மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலம் இருபத்திமூன்றாம் ஞாயிறு
அன்னை மரியாளின் பிறந்தநாள்
மூன்றாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
I சீராக்கின் ஞானம் 9:13-18 II பிலமோன் 1:9-10 III லூக்கா 14: 25-33

சீடத்துவம்

மனிதன் ஒருவரைப் பின் தொடருவது என்பது உலகில் தவிர்க்க முடியாத ஒன்று. சிலர் வார்த்தைகளால் கவரப்படு கிறார்கள். ஒரு சிலர் கொள்கைகளால் கவரப்படுகிறார்கள். ஒரு சிலர் இலட்சியம் நிறைந்த வாழ்வால் உந்தித் தள்ளப்பட்டும் பின் தொடர்வர்.

இயேசு என்ற மாமனிதரைப் பின் தொடர விரும்பியவர்கள் பலர். அவரைப் பின் தொடர் அடிப்படைத் தன்மைகள் இன்றைய நற்செய்தியில் (லூக். 14:26-27) தெளிவாக்கப்படுகிறது.

இது மறுதலிப்பு அல்ல. மாறாகப் புதிதாக ஒன்றை ஏற்றுக் கொள்ளுதல் எனப் பொருள் கொள்தல் ஆகும்.

இலட்சியத் தெளிவு

சீடராக மாறவிரும்பும் எவரும் தம் வாழ்வை உணர்ச்சிப் பூர்வமாக அழித்துவிட முடியாது. உணர்ச்சி வயப்பட்டு மறுதலித்து விடவும் முடியாது. ஆனால் அந்த நபரின் கொள்கையினைப் பற்றிய அறிவுப்பூர்வமான, உணர்வுப்பூர்வமான ஒரு தெளிவான நிலையைப் பெறவேண்டும். பின்தொடர்வது என்பது தெளிவாக்கப்பட வேண்டிய ஒன்று. சீடத்துவம் என்பது எளிதான ஒன்று அல்ல. ஒன்றை இழந்தால்தான் மற்றொன்று பெற முடியும் . என்ற தெளிவு தேவை.

இலட்சிய தயாரிப்பு

இலட்சியத் தெளிவு கொண்டவர் அதற்கான தயாரிப்பில் இறங்க வேண்டும் (லூக். 14:28-32). சீடத்துவம் என்பது சிந்திக்காமல் மூழ்கிவிடுவதல்ல.

ஓர் ஆபத்தான பாதை. அதற்குத் தயாரிப்புத் தேவை. எவரெஸ்ட் மலை ஏறுபவன் தயாரிக்கிறான். விளையாடுபவன் தன்னைப் பயிற்சியில் தயாரிக்கிறானே!

இலட்சிய உறவு

பின் தொடர விரும்புவரின் கொள்கையினையும், கொள்கை விடுக்கும் ஆபத்துகளையும் அறிந்தவராய் அந்த நபரோடு ஓர் ஆள் தன்மை உறவு கொண்டிருப்பர். இந்த உறவு இரத்த உறவு அல்ல. மாறாக ஞான உறவு. இதைத்தான் மாற்கு சொல்கிறார் (மாற்கு 3:14) இயேசு சீடர்களைத் தம்மோடு இருப்பதற்காக அழைத்தார் என்று. இயேசுவின் சீடத்துவமே இலட்சிய உறவின் அடிப்படை.

இலட்சியப் பயணம்

தெளிவு பெற்றவர்கள், உறவை வைத்தவர்கள் அந்த லட்சியம் நிறைவேறும் வரை பயணம் செய்வார்கள். இவர்களுக்குத் தடைகள் பல வர வாய்ப்பு உண்டு. ஆனால் உண்மையான சீடர்கள் இந்தத் தடைகளை எல்லாம் கடந்து செல்வார்கள். இவர்களுக்கு வரும் தடைகளே, இவர்களுக்குச் சிலுவைகள் (லூக். 14:27). இதைத்தான் இயேசு சுமந்து வர அழைக்கிறார். இவைகள் வாழ்வின் படிக்கற்கள்.

என் வார்த்தைகள் உங்களுள் நிலைத்திருந்தால் விரும்பியதெல்லாம் கேளுங்கள். கேட்பதெல்லாம் நடக்கும் (யோவா. 15:7).

  1. நான் கட்டளையிடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் என் நண்பர்களாய் இருப்பீர்கள் (யோவா. 15:14)
  2. நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை (யோவா. 15:17).
  3. நான் புதிய கட்டளையைக் கொடுக்கிறேன். நான் அன்பு ...... இந்த அன்பினால் நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லோரும் அறிந்துகொள்வார்கள் (யோவா. 13:34-35).

ser

பிறப்பின் பயன் என்ன?

ஒருவனுக்குத் துறவியாக ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள ஒரு பெரிய துறவியைத் தேடி காட்டுக்குச் சென்றான். காட்டிலிருந்த துறவி நாட்டிலிருந்து வந்தவனைப் பார்த்து, கையில் என்ன? என்றார். அதற்கு அந்த மனிதன், பையிலே பணம். அவசரத்துக்கு உதவும் எனக் கொண்டுவந்திருக்கின்றேன் என்றான். அதற்குத் துறவி, துறவி என்பவன் கடவுளே கதி என வாழவேண்டும். நீ துறவியாக விரும்புகின்றாய்; உனக்கு இந்தப் பணம் தேவையில்லை. நீ அந்தப் பையைப் கொண்டுபோய் அதோ அந்த ஆற்றுக்குள் எறிந்துவிட்டு வா என்றார். அந்த மனிதனோ சோகம் நிறைந்த உள்ளத்தோடு ஆற்றங்கரைக்குச் சென்று, கரையிலே அமர்ந்து, ஒவ்வொரு காசாக எடுத்து அதை ஆற்றுக்குள் எறிந்துகொண்டிருந்தான். இரண்டு, மூன்று காசுகளை எறிந்திருப்பான். பின்னால் நின்ற துறவி, மீதி காசை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போ! காசை விட்டுவிட உனக்கு ஆசை. ஆனால் காசின் மீது நீ வைத்திருக்கும் ஆசையை இன்னும் நீ விடவில்லை. உனக்கு காசு மீது ஆசை இல்லையென்றால் பை முழுவதையும் தண்ணீருக்குள் தூக்கி எறிந்திருப்பாய் என்றார்.

துறவு என்றால் அனைத்தையும் விட்டுப்பிரியத் தயாராக இருத்தல் என்பது பொருள். துறவிலே இரண்டு வகையான துறவு உண்டு: வெளித் துறவு, உள் துறவு.
வெளித் துறவு என்பது இன்றைய இரண்டாவது வாசகத்தில் புனித பவுலடிகளார் அவரது உயிரின் உயிராக விளங்கிய பிலமோனை விட்டுப்பிரிய முன்வந்தது போல, நமக்குப் பிரியமான மனிதர்களை, பொருள்களை இடங்களை, சூழ்நிலைகளை விட்டுப் பிரிய முன்வருவது. அப்படி வெளித் துறவைப் பின்பற்ற முன்வருகின்றவர்கள் கீழ்க்கண்ட பயன்களை அனுபவிப்பார்கள் :

  1. எல்லாவற்றையும் அயலாருக்காக இழக்க முன்வரும் மன வலிமையைப் பெறுவார்கள்.
  2. தன்னிடம் உள்ளதைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளும் சுதந்தரத்தைப் பெறுவார்கள்.

உள் துறவு என்பது கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற நமது எண்ணங்களையும், திட்டங்களையும் (முதல் வாசகம்) விட்டுவிடுதலில் அடங்கியுள்ளது. இத்தகைய உள் துறவைப் பின்பற்றுகின்றவர்கள் கீழ்க்கண்ட ஞானக்கனிகளைச் சுவைத்து மகிழ்வர்:

சேர்த்து வைத்ததை எப்படிக் காப்பாற்றுவது என்ற எண்ணத்திலிருந்து விடுதலை கிடைக்கும். பெறுவதில் அல்ல, கொடுப்பதில்தான் இன்பம் இருக்கின்றது என்பதால், இதயத்திற்கு இதமான இன்பம் கிடைக்கும்.

இழப்பை இழப்பாகக் கருதும்போது, இழப்பு நமக்கு இழப்பாகத் தெரியும். இழப்பை இழப்பாக அல்ல, இழப்பை இலாபமாகக் கருதும்போது இழப்பு நமக்கு இலாபமாகத் தெரியும்.

இலட்சங்கள் இல்லாமல் வாழ்ந்து விடலாம்; ஆனால் இலட்சியங்கள் இல்லாமல் வாழக்கூடாது. எடுப்பது அல்ல கொடுப்பதே, துறப்பதே நமது இலட்சியமாக இருக்கட்டும்.

நமது வாழ்வில் துறப்பதைக் கூட்டி, கொடுப்பதைப் பெருக்கி, கிடைப்பதை வகுத்து, எடுப்பதைக் கழித்து, பயன் - பிறப்பின் பயன் - என்ற விடையைப் பெற்று அகமும் முகமும் மலர வெற்றி நடைபோடுவோம்.

மேலும் அறிவோம் :

இயல்பாகும் நோன்பிற்கொன்று) இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து (குறள் 344).

பொருள் : எந்தப் பற்றும் இல்லாது இருத்தலே துறவுக்கு ஏற்புடைய செயலாகும்! ஏதேனும் ஒன்றில் பற்று வைக்கத் தொடங்கினால், அது தொடர்ந்து பல்வேறு பற்றுக்களை மேற்கொள்வதற்கு ஆசையைத் தோற்றுவிக்கும்!

தனது மனைவிக்குக் குடை பிடித்துச் சென்ற ஒரு கணவரைப் பார்த்துச் சிரித்தனர் மக்கள். கணவர் அவர்களிடம் கூறியது: "நான் காரியத்துடன்தான் என் மனைவிக்குக் குடை பிடிக்கிறேன். ஏனெனில் தெருவின் வலப்பக்கத்தில் நகைக் கடையும் இடப்பக்கத்தில் துணிக் அடையும் இருக்கின்றன, அவைகளைப் பார்த்தால் என் மனைவிக்கு நகையும் புடவையும் வாங்க வேண்டும் என்ற ஆசை வந்துவிடும். வலது பக்கத்தில் நகைக்கடை வரும்போது குடையை வலது பக்கத்தில் சாய்த்துப் பிடிப்பேன். இடது பக்கத்தில் துணிக்கடை வரும்போது குடையை இடது பக்கத்தில் சாய்த்துப் பிடிப்பேன். இவ்வாறு நகைக் கடையோ, துணிக்கடையோ அவளது கண்களில் படாமல் அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுவேன்.”

பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும்கூட, இல்லறத்தார். மட்டுமல்ல, துறவறத்தாரும்கூடப் பொருள்களை வாங்கிக் குவிப்பதில் கருத்தாய் உள்ளனர். ஆனால் இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து கூறுகிறார்: "உங்களுள் தன் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது" (லூக் 14:33). மேலும், கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்புகிறவர்கள் உற்றார் உறவினரையும், ஏன் தங்கள் உயிரையும் கூட வெறுத்து, தங்கள் சிலுவையைச் சுமக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றார் (லூக் 15: 25-27).

மத்தேயு நற்செய்தியில் கிறிஸ்து இந்த நிபந்தனைகளை தம் சீடர்களுக்கு மட்டும் விதிக்கின்றார் (மத் 10:37-38). ஆனால் லூக்கா நற்செய்தியிலோ கிறிஸ்து இந்த நிபந்தனைகளை எல்லா மக்களுக்கும் விதிக்கின்றார் (லூக் 14:25) மத்தேயு நற்செய்தியில், சீடர்கள் தங்கள் உற்றார் உறவினரைக் கிறிஸ்துவைவிட அதிகமாக அன்பு செய்யக் கூடாது என்று கூறுகின்றார் (மத் 10:37). ஆனால் லூக்கா நற்செய்தியிலோ சீடர்கள் தங்கள் உற்றார் உறவினரை (மனைவி, மக்கள் உட்பட) " வெறுக்க வேண்டும்" என்கிறார் (லூக் 14:28). லூக்கா நற்செய்தி முழுத்துறவையும், வேரோட்டமான சீடத்துவத்தையும் வலியுறுத்துகிறது. சீடத்துவம் மிகவும் விலையுயர்ந்தது. போர் புரியச் செல்லும் அரசர், வீடு கட்டுபவர் ஆகிய உவமைகள் மூலமாக, சீடராகுமுன் அதன் விலை என்ன என்பதைச் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்கிறார் கிறிஸ்து. ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன்பாக அதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும்; காரியத்தைச் செய்தபின் அதைப்பற்றிச் சிந்திப்பது இழுக்கானது என்கிறார் வள்ளுவர்,

எஎண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு (குறள் 467)

நீரழிவு நேயாளியிடம் மருத்துவர், "நீங்கள் நாள்தோறும் ஒரு மணி நேரம் நடக்க வேண்டும்" என்று கூறியபோது நோயாளி, "டாக்டர்! நடக்கிற காரியமாகச் சொல்லுங்க” என்றாராம், அவ்வாறே கிறிஸ்து கோரும் முழுமைத் துறவு நடக்கிற காரியம் போல் தெரியவில்லை என்று பலர் நினைக்கலாம். அவர்களுக்குக் கிறிஸ்து கூறுவது: "மனிதரால் இயலாதவற்றைக் கடவுளால் செய்ய இயலும்" (லூக் 18:27).

கிறிஸ்து கூறிய உண்மைத் துறவு தொடக்ககாலத் திருச்சபையில் நிகழ்ந்தது. தொடக்ககாலக் கிறிஸ்தவர்கள் தங்கள் உடைமை அனைத்தையும் விற்றுத் திருத்தூதர்களிடம் கொடுத்து பொதுவுடைமை வாழ்வு நடத்தினார்கள் (திப 2:42-45). ஆனால் காலப்போக்கில் அது வழக்கொழிந்து போய்விட்டது.

தனது வீட்டுக்கு வந்த நண்பர்க்கு ஒருவர் கெட்டியான, சுவையான சூப்பைக் கொடுத்தார். அச்சூப்பில் மீதியிருந்ததைத் தண்ணீர் கலந்து இரண்டாம், மூன்றாம், நான்காம் நாளும் கொடுத்தார். நண்பர் அவரிடம், "இது சூப்பா?" என்று கேட்டதற்கு அவர் கூறியது: "இது சூப்பினுடைய, சூப்பினுடைய, சூப்பினுடைய சூப்பு," அவ்வாறே நாம் கடைப்பிடிப்பது நற்செய்தியா? என்று கேட்டால், அதற்குரிய பதில்: "நாம் கடைப்பிடிப்பது. நற்செய்தியினுடைய, நற்செய்தியினுடைய, நற்செய்தியினுடைய நற்செய்தி." நற்செய்தியை கலப்படம் செய்து அதன் வீரியத்தைக் குறைத்துவிட்டோம்.

அன்று கிரேக்க நாட்டு தத்துவ மேதை ஒருவர், பட்டப்பகலில் கையில் விளக்கேந்தி மனிதனைத் தேடினார். இன்று கிறிஸ்து பட்டப்பகலில் விளக்கைக் கையிலேந்தி அவருடைய சீடர்களைத் தேடுகிறார், இன்று ஏராளமான கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர், ஆனால் சல்லடை போட்டு சலித்து எடுத்தாலும் ஒரு சீடரையும் கண்டுபிடிக்க இயலாது. கிறிஸ்துவை ஒப்பற்றச் செல்வமாகக் கருதி அவரைப் பின்பற்ற, இன்றைய முதல் வாசகம் குறிப்பிடும் ஞானம் தேவைப்படுகிறது, மெய்யுணர்வு பெற்றவர்கள் மட்டுமே எல்லாவற்றையும் துறந்து கிறிஸ்துவைப் பின்பிற்ற இயலும். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்; உனார்ந்து கொள்ளக்கூடியவர் உணரட்டும், "நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது" (மத் 6:24).

மரியாவின் பிறப்பு விழா

“நிலத்துக்கடியில் நிறைந்து கிடக்கும் நீர் கிணற்றில் தெரிவது போல், பசுவின் உடலில் வியாபித்திருக்கும் பால் மடிக்காம்பில் தெரிவதுபோல் தெய்வம் ஒவ்வொருவருக்கும் தாயில் தரிசனம் தருகிறது” – வைதீக மதம்.

இன்று அன்னையாம் திருச்சபை அன்னை மரியாவின் பிறப்பு விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. எத்தனையோ தலைவர்களுடைய, எத்தனையோ மனிதர்களுடைய பிறப்பு விழாக்களைக் கொண்டாடுகின்றோம். ஆனால் அன்னையின் பிறப்புவிழாவோ மற்ற எல்லாப் பிறப்பு விழாக்களைவிடவும் தனித்துவமிக்கதாக இருக்கின்றது. ஏனென்றால் அன்னையானவள் நம் அருகிலிருப்பவள்; நமக்கு அடைக்கலம் தருபவள்; நமக்காகப் பரிந்து பேசுபவள். எனவே இப்படிப்பட்ட தாயின் பிறப்பு விழாவைக் கொண்டாவது என்பது நமக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம் என்றே சொல்லலாம்.

மரியாவின் பிறப்பைக் குறித்துச் சொல்லப்படும் ஒரு நிகழ்வு. மரியாவின் பெற்றோர்களான சுவக்கினுக்கும், அன்னாவுக்கும் நீண்ட நாட்கள் குழந்தையே இல்லை. இப்படிப்பட்ட தருணத்தில் மரியாவின் தந்தையாகிய சுவக்கின் பாலைவனத்திற்குச் சென்று, நீண்ட நாட்கள் கடுந்தவம் மேற்கொண்டார். ஒருநாள் கடவுள் அவருடைய ஜெபத்தை கனிவுடன் கண்ணோக்கினார். ஆம், கடவுள் அவரிடம் ஒரு வானதூதரை அனுப்பி, “நான் உன்னுடைய ஜெபத்திற்கு செவி சாய்த்திருக்கிறேன். ஆதலால் உனக்கொரு குழந்தை பிறக்கும்” என்று சொல்லப் பணித்தார். அதன்படியே மரியா, சுவக்கின், அன்னா தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். (இந்த நிகழ்வு திருச்சபையால் அங்கீகரிக்கப்படாத தூய யாக்கோபு நற்செய்தியில் வருகிறது).

மரியாள் கருவில் உதிக்கும்போதே பாவக்கறையின்றி பிறந்தார். உலக மீட்பரும், ஆண்டவருமான இயேசு ஒரு பெண்ணின் வயிற்றில் உதிக்கவேண்டும் என்றால், அவள் பாவ மாசின்றி இருக்கவேண்டும். அதனால்தான் கடவுள் மரியாவை அமல உற்பவியாகத் தோன்றச் செய்தார். மரியாளின் இந்த அமல உற்பவம் கடவுள் தன்னுடைய மகன் இயேசுவின் பொருட்டு மரியாளுக்குக் கொடுத்த மிகப் பெரிய கொடை என்று சொன்னால் அது மிகையாது.

இந்த நல்ல நாளில் மரியாவின் பிறப்பு விழா நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம். தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் 8:30 ல் கூறுவார், “தாம் முன்குறித்து வைத்தோரை கடவுள் அழைத்திருக்கிறார்; தாம் அழைத்தோரை தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார்; தமக்கு ஏற்புடையோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்” என்று. ஆம், தன்னுடைய மீட்புத் திட்டம் நிறைவேற வேண்டும் என்பதற்காக இறைவன் மரியாவைத் தேர்ந்தெடுக்கிறார்; அவரைப் பல்வேறு வரங்களால் அணிசெய்கிறார். இறைவன் மரியாவை அழைத்ததும் மரியா, “இதோ நான் ஆண்டவரின் அடிமை உமது சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்கிறார். ஆகவே இறைவனின் மீட்புத் திட்டம் நிறைவேற நம்மையே நாம் அன்னை மரியாவைப் போன்று இறைவனின் கரங்களில் ஒப்புக்கொடுக்க வேண்டும்.

அடுத்ததாக இறைவன் மரியாவை தன்னுடைய மீட்புத் திட்டத்தில் பங்குகொள்ளவேண்டும் என்று அழைத்ததற்குப் பிறகு, மரியா தான் ஆண்டவரின் தாய் என்ற ஆணவத்தில் வாழவில்லை, மாறாக அவள் தாழ்ச்சி நிறைந்தவளாகவே இருக்கிறாள். எந்தளவுக்கு என்றால் தன்னுடைய உறவுக்காரப் பெண்மணியாகிய எலிசபெத் பேறுகாலத்தில் இருக்கிறாள் என்பதை அறிந்து, உடனே அவளுக்கு உதவச் செய்கிறார். ஆண்டவரையே பெற்றெடுக்க இருக்கும் தான் பெரியவள் என்ற ஆணவத்தில் இருக்கவில்லை. இவ்வாறு மரியாள் தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தாழ்ச்சி நிறைந்தவளாகவே விளங்கினாள். அதனால்தான் கடவுள் அவரை மேலாக உயர்த்தினார்.

இறைவாக்கினர் மீக்கா எழுதிய இன்றைய முதல் வாசகத்தில், “எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களில் மிகச் சிறியதாய் இருக்கிறாய். ஆயினும் இஸ்ரேயலை என் சார்பாக ஆளப்போகிறவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்” என்று படிக்கின்றோம். யூதா ஆட்சிமையங்கள் அனைத்திலும் சிறியது. ஆனால் அந்த சிறிய மையத்திலிருந்துதான் இறைவன் தன்னுடைய மகனைத் தோன்றச் செய்தார். அதுபோன்றுதான் மரியா எளியவளாக, தாழ்ச்சி நிறைந்தவளாக இருந்ததால்தான் கடவுள் அவரை உயர்த்தினார். ஆகவே நாம் ஒவ்வொருவரும் மரியாவைப் போன்று தாழ்ச்சி நிறைந்தவர்களாக வாழ்வோம்.

நிறைவாக ஒரு நிகழ்வோடு நிறைவு செய்வோம். புவியீர்ப்பு விசையைக் கண்டு பிடித்த சர் ஐசக் நியூட்டன் அவர்களுடைய வாழ்வில் நடந்த நிகழ்வு.

நியூட்டன் பிறந்த ஒருசில ஆண்டுகளிலே அவருடைய தந்தையானவர் இறந்துபோனார். தாயும்கூட நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாய் கிடந்தார். ஆனால் அவர் தன்னுடைய மகனுக்காக இறைவனிடம் ஜெபிக்காத நாளில்லை.

பின்னாளில் நியூட்டன் வளர்ந்து பெரிய ஆளானபிறகு சொல்வார், “நான் இன்றைக்கு இவ்வளவு பெரிய மனிதாக வளர்வதற்குக் காரணம் என்னுடைய தாயின் ஜெபம்தான்” என்று. ஆம் தாயின் ஜெபம்தான் அவரை சிறந்த மனிதராக உயர்த்தியது. நமது தாயும் நமக்காக இறைவனிடம் பரிந்து பேசுகிறார். கானாவூர் நிகழ்வு இதற்குச் சான்று.

ஆகவே நமக்காக என்றும் இறைவனிடம் பரிந்துபேசும் அன்னை மரியாவை நமக்குத் தந்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். அவரைப் போன்று இறைத் திட்டம் நிறைவேற நம்மையே இறைவனின் கரங்களில் ஒப்புக்கொடுப்போம், தாழ்ச்சி நிறைந்தவர்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்

ser

மீட்பு அளிக்கும் ஞானம்!

காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்ட நாம் எப்போதும் நாம் நம்முடைய காலத்தையும் இடத்தையும் நீடித்துக்கொள்ளவே விரும்புகிறோம். நிறைய ஆண்டுகள் வாழ விரும்புகிறோம், நிறைய இட வசதியோடு வீடு கட்டிக்கொள்ள விரும்புகிறோம், நிறைய இட வசதி கொண்ட வாகனம் வாங்க விரும்புகிறோம், நீடித்த பேட்டரி, நீடித்த கறுப்பு நிற முடி, நீடித்த சிவப்பழகு, நீடித்த டிவி, நீடித்த முதலீடுகள், நீடித்த வட்டி விகிதம் என எல்லாவற்றிலும் நீட்சியை விரும்புகிறோம். இவை எல்லாமே நம்முடைய நீடித்த மகிழ்விற்கான தேடலின் வெளிப்பாடுகள். நமக்குக் கிடைக்கும் சின்னஞ்சிறு மகிழ்ச்சி தருணங்கள், அனுபவங்கள் நீடிக்காதா என ஏங்குகிறோம்.

நீடித்த மகிழ்ச்சியே மீட்பு என்றும், அந்த மீட்பை ஞானத்தால் அடையலாம் என்றும் சொல்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு. மீட்பு என்றவுடன் நாம் பல நேரங்களில் பாவத்திலிருந்து மீட்பு என்று நினைத்து மீட்பை பாவத்தோடு இணைத்துவிடுகிறோம். 'மீட்பு' என்பது மறுவாழ்வு அல்லது நிலைவாழ்வு சார்ந்த வார்த்தை மட்டும் அன்று. மாறாக, முதலில் அதன் பொருள் 'நலம்' என்பது. ஒரு மருத்துவர் மற்றவருக்கு நலம் தரும் செயல் கிரேக்க மொழியில் 'மீட்பு' என்றே சொல்லப்பட்டது. நலம் தரும் மருத்துவர் என்ன செய்கிறார்? நோயை நம்மிடமிருந்து நீக்கி நம்முடைய நலத்தை அல்லது மகிழ்ச்சியை நீட்டிக்கிறார். இயேசு செய்வதும் இதுதான். பாவத்தால் வந்த இறப்பிலிருந்து நம்மை 'மீட்டு' நம்முடைய வாழ்வை, மகிழ்ச்சியை நீட்டிக்கிறார்.

நீடித்த மகிழ்ச்சியை ஞானம் எப்படி அருள்கிறது?
இன்றைய முதல் வாசகத்தில் (காண். சாஞா 9:13-18), சாலமோனின் ஞானநூல் ஆசிரியர் மனிதர்களின் இயலாமை அல்லது வரையறை அனுபவம் பற்றி அழகாக எழுதுகின்றார். அதை நான்கு வாக்கியங்களில் பதிவு செய்கின்றார்: (அ) 'நிலையற்ற மனிதரின் எண்ணங்கள் பயனற்றவவை,' (ஆ) நம்முடைய திட்டங்கள் தவறக் கூடியவை, (இ) 'அழிவுக்குரிய உடல் ஆன்மாவைக் கீழ்நோக்கி அழுத்துகிறது,' மற்றும் (ஈ) 'இந்த மண் கூடாரம் கவலை தோய்ந்த மனதுக்குச் சுமையாய் அமைகிறது.' இங்கே மூன்று விடயங்கள் அடிக்கோடிடப்படுகின்றன: (அ) நாம் நிலையற்றவர்கள், நம்முடைய உடல் அழியக்கூடியது. இருந்தாலும் அங்கே அழியாத ஆன்மா ஒன்று உள்ளது. (ஆ) அழிவுக்குரிய உடலோ, அதிலிருக்கும் மூளையோ தங்களிலேயே வரையறைக்குட்பட்டவை. ஆகவே அழிவுக்குரிய திட்டங்களைத்தான் அவைகளால் எடுக்க முடியும். (இ) நம்முடை மனத்தில் இயல்பாகவே கவலை இருக்கின்றது. அந்தக் கவலை நம்முடைய உடலால் இன்னும் அழுத்தப்படுகிறது. இதை வாசித்தவுடன், 'ஐயோ! என்ன ஒரு இரங்கத்தக்க நிலை! இதிலிருந்து விடுபட வழியே இல்லையா? என் எண்ணங்கள் பயனற்றவையா? என் திட்டங்கள் நிறைவேறாதா? என் கவலை மாறாதா? என் மண் கூடாரம் எனக்குச் சுகமாக இருக்காதா?' என்ற கேள்விகள் நம்முள் எழுகின்றன.

இந்தக் கேள்விகளிலிருந்து நம்மை விடுவிக்கும் ஆறுதலான செய்தியையும் ஆசிரியர் தருகின்றார்: (அ) கடவுளின் ஞானத்தாலும் தூய ஆவியாலும் நாம் இறைவனின் திட்டத்தையும், நம் வாழ்வின் திட்டங்களையும் அறிந்துகொள்ள முடியும். (ஆ) அந்த ஞானம் நமக்கு மீட்பு, நலம், மகிழ்ச்சி தரும்.

ஆக, நம்முடைய உடல், எண்ணம், மனத்தின் கவலை ஆகியவற்றால் நாம் நலமற்று இருந்தாலும், நமக்கு நிலையான நீடித்த மகிழ்ச்சியை, மீட்பாக வழங்குகிறது கடவுளுடைய ஞானம். நாம் கடவுளுடைய ஞானத்தையும், அவருடைய ஆவியையும் பெற்றுக்கொள்ளும்போது நம்முடைய வாழ்வு செம்மைப்படுத்தப்பட்டு, நாம் அவருக்கு உகந்தவற்றையே செய்வோம். செம்மையான வாழ்வும், அவருக்கு உகந்தவற்றைச் செய்வதும்தானே நீடித்த மகிழ்ச்சி!

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். பில 9-10,12-17) பவுலுடைய திருமுகங்களில் மிகச்சிறிய திருமுகம் அல்லது பரிந்துரைக் கடிதம் என அழைக்கப்படும் பிலமோன் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. மகிச்சிறிய நூலாக இருந்தாலும் மிகப்பெரிய புரட்டிப் போடுதலை இது செய்கின்றது. அது என்ன புரட்டிப் போடுதல்? கொலோசை நகரின் முக்கியமான செல்வந்தர் பிலமோன். இவருடைய அடிமையின் பெயர் ஒனேசிமு. அடிமை என்றவுடன் இன்று அது வெறும் வார்த்தையாகத் தெரிகிறது. இன்று நாம் காலையிலிருந்து எழுந்தவுடன் ஸ்விட்ச் போட்டவுடன் லைட் எரிகிறது. குழாய் திறந்தவுடன் தண்ணீர் வருகிறது. ஒரு பக்கம் சுடுதண்ணீர் மறுபக்கம் குளிர்ந்த நீர். அங்கே அருகில் தொங்கும் புதிய டவல். அருகிலேயே கழிப்பறை. அருகில் சென்றாலே தானாகவே தண்ணீர் இட்டுக்கொள்ளும். குளித்து முடித்து வெளியே வந்தவுடன் முடி உலர்த்தி, மின்விசிறி, அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்ட ஆடைகள், மேலே ஒரு கையில் துணிகளை உயர்த்தி மறு கையால் துணியை உருவி பட்டன் மாட்டிக்கொண்டே ஊபர் ஈட்ஸ் துலாவி காலை உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு அப்படியே அடுத்த வேலை பார்க்க கிளம்பிவிடலாம். ஆனால், அன்று இவை எல்லாவற்றையும் செய்ய பிலமோனுக்கு ஒனேசிமு தேவைப்பட்டார். எழுப்பி விட, தீப்பந்தம் ஏற்ற, தண்ணீர் கொண்டுவர, கழிவிற்கு மண்பானை கொண்டுவர, தண்ணீர் சுட வைக்க, விறகு பொறுக்க, அடுப்பு ஏற்ற, வெதுவெதுப்பாய் வாளியில் நிரப்ப, குளிக்க வைக்க, துண்டால் துவட்டி விட, ஆடையை மற்றும் உணவு தயாரிக்க என அடிமை இல்லாமல் வாழ்வை நினைத்துப் பார்க்க முடியாத நிலை. ஒருநாள் காலை பிலமோன் துயில் எழும் நேரம் ஒனேசிமு இல்லை. அவர் தப்பிவிட்டார். அடிமை தப்பினால் அவருக்கு மரண தண்டனை கொடுக்கலாம் என்று கிரேக்க மற்றும் உரோமைச் சட்டங்கள் நிர்ணயித்தன. அப்படித் தப்பி வந்த ஒனேசிமு பவுலிடம் அடைக்கலம் அடைகிறார். பிலமோன் வீட்டிற்குப் பவுல் அடிக்கடி வந்து சென்றதால் பவுலை ஒனேசிமுவுக்குத் தெரிந்திருக்கலாம். இப்படித் தன்னிடம் வந்த ஒனேசிமுவை மீண்டும் பிலமோனிடம் அனுப்புகின்றார். பிலமோன் கோபத்தால் ஒனேசிமுவைத் தண்டித்துவிடலாம் என்று நினைத்த பவுல் ஒரு பரிந்துரைக் கடிதம் எழுதுகின்றார். அக்கடிதத்தின் ஒரு பகுதியே இரண்டாம் வாசகம்.

'என் இதயத்தையே அனுப்புகிறேன்' என்று பவுல் சொல்கின்றார். மேலும், 'நீர் அவனை ஓர் அடிமையாக அல்லாமல் கிறிஸ்தவ நம்பிக்கையில் ஒரு சகோதரனாக ஏற்றுக்கொள்ளும்' என்று பிலமோனுக்கு எழுதுகின்றார். அக்காலத்தில் அடிமை என்பவர்கள் விலங்குகள் அல்லது பொருள்களாகக் கருதப்பட்டனர். அஃறினையாகக் கருதப்பட்ட ஒருவரை உயர்திணையாகக் கருத பிலமோன் நிறைய முயற்சிகள் எடுக்க வேண்டும். அவருடைய உளப்பாங்கு மாற்றம் பெற வேண்டும். இறுதியாக, 'என்னை ஏற்றுக்கொள்வது போல அவனை ஏற்றுக்கொள்ளும்' என்று அடிமையோடு தன்னையே இணைத்துக்கொள்கின்றார் பவுல்.

இதில் என்ன ஞானம் இருக்கிறது? நான் எனக்கு அடுத்திருப்பவரை என்னைப் போல நினைக்கவும் நடத்தவும் தொடங்கினால் நான் நலம் பெறுவேன், என் உள்ளம் மகிழ்ச்சி பெறும். உயர்ந்தவர்-தாழ்ந்தவர், பெரியவர்-சிறியவர், வேண்டியவர்-வேண்டாதவர் என்ற பேதமே நம்முடைய மகிழ்ச்சியின்மைக்குக் காரணமாக இருக்கிறது. ஆனால், பேதங்களற்ற நிலையில் நாம் அனைவரும் சகோதர, சகோதரிகளாக, ஒருவர் மற்றவரை இருப்பது போல ஏற்றுக்கொண்டு, மன்னித்து, அன்பு செய்து வாழ்ந்தால் இந்த உலகமே நாம் மீட்பு அடையும் இடமாகிவிடும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 14:25-33) தன்னைப் பின்தொடர்ந்து வந்த மக்களைப் பார்த்து இயேசு சீடத்துவத்தின் போதனைகளை வழங்குகின்றார். மூன்று பேர் தன்னுடைய சீடர்களாக இருக்க முடியாது என முதலில் வரையறுக்கிறார் இயேசு: (அ) 'தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர், சகோதரிகள் ஆகியோரை, ஏன், உயிரை இயேசுவை விட மேலாகக் கருதுபவர்கள்' - இங்கே இயேசு இவர்களை வெறுக்க வேண்டும் அல்லது துறக்க வேண்டும் என்று சொல்லவில்லை. மாறாக, முதன்மைப்படுத்துதலில் தெளிவு வேண்டும் என வலியுறுத்துகின்றார். (ஆ) 'தம் சிலுவையைச் சுமக்காமல் அவர் பின் செல்பவர்கள்' - சிலுவை என்பது இயேசுவின் இலக்காக இருந்தது. நாம் அனுபவிக்கும் எல்லாவித நெருடல், இடறல், கீறல்தாம் சிலுவைகள். (இ) 'தம் உடைமைகளையெல்லாம் விட்டுவிடாதவர்கள்' - லூக்காவைப் பொறுத்தவரையில் செல்வம் மற்றும் பற்று எப்போதும் இயேசுவைப் பின்தொடர்தலுக்கு இடையூறானது. ஏனெனில், அது கவனச் சிதறல்களை உருவாக்கிவிடும். இயேசுவை முதன்மையாகக் கொண்டு, அன்றாட இடறல்களையும், இடையூறுகளையும், பிறழ்வுகளையும் தூக்கிக்கொண்டு, கவனச் சிதறல்களைத் தவிர்த்து இயேசுவோடு வழிநடப்பவரே அவருடைய சீடராக இருக்க முடியும்.

மூன்று எதிர்மறையாக வாக்கியங்களில் சீடத்துவத்தை வரையறுத்த இயேசு இரு உருவகங்கள் வழியாக தன்னுடைய போதனையை இரத்தினச் சுருக்கமாக்க அணியம் செய்கிறார்: (அ) கோபுரம் கட்ட விரும்பும் ஒருவர், (ஆ) வேறு ஓர் அரசரோடு போரிடும் அரசர். கோபுரம் கட்டுதல் மிகவும் சிரமமான வேலை. சமதளத்தில் எளிதாக நாம் கட்டிவிட முடியும். ஆனால், மேல் நோக்கிச் செல்லும் கட்டிடம் மற்றும் கோபுரம் நிறைய வேலைகளை எடுக்கும். ஒரு அறை கட்டுகிறோம் என வைத்துக்கொள்வோம். அதற்குப் பக்கத்தில் இன்னும் இரண்டு அறைகள் கட்ட வேண்டுமெனில் நாம் எளிதில் வானம் தோண்டிக் கட்டிவிடலாம். ஆனால், அவ்வறைகளை மாடியில் கட்ட வேண்டும் என்றால் சிரமம். ஏனெனில் ஏற்கனவே உள்ள அடித்தளம் எவ்வளவு தாங்குமோ அந்த அளவிற்குத்தான் கட்ட முடியும். அடித்தளத்தை மீண்டும் தோண்டி இடவும் முடியாது. ஆக, உயரமாக செல்வதற்கு நிறையத் திட்டமிடல் அவசியம். போரிலும் அதே நிலைதான். பாதிப் போர் முடிந்து, 'நான் நிறுத்திக் கொள்கிறேன்' என்று எந்த அரசனும் சொல்ல முடியாது. போர் தொடங்கிவிட்டால் வாழ்வு அல்லது சாவு தான். பாதி வாழ்வு, பாதி சாவு என்பது போரில் கிடையாது. சீடத்துவம் என்பதும் இயேசுவைப் பொறுத்தவரையில் திரும்ப திருத்த இயலாத ஒன்று. ஒரு முறை முடிவு எடுத்து, 'ஆம்' என்று சொல்லிவிட்டால், தொடர்ந்து முன்னேறிச் சென்றுகொண்டே இருக்க வேண்டும். பாதி அர்ப்பணம் மிகவும் ஆபத்தானது. போரில் பாதி வீரம் போல. கோபுரத்தில் பாதிக் கோபுரம் போல.

ஆக, இயேசுவைப் பின்பற்றுதல் நம்முடைய நீடித்த மகிழ்ச்சியாக மீட்பாக இருக்கிறது. அதை அடைவதற்கு திட்டமிடலும், விட்டுவிடலும் அவசியமாகின்றன.

நீடித்த மகிழ்ச்சி என்னும் மீட்பை ஞானத்தின் வழியாக நாம் எப்படி பெறுவது?

நாம் பல நேரங்களில், 'எனக்கு மகிழ்ச்சி வேண்டும்' என்று வெளியே தேடுகிறோம். அது தவறு. மகிழ்ச்சி இயல்பாகவே நம்முள் இருக்கிறது. அது சில நேரங்களில் கவலை, ஏக்கம், எதிர்பார்ப்பு என்னும் மேகங்களால் மங்கலாகத் தெரிகிறது. அவ்வளவுதான்! மேகங்கள் களைய மகிழ்ச்சி கண்களுக்குப் புலப்படும்.

1. மனிதரின் எண்ணங்கள் பயனற்றவை என்று தெளியும் ஞானம்
நாம கொஞ்ச நேரம் உட்கார்ந்து பார்த்தால் நிறைய எண்ணங்கள் தோன்றி மறைகின்றன நம் மூளையில். எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியாது. எண்ணங்கள் இயல்பாகவே எழுகின்றன. ஆனால், சிந்தனை என்பது நான் சிந்திப்பது. இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டுணர வேண்டும். 'என் நண்பர் என்னைவிட்டுப் போய்விடுவார்,' 'என்னுடைய கணிணியைச் சரி செய்ய முடியாது,' 'தங்கம் விலை கூடுகிறது,' 'பெட்ரோல் விலை கூடுவதால் இன்று கார் எடுக்க வேண்டாம்,' 'இந்தச் சட்டை எனக்கு டைட்டாக இருக்கிறது' - இவை எல்லாம் என் மனதில் எழும் சில எண்ணங்கள் என வைத்துக்கொள்வோம். இவை கொய கொய என்று குப்பை மாதிரி நிறைந்துகொண்டும், காற்றில் பறந்துகொண்டும் இருக்கும். ஆனால், 'நான் இதை முதலில் எழுதுவேன்,' 'இந்தக் கருத்து நல்லது' என்று நான் சிந்திப்பது மற்றொரு பக்கம் வரிசையாக நடக்கும். எண்ணங்களை நான் நெறிப்படுத்த வேண்டும் என்றால் என் ஆசைகளை நெறிப்படுத்த வேண்டும். ஆசைகள் குறைய எண்ணங்கள் குறையும். என் வாழ்வில் எழும் எண்ணங்கள் என் மகிழ்ச்சியை, என் நலத்தை, என் நம்பிக்கையை குலைத்துவிடக் கூடியவை. ஆகையால்தான், அவற்றை பயனற்றவை என்கிறார் ஞானநூல் ஆசிரியர். நீடித்த மகிழ்ச்சியைப் பெறும் ஞானத்தின் முதற்படி இதுதான். என்னுடைய ஆசைகளை நெறிப்படுத்தி என்னுடைய எண்ணங்களை நெறிப்படுத்துவது. பயனற்ற எண்ணங்களை விடுத்து இறைவனின் ஆவியின் துணையால் செம்மையானவற்றைச் சிந்திப்பது.

2. எனக்கு அடுத்திருப்பவரை என்னைப் போல ஏற்றுக்கொள்ளும் ஞானம்
முதல் வாசகத்தில் 'மண்கூடாரம்' என்ற வார்த்தையை உருவகமாகக் கையாளுகிறார் ஆசிரியர். நாம் இன்று எவ்வளவு பொருள்கள், பதவிகள், படிப்பு, உறவுகள் வைத்திருந்தாலும் என் வாழ்வு ஒரு மண்கூடாரம். அது எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழலாம். செங்கல்கள் சரிந்தால் நேராகச் சரியும். மண் அப்படியில்ல. எங்கே எந்தப் பக்கம் இழுத்துக்கொண்டு போகும் எனத் தெரியாது. இப்படிபட்ட மண்கூடாரமாக இருக்கும் நான், வலுவற்று நொறுங்குநிலையில் இருக்கும் நான், எனக்கு அடுத்திருப்பவரின் நொறுங்குநிலையை உணர வேண்டும். பிலமோன் இன்று தலைவராக, ஒனேசிமு இன்று அடிமையாக இருந்தாலும் இருவரும் மண்கூடாரங்களே. பிலமோனின் பணமும், பொருளும், சமூக நிலையும் அவரை ஒரு போதும் காங்க்ரீட் கட்டிடமாக மாற்ற முடியாது. ஆக, என்னையும் அடுத்தவரையும் இணைக்கும் ஒன்றைப் பார்த்து நான் பழக வேண்டுமே தவிர, அவரையும் என்னையும் பிரித்துப் பார்க்கும் எதையும் நான் பெரிதாக்கிப் பார்த்து மற்றவரை இகழக் கூடாது. என்னை மண்கூடராமாக ஏற்றுக்கொள்ளுதல் எனக்கு அடுத்திருப்பவரோடு என்னை இணைக்கும்.

3. விட்டுவிடுதல், திட்டமிடுதல் என்னும் ஞானம்
இன்று மகிழ்ச்சிக்குத் தடையாக இருப்பவற்றை நான் முதலில் விட்டுவிட வேண்டும். குதிரையை லாயத்தில் கட்டிக்கொண்டு அதில் நான் பயணம் செய்ய முயற்சிக்கக் கூடாது. குதிரை பயணம் செய்ய வேண்டுமெனில் லாயத்தின் கயிறு அகற்றப்பட வேண்டும். குதிரைக்கு லாயத்தில் இருப்பது பாதுகாப்புதான். ஆனால், குதிரை அதற்காக வாங்கப்படவில்லை. அது தன்னுடைய சிலுவையை, துன்பத்தை அன்றாடம் சுமக்க வேண்டும். ஆக, இன்று நான் இயேசுவை முதன்மைப்படுத்தி மற்றவற்றை விட்டுவிடவும், என்னுடைய இயலாமையை நான் சிலுவையாகச் சுமக்கவும், என்னுடைய கவனச்சிதறல்களைக் களையவும் வேண்டும். தொடர்ந்து, கோபுரம் கட்டுபவர், போருக்குச் செல்பவர் போல நேரம் எடுத்து, அனைத்தையும் ஆராய்ந்து பார்த்து, யோசித்து, திட்டமிடல் வேண்டும். ஒருபோதும் என்னுடைய செயலில் பின்வாங்கவே கூடாது.

இவ்வாறாக, இறைவனின் ஆவியால், ஒருவரை மற்றவரை ஏற்றுக்கொள்ளுதலால், இயேசுவின் சீடராதலால் நாம் நம்முடைய மீட்பைப் பெற்றுக்கொள்ள முடியும். இறைவனின் ஆவியைப் பெறுவதும், ஒருவர் மற்றவரை ஏற்றுக்கொள்வதும், இயேசுவின் சீடராவதுமே ஞானம்.

இறுதியாக, இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 90) ஆசிரியர் இவ்வாறு செபிக்கிறார்: 'எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும். அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்!' இதுவே நம் செபமாகட்டும்.

இன்றைய நாள் முடிந்தால் நம் வாழ்நாளில் ஒரு நாள் மறைகிறது. நாள்கள் கூடக்கூட வாழ்நாள் குறைகிறது. இந்தக் கூட்டல்-குறைத்தல் தெளிவானால் ஞானம் பிறக்கும். ஞானம் பிறந்தால் இந்த நொடியே நமக்கு மீட்பு நிகழும்!

ser

sunday homily


முகப்பு பக்கம்
வத்திக்கான் வானொலி
கத்தோலிக்க இதழ்கள்
ஞாயிறு வாசகம்
விருந்தினர் பக்கம்
உம் வாக்கே விளக்கு!
சென்னை பங்குதலங்கள்
நூலகம்
திருத்தலச் சுற்றுலா
தவக்கால சிந்தனைகள்
ஒலியும் ஒளியும்
அன்னை தெரேசா
கிறிஸ்மஸ் மலர்கள்
பொங்கல்
செபமாலை
பாடல்கள்
செபமே ஜெயம்A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com