மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலம் பதினெட்டாம் ஞாயிறு
மூன்றாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
சபை உரையாளர் 18:20-32 | கொலோசையர் 3:1-5,9-11 | லூக்கா 12:13-21

மனிதனின் ஆசைகள் பலவிதம். அதில் தனக்கென்று ஒரு தனி சாம்ராஜ்யம் கட்ட வேண்டும். அதில் தான் நான் நீந்தித் திரிய வேண்டும் என விரும்புகிறான். இந்த ஆசைகளால் மனிதன் தனக்கென்று செல்வத்தைப் பெருக்கி, தொழிலை வளர்த்து, அதிகாரத்தைப் பற்றிக் கொள்ள விரும்புகிறான். இப்படி எல்லையில்லாத ஆசைகள் மனித உள்ளத்திலே உள்ளது. (மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை) இவைகளால் பெரிய பகை உண்டாகிவிடுகிறது. அண்ணன், தம்பி என்று கூட பார்ப்பதில்லை. வெட்டி மாய்த்துக் கொள்கிறார்கள். இதனால் எத்தனை குடும்பங்கள் அழிந்துள்ளன, எத்தனை ஊர்கள் நாசமாக்கப் படுகின்றன. எத்தனை நாடுகள் அழிகின்றன. வாங்கிய கடனுக்கு வட்டி கொடுத்து மாள முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் குடும்பங்கள் எத்தனை எத்தனை! இதற்கு முதல் காரணம் நம்மில் உறைந்து கிடக்கும் சுயநலம். இரண்டாவது நம்மில் உருவாகி இருக்கும் பாதுகாப்பற்ற நிலை. இதனால் மனிதன் இன்று சுரண்டல் பேர்வழியாக, லஞ்சத்தின் கொடியவனாக, ஊழல் பெருச்சாளியாக மாறி வருகிறான்.

உண்மையான ஒரு நிகழ்ச்சியை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். ஒரு மனிதன் அமெரிக்கா சென்று ஏராளமான பணம் சேகரித்தான். அங்கும் வங்கியில் போட்டுப் பணத்தைப் பெருக்கினான். பணி முடிந்த பின் தம் நாடு திரும்பி ஒரு பெரிய மாளிகையைத் தனக்கென்று கட்டினான். பம்பாயில் 40 மாடிகள் கொண்ட ஒரு ஓட்டலையும் கட்டி முடித்தான். ஒரு மாபெரும் ஜவுளிக் கடையையும், போன் கடையும் கட்டினான். ஆனால் அனுபவிக்க இருக்கிறேன் என்று ஆசை கொண்ட மனிதன் மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லப்பட்டான். 2 மாதத்தில் புற்றுநோயால் உலகத்தை விட்டுச் சென்றான். அவனது கனவும் அவனது சாவோடு முடிந்தது.

இதேபோல்தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலக மாயையான போதனையால் கவரப்படுகிறோம், ஏமாற்றப் படுகிறோம், மதி மயங்கிவிடுகிறோம். இன்றைய வாசகங்கள் நமக்குத் தரும் போதனை என்ன?

சபை உரையாளர் ஆகமத்திலே (ச. உ. 1:3) மனிதன் வாழ்நாள் முழுவதும், பாடுபட்டு உழைக்கிறான். அந்த உழைப்பினால் அவன் பெறும் பயன் என்ன? நெற்றி வேர்வை நிலத்தில் விழப் பாடுபட்டு உழைத்து செல்வத்தைச் சேர்க்கிறான். ஆனால் அவன் இறக்கும்போது எதையும் எடுத்துச் செல்வதில்லையே என்று எச்சரிக்கை விடுக்கின்றது (1திமோ 6:7).

எனவே மேல் உலகத்தை நாடுங்கள். ஏனெனில் கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வளிப்பார் (கொலோ. 3:1, 4). மாறாக என் நெஞ்சே உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகை பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. நீ ஓய்வெடு, உண்டு குடித்து மகிழ்ச்சியில் திளைத்திடு என்று சொல்லும் அறிவிலியே, இன்று உன் உயிர் பிரிந்தால் நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும் (லூக். 12:19) என்று கூறும் இயேசுவின் வார்த்தையை உற்று நோக்குங்கள்.

மிகுதியான உடமையைக் கொண்டிருப்பதால் ஒருவனுக்கு வாழ்வு வந்து விடாது (லூக். 12:15) என்பதையும் உணர்த்துகிறார். அன்பார்ந்தவர்களே! பொருளாசை என்பது சிலை வழிபாடு என்று புனித பவுல் அடிகளார் நமக்கு உணர்த்துகிறார். அழிந்துபோகும் உணவுக்காக உழைக்காதீர். மாறாக அழியாத வாழ்வு தரும் உணவுக்காக உழையுங்கள் (யோவா. 6:27).

கிரேக்க நாட்டு மன்னன் அலெக்சாண்டர் தான் இறந்த உடன் தன் கைகளை வெளியே நீட்டிய வண்ணம் அடக்கம் செய்யச் சொன்னது. தியாகம், விட்டுக் கொடுத்தல், பகிர்தல் இதுதான் நம் அழைப்பு. இந்த அழைப்பை நாம் நிறைவு செய்ய வேண்டுமானால் புனித பவுல் ஒப்பற்றச் செல்வமாகிய இயேசு கிறிஸ்துவை அடையும் பொருட்டு நாம் இவ்வுலகில் உள்ள அனைத்தையும் குப்பையெனக் கருதுகிறேன் (பிலி 3:8) என்றாரே. அந்தத் தெய்வீக உணர்வை நாம் பெற வேண்டும்.

ஏழைக்கு இரங்கு பவன் இறைவனுக்கு வட்டிக்குக் கொடுக்கிறான் (பழமொழி 19:17) என்ற அமுத மொழி நம் வாழ்வில் நிறைவு பெறட்டும்.

ser

காசேதான் கடவுளடா

நாம் அனைவரும் ஒரு நீண்ட நெடும் பயணத்தில் ஈடுபட்டிருக்கின்றோம். இந்த பயணத்தின் முடிவு மரணம். சாகும் விதம்தான் வேறுபடுமேயொழிய மரணம் எல்லாருக்கும் ஒன்றுதான். நாம் இவ்வுலகை விட்டுச்செல்லும்போது நம்முடன் நாம் சேர்த்துவைத்த எந்தப் பொருளும் வரப்போவதில்லை!

மகா அலெக்சாண்டர் இந்தியாவிற்குள் நுழைந்து புருஷோத்தமரை வென்று திரும்பினார். அளவுகடந்த தங்கத்தோடு நாடு திரும்பிய அலெக்சாண்டர் வழியிலேயே ஒரு சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார் ! அலெக்சாண்டர் சாவதற்கு முன் அவர் விடுத்த வேண்டுகோள் : நான் சாகப்போகின்றேன். என் சவத்தை பெட்டியில் மூடி வைத்து எடுத்துக்கொண்டு போகும்போது என் இரண்டு கைப்பக்கமும் பெட்டியில் துவாரமிட்டு கைகளை வெளியே விடுங்கள். அலெக்சாண்டர் சொன்னது போலவே அவரது கைகள் வெளியே தெரியும்படி அவருடைய உடலைத் தூக்கிச்சென்றார்கள். மக்கள் : என்ன அலெக்சாண்டரின் இரு கைகளும் விரிச்சபடி போகுது! ஏன்? என்றார்கள்.

அவர்கள் கேள்விக்கு அலெக்ஸாண்டரைப் பற்றி அறிந்தவர்களிடமிருந்து கிடைத்த பதில் : அலெக்சாண்டராகிய நான் எத்தனையோ வெற்றிகளை அடைஞ்சு, எவ்வளவோ சொத்துக்களைச் சம்பாதித்தேன். ஆனால் கடைசியில் நான் போகும்போது என் கையிலே ஒண்ணுமே தங்கலெ. இந்த தத்துவத்தைப் பத்தி மக்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக மன்னரே செய்த ஏற்பாடு இது.


இது நடந்தது அன்று! இதோ இன்று நடந்த ஒரு நிகழ்வு!
தாயொருத்தி இறந்துவிட்டாள். அடக்கச் சடங்கு நடந்தது !
கல்லறைத்தோட்டத்தில் என்னைப் பார்த்து அந்த மகன், எங்க அம்மா இல்லாம நான் எப்படி ஃபாதர் வாழப் போறேன்? என்று அழுதான். அப்படி அழுதவன் ஓரக்கண்ணால் அம்மாவைப் பார்த்துவிட்டு, அம்மா கழுத்திலே கிடக்கிற உத்தரியத்தைத் தவிர மத்ததையெல்லாம் கழட்டுங்கடா என்றான்!

நாம் இந்த உலகத்திற்குள் வந்தபோது ஒன்றும் கொண்டுவரவில்லை! நாம் இந்த உலகத்தை விட்டுச் செல்லும்போதும் நாம் எதையும் கொண்டுபோகப்போவதில்லை! இதைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் சபை உரையாளர் வீண், முற்றிலும் வீண் (சஉ 1:2) என்கின்றார். இதனால்தான் இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடிகளார் இவ்வுலகு சார்ந்தது பற்றியல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள் (கொலோ 3:2) என்கின்றார். இதனால்தான் கடவுள் அறிவற்ற செல்வனைப் பார்த்து, அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்து விடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும் (லூக் 12:20) என்கின்றார்.

இப்படிப்பட்ட அர்த்தமுள்ள அறிவுரைகளுக்குப் பிறகும் காசேதான் கடவுளடா என்று வாழ முற்படுவோமேயானால் நம்மை விட இரங்குதற்குரியவர் வேறு யாரும் இந்த உலகில் இருக்க முடியாது! இன்றைய வாசகங்கள் நமது வாழ்க்கையில் அறியாமை இருள் போக்கி அறிவு விளக்கேற்றி வைக்கும் அற்புதத் தீக்குச்சிகளாகத் திகழட்டும்! மேலும் அறிவோம் :

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு (குறள் : 355).

பொருள் : எந்தப்பொருள் எந்த இயல்பு உடையதாகத் தோன்றினாலும் அந்தப் பொருளை அவ்வாறே கொள்ளாமல் அப்பொருளின் மெய்ம்மையைக் காண்பதே தெளிந்த அறிவாகும்!

கிரேக்க நாட்டில் ஒரு ஞானி இருந்தார். அவருடைய வீட்டுக்கு முன்பாக "ஞானம் இங்கே விற்கப்படும்" என்று எழுதப்பட்டிருந்தது. ஒரு பணக்காரர் அவரிடம் பணம் கொடுத்து ஞானத்தை விலைக்குக் கேட்டார், அந்த ஞானி ஒரு காகிதத் துண்டில், "நீ எதைச் செய்தாலும் உன் இறுதி முடிவை நினைத்துக் கொள்" என்று எழுதிக் கொடுத்தார், பணக்காரர். அவ்வாசகத்தை ஆழ்ந்து சிந்தித்து மனம் மாறி, ஏழை எளியவர்களுக்குத் தானதருமம் செய்து நீண்ட காலம் வாழ்ந்து புகழுடன் இறந்தார்,

நாம் எதைச் செய்தாலும் நமது வாழ்வின் முடிவை நினைத்துப் பார்க்க வேண்டும். சாவு என்பது ஒரு சிறந்த ஆசான், ஒருவர் தன் எதிர் காலத்தைப் பற்றி அறிய ஒரு கிளிசோதிடரிடம் சென்றார். கிளிசோதிடர் அவரிடம், "உங்களுடைய நேரம் சரியில்லை ; சீட்டு எடுத்த கிளியே செத்துப் போய்விட்டது" என்றார். நாம் நீடூழி வாழ விரும்பினாலும் சாவு நம்மைத் துரத்திக் கொண்டே வருகிறது. மனிதனே "நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்” (தொநூ 3:19) என்பதை மறந்துவிடுகிறோம்,

இவ்வுலகுக்குத் தனிப்பட்ட ஒரு பெருமை உண்டு. அதுதான் நேற்று இருந்தவன் இன்று இல்லை' என்ற பெருமை என்கிறார் வள்ளுவர்

நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருரை உடைத்து இவ்வுலகு (குறள் : 336).
மனிதர் பெருமை எல்லாம் வயல்வெளி புல்லுக்கும் பூவுக்கும் சமம், புல் உலாந்து போகிறது: பூ வதங்கி விடுகிறது. (எசா, 40:7-8) இன்றைய பதிலுரைப் பாடல் கூறுகிறது: " அவர்கள் (மானிடர் ) வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர். அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்: மாலையில் வாடி காய்ந்து போகும்"(திபா 90:5-6). அதே திருப்பா மேலும் கூறுகிறது: “எங்கள் வாழ்நாளைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும். அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்" (திபா 90:12). வாழ்வின் நிலையாமையை உணர்ந்தவர்கள் ஞானிகள்; மற்றவர்கள் மடையர்கள்.

ஒருவர் இறக்கும்போது ஊரே திரண்டு வருகிறது. மக்கள் ஓலமிட்டு அழுகின்றனர்; இறந்தவரின் இயற்பெயரை நீக்கிவிட்டு, பிணம் என்ற புதுப்பெயரைச் சூட்டுகின்றனர். அதன்பின், பிணத்தைச் சுடுகாட்டில் சுட்டெரித்துவிட்டு, நீரில் குளித்துவிட்டு, இறந்தவரை முற்றிலுமாக மறந்து விடுகின்றனர் என்கிறார் திருமூலர்.

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணம் என்று பெயரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் கட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்புஒழிந்தார்களே! - திருமூலர் திருமந்திரம்

இன்றைய நற்செய்தியில் (லூக் 12: 13-21). இயேசு கிறிஸ்து செல்வத்தைச் சமுதாய அக்கறையின்றிக் குவித்து வைப்பவனை அறிவிலி (முட்டாள்) என்றழைக்கின்றார். தன்னுடைய மிகுதியான விளைபொருள்களைப் பெரிய களஞ்சியத்தில் சேர்த்துவைத்து, அவற்றை நீண்டகாலம் அனுபவிக்கத் திட்டமிட்ட பணக்காரனிடம் கடவுள்: "அறிவிலியே. இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்துவைத்தவை யாருடையவையாகும்?" (லூக் 12:20) என்று கேட்கிறார்,

ஒருவர் அல்லும் பகலும் அயராது உழைத்துச் சேர்த்த செல்வம் அவர் இறந்தபின் யாரை அடையும்? இன்றைய முதல் வாசகத்தில் சபை உரையாளர் கூறுகிறார்: "ஒருவர் உழைக்கிறார்; உழைத்துச் சோத்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச்செல்கிறார்" (சஉ 2:21), உழைப்பவர் ஒருவர்; அவர் உழைப்பின் பயனைப் பெறுபவர் வேறொருவர்!

ஒரு பணக்காரர் படுகஞ்சன்: எவாக்கும் எதுவும் ஈயாதவர். அவர் தனியாக வீட்டில் இருந்தபோது, திருடர்கள் அவருடைய வீட்டில் புகுந்து, அவருடைய கையையும் கால்களையும் கட்டிப்போட்டுவிட்டு, அவருடைய உடைமைகளை யெல்லாம் கொள்ளை யடித்துச் சென்றனர். அப்போது அப்பணக்காரர். "ஐயோ! என் வாயைக் கட்டி வயிற்றைக்கட்டிச் சேர்த்ததை எல்லாம் இப்போது என் காலைக்கட்டி கையைக்கட்டி எடுத்துக்கிட்டுப் போறாங்களே" என்று கதறி அழுதார். அவர் ஒரு பணக்கார அறிவிலி!

எனவே, கிறிஸ்து நமக்கு விடுக்கும் எச்சரிக்கை: " எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள் " (லூக்12:15) இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் பேர பசையைச் சிலைவழிபாடு என்றழைக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது (கொலோ 3;5).

மண்ணுலகில் செல்வம் சேர்த்து வைக்காது. விண்ணுலகில் செல்வம் சேர்த்து வைக்க நமக்கு அழைப்பு விடுக்கின்றார் கிறிஸ்து (மத் 6:19-20), விண்ணுலகில் எவ்வாறு செல்வம் சேர்ப்பது? பணக்கார இளைஞனிடம் இயேசு கூறினார்: "உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்" (லூக் 19:21). எனவே, நாம் ஏழை எளியவர்களுக்கு உதவினால் நமது விண்ணக வங்கிக் கணக்குப் பெருகும்!

நாம் நம் செல்வத்தைச் சேர்த்து வைக்கவேண்டிய வங்கி ஏழைகளின் வயிறு பசியாய் இருப்பவர்க்கு உணவளிப்பவர் நிலையான செல்வத்தைச் சேர்க்கின்றனர் என்கிறார் வள்ளுவர்.

அற்றார் அழிபசிதீர்ப்பின் அது ஒருவன்
பெற்றான் பெருள்வைப் புழி (குறள் 226)


செல்வத்தின் பயன் ஈதல்,
செல்வத்தைப் பிறருடன் பகிராமல் நாம் மட்டும் அதை அனுபவிக்க விரும்பினால், நாம் பல தவறுகள் செய்வோம் என எச்சரிக்கின்றது புறநானூறு.

செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்போம் எனினே தப்புர பலவே (புறம் 189)

நமது உழைப்பின் பயனைப் பதுக்கி வைக்காமல், இல்லாதவர்களுடன் அதைப் பகிர்ந்து கொள்வோம். முட்டாள்களாக அல்ல, ஞானிகளாக வாழக் கற்றுக்கொள்வோம். உலகின் பார்வையில் அல்ல, கடவுளின் பார்வையில் செல்வராய் இருப்போம்,

"ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்,
ஏனெனில் விண்ணரக அலர்களுக்கு உரியது" (மத் 5:3)

குருக்களின் பாதுகாவலரான தூய ஜான் மரிய வியான்னி விழா

1818 ஆம் ஆண்டு, ஜான் மரிய வியான்னி பிரான்சில் உள்ள ஆர்ஸ் நகருக்கு பங்குத் தந்தையாக நியமிக்கப்பட்டபோது, அவர் தன்னுடைய பெட்டி படுக்கைகளைத் தூக்கிக்கொண்டு, ஆர்ஸ் நகரை நோக்கி வந்தார். அவர் அந்நகருக்குப் புதிது என்பதால், வழிதெரியாது தவித்து நின்றார்.

அப்போது அங்கே இருந்த ஓர் ஆடு மேய்க்கும் இளைஞன்தான் அவருக்கு ஆர்ஸ் நகருக்குச் செல்ல வழி சொல்லிக்கொடுத்தான். வியான்னி அந்த இளைஞனை பார்த்துச் சொன்னார், “எனக்கு நீ ஆர்ஸ் நகருக்குச் செல்வதற்கான வழியைச் சொல்லிக்கொடுத்தாய். அதற்கு ஈடாக நான் இந்த ஆர்ஸ் நகரமே விண்ணகம் செல்வதற்கான வழியைச் சொல்லிக்கொடுக்கிறேன்” என்றார்.

அவர் சொன்னதுபோல் நடந்தது. ஜான் மரிய வியான்னி ஆர்ஸ் நகர மக்களுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் விண்ணகம் செல்வதற்கான வழியைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

இன்று திருச்சபையாது குருக்களின் பாதுகாவலரான தூய ஜான் மரிய வியான்னியின் விழாவைக் கொண்டாடுகிறது. வியான்னி 1786 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள லையோன்ஸ் (Lyons) என்னும் ஊரில் பிறந்தவர். இவருடைய பெற்றோர்கள் மிகவும் பக்தியானவர்கள். இவர்கள் தங்களுடைய இல்லத்திற்கு வரும் குருக்களை சிறப்பான விதத்தில் விருந்து உபசரிப்பார்கள், அவர்களை நன்றாகப் பராமரித்துக் கொள்வார்கள்.

வியான்னி சிறுவனாக இருந்தபோது அவருக்கு தோட்டத்தைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அப்போதெல்லாம் தனியாக இருக்கும் நேரங்களில் அவர் இறைவனிடம் ஜெபிப்பார். ஆன்மாக்களுக்காக மன்றாடுவார். அவருடைய பதிமூன்றாம் வயதில் குருவாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதை அவர், அவருடைய தந்தையிடம் சொன்னபோது, உடனடியாக சம்மதம் தெரிவிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவர் தன்னுடைய சம்மதத்தைத் தெரிவித்தார். அதன்பிறகுதான் அவர் குருமடத்தில் சேர்ந்து கல்வி கற்றார்.

அந்தக் காலத்தில் குருமடத்தில் பாடம் அனைத்தும் இலத்தின் மொழியில் சொல்லிக்கொடுக்கப்பட்டது. இது வியான்னிக்கு விளங்கவேவில்லை. அவருக்குப் பாடம் சொல்லிகொடுத்த ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் ‘வியான்னி குருவாக மாறுவதற்கு இலாயக்கில்லை” என்று சொல்லி அவரை வெளியே தள்ளப் பார்த்தனர். ஆனால் அவருக்கு ஆன்ம குருவாக இருந்த Abbe Balley என்பவர்தான் “வியான்னி தாழ்ச்சியிலும், நற்கருணை பக்தியிலும் சிறந்தவன்” என்று சொல்லி, அவருக்காகப் பரிந்துரைசெய்து, அவர் குருவாக மாறுவதற்கு பெரும் பங்காற்றினார்.

இங்கே நாம் ஒரு உண்மையைப் புறிந்துகொள்ளவேண்டும் ‘யார் ஒன்றுக்கும் இலாயக்கில்லை, அறிவு கெட்ட கழுதை” என்று சொல்லி குருமட ஆசிரியர்கள் புறக்கணித்தார்களோ, அவர்களே வியக்கும் அளவுக்கு வியான்னி மிகப்பெரிய குருவாக மாறினார். தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் அதிகாரம் 12 இறைவார்த்தை 7-9 ல் வாசிக்கின்றோம், பவுலடியார் தன்னுடைய உடலில் தைத்த முள்ளை நீக்குமாறு ஆண்டவரிடம் கேட்கும்போது அவர், “என் அருள் உனக்குப் போதும், வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும் என்று சொல்கிறார்.

ஜான் மரியா வியான்னி கல்வியில் பிந்தங்கியவராக இருந்தாலும், கடவுள் அவரை மேலாக உயர்த்தி தன்னுடைய வல்லமை சிறந்தோங்கச் செய்கிறார். இது வியான்னியின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் முதலாவது பாடமாக இருக்கின்றது.

அடுத்ததாக வியான்னி ஆர்ஸ் நகரில் பங்குத் தந்தையாகப் பொறுப்பெடுத்தபோது கோவிலுக்கு மக்கள் யாருமே வராத நிலையிருந்தது. ஏனென்றால் அந்த கால கட்டத்தில் பிரஞ்சுப் புரட்சி ஏற்பட்டு, மக்கள் அனைவரும் திருச்சபையை விட்டு விலகி இருந்தார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வியான்னி மக்களை அவர்களுடைய் இல்லங்களுக்குச் சென்று சந்தித்து, ஆலயத்திற்கு அழைத்து வந்தார். பாவ சங்கீர்த்தன தொட்டியில் அமர்ந்து, பாவ சங்கீர்த்தனம் கொடுத்து ஆயிரக்கணக்கான பாவிகள் மனமாறக் காரணமாக இருந்தார். வியான்னியிடம் பாவ சங்கீர்த்தனம் கேட்க ஆயர்கள், குருக்கள், பெரிய பெரிய மனிதர்கள் என்று ஏராளமானபேர் வந்தார்கள். இதனால் அவருடைய பெயர் எங்கும் பரவியது. ஒவ்வொருநாளும் ஆர்ஸ் நகரத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை கூடியதால், அரசாங்கம் சிறப்பாக போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்தது.

இப்படியாக ஒருநாளைக்கு 18 மணிநேரம் ஜெபத்திலும், பாவ சந்கீர்தனத்திலும் ஈடுபட்ட வியான்னியைப் பார்த்த மக்கள் அனைவரும், “இதுபோன்று ஜெபிக்கின்ற குருவை நாங்கள் ஒருபோதும் கண்டத்தில்லை” என்று வாழ்த்தினர்.

நாம் இறைப்பணி செய்பவர்களாக இருந்தாலும், எந்தப் பணிசெய்தாலும் ஜெபம் எந்தளவுக்கு இன்றியமையாது என்பதை வியான்னியின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். இது வியான்னியிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் இரண்டாவது பாடமாக இருக்கிறது.

ஒவ்வொருநாளும் வியான்னியின் பேரும், புகழும் பரவ, அது பிடிக்காத ஒருசில விஷமிகள் வியான்னியைப் பற்றி தவறாகப் பேசத் தொடங்கினர்கள. ஆனால் வியான்னியோ அந்த விமர்சனங்களை எல்லாம் கண்டுகொள்ளாது தன்னுடைய வழியில் சென்றார். அவருக்கு ஆயராக இருந்தவர் கூட, “வியான்னியைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும், அவரைப்பற்றி வரும் எந்த வதந்தியையும் நான் நம்ப மாட்டேன்” என்று சொல்லி வியான்னிக்கு பக்கபலமாக இருந்தார்.

பணி வாழில் ஈடுபட்டிருக்கும் நம்மீது ஏராளமான விமர்சங்கள் வரலாம். ஆனால் நாம் அதை வியான்னியைப் போன்று புறந்தள்ளவேண்டும் என்பதை அவர் நமக்குக் கற்றுத் தரும் மூன்றாவது பாடமாக எடுத்துக்கொள்வோம்.

இப்படி பாவிகளை மனதிருப்புவதிலும், இடைவிடாது ஜெபிப்பதிலும் தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்த வியான்னி தன்னுடைய 74 ஆம் வயதில் இறையடி சேர்ந்தார். 1925 ஆம் ஆண்டு இவர் புனிதராக உயர்த்தப்பட்டார்.

இவரது விழாவைக் கொண்டாடும் நாம் இவரைப் போன்று வலுக்குன்றியர்களாகிய நம்மில் கடவுளின் வல்லமை சிறந்தோங்கச் செய்வோம், ஜெபிக்கும் மனிதர்களாக வாழ்வோம். பணிவாழ்வில் வரும் இடர்களை ஒதுக்கிவிட்டு, இறைவழியில் தொடர்ந்து நடப்போம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

ser

செல்லும் செல்வம்!

'செல்வம்' என்பது எப்போது நம் கைகளை விட்டுச் 'செல்வோம்' என்று நிற்பதால்தான், செல்வத்திற்கு 'செல்வம்' என்று பெயர் வந்தது என 'அர்த்தமுள்ள இந்துமதம்' நூலில் பதிவு செய்கிறார் கண்ணதாசன்.

செல்வம் என்று வரும்போதெல்லாம் விவிலியம் இரண்டுவகை கருத்துக்களைக் கொண்டிருக்கிறது: ஒரு பக்கம், செல்வம் அறவே கூடாது என்றும், 'பண ஆசையை அனைத்து தீமைக்கும் ஆணிவேர்' என்றும் கற்பிக்கின்றது. மறு பக்கம், பயன்படுத்தப்படும் உருவகங்கள் எல்லாம் 'புதையல்,' 'முத்து' என்று செல்வம் பற்றியதாகவே இருக்கிறது. ஒரு பக்கம், செல்வம் என்பது இறைவனின் ஆசீர் என்று சொல்லப்படுகிறது. மறு பக்கம், ஏழையரின் அருகில்தான் இறைவன் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. எதை எடுத்துக் கொள்வது? எதை விடுவது? செல்வத்தைப் பிடித்துக் கொள்வதா? விட்டுவிடுவதா? செல்வத்தை நாடுவதா? அல்லது அதை விட்டு ஓடுவதா? செல்வம் நமக்குத் தருகின்ற வாழ்வை நாடுவதா? அல்லது வாழ்வு தருகின்ற செல்வத்தை நாடுவதா? செல்வம் தரும் வாழ்வா? வாழ்வு தரும் செல்வமா?

'நிலைவாழ்வு பெற நான் என்ன செய்ய வேண்டும்?' என்று (லூக் 10) இயேசுவை ஒரு திருச்சட்ட அறிஞர் கேட்க, அந்தக் கேள்வியின் பின்புலத்தில் 'நல்ல சமாரியன்' எடுத்துக்காட்டைச் சொல்கின்றார் இயேசு. இன்றைய நற்செய்தியிலும் (காண். லூக் 12:13-21) கேள்வி ஒன்றை முன்வைக்கின்றார் கூட்டத்திலிருக்கும் ஒருவர். 'பெயரில்லாத இந்த நபரில்' நாம் நம் ஒவ்வொருவரையும் வைத்துப் பார்க்கலாம். 'போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக் கொள்ளுமாறு என் அண்ணனுக்குச் சொல்வீரா?' என்று கேட்கின்றார் அந்த ஒருவர். அண்ணனுக்கு இரு பகுதியும், தம்பிக்கு ஒரு பகுதியும் சொத்து என்பது இணைச்சட்டம் சொல்லும் விதிமுறை (21:27). கேள்வி கேட்பவரின் அண்ணன் தன் தம்பிக்குச் சேர வேண்டியதைக் கொடுக்க மறுக்கிறார். அதன் காரணம் இங்கே சொல்லப்படவில்லை. இயேசு விடையாக மற்றொரு கேள்வியைப் போடுகின்றார்: 'என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?' முதல் ஏற்பாட்டில் இம்மாதிரி வேலையை மோசே செய்திருக்கிறார் (காண். விப 2:14, எண் 27:1-11). இயேசுவின் கேள்வி அறிவுரையாக மாறுகின்றது: 'எவ்வகைப் பேராசைக்கும் இடம் கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது!' என்கிறார்.

இயேசுவின் அறிவுரை இரண்டு கூறுகளைக் கொண்டிருக்கிறது: (அ) பேராசை அறவே கூடாது. (ஆ) உடைமைகள் ஒருவருக்கு வாழ்வு தருவதில்லை.

தொடர்ந்து இயேசு ஓர் உருவகம் தருகின்றார். 'அறிவற்ற செல்வன்' என்று இந்த உருவகத்திற்கு பெயர் தரப்படுகின்றது. ஆனால், இந்த செல்வன் அறிவற்றவர் அல்லர். அறிவானவர்தான்! அறிவற்ற ஒருவரால் எப்படி தன் கிடங்குகளே கொள்ளாத அளவிற்கு தானியத்தை உற்பத்தி செய்ய முடியும். இந்த செல்வன் அறிவாளி மட்டுமல்ல. கடின உழைப்பாளி. 'என் வயிற்றுக்கு நான் உழைக்க வேண்டும்,' 'உழைக்க மனமில்லாதவன் உண்ணலாகாது!' என்று தன் வயிற்றுக்குத் தான் உழைக்கின்றார். இவன் யாரையும் ஏமாற்றி சொத்து சேர்க்கவில்லை. தனக்காக உழைத்தவர்களின் கூலியை மறுக்கவில்லை. மேலும், இவர் நல்ல மேனேஜர். திட்டமிடுவதில் கைதேர்ந்தவர். ஆகையால்தான், 'தானியத்தைக் கொள்வதற்கு கிடங்கு போதாது' என்று அதை மேம்படுத்த முயற்சி செய்கின்றார். இதுவரைக்கும் அவர் செய்தது சரிதான். ஆனால், இதற்குப் பின் அவர் தன் உள்ளத்தைப் பார்த்துச் சொல்லும் வார்த்தைகள்தாம் இயேசுவைப் பொறுத்தவரையில் தவறாகின்றன.

செல்வரின் உள்ளக்கிடக்கையை 'தன் உள்ளம் பேசுதல்' (சோலியோலோக்வி) என்ற இலக்கியப் பண்பைக் கொண்டு பதிவு செய்கின்றார் லூக்கா. ஒவ்வொருவரின் உள்ளத்திலிலும் இருப்பதை அறிபவர் இறைவன் என்று நாம் இங்கே பொருள் கொள்ள முடிந்தாலும் (காண். 12:2-3, 1:51, 2:35, 3:15), நம் ஒவ்வொருவரின் உள்ளமும் ஒவ்வொரு நொடியும் எதையாவது பேசிக்கொண்டே இருக்கிறது என்பதையும் நாம் மறுத்துவிட முடியாது.

'நான் என்ன செய்வேன்?' என்று கேட்கின்றார் செல்வர். இந்தக் கேள்வியில் அவரது ஏக்கமும், ஏதாவது செய்ய வேண்டும் என்னும் ஆர்வமும் தெரிகிறது. அவரின் கேள்விக்கு அவரே பதிலும் சொல்கின்றார். அவரின் பதிலில் மூன்று எதிர்கால நிகழ்வுகள் உள்ளன: 'நான் களஞ்சியத்தை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்,' 'என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்,' என் நெஞ்சிடம் சொல்வேன்!' மேலும், 'நான்,' 'என்,' 'எனது' என்னும் வார்த்தைகள் இந்தச் செல்வர் எந்த அளவுக்கு தன்னை மட்டுமே மையப்படுத்தியவர் என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

'என் நெஞ்சமே! உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. நீ ஓய்வெடு! உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு!' என்கிறார் செல்வர். பணம் பெற்றவரின் வாழ்வு 'உண், களி, கொண்டாடு' என்று இருப்பதாக விவிலியத்தில் மற்ற நூல்களும் சான்று பகர்கின்றன (காண். சீரா 11:19, 1 ஏனோக் 97:9, எசா 22:12-14, தோபி 7:10-11, 1 கொரி 15:32). இவர் தன் நெஞ்சிலும், எண்ணத்திலும் இருந்து மற்ற எல்லாரையும் வெளியேற்றி விடுகிறார்.

இவரும், இவரின் செல்வங்கள் மட்டுமே உண்மை என்று அவர் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அங்கே ஒலிக்கிறது கடவுளின் குரல்: 'அறிவிலியே! இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவை ஆகும்?' என்று கேட்கிறார் கடவுள். 'என் எதிர்காலம் இப்படித்தான் இருக்கும்!' என்று செல்வர் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், அவரின் மற்றொரு எதிர்காலத்தை அவருக்குச் சுட்டிக் காட்டுகிறார் கடவுள். 'மகிழ்ந்திரு' (எஃப்ராய்ன்) என்ற செல்வரின் இறுதி வார்த்தையை 'முட்டாள்' (அஃப்ராய்ன்) என தன் முதல் வார்த்தையாக மாற்றிப் போடுகின்றார் கடவுள். 'எல்லாம் எனக்கே' என்று நினைத்த செல்வரிடம், 'இதெல்லாம் வேறொருவருடையதாகும்!' என்கிறார் கடவுள்.

12:21ல் கதையின் அறநெறி சொல்லப்படுகிறது: 'கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே!' ஒருவர் சேர்க்கும் செல்வம் அவருக்காக என்று இருந்தாலும், அவர் இறந்தபின் மற்றவருக்கு விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கின்றார். மேலும், தனக்காக செல்வம் சேர்ப்பவர் கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவர் என்று சொல்லப்படுகின்றார்.

நாம் சேர்த்து வைக்கும் சொத்துக்களை, செல்வத்தை நாம் எடுத்துச் செல்ல முடியாது, அதை நாம் எடுத்துச் செல்ல முடியாதது மட்டுமல்ல, அதற்கு உரிமை இல்லாத ஒருவருக்கு அனைத்தையும் விட்டுச்செல்ல வேண்டும் என்பதே வாழ்வின் எதார்த்தம். இந்த எதார்த்தத்தை இன்றைய முதல் வாசகமும் (காண். சஉ 1:2, 2:21-23) பதிவு செய்கின்றது. 'வீண், முற்றிலும் வீண்!' என தன் நூலைத் தொடங்குகின்ற சபை உரையாளர், 'வீண்' என்ற வார்த்தையை 35 முறை பதிவு செய்கின்றார். 'உழைப்பு,' 'இன்பம்,' 'ஞானம்,' 'அறிவு,' 'சட்டம்' என அனைத்தும் 'வீண்' என்று காரசாரமாக விவாதிக்கின்றார். 'வீண்' என்பதன் எபிரேய வார்த்தை 'ஹேபல்.' இந்த வார்த்தைக்கு 'காற்று' அல்லது 'மூச்சு' என்றும், 'நகரக்கூடியது' என்றும் பொருள். எல்லாமே காற்றைப் போல கடந்து செல்லக் கூடியது என்னும் பொருளை இது உணர்த்துவதால் இதை 'வீண்' என்று மொழிபெயர்க்கிறோம். 'ஹேபல்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியேதான் காயினின் சகோதரர் ஆபேலும் அழைக்கப்படுகின்றார். ஆபேலுக்கு நேர்ந்த கொடுமை பற்றி நாம் அனைவரும் அறிவோம். கடவுளுக்கு ஏற்புடைய பலியைச் செலுத்தி, அவருக்கு நல்ல பிள்ளையாய் வாழ்ந்த ஆபேல் காட்டில் கேட்பாரற்றுக் கொலை செய்யப்பட்டுக் கிடக்கின்றார். அந்தக் கொடூரமான கொலையைச் செய்தது அவரின் உடன்பிறந்த சகோதரன் காயின். ஆபேலின் நல்ல செயல்களும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. வாழ்க்கையில் 'இவை எல்லாம் என்னைக் காப்பாற்றும்!' என்று நாம் நினைக்கும் எதுவும் நம்மைக் காப்பாற்றாமல் போகலாம் என உணர்ந்த சபை உரையாளர், அதே 'ஹேபல்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வாழ்வின் வீணானவைகளைச் சுட்டிக்காட்டுகின்றார்.

இன்றைய முதல் வாசகத்தின் இரண்டாம் பகுதியில், 'உழைப்பு வீண்' என வாதிடும் சபை உரையாளர், 'ஞானத்தோடும், அறிவாற்றலோடும், திறமையோடும் ஒருவர் உழைத்தாலும், உழைத்துச் சேர்த்த சொத்து அனைத்தையும் உழைக்காத ஒருவருக்கு அவர் விட்டுச் செல்ல வேண்டும். அவரது உழைப்பு வீண் என்பது மட்டுமல்ல. இது ஓர் அநீதியுமாகும். 'எனக்கு உரிமை இல்லாத ஒன்றை நான் எப்படி பெற்றுக்கொள்ள முடியும்?' மேலும், ஞானத்தோடும், அறிவாற்றலோடும், திறமையோடும் ஒருவர் உழைத்தாலும், அவருக்கு துன்பமும், அமைதியின்மையும், தூக்கமின்மையும், மனச்சோர்வும்தான் மிஞ்சுகிறது.

இவ்வாறாக, நம் செல்வம் நமக்கும் மகிழ்வைத் தருவதில்லை. அது உரிமையில்லாத, உழைக்காத ஒருவரிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறது.

'நிலையானவை-நிலையற்றவை' என்று முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் பேசுவதை, 'மேல்-கீழ்' என்னும் உருவகத்தின் வழியாகப் பதிவு செய்கிறது இன்றைய இரண்டாம் வாசகம் (காண். கொலோ 3:1-5, 9-11). கிறிஸ்தவ வாழ்வின் பண்புகள் பற்றி கொலோசை நகரத் திருச்சபைக்கு அறிவுறுத்தும் பவுல், கிறிஸ்துவோடு ஒருவர் இணைந்து உயிர் பெற்றதன் அடையாளம் 'மேலுலகு சார்ந்தவற்றை நாடுவது' என்கிறார். நாம் இருப்பது கீழுலகம் என்றாலும், நம் எண்ணங்கள் மேலுலகு சார்ந்தவையாக இருக்க வேண்டும். மேலுலகு சார்ந்தவையாக என்பது 'மேலே பார்த்துக் கொண்டிருப்பது' என்ற பொருள் அன்று. மாறாக, காண்பவை யாவும் இவ்வுலகம் சார்ந்தவை. காணாதவை அவ்வுலகம் சார்ந்தவை. காண்பவை நிலையற்றவை. காணாதவை நிலையானவை. 'இவ்வுலகப் போக்கிலான பரத்தைமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், சிலைவழிபாடான பேராசை' அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும் (3:5) என்றும் எச்சரிக்கின்றார். இந்த ஐந்து செயல்களுமே பல நேரங்களில் செல்வச் செழிப்பின் வெளிப்பாடாக இருக்கிறது என்பது கண்கூடு. இந்தச் செயல்கள் எல்லாம் பழைய இயல்பு என்று சொல்கின்ற பவுல், 'புதிய மனித இயல்பை நீங்கள் அணிந்திருக்கிறீர்கள்!' என அவர்களுக்கு நினைவூட்டுகின்றார்.

ஆக, நிலையற்றவைகளை நாடுவது பழைய இயல்பு. நிலையானவைகளை நாடுவது புதிய இயல்பு.

இவ்வாறாக, இன்றைய இறைவாக்கு வழிபாடு, செல்வம் என்பது வாழ்வு தராமல் செல்லும் என்றும், அது தரும் வாழ்வும் வேகமாகச் செல்லும் என்றும் நமக்கு உணர்த்துகிறது.


இன்று இந்த வாசகங்கள் நமக்குத் தரும் வாழ்வியல் பாடங்கள் எவை?

1. செல்வம் என்னும் விநோதம்

'செல்வம் சேர்ப்பது' என்பது எல்லா உயிரினங்களின் வாழ்வியல் தேவை. அரிசையைச் சேகரிக்கும் எறும்பு, கூடு கட்டுவதற்கு முட்களை சேகரிக்கும் காகம், குழியைப் பறித்து சுகமாக அமர்ந்து கொள்ளும் நாய்க்குட்டி, புற்றுக்களைக் கட்டி குடிபுகும் கரையான், பாம்பு என தாழ்நிலை உயிரினங்களும் ஏதோ ஒரு வகையில் உணவையும், உறைவிடத்தையும் சேகரிக்கின்றன. ஆக, செல்வம் சேர்த்தல் என்பது உயிரின் ஒரு பரிமாணம். சேர்த்து வைத்தால்தான் உயிர் வாழ முடியும் என்பது வாழ்க்கை நியதி. இப்படியிருக்க, செல்வம் சேர்த்தல் எப்படி மனித இனத்திற்குப் பாவமாக முடியும். 'அவனன்றி அணுவும் அசையாது' என்பது முதியோர் வாக்கு. 'அவனன்றி கூட எல்லாம் அசைந்துவிடும். ஆனால், அது (பணம்) அன்றி எதுவும் அசையாது' என்பது இன்றைய வாக்கு. 'செல்வம் தேவையில்லை' என்று நான் இப்போது எழுதுவதற்குக் கூட செல்வம் தேவை - கணிணி, மென்பொருள், என் ஓய்வு நேரம், மின்சாரம், அறை, இணைய இணைப்பு, மோடம், சிம்கார்ட். இந்த இரண்டு வார்த்தைகளை நான் எழுதி அவை உங்களை வந்து சேர்வது செல்வம் இருந்தால் மட்டுமே சாத்தியம். ஆக, செல்வம் தேவையில்லை என்று நான் சொன்னால் அது அறிவன்று. செல்வம் வேண்டும், செல்வம் வேண்டாம் என்னும் இரண்டு வட்டங்களின் வரையறை மயிரிழை அளவு வித்தியாசமே. பொய்யாமொழிப் புலவர் வள்ளுவரும், 'அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்கிறார். 'அவ்வுலகம்' இருக்கிறது என்ற நம்பிக்கை இப்போது வேகமாக மறைந்து வருகிறது. ஆனால், இவ்வுலகமும், 'பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்பதும் வேகமாக நினைவிற்கு வருகிறது!

2. 'நான்' என்னும் செல்வம்

நாம் கண்களுக்கு அணியும் மூக்குக் கண்ணாடியும், முகம் பார்த்து சிகை சீவும் கண்ணாடியும் ஒரே கண்ணாடிதான். ஆனால், மூக்குக் கண்ணாடி வழியாகப் பார்த்தால் நமக்கு அடுத்தவர் தெரிகிறார். முகம் பார்க்கும் கண்ணாடி வழி பார்த்தால் நாம் மட்டுமே தெரிகிறோம். எப்படி? கண்ணாடியின் பின் இருக்கும் வெள்ளிப்பூச்சு. வெள்ளி நம்மை மட்டுமே நமக்குக் காட்டுகிறது. இதுதான் வெள்ளியின் ஆபத்து. நாம் இன்றைய நற்செய்தியில் காணும் செல்வருக்குத் தெரிவதெல்லாம் அவரும், அவருடைய வயலும், அறுவடையும், தானிய மூட்டைகளும், களமும், கிடங்கும், நெஞ்சமும், மகிழ்ச்சியும்தான். அவருடைய வேலியைத் தாண்டி அவரால் யோசிக்க முடியவில்லை. ஒருவர் நாய்க்குட்டியைப் பிடித்து நடந்து செல்கிறார் என்றால், கொஞ்ச நேரத்தில் 'அவர் நாய்க்குட்டியைப் பிடித்திருக்கிறார்' என்ற நிலை, 'நாய்க்குட்டி அவரைப் பிடித்திருக்கும்' நிலையாக மாறிவிடுகிறது. செல்வமும் அப்படித்தான். நாம் கொஞ்சம், கொஞ்சமாக வைத்திருக்கும் செல்வம், காலப்போக்கில் நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக வைத்துக்கொள்ள ஆரம்பிக்கிறது. நாம் அதை விட்டாலும், அது நம்மை விடுவதில்லை. கடவுளின் குரல் கேட்கும் வரையில் செல்வருக்கு தன் குரல் மட்டுமே கேட்கிறது. எனக்கும் என் குரல் மட்டுமே அடிக்கடி கேட்க ஆரம்பித்துவிட்டால் என் ஆபத்து தொடங்கிவிட்டது என்பதை நான் உணர வேண்டும்.

3. 'உழைப்பு' என்னும் 'வீண்'

'முயற்சி திருவினையாக்கும்,' 'தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்,' 'கடின உழைப்புக்கு ஈடு இணையில்லை' என்று கடின உழைப்பு பற்றியும், முயற்சியும் பற்றி நமக்கு அறிவுறுத்தப்படுகின்றது. இந்த எல்லா அறிவுரைகளையும் 'வீண்' என்ற ஒற்றை வார்த்தையில் எழுதி முடித்து பேனாவை வீசி எறிகின்றார் சபை உரையாளர். உழைப்பு வீணா? உழைப்பால் பயனில்லையா? உழைப்பு இல்லை என்றால் இன்று நாம் குரங்குகளாகத்தானே இருந்திருப்போம். நாம் இரண்டு கால்களில் நிற்கத் தொடங்கியது முதல், இன்று கால்களே இல்லாமல் பறக்கத் தொடங்கியது வரை எல்லாவற்றுக்கும் காரணம் உழைப்பும், முயற்சியும்தானே. நாம் இன்று கவினுறு முறையில் படைத்திருக்கும் உலகம், அறிவியல், விஞ்ஞான வளர்ச்சி, கல்வி, மருத்துவம், அரசியல், பொருளாதார வளர்ச்சி எல்லாவற்றுக்கும் காரணம் நம் முயற்சியும், உழைப்பும்தானே. உழைப்பு வீண் அல்ல. ஆனால், உழைப்புதான் எல்லாம் என நினைத்து ஓய்வு, குடும்பம், உறவுகள், நட்பு, மகிழ்ச்சி ஆகியவற்றை மறப்பது சால்பன்று. உழைப்பு மட்டும் எல்லாம் அல்ல. உழைப்பின் கனிகளையும் சுவைக்க ஒருவர் நேரம் ஒதுக்க வேண்டும். நாம் 60 வருடங்கள் வாழ்கிறோம் என வைத்துக்கொள்வோம். இந்த 60 வருடங்களுக்குத் தேவையானவற்றை நாம் உழைத்து வைத்தால் போதாதா? 'நாளை என்ன நடக்கும்?' என்ற பயமும், 'இது போதாது!' என்ற எண்ணமும், 'அவனிடம் அதிகம் இருக்கிறது' என்ற ஒப்பீடும் நம்மை உழைத்துக்கொண்டே இருக்க வைக்கிறது. 'என்ன நடந்தாலும் எனக்குக் கவலையில்லை' என்ற துணிச்சலும், 'இது போதும்!' என்ற எண்ணமும, 'என்னிடமும் எல்லாம் இருக்கிறது!' என்ற நிறைவும்தான் மாற்று மருந்து.

4. புது விளையாட்டு விதி

'விளையாட்டு முடியும்போது யாரிடம் அதிகம் பொம்மைகள் இருக்கிறதோ அவரே வெற்றியாளர்' என்று நாம் ஒரு விதியை உருவாக்கி வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறோம். வீடு, வாசல், பெயர், புகழ், பொன், நிலம் என நிறைய பொம்மைகளைச் சேர்த்து வைக்கின்றோம். ஆனால், அந்த பொம்மைகள் நம்மிடம் நிறைய இருந்தாலும் அவற்றை அப்படியே அடுத்த விளையாட்டுக்காரருக்கு (வீட்டுக்காரருக்கு) விட்டுச் செல்கின்றோம். பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில் புதிய விளையாட்டு விதியை அறிமுகம் செய்கின்றார்: 'இவ்வுலகில் நாம் விளையாடிக் கொண்டிருந்தாலும், நம் கண்கள் எப்போதும் மேலுலகு என்னும் கோல்-போஸ்டில் தான் இருக்க வேண்டும்!' நம் எண்ணங்கள், ஓட்டங்கள், திட்டங்கள் அனைத்தும் அதை நோக்கியே இருக்க வேண்டும். நம் பழைய ஜெர்ஸியை அகற்றவிட்டு, புதிய ஜெர்ஸியை அணிந்து கொள்ள வேண்டும். அப்படி அணிந்து கொண்டால், 'இவர் பெரியவர், அவர் சிறியவர்' என்ற வேற்றுமை எண்ணமும், 'இந்த இன்பம் மட்டும் போதும்!' என்ற இன்பத் தேடலும் முடிவுக்கு வரும்.

5. கடவுள் முன்னிலையில் செல்வம்

பேராசையை ஒழிப்பதும், 'என் உடைமைகள் எனக்கு வாழ்வு தருவதில்லை' என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதுமே நமக்கு நிறைவைத் தரும். 'கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய் இருந்து என்ன பயன்?' எனக் கேட்கின்றார் இயேசு. இன்று நாம் நம் சக மனிதர்கள் முன்னிலையில் செல்வம் உள்ளவராய் நம்மையே காட்ட முயற்சிக்கின்றோம். என்னிடம் இல்லாத ஒன்றைக் கூட, 'இது என்னுடையது!' 'இது என் வீடு!' 'இது என் வேலை!' 'இது என் நகை!' 'இது நான் செய்தது!' என காட்டி அடுத்தவரின் நல்லெண்ணத்தைப் பெற விரும்புகிறோம். ஆனால், இவை அனைத்தும் மனிதர் முன் நம்மை இருப்பவர்போலக் காட்டுமே தவிர, இறைவன்முன் காட்டுவதில்லை. மற்றொரு பக்கம், 'உண்போம், குடிப்போம், இறப்போம்! கடவுள் இல்லை!' என்ற ப்ராக்டிகல் நாத்திகமும் வேகமாக வளர்கிறது. ஆனால், 'நான் எவ்வளவு வைத்திருக்கிறேன்!' (ஹேவிங் மோர்') என்பதைவிட, 'நான் எப்படி இருக்கிறேன்' (பீயிங் மோர்) என்பதுதான் இறைவனுக்கு உகந்தது.

நாம் ஒரு நாணயத்தைக் காட்டி, 'இது செல்லுமா!' என்கிறோம். 'செல்லும்' நாணயங்கள்தாம் நம் 'செல்வம்.' 'செல்லா' நாணயங்கள் நம் செல்வங்கள் அல்லவே!
ஆக, 'செல்வதும்,' 'செல்வமும்' நாணயத்தின் இரண்டு பக்கங்கள்போல எப்போதும் இணைந்தே இருக்கின்றன.
'நம் கையைவிட்டு செல்வதால்தான் அது செல்வம்' என்றும்,
'செல்வம் கண்டிப்பாக செல்லும்' என்றும் உணரத்தொடங்கினால், நாம் 'அறிவான செல்வர்கள்!'

ser

sunday homily
A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com