மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலம் பதினேழாம் ஞாயிறு
மூன்றாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
தொடக்க நூல் 18:20-32 | கொலோசையர் 2:12-14 | லூக்கா 11:1-13

செப வாழ்வு

செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி அமெரிக்காவின் வரலாற்றிலே மறக்க முடியாத அதிர்ச்சித் தரும் சோக நாள். உலகிலே உயர்ந்த சக்தி வாய்ந்த நாடு, வல்லரசு (Serower) நாங்கள் தான். பணத்தாலும், பொருளாதாரத்தாலும், தொழிற்துறை விஞ்ஞான ரீதியிலும் நாங்களே உயர்ந்தவர்கள் என்று நினைப்பவர்கள் அமெரிக்கர்கள். ஆனால் நாட்டின் பாதுகாப்பு என்று சிந்திக்கின்றபோது, பணமும், ஆயுதமும், விஞ்ஞான வளர்ச்சியும் என்ன செய்ய முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள். ஏனெனில் நியூயார்க் நகரில் உள்ள ஒப்பற்ற இரண்டு கட்டடங்கள் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு, தவிடு பொடியாகி எண்ணற்ற உயிர்களையே பலியாக்கியபோது நாடே பயந்தது. தன் பலவீனத்தை உணர ஆரம்பித்தது. எதிர்காலம் எப்படி அமையுமோ என்ற பயம் அமெரிக்காவையே கவ்விப் பிடித்தது. இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை . எதுவும் எந்த நேரத்திலும் நடக்கலாம் என்ற நிலையற்ற உணர்வு அமெரிக்கர்கள் மனதில் பதிந்தது. எனவேதான் ஆலயம் தேடாத மக்கள் எல்லாம் இறைவனை, ஆலயங்களைத் தேட ஆரம்பித்தார்கள். இறைவனிடம் மன்றாட வேண்டும் என்ற சிந்தனை ஏற்பட்டது. கும்பகோணத்தில் 90-க்கும் மேலான குழந்தைகள் தீயில் கருகியபோதும் நம் பலவீனத்தைத் தான் இது படம்பிடித்துக் காட்டியது. எல்லா மதத்தினரும் இறைவனிடம் மன்றாடத் தொடங்கியுள்ளார்கள் இந்தப் பச்சிளம் சிட்டுகளுக்காக!

மனிதனுக்கு அடிப்படைத் தேவையாக விளங்குவது சமூக வாழ்க்கை . இதனால் பிறரோடு பழகுதல், உரையாடுதல், தருதல், பெறுதல் என்பது மனித சமூக வாழ்வின் செயல்பாடுகள். இத்தகையச் செயல்பாடுகள் இல்லாத மானிட வாழ்க்கையை நாம் நினைக்க முடியாது. ஆனால் மானிட சமூக உறவுக்கு அப்பாற்பட்ட ஒரு உறவு உண்டு. அதுதான் கடவுள்- மனித உறவு. கடவுளை ஏற்றுக் கொள்ளுதல், அவரை நம்புதல், அவரைப் போற்றிப் புகழ்தல், அவரிடம் வேண்டுதல் செய்தல் போன்றவை கடவுள் * மனித உறவின் கூறுகளாக உள்ளன. இன்றும் நாம் வாசிக்கக் கேட்ட விவிலிய வாசகங்கள் இறை மனித உறவின் ஓர் இன்றியமையாத கூறு, பண்பு என்று தெளிவாக்குகிறது. செபத்தைப் பற்றியத் தெளிவான சில சிந்தனைகளைத் தருகிறது

.

இந்த உலகில் மக்கள் சிலர் எவ்வாறு செபத்தை நோக்குகிறார்கள் என்று சிந்திப்பது நல்லது.

* சமூகத்தில் மற்றும் பொருளாதார தளத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்குக் கடவுள் ஏதாவது புதுமை செய்து குறுக்கு வழிகாட்டமாட்டாரா என்று பிரச்சனையைத் தீர்க்கும் ஆயுதமாகச் செபத்தைச் சிலர் கருதுகிறார்கள்.

தனியாகவோ, அல்லது குழுவாகவோ அமர்ந்து கைதட்டி சப்தமாக பாடி செபித்தால் தன் மனப்பாரம் குறையும், உடல் வலியும் மாறும் என்று செபத்தை ஒரு மருந்தாகக் கருதி அணுகுபவர்கள் உண்டு , ஆண்டவரே நான் இத்தனை முறை உம்மிடம் வந்துள்ளேன். இத்தனை தடவை தவறாமல் நவநாட்களில் கலந்துள்ளேன். எனவே நான் விரும்பும் காரியத்தை எனக்குக் கட்டாயம் தரவேண்டும் என்று கடவுளை மடக்குவது போல, செபத்தைக் கையூட்டாக, பேரம் பேசி லஞ்சம் கொடுப்பதாகச் சிலர் நினைக்கிறார்கள்.

சிலர் கடவுளை ஒரு கடுமையான நீதிபதியாக, காவல் துறை அதிகாரியாகக் கருதி, தண்டனையிலிருந்து தப்பிக்க, காணிக்கை, பாதயாத்திரை, ஆடு, கோழி வெட்டுதல், முடி எடுத்தல் என்றெல்லாம் கடவுளின் கோபத்தைத் தணிப்பதாகச் செபத்தோடு இணைத்துச் செய்கிறார்கள்.

ஆனால் இன்றைய வாசகங்கள், உண்மையான செபம் என்ன? எத்தகைய மனநிலையோடு செபிக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. ஆபிரகாம் இறைவனோடு பேசுவது ஒரு நண்பனோடு பேசுவதுபோல் உறவின் வெளிப்பாடாக இருக்கிறது. நல்லவர்கள் சிலர் இருந்தால் அதற்காக அந்த நகரையே, ஊரையே அழிக்கவேண்டாம் என்று கடவுளிடம் உரிமையோடு மன்றாடுகின்றார்.

செபம் என்பது கடவுளுக்கும் நமக்கும் இடையே நடக்கும் ஒரு உறவின் உரையாடல். செபம் என்பது மனித உள்ளத்தை இறைவன்பால் உயர்த்துவது. மனித உள்ளம் இறைவனோடு இரண்டறக் கலப்பது. இதனால் கடவுளோடு கொண்டிருக்கும் நெருக்கமான உறவின் வெளிப்பாடுதான் செபம். இதைத்தான் ஆபிரகாம் ஆண்டவரோடு வாதாட, கடவுள் கருணை, இரக்கம் உள்ளவர் என்பதையும், அதேநேரத்தில் நீதியும் நிறைந்தவர் என்பதையும் இன்றைய முதல் வாசகம் காட்டுகிறது.

இன்று நற்செய்தியில் வாசித்ததுபோல (லூக். 11:1 - 2) திருமுழுக்கு யோவான் தன் சீடர்களுக்குக் கற்றுத் தந்ததுபோல எங்களுக்கும் கற்றுத் தாரும் என்று இயேசுவின் சீடர்கள் கேட்டார்கள். ஏனெனில் இயேசு தன் தந்தையோடு உறவாடுவதையும், அதனால் அவர் அனுபவிக்கும் நெருக்கமான உறவையும் அவர்களால் உணர முடிந்தது. அந்த நேரத்தில்தான் இயேசு ஒரு சிறப்பான செபத்தை வடிவமைத்துக் கொடுத்தார், இதில் செபம் இறைநோக்கும் அதே சமயத்தில் மனித நோக்கும் கொண்டதாக இருக்க வேண்டும் எனக் காட்டுகிறார், செபத்தில் புகழ்தல், நன்றி கூறல், ஆராதித்தல், மன்றாடுதல் தேவை. இதை உள்ளடக்கிக் கடவுளைப் போற்றிப் புகழவும், இரண்டாவது. மானிடத் தேவைகளை உள்ளடக்கியும் அழகான செபத்தை நமக்கு இயேசு கற்றுத் தந்துள்ளார். இதை வாயால் மட்டும் செபிப்பதல்ல. மாறாக வாழ்க்கையில் இடம் பெறும் செபமாக மாற்ற வேண்டும்.

ஆனால் நான் செபிக்கும்போது நான் கேட்டது கிடைக்க வில்லையே என்று நினைப்பவர்கள் பலர் உள்ளனர். இதனால் இனி நான் கோவிலும் செல்வதில்லை, ஆலயமும் போவதில்லை என்பவர்கள் ஏராளம்!

நம்மிடம் உள்ள தடைகள் என்ன? பாவத்தோடு இருக்கிறோமா?

ஒரு தாய் அலுவலக வேலை முடித்து வீடு திரும்பும்போது தன் குழந்தைக்குத் தின்பண்டம் வாங்கி வருகிறாள். தாயைக் கண்ட மகன் ஓடோடி வந்து தாயின் கையில் உள்ள தின்பண்டத்தைப் பறிக்கப் பார்க்கிறான். தாய் கொடுக்க மறுக்கிறாள், மகனே! வீட்டுக்கு வா. வீதியில் விளையாடி. உன் கையெல்லாம் ஒரே தூசி. முதலில் கையைக் கழுவு. அதன்பின் இந்தப் பண்டத்தைத் தருவேன் என்கிறாள் அந்த அன்புத் தாய், ஆம்! நாம் பாவத்தோடு எதையும் இறைவனிடம் பெற முடியாது. நமது குற்றங்களுக்காக முதலில் இறைவனிடம் மன்னிப்புப் பெற வேண்டும் (கொலோ. 2:13).


* புனித பேதுரு (1 பேதுரு 1:15) கூறுவதுபோல உங்களை அழைத்தவர் தூய்மையுள்ளவராக இருப்பதுபோல நீங்களும் உங்கள் நடத்தையிலெல்லாம் தூய்மை உள்ளவராக இருங்கள். உங்கள் வானகத் தந்தை நிறைவுள்ளவராக இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவராக இருங்கள் என்கிறார் இயேசு (மத். 6:48) தூய உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர் (மத். 5:8) நீங்கள் தீய எண்ணத்தோடு கேட்கிறீர்கள். கேட்டாலும் அடைவதில்லை (யாக். 4:3)

இரண்டாவது, பிறரை மன்னிக்கும் உள்ளம் கொண்ட வர்களாய் இருந்தால்தான் செபிக்க முடியும். செபிப்பதையும் பெற முடியும், * நீங்கள் உங்கள் பகைவரிடம் அன்பு செலுத்துங்கள். அவர்களுக்கு நன்மை செய்யுங்கள் (லூக். 6:35)
* உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவராக இருங்கள் (லூக், 6:36)
* எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால்தான் உங்களுக்கும் அளக்கப்படும் (லூக், 6:38)
*அப்பா பிதாவே! இவர்களை மன்னியும். ஏனெனில் இவர்கள் செய்வது இன்னதென்று தெரியாது செய்கிறார்கள் (லூக். 23:34)
* நாமும் கர்த்தர் கற்பித்த செபத்தில் சொல்லுகிறோம். நாங்கள் பிறரை மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னித்தருளும் (லூக். 11:4)
* காணிக்கைச் செலுத்த வரும்போது மனத்தாங்கல் இருந்தால் முதலில் சமாதானம் செய் (மத். 5:23-24)
மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில், உங்கள் வானகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார் (மத், 6:15)

மூன்றாவதாக, நாம் பரிசுத்த உள்ளத்தோடு கேட்கலாம். சில நேரத்தில் கேட்டும் பெறாமல் இருக்கலாம். ஏனெனில் அது நமக்குத் தேவையா என்பதை அறியாமல் இருப்போம். அறிந்த இறைவன் நமக்குத் தேவை இல்லையென்றால் தராமல் இருக்கலாம்,

நான்கு வயது சிறுவன் தன் தாயோடு இரயில் பிரயாணம் செய்தான். வண்டியில் உட்கார்ந்ததும் அம்மாவிடம் இது என்ன! அது என்ன? என்று ரயிலில் உள்ள பொருட்களைப் பார்த்துக் கேள்வி கேட்க ஆரம்பித்தான். குறிப்பாக சங்கிலியைப் பார்த்து அது என்ன என்று கேட்டான், இதற்கு அபாயச் சங்கிலி என்று பெயர், இதைப் பிடித்து இழுத்தால் ஒடுகின்ற ரயில் நிறுத்தப்படும் என்றாள் தாய், ரயிலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் பொம்மை கீழே விழுந்துவிட்டது, அம்மா! சங்கிலியைப் பிடித்து இழுங்கள் என அழுதான், அடம் பிடித்தான், ஒப்பாரி வைத்தான். ஆனால் தாயோ இழுக்கவில்லை. குழந்தையின் வேண்டுதலுக்குச் செவி கொடுக்கவில்லை, ஏனெனில் இந்தச் சிறு பொம்மைக்காக அத்தனை பேருடைய பயணத்தையும் தடை செய்ய விரும்பவில்லை அந்தத் தாய். அதுபோலத்தான் இறைவனும் சில வேளைகளில் இவ்வாறு செயல்படுவது உண்டு,

உலகத் தந்தையர்கள் தம் பிள்ளைகளின் தேவைகளை அறிந்திருக்கிறார்கள் என்றால் நம் வானகத் தந்தை நம் தேவைகளை நன்றாக முழுமையாக அறிந்திருக்கிறார். செபத்தின் முக்கியம் * இயேசு வேண்டுவதற்காக, ஒரு மலைக்குப் போனார். அங்கு கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார் (லூக். 6:12) * சோதனைக்கு உட்படாதபடி விழித்திருந்து செபியுங்கள் (மத்,26:41)

* இடைவிடாது செபியுங்கள் (1 தெச. 5:17) * செபமற்ற வாழ்வு செத்த வாழ்வு * குடும்ப செபம் இல்லாத வீடு கூரை இல்லாத வீடு * நம் செபம் அறிவுப்பூர்வமாக மட்டும் இருக்கக் கூடாது; மாறாக உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும்
அன்னை தெரெசா இத்தனை ஆயிரம் பேரை வைத்து எவ்வாறு பராமரிக்க முடிந்தது என்று கேட்டபோது, நற்கருணை நாதருக்காக நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் செலவிடுகிறோம். அவர் எங்களை வழிநடத்துகிறார் என்றார்.

காந்தி மகான் ஒவ்வொரு வெள்ளியும் மௌன விரதம் இருந்து செபித்தார்.

ser

கதவு திறக்கும் சில ஆண்டுகளுக்கு முன் வேளாங்கண்ணிப் பங்கிலே நடந்த நிகழ்ச்சி இது. ஆந்திராவிலிருந்து தமிழ் தெரிந்த தாயொருவர் தன் மகனோடு வேளை நகருக்கு வந்திருந்தார். சுமார் பன்னிரெண்டு வயது நிரம்பிய தன் மகனுக்கு புது நன்மை கொடுக்கவேண்டும் என்றார். உங்களுடைய பங்குத் தந்தையின் கடிதம் இருந்தால்தான் புதுநன்மை கொடுக்கமுடியும் என்றேன். அதற்கு அந்தத் தாய், புது நன்மை கொடுப்பது பற்றி எனது பங்குத் தந்தையிடம் பேசிவிட்டேன். ஆனால் என்னால் கடிதம் வாங்க முடியவில்லை. காரணம், நான் இங்கு புறப்பட்டபோது அவர் பங்கு இல்லத்தில் இல்லை என்றார். அதற்கு நான், சரி, பிறகு வந்து பாருங்கள் என்றேன். அந்தச் சிறுவனும், ஃபாதர், தயவு செய்து எனக்குப் புது நன்மை கொடுங்கள். சட்டையெல்லாம் தச்சி எடுத்துகிட்டு வந்துட்டோம் என்றான்.

மறுநாள் என் அறைக்குள் தாயும், மகனும்! சரி, உங்கள் பங்குத் தந்தையின் ஃபோன் நம்பராவது தெரியுமா? என்றேன். அந்தத் தாய் தவறான நம்பர் ஒன்றைக் கொடுத்தார். முயற்சி செய்தேன்; எந்தப் பயனும் இல்லை. நீங்களே இந்த நம்பருக்குப் ஃபோன் செய்து உங்கள் பங்குத் தந்தையை என்னோடு பேசச் சொல்லுங்கள் என்றேன். அன்று மாலை முயற்சி செய்து பார்த்துவிட்டு, என்னால் பங்குத் தந்தையோடு பேசமுடியவில்லை என்றார் அந்தத் தாய்!

ஆந்திராவிலிருந்த, எனக்குத் தெரிந்த, அருள்பணியாளர் ஒருவரோடு தொலைபேசியில் பேசினேன். அவர் ஒரு தொலைபேசி எண்ணைக் கொடுத்து அந்த எண்ணோடு தொடர்பு கொள்ளச் சொன்னார். நானும் அப்படியே செய்தேன். எப்படியோ, கடைசியாக அந்தத் தாயின் பங்குத் தந்தையோடு பேசினேன். உத்தரவு கிடைத்தது. அந்தச் சிறுவனுக்கு புதுநன்மை அளிக்கப்பட்டது.

மூன்று நாள்கள் என் அறைக் கதவைத் தட்டிக்கொண்டேயிருந்த அந்தப் பெண்ணுக்கு அவர் விரும்பியது கிடைத்தது. இந்தப் பெண்ணைப் போன்ற நண்பனொருவனை இன்றைய நற்செய்தியிலே நாம் சந்திக்கின்றோம். கதவு சாத்தப்பட்டிருந்தது. ஆனால் நண்பனோ, நண்பா! கதவைத் திற என்றான்.

கதவைத் தட்டுவதை அவன் நிறுத்தவே இல்லை ! இறுதியாகக் கதவு திறந்தது. தொல்லையின் பொருட்டு கதவைத் திறந்த நண்பன், தன் நண்பன் கேட்டதைக் கொடுத்தான்.

இந்த உவமை நமக்குச் சுட்டிக்காட்டும் உண்மை என்ன? இறைவன் தமது மனத்தைச் சில நேரங்களில் மாற்றிக்கொள்வதுண்டு ! யோனா நூலில் 3:10 - இல் கடவுள் தம் மனத்தை மாற்றிக்கொண்டார் என்று படிக்கின்றோம். யோவான் நற்செய்தியில் 2:4 -இல் எனது நேரம் இன்னும் வரவில்லையே என்கின்றார் இயேசு. ஆனால் 2:7 - இல் தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள் என்கின்றார். இயேசு தனது மனத்தை மாற்றிக்கொள்வதைக் காண்கின்றோம்.

இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் ஆபிரகாமின் வேண்டுதலுக்கிணங்க அவரது மனத்தை மாற்றிக்கொள்வதைப் பார்க்கின்றோம். பத்து நல்லவர்கள் இருந்தால் கூட சோதோம், கொமோராவை அழிப்பதில்லை என்று ஆண்டவர் ஆபிரகாமிடம் கூறுவதைக் காண்கின்றோம்.

இந்த உண்மை நமது மன்றாட்டு வாழ்வில் நாம் மனம் தளர்ந்து போகாமல் நாம் மன்றாட உறுதுணையாக இருக்கவேண்டும். இவ்வளவு வேண்டியும் இன்னும் இது நடக்கவில்லையே என எண்ணி நாம் நமது மன்றாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடக்கூடாது.

இன்றைய இரண்டாவது வாசகத்தில் புனித பவுல் அடிகளார், கடவுள் உங்களை அவரோடு (கிறிஸ்துவோடு) உயிர்பெறச் செய்தார்; நம் குற்றங்கள் அனைத்தையும் மன்னித்தருளினார் (கொலோ 2:13) என்று கூறுகின்றார். இது என் வாழ்வைப் பொருத்தவரையில் உண்மையே என நம் ஒவ்வொருவராலும் இன்று சொல்ல முடியுமா? முடியும் என்றால் இறைவனுக்கு நன்றி சொல்வோம். இல்லையென்றால் நாம் அழிவுறாதபடி இடைவிடாது மன்றாடி இறைவனிடமிருந்து பாவமன்னிப்பைப் பெற்று புண்ணிய வாழ்விற்கு உயிர்த்தெழுந்து வளமுடன் வாழ்வோம்.
மேலும் அறிவோம் :

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (குறள் : 7).

பொருள் : தன்னிகரற்ற அருளாளனாகிய இறைவன் திருவடி சேர்வோர் உள்ளத்தில் துன்ப துயரங்கள் நீங்கிவிடும். ஏனையோர் மனக்கவலை மாறாது.

ஒரு மனைவி தன் கணவரைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்; " என் கணவர் கடவுளைப் போன்றவர்; ஏனெனில் நான் என்ன சொன்னாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளமாட்டார். " ஒரு சிலர் கடவுளைப் பற்றி இவ்வாறு நினைக்கின்றனர். கடவுள் நமது செபத்தைக் கேட்கின்றாரா? அல்லது காது கேளாத செவிடரா ? இக்கேள்விக்குக் கடவுள் கூறும் பதில் என்ன? "செவியைப் பொருத்தியவர் கேளாதிருப்பாரோ?" (திபா 94:9). மனிதருக்குக் கேட்கும் செவியைக் கொடுத்த அவர் மனிதருடைய குரலைக் கேட்கின்றார், அவர் செவிடர் அல்ல, இன்றைய பதிலுரைப் பாடல் கூறுகிறது: " ஆண்டவரே, நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்” (திபா 138:3).

கடவுளிடம் நாம் கேட்பதை மனந்தளராமல் கேட்க வேண்டும் கான்று இன்றைய நற்செய்தியில் வலியுறுத்துகிறார் இயேசு. நண்பர் ஒருவர் அப்பம் கேட்டுத் தன் வீட்டின் கதவை நள்ளிரவில் விடாமல் தட்டிக் கொண்டிருந்ததால் அவரின் தொல்லை தாங்காமல் அவருக்குத் தேவையான உணவைக் கொடுக்கிறார் ஒருவர். ஒரு மனிதனே தன்னிடம் விடாமல் கேட்ட ஒருவருடைய வேண்டுகோளை நிறைவேற்றினால், நல்ல கடவுள் நாம் அவரிடம் இடைவிடாமல் கேட்கும்போது, நிச்சயமாக, நாம் கேட்பதைக் கொடுப்பார். எனவே, நாம் கேட்க வேண்டும், அதாவது தட்டிக் கொண்டே இருக்க வேண்டும். கேட்பதையோ தட்டுவதையோ நிறுத்தக்கூடாது ,

கடவுளிடம் பேரம்பேச முடியுமா ? இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம் கடவுளிடம் பேரம் பேசுகிறார்: கடவுளும் அவருடைய பேரத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வருகிறார். ஆனால் சோதோம் நகரில் 13 நீதிமான்கள் கூட இல்லாததால் அந் நகர் தீக்கிரையானது இக்காலத்தில் நிலைமை மாறிவிட்டது என்று கூற முடியுமா? "மானிட மகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் கா ண் பாரோ?" (லூக் 18:8) என்று ஒரு பெரிய கேள்வியை எழுப்பிவிட்டுச் சென்றுள்ளார் இயேசு, கடவுளின் நன்மைத் தன்மை தகடுகளவும் குறைவதில்லை ; ஆனால் மக்களின் நம்பிக்கைதான் குறைந்துகொண்டே வருகிறது, நம்புவோர்க்கு எல்லாம் கைகூடும்,

புனித ஜான் மரிய வியான்னி என்பவர் செபத்தின் வல்ல மையைப் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்: "கடவுள் உலகையே ஆளுகிறார், ஆனால் செபிக்கத் தெரிந்த மனிதரோ கடவுளையே ஆளுகிறார். கடவுள் 'முடியாது' 61 ன் று சொன்னபோதிலும், செபிக்கத் தெரிந்த மனிதர் கடவுளை 'முடியும்' என்று சொல்ல வைக்கிறார்."

அப்பா பெரியவரா? அம்மா பெரியவரா? இந்தக் கேள்விக்கு ஒரு சிறுவன் கூறும் பதில்: "நிச்சயமாக அம்மாதான் பெரியவர், என் அப்பா அவருடைய தொழிற்சாலையில் ஆயிரம் பேரை அடக்கி வேலை வாங்குகிறார். ஆனால் வீட்டிலோ என் அம்மா என் அப்பாவையே அடக்கி வேலை வாங்குகிறார்."

செபிக்கத் தெரிந்த மனிதர் கடவுளையே ஆளுகிறார் என்று புனித ஜான் மரிய வியான்னி கூறியது உண்மை என்பதைக் கானாவூர் திருமணத்திலே நாம் காண்கின்றோம். மரியா இயேசுவிடம் " திராட்சை இரசம் தீர்ந்து விட்டது” (யோவா 2:3) என்று கூறியபோது, இயேசு மரியாவிடம்), "எனது நேரம் வரவில்லை " (யோவா 2:4) என்கிறார். அதாவது, " புதுமை செய்ய முடியாது" என்கிறார். ஆனால், மரியா மனந்தளராமல் பணியாளர்களிடம் "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" (யோவா 2:5) என்று கூறுகிறார், புதுமை அரங்கேறுகிறது. தண்ணீர் திராட்சை இரசமாகிறது. செபத்தின் வல்லமை வெளிப்படுகிறது. 'முடியாது' என்று சொன்ன இயேசுவை மரியா தமது வேண்டுதலால் 'முடியும்' என்று சொல்ல வைக்கிறார்.

மகன் அப்பாவிடம் 'ஸ்கூட்டர்' கேட்கின்றான். அப்பா வாங்கிக் கொடுக்க மறுக்கிறார், அம்மா தலையிட்டு, " இந்தாங்க! அவன் கேட்கிறத வாங்கிக்கொடுங்க" என்கிறார் , அப்பா மறுத்துப் பேசாமல் மகனுக்கு "ஸ்கூட்டர்" வாங்கிக் கொடுக்கிறார், ஏனெனில் அவர் தன் மனைவி கிழிச்சக் கோட்டை ஒருபோதும் தாண்டவே மாட்டார்! "இந்தாங்க" என்ற சொல்லுக்கு எவ்வளவு சக்தி!

நாம் செபிக்கும்போது நாம் கடவுளின் பிள்ளைகள் என்ற உரிமையுடன் செபிக்க வேண்டும். நாம் அடிமைகள் அல்ல; கடவுளின் பிள்ளைகள், எனவே கடவுளை "அப்பா தந்தையே" என் அழைக்கின்றோம் (உரோ 8:15). தம் மகனையே கையளித்த கடவுள். தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளுவார் (12) ரோ 8:32). இன்றைய நற்செய்தியில் இயேசு தெளிவாகக் கூறுகிறார் ! கடவுள் தம்மிடம் கேட்பவருக்குத் தூய ஆவியைக் கொடையாகக் கொடுக்கிறார் (லூக் 11:13), கொடையை விட கொடையாளியே முக்கியம் என்பதை நாம் அறிய வேண்டும்.

முடிவாக வாழ்வுக்கும் செபத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு, "நாம் எப்படி வாழ்கின்றோமோ அப்படியே செபிக்கின்றோம். நாம் நன்றாக வாழ்வதில்லை; ஏனெனில் நாம் நன்றாகச் செபிப்பதில்லை, நம் நன்றாக செபிப்பதில்லை, ஏனெனில் நாம் நன்றாக வாழ்வதில்லை."

முழுமையாகச் செபிக்கின்றவர், முழுமையான மனிதர் : அரை குறை யாகச் செபிக்கின்றவர், அரை குறை யான மனிதர்; ஒருபோதும் செபிக்காதவர், மனிதரே இல்லை ,

"எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்'' (1தெச 5:15)

இறைவேண்டல் செய்வோமா?

நிகழ்வு
தொழில் சம்பந்தமாக கிராமத்திலிருந்து நகரத்திற்குச் சென்ற பெரியார் ஒருவர் தன்னுடைய வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு, நகரில் இருந்த ஒரு பெரிய உணவகத்தில் சாப்பிடச் சென்றார். அந்த உணவகம்தான் நகரத்திலேயே நல்ல உணவகம் என்று பெயர் பெற்றிருந்ததால், ஏராளமான பேர் அந்த உணவகத்திற்குச் சாப்பிட வந்திருந்தார்கள்.

கிராமத்திலிருந்து சென்ற பெரியவர் உணவகத்தில் ஓரமாக இருந்த ஓர் இருக்கையில் போய் அமர்ந்துகொண்டு, தனக்குப் பிடித்தமான உணவு வகையினைச் சொல்லிவிட்டு, உணவுக்காகக் காத்திருந்தார். சிறிதுநேரத்தில் அவர் கேட்ட உணவு வந்தது. அவர் உடனடியாகச் சாப்பிடத் தொடங்காமல், ஒரு நிமிடம் கண்களை மூடி கடவுளிடம் வேண்டிவிட்டுச் சாப்பிடத் தொடங்கினார். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த, அவர்க்கு முன்பாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒருசில விடலைப் பசங்கள் அவரிடம், “என்ன பெரியவரே! உங்கள் ஊரில் இருக்கின்ற எல்லாரும் சாப்பிடுவதற்கு முன்னம், இறைவனிடம் வேண்டிவிட்டுத்தான் சாப்பிடுவீர்களா?” என்று நக்கலாகக் கேட்டார்கள். அதற்கு அவர் அவர்களிடம், “எங்கள் ஊரில் இருக்கின்ற பன்றிகளைத் தவிர, மற்ற எல்லாரும் இறைவனிடம் வேண்டிவிட்டுத்தான் சாப்பிடத் தொடங்குவார்கள்” என்றார். இதைக்கேட்டு அந்த விடலைப் பசங்கள் வெட்கித் தலைகுனிந்து நின்றார்கள்.

மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் இறைவேண்டல் செய்யவேண்டும். ஏனென்றால், அலெஸிஸ் கரோலில் என்ற அறிஞர் குறிப்பிடுவதுபோல், ஒரு மனிதன் தனக்கான எல்லா ஆற்றலையும் இறைவேண்டலின் வழியாகவே பெறுகின்றான். இன்றைய இறைவார்த்தை இறைவேண்டலின் முக்கியத்துவத்தையும் எப்படி நாம் இறைவனிடம் வேண்டவேண்டும் என்பதையும் எடுத்துக்கூறுகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இறைவேண்டல் செய்ய கற்றுத்தரக் கேட்கும் இயேசுவின் சீடர்கள்
நற்செய்தியில், இயேசுவின் சீடர்கள் அவரிடம் வந்து, யோவான் தன்னுடைய சீடர்க்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்ததுபோல், எங்கட்கும் கற்றுக்கொடும் என்று கேட்கின்றார்கள். இயேசு தன்னுடைய சீடர்க்கு எப்படி இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தார் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கும் முன்னம், யோவான் தன்னுடைய சீடர்க்கு இறைவேண்டல் செய்ய எப்படிக் கற்றுக்கொடுத்தார் என்பதையும் அவருடைய வாழ்வு எப்படி இறைவேண்டலில் நிலைத்திருந்தது என்பதையும் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தி நூல்கள், யோவான் எப்படி மெசியாவின் வருகைக்காக மக்களை அணியமாக்கினார் என்பதையும் எப்படித் திருமுழுக்குக் கொடுத்தார் என்பதையும் உண்மையை எப்படி உரக்கச் சொன்னார் என்பதையும்தான் அதிகமாகப் பேசுகின்றன. ஆனால், இன்றைய நற்செய்தி வாசகம் அவருடைய வாழ்வின் இன்னொரு பக்கத்தை அதாவது அவருடைய ஆன்மீக வாழ்வை எடுத்துச் சொல்வதாக இருக்கின்றது.

யோவான் தன்னுடைய சீடர்க்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தார் எனில், அவர் எந்தளவுக்கு இறைவேண்டலில் நிலைத்திருந்திருப்பார் என்பதை நாம் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம். இப்படி அவர் இறைவேண்டலில் நிலைத்திருந்ததால்தான் என்னவோ இயேசு அவரை ‘மனிதராகப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் யாருமில்லை’ (லூக் 7:28) என்று சொல்கின்றார். ஆதலால், திருமுழுக்கு யோவான் இறைவேண்டலில் நிலைத்திருந்தக்கூடும். அதனாலேயே அவர் தன் சீடர்க்கு இறைவனிடம் வேண்டக் கற்றுத்தருகின்றார். இதைக் பார்த்து அல்லது கேள்விபட்ட இயேசுவிடம் சீடர்கள், அவரிடம் தங்கட்கு இறைவனிடம் வேண்டக்கற்றுத் தரக் கேட்கின்றார்கள்.

இயேசுவின் சீடர்கள் அவரிடம் எப்படி போதிக்கவேண்டும் என்றோ, எப்படிப் பேய்களை ஓட்டவேண்டுமென்றோ கேட்கவில்லை. மாறாக, அவர்கள் அவரிடம் எப்படி இறைவேண்டல் செய்யவேண்டும் என்று கேட்பது நமது கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது.

இறைவனிடம் வேண்டக் கற்றுத்தரும் இயேசு
தன்னுடைய சீடர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இயேசு அவர்கட்கு இறைவேண்டல் செய்யக் கற்றுத்தருகின்றார். அவர் கற்றுத்தரும் இறைவேண்டல் எப்படிப்பட்டது என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னம், அவர் எப்படி இறைவேண்டல் செய்பவராக இருந்தார் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசு தன்னுடைய பணிவாழ்வின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இறைவேண்டல் செய்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. குறிப்பாக அவர் திருமுழுக்குப் பெறுகின்றபோதும் (லூக் 3:21) மக்கள் கூட்டம் அவரிடம் வருவதற்கு முன்னமும் (லூக் 5:16) பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கும் முன்னமும் (லூக் 6:12) தன்னுடைய சீடர்கள் தன்னை எப்படிப் புரிந்துவைத்திருக்கிறார்கள் என்று கேட்பதற்கு முன்னமும் (லூக் 9:18) உருமாற்றம் அடைகின்றபோதும் (லூக் 9:29) தனியாகவும் (மாற் 1:35) இன்ன பிற வேளைகளிலும் அவர் இறைவேண்டல் செய்தார் என்று விவிலியம் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றது. இப்படி இறைவேண்டலில் நிலைத்திருந்த இயேசுதான் தன் சீடர்க்கு இறைவேண்டல் செய்யக் கற்றுத் தருகின்றார்.

இயேசு தன் சீடர்க்குக் கற்றுத்தரும் இறைவேண்டல் இரண்டு பகுதிகளாக இருக்கின்றது. முதற்பகுதி இறைவனின் ஆட்சி இப்புவியில் வருவதற்காகவும் இரண்டாவது பகுதி நம்முடைய தேவைகட்கு வேண்டுவதாக இருக்கின்றது. உண்மைதான், எப்போதெல்லாம் நாம் இறைவனுக்கு முதலிடம் கொடுத்து, அவருடைய ஆட்சிக்காகவும் அவருடைய திருவுளம் நிறைவேறுவதற்காகவும் மன்றாடுகின்றாமோ அப்போது இறைவன் நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்வார். ஏனெனில், நம்முடைய இறைவன் நாம் கேட்கும் முன்னமே, நம்முடைய தேவைகளை அறிந்துவைத்திருப்பவர் (மத் 6:8). அப்படிப்பட்ட இறைவனை நோக்கி, அவருடைய திருவுளம் நிறைவேற வேண்டுவதே சிறப்பானதாகும்.

இறைவனிடம் தொடர்ந்து மன்றாடச் சொல்லும் இயேசு
இறைவனிடம் வேண்டுகின்றபோது அவர்க்கு முதன்மையான இடம் கொடுத்து வேண்டச் சொல்லும் இயேசு, தொடர்ந்து இறைவனிடம் மன்றாடச் சொல்கின்றார். அதைத்தான் அவர் ‘கேளுங்கள் கொடுக்கப்படும்; தேடுங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் திறக்கப்படும்’ என்கின்றார். இவ்வுண்மையை விளக்க அவர் சொல்லும் உவமைதான், தன்னுடைய நண்பர்க்காக இன்னொரு நண்பரிடம் அப்பம் கேட்கும் நண்பர் உவமையாகும். இவ்வுவமையில் நண்பரின் தொந்தரவின் பொருட்டு இன்னொரு நண்பர் அப்பம் தருவதாக வருகின்றது. இவ்வுவமையில் நாம் கவனிக்க வேண்டியது, கொடுக்க மனமில்லாத நண்பரே தன்னுடைய நண்பர்க்குக் கொடுக்க முன்வரும்போது, தாராளமாகத் தரும் கடவுள் தன்னிடம் கேட்போர்க்கு எவ்வளவு தருவார் என்பதாகும். ஆகையால், பிள்ளைகளாகிய நம் ஒவ்வொர்வர்க்கும் கொடைகளை வாரிவழங்கும் இறைவனிடம் நாம் தொடர்ந்து மன்றாடுவதே சிறப்பானது.

சிந்தனை

‘இறைவேண்டல் என்பது கடவுளின் கைகளில் நம்மை ஒப்படைத்துவிட்டு, அவருடைய திருவுளம் நிறைவேறக் காத்திருப்பது’ என்பார் அன்னைத் தெரசா. உண்மைதான்.

ஆனால் தேவையானது ஒன்றே!

ஏறக்குறைய பதினாறு ஆண்டுகளுக்கு முன், என் குருத்துவப் பயிற்சியின் ஆன்மீக ஆண்டில், தியானம் கற்பிக்க வந்த அருள்பணியாளரிடம், 'கண்களை மூடிக்கொண்டே அமர்ந்திருப்பதால் என்ன பயன்? இப்படிச் செய்வதால் என்ன மாற்றம் நடக்கும்? உலகில் அநீதி மறையுமா? புதிய கண்டுபிடிப்புக்கள் நடக்குமா? நாம் பல இடங்களைச் சுற்றிப் பார்க்க முடியுமா? பலருக்குப் பணி செய்ய முடியுமா? புதியவற்றைக் கற்க முடியுமா? சும்மா யார் வேண்டுமானாலும் கண்களை மூடிக்கொண்டு உட்கார முடியும். இல்லையா?' என்று நான் விவாதித்தது என் நினைவில் இருக்கிறது. பதினாறு ஆண்டுகள் கடந்துவிட்டன. அருள்பணி வாழ்வில் பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. நான் விழித்திருந்தது, பரபரப்பாக வேலை செய்தது, புதிதாகக் கற்றது போன்றவற்றால் உலகில் எந்த மாற்றமும் நடக்கவில்லை என்பதை இன்று நான் கற்றுக்கொண்டேன். உலகம் தன் போக்கில் இயங்குகிறது. என் வேகத்தால் என்னில் மாற்றம் ஏற்பட்டதைவிட என் உடல்நலம் பாதிக்கப்பட்டது என்றே நான் உணர்கிறேன்.

நிறைய வேகம். நிறைய செயல்பாடுகள். எந்நேரமும் எதையே செய்துகொண்டிருக்க வேண்டும் என்று உலகம் சொல்கிறது. நேர மேலாண்மை, உறவு மேலாண்மை, இட மேலாண்மை என்று தன்னுதவி புத்தகங்கள் குவிகின்றன. யூடியூபில் காணொளிகள் நிறைகின்றன. 'உங்கள் நேரத்தை சேமிப்பது எப்படி?' 'உங்கள் பணத்தைச் சேமிப்பது எப்படி?' 'நிறைய நண்பர்களைச் சம்பாதிப்பது எப்படி?' 'குறைவான நேரத்தில் மிகுதியான செயல்களைச் செய்வது எப்படி?' என்று நிறைய 'எப்படி' இருக்கின்றது. நான் வேகமாகச் செல்ல விரும்பவில்லையென்றாலும் நான் எடுத்திருக்கின்ற பொறுப்புக்கள் என்னை வேகமாக இயக்கிக்கொண்டே இருக்கின்றன. கொஞ்ச நேரம் கோவிலில் அமர்ந்தாலும் என் வேலைகளில்தான் என் எண்ணம் இலயிக்கின்றது. என் வேலைகளுக்காக நான் தியாகம் செய்யும் நேரம் என் செப நேரமாகவே இருக்கின்றது. ஏன் இந்த வேகம்? ஏன் இவ்வளவு செயல்பாடுகள்? எனக்கு ஏன் நிறையப் பேரைத் தெரிய வேண்டும்? நான் ஏன் எல்லாரிடமும் நட்போடு இருக்க வேண்டும்? நான் ஏன் எல்லாக் குறுஞ்செய்திகளுக்கும் பதில் அனுப்ப வேண்டும்? நான் ஏன் எல்லா ஃபோட்டோக்களையும் விரும்ப வேண்டும்? நான் ஏன் ஸ்மார்ட்ஃபோன் வைத்துக்கொள்ள வேண்டும்? நான் ஏன் ஆன்லைன் பேங்கிங் செய்ய வேண்டும்?
ஒன்றுமே செய்யாமல் ஓய்ந்திருத்தல் தகாதா?
இலக்குகளே இல்லாமல் வாழ்வது கூடாதா?
வாழ்வே இலக்கு என்று இருக்கும் போது வாழ்வதற்கு ஏன் இழக்குகள்?

என்னுடைய இன்றைய நாள் முழுமையாக வாழாதபோது எதற்காக நாளைக்கான சேமிப்புகள்? என் நண்பர்கள் நாளை என்னோடு இருப்பார்கள் என்பதற்காக நான் அவர்களோடு இன்று பழகுகிறேனா? ஏன் எல்லாவற்றையும் நான் நாளைக்காகச் செய்ய வேண்டும்?

ஒரு பக்கம் செய்ய வேண்டிய வேலை. இன்னொரு பக்கம் எடுக்க வேண்டிய ஓய்வு. இப்படிப்பட்ட குழப்பமான தருணத்தில் ஆண்டவரின் வார்த்தை இன்று நமக்கு ஆறுதலாக வருகிறது: 'ஆனால் தேவையானது ஒன்றே' என்கிறார் ஆண்டவர்.

'தேவதாரு மரங்களருகே ஆண்டவர் ஆபிரகாமுக்குத் தோன்றினார்' என்று தொடங்குகிறது இன்றைய முதல் வாசகம் (காண். தொநூ 18:1-10). 'டைட்டன் ஷோரூம்,' 'கீர்த்தி டென்டல் கிளினிக்,' 'வோடஃபோன் ஷோரூம்,' 'சித்தி விநாயகர் கோவில்' என்று லேன்ட்மார்க்குகள் தோன்றாத அந்த நாட்களில் மரங்களை வைத்தேதான் இடங்கள் அடையாளம் சொல்லப்பட்டன. ஆண்டவர் ஆபிரகாமுக்குத் தோன்றிய இடம் அப்படிப்பட்ட ஒரு லேன்ட்மார்க் தான். தன் கூடாரத்தின் வாயிலில் அமர்ந்திருக்கும் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்க 'மூன்று மனிதர்கள் நிற்கின்றார்கள்.' இந்த 'மூன்று மனிதர்கள்'தாம் 'மூவொரு இறைவனின்' முதல் அடையாளம் என்கிறது நம் கத்தோலிக்க இறையியல். 'ஆபிரகாமின் காத்திருத்தல்' பற்றி வாசிக்கின்ற வாசகருக்கு இரண்டு விடயங்கள் புரிகின்றன: (அ) ஆபிரகாம் வாழ்வில் ஏதோ முக்கிமான நிகழ்வு ஒன்று நடக்கப் போகிறது. (ஆ) ஆபிரகாமின் காத்திருத்தல் அவரின் விருந்தோம்பல் பண்புக்குச் சான்றாக அமைகிறது.

முதலில் ஆபிரகாமின் காத்திருத்தலைப் புரிந்து கொள்வோம். தொடக்க கால சமூகத்தில், குறிப்பாக பாலைநிலங்கள் மிகுந்திருந்த மத்திய கிழக்கு பகுதியில் 'விருந்தோம்பல்' முதன்மையான மதிப்பீடாகக் கருதப்பட்டது. 'நீ இன்று ஒருவருக்குக் கொடுக்கும் தண்ணீரை நாளை உனக்கு வேறொருவருக்குக் கொடுப்பார்' என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. ஆகையால் வழிப்போக்கர்கள் யார் வந்தாலும், அவர்களுக்கு விருந்தோம்பல் செய்வது மத்திய கிழக்கு நாட்டு மரபு. விருந்தோம்பல் மிக மேன்மையான மதிப்பீடாகக் கருதப்பட்டதால்தான், லோத்து தன் இல்லத்தில் வந்திருக்கும் விருந்தினர்களைக் காப்பாற்றுவதற்காக தன் இரு மகள்களை பாலியல் பிறழ்வுக்கு உட்படுத்தத் தயாராக இருக்கின்றார் (காண். தொநூ 19). ஆக, ஆபிரகாமின் காத்திருத்தலும், அந்நியர்களைக் கண்டவுடன் அவர்களை ஓடிச் சென்று வரவேற்றலும், உணவு தந்து உபசரிப்பதும் அவரின் விருந்தோம்பலைக் காட்டுகின்றது. தன் வேலையை அவர் சாராவுடன் பகிர்ந்து செய்கின்றார். இவ்வாறாக, விருந்தோம்பலில் பெண்களும் சம உரிமை பெறுகின்றனர்.

இரண்டாவதாக, ஆபிரகாமின் வழ்வில் நடக்கப் போகும் முக்கியமான நிகழ்வு. ஆபிரகாமின் விருந்தோம்பலில் நிறைவு பெற்ற மூன்று மனிதர்கள் ஆபிரகாமிடம், 'நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும் உன்னிடம் வருவேன். அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்' (18:10) என அவருக்கு ஒரு மகனை வாக்களிக்கின்றனர். இந்த வாக்குறுதியைக் சாராவும் கேட்கின்றார். கேட்ட சாரா டக்கென சிரித்து விடுகின்றார். அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட மகன் 'ஈசாக்கின்' பெயரின் பொருளும் அதுவே - 'அவன் என் சிரிப்பு' அல்லது 'அவன் என் மகிழ்ச்சி.' இவர்களின் இந்த வாக்குறுதி ஆபிரகாம் வாழ்வில் மிக முக்கியமானது. ஏனெனில், ஆபிரகாம்-சாரா தம்பதியினிரின் முதிர்வயதைக் கணக்கில் கொண்டு, இந்த வாக்குறுதி நிறைவேறுமா, இல்லையா என்ற சந்தேகம் வாசகர்களின் மனதில் எழுகின்றது. மேலும், தொநூ 12ல், 'உன் இனத்தைப் பலுகிப் பெருகச் செய்வேன்' என்று ஆண்டவர் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதி நிறைவேறப்போகிறது என்ற நம்பிக்கை எழுகின்றது. தன்னுடைய முதிர்வயதில், தன்னுடைய விருந்தோம்பலில் கருத்தாயிருந்து, தன்னுடைய குழந்தையின்மை பற்றி வருந்திக்கொண்டிருந்த ஆபிரகாம் அந்த மூவரின் பாதங்களில் அமர்ந்ததால் சிரிக்கும் செய்தியைப் பெறுகின்றார். 'தேவையான ஒன்றை' பெற்றுக்கொள்கின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். கொலோ 1:24-28), கிறிஸ்துவின் துன்பம் மற்றும் மாட்சி பற்றிய இறையியலை கொலோசை நகரத் திருஅவைக்கு எழுதும் பவுல், தான் இந்த நேரத்தில் பட்டுக் கொண்டிருக்கும் துன்பமும், திருஅவையினர் பட்டுக்கொண்டிருக்கும் துன்பமும் கிறிஸ்துவில் அவர்கள் இணைந்திருப்பதற்கான அடையாளம் என்பதைச் சுட்டிக்காட்டி, துன்பத்தைப்போல மாட்சியும் பின்தொடரும் என வாக்குறுதி தருகின்றார். வெளியே தங்களுடைய ஆறுதலைத் தேடிக்கொண்டிருந்த கொலோசை நகர மக்களிடம், 'உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்து' என்று பவுல் அவர்களைத் தங்களுக்கு உள்ளே கடந்து செல்லத் தூண்டுகின்றார். வெளியில் இருப்பவை தேவையற்றவை என உணர்கின்ற பவுல், உள்ளிருக்கும் அந்தத் தேவையானது நோக்கி அவர்களை அனுப்புகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (லூக் 10:38-42), கடந்த வாரம் நாம் வாசித்த 'திருச்சட்ட அறிஞரின் கேள்வி மற்றும் நல்ல சமாரியன் எடுத்துக்காட்டின்' (லூக் 10:25-37) தொடர்ச்சியாக இருக்கிறது. 'உன்னை அன்பு செய்வது போல உனக்கு அடுத்திருப்பவரையும் அன்பு செய்வாயாக!' என்ற பிறரன்புக் கட்டளையின் விளக்கமாக 'நல்ல சமாரியன் எடுத்துக்காட்டு' இருக்கிறது என்றால், 'உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் ஆண்டவரை அன்பு செய்வாயாக என்ற இறையன்புக் கட்டளையின் விளக்கமாக இருக்கிறது 'மார்த்தா-மரியா எடுத்துக்காட்டு.' 'ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார்' (10:30) என்று 'நல்ல சமாரியன் எடுத்துக்காட்டு' தொடங்குவதுபோல, 'பெண் ஒருவர் இயேசுவை தன் இல்லத்தில் வரவேற்றார்' (10:38) என்று தொடங்குகிறது. பெண்ணின் வரவேற்பை ஏற்று அவரின் இல்லத்திற்குள் நுழைந்த இயேசுவின் செயல், இயேசு தனது சீடர்களுக்குக் கொடுத்த மறைத்தூது அறிவுரையை அவரே வாழ்ந்து காட்டுவதாக இருக்கின்றது: 'உங்களை வரவேற்பவர்களின் வீட்டுக்குச் செல்லுங்கள். உங்கள் முன் வைப்பவற்றை உண்டு, நலமற்றவர்களுக்கு நலம் தந்து, இறையரசு வந்துவிட்டது என அறிவியுங்கள்!' (லூக் 10:8). நற்சீடரின் பண்பு 'பார்ப்பது' என்று 'நல்ல சமாரியனும்,' நற்சீடரின் இன்னொரு பண்பு 'பாதத்தில் அமர்ந்து கேட்பது' என்று 'மரியாவும்' சீடத்துவ பாடம் கற்றுத்தருகின்றனர். ஆணாதிக்கமும், தூய்மை-தீட்டு வித்தியாசம் காணுதலும் மேலோங்கி நின்ற யூத மரபுக்குமுன், ஒரு பெண்ணையும், ஒரு சமாரியனையும் சீடத்துவத்தின் முன்மாதிரிகள் என்று நிறுத்துவது இயேசுவின் மரபுமீறலுக்குச் சான்று.

மார்த்தா இயேசுவை தன் இல்லத்திற்கு வரவேற்று விருந்தோம்பல் செய்கின்றார். மார்த்தாவைப் பற்றி தொடர்ந்து எதையும் பதிவு செய்யாமல், அவரின் சகோதரி மரியாவை வாசகருக்கு அறிமுகம் செய்கின்றார் லூக்கா. இயேசுவின் பாதங்கள் அருகே அமர்ந்து அவரின் வார்த்தைக்குச் செவிமடுப்பவராக அறிமுகம் செய்யப்டுகின்றார் மரியா. 'பாதத்தில் அமர்வதும்,' 'வார்த்தைகளைக் கேட்டலும்' சீடத்துவத்தின் இரண்டு முக்கிய பண்புகளாகக் கருதப்பட்டன (காண். திப 22:3, லூக் 5:1, 8:11, 21).

யூதர்கள் நடுவில் துலங்கிய ரபிக்களின் பின்புலத்தில் இந்த நிகழ்வைப் பார்ப்போம். யூதர்களின் மிஷ்னா, 'உங்கள் இல்லம் ஞானியரின் சந்திப்பு இல்லமாக இருப்பதாக. ஞானியர் உங்கள் இல்லத்திற்கு வந்தால் அவர்களின் காலடிகளில் அமர்ந்து அவர்களின் வார்த்தைகளால் உங்கள் தாகம் தீர்த்துக்கொள்ளுங்கள். பெண்கள் அதிகம் பேசவேண்டாம்' என்று கூறுகின்றது. ரபிக்கள் இல்லங்களுக்குள் நுழைவதுபோல இயேசுவும் நுழைகின்றார். ஆனால், மரியா இயேசுவின் காலடிகளில் அமர்வது ஒரு மரபு மீறல். ஏனெனில் ரபிக்களின் வருகையின் போது அவர் அருகில் அமர்ந்து போதனையைக் கேட்க தகுதி பெற்றவர்கள் விருத்தசேதனம் செய்யப்பட்ட யூத ஆண்கள் மட்டுமே. யூத சிந்தனையின்படி, இங்கே சரியாகச் செயல்பட்டவர் மார்த்தா தான். ரபியின் வருகையின் போது அவரை உபசரிப்பதில் காட்ட வேண்டிய அக்கறையையும், பரபரப்பையும் சரியாகக் கொண்டிருக்கின்றார் மார்த்தா. ஆனால் இயேசு, மரியாவின் செயலை மேன்மையானதாகக் காட்டி, மார்த்தாவின் பரபரப்பையும், கவலைகளையும் சுட்டிக்காட்டி மீண்டும் ஒரு புரட்டிப்போடுதலைச் செய்கின்றார்.

முட்செடிகளின் நடுவே விழுந்த விதைக்கு உதாரணமாக இருக்கின்றார் மார்த்தா. ஏனெனில் கனி கொடுக்க விடாமல் அவரின் 'கவலையும், வாழ்வின் கவர்ச்சிகளும்' தடுக்கின்றன (காண். லூக் 8:14). தன் சமூகம் தனக்குக் கொடுத்த வேலையை சிரமேற்கொண்டு செய்பவராக மார்த்தா இருந்தாலும், 'மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை' (காண். 4:4) என்று உணர்ந்த அவரின் சகோதரி மரியா, 'எல்லாவற்றையும் துறந்தவராய் இயேசுவை மட்டும் பின்பற்றத் துணிகின்றார்' (காண். 5:11, 28). திருத்தூதர் பணிகள் நூலிலும், 'எந்தப் பணி முக்கியமானது? உணவு பரிமாறுவதா? அல்லது இறைவார்த்தையை அறிவிப்பதா?' என்ற கேள்வி எழும்போது, 'இறைவார்த்தை அறிவிப்பை' தேர்ந்து கொள்ளும் திருத்தூதர்கள், 'உணவு பரிமாறுவதற்காக' திருத்தொண்டர்களை ஏற்படுத்துகின்றனர் (காண். 6:1-6).

'மார்த்தா, மார்த்தா' என இருமுறை அழைத்து அவரைக் கடிந்து கொள்ளும் இயேசு, 'இறையன்பும், இறைவார்த்தைக்குச் செவிமடுத்தலும்' எல்லாவற்றையும் விட மேன்மையானது என்று உணர்த்துகின்றார். ('செவிக்கு உணவில்லாதபோது வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும்' - ??? - என்று வள்ளுவப் பெருந்தகை சொல்வதும் இதற்கு ஒத்து இருக்கின்றது).மரியாள் 'தேர்ந்துகொள்ளப்பட்டவரையே' (9:35) தேர்ந்து கொள்கின்றார். அதுவே அவர் தேர்ந்து கொள்ளும் நல்ல பங்கு. அது அவரிடமிருந்து எடுக்கப்படாது.


இன்று நான் 'தேவையானது அந்த ஒன்றை தேர்ந்துகொள்வது' எப்படி?

1. தேவையானது எது என்பதை முதலில் நான் அறிய வேண்டும்
'இறைவன் ஒருவரே தேவையானவர். மற்றவர் அல்லது மற்றவை தேவையற்றவர்கள் அல்லது தேவையற்றவை' என்று எளிதாகச் சொல்லிவிட முடியுமா? தேவையான அந்த இறைவன் இன்று மற்றவர்கள் வழியாகத் தானே வருகின்றார். மருத்துவமனையில் நோயுற்றிருக்கும் நம் நண்பர் அல்லது உறவினர் அருகில் இருப்பது தேவையற்றதா? சாலையில் அடிபட்டுக் கிடக்கும் ஒருவருக்கு உதவிக்கரம் நீட்டுவது தேவையற்றதா? அழுதுகொண்டிருக்கும் என் நண்பரின் அழுகையைத் துடைப்பது தேவையற்றதா? ஆலயத்தில் அமர்ந்துகொண்டிருப்பது மட்டுமே தேவையானதா? சில நேரங்களில் நம்முடைய பொறுப்பைப் தட்டிக்கழித்துவிட்டு ஆலயத்தில் அமர்வதே பாவமாகி விடும். என்னைப் பொறுத்தவரையில் 'என் மூளை சொல்வதை நான் கேட்கும்போதெல்லாம் தேவையற்றதை நான் நாடுகிறேன். என் மனம் சொல்வதை நான் கேட்கும்போதெல்லாம் தேவையானது ஒன்றை நான் நாடுகிறேன்.' 'அவனைப் பார். நிறையப் படிக்கிறான். நீயும் படி!' - இது மூளையின் சொல். 'அவளைப் பார். உன்னைவிட அழகாக இருக்கிறாள். அதை வாங்கு!' 'அவன் உன்னைவிடப் பணக்காரன். நீ பணம் சம்பாதி!' 'அவன் வெற்றியாளன். நீயும் கடினமாக உழை!' இப்படி மூளை சொல்வது எல்லாமே நம்மைப் பரபரப்பாக்கிவிடும். ஒருவர் மற்றவரோடு நம்மை ஒப்பீடு செய்யத் தூண்டும். ஒருவர் மற்றவரைப் பற்றி புகார் அளிக்கத் தூண்டும். ஆனால், மனம் சொல்வதைக் கேட்பவர் மௌனமாகிறார். அல்லது மௌனமாக இருக்கும் ஒருவரே மனம் சொல்வதைக் கேட்க முடியும். ஆக, என் மூளையின் ஓசைகளைக் குறைத்து மனத்தின் மௌனம் நோக்கி நான் செல்ல வேண்டும்.

2. அமர வேண்டும் அமர்தல் என்பது கீழை மரபில் செவிமடுத்தலின், பணிவிடையின், ஏற்றுக்கொள்தலின் அடையாளம். மார்த்தா நின்று கொண்டிருப்பதால் அமர்ந்திருக்கும் இயேசுவுக்கு மேல் இருக்கிறாள். மரியாள் அமர்ந்திருப்பதால் இயேசுவுக்கு கீழ் இருக்கிறாள். நின்றுகொண்டிருப்பது நல்லதுதான். ஆனால் அது மேட்டிமை உணர்வையும் பரபரப்பையும் உண்டாக்கிவிடும். 'தலைவன் நானே இங்கு அமர்ந்திருக்கிறேன். ஊழியக்காரி நீ ஏன் நின்றுகொண்டிருக்கிறாய்?' என்று மார்த்தாவை மனதிற்குள் கேட்டிருப்பார் இயேசு. ஆக, வாழ்வில் எதற்கும் நாம் தலைவர்கள் அல்லர். தலைவர் இறைவனே அமர்ந்திருக்கிறார். ஊழியன் நான் ஏன் பரபரப்பாக நின்றுகொண்டிருக்க வேண்டும்?

3. கேட்க வேண்டும் அடுத்தவர் சொல்வதை நான் கேட்க வேண்டும் என்றால், இறைவனின் வார்த்தையை நான் கேட்க வேண்டும் என்றால், மீன் மார்க்கெட் போல இருக்கின்ற என் மனம் நூலகம் போல அமைதியாக வேண்டும். ஒரே நேரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் எட்டு ப்ரொஜெக்டர்களையும் ஒவ்வொன்றாக நான் அணைக்க வேண்டும். அப்போதுதான் குரல் கேட்கும், படம் தெரியும். இன்று நான் நிறையப் பாடல்கள் கேட்கிறேன், காணொளிகள் காண்கிறேன், உரையாடல்கள் செய்கிறேன். ஆனால், எல்லாம் முடிந்தவுடன் வெறுமையே மிஞ்சுகிறது. அப்படி என்றால் என் மனம் இன்னும் எதையோ கேட்க விரும்புகிறது. அதுதான் அவரின் குரல்.

இறுதியாக, இன்று நான் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் அனைத்தையும் பட்டியலிடுகிறேன். 'ஏன் பரபரப்பாகிப் பதறுகிறாய்?' என்று அவரின் குரல் என்னில் கேட்கிறது. ஒன்றும் செய்யாமல் அவரின் பாதங்களில் அமர்வதே அவர் எனக்கு விடுக்கும் அழைப்பாக இருக்கிறது. நான் கொஞ்ச நேரம் அமர்ந்து பார்க்கிறேன். என் மௌனம் என்னைக் கொல்கிறது. எனவே, மெதுவாக என் இயர்ஃபோனை எடுத்து நான் காதுகளில் மாட்டுகிறேன். யாரோ எதையோ சத்தமாகப் பாடிக்கொண்டிருக்கிறார்.

ser