மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலம் இருபத்தி ஐந்தாம் ஞாயிறு
மூன்றாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
I ஆமோஸ் 8:4-7 | II 1திமொத்தேயு 2:1-8 | III லூக்கா 16:1-13

விவேகம் - முன்மதி

சீனா தேசத்திலே ஆட்சிபுரிந்த அரசன் ஒருவன், தன் அவையிலே கோமாளித்தனமாக செயல்பட்ட ஒருவனிடம் ஒரு கோலைக் கொடுத்து, உன்னை விட பெரிய முட்டாள் ஒருவனைக் கண்டால் இந்த கோலைக் கொடுத்து விடு என்றார். நாட்கள் நகர்ந்தன. மாதங்கள் மறைந்தன, வருடங்கள் உருண்டோடின. மரணப்படுகையிலே இருந்த அரசனிடம் அந்தக் கோமாளி வந்து, "அரசே! நீங்கள் இறந்த பின் போகும் இடம் உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க, 'தெரியாது' என்றார் அரசர். "இறந்தபின் வசதியாக வாழ்வதற்கு முன் ஏற்பாடுகள் செய்துள்ளீர்களா?" என்று கேட்க 'இல்லை ' என்றார். " அப்படியானால், உலகத்திலே உங்களைவிடப் பெரிய முட்டாள் இருக்க முடியாது. எனவே நீங்களே இந்தக் கோலைப் பெற்றுக் கொள்ளுங்கள்," என்று கொடுத்துவிட்டுச் சென்றான்.

இந்த உலக வாழ்விற்குப் பின் எங்கே போகிறோம் என்று அறிந்து அதற்கு உரிய முன் ஏற்பாடுகளை நாம் செய்யாமல் இந்த உலகத்தில் வாழ்ந்தால் நாம் தான் பெரிய முட்டாள்கள் நமக்கு அறிவுடைமை, முன்மதி, விவேகம், பொருட்களைப் பயன்படுத்தும் முறையைப் பற்றிச் சிந்திக்க அழைக்கிறது இன்றைய வார்த்தை வழிபாடு. அம்மாவாசை எப்போது முடியும்? நல்ல விலைக்கு விற்க ஓய்வு நாள் எப்போது முடியும்? கள்ளத் தராசைக் கொண்டு எப்படியெல்லாம் மோசடி செய்யலாம் (ஆமோ.8:4-6) என்று காத்திருந்து, வஞ்சிப்பவர்களைச் சாடுகிறார் இறைவாக்கினர் ஆமோஸ் (முதல் வாசகம்). உலகச் செல்வங்கள் நிலையற்றவை. நேர்மையற்ற செல்வங்கள் இந்த நிலையற்ற, நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு, வேலையிலிருந்து நீக்கப்பட இருந்த கண்காணிப்பாளன் எப்படி முன்மதியோடும், விவேகத்தோடும் செயல்பட்டான் என்பதை இயேசு அழகாகச் சித்தரிக்கிறார் (மூன்றாம் வாசகம்). தந்திரத்தோடு செயல்பட்ட கண்காணிப்பாளனின் முன்மதியை மட்டும் இங்கே நாம் பார்க்க வேண்டும், ஆண்டவர் இயேசுவே கூறுகிறார் மிகுதியான உடைமைகளை ஒருவன் கொண்டிருந்தாலும், அவனுக்கு வாழ்வு வந்துவிடாது (லூக்.12:15) என்று.

அறம், பொருள், இன்பம் என்ற வழி முறையில், பொருள் மட்டுமல்ல, பொருளோடு அறமும், இறையருளும் சேர்ந்தால் தான் உண்மையான இன்பம் கிடைக்கும். நேற்றைய வேலையை இன்று முடிப்பவன் ஒரு முட்டாள், இன்றைய வேலையை இன்றே முடிப்பவன் ஒரு சராசரி மனிதன். நாளைய வேலையை இன்றே செய்பவன் ஓர் அறிவாளி. இதைத்தான் இன்றைய நற்செய்தி படம் பிடித்துக் காட்டுகிறது.

ஆண்டவர் இயேசு கூறுகிற அநீத செல்வங்களைக் கொண்டு நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்ளுங்கள் (லூக்.16:9) என்றும், நீங்கள் கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்ய முடியாது (லூக். 16:13) என்றும் கூறுகிறார். நமது வாழ்வு இவ்வுலகில் குறுகிய காலம்தான். எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பது முக்கியம் அல்ல. எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம். இறைவன் கொடுத்த செல்வங்கள், கொடைகள், திறமைகள், ஆற்றல்கள் அனைத்தையும் பயனுள்ள முறையில் முன்மதியோடு வாழ அழைக்கப்படுகிறோம்.
தனக்காக வாழ்பவன் மிருகம்
தனக்காகவும் பிறருக்காகவும் வாழ்பவன் மனிதன்
பிறருக்காகவே வாழ்பவன் தெய்வம்!

ser

பணத்தின் மதிப்பு என்ன?

இன்றைய நற்செய்தியில் முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப் பொறுப்பாளரை இயேசு புகழ்கின்றார். தன் எதிர்காலத்திற்குத் தேவையானது பண மன்று, மாறாக நல்ல நண்பர்கள் என்பதை உணர்ந்து செயல்பட்ட வீட்டுப் பொறுப்பாளரை நாம் இயேசுவின் உவமையில் சந்திக்கின்றோம்.

இயேசுவின் வார்த்தைகள் நமக்குக் கற்பிக்கும் பாடம் என்ன? பணத்தைச் சேர்த்துவைப்பதை விட நம் எதிர்கால வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக அமைய, அதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதே நல்லது என்ற உண்மையை நமக்கு இயேசு இன்று எடுத்துச்சொல்ல விரும்புகின்றார்.

பணத்தைச் சேர்த்து வைப்பதால் எந்தப் பயனு மில்லை என்பதைச் சுட்டிக்காட்ட இதோ ஒரு கதை! ஓர் ஊரிலே ஒரு பெரிய பணக்காரன் ஒருவன் இருந்தான். அவனிடம் கோடிக்கணக்கில் பணம் இருந்தது. ஆனால் அவன் சரியான கஞ்சன் | கருமி! காசு காசு என்று பிசாசு போல அலைந்தான்.

ஒருநாள் அவன் சற்றும் எதிர்பாராத ஒன்று நடந்தது! அவன் நினையாத நேரத்தில் அவன் முன்னால் மரணதூதன் நின்றான். அவன் அந்தப் பணக்காரனைப் பார்த்து, உன் உயிரைக் கடவுள் எடுத்து வரச்சொன்னார் என்றான். அதற்கு அந்தப் பணக்காரன், இன்னும் ஒரு வருடம் அவகாசம் கொடு. என் கணக்கு, வழக்குகளையெல்லாம் முடித்து விட்டுத் தயாராக இருக்கின்றேன் என்றான்.
மரணதூதனோ, முடியாது என்றான். பணக்காரன், மூன்று மாதங்கள் கொடு என்றான். மரணதூதன், முடியாது என்றான். பணக்காரன், மூன்று நாள்கள் கேட்டான். மரணதூதன் மறுத்துவிட்டான்.

பணக்காரன், மூன்று மணி நேரம் தருவாயா? என்றான். மரண தூதன், மூன்று மணி நேரம் தரமுடியாது என்றான். கடைசியாக பணக்காரன், மூன்று நிமிடங்களையாவது தருவாயா? என்றான்.
மரணதூதன், சரி, இரண்டு நிமிடங்கள் தருகின்றேன்! அதற்குள் நீ செய்ய வேண்டியதை செய்து கொள் என்றான். அந்த இரண்டு நிமிடங்களைப் பயன்படுத்தி அவனது கடைசி ஆசையை அந்தப் பணக்காரன் எழுதினான்: உலக மக்கள் அனைவரும் அறியவேண்டியதாவது! உங்களிடம் கோடிக்கணக்கில் பணமிருக்கலாம். ஆனால் அதை வைத்து உங்களால் மூன்று நிமிடங்களைக் கூட வாங்க முடியாது.

நினையாத நேரத்தில் மரணதூதன் உங்களை அழைத்துப்போக வருவான். ஆகவே, எப்போதும் தயாராக இருங்கள். உங்களிடம் பணமிருந்தால் அதைக்கொண்டு தர்மம் செய்யுங்கள். அப்போது இம்மையிலும் உங்களுக்கு நண்பர்கள் கிடைப்பார்கள்; மறுமையிலும் கடவுள் உங்களுக்கு நண்பராவார்; உங்களுக்கு முடிவில்லா வாழ்வும் கிடைக்கும்.

ஆம். பணத்தை நல்ல முறையில் பயன்படுத்தி நமக்கு வேண்டிய பாதுகாப்பை நாம் தேடி வைத்துக்கொள்ளவேண்டும். நாம் பணத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது அது சேர வேண்டியவர்களுக்கு போய்ச் சேர்கின்றதா என்பதை நாம் உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும். நமது பணத்திற்கு உரியவர்கள் யார் என்பதை இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஆமோஸ் நமக்குத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றார்.

வறியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் ஆகியோரை நமது பணம் சென்றடைய வேண்டும் என்கின்றார் ஆமோஸ். ஏழை எளியவர்களோடு தங்கள் செல்வத்தைப் பகிர்ந்து கொள்ளாது, அதைச் சேர்த்துவைக்க ஆசைப்படுகின்றவர்களுக்கு கடவுளின் ஆசி கிடைக்காது; நடுக்கமும், புலம்பலும்தான் அவர்கள் வாழ்க்கையிலே மிஞ்சும் (ஆமோ 8:8).

தன்னையே உலகுக்குக் கொடுத்த இயேசு ஆண்டவர் (இரண்டாம் வாசகம்) நம்மிடமுள்ளதை உலக மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகின்றார். அவரின் ஆசையை நிறைவேற்றி அவரின் ஆசியைப் பெற்றுக்கொள்வோம்.

மேலும் அறிவோம் :

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து (குறள் : 221).
பொருள் :
ஏழை எளியோர்க்குத் தேவையான பொருளை வழங்குவதே ஈகை என்னும் அறச் செயலாகும், ஏனையோர்க்குக் கொடுப்பவை அனைத்தும் பயனை எதிர்நோக்கித் தரும் இயல்பின ஆகும்.

பழங்காலத்தில் ஓர் அரசர் தமது அரசவையில் கோமாளியாகச் செயல்பட்ட ஒருவரிடம் ஒரு கோலைக் கொடுத்து, "உன்னைவிடப் பெரிய முட்டாள் ஒருவரைக் கண்டுபிடித்து அவரிடம் இக்கோலைக் கொடு" என்றார். பல ஆண்டுகளுக்குப்பின் அரசர் மரணப் படுக்கையில் இருந்தார். கோமாளி அவரிடம், "அரசே! நீங்கள் இறந்தபின் போகுமிடம் உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டதற்கு அரசர். “தெரியாது” என்றார். கோமாளி மீண்டும் அரசரிடம், "இறந்தபின் வசதியாக வாழ்வதற்கு முன் ஏற்பாடுகள் செய்துள்ளீர்களா?" என்று கேட்டதற்கு, "இல்லை " என்றார். கோமாளி அரசரிடம், "இறந்தபின் எங்கே போகப்போகிறீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியாது. இறந்தபின் வசதியாக வாழ்வதற்கும் நீங்கள் முன் ஏற்பாடு செய்யவில்லை, அப்படியானால் உங்களைவிட ஒரு பெரிய முட்டாள் இருக்க முடியாது. எனவே நீங்கள் என்னிடம் கொடுத்த இக்கோலை நீங்களே பெற்றுக் கொள்ளுங்கள்" என்று கூறி கோலை அவரிடம் கொடுத்து ஏளனமாகச் சிரித்தார்.

இம்மை வாழ்வுக்குப் பின் நாம் எங்கே போகிறோம் என்று தெரியாமலும், போகின்ற இடத்தில் வசதியாக வாழ முன் ஏற்பாடுகள் செய்யாமலும் நாம் இருந்தால், உண்மையில் நம்மைவிடப் பெரிய முட்டாள் வேறு எவரும் இருக்க முடியாது. நமக்குத் தேவையானது அறிவுடமை, முன்மதி. விவேகம், அறிவாளிகள் எதிர்காலத்தை முன்னறியும் ஆற்றல் பெற்றவர்கள், அத்தகைய ஆற்றல் அற்றவர்கள் அறிவில்லாதவர்கள்.

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃது அறி கல்லாதவர் (குறள் 427)

இயேசு கிறிஸ்து நாம் மறுவாழ்வைப் பற்றியும் மீட்பைப் பற்றியும் அக்கறை கொள்ள வேண்டும் என்பதைப் பின்வருமாறு கூறுகிறார்: "மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு எடாக எதைக் கொடுப்பார்" (மத் 16:26). இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுகிறார்: “இயேசு கிறிஸ்து அனைவரின் மீட்புக்காகத் தம்மையே ஈடாகத் தந்தார்" (1 திமொ 2:6). "மீட்பின் பயனை நாம் பெறாவிட்டால் நாம் பிறந்ததால் எப்பயனும் இல்லையே" என்று திருச்சபை பாஸ்காப் புகழுரையில் கூறுகிறது.

மனநல மருத்துவமனையில் ஒரு நோயாளி மற்றொரு நோயாளியின் கழுத்தை வெட்டிவிட்டார். அதிர்ச்சி அடைந்த மருத்துவர் அவரிடம் ஏன்? அவர் அவ்வாறு செய்தார் என்று கேட்டதற்கு அவர் கூறியது: "பயப்படாதே டாக்டர்! நாளை காலை அவன் தூங்கி எழுந்தவுடன் தலையைக் காணாமல் தேடுவான். அப்போது தலையைக் கொடுத்துவிடலாம்," தலையை இழந்தவர் உயிர் வாழ முடியுமா? அவ்வாறே ஆன்மாவை இழந்தவர் எவ்வாறு முழுமையான வாழ்வு வாழ முடியும்? எனவே, விண்ணக வாழ்வை இழந்து விடாமல் இம்மண்ணக நலன்களை நாம் பயன்படுத்த வேண்டும்.

இன்றைய நற்செய்தியில் முன்மதியுடன் செயல்பட்ட நேர்மையற்ற வீட்டுப் பொறுப்பாளர் உவமையைக் கூறுகின்றார் கிறிஸ்து. வீட்டுப் பொறுப்பாளர் நேர்மையற்ற மோசடிக்காரர். இருப்பினும் தனது எதிர்காலத்தைக் கருதி முன்மதியுடன் செயல்பட்டார். அவர் இருளின் மகன்; ஆனால் இவ்வுலகக் காரியங்களைப் பொறுத்த மட்டில் ஒளியின் மக்களைவிட முன்மதியுடன் நடந்து கொண்டார்.

முன்மதியுடன் செயல்பட்ட நேர்மையற்ற பொறுப்பாளரைப் பின்பற்ற வேண்டும் என்கிறார் கிறிஸ்து. செல்வம் நேர்மையற்றது: அச்செல்வத்தைக் கொண்டு நாம் நண்பர்களைத் தேடிக்கொள்ள வேண்டும். அதாவது, நமது செல்வத்தைக் கொண்டு ஏழைகளுக்கு இம்மையில் உதவி செய்தால், மறுமையில் அவர்கள் நமக்காகக் கடவுளிடம் பரிந்து பேசுவார்கள். சுருக்கமாக, இம்மையில் நாம் ஏழைகளை வாழவைத்தால், மறுமையில் ஏழைகள் நம்மை வாழவைப்பார்கள்,

செல்வத்தை நேர்மையற்ற (அநீதி) செல்வம் என்று கிறிஸ்து குறிப்பிடுவது ஏன்? ஏனெனில் பெரும்பாலும் மக்கள் நேர்மையற்ற வழிகளில் செல்வம் சேர்க்கின்றனர். இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஆமோஸ் அவருடைய காலத்தில் நிலவிய சமூக அநீதிகளைப் பின்வருமாறு கோடிட்டுக் காட்டியுள்ளார்: தானியங்களில் கலப்படம் செய்கின்றனர்; கள்ளத் தராசைப் பயன்படுத்துகின்றனர்; ஒரு வெள்ளிக்காசுக்கு எழைகளையும், இரு காலணிக்கு வறியோரையும் விலைக்கு வாங்குகின்றனர் (ஆமோ 8:4-7). இவ்வாறு முறைகேடான வழிகளில் திரட்டப்படும் செல்வம் நேர்மையற்ற செல்வம்தானே!

நம் நாட்டில் ஒருவர் மண்ணை அள்ளித் தின்றார். ஏன் என்று அவரைக் கேட்டதற்கு அவர் கூறினார்: "நமது நாட்டில் கலப்படம் இல்லாத ஒரே பொருள் மண்தான்." ஒரு பள்ளி மாணவன் ரயில் பெட்டியிலிருந்த மின் விசிறியைக் கழட்டி எடுத்தான். உடன் பயணிகள் ஏன் என்று கேட்டதற்கு அவன் கூறினான்: "எனது வகுப்பு ஆசிரியர், அரசு உடைமைகளை எல்லாம் நமது சொந்த உடைமைகளாகக் கருத வேண்டும் என்று நேற்றுதான் வலியுறுத்திச் சொன்னார் " இவ்வாறு கலப்படம் செய்து, அரசு செத்துக்களை சூரையாடிச் செல்வம் திரட்டும் காலம் இது. இச்சூழலில் நேர்மையற்ற செல்வத்தை நேர்மையான செல்வமாக மாற்றுவதற்கு ஒரே வழி அதைக்கொண்டு ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தல் ஆகும்.

ஒரு பணக்காரப் பெண்மணி விண்ணகம் சென்றபோது அவருக்கு ஒரு குடிசை வீடுதான் கிடைத்தது. ஏன் என்று அவர் பேதுருவைக் கேட்டபோது அவர் கூறியது: "நீங்கள் உலகில் வாழ்ந்தபோது ஏழை எளியவர்களுக்கு நீங்கள் கொடுத்த பணத்தைக் கொண்டு இந்தக் குடிசை வீடு மட்டும்தான் எங்களால் கட்ட முடிந்தது."
"எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கு அளக்கப்படும்." (லூக் 6:38).

நீங்கள் யார்க்குப் பணிவிடை செய்கிறீர்கள்?

நிகழ்வு
உரோமையை ஆண்டுவந்த தியோளசியன் என்ற பேரரசுனுக்குக் கீழ் குரோமாசியுஸ் என்ற ஆளுநன் இருந்தான். அவனுக்குத் திடீரென்று கொடியநோய் ஒன்ற வந்தது. அதிலிலிருந்து அவன் நலம்பெற யார் யாருடைய உதவியெல்லாமோ நாடினான். அஆனல், யாரும் அவனுக்கு நலம் தரவில்லை. இந்நிலையில்தான் அவன் செபஸ்தியாரைக் குறித்துக் கேள்விப்பட்டான். எனவே அவன் தன்னுடைய பணியாளர்களை செபஸ்தியாரிடம் அனுப்பி, தன்னுடைய இல்லத்திற்கு அவரை அழைத்து வருமாறு கேட்டான். அவனுடைய பணியாளர்களும் செபஸ்தியாரிடம் சென்று, குரோமாசியுஸ் சொன்னதை செபஸ்தியாரிடம் சொல்லி, அவரை அவனுடைய வீட்டிற்கு அழைத்து வந்தார்கள்.

செபஸ்தியார், குரோமாசியுசியுஸின் இல்லத்திற்கு வந்தபோது, அவன் படுக்கையில் எழுந்திருந்த முடியாமல் படுத்துக்கிடந்தான். அவரைக் கண்டதும் குரோமாசியுஸ், செபஸ்தியாரிடம் தன் இரு கைகளைக் கூப்பி, “நீங்கள் மட்டும் என்னிடமுள்ள நோயைக் குணப்படுத்திவிட்டால், நான் கிறிஸ்தவனான மாறுவேன்” என்று உறுதியாகச் சொன்னான். உடனே செபஸ்தியார் தன்னுடைய கண்களை அவனுடைய வீட்டில் படரவிட்டுவிட்டு, “உன்னிடமிடமுள்ள நோய் நீங்கவேண்டுமென்றால், முதலில் நீ உன்னுடைய வீட்டில் இருக்கின்ற விக்கிரகங்களை/ போலி தெய்வங்களின் சிலைகளை அப்புறப்படுத்து” என்று சொல்லிவிட்டு அவனுடைய வீட்டிலிருந்து வெளியேறினார்.

குரோமாசியுஸும் தன்னுடைய வீட்டிலிருந்த போலி தெய்வங்களின் சிலைகளை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தினான். அப்படியிருந்தும் அவனுடைய கொடிய நோய் அவனை விட்டு மறைவதற்குப் பதிலாக, இன்னும் அதிகமானது. இதைக்கண்டு மிரண்டுபோன குரோமாசியுஸ், தன்னுடைய பணியாளர்களை அழைத்து, செபஸ்தியாரை எப்படியும் கூட்டிக்கொண்டு வாருங்கள் என்று உத்தரவிட்டான். அவர்களும் செபஸ்தியாரைக் கண்டு, நடந்ததைச் சொல்லி, அவரை குரோமாசியுஸின் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். குரோமாசியுஸ் முன்பைவிடவும் மிகுந்த வேதனையோடு படுக்கையில் கிடந்தான்.

‘நான் சொன்னதுபோல் நீ உன்னுடைய வீட்டிலிருந்த போலி தெய்வங்களின் எல்லாச் சிலைகளையும் உன்னுடைய வீட்டிலிருந்து அப்புறப்படுத்திவிட்டாயா?” என்று செபஸ்தியார் அவனைப் பார்த்துக் கேட்டார். “என்னுடைய வீட்டிலிருந்த எல்லாச் சிலைகளையும் அப்புறப்படுத்திவிட்டேன். தங்கத்தால் செய்யப்பட்ட சிலை மட்டும் இன்னும் இருக்கின்றது” என்றான் குரோமாசியுஸ். “இதையும் உன்னுடைய வீட்டிலிருந்து தூக்கி எறிந்துவிட்டு ஆண்டவராகிய இயேசுவுக்கு உண்மையாக இரு” என்று செபஸ்தியார் சொன்னதும், அவன் அந்தத் தங்கச் சிலையையும் தூக்கித் தீயில் எறிந்தான். அவன் இவ்வாறு செய்த மறுகணம் அவனுடைய உடலில் இருந்த கொடியநோயானது மாயமாக மறைந்தது. அதன்பிறகு அவன் தன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவர் இயேசுவுக்கு உண்மையாக இருந்தான்.

குரோமாசியுஸ் போலி தெய்வங்கட்கும் ஆண்டவர் இயேசுவுக்கும் என இரு தலைவர்க்ட்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தபோது அவனுடைய உடலில் இருந்த கொடிய நோய் இன்னும் அதிகமானது. எப்பொழுது அவன் ஆண்டவர் இயேசுவுக்கு மட்டும் உண்மையாக இருந்து, அவர்க்கு மட்டுமே பணிசெய்யத் தொடங்கினானோ அப்பொழுது அவனுடைய உடலிருந்த கொடிய மாயமாய் மறைந்துபோனது.

எப்பொழுது ஒருவர் இருதலைவர்கட்கு பணிவிடை செய்கின்றாரோ அப்பொழுது அவர் நன்மையை அல்ல, தீயையே பெறுகின்றார். மாறாக அவர் ஆண்டவர்க்கு மட்டுமே பணிவிடை செய்கின்றபோது, நிறைந்த நன்மையைப் பெறுகின்றார் என்ற உண்மையை மிக அழகாக எடுத்துரைக்கும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. பொதுக்காலத்தின் இருபத்து ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம், யாரும் இருதலைவர்கட்குப் பணிவிடை செய்ய முடியாது அல்லது ஆண்டவர்க்குப் பணிசெய்து வாழவேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

இரு தலைவர்கட்குப் பணிவிடை செய்பவர்கள் உண்மையில்லாதவர்கள்
நற்செய்தியில் இயேசு, “எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவட்குப் பணிவிடை செய்ய முடியாது” என்கின்றார். இயேசு சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. ஏனெனில், இரு தலைவர்களையும் ஒரே மாதிரி அல்லது நூறு சதவீதம் அன்பு செய்யமுடியாது; ஒருவரை வெறுத்துத்தான் இன்னொருவரை அன்புசெய்ய முடியும். அப்படி யாராவது இரு தலைவர்கட்குப் பணிவிடை செய்கின்றார்கள் என்றால், அவர்கள் உண்மையில்லாதவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். எடுத்துக்காட்டிற்கு இஸ்ரயேல் மக்கள், ஆண்டவர்க்கு ஊழியம் செய்வோம்’ (யோசு 24: 21) என்று வாக்குக் கொடுத்தார்கள். அந்த வாக்குக்கு அவர்கள் உண்மையாக இருந்தார்களா? என்றால், நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், அவர் ஆண்டவர்க்கு ஊழியம் செய்வதாக வாக்குக் கொடுத்துவிட்டுப் பாகால் தெய்வத்தை வழிபட்டு வந்தார்கள். இதனால் அவர்கள் உண்மையில்லாமல் இருந்தார்கள்.

நாம் இஸ்ரயேல் மக்களைப் போன்று கடவுளுக்கும் சாத்தானுக்கும் அல்லது கடவுளுக்கும் செல்வத்திற்கும் பணிவிடைசெய்து வாழ்கின்றோம் என்றால், நாம் யாருக்கும் உண்மையாக இல்லை என்பதுதான் உண்மை.

செல்வத்துக்குப் பணிவிடை செய்பவர்கள் விரைவில் அழிந்து போனார்கள்

இருதலைவர்கட்குப் பணிவிடை செய்பவர்கள் யார்க்கும் உண்மையாக இருப்பதில்லை என்று சிந்தித்துப் பார்த்த நாம், இரு தலைவர்களில் ஒன்றான/ஒருவனான செல்வம் அல்லது சாத்தானுக்குப் பணிவிடை செய்பவர்கள் எப்படி அழிவினைச் சந்திக்கின்றார்கள் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

செல்வத்திற்குப் பணிவிடை செய்துவிட்டு விரைவில் அழிவைச் சந்தித்தவர்கட்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு, இயேசுவின் சீடர்களுள் ஒருவனான யூதாஸ் இஸ்காரியோத்து. அவன் ஆண்டவர் இயேசுவின் சீடனாக இருந்தான். அதே நேரத்தில் அவன் பணத்தாசை பிடித்தவனாக, திடுடனாக (யோவா 12:6), செல்வத்திற்குப் பணிவிடை செய்பவனாக இருந்தான். அதனால் முப்பது வெள்ளிக்காசுகட்கு இயேசுவைக் காட்டிக் கொடுத்து, அந்த முப்பது வெள்ளிக்காசுகளையும் அனுபவிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டான். இந்த வரிசையில் அடுத்து வருவது இலவோதிகேயாத் திருஅவை, இத்திருஅவை தன்னிடம் செல்வம் இருக்கின்றது... எல்லாமும் இருக்கின்றது... என்ற கர்வத்தில் இருந்தது. அதனால் அத்திருஅவை அதற்கான முடிவைத் தேடிக்கொண்டது (திவெ 3: 14-18). நாமும் செல்வத்திற்குப் பணிவிடை வாழ்கின்றபோது முட்புதருக்குள் விழுந்த விதை எப்படி முட்புதரால் நெருக்கப்பட்டு அழிந்துபோகின்றதோ அதுபோன்று நாமும் அழிவோம் என்பது உறுதி.

ஆண்டவர்க்குப் பணிவிடை செய்பவர்களோ வாழ்வடைவார்கள் இரு தலைவர்கட்குப் பணிவிடை செய்பவர்கள் யாருக்கும் உண்மையாக இருக்கமாட்டார்கள்; அதிலும் குறிப்பாக செல்வத்திற்குப் பணிவிடை செய்பவர்கள் விரைவில் அழிந்துபோவார்கள் என்று சிந்தித்துப் பார்த்த நாம், ஆண்டவருக்கு பணிவிடை செய்பவர்கள் எத்தகைய ஆசியைப் பெறுவார்கள் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

இணைச்சட்ட நூலில் வருகின்ற இறைவார்த்தைகள் இவை: “உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்ந்து, உங்கள் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அவர்க்கு ஊழியம் செய்தால், நிலத்திற்கு மழை தருவார்; முன்மாரியும் பின்மாரியும் தருவார்; நீங்கள் உண்டு நிறைவு பெறுவீர்கள்” (இச 11: 13-15). ஆம், நாம் ஒவ்வொருவரும் கடவுளுக்கு ஊழியம் புரிந்து வாழ்கின்றபோது நிலம் வளம்பெறுவது மட்டுமல்லாமல், நம்முடைய வாழ்வே வளம்பெறும். அதே நேரத்தில் கடவுளுக்கு ஊழியம் புரிவது, அவருக்கு உண்மையாக இருந்து, அவருடைய வழியில் நடப்பது கடினமானதாக இருந்தாலும், அதுவே மனித வாழ்வுக்கு எல்லா நலன்களையும் தரும். ஆகையால் அழிவைத் தரும் செல்வத்திற்கு அல்ல, வாழ்வைத் தரும் ஆண்டவர்க்கு ஊழியம் புரிய முயற்சி செய்வோம்.

சிந்தனை ‘நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது’ (விப 20: 2-3) என்பார் கடவுள். ஆகையால், நம்முடைய வாழ்விற்கு வளம் சேர்க்கும் உண்மைக் கடவுளுக்கு ஊழியம் புரிவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser

வளமான எதிர்காலம் அவரில்!

இன்றைய இறைவார்த்தை வழிபாட்டு வாசகங்களைச் சிந்திப்பதற்கு முன், நாம் நம் வாழ்வில் காண்கின்ற அடிப்படையான மூன்று முரண்பாடுகளைப் புரிந்துகொள்வோம்:

1.அறநெறி முரண்பாடு
'இலக்கு ஒருபோதும் வழிமுறைகளை நியாயப்படுத்துவதில்லை' என்பது முக்கியமான அறநெறிக் கோட்பாடு. எடுத்துக்காட்டாக, நான் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்ற நல்ல இலக்கு இருக்கிறது. அதற்காக நான் புத்தகத்தைப் பார்த்து அப்படியே எழுதுகிறேன். என்னுடைய இலக்கு நல்லது என்பதற்காக நான் பயன்படுத்திய வழிமுறை சரி என்றாகிவிடாது.

ஆனால், அதே வேளையில், ஒவ்வொரு தேவையும் சூழலும்தான் ஒரு செயல் நன்மையா அல்லது கெட்டதா என்பதை நிர்ணயக்கிறது என்பது இன்னொரு அறநெறிக் கோட்பாடு. ஒரு பெண் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அறுவைச் சிகிச்சை செய்தால் குழந்தை அல்லது தாய் மட்டும்தான் பிழைப்பார் என்ற நிலை. அந்தப் பெண் அந்தக் குடும்பத்தில் ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்குத் தாய். மேலும், அண்மையில் தன் கணவனை விபத்தில் இழந்தவள். இந்த நேரத்தில் மருத்துவர் குழந்தை இறந்தாலும் பரவாயில்லை என்று தாயைக் காப்பாற்றுகிறார். அப்படிச் செய்ததால் அவர் கொலையாளி என்று நாம் சொல்வதில்லை. ஏற்கனவே இருக்கும் குழந்தைகள் அநாதைகளாகிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அவர் தாயைக் காப்பாற்ற முன்வருகிறார். ஆக, அவருடைய செயலில் ஒரு குழந்தை பலியானாலும் அவருடைய செயல் நியாயமானதே என்கிறது அறநெறி. இது 'சிட்வேஷன் எதிக்ஸ்' - ஒவ்வொரு சூழலும் அறநெறியை நிர்ணயிக்கும்.

மேற்காணும் இரண்டு அறநெறிக் கோட்பாடுகளும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இந்த முரண்பாடு வருகிறது.

ஒரு வீட்டுப் பொறுப்பாளர் நேர்மையற்றவராக இருக்கிறார். அவர் வெளியே அனுப்பப்படுகின்ற நிலையில், தன் நேர்மையற்ற நிலையில், நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்கிறார். இயேசு இவரின் முன்மதியைப் பாராட்டுகின்றார். அப்படி என்றால், இலக்கு சரியானது என்பதற்காக அவர் பயன்படுத்துகின்ற வழிமுறை சரியானதா? என்ற கேள்வி நம்மில் எழுகிறது. அல்லது அந்த நேரத்தில் அந்தச் சூழல் அவர் செய்தது சரி? என்று ஏற்றுக்கொள்வதா?

'பொய்சாட்சி சொல்லாதே!' 'பிறரை ஏமாற்றாதே!' போன்ற விவிலிய சிந்தனையோடு இதை எப்படி தொடர்புபடுத்துவது?

2. வாழ்வியல் முரண்பாடு 'நாளைய தினத்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்!' என்று சொல்லும் இயேசு, 'அடுத்து என்ன நடக்கும் எனக் கலங்காதீர்கள்' என்று அறிவுறுத்தும் இயேசு, பத்துக் கன்னியர் எடுத்துக்காட்டில், 'எதிர்காலத்திற்கு தயராக இருக்காத பெண்கள் அறிவிலிகள்' என்று சாடுகின்றார். அப்படி என்றால், எதிர்காலம் பற்றிய கவலை இன்றி வாழ்வதா? அல்லது எதிர்காலத்திற்கான தயாரிப்போடு வாழ்வதா?

காலத்தைப் பற்றிய உணர்வை கடவுள் மனிதர்களுக்கு மட்டுமே கொடுத்திருக்கின்றார் என்று பெருமிதம் கொள்கிறார் சபை உரையாளர் (காண். 3). மனிதர்களுக்குக் கொடையாக இருக்கின்ற இந்த உணர்வே பல நேரங்களில் அவர்களுக்கு சுமையாகவும் மாறிவிடுகின்றது. என்னுடைய எதிர்காலம் இப்படி இருக்கும் என எண்ணுகின்ற நான், அந்த எதிர்காலத்தில் வாழ்வதற்காக என்னுடைய நிகழ்காலத்தை அன்றாடம் தியாகம் செய்கிறேன் அல்லது வாழ்வைத் தள்ளிப் போடுகிறேன் என்பது அடுத்த முரண்பாடு.

அப்படி என்றால், எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதா? அல்லது எதிர்காலத்திற்காக முன்னரே தயாரிப்பதா?

3. பொருளாதார முரண்பாடு 'அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்கிறார் வள்ளுவர். 'நீ ஏழையாக இருந்தால் நீ மற்றவர்களை அறிவாய். பணக்காரராக இருந்தால் மற்றவர்கள் உன்னை அறிவர்' என்கிறார் ஷேக்ஸ்பியர். செல்வம் நமக்குத் தேவையா? இல்லையா? தேவை என்றால் எவ்வளவு தேவை? இன்று மேலாண்மையியலில் எண்கள் பற்றிய படிப்பு அதிகமாகிக்கொண்டு வருகிறது. நம்மிடம் இருக்கின்ற ஆதாரங்கள் நான்கு: 'பணம்,' 'நேரம்,' 'உடல்நலம்,' மற்றும் 'உறவுகள்.' இந்த நான்கில் பணமும் நேரமும் எண்களால் ஆனவை. எண்களால் எண்ணப்படும் ஒன்றில் ஒருவர் பிரமாணிக்கமாக இருந்தால் எண்ணப்படாத அல்லது எண்ணமுடியாதவற்றிலும் பிரமாணிக்கமாய் இருப்பார் என்பது மேலாண்மையியல் பாடம். இதையே இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, 'சிறியவற்றில் நம்பத்தகுந்தவர் மிகப் பெரியவற்றிலும் நம்பத்தகுந்தவர்' என்கிறார்.

இன்று நான் தேவையான பணத்தை வைத்திருக்கவில்லை என்றால் என்னுடைய மற்ற எல்லா செயல்பாடுகளும் முடங்கிப் போகும். ஆக, பணம் எனக்குத் தேவை. இது ஒரு பக்கம் என்னை இழுக்க, மற்றொரு பக்கம், 'கடவுளுடைய பராமரிப்புச் செயலின்மேல் நம்பிக்கை அவசியம்' என்ற எண்ணம் என்னை இழுக்கிறது.

செல்வம் வைத்துக்கொள்வதா? வேண்டாமா? - இது மூன்றாவது முரண்பாடு.

இந்த முரண்பாடுகள் இறுதிவரை இருந்துகொண்டேதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனாலும், இந்த முரண்பாடுகள் நடுவில் நம்முடைய வாழ்க்கைச் சக்கரத்தை எப்படி நடத்திக்கொண்டு போவது?

இதற்கு விடையைத் தருகிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

'வளமான எதிர்காலம் அவரில்' என்ற எளிதான பதிலை இது நமக்கு முன்வைக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். ஆமோ 8:4-7) இறைவாக்கினர் ஆமோஸ் வடக்கு இஸ்ரயேலில் இறைவாக்குரைக்கின்றார். அந்த நேரம் இஸ்ரயேல் மிகவும் வளமிக்க நாடாக இருந்தது (கிமு 722). வலிமையான, வளமிக்க நாடாக அது இருந்தாலும் அந்த நாட்டில் நிறைய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் அடக்குமுறைகளும் இருந்தன. விவசாயத் தொழில் செய்துவந்த அடித்தட்ட வகுப்பினர் மிகப்பெரிய அடக்குமுறைக்கு ஆளானார்கள். பணக்காரர்களும், செல்வந்தர்களும், ஆளும் வர்க்கத்தினரும் அவர்கள்மேல் தூக்க முடியாத சுமையைச் சுமத்தினர். இவர்களுக்கு எதிராக ஆமோஸ் இறைவாக்குரைக்கின்றார்: 'வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே! கேளுங்கள்!' மேலும், 'அமாவாசை எப்போது முடியும், ஓய்வுநாள் எப்போது முடியும்' என்ற அவர்களுடைய சமய வெளிவேடத்தையும் தோலுரிக்கின்றார். அமாவசையும் ஓய்வுநாளும் பொருளாதார பண்டமாற்றைத் தடை செய்தன. இவை இரண்டும் முடிந்தால்தான் பொருளாதார பரிவர்த்தனை தொடரும் என்று அவர்கள் எதிர்நோக்கினர். அடக்கி ஆண்டவர்கள் தங்களுடைய சமயக் கட்டளைகளைக் கடைப்பிடித்தாலும் அவர்கள் தங்களுடைய எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்கத் திட்டங்கள் தீட்டினர். பணவீக்கத்தை அதிகப்படுத்தி இன்னும் நிறையப் பொருள் ஈட்டவும், ஏழைகளை அடிமைகளாக மாற்றவும் திட்டங்கள் வகுத்தனர்.

இவர்களின் இத்திட்டங்கள் மோசேயின் சட்டங்களுக்கு எதிரானவை (காண். இச 10:14-22, 24:19-21) என்று சுட்டிக்காட்டுகின்ற ஆமோஸ் அவர்கள் செய்வது அநீதி என்று அவர்களைச் சாடுகின்றார். இப்படி அநீதியாக அவர்கள் செயல்படுவது அவர்களுடைய நாட்டிற்கே அழிவைக் கொண்டுவரும் என எச்சரிக்கின்றார். அது விரைவில் நிறைவேறுகிறது. ஆமோஸ் இறைவாக்கினரின் இறைவாக்குப் பணி முடியும் நாள்களில் இஸ்ரயேல் நாட்டின் வளம் திடீரெனக் குறைந்து அவர்கள அசீரியாவுக்கு அடிமைகளாகின்றனர்.

ஆமோஸின் இறைவாக்கு அவரின் சமகாலத்து பணக்கார மற்றும் ஆதிக்க வர்க்கம் செய்வது மடமை என்று எச்சரிக்கை செய்கிறது. மேலும், தங்களுடைய சகோதர சகோதரிகளை அடக்கி ஆண்டு அதன் வழியாகப் பணம் சேர்ப்பது முறையன்று. இப்படிச் செய்யும்போது அவர்கள் கடவுளின் சட்டத்தை மீறுகின்றனர். கடவுளின் சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்தான் வளமான எதிர்காலம் இருக்கிறதே தவிர, வலுவற்றவர்களை அழிப்பதில் அல்ல என்கிறார் ஆமோஸ்.

இன்றைய இரண்டாம் வாசகத்தின் (காண். 1 திமொ 2:1-8) பின்புலம் இதுதான்: தொடக்க காலத்தில் கிறிஸ்தவ திருச்சபை சந்தேகக் கண்ணோட்டதுடன் பார்க்கப்பட்டது. அவர்களுடைய வித்தியாசமான தனிப்பட்ட வாழ்க்கை முறை, சிலுவையில் அறையுண்ட மெசியாமேல் நம்பிக்கை போன்றவற்றால் கிறிஸ்தவம் உரோமைப் பேரரசின் கண்களை உறுத்திக்கொண்டே இருந்தது. கிறிஸ்தவத்தால் உலகிற்கு ஆபத்து என்றும், எதிர்கால சமூகம் அழிவுறும் என்றும் கருதியது உரோமை. இத்தவறான புரிதலை பவுலும் மற்றவர்களும் சரி செய்ய முயற்சி செய்கின்றனர். கிறிஸ்தவர்கள் அமைதியானவர்கள் என்றும், உரோமைப் பேரரசுக்குக் கட்டுப்பட்ட குடிமக்கள் என்றும், ஒட்டுமொத்த சமூகத்தின்மேல் அக்கறை கொண்டவர்கள் என்றும் எடுத்துரைக்கின்றனர். இந்தப் பின்புலத்தில் 1 திமொத்தேயு திருமுகத்தின் ஆசிரியர், நம்பிக்கையாளர்கள் எல்லாருக்கும் குறிப்பாக ஆட்சியில் இருப்பவர்களுக்கும் இறைவேண்டல் செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கின்றார்.

இயேசுவின் வழியாக எல்லாரும் மீட்புப் பெற வேண்டும் என்பதற்காக அவர்கள் இறைவேண்டல் செய்ய வேண்டும் என்று சொல்வதன் வழியாக, அவர்கள் தங்களுடைய எதிர்காலத்தை ஆட்சியாளர்கள் கைகளில் அல்ல, மாறாக, இறைவனின் கரங்களில் ஒப்புவிக்கின்றனர்.

ஆக, எதிர்காலம் என்பது ஆட்சியாளர்கள் கைகளில் அல்ல என்பதை அடிக்கோடிடும் ஆசிரியர், காலங்களைத் தன் கரங்களில் தாங்கியிருக்கிற கடவுளிடம் அதை ஒப்படைக்கின்றார்.

விவிலியத்தின் வியப்பான பாடங்கள் என்று கருதப்படுகின்றன சில பாடங்கள். அவற்றில் ஒன்றை இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 16:1-13) வாசிக்கின்றோம்: நேர்மையற்ற கண்காணிப்பாளர் உவமை. மேலோட்டமாக வாசித்தால், ஒருவர் நேர்மையற்றவராய் வாழ்வதிலும், கையூட்டு கொடுப்பதிலும், பொய்க்கணக்கு எழுதுவதிலும் தவறில்லை என்று சொல்வதுபோல இருக்கிறது. ஆனால், இது இதன் பொருள் அல்ல. 'அதிர்ச்சி' என்ற இலக்கியக்கூற்று இங்கே பயன்படுத்தப்பட்டு, சொல்லப்படுகின்ற செய்தி ஆழமானதாகத் தரப்படுகிறது. இந்த நிகழ்வில், நேர்மையற்ற கண்காணிப்பாளர் தன்னுடைய தவற்றை வீட்டு உரிமையாளர் கண்டுபிடித்தாலும் இன்னும் அவர் நேர்மையற்றவராகவே செயல்படுகின்றார். அவருடைய வீட்டு உரிமையாளர் அவரைத் தண்டிப்பதற்குப் பதிலாக பாராட்டுவதில்தான் அதிர்ச்சி அடங்கியுள்ளது. இந்த உவமையின் செய்தி கண்காணிப்பாளரின் செயலில் அல்ல, மாறாக, அவருடைய எண்ண ஓட்டத்தில்தான் இருக்கிறது. தலைவர் அவருடைய செயலைப் பாராட்டவில்லை. மாறாக, தன்னுடைய எதிர்காலத்தை தன்னுடைய வசதிக்கு மாற்றிக்கொள்ளும் அவருடைய திறனைப் பாராட்டுகின்றார். நம்பிக்கையாளர்கள் தங்களுடைய செல்வத்தின்மேல் எத்தகைய கண்ணோட்டம் கொண்டிருக்க வேண்டும் என்பதை இந்த உவமை கற்றுத்தருகிறது. ஆக, அழிந்துபோகக் கூடிய, பயனற்ற செல்வத்தை ஒருவர் பயன்படுத்தி நிலையான வீட்டை வடிவமைத்துக்கொள்ள முடியும்.

லூக்கா நற்செய்தியாளர் பணத்தையும் செல்வத்தையும் நம்பிக்கை மற்றும் சீடத்துவத்தின் எதிரிகளாகவே முன்வைக்கின்றார். இந்த உவமையைச் சொல்வதன் வழியாக, ஆபத்தான நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு ஒரு நம்பிக்கையாளர் தன்னுடைய வாழ்வை எப்படி மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவுரை வழங்குகின்றார் இயேசு. இயேசுவைப் பொறுத்தவரையில், செல்வம் ஒருவரைப் பேராசைக்கும் தனிமைக்கும் இட்டுச் சென்றால் அது ஆபத்து. ஆனால், அச்செல்வம் பிறரோடு பகிர்ந்துகொள்ளப்பட்டால், மற்றவர்களுக்குப் பணிவிடை செய்யப்பயன்பட்டால் அது நலம் பயக்கும். பணத்தைக் கையாளுவதும், செல்வத்தைப் பெற்றிருப்பதும் இன்றியாமையாத ஒன்று என்று எண்ணுகின்ற இயேசு, தன்னுடைய சீடர்கள் இந்த நேர்மையற்ற கண்காணிப்பாளரிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள அழைக்கின்றார்.

ஒருவர் எப்படிப் பணத்தைப் பயன்படுத்துகிறார் என்பது முக்கியமானது. ஏனெனில், 'சிறியவற்றில்' ஒருவர் நம்பத்தகுந்தவராய் இருந்தால்தான் 'பெரியவற்றிலும்' அவர் நம்பத்தகுந்தவராய் இருப்பார். மேலும், பணம்தான் ஒருவருக்கு அடிமையாய் இருக்க வேண்டுமே தவிர, பணத்திற்கு அவர் ஒருபோதும் அடிமையாகிவிடக் கூடாது. இதுவே ஒவ்வொரு சீடரும் மேற்கொள்ளவேண்டிய தெரிவு. எல்லாவற்றையும் கடவுளுக்குக் கீழ் கொண்டு வந்து, கடவுளை மட்டுமே ஒருவர் தெரிந்துகொள்ளும்போது, செல்வங்கள் அழிந்தாலும், அழியாத கடவுளின் பாதங்களை சீடர் பற்றிக்கொண்டிருப்பதால் அவருடைய எதிர்காலம் வளமானதாக இருக்கும்.

இவ்வாறாக, இன்றைய இறைவாக்கு வழிபாடு, வளமான எதிர்காலம் என்பதை பொருளாதார நீதி, சமூக அமைதி, மற்றும் செல்வத்தைப் பற்றிய சரியான பார்வை என்ற நிலைகளில் புரிந்துகொள்ள அழைக்கிறது. இம்மூன்றும் நிலைபெறுவது இறைவனில்தான் என்பதால் வளமான எதிர்காலம் என்றும் அவரில் என்பது நாம் இன்று கற்கின்ற வாழ்க்கைப் பாடமாக இருக்கிறது.

'வளமான எதிர்காலம் அவரில்' என்ற புரிதல் எனக்கு இருந்தால், திருப்பாடல் ஆசிரியர் போல (காண். 113) நானும், 'நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர்போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் எவர்?' என்று சொல்ல முடியும்.

'அல்லா அனைத்தையும் பார்த்துக்கொள்வார். ஆனால், நீ உன் ஒட்டகத்தைக் கட்டி வை' என்பது மத்திய கிழக்குப் பகுதியில் வழங்கப்படும் பழமொழி. நம்முடைய எதிர்காலம் அவரில்தான்! இருந்தாலும் பொருளாதாரத்தை என் தேவைக்கு வளைத்துக்கொள்ளாமல் ஏழைகள் நலன் காப்பதும், எல்லாரும் அமைதியுடன் வாழ இறைவேண்டல் செய்வதும், நிலையற்ற செல்வத்தைப் பயன்படுத்தி நிலையான உறவுகளைச் சம்பாதித்துக்கொள்வதும் தேவை!

மேலே நாம் கண்ட முரண்பாடுகள் நம் வாழ்வின் இறுதி வரை இருக்கும்.

ஏனெனில், நாமே ஒரு முரண்பாடு. இந்த முரண்பாடே நம் வாழ்வின் சமன்பாடு!

ser

sunday homily


முகப்பு பக்கம்
வத்திக்கான் வானொலி
கத்தோலிக்க இதழ்கள்
ஞாயிறு வாசகம்
விருந்தினர் பக்கம்
உம் வாக்கே விளக்கு!
சென்னை பங்குதலங்கள்
நூலகம்
திருத்தலச் சுற்றுலா
தவக்கால சிந்தனைகள்
ஒலியும் ஒளியும்
அன்னை தெரேசா
கிறிஸ்மஸ் மலர்கள்
பொங்கல்
செபமாலை
பாடல்கள்
செபமே ஜெயம்A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com