மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலம் பதிமூன்றாம் ஞாயிறு:
மூன்றாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
1அரசர்கள் 19:16,19-21 | கலாத்தியர் 5: 1,13-18 | லூக்கா 9:51-62

ஓர் அரசன் தன் போர் வீரர்களோடு எதிரி நாட்டுக்குப் போர் தொடுக்கச் சென்றான். இடையில் ஒரு பாலம்தான் இரண்டு நாட்டையும் பிரித்துக் கொண்டிருந்தது. கடும் சண்டை நடந்து கொண்டிருந்தபோது, போர் வீரர்கள் பயந்து எதிரிகளிடமிருந்து தப்பி பாலத்தின் வழியாக தங்கள் நாட்டுக்கு ஓடிவிட்டனர். சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் போர் நடந்தது. மீண்டும் அதே பாலத்தின் வழியாக ஓடிவிட்டனர், இறுதியாக அந்த அரசன் மீண்டும் தனது போர் வீரர்களை எதிரி நாட்டுக்கு அழைத்துச் சென்றான். பாலம் இருக்கும் வரை எனது வீரர்கள் கோழைகளாகத் தான் இருப்பார்கள், போர் தொடங்கியபின், பின்நோக்கும் எண்ணம் வீரர்களுக்கு வரக்கூடாது என்று நினைத்து யுத்தம் நடந்துக் கொண்டிருந்தபோதே அரசன் அந்த பாலத்தை முற்றிலும் இடித்து தரைமட்டமாக்கினான், போர் வீரர்களிடம், நாம் தோற்றுப்போனால் நாடு திரும்ப முடியாது. ஆகவே முன் வைத்த காலைப் பின் வைக்காது போரிட்டு வெற்றி பெற்று, வெற்றிக்கொடியை இங்கே நாட்டிவிட்டு, புதிய பாலம் கட்டிய பிறகுதான் நமது நாட்டுக்கு போக முடியும் என்றான். யுத்தம் மும்முரமாக நடந்தது. பாலம் உடைக்கப்பட்டுவிட்டதால் இனி திரும்ப முடியாது என்று அறிந்த வீரர்கள் தங்கள் முழுத் திறமையையும் பயன்படுத்தி யுத்தம் செய்து வெற்றியும் கண்டனர்.

கலப்பையில் கை வைத்தப் பின் திரும்பிப் பார்ப்பவன் எவனும் கடவுளின் அரசுக்குத் தகுதியற்றவன் (லூக். 9:62).

இன்றைய முதல் வாசகத்தில் எலியாவின் வழியாக எலிசேயு அழைக்கப்படுகிறார். அனைத்தையும் விட்டு விட்டு எலியாசின் சீடரானார், இறைவன் அவரிடம் எதிர்பார்த்தது முழுமையான ஈடுபாடும் சம்மதமும் ஆகும். இதை எலிசேயுவிடம் இறைவன் கண்டுகொண்டார். அதனால் மக்களை வழி நடத்தும் பணியை மேற்கொண்டார் (1 அர. 19:20). இறைவன் விரும்புவது அன்பு நிறைமனமே. அன்பே உருவான ஆண்டவரின் சாயலில் "படைக்கப்பட்ட நாம் பல நேரங்களில் அன்பில்லாமலே வாழ்கிறோம். இதைத்தான் புனித பவுல் உள்ளத்தில் இருக்கும் அன்பைச் செயல்களில் வெளிப்படுத்துங்கள். நீங்கள் அன்பின் அடிமைகளாக இருங்கள் என்கிறார் (இரண்டாம் வாசகம்)

இன்றைய நற்செய்திவழி பார்க்கும்போது இயேசுவின் எதிர் நீச்சல் ஒரு சமுதாய மாற்றத்தின் உயிர் மூச்சு எனலாம். இயேசு வழக்கத்துக்கு மாறாக சமாரியா வழியாக எருசலேம் சென்று வரலாற்றுக் கரையை அடைகின்றார். இயேசுவை எதிரியாகப் பார்த்த சமாரிய மக்களை நண்பர்களாக்கினார். இறையரசு என்னும் கலப்பையில் கை வைத்தப் பின் சாதி, மத, இனம் எனத் திரும்பி பார்க்காதே என்பதைச் சுட்டிக்காட்டுவதாக இது அமைகிறது. நரிகளுக்கு வலைகள் உண்டு. பறவைகளுக்கு கூடுகள் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை என்று கூறித் தான் தலைசாய்ப்பது சிலுவையில்தான் என்ற எண்ணத்தோடு எருசலேம் நோக்கிச் செல்கிறார். சீடத்துவப்பணி என்பது பளபளக்கும் பட்டுத் துணியில் பாவாடை தைப்பது அல்ல. மாறாக பாறையில் நீர் சுரப்பது போன்று கடினமானது. இயேசுவின் இறையரசு மதிப்பீடுகளை விதைப்பவன் அவரின் பாதையில் பயணப்படுபவன் ஆவான்.

இறைவனின் அழைப்பை ஏற்று, செயல்படுவது என்பது, அவரின் அனைத்து இன்ப துன்ப நிலைகளையும் அனுபவிப்பதாகும். இதைத்தான் இன்றைய நற்செய்தி தெளிவாக்குகிறது.

முதலாமவன் நீ எங்கு சென்றாலும் நானும் உம்மைப் பின் செல்வேன் (லூக். 9:57) என்று சொன்னான், செயலில் காட்ட மறுத்துவிட்டான். திறந்த மனம் அவனிடம் இல்லை எனலாம்,

இரண்டாமவன் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர விடை கொடும் (லூக். 9:59) என்று குடும்பத்தை முதன்மைப் படுத்துகிறான். அழைப்புக்கு அவன் முழு சம்மதம் கொடுக்க வில்லை , என்னிடம் வருகிறவன் தன் தாய் தந்தையை, ஏன்? தன் உயிரையுமே வெறுக்காவிடில் என் சீடனாயிருக்க முடியாது என்பது இயேசுவின் நிபந்தனை. ஆனால் அதை இவனால் மேற்கொள்ள முடியவில்லை.

மூன்றாமவன் கலப்பையில் கை வைத்தப் பின் திரும்பிப் பார்ப்பவன். அவனும் கடவுளின் அரசிற்குத் தகுதியற்றவன் (லூக். 9:62). இயேசுவின் அழைப்பு முழுமையாக ஏற்றுக்கொள்ளப் படவில்லை.

இவ்வாறு இந்த மூவரையும் அழைத்த இயேசு நம்மையும் அழைக்கின்றார். ஆதாயம் தேடும் மனிதர்களை இயேசு சீடர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை. தனது சொந்தம், செல்வம் இவைகளை விட்டுக் கொடுக்க மனமில்லாதவர்களையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை, உள்ளத்தில் நிறை அன்பும் இறையரசின் மதிப்பீடுகளில் தெளிந்த பார்வையும் கொண்ட சீடர்களையே அழைக்கின்றார்.

இன்று நாம் காணும் சீடத்துவம் எத்தகைய மதிப்பீடுகளை முதன்மைப்படுத்துகிறது என்று சிந்திக்க வேண்டும். விடுதலை இறைவனே நம் கடவுள், ஏழைகளின் நண்பனே இயேசு. துன்பப்படும் மக்களே நமது குடும்பம், சமத்துவ சமூகமே நமது இலக்கு, உண்மையான விடுதலை வாழ்வே நமது இலட்சியம், மதிப்பீடுகளை செயலாக்கம் பெறச் செய்வதே நமது அணுகு முறையாக அமைய வேண்டும். மக்களை ஆன்மீக, சமய, சமுதாய, பொருளாதார விடுதலைக்கு அழைத்துச் செல்லவில்லை என்றால் சீடத்துவ வாழ்வில் அர்த்தமேதுமில்லை எனலாம்.


இயேசுவிற்காக வாழப்போகிறேன் என்று
முடிவெடுத்துவிட்டால் மனித நேயத்துக்காக
வாழப்போகிறேன் என்பதுதானே பொருள் .

ser

இயேசுவைப் பின்செல்ல நமக்கு வேண்டிய தகுதி என்ன?

இன்றைய நற்செய்தி இயேசுவைப் பின்பற்ற விரும்புகின்றவர்களுக்கு இருக்க வேண்டிய முக்கியமான குணம் ஒன்றைச் சுட்டிக்காட்டுகின்றது.

இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்ற முடிவை எடுத்தப் பிறகு, வேறு எந்த உறவுக்கும் பொருளுக்கும் நமது வாழ்க்கையில் இட மிருக்கக்கூடாது என்பதை இயேசு இன்றைய நற்செய்தியின் வழியாகத் தெளிவாக்குகின்றார்.

இளைஞன் ஒருவனுக்குத் துறவியாக ஆசை. அனைத்தையும் விட்டுவிட்டு காட்டுக்குச் சென்றான். வயல் வரப்பைத் தலையணையாக வைத்துக்கொண்டு படுத்திருந்தான். குளத்திலே தண்ணீர் எடுக்கச் சென்ற கிராமத்துப் பெண்கள் அவனைப் பார்த்து விட்டு, துறவியாக விரும்புகின்ற இவனுக்கு இருக்கும் ஆசையைப் பாருங்கள்! இவனுக்கு தலையணை சுகம் கேட்கின்றது! என்றார்கள்.

அந்தப் பெண்கள் கூறியதைக் கேட்ட அந்த இளைஞன், வரப்பிலிருந்த தன் தலையை எடுத்துவிட்டு, தனது வலது கை மீது தன் தலையை வைத்துப் படுத்திருந்தான். தண்ணீர் எடுத்துக்கொண்டு திரும்பிய பெண்கள், ஊரில் இருப்பவர்கள் இவனைப் பற்றி என்ன பேசிக்கொள்கின்றார்கள் என்று அறிந்து கொள்ள ஆசைப்படும் இவனால் எப்படித் துறவியாக முடியும்? என்று கேட்டபடி நடந்து சென்றார்கள்.

அந்த இளைஞன் உண்மைத் துறவறத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டான், உணர்ந்து கொண்டான். தன் உணர்வுகள், எண்ணங்கள், சொற்கள், செயல்கள், பொருள்கள், சொந்தங்கள், தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் துறந்து ஒப்பற்ற துறவியானான்.

துறவிகளுக்கெல்லாம் துறவியாக விளங்கும் இயேசு தனக்குத் தலை சாய்க்கக்கூட இடமில்லை என்றார். முற்றும் துறந்த வாழ்க்கை மனித முயற்சிக்கு அப்பாற்பட்டதல்ல என்பதை இன்றைய | முதல் வாசகத்தில் எலிசா சுட்டிக்காட்டுகின்றார். முற்றும் துறந்த வாழ்கை அவரின் பின்செல்ல விரும்புகின்றவரிடமிருந்து ஏன் இயேசு எதிர்பார்கின்றார் என்பதற்குக் காரணம் உண்டு.

நம்மிடமுள்ள அனைத்தையும் இழக்க நாம் தயாராக இருக்கும்போதுதான் திருச்சட்டம் முழுவதற்கும் நிறைவாக விளங்குகின்ற அன்புக் கட்டளையை நம்மால் பின்பற்ற முடியும் (இரண்டாம் வாசகம்) : அன்பே உருவான இயேசுவுக்குச் சான்று பகர முடியும்.

சேர்த்துவைக்க விரும்புகின்றவர்ளால் எப்படி மற்றவர்ருக்குக் கொடுக்க முடியம்? சுய நலவாதிகளால் எப்படி பிறர்நலவாதிகளாக வாழமுடியும்? ஊனியல்பின் இச்சையின்படி நடக்கின்றவர்களால் எப்படி தூய ஆவியாரின் விருப்பத்தை நிறைவேற்ற முடியும்?

மேலும் அறிவோம் :
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் ; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு (குறள் : 72).

பொருள் : அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமை பாராட்டுவர். அன்பு உள்ளம் கொண்டவர் தம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் பிறர்க்கு வழங்குவர்.

ஒன்பதாம் வகுப்பு மாணவன் தேர்வில் 'பெயில்' ஆகி விட்டான், இருந்தாலும் அவன் அதற்காக வருத்தப்படாமல் விழுந்து விழுந்து சிரித்தான். ஏனெனில் அவன் பேப்பரைப் பார்த்து 10 பேர் 'காப்பி'' அடித்தனர். அவர்களின் கதியும் அதே கதிதான். அதை நினைத்து அவன் சிரித்தான்,

வாழ்க்கையில் நாம் பலரைக் காப்பி அடிக்கின்றோம்; திரைப்பட நடிகர் நடிகைகளை, கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை, பணக்காரர்களை, அரசியல்வாதிகளைப் பொதுவாக மக்கள் காப்பி அடிக்கின்றனர். ஆனால் இவர்களுடைய வாழ்வு இறுதியில் சூன்யத்தில் முடிவடைகிறது. நேற்றுவரை இவர்கள் ஹீரோ, இன்று யாரோ? என்ற நிலை வருகிறது.

ஆனால் நாம் 'காப்பி' அடிக்க வேண்டியவர். அதாவது பின்பற்ற வேண்டியவர், நேற்றும் இன்றும் என்றும் மாறாத கிறிஸ்து ஒருவரே (எபி 13:8). கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டுமென்றால் நாம் அவருடைய சீடராக வேண்டும். இன்று கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர்; ஆனால் கிறிஸ்துவின் சீடர்கள்தான் எவருமில்லை!

ஒருவர் கிறிஸ்துவின் சீடராக மாற வேண்டுமென்றால் அவர் தமக்குள்ள எல்லாவற்றையும் துறக்க வேண்டும் . "உங்களுள் தம் உடைமையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராக இருக்க முடியாது" (லூக் 14:33). இன்றைய நற்செய்தியிலே கிறிஸ்து அவருடைய சீடர்கள் முழுமையாகத் துறக்க வேண்டும் என்று கேட்கிறார். கிறிஸ்து பணம், பதவி, பாதுகாப்பு, சொந்தம் பந்தம் எல்லாவற்றையும் இரண்டாவது நிலைக்குத் தள்ளிவிடுகிறார். அவர் ஒருவரே தனி முதல் நிலை; மற்றவை அனைத்தும் சார்புநிலை, கிறிஸ்துவோடு ஒப்பிடும்போது மற்றனைத்துமே வெறும் குப்பையாக மாறிவிடுகிறது (பிலி 3:8).

இன்றைய நற்செய்தியிலே ஒருவர் இயேசுவைப் பின்பற்ற விரும்புகிறார். ஏனெனில் இயேசுவைப் பின்பற்றினால் அவருக்கு எக்குறையும் இருக்கா து: எல்லாப் பாதுகாப்பும் கிடைக்கும் என நினைக்கிறார். ஆனால் இயேசு அவரிடம், “நண்பா! நீ என்னைப் பின்பற்றினால் என்னைப் போல் நீயும் தெருவிலே வாழ வேண்டும், நரிகளுக்கும் வானத்துப் பறவைகளுக்கும் இருக்கும் பாதுகாப்புக்கூட எனக்குக் கிடையாது. வெறுங்கையாக என்னைப் பின்பற்றத் தயாரா?" என்று கேட்கின்றார்.

இன்று பலர் துறவற வாழ்வை விரும்புவது தங்களுடைய வசதிக்காகவும் பாதுகாப்புக்காகவும் என்பது கசப்பான உண்மையாகும். இயேசுவைப் பின்பற்ற விரும்புகிறவர்கள் இயேசுவைப் போலவே கடவுளிடம் மட்டுமே தங்களது முழுப்பாதுகாப்பை தேட வேண்டும். அவர்களின் வாழ்வையும் நிர்ணயிப்பது: "ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து" (திப 16:15); "ஆண்டவர்தாமே என் கற்பாறை; என் கோட்டை ; என் கேடயம்; என் புகலிடம் "(திப 18:1-2), கிறிஸ்துவின் பொருட்டு அனைத்தையும் விட்டுவிட்டவர்கள் அனைத்தையும் பெற்றுக்கொள்வர். திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "எதுவும் இல்லாதவர் எனத் தோன்றினாலும், நாங்கள் எல்லாவற்றையும் பெற்றிருக்கிறோம்" (2 கொரி 6:10).

முற்றும் துறந்தவரே துறவி. மற்றவரெல்லாம் போலித் துறவிகள். அவர்கள் ஆசை வலையில் சிக்கி அவதிப்படுவார்கள் என்று இனம் காட்டுகின்றார் பொய்யா மொழிப்புலவர்.


தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றையவர். (குறள் 348)

மற்றொருவர் இயேசுவைப் பின்பற்ற விரும்புகிறார். ஆனால் அவர் அப்பா இறந்தபின் வருவதற்கு இயேசுவிடம் அனுமதி கேட்கிறார் இயேசு அவருக்கு அனுமதி மறுக்கின்றார். அதற்கு அவர் கூறும் காரணம்: "உன் அப்பா இறக்கும்வரை நீ உன் வீட்டில் இருந்தால், அதன் பிறகு என்னைப் பின்பற்றுவது உறுதியில்லை. உன் அப்பாவை அடக்கம் செய்வதற்குத் தேவையான ஆள்கள் உள்ளனர். இரத்த உறவைவிட விசுவாச உறவு மேலானது. நீ உன் அப்பாவுக்குச் செய்யவேண்டிய கடமையைவிட நற்செய்தி அறிவிக்க வேண்டிய கடமை முதலிடம் பெறுகிறது."

மூன்றாவது நபர் இயேசுவைப் பின்பற்ற விரும்புகிறார், ஆனால் அதற்குமுன் அவர் தம்முடைய உறவினர்களிடமிருந்த விடைபெற்றுக் கொண்டு வருவதற்கு இயேசுவிடம் அனுமதி கேட்கின்றார். இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எலியா தம்முடைய சீடர் எலிசாவுக்கு அத்தகைய அனுமதி அளிக்கிறார். ஆனால் இயேசு அத்தகைய அனுமதியை மறுக்கின்றார். அதற்கு இயேசு கூறும் காரணம்: "அன்பனே ! உனக்கு இன்று இருக்கும் ஆர்வம் நாளைக்கு இருக்காது. உனது நல்லெண்ணத்தை ஒத்திப் போடாதே: திருப்பிப் பார்க்காதே; இறை ஆட்சியில் "Re>

இயேசு கூறுவது மிகவும் கடுமையாகத் தோன்றலாம். ஆனால் ஒருவர் அவரைப் பின்பற்ற விரும்பினால், வேரோட்டமாகப் பின்பற்ற வேண்டும்; மேலோட்டமாகப் பின்பற்ற முடியாது. ஆற்றிலே ஒரு காலு, சேற்றிலே ஒரு காலு என்னும் இரண்டுங்கெட்டான் நிலையை இயேசு சகிப்பதில்லை. இன்று துறவறத்தார் முன் வைக்கப்படும் சமரசத்துக்கு இடமில்லாத சவால்; "வேரோட்டமான சீடத்துவம்." (Rakulikul Discipleship)

இன்றைய நற்செய்தியில் இயேசு கூறுவது துறவறத்தாருக்கு மட்டுமல்ல, இல்லறத்தாருக்கும் பொருந்தும், இல்லறத்தாருக்கும் துறவு மனநிலை இருக்க வேண்டும். உண்மையில் இன்றைய உலகை மீட்க இல்லறத் துறவிகள் தேவை. அவர்களுக்குத் திருத்தூதர் பவுல் கூறுவது: "இனியுள்ள காலம் குறுகியதே, இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர்போல் இருக்கட்டும் ... இவ்வுலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர்போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பதுபோல் நெடுநாள் இராது" (1கொரி 7:29-31). இவ்வுலக இன்பங்களைச் சுவைப்பவர்கள் அவற்றில் மூழ்கிவிடாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,

'குமுதம்' என்ற வார இதழைப் படித்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணியிடம் , "பைபிள் படிப்பதுண்டா?" என்று நான் கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டு, "இன்னும் கொஞ்சம் வயசாகட்டும் பாதர்" என்றார். நாளை என்பது இல்லை என்பதற்குச் சமம். எனவே, என்றும் ஒன்றே செய்வோம்; ஒன்றும் நன்றே செய்வோம்; நன்றும் இன்றே செய்வோம்.

"இயேசுவின் பின்னால் நானும் செல்வேன், திரும்பிப் பார்க்க மாட்டேன்."

தன்னை முழுவதும் தருவதுதான் உண்மையான சீடத்துவம்

நிகழ்வு
மெய்யியலாளரான சோரன் கீர்ககார்ட் (Soran Kierkagaard) சொல்லக்கூடிய ஒரு நிகழ்வு. ஒரு சமயம் ஒரு சிறுநகரில் இருந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் பயங்கரத் தீவிபத்து ஏற்பட்டது. செய்தி நகரில் இருந்த தீயணைப்புப் படையினர்க்குச் சொல்லப்பட்டது. உடனே அவர்கள் தீவிபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்தார்கள்.

அங்கு அவர்கள் வந்தபோது கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. காரணம், அங்கிருந்த ஒருசிலர் தங்களுடைய கையில் வைத்திருந்த தண்ணீர் துப்பாக்கிகளைக் கொண்டு தீயை அணைக்க முயன்று கொண்டிருந்தார்கள். இன்னும் ஒருசிலர் தீயணைப்புப் படையினர்க்கு வழிவிடாமல் தங்களுடைய கையில் இருந்த சிறு சிறு வாளிகளைக் கொண்டு தீயை அணைத்துக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்துவிட்டு அந்த தீயணைப்பு படையினரின் தலைவர் அங்கிருந்தவர்களிடம், “இந்தத் தீவிபத்தின் விபரீதம் புரியாமலும் எங்களுக்கு வழிவிடாமமலும் இப்படித் தண்ணீர் துப்பாக்கிகளைக் கொண்டும் சிறுசிறு வாளிகளைக் கொண்டும் தீயை அனைத்துக்கொண்டிருக்கின்றீர்களே! இது நன்றாக இருக்கிறதா... தயவுசெய்து எங்கட்க்கு வழிவிடுங்கள்” என்றார்.

அவர் இவ்வாறு சொன்னதைத் தொடர்ந்து அங்கிருந்த எல்லாரும் தீயணைப்புப் படையினருக்கு வழிவிட்டனர். இதைத் தொடர்ந்து தீயணைப்பு படையிலிருந்த ஒவ்வொருவரும் முழுமூச்சாக இறங்கி, அடுக்குமாடிக் கட்டிடத்தில் உயிர்க்குப் போராடிக்கொண்டிருந்தவர்களைக் காப்பாற்றியும் பற்றியெறிந்துகொண்டிருந்த தீயை அணைத்தும் பெரியஅளவில் சேதம் ஏற்படாத வண்ணம் அங்கிருந்தவர்களைக் காப்பாற்றினர்.

இந்த நிகழ்வைச் சொல்லிவிட்டு சோரன் கீர்ககார்ட் என்ற அந்த மெய்யியலாளர் இவ்வாறு சொல்வார்: “சீடத்துவ வாழ்வு என்றால், பலரும் நினைப்பது போல் நற்செய்திப் பணிக்கு ஓரிரு உதவிகள் செய்வதுவிட்டு திருப்திப்பட்டுக் கொள்வதல்ல. உண்மையான சீடத்துவ வாழ்வு என்பது ஆண்டவர்க்காக நம்மை முற்றிலும் தருவது.“

உண்மையான சீடத்துவ வாழ்வு என்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. பொதுக்காலம் பதிமூன்றாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு இன்றைய நாள் இறைவார்த்தை, ‘தன்னை முழுவதும் தருவதுதான் உண்மையான சீடத்துவ வாழ்வு’ என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

உண்மையான சீடத்துவ வாழ்வு எது என்ற தெரிந்துகொள்வதற்கு முன்னம், எதுவெல்லாம் சீடத்துவ வாழ்வு கிடையாது என்று தெரிந்துகொள்வது நல்லது.

உள்ளத்தில் வெறுப்போடும் தான் என்ற அகந்தையோடு இருப்பதும் சீடத்துவ வாழ்வு கிடையாது

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு எருசலேம் செல்லத் தீர்மானித்து, தமக்குமுன் தூதர்களை அதாவது இடியின் மக்கள் எனப்படும் (மாற் 3:17) யோவானையும் அவர் சகோதரான யாக்கோபையும் அனுப்பிவைக்கின்றார். அவர்கள் இருவரும் சமாரியரின் நகர் வழியாகப் போகமுயன்றதால், அங்கிருந்தவர்கள் இவர்கள் இவரையும் தடுத்துநிறுத்துகிறார்கள். இதனால் இவர்கள் இருவரும் இயேசுவிடம், “ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா?” என்று கேட்க, இயேசு அவர்களைக் கடிந்துகொண்டு வேறொரு வழியாக எருசலேமிற்குப் போகின்றார்.

இயேசுவின் சீடர்களான யோவானும் யாக்கோபும், சமாரியர்கள் தங்கள் ஊர் வழியாகப் போகவிடாமல் தடுத்ததற்காக ஏன் இவ்வாறு பேசவேண்டும் என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது. யூதர்கட்க்கும் சமாரியர்கட்க்கும் பன்னெடுங்காலமாகப் பகை இருந்துவந்தது (2அர 17: 29-41). இப்பகை இயேசுவின் காலம்வரை (யோவா 4: 9,20) ஏன், அதற்கும் பின்னும் நீடித்தது என்பதுதான் இதிலுள்ள துரதிஸ்டம். இப்படி சமாரியர்கள் யூதர்களோடு பகையாய் இருக்கிறார்கள் என்று தெரிந்தபின்னும் யோவானும் யாக்கோபும் வேறொரு வழியாகப் போயிருக்கலாம். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யாமல், சமாரியர்களின் ஊர்வழியாகச் சென்றால் வேகமாகச் சென்றுவிடலாம் என்று அந்த வழியைத் தேர்ந்தெடுக்கின்றார்கள். இதனால் சமரியார்கள் அவர்களைத் தடுக்கின்றார்கள். சமாரியர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தியபோது, இயேசு அவர்கட்க்குப் போதித்தது போன்று (மத் 5: 37-48) பகைவர்களை அன்புசெய்து அல்லது மன்னித்துவிட்டு வேறொரு வழியில் சென்றிருக்கலாம். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யாமல், எலியா இறைவாக்கினரைப் போன்று (2 அர 1:10) வானத்திலிருந்து தீ வந்து அவர்களைச் சுட்டெரிக்கச் செய்யவா? என்று இயேசுவிடம் கேட்கின்றார்கள். இயேசுவோ வெறுப்பை மேலும் வளர்க்காமல். அவர்களைக் கண்டிக்கின்றார்.

இதன்மூலம் இயேசு தன்னைப் பின்பற்றி வரக்கூடியவர்கள், உள்ளத்தில் வெறுப்புடனோ, பகைமையுடனோ இருக்கக்கூடாது என்ற செய்தியைக் கற்றுத்தருகின்றார். இந்த நிகழ்விற்கு முன்னதாக, சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்று விவாதித்துக் கொண்டார்கள். (லூக் 9:46). அப்பொழுது இயேசு அவர்கள் நடுவில் ஒரு குழந்தையை நிறுத்தி, “உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்” என்கின்றார் (லூக் 9:48). இதை வைத்துப் பார்க்கும்போது, இயேசுவின் சீடராக இருக்க விரும்புகின்றவர், உள்ளத்திலிருந்து பகைமையையும் வெறுப்பையும் அகற்றுவதோடு மட்டுமல்லாமல், தாழ்ச்சியோடு வாழ்வது தேவையான ஒன்றாக இருக்கின்றது.

இயேசுவுக்காகத் தன்னை முழுமையாய் அர்ப்பணித்து, சிலுவையைச் சுமக்கத் தயாராக இருப்பதே உண்மையான சீடத்துவ வாழ்வு

எது சீடத்துவ வாழ்வு கிடையாது என்பதை அறிந்துகொண்ட நாம், உண்மையான சீடத்துவ வாழ்வு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதி சொல்வதை இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம். இயேசு எருசலேம் நோக்கிப் போகும்போது, இரண்டாவது மனிதரைத் தவிர்த்து, முதலாம் மற்றும் மூன்றாம் மனிதர்கள் அவர்களாகவே இயேசுவிடம் வந்து அவரைப் பின்பற்றுவதாகச் சொல்கிறார்கள். இதில் முதலாவதாக வரும் மனிதர் ஒரு மறைநூல் அறிஞர் (மத் 8:9). அவர் சீடத்துவ வாழ்வு என்றால் மிகவும் சொகுசானது என்று நினைத்துகொண்டு வந்து, இயேசுவிடம், நீர் எங்கு போனாலும் நானும் பின்னால் வருவேன் என்று சொல்கிறார். அவரிடம் இயேசு, நரிகட்க்கு பதுங்கிக் குழிகளும் வானத்துப் பறவைகட்க்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலைசாயக்கக்கூட இடமில்லை என்று சொன்னதும், அவர் இயேசுவை விட்டு விலகுகின்றார்.

மூன்றாவது மனிதரோ இயேசுவிடம், நான் உம்மைப் பின்பற்றி வருவேன். ஆயினும் என் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு வர என்னை அனுமதியும் என்கின்றார். இவரிடம் இயேசு, “கலப்பையில் கைவைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” என்கிறார். இதில் இரண்டாவது மனிதர் மிகவும் கவனத்திற்கு உரியவராக இருக்கின்றார். காரணம், அவரிடம் இயேசுவே தன்னைப் பின்பற்றி வருமாறு சொல்கின்றார். அவரோ, நான் என் தந்தையைப் போய் அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும் என்று மறுத்துவிடுகின்றார். அப்படிப்பட்டவரிடம் இயேசு, “இறந்தோரைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். நீர்போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்” என்கின்றார்.

இந்த மூன்று மனிதர்கட்கும் இயேசு அளித்த பதிலைக் கொண்டே உண்மையான சீடத்துவ வாழ்வு எப்படி இருக்கவேண்டும் என்பதை அறிந்துகொள்ளலாம். உண்மையான சீடத்துவ வாழ்வு என்பது முதலாவதாக, சிலுவைகளை ஏற்கத் துணிவது (மத் 16:24), இரண்டாவதாக, மற்ற எல்லாவற்றையும் எல்லாரையும்விட இயேசுவுக்கு முன்னுரிமை தருவது (லூக் 14:26). மூன்றாவதாக, முன்வைத்த காலை பின்வைக்காமல், இயேசுவின்மீது கண்களைப் பதிய வைத்து வாழ்வது. இப்படிப்பட்ட வாழ்வே உண்மையான சீடத்துவ வாழ்வாகும்; இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வோர்க்கு இறைவன் தக்க கைம்மாறு தருவார் (மத்19: 28-29) என்பது உறுதி.

சிந்தனை
‘கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தினையே வழங்கியுள்ளார்’ (2திமொ 1:7) என்பார் பவுல். ஆகவே, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் வல்லமையும் அன்பும்கொண்ட இதயத்தைக் கொண்டு, இறையாட்சிப் பணிக்காக நம்மை முழுவதும் ஒப்புக்கொடுத்து, அன்போடு பணிசெய்வோம். அதவழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser

முறிவுகளே முடிவுகளாக

ஓர் உருவகத்தோடு இன்றைய சிந்தனையைத் தொடங்குவோம். நாம் ஒரு வீட்டை உரிமையாக்கிக்கொள்ள வேண்டுமானால், அதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, ஓர் வெற்றிடத்தை வாங்கி, அவ்விடத்தின் அளவு மற்றும் பண்பிற்கிற்பேத் திட்டமிட்டு நிலம் வீணாகாமல் கட்டுவது. இப்படிக் கட்டுவதில் பிரச்சினை என்னவென்றால், நிலத்தை தூய்மைப்படுத்தி ஒழுங்குபடுத்துதல், வானம் தோண்டுதல், அடித்தளம் இடுதல், வரைபடம் உருவாக்குதல், கட்டுதல், பூசுதல், மேற்கூரையிடல், தளமிடல், வர்ணம் பூசுதல், தண்ணீர் மற்றும் மின்சார திட்டமிடல் என எல்லாவற்றையும் நாமே செய்ய வேண்டும். இதற்கு நிறைய உழைப்பும் விடாமுயற்சியும் தேவை. இரண்டு, ஏற்கனவே கட்டப்பட்ட ஒரு வீட்டை விலைக்கு வாங்கி, அதை நம் தேவைக்கு ஏற்ப சிறு மாற்றங்கள் செய்வது. இது ரொம்பவே எளிது. நம்முடைய வேலை வர்ணம் பூசுவதும், இங்கே அங்கே என சிலவற்றை சரி செய்வதும்தான். ஆனால், நாம் ஏன் சொந்தமாக வீடு கட்டுகிறோம்? காரணம் ரொம்ப எளிது. முதல் வழியில் பிரச்சினைகள் நிறைய இருந்தாலும் நம்முடைய படைப்பாற்றலைப் பயன்படுத்தி, நம்முடைய எண்ணத்திற்கு ஏற்ப வீட்டைக் கட்டலாம். ஆனால், இரண்டாம் வழியில் பிரச்சினைகள் குறைவு என்றாலும், நாம் புதிதாக அவ்வீட்டில் எதையும் செய்ய முடியாது. அதன் அமைப்பு பிடிக்கவில்லை என்றால் மாற்ற முடியாது. மேலே மாடி கட்டுவதற்காக அடித்தளத்தை உறுதி செய்ய முடியாது. வீணாக்கப்பட்ட இடத்தை ஒன்றும் செய்ய முடியாது. தண்ணீர் மற்றும் மின்சார அமைப்புக்களை மாற்ற முடியாது. சில நேரங்களில் புது வீட்டைக் கட்டுவதை விட பழைய வீட்டைப் பராமரிப்பதற்கு அதிகம் செலவாகிவிடும். எனவேதான், பழைய வீட்டை வாங்கினாலும் அதைப் பராமரிப்பதற்குப் பதிலாக முற்றிலும் அதை இடித்துவிட்டு புதிதாகக் கட்டுகின்றனர்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு மேற்காணும் உருவகத்தை நேரடிப் பொருளில் சொல்கிறது. எப்படி?

வாழ்க்கை மாற்றம் வேண்டுமென்றால் பழைய வாழ்க்கையோடு உள்ள உறவை முழுமையாக முறிக்க வேண்டும் என்ற முடிவு எடுக்க வேண்டும். முறிவுகளே முடிவுகள் என்பது சொல்வதைப் போல அவ்வளவு எளிதல்ல.

'முறிவு' என்ற வார்த்தை நமக்கு பயம் தருகிறது. 'எலும்பு முறிவு,' 'மண முறிவு,' 'நட்பு முறிவு' போன்றவற்றை நம்மால் தாங்க முடிவதில்லை. ஆனால், முறிவு இல்லாமல் வாழ்க்கை இல்லை. எப்படி? நாம் பிறந்தவுடன் நம்மையும் நம் தாயையும் இணைக்கும் தொப்புள் கொடி முறிக்கப்படுகிறது. இந்த முறிவு இல்லை என்றால், நம் வாழ்க்கையும், நம் தாயின் வாழ்க்கையும் ஆபத்தில் முடியும். பள்ளிக்குள் நுழையும்போது வீட்டில் அனுபவித்த நம் சுதந்திரம் முறிக்கப்படுகிறது. கல்லூரிக்குள் நுழையும்போது பள்ளியின் உறவு முறிவுபடுகின்கிறது. படிப்பு முடிந்து திருமணம் என்றவுடன் பல நட்பு உறவுகள் முறிகின்றன. திருமணத்திற்குள் நுழையும்போதும் நாம் பல பேரின் உறவுகளை முறித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இறுதியில், ஒட்டுமொத்தமாக எல்லா உறவுகளையும் முறித்துக்கொண்டு நாம் இவ்வுலகை விட்டுச் செல்கின்றோம். நாம் பேசும்போது பேசுகின்ற முதல் வார்த்தை முறிந்து இரண்டாம் வார்த்தை பிறந்தால்தான் உரையாடல் இனிக்கும். நாம் நடக்கும்போது எடுக்கின்ற முதல் அடி முறிந்து இரண்டாம் அடி பிறந்தால்தான் பயணம் தொடங்கும். நம் உடலின் செல்கள் ஒவ்வொரு நாளும் தங்களுடைய பழைய இயல்பை முறித்தால்தான் உயிர் இருப்பு சாத்தியமாகும். ஆக, முறிவுகள் நம் வாழ்வின் எதார்த்தங்கள்.

இறைவனைப் பின்பற்றுதல் அல்லது இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் கடந்த கால வாழ்க்கையை, கடந்த கால உறவுகளை முறித்துக்கொள்ளும் முடிவு எடுக்க வேண்டும் என்று இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குக் கற்பிக்கிறது. கடந்தகாலத்தோடு இருக்கும் தொடர்பை முறிக்கும்போதுதான் புதிய வாழ்க்கையையும் புதிய பணியையும் தொடங்க முடியும். அருள்பணி நிலையில் இணையும் ஒருவர் தன் குடும்பத்தோடு இணைந்திருக்கும் இணைப்பை முறிக்கிறார். புதிய வாழ்வைத் தொடங்குகிறார். திருமண உடன்படிக்கையில் இணையும் மணமக்கள் தத்தம் குடும்பங்களோடு உள்ள உறவுகளை முறிக்கும்போதுதான் தங்களுக்கிடையே உள்ள குடும்ப உறவைத் தொடங்குகிறார்கள்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 அர 19:16,19-21) எலியா தன்னுடைய இறைவாக்குப் பணியை நிறைவு செய்கிறார். பணியின் இறுதியில், நிம்சியின் மகன் ஏகூவை இஸ்ரயேலுக்கு அரசராகவும் சாபாற்றின் மகன் எலிசாவை இறைவாக்கினராகவும் அருள்பொழிவு செய்யுமாறு பணிக்கிறார் ஆண்டவராகிய கடவுள். எலிசா ஒரு விவசாயி. கடவுளால் உந்தப்பட்ட எலியா, தன்னுடைய உழவுத்தொழிலில் மூழ்கியிருந்த எலிசாவைச் சந்தித்து அவர்மேல் தன் போர்வையைப் போடுகின்றார். புதிய ஆடையை ஒருவர்மேல் போர்த்துவது என்பது புதிய பணிக்கு ஒருவரை அனுப்பவது என்பது பொருளாகும். ஆகையால்தான், அருள்பணியாளர் திருநிலைப்படுத்தப்படும் நிகழ்விலும் அவருக்கு புதிய திருவுடை அணிவிக்கப்படுகிறது. அந்தத் திருவுடையும் ஏறக்குறைய போர்வையைப் போலத்தான் இருக்கிறது. தன்மேல் போர்வை போர்த்தப்பட்டவுடன் தன் வாழ்வு மாற வேண்டும் என்பதை உடனடியாக உணர்கிறார் எலிசா.

ஆகையால், எலியாவின் அனுமதியின்பேரில் அவர் தன்னுடைய எருதுகளை அப்படியே விட்டுவிட்டு, தன் பெற்றோர்களை முத்தமிட - பிரியாவிடை கொடுக்க - வீட்டிற்குச் செல்கின்றார். அந்தக் காலத்தில் வீடுகளும் தோட்டங்களும் தூரமாக இருந்திருக்க வேண்டும். இவருடைய பிரியாவிடை இவருடைய குடும்பத்தின்மேல் உள்ள உறவை முறிக்கும் நிகழ்வாக அமைகிறது. தன்னுடைய உழவுத் தொழிலுக்கு இன்றியமையாதவையாக இருந்த ஏரை விறகாக்கி, மாடுகளை உணவுப் பொருளாக்கி தன் மக்களுக்கு விருந்து படைக்கின்றார் எலிசா. தன்னுடைய ஏரை உடைப்பதாலும், எருதுகளைக் கொல்வதாலும் தன்னுடை கடந்த காலத்தோடு தான் கொண்டுள்ள உறவை முறிக்கிறார் எலிசா. இனி அவர் நிலத்தை உழப்போவதில்லை. தான் தன்னுடைய ஏர் மற்றும் எருதுகளால் சமைத்த உணவை மக்களுக்குக் கொடுத்ததன் வழியாக, இனி தான் காய்கறிகளும் தானியங்களும் அவர்களுக்குத் தரப் போவதில்லை என்றும், இறைவார்த்தையே இனி அவர்களுக்கு அவர் வழங்கும் உணவாக இருக்கும் என்றும் உருவகமாக முன்னுணர்த்துகின்றார். எலிசாவின் இச்செயல்கள் அவர் தன்னுடைய வாழ்வுப் பாதையை முற்றிலும் மாற்றியதை உருவகங்களாக உணர்த்துகின்றன. இந்த மாற்றத்தின் முதல்படி தன்னுடைய பழைய வாழ்விலிருந்து அவர் தன்னையே முறித்துக்கொண்டதுதான்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். கலா 5:13-18), பவுல் தன்னுடைய வாழ்வில் எடுத்த மிகப்பெரிய முடிவின் சூழலைப் பின்புலமாகக் கொண்டுள்ளது. கலாத்தியருக்கு எழுதும் திருமுகத்தில் பவுல், ஒருவர் கடவுள் முன் எப்படி ஏற்புடையவராகிறார் என்பதைப் பற்றி அதிகம் பேசுகிறார் பவுல். இயேசுவைச் சந்திக்குமுன் பவுல் யூதச் சட்டத்தையும், முறைமைகளையும் கடைப்பிடிப்பவராக இருக்கிறார். ஏனெனில், கடவுளுக்கு பணி புரிவதற்கும் அவருக்கு ஏற்புடையவர் ஆவதற்கும் இதுவே சரியான மற்றும் ஒரே வழி என அவர் எண்ணினார். ஆனால், உயிர்த்த கிறிஸ்துவைச் சந்தித்தவுடன் அவருடைய வாழ்க்கை தலைகீழாகிறது. ஒரு காலத்தில் சட்டத்திற்கு மிகவும் பிரமாணிக்கமாக இருந்த பவுல் இயேசுவின் திருத்தூதராகிறார். மேலும், கிறிஸ்துவின்மேல் கொண்ட நம்பிக்கையால் மட்டுமே ஒருவர் கடவுளுக்கு ஏற்புடையவராகின்றார் என்று அறிவிக்கத் தொடங்குகிறார். இப்படியாக அவருடைய வாழ்வு முற்றிலும் மாறுகிறது. திருச்சட்டத்தின் மேல் வெறிகொண்ட பரிசேயராக இருந்த பவுல் கிறிஸ்துவின் அர்ப்பணமிக்க பணியாளனாக மாறுகிறார்.

இன்றைய வாசகத்தில் - ஒட்டுமொத்த திருமடலில் குறிப்பிடுவதுபோல - கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை கொண்டாலும் யூதச் சட்டத்தையும் மரபுகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொன்ன சில யூத கிறிஸ்தவர்களை எதிர்க்கின்றார். 'கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து - சட்டத்திலிருந்து - நம்மை விடுவித்துள்ளார்' என்று சொல்லும் இடத்தில் 'சட்டத்தை,' 'அடிமைத்தளை எனும் நுகம்' என்கிறார். இச்சுதந்திரத்தில் நம்பிக்கையாளருக்குத் தேவையானதெல்லாம் கிறிஸ்துவின்மேல் கொள்ளும் நம்பிக்கை மட்டுமே. கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஒட்டுமொத்த யூதச் சட்டமும், 'உன்மீது நீ அன்புகூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர் மீது அன்புகூர்வாயாக' என்ற ஒரே கட்டளையில் அடங்கிவிடுகிறது. கிறிஸ்தவ வாழ்வை உந்தித்தள்ளுவது யூதச்சட்டம் அல்ல. மாறாக, தூய ஆவி. கிறிஸ்தவ வாழ்விற்கான அடித்தளங்களின் மேல் அழுத்தம் கொடுக்கும் பவுல், தன்னுடைய பரிசேயக் கடந்த கால வாழ்வோடு தனக்குள்ள உறவை முறித்துக்கொள்வதோடு, கலாத்திய நகர் திருச்சபையும் அவ்வாறே தன்னுடைய யூதச் சட்ட பிரமாணிக்கத்தை முறித்துக்கொள்ள அழைக்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 9:51-62), இயேசுவின் வாழ்வில் மிக முக்கியமான திருப்புமுனை வருகிறது: 'விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, தன் பயணத்தைத் தொடங்குகிறார்.' தன்னுடைய இறப்பு அங்கே காத்திருக்கிறது என்றாலும் துணிவுடன் இப்பயணத்தை மேற்கொள்கிறார் இயேசு. இப்படிச் செய்வதன் வழியாக தன்னுடைய அமைதியான, வெற்றிகரமான கலிலேயப் பணியை முறித்து, தன்னுடைய இறப்பு மற்றும் உயிர்ப்பு நோக்கி நகர்கின்றார். இனி இவர் யாருக்கும் நலம் அளிக்கமாட்டார். இறையாட்சி பற்றி அறிவிக்க மாட்டார். மாறாக, சீடத்துவம் பற்றிப் போதித்து, தன்னுடைய இறப்புக்காக தன்னையும் தன் சீடர்களையும் தயாரிப்பார்.

இன்றைய வாசகத்தின் இரண்டாம் பகுதி நோக்கு மாற்றத்தை மையமாகக் கொண்டிருக்கிறது. எலியா மற்றும் எலிசா நிகழ்வின் கூறுகள் இங்கேயும் காணப்படுகின்றன. முதலில், இயேசுவின் சீடர்கள் யாக்கோபும் யோவானும், எலியாவைப் போல சமாரிய நகர் மேல் நெருப்பு பொழியப்பட விரும்புகின்றனர் (காண். 2 அர 1:10). ஆனால், எலியாவுக்கு மாறாக, இயேசு, சீடர்களைக் கடிந்துகொள்வதுடன் பகைவர்க்கும் அன்பு என்ற கட்டளையின் அடிப்படையிலேயே அவர்கள் நடக்க வேண்டும் என்று மறைமுகமாக உணர்த்துகின்றார்.

தொடர்ந்து, இயேசு எருசலேம் நோக்கிச் சென்றபோது மூன்று நபர்களைச் சந்திக்கின்றார். முதலாமவர் தானாகவே முன்வந்து இயேசுவைப் பின்பற்ற விரும்புகின்றார். தன்னைப் பின்பற்றுபவர்கள் நிராகரிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றார் இயேசு. இயேசு தன்னுடைய மக்கள் மட்டுமல்ல சமாரியர்களின் நிராகரிப்பையும் அனுபவித்தார். அவருக்கு 'தலை சாய்க்க இடமில்லை.' அவரைப் பின்பற்றுபவர்களும் அதே நிலைக்க ஆளாகத் தயாராக இருக்க வேண்டும். அடுத்ததாக, தன்னைப் பின்பற்றுமாறு ஒருவரை அழைக்கிறார் இயேசு. ஆனால், அவர் தன்னுடைய தந்தையை அடக்கம் செய்ய அனுமதி கோருகின்றார். அவர் எலிசாவைப் போல தன்னுடைய குடும்பத்தின் உறவை முறிக்க நினைக்கின்றார். ஆனால், இது ஒரு சாக்குப்போக்காக இருக்கின்றது. தன்னுடைய தந்தை இருக்கும் அளவு இயேசுவைப் பின்பற்றுதல் சாத்தியம் இல்லை என்று மறைமுகமாகச் சொல்கின்றார் அந்த நபர். இவருடைய பதிலிலிருந்து இவர் தன்னுடைய குடும்பத்தையே முதன்மைப்படுத்துவது தெரிகிறது. எலிசா தன்னுடைய குடும்ப உறவை முறித்ததுபோல இவர் செய்ய மறுத்ததால் இவர் தகுதியற்றவராக மாறுகிறார். மூன்றாம் நபர் இயேசுவைப் பின்பற்றுவதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறார். ஆனாலும், தன் வீட்டாரிடம் பிரியாவிடை பெற அனுமதிக்குமாறு வேண்டுகிறார். 'கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப்பார்ப்பவர்' உருவகத்தின் வழியாக, இயேசு அவரை முன்நோக்கிப் பார்க்க அழைக்கிறார். இவ்வாறாக, இயேசுவைப் பின்பற்றும் சீடர்கள் தங்களுடைய கடந்த காலத்தை முறித்தவர்களாகவும், தங்களுடைய முதன்மைகளை மறுவரையறை செய்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

ஆக, இன்றைய இறைவாக்கு வழிபாடு கடினமான சவாலை நமக்குக் கொடுக்கிறது. சீடத்துவத்துடன் இணைந்துவரும் 'முறிவு என்னும் முடிவை' நமக்கு வலியுறுத்துகிறது. தன்னுடைய அமைதியான உழவுத் தொழிலை முறிப்பதால்தான் எலியா இறைவாக்கினராக மாறுகிறார். பவுல் தன்னுடைய பரிசேய பிரமாணிக்கத்தையும், யூத சட்டத்தையும் முறித்தால்தான் இயேசுவின் திருத்தூதராக மாற முடிகிறது. இயேசு தன்னுடைய பணி வாழ்வை முறித்துக்கொண்டதால்தான் அவரால் தன்னுடைய பாடுகள் நோக்கி பயணம் செய்ய முடிகிறது. மேலும், தன்னைப் பின்பற்ற விரும்பும் தன் சீடர்களும் முறித்துக்கொள்ள வேண்டியவை பற்றி அவர்களுக்குக் கற்பிக்கின்றார் இயேசு. கடவுள் நம் வாழ்வைத் தன் கைக்குள் எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால், நாம் கைகளை உதறிவிட்டு நம் கைகளை அவரை நோக்கி நீட்டுவது அவசியம். தங்களுடைய கடந்த காலத்தை முறித்துக்கொள்ளும் ஒருவரே புதிய வாழ்க்கை நோக்கி, புதிய பணியை நோக்கி முன்னேறிச் செல்ல முடியும். இப்படிப்பட்ட ஒருவரின் மனநிலையைத்தான் இன்றைய பதிலுரைப்பாடலில் ஆசிரியர், 'வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர். உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு' (காண். திபா 16:11) என்று பாடுகின்றார்.

நம் வாழ்வில் முறிவுகளை முடிவுகளாக எடுப்பது எப்படி?


1. எலிசா போல நம்முடைய பாதுகாப்பு வளையத்தை உடைக்க வேண்டும் எலிசா ஒருவேளை தன்னுடைய ஏரை உடைக்காமல், எருதுகளைக் கொல்லாமல் இருந்திருந்தால் என்ன நடக்கும்? தனக்கு ஒரு ஃபால் பேக் (fallback) வைத்திருப்பார். தன்னுடைய இறைவாக்குப் பணி தோல்வியாக இருந்த நேரத்தில் உழவுத்தொழிலுக்குத் திரும்பியிருப்பார். அல்லது இதைச் செய்து கொண்டே அதைச் செய்யலாமே என்று இரண்டையும் செய்ய முயற்சித்து விரக்தியடைந்திருப்பார். அல்லது இவர் இறைவாக்குப் பணி செய்யும்போது இவருடைய எண்ணமெல்லாம் ஏரின் மேலும் எருதுகள்மேலும்தான் இருக்கும். 'ஆனால் தேவையானது ஒன்றே' என்பது வாழ்வின் பாடமாக இருக்கிறது. தாயின் வயிற்றில் இருப்பது குழந்தைக்கு என்றும் பாதுகாப்பு தான். ஆனால், அந்தப் பாதுகாப்பு வளையம் முறியவில்லை என்றால் அது குழந்தைக்கே ஆபத்தாக முடியும். இன்று அருள்பணி நிலையில் இருக்கும் நான் எனக்கென உருவாக்கி வைத்திருக்கும் ஃபால் பேக் மெக்கானிஸம் (fallback mechanism) எவை? என்னுடைய குடும்பமா? நட்பு வட்டமா? படிப்பா? இன்று இறைப்பணி செய்யும்போது என்னுடைய மனம் எங்கே செல்கிறது? என்னுடைய மனம் செல்லும் இடத்திற்காக நான் என் பணியோடு சமரசம் செய்கிறேனா? என்னுடைய பாதுகாப்பு வளையத்தை நான் உறுதியாக்கிக்கொள்வதில் கருத்தாயிருக்கிறேனா? அல்லது வளையத்திலிருந்து வெளியே வர முயற்சிக்கிறேனா?


2. பவுல் போல துணிச்சல்இரண்டு தெரிவுகளுக்கு இடையே நிற்பது நமக்கு மனஉளைச்சலை உண்டாக்குவதோடு, 'ஒன்றுக்கொன்று எதிராக உள்ளதால் நீங்கள் செய்ய விரும்புவதை உங்களால் செய்ய இயலவில்லை' என்கிறார் பவுல். நாம் பழையது ஒன்றை முறித்து முன்னே செல்வதை ஆங்கிலத்தில் 'ப்ரேக் த்ரூ' (break through) என்கிறார்கள். அதாவது, ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிற ஒருவர் தன்னுடைய பழைய சாதனையை முறிக்கும்போது 'ப்ரேக் த்ரூ' (break through) அடைகிறார். இதை அவர் அடைவதற்குச் செய்ய வேண்டிய ஒன்று, 'ப்ரேக்கிங் வித்' ('breaking with') தன்னுடைய பழைய பழக்கம், அல்லது பழைய செய்முறையை அவர் விட வேண்டும். 'ப்ரேக்கிங் வித்' ('breaking with') செய்வதற்கு நிறைய துணிச்சல் தேவை.


3. இயேசு போல சமநிலை கலிலேயாவில் இயேசுவின் பணி நன்றாக இருக்கிறது. நிறையப் பேர் குணம் பெறுகிறார்கள். அவருடைய புகழ் எங்கும் பரவுகிறது. இதைக் கண்டு தேங்கிவிடவில்லை அவர். தன்னுடைய இலக்கில் அவர் தெளிவாக இருக்கின்றார். சமாரியாவைக் கடந்து செல்லும்போது எதிர்ப்பு வருகிறது. ஆனால், எதிர்ப்பைக் கண்டு அவர் பின்வாங்கவில்லை. கலிலேயர்களைத் திருப்திப்படுத்த அவர்களோடு தங்கவில்லை. சமாரியர்களை எதிர்த்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை, பயப்படவில்லை. ஆக, யாரையும் திருப்திப்படுத்த நினைக்காத, யாரையும் கண்டு பயப்படாத ஒருவர் சமநிலை பெற்றிருப்பார். இந்தச் சமநிலை கொண்டு அவர் தன்னுடைய எந்த நிலையிலும் எதையும் முறித்து முன்னேறத் தயாராக இருப்பார்.


இறுதியாக, ஒரு பழமொழி உண்டு: 'பறக்க நினைக்கின்ற புறா மண்ணிலிருந்து எழும்பி எறும்புப் புற்றில் அமர்ந்தால் அது பறந்தது என்றாகிவிடாது.' மண்ணும் எறும்பும் புற்றும் ஒன்றுதான். இன்று சீடத்துவத்திற்கு மட்டுமல்ல. நான் விட்டுவிடுகின்ற எந்த தீய பழக்கத்திற்கும் முறிவு மிக அவசியம். இன்று நான் இறைவனைப் பின்தொடர்வதிலிருந்து என்னைப் பின்னிழுக்கும் பழக்கம் எது? நான் இவ்வுலகில் மிகவும் மதிப்புக்குரியவர்கள் அல்லது அன்புக்குரியவர்கள் என்று யாரைக் கருதுகிறேன்? நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவதிலிருந்து இவர்கள் என்னைப் பின்நோக்கி இழுக்கிறார்களா?
எல்லாரையும் சேர்த்து இழுத்துக்கொண்டு முன்னே செல்ல முடியும் என்கிறது மூளை. இல்லை முறித்துவிடத்தான் வேண்டும் என்கிறது மனம். மூளைக்கும் மனத்திற்குமான போராட்டத்திலேயே நகர்கிறது வாழ்க்கை.

முறிவுகளே முடிவுகள் ஆனால் முன்னேறுவது எளிதாகும்!

ser

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com