மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு
முதலாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 35:1-6அ.10 | யாக்கோப் 5:7 – 10 | மத்தேயு 11:2-11

ser

ஒரு மனிதனுக்கு சாதாரணமாக நான்கு வகையிலே துன்பம் வரலாம்: 1. நோயினால் 2. பாவத்தால் 3. மரணத்தால் 4. இயற்கையினால். ஆண்டவர் மனிதர்களின் மனநிலையை உணர்ந்தவராய் நான்கு துயரங்களிலிருந்தும் மனிதர்களை விடுவித்து அவர்களுக்கு மகிழ்ச்சியும், மனநிம்மதியும் நிறைந்த வாழ்க்கையைப் பரிசாக அளிக்கிறார்.

நற்செய்தியில் கூறப்பட்ட இருவரும் பார்வையற்றோர். அவர்கள் ஆண்டவராம் இயேசுவுக்காகக் காத்திருந்தார்கள் ! இயேசு அவர்கள் இருந்த பக்கம் நடந்து செல்கிறார் என்பதை எப்படியோ உணர்ந்து கொண்டார்கள். கத்தினார்கள்: "தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்" என்றனர் ! (மத . 9:27-31) கங்கையும், காவிரியும் சேர்ந்தால் சொல்லவும் வேண்டுமோ! அவர் அவர்களை அன்போடு பார்த்து, ஆதரவு நிறைந்த இதயத்தோடு அவர்களைத் தொட்டார். தொட்டவுடன் அவர்கள் குணமானார்கள்.

இருவர் இயேசுவின் பக்கத்தில் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தனர். இருவரும் குற்றவாளிகள். ஒருவன் கேலி செய்தான். மற்றொருவனோ இயேசுவின் இரக்கத்தைக் கேட்டான்! திருடித் திருடிப் பழக்கப்பட்டவன் இறுதியாக இயேசுவின் இதயத்தையும் திருடிவிட்டான். இயேசு அவனைப் பார்த்து, "நீ இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" (லூக்.23:43) என்றார். 'நான்கு நாட்கள் கல்லறையிலிருந்த இலாசரை உயிர்ப்பித்து கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்" (யோவா. 11:1-44) என்றார். "இரையாதே, அமைதியாயிரு" என்றார். காற்றும், கடலும் அவருக்குக் கீழ்ப்ப டிந்தன (மாற். 4:35- 41).

இதோ இந்த இரக்கத்தின் ஆண்டவர் இயேசுதான் நம் நடுவே பிறக்கப் போகிறார் ! நமக்கெல்லாம் மகிழ்ச்சி பொங்கும் காலமிது. இயேசு காலடி பட்ட இடமெல்லாம் பாலைவனம் சோலை வனமானது; பொட்டல் நிலம் பூத்துக் குலுங்கியது; தளர்ந்துபோன கைகள் திடப்படுத்தப்பட்டன; தள்ளாடிய முழங்கால்கள் உறுதிப் படுத்தப்பட்டன. உள்ளத்தில் உறுதி அற்றவர்களுக்கு இயேசு உறுதி அளித்தார். அநீதியினின்று மக்களைக் காப்பாற்றினார். கண்களுக்குப் பார்வையையும், செவிகளுக்குக் கேட்கும் ஆற்றலையும், நாவிற்குப் பேசும் வரத்தையும் முடவருக்கு நடக்கும் சக்தியையும் தந்து எல்லாரும் நலமுடன் வாழ வலம் வந்தார்! ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர் திரும்பி வருவர். மகிழ்ந்து பாடிக் கொண்டே (எசா . 35:10) சீயோனுக்கு வருவர் (முதல் வாசகம்). திருமுழுக்கு யோவான், மெசியா யார் என்பதை அறிந்துகொள்ள இயேசுவிடம் தன் சீடர்களை அனுப்புகிறார். தம்மிடம் வந்த சீடர்களிடம், நீங்கள் கண்டதையும், கேட்டதையும் யோவானிடம் அறிவியுங்கள். குருடர் பார்க்கின்றனர். முடவர் நடக்கிறார். நோயாளி குணமடைகிறான் என்றார் இயேசு. (மூன்றாம் வாசகம்) இயேசுவின் பணி திருமுழுக்கு யோவானுக்கு நிறைவும் மகிழ்வும் தருகிறது. இந்த மனநிலை நம்மில் இருந்தால் எவ்விதத் தடையுமின்றி பல நல்ல செயல்கள் நடந்தேறும் என்பதில் சந்தேகமில்லை .

யோவான் முன்னோடியாக வந்து இயேசுவின் பாதையை செம்மைப்படுத்தியது போல நாமும் இயேசுவின் முன்னோடியாக, சான்று பகர்ந்து வாழ இன்றைய வார்த்தை வழிபாடு நம்மை அழைக்கிறது. நாம் பாவம் என்ற குருட்டுத் தன்மையிலிருந்து விடுபட்டு இயேசுவின் மீது நம்பிக்கை கொள்வோம். நாம் பெற்றுக் கொண்ட மீட்பை, அமைதியை மற்றவருக்கு எடுத்துச் சொல்லும் தூதுவர்களாகச் செயல்படுவோம்.

ஒரு சிற்பியானவன் ஒரு கல்லில் சிலை வடிக்க தொடங்கினான். அது உடைந்தது. அடுத்த கல்லை செதுக்கினான். அதுவும் உடைந்தது, மூன்றாவது கல்லை விடா முயற்சியோடு செதுக்கினான். அழகான சிலை உருவானது. உடைந்த கற்கள் ஆலயத்தின் படிகற்களாக மாறின. உருவாக்கப்பட்ட சிலையானது வழிபடும் சிலையானது. ஆம்! நாம் நம்பிக்கையோடும், மன உறுதியோடும் செயல்பட்டால் வெற்றி நமதே! சாதனை ஒரு சிறுகதையல்ல. அது ஒரு தொடர்கதை .

 

ser ser

என்னை ஏற்றுக்கொள்


முள் மலராக வேண்டும்,
தேள் தேனாக வேண்டும்,
மண் பொன்னாக வேண்டும்,
நோயாளிகளுக்கு உடல் நலம் வேண்டும்,
பாவம் செய்தோர்க்குப் பாவ மன்னிப்பு வேண்டும்,
இறந்தவர்களுக்கு உயிர்ப்பு வேண்டும்,
அறிவுக்குத் தெளிவு வேண்டும்,
உள்ளத்திற்கு உறுதி வேண்டும்,
வாழ்க்கைக்கு வழி வேண்டும்


என்று அன்று வேண்டி நின்றனர் உலக மக்கள். அவர்களைப் பார்த்து இறைவாக்கினர் எசாயா, உங்கள் கனவு நனவாகும் (எசா 35:1-6அ. 10) என்றார். அவர் சொன்னபடியே மக்கள் நடுவே இயேசு அழகிய நிலவாக, அற்புத மலராக, ஆனந்தக் கடலாகத் தோன்றி, அழுதவர்களின் வேதனைகளையெல்லாம் நீக்கி எல்லாருக்கும் எல்லாமுமாய்த் திகழ்ந்தார் (நற்செய்தி).

அன்று மட்டுமல்ல, இன்றும் அவரை ஏற்றுக்கொள்பவர்களின் வாழ்க்கையிலே இயேசு புதுமை செய்கின்றார் என்பதற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு.

அவன் பெயர் பெர்னாண்டு லெக்ராண்ட். அவனுக்கு வயது 26. அவனுடைய உற்றாரும், உறவினரும் அவனுடைய திருமணத்திற்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்கள். அவன் தனது எதிர்காலத்தைப் பற்றி எத்தனையோ கனவுகளைச் சுமந்து கொண்டிருந்தான்.

ஒருநாள், அவன் அதை கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. படுத்த அவளால் எழுந்து அமர முடியவில்லை . ஆற்றல் இழந்த கைகள், ஆற்றல் இழந்த கால்கள்! அவன் படுக்கையில் விழுந்து 26 மாதங்கள் உருண்டோடிவிட்டன. 1934-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் நாள் காலை மணி 10. லெக்ராண்ட்டை லூர்து நகரிலுள்ள அற்புத அருவிக்குள் நீராட வைத்தார்கள்.

38 வருடங்களாக படுத்த படுக்கையாய்க் கிடந்தவரைப் பார்த்து இயேசு, எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும் (யோவா 5:8) என்றார். அவர் எழுந்து நடந்தார். அந்த இயேசு, அவரது தாயின் சொல்லிற்கிணங்க லெக்ராண்ட்டையும் தொட்டிருந்தார். அவன் எழுந்து அமர்ந்தான், நடந்தான். அவனோடு எல்லாரும் நடந்தார்கள். 14 டாக்டர்கள் அவனைப் பரிசோதித்தார்கள்.

அவர்கள் அளித்த சான்றிதழில் இன்று நாம் காண்பதென்ன? இப்படிப்பட்ட குணத்திற்கு விஞ்ஞானத்தில் விளக்கமில்லை. திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட அரும் அடையாளங்களில் இதுவும் ஒன்று. இன்று இயேசு நம் ஒவ்வொருவரையும் பார்த்து இவ்வாறு கூறுகின்றார் :

என் மகனே, என் மகளே! உனக்கு என்ன வேண்டும்? என்னிடம் கேள். கடல் கரையாகிவிட்டதா? இல்லை கரை கடலாகிவிட்டதா? கிழக்கு மேற்காகிவிட்டதா? இல்லை மேற்கு கிழக்காகிவிட்டதா? விழிகளிலே கண்ணீரா? வீட்டுக்குள்ளே தண்ணீரா? உடலிலே ஊனமா?உள்ளத்திலே ஊனமா?

அன்று அரும் அடையாளங்களைச் செய்த என் கைகள் இன்று குறுகிவிடவில்லை ! என் ஆற்றல், என் அன்பு - இவை இரண்டும் என்றும் உன்னோடு நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே! என்னை ஏற்றுக்கொள். நீ கேட்ட உடனேயே நான் அரும் அடையாளத்தைச் செய்யவில்லையே என கவலைப்படாதே! இன்றைய இரண்டாம் வாசகம் சுட்டிக்காட்டும் திருத்தூதர் யாக்கோபைப் போல இரு. இறைவாக்கினர்களைப் போல, யோபுவைப்போல பொறுமையாக இரு! உன்னுடைய எதிர்நோக்கும், நம்பிக்கையும், அன்பும் ஒருபோதும் வீண்போகாது.

மேலும் அறிவோம் :


நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்  (குறள் : 154).


பொருள் : நாம் சான்றாண்மை மிக்கவராக விளங்க விரும்பினால் என்றும் பொறுமை மிக்கவராக வாழ்தல் வேண்டும். அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை ஆகிய பண்புக் கூறுகள் சால்புக்கு இன்றியமையாத தூண்கள். அச்சால்புக்கு மணிமகுடமாக மிளிர்வது பொறுமை ஆகும்.

ser ser

ஒரு குருமடத்தில் மின்சாரம் பழுதடைந்துவிட்டது. அதைப் பழுதுபார்க்கும்படி குருமட அதிபர் மின் ஊழியர் ஒருவரைப் பலமுறைத் தொலைபேசி மூலம் அழைத்தும் அவர் வரவில்லை . அந்த மின் பாழியர் பிரிவினைச் சபையைச் சார்ந்த ஒரு விவிலியப் பிரியர். குருமட அதிபர் ஒரு காகிதத் துண்டில், மத் 11-ஆம் அதிகாரம் 3-ஆம் வசனத்தை வாசிக்கவும் என்று எழுதி அவரிடம் அனுப்பினார். உடனடியாக அந்த மின் ஊழியர் வந்துவிட்டார். மத் 11-ஆம் அதிகாரம் 3-ஆம் வசனம்: *வரவிருப்பவர் நீர்தாமோ? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?" (இன்றைய நற்செய்தி வாசகம்).

மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயாரிக்கக் கடவுள் திருமுழுக்கு யோவானை அனுப்பினார். "இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் உமது வழியை ஆயத்தம் செய்வார்" (மலா 3:1) என்று இறைவாக்கினர் மலாக்கி முன்னறிவித்திருந்தவர் தான் திருமுழுக்கு யோவான்.

விவிலியம் ஒரு பக்கம் கடவுளுடைய நீதியையும் மறுபக்கம் கடவுளுடைய இரக்கத்தையும் காட்டுகிறது. திருமுழுக்கு யோவான் கடவுளுடைய நீதியை மையப்படுத்தி மெசியாவை மக்களுக்கு அறிவித்தார். மெசியா தமது ஒருகையில் கோடரியையும் மறுகையில் சுளகையும் வைத்திருக்கிறார், நற்கனி கொடாத மரங்களை வெட்டித் தள்ளுவார்; பதர்களைப் புடைத்து தீயில் சுட்டெரிப்பார் (மத் 3:10,12) என்று கூறி மக்களை அச்சுறுத்தினார்.

ஆனால் மெசியாவோ அவர் கூறியதற்கு நேர்மாறாக நடந்துகொண்டார். மெசியா பாவிகளை வரவேற்றார்; வரி தண்டுவர்களுடன் உணவு அருந்திணர். "பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்; நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" (மத் 9:13) என்று கிறிஸ்து கூறியதைக் கேட்டத் திருமுழுக்கு யோவான் அதிர்ச்சி அடைந்தார்; கிறிஸ்துவைப் பற்றி அவருக்கு ஐயப்பாடு எழுந்தது. எனவேதான் அவர் தமது சீடர்களைக் கிறிஸ்துவிடம் அனுப்பி, அவர் தான் மெசியாவா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா? என்று கேட்டு வரும்படி சொன்னார்.

கிறிஸ்து திருமுழுக்கு யோவானின் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லவில்லை. மாறாக, அவரது செயல்களைக் கொண்டு அவர் மெசியாவா அல்லது இல்லையா என்பதைக் கணிக்கும்படி கேட்டுக் கொண்டார். இன்றைய முதல் வாசகத்தில் மெசியா என்ன என்ன செய்வார் என்று இறைவாக்கினர் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். மெசியாவின் காலத்தில் பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும்; அப்போது கால் ஊனமுற்றோர் மான்போல் துள்ளிக் குதிப்பர்; வாய் பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்" (எசா 35:5-6), மெசியா செய்ய வேண்டிய செயல்களை எல்லாம் கிறிஸ்து செய்ததால், அவரே மெசியா என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்.

ஒருமரம் நல்ல மரமா கெட்ட மரமா என்பதை அதன் கனிகளைக் கொண்டே கணிக்க வேண்டும் என்று கிறிஸ்துவே கூறியுள்ளார் (மத் 7:17-19), எனவே ஒருவரின் செயல்களைக் கொண்டே நாம் ஒருவரை எடை போட வேண்டும். தம்மை நம்ப மறுத்த யூதர்களிடம் இயேசு கூறினார்: "மனிதர் தரும் சான்று எனக்குத் தேவையில்லை ... யோவான் பகாந்த சான்றைவிட மேலான சான்று எனக்கு உண்டு நான் செய்து முடிக்குமாறு தத்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று" (யோவா 5:36) எனவே, இயேசுவின் செயல்களே அவர் மெசியா என்பதற்குச் சான்று. இன்றைய உலகம் தம்மிடமிருந்து எதிர்பார்ப்பது சாட்சிய வாழ்வு, தாம் கிறிஸ்துவின் சீடர்கள் என்பதை நமது செயல்களால் எண்பிப்போம்!!
ஆப்பிரிக்காவுக்கு மறைபரப்பாளர் பலர் சென்று கிறிஸ்துவைப் பற்றிப் போதித்தும் ஒருவர்கூட மனம் மாறவில்லை. மறைபரப்பாளர்கள் போதிப்பதை நிறுத்திக்கொண்டு, அம்மக்களுக்குக் கல்விப்பணி, மருத்துவப் பணி, சமூகப் பணி செய்தனர். அதைப் பார்த்த மக்கள் தாங்களாகவே முன்வந்து திருமுழுக்குக் கேட்டனர்.

கால் பானமுள்ள ஒருவர் நடந்தபோது தடுமாறிக் கீழே விழுந்தார்; அவருடைய பையிலிருந்த பொருள்கள் நான்கு புறமும் சிதறி விட்டன. நடுத்தர வயதுடைய ஒருவர், அவரைத் தூக்கிவிட்டு, சிதறிக் கிடந்த பொருள்களைச் சேகரித்து அவரது பையில் போட்டு, அவரது கையில் 10 ரூபாய் வைத்தார். கால் ஊனமுற்றவர் அவரிடம், "நீங்கள் தான் இயேசுவா?" என்று கேட்டதற்கு அவர், "நான் இயேசு அல்ல; அவருடைய சீடர்” என்றார். "உங்கள் தற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்" (மத் 5:16). திருவருகைக் காலத்தில் நாம் கடவுளை தம் செயல்களால் பிரசன்னப் படுத்துவோம். "நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம் (1 யோவா 3:18).

இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து, "மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை, ஆயினும் விண்ண ரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே' (மத் 11:11) என்று கூறுகின்றார். காரணம் என்ன? திருமுழுக்கு யோவான், நாம் ஏற்கெனவே கூறியவாறு, கடவுளுடைய நீதியை மட்டும் பார்த்தார்; அவரின் இரக்கத்தைக் காணவில்லை. கடவுளது அன்பு, கிறிஸ்துவில் கல்வாரியில் சிலுவையில் அறையப்பட்ட அந்தக் காட்சியைக் காணும்பேறு அவருக்குக் கொடுத்து வைக்கவில்லை. மாறாக, தமக்கு அந்தப்பேறு கிடைத்துள்ளது. அக்கல்வாரித் திருப்பலியை நாள்தோறும் புதுப்பித்து, அதில் பங்குபெறும் நாம் உண்மையிலேயே திருமுழுக்கு யோவானைவிட பேறுபெற்றவர்கள்!

திருமுழுக்கு யோவானைப்போல, கிறிஸ்துவின் இரண்டாம் வருகை விரைவில் வரவேண்டும்; கடவுளின் பழிதீர்க்கும் நாளாக அது இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். இந்நிலையில் தூய யாக்கோபு இன்றைய இரண்டாவது வாசகத்தில் கூறுகிறார்; "ஆண்டவரின் வருகை வரை பொறுமையோடு இருங்கள். உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில் ஆண்டவரின் வருகை நெருங்கி வந்து விட்டது" (யாக் 5:7-8). ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஆண்டவரின் நான். அருள்வாக்கு. அருள் அடையாளங்கள் வாயிலாக அவர் வந்து கொண்டே இருக்கிறார்; நம்மைச் சந்திக்கிறார்; நம்முடன் சேர்ந்து நடக்கின்றார்; நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஆண்டவரைச் சந்திப்போம். ஆண்டவரே! எங்களை மீட்க வந்தருளும்" என்று மன்றாடுவோம்.

 

 

ser ser

அசலா போலியா?
அறிய உரைகல்


ஆண்டு - 1 மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள மதுரைக்கு வந்தார் இரயில்வே போக்குவரத்துத் துறை அமைச்சர் இலால்பகதூர் சாஸ்திரி, உரிய நேரத்துக்கு முன்னதாகவே இரயில் வந்து சேர்ந்ததால், அவரை வரவேற்க யாரும் நிலையத்தில் இல்லை! எனினும் கோபமோ கொந்தளிப்போ இல்லாமல் தனக்கே உரிய எளிமை, அமைதி, எதற்கும் எரிச்சல்படா மனமுதிர்ச்சி போன்ற பண்புகளோடு இரயிலை விட்டு இறங்கி, தனக்கு ஏற்பாடு செய்திருந்த தங்கும் அறை நோக்கி நடந்தார். அவர் யார் என்று அங்கிருந்த எவருக்கும் தெரியவில்லை .
அந்த அறையை அடைந்ததும் காவலாளி அவரைத் தடுத்தார். இது இரயில்வே அமைச்சருக்கு ஒதுக்கப்பட்ட அறை' என்று சொன்னார். 'நான்தான் அவர்' என்று பலமுறை வலியுறுத்தியும் பயனில்லை. அதற்குள் அமைச்சரை அழைத்தவர்கள் அலறி அடித்து ஓடிவந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டனர்.


அமைச்சர் என்றால் ஆடம்பரம், அதிகாரத் தோரணை, அதட்டல், அலட்டல் என்று பந்தா இல்லாமலா? - இப்படி ஓர் எண்ணத்தை, எதிர்பார்ப்பை வளர்த்துக் கொண்ட காரணத்தால் இலால் பகதூர் சாஸ்திரியை அமைச்சராக இனம் காணப் பலரால் முடியவில்லை.


அமைச்சர் என்ன, ஆண்டவர் இயேசுவே மனிதனாக மண்ணகம் வந்த போதும் இப்படித்தானே நடந்தது! காலங்காலமாகக் காத்திருந்தும், மெசியா வந்த போது எத்தனை பேர் அவரை இனம் கண்டு ஏற்றுக் கொண்டனர்?


இஸ்ரயேல் மக்கள் எதிர்பார்த்திருந்த மெசியாவைப் பற்றி எத்தனை கனவுகள் கண்டனர்! “பாலை நிலமாய், பாழ் வெளியாய், பொட்டல் தரையாய்க் கிடக்கும் தங்கள் அவல வாழ்வு மலராதா, மகிழ்ச்சியால் பூத்துக் குலுங்காதா” (எசா.35:1-2) என்ற ஏக்கம், “இதோ உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார். அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்” (எசா.35:4) என்ற எதிர்நோக்கோடு கலந்தது.


ஆனால்.... நாசரேத்திலிருந்து நல்லது வர முடியுமா? யாரும் அறியாத பெற்றோருக்கா அவர் பிள்ளையாகப் பிறப்பார்? பாமர மீனவர்களா அவருடைய சீடர்கள்?
கடவுளின் நீதியை மையப்படுத்தி ஒரு கையில் கோடரியும் மறுகையில் சுளகுமாக, கனிகொடாத மரங்களை வெட்டித்தள்ளி, பதர்களைத் தீயிட்டுக் கொளுத்தும் மெசியாவையன்றோ அறிவித்தார் திருமுழுக்கு யோவான்! கடவுளின் இரக்கத்தை மையப்படுத்தித் தாழ்ச்சியும் சாந்தமுயமாகப் பாவிகளைத் தேடிச் செல்லும் இயேசுவைக் கண்ட போது கொஞ்சம் தடுமாறிப் போனார். அதன் விளைவு தான் "வர இருப்பவர் நீர்தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர் பார்க்க வேண்டுமா?" (மத்.11:3) என்ற கேள்வி.


மெசியாவைப் பற்றிய மக்களின் கனவுகளை நிறைவேற்றாதது இயேசுவின் தப்பன்று; சரியான கனவுகளைக் காணாதது தான் அவர்களுடைய தப்பு. நாம் எதிர்பார்ப்பது போல கடவுள் நடக்க வேண்டும் என்று எண்ணுவது தவறு. நடந்ததைக் கொண்டு கடவுளின் தன்மையைக் கண்டுகொள்ள முயல வேண்டும். பொறுமையைக் கடைப்பிடித்தால் (யாக்.5:7,8) புரிந்து கொள்ளலாம்.


ஆக திருமுழுக்கு யோவான் ஒருவேளை நினைத்தது போல இயேசு தனது மெசியாவுக்குரிய ஆற்றல்களை வீணாக்கவில்லை. மாறாகத் தன் செயல்பாடுகளே மெசியாவுக்குரிய பணி என்று காட்டுகிறார். “நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள் (மத்.11:4). மெசியா பற்றி இறைவாக்கினர் எசாயா முன்னுரைத்ததும் இதுதானே! (எசா.611)


தங்கம் அசலா போலியா? தரம் பிரிக்க உரைகல் வேண்டும். ஒரு மனிதனுடைய தாத்தை அறிய உரைகல் அவனது செயல்களே. “பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்" (திருக்குறள். 505)


எருசலேமில் கோவில் அர்ப்பண விழாவில் யூதர்கள் இயேசவைக் சூழ்ந்து கொண்டு “இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்? நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லி விடும்” என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக "என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே எனக்குச் சான்றாக அமைகின்றன” (யோ.10:22-25), “என்னை நம்பாவிடினும் என்செயல்களையாவது நம்புங்கள்” (யோ.10:28) என்றார்.


இயேசுவின் அடிச்சுவட்டில், நமது செயல்களாலேயே நாம் இயேசுவின் சீடர்கள் என்பதை இவ்வுலகுக்கு, அடையாளப்படுத்த முடியும். (யோ.13:35)


நமது செயல்களைக் கொண்டே இறைவனை மகிமைப்படுத்த முடியும். (யோ .15:8, மத்.5:16)


அன்னை தெரசாவின் பணியை முதலில் எதிர்த்த கொல்கத்தா நகரத்துக் காளிகோயில் பூசாரி, இறுதியில் எலும்புருக்கி நோய்க்கு இலக்காகி கவனிப்பார் யாருமின்றி அன்னையின் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டு அவளின் அன்பு மடியில் மரிப்பதற்கு முன்னால் “நான் 30 ஆண்டுகள் காளி தேவதைக்குப் பணிபுரிந்தேன். அந்தத் தேவதை இதோ என் முன்னால் நிற்கிறாள்” என்று அன்னையின் பாதங்களைத் தொட்டு வணங்கி அழுதது வரலாறு,


நமது செயல்களால்தான் இவ்வுலகில் கடவுளைப் பிரசன்னப்படுத்த இயலும். இன்று இவ்வுலகில் கிறிஸ்துவைப் பிரசன்னப் படுத்துவதுதானே கிறிஸ்மஸ். அதுதானே நமது பணி.


திருச்சபை என்பது என்ன? கிறிஸ்துவின் இன்றையப் பிரசன்னமே திருச்சபை. எனவேதான் கிறிஸ்துவின் மறையுடல் என்கிறோம்.

ser ser

இயேசுவைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்வோர், பேறுபெற்றோர்


நிகழ்வு


          அது ஒரு சிற்றூர். அந்தச் சிற்றூரில் பெரியவர் ஒருவர் இருந்தார். அவருக்குக் கடவுள் நம்பிக்கையே கிடையாது. இத்தனைக்கும் அவர் ஒரு பாரம்பரியக் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தவர். இருந்தாலும் அவர் ஆன்மிகத்திலும் கடவுள் தொடர்பானவற்றிலும் ஈடுபாடும் நம்பிக்கையும் இல்லாமல் இருந்தது, ஊரில் இருந்த எல்லாருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது.

இதற்கு நடுவில் அந்தப் பெரியவரோடு நெருங்கிப் பழகி வந்த இளைஞன் ஒருவன் அவரிடம், “உங்களுக்குக் கடவுள்மீது நம்பிக்கை இல்லை என்று சொல்கிறீர்களே! எப்பொழுதாவது நீங்கள் திருவிவிலியத்தை வாசித்திருக்கிறீர்களா...?” என்றான். அவர் இல்லையென்று சொன்னதும், அவன் அவரிடம் ஒரு திருவிவிலியத்தைக் கொடுத்து, “இந்தத் திருவிவிலியத்திலுள்ள யோவான் நற்செய்தியை வாசியுங்கள். அப்படி நீங்கள் வாசிக்கும் உங்களுக்கு எந்த இறைவார்த்தையில் நம்பிக்கை இல்லையோ, அந்த இறைவார்த்தையைச் சிவப்பு நிறத்தால் குறித்து வையுங்கள். அதன்பிறகு நான் உங்களுக்கு அது குறித்து விளக்கம் தருகின்றேன்” என்றான். பெரியவரும் அதற்குச் சரியென்று ஒப்புக்கொண்டார்.

நாள்கள் மெல்ல நகர்ந்தன. இளைஞன் அந்தப் பெரியவருடைய வீட்டைக் கடந்து போகின்றபோதேல்லாம், “திருவிவிலியத்தை வாசிக்கின்றீர்களா...?” என்று கேட்பான். அவரும் வீட்டுக்குள் இருந்து  ‘ம்ம்ம்’ என்று சத்தம் கொடுப்பார். ஒருநாள் அந்த இளைஞன் பெரியவருடைய வீட்டைக் கடந்து போகும்போது, வழக்கமாகக் கேட்கும் கேள்வியைக் கேட்டான். பெரியவரிடமிருந்து சத்தம் எதுவும் வராததால், வீட்டுக்குள் போய்ப் பார்த்தான். அங்கோ பெரியவர் இறந்து கிடந்தார்; அவருக்குப் பக்கத்தில் திருவிவிலியம் திறந்த நிலையில் இருந்தது.

உடனே அவன் திருவிவிலியத்தைக் கையில் எடுத்து, யோவான் நற்செய்திப் பகுதிக்கு வந்து, அங்கு ஏதாவது சிவப்பு நிறத்தால் குறிக்கப்பட்டிருக்கின்றதா? என்று பார்த்தான். முதல் அதிகாரத்தில் எதுவும் இல்லை; இரண்டாம் அதிகாரத்திலும் எதுவும் இல்லை. மூன்றாம் அதிகாரத்தின் பதினாறாவது இறைவார்த்தைக்குக் கீழ், “நம்பினோர்க்கு நிலைவாழ்வு தரும் பேரன்புமிக்க இறைவா! உன்மீது நான் ஆழமான நம்பிக்கை வைக்கின்றேன்” என்ற சொற்கள் எழுதப்பட்டிருந்தன. இதைப் படித்துப்பார்த்த அவன் அப்படியே வியந்துநின்றான்.

இந்த நிகழ்வில் வருகின்ற கடவுள் நம்பிக்கையே இல்லாமல் இருந்த பெரியவர், இறுதியில் கடவுள்மீது நம்பிக்கை கொண்டதும், அவரை ஏற்றுக்கொண்டதும் நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. திருவருகைக்காலம் மூன்றும் ஞாயிற்றுக்கிழமை இறைவார்த்தையும் கடவுள்மீது ஆழமான நம்பிக்கை வைத்து வாழவேண்டும்; அவரைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற சிந்தனைக் தருகின்றது. அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

திருமுழுக்கு யோவான் இயேசுவை ஏற்றுக்கொள்ளத் தயங்கினாரா?
          நற்செய்தியில், திருமுழுக்கு யோவானின் சீடர்கள் இயேசுவிடம், “வரவிருப்பவர் நீர்தாமா? வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?” என்று தங்களுடைய தலைவர் கேட்கச் சொன்ன கேள்வியைக் கேட்கின்றார்கள். இயேசுவுக்குத் திருமுழுக்குக் கொடுத்தவர்; அவரைத் தன்னுடைய சீடர்களிடம், ‘இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி’ என்று சுட்டிக்காட்டியவர் (யோவா 1:29) இந்தத் திருமுழுக்கு யோவான். அப்படிப்பட்டவர் தன் சீடர்கள் மூலம் மேலே உள்ளே கேள்வியைக் கேட்பது நமக்குச் சற்று வியப்பாக இருக்கின்றது. அவரை எது இப்படிக் கேட்க வைத்தது என்பதைக் குறித்துத் தெரிந்துகொள்வது நல்லது.

யோவான் இந்தக் கேள்வித் தன் சீடர்கள் மூலம் கேட்ட சமயத்தில், அவர் சிறையில் இருந்தார். ஒருவேளை அவர் ‘இறைப்பணியைச் செய்யும் தன்னை மெசியாவாகிய இயேசு விடுவிப்பார்’ என்று நினைத்து, அது நடக்காததால் இயேசு மெசியா இல்லையோ என்று எண்ணியிருக்கக்கூடும். மேலும் இயேசு பெரும்பாலும் பாவிகளோடு இருந்து, அவர்கள் நடுவில் பணிசெய்து வந்ததால், அவர் மெசியா இல்லைபோலும் என்று நினைத்திருக்கக்கூடும். அதனால்தான் அவர் தன்னுடைய நம்பிக்கையில் சிறிது தளர்ந்து, ‘வரவிருப்பவர் நீர்தாமா...? வேறொருவரை எதிர்பார்க்கவேண்டுமா...?’ என்ற கேள்வியைத் தன்னுடைய சீடர்கள் மூலம் இயேசுவிடம் கேட்கின்றார்.

திருமுழுக்கு யோவானின் சீடர்களுக்குக் கூட, இயேசு உண்மையில் மெசியாதானா? என்ற ஐயம் இருந்தது; இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் திருமுழுக்கு யோவானைப் போன்று தன்னுடைய சீடர்களை நோன்பு இருக்கச் சொல்லவில்லை. இப்படியொரு நிலையில் இயேசு திருமுழுக்கு யோவான் கேட்ட கேள்விக்கு என்ன பதிலளித்தார் என்பதையும், அதன் பொருள் என்ன என்பதையும் சிந்தித்துப் பார்ப்போம்.

தான் மெசியா என்பதை வார்த்தையாலும் வாழ்வாழ்வாலும் எடுத்துச் சொன்ன இயேசு

          திருமுழுக்கு யோவான் கேட்ட கேள்விக்கு இயேசு, “ஆமாம், நான்தான் வரவிருப்பவர்” என்று நேரடியாகப் பதில் சொல்லிக்கொண்டிருக்காமல், நீங்கள் கேட்பதையும் காண்பதையும் யோவானிடம் போய் அறிவியுங்கள் என்று கூறுகின்றார்.

இறைவாக்கினர் எசாயா நூலில் (எசா 26: 18-19, 42;7, 61:1), குறிப்பாக இன்றைய முதல் வாசகத்தில் (35: 5-6) மெசியாவின் வருகையின்போது, என்னென்ன நடக்கும் என்பன பற்றிச் சொல்லப்பட்டது. அவையெல்லாம் இயேசுவின் மூலம் நடந்தது. ஆமாம், இயேசு பார்வையற்றவர்களுக்குப் பார்வையளித்தார் (மத் 9: 27-31; கால் ஊனமுற்றவரை நடக்கச் செய்தார் (மத் 9: 1-8); தொழுநோயாளரைக் குணமாக்கினார் (மத் 8: 1-4); பேச இயலாதவரைப் பேச வைத்தார் (மத் 9: 32-33); இறந்தோரை உயிர்பெற்று எழச் செய்தார் (மத் 9: 18-19); ஏழைகளுக்கு நற்செய்தி அறிவித்தார் (லூக் 4:23). இவ்வாறு அவர் தன்னுடைய போதனையாலும் வாழ்வாலும், தானே வரவிருப்பவர் என்பதை உறுதிப்படுத்தினார். இதைத் தான் இயேசு தன்னிடம் வந்த திருமுழுக்கு யோவானின் சீடர்களிடம், எடுத்துக்கூறி, திருமுழுக்கு யோவானிடம் சொல்லச் சொல்கின்றார். அவர் அவர்களிடம் இன்னொரு முக்கிய செய்தியையும் சொல்கின்றார். அது குறித்துத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

நீங்கள் பேறுபெற்றோராக வேண்டுமா?

          இயேசு, தன்னிடம் வந்த திருமுழுக்கு யோவானின் சீடர்களிடம் இறுதியாக, “என்னைத் தயக்கிமின்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர்” என்று கூறுகின்றார். இதன்மூலம் இயேசு அவர்களிடம், என்னை, என்னுடைய வெளியடையாளங்கள், பழகுகின்ற மக்கள், பின்புலம் இவற்றைக் கொண்டு மதிப்பிடாமல் போதனையையும் செயல்களையும் பார்த்து தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுகின்றார்.


சிறையில் அடைபட்டிருந்த திருமுழுக்கு யோவானுக்கு ஏற்பட்ட ‘இயேசுதான் வருவிருப்பவரா?’ என்ற ஐயம், பலருக்கும் ஏன், நமக்கும் நாம் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றபோதும் அல்லது துன்பங்களைச் சந்திக்கின்றபோதும் ஏற்படலாம். இதைவிடவும் இறைவனுடைய இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் சூழ்நிலை நமக்கு  ஏற்படலாம். ஆனால், எவர் ஒருவர் இயேசுவைத் தயக்கமின்றி, எந்தவொரு ஐயமின்றி ஏற்றுக்கொள்கின்றாரோ, அவரே பேறுபெற்றவர் ஆவார். ஆகையால், நாம் இயேசுவைத் தயக்கமின்றி ஏற்றுக்கொண்டு, அவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்து பேறுபெற்றோர் ஆகப்போகிறோமா? அல்லது இயேசுவை ஏற்றுக்கொள்ளாமலும் அவர்மீது நம்பிக்கை கொள்ளாமலும் இருந்து, அவர் தரும் ஆசியை இழக்கப்போகிறோமா? சிந்திப்போம்.

சிந்தனை

          ‘இயேசுவே ஆண்டவர் என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்பு பெறுவீர்கள்’ (உரோ 10:9). என்பார் புனித பவுல். ஆகையால், நாம் இயேசுவே ஆண்டவர், இயேசுவே மெசியா என்று அவரைத் தயக்கமின்றி ஏற்றுக்கொண்டு, அவர்மீது நம்பிக்கை வைத்து, அதற்கேற்றாற்போல் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.  

ser ser

என்றுமுள மகிழ்ச்சி

திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றை 'கௌதேத்தே தொமெனிக்கே' ('மகிழ்ச்சி ஞாயிறு') என அழைக்கின்றோம். இன்றைய திருப்பலியின் வருகைப் பல்லவியும், முதல் வாசகமும் 'மகிழ்ச்சி' என்ற வார்த்தையால் தொடங்குகின்றன.

மகிழ்ச்சியின் வரையறை என்ன? அழும் குழந்தைக்கு தாய் ஊட்டும் பால் மகிழ்ச்சி தருகிறது. மருத்துவமனையில் குணமாக்க முடியாத நோயினால் மிகவும் துன்புறும் ஒருவருக்கு இறப்பு மகிழ்ச்சி தருவதாகத் தெரிகிறது. மகிழ்ச்சி என்ற உணர்வின் வரையறை தனிநபர் சார்ந்தது. தனிநபர் சார்ந்தது என்றாலும், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நான் மகிழ்ச்சியாகக் கருதும் ஒன்று மற்றொரு நேரத்தில் எனக்கு சுமையாக மாறிவிடுகிறது. அழுகின்ற குழந்தைக்கு பால் மகிழ்ச்சி தரும். ஆனால், வயிறு நிரம்பிவிட்டாலும் பால் பாட்டிலை நீட்டினால் அது வெளியே துப்பி விடுகிறது.

'சிரிப்பு,' 'இன்பம்,' 'சந்தோஷம்,' 'நிறைவு,' 'உடல்நலம்' என நாம் பல வார்த்தைகளைச் சொன்னாலும், எந்த வார்த்தையும் மகிழ்ச்சி என்ற உணர்வை முழுமையாகப் பிரதிபலிப்பதில்லை. மகிழ்ச்சி என்பது ஒரு 'ரெலடிவ்'  (தனிநபர்சார் உணர்வு) எமோஷன் என்பதில் ஐயமில்லை. அதாவது, அது தனிநபர் சார்ந்தது. எல்லாருக்கும் பொதுவான மகிழ்ச்சி என்று ஒன்றை வரையறுக்க முடியாது என்றே நினைக்கிறேன். பசியாக இருக்கும் எனக்கு ஒரு சாப்பாட்டுப் பொட்டலம் கிடைத்தால் மகிழ்ச்சி கிடைக்கிறது. ஆனால், அது சாப்பாட்டுப் பொட்டலம் பசியில்லாத ஒருவருக்கு, அல்லது நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒருவருக்கு சுமையாகத் தெரிகிறது. ஒரே பொட்டலம்தான். ஆனால், அது ஒரே மாதிரியான மகிழ்ச்சி உணர்வை எல்லாருக்கும் தருவதில்லை.

மகிழ்ச்சி உள்ளிருந்து வருகிறதா? அல்லது வெளியிலிருந்து வருகிறதா? 'உள்ளிருந்து வருகிறது' என்றால், சில நேரங்களில் நம் மனம் எந்தக் காரணமும் இல்லாமல் சோர்ந்திருக்கக் காரணம் என்ன? 'வெளியிலிருந்து வருகிறது' என்றால், மகிழ்ச்சி நிபந்தனைக்குட்பட்டதாகிவிடுமே! மேலும், என் மகிழ்ச்சி சார்புநிலையின் வெளிப்பாடாக அமைந்துவிடுமே! அடுத்தவர் இல்லை என்றால் எனக்கு மகிழ்ச்சி இல்லை என்றாகிவிடுமே!

மகிழ்ச்சி அல்லது உற்சாகம் என்பதைக் குறிக்கும் ஆங்கில வார்த்தை 'என்தூயிஸ்ஸம்'. இதன் கிரேக்க மூலம் இரண்டு வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டது - 'என்,' 'தெயோஸ்' - அதாவது, 'கடவுளுக்குள் இருப்பது'. கடவுளுக்குள் இருப்பதுதான் உற்சாகம் அல்லது மகிழ்ச்சி என்றால், கடவுள் நம்பிக்கை கொள்ளாதவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதில்லையா?

மகிழ்ச்சியை வரையறை செய்வதில் இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் மகிழ்ச்சி என்பது நாம் அனைவரும் அன்றாடம் அனுபவிக்கின்ற ஓர் உன்னத உணர்வு. நாம் உண்பது, உறங்குவது, படிப்பது, பயணம் செய்வது, பணி செய்வது, உறவாடுவது என எல்லாவற்றின் இலக்கு ஒன்றே ஒன்றுதான்: 'மகிழ்ச்சியாக இருப்பதற்கு!' யாரும் துன்பப்பட விரும்புவதில்லை. துன்புறவேண்டும் என்பதற்காக எதையும் செய்வதில்லை. அலெக்ஸாண்டர் தெ கிரேட் உலகையே தன் கைக்குள் அடக்கிவிடத் துணிந்ததும் மகிழ்ச்சிக்காகவே! புத்தர் அரண்மனையை விட்டு வெளியேறி போதி மரத்தடியில் அமர்ந்ததும் மகிழ்ச்சிக்காகவே! இவர்களின் மகிழ்ச்சியில் ஒன்று உயர்ந்தது மற்றொன்று தாழ்ந்தது என்று சொல்லிவிட முடியாது.

இன்றைய முதல் வாசகத்தின் இறுதியில் (எசா 35:10), 'என்றுமுள மகிழ்ச்சி' என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல்லாடலையும் இது தருகின்ற வாழ்க்கைப் பாடங்களையும் இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

அது என்ன என்றுமுள மகிழ்ச்சி?

இன்றைய முதல் வாசகத்தில் மகிழ்ச்சி என்ற வார்த்தையைக் குறிக்க இரண்டு எபிரேயச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன: ஒன்று, 'சாசோன்' - இது மேலோட்டமான மகிழ்ச்சி. எடுத்துக்காட்டாக, நல்ல உணவு உண்டவுடன், நல்ல திரைப்படம் பார்க்கும்போது, நமக்குப் பிடித்த பாடல் கேட்கும்போது ஏற்படுகின்ற மகிழ்ச்சி. இரண்டு, 'ஸிம்ஹா' - இது கொஞ்சம் ஆழமான மகிழ்ச்சி. நம்முடைய நீண்ட நாள் கனவு நிறைவேறும்போது. நம் வீட்டில் ஒரு குழந்தை பிறக்கும்போது. நாம் படிப்பு அல்லது வேலையில் வெற்றிபெறும்போது. நமக்குப் பிடித்த நண்பருடன் உரையாடும்போது. நம் வாழ்வில் ஏதாவது சாதிக்கும்போது. அல்லது இறைவனின் பிரசன்னத்தில். இப்படியாக கொஞ்சம் ஆழமான உணர்வு.
'என்றுமுள மகிழ்ச்சி' என்பதை 'ஸிம்ஹா ஓலாம்' என்று சொல்கிறது எபிரேய விவிலியம். 'ஓலாம்' என்பது கடவுளுடைய இருப்பிற்கு, நித்தியத்திற்கு, நிலையான தன்மைக்குப் பயன்படுத்தப்படும் சொல்லாடல்.

'என்றுமுள மகிழ்ச்சியை' நாம் எப்படி கண்டுகொள்வது?

இன்றைய முதல் வாசகத்தின் (காண். எசா 35:1-6,10) பின்புலம் மிகவும் சோகமானது. கிமு 7ஆம் நூற்றாண்டின் இறுதியில் இஸ்ரயேலும் எருசலேமும் அசீரியாவால் மிகுந்த அச்சுறுத்தலுக்கு ஆளாகின. மக்கள் அடிமைப்படுத்தப்பட்டார்கள். கோயில் தீட்டாக்கப்பட்டது. 'எல்லாம் முடிந்தது' என்று நினைத்த மக்களுக்கு, 'முடியவில்லை, விடிகிறது' என்று இறைவாக்குரைக்கின்றார் எசாயா. முதலில், ஒட்டுமொத்த படைப்பும் புத்துணர்ச்சி பெறுகிறது - 'பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழ்கிறது,' 'பொட்டல்நிலம் அக்களிக்கிறது,' 'லீலிபோல் பூத்துக்குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படைகிறது' - படைத்தவரின் அரவணைப்பை படைப்பு பெற்றுக்கொள்கிறது. தொடர்ந்து, 'அஞ்சாதீர்கள்' என்று செய்தி அனைத்து மக்களுக்கும் வழங்கப்படுகிறது. மூன்றாவதாக, நான்கு வகை நோய்களிலிருந்து மக்கள் விடுபடுகிறார்கள் - கண்பார்வையற்ற நிலை, காதுகேளாத நிலை, கால்கள் முடமான நிலை, மற்றும் பேச்சற்ற நிலை. அக்காலத்தில் இந்நோய்களுக்குக் காரணம் ஒருவர் செய்த பாவம் என்று கருதப்பட்டது. ஆனால், அவர்களை நோய்களிலிருந்து விடுவிப்பதன் வழியாக கடவுள் அவர்களின் பாவங்களை எல்லாம் மன்னிக்கிறவராக முன்வைக்கப்படுகிறார்.

ஆக, ஆண்டவரின் வருகையால் அல்லது குறுக்கீட்டால்தான் ஒருவர் என்றுமுள மகிழ்வைப் பெற முடியும்.

இன்றைய இரண்;டாம் வாசகம் (காண். யாக் 5:7-10) யாக்கோபின் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. யாக்கோபின் திருச்சபையினர் எதிர்பார்த்த இரண்டாம் வருகை தள்ளிப்போனதால், மக்கள் சோர்ந்துபோனதோடு, ஒருவரோடு ஒருவர் சண்டையிடவும் தொடங்கினர். ஒருவர் மற்றவரைப் பற்றி முணுமுணுத்தனர், குறைகூறினர். இவர்களுக்கு அறிவுறுத்துகின்ற யாக்கோபு, 'பயிரிடுபவரைப் போல பொறுமையாகவும்,' 'ஒருவர் மற்றவரிடம் முறையீடு இன்றியும்' இருக்குமாறு அறிவுறுத்துகின்றார். மேலும், 'துன்பத்தைத் தாங்குவதிலும், பொறுமையைக் கடைப்பதிலும் ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை - மோசேயை - மாதிரியாகக் கொள்ள' அழைக்கின்றார்.

இரண்டாம் வாசகத்தைப் பொறுத்தவரையில், என்றுமுள மகிழ்ச்சியை ஒருவர் பெற நீடித்த பொறுமை கொண்டிருக்க வேண்டும். மேலும், அவர் எதைக் குறித்தும் முறையீடு செய்யாதவராக இருத்தல் வேண்டும்.

நற்செய்தி வாசகம் (காண். மத் 11:2-11) இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது: முதல் பகுதியில், 'வரவிருப்பவர் நீர்தாமோ?' என்று இயேசுவிடம் கேட்குமாறு தம் சீடர்களை அனுப்புகிறார் திருமுழுக்கு யோவான். இரண்டாம் பகுதியில், திருமுழுக்கு யோவானுக்குப் புகழாரம் சூட்டுகிறார் இயேசு. இயேசுவின் சமகாலத்தில் மெசியா பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. மெசியா என்றால் அரசராக அல்லது அருள்பணியாளராக வந்து தங்களை எதிரிகளின் கைகளிலிருந்து விடுவிப்பார் என்று நம்பினர் மக்கள். இந்த நம்பிக்கை யோவானுக்கும் இருந்தது. ஆனால், இயேசு அப்படி எந்த ஒரு முயற்சியையும் எடுக்காமல் இருப்பதைப் பார்த்து, சற்றே ஏமாற்றத்துடன் சீடர்களை அனுப்புகிறார் யோவான். இயேசுவின் மெசியா புரிதல் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. இயேசுவைப் பொறுத்தவரையில் தனிநபர் மாற்றமே மெசியாவின் வருகை. ஆகையால்தான், 'பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர், கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர், தொழுநோயாளர் நலமடைகின்றனர், காதுகேளாதோர் கேட்கின்றனர், இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர், ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது' என்று மெசியாவின் வருகையின் மாற்று அடையாளங்களைச் சொல்லி அனுப்புகின்றார். அத்தோடு, 'என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர்' என்கிறார்.

நற்செய்தி வாசகத்தைப் பொறுத்தவரையில், 'எதிர்பார்ப்பு இல்லாத ஒருவர்,' 'இருப்பதை அப்படியே தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவர்' என்றுமுள மகிழ்வைப் பெற்றுக்கொள்வார்.

இவ்வாறாக, 'ஆண்டவரின் குறுக்கீட்டால்,' 'உள்ளத்துப் பொறுமையால்,' 'எதிர்பார்ப்பை அகற்றுவதால்' நாம் என்றுமுள மகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்ளலாம் என்று நமக்கு அறிவுறுத்துகின்றன இன்றைய வாசகங்கள்.

இவற்றை நாம் எப்படி வாழ்வாக்குவது?

1. ஆண்டவரின் குறுக்கீடு

'முடிந்தது' என்று நாம் நினைக்கும் ஒன்றை 'விடிந்தது' என்று ஆக்குகிறார் ஆண்டவர். மருத்துவர்கள் கைவிட்டு நலம்பெற்றவர்களின் அனுபவங்களைக் கேட்டிருக்கிறோம். நம்முடைய மனித வரையறை அனுபவத்தை நாம் தொட்டு, வாழ்வில் ஒன்றும் நடக்காது என்று நினைத்தபோது நடந்த அதிசயங்கள் ஏராளம். ஆண்டவரின் குறுக்கீடு நம்முடைய பாலைநில அனுபவத்தை பூத்துக்குலுங்கும் அனுபவமாக மாற்றுவதோடு, நம்முடைய குற்றங்களை எல்லாம் அவர் மன்னித்துவிடுகிறார். ஆண்டவரின் குறுக்கீட்டுக்கு நாம் தடையாக வைத்திருப்பவை இரண்டு: ஒன்று, பயம். இரண்டு, குற்றவுணர்வு. இந்த இரண்டையும் இறைவன் அகற்றிவிடுகிறார்.

2. பொறுமையும் முறையீடின்மையும்

இரண்டு நிமிட காணொளிகளைக் கூட, 'ஃபாஸ்ட் ஃபார்வர்ட்' செய்து பார்க்கும் அளவிற்குப் பொறுமையிழந்துகொண்டிருக்கிறோம் நாம். மேலும், அன்றாடம் நாம் எழுப்புகின்ற முறையீடுகள் கூடிக்கொண்டே போகின்றன. பொறுமையும் முறையீடும் இணைந்தே செல்பவை. பொறுமையிழக்கின்ற ஒருவர்தான் அதிகம் முறையீடு அல்லது புகார் செய்வார் அல்லது முணுமுணுப்பார். நாம் இன்று பல நேரங்களில் எல்லாவற்றையும் பற்றி முறையீடு செய்கிறோம். இம்முறையீடுகளால் நம் மகிழ்ச்சி பறிபோகின்றன. இதற்கு மாற்றாக, எல்லாவற்றையும் நேர்முகமாக அணுகும் முறை பெறுதல் அவசியம். பொறுமையுடையவர்கள் எதையும் நேர்முகமாகப் பார்ப்பார்கள். நம்மில் சிலர் நரகத்தையும் மோட்சமாகக் கண்டு வாழ்த்துவார்கள். இன்னும் சிலரோ, மோட்சத்திலும் குறைகள் கண்டுபிடித்து முறையீடு செய்வார்கள். முறையீடு நம் மகிழ்ச்சியைக் குலைப்பதோடு மற்றவரின் மகிழ்ச்சியையும் குலைத்துவிடும்.

3. எதிர்பார்ப்புக்களை குறைத்தல் அல்லது மாற்றிக்கொள்தல்

திருமுழுக்கு யோவான் மெசியா பற்றிய தன்னுடைய எதிர்பார்ப்புக்களை மாற்றிக்கொள்கின்றார். மேலும், இயேசுவை இருப்பதுபோல தயக்கமின்றி ஏற்றுக்கொள்கின்றார். இன்று நாம் நம்முடைய வாழ்க்கை பற்றி, நம்முடைய உறவினர்கள், நண்பர்கள் பற்றி நிறைய எதிர்பார்ப்புக்களை வைத்திருக்கின்றோம். எதிர்பார்ப்புக்கள் கூடினால் அடுத்தவரை ஏற்றுக்கொள்வது குறையும். 'தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்தலே' பேறுபெற்ற நிலை, மகிழ்ச்சி நிலை. வாழ்வு எப்போதும் நமக்கு நீதியாக இருப்பதில்லை. நாம் விரும்புவது எல்லாம் கிடைப்பதில்லை. நாம் ஓட்டப்பந்தயத்தில் முதலில் ஓடினாலும் பரிசு கிடைப்பதில்லை. வாழ்க்கையின் வரையறைகள் நிமிடத்திற்கு நிமிடம், நபருக்கு நபர் மாறுபவை. ஒரு வரையறையை மற்றொன்றுக்குப் பொருத்தினால் ஏமாற்றமே மிஞ்சும்.

இறுதியாக,

என்றுமுள மகிழ்ச்சி மூன்று நிலைகளில் வருகிறது:

ஒன்று, எனக்கும் இறைவனுக்கும் உள்ள உறவிலிருந்து - அவருடைய குறுக்கீட்டால்!

இரண்டு, எனக்கும் மற்றவருக்கும் உள்ள உறவிலிருந்து - நான் பொறுமையாகவும், முறையீடின்றியும் இருக்கும்போது!

மூன்று, எனக்கும் எனக்கும் உள்ள உறவிலிருந்து - நான் என்னுடைய எதிர்பார்ப்புக்களைக் குறைத்து, வாழ்வை அப்படியே ஏற்றுக்கொள்ளும்போது!

இம்மூன்று நிலைகளில் மகிழ்ச்சி பொங்கிவர, நாமும் திருப்பாடல் ஆசிரியர்போல, 'சீயோனே! உன் கடவுள் என்றென்றும் எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்கின்றார்' (146:10) என்று பாட முடியும்.

என்றுமுள இறைவனே என்றுமுள மகிழ்ச்சியை அளிப்பார்!

 

ser

sunday homily


முகப்பு பக்கம்
வத்திக்கான் வானொலி
கத்தோலிக்க இதழ்கள்
ஞாயிறு வாசகம்
விருந்தினர் பக்கம்
உம் வாக்கே விளக்கு!
சென்னை பங்குதலங்கள்
நூலகம்
திருத்தலச் சுற்றுலா
தவக்கால சிந்தனைகள்
ஒலியும் ஒளியும்
அன்னை தெரேசா
கிறிஸ்மஸ் மலர்கள்
பொங்கல்
செபமாலை
பாடல்கள்
செபமே ஜெயம்A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com