மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலம் பத்தொன்பதாம் ஞாயிறு
மூன்றாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
சாலமோனின் ஞானம் 18:6-9 | எபிரேயர். 11:1-8-19 | லூக்கா 12:32-48

ஒரு கிராமத்தில் ஒரு நாட்டு வைத்தியருக்கு மருந்து தயாரிக்கப் பச்சிலை தேவைப்பட்டது. அந்த இலை இரு கற்பாறையின் இடுக்கில் பாதாளத்தில் முளைத்திருந்தது. அந்த இடத்திற்கு யாராலும் செல்ல முடியாத நிலை. அந்த நாட்டு வைத்தியர் தனது 5 வயது மகனை அழைத்துக் கொண்டு மலையின் மீது ஏறினார். தான் கொண்டு வந்த கயிற்றால் மகனின் இடுப்பில் கட்டி அவனை கீழே இறக்கினார். அந்த மகன் இலைகளைப் பறித்துக்கொண்டு மகிழ்ச்சியோடு தந்தையிடம் திரும்பினான். இதைப் பார்த்த மற்றவர்கள் அந்தச் சிறுவனைப் பார்த்து உனக்கு பயமே இல்லையா? என்று கேட்டார்கள். அதற்கு அந்தச் சிறுவன், என் தந்தை என்னைக் கீழே விடமாட்டார் என்ற நம்பிக்கை இருந்ததால் எனக்கு எந்த பயமோ, அச்சமோ ஏற்படவில்லை என்றான்.


1. எங்கே நம்பிக்கை உண்டோ , அங்கே அச்சமோ, பயமோ, அதிர்ச்சியோ, குழப்பமோ இருக்காது. இன்றைய முதல் வாசகத்திலே கடவுளின் வாக்குறுதிகளின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் கடவுளின் முன்னிலையில் பெருமைப்படுத்தப்படுவார்கள் என்று சாலமோனின் ஞானம் கூறுகின்றது. மனித வாழ்வு சிறக்க நம்பிக்கை மிக அவசியம். குழந்தை பிறக்கும்போது நமக்கு மகன் பிறந்துள்ளான் என்ற எதிர்பார்ப்போடு மகிழ்ச்சியடைகின்றனர் பெற்றோர்.

படிக்கின்றவர் கடினமாக உழைத்து நல்ல மதிப்பெண்கள் பெற்றால் நமக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் எதிர்பார்ப்பில் உழைக்கின்றனர்.

நாளை நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது நம் மீதும், பிறர் மீதும், கடவுள் மீதும் நம்பிக்கைக் கொண்டு நம்மைச் சிறப்புடன் வாழ வைக்கிறது. இந்த நம்பிக்கையைப் பற்றிய அழகானதொரு மறையுரையை எபிரேயருக்கு எழுதிய கடிதத்தில் (2வது வாசகம்) அதன் ஆசிரியர் தருகிறார். நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்ற உறுதி. கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை (எபி. 11:1). -

பழைய ஏற்பாடு :-
ஆபேலை நேர்மையாளராக மாற்றியதே நம்பிக்கைதான் (எபி. 11:4)
நோவாவை வெள்ளத்திலிருந்து காப்பாற்றியதும் நம்பிக்கை தான் (எபி. 11:7)
முதிர்ந்த வயதில் இருந்த ஆபிரகாமுக்கு ஈசாக்கு என்ற மகனைத் தந்ததும் நம்பிக்கைதான் (எபி. 11:11)

புதிய ஏற்பாட்டிலே
நோயாளிகள் நலம் பெற்றது நம்பிக்கையால்தான் (மத். 9:27-31)
பாவிகள் மன்னிப்பு பெற்றதும் நம்பிக்கையால்தான் (லூக். 7:36 - 50)
இறந்தவர்கள் உயிர் பெற்றதும் நம்பிக்கையால்தான் (யோவா. 11:1-44)
இன்றைய காலக் கட்டத்தில் உலக அரங்கில், திருச்சபையின் அமைப்பு ரீதியைப் பார்க்கின்றபோது நம்பிக்கையற்ற நிலை பலரது மனதில் எழலாம். ஆனால் இந்த அவல நிலை மாறத்தான் எங்கிருந்தோ ஒரு ஒளி நம்மீது வீசுகிறது. அந்த ஒளியின் நடுவே நம்பிக்கை நட்சத்திரமாக இயேசு தோன்றுகிறார். சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம். உங்கள் பரம தந்தையின் மீதும் நம்பிக்கை வையுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள் (யோவா. 14:1-2). அவர் உங்களுக்கு நீதியின் ஆட்சியை, அமைதியின் ஆட்சியை, மகிழ்ச்சியின் ஆட்சியைத் திட்டமிட்டிருக்கிறார் (உரோ . 14:17)

உங்கள் உணர்வுகளில் நம்பிக்கை எதிரொலிக்கட்டும்
உங்கள் எண்ணங்களில் நம்பிக்கை நடனமாடட்டும்
உங்கள் சொற்களில் நம்பிக்கைக் கற்கண்டாகட்டும்
உங்கள் செயல்களில் நம்பிக்கை நங்கூரமாகட்டும்
உங்கள் வாழ்க்கையில் நம்பிக்கை மலரட்டும்
ஒடுக்கப்பட்டோருக்கு ஆண்டவரே அடைக்கலம் (தி.பா. 9:9)
அழிந்துபோகும் இந்த உலக செல்வங்களில் நாம் மதி மயங்கி வாழாதபடி விழிப்பாய் இருக்கும்படி ஆண்டவர் இன்றைய நற்செய்தியிலே அறைகூவல் விடுக்கிறார். சோதனைக்கு உட்படாதபடி விழிப்பாய் இருங்கள்.

ser

நம்பிக்கை என்றால் என்ன?

ஒரு கிராமத்திலே ஒரு மருத்துவர். அவருக்கு ஒரு பச்சிலை தேவைப்பட்டது! அந்த இலை இரண்டு மலைகளுக்கு நடுவே, பாதாளத்தில் ஒரு கற்பாறையின் இடுக்கில் முளைத்திருந்தது! அந்த இடத்திற்கு யாராலும் செல்ல முடியாது.
அந்த மருத்துவர் தனது ஐந்து வயது மகனை அழைத்துக்கொண்டு மலையின் மீது ஏறினார். தான் கொண்டுசென்ற கயிற்றை மகனின் இடுப்பில் கட்டி, அவனைக் கீழே இறக்கினார். அந்த மகன் இலையைப் பறித்துக்கொண்டு மகிழ்ச்சியோடு தந்தையிடம் திரும்பினான்.

இதைப் பார்த்தவர்கள் அச்சிறுவனைப் பார்த்து : உனக்குப் பயமே இல்லையா? என்றார்கள். அதற்கு அந்த மகன், என் தந்தை என்னைக் கீழே விட்டுவிடமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்றான்.

எங்கே நம்பிக்கை இருக்கின்றதோ அங்கே அச்சமோ, அதிர்ச்சியோ, நடுக்கமோ, தயக்கமோ, குழப்பமோ இருக்காது! இன்றைய முதல் வாசகத்தில், கடவுளின் வாக்குறுதிகளின் மீது நம்பிக்கை வைத்திருந்தவர்கள் கடவுளின் முன்னிலையில் பெருமைப்படுத்தப்பட்டார்கள் என்று சாலமோனின் ஞானம் கூறுகின்றது (சாஞா 18:6-9). நம்பிக்கை என்றால் என்ன? நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி : கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை (எபி 11:1).

பழைய ஏற்பாட்டிலே,
ஆபேலை நேர்மையானவராக மாற்றியது நம்பிக்கைதான் (எபி 11:4).
நோவாவை வெள்ளத்திலிருந்து காப்பாற்றியது நம்பிக்கைதான் (எபி 11:7).
ஆபிரகாமுக்கு ஈசாக்கைத் தந்தது நம்பிக்கைதான் (எபி 11:11).

புதிய ஏற்பாட்டிலே,
நோயாளிகள் உடல் நலம் பெற்றது நம்பிக்கையால்தான் (மத் 9:27-31)
பாவிகள் பாவமன்னிப்புப் பெற்றது நம்பிக்கையால்தான் (லூக் 7:36-50)
இறந்தவர்கள் உயிர் பெற்றது நம்பிக்கையால்தான் (யோவா 11:11 - 44).
ஆம். நம்பிக்கையால் ஆகாதது ஒன்றுமில்லை !

நாம் எப்படிப்பட்ட நூற்றாண்டிலே வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்? ஒரு கல்லூரி ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து: 2050 - இல் உலகம் எப்படியிருக்கும்? என்றார். மானாவன் ஒருவன் எழுந்து, 2050 - இல் உலகத்தில் எந்த மனிதனும் இருக்கமாட்டான். மூன்றாவது உலகப்போரில் எல்லாரும் இறந்து போவார்கள் என்றான். நம்பிக்கை அற்ற நிலை!

இந்த நிலை மாற வழியே இல்லையா? ஏன் இல்லை! எங்கிருந்தோ ஓர் ஒளி நம்மீது வீசுகின்றது. அந்த ஒளியின் நடுவே நம்பிக்கை நட்சத்திரமாம் இயேசு தோன்றுகின்றார். அவர் நம்மோடு, இன்றைய நற்செய்தியின் வழியாகப் பேசுகின்றார்: சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்சவேண்டாம்! உங்கள் பரம தந்தையின் மீது நம்பிக்கை வையுங்கள். அவர் உங்களுக்கு அவரது ஆட்சியை, நீதியின் ஆட்சியை, அமைதியின் ஆட்சியை, மகிழ்ச்சியின் ஆட்சியை (உரோ 14:17) வழங்கத் திட்டமிட்டிருக்கின்றார்! அவருடைய திட்டம் நிறைவேறும் நாள்வரை அவநம்பிக்கைக்கு இடம் கொடுக்காமல் பொறுமையாகக் காத்திருங்கள். நம்பிக்கையை ஆடையாக அணிந்துகொள்ளுங்கள்.


உங்கள் உணர்வுகளில் நம்பிக்கை எதிரொலிக்கட்டும்!
உங்கள் எண்ணங்களில் நம்பிக்கை நடனமாடட்டும்!
உங்கள் சொற்களில் நம்பிக்கை கற்கண்டாகட்டும்!
உங்கள் செயல்களில் நம்பிக்கை நங்கூரமாகட்டும்!
உங்கள் வாழ்க்கையில் நம்பிக்கை நடுநாயகமாகட்டும்!

இறையாட்சி உங்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நீங்கள் முன்னேறினால் அனைத்துப் பேறுகளும் உங்களதே!

மேலும் அறிவோம்:
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை (குறள் 9).

பொருள் : இயங்காத உடல், பேசாத வாய், நுகராத மூக்கு, காணாத கண், கேளாத செவி ஆகியவற்றால் பயன் எதுவும் விளையாது. அதுபோன்று எண்ணரிய பண்புகளின் இருப்பிடமாகத் திகழும் இறைவனின் திருவடியை வணங்கி நடவாதவரின் தலைகளின் நிலையும் பயன் அற்றவை ஆகும்.

ஓர் எருமைமாடு ரோட்டின் நடுவிலே படுத்திருந்தது. ஒருவர் அதைத் தடியால் அடித்து எழுந்திருக்கும்படி கேட்டதற்கு அந்த எருமைமாடு கூறியது: "நான் எழுந்திருக்கமாட்டேன்: ஏனென்றால் நான் நீதிமன்றத்தில் 'இடைக் காலத்தடை' (Stay Order) வாங்கியிருக்கின்றேன்" என்றதாம். இக்காலத்தில் எருமைமாடுகூட நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை வாங்க முடியும்.

நீதிமன்றம் ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கும்போது, அவர் அத்தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து "இடைக்காலத்தடை' வாங்க முடியும். ஆனால் சாவு வரும்போது அதற்கு 'இடைக்காலத் தடை வாங்க முடியுமா?

ஒரு சிறுவனிடம், "உனக்குச் சாகப் பயமில்லையா?" என்று நான் கேட்டதற்கு அவன் அமைதியாக, "நேரம் வந்தால் போகவேண்டியதுதான்" என்று பதில் சொன்னான். எல்லாவற்றிற்கும் ஒரு நேரமும் காலமும் உண்டு என்கிறார் சபை உரையாளர்; "பிறப்புக்கு ஒரு காலம். இறப்புக்கு ஒரு காலம்" (சஉ 31). என்று நாம் இவ்வுலகில் பிறந்தோமோ அன்றே நமது சாவின் நேரம் குறிக்கப்பட்டுவிட்டது. அந்த நேரத்தை நாம் அறியோம். எனவேதான் இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து கூறுகிறார்: "நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்" (லூக், 12:40),

நாம் எப்பொழுதும் விழிப்பாய் இருந்து ஆயத்தமாய் இருக்க, வேண்டும். அதாவது, நாம் நம்பிக்கைக்குரிய பணியாளர்களைப்போல், கடவுள் நம்மிடம் ஒப்படைத்துள்ள பணியை நிறைவேற்ற வேண்டும். இதற்கு கிறிஸ்துவே ஓர் எடுத்துக்காட்டு. அவர் தம் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் தந்தையிடம் கூறினார்: "நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன்" (யோவா 17:4). ஆம், கிறிஸ்து தந்தை தம்மிடம் ஒப்படைத்த வேலையைச் செய்து முடிப்பதில் காணும் கருத்துமாய் இருந்தார். ஓய்வுநாள் அன்று அவர் குணமளிக்கும் பணியைச் செய்தார் ஏன் அவர் அய்யா NைT If nகிறார்? என்று அவரைக் கேட்டதற்கு அவர் கூறியது: "என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார். நானும் செயலாற்றுகிறேன்" (யோவா 5:17). கிறிஸ்துவைப் பின்பற்றி நாமும் நமது அன்றாட அலுவலைச் செய்து முடிக்க வேண்டும், நாம் இறக்கும்போது கிறிஸ்துவைப்போல், "எல்லாம் நிறைவேறிற்று" (யோவா 19:28) என்று கூறமுடியுமென்றால், நாம் உண்மையிலேயே பேறுபெற்றவர்கள்.

ஓர் ஆலயத்தைக் கட்டுவதற்காகக் கற்களை உடைத்துக் கொண்டிருந்த ஒருவரிடம், "என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு அவர் கூறியது: "நான் ஓர் அழகிய கோயிலைக் கட்டி எழுப்புகிறேன்", கூலிக்கு வேலை செய்வதாக அவர் கூறவில்லை. மாறாக, ஓர் ஆலயத்தைக் கட்டி எழுப்புவதாகச் சொன்னார். அவரின் பார்வை ஆழமானது. அர்த்தமுள்ளது, எந்தவொரு வேலையும் இழிவானதல்ல, மாறாக, எந்த வேலையும் செய்யாமல் இருப்பதே இழிவானது. எந்த வேலை செய்தாலும், அதன் மூலம் நாம் மாபெரும் ஓர் அழகிய உலகைக் கட்டி எழுப்புகின்றோம் என்ற உயர்வான எண்ணம் நம்மை ஆட்கொள்ள வேண்டும். 'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். வீட்டுத் தலைவர் தங்களிடம் ஒப்படைத்துச் சென்ற பணியை விழிப்புணர்வுடன் செய்து கொண்டிருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள் என்றும், வீட்டுத் தலைவரே அவர்களுக்குப் பந்தியில் பணிவிடை செய்வார் என்றும் இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து கூறுகிறார் (லூக் 12:37). இது நமக்குச் சற்று வியப்பாகத் தோன்றலாம், எந்த முதலாளி தனக்கடியில் வேலை செய்யும் தொழிலாளிக்குப் பந்தி பரிமாறுவார்? என்று கேட்கலாம். ஆனால் நம் தலைவர் கிறிஸ்து அவ்வாறு செய்வதாக வாக்களித்துள்ளார், "இதோ. நான் கதவு அருகில் நின்று தட்டிக் கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன். அவர்களும் என்னோடு உணவருந்துவார்கள்” (திவெ 3:20) கிறிஸ்து தமது பணியாளர்களுடன் சம்பந்தியில் அமர்வார்: அவரே அவர்களுக்குப் பணிபுரிவார்,

நாம் மேற்கொள்ளும் பணிகளில் இடையூறு எழும்போது இன்றைய இரண்டாம் வாசகத்தில் வருகின்ற ஆபிரகாமை நம் கண்முன் நிறுத்த வேண்டும். கடவுள் ஆபிரகாமை வேற்று நாட்டுக்குப் போகும்படி பணித்த போது. அவர் எங்கே போகவேண்டுமென்று தெரியாதிருந்தும் புறப்பட்டார், அவர் அவ்வாறு செய்தது கடவுளின்மேல் அவருக்கிருந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் (எபி 11:8), ஆபிரகாம் தாம் செல்லவேண்டிய பாதையை அறியாமல் சென்றதால், அவர் சரியான பாதையில் சென்றார். நாம் நமது பாதையைத் திட்டமிட்டு அமைத்துக் கொள்வதால், நாம் தவறான பாதையில் செல்கிறோம். நாம் செல்வது கடவுளின் பாதையில் அல்ல, மனிதனின் பா 6தையில், ஆபிரகாம் தன் ஒரே மகன் ஈசாக்கைப் பலியிட முன்வந்ததால், அவர் 1-1. சாக்கை மீண்டும் பெற்றார். நாம் நமது குட்டி குட்டிச் சிலைகளை விட்டுவிட மனமின்றி இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்யும் இருமனப்பட்ட உள்ளம் கொண்டவர்களாய் இருக்கின்றோம்.

ஒருவர் ஒரு மலை விளிம்பில் நடந்தார். கால் இடறிக் கீழே விழுந்தபோது, மலையின் இடுக்கில் இருந்த ஒரு மரத்தின் கிளையைப் பற்றிக்கொண்டு, “கடவுளே! என்னைக் காப்பாற்று" என்று கத்தினார்.

கடவுள் அவரிடம், "நான் உன்னைக் காப்பற்றுவேன். ஆனால் உன் கைகளை மரக்கிளையிலிருந்து எடுத்துவிடு" என்றார். ஆனால் அவர் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டு, "கடவுளே! என்னைக் காப்பாற்று" என்றார். நாமும் பணம், பதவி, சொந்தம், பந்தம் ஆகியவற்றை உடும்புப் பிடியாகப் பிடித்துக்கொண்டு கடவுளிடம் பாதுகாப்புத் தேடுகின்றோம். இன்றைய பதிலுரைப் பாடல் கூறுகிறது: "நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம், அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்" (திபா 33:20). உண்மையில் கடவுள் நமது கேடயமாய் உள்ளாரா? "எந்நிலையிலும் நம்பிக்கையைக் கேடயமாயப் பிடித்துக் கொள்வோம்" (எபே 6:16). தலைக்கவசம் அணியலாம். அணியாமல் இருக்கலாம். ஆனால் நம்பிக்கையைத் தலைக்கவசமாய் கட்டாயம் அணிய வேண்டும்.

கைமாறு கருதாமல் நம் கடமையைச் செய்வோம். கடவுள் நம்மைக் கரைசோப்பார். இறுதியில் நாம் அடையவிருக்கும் இன்பத்தைக் கண்முன் கொண்டு துன்பங்களைத் துணிவுடன் எதிர்கொள்வோமாக.

துன்பம் உறவரினும் செய்க துணிவு ஆற்றி
இன்பம் பயக்கும் வினை(குறள் 669)

“சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்சவேண்டாம்”

நிகழ்வு

தூர்ஸ் நகரத் தூய மார்டின் இளைஞனாக இருந்தபோது, ஒருநாள் ஆல்ப்ஸ் மலையடிவாரம் வழியாகத் தனியாக நடந்துசென்றுகொண்ருந்தார். வழக்கமாக அந்த வழியாக யாரும் நடந்துசெல்வது கிடையாது. வழிப்பறிக் கொள்ளையர்கட்கு அஞ்சி, வேறொரு வழியாகச் சென்றுவிடுவர். ஆனால், மார்டினோ யார்க்கும் அஞ்சாமல் அவ்வழியாக நடந்துசென்றுகொண்டிருந்தார்.

போகிற வழியில் ஒரு திருப்பம் வந்தது. அந்தத் திருப்பத்தில் அவர் திரும்பியபோது, புதரில் மறைந்திருந்த வழிப்பறிக் கொள்ளையர்கள் அவரைச் சுற்றி வளைத்துக்கொண்டார்கள். பின்னர் அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு திருடன் மார்டினின் கழுத்தில் கத்தியை வைத்து, அவரைக் கொல்வதற்கு முயன்றான். அவரோ, தன்னுடைய கழுத்தில் கத்தி இருக்கின்றதே... இன்னும் சிறிதுநேரத்தில் தன்னுடைய உயிர் போகப் போகிறதே... என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல், மிகவும் அமைதியாகவும் அதே நேரத்தில் துணிவோடும் இருந்தார்.

இதைப் பார்த்த அந்த வழிப்பறிக் கூட்டத்தில் இருந்த இன்னொரு திருடன் மார்டினிடம் வந்து, “உன்னுடைய கழுத்தில் கத்தி இருக்கின்றது... இன்னும் சிறிதுநேரத்தில் உன்னுடைய உயிர் உன்னைவிட்டுப் போகப்போகின்றது... அப்படியிருக்கையில் எப்படி உன்னால் இவ்வளவு அமைதியாகவும் அச்சமின்றியும் இருக்க முடிகின்றது” என்றான். மார்டின் தன்னுடைய கண்களில் ஒளிபொங்க அவனிடம் சொன்னார்: “கடவுளின் மகனாகிய என்னை அவர், எல்லாச் சூழ்நிலையிலும் என்னோடு இருந்து பாதுகாத்து வருகின்றார். அப்படியிருக்கும்போது நான் எதற்கு யார்க்கும் அஞ்சவேண்டும்.” மார்டின் இவ்வளவு துணிவோடு பேசியதைப் பார்த்துவிட்டு அந்த வழிப்பறிக் கொள்ளையர்கள் அவரை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டனர்.

நாம் அனைவரும் கடவுளின் மக்களாக இருக்கின்றபோது, அவர் ஒரு தந்தையைப் போன்று நம்மோடு இருக்கின்றபோது, நாம் எதற்கு அஞ்சவேண்டும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. பொதுக்காலத்தின் பத்தொன்பதாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு, இன்றைய நாள் நற்செய்தி வாசகம் ‘சிறு மந்தையாகிய நாம் யார்க்கும் அஞ்சவேண்டாம்’ என்ற சிந்தனையைத் தருகின்றது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.


‘சிறுமந்தை’ எனப்படுவோர் யார்?

லூக்கா எழுதிய நற்செய்தி நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு, “சிறுமந்தையாகிய நீங்கள் அஞ்சவேண்டாம்” என்று கூறுகின்றார். இயேசு இங்கு குறிப்பிடுகின்ற ‘சிறுமந்தை’ யார் யாரையெல்லாம் உள்ளடக்கி இருக்கின்றது என்று சிந்தித்துப் பார்ப்பது மிகவும் இன்றியமையாதது.

இயேசு செய்த அருமடையாளங்களையும் வல்ல செயல்களையும் பார்த்துவிட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் அவரைப் பின்தொடர்ந்து வந்தார்கள். அவர்களெல்லாம் இயேசு சொல்கின்ற ‘சிறுமந்தை’யில் அடங்கிவிடுவார்களா? என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில், இயேசுவைப் பின்பற்றிய பலர், வயிறார உணவு கிடைக்கும் (யோவா 6: 26) என்றும் தங்களுடைய உடல் உள்ளத் தேவைகள் நிறைவுபெறும் (லூக் 9: 11) என்றும் அவரைப் பின்தொடர்ந்தார்கள், தேடினார்கள். இவர்களெல்லாம் இயேசு சொல்கின்ற ‘சிறுமந்தையில்’ அடங்குவதில்லை.

அப்படியானால் யார் இயேசு சொல்கின்ற சிறுமந்தையில் அடங்குவார்கள் எனில், அவருடைய குரலுக்குச் செவிமடுக்கின்ற அவருடைய உண்மையான சீடர்கள் அல்லது ஆடுகள்... (யோவா 10: 27), அனைத்திற்கும் மேலாக அவருடைய ஆட்சியையும் அவர்க்கு ஏற்புடையவற்றையும் நாடுகின்றவர்கள் (மத் 6: 33). இவர்களே ‘சிறுமந்தையில்’ இடம்பெறுவார்கள். நாம் இயேசுவின் சிறுமந்தையில் இடம்பெற வேண்டும் என்றால், அவருடைய குரலுக்குச் செவிமடுத்து, அவர்க்கு ஏற்புடையவற்றை நாடவேண்டும். அது மிகவும் முக்கியமானது.


சிறுமந்தையாக இருக்கின்றோம் என்பதற்காக அஞ்சத் தேவையில்லை

சிறுமந்தை எனப்படுவோர் யாரெனத் தெரிந்துகொண்ட நாம், ‘அஞ்சவேண்டாம்’ என்று இயேசு சொல்வதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம். இயேசுவைப் பலர் பின்தொடர்ந்தாலும் அவருடைய உண்மையான சீடர்கள் குறைவுதான்!. அவர்கள் சிறுமந்தைதான்! எனவே அவர்கள், ‘ஐயோ! நாங்கள் சிறுமந்தையாக இருக்கின்றோமே... எங்கட்கு ஏதாவது ஆகிவிடுமோ...’ என்று நினைத்து அஞ்சி வாழ்ந்துகொண்டிருக்காமல், துணிவோடு இருக்கவேண்டும் என்பதற்குத்தான் இயேசு ‘அஞ்சவேண்டாம்’ என்று சொல்கின்றார்.

இயேசு இங்கு சொல்வதுபோல் ‘சிறுமந்தை’ ஏன் அஞ்சவேண்டாம் என்பதற்கான காரணத்தை இப்பொழுது தெரிந்துகொள்வோம். முதலில், அவர்கள் – சிறுமந்தையைச் சார்ந்தவர்கள் - கடவுளின் பார்வையில் விலையேறப் பெற்றவர்களாக, மதிப்புமிக்கவர்களாக (எசாயா 43: 4) இருக்கின்றார்கள். சாதாரண சிட்டுக்குருவிகளை அற்புதமாகக் காத்துப் பராமரிக்கின்ற கடவுள், தன்னுடைய பார்வையில் விலையேறப் பெற்றவர்களாக, மதிப்புமிக்கவர்களாகத் திகழ்பவர்களை எந்தளவுக்குப் பராமரிப்பார் என்பதால்தான், இயேசு அவர்களைப் பார்த்து அஞ்சவேண்டாம் என்று சொல்கின்றார். அடுத்ததாக, சிறுமந்தையில் இருப்பவர்கள் அவருடைய மக்கள் (யோவா 1: 12). அவருடைய மக்களாக இருக்கின்றபோது எதற்கு யார்க்கும் அஞ்சவேண்டும் என்பதால்தான் இயேசு ‘அஞ்சவேண்டாம்’ என்று சொல்கின்றார். இதைவிடவும் இன்னொரு முக்கியமான ஒரு விடயம் இருக்கின்றது. அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.


சிறுமந்தையைத் தன் ஆட்சிக்கு உட்படுத்தும் இறைவன்

இயேசு தன் சீடரிடம், “சிறுமந்தையாகிய நீங்கள் அஞ்சவேண்டாம்” என்று சொன்னதோடு மட்டும் நின்றுவிடவில்லை. தொடர்ந்து அவர் அவர்களிடம், “உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்” என்கின்றார். எத்துணை இனிமையான, நம்பிக்கை நிறைந்த வார்த்தைகள் இவை!. யார் யாரெல்லாம் தந்தையாம் கடவுளின் குரலைக் கேட்டு, அவர்க்கு ஏற்புடையவற்றை நாடி, அதனால் அவருடைய ‘சிறு மந்தையாகின்றார்களோ’, அவர்களை அவர் தன் ஆட்சிக்கு உட்படுத்துவது எவ்வளவு பெரிய பேறு. அத்தகைய பேறு சிறுமந்தைக்குக் கிடைக்க இருப்பதால், இயேசு சிறுமந்தையாகிய நீங்கள் அஞ்சவேண்டாம் என்று சொல்கின்றார்.

இங்கு நாம் இன்னொரு விடயத்தையும் நம்முடைய கவனத்தில் இருத்துவது நல்லது. அது என்னவெனில், சிறுமந்தையை கடவுள் இவ்வுலக ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார் என்று இயேசு சொல்லவில்லை. மாறாக, உண்மையும் நீதியும் அன்பும் கொண்ட தம் ஆட்சிக்கு (யோவா 18: 36, 37) உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளதாகச் சொல்கின்றார். ஆகையால், இப்படியோர் ஆட்சிக்குத் தம் சிறுமந்தையை கடவுள் உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார் எனில் அவர்கள் எதற்கும் யார்க்கும் அஞ்சத் தேவையில்லை என்பதுதான் நாம் புரிந்துகொள்ளவேண்டிய செய்தியாக இருக்கின்றது.

இன்றைக்குப் பலர் ‘நான் சிறியவனாயிற்றே... வறியவனாயிற்றே... எளியவனாயிற்றே... என்னால் எப்படி இதையெல்லாம் செய்யமுடியும்... என்னால் எப்படி இதையெல்லாம் சாதிக்க முடியும்’ என்று அஞ்சி நடுவதைப் பார்க்க முடிகின்றது. இப்படிப்பட்ட நிலையில் ‘நான் சிறுவனாயிருந்தாலும் கடவுளின் அன்புமகனாக இருக்கின்றேன்’ என்பதை அவர்கள் உணர்ந்து வாழ்ந்தால், எப்படிப்பட்ட சூழ்நிலையையும் எதிர்கொள்ள முடியும் என்பதில் ஐயமில்லை.


சிந்தனை

‘வீறுகொள்! துணிந்து நில்! அஞ்சாதே! கவலைப்படாதே! ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லுமிடமெல்லாம் உன்னோடு இருப்பேன்” (யோசு 1: 9) என்று ஆண்டவர் யோசுவைப் பார்த்துக் கூறுவார். ஆண்டவர் யோசுவாவிற்குச் சொல்லும் அதே வார்த்தைகளைத் தான் இன்று நமக்கும் சொல்கின்றார். ஆகையால், ஆண்டவரின் அவ்வார்த்தைகளில் நம்பிக்கைகொண்டு, எதற்கும் அஞ்சாமல் துணிவோடு இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
ser

நம்பிக்கையின் பொருள்

ஒவ்வொரு நாள் காலையில் அவன் அவளுக்கு பல் துலக்கிவிடுவான். அவளைக் குளிக்க வைப்பான். அவளுக்கு உணவு ஊட்டுவான். ஒவ்வொரு நாள் மாலையில் அவன் அவள் அருகில் அமர்வான். அவளின் கரங்களைத் தன் கரங்களுக்குள் பொத்திக்கொண்டு அவளை வருடிக்கொண்டே அவளுக்கு நிறைய கதைகள் சொல்வான். தன் வலியையும் பொருட்படுத்தாமல் அவள் புன்னகை புரிவாள். அவளுக்கு விருப்பமான பாடல்களை அவன் பாடிக் காட்டுவான். அவளின் அழகை வர்ணனை செய்வான். அவளைப் பார்த்துக்கொள்வதற்காக அவன் வேலைக்கு ஒரு இளவலை அமர்த்தியிருந்தாலும் தான் மட்டுமே செய்யக்கூடியவற்றைத் தன் மனைவிக்கு அவன் செய்தான். சில ஆண்டுகளுக்கு முன்தான் அவர்களுக்குத் திருமணம் நடந்தது. அண்மையில் நடந்த விபத்து ஒன்றில் அவனுடைய மனைவி பக்கவாதத்திற்கு ஆளானாள். இன்னொரு திருமணம் செய்துகொள்ளுமாறு எல்லாரும் வற்புறுத்தியும் ஏன் நீ மறுமணம் செய்துகொள்ளவில்லை என்று அவனிடம் கேட்டபோது அவன் சொன்னான்: 'எங்களுடைய திருமண நாளில் நான் என் மனைவியின் கண்களை உற்றுப்பார்த்து, வாழ்நாள் முழுவதும் அவளை அன்பு செய்வதாகவும், அவளை மதிப்பதாகவும் வாக்குறுதி தந்தேன். நான் சொன்ன அனைத்து வார்த்தைகளையும் நான் பொருளோடு சொன்னேன். இன்று அதை நிறைவேற்றுகிறேன்.' அவனது அன்பும் நம்பகத்தன்மையும் - இன்பத்தில் மட்டுமல்ல, துன்பத்திலும், எல்லா நேரத்திலும் அவன் காட்டிய அன்பும் நம்பகத்தன்மையும் - என்னை மெய்சிலிர்க்க வைத்தன.

நிற்க.
ஆப்பிரிக்க வலைப்பூ ஒன்றில் நான் அண்மையில் படித்த பதிவு இது.
நம்பிக்கை கொண்ட நபர்தான் நம்பகத்தன்மை உடைய நபர். 'சுட்டெரிக்கும் வெயில் சிறுத்தையின் நிறத்தை மாற்றுவதில்லை' என்பது ஆப்பிரிக்க பழமொழி. சூழல்கள் மாறினாலும் நம்பிக்கை தன் இயல்பிலிருந்து மாறாது.

நம்முடைய கிறிஸ்தவ மரபில் நம்பிக்கை என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறோம். இறையியல் மதிப்பீடுகளில் முதன்மையானதாக நம்பிக்கையைப் போற்றுகிறோம். விவிலியத்திலும் இந்த வார்த்தை அடிக்கடி காணக்கிடக்கிறது. இருந்தாலும் இதன் பொருள் நமக்கு மறைபொருளாகவே இருக்கிறது. இம்மறைபொருளைத் தெளிபொருள் ஆக்குகின்றது இன்றைய இறைவாக்கு வழிபாடு. நம்பிக்கை என்றால் உண்மையில் என்ன என்பதை இன்றைய வாசகங்கள் எடுத்தியம்புகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். சாஞா 18:6-9), சாலமோனின் ஞானநூல் ஆசிரியர், இஸ்ரயேல் மக்கள் விடுதலைப் பயண நிகழ்வில் எகிப்திலிருந்து வெளியேறிய இரவை நினைத்துப் பார்க்கிறார். 'எகிப்து நாட்டில் தாங்கள் நம்பியிருந்த வாக்குறுதிகளைத் தெளிவாக அறிந்து அவற்றில் மகிழ்ந்திருக்கும்படி அந்த இரவு எங்கள் மூதாதையருக்கு முன்னறிவிக்கப்பட்டது' என்கிறார் ஆசிரியர். கடவுளின் வாக்குறுதி உண்மையாக இருக்கும் என்று அவர்கள் நம்பினார்கள் என அழுத்தம் கொடுக்கிறார் ஆசிரியர். இவ்வார்த்தைகள் உண்மையான நம்பிக்கையின் முக்கியமான கூறு ஒன்றை வெளிப்படுத்துகின்றன. எகிப்தை விட்டு வெளியேறியது இஸ்ரயேல் மக்கள் மேற்கொண்ட பெரிய ஆபத்தான காரியம். எகிப்தியர்கள் மிகவும் பலசாலிகள். எந்தவொரு காரணத்திற்காகவும் அடிமைகள் தங்கள் நாட்டை நீங்கக் கூடாது என்று எண்ணியவர்கள். கடவுளின் திட்டம் ஒருவேளை தோற்றுப் போனால் அவர்கள் மிகப் பெரிய இழப்பை சந்திக்கவேண்டியிருந்திருக்கும். ஆகவே, கடவுளின் வாக்குறுதியின் மேல் அல்லது வாக்குப்பிறழாமையின்மேல் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்து தங்களுடைய நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர். எந்த அளவிற்கு என்றால், எகிப்தில் தாங்கள் கொண்டிருந்த பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறி, தாங்கள் முன்பின் தெரியாத ஒரு கடவுளைப் பின்பற்றும் துணிச்சல் கொள்கின்றனர்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். எபி 11:1-2,8-19) நேரடியாக நம்பிக்கையைப் பற்றிப் பேசுகிறது. 'நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி. கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை' என்று நம்பிக்கையை வரையறை செய்கிறார் ஆசிரியர். இவ்வரையறையைப் பொறுத்தமட்டில் நம்பிக்கை என்பது காணாத ஒன்று நடந்தேறும் என்னும் உறுதி. இந்த வரையறைக்கு இலக்கணமாக ஆபேல் தொடங்கி மக்கபேயர் காலத்து மறைசாட்சியர் வரை முக்கியமான கதைமாந்தர்களை முன்வைக்கிறார். இவர்களில் முக்கியமான இடம் வகிப்பவர் ஆபிரகாம். கடவுள் ஆபிரகாமுக்கு ஒரு நாட்டை வாக்களிக்கின்றார். இந்த வாக்குறுதியின்மேல் நம்பிக்கை கொள்கிற ஆபிரகாம் தான் எங்கு செல்கிறோம் என்று அறியாமலேயே புறப்பட்டுச் செல்கின்றார் - இஸ்ரயேல் மக்கள் போல. கானான் நாட்டில் கூடாரம் ஒன்றில் வசிக்கும் அவர் அந்த இடம் முழுவதும் தன்னுடைய வழிமரபினருக்கு உரிமைச்சொத்தாகும் என்று எதிர்நோக்குகின்றார். இந்த நம்பிக்கையை ஆசிரியர் வரப்போகும் எருசலேமிற்கான முன்னறிவிப்பாகப் பார்க்கின்றார். மேலும், குழந்தைப்பேறு இல்லாத ஆபிரகாம்-சாரா தம்பதியினர் வானத்து நட்சத்திரங்களை விட வழிமரபினர் பெறுவதாக கடவுள் வாக்களித்தார். இந்த வாக்குறுதி ஒருநாள் நிறைவேறும் என்று உறுதியாக இருந்தார். கடவுளின் வாக்குறுதியும் நிறைவேறியது.

இருந்தாலும், நம்பிக்கைக்கான இறுதிச் சோதனையும் வந்தது. தன் ஒரே மகனைப் பலியிடுமாறு கடவுள் ஆபிரகாமுக்குக் கட்டளையிட்டார். இது கீழ்ப்படிதலுக்கான சோதனை அல்ல. மாறாக, நம்பிக்கைக்கான சோதனையே. கடவுள் தந்த வாக்குறுதியான தன் மகனைக் கடவுளுக்கே கொடுக்க முன்வருகிறார் ஆபிரகாம். தான் வாக்களித்த மகனையே கடவுள் திரும்பப் பெற்றுக்கொள்வாரா? கடவுளின் கட்டளையை ஆபிரகாம் புரிந்துகொள்ளவில்லை. இருந்தாலும், தன் நம்பிக்கையில் உறுதியாக இருந்தவராய் கடவுளின் கட்டளையை நிறைவேற்றுகிறார். ஆபிரகாமின் மனவுறுதி மற்றும் நம்பிக்கையால் அவருடைய மகன் ஈசாக்கு அவருக்கே தரப்படுகின்றார். கடவுள் தன் வாக்குறுதியைக் காப்பாற்றுகின்றார். தங்களுடைய நம்பிக்கைக்காகத் துன்பங்கள் அனுபவித்த மக்களுக்கு அறிவுறுத்துகின்ற ஆசிரியர் ஆபிரகாமை எடுத்துக்காட்டாக முன்வைக்கிறார். நிலைவாழ்வு என்னும் கடவுளின் வாக்குறுதியின்மேல் நம்பிக்கை கொள்வோர் உயிர்த்தெழுவர் என்றும், இந்த நம்பிக்கையே இவ்வுலக வாழ்வை அவர்கள் வாழும் வழியை நிர்ணயிக்கிறது என்றும் அறிவுறுத்துகிறார் ஆசிரியர்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 12:32-48) நம்பிக்கையின் பொருளை இன்னும் நீட்டுகிறது. தன்னுடைய சீடர்களை, 'சிறு மந்தை' என அழைக்கிற இயேசு, 'அஞ்ச வேண்டாம்' என அறிவுறுத்துகின்றார். பெரிய ஆபத்தான உலகோடு ஒப்பிடும்போது சீடர்களின் எண்ணிக்கை மிகச் சிறியதாக இருந்தது. ஓநாய்களிடையே ஆடுகள் போல அவர்கள் இருந்தார்கள் (காண். லூக் 10:3). இருந்தாலும், தந்தை அவர்களுக்கு ஆட்சியைத் தரத் திருவுளம் கொண்டுள்ளார் என்கிறார் இயேசு. சிறியவர்களாக, சாதாரணமானவர்களாக, துன்புறுவோர்களாக இருந்தாலும் அவர்கள் இறுதியில் நிலைவாழ்வைக் கண்டுகொள்கின்றனர். கடவுளின் இந்த வாக்குறுதியில் உறுதியாக இருக்க வேண்டிய சீடர்கள் இந்த உறுதிக்கேற்ப தங்களுடைய வாழ்வை நெறிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த நம்பிக்கையின் முதல் வெளிப்பாடு உலகச் செல்வங்களைப் பற்றிய அவர்களுடைய பார்வையில் தொடங்குகிறது. ஒவ்வொரு மனிதருக்கு முன்னும் ஒரு தெரிவு இருக்கிறது: செல்வத்தை நம்புதல் அல்லது இறைவனை நம்புதல். செல்வத்தின்மேல் ஒருவர் கொள்ளும் நம்பிக்கை அவரை இவ்வுலகத்தோடு கட்டிவிடுகிறது. இது ஒரு மடமையான தெரிவு. ஏனெனில், இந்த உலகம் கடந்துபோகக் கூடியது. கடவுள்மேல் ஒருவர் கொள்ளும் நம்பிக்கை நிலைவாழ்வைத் தருவதால் அது விவேகமான தெரிவு. கடவுள் மட்டுமே நம்பிக்கைக்குரியவர். ஏனெனில் அவரே உண்மையா நிலைவாழ்வை நமக்குக் கொடுக்கிறார். இந்த வாழ்வையே சீடர்கள் புதையலாகத் தேட வேண்டும்.

நம்பிக்கையின் இரண்டாம் வெளிப்பாடு விழித்திருத்தல். தலைவரின் வருகைக்காக பணியாளர் விழித்திருக்கிறார். வரப்போகும் தலைவர் இயேசுவே. இத்தகைய விழித்திருத்தல் ஒருவரின் மனத்தில் இருக்கும் கவலை, கலக்கம் அனைத்தையும் அகற்றிவிடுகிறது. மேலும், சீடர்களின் உள்ளத்தில் இருக்கும் கவனச்சிதறல்களையும் இது அகற்றுகிறது.

நம்பிக்கையின் இறுதி வெளிப்பாடு பணிவிடை செய்தல். இரண்டு வகை வீட்டுப் பொறுப்பாளர்களை இயேசு எடுத்துக்காட்டாக முன்வைக்கின்றார். முதல் பொறுப்பாளர் நம்பிக்கைக்குரியவராய் இருக்கிறார். அதற்கேற்ற பரிசைப் பெறுகிறார். மற்றவர் தன் தலைவர் காலம் தாழ்த்துகிறார் என்று எண்ணித் தன் மனம் போலச் செயலாற்றுகிறார். தன்னுடைய செல்வம் மற்றும் இன்பத்தால் ஈர்க்கப்பெற்ற இப்பொறுப்பாளர் பணிவிடை செய்ய மறுத்ததால் அனைத்தையும் இழக்கிறார்.

உண்மையான நம்பிக்கை என்பது இயேசுவுக்காக காத்திருந்து விழித்திருப்பதிலும், பணிவிடை செய்வதிலும் அடங்கியுள்ளது எனக் கற்பிக்கிறார் லூக்கா. இந்த நம்பிக்கை நம்பிக்கையாளர்களின் பார்வையை இந்த உலகத்திலிருந்து அப்புறப்படுத்தாது. மாறாக, இந்த உலகில் நல்ல வாழ்க்கை வாழ்வதற்கான இலக்கையும், நோக்கையும் தரும். உண்மையான நம்பிக்கை எதிர்நோக்குவதில் உறுதியாக இருந்தாலும், இன்றைய எதார்த்தத்தையும் ஏற்றுக்கொண்டு, இன்றைய வாழ்வை நன்றாக வாழத் தூண்டும்.

ஆக, நம்பிக்கை என்பது வெறும் சில கோட்பாடுகளுக்கு ஆம் என்று சொல்வதல்ல என்றும், மாறாக, அன்றாட வாழ்வை இனிமையாகவும் நிறைவாகவும் வாழத் தூண்டும் ஒரு மதிப்பீடு. இஸ்ரயேல் மக்கள் கடவுளின் வாக்குறுதியை நம்பி எகிப்தை விட்டுப் புறப்பட்டனர். விடுதலை பெற்ற மக்களாக மாறினார்கள். ஆபிரகாம் கடவுளை நம்பினார். நம்பிக்கையின் குலமுதுவராக மாறினார். நிலைவாழ்வில் நம்பிக்கை கொள்ளத் தன் சீடர்களை அழைக்கும் இயேசு, அதை விழித்திருப்பதிலும் பணிவிடை செய்வதிலும் செலவழிக்கச் சொல்கின்றார். இவ்வனைத்துக் கதைமாந்தர்களையும் இணைக்கும் திருப்பாடல் ஆசிரியர் (33), 'நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம். அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால் உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!' என்று பாடுகிறார்.

நம்பிக்கையின் பொருளை நாம் எப்படி இன்று வாழ்வாக்குவது?
இன்று நாம் பயன்படுத்தும் சொற்கள், பொருள்கள், சந்திக்கும் நபர்கள் என அனைத்தும், அனைவரும் நம்பகத்தன்மையை இழந்துகொண்டே இருக்கின்றனர். ஒவ்வொரு இடத்திற்கும் நேரத்திற்கும் நபருக்கும் ஏற்றவாறு இருப்பதே மதிப்பீடாகப் போற்றப்படுகிறது. எல்லா இடத்திற்கும் நேரத்திற்கும் நபருக்கும் பொருத்தமானவை எவையும் இல்லை என்ற நிலை உருவாகிக்கொண்டே இருக்கின்றது. 'எனக்கு சரி என்றால் அது எனக்குச் சரி. உனக்குச் சரி என்றால் உனக்குச் சரி' என்று கேட்கும் மனப்பாங்கு வந்துவிட்டது.

இன்றைய ஆபிரகாமிடம் கடவுள் மகனைப் பலியிடுமாறு கேட்டால், 'நீயே கொடுப்பாய். நீயே எடுப்பாயா? கொடுப்பதும் நானே. எடுப்பதும் நானே. கொடுக்க முடியாது. உனக்குக் கொடுத்துவிட்டால் நான் என்ன செய்வேன்' என்று சொல்லி வழிநடப்பார் இவர். காண்பவை பற்றியே நமக்கு இன்று ஒத்த கருத்து இல்லாதபோது காணாதவற்றின்மேல் எப்படி நம்பிக்கை வரும்? இன்றைய வாழ்வே கேள்விக்குறியாகி நிற்கும்போது நிலைவாழ்வின்மேல் மனம் எப்படி உறுதி கொள்ளும்?

நம்பகத்தன்மை அல்லது நம்பிக்கை வளர இறைவன் அல்லது மாறாத ஒன்று அடித்தளமாக அமைய வேண்டும். ஆகையால்தான், திருமணம் மற்றும் குருத்துவம் அருளடையாளக் கொண்டாட்டங்களில் இறைவன் முன்னிலையில் இனியவர்கள் வாக்குறுதி கொடுக்கின்றனர்.

நம்பிக்கையைத் தளராமல் வைத்திருப்பவர்கள் இறைவனை உறுதியாகப் பற்றிக்கொள்வார்கள். ஆக, என்னுடைய முதல் பாடம் இறைவனை இறுகப் பற்றிக்கொள்வது.

இரண்டாவதாக, விழித்திருத்தல்.
விழித்திருத்தல் என்பது இன்றைய பொழுதை முழுமையாக வாழ்வது. நம்பிக்கை கொண்ட ஒருவரே இன்றைய பொழுதை இனிதே வாழ முடியும். நம்பிக்கை குறையும்போது எதிர்காலம் பற்றிய அச்சமும், கடந்த காலம் பற்றிய குற்றவுணர்வும் வந்துவிடுகிறது. நாம் நம்முடைய ஒவ்வொரு பொழுதையும் இனிமையாக வாழ்ந்தால் தொடர்ந்து முன்னேறிச் செல்லலாம். மாறாக, கோபம், சண்டை, கசப்புணர்வு என்று நிமிடங்களை நகர்த்தினால், அவற்றைச் சரி செய்ய மீண்டும் நம் நிமிடங்களைச் செலவிட வேண்டிய நிலை வரும். செய்வதை திருந்தச் செய்துவிட்டால், அதை திரும்பச் செய்யத் தேவையில்லைதானே. இது இரண்டாவது பாடம்.

மூன்றாவதாக, பொறுப்புணர்வோடு பணிவிடை செய்தல்.
நான் ஒரு நம்பிக்கைக்கு உரிய அறிவாளியான வீட்டுப்பொறுப்பாளர் என்ற எண்ணம் எனக்கு வேண்டும். நம்பிக்கைக்குரிய நிலையோடு அறிவும் மிக அவசியம். அறிவு இல்லாத நம்பிக்கை மூடநம்பிக்கையாகிவிடும். நம்பிக்கை இல்லாத அறிவு வெறும் பிதற்றலாகிவிடும். வாழ்வில் வெற்றி கண்டவர்கள், இவ்வுலகை முன்னேற்றியவர்கள் அனைவரும் பொறுப்புணர்வோடு பணிவிடை செய்தனர். அதற்குக் காரணம் அவர்களின் கண்களில் ஒளிர்ந்த நம்பிக்கையே.

இறுதியாக, நம்பிக்கையின் பொருள் உணர்ந்த நாம் நம்பிக்கைப் பொருளாய் மாறும்போது வாழ்வும் நிலைவாழ்வும் நமதாகும் - இன்றும் என்றும்!

ser

sunday homily
A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com