மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

சகல புனிதர்களின் பெருவிழா - நீத்தார் நினைவு நாள்
மூன்றாம் ஆண்டு

சகல புனிதர்களின் பெருவிழா -*- நவம்பர் முதல் தேதி


இன்றைய வாசகங்கள்:-
திவெ .7:2-4 | 1யோவா. 3:1-3 |மத். 5:1-12

இலையுதிர் காலம் என்றால் மரணமல்ல. வசந்த காலத்தின் தொடக்கம்.

சூரியன் மறைவது மறைவல்ல. சந்திரன், விண்மீன்கள் உதயத்திற்குத் தொடக்கம்.

மலர் கருகி விடுவது முடிவல்ல. காய், கனிக்கு இடம் தருகிறது.

கோதுமை மணி மடிவது இழப்பல்ல. அது மடிந்தால் தான் பயிர் முளைத்துப் பலன் தரும்.

எனவேதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, இறந்து கிடந்த சிறுமியைப் பார்த்து, அவள் சாகவில்லை , உறங்குகிறாள் (லூக். 8:52) என்றும், நம் நண்பர் இலாசரும் தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன் என்றும் (யோவா. 11:11) கூறினார். ஏனெனில் உலகில் நடக்கும் இயற்கையான இறப்பு எதார்த்தமானது. அது பாவத்தின் கூலி (உரோ. 6:23). ஆனால் இயேசுவில் நம்பிக்கை கொண்டு, இறை - மனித உறவோடு வாழ்ந்து இறப்பவர்களுக்கு இந்த உலக இறப்பு, இறைவனில் கிடைக்கும் ஓய்வாகிறது (யோவா. 11:25). இதை விளக்கும் வகையில் தான், ஆண்டவருக்குள் இறந்தவர்கள் செய்த நன்மைகள் அவர்களோடு கூட வரும் (திவெ. 14:13). அவர்கள் தங்கள் உழைப்பிலிருந்து ஓய்வு பெறுவார்கள் என்று திருவெளிப்பாடு நமக்குத் தருகிறது.

இன்று தாயாகிய திருச்சபை, அன்புக்கு அடிமையாகி, அன்பினால் புனித நிலைக்கு உயர்த்தப்பட்ட புனிதர்களின் திருவிழாவைக் கொண்டாடுகிறது. புனிதம் என்பது புண்ணிய தீர்த்தத்தில், புனித ஆற்றில் குளிப்பதால் மட்டும் வந்து விடுவதில்லை. முழுக்க முழுக்க வாழ்வைச் சார்ந்தது. மனிதம் என்ற சொல்லுக்கும் புனிதம் என்ற சொல்லுக்கும் உள்ள வேற்றுமை முதலில் உள்ள ஒரு எழுத்து மட்டும் தான். ஆம், மனிதம் என்றாலே புனிதம் பிறக்கிறது. மனிதமும், புனிதமும், நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. நாம் ஒவ்வொருவரும் தூயவராக வாழ்வதற்காக (1 யோவா. 3:3) அழைக்கப்பட்டிருக்கிறோம். (முதல் வாசகம்). ஏழ்மையையும், துன்பத்தையும், நோயையும், பொறுமையோடு ஏற்று வாழ்பவர்களே புனிதர்கள், பேறு பெற்றவர்கள் என்று இயேசு அழைக்கிறார் (மூன்றாம் வாசகம் ).

அன்பார்ந்தவர்களே, புனிதம் என்பது நேற்று பெய்த மழையால் இன்று முளைத்த காளான்கள் போல் அல்ல. மாறாக மனித உள்ளத்தில் புதைந்து கிடக்கும் புனிதத்தை வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் மடியும் கோதுமை மணிபோல் (யோவா. 12:24) வளர்த்து எடுக்க வேண்டிய ஒன்று. கடவுள் நம்மோடு இருக்க நமக்குத்தான் வெற்றி என்று அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கனுக்கு அவரது காரியதரிசி ஆறுதல் சொன்னபோது, "நண்பா! கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பது தெரியும். ஆனால் நாம் கடவுளோடு இருக்கிறோமா?" என்பது தான் கவலை என்றார் லிங்கன். ஆம், நாம் இறைவனோடு இணையும்போதுதான் (யோவா. 15:5) நாம் புனிதம் அடைவோம். இத்தகைய எண்ணற்ற புனிதர்கள் இந்த உலகில் சாட்சிய வாழ்வு வாழ்ந்து, இறந்தும் வாழ்கிறார்கள் என்பதைத்தான் நாம் நினைவு கூறுகிறோம். ஏனெனில் தூய பவுல் கூறுவதுபோல் சாவு வீழ்ந்தது, வெற்றி கிடைத்தது (1 கொ. 15:55). நாமும் இவர்களைப்போல, நான் யார் ? எதற்காக இங்கே வந்தேன்?, எங்கிருந்து வந்தேன்?, எங்கே போகிறேன்? என்பதை உணர்ந்து வாழ்வோம். இதற்காக புனிதர்களிடம் மன்றாடுவோம்.

நீத்தார் நினைவு நாள்-*- நவம்பர் 2ஆம் தேதி


இன்றைய வாசகங்கள்:-
மக்க . 2:43-45 | 1 கொ . 15:20-22 | மத். 25:31-46

நேற்று நாம் அனைத்துப் புனிதர்களின் பெருவிழாவைக் கொண்டாடினோம். இறந்து, நம்மை விட்டுப் பிரிந்து சென்ற சகல ஆன்மாக்களை நினைவுகூற இன்று அழைக்கப்படுகிறோம். கல்லறைகளை அலங்கரித்து, பூக்கள் தூவி விட்டு வரும் சடங்குகளால் மட்டுமல்ல. அவர்களின் ஆன்மாக்களின் சாந்தியடைய செபிக்க, நல்ல செயல்கள் செய்ய அழைக்கப் படுகிறோம்.

கத்தோலிக்கத் திருச்சபையானது மூன்று நிலைகளை உள்ளடக்கியது. முதலாவது, உலக வாழ்வில் அர்ப்பணத்தோடு வாழ்ந்து விண்ணகப் பரிசைப் பெற்றுள்ள புனிதர்கள் ஒரு பகுதியினர். இவர்கள் நிறை அமைதியும், நிறை வாழ்வும் பெற்றவர்கள். இவர்களை வெற்றித் திருச்சபை (Triumphant Church) என்று அழைக்கிறோம். இரண்டாவது, இறந்தவர்கள் தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புப் பெற முடியாமலும், முழுப் பரிகாரம் செய்ய முடியாத நிலையிலும் இறந்தவர்கள். இவர்கள் வேதனையில் உழல்பவர்கள். இவர்களும் திருச்சபையில் அங்கம் வகிக்கும் குழுவினர் (பிலி. 2:10). இவர்களை துன்புறும் திருச்சபை (Suffering Church) என்று அழைக்கிறோம்.

மூன்றாவதாக இந்த உலகில் நன்மைக்கும், தீமைக்குமிடையே போராட்டத்தில் ஈடுபட்டு, தீமையை அகற்றி, நன்மை செய்ய ஆன்மீகப் போராட்டத்தில் ஈடுபட்டு வாழும் நம்மைக் குறிக்கிறது. இதனால் நாம் பயணம் போகும் திருச்சபை, அல்லது போராடும் சபையினர் (Militant Church) என்றும் அழைக்கப்படுகிறோம். இந்த மூன்றையும் உள்ளடக்கியதுதான் நிறைவான கத்தோலிக்கத் திருச்சபை. இதற்கிடையே பரஸ்பர உறவு உண்டு .

நவம்பர் மாதம் இரண்டாம் தேதி திருச்சபையானது இப்படி இறந்தும் விண்ணகம் செல்ல முடியாத நிலையில் இருக்கும் உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காகச் செபிக்க, பரிகாரம் செய்ய அழைப்பு விடுக்கிறது. ஏனெனில் திருச்சபையானது இயேசுவின் மறை உடல். இதில் ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டால், உடல் முழுவதும் பாதிக்கப்படும் அன்றோ! இந்த பேருண்மையைத்தான் திருத்தூதர் பவுல் கொந்தியருக்கு எழுதும் திருமடலில் (1 கொ. 12:12-27) தெளிவாக்குகிறார். பிறந்த மனிதன் இறக்க வேண்டும். இது நியதி. ஏனெனில் பாவத்திற்குக் கிடைத்த கூலி (உரோ. 6:23) சாவு அல்லவா? ஆனால் கடவுள் கொடுக்கும் அருள்கொடை நம் ஆண்டவர் இயேசுவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு. இந்த நிலைவாழ்வு பெறாத நிலையில் ஆன்மாக்கள் தவித்துக் கொண்டிருப்பார்கள் என்றால், அவர்களின் வேதனையை நீக்க, இறைவனிடம் சேர்க்க, நாம் நம் செபத்தாலும், நற்செயல்களாலும் தாங்க அழைக்கப்படுகிறோம். இதைத் தெளிவாக்க வீழ்ந்தோர் மீண்டும் எழுவர் என்பதை எதிர்பார்த்திருக்கவில்லையென்றால் அவர் இறந்தோருக்காக மன்றாடியது தேவையற்றதும், மடமையும் ஆகும். ஆகவே இறந்தவர்கள் தங்கள் பாவங்களினின்று விடுதலை பெறும்படி அவர்களுக்காக பாவம் போக்கும் பலி ஒப்புக் கொடுத்தார் (2மக்க. 12:44-45)என விவிலியம் பறை சாற்றுகிறது. எனவே நமது செபத்தால், நமது நற்செயல்களால் இறந்த ஆன்மாக்கள் நித்திய சாந்தி அடையட்டும்.

sunday homily


முகப்பு பக்கம்
வத்திக்கான் வானொலி
கத்தோலிக்க இதழ்கள்
ஞாயிறு வாசகம்
விருந்தினர் பக்கம்
உம் வாக்கே விளக்கு!
சென்னை பங்குதலங்கள்
நூலகம்
திருத்தலச் சுற்றுலா
தவக்கால சிந்தனைகள்
ஒலியும் ஒளியும்
அன்னை தெரேசா
கிறிஸ்மஸ் மலர்கள்
பொங்கல்
செபமாலை
பாடல்கள்
செபமே ஜெயம்A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com