மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

ஆண்டவரின் விண்ணேற்புப் பெருவிழா
முதலாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
திருத்தூதர் பணிகள். 1:1-11 | எபேசியர். 1:17-23 | மத்தேயு. 28:16-20

ser

ஞாயிற்றுக்கிழமை மாலை, குடிகார அந்தோணி பங்குத் தந்தையிடம் சென்று, "இன்று காலை ஆண்டவரின் விண்ணேற்பு விழா. விண்ண கம், மண்ணகம், மோட்சம், நகரம் என்று பிரசங்கம் வச்சீங்க. மோட்சம், நரகம் எங்க சாமி இருக்கு?" என்றான். பங்குத் தந்தை , "நாளை மாலை 7 மணிக்கு குடிக்காமல் வா சொல்கிறேன்" என்றார். அதேபோல் அந்தோணியும் வந்தான். ஒரு தெருவுக்கு அழைத்துச் சென்றார். அங்கே பலர் குடித்துவிட்டு, சண்டையும், கலவரமும் நடந்து கொண்டிருந்தது. இதுதான் நரகம் என்றார் பங்குத் தந்தை . சற்று தூரம் சென்று வேறு ஒரு தெருவுக்கு அழைத்துச் சென்றார். அங்கே மக்கள் அனைவரும் ஒன்றுகூடி அங்குள்ள ஆலயத்தில் செபமாலை சொல்லி அமைதியாகச் செபித்துக் கொண்டிருந்தார்கள். அதன்பிறகு அங்குள்ள ஏழை பிள்ளைகளின் படிப்பிற்கு நாம் எந்த வகையில் உதவி செய்யலாம் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். " இதுதான் அந்தோணி மோட்சம் என்றார். இதில் நீ எதை மேற்கொள்ள வேண்டும் என்று நீயே முடிவு செய்துக்கொள்" என்றார் பங்குத் தந்தை.

இயேசுவின் விண்ணேற்பு நமக்கு வலியுறுத்தும் கருத்து, தந்தை மகன் உறவின் அடிப்படையில் இயேசு வாழ்ந்து காட்டி, தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றினார். மகனின் அர்ப்பணத்திற்கும், தன் விருப்பத்திற்கும், உயிர் கையளிப்பிற்கும் கொடுத்த ஒரு மாபெரும் அங்கீகாரம், மாபெரும் கொடைதான் விண்ணேற்றமாகும். தனது பணி வாழ்வை மண்ணுலகில் தொடங்கும் முன் இயேசு தனது இலக்கு எது? என்று சோதித்துப் பார்த்தார். அது தெளிவான பிறகு பணியைத் தொடங்கினார். அதற்கு திருமுழுக்கை அடித்தளமாகக் கொண்டார். திருமுழுக்கினால் அவர் பெற்ற அனுபவம் தந்தையின் விருப்பத்தோடு இணைந்து போனதால் இயேசுவின் சிந்தனை, பணி, இறுதி இலக்கு இவைகளின் நிறைவே சிலுவைச் சாவு. தனது இலக்கின் இறுதியில் சொல்கிறார் : தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் (லூக். 23:46). வாழ்நாள் முழுவதும் தந்தையின் விருப்பத்தையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டதால் இந்த அன்பு மகனுக்குத் தந்தையிடமிருந்து கிடைக்கப்பெற்ற மாபெரும் கொடையே விண்ணேற்பு. இது இயேசுவோடு முடிந்து விடுவதல்ல. நம் அனைவருக்கும் ஒரு முன்னோடி நிகழ்வாகும். இறைச்சாயலில் படைக்கப்பட்ட நாம் அனைவரும் நமது ஆவியை தந்தையிடம் ஒப்படைக்கும் வரை அவரின் விருப்பத்தைச் சென்ற இடமெல்லாம் மேற்கொண்டு நன்மையை நிறைவேற்ற முன்வர வேண்டும்.

இயேசுவின் விண்ணேற்பு நிகழ்விலிருந்து நாம் அறிந்துகொள்வது, இயேசு விட்டுச் சென்ற இறையரசுப் பணியைக் காலத்தின் அறிகுறிகளுக்கேற்பவும் மக்களின் தேவைகளுக்கேற்பவும், தொடர்ந்தாற்ற அழைக்கப்படுகிறோம். நமது திறமைகளையும், அதிகாரங்களையும் பகிர்ந்து கொடுத்து வாழக் கற்றுக்கொண்டால் விண்ணேற்பு விழா பொருளுள்ள விழாவாக அமையும். இந்த மண்ணக வாழ்விலே, ஒரு விண்ணக வாழ்வை உருவாக்குவதே அதன் நோக்கமாகும். மண்ணக வாழ்வு என்பது ஒரு மாபெரும் கடல். இந்தப் பிறவிப் பெருங்கடலில் நாம் சந்திக்கும் புயலை, கொந்தளிப்பை, தடுமாற்றத்தை உறுதியுடன் தாங்கி இறுதிவரைப் போராடி கரைசேரக் கற்றுக்கொள்ள வேண்டும்.

  • வாழ்க்கைக் கடலில் நீந்தத் தெரியாமல், வாழ்வின் பயன்களை, அர்த்தங்களை அறியாமல் வாழ்பவர்கள் பாதி வாழ்விலேயே மூழ்கிப் போவார்கள்.
  • பலர் கடினப்பட்டு போராடி நீந்துவர். கரை சேர வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் துன்பம். சுமை என்று வந்தவுடன் துவண்டு போய்விடுவார்கள்.
  • சிலர் பலத்தை நம்பி சவாலாக நீந்துவர். தடைவந்தாலும், தடுமாறினாலும், இடர் வந்தாலும் அதை சமாளிப்பர். ஆனால் வாழ்க்கைக் கடலில் கரை சேரும் முன் உலக ஆசைகளால் இலக்கை அடையும் முன்பே மூழ்கி விடுவர்.
  • வெகு சிலரே இன்பமானாலும், துன்பமானாலும், தடைகள் வந்தாலும், விடாமுயற்சியுடன் இறைபலத்தோடும், நம்பிக்கையோடும் போராடி வெற்றி பெறுவர். இவர்கள் மண்ணகத்திலேயே விண்ணகத்தைக் கண்ட மகத்தான மனிதர்கள் ஆவர்.

பணக்காரன் உலக ஆசைகளால் நீதியை, நேர்மையை இழந்தான். நரகத்தை வாழ்வாக்கிக் கொண்டான். ஏழை லாசர் வறுமையிலும், நேர்மையை வாழ்வாக்கிக் கொண்டதால் விண்ணக வாழ்வை வழியாக்கிக் கொண்டார். இயேசு சென்ற இடமெல்லாம் நன்மை செய்தார். துன்பத் துயரங்களைத் தாங்கி இறுதிவரை நிலைத்து நின்றதால் தந்தை அவருக்குக் கொடுத்த பரிசுதான் விண்ணகம். துன்ப துயரங்களின் இறுதி இலக்கு நன்மைக்கே, நியாயத்திற்கே, தந்தைக்கே என்பதே இயேசுவின் விண்ணேற்பு நமக்கு வலியுறுத்துகிறது. இயேசுவின் விண்ணேற்பை நமதாக்கிக் கொண்டு அவருக்குச் சான்று பகிர்ந்து வாழ வேண்டுமானால் நாம் ஒவ்வொருவரும் இயேசுவை நன்கு அறியவும், உண்மையை வெளிப்படுத்தவும், அவர்மேல், நிறைவான நம்பிக்கை, கொண்டு அவரின் வல்லமை செயல் வடிவம் பெறச் செய்யவும் முன் வர வேண்டும் என்று இரண்டாம் வாசகம் தெளிவுப்படுத்துகிறது (எபே. 1:17-23). இவைகள் அனைத்திலும் நிலைத்து நின்று சான்று பகர வேண்டுமானால் தூய ஆவியின் துணை நமக்கு வேண்டும் (தி.ப. 1:7-9).
விண்ணகத் தந்தையின் சாட்சிகளாய் வாழ வேண்டுமெனில், வார்த்தையால் மட்டுமல்ல, வாழ்க்கையின் மூலமாக வெளிப்படுத்த வேண்டும். அவரின் சிந்தனைகள், பணி வாழ்வு, இறுதி இலக்கு இவைகளை நமதாக்கி, இறுதிவரை நிலைத்து நின்று மண்ணகத்திலே ஒரு விண்ணகத்தை உருவாக்க முன் வர வேண்டும்.

இன்று விண்ணகத் தந்தை நம்மைப் பார்த்து கேட்கும் கேள்வி : மகனே! மகளே! நான் விட்டுச் சென்றப் பணியைத் தொடர உனது கரங்களை என் வழியாகப் பிறருக்குத் தருவாயா...? நடந்து சென்று, சென்ற இடமெல்லாம் நன்மை செய்த எனது பணியைத் தொடர , உனது கால்களை என் வழியாகப் பிறருக்குத் தருவாயா....? உள்ளம் உடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற என் வழியாக உனது இதயத்தைத் தருவாயா...? இந்தக் கேள்விகளுக்கு நாம் சொல்லும் பதில் என்ன? சிந்திப்போம்!

ser ser

எனக்கு சாட்சிகளாய் இருங்கள்

உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள் (திப 1:8). இதுதான் விண்ண கம் எழுந்து சென்ற இயேசு அவரது சீடர்களுக்குக் கொடுத்த அன்புக்கட்டளை. நாம் இயேசுவுக்குச் சாட்சிகளாய் வாழ விரும்பினால் நாம் அவருடைய வாழ்வின் நீளம், அகலம், உயரம் அனைத்தையும் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நமக்குத் தெரியாத ஒன்றுக்கு எப்படி சாட்சி சொல்ல முடியும்?
விண்ணகம் எழுந்து சென்றிருக்கும் இயேசு எப்படிப்பட்டவர் என்பதைச் சுட்டிக்காட்ட இதோ ஓர் உவமை.

இயேசு பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, இறந்து விண்ணகத்திற்குள் நுழைந்தார். அங்கிருந்த அழகு வானதூதர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு, இயேசுவே, உலக மக்கள் மீது அன்பு மழையைப் பொழிந்து, அவர்களுக்கு உமது உயிரையும் கொடுத்தீர். அதற்குப் பரிசாக அந்த மக்கள் உமக்கு என்ன கொடுத்தார்கள்? என்று கேட்டார்கள். இயேசு வானதூதர்களிடம் அவரது உடலிலிருந்த ஐந்து காயங்களையும் காட்டி, இதுதான் அவர்கள் எனக்கு அளித்த பரிசு என்றார். அதற்கு வானதூதர்கள், என்ன ஆண்டவரே வேடிக்கையாக இருக்கின்றது! அன்புக்குப் பரிசு காயமா? என்றார்கள். அதற்கு இயேசு, அன்பு எங்கே இருக்கின்றதோ அங்கே காயமிருக்கும் என்றார். அதற்கு வானதூதர்கள், நாங்களும்தான் உலகத்தை அன்பு செய்கின்றோம். ஆனால் எங்கள் மீது எந்தக் காயமும் இல்லையே என்றார்கள். உங்கள் மீது காயங்கள் இல்லையென்றால், நீங்கள் உண்மையிலேயே உலகத்தை அன்பு செய்யவில்லை என்பது பொருள் என்றார். அதற்கு மேல் இயேசுவிடம் வானதூதர்கள் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை!

காயங்கள் என்றால் துன்பங்கள்! காயங்கள் என்றால் துயரங்கள்! காயங்கள் என்றால் இன்னல்கள்! காயங்கள் என்றால் இடையூறுகள்! காயங்கள் என்றால் சித்திரவதைகள்! காயங்கள் என்றால் சிலுவைகள்!

லூக் 14:27-இல் இயேசு, தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின்வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது என்கின்றார். இயேசுவுக்குச் சான்றுபகன்ற 12 திருத்தூதர்களில் 11 பேர் மறைச் சாட்சிகளாகக் காயப்பட்டு, இரத்தம் சிந்தி இறந்தார்கள். நூற்றுக்கு நூறு உலகை அன்பு செய்தவர்களின் வாழ்க்கையெல்லாம் காயங்கள் நிறைந்த மரணத்தில்தான் முடிந்திருக்கின்றது! ஆபிரகாம் லிங்கனுக்கும், மகாத்மா காந்திக்கும், ஜான் கென்னடிக்கும் இந்த உலகம் எதைப் பரிசாகக் கொடுத்தது என்பதை நாமறிவோம்!

இன்றையச் சூழலிலே கிறிஸ்துவின் கட்டளைப்படி (நற்செய்தி) எல்லா மக்களினத்தாரையும் சீடராக்க அழகான வழி அன்புதான். அன்புக்கு இணையான வேறொரு சக்தி இந்த உலகில் வேறொன்றுமில்லை. அன்பு கடவுளுக்கு இணையானது (1 யோவா 4:8). இதனால்தான் புனித பவுலடிகளார், எதிர்நோக்கு, நம்பிக்கை, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலை சிறந்தது (1 கொரி 13:13) என்கின்றார்.

அன்பு செய்ய முன்வராமல், காயப்பட முன்வராமல் யாராவது விண்ணில் வாழும் இயேசுவுக்குச் சாட்சியாக வாழ்கின்றேன் என்று சொன்னால் அவர்கள் சொல்வது பொய். ஒருவர் மீதிருக்கும் காயங்களே அவர்களின் சாட்சிய வாழ்வை அளக்கும் அளவுகோல்களாகும். உண்மையான சாட்சிய வாழ்வு இதுவரை நாம் வாழாததற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஒரு முக்கியமான காரணம் நாம் இன்னும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து யார் என்பதை முழுமையாக அறிந்து கொள்ளாமலிருப்பதாகும் (இரண்டாம் வாசகம்).

இதுவே நமது செபமாக இருக்கட்டும் : தூய ஆவியாரே, ஞானத்தை எங்கள் மீது பொழிந்து இயேசுவைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் எங்களுக்கு வெளிப்படுத்தும். எங்களது அழைப்பிற்கேற்ற சாட்சிய வாழ்வு வாழ, எங்கள் அயலாருக்காகக் காயப்பட எங்களுக்கு வேண்டிய உடல், உள்ள, மன வலிமையைத் தந்தருளும். ஆமென்.

மேலும் அறிவோம்:

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு (குறள் : 72).

பொருள் : அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமை பாராட்டுவர். அன்பு உள்ளம் கொண்டவர் தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் பிறர்க்கு வழங்குவர்.

ser ser

"உங்கள் சொந்த ஊர் எது? என்று ஒருவரைக் கேட்டதற்கு அவர், *சொந்தமாக ஊர் வாங்க என்னிடம் வசதி இல்லை " என்றார். தமது சொந்த ஊர் எது? திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "நமக்கோ விண்ணகமே தாய்நாடு” (பிலி 3:20). விண்ணகமே நமது சொந்த ஊர்; நமது தாய்நாடு, இவ்வுலகில் நாம் அன்னியராய் வாழ்கின்றோம் (1 பேது 1:17).

விண்ணகம் நமது சொந்த ஊர் என்றாலும், அங்கே செல்லத் தயக்கம் காட்டுகிறோம். ஓர் ஆசிரியர் மாணவர்களிடம், "விண்ண கம் செல்ல விரும்புகிறவர்கள் கைகளை உயர்த்துங்கள்" என்று கேட்டார். ஒரு மாணவனைத் தவிர மற்ற அனைவரும் கைகளை உயர்த்தினர். கையை உயர்த்தாத மாணவனிடம், "ஏப்பா! உனக்கு விண்ணகம் செல்லப் பிரியமில்லையா?" என்று கேட்டதற்கு அம் மாணவன் கூறியது: "விண்ண கம் செல்லப் பிரியம்தான் சார்; ஆனால், பள்ளிக்கூடம் முடிந்தவுடன் வேறு எங்கும் செல்லாமல் நேராக வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்று என் அப்பா கண்டிப்பாகக் கூறிவிட்டார்." விண்ணகம் செல்ல நமக்கு விருப்பம்தான். ஆனால் இம்மண்ணகத்தை விட்டுப் போகத்தான் நமக்கு மனம் இல்லை,

கிறிஸ்துவின் விண்ணேற்றப் பெருவிழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம். அவர் ஏன் நம்மோடு என்றும் இருக்காமல் விண்னாகம் சென்றார். அவர் விண்ணகம் சென்றது இம் மண்ணக வாழ்வின் துன்ப துயரங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அல்ல; மாறாக, நமது முதல்வரும் தலைருமான அவர் சென்ற இடத்திற்கே நாமும் ஒருநாள் செல்வோம் என்ற நம்பிக்கையை நம்மில் உருவாக்குவதற்கே என்று இன்றைய விழாவின் தொடக்கவுரையில் திருச்சபை நமக்கு விளக்கம் அளிக்கின்றது.

கிறிஸ்துவின் விண்ணேற்றம் நமக்கு முன்வைக்கும் இறையியல் உண்மைகளில் ஒருசில: 1. கிறிஸ்து தமது மனித இயல்பில் இறுதியாக ஆனால் உறுதியாக விண்ணக மாட்சியை அடைந்து விட்டார். 2.தலையாகிய அவர் இருக்கும் இடத்தில் அவருடைய உடலாகிய நாமும் ஒருநாள் இருப்போம் என்பது உறுதி. 3. அவர் விண்ணகத்தில் தந்தையின் வலப்பக்கம் அமர்ந்து தமக்காகத் தந்தையிடம் அல்லும் பகலும் பரிந்து பேசுகிறார், 4.உலக முடிவுவரை அவர் நம்முடன் இருக்கின்றார். 5.உலக முடிவில் அவர் மீண்டும் மாட்சிமையுடன் வருவார். எப்போது வருவார் என்பது நமக்குத் தெரியாது. காலங்களையும் நேரங்களையும் அறிவது நமக்கு உரியது அல்ல (திய 1:7). 6.எல்லா மக்களையும் அவருடைய சீடராக்கும் கடமையை நம்மிடம் அவர் ஒப்படைத்துள்ளார் (மத் 28:18-19).

மத்தேயு நற்செய்தி -இம்மானுவேல்" நற்செய்தி என அழைக்கப்படுகிறது. அந்நற்செய்தி "இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவா .... இம்மானுவேல் என்றால் கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள்" (மத் 1:22-23), என்று தொடங்குகிறது. அதே தற்செய்தி "இதோ உலக முடிவுவரை எத்நாளும் உங்களுடன் இருக்கிறேன்" (மத் 28:20) என்ற சொற்களுடன் முடிகிறது.

கிறிஸ்து விண்ணகத்திலிருந்து மண்ணகம் வந்தபோது அவர் விண்ணகத் தந்தையை விட்டுப் பிரியவில்லை. "நான் தனியாய் இருப்பதில்லை, தந்தை என்லோடு இருக்கிறார்" (யோவா 16:32) என்று அவரால் உறுதிபடக் கூற முடிந்தது. அவ்வாறே, கிறிஸ்து மண்ணகத்திலிருந்து விண்ணகம் சென்றபோது அவர் விண்னக மாந்தரை விட்டுப் பிரியவில்லை . உலக முடிவுவரை அவர் எத்தாளும் நம்முடன் இருக்கின்றார். விண்ணகம் சென்ற பிறகும் அவர் தம் சீடர்களுடன் உடனிருந்து செயல்பட்டு, அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார் என்று மாற்கு நற்செய்தி கூறுகிறது (மாற் 18:20).

விண்ணகம் சென்ற கிறிஸ்து புதுவிதமான உடனிருப்பை ஏற்படுத்தினார். அவர் தமது சீடர்கள் மேல் தமது ஆவியைப் பொழிந்தார், எனவே அவருடைய ஆவியின் மூலம், அதாவது, தூய ஆவியாரின் வழியாக அவர் தம்முடன் இருந்து தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு வருகிறார். அவர் இவ்வுலகில் இருந்தபோது உடல் ரீதியாக ஓர் இடத்தில் மட்டும் இருந்தார். ஆனால் விண்ணகம் சென்ற பிறகு அவர் தமது ஆவியின் வழியாகப் பிரபஞ்சம் முழுவதும் உடன் இருக்கிறார். அவர் அனைத்திலும் அனைத்துமாக இருக்கிறார் (கொலோ 2:10).

நமது பணி வானத்தை அணானாந்து பார்த்துக் கொண்டிருப்பது அல்ல (திப 1:11); மாறாக அவர் விட்டுச் சென்ற பணியைத் தொடாத்து ஆற்றுவதாகும். பேய்களை விரட்டி, நோய்களைப் போக்கி, புதிய மொழிகளைப் பேசவேண்டும். சாதி, மத, இனம் என்ற பிரிவினைப் பேயை ஒட்டி, வேற்றுமை என்ற நோயைக் குணமாக்கி, அன்பு மொழி பேசவேண்டும். நீதி குடிகொண்டிருக்கும் புதிய மண்ணகத்தைப் படைக்க வேண்டும் (2 பேது 3:13).

ஓர் அரசியல்வாதி, "நான் கச்சத்தீவை மீட்கப் போகிறேன்" என்று தன் மனைவியிடம் கூற, அவர் அவரிடம், "முதலில் வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ள எனது தகையை மீட்டுத் தாருங்கள்" என்றார். மனைவியின் நகையை மீட்டுத்தர இயலாதவர், கச்சத்தீவை மீட்க முடியுமா? அவ்வாறே இம்மையில் மக்களின் கண்ணீரைத் துடைக்க இயலாத் திருச்சபை எவ்வாறு அவர்களை விண்ணகம் அழைத்துச் செல்ல முடியும்? எனவே, மண்ணக மக்களின் கண்ணீரைத் துடைக்க ஆவன செய்வோம்.

"கீழே விழுந்தாலும் மேலே எழுந்திருப்பேன்; சக்கையாக மாறினாலும் சர்க்கரையாக இனிப்பேன்: சாவைச் சந்தித்தாலும் சரித்திரம் படைப்பேன்" என்று சூளுரைப்போம். அப்போது மண்ணகமே விண்ணகமாகும். கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும் விரைவில் வரும். மாரனாத்தா! ஆண்டவரே வருக (1 கொரி 16:22).

ஐயமில்லாதவர்களுக்கு இம்மண்ணகத்தைவிட விண்ணகம் அருகாமையில் உள்ளது என்று வள்ளுவர் கூறுகிறார்.

"ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து  (குறள் 353)

ser ser

ஓர் அசுரத் தாவல்

1969ம் ஆண்டு ஜூலை 20ம் நாள். மனித வரலாற்றின் மறக்க முடியாத நாள். அன்றுதான் அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் வெண்ணிலவில் காலடி வைத்துச் சொன்னார்: "That is one small step for a man, one giant leap for mankind". தனி மனிதனுக்குச் சின்னஞ்சிறு காலடிதான். ஆனால் மனித சமுதாயத்திற்கோ மகத்தான சாதனை - ஓர் அசுரத் தாவல்!

விண்வெளிக் கப்பலில் ஒரு காலும் வெண்ணிலவு மண்ணில் ஒரு காலுமாக இருந்த அந்த ஒரு கணம், நீல் ஆம்ஸ்ட்ராங் மட்டுமல்ல இந்தப் பூமியில் இருந்த ஒவ்வொரு மனிதனும் புளகாங்கிதம் அடைந்தான். காரணம்? அதனை ஆம்ஸ்ட்ராங் என்ற தனிமனிதனின் சாதனையாக அல்ல, மனித இனத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் தனது சாதனையாக தானே வெண்ணிலவில் கால் ஊன்றியது போல உணரவில்லையா?

அதுபோலவே இயேசுவின் விண்ணேற்றமும், வானகத்தந்தை இறைமகன் இயேசுவைச் சாவினின்று உயிர்த்தெழச் செய்து வானகத்திற்கு எடுத்துக் கொண்டார். இயேசுவின் விண்ணேற்றத்தில் வெளிப்பட்ட இறைவல்லமை ஒருநாள் நம்மிலும் செயல்படும். நம்மையும் சாவினின்று உயிர்த்தெழச் செய்து நாமும் விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவோம் என்பதற்கு இயேசுவின் விண்ணேற்றம் ஒரு முன்னடையாளம் கடவுள் மனிதனான இயேசு பெற்ற விண்ணேற்ற மகிமை, நமது மனித இயல்பின் இறுதி மகிமையின் உறுதியான முன்னறிவிப்பு,

அதனால்தான் “இவ்வாறு அவர் சென்றது எங்கள் தாழ்நிலையை விட்டு அகல வேண்டும் என்பதற்காக அன்று, மாறாக, எங்கள் தலைவரும் முதல்வருமாகிய அவர் சென்ற அவ்விடத்துக்கு அவர் உறுப்பினர்களாகிய நாங்களும் அவரைப் பின்தொடர்ந்து செல்வோம் என்று நம்பிக்கை கொள்வதற்கேயாம்” என்று திருப்பலித் தொடக்கவுரையில் தெம்போடு பாடி மகிழ்கிறது திருச்சபை.

“தலை நுழைந்தால் வால் நுழைந்தது மாதிரி தான்” என்பது முதுமொழி. நம் தலையாகிய கிறிஸ்து விண்ணகம் சென்றுள்ளது, நாம் அனைவரும் விண்ணகம் சென்று விடுவோம் என்பதற்கான முன்னோட்டமே!

1968ல் நிலவுப் பூமியில் இறங்க அமெரிக்க விண்வெளி வீரர்கள் செய்த முதல் முயற்சியை உலகமே இதயம் படபடக்க எதிர்பார்த்தது. அந்த முயற்சியில் வெற்றி பெற்றதும் வெள்ளை மாளிகைக்கு வந்த செய்தி: "ஏற்ற பணி இனிது முடிந்தது" (Mission successfully accomplished). இன்றைய விண்ணேற்ற விழாவும் இதே செய்தியைத் தான் கொண்டு வருகிறது.

ஆக, விண்ணேற்றம் என்பது:

- இயேசுவைப் பொருத்தவரை மகிழ்ச்சியின் நேரம்.

- சீடர்கள் நம்மைப் பொருத்தவரை நம்பிக்கையின் (எதிர்நோக்கு) நேரம்.

இயேசுவுக்கு விண்ணேற்றம் என்பது தந்தையிடம் திரும்புவது. அந்த நினைப்பில் மகிழ்கிறார். தந்தையான கடவுள் திட்டமிட்டு வகுத்த படி இயேசு மானிட வாழ்வை முழுமையாக வாழ்ந்து முடித்தார். தனக்குத் தந்த பொறுப்பைச் சிறப்பாக நிறைவேற்றினார். அவருக்கு உணவும் உயிர் மூச்சுமாக இருந்தது எப்போதும் இறைத்திருவுளமே (யோவான் 4:34). உலக வாழ்வின் முடிவில் அவரது இறுதிவார்த்தை “எல்லாம் நிறைவேறிற்று” (யோவான் 19:30). இறுதி இரவு உணவு வேளையில் நிறைவோடு மன்றாடினார். “நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன். தந்தையே, உலகம் தோன்றுமுன்பே நீர் என்னை மாட்சிப்படுத்தியுள்ளீர். இப்போது உம்திருமுன் அதே மாட்சியை எனக்குத் தந்தருளும்” (யோவான் 17:4,5)

விண்ணேற்றத்தில், தான் ஏற்ற இந்த மானிட இயல்பு பெறும் மகிமையை நினைத்து இயேசு மகிழ்கிறார். அவர்தன் தந்தையிடம் திரும்புவது தந்தையின் நெஞ்சத்தில் இருந்த நித்தியவார்த்தை (Eternal word) யாக அல்ல, மனிதனான வாக்காக (word made flesh) இனி அவர் என்றென்றும் இறைமகன் மட்டுமல்ல மானிட மகன். “இவர் மனிதன் என்ற முறையில் தாவீதின் வழிமரபினர். தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் வல்லமையுள்ள இறைமகன் இவர் இறந்து உயிர்தெழுந்ததால் இந்த உண்மை நிலைநாட்டப்பட்டது” (உரோமை 1:3,4) கன்னிமரியிடமிருந்து பிறந்த அவர் நம்மோடு நம்மில் ஒருவரானார். “எல்லா வகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர். எனினும் பாவம் செய்யாதவர்" (எபி.4;15). சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தன்னையே தாழ்த்தியதால், இயேசுவே ஆண்டவர் என்று எல்லா நாவுமே அறிக்கையிடும் அளவுக்குத் தந்தை அவரை உயர்த்தினார் (பிலிப்.2:8-11). தனது விண்ணேற்றத்தால் நமது மனித இயல்பை மூவொரு கடவுளின் இதயத்துக்குள்ளேயே கொண்டு போய்ச் சேர்த்துவிட்டார். மகிமையடைந்த இயேசுவில் நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் மகிமை அடைந்து விட்டோம்.

நம்மை எவ்வளவு உயர்வாக மதித்திருந்தால் தன் பணியை நமக்கும் விட்டுச் சென்றிருப்பார்! “விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்” (மத். 28:18,19). “எருசலேமிலும், யூதேயா, சமாரிய முழுவதிலும் உலகின் கடை எல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” (தி.ப.1:8). நம்பிக்கை என்னும் அருள்கொடை அனைத்து மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இயேசுவே மீட்பராக ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பை அனைவரும் பெற வேண்டும். இனி சீடர்கள் செய்ய வேண்டிய பணி தெளிவானது. சென்றடைய வேண்டிய இலக்கு உறுதியானது.

பொறுப்பை ஏற்கத் தயக்கமா? சாட்சியாக வாழ சக்தி உண்டா என்ற ஐயமா? நாம் தனியாக இல்லை இயேசு நம்மோடு இருக்கிறார். தூய ஆவியால் நம்மை நிறைத்திருக்கிறார். அவரது மறையுடலின் உறுப்புக்கள் அன்றோ நாம்!

விண்ணேற்றத்தில் மகிழ நமக்கு எத்தனை காரணங்கள்!

ser ser

அறிவிப்போம்; அளிப்போம்; கற்பிப்போம்

நிகழ்வு

மிகச்சிறந்த மறைப்போதர் கெர்மித் லாங் (Kermith Long 1926-2009). இவர் எல்லாக் கிறிஸ்தவ அவைகளையும் சார்ந்த, தலைவர்கள் கூடியிருந்த ஒரு கூட்டத்தில் பேசும்பொழுது, இவ்வாறு பேசினார்: “தரமான கல்வியோ, நல்ல கட்டமைப்போ; இன்றைக்கு இருப்பது போன்ற பெரிய பெரிய கோயில்களோ... இப்படி எதுவுமே இல்லாமல்கூட, இயேசுவின் சீடர்கள் ‘மனிதர்களைப் பிடிப்பர்களாக’ மாறிப் பலரையும் ஆண்டவர் இயேசுவுக்குள் கொண்டு வந்தார்கள். ஆனால், இன்றைக்கு நம்மிடம் தரமான கல்வியும் நல்ல கட்டமைப்பும் பெரிய பெரிய கோயில்களும் இருகின்றன. அப்படியிருந்தும் நம்மால் மனிதர்களைப் பிடிப்பவர்களாக மாற முடியவில்லை. மாறாக, நாம் நம்மிடம் இருக்கின்ற இறைமக்களை எப்படித் தக்கவைப்பது என்றும் ஒரு திருஅவையில் உள்ள இறைமக்களை இன்னொரு திருஅவைக்கு எப்படி இழுப்பது என்றும் சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.”

கெர்மித் லாங் இவ்வாறு பேசி முடிந்ததும் கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து, “இயேசுவின் சீடர்களைப் போன்று இன்று நம்மால் மனிதர்களைப் பிடிக்க முடியவில்லை என்று சொல்கிறீர்கள்...! என்ன செய்தால், அவர்களைப் போன்று நம்மால் மனிதர்களைப் பிடிக்கமுடியம்?” என்றார். அதற்கு கெர்மித் லாங், “மூன்று முதன்மையான செயல்களைச் செய்யவேண்டும். ஒன்று. நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிக்கவேண்டும். இரண்டு, அறிவிக்கப்பட்ட நற்செய்தியை நம்பி ஏற்றுக்கொண்டோருக்குத் திருமுழுக்கு அளிக்கவேண்டும். மூன்று, உண்மையான கிறிஸ்தவர்களாக வாழ்வதற்கு கிறிஸ்து கற்றுக்கொடுத்ததைக் கற்பிக்கவேண்டும். இம்மூன்று முதன்மையான செயல்களையும் நாம் செய்தால், இயேசுவின் சீடர்களைப் போன்று நம்மாலும் மனிதர்களைப் பிடிப்பவர்களாக மாற முடியும்; பலரையும் இயேசுவுக்குள் கொண்டுவரமுடியும்” என்றார்.

ஆம், நாம் அறிவித்தல், அளித்தல், கற்பித்தல் ஆகிய முப்பெரும் பணிகளைச் செய்தால், நம்மாலும் ஏரளாமான மனிதர்களைப் பிடித்து, கிறிஸ்துவுக்குள் கொண்டுவர முடியும். இன்று நாம் ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இயேசு விண்ணேற்றம் அடையும் முன்பாகத் தன்னுடைய சீடர்களிடம், மேலே சொல்லப்பட்ட மூன்று முதன்மையான கட்டளைகளைத் தந்தார். இம்மூன்று கட்டளைகளின் முக்கியத்துவம் என்ன...? இவற்றை நாம் எப்படிக் கடைப்பிடித்து வாழ்வது...? என்பன குறித்து சிந்திப்போம்.

நற்செய்தியை அறிவிப்போம்

நாம் மிகவும் அன்பு செய்த ஒருவர் நம்மை விட்டுப் பிரிந்து செல்கின்றார் எனில், அவர் இறுதியாகச் சொல்லக்கூடிய ஒவ்வொரு சொல்லும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும். அந்தவிதத்தில் இயேசு தன்னுடைய சீடர்களை விட்டுப் பிரிந்து, விண்ணகம் செல்லும்முன் சொன்ன ஒவ்வொரு சொல்லும் அல்லது ஒவ்வொரு கருத்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. இயேசு தன்னுடைய சீடர்களைவிட்டுப் பிரிந்து செல்லுமுன், மூன்று முதன்மையான கருத்துகளைச் சொன்னார்; அதில் முதலாவதாக வருவது; “எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்” என்பதாகும். எல்லா மக்களினத்தாரையும் எப்படிச் சீடராக்குவது என்று நாம் சிந்திப்போம்.

இயேசு தன்னுடைய சீடர்களை முதன்முறையாகப் பணித்தளத்திற்கு அனுப்பியபொழுது, அவர்களிடம், பிறஇனத்தாரின் எப்பகுதிக்கோ, சமாரியாவின் எந்த நகருக்குள்ளோ நுழைய வேண்டாம். மாறாக, வழி தவறிப்போன ஆடுகளாகிய இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள் (மத் 10: 5-6) என்றார். இங்கோ இயேசு, “எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்” என்கின்றார். அப்படியானால், இயேசுவின் நற்செய்தி ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமல்ல, எல்லா மக்களுக்கும் அறிவிக்கப்படவேண்டும். அப்பொழுதுதான் எல்லாரையும் இயேசுவின் சீடராக்க முடியும். மேலும் இயேசு தன் சீடர்களிடம் சொல்லக்கூடிய வார்த்தைகளைச் சாதாரண வார்த்தைகளாகச் சொல்லவில்லை; கட்டளையாகச் சொல்கின்றார். ஆகையால், இயேசுவின் சீடர்களாகிய நாம் ஒவ்வொருவரும், நற்செய்தி அறிவிப்பு என்பது நம்மேல் சுமத்தப்பட்ட மிகப்பெரிய பொறுப்பு (1 கொரி 9: 17) என்பதை உணர்ந்து, உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவித்து, எல்லாரையும் இயேசுவின் சீடராக்கவேண்டும்.

திருமுழுக்கு அளிப்போம்

இயேசு தன்னுடைய சீடர்களுக்குக் கொடுத்த இரண்டாவது செய்தி அல்லது கட்டளை “தந்தை, மகன் தூய ஆவியார் பெயரால் திழுமுழுக்குக் கொடுங்கள் – அளியுங்கள் –“ என்பதாகும். திருமுழுக்குக் கொடுப்பதற்கு முன்பாக, திருமுழுக்கில் என்ன நடக்கின்றது என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

திருமுழுக்கினால் ஒருவர் கடவுளோடு ஒன்றிணைகின்றார். இதைப் புனித பவுலின் வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், ஒருவர் பாவத்திற்கு இறந்து, கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழ்கின்றவராக மாறுகின்றார் (உரோ 6: 11). திருமுழுக்கினால் ஒருவர் கிறிஸ்துவோடு ஒன்றிணைத்து விட்டால், அவர் தன்னை முற்றிலும் இயேசுவிடம் ஒப்படைத்துவிட்டுத் தன்னுடைய விருப்பத்தைப் பின்னுக்குத் தள்ளி, இயேசுவின் விரும்பமே தன்னுடைய விருப்பமென வாழ்வார். இயேசுவின் விருப்பம், எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குவது. ஆகையால், நாம் தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரால் ஒருவருக்குத் திருமுழுக்கு அளிக்கின்றபொழுது, அவர் இயேசுவோடு ஒன்றிணைகின்றார். அவ்வாறு ஒன்றிணையும் நபர், எல்லா மக்களினத்தரையும் சீடராக்கும் பணியிடச் சிறப்பாகச் செய்யும் அழைப்பினைப் பெறுகின்றார்.

இயேசு கற்றுக்கொடுத்ததைக் கற்பிப்போம்

இயேசு தன்னுடைய சீடர்களுக்குக் கொடுக்கின்ற மூன்றாவது கட்டளை; “நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள்” என்பதாகும். இயேசு தன்னுடைய சீடர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். அவை எல்லாவற்றின் சாரம்சமாக இருப்பது, அவருடைய அன்புக் கட்டளைதான் (யோவா 13: 34). ஆகையால், இயேசுவின் சீடராக இருக்கின்ற ஒவ்வொருவரும், அவருடைய அன்புக் கட்டளையை எல்லாருக்கும் கற்பிக்க வேண்டும். அதுவும் கடைப்பிடிக்கும்படி கற்பிக்கவேண்டும்.

இன்றைக்குக் கற்பிக்கும் பணி மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. ஏனென்றால், இன்றைக்குப் பலர் போலியானதையும் பொய்யானதையும் கற்பித்து, அவற்றை மக்கள் கடைப்பிடித்து வாழவேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழலில், நாம் உண்மையானதும் வாழ்வளிப்பதுமான இயேசுவின் கட்டளையைக் கடைப்பிடிக்குமாறு மக்களுக்குக் கற்பிக்கவேண்டும். அப்பொழுதுதான் இயேசுவின்மீது மக்களுக்கு நம்பிக்கை உண்டாகும் (உரோ 10: 17) அந்த நம்பிக்கை அவர்களையும் இயேசுவின் சீடர்களாக மாற்றி, அவருடைய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிக்கத் தூண்டும்.

இப்படிப்பட்ட அரும்பணியை நாம் செய்யும்பொழுது, இயேசுவின் உடனிருப்பு நமக்கு இருக்குமா? என்ற கேள்வி எழலாம். இயேசுவின் உடனிருப்பு நிச்சயமாக இருக்கும் என்பதுதான், நற்செய்தியின் இறுதியில் இயேசு சொல்லக்கூடிய, “இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்ற சொற்களில் பதிலாக இருக்கின்றது. ஆகையால், நாம் இயேசுவின் உடனிருப்பை உணர்ந்தவர்களாய், அவர் நமக்குக் கொடுத்த அறிவிப்போம்; அளிப்போம்; கற்பிப்போம் என்ற இம்மூன்று கட்டளைகளையும் கடைப்பிடித்து, எல்லா மக்களினத்தாரையும் இயேசுவின் சீடராக்குவோம்.

சிந்தனை

‘நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது’ என்பார் கார்ல் மாக்ஸ். ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாடும் நாம், “எல்லா மக்களினத்தையும் சீடராங்குங்கள்” என்ற நல்ல குறிக்கோளை அடைவதற்குத் தொடர்ந்து முயன்று, எல்லாரையும் இயேசுவின் சீடராக்குவோம். அதன்மூலம் நாம் வரலாறு சொல்லும் இயேசுவின் உண்மையான சீடராக மாறி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser ser

வாழப் பழகிக்கொள்ளுங்கள்!

நம் நாட்டில் கொரோனா லாக்டவுனின் நான்காம் கட்டத்திற்குள் நாம் நுழையும் சில நாள்களுக்கு முன், நம் அரசு, 'கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள்!' என்று அறிவுறுத்தியது. ஆக, கொரோனா அழியும், அழியாது என்ற பேச்சிற்கு இனி இடமில்லை.

இந்த உலகில் பிறந்து 33 ஆண்டுகள் தம் சீடர்களோடு வாழ்ந்து, இறையாட்சிப் பணி செய்து, பாடுகள் பட்டு, உயிர்த்த இயேசு, 'இந்த உலகோடு வாழ நீங்கள் பழகிக்கொள்ளுங்கள்' அல்லது 'நான் இல்லாமல் வாழப் பழகிக்கொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டு நம்மிடமிருந்து விடைபெறுகிறார்.

விவிலியத்தில் 'மறைதல்' என்பது இறைமைக்கு அடையாளம். கிதியோனிடம் பேசிய தூதர் மறைகிறார் (காண். நீத 6), சிம்சோனின் பெற்றோருடன் பேசிய கடவுளின் மனிதர் மறைகிறார் (காண். நீத 13), எம்மாவு சீடர்களோடு அப்பம் உண்ட இயேசு மறைகின்றார் (காண். லூக் 24). மறைதல் நிகழ்ந்தவுடன் அங்கே வந்திருந்தவர் இறைவன் என்பதைக் கண்டுகொள்கின்றனர் கதைமாந்தர்கள்.

இன்றைய திருநாளில் நாம் இயேசுவின் மறைதலையும், அந்த மறைதல் வெளிப்படுத்திய இறைமையையும் கொண்டாடுகின்றோம்.

விண்ணேற்றம் ஏன் என்பதற்கான விடையை நம் இறையியல் மூன்று நிலைகளில் புரிந்துகொள்கிறது:

அ. இயேசுவின் மண்ணுலக வாழ்வு முடிந்து இன்று அவர் தன் தந்தையின் இல்லம் திரும்புகிறார். மாட்சியும் ஆற்றலும் பெறுகின்றார்.

ஆ. திருத்தூதர்கள் இயேசுவின் பணியைத் தொடர்கின்றனர்.

இ. தூய ஆவியார் வருகைக்கான தயாரிப்பாக இது இருக்கின்றது.

விண்ணேற்றத்தை எளிதாகப் புரிந்துகொள்ள பழரசம் என்னும் உருவகத்தை எடுத்துக்கொள்ளலாம்.

நாம் ஆரஞ்சு பழரசம் தயாரிக்கிறோம் என வைத்துக்கொள்வோம். பழரசம் நம் கைக்கு வந்தவடன் ஆரஞ்சு மறைந்துவிடுகிறது. ஆரஞ்சு மறைந்துவிட்டாலும் நம் கைகளில் பழரசம் இருக்கிறது. நம்மோடு இருந்த ஆரஞ்சு, நமக்கான பழரசமாக மாறியிருக்கிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஆரஞ்சு போய்விட்டதே என்று வருந்துவது அல்ல, மாறாக, அது பழரசமாக இன்று நம் கைகளில் இருக்கிறதே என்று மகிழ்ந்து, அதைப் பருகி, அதனால் ஊட்டம் பெறுவதே.

ஆக, இயேசுவின் ஊட்டம் இன்று நம்மிடையே இருந்தால், நம் விண்ணேற்றத்திற்கான வழியும் அதுவே.

அந்த ஊட்டத்துடன் வாழப் பழகிக்கொள்வதே சால்பு.

ser

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com