மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலம் இருபத்தொன்றாம் ஞாயிறு
மூன்றாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
I எரேமியா 66: 18-21; II எபிரேயர் 12: 5-7; III லூக்கா 13: 22-30

எருசலேம் நோக்கி நெடும் பயணம் மேற்கொண்ட இயேசு ஓர் ஊருக்கு வருகின்றார். அப்பொழுது ஒருவர் இயேசுவிடம் கேள்வி ஒன்று கேட்கின்றார்.

"ஆண்டவரே மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?” இக்கேள்விக்கு இயேசு நேரடியாகப் பதில் கூறவில்லை . ஓர் எடுத்துக்காட்டின் மூலம் பதில் தருகின்றார். இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும் (லூக். 13:24) என்கிறார்.

மீட்புப் பெறுவது அதாவது வாழ்வின் இறுதியில் வான் வீடு அடைவது இதுதான் நமது இலக்கு. இது சாத்தியமா? ஆம் என்கிறார் இயேசு . ஆனால் கடினம். முயற்சி செய்ய வேண்டும் என அறிவுரை கூறுகின்றார்.

கிறிஸ்துவன் என்ற காரணத்தினால் அதாவது திருமுழுக்குப் பெற்றுவிட்டேன் என்ற காரணத்தினால் மோட்சம் எனக்கு நிச்சயம் என்று இல்லை. மோட்சம் அடைய நான் முயற்சி செய்ய வேண்டும். அதுவும் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும் என்பது ஆண்டவரின் எச்சரிக்கை. எனவே உழைக்க வேண்டும். தோல்வி ஏற்பட்டாலும் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். எப்படி? இதோ சில வழிமுறைகள்.

முதல் பாடம் : வாழ்வு பெற வேண்டும் என்ற ஆசை இருக்க வேண்டும். அடைந்தே தீருவேன் என்ற நம்பிக்கை வேண்டும். நம்மிடம் உள்ள தேவையில்லாதவற்றைக் கழிக்கவும், தேவையானவற்றைக் கூட்டவும் தெளிவு வேண்டும். என்னிடம் நீக்கப்பட வேண்டியது எதுவுமில்லை என்று என் நாக்கு சொல்லலாம். மனம் சொல்லுமா? மனச்சாட்சி சொல்லுமா? நீக்கப்பட வேண்டியவை எத்தனை என்னிடம் உள்ளன என்பது என் மனதுக்குத் தெரியாதா என்ன? மனச்சாட்சிக்கு உண்மையுள்ளவர்களாக நடக்க முயல்வது நாம் கற்கவேண்டிய முதல் பாடம்.

இரண்டாவது பாடம் : புறம் பேசுவதைத் தவிர்ப்பது. நேரில் ஒன்றும், பின்னால் ஒன்றும் பேசும் பழக்கம் நம்மிடம் ஒரு பிணியாகவே உள்ளது எனலாம். இதைப் பற்றி புனித அல்போன்ஸ் லிகோரியார் கூறும்போது, புறம் பேசுவது என்பது ஒரு பேய். வீட்டிற்கு ஒரு பேய் என்றால் மடத்திற்கு ஓட்டுக்கு ஒரு பேய் என்கிறார். உண்மையைத் திரித்துக் கூறுவதும், சுயநலக் கண்ணோட்டத்தில் பிறரின் எச்செயலையும் பார்ப்பதும், வதந்திகளைப் பரப்புவதும் தவிர்க்கப்பட வேண்டும். வேண்டுமென்றே ஒருவரின் பெயரைக் கொடுப்பதாலும் அவதூறு பேசுவதாலும் எழுதுவதாலும் நாம் சாதிக்கக் கூடியது என்ன? வாள் எடுத்தவன் வாளால் மடிவான். வினை விதைத்தவன் வினையை அறுப்பான். பூமராங் () போன்று அது நம்மையே பாதிக்கும்.

மூன்றாவது பாடம் : நல்லவர்களை மதிக்கவும் அல்லாதவர்களை ஒதுக்கவும் மனதில் உறுதி கொள்ள வேண்டும். பொதுவாக நாம் யாரிடம் அச்சம் கொள்கிறோமோ அவர்களுக்கே விசுவாசமாக இருக்கிறோம். யாரை நல்லவர் என்று கருதுகிறோமோ அவர்களுக்குத் துரோகம் செய்கிறோம். முன்னதற்குக் காரணம் பயம். இரண்டாவதற்கு, அவர் ஒன்றும் சொல்லமாட்டார் என்கிற நம் சுயநலம். இதை மாற்றாவிட்டால் நாம் வாழ்வு பெறுவது சிரமம்.

குன்றின் மேல் நின்று பார்ப்பதற்கும், குன்றின் அடியில் இருந்து பார்ப்பதற்கும் வேறுபாடு உள்ளது. முந்தையது பரந்த பார்வை. பிந்தியது குறுகிய பார்வை. குன்றின் கீழே இருப்பவர் குன்றின் மேலே இருப்பவரின் பார்வை சரியில்லை, நான் பார்ப்பதுதான் சரி என்று சொல்ல முடியுமா? உயர்ந்த எண்ணம், நிறைந்த அனுபவம், வயது, ஞானம் என பரந்த சிந்தனையாளர்களைப் போற்றவும் மதிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். நமது குறுகிய பார்வையால் அவர்களை எடை போடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

நான்காவது பாடம் : முதல் பாடத்தை ஒத்தது. கடவுள் பயம், நம் செயல், சொல் அனைத்தையும் கடவுள் கவனிக்கின்றார் என்ற எண்ணம், மறைவாய் உள்ளதையும் கடவுள் காண்கின்றார் என்ற உணர்வு நம்மை வாழ வைக்கும் என்பதை மறத்தலாகாது.

இப்பாடங்களைப் பின்பற்றுவது கடினம் தான். ஆனால் முடியாதது அல்ல. முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.

ser

யாருக்கு விண்ணகம் சொந்தம்?

மீட்பு, இரட்சண்யம், இறைவனின் பராமரிப்பு, இறைவனின் நிறையாசி, இறைவனின் நிறையருள் ஆகியவை ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்கு மட்டும் சொந்தமானவை அல்ல; அவை எல்லாருக்கும் சொந்தமானவை என்பதை இயேசு இன்றைய நற்செய்தியிலே தெளிவாக்குகின்றார்! வெள்ளை மனிதர்கள் அதிகம் வாழும் ஒரு பகுதி! அந்தப் பகுதியிலே கோயில் திருவிழா! அப்போது பலூன் விற்கும் வியாபாரி ஒருவர் பல வண்ணங்கள் நிறைந்த பலூன்களை வானத்திலே பறக்கவிட்டு, குழந்தைகளின் மனத்திலே ஆசையை மூட்டிக்கொண்டிருந்தார்! அப்போது கருப்பு நிறக் குழந்தை ஒன்று அவரிடம் சென்று, எல்லா கலர் பலூன்களும் பறக்கின்றன! கருப்புப் பலூனைக் காணோம்! கருப்புப் பலூன் மேலே பறக்குமா? என்று கேட்டது. அதற்கு அந்த வியாபாரி அந்தக் குழந்தையை அன்போடு பார்த்து, நிச்சயமாகக் கருப்புக் கலர் பலூனும் பறக்கும்! கலர் முக்கியமல்ல, அந்த பலூனுக்குள்ளிருக்கும் காற்றுதான் முக்கியம் என்றார்.

ஆம். மனிதர்களுடைய நிறம், இனம், நாடு, மொழி, பணம், பதவி, பட்டம், அழகு, அந்தஸ்து, மதிப்பு, மரியாதை ஆகியவை முக்கியமல்ல. கடவுளுடைய மீட்பைப் பெற அவரவருடைய வாழ்க்கையே முக்கியமாகும்!

இறைவன், இறைவாக்கினர் எசாயா வழியாக இன்றைய முதல் வாசகத்தில், பிற இனத்தார், பிற மொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன் ; அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள் (எசா 66:18) என்கின்றார்.

நல்வாழ்வு வாழ, அதாவது குறுகிய வழியைத் தேர்ந்தெடுத்து, இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுபவர்கள் (லூக் 13:24ஆ) அனைவர்க்கும் கடவுளின் ஆசி உண்டு ; இறைவனின் மீட்பு உண்டு. குறுகிய வழி எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்ள எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம் நமக்கு உதவிபுரிகின்றது. குறுகிய வழியில் நடக்க விரும்புகின்றவர் ஒரு சில வழிமுறைகளைக் கையாள முன்வரவேண்டும்.

1. கடவுள் நம்மைக் கண்டித்துத் திருத்தும்போது நாம் தளர்ந்து போகக்கூடாது. காரணம் ஆண்டவர் யாரிடம் அன்பு கொண்டிருக்கின்றாரோ அவர்களைக் கண்டிக்கின்றார். (எபி 12:5-6)
2. திருத்தப்படுவதற்காகத் துன்பங்களைத் தாங்கிக்கொள்ளவேண்டும். (எபி 12:7)
3. திருத்தம் ஆரம்பத்தில் நமக்குத் துயரம் தந்தாலும் முடிவில் அமைதியையும், நேர்மையான வாழ்வையும் அளிக்கும் என்று நம்ப வேண்டும். (எபி 12:11)
4. தளர்ந்து போன கைகளைத் திடப்படுத்த வேண்டும். (எபி 12:12அ)
5. தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்த வேண்டும். (எபி 12:12ஆ)
6. நேர்மையான பாதையில் நாம் நடந்து செல்ல வேண்டும். (எபி 12:13)

மேற்கூறப்பட்ட 6 பாடங்களையும் கசடறக் கற்று, கற்றபடி நின்று, ஊனமில்லா உண்மை வாழ்வு வாழ்ந்து வளமுடன் இம்மையையும், மறுமையையும் பெற்று, இறைவனால் மீட்கப்பட்டவர்களாய் நாம் வாழ இன்றைய இறைவாக்கு நமக்கு அருள்புரியட்டும்!
மேலும் அறிவோம் :

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக (குறள் 391).

>பொருள் : ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் உருவாக்கும் நூல்களைத் தன் குறைகள் நீங்கும் வண்ணம் ஒருவர் விரும்பிக் கற்க வேண்டும். கற்றால் அதற்கு ஏற்றவாறு அவற்றை வாழ்வில் கடைப்பிடித்து நடக்க வேண்டும்.

அமெரிக்காவில் வெள்ளை நிறக் குழந்தைகள் சிகப்பு நிற, பச்சைநிற. ஊ தா நிறப் பலூன்களைப் பறக்கவிட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்துக் கொண்டிருந்த கறுப்புநிற நீக்ரோ குழந்தைகள் வெள்ளை நிறக் குழந்தைகளைப் பார்த்து, "கறுப்புநிறப் பலூன்கள் மேலே பறக்குமா?" என்று கேட்டனர். அதற்கு வெள்ளை நிறக் குழந்தைகள் கூறினர்: "நிச்சயமாகப் பறக்கும்; ஏனெனில் பறப்பது வெள்ளைநிறமோ, பச்சைநிறமோ, கறுப்புநிறமோ இல்லை; மாறாக, பலூன்களில் உள்ள காற்றுதான் பலூன்களை உயரப் பறக்கச் செய்கின்றது."

அவ்வாறே, மனிதர்களை விண்ணகத்துக்குக் கொண்டு செல்வது அவர்களது மதங்கள் அல்ல; மாறாக, கடவுள் மீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும், அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் மனநிலையுமாகும். இவ்வுண்மையை பேதுரு பின்வருமாறு தெளிவாகக் கூறியுள்ளார்: "கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை ... எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்" (திப 10:34),

இன்றைய நற்செய்தியில் இயேசுவிடம் ஒருவர் கேட்கிறார்: "ஆண்டவரே. மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?” இக்கேள்வியைக் கேட்டவர், ஒருசிலர்தான் மீட்படைவர் என்ற குறுகிய மனநிலையைக் கொண்டவர் என்பது தெளிவு. யூத இனத்தார் மட்டுமே மீட்புப்பெறுவர், பிற இனத்தவர் மீட்படையமாட்டார்கள் என்ற எண்ணம் யூதர்களுடைய மனத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தது. ஆனால் இக்கருத்துக்கு நேர்மாறாக இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் கூறுகிறார்: "பிற இனத்தார், பிற மொழியினர் அனைவரையும் கூட்டிச் சேர்க்க வருவேன்; அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள்" (லூக் 13:28-30).

ஒரு பங்குத்தந்தை மறைக்கல்வி வகுப்பில் மாணவர்களிடம், "நரகத்திற்குப் போகிறவர்கள் கையை உயர்த்துங்கள் " என்று கேட்டபோது, ஒரு மாணவன் மட்டும் கையை உயர்த்தினான், பங்குத்தந்தை அவனிடம், "ஏண்டா நீ ஒருவன் மட்டும் நரகத்துக்குப் போக விரும்புகிறாய்? " என்று கேட்டதற்கு அவன் கூறிய பதில்: "சாமி! நீங்கத் தனியாகப் போகவேண்டாம்; உங்களுக்குத் துணையாக நானும் வருகின்றேன். " ஆம், சாதாரண மக்கள் விண்ணகம் செல்ல, பங்குத்தந்தை நரகத்துக்குச் செல்லலாம், மற்ற மதத்தினர் விண்ணகம் செல்ல, கிறிஸ்தவர்கள் நரகத்துக்குச் செல்லலாம். புனித அகுஸ்தினை மேற்கோள் காட்டி இரண்டாம் வத்திக்கான் சங்கம் பின்வருமாறு கூறுகிறது: “திருச்சபையில் இணைந்திருந்தும் அன்பில் நிலைத்திராது. உள்ளத்தாலன்றி, உடலால் மட்டுமே அதன் மடியில் தவழ்கின்றவர்கள் மீட்புப் பெறுவதில்லை " (திருச்சபை, எண் 14). திருமுழுக்குப் பெற்றவர்கள் அன்புவாழ்வு வாழவில்லை என்றால், அவர்கள் பெயரளவில் மட்டுமே கிறிஸ்தவர்கள்; உண்மைக் கிறிஸ்தவர்கள் அல்ல; அத்தகையவர் மீட்படைவதில்லை,

மீட்பு என்பது கடவுளின் கொடை, ஆனால் அதே நேரத்தில் மீட்படைய உழைக்க வேண்டும். திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "அச்சத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் மீட்புக்காக உழைத்து வாருங்கள்" (பிலி 2:12). "உன்னையன்றி உன்னைப் படைத்த கடவுள் உன்னையன்றி உன்னை மீட்கமாட்டார் " (புனித அகுஸ்தின்). மீட்படைய நாம் என்ன செய்ய வேண்டும்? "இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்திச் செல்ல முயலுங்கள்" (லூக் 13:24) என்கிறார் கிறிஸ்து. இடுக்கமான வழி இயேசு சென்ற வழி, அதுதான் சிலுவையின் வழி. "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" (மத் 16:24).

இன்றைய இரண்டாம் வாசகம் கூறுகிறது: "ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார் " (எபி 12:6). எனவே, துன்பத்தைச் சாபமாகக் கருதாமல் கடவுளின் ஆசீர்வாதமாகக் கருத வேண்டும். கடவுள் நம்முடைய இம்மை நலன்களில் மட்டுமல்ல, மறுமை நலன்களிலும் அக்கறை கொண்டவர். எனவேதான் நிலையற்ற இவ்வுலக இன்பங்களைப் பற்றிக்கொண்டு நிலையான விண்ணக வாழ்வை நாம் இழந்து விடாமல் இருக்க, துன்பங்கள் வழியாக நம்மைத் தூய்மைப்படுத்தி விண்ணக வாழ்வுக்குத் தகுதியுள்ளவர்களாக மாற்றுகின்றார்.

| "காசு இருந்தால் ஆசைப்பட்ட எல்லாத்தையும் வாங்கலாம். ஆனால் அம்மாவை வாங்கமுடியுமா? " என்று திரைப்படக் கவிஞர் கேட்கிறார். ஆனால் இயேசுவோ, "காசு இருந்தால் ஆசைப்பட்ட எல்லாத்தையும் வாங்கலாம், ஆனால் ஆன்மாவை வாங்கமுடியுமா?” என்று கேட்கிறார். “மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கெண்டாலும் தம் வாழ்வையே (ஆன்மாவை) இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக்கொடுப்பார் ? " (மத் 16:26). "மனம் மாறாவிட்டால் (தவம் செய்யாவிட்டால்) அனைவரும் அழிவீர் கள்" (லூக் 13:3) என எச்சரிக்கின்றார் கிறிஸ்து. தவம் என்பது என்ன? காட்டுக்குச் சென்று தவம் செய்வது தவம் இல்லை . மாறாக, ஒருவர் தமக்கு வரும் துன்பங்களைத் தாங்கிக்கொள்வதும் மற்றவர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும்தான் தவம் என்கிறார் வள்ளுவர்,

உற்றநோய் தோன்றல் உயிர்க்கு உறுகண்செய்யாமை அற்றே தவத்திற்கு உரு (குறள் 261)

நமக்கு வரும் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளவேண்டும். சிலவேளைகளில் சில துன்பங்கள் நம் உடலில் தைத்த முள்ளைப் போன்று வருத்தலாம்; நாம் செருக்குறாதபடியும் கடவுளின் அருளில் நம்பிக்கை வைக்கும்படியும் கடவுள் அத்துன்பங்களை அனுமதிக்கிறார் என்பதைப் பவுல் அடிகளார் போன்று புரிந்துகொள்ள வேண்டும். மேலும் பிறர்க்கு நாம் முற்பகல் தீமை செய்தால், பிற்பகல் அதே தீமை நம்மைத் தாக்காமல் விடாது.

பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் நமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும் (குறள் 319)

எனவே, இடுக்கமான வாயில் வழியில் செல்வோம். தன்னலம் துறந்து பிறர் நலம் பேணுவோம். மீட்படைவோர் எவ்வளவுபேர்? என்று கேட்காது, நாம் மீட்படைவோமா? என்று கேட்போம். நம்மில் நற்செயலைத் தொடங்கிய கடவுள் அதை நிறைவு செய்வாராக (பிலி 1:6).

இடுக்கமான வழியே இறைவழி

நிகழ்வு
அரசர் ஒருவர் இருந்தார். அவர்க்கு இசையின்மீது அதிகமான ஈடுபாடு இருந்தது. எனவே அவர் தன்னுடைய நாட்டில் இருந்த ஒரு பிரபல இசைக்குழுவை அழைத்து, தான் கேட்கும்போதெல்லாம் அரண்மனைக்கு வந்து இசைக் கச்சேரி நடத்திவிட்டுச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

அரசர் அந்த இசைக்குழுவின் தலைவரைக் கூப்பிட்டுப் பேசிய செய்தி, எப்படியோ ஒரு செல்வந்தரின் மகனுக்குத் தெரியவந்தது. அவனுக்கு ஏதோ கொஞ்சம் புல்லாங்குழல் வாசிக்கத் தெரியும். அதனால் அவன் அந்த இசைக்குழுவின் தலைவரிடம் சென்று, தன்னை எப்படியாவது அந்த இசைக்குழுவில் சேர்த்துக்கொள்ளுமாறு கெஞ்சிக் கேட்டான். இசைக்குழுத் தலைவர் என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்தார். ‘சரியாக வாசிக்கத் தெரியாத இவனை இசைக்குழுவில் சேர்த்து இசைக்கச்சேரி நிகழ்த்தும்போது, இவன் ஏதாவது தவறுசெய்தால் அது ஒட்டுமொத்த இசைக்குழுவிற்கும் அவமானமாகப் போய்விடுமே... அதேநேரத்தில் இவனை இசைக்குழுவில் சேர்க்காவிட்டால், செல்வம் படைத்த இவனுடைய தந்தை நம்மை ஏதாவது செய்துவிடுவானே... என்ன செய்வது?” என்று புரியாமல் தவித்தார். பின்னார் ஏதோ சிந்தனை வயப்பட்டவராய் அவனிடம், “சரி, நாம் இசைக் கச்சேரி நிகழ்த்தும்போது இரண்டாம் வரிசையில் இருந்துகொண்டு, புல்லாங்குழல் வாசிப்பது போல், சப்தம் எழுப்பாமல் விரல்களை மட்டும் அசை. அரசரும் உன்னைப் பார்த்த மாதிரி இருக்கும். நீயும் புல்லாங்குழல் வாசித்த மாதிரி இருக்கும். சரியா?” என்றான். அவனும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு இசைக்கச்சேரி நிகழ்த்தப்படும் நாளுக்காகக் காத்திருந்தான்.

குறிப்பிட்ட நாளும் வந்தது. இசைக்கச்சேரி நிகழவிருந்த அரங்கத்திற்கு முன்னம் அரசர் அமர்ந்திருக்க, இசைக்கசேரி தொடங்கியது. எல்லா இசைக்கலைஞர்களும் உண்மையாக வாசிக்க, சரியாக வாசிக்கத் தெரியாத அந்த இளைஞன் ஒரு கைதேர்ந்த கலைஞனைப் போன்று புல்லாங்குழலை எடுத்து வாயில் வைத்து, தாளத்திற்குத் தக்க விரல்களை அங்குமிங்கும் ஆடினான். இப்படியே இரண்டு ஆண்டுகட்கும் மேல் நடந்தது. இதற்கிடையில் இசைக்குழுவைத் தலைமை தாங்கி வழிநடத்தியவர்க்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, அவருடைய மகன் இசைக்குழுவிற்குத் தலைமை தாங்கும் நிலைமை ஏற்பட்டது. அவன் இசை குழுவிற்குத் தலைமை தாங்கியதும், ‘ஒவ்வோர் இசைக் இசைஞரும் இசைக்குழுவில் இருப்பதற்குத் தகுதியானவர்தானா...? ஒருவேளை யாரும் தகுதியில்லாமல் இருந்தால், அவர்களை இசைக்குழுவை விட்டு வெளியே அனுப்பிவிட்டு, புதிய இசைக் கலைஞர்களை உள்ளே கொண்டு வரலாம்’ என்று முடிவுசெய்தான். அவன் இப்படியொரு முடிவெடுத்ததும் சரியாகப் புல்லாங்குழல் வாசிக்கத் தெரியாத அந்த இளைஞனுக்குத் தூக்கி வாரிப்போட்டது.

அவன் தனக்கு ‘உடம்பு சரியில்லை... சரியாக வாசிக்க முடியாது’ என்றெல்லாம் சொல்லிப் பார்த்தான். இதைத் தொடர்ந்து மருத்துவர் அங்கு வரவழைக்கப்பட்டார். அவர் அந்த இளைஞனைச் சோதித்துப் பார்த்தபோது, அவன் நன்றாக இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவன் இசைக்குழுவை விட்டு வெளியே அனுப்பப்பட்டான். இந்த நிகழ்வில் வரும் இளைஞரைப் போன்றுதான் பலர் பெயர்க்குக் கிறிஸ்தவார்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் எல்லாரையும் போல் அகலமான பாதையில் சென்றுகொண்டிருக்கின்றார்கள். இப்படி அகன்ற பாதையில் அல்ல, இடுக்கமான பாதையில் செல்வோர்தான் மீட்படைய முடியும் என்றொரு செய்தியை இன்றைய இரைவார்த்தை எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

மீட்புப் பெறுவது சிலரா? பலரா?
இயேசு எருசலேம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில், அவரிடம் வருகின்ற ஒருவர், “ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?” என்று கேட்கின்றார். இயேசுவிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்டவர் நிச்சயம் யூதராகத்தான் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் அவர் தன்னை/ தன் இனத்தை மையப்படுத்தி அப்படியொரு கேள்வியைக் கேட்கின்றார். இயேசு அந்த மனிதர் கேட்ட கேள்விக்கு, ‘மீட்புப் பெறுவது சிலர் மட்டும்தான்... அல்லது எல்லாரும்தான்’ என்று பதில் சொல்லிக்கொண்டிருக்காமல் (இத்தனைக்கும் அனைவரும் மீட்புப் பெறுவது கடவுளின் திருவுளமாக இருந்தாலும் (1 திமொத் 2:14) ஒருவர் மீட்புப் பெற, என்ன செய்யவேண்டும் என்று பதில் சொல்கின்றார். அதுதான், ‘இடுக்கமான வாயில் வழியாக வருந்தி முயலுங்கள்’ என்பதாகும். இயேசு சொல்கின்ற இடுக்கமான வாயில் என்ன? அந்த வாயில் வழியாக நுழைய ஒருவர் என்ன செய்வதென்று என்று சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு வாழவேண்டும்
இயேசு சொல்கின்ற இடுக்கமான வழி எதுவெனச் சிந்தித்துப் பார்க்கையில், நமக்குக் கிடைக்கின்ற முதன்மையான பதில், இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து வாழ்வதாகும். இன்றைய நற்செய்தியின் இரண்டாம் பகுதியில், கதவு அடைக்கப்பட்ட பின், “வீட்டு உரிமையாளரே! எழுந்து கதவைத் திறந்துவிடும்” என்று சொல்பவர்களிடம் அவர், “நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது” என்கின்றார்.

இவ்வுவமையில் கதவு அடைக்கப்பட்டபின் கதவைத் தட்டுகின்றவர்கள் தாமதமாக வந்தவர்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும், இயேசு மூன்றாண்டு காலம் மக்கள் மத்தியில் பல்வேறு அருமடையாளங்களையும் வல்ல செயல்களைச் செய்தபோதும், கொராசின் நகரைப் போன்று, பெத்சாய்தா நகரைப் போன்று, கப்பர்நாகும் நகரைப் போன்று அவர்மீது நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தார்கள் (லூக் 10: 13-15) அதனால்தான் அவர்கள் இறைவன் அளித்த விருந்தில் (லூக் 13: 28) – மீட்பில் கலந்துகொள்ள முடியாமல் போனார்கள். உண்மையில் ஒருவர் இயேசுவின் விருந்தில் கலந்துகொள்ளவும் அவர் அளிக்கும் மீட்பினைப் பெற்றுக்கொள்ளவும் வேண்டும் என்றால், பவுல் சொல்வது போல் ‘இயேசுவே ஆண்டவர்’ என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என்று நம்பவேண்டும்” (உரோ 10:9). தாழ்ச்சியோடு வாழவேண்டும்

இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து வாழ்வது இடுக்கமான வாயில் வழியாக நுழைய ஒருவர் எடுத்துவைக்கும் முதல் அடி என்றால், தாழ்ச்சியோடு வாழ்வது ஒருவர் எடுத்து வைக்கும் இரண்டாவது மற்றும் இறுதி அடியாகும். இன்றைய நற்செய்தியின் இறுதியில் இயேசு, “கடைசியானோர் பலர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்” என்கின்றார். இவ்வார்த்தைகளை இயேசு சொல்கின்ற, “தம்மைத் தாமே உயர்த்துகிறவர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்” (லூக் 14:11) என்ற வார்த்தைகளோடு இணைத்துப் பார்ப்பது நல்லது. யூதர்கள் தங்களை மற்ற எல்லாரையும் விட உயர்ந்தவர்களாக, தங்கட்குத்தான் மீட்பு உண்டு என்ற ஆணவத்தில் இருந்தார்கள். அதுகூடப் பரவாயில்லை. மற்றவர்களை அவர்கள் பாவிகளாகவும் (லூக் 18: 11- 14) மீட்புப் பெறத் தகுதியற்றவர்கள் என்றும் நினைத்தார்கள். இதனால் உயர்ந்தவர்கள் என்று காட்டிக் கொண்ட அவர்களிடமிருந்து இறையாட்சி – மீட்பு – பறிக்கப்பட்டடு, மனத்தாழ்ச்சியோடு வாழ்ந்த புறவினத்து மக்கட்குக் கொடுக்கப்பட்டது. ஆகையால், ஒருவர் மீட்புப்பெற தாழ்ச்சியும் அதோடு இறைநம்பிக்கையையும் தம்முடைய இரு கண்களைப் போன்று முக்கியமானவையாக உணர்ந்து வாழவேண்டும்.

சிந்தனை
‘வாழ்க்கையில் முன்னேற மின்தூக்கி (Elevator) எதுவும் கிடையாது. ஒவ்வோர் அடியாகத்தான் எடுத்து வைத்து முன்னேறவேண்டும்.’ அதுபோன்று நாம் மீட்புப் பெற அகன்ற பாதையில் சென்றுகொண்டிருக்கக்கூடாது. மாறாக, இடுக்கமான குறுகலான வழியில்தான் செல்லவேண்டும். ஆகையால், நாம் இறைவனுக்குகந்த இடுக்கமான வழியில் நுழைவோம். அதன்வழியாக இறைவன் தரும் மீட்பைக் கொடையாகப் பெறுவோம்.

ser

அனைவரும் வருக!

கடந்த வாரம் தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிக்கை விடப்பட்டது. மாணவர்கள் தங்களுடைய கைகளில் கட்டியிருக்கும் 'சாதிக் கயிற்றை' அவிழ்க்க வேண்டும். அதாவது, ஒவ்வொரு சாதியும் தன் கொடியின் சிறிய உருவமாக கயிறு ஒன்றை உருவாக்கி இருக்கிறது. அதைக் கட்டிக்கொள்வது, அல்லது பட்டையாக அணிந்துகொள்வது இன்றைய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடைNயு டிரெண்டாக இருக்கிறது. இந்த அறிக்கை வந்தவுடன், சிலர், 'அப்படி என்றால் பிராமண மாணவர்கள் தங்களின் தோளில் அணிந்திருக்கும் பூணூலையும் அவிழ்க்க வேண்டுமே. அவர்கள் தயாரா?' என்று கேள்வி எழுப்பினர். சாதீயத்தைக் கொண்டுவந்து அதைத் தக்க வைத்துக்கொள்ளத் தந்திரம் செய்தவர்கள் அணிவது பூணூலே. இந்தக் கேள்வி வந்தவுடன், பள்ளிக்கல்வித்துறை தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கிக் கொண்டது. 'நான் கட்டவும் சொல்லல, கட்ட வேண்டாம்னும் சொல்லல!' என்பதுபோல அறிக்கை விட்டார் அமைச்சர்.

ஒருவர் அணிந்திருக்கும் பூணூல் அல்லது கயிறு அவருக்கு பெரிய இடத்தைத் தருகிறதா? ஒருவர் செய்யும் சமயச் சடங்கு அவருக்கு மீட்பைக் கொண்டுவருமா? ஒருவர் செய்யும் செபமாலையும், ஒப்புக்கொடுக்கும் திருப்பலியும், மேற்கொள்ளும் திருப்பயணமும் அவருக்கு நலம் தருமா? மீட்பு அல்லது நலம் என்பது ஆட்டோமேடிக்காக நடக்கும் ஒரு நிகழ்வா?

'இல்லை' என்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

மீட்பு அல்லது கடவுளின் தெரிவு என்பது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல என்றும், அந்த இனத்தில் பிறந்தால், வளர்ந்தால், இறந்தால் மட்டும் ஒருவர் 'ஆட்டோமேடிக்காக' மீட்பு பெற்றுவிடுவதில்லை என்றும், மீட்பு என்னும் வீட்டின் கதவுகள் அனைவருக்கும் திறந்துவிடப்பட்டுள்ளன என்றும், எனவே, 'அனைவரும் வருக' என்றும் அழைப்பு விடுக்கிறது இன்றைய ஞாயிறு

.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 66:18-21), இறைவாக்கினர் எசாயா, பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வந்த இஸ்ரயேல் மக்களிடம் உரையாடுகிறார். அழிந்துபோன தங்கள் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இவர்கள், உடைந்து போன ஆலயத்தைக் கட்டி எழுப்புவதைத் தங்களுடைய முதன்மையான கடமையாகக் கொண்டிருந்தனர். அவர்களுடைய தோற்றம் மற்றும் வரலாற்றின் பின்புலத்தில் தங்களையே தனித்தன்மை வாய்ந்த சமூகமாகக் கருதினர் இஸ்ரயேல் மக்கள். தங்களுடைய தனித்தன்மையைத் தக்கவைக்கவும், தங்களை கடவுள் முன் உயர்த்திக் காட்டவும் ஆலயம் கட்ட விரும்பினர். இவர்களின் இந்த விருப்பத்தைக் கேள்விக்கு உட்படுத்துகிறார் எசாயா. ஏனெனில், 'பிறஇனத்தார், பிறமொழியினா அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன். அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள்' என்கிறார் ஆண்டவர். சீனாய் மலையில் ஆண்டவரின் மாட்சி தங்களுக்கு மட்டுமே வெளிப்படுத்தப்பட்டது என்று எண்ணிப் பெருமைப்பட்டர்வளுக்கு ஆண்டவரின் வார்த்தைகள் நெருடலாகவே இருந்திருக்கும். மேலும், அவ்வாறு மாட்சியைக் கண்ட மக்கள் அதே மாட்சியை மற்றவர்களுக்கு அறிவித்து மற்றவர்களையும் தங்களோடு அழைத்து வருவார்கள் என்றும், அவர்களுள் சிலர் குருக்களாகவும் லேவியர்களாகவும் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறுகிறார் ஆண்டவர். ஆக, தங்களுக்கு வெளிப்படுத்த மாட்சி பிறருக்கு வெளிப்படுத்தப்படுவதையும், தங்கள் லேவி இனத்தில் மட்டுமே குருக்கள், லேவியர்கள் வருவார்கள் என்ற நிலை மாறி, எல்லாரும் குருக்களாகவும் லேவியராகவும் ஏற்படுத்துப்படுவார்கள் என்பதையும் இப்போது எசாயா மக்களுக்கு அறிவிக்கின்றார். இப்படிச் சொல்வதன் வழியாக, இஸ்ரயேல் மக்கள் இவ்வளவு நாள்கள் பிடித்துக் கொண்டிருந்த பெருமை, செருக்கு, மற்றும் மேட்டிமை உணர்வைக் களைய அழைப்பு விடுப்பதோடு, மற்ற மக்களையும் கடவுள் அணைத்துக்கொள்கிறார் என்ற உள்ளடக்கிய பரந்த உணர்வைப் பெற்றுக்கொள்ளவும் அழைப்பு விடுக்கின்றார். மேலும், இறைவனின் இத்திட்டத்திற்கு அவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கின்றார்.

ஆக, இஸ்ரயேல் இனத்திற்கு மட்டுமே மீட்பு உண்டு, கடவுளின் உடனிருப்பு உண்டு என்று எண்ணியவர்களின் எண்ணத்தை அழிக்கும் ஆண்டவராகிய கடவுள், மீட்பின் கதவுகளை பிறஇனத்தாருக்கும் திறந்து விடுகின்றார். மேலும், ஒரு இனத்தில் பிறத்தல் மட்டுமே மேன்மையைக் கொண்டுவராது, கடவுளின் திட்டத்தால் யாரும் மேன்மை பெறலாம் என்றும் முன்மொழிகின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபி 12:5-7,11-13), எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், தன்னுடைய திருச்சபையில் மக்கள் துன்பத்தைப் பற்றிக் கொண்டிருந்த புரிதலைக் கேள்விக்குட்படுத்துகிறார். சிலர் கிறிஸ்தவர்களாக மாறினால் எந்தத் துன்பமும் இல்லாமல் இருக்கலாம் என்று எண்ணினர். இன்னும் சிலர் தங்களுடைய துன்பங்கள் தங்களுடைய பழைய பழைய பாவங்களுக்கான தண்டனை என்று எண்ணினர். மேலும் சிலர் கடவுள் அவர்களைக் கண்டுகொள்வதில்லை என்று எண்ணினர்.

இவர்களின் இத்தவறான புரிதல்களுக்குச் சவால்விடுகிறார் ஆசிரியர். ஆசிரியைப் பொறுத்தவரையில் துன்பங்களும் வலியும் வறுமையும் பயிற்சிக்கான தளங்களாக அமைகின்றன. நம்பிக்கையில் காலப் போக்கில் மனம் தளர்ந்து போன இம்மக்களுக்கு எழுதும் ஆசிரியர், 'திருத்தப்படுவதற்காகத் துன்பங்களைத் தாங்கிக்கொள்ளுங்கள். கடவுள் உங்களைத் தம் பிள்ளைகளாக நடத்துகிறார்' என்கிறார். திருத்தப்படுவது அல்லது ஒழுக்கமாய் இருப்பது என்பது விளையாட்டு வீரர் அதிகமாகப் பெற்றிருக்க வேண்டிய ஒரு பண்பு. அவருடைய 'கைகள் தளர்ந்து போகும்போதும்,' 'முழங்கால்கள் தள்ளாடும்போதும்' அவரால் விளையாட முடியாது. இவ்விரண்டையும் சரி செய்ய அவர் தானே முயற்சிகள் எடுத்து அவற்றை நிறைவேற்ற வேண்டும்.

ஆக, கிறிஸ்தவர்களும் தாங்கள் ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவ நம்பிக்கையால் தாங்கள் அனைவரும் மீட்கப்பட்டுவிட்டதாக எண்ணாமல், தங்களுடைய துன்பங்களை பிள்ளைக்குரிய பக்குவத்துடன் ஏற்றுக்கொள்வதன் வழியாகவும், ஒழுக்கம் மற்றும் பயிற்சியின் வழியாகவும் தங்களையே தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், இத்தகைய துன்பங்களை ஏற்கும் அனைவருமே இறைவனைத் தந்தையாக ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் மறைமுகமாக அறிவுறுத்துகிறார் ஆசிரியர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 13:22-30) இயேசு எருசலேம் நோக்கிப் பயணம் செய்கிறார். வழியில் அவரைச் சந்திக்கின்ற ஒருவர், 'மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?' என்று கேட்கிறார். கேள்வி கேட்டவருடைய எண்ணம் யூதர்களுக்கு மட்டும் மீட்பு என்பதாக இருக்கிறது. இயேசுவின் சமகாலத்து யூதர்கள் தாங்கள் ஆபிரகாம் வழி வந்தவர்கள் என்பதாலும், தாங்கள் கடவுளின் மக்கள் என்பதாலும் தங்களுக்கு மீட்பு தானாகவேக் கிடைத்துவிடும் என்று எண்ணினர். ஒருவர் ஒரு குழுமம் அல்லது சமூகத்தைச் சார்ந்தவர் என்பதற்காக அவருக்கு மீட்பு ஆட்டோமேடிக்காக கிடைத்துவிடும் என்ற எண்ணத்திற்குச் சவால் விடுவதாக இருக்கின்றன இயேசுவின் வார்த்தைகள். விளையாட்டு வீரருக்கு உரிய பழக்கம் ஒன்றை வலியுறுத்துவது போல, 'வருந்தி முயலுங்கள்' என்கிறார். மேலும், 'இடுக்கமான வாயில் வழியே நுழையுங்கள்' என்று அறிவுறுத்துவதோடு, 'வாயில் அடைக்கப்படலாம்' என எச்சரிக்கவும் செய்கின்றார். உள்ளே நுழைய முடியாமற்போவோர், 'நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம், நீர் எங்கள் வீதிகளில் போதித்தீர்' என்ற இயேசுவோடு தங்களை ஒன்றிணைத்துக்கொள்ள முயல்கின்றனர். ஆனால், 'நாங்கள் உம்மை நம்பினோம், உம் வார்த்தைக்குச் செவிமடுத்தோம்' என்றோ சொல்லவில்லை. இயேசுவும் ஒரு யூதர் என்பதால் யூதர் எல்லாருக்கும் அவருடைய மீட்பு கிடைக்கும் எனப் புரிந்துகொண்டனர். இவர்களே தங்களை 'முதன்மையானவர்கள்' என எண்ணிக்கொண்டவர்கள். ஆனால், இவர்களால் கடைசியானவர்கள் என்று எண்ணப்பட்ட புறவினத்தார் இயேசுவை ஆண்டவராகவும் மீட்பராகவும் ஏற்றுக்கொள்ளவும், நம்பவும் செய்தனர்.

ஆக, மேலோட்டமான அடையாளங்களைக் கொண்டிருப்பதால் மட்டும் ஒருவருக்கு மீட்பு கிடைத்துவிடும் என்ற நம் எண்ணத்திற்குச் சவால் விடுவதாக இருக்கின்றது இன்றைய நற்செய்தி வாசகம். மேலும், இடுக்கமான வாயில் வழியே வருந்தி நுழையும் அனைவருக்கும் மீட்பு என்று மீட்பின் கதவுகளைப் புறவினத்தாருக்கும், கடைசியானவர்களுக்கும் திறந்து வைக்கிறார் இயேசு.

இன்று மீட்பு, கடவுள், மறுவாழ்வு, நிலைவாழ்வு பற்றிய என் புரிதல்கள் எவை? நானும் தவறான புரிதல்கள் கொண்டிருக்கின்றேனா? நம்முடைய பெயர், குடும்பம், பின்புலம், சமயம், சாதி, படிப்பு, வேலை போன்ற அடையாளங்கள்கூட நம்மை மேட்டிமை உணர்வுகொள்ளச் செய்து அடுத்தவர்களை இகழ்ச்சியாகப் பார்க்கும் எண்ணத்தை நம்மில் விதைக்கலாம். இவற்றிலிருந்து விடுபடுவது எப்போது? 'அனைவரும் வருக' என்று அரவணைத்துக்கொள்ளும் பக்குவம் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?

1. எல்லாம் அவரின் திருவுளம்
'ஆண்டவருக்குக் கோவில் கட்ட வேண்டும்' என்பது மக்களின் எண்ணமாக இருக்கிறது. இது நல்ல எண்ணமே. ஆனால், கடவுளின் திருவுளம் வேறுமாதிரியாக இருக்கிறது. இவர்கள் வெறும் ஆலயத்தைப் பார்க்க, கடவுளோ ஒட்டுமொத்த மக்களினத்தைப் பார்க்கிறார். அவரின் திருவுளமே நடந்தேறுகிறது. 'நாம்தான் அரசர்கள், நாம்தான் மறைப்பணியாளர்கள், நாம்தான் குருக்கள்' என்ற எண்ணத்தைப் புரட்டிப் போடுகின்றார் கடவுள். தான் விரும்பும் அரசர்களை, மறைப்பணியாளர்களை, குருக்களை ஏற்படுத்துகின்றார். ஆக, எல்லாவற்றிலும் அவரின் திருவுளமே நடந்தேறும் என்று நினைப்பது சால்பு.

2. தளர்ந்துபோன கைகள், தள்ளாடும் முழங்கால்கள்
கைகளின் இயல்பு தளர்வது. கால்களின் இயல்பு தள்ளாடுவது. வலுவின்மையைக் கொண்டாட வேண்டும். என் அடையாளம் எனக்குத் தருகின்ற மேட்டிமை உணர்வை, தனித்தன்மையை விடுத்து நான் அனுபவிக்கின்ற வலுவின்மையை ஏற்று, அதன் வழியாக நான் அடுத்தவரோடு என்னை இணைத்துக்கொள்ள வேண்டும். 'நான் அருள்பணியாளர். நான் செபம் செய்தால் கடவுள் வருவார். நான் கேட்பது எல்லாம் நடக்கும்' என்று நான் மேட்டிமை உணர்வு கொண்டிருப்பதற்குப் பதிலாக, என்னில் எழும் சோர்வு, நம்பிக்கையின்மை, விரக்தி, தனிமை போன்ற நேரங்களில் நான், 'நானும் மற்றவர்களில் ஒருவன்' என்று என்னை மற்றவரோடு இணைத்துப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால், நான் அனைவரையும் அணைத்துக்கொள்ள முடியும்.

3. இடுக்கமான வாயில் வழியே நுழையுங்கள்
இடுக்கமான வாயில் என்பது நான் அனுபவிக்கும் துன்பம். துன்பம் ஏற்றலே இடுக்கமான வாயில் வழியே நுழைதல். நன்றாக தூக்கம் வருகின்ற நேரத்தில் நான் எழுந்து வகுப்பிற்குச் செல்ல வேண்டும் என்றால் அதுதான் நான் நுழைகின்ற இடுக்கமான வாயில். எல்லாரும் நேர்மையற்று நடக்கும் இடத்தில் நான் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பது இடுக்கமான வாயில். அகலமான வாயிலில் அனைவரும் நுழைவர். அங்கே யாருக்கும் யாரையும் பற்றிக் கவலை இல்லை. ஆனால் இடுக்கமான வாயிலில் நுழைபவர் தன்னை முழுமையாக அறிந்திருக்க வேண்டும்.

இறுதியாக,
'நான், எனது, எனக்கு' என்று எண்ணம் விடுத்து, 'நாம், நமது, நமக்கு' என்று குழு இணைவதையும் விடுத்து, வாழ்வில் எதுவும் ஆட்டோமேடிக்காக நிகழ்வது அல்ல என்பதை அறிந்து, 'அனைவரும் வருக' என்றழைக்கும் இறைநோக்கி ஒருவர் மற்றவரோடு கரம் கோர்த்து நடத்தல் சிறப்பு.

ser

sunday homily


A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com