மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு
முதலாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 7: 10-14 | உரோமையர் 1: 1-7 | மத்தேயு 1: 18-24

ser

இறைவன் மனிதரைச் சந்திக்க

இறைவனின் சந்திப்பிற்கு இன்று அடிக்கல் நாட்டப்படுகிறது. ஆண்டவர் தாமே ஓர் அடையாளம் தருகிறார். "இதோ, கருவுற்று இருக்கும் அந்த இளம்பெண் ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவர் இம்மானுவேல் என்று பெயரிடுவார்” (எசா. 7:14)

ஆண்டவர் விண்ணகத்தினின்று மானிடரை உற்று நோக்குகின்றார்! மதி நுட்பமுள்ளோர், கடவுளை நாடுவோர் எவராவது உண்டோ எனப் பார்க்கின்றார். எல்லாரும் நெறி பிறழ்ந்த ஒருமித்துக் கெட்டுப்போயினர். நல்லது செய்வார் யாரும் இல்லை (திபா . 14:2-3) என்கிறார் திருப்பாடல்கள் ஆசிரியர். இப்படி மனிதன் கடவுளைத் தேட நினைக்காதபோது, கடவுள் மனிதனைத் தேடி வருகிறார் !

இறைவன் மனிதரைச் சந்திக்க நினைத்ததற்குக் காரணம் உண்டு ! தான் படைத்த உலகத்தைக் கடவுள் பார்த்தார்! அழுகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது! மனிதன் மனிதனை வெறுக்கத் துவங்கினான். தனி மரம் தோப்பாகலாம்! தோப்பு தனிமரமாவதைக் கடவுள் கண்டார். காடு வீடாகலாம்! வீடு காடாகலாமா? வீடு காடாவதைக் கடவுள் கண்டார். மிருகம் மனிதனாகலாம்! மனிதன் மிருகமாகலாமா? மனிதன் மிருகமாவதைக் கடவுள் கண்டார் ! நானென்ன, என் சகோதரனுக்குக் காவலாளியா என்ற காயினின் கேள்வி மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது! எங்கு பார்த்தாலும் கல்லறைத் தோட்டங்கள் பலுகிப் பெருகத் துவங்கின. நீதிக்கொரு கல்லறை, நேர்மைக்கொரு கல்லறை, அன்புக்கொரு கல்லறை , அமைதிக்கொரு கல்லறை, சமத்துவத்திற்கொரு கல்லறை , சகோதரத்துவத்திற்கொரு கல்லறை, சுதந்திரத்திற்கொரு கல்லறை. இந்தக் கல்லறைகளுக்கெல்லாம் பொய்யும், புரட்டும், வஞ்சகமும், சூழ்ச்சியும், அநீதியும், அக்கிரமும் காவல் நின்றன. யாரையும் யாரும் சந்திக்க விரும்பவில்லை! எங்கு பார்த்தாலும் சுயநலம்! இப்படிப்பட்ட சூழ்நிலையில், தன்னால் படைக்கப்பட்ட மனிதர்கள் துடிதுடித்து, அனாதைகள் போல சாவதைக் கடவுள் விரும்பவில்லை! நமது தாயைவிட நம்மை அதிகம் அன்பு செய்பவராயிற்றே நமது கடவுள் ! (எசா. 49:15)

இயேசு யார் யாரைச் சந்தித்தாரோ அவர்களின் வாழ்வில் உடல் நலம் பொங்கியது. உள்ள அமைதி பொங்கியது. உயிர்ப்பு பொங்கியது. உன்னத வாழ்வு பொங்கியது. இயேசு பேதுருவின் மாமியாரைச் சந்தித்தார். அவளுக்கு உடல் நலம் கிடைத்தது (மத். 8:14-15).

இயேசு பேய்பிடித்த இருவரைச் சந்தித்தார். அவர்களுக்கு விடுதலை கிடைத்தது (மத். 8:26-34). இயேசு பாவத்தில் பிடிப்பட்ட பெண்ணொருத்தியைச் சந்தித்தார் (யோவா. 8:1-11). பாவிக்கு பாவ மன்னிப்பு கிடைத்தது. இயேசு கல்லறையில் வைக்கப்பட்டிருந்த இலாசரைச் சந்தித்தார். இலாசருக்கு உயிர்ப்பு கிடைத்தது (யோவா. 11:44).

இயேசு தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களைச் சந்தித்தார். அவர்களுக்கு அன்னை கன்னிமரியாள் உருவிலே பாதுகாப்பு கிடைத்தது (யோவா. 19:25-27). உயிர்த்த இயேசு தனது சீடர்களைச் சந்தித்தார். அவர்களுக்குச் சமாதானம் கிடைத்தது ( யோவா. 20:29). உலக மக்கள் அனைவரும் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் வாழ அழைப்பு பெற்றிருக்கிறார்கள் (உரோ. 1:7).

இயேசு யார் யாரைச் சந்தித்தாரோ அவர்களின் வாழ்வெல்லாம் ரோஜாப் பூக்களாக, மல்லிகைப் பூக்களாக, தாமரைப் பூக்களாக, செவ்வந்திப் பூக்களாக, செண்பகப் பூக்களாக, மலரும் பூக்களாக, மிளிரும் பூக்களாக, வளரும் பூக்களாக பூத்துச் சிரித்தன.

இப்படி நம்மை வாழ வைக்கும் இயேசுவைச் சந்தித்து புது வாழ்வும், புத்துயிரும் பெற விசுவாசத்தாலும், நம்பிக்கையாலும் நம்மையே நாம் அலங்கரித்துக் கொள்ளும் முயற்சியில் இந்நாட்களிலே ஈடுபடுவோம்.

ser ser

உமக்கு ஏற்ற இல்லிடமாக என்னை மாற்றியருளும்

நம்மோடு வாழ இயேசு பிறக்கப்போகின்றார். நற்செய்தியிலே ஆண்டவரின் தூதர் , இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகனைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப்பெயரிடுவீர் (மத் 1:22) எனக் கூறுகின்றார். இம்மானுவேல் என்றால் கடவுள் நம்முடன் இருக்கின்றார் என்பது பொருள் (மத் 1:23).

நமக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒருவர் நம் வீட்டில் தங்க வந்தால் நமது வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க நாம் எல்லா முயற்சிகளையும் எடுப்போம். நம்மைச் சந்திக்க வருபவர் இயேசு (மத் 1:21அ ) . அவர் பாவங்களிலிருந்து நம்மை விடுவிக்கும் மீட்பர் (மத் 1:21ஆ); கடவுள் (மத் 1:23); தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட இறை மகன் (உரோ 1:4அ ); ஆண்டவர் இயேசு கிறிஸ்து (உரோ 1:4); அருளின் ஊற்று (உரோ 1:5அ).

நம்மோடு வாழ, நம் இல்லத்திற்குள்ளும், உள்ளத்திற்குள்ளும் வாசம் செய்ய வரும் கடவுளுக்கு நாம் தகுந்த மரியாதை செலுத்த விரும்பினால், நமது மனத்தை, உள்ளத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள மனமுவந்து முன் வரவேண்டும். நம்மையே நாம் எப்படித் தூய்மைப்படுத்திக் கொள்ளலாம்?

நாம் பாவிகள் என்பதை ஏற்றுக்கொள்வதே நமது ஆன்மிக வாழ்வின் அடித்தளம். என்னிடம் பாவம் உண்டு என்று உங்களுள் யாராவது குற்றம் சுமத்த முடியுமா? (யோவா 8:46) என்று கேட்கும் அளவுக்கு இந்த உலகத்திலே யாரும் இயேசுநாதர் கிடையாது. அருள்மிகப் பெற்றவரே வாழ்க! (லூக் 1:28) என்று வாழ்த்தப்படும் அளவுக்கு இந்த பூமியில் யாரும் தேவ அன்னையும் கிடையாது.

புனித பவுலடியார் உரோமையருக்கு எழுதியுள்ள திருமுகத்தில் உரோ 3:9-18) கூறியுள்ளது போல நாம் எல்லாரும் பாவிகளே. புனித யோவான் தாம் எழுதியுள்ள முதல் திருமுகத்திலே (1 யோவா 1:8) பாவம் நம்மிடம் இல்லையென்போமானால் நம்மையே நாம் எமாற்றிக்கொள்கின்றோம் என்கின்றார்.

பாவிகளில் இரண்டு வகையினர் உள்ளனர் : சிலர் திட்டமிட்டுப் பாவம் செய்வார்கள் ; சிலர் அறிவுத் தெளிவின்மையால் தவறி பாவத்தில் விழுந்துவிடுவார்கள். இரண்டுக்கும் இரண்டு உதாரணங்கள் :

அன்று பெரிய வெள்ளிக்கிழமை! ஒரு மாடப்புறாவை வல்லூறுகள் பிடித்து, அதனை பலவந்தமாக இழுத்து வந்து பிலாத்துவின் முன்னால் நிறுத்தின! இயேசுதான் அந்த மாடப்புறா.

இயேசு என்ன குற்றம் செய்தார்? அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை. நம்மைப்போன்று ஒரு சாதாரண, சராசரி மனிதனாக வாழ இவன் மறுக்கின்றானே! இவனை இப்படியே விட்டுவிட்டால், கல்லாரையும் இவன் தன் பக்கம் இழுத்துவிடுவான். இவனைக் கொலை செய்துவிட வேண்டும் என்று எண்ணியவர்கள் இயேசுவின் மீது சிலுவையைச் சுமத்தி அவரைக் கொல்ல (யோவா18:31) விரும்பினார்கள்.

பிலாத்து மூன்று முறை, இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லையே (யோவா 18:38ஆ ; 19:4ஆ, 6ஆ) என்றான். பிறகு ஏன் இயேசுவை விடுதலை செய்யவில்லை? ஆசை, பேராசை , பதவி மீது பேராசை! தன்னுடைய பதவி ஆசைக்கு இயேசுவை அவன் பலியாக்கினான். அவன் அறியாமலா பாவம் செய்தான்? அறிந்து, புரிந்து, உணர்ந்து, தெரிந்து பாவம் செய்தான்.

அறிவுத் தெளிவு இல்லாமலும் சிலர் பாவம் செய்வதுண்டு! ஒருவன் மருந்துக் கடைக்கு மருந்து வாங்கச் சென்றான். கடைக்காரரிடம் விக்கலுக்கு மருந்து கேட்டான். கடைக்காரர், மருந்து கேட்டவனை ஓங்கி அறைந்தார். மருந்து வாங்கப்போனவன் : எதுக்காக என்னை அறைஞ்சே? என்று கேட்டான். அதற்கு கடைக்காரர் சொன்னார் : விக்கலுக்கு அதிர்ச்சி வைத்தியம்தான் பெஸ்ட். இப்பப் பாரு , நான் உன்னை அறைஞ்சதினாலே விக்கல் நின்னிட்டு என்றார். அதற்கு மருந்து கேட்டவன் : அடப்பாவி , விக்கல் எனக்கு இல்லேய்யா, என் மனைவிக்கு என்றான்.

அந்த கடைக்காரர் செய்தது குற்றம், பாவம்! ஆனால் அதை அவர் அறியாமல் செய்தார். பாவம் என்பது ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் போன்றது! அது நம்மைப் பாதிக்கும்! நம் உள்ளத்திலும், இல்லத்திலும் தங்க வரும் இயேசுவை மகிழ்ச்சியோடு வரவேற்கவிடாமல் அது நம்மைத் தடுத்துவிடும்.

நமது உள்ளத்தையும், இல்லத்தையும் இயேசு தங்கக்கூடிய இனிய இடமாக மாற்ற நம்மையே நாம் இந்த நாள்களிலே தூய்மையாக்கிக் கொள்வோம்.

இன்று இதுவே நமது செபமாக இருக்கட்டும் :
இயேசுவே! என் வாய் உம்மைப்போற்ற மறந்தது போதும்!
என் நா உம்மைப் புகழ மறந்தது போதும்!
என் கண்கள் உம்மைத் தேட மறந்தது போதும்!
என் செவிகள் உம் வார்த்தையைக் கேட்க மறந்தது போதும்!
என் சுவாசம் உம்மைச் சுவாசிக்க மறந்தது போதும்!
போதும் ! நான் உம்மைவிட்டு ஓடியது போதும்!
ஓடி ஓடி களைத்துப்போனேன்!
என்னிடம் மிஞ்சியிருப்பதெல்லாம்
சோதனை, வேதனை, தயக்கம், மயக்கம், குழப்பம், பயம், பஞ்சம், பசி!
போதும்! நான் உம்மைவிட்டு ஓடியது போதும்!
இன்று உமது உடனிருப்பால் என்னைத் தொட்டுக் குணமாக்கி உமக்கு ஏற்ற இல்லிடமாக என்னை மாற்றியருளும்.

மேலும் அறிவோம் :

இன்றி யமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்  (குறள் : 951).

பொருள் : கட்டாயமாகச் செய்து தீர வேண்டும் என்னும் சிறப்புடையவை என்றாலும் தன் மதிப்பைக் குறைக்கும் செயல்களை ஒருபோதும் செய்யக்கூடாது.

ser ser

நேர்மையாளரான (நீதிமானாகிய) யோசேப்பு

ஒரு மாணவன் ஒழுங்காகப் படிப்பதில்லை . அவனுடைய வகுப்பு ஆசிரியா கேட்டதற்கு, அப்பாவும் அம்மாவும் எப்போதும் சண்டை போடுவதால் என்னால் படிக்க முயவில்லை" என்றான். யாருடா உன் அப்பா? என்று ஆசிரியர் கேட்டதற்கு, அதைப் பற்றிதான் ஒவ்வொரு நாளும் சண்டை நடக்குது" என்றான்!


எத்தனையோ குடும்பங்களில் கணவன் - மனைவி இடையே விரிசல் ஏற்படுவதற்குக் காரணம், ஒருவர் மற்றவருடைய நடத்தையைப் பற்றிச் சந்தேகப்படுவதாகும். யோசேப்பு மரியாவுடைய வாழ்வில் திருமணத்திற்கு முந்தியே சந்தேகப் புயல் வீச அரம்பித்துவிட்டது. மரியாவுக்கும் யோசேப்புக்கும் இடையே திருமண ஒப்பந்தம் மட்டும் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் இன்னும் கூடி வாழவில்லை. அதற்கு முன்பே மரியா கருவுற்றிருந்ததை அவர் கணவர் யோசேப்பு ஏற்கவும் இயலவில்லை; மரியாவைக் காட்டிக் கொடுக்கவும் மனமில்லை. இந்நிலையில் மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால் என்ற செய்தியை வானதூதர் யோசேப்புக்குக் கனவில் தெரிவித்த போது, நேர்மையாளரான (நீதிமானாகிய) யோசேப்பு மரியாவைச் சற்றும் தயக்கமின்றித் தம் மனைவியாக ஏற்றுக் கொண்டார்.)


மரியா தம் கணவர் யோசேப்பின் துணையின்றிக் கன்னிமையில் தூய ஆவியால் கிறிஸ்துவைக் கருத்தாங்குவார் என்பது இறைவாக்கினா எசாயாவால் முன்னறிவிக்கப்பட்டது என்பதை தற்செய்தியாளரான மத்தேயு அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார். "இதோ கன்னிப் பெண் கருவுற்று ஓர் ஆண்மகனைப் பெற்றெடுப்பார், அக்குழந்தைக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவர் (எசா 7:14; மத் 1:22-23) இன்றைய முதல் வாசகம் கிறிஸ்துவின் கன்னிமைப் பிறப்பை எடுத்துக் கூறுகிறது.

எசாயா 7:14ம் சொற்றொடரின் மூலப் பாடத்தில் வருகின்ற "இளம் பெண் என்ற சொல்லை மத்தேயு தமது நற்செய்தியில் கன்னி என்று மொழிபெயர்த்துள்ளார். மரியா கள்ளிமையில் கிறிஸ்துவை ஈன்றெடுத்தார் என்பது மத்தேயுவின் நம்பிக்கை; அதுவே திருச்சபையின் தம்பிக்கை. அதை நாமும் ஏற்று அறிக்கையிடுவதில் பெருமையடைகிறோம். கிறிஸ்துவுக்கு ஒரே தந்தை, வானகத் தந்தை, எனவே யோசேப்பு கிறிஸ்துவை ஈன்ற தந்தையாக இருக்க முடியாது. மேலும் மீட்பு கடவுளுடைய முன் செயல்; அது யோசேப்பின் முன் செயலாக இருக்கவும் முடியாது.

எனினும், சட்ட ரீதியாகப் பார்க்கும்போது, இயேசு கிறிஸ்து தாவீதின் மகன், இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் கூறுகிறார்: "இயேசு கிறிஸ்து மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழி மரபினர்" (உரோ 1:3), கிறிஸ்து தாவீதின் மகன் என்று கருதப்படுவதற்குக் காரணாம் மரியா அல்ல, மாறாக யோசேப்பு ஆவார். ஏனெனில் யோசேப்புதான் தாவீது குலத்தில் பிறந்தவர். அவரைத் "தாவீது மகன்' (மத் 1:20) என்றும், 'தாவீது வழி மரபினர்' (லூக் 2:4) என்றும் நற்செய்தி கூறுகிறது.

யோசேப்பு மரியாவின் கணவராக இல்லையென்றால், மரியாவுக்கு 'நடத்தை கெட்டவள்' என்ற பட்டம் சூட்டி அவரைக் கல்லால் எறிந்து கொன்றிருக்கும் அன்றைய யூதச் சமுதாயம். கிறிஸ்து யோசேப்பின் மகனாகக் கருதப்பட்டார் (லூக் 3:23). யோசேப்பு உண்மையிலேயே ஒரு நேர்மையாளர்; கடவுளின் திட்டத்தை எற்றுக்கொண்டவர். நாமும் அவரைப் பின்பற்றி தமது புத்திக்கு அப்பாற்பட்ட மீட்பின் மறையுண்மைகளை ஏற்றுக் கொள்வோம்,

மரியா ஒரு கன்னி. கன்னிமைப் பண்பு என்பது இதயத்தின் முழுமை, பிளவுபடாத ஒரு மனப்பட்ட உள்ளம். மரியா பிளவுபடாத ஒரு மனப்பட்ட உள்ளத்துடன் தம்மை முழுமையாகக் கடவுளுக்கு அர்ப்பணித்தார். மரியாவின் அடியொற்றித் திருச்சபையும் ஒரு கன்னி. ஏனெனில் இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுவது போல், முழு விசுவாசம், தளராத நம்பிக்கை, உண்மையான அன்பு இவற்றைக் கன்னிமைப் பண்போடு திருச்சபை காத்து வருகிறது (திருச்சபை, எண் 64)

நாமும் நமது கிறிஸ்துவ வாழ்வில் விசுவாசம் கன்னிமையைப் பழுதறப் பாதுகாக்க வேண்டும். கிறிஸ்து நமது மணமகன் என்றும், அவர்முன் நாம் கற்புள்ள கன்னியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார் திருத்தூதர் பவுல் (2கொரி 11:2), ஒருசில கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் போலிப்போதகர்கள் வலையில் சிக்கித் தங்களது விசுவாசக் கன்னிமையை இழந்து கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

ஓர் இளைஞன் ஒரு இளம் பெண்ணைக் காதலித்து, பிறகு அவளை விட்டுவிட்டு, அவளின் தங்கையைக் காதலிக்க ஆரம்பித்தான். ஏன் அவன் அவ்வாறு மாறினான்? என்று அக்கா கேட்டபோது அவன், "நான் என்ன செய்வது? உன்னைப் பார்த்த போது என்னை மறந்தேன்; உன் தங்கையைப் பார்த்தபோது உன்னை மறத்தேன்" என்றான். அவன் ஒரு சந்தர்ப்பவாதக் காதலன்!

அவ்வாறே கத்தோலிக்கத் திருச்சபையில் நீண்ட நெடுங் காலமாக இருந்தவர்கள், போலிச் சபைகளின் மாயக்கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, கத்தோலிக்கத் திருச்சபையை விட்டுவிட்டு அப்போலிச் சபைகளில் சேர்கின்றனர். இவர்கள் யார்? புனித பவுல் கூறுகிறார். ஏவா பாம்பின் சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டதைப்போல், தங்கள் எண்ணங்களைச் சீரழியவிட்டு, கிறிஸ்துவிடம் விளங்கிய நேர்மையையும் தூய்மையையும் இழத்துவிட்டவர்கள் (2 கொரி 11:3). பச்சையாகச் சொல்ல வேண்டுமென்றால், தங்களுடைய விசுவாசக் கற்பை இழந்தவர்கள்!

மரியா ஒரு கன்னி; திருச்சபையும் ஒரு சுன்னி. இருவருமே இறைவனுக்கு என்றும் பிரமாணிக்கமாய் உள்ளவர்கள். கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ளது. இந்த இறுதிக் கட்டத்தில் நாம் கன்னி மரியாவைப் பின்பற்றிக் கிறிஸ்துவுக்கும், உண்மைக்கு அரணும் அடித்தளமுமாகத் திகழும் திருச்சபைக்கும் (1 திமொ 3:15) உண்மை உள்ளவர்களாய் இருப்போம். கடவுளை முழுமையான, பிளவு படாத, ஒருமனப் பட்ட உள்ளத்துடன் அன்பு செய்வோம்.

மரியன்னை வழியாகவே 'வார்த்தை மனிதர் ஆனார்; நம்மிடையே குடி கொண்டார்' (யோவா 1:14); கடவுள் இம்மானுவேல் ஆனார்: அதாவது கடவுள் என்றென்றும் நம்முடன் இருக்கின்றார் (மத் 1:23). இம்மானுவேல் என்றும் உங்களோடு இருந்து உங்கள் வாழ்வைச் செம்மையுறச் செய்து, உங்களை அமைதியின் பாதையில் (லூக் 1:79) வழிநடத்துவாராக!

 

ser ser

தூய்மையிலும் நீதியிலும்

 அந்தப் பள்ளியில் கிறிஸ்து பிறப்பு விழாக் கொண்டாட்டம். ஆடல் பாடல் நாடகம் நடனம் என்று மாணவர்கள் கலக்கினர். அதில் நாடகக் காட்சி ஒன்று (கதை, வசனம், இயக்கம் எல்லாம் அவர்களே)

காவலாளி: “சத்திரத்தில் இடமில்லை" என்று போர்டு போட்டிருக்கிறோமே உம் கண்ணில் அது படவில்லையா?

யோசேப்பு: தெரிகிறதையா.... ஆனால் என்னுடைய மனைவி நிறைமாதக் கர்ப்பிணி....

காவலாளி: அதற்கு நானா காரணம்?

யோசேப்பு : (பரிதாபத்துக்குரிய மெல்லிய குரலில்) அதற்கு நானும். காரணமில்லை ...!

நாடகம் என்ற நிலையில் புன்முறுவல் பூக்கலாம். ஆனால் நடைமுறை எதார்த்தத்தில்.....?

மரியா கருவுற்றிருக்கிறாள் என்ற உண்மை யோசேப்புக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சியை, மனக்குழப்பத்தைத் தந்திருக்க வேண்டும்! இந்த உண்மையை அறிந்ததும் அவர் நடந்து கொண்ட விதம் தான் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

மனைவியின் வயிற்றில் கருவாக வளர்வது தன் குழந்தை இல்லை என்று கணவன் அறியும் போது அவரைச் சட்டப்படி கடுமையான சோதனைக்கு உட்படுத்த வேண்டும். (எண்.5:11-31). தவறு எண்பிக்கப் பட்டால் ஒன்று அவரைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் அல்லது மணமுறிவு செய்ய வேண்டும். (இணை.22:20,21)

யோசேப்பு இரண்டாவது முறையில் மிகவும் மென்மையாக நடந்து மறைவாக விலக்கிவிட விரும்பினார். இந்த மனித நேய உணர்வு தான் ஆழமான அவரது நம்பிக்கைக்குப் புதுப்பொலிவு தருகிறது.

மரியாளுக்கு நேர்ந்தது கூட அவ்வளவாக அல்ல, மரியாளின் மௌனம்தான் யோசேப்பை நிம்மதி இழக்கச் செய்திருக்கும். மரியாளின் அன்பையும் நேர்மையையும் கூட சந்தேகத்துக்கு உள்ளாக்கி இருக்கும். உண்மையான அன்பு இருந்திருந்தால், கபிரியேல் தூதன் மூலம் கடவுள் சொன்னதை, செய்ததை முன்கூட்டியே யோசேப்பிடம் சொல்லியிருக்க வேண்டாமா?

ஆண்டவனின் திட்டமிது. அதனால் வரும் சிக்கலை ஆண்டவன்தான் தீர்த்து வைக்க வேண்டும், தீர்த்து வைப்பார் என்ற உறுதியே மரியாவின் மௌனத்துக்குக் காரணமாக இருந்திருக்கும்.

கடவுள் எப்படிச் சிக்கலைத் தீர்த்து வைத்தார் என்பதே இன்றைய நற்செய்தி.

கணவன் மனைவிக்கிடையே ஆயிரம் சிக்கல்கள் எழலாம். அவற்றில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதை வைத்தே நாம் நேர்மையானவர்களா, பண்பாடுடையவர்களா என்று முடிவு கட்ட முடியும். ஒரு கணவன் மனைவி. ஏதோ காரணத்தால் இரண்டு பேருக்குள்ளும் உறவு விரிசல், மணமுறிவு வாங்க நீதிமன்றத்துக்குப் போன கணவனைப் பார்த்து “உன் மனைவி என்ன தப்புப் பண்ணினா?" என்று ஒருவன் கேட்டான். கணவன் “இன்னும் டைவர்ஸ் வாங்கல. அதனால் என் மனைவியைப் பற்றி எதுவும் சொல்ல விரும்பல" என்றான். டைவர்ஸ் வாங்கிட்டுக் கோர்ட்டிலிருந்து வரும்போது அதே ஆள் “டைவர்ஸ் தான் வாங்கிட்டியே? இப்பச் சொல்லு உன் சம்சாரம் என்ன தப்புப் பண்ணினாள்?" என்றான். அதற்குக் கணவன் "டைவர்ஸ் வாங்கிட்டதாலே இப்ப அவள் என் மனைவி இல்லை. அதனால் மனைவி இல்லாத ஒருத்தியைப் பத்தி நான் பேசுறது தப்பு”ன்னு போய் விட்டான். கேள்வி பண்பாடற்றது. பதிலோ பண்பாடானது.

யோசேப்பு வெளிப்படுத்திய பண்பாட்டிற்கு முன் இது எம்மாத்திரம்! இத்தகைய பண்பட்ட மன நிலையே நேர்மையாளர், நீதிமான் என்ற பேரை யோசேப்பு வாங்க வைத்தது!

"உலகமே அவருக்கு உரிமைச் சொத்தாகும் என்னும் வாக்குறுதி ஆபிரகாமுக்கோ அவருடைய வழிமரபினர்களுக்கோ திருச்சட்டத்தைக் கடைப்பிடித்ததால் கிடைக்கவில்லை. நம்பிக்கை கொண்டு கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனதால் தான் அவ்வாக்குறுதி கிடைத்தது (ரோமை.4:13) ஆபிரகாமைப் பின்பற்றி யோசேப்பு மனித நேயம் கலந்த நம்பிக்கையின் அடிப்படையில் இறைத்திட்டத்தை நிறைவேற்றத் தயங்காத நேர்மையாளர்.

இயேசு கற்றுத் தந்த செபத்தில் வரும் வார்த்தைகள்: “உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக” (மத்.6:10). இதன் பொருள்: நாம் விரும்புவதை இறைவன் நமக்குச் செய்ய வேண்டும் என்பதன்று. மாறாக இறைவன் விரும்புவது நம்மால், நம்மில் நிறைவேற வேண்டும் என்பதே!

மரியா இயேசுவின் மீது கொண்ட அன்பு இரத்த உறவால் எழும் அன்பு. தான் ஆடாவிட்டாலும் தன் சதையை ஆடவைக்கும் அன்பு. யோசேப்பின் அன்பு விசுவாச உறவால் வந்தது. எது பெரிது? “என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?... விண்ண கத்தில் உள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” (மத்.12:49-50)

“இதோ கன்னி கருவுற்று ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்" (மத்.1:22, எசா.7:14) என்று ஆண்டவர் அருளிய அடையாளம் யோசேப்பின் நம்பிக்கைக்குப் புதிய ஒளி, சோர்வுற்ற மனதுக்கு ஓர் உறுதி, ஐயுற்ற அறிவுக்குப் புதுத்தெளிவு.

இறைவன் மானிடப் பிறப்பெடுத்த நிகழ்வில் நாம் பார்க்கும் இரு உண்மைகள்: 1. யோசேப்பு நீதித்தன்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. 2. மரியா தூய்மைப் பண்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. இரண்டும் இல்லாத சமுதாயம் அவலமான வீழ்ச்சிக்கு ஆளாகும்.

கிறிஸ்துமஸ் என்பது இறைவனைப் பிரசன்னப்படுத்தும் நமது பணி. மரியாவின் தூய்மையிலும் யோசேப்பின் நீதி உணர்விலுமே இறைவன் தன் பிரசன்னத்தை நிலைநாட்டினார்.

ser ser

கனவின் வழியாகப் பேசும் கடவுள்

நிகழ்வு
கி.மு. 44 ஆம் ஆண்டு, மார்ச் 14 ஆம் நாள் உரோமைப் பேரரசன் ஜூலியஸ் சீசர் தன்னுடைய மனைவி கல்புனியாவோடு படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான். நள்ளிரவு நேரத்தில் கல்புனியா தூக்கத்தில் ஏதோ பேசுவதைக் கேட்டு, திடுக்கிட்டு எழுந்த ஜூலியஸ் சீசர், அவளைத் தட்டி எழுப்பி, “உனக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டான் ஜூலியஸ் சீசர். “அன்பரே! நாளைய நாளில் நீங்கள் செனட்டிற்குப் போகும்போது, அங்கு நீங்கள் கொல்லப்படுவதும் என்னுடைய மடியில் இரத்த வெள்ளத்தில் செத்துக்கிடப்பதுமாய்க் கனவு கண்டேன். அதனால் தயைகூர்ந்து நாளைய நாளில் நடக்கும் செனட்டிற்கு நீங்கள் போகவேண்டாம்” என்றாள். “சரி, நீ சொல்வதுபோல் நாளை நான் சென்ட்டிற்குப் போகமாட்டேன்” என்று உறுதிகூறினான் ஜூலியஸ் சீசர்.

மறுநாள் காலையில் ஜூலியஸ் சீசர், தன்னைப் பார்க்க வந்த தன்னுடைய நெருங்கிய நண்பனாகிய புரூட்டசிடம், “இன்றைக்கு நடப்பதாக இருக்கும் செனட் கூட்டத்தை இன்னொரு நாளைக்குத் தள்ளிவைக்கிறேன்... அதனால் கூட்டிற்கு வரும் எல்லாரிடமும் செய்தியைச் சொல்லிவிடுங்கள்” என்றான். அதற்கு அவன், “பேரரசரே! இன்றைக்கு நடப்பதாக இருக்கும் செனட் கூட்டத்தை இன்னொரு நாளுக்குத் தள்ளிவைத்தால், எல்லாரும் உங்களைக் குறித்து, ‘இவன் கையாலாகாதாவன்’ என்று தவறாகப் பேசுவார்களே” என்று நயவஞ்சகமாகப் பேசினான். இதைக்கேட்டு சற்று தடுமாற்றம் அடைந்த ஜூலியஸ் சீசர், “ஆமாம், நீ சொல்வதுதான் சரி” என்று தன்னுடைய மனைவியின் வார்த்தைகளைப் புறக்கணித்துவிட்டு, புரூட்டசோடு செனட் நடைபெறும் இடத்திற்குச் சென்றான்.

போகிற வழியில் ஜூலியஸ் சீசருக்கு நெருக்கமான ஒருவர், நடக்கப்போகும் சதியைக் குறித்து முன்கூட்டியே தெரிந்தவராய் அவரிடம் வந்து, “இதை நீங்கள் மட்டும் படியுங்கள்” என்று சொல்லிவிட்டு ஒரு குறிப்பைக் கொடுத்துவிட்டுப் போனார். ஜூலியஸ் சீசர், அது ஒரு மனு என்று நினைத்துக்கொண்டு மற்ற காகிதங்களோடு வைத்துக்கொண்டான். செனட் நடைபெறவிருந்த இடத்தை ஜூலியஸ் சீசரும் புருட்டஸும் அடைந்த பிறகு, அந்தத் தருணத்திற்காகவே காத்திருந்தவர்கள் போல் செனட்டில் இருந்தவர்களும் ஜூலியஸ் சீசரின் நெருங்கிய நண்பனுமாகிய புரூட்டஸும் ஜூலியஸ் சீசர்மீது பாய்ந்து அவனைக் கொன்றுபோட்டார்கள். அவனோ இரத்த வெள்ளத்தில் இறந்துபோனான்.

தன்னுடைய மனைவிக்குத் தோன்றிய கனவின் வழியாக ஜூலியஸ் சீசர் எச்சரிக்கைப்பட்ட போதும், அதற்குப் பணிந்து நடக்காததால் அவன் கயவர்களால் கொல்லப்பட்டது மிகவும் வேதனைக்குரியது. இதற்கு முற்றிலும் மாறாக, கனவின் வழியாகப் பேசிய கடவுளுக்கு – கடவுளின் தூதுவருடைய குரலுக்குச் - செவிகொடுத்த யோசேப்பைக் குறித்து இன்றைய நற்செய்தி வாசகம் பேசுகின்றது. யோசேப்பிற்குக் கனவின் வழியாகச் சொல்லப்பட்ட செய்தி என்ன? அதற்கு அவர் எவ்வாறு கீழ்ப்படிந்து நடந்தார்? நாம் எப்படி ஆண்டவரின் குரலுக்குக் கீழ்ப்படிந்து நடப்பது? என்பவற்றைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

யோசேப்பு என்னும் நேர்மையாளர்

நற்செய்தி வாசகத்தில், நேர்மையாளர் யோசேப்பைக் குறித்து வாசிக்கின்றோம். இவர் தனக்கு மணஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த மரியா தன்னோடு கூடி வாழ்வதற்கு முன்பே கருவுற்றிருந்த செய்தியைக் கேள்விப்பட்டு, அவரை மறைவாய் விலக்கிவிடத் தீர்மானிக்கின்றார். இங்கு யோசேப்பு மரியாவிடம் (பெருந்தன்மையோடு) நடந்துகொண்டவிதம் கவனிக்கத்தக்கது.

மண ஒப்பந்தம் செய்யப்பட்ட பெண்ணிடம் கன்னிமை காணவில்லை என்றால், அப்பெண்ணைக் கல்லால் எறிந்து கொல்லவேண்டும் வேண்டும் என்பது மோசேயின் சட்டம் (இச 22: 20-21). மேலும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட ஒருவன், அந்தப் பெண்ணின் அருவருக்கத்தக்க செயலைப் பார்த்துவிட்டு, அவளிடம் முறிவுச் சீட்டு எழுதிக்கொடுத்துவிட்டு, அவளை அவளுடைய வீட்டிற்கு அனுப்பி விடலாம். இதையும் மோசேயின் சட்டம் கூறுகின்றது (இச 24:1). ஆனால், யோசேப்போ தனக்கு மணஒப்பந்தம் செய்யப்பட்ட மரியா தன்னோடு கூடி வாழ்வதற்கு முன்னமே கருவுற்றிருந்த செய்தியைக் கேள்விப்பட்டு, அவரைக் கல்லால் எறியவுமில்லை; மணமுறிவுச் சீட்டு எழுதிக் கொடுக்கவுமில்லை. மாறாக, மறைவாக விலக்கிவிட முடிவுசெய்கின்றார். இவ்வாறு அவர் நேர்மையாளராய் நடந்துகொள்கின்றார்.

திருவிவிலியம் ‘நேர்மையாளர்’ என்பவரைச் சக மனிதரிடம் அன்போடும் இரக்கத்தோடும் நடந்துகொள்பவராகச் சுட்டிக்காட்டுக்கின்றது. இயேசு சொல்கின்ற இறுதித் தீர்ப்பு உவமை இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இந்த உவமையில் வருகின்ற நேர்மையாளர்கள் (மத் 25: 37-39) சகமனிதர்களிடம் இரக்கத்தோடும் அன்போடும் நடப்பார்கள்; நற்செயல் புரிவார்கள். அந்த வகையில் யோசேப்பும் மரியாவின் மட்டில் இரத்தத்தோடு நடத்துகொண்டு, நேர்மையாளராய் மிளிர்கின்றார்.

கனவின் வழியாகப் பேசும் கடவுள்

யோசேப்பு, மரியாவைத் தனியாக விலக்கிவிடத் திட்டமிட்ட சமயத்தில்தான், கடவுள் தன்னுடைய தூதர்மூலம், யோசேப்பின் கனவில் தோன்றிப் பேசுகின்றார். கடவுள் கனவின் வழியாகப் பேசுவார் என்பதற்குத் திருவிவிலியத்தில் பல சான்றுகள் இருக்கின்றன. “.....கனவில் அவனோடு பேசுவேன்’ (எண் 12:6) என்ற இறைவார்த்தையும், உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளையோர் காட்சிகளையும் காண்பார்கள் (யோவே 2: 28) என்ற இறைவார்த்தையும் இன்னும் ஒருசில இறைவார்த்தைகளும் (மத் 2:12,13,19,22) இதற்குச் சான்று பகர்கின்றன.

யோசேப்பின் கனவில் தோன்றிய கடவுளின் தூதர் அவரிடம், மரியா தூய ஆவியார்தான் கருவுற்றிருக்கின்றார் என்பதையும் அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்க வேண்டாம் என்பதையும் அவர் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் என்பதையும் எடுத்துக்கூறுகின்றார். இவ்வாறு கனவின் வழியாகப் பேசிய கடவுளுக்கு – கடவுளின் தூதருக்கு யோசேப்பு செவிமடுத்தாரா? அதன்பிறகு என்ன நடந்தது என்பன குறித்துத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

இறைத் திருவுளத்தின்படி நடந்த யோசேப்பு

கடவுளின் தூதர் கனவின் மூலம் கடவுளின் திருவுளத்தை யோசேப்பிடம் எடுத்துச் சொன்னதும், அவர் தன்னுடைய மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ளத் தொடங்கி கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடக்கத் தொடங்குகின்றார். இதன்மூலம் யோசேப்பு, இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகும் பேறுபெறுகின்றார், மட்டுமல்லாமல், ‘நம்மோடு இருக்கும் கடவுளின்’ உடனிருப்பை தன்னுடைய வாழ்நாள் முழுவதும் உணரத் தொடங்குகின்றார்.

யோசேப்பு கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடந்தது, நமக்கு முன் ஒரு கேள்வியை எழுப்புகின்றது. அது என்ன என்றால், நாம் கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடக்கின்றோமா? என்பதாகும். நிறைய நேரம் நாம் இன்றைய முதல் வாசகத்தில் வருகின்ற ஆகாசு மன்னனைப் போன்று கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடக்காமல், நம்முடைய விருப்பத்தின்படியே நடந்தே அழிந்து போகின்றோம். இத்தகைய சூழ்நிலையில் நாம் யோசேப்பைப் போன்று கடவுளின் திருவுளத்திற்கு நம்மையே கையளித்து, அதற்குப் பணிந்து நடந்தால், இயேசு கண்ட இறையாட்சிக் கனவு நனவாகும் என்பது உறுதி.

சிந்தனை ‘உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ நான் வருகின்றேன்’ (எபி 10: 9) என்று இயேசு கிறிஸ்து ஆண்டவரின் திருவுளத்தை நிறைவேற்றுவார். ஆதலால், நாமும் நம் ஆண்டவரைப் போன்று, யோசேப்பு, மரியாவைப் போன்று ஆண்டவரின் திருவுளத்தை நிறைவேற்ற முன்வருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser ser

 இம்மானுவேல் என்று பெயரிடுவீர்!

சில ஆண்டுகளுக்கு முன்பாக இத்தாலியில் புகைப்பிடிப் போரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. புகைபிடிப்போர் பெரும்பாலும் தாங்கள் ஒரு குறிப்பிட்ட சிகரெட்டைப் பிடிப்பதில் பெருமை கொள்வதால், சிகரெட் தயாரிப்பாளர்கள் தங்களுடைய பெயர் மற்றும் இலச்சினையை அட்டைப்பெட்டியில் அச்சிடக்கூடாது என்றும், 'சிகரெட்' மற்றும் 'எண்ணிக்கை' என்று இரண்டு வார்த்தைகள் இருந்தால் மட்டுமே விற்பனை அனுமதிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது. இந்த முயற்சிக்கு எதிர்ப்பு சிகரெட் தயாரிப்பாளர்களிடமிருந்து வரும் என்று அரசு எதிர்பார்த்தது. ஆனால், அப்படி எந்த ஒரு எதிர்ப்பும் வரவில்லை. எதிர்ப்பு மக்களிடமிருந்தே, வாடிக்கையாளர்களிடமிருந்தே வந்தது. அரசே இதைக்கண்டு ஆச்சர்யப்பட்டது. தங்களுடைய உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், புற்றுநோய் ஏற்படும் அபாயம் மக்களுக்கு இருந்தாலும், அவர்கள் தங்களுடைய அடையாளமாக சிகரெட் கம்பெனியின் பெயரையும், முத்திரையையும் நினைத்திருந்தார்கள் என்பது ஆச்சர்யத்தைத் தருகிறது.

'பெயரில் என்ன இருக்கிறது?

ரோஜாவை வேறு பெயர் சொல்லி அழைத்தால்

அதன் நறுமணம் குறைந்துவிடுமா?'  என்று ரோமியோ-ஜூலியட் நாடகத்தில் கேட்கிறார் ஷேக்ஸ்பியர்.

பெயரில் நிறையவே இருக்கிறது என்று சொல்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு. மனித வரலாற்றிலும் கலாச்சாரத்திலும் பெயர்கள் முக்கியமானவைகளாகவே இருந்திருக்கின்றன. மனிதர்கள் தங்கள் பெயர்களை நிலைநாட்டுவதற்காகவே வாள்களை ஏந்திப் போரிட்டுள்ளனர், கடல்களைக் கடந்து பயணம் செய்துள்ளனர், உயிரைப் பணயம் வைத்து கண்டு பிடிப்புக்கள் பல நிகழ்த்தியுள்ளனர். நம்முடைய தமிழ் மரபில் முன்பு வழங்கப்பட்ட பெயர்கள் எல்லாம் கூட ஒரு குழந்தையின் எதிர்காலத்தை அல்லது அக்குழந்தையின் மூதாதையரின் மரபை நிலைநாட்டி வரையறுக்கப்பட்டுள்ளன. இன்று தான் பெயர்கள் எல்லாம் வித்தியமாசமாக இருக்கின்றன. புதிய பெயர்களை வைப்பது புதிய தொடக்கமாகவும் வரலாற்றில் இருக்கின்றது. பல மாகாணங்களாக பிரிந்து கிடந்த நம் நாடு, 'இந்தியா' என்று பெயர் பெற்றதும் கூட ஒரு புதிய தொடக்கமே. மேலும், நாம் நகரங்களுக்கு, விமான நிலையங்களுக்கு, மாவட்டங்களுக்கு, நிறுவனங்களுக்கு, தெருக்களுக்கு வழங்கும் பெயர்களும் நம் முன்னோர்களை, வரலாற்றில் மாற்றத்தைக் கொண்டுவந்தவர்களை நினைவுகூர்வதன் அடையாளமாக இருக்கிறது.

வயது வந்தவர்கள் சிலர் தங்கள் பெயர்களை மாற்றிக்கொள்ளும் வழக்கம் இன்றும் இருக்கிறது. விளையாட்டு மற்றும் சினிமா துறைகளில் புகழ்பெற்றவர்கள், எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள் தங்கள் பெயர்களை மாற்றிக்கொள்கிறார்கள், அடைமொழி சேர்த்துக்கொள்கிறார்கள், அல்லது புனைப்பெயர் வைத்துக்கொள்கிறார்கள். ஒருவரின் குணாதிசயத்தை பிரதிபலிக்கும் விதமாக நாம் பட்டப்பெயர் வழங்குகிறோம். நம் நட்பு அல்லது காதல் வட்டத்தில் உள்ளவர்களுக்குப் புதிய பெயர் வைத்து அழைத்து மகிழ்கின்றோம். நம்மைச் சாராத மற்றவர்களை இழிபெயர் கொண்டும் அழைக்கின்றோம்.

படைப்பின் தொடக்கத்தில் தாம் படைத்த அனைத்திற்கும் பெயரிடுமாறு ஆண்டவராகிய கடவுள் படைப்பனைத்தையும் முதல் மனிதனாகிய ஆதாமிடம் கொண்டுவருகின்றார். ஆதாமும் அவற்றுக்குப் பெயரிடுகின்றார். பெயரிடுதல் இங்கே உரிமையைக் குறிப்பதாக இருக்கின்றது. விவிலியப் புரிதலில் பெயர் என்பது வெறும் விளிச்சொல் மட்டுமல்ல. அது ஒருவரின் குணம் மற்றும் பணியைக் குறிக்கக்கூடியது. அது ஒருவரின் அடையாளமாக இருப்பதோடு ஒருவரின் வரையறையாகவும் இருக்கிறது. எடுத்துக் காட்டாக, 'யாக்கோபு' என்ற பெயர் ('ஏமாற்றுபவன்') 'இஸ்ரயேல்' என்று மாற்றப்பட்டபோது ('கடவுளோடு போரிடுபவன்') குலமுதுவர் யாக்கோபும் அவருடைய வழிமரபினரும் கடவுளோடு போராடுபவர்களாகவே இருக்கின்றனர். ஒருவரின் பெயரை அறிந்துகொள்வது என்பது அவருடைய அடையாளத்தை, பணியை, வாழ்க்கை இலக்கை, நோக்கை அறிந்து கொள்வதாகும். ஆக, ஒருவருக்குப் பெயர் அளிப்பது அல்லது ஒருவரின் பெயரை மாற்றுவது என்பது விவிலியத்தில் முக்கியமான கூறாக இருக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தின் (காண். எசா 7:10-14) வரலாற்றுப் பின்புலத்தை முதலில் புரிந்துகொள்வோம். இஸ்ரயேல் மக்களுக்கு அது ஒரு கடினமான காலம். ஆகாசுக்கும் அவருடைய அரசுக்கும் சுற்றியிருந்த பல அரசுகளிடமிருந்து நிறைய நெருக்கடி இருந்தது. அவர்களின் எண்ணமெல்லாம் ஆகாசை அழிப்பதும், அவருடைய அரசாட்சியைப் பறித்துக்கொள்வதுமே. மேலும், ஆகாசு தங்களோடு சேர்ந்து அசீரியாவுக்கு எதிராகப் போரிடவேண்டும் என்றும் அவரைக் கட்டாயப்படுத்தினர். அதற்கு ஆகாசு மறுத்தபோது அவர்கள் ஆகாசுடன் போரிடத் துணிகின்றனர். மிகவும் பயந்துபோய் போருக்கு ஆயத்தமாகிக் கொண்டி ருக்கிறார் ஆகாசு. போர்க்காலத்தில் எருசலேம் நகரத்துக்குத் தேவையான நீராதாரம் போதுமானதாக இருக்கிறதா என்று  அரசர் ஆகாசு ஆராய்ந்து பார்த்துக்கொண்டிருக்கின்ற வேளையில் ஆறுதல் தரும், நம்பிக்கை தரும் செய்தியோடு அவரை எதிர் கொள்கிறார் எசாயா. ஆண்டவருக்கு மிகவும் விருப்பமான நகரமாக இருக்கின்ற எருசலேம் அழிவதை அவர் அனுமதிக்க மாட்டார் என்றும், ஆண்டவர் என்றும் தன்னுடைய உடன்படிக்கைக்கு பிரமாணிக்கமாய் இருப்பார் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றார் எசாயா. இதற்கு ஓர் அடையாளம் கேட்குமாறு ஆகாசிடம் சொல்கின்றார் எசாயா. அடையாளம் கேட்க மறுக்கின்றார் ஆகாசு. ஏனெனில், ஆகாசு கடவுள் மேல் நம்பிக்கை கொள்ளாமல், தன்னுடைய பலத்தை மட்டும் நம்பி, அசீரியாவின் துணையை நாடி மற்ற நாடுகளோடு போரிடுகின்றார். போரில் ஆகாசுக்கு வெற்றி கிடைத்தாலும் அதன் விலை மிகவும் பெரியதாக இருக்கின்றது. ஏனெனில், அசீரியா ஆகாசைத் தன்னுடைய அடிமை அல்லது ஏவல் அரசனாக வைத்துக் கொள்ள விழைகிறது. மேலும், ஆகாசு தன்னுடைய அரியணையை விட்டுக்கொடுப்பதோடு, அசீரிய தெய்வங்களுக்குத் தூபம் காட்டவும் கட்டாயப்படுத்துகின்றார். அசீரியாவின் பேச்சைக் கேட்டு, அசீரியத் தெய்வங்களுக்கும் எருசலேம் ஆலயத்தில் இடம் அளித்தார். இவ்வாறாக, சிலைவழிபாடு என்னும் தீமையையும் செய்தார் ஆகாசு. இஸ்ரயேல் சமய அடையாளங்கள் எல்லாம் எருசலேம் ஆலயத்திலிருந்து அகற்றப்பட்டு, கடவுளே தன்னுடைய ஆலயத்திலிருந்து வெளியேற்றப்படும் நிலை உருவானது. எருசலேம் புறவினத்து நகரமாகவும், யூதா அசீரியாவின் மாகாணமாகவும் மாறியது. இஸ்ரயேல் மக்கள் யாவே கடவுளின் மக்கள் இல்லை என்ற நிலையும் உருவானது (காண். 1 அர 16).

இச்சூழலில்தான் குழந்தை ஒன்றின் பிறப்பு பற்றிய முன்னறிவிப்பு வருகின்றது. இங்கே சொல்லப்படும் குழந்தை ஆகாசின் குழந்தை. ஆகாசுடைய இளைய மனைவி ஒருத்தி இந்நேரத்தில் குழந்தைப் பேற்றுக்காய் காத்திருக்கின்றாள். பிறக்கின்ற குழந்தை சாதாரண மனித குழந்தையாக இருந்தாலும் அதன் வாழ்வியல் நோக்கம் பெரிதாக இருந்தது. 'இம்மானுவேல்' ('கடவுள் நம்மோடு') என்ற உருவகப் பெயர் அக்குழந்தைக்கு வழங்கப்பட்டது. இக்குழந்தை ஆகாசின் மகன் 'எசேக்கியாவை' குறித்தது. எசேக்கியா தான் அரசாட்சி ஏற்றவுடன் அசீரிய நுகத்தை உடைத்ததோடு, எருசலேம் ஆலயத்தில் ஒரு சமயப் புரட்சியும் செய்தார். முதலில், அசீரியக் கடவுளர்களையும், சமய அடையாளங்களையும் ஆலயத்திலிருந்து அகற்றினார். மேலும், தன்னுடைய ஆட்சிக் குட்பட்ட எந்த இடத்திலும் வேற்று தெய்வங்கள் இல்லாமல் ஆக்கினார். கடவுளின் பிரசன்னத்தை மீண்டும் ஆலயத்திற்குள்ளும் எருசலேம் நகருக்குள்ளும் கொண்டுவந்தார். 'கடவுள் நம்மோடு இல்லை' என்ற நிலையை மாற்றி, 'கடவுள் நம்மோடு' என்ற நிலையை உருவாக்குகிறார். தனக்கு அடையாளமாகக் கொடுக்கப்பட்ட 'இம்மானுவேல்' என்று பெயரை அப்படியே வாழ்வாக்கு கின்றார். 'கடவுள் நம்மோடு' என்று கடவுளை மக்களிடம் கொண்டவந்ததோடல்லாமல், 'நாம் கடவுளோடு' என்று மக்களையும் உடன்படிக்கையின் பிரமாணிக்கத்திற்கு அழைத்தார். எசேக்கியாவின் இச்செயலால் இஸ்ரயேல் மக்கள் மீண்டும், 'கடவுள் நம்மோடு' என்று கொண்டாடத் தொடங்கினார்கள். ஆக, 'கடவுள் நம்மோடு' என்ற பெயர் ஆகாசின் குழந்தையின் பெயராக மாறியதோடல்லாமல் இஸ்ரயேல் மக்களின் வாழ்வியல் அனுபவமாகவும் மாறுகிறது.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். உரோ 1:1-7), பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலின் தொடக்கமாக இருக்கிறது. பவுலின் இயற்பெயர் 'சவுல்' அவருடைய தமஸ்கு அனுபவத்திற்குப் பின் மாற்றம் பெறுகிறது. தமஸ்கு அனுபவம் பவுலை முற்றிலும் புரட்டிப்போட்டது. கிறிஸ்துவர்களை அழிப்பவரும், கிறிஸ்துவின் எதிரியுமாக இருந்த சவுல், தான் பவுலாக மாற்றம் பெற்றதை, தன் அடையாளம் மாறியதை, தன்னுடைய பெயரும் பணியும் மாற்றம் பெற்றதை மூன்று சொல்லாடல்கள் வழியாகப் பதிவு செய்கின்றார்: (அ) 'இயேசு கிறிஸ்துவின் தொண்டன் அல்லது அடிமை,' (ஆ) 'திருத்தூதன்,' மற்றும், (இ) 'நற்செய்திப் பணிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டவன்.' இம்மூன்று சொல்லாடல்கள் வழியாக தன்னுடைய அடையாளம் மற்றும் பணியை ஒருங்கிணைந்த முறையில் சொல்லிவிடுகின்றார் பவுல். முதலில், பவுல் தன்னையே முழுவதும் இயேசு கிறிஸ்துவுக்குச் சொந்த மாக்குவதை 'அடிமை' அல்லது 'தொண்டன்' என்ற சொல்லாடல் குறிக்கிறது. 'அடிமை' அல்லது 'தொண்டன்' என்ற நிலையை, அவர் தன்மேல் சுமத்தப்பட்ட சுமையாக எண்ணாமல், தானே விரும்பி, முழுப் பொறுப்புணர்வுடன் ஏற்கின்றார். 'அடிமை' என்ற நிலையில் தன்னுடைய பணியைச் செய்யாமல், தன் தலைவனின் பணியைச் செய்ய முழுமையாகத் தன்னைக் கையளிக்கிறார். இரண்டாவதாக, 'திருத்தூதன்' என்ற நிலையில் தன்னுடைய பணியின் இலக்கைப் பதிவு செய்கிறார் பவுல். 'இதுதான் என்னுயை பணி,' 'இப்படித்தான் என் வாழ்வை நான் இனி அமைத்துக் கொள்ளப்போகிறேன்' என்று தன்னுடைய இயக்கத்தை வரையறை செய்யும் பவுல், கடவுளின் தூதனாய், திருப்பயணியாய், அன்றைய உலகின் கடைக்கோடிக்கும் நற்செய்தியை எடுத்துச் செல்கின்றார். மூன்றாவதாக, 'ஒதுக்கிவைக்கப்படுதல்' என்ற சொல்லாடல் அவருடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை வரையறுக்கிறது. 'ஒதுக்கிவைக்கப்படுதல்' என்பது வெண்பொங்கலிலிருந்து தேவையில்லை என ஒதுக்கிவைக்கப்படும் 'மிளகுபோல்' அல்ல. மாறாக, முக்கியமான நிகழ்வுக்காக ஒதுக்கிவைக்கப்படும் சேலை அல்லது பெர்ஃப்யூம் போன்றது. இது பவுலின் இலக்குத் தெளிவையும் காட்டுகிறது. ஆக, தனக்குப் புதிய பெயர்களை அடையாளங் களாகக் கொடுத்துக்கொள்ளும் பவுல், அவற்றை அவர் வாழ்ந்துகாட்டியதன் வழியாக மிகவும் போற்றுதற்குரியவர் ஆகிறார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 1:18-24), இயேசுவின் பிறப்பு யோசேப்புக்கு முன்னறிவிக்கப்படும் நிகழ்வாகவும், பிறக்கப்போகும் குழந்தைக்கு வழங்கப்படும் பெயரின் வரையறையாகவும் இருக்கின்றது. நேர்மையாளராகிய யோசேப்பு, தூய ஆவியால் மரியாள் கருத்தாங்கியிருக்கும் குழந்தையைத் தன்னுடையதாக ஏற்றுக்கொள்கின்றார். இந்த ஏற்றுக்கொள்தல் 'பெயரிடும் நிகழ்வால்' உறுதிசெய்யப்படுகிறது. யோசேப்பு பேசிய மொழியில், 'யெசுவா' என்றால் 'ஆண்டவர் மீட்கிறார் அல்லது விடுவிக்கிறார்.' இக்குழந்தையின் பணி உலகத்திற்கு மீட்பைக் கொணர்வது. இயேசுவின் வழியாக கடவுள் உலகை மீட்பார். இந்தப் பெயரே இக்குழந்தையின் பணியையும் சொல்லிவிடுகிறது. மீட்பு என்பது தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வு அல்ல. மாறாக, மனித வரலாற்றின் ஒரு பகுதி. கடவுள் எசேக்கியா வழியாகத் தொடங்கிய, 'கடவுள் நம்மோடு' என்ற நிகழ்வு, இயேசுவில் தொடரும். எசேக்கியாவைப் போல இயேசுவும் கடவுளிடமிருந்து அந்நியமாகிப்போன மக்களை மீண்டும் அவரிடம் ஒன்று சேர்ப்பார். பாவத்தால் உடைந்துபோன கடவுள்-மனித இணைப்பை சரிசெய்வார். எருசலேம் ஆலயத்தைச் சரிசெய்து இஸ்ரயேல் மக்களை மீண்டும் ஆண்டவரிடம் எசேக்கியா கொண்டுவந்ததுபோல, ஒட்டுமொத்த மனுக்குலத்தின்மேலிருக்கும் பாவத்தையும் அகற்றி அவர்களைக் கடவுளோடு ஒப்புரவாக்குகிறார் இயேசு. ஆக, 'இயேசு' என்ற பெயர் குழந்தையின் வாழ்வின் இலக்கையும், அக்குழந்தை தன் வாழ்வில் முன்னெடுக்கும் பணியையும் முன்குறிக்கிறது.

இவ்வாறாக, 'இம்மானுவேல்,' 'பவுல்,' 'இயேசு' என்னும் மூன்று பெயர்களும், இன்றைய வாசகங்களில், அவர்களின் இருப்பையும், இயக்கத்தையும் வரையறுக்கின்றன. பெயர்கள் மனித வாழ்வின் நோக்கங்களை வரையறுக்கின்றன.

இன்றைய வழிபாடு நமக்கு வைக்கும் வாழ்வியல் சவால் எது?

  • அ. எனக்கு என் பெற்றோர் இட்ட பெயர் என்ன? என்னை மற்றவர்கள் அழைக்கும் பெயர்கள் - ஃபாதர், பேராசிரியர், அண்ணன் - எவை? இப்பெயர்களுக்கு ஏற்றாற்போல நான் வாழ்கிறேனா?
  • ஆ. எனக்கு நான் இடும் பெயர் என்ன? முந்தைய பெயர்(களை) விட இந்தப் பெயர் முக்கியமானது. ஏனெனில், இதுதான் என்னுடைய இலக்கு, வாழ்வு நோக்கு அனைத்தையும் நிர்ணயிக்கிறது.
  • இ. நான் கடவுளுக்கு இடும் பெயர் என்னை? கடவுளை நான் எப்படிப் பார்க்கிறேன்? பிறருக்கு நான் இடும் பெயர்கள் எவை? அந்தப் பெயர்களுக்கேற்ற உறவுநிலையை நான் தகவமைத்துக்கொள்கிறேனா?

இறுதியாக,'இம்மானுவேல்,' 'பவுல்,' 'அடிமை,' 'திருத்தூதன்,' 'ஒதுக்கிவைக்கப்பட்டவன்,' 'இயேசு' என்ற வரிசையில் நாம் நம்முடைய பெயரையும் இணைத்துப் பார்ப்போம். மேற்காணும் பெயர்களைப் போலவே நம் பெயர்களும் வாழ்வாக மாற இறைவனிடம் வேண்டுவோம்.'மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் - நீங்களும் நானும் - ஆண்டவருடையவை. நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்' (திபா 24:1).

ser

sunday homily


முகப்பு பக்கம்
வத்திக்கான் வானொலி
கத்தோலிக்க இதழ்கள்
ஞாயிறு வாசகம்
விருந்தினர் பக்கம்
உம் வாக்கே விளக்கு!
சென்னை பங்குதலங்கள்
நூலகம்
திருத்தலச் சுற்றுலா
தவக்கால சிந்தனைகள்
ஒலியும் ஒளியும்
அன்னை தெரேசா
கிறிஸ்மஸ் மலர்கள்
பொங்கல்
செபமாலை
பாடல்கள்
செபமே ஜெயம்A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com