவேளை தான் சம்பாதித்த சொத்து , தனக்கு மட்டுமே சொந்தம்; அதை நான் எப்படி வேண்டுமானாலும் செலவழிக்க எனக்கு உரிமை உண்டு என்று அவன் நினைத்திருக்கலாம். ஒருவேளை அவன் இன்றிருப்போர் நாளை இருப்பதென்ன நிச்சயம்; ஆகவே இன்றே அனுபவி ராஜா அனு பவி, என்று அனுபவிப்போம் என நினைத்திருக்கலாம். ஒருவேளை அவன் பக்கத்தில் இருந்தவர்கள், உங்களைச் சுற்றியுள்ளவர்களெல்லாம் நன்றாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்ற தவறான செய்தியை அவனுக்கு அளித்திருக்கலாம். ஒருவேளை வீட்டைவிட்டு வெளியே வந்து உலகத்தில் என்னதான் நடந்துகொண்டிருக்கின்றது என்பதைப் பார்க்க அவனுக்கு நேரமில்லாமல் இருந்திருக்கலாம்.

எது எப்படியோ ? ஒன்று மட்டும் தெளிவாக இருக்கின்றது. பசியாயிருப்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களின் பசியைத் தீர்க்காதவர்களுக்குப் பாதாளம் ஒன்று, தீப்பிழம்பு ஒன்று காத்துக்கொண்டிருக்கின்றது; அத்தீப்பிழம்பிலிருந்து அவர்களால் விடுதலை பெற முடியாது. அங்கே இரக்கம் என்ற சொல்லுக்கே இடமில்லை (லூக் 16:25-26) என்பதை அந்த செல்வந்தன் அறிந்துவைத்திருக்கத் தவறியிருந்தான். இறந்த பிறகு அந்தப் பணக்காரன் அந்தத் தவறை உணர்ந்து அவனுடைய சகோதரர்கள் வேதனை மிகுந்த இடத்திற்கு வராதவாறு எச்சரிக்கப்படவேண்டும் என விரும்புகின்றான் (லூக் 16:27-28).

ஆம். பசியாயிருப்பவர்களுக்குப் போதிய உணவை நாம் கொடுக்க மறுக்கும் வரை, தவறும் வரை பொருளாசையிலிருந்து நாம் நம்மையே விடுவித்துக்கொள்ளாதவரை (1 திமொ 6:10) நமக்கு இறையாட்சியின் (உரோ 14:17] உரிமைப் பேறு (மத் 25:34), நிலைவாழ்வு (1 திமொ 6:12) கிடைக்கப்போவதில்லை.

ஓர் இலட்சாதிபதி ஒரு நாள் கனவு கண்டான். அந்தக் கனவிலே கடவுள் தோன்றினார். அந்தக் கடவுளை வரவேற்று அவன் உபசரித்தான். பிறகு அவனுக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலம், பங்களா, வாடகை வீடுகள், கடைகள், பெரிய தொழிற்சாலை, அவனுடைய வங்கிக்கணக்கு, செல் ஃபோன்கள், டி.வி, டெக், கம்ப்யூட்டர்கள் அனைத்தையும் சுட்டிக்காட்டி, இத்தனைக்கும் சொந்தக்காரன் நான் என்றான். அப்போது கடவுள், இவையெல்லாம் நான் உனக்குத் தந்தவைதானே! என்றார். அதற்கு அந்தப் பணக்காரன், ஆம் என்றான். அப்படியானால் இவை யாவும் யாருக்குச் சொந்தம்? என்றார். அவனோ, உமக்குத்தான் என்றான்.

கடவுளோ, என்னால் நேரடியாக ஏழைகளுக்கு உதவி செய்ய முடியாது என்பதால் உன்னிடம் இதைக் கொடுத்திருக்கின்றேன். நீ என் கையாகச் செயல்படு என்றார். முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஆமோஸ் விடுக்கும் எச்சரிக்கையை நமது கண்முன் நிறுத்தி நம் வாழ்க்கையைத் திருத்தி அமைத்துக்கொள்வோம்.

மேலும் அறிவோம் :

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி (குறள் : 226).
பொருள் : பசியால் வாடித் துன்புறும் வறியவர் பசிக் கொடுமையைப் போக்க வேண்டும். அச்செயலே ஒருவன் தான் தேடித் திரட்டிய செல்வதைப் பிற்காலத்தில் உதவுவதற்காகச் சேமித்து வைக்கத்தக்க கருவூலமாகும்!

சுவாமி விவேகானந்தரிடம் ஒருவர், "நான் கொலை செய்யவில்லை; திருடவில்லை; விபசாரம் செய்யவில்லை; எனக்குச் சொர்க்கம் கிடைக்குமா?" என்று கேட்டார். விவேகானந்தர் அவரிடம் தன் அறையிலிருந்த மேசை, நாற்காலியைக் காட்டி, "இந்த மேசைக்கும் நாற்காலிக்கும் சொர்க்கம் கிடைக்கும் என்றால், உமக்கும் சொர்க்கம் கிடைக்கும்" என்றார். "நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லையே" என்று அவர் விவேகானந்தரிடம் கேட்டார், விவேகானந்தர் அவரிடம் கூறினார்: "இந்த மேசையும் நாற்காலியும் கொலையோ விபச்சாரமோ செய்யவில்லை. அவற்றிற்குச் சொர்க்கம் கிடைக்குமா? எனவே, சொர்க்கத்திற்குப் போகவேண்டுமென்றால், தீமை செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது; நன்மையும் செய்ய வேண்டும்."

இன்றைய நற்செய்தி குறிப்பிடும் செல்வந்தர் தான் செய்த தீச்செயல்களுக்காக நரகத்துக்குப் போகவில்லை. மாறாக, அவர் செய்ய வேண்டிய நற்செயலைச் செய்யாமல் விட்டுவிட்டதற்காக அவர் தண்டனை பெற்றார். அவர் பாலும் பழமும் உண்டு, பஞ்சு மெத்தையில் படுத்து பகட்டான வாழ்வு நடத்தியது குற்றமில்லை, ஆனால் அவர் வீட்டு வாசற்படியில் மனித உருக்குலைந்து பரிதாபமாகப் படுத்துக்கிடந்த ஏழை இலாசரை ஏறெடுத்துக்கூடப் பார்க்கவில்லை. எனவே, அவருடைய இரக்கமற்ற, மனிதநேயமற்ற செயலுக்காகவே அவர் தண்டிக்கப்பட்டார்.

நாம் இரண்டு விதங்களில் குற்றம் இழைக்கலாம். நாம் செய்ய வேண்டிய நற்செயலைச் செய்யாமல் விட்டாலும் குற்றம்; நாம் செய்யக்கூடாத தீயசெயலைச் செய்தாலும் குற்றமாகும் என்று குறிப்பிட்டுள்ளார் வள்ளுவர்.

செய்தக்க அல்லசெயக்கெடும்;செய்தக்க
செய்யாமை யானும் கெடும்" (குறள் 466).

மனத்துயர் செபத்தில்: "குற்றங்கள் பல செய்தேன் எனவும் நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும் மனநொந்து வருந்துகிறேன்" என்று பாவ அறிக்கை செய்கின்றோம் எனவே, நாம் தீமைகள் செய்யாமல் இருப்பதோடு, நன்மைகள் செய்ய வேண்டும்; குறிப்பாக ஏழை எளியவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும். கடவுள் பணக்காரர்களுடைய கடவுள் அல்ல, ஏழைகளின் கடவுள். செல்வராயிருந்தும் நமக்காக ஏழையான கிறிஸ்து (2 கொரி 8: 9). ஏழைகள் பேறுபெற்றவர்கள் என்றும் (லூக் 6:20), செல்வர்களுக்கு ஐயோ கேடு என்றும் (லூக் 6:24) தெளிவாகக் கூறியுள்ளார்.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஆமோஸ் கூறுகிறார்: இன்பத்தில் திளைப்போரே உங்களுக்கு ஐயோ கேடு; குடித்துவீட்டு கும்மாளம் அடிப்போரே நீங்கள் நாடு கடத்தப் படுவீர்கள். உங்கள் இன்பக் கழிப்பு இல்லாது ஒழியும் (ஆமோஸ் 6:1-7).

இதற்கு நேர் மாறாகப் பதிலுரைப்பாடல் கூறுகிறது: “ஆண்டவர் பசித்திருப்போர்க்கு உணவளிக்கிறார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்" (திபா 146). கடவுள் ஏழைகள் பக்கம் என்றால், நாம் யார் பக்கம் இருக்கின்றோம்?

உண்மையான சமயப் பற்றின் வெளி அடையாளம் என்ன? இக்கேள்விக்கு புனித யாக்கோபு கூறும் பதில்: "தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமய வாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தல் ஆகும்" (யாக்1:27), தூய யோவான் கேட்கிறார்: "உலகச் செல்வத்தைப் பெற்றிருப்போர் தம் சகோதரர் சகோதரிகள் தேவையில் உழல்வதைக் கண்டு பரிவுகாட்ட வில்லையென்றால் அவர்களிடம் கடவுளின் அன்பு எப்படி நிலைத்திருக்கும்?” (யோவா 3:17). எனவே கடவுளன்பு, பிறரன்பு வழியாகவே எண்பிக்கப்பட வேண்டும்.

வசதிபடைத்தவர்கள் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யாததற்குக் காரணம் என்ன? பொருள் ஆசை; மேலும் மேலும் பணம் சேர்க்க வேண்டுமென்ற பேராசை. இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் தமது சீடர் திமொத்தேயுவுக்குக் கூறும் அறிவுரை: "கடவுளின் மனிதனாகிய நீ பொருள் ஆசையிலிருந்து தப்பி ஓடு” (1 திமொ 6:11). பாம்பைக் கண்டு ஓடுவது போல பொருள் ஆசையிலிருந்து ஓடவேண்டும், அதே திருத்தூதர் மேலும் கூறுகிறார்: செல்வர்கள் மேட்டிமை உணர்வு கொள்ளக்கூடாது.

செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல் கடவுளிடம் மட்டுமே நம்பிக்கை வைத்து, அவர்கள் தங்களுக்குள்ளதைத் தாராள மனத்தோடு பகிர்ந்தளிக்க வேண்டும் (1 திமொ 6:17-18). ஏழைகளுக்கு உதவி செய்ய மறுப்பவர்களுக்காகக் காத்திருப்பது என்ன? ஒரு பணக்காரர் நிறைய வாழைப்பழங்களைத் தின்று அவற்றின் தோலை வீதியிலே வீசியெறிந்தார். ஒரு பிச்சைக்காரன் அத் தோலை எடுத்துத் தின்றான், பணக்காரர் அந்தப் பிச்சைக்காரனைக் கூப்பிட்டு அவன் முதுகில் பலமுறைக் கையால் குத்தினார். ஆனால் அப் பிச்சைக்காரன் சிரித்துக்கொண்டு சொன்னது: "தோலைத் தின்ற எனக்கு இந்தத் தண்டனை என்றால், பழத்தைத் தின்ற உமக்கு என்ன தண்டனை காத்திருக்கிறதோ?" புனித யாக்கோபு செல்வர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை: “செல்வர்களே... உங்களுக்கு வரப்போகும் இழிநிலையை நினைத்து அலறி அழுங்கள். இவ்வுலகில் ஆடம்பரமாகவும் இன்பமாகவும் வாழ்ந்தீர்கள். கொல்லப்படும் நாளுக்காக உங்கள் உள்ளங்களைக் கொழுக்க வைத்தீர்கள்" (யாக் 5: 1-5).

ஏழைகளை வாழவைத்தால் நமக்கு வானகப் பேரின்பம் காத்திருக்கிறது. ஏழைகளைச் சாகடித்தால் நமக்குக் கொடிய நரகம் காத்திருக்கிறது, “இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுங்கள்... உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்” (திபா 95:7-8).

நிகழ்வு வட அமெரிக்காவில் ஓடுகின்ற இரண்டாவது மிகப்பெரிய ஆறு மிசிசிப்பி (Mississippi). ஒருமுறை இந்த ஆற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சொகுசுக் கப்பல் ஒன்று பயணமானது. கப்பலில் பயணம் செய்தவர்கள் யாவரும் ஆடிப்படி மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள். நன்றாகச் சென்றுகொண்டிருந்த கப்பல், ஆற்றில் கண்ணுக்குத் தெரியாமல் இருந்த ஒரு பனிப்பாறையின்மீது திடீரென்று மோதி உடைந்தது. இதனால் கப்பலில் பயணம் செய்த பயணிகள் யாவரும் செய்வதறியாமல் இங்கும் அங்கும் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள். அப்பொழுது கப்பல் தளபதியிடமிருந்து ஓர் அறிவிப்பு வந்தது: “எதிர்பாராத விதமாக பனிப்பாறையில் கப்பல் மோதியதால், உடைந்துவிட்டது; கப்பலில் உயிர்க்காக்கும் படகுகள் (Life Boats) மிகவும் குறைவாகவே உள்ளன. ஆகையால், பெண்கள் அந்த உயிர்க்காக்கும் படகுகளில் ஏறிக்கொள்ளுங்கள்; ஆண்கள் ஆற்றில் குதித்து நீந்திச் சென்று தப்பித்துக்கொள்ளுங்கள்.”

இப்படியோர் அறிவிப்பு வந்ததைத் தொடர்ந்து, பெண்கள் உயிர்க்காக்கும் படகில் ஏறி தப்பிச் சென்றார்கள். ஆண்களோ ஆற்றில் குதித்து, கரையை நோக்கி நீந்திச் சென்றார்கள். இதற்கு நடுவில் இந்தக் கப்பலில் பயணம் செய்த ஒருவன் கப்பலின் மேல்தளத்திற்கு வந்து, அங்கிருந்த விலையுர்ந்த ஆபரணங்கள், பணம் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து, கையில் கிடைத்த ஆபரணங்களையும் பணத்தையும் அள்ளி. தான் வைத்திருந்த பையில் போட்டுக்கொண்டு, அதைத் தன்னுடைய இடுப்போடு கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்தான்.

மிசிசிப்பி ஆற்றில் சென்றுகொண்டிருந்த கப்பல் பனிப்பாறையில் மோதி உடைந்துபோன செய்தியைக் கேட்டு, மீட்குக் குழுவினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், யாராவது ஆற்றில் மூழ்கி இறந்துபோயிருக்கிறார்களா? என்று இரவு முழுவதும் தேடினார்கள். முடிவில் ஒரே ஒருவன் மட்டும் ஆற்றில் மூழ்கி இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவன் மட்டும் ஏன் ஆற்றில் மூழ்கி இறந்துபோனான் என்று மீட்புக் குழுவினர் அவனைச் சோதித்துப் பார்த்தபோது, அவனுடைய இடுப்பில் ஒரு கனமான பை கட்டப்பட்டிருப்பதையும் அதனுள் விலையுயர்ந்த ஆபரணங்களும் பணமும் இருப்பதைக் கண்டு அதிர்ந்துபோனார்கள். ‘உயிருக்கு ஆபத்து வந்த நேரத்தில் உயிரைக் காத்துக்கொள்ள நினைக்காமல், இப்படிப் பணத்தைக் காத்துக்கொள்ள நினைத்திருக்கிறானே... இவன் சரியான முட்டாள்!’ என்று சொல்லி வேதனைப்பட்டார்கள்.

இந்த நிகழ்வில் வருகின்ற மனிதனைப் போன்று, இன்றுக்குப் பலர் பணம்தான் பெரிது, அதுகொடுக்கும் இன்பம்தான் நிலையானது என்று நினைத்து அதைக் கட்டியழுது (!) கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்றைய நாளில் நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம், ஒருவர் பணத்தின்மீது வைக்கும் நம்பிக்கை அல்ல, இறைவன்மீது வைக்கும் நம்பிக்கையே அவர்க்கு உண்மையான மகிழ்ச்சியையும் விண்ணகத்தில் நிலையான இடத்தையும் தரும் என்ற செய்தியைத் தருகின்றது. எனவே, நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

பணத்தின் மீது பற்றுகொண்டிருந்த செல்வர்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, எவரும் கடவுளுக்கும் செல்வத்திற்கும் பணிவிடை செய்ய முடியாது’ (லூக் 16: 13) என்று போதித்தார். அவர் இவ்வாறு போதித்ததைக் கேட்டுக்கொண்டிருந்த பரிசேயக்கூட்டமோ அவரை ஏளனம் செய்தது. அதற்குக் காரணமும் இருந்தது. பரிசேயக்கூட்டம் மக்கள் பார்வைக்கு நல்லவர் போன்று இருந்து, பணத்தின்மீது அளவுகடந்த பற்றுக்கொண்டிருந்தது. அதனால்தான் இயேசு அவ்வாறு போதித்ததைக் கேட்டு அவரை ஏளனம் செய்தது. அப்பொழுதுதான் இயேசு பணத்தின்மீது பற்றுக்கொண்டு அழிவினைச் சந்தித்த செல்வர், ஆண்டவர்மீது பற்றுக்கொண்டு இறைவனின் திருவடிகளை அடைந்த ஏழை இலாசர் உவமையை அவர்கட்குச் சொல்கின்றார்.

உவமையில் வருகின்ற செல்வரோ விலையுயர்ந்த செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். இந்த சொற்றொடரில் வருகின்ற ஒவ்வொரு சொல்லும் நம்முடைய கவனத்திற்கு உரியவை. செல்வர் விலையுயர்ந்த ஆடை அணிந்து, நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார் என்றால், அவர் எத்துணை சொகுசான வாழ்க்கை வாழ்ந்திருப்பார், வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், எந்தளவுக்கு அவர் ஏழைகளைச் சுரண்டிக் கொழுத்திருப்பார் (எசா 3:15; ஆமோ 2:6, 4:1, 8: 4-6) என்பதை நாம் கற்பனை செய்துபார்த்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக, உவமையில் வருகின்ற அந்த செல்வர், யூபிலி ஆண்டில் (லேவி 25) நிலத்தின் உரிமையாளர்க்கு (ஒருவேளை இலாசர் நிலத்தின் உரிமையாளராக இருந்திருந்தால்!) அந்த நிலத்தை செல்வர் அபகரித்திருந்தால், அதை அவர் ஏழை இலாசருக்குத் திரும்பிக் கொடுத்திருக்கவேண்டும். ஒருவேளை ஏழை இலாசர் செல்வரிடம் கடன்படிருந்தால் (?) அவருடைய கடனை செல்வர் தள்ளுபடி செய்திருக்கவேண்டும். இதைவிட மிக முக்கியமான அம்சம், செல்வர் ஏழை இலாசர்க்குச் செய்யவேண்டிய உதவிகளை (நீமொ 14: 21. 19:17) செய்திருக்கவேண்டும். இவற்றில் அவர் எதையுமே ஏழை இலாசர்க்கு செய்யாமல், தன்னுடைய செல்வத்தின்மீது மட்டும் பற்று வைத்திருந்தார் என்பதைத்தான் உவமை நமக்கு எடுத்துச் சொல்கின்றது.

ஆண்டவர்மீது பற்றுக்கொண்டிருந்த ஏழை இலாசர்
செல்வர் தான் வைத்திருந்த செல்வத்தின்மீது பற்று வைத்து வாழ்ந்ததால், அது அவருடைய கண்ணை மறைத்து, தன் வீட்டுக்கு முன்னம் இருந்த இலாசரைக் காணவிடாமல் செய்தபோது, இலாசரோ ‘ஆண்டவரே என் உதவி’ என்ற தன்னுடைய பெயர்க்கு ஏற்றாற்போல்போல் தன்னுடைய வறிய, நோய்வாய்ப்பட்ட நிலையிலும் ஆண்டவர்மீது பற்றுக்கொண்டு அல்லது நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தார். இலாசர் தன்னுடைய வறியநிலைக்காக தன்னைப் படைத்தவர்க்கு எதிராக எங்கேயும் முறையிட்டதாகக்கூட நாம் வாசிக்க முடியாது. அவர், ஆண்டவரே என் நம்பிக்கை, ஆண்டவரே என் அடைக்கலம் என்ற நம்பிக்கையோடு வாழ்ந்து வந்தார். அதனால் அவருக்கு என்ன கைம்மாறு கிடைத்தது?. தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

பணத்தின்மீது அல்ல, பரமன் பற்றுக்கொண்டவர்க்கே விண்ணகத்தில் இடம் மண்ணகத்தில் வாழ்ந்தபோது செல்வர் பணத்தின்மீது பற்றுவைத்து, சொகுசான வாழ்க்கை வாழ்ந்துவந்ததையும், இலாசரோ வறியநிலையிலும் ஆண்டவர்மீது பற்று வைத்து வாழ்ந்ததையும் பார்த்தோம். ஆனால், அவர்கள் இருவரும் இறந்தபிறகு இலாசர் ஆபிரகாமின் மடியிலும், செல்வர் பாதாளத்தில் வதைபடுவதையும் வாசிக்கின்றோம். இதற்குக் காரணம் ஒன்றே ஒன்றுதான். அது வேறொன்றுமில்லை. அதுதான் ஆண்டவர்மீது கொள்ளும் நம்பிக்கை. செல்வர் செல்வத்தின் மீது பற்று வைத்து சோதனை என்னும் கண்ணியில் சிக்கி அழிந்துபோனார் (1 திமொ 6: 9) ஆனால் இலாசர் ஆண்டவர்மீது பற்று வைத்து விண்ணகத்தில் பேரின்பத்தைக் கண்டார். இந்த இருவரில் நாம் யார்? செல்வரா? ஏழை இலாசரா? சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

இன்றைக்குப் பலரும் செல்வத்தின்மீது பற்று வைத்து, அதுதரும் போலியான சுகத்தில் மடிந்துகொண்டிருக்கின்றார்கள். உண்மையில் ஒருவர் ஆண்டவர்மீது வைக்கும் நம்பிக்கைதான் அவர்க்கு எல்லாவிதமான நலனையும் ஆசியையும் தரும். ஆபிரகாம் தனக்கு வளமும் இருந்தும், ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்து வந்தார (தொநூ 15: 6). அதனால் அவர் ஆண்டவர்க்கு உகந்தவர் ஆனார். நாமும் அவரைப் போன்று ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்து, அவர் தரும் ஆசியைப் பெறுவோம்.

சிந்தனை
‘மாந்தர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவர்க்குக் கிடைக்கும் பயன் என்ன?” (மத் 16: 26) என்று கேட்பார் இயேசு. ஆகையால், நாம் செல்வத்தின் மீது பற்று வைத்து வாழ்வைத் தொலைக்காமல், ஆண்டவர்மீது பற்று வைத்து வாழ்வைப் பெறுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser

அக்கறையின்மை

இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் நாம் வாசிக்கும் வாசகங்கள் கடந்த வார வாசகங்களின் தொடர்ச்சியாக அமைகின்றன. கடந்த வாரம் செல்வத்தைக் கையாள்வது பற்றி வாசித்தோம். செல்வத்தால் வரும் மிகப்பெரிய ஆபத்தான அக்கறையின்மை பற்றி இந்த ஞாயிறு நம்மை எச்சரிக்கிறது.

அழிவுதரும் அக்கறையின்மை!

'அக்கறை' என்பதன் எதிர்ப்பதமே 'அக்கறையின்மை.' இதை கண்டுகொள்ளாத்தன்மை என்று சொல்லலாம். இதை மிக எளிதான உருவகமாகச் சொல்ல வேண்டுமெனில், நாம் ஓட்டுகின்ற காரின் முன்னால் இருக்கின்ற அல்லது நம்முடைய வீட்டின் ஜன்னலின் கண்ணாடியை எடுத்துக்கொள்வோம். இவ்விரு கண்ணாடிகளும் வெறும் கண்ணாடிகளாக இருந்தால் கண்ணாடிக்கு அந்தப் பக்கம் இருப்பது இந்தப் பக்கம் இருக்கும் நமக்குத் தெளிவாகத் தெரியும். ஆனால், இவ்விரு கண்ணாடிகளிலும் பாதரசம் அல்லது வெள்ளியைப் பூசிவிட்டால், நான் மட்டுமே எனக்குத் தெரிவேன். காரில் நான் மட்டுமே இருந்துகொண்டு என்னையே பார்த்துக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஆபத்து எனக்கு முன்னிருப்பவருக்கு மட்டுமல்ல. எனக்கும்தான். வீட்டில் என்னை மட்டுமே பார்த்துக்கொண்டு வெளியில் நடப்பவற்றைப் பார்க்காமல் இருந்தால் ஆபத்து எனக்கே. இரண்டு கண்ணாடிகளும் தங்கள் இயல்பை மாற்றக் காரணம் மெல்லிய வெள்ளிப்பூச்சுதான்.

செல்வம் என்ற வெள்ளிப்பூச்சு ஒருவரை அவர் மற்றவர்மேல் காட்ட வேண்டிய அக்கறையிலிருந்து திருப்பி, தன்மேல் மட்டும் அக்கறை காட்டுபவராக மாற்றி, மற்றவர்கள்மேல் அக்கறையின்மையோடு வாழச் செய்கிறது. இதுவே செல்வத்தின் ஆபத்து.

அதே வேளையில் தங்களுடைய செல்வத்தில் 99 சதவிகத்தை பிறரன்புப் பணிக்குக் கொடுக்கும் வாரன் பஃபே, தன்னுடைய நிறுவனம் வழியாக தன்னுடைய சொத்தின் பெரும் பகுதியை வளர்ச்சிப் பணிக்குச் செலவிடும் கேட்ஸ் குழுமம், மற்றும் நம்மிடையே வாழ்கின்ற நல்மனம் கொண்ட மேன்மக்கள் காட்டும் சமூக அக்கறை ஆகியவற்றை நாம் ஆமோதிப்பதும் நலம்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். ஆமோ 6:1, 4-7) தன்னுடைய சமகாலத்து செல்வந்தர்களைத் தொடர்ந்து சாடுகின்றார் ஆமோஸ். தன்னுடைய இறைவாக்குப் பாடலை, 'ஐயோ!' என்று தொடங்குகின்றார் ஆமோஸ். 'ஐயோ!' என்பது புலம்பலையும், சாபத்தையும் குறிக்கும். 'இன்பத்தில் திளைத்திருப்போர்,' 'கவலையற்றிருப்போர்,' 'உயர்குடி மக்கள்,' 'பெருமைவாய்ந்தவர்கள்' என வௌ;வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும் அனைத்தும் அவருடைய சமகாலத்து மேட்டுக்குடி மக்களையே குறிக்கிறது. விருந்து என்னும் உருவகம் வழியாக அவர்கள் வாழ்ந்த ஆடம்பரமான வாழ்க்கையையும் மற்றவர்கள்மேல் அவர்கள் காட்டிய அக்கறையின்மையையும் சுட்டிக்காட்டுகின்றார் இறைவாக்கினர். அவர்கள் 'தந்தத்தாலான கட்டிலில் படுத்துக்கொண்டு, பஞ்சணைமீது சாய்ந்துகொண்டு, கிடையிலிருந்து வரும் ஆட்டுக்குட்டிகளையும் மந்தையிலிருந்து வரும் கொழுத்த கன்றுகளையும் உண்கின்றனர்.' தந்தம் வெகு அரிதான பொருள். பாலைவனத்தில் பஞ்சணையில் தூங்குவது என்றால் அறைகள் குளிரூட்டப்பட வேண்டும். ஆட்டுக்குட்டிகள் திருவிழா நேரங்களில் மட்டுமே உண்ணப்பட்டன. இவற்றை அதிகம் சாப்பிடுவது என்பது சாதாரண மக்களுக்கு ஒன்றும் கிடைக்காமல் செய்துவிடுவது போலாகும். கன்றுக்குட்டிகள் வளர்க்கப்பட்டு விவசாயத்திற்கும், போக்குவரத்திற்கும் பயன்பட்டன. அவற்றையும் உணவாக்குகின்றனர் இவர்கள். மேலும், கடவுளுக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட வேண்டிய கன்றுக்குட்டிகளை உண்பதன் வழியாகவும், கடவுளுக்கு மட்டுமே இசைக்கப்பட்ட பாடல்களை - தாவீது இசைத்தது போல - தங்களுக்கே இசைத்துக்கொள்வதன் வழியாகவும் அவர்கள் தங்களைக் கடவுளுக்கு இணையாக்கிக்கொள்கிறார்கள்.

விருந்து, இசை, திராட்சை இரசம், நறுமணத்தைலம் போன்ற உருவகங்களால் ஆமோஸ் செல்வந்தர்களின் மேட்டிமை வாழ்வைச் சுட்டிக்காட்டுவதோடு, இவை யாவும் இவர்களைச் சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்படுத்தின என்றும், இதற்காக இவர்களே முதலில் நாடுகடத்தப்பட்டு அந்நியப்படுத்தப்படுவார்கள் என்றும் எச்சரிக்கின்றார். மக்களுக்கும் கடவுளுக்கும் உரியதை இவர்கள் தங்களுடையதாக்கிக்கொண்டார்கள். இவ்வாறு மக்களையும் கடவுளையும் அவமானப்படுத்தினார்கள்.

ஆக, இஸ்ரயேலின் செல்வந்தர்களின் மேட்டிமை வாழ்வும், அதனால் அவர்கள் மற்றவர்கள்மேலும் கடவுள்மேலும் காட்டிய அக்கறையின்மையும் அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் ஒருசேர அழிவைக் கொண்டுவருகிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 திமொ 6:11-16), நம்பிக்கையில் தான் பெற்றெடுத்த அன்புப் பிள்ளையான திமொத்தேயுவிடம் செல்வம் பற்றியும் அது கொண்டுவரும் ஆபத்து பற்றியும் மனம் திறந்து, செல்வத்திலிருந்து தப்பி ஓடவும், இறைவனுக்கு உகந்த சில மதிப்பீடுகளை நாடித்தேடவும் அறிவுறுத்தின்றார் பவுல். இதற்கு முந்தைய பகுதியில் (1 திமொ 6:3-10) எபேசு திருச்சபையில் இருந்த சில மனிதர்களின் நெறிகேடான வாழ்க்கைமுறை பற்றியும், அவர்கள் செல்வத்தைச் சேகரிக்க மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றியும் எச்சரிக்கின்றார். 'பண ஆசையே அனைத்து தீமைகளுக்கும் ஆணிவேர். இதனால் பலர் நம்பிக்கையிலிருந்து நெறிபிறழ்ந்தனர்' என்று ஆணித்தரமாகச் சொல்கின்றார். அவர்களைப் பற்றிப் பேசி முடித்தவுடன், 'ஆனால் ... நீ இவற்றிலிருந்து தப்பி ஓடு!' என்று தன் அறிவுரையைத் தொடர்கின்றார். 'நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, அன்பு, மனவுறுதி, கனிவு' ஆகிய ஆறு மதிப்பீடுகளை திமொத்தேயு தனதாக்கிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றார். மேற்கானும் ஆறு மதிப்பீடுகளையும் ஒருவரிடம் இருக்கும் அக்கறையின்மைக்கான மாத்திரைகள். தன்னலம், தன்மையம் என்னும் நம்முடைய மனிதஇயல்பியல் பண்புகள் நம்மை அறியாமலேயே நம்மேல் ஒரு செதிலை உருவாக்கி மற்றவர்களிடமிருந்து நம்மை அந்நியமாக்கிவிடுகின்றன. இம்மாத்திரைகளை நாம் உண்ணும்போது படிப்படியாக இச்செதில்களை நாம் உதிர்க்கின்றோம்.

மேலும், இம்மதிப்பீடுகள் வழியாகவே திமொத்தேயு நிலைவாழ்வைப் பற்றிக்கொள்ளவும், மற்றவர்களுக்கு நம்பிக்கை வாழ்வின் சாட்சியாகவும் திகழ முடியும். நீடித்த அர்ப்பணமும் நிலையாக அக்கறையுமே ஒரு நல்ல தலைவரை உருவாக்க முடியும். பேராசையும் தன்னலமும் இந்த அர்ப்பணத்தைக் குலைத்துவிடும். எனவேதான் பவுல் திமொத்தேயுவை, அக்கறையின்மை காலப்போக்கில் குழுமத்தையே அழித்துவிடும் என்று மறைமுகமாக எச்சரிக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 16:19-31) நமக்கு மிகவும் அறிமுகமான பகுதி. இதை ஒரு உருவகமாக பரிசேயர்களுக்குச் சொல்கின்றார் இயேசு. இரு கதைமாந்தர்கள். ஒருவர் செல்வந்தர். இவர் 'விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து தினமும் விருந்துண்கிறார்.' 'செந்நிற மெல்லிய ஆடை' பகட்டின் அடையாளம். 'செந்நிறம் கம்பளம்' ஆடம்பரமான வரவேற்பைக் குறிப்பது போல. ஆனால், இந்த நபருக்குப் பெயர் இல்லை. மற்றவர் இலாசர். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் - அதாவது, செல்வந்தரின் எச்சில் தட்டிலிருந்து கிடைப்பற்றைக் கொண்டு - பசியாறினார். நாய்கள் கூட வந்து நக்கும் அளவுக்குப் புண்கள் திறந்து கிடந்தன. இவ்வாறாக, இன்னும் அதிகமாக அவர் தீட்டுப்பட்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு விடயங்கள் பொதுவாக இருந்தன: (அ) இருவருமே யூதர்கள் அல்லது இஸ்ரயேல் மக்கள், (ஆ) இருவருமே ஆபிரகாமின் மகன்கள் அல்லது மக்கள். மோசேயின் சட்டப்படி (காண். இச 15:7-9) ஒவ்வொரு இஸ்ரயேலரும் தனக்கு அடுத்திருக்கும் இஸ்ரயேலரின்மேல் குறிப்பாக நலிவுற்றவர், வறியவர்மேல் அக்கறை கொண்டுவாழவும், அவர்களுக்கு உரியவற்றைச் செய்யவும் அழைக்கப்பட்டனர். தன் வாசலில் படுத்துக்கிடந்த இலாசர்மேல் காட்டிய அக்கறையின்மையால், கண்டுகொள்ளாத்தன்மையினால் மோசேயின் சட்டத்தை மீறியவராகின்றார் செல்வந்தர்.

இருவருமே இறக்கின்றனர். இறப்பு இவர்கள் வாழ்வைப் புரட்டிப் போடுகிறது. 'என் கடவுள் உதவி செய்கின்றார்' என்று பொருள்தரும் பெயர் கொண்ட இலாசர் ஆபிரகாமின் மடிக்குத் தூக்கிச் செல்லப்படுகின்றார். செல்வந்தரோ பாதாளத்தில் தனிமையில் வதைக்கப்படுகின்றார். அவர் இலாசர்மேல் காட்டிய அக்கறையின்மை அவருக்கு அழிவைக் கொண்டுவருகிறது.

ஆனால், இறந்தபின்னும் அச்செல்வந்தர் தன்னுடைய தவற்றை உணரவில்லை. செருக்கோடும் தன்னலத்தோடும் தொடர்ந்து முறையிடுகின்றார். இலாசரைத் தன்னுடைய பணியாளனாகவும் தூதனாகவும் ஆக்கிக்கொள்ள விரும்புகின்றார். தனக்குத் தண்ணீர் தருமாறு இலாசரைப் பணிக்கவம், தம் இல்லத்திற்குத் தூதனுப்பவும் ஆபிரகாமிடம் வேண்டுகின்றார். செல்வந்தரின் அக்கறையின்மை அவருக்கும் ஆபிரகாம்-இலாசருக்கும் இடையே பெரிய பிளவை ஏற்படுத்திவிடுகிறது - 'இங்கிருப்பவர் அங்கும் அங்கிருப்பவர் இங்கும் கடந்து வர இயலாமல் போய்விடுகிறது.'

இவ்வாறாக, அக்கறையின்மையின் விளைவு அழிவு என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன இன்றைய வாசகங்கள். முதல் வாசகத்தில் மேட்டுக்குடி செல்வந்தர்களின் வாழ்வு அவர்களுக்கும் ஒட்டுமொத்த இஸ்ரயேல் மக்களுக்கும் நாடுகடத்தலைக் கொண்டுவருகிறது. இரண்டாம் வாசகத்தில் செல்வம் ஒருவரை அர்ப்பணத்திலிருந்து தவறிவிழச் செய்கிறது. மூன்றாம் வாசகத்தில் அக்கறையின்மை செல்வந்தரை அழிவில் தள்ளுவதோடு பெரிய பிளவையும் சமூகத்தில் ஏற்படுத்திவிடுகிறது. இதற்கு மாறாக, அக்கறை காட்டும் ஒருவர், இன்றைய திருப்பாடல் (146) குறிப்பிடும் ஆண்டவர் போல, 'நீதியை நிலைநாட்டுகின்றார், பசித்திருப்போருக்கு உணவளிக்கின்றார், அநாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்.'

அழிவுதரும் அக்கறையின்மையை நாம் எப்படி கடப்பது? அல்லது மற்றவர்மேல் எப்படி அக்கறை காட்டுவது? மற்றவர்கள்மேல் அக்கறைகாட்டுவதிலும் சிக்கல் இருக்கிறது. அடுத்தவர்கள் என்னிடம் முதலில் கேட்கட்டும் என்று சொல்லி சிலர் அக்கறை காட்ட மறுப்பர். அல்லது சிலர் மற்றவர்கள்மேல் அக்கறை காட்டியதால் மிகவும் இக்கட்டான சூழலில் சிக்கியிருக்கக் கூடும். இருந்தாலும் அக்கறையின்மையைவிட அக்கறை மேலானது.

நம்மிடம் பின்வரும் இரண்டு கேள்விகள் இருந்தால் நம்மால் மற்றவர்கள்மேல் அக்கறை காட்ட முடியாது:
அ. விதிப்படிதானே எல்லாம் நடக்கும்?
'நான் நன்றாக இருக்கிறேன் என்றால், நீ ஏழையாக இருக்கிறாய் என்றால் அது விதி' என்று நினைப்பவர்களும், 'நான் நன்றாக இருக்கிறேன் என்றால் உழைக்கிறேன். நீயும் உழைத்தால் நன்றாக இருப்பாய்' என்று நினைப்பவர்களும் மற்றவர்கள்மேல் அக்கறை காட்ட முடியாது. இன்றைய முதல் வாசகத்தில் நாம் கண்ட செல்வந்தர்கள் இத்தகைய மனநிலையைத்தான் கொண்டிருந்தனர். தாங்கள் செல்வராய் இருப்பதே கடவுளின் ஆசீர் என்றும், அந்த ஆசீரை அவர்கள் கொண்டாட வேண்டும் என்றும் நினைத்தார்கள். ஆக, தங்களுடைய வாழ்விற்குத் தேவையான அனைத்தையும் தாங்கள் செய்து கொள்வதை அவர்கள் இதன் அடிப்படையில் நியாயப்படுத்தினார்கள். ஆனால், இது சரியான மனநிலை அன்று. ஒருவேளை அம்பேத்கார் இப்படி நினைத்திருந்தால் தன்னுடைய மக்களின் உரிமைக்காக அவர் போராடியிருக்க முடியுமா?

ஆ. நான் யாருக்கும் தீமை செய்யவில்லையே?
இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் செல்வந்தர் யாருக்கும், குறிப்பாக இலாசருக்குத் தீமை செய்யவில்லை. தன்னுடைய உழைப்பில் தான் பெற்ற செல்வத்தைக் கொண்டு உண்டு மகிழ்ந்தார். யாருக்கும் அவர் தீமை செய்யவில்லை. இலாசரின் உழைப்பை உறிஞ்சவில்லை. இலாசரை தன் பார்வையிலிருந்து விரட்டியடிக்க வில்லை. ஆக, தீமை செய்யாமல் இருந்தால் மட்டும் போதுமா? இல்லை. நன்மை செய்யாமல் இருப்பதும் பாவம்தான். நான் யாருடைய வம்புக்கும் போவதில்லை, நான் நடுநாயகமானவன் என்று நினைப்பதெல்லாம் அடக்குபவருக்கு இடம் கொடுப்பதாக அமையும்.

மேலும், நமக்குத் தேவைகள் அன்றாடம் கூடிக்கொண்டே வருகின்றன. வழக்கமாக நமக்கு மேலிருப்பவர்களோடு நம்மையே ஒப்பிட்டுக்கொண்டே நம்மிடம் இல்லாதவை பற்றி நாம் புலம்புகின்றோம். இப்படிப்பட்ட புலம்பல் இருப்பவர்கள் ஒருபோதும் மற்றவர்கள்மேல் அக்கறைகாட்ட இயலாது. ஆனால், நமக்குக் கீழிருப்பவர்களோடு நம்மையே ஒப்பிடத் துணிந்தால் நம்மால் எளிதில் மற்றவர்கள்மேல் அக்கறைகாட்ட முடியும்.

இவ்விரண்டு கேள்விகளை விடுப்பவர்தான் மற்றவர்கள்மேல் அக்கறை காட்ட முடியும். நேர்முகமான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், நான் எனக்கும் மற்றவருக்கும் இடையே இருக்கின்ற சார்புநிலையை உணர்ந்தால்தான் அக்கறைகாட்ட முடியும். 'கடவுளின் மனிதனாகிய நீ இவற்றிலிருந்து தப்பி ஓடு' என்று திமொத்தேயுவுக்குச் சொல்கின்ற பவுல், 'நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, அன்பு, மனவுறுதி, கனிவு' ஆகியவற்றை நாடித்தேடு என்கிறார். ஒன்றிலிருந்து நான் ஓடும்போது மற்றதை நான் நாட வேண்டும். எதையாவது பிடித்துக்கொண்டே இருந்தால்தான் வாழ முடியும். ஆக, நான் மற்றவர்களோடு தொடர்பில் இருக்கிறேன் என்றும், மற்றவரின் வயிறு வாடியிருக்கும்போது, என் தட்டு நிரம்பி வழிந்தால் நான் மற்றவருக்கு உரியதையும் உண்கிறேன் என்றும் உணர்ந்தால் என்னால் அடுத்தவர்மேல் அக்கறைகாட்ட முடியும்.

இறுதியாக, இன்று நான் மற்றவர்கள்மேல் அக்கறையோடு இருக்கின்றேனா? அல்லது அக்கறையற்று இருக்கின்றேனா? அக்கறையின்மையில் வாழ்கிறேன் என்றால், எனக்கும் மற்றவர்களுக்கும் இடையே வெள்ளிப்பூச்சு இருக்கிறது என்பதே உண்மை. இந்த வெள்ளிப்பூச்சு அதிகமாகிக்கொண்டே போனால் எனக்கும் அவருக்கும் - ஆண்டவருக்கும் - இடையே உள்ள பிளவும் அதிகமாகிக்கொண்டே போகும்.

அக்கறையின்மை என்னையும் பிறரையும் அழிக்கும் என்றால்,
நான் மற்றவர்கள்மேல் காட்டும் அக்கறை பிறரையும் என்னையும் வாழ வைக்கும்.
இவ்வாறாக,
நான் காட்டும் அக்கறையே நான் அக்கரை சேர்வதற்கான படகும் துடுப்பும் ஆகும்!

ser

sunday homily


முகப்பு பக்கம்
வத்திக்கான் வானொலி
கத்தோலிக்க இதழ்கள்
ஞாயிறு வாசகம்
விருந்தினர் பக்கம்
உம் வாக்கே விளக்கு!
சென்னை பங்குதலங்கள்
நூலகம்
திருத்தலச் சுற்றுலா
தவக்கால சிந்தனைகள்
ஒலியும் ஒளியும்
அன்னை தெரேசா
கிறிஸ்மஸ் மலர்கள்
பொங்கல்
செபமாலை
பாடல்கள்
செபமே ஜெயம்A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com