மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலம் இருபத்திநான்காம் ஞாயிறு
மூன்றாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
I விடுதலை பயணம் 32:7-11,13-14 | II 1திமொத்தேயு 1:12-17 | III லூக்கா 15:1-32

இறைவனின் இணையற்ற இரக்கம்

அநேக மக்கள் கடவுளை பழிவாங்கும் கடவுளாகவும், நாம் செய்யும் தவறுகளுக்குத் தண்டனை வழங்கும் போலீஸ் காரராகவும் நினைக்கிறார்கள். ஆனால் இன்றைய வார்த்தை வழிபாட்டில் இறைவன், அன்பு காட்டும் தெய்வம், மன்னிக்கும் தெய்வம், இரக்கம் காட்டும் தெய்வம், காத்திருக்கும் தெய்வம், என்னைத் தேடும் தெய்வமாகத் தெளிவாக வெளிப்படுத்தப் படுகிறார்.

வானத்து விலங்குகளோ, வானதூதர்களோ தவறுகள் செய்வதில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் தான் தவறு செய்கிறோம். அறியாமை, இயலாமை, பலவீனம் என்ற போர்வையில் நாம் தவறுகிறோம். எல்லாரும் தவறு, குற்றம் புரிபவர்களாக இருந்தாலும், பெரும்பாலோர் தம் குற்றங்களை ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக நியாயப்படுத்தவே முயல்வார்கள். அதே நேரத்தில் தாங்கள் எத்தகைய குற்றங்கள் செய்தாலும், பிறர் தமது நிலைமையைப் புரிந்து மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பு. ஆனால் இவர்கள், பிறர் இத்தகைய தவறுகளைப் புரியும் போது அத்தகைய தாராள உள்ளத்துடன் நடந்துகொள்வதில்லை. குறிப்பாக ஏழை எளியவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், வேலைக்காரர்கள் குற்றம் செய்தால் அதைப் பெரிதுபடுத்தி ஒடுக்கும் முறையில் ஈடுபடவும் தயங்க மாட்டார்கள். இதனால் இன்று தண்டனை வழங்கும் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் பெருகிக் கொண்டே போகிறது. சிலர் தங்களையே மன்னிக்க முடியாதவர்கள் ஆகிவிடுகிறார்கள்.

ஆனால் தவறு செய்பவர்களையும், குற்றம் புரிவோரையும் நாம் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை இயேசு இன்று மூன்று உவமைகளால் அழகாகச் சித்திரிக்கிறார். தவறிச் சென்ற ஆட்டைத் தேடி அலைந்து அதைக் கொண்டு வரும் ஆயன். காணாமல் போன நாணயத்தைத் தேடிக் கண்டுபிடித்து மகிழும் ஒரு பெண். வீட்டை விட்டு ஓடிப் போன ஊதாரி மகனை வரவேற்று விருந்து கொண்டாடும் தந்தை.

இந்த மூன்று உவமைகளிலும் (கடவுளின் பண்புகளான) தேடுதல் நடைபெறுகிறது. கண்டடைந்த பின் எல்லையற்ற மகிழ்ச்சி உண்டாகிறது. அதைத் தொடர்ந்து விருந்து கொண்டாட்டமும் நடைபெறுகின்றது. எனவேதான் மனம் மாறிய பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் (லூக். 15:7, 10) என் இயேசு கூறுகின்றார். நீதிமான்களையல்ல, பாவிகளையே தேடி வந்தேன் என்கிறார் ஆண்ட வர் (மத். 9:13).

உனக்கு நான் முடிவில்லா அன்பு காட்டியுள்ளேன் (எரே. 31:3) என்கிறார் ஆண்டவர். நீ செய்த தீமையெல்லாம் நாம் மறந்திடும் தெய்வம் அல்லவா (எசே. 16:63)

நம் இறைவன், எசாயா தீர்க்கதரிசி கூறுவது போல நமது பாவங்கள் செந்தூரம் போல சிவப்பாக இருந்தாலும் அவற்றை அழித்து நம் இதயத்தை வெண் பனியிலும் வெண்மையாக்குவார்.

இத்தாலி நாட்டில் பிளாரென்ஸ் நகரில் ஏஞ்சலினா என்ற பெண் வாழ்ந்து கொண்டிருந்தாள். பெயர் ஏஞ்சல்தான். ஆனால் பாவம் செய்து பாவியாக வாழ்ந்து பலரின் வாழ்வைக் கொடுத்தவள். ஒருநாள் தன் வீட்டு அலமாரியைத் திறந்து உடுத்த, அலங்கரிக்க ஆடை எடுத்தபோது அங்கிருந்த பாடுபட்ட சுரூபம் அவள் கண்களில் பட அச்சிலுவையிலிருந்து ஒரு குரல் கேட்டது. நான் உன் பாவங்களுக்காக இறந்தேன்! என்பதை மறந்துவிடாதே! இந்த வார்த்தைகள் திரும்பத் திரும்பத் தன் காதில் ஒலித்ததால் தன் தவறான வழியை விட்டு விட்டு புனித வாழ்க்கை வாழத் தொடங்கினாள். இன்று புனித ஏஞ்சலினாவாகத் திகழ்கின்றாள்.

கல்வாரி நோக்கி வாருங்கள். கல்வாரியைப் பாருங்கள் . அங்கே மூன்று சிலுவைகள் உண்டு. நடுவே நிற்கும் சிலுவை இயேசு தொங்கிய சிலுவை. இது மீட்பின் சிலுவை. இது இயேசுவுக்குச் சொந்தம். இதை அணைத்து முத்தமிடலாம். வலது புறத்தில் இருக்கும் சிலுவை நல்ல கள்வனின் சிலுவை. இது பாவபரிகாரத்தின் சிலுவை. இதை இன்று நமக்குச் சொந்தமாக்கிக் கொள்ளலாம். ஆனால் இடது புறத்தில் இருக்கும் சிலுவையோ சாபத்தின் சிலுவை. நம் வாழ்வை நாசமாக்கும் சிலுவை. இந்த மூன்று சிலுவைகளில் எதை உங்களுக்குச் சொந்தமாக்க விரும்புகிறீர்கள்?

ser

நம்மைத் தேடும் இறைவன்

இஸ்ரயேல் இனம் பெருகினால் நமக்கு ஆபத்து என்று சொல்லி இஸ்ரயேலருக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகளையெல்லாம் ஆற்றிலெறிந்து கொன்றுவிடும்படி எகிப்து நாட்டு அரசன் பார்வோன் கட்டளையிட்டான்.

தன் மகன் ஆற்றிலெறியப்படுவதை விரும்பாத தாயொருத்தி நாணல் கூடையில் அக்குழந்தையை வைத்து தன் மகள் வழியாக அதை ஆற்றிலிட்டாள். அது ஆற்றில் மிதந்து வந்தது. அந்தக் குழந்தையின் பெயர் மோசே. பார்வோன் மன்னனின் புதல்வியால் அது அரண்மனைக்கு எடுத்துச்செல்லப்படுகின்றது.

மோசே வாழ்க்கையிலே ஒரு நாள் . தன் இனத்தைச் சேர்ந்த அடிமை ஒருவனை எகிப்தியன் ஒருவன் அடிப்பதைப் பார்த்துவிடுகின்றார். மோசேயின் இரத்தம் கொதிக்கின்றது. கோபம் கொப்பளிக்கின்றது. தன் இனத்தவனை அடித்தவனை அடித்துக் கொன்று மண்ணைத் தோண்டிப் புதைத்துவிட்டு, தான் செய்தது யாருக்கும் தெரியாது என்று எண்ணி அரண்மனையை அடைகின்றார். ஆனால் மோசே செய்தது எப்படியோ வெளியே தெரிந்துவிடுகின்றது. அரசன் மோசேயைக் கொல்லத் தேடுகின்றான். ஆனால் மோசே தப்பித்து மிதியான் நாட்டுக்கு ஓடிவிடுகின்றார். அங்கே அவருடைய மாமனின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோதுதான் கடவுள் அவரை எரியும் புதரில் எரியாது நின்று அழைத்தார்.

மோசே ஒரு கொலைகாரர். கொலைகாரரைக் கடவுள் விடுதலை வீரராக விளங்க அழைத்தார். ஆம். கொலைகாரரைத்தான் அழைத்தார். எதற்கு ஒரு கொலைகாரரைக் கடவுள் தம் பணியைச் செய்ய அழைக்க வேண்டும்? இதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதில் ஒரு தலையாய காரணம், தாம் நல்லவர்களைவிட, பாவிகளைத் தேடி அலையும் கடவுள் என்பதை உலக மக்களுக்குக் கடவுள் எடுத்துச் சொல்ல விரும்பினார்.

புதிய ஏற்பாட்டிலே யூதாஸ் ஒரு முறைதான் காட்டிக்கொடுத்தான். ஆனால் பேதுருவோ மூன்று முறை மறுதலித்தார். ஆனால் இயேசு உயிர்த்த பிறகு திபேரியாக் கடல் அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த பேதுருவைத் தேடிச்சென்று, மூன்று முறை மறுதலித்தவரை, மூன்று முறை என்னை அன்பு செய்கின்றாயா? எனக் கேட்டு திருஅவைக்குத் தலைவராக ஏற்படுத்தினார் (யோவா 21:1-17).

நமது கடவுள் பாவிகளைத் தேடிச் செல்லும் கடவுள். தனது மனத்தை மாற்றிக்கொள்ளும் கடவுள் (முதல் வாசகம்). முன்னர் நான் அவரைப் பழித்துரைத்தேன் ; துன்புறுத்தினேன்; இழிவுபடுத்தினேன். ஆயினும் அவர் எனக்கு இரங்கினார் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடிகளார் கூறுகின்றார். இந்த உண்மையைத்தான் இன்றைய நற்செய்தியும் எடுத்துச் சொல்கின்றது. இன்று இயேசு நம் ஒவ்வொருவரையும் பார்த்து,

  • நீ காணாமல் போன ஆடாக இருந்தாலும் (லூக் 15:1-7),
  • நீ காணாமல் போன காசாக இருந்தாலும் (லூக் 15:8-10),
  • நீ காணாமல் போன மகளாகவோ, மகனாகவோ இருந்தாலும் (லூக் 15:11-32) நான் உன்னைக் கைவிட மாட்டேன்.

என் அரசிலே அழிவு என்ற சொல்லுக்கே இடமில்லை. என்னிடம் என் பரம தந்தை ஒப்படைத்த எதையும் நான் இழக்கமாட்டேன். ஒரு பாவி சாகவேண்டுமென்று நான் விரும்புவதில்லை. நான் பிறந்ததும், வளர்ந்ததும், வாழ்ந்ததும், இறந்ததும், உயிர்த்ததும், இன்று வாழ்வதும் பாவிகளை மீட்பதற்காகவே. ஆகவே அஞ்சாதே, திகையாதே, வா என்னிடம், உனக்காகப் பொறுமையோடு நான் காலமெல்லாம் காத்திருப்பேன் என்று கூறுகின்றார்.

மேலும் அறிவோம் :

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது (குறள் : 8).

பொருள் : அறக்கடலாகத் திகழும் சான்றோனாகிய இறைவன் அடியொற்றி நடப்பவர். ஏனைய பொருளும் இன்பமும் ஆகிய கடல்களை எளிதாகக் கடந்து செல்வர்; ஏனையோர் பிற துன்பங்களிலிருந்து மீள முடியாது தவிப்பர்.

ஒரு கல்லூரி மாணவன் முதலாம் ஆண்டில் ஒரு பெண்ணுடன் சுற்றினான். இரண்டாம் ஆண்டில் வேறொரு பெண்ணுடன் சுற்றினான். ஏன் அவன் அவ்வாறு மாற்றினான் என்று கேட்டதற்கு அவன் கூறிய பதில்:(Syllabus) (பாடத்திட்டம்) மாறிவிட்டது." கடவுள் என்றும் மாறாதவர்; அவர் தமது பாடத்திட்டத்தை மாற்றுவாரா? ஆம், மாற்றுகிறார். நீதியின் அடிப்படையில் செயல்பட்ட இறைவன் இரக்கத்தின் அடிப்படையில் செயல்படுகிறார். கடவுள் தமது பாடத்திட்டத்தை மாற்றுகிறார் என்பதை இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. இஸ்ரயேல் மக்கள் சிலைவழிபாட்டில் ஈடுபட்டதற்காக அவர்களை அழித்துவிடத் திட்டமிட்ட இறைவன், மோசே அம்மக்களுக்காகப் பரிந்து பேசியபோது தமது திட்டத்தை மாற்றிக் கெண்டார். "ஆண்டவரும் தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு தம் மக்களுக்குச் செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார்" (விப 32:14).

மனிதரை அழிப்பதல்ல, மாறாக அவர்களை வாழவைப்பதே கடவுளுடைய திட்டமாகும். "உண்மையில் பொல்லாரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திருந்தி வாழவேண்டும் என்பதன்றோ என் விருப்பம்" (எசே 18:23), விவிலியம் காட்டும் கடவுள், "இரக்கமும் அருளும் கொண்டவர். அவர் நம் (பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை " (திபா 103: 8-10). "கடவுள் தம் மகனை இவ்வுலகிற்கு அனுப்பியது மக்களை அழிப்பதற்காக அன்று, மாறாக அவர் மூலம் நிலைவாழ்வு பெறும் பொருட்டே” (யோவா 3:15).

ஏற்கெனவே உள்ளதைக் கண்டு பிடிப்பதற்கும் (Discovery), புதிதாக ஒன்றைக் கண்டுபிடிப்பதற்கும் (invention) உள்ள வேறுபாட்டை விளக்கும் வகையில் ஒரு வாக்கியம் அமைக்கும்படி ஆங்கில ஆசிரியர் கேட்டபோது, ஒரு மாணவன் கூறியது: "My father discovered my mother; both of them invented me." என் அப்பா என் அம்மாவைக் கண்டுபிடித்தார். இருவரும் சேர்ந்து என்னைப் புதிதாகக் கண்டுபிடித்தனர்."

பல கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த அறிவியல் மேதை டாக்டர் ஜேம்ஸ் சிம்சனிடம் "உங்களின் பெரிய கண்டுபிடிப்பு எது?" என்று கேட்டதற்கு அவர் கூறியது: "இயேசு கிறிஸ்து என்னுடைய மீட்பர் என்பதே எனது மாபெரும் கண்டுபிடிப்பு." இனறைய இரண்டாம் வாசகத்தில் இதே பதிலைத்தான் திருத்தூதர் பவுல் கூறுகிறார். "பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு வந்தார். அந்த பாவிகளுள் முதன்மையான பாவி நான்" (1 திமொ, 1:15).

நீதிமான்களை அல்ல, பாவிகளையே கிறிஸ்து தேடி வந்தார் என்பதை, அவர் காணாமற்போன ஆடு, காணாமற்போன காசு, காணாமற்போன மகன் ஆகிய மூன்று உவமைகள் வழியாகத் தெளிவுபடுத்தினார், இம் மூன்று உவமைகளில் 'காணமற்போன மகனின்' உவமை தலை சிறந்தது என்பதில் ஐயமில்லை , இந்த உவமையில் வரும் இளைய மகன் தனது சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தினான், ஆனால் இறுதியில் தனது தவற்றை உணர்ந்து, அறிவு தெளிந்து, தந்தையிடம் திரும்பி வருகிறான், பாவம் என்பது நமது சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகும், மனம்போன போக்கில் போவது சுதந்திரமாகாது. நிதானமிழந்து நிலைதடுமாறித் தறிகெட்டுத் தடம்மாறிச் செல்லும் மனத்தை நல்வழியில் செலுத்துவதுதான் அறிவுடைமையாகும்.

சென்ற இடத்தால் செலவிடாது தீதுஒரீஇ
நன்றியின்பால் உய்ப்பது அறிவு (குறள் 422)

பலாப்பழத்தின் சுளையை எடுத்துச் சுவைக்கக் கத்தி தேவைப் படுகிறது. அவ்வாறு வாழ்க்கையைச் சுவைக்கப் புத்தி தேவைப்படுகிறது, இளைய மகனுக்குப் புத்தி வந்தது; அறிவு தெளிந்தது. அவனது வாழ்வில் ஏற்பட்ட திருப்புமுனை: “நான் எழுந்து என் தந்தையிடம் போவேன்” (லூக் 15:17-18). புத்தி கெட்டு பாவம் செய்யும் நாம், புத்தி தெளிந்து பாவக் குழியிலிருந்து எழவேண்டும்.

"தொட்டிலுக்கு அன்னை: கட்டிலுக்குக் கன்னி; பட்டினிக்குத் தீனி; சுட்டபின் நெருப்பு; கெட்டபின் ஞானி” என்று பாடிய கவிஞர் கண்ணதாசன் அப்பாவிகளுக்காகத் தொகுத்துள்ள பாவ அறிக்கை நமது சிந்தையைக் கிளறுகிறது. அப்பாவ அறிக்கை வருமாறு: "கைக்கோலை நழுவவிட்ட குருடன் கருந்தேளைப் பிடிப்பது போல், ஆன்மீக உணர்ச்சியை மறந்துவிட்ட நாங்கள் பாவத்தில் சிக்கினோம். அமுதென்று எண்ணி நஞ்சை அருந்தினோம்; மலரென்று எண்ணி முட்களைச் சூடினோம்... ஆசை வழி சென்றோம். தண்டனை கிடைத்த பிறகுதான் தவறுகளை உணர்ந்தோம்" (அர்த்தமுள்ள இந்துமதம்). ஒரு முட்டாள் தான் முட்டாள் என்பதை ஏற்றுக்கொள்ளும்போது அறிவாளி ஆகின்றான். ஒரு பாவி தான் பாவி என்பதை ஏற்றுக்கொள்ளும்போது நீதிமான் ஆகின்றான்.

காணாமற்போன மகன் திரும்பி வந்ததும் அவனுடைய அப்பா அவனை அடிமையாக அல்ல, மகனாக ஏற்றுக்கொள்கிறார். அடித்துத் துரத்தப்பட வேண்டிய அவனுக்குக் கிடைத்தது: தந்தையின் அரவணைப்பு, முத்தம், முதல்தரமான ஆடை, கைக்கு மோதிரம், காலுக்கு மிதியடி, பெரிய விருந்து, நடனம், இசைக் கச்சேரி, இத்தகைய மகத்தான வரவேற்பைக் கண்டு மூத்த மகன் எரிச்சல் அடைந்தது நியாயமாகத் தோன்றுகிறது. இப்படிப்பட்ட ஒரு தந்தையை நாம் காணமுடியமா? அந்த தந்தைதான் நமது விண்ணகத் தந்தை. அவர் நம்மை என்றும் எத்தகைய நிலையிலும் தமது செல்லப் பிள்ளைகளாக ஏற்றுக்கொள்கிறார். அடிமைகளாக அல்ல, பிள்ளைகளாக ஏற்றுக்கொள்கிறார். "இனி நீங்கள் அடிமைகள் அல்ல; பிள்ளைகள்தாம்; பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுள் செயலே" (கலா 4:6-7).

தவறு என்பது தவறிச் செய்வது,
தப்பு என்பது தெரிந்து செய்வது,
தவறு செய்தவன் வருந்தி ஆகணும்,
தப்புச் செய்தவன் திருந்தப் பார்க்கணும்.
- திரைப்படப் பாடல்

பாவிகளை வரவேற்கும் இயேசு

நிகழ்வு
இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் தான் பணிசெய்து வந்த இடத்தில் தன்னோடு பணிசெய்து வந்த ஓர் இளம்பெண்ணை உயிருக்கு உயிராகக் காதலித்தான்; அவளையே திருமணம் செய்துகொள்வதென முடிவுசெய்தான். இது குறித்து அவன் தன்னுடைய தந்தையிடம் பேசியபோது அவர், “சொந்த பந்தத்தில் இருக்கின்ற ஒரு பெண்ணைப் பார், கட்டிவைக்கிறேன்... அதை விடுத்து யாரோ ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளப் போகிறாய் என்றால், என்னால் அவளை வீட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று மறுத்துவிட்டார். அவன் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தான். அப்படியும் அவர் இறங்கிவராததால், அவன் தான் உயிருக்கு உயிராக அன்புசெய்த அந்தப்பெண்ணை மணந்துகொண்டு பெருநகரில் ஒன்றில் குடியேறினான்.

அவன் தந்தையை விட்டுப் பிரிந்துவந்தாலும், ஒவ்வொரு வாரமும் அவர்க்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பிக்கொண்டே இருந்தான். அந்தக் கடிதத்தில் அவன் அவருடைய நலத்தை விசாரித்தும் அவருடைய சொல்பேச்சுக் கேட்டு நடக்காததற்கு மன்னிப்புக் கேட்டும் எழுதினான். ஆனால், அவனுடைய தந்தையிடமிருந்து மட்டும் எந்தவொரு பதில் கடிதமும் வரவில்லை. அப்படியிருந்தும் அவன் தன் தந்தைக்குக் கடிதம் எழுதுவதை மட்டும் நிறுத்தவே இல்லை. பத்து ஆண்டுகட்கும் மேல் எழுதிக் கொண்டே வந்தான்.

ஒருநாள் அவனுடைய முகவரிக்கு கனமான ஒரு பொட்டலம் (Parcel) வந்தது. அனுப்புநர் முகவரியை அவன் பார்த்தபோது, அதில் அவனுடைய தந்தையிடம் முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது. அவனால் நம்ப முடியவில்லை. ஒரு பக்கம் மகிழ்ச்சி, இன்னொரு பக்கம் பதற்றம். ‘இந்தப் பொட்டலத்திற்குள் என்ன இருக்குமோ?’ என்ற கலவையான எண்ணங்களோடு அவன் அதைப் பிரித்துப் பார்த்தன். அதில் அவன் பத்தாண்டுகட்கும் மேல் தன் தந்தைக்கு எழுதி அனுப்பிய கடிதங்களெல்லாம் இருந்தன, அதுவும் எந்தக் கடிதமும் பிரிக்கப்படாமலேயே இருந்தன. அப்பொழுது அவன், “இத்தனை ஆண்டுகளும் நான் எழுதி அனுப்பிய ஒரு கடிதத்தையாவது என் தந்தை பிரித்தப் பார்த்திருந்தால்கூட அவர் என்னை தன் மகனாக ஏற்றுக்கொண்டிருப்பாரே! இப்படி எதையுமே பிரித்துப் பார்க்காமல், நான் செய்த தவறையும் மன்னிக்காமல் வைராக்கியத்தோடு இருக்கிறாரே’ என்று மிகவும் வேதனைப்பட்டான்.

இந்த நிகழ்வில் வருகின்ற தந்தையைப் போன்றுதான் பலர், தவறுசெய்தவர்களை (சில சமயங்களில் அது தவறில்லாமல் கூட இருக்கலாம்) மன்னித்து ஏற்றுக்கொள்ளும் மனதில்லாமல் இருக்கின்றார்கள். ஆனால், இவர்கட்கெல்லாம் முற்றிலும் மாறாக, தவறு செய்தபின் மனம் திருந்தியவர்களை, பாவிகளை உள்ளன்போடு ஏற்றுக்கொள்ளக்கூடியவராக விண்ணகத் தந்தை இருக்கின்றார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துச் சொல்கின்றது. அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

பாவிகளை வரவேற்ற/ தேடிச்சென்ற இயேசு
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பாவிகளைத் தேடி மீட்டதையும் (லூக் 19: 10) பாவிகளோடு இருந்ததையும் (மத் 9: 10) பார்த்த பரிசேயக்கூட்டம், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று அவருக்கு எதிராக முணுமுணுக்கத் தொடங்குகிறார்கள். அப்பொழுது இயேசு, தான் ஏன் பாவிகளைத் தேடி மீட்கிறேன், எதற்காக அவர்களோடு தன்னை ஒன்றித்துக் கொள்கிறேன் என்பதை விளக்க, காணாமல் போன ஆடு உவமை, காணாமல் போன திராக்மா உவமை, காணாமல் போன மகன் உவமை என்ற மூன்று உவமைகளைச் சொல்கின்றார். இம்மூன்று உவமைகளிலும் அடிநாதமாக இருப்பவை, காணாமல் போதல், கண்டுகொள்ளுதல், மகிழ்ச்சி உண்டாகுதல் என்ற மூன்று கருத்துகள்தான். இம்மூன்று கருத்துகளையும் தனித்தனியாக சிந்தித்துப் பார்த்துவிட்டு, அவற்றின் மூலம் இயேசு ஏன் பாவிகளை வரவேற்றார் என்று தெரிந்துகொள்வோம்.

காணாமல் போதல்
லூக்கா நற்செய்தியில் இடம்பெறுகின்ற மூன்று உவமைகளிலும் வெளிப்படக்கூடிய முதலாவது உண்மை, காணாமல் போதல் ஆகும். காணாமல் போன ஆடு உவமையில் வரும் அந்த ஆடானது, தன்னுடைய மதியினத்தால் அல்லது அறிவுகெட்டத்தனத்தால் காணாமல் போகிறது. ஆடு என்றால், ஆயனின் குரல் கேட்டு நடக்கவேண்டும். ஆனால், காணாமல் போன ஆடோ ஆயனின் குரல் கேட்கமால், தன்னுடைய மதியினத்தால் தொலைந்து போகின்றது. காணாமல் போன திராக்மா உவமையில் வரும் அந்த திராக்மா, அதை வைத்திருந்த பெண்ணின் கவனக்குறைவால் காணாமல் போகின்றது. இதை ஒருசில வீடுகளில் பெற்றோர்களின் நெறிகெட்ட வாழ்க்கையால் பிள்ளைகளும் கேட்டுப் போகிறார்களே, அதற்கு ஒப்பிடலாம். எப்படியிருந்தாலும் காணாமல் போனது அல்லது பாவத்தில் விழுந்தது பாவத்தில் விழுந்ததுதான். காணாமல் போன மகன் உவமையில் வரும் இளைய மகன் தெரிந்த காணாமல் போகிறான் அல்லது தெரிந்தே பாவத்தில் விழுகின்றான்.

காணாமல் போவதும் பாவத்தில் விழுவதும் இறப்பதற்குச் சமம் (15: 24) என்று இதே அதே அதிகாரம் நமக்கு எடுத்துச் சொல்கின்றது. இப்படிக் காணாமல் போன அல்லது இறந்துபோன(வை)(வர்)கள் எப்படிக் கண்டுகொல்லப்பட்டார்கள் என்று தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

கண்டுகொள்ளுதல்
மூன்று உவமைகளிலும் வெளிப்படும் இரண்டாவது முக்கியமான உண்மை, கண்டுகொள்ளுதல். காணாமல் ஆடு உவமையிலும் காணாமல் போன திராக்மா உவமைவிலும் உரிமையாளர்களே அவற்றைத் தேடிக் கண்டுகொள்கின்றார்கள். இதனை ஆண்டவர் இயேசு பாவிகளைத் தேடிவந்து மீட்டதற்கு ஒப்பிடலாம் (லூக் 19: 10). ஆனால், காணாமல் போன மகன் உவமையில் அப்படியில்லை. அதில் காணாமல் போன மகனே, தந்தையின் பேரன்பையும் இரக்கத்தையும் உணர்ந்து, தன்னுடைய பாவத்தைக் கண்டுகொண்டு தந்தையிடம் திரும்பி வருகின்றான். இவ்வுவமை தந்தைக் கடவுள் பேரன்புடையவராக இருந்தாலும், மனிதர்களாகிய நாம், நம்முடைய இயலாமையை, பாவத்தை உணர்ந்து, அவரிடம் சேரவேண்டும் என்ற உண்மையை எடுத்துச் சொல்வதாக இருகின்றது.

மகிழ்ச்சி உண்டாகுதல்
மூன்று உவமைகளும் எடுத்துரைக்கும் மூன்றாவது, மிக முக்கியமான உண்மை. மகிழ்ச்சி உண்டாகுதல் என்பதாகும். காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடிக்கும் ஆயர் நண்பர்களோடும் அண்டை வீட்டாரோடும் சேர்ந்து மகிழ்கின்றார்; காணாமல் போன திராமாவைக் கண்டுபிடித்தவரோ தன் தோழியரோடும் அண்டைவீட்டாரோடும் மகிழ்சிகின்றார்; காணாமல் போன மகனைக் கண்டுகொண்ட தந்தை தன் பணியாளர்கள் எல்லாரோடும் விருந்து கொண்டாடுகின்றார். இன்னும் சொல்லவேண்டும் என்றால், ஒரு பாவி மனம் மாறுகின்றபோது அது அவரைச் சார்ந்தவர்கட்கும் மட்டுமல்லாது, விண்ணுலகிலும் கடவுளின் தூதர்கட்கும் மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒரு செயலாக இருக்கின்றது.

இப்படி ஒரு பாவியின் மனமாற்றத்தினால் எல்லாருக்கும் மகிழ்ச்சி ஏற்படுகின்றது என்பதால்தான் இயேசு அவர்களைத் தேடிச் செல்கின்றார்; தவறை உணர்ந்து திருந்தியவர்களை அன்போடு வரவேர்கின்றார். இந்த உண்மையை உணராமலும் தாங்களும் பாவிகள்தான் என்பதை அறியாமலும் இருந்ததால்தான் காணாமல் போன மகன் உவமையில் வருகின்ற மூத்த சகோதரனைப் போன்று பரிசேயக் கூட்டம், இயேசு பாவிகளை வரவேற்றதற்கு முணுமுணுக்கிறார்கள். பலநேரங்களில் நாமும்கூட, தவறுகளை உணர்ந்து, திருந்தி வருகின்றவர்களை திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ளாதவர்களாக இருக்கின்றோம். இத்தகைய போக்கினை நம்மிடமிருந்து அப்புறப்படுத்திவிட்டு இயேசுவைப் போன்று பாவிகளை அன்போடு ஏற்றுக்கொள்ள முயற்சி செய்வோம்.

சிந்தனை
‘யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாறவேண்மென இறைவன் விரும்புகிறார்’ (1 பேது 3:9) என்பார் புனித பேதுரு. ஆகையால், நாம் மனம்மாறி அவரிடம் திரும்பி வரவேண்டும் என்று விரும்பும் அன்பு இறைவனிடம் திரும்பி வருவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாகப் பெறுவோம்.

ser ser

sunday homily


முகப்பு பக்கம்
வத்திக்கான் வானொலி
கத்தோலிக்க இதழ்கள்
ஞாயிறு வாசகம்
விருந்தினர் பக்கம்
உம் வாக்கே விளக்கு!
சென்னை பங்குதலங்கள்
நூலகம்
திருத்தலச் சுற்றுலா
தவக்கால சிந்தனைகள்
ஒலியும் ஒளியும்
அன்னை தெரேசா
கிறிஸ்மஸ் மலர்கள்
பொங்கல்
செபமாலை
பாடல்கள்
செபமே ஜெயம்A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com