மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

திரு நீற்றுப் புதன்
முதுலாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
யோவே. 2:12-18 | 2 கொரி 5:20 6:2 | மத். 6:1-6, 16-18

தவக்காலத்தின் தொடக்கமாக நாம் இன்று திருநீற்றுப் புதனைக் கொண்டாடுகிறோம். இதை விபூதி புதன் சாம்பல் புதன் என்றும் அழைக்கிறோம். ஏனெனில் நெற்றியிலே புனிதமாக்கப்பட்ட சாம்பலால் பூசப்படுகிற தொடக்க நூலில் கூறப்பட்ட இறைவார்த்தைக்கேற்ப, “மனிய மண்ணாய் இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய்” (தொநூ 3:19) என்று உணர்த்துகின்ற காலத்தைத் தொடங்கியிருக்கிறோம்

30 வயது நிரம்பிய செல்வச் சீமாட்டி ஒருத்தி கேளிக்கை விடுதிக்குச் சென்று விடிய விடிய நடனமாடினாள், ஆனால் இரண்டு நாட்கள் கடந்து நிமோனியா காய்ச்சலால் இறந்துவிட்டாள். அவளால் நொந்துபோன அவள் கணவன் கூறுவார்: “இவள் தன் வாழ்நாளில் 10 ஆண்டுகள் தூக்கத்திலும், ஐந்து ஆண்டுகள் அதிகார நிறுவனத்திலும், ஐந்து ஆண்டுகள் திரையரங்குகளிலும், ஐந்து ஆண்டுகள் கதை நாவல்கள் வாசிப்பதிலும் செலவிட்டாள். எஞ்சிய காலத்தைக் கண்ணாடிக்கு முன் தன் அழகை ரசிப்பதில் செலவழித்தாள். ஆனால் கடவுளுக்கு நேரம் கொடுக்க, பிறரை உற்றுநோக்க அவளுக்கு நேரமில்லை என்றார். ஆம், மனிதர்கள் தங்களை நிலைநாட்ட, பாதுகாக்கப் பலப்படுத்தவே நேரம் ஒதுக்குகிறார்கள்.

ஆனால் மனித வாழ்வு எப்படிப்பட்டது? என்ன செய்ய வேண்டும்? என்பதை உணர்த்தத் தான் வருகின்றது இந்தத் திருநீற்றுப் புதன். மனிதர்கள் பலவீனமானவர்கள், நிலை வரம் கொண்டிராதவர்கள் என்பதை எண்பிப்பதே இந்தத் தவக்கால முதல் நாள் விடுக்கும் செய்தி. உண்ணா நோன்பு வழியாக இதயச் சுமையால் அழுது, புலம்பி ஆண்டவரிடம் வரும்போது அவர்தம் கருணையை நம்மீது பொழிவார் (யோவே. 2:12, 13, 18). நமது நோன்பு மனிதர்களின் கண்களில் படாதவாறும் கடவுளுக்கு மட்டும் தெரிகிற வகையிலும் இருந்தால் மிருந்த கைமாறு பெறுவோம் (மத் 6:16-18), தர்மம் செய்யும்போது நம் ஆன்ம பலம் கூடுகிறது என்ற பாடமும் (மத் 6:5-15), வலுவற்ற நமக்கு செபத்தில் எல்லாம் கூடும், என்ற பாடமும் நமக்குக் கிட்டுகின்றன. ஏனெனில் ஒரு யுதருடைய சமய வாழ்வில் அடிப்படைத் தூண்களாகக்  கருதப்பட்டவை, தர்மம் இடுதல், இறை வேண்டல் செய்தல், நோன்பு இருத்தல் ஆகிய மூன்றுமே. 

தவக்காலத்தைக் தொடங்கும் இன்று, இக்காலத்தில் கிறிஸ்துவின் பாடுகளை நம் கண்முன் வைத்து, நம் பாவங்களுக்கு மன்னிப்பு வேண்டுவதற்காக இம்மூன்று செயல்களும் நமக்கு உதவ வேண்டும் என்ற முறையில் இன்றைய வாசகங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்நற்செயல்களைப் பிறர் அறிய வேண்டும், அறிந்து புகழ வேண்டும் என்பதற்காகச் செய்யக்கூடாது என்றும் இன்றைய வாசகங்கள் எச்சரிக்கின்றன (மத் 6 : 2, 5,16). இதை ஆழமாக உணர்த்துகின்ற வகையில், உங்கள் உடலைப் போர்த்தும் வெளி ஆடைகளையல்ல, உங்கள் உள்ளங்களையே கிழித்து ஆண்டவரிடம் வாருங்கள் என்று யோவேல் இறைவாக்கினர் மூலமாக (யோவே. 2:13) ஆண்டவர் அழைக்கிறார்.

இந்த உலகில் எத்தனை ஆண்டுகள் வாழ்கின்றோம் என்பதல்ல. எப்படி வாழ்கின்றோம் என்பதே சிந்தனைக்குரிய கேள்வி. வாழ்வு என்பது ஒரு கொடை. அதைப் பயன்படுத்தியே ஆக வேண்டும். வாழ்வு என்பது ஒரு திருப்பயணம். சேரும் இடம் தெளிவாக இருத்தல் வேண்டும். வாழ்வு என்பது ஒரு போராட்டம். வலிமையோடு செயல்பட வேண்டும். வாழ்வு என்பது ஒரு சாதனை, அதை வென்றேயாக வேண்டும். வாழ்வை வடிவமைத்தவர் இறைவன். அவரே நீடிய வாழ்வு. எனவே தர்மம், செபம், தவம் இவற்றைப் பிறர் அறியாத முறையில் (மத். 6 :4) வெளி ஆடம்பரத்திற்காக அல்லாது, நம் உள்ளத்தைப் புதுப்பிக்கும் வகையில் செயல்பட்டு நறை வாழ்வுக்கு நம்மை இட்டுச் செல்ல இந்தத் தவக்காலத்தைத் தொடங்குவோம்.
 

ser


நெற்றியில் திருநீறோடு

உலகப் புகழ் பெற்ற நாடக ஆசிரியர் ஜார்ஜ் பெர்னார்டு ஷா. கவிஞர்கள், அறிஞர்கள், புனிதர்கள், மேதைகள் வரலாற்றில் தடம்பதித்த சாதனையாளர்கள்... இப்படிப் புகழுக்குரிய எத்தனை பேரை பெர்னார்டு ஷா சந்தித்திருப்பார்! ஒருநாள் அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர் அவரை அணுகிக் கேட்டார்: “பெர்னார்டு, வாழ்நாளில் எத்தனையோ பேரும் புகழும் பெற்ற மனிதர்களைப் பார்த்திருப்பீர்கள். நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையை மீண்டும் வாழ உங்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தால், அவர்களில் யாரைப் போல் வாழ ஆசைப்படுவீர்கள்?”

பெர்னார்டு ஷா சொன்னது என்ன தெரியுமா? “வேறு யாரைப் போலவும் அல்ல. இந்த பெர்னார்டு ஷா வாழ்ந்திருக்க வேண்டிய, ஆனால் வாழத் தவறிய அந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருக்கும். I would liketo be a person George Benanrd Shah could have been but never was".
முதிராத ஓர் இலட்சியம் முள்ளாகத் தனக்குள் உறுத்துவதை யல்லவா அந்த வார்த்தைகளில் அறிஞர் உணர்த்துகிறார்!

வேறு எவரையோ ஒருவரைப் போல நான் வாழவா கடவுள் என்னைப் படைத்தார், அழைத்தார்? நான் நானாக வாழ வேண்டும் என்பதுதானே இறைவனின் திட்டம், திருவுளம்!

இவனாக இல்லையே, அவளாக இல்லையே என்று ஏங்குவதற்குப் பதிலாக, நான் நானாக இன்னும் சிறப்பாக எப்படி யெல்லாமோ இருந்திருக்கலாம், இல்லாமல் போனேனே என்று சிந்திக்க வைப்பதுதான் தவக்காலம்!

தனி வாழ்வில், குடும்பச் சூழலில், சமூக ஈடுபாட்டில் எது எதையோ நான் செய்திருக்கலாம். செய்யத் தவறினேன். எத்தனையோ வழிகளில் நடந்திருக்கலாம். நடக்க மறந்தேன். எப்படியெல்லாமோ இருந்திருக்கலாம். இருந்த வாய்ப்பை இழந்தேன். - இப்படி நானே எனக்குள்ளே புகக் கடவுள் தரும் வாய்ப்புத்தான் தவக்காலம்!

கடவுளின் வார்த்தைதானே நமக்குக் கண்ணாடி! அந்தக் கண்ணாடியில் உற்றுப் பார்ப்போம். செபம் கலந்த சிந்தனையோடு உற்றுப் பார்ப்போம். அந்த இறைவார்த்தையின் ஒளியில் எப்படி வாழ்ந்திருக்க வேண்டுமோ, ஆனால் எப்படியெல்லாமல் வாழத் தவறினோமோ அதையெல்லாம் வெட்ட வெளிச்சமாக்குவதுதான் தவக்காலம்.

நமது நாட்டின் தந்தை மகாத்மா காந்தி தன் வாழ்வில் ஆற்றிய பணிகளிலேயே மிகமிகக் கடினமானது என்று எதைக் குறிப்பிடுகிறார் தெரியுமா? இந்தியத் திருநாட்டுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்ததுதான் என்று நாம் சொல்லுவோம். ஆனால் அவர் அப்படி நினைக்கவில்லை.

காந்தியடிகளைப் பொருத்தவரை வெள்ளையர்களிடமிருந்து விடுதலை வாங்கித் தந்தது எளிதான வேலைதான். அதை விடக் கடினமான பணி? நம் நாட்டு மக்களை, அவர்களுக்கிடையே நிலவிய பகைமை, மதவெறி, இனவெறி போன்ற அடிமைத் தனங்களிலிருந்து விடுதலை பெறச் செய்வதுதான் அவருக்குச் சற்றுக் கடினமான பணியாக இருந்தது. உண்மையில் அவரது உயிரைக் குடித்ததே இத்தகைய - இந்து முஸ்லிம் மக்களிடையே இருந்த - உள்நாட்டுப் பகையுணர்வு தானே!

அதைவிடவும் மிகக் கடினமான பணி ஒன்று உண்டு என்கிறார் காந்தியடிகள். அது என்ன? “நான் என்னையே, என்னுடைய பலவீனங்களிலிருந்து விடுவித்துக் கொள்வதுதான் உண்மையில் மிக மிகக் கடினமான வேலை. வாழ்நாள் முழுவதும் போராட வேண்டிய வேலை. மீண்டும் மீண்டும் தோற்றுப்போய், மீண்டும் மீண்டும் எழுந்து நடத்தியாக வேண்டிய போராட்டம்”. இப்படிச் சொன்னவர் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மாமனிதராகக் கருதப்படும் காந்தியண்ணல்.
அப்படியானால் நாம் நமது பலவீனங்களிலிருந்து விடுபடுவதற்காக நடத்த வேண்டிய போராட்டம் எவ்வளவு பெரியது. உன் பலவீனங்களைக் கண்டு பயம் கொள்ளாதே. எதிர்த்துப் போராடு, முறியடி. அதற்காக இந்தத் தவக்காலத்தில் உனக்குள்ளே நுழைந்து அலசு. உன்னையே உணர முற்படு - அதையும் இறைவார்த்தையின் ஒளியில். “தம் வார்த்தையை அவர் அனுப்பி அவர்களைக் குணப்படுத்தினார். அழிவினின்று அவர்களை விடுவித்தார் " (தி.பா.107:20)
கடவுளின் வார்த்தை தான் நமக்குத் “தபோர்”. அந்த மலையில் ஒலிக்கும் குரல் “இவருக்குச் செவி சாயுங்கள்” (மத்.17:5)

தன்னிலை உணர்வுதானே ஞானம். ஞானம் சோப்புப் போன்றது. அழுக்கைப் போக்கவே சோப்பு. அதற்காக அலசாமல் சோப்பை வைத்துக் கொண்டால் அதுவே அழுக்காகிவிடும். தன்னிலை உணர்வு மட்டும் போதாது. ஞானம் வாழ்க்கையை மாற்ற வேண்டும். மனமாற்றம் தேவை.

அதனால்தான் எடுத்த எடுப்பிலேயே இறைவாக்கினர் யோவேல் முழங்குகிறார்; “நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக் கொள்ள வேண்டாம். இதயத்தைக் கிழித்துக் கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்” (யோவேல் 2:13). முதன்முறையாக வெண்ணிலவில் மனிதன் அடியெடுத்து வைத்தபோது சார்லஸ் டி காலே என்ற தலைவர் சொன்னாராம்: “வானத்துக் கோளங்களுக்கெல்லாம் மனிதன் வழி கண்டுபிடித்து விட்டான். ஆனால் இன்னும் அவன் தன் மனதுக்குள் ஒரு பயணத்தைத் தொடங்கவில்லை”.

“நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்” (எசேக்.36:26) என்கிறார் ஆண்டவர். அப்போது இலையுதிர்காலம் மாறும்; இளந்தளிர் புத்துணர்வோடு அரும்பும்; வளம் தரும் வசந்தமாகும் தவக்காலம்.
 

“கடவுளோடு ஒப்புரவாகுங்கள்”  

நிகழ்வு

பெருநகர் ஒன்றில் ஒரு கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தார்கள். நன்றாகச் சென்றுகொண்டிருந்த அவருடைய திருமண வாழ்க்கையில் திடீரென்று விரிசல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவரும் பிரிந்துவிடுவதே நல்லது என்று பிரிந்துபோனார்கள். இதற்குப் பின்பு அவர்கள் இருவரும் வேறு வேறு இடங்களுக்குச் சென்று வாழத் தொடங்கினார்கள்.

ஒருநாள் கணவர் பணி நிமித்தமாக முன்பிருந்த அதே நகருக்கு வந்தார். அன்றைய நாளில், பிறந்து ஓரிரு மாதங்களிலேயே இறந்துபோன அவருடைய மகனின் நினைவுநாள் என்பதால், அவர் தன்னுடைய பணியை முடித்துவிட்டு, மகனின் கல்லறைக்கு மரியாதை செலுத்த வந்தார். அவர் மகனின் கல்லறையில் மரியாதை செலுத்திக்கொண்டிருக்கையில் அவருக்குப் பின்னால் யாரோ ஒருவர் நடந்து வருவது மாதிரியான காலடிச் சத்தம் கேட்டது. அவர் திரும்பிப் பார்த்தார். அப்பொழுது அவருடைய கண்களை அவரால் நம்ப முடியவில்லை. ஆம், அங்கு அவருடைய மனைவி, மகனுக்கு மரியாதை செலுத்துவதற்காக மாலையோடு நின்றுகொண்டிருந்தார்.

நீண்ட நாள்கள் கழித்து இருவரும் பார்த்துக்கொண்டதால் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள். பின்னர் அவர்கள் இருவரும் பல ஆண்டுகள் பிரிந்திருந்ததால் ஏற்பட்ட இழப்புகளை உணர்ந்தவர்களாய் ஒன்று சேர்ந்தார்கள். ஆம், இறந்துபோன மகன் பிரிந்திருந்த அவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்தான்; ஒப்புரவாக்கினான்.

இந்தக் குழந்தை எப்படி பிரிந்திருந்த கணவன் மனைவியை ஒப்புரவாக்கியதோ, அது போன்று ஆண்டவராகிய கடவுள் தன் மகன் இயேசு வழியாக மனிதர்களாகிய நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். எனவே, நாம் அனைவரும் அவரோடு ஒப்புரவாக இருக்கவேண்டும். அதைத்தான் மேலே உள்ள நிகழ்வும் இன்று நாம் தொடங்கியிருக்கும் தவக்காலமும் நமக்கு எடுத்துக்கூறுகின்றன.

தன் மகன் இயேசுவின் வழியாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கிய கடவுள்

இன்று நாம் அருளின் காலமான தவக்காலத்தைத் தொடங்கியிருக்கின்றோம். இன்றைய நாளில் நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, கடவுளோடு ஒப்புரவாகவேண்டும் என்ற உயரிய அழைப்பினைத் தருகின்றது. நாம் ஏன் கடவுளோடு ஒப்புரவாகவேண்டும்...? கடவுளோடு எப்படி ஒப்புரவாகுவது...? கடவுளோடு ஒப்புரவாகுவதால் நாம் அடையும் நன்மைகள் என்ன...? ஆகியவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் இவ்வாறு வாசிக்கின்றோம்: “உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள், கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்.” ஆம், மனிதர்கள் தங்களுடைய கீழ்ப்படியாமையால் கடவுளோடு உள்ள உறவை முறித்துக்கொண்டார்கள். அப்படியிருந்தும், கடவுள் அவர்களுடைய குற்றங்களைப் பொருட்படுத்தாமல், தம் மகன் இயேசுவின் வழியாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கிக்கொண்டார். அப்படியானால், நாம் ஒவ்வொருவரும் கடவுளோடு ஒப்புரவாக இருக்கவேண்டும் என்பதே அவர் நமக்குக் கொடுக்கப்படும் அழைப்பாக இருக்கின்றது.

கடவுளோடு எப்படி ஒப்புரவாகுவது என்பதற்கான பதிலை இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட நற்செய்தி வாசகத்தில் இயேசு தருகின்றார். அறம் செய்தல், இறைவேண்டல் செய்தல், நோன்பிருத்தல், என்ற மூன்று முக்கியமான உண்மைகளைச் சொல்லும் இயேசு, இவற்றின்மூலம் நாம் கடவுளோடு ஒப்புரவாகலாம் என்று கூறுகின்றார். இங்கு ஒரு கேள்வி எழலாம். அது என்ன கேள்வி எனில், அறம் செய்தல், இறைவேண்டல் செய்தல், நோன்பிருத்தல் இவற்றின் மூலம் ஒருவர் எப்படிக் கடவுளோடு ஒப்புரவாக முடியும் என்பதுதான் அந்தக் கேள்வி.

திருத்தூதரான புனித யோவானின் கூற்றுப்படி (1யோவா 4: 20) மனிதரோடு ஒப்புரவாகாமல் அல்லது மனிதரை அன்பு செய்யாமல், கடவுளோடு ஒப்புரவாகுவதோ அல்லது கடவுளை அன்பு செய்யவோ முடியாது. மனிதரை அன்பு செய்வதற்கு ஒருவர் அறச்செயல்களைச் செய்தாகவேண்டும். இதைவிட மிக முக்கியமான செய்தி என்னவெனில், ஒருவர் சக மனிதரோடு ஒப்புரவாகவேண்டும் அல்லது அவரை அன்பு செய்யவேண்டும் என்றால், அதற்கு அவர் தன்னை முதலில் அன்பு செய்யவேண்டும். தன்னை அன்பு செய்கின்றவர் கட்டயாம் நோன்பிருந்தாக வேண்டும். எனவே, ஒருவர் கடவுளோடு ஒப்புரவாக வேண்டும் என்றால், அவர் தன்னோடும் பிறரோடும் ஒப்புரவாகவேண்டும். அதற்கு நோன்பும் அறச் செயலும் இறைவேண்டலும் தேவையானதாக இருக்கின்றன.

கடவுளிடமிருந்து பெற்ற அழைப்பை இழக்கவேண்டாம்

கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்ற சொன்ன புனித பவுல், அடுத்ததாகச் சொல்லக்கூடிய செய்தி, ‘கடவுளிடமிருந்து பெற்ற அழைப்பை இழக்கவேண்டாம்’ என்பதாகும். நாம் கடவுளிடமிருந்து பெற்ற அழைக்க இழக்கவேண்டாம் என்று பவுல் வலியுறுத்திக் கூறுவதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கின்றது. அது என்னவெனில், மனிதர்களாகிய நாம் அனைவரும் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக இருக்க, அவர் பாவம் அறியாத தம் திருமகனை பாவநிலை ஏற்கச் செய்தார் என்பதாகும். இது கடவுளைப் பொருத்தமட்டில் ஒரு மிகப்பெரிய செயல் என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில், எவரும் தம் மகன் அல்லது மகள் தாழ்ந்துபோகவேண்டும் என்று விரும்புவதில்லை. ஆனால், கடவுள் பாவமே அறியாத தன் மகனைப் பாவநிலை ஏற்கச் செய்தார் எனில், அங்குதான் மேலான கடவுளின் அன்பு இருக்கின்றது. எனவே, இத்தகைய பேரன்பு மிக்க இறைவனிடமிருந்து வரும் ‘என்னிடம் திரும்பி வாருங்கள்’ யோவே 2: 12,13) அல்லது ஒப்புரவாகுங்கள் என்ற அழைப்பினை நாம் இழந்துவிடவேண்டாம் என்பதுதான் பவுல் கூறும் செய்தியாக இருக்கின்றது.

இதுவே தகுந்த காலம்; இன்றே மீட்பு நாள்

இன்றைய இரண்டாவது வாசகத்தின் வழியாக புனித பவுல் நமக்குச் சொல்லும் மூன்றாவது முக்கியமான செய்தி, கடவுளோடு ஒப்புரவாகுவதற்கு இதுவே தகுந்த காலம்; இன்றே மீட்பு நாள் என்பதாகும். பலர் ‘கடவுளோடு நாளை ஒப்புரவாகலாம்... பிறகு ஒப்புரவாகலாம்...’ என்று இருப்பதுண்டு. இதனால் அவர்கள் கடவுளோடு ஒருபோதும் ஒப்புரவாகாமல் போகும் நிலைதான் ஏற்படும். இத்தகைய சூழ்நிலையில் புனித பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தின் வழியாகக் கொடுக்கும், ‘இதுவே தகுந்த காலம். இன்றே மீட்பு நாள்’ என்ற அழைப்பு நமது கவனத்திற்குரியது.

கடல் ஆமைகளிடம் ஒரு வித்தியாச வழக்கம் உண்டு. அவை முட்டையிடும்பொழுது கடலில் முட்டையிடாமல், நிலத்திற்கு வந்து, குழிகளைத் தோண்டி முட்டையிட்டு மூடிவிட்டுப் போய்விடும். குறிப்பிட்ட காலத்தில் அவை குஞ்சுகளாகப் பொறித்துவிடும். குஞ்சுகளாகப் பொறித்தபின் அவை நிலத்தில் தங்குவதில்லை. மாறாக, தங்களுடைய பெற்றோர் இருக்கும் கடலுக்கு வந்துவிடும். ஒருவேளை அவை நிலத்திலேயே இருந்தால், பறவைகளுக்கும் பிற உயிரினங்களுக்கும் இரையாகிவிடும் என்பதலேயே அவை இப்படிச் செய்யும்.

மனிதர்களாகிய நாமும்கூட இந்த மண்ணக இன்பமே போதும் என்று இருந்துவிடாமல், முடிவில்லா வாழ்வினைத் தரும் இறைவனைத் தேடிச் செல்லவேண்டும்; அவரோடு ஒப்புரவாகவேண்டும். அதுதான் இறைவனின் விரும்பமும்கூட. எனவே, நாம் கடவுளோடு ஒப்புரவாக இதுவே தகுந்த காலம் என்று நம்மை அன்பு செய்து, பிறரையும் அன்பு செய்து, அதன்மூலம் கடவுளையும் செய்து, அவரோடு ஒப்புரவாகுவோம்.

சிந்தனை

‘என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய முடியாது’ (யோவா 15: 5) என்பார் இயேசு. ஆகையால், நாம் கடவுளோடு ஒப்புரவாகுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser ser

sunday homily


முகப்பு பக்கம்
வத்திக்கான் வானொலி
கத்தோலிக்க இதழ்கள்
ஞாயிறு வாசகம்
விருந்தினர் பக்கம்
உம் வாக்கே விளக்கு!
சென்னை பங்குதலங்கள்
நூலகம்
திருத்தலச் சுற்றுலா
தவக்கால சிந்தனைகள்
ஒலியும் ஒளியும்
அன்னை தெரேசா
கிறிஸ்மஸ் மலர்கள்
பொங்கல்
செபமாலை
பாடல்கள்
செபமே ஜெயம்A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com