மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு
முதலாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 11: 1-10 | உரோமையர் 15: 4-9 | மத்தேயு 3: 1-12

ser

அறிவியல், சமூகம், கல்வித் துறைகளில் மிகப் பெரும் முன்னேற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் கண்கூடாக நாம் பார்க்கிறோம். ஆனால் இந்த முன்னேற்றங்கள் எல்லாம் மனதர்களிடையே உறவுகளை வளர்த்தெடுத்து வளப்படுத்து வதற்குப் பதிலாகச் சீரழிக்கின்றன என்று சொன்னால் மிகையாகாது, பொறாமை, போட்டி மனப்பான்மையைப் பெற்றெடுக்கிறது. அண்ண ன் - தம்பி அடிதடி, தந்தை - மகன் தகராறு , மாமியார் - மருமகள் மோதல், கணவன் - மனைவி பிரச்சனை என்று எத்தனையோ சிக்கல்கள் குடும்பத்திலும் சரி, சமூகத்திலும் சரி புரையோடிக் கிடக்கின்றன.


ஒரு மனைவி தன் கணவனைப் பார்த்து, "நாம் திருமணம் முடித்து 25 ஆண்டுகள் நாளை நிறைவு பெறுகிறது. அதற்காக ஒரு ஆட்டை வெட்டி விருந்து செய்து உறவினர்களுக்குக் கொடுக்கலாமா?" என்று கேட்டாள். அதற்கோ கணவன், "என்றோ நடந்த தவறுக்குப் பரிகாரமாக இப்போது ஏன் ஒரு ஆட்டை அநியாயமாகக் கொல்ல வேண்டும்?" என்று பதில் சொன்னானாம். ஆம்! இந்த உறவு நிலைதான் இன்று குடும்பங்களில் காணும் காட்சி. ஆண்டவரின் வருகைக்காலம் நீதி, அமைதி, நேர்மை, ஒற்றுமை உருவாக்கப்பட வேண்டிய காலம்.


இத்தகைய உறவுச் சிக்கலை நீக்கி உறவு வாழ்வுக்கு உயிர்த்தெழ இன்றைய முதல் வாசகத்திலே எசாயா இறைவாக்கினர், வேறு வேறான இயல்புகளைக் கொண்ட மிருகங்களே இணைந்து வாழ்வதாக இயம்புகிறார். சிங்கக் குட்டியும் கொழுத்தக் காளையும் கூடி வாழும்; பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும்; பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும் (எசா. 11:6-7). அதேபோல் பல்வேறு இயல்புகளைக் கொண்ட நாம் ஒன்றிணைந்து ஒரே குடும்பமாக வாழ வேண்டும் என்பதே எசாயாவின் எதிர்பார்ப்பும், கனவும் ஆகும். ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லாத சமூகமாக நம் சமூகம் மாற வேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பு. அமெரிக்க கருப்பர்களின் தந்தையாக இருந்த மார்ட்டின் லூத்தர் கிங் என்பவரின் கனவும் இத்தகையதே. வெள்ளையர்களும், கருப்பர்களும் சமத்துவப் பந்தியில் ஒரு நாள் அமர்வார்கள். ஒரு கருப்பர் வெள்ளை மாளிகையிலே ஆட்சி நாற்காலியிலே அமருவார் என்று கூறிய கனவும் நனவாயிற்றல்லவா!


இத்தகைய கனவு வாழ்வை நீங்கள் செயலாக்க, கிறிஸ்து இயேசு உங்களை ஏற்றுக் கொண்டது போல, நீங்களும் ஒருவர் ஒருவரை ஏற்றுக் கொள்ளுங்கள் (உரோ. 15:7) என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் அழைப்பு விடுக்கின்றார் பவுல் அடிகளார். நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு தீயில் போடப்படும் என்கிறார் திருமுழுக்கு யோவான் (மூன்றாம் வாசகம்). ஏனெனில் மரத்தின் அடிப்படை இயல்பே கனி தந்து பிறருக்கு உபயோகமாக இருப்பது. இது நடைபெறாதபோது அம்மரத்தினால் பயனில்லை. அதுபோல பிறருக்கு உதவி செய்து அவர்களோடு உறவு கொண்டு வாழ்வதுதான் மனித வாழ்வு. இது நடைபெறாதபோது மனிதர்களால் இந்தச் சமூதாயத்திற்கு எப்பயனும் இல்லை என்பதே திருமுழுக்கு யோவான் சுட்டிக்காட்டும் பாடம் ஆகும்.


ஒரு தந்தை தன் ஐந்து வயது மகனிடம் "உலக வரைபடத்தைத் தூள் தூளாகக் கிழித்துக் கசக்கிக் இதைச் சரியாகப் பொருத்தித் தந்தால் தகுந்த பரிசு தருவேன்" என்று கொடுத்தார். இந்தச் சிறுவன் ஐந்து நிமிடங்களில் வரைபடத்தைச் சரியாகப் பொருத்தி அப்பாவிடம் கொண்டு வந்தான். "எப்படி உன்னால் மிக வேகமாகப் பொருத்த முடிந்தது?" என்று கேட்டார் தந்தை . "இது மிக எளிது. ஏனெனில் பின்புறம் ஒரு மனிதனின் படம் இருந்தது. அந்த மனிதனின் உருவத்தைச் சரி செய்தவுடன் வரைபடம் தானாக அமைந்தது" என்றான் சிறுவன் மகிழ்ச்சியோடு . ஆம் அதேபோல் நீதியும், நேர்மையும், இணைப்பும் , ஒருமைப்பாடும், ஒற்றுமையும் உலகில் உருவாக்க நிறைவு செய்யப்பட வேண்டுமானால், மனிதனின் உருவத்தை ஒழுங்கு செய்ததுபோல, மனித சமுதாயம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.


இதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

  • நீங்கள் மனம் மாறுங்கள் (மத்32). நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள் (மத் 3:8) என்கிறார் திருமுழுக்கு யோவான்.
     
  • சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று மக்கள் கேட்டபோது நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களி லிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள் (திபா.2:38) என்றார் திருத்தூதர் பேதுரு.
     
  • மனமாற்றம் என்பது எதில் அடங்கும் ? கடந்து வந்த பாவ வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைப்பது. தடுமாறிச் சென்ற பாதையை விட்டு வீடு நோக்கி வருவது. ஆம்! பரிசேயர்கள், சதுசேயர்களைப் போல, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளாக, இராது, தாழ்ச்சியோடு நான் பாவி என்று முதலில் ஏற்றுக்கொண்டு கிறிஸ்துவின் மனநிலையைக் கொண்டவர்களாய் (பிலி.2:5) நமக்கு அடுத்திருப்பவர்களை கிறிஸ்து ஏற்றுக்கொள்வதுபோல நாம் ஏற்றாக வேண்டும். இதனால் நம்மிடையே எழுகின்ற கோபம், பொறாமை, கர்வம், ஆணவம் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
ser ser

அறிவுத் தெளிவு அடைவோம்

இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான், மனம் மாற நம்மை அழைக்கின்றார் (மத் 3:1-2). மனம் என்றால் என்ன? நம்மிடம் பதினைந்து புலன்கள் உள்ளன. இந்தப் புலன்களின் கூட்டுதான் உடல்.

நம்மிடம் ஐம்புலன்களாம் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை உள்ளன. நமது வீட்டை விட்டு வெகுதூரத்தில் இருந்து கொண்டு, நமது மனக்கண்ணால் நமது வீட்டைப்பார்க்கலாம். நமக்குள்ளே ஒரு கண் உண்டு. நேற்று யாரோ நம்மைப்பற்றிப் பேசியதை இன்று நாம் நமது அகக் காதால் கேட்கலாம். இவ்வாறு உள்வாங்கப்பட்ட ஐந்து வெளிப்புலன்கள் நமக்குள் உள்ளன. இவற்றைத் தவிர ஆசை, அறிவு, நினைவு, கற்பனை, உணர்வு என்ற ஐந்து உள்புலன்களும் நமக்குள் உள்ளன.


மனம் என்பது ஒரு காசு | அதற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒரு பக்கத்தின் பெயர் ஆசை, மற்றொரு பக்கத்தின் பெயர் அறிவு. பதினைந்து புலன்களில் ஆற்றல் மிக்கதும் சுதந்தரமாகச் செயல்படுவதும் ஆசை அறிவு தனக்குப் புலன்களால் கிடைக்கும் அனைத்துச் செய்திகளையும் ஆசைமுன் சமர்ப்பிக்கும். ஆசையின் ஆணைக்கிணங்க அறிவு செயல்படும். அறிவின் ஆணைக்கிணங்க மற்ற புலன்கள் செயல்படுகின்றன.


மனமாற்றம் என்பது தெளிவான எண்ணங்களால், கருத்துக்களால், செய்திகளால் நமது அறிவை நிரப்புவதில் அடங்கியுள்ளது. தெளிவான செய்திகளை ஆசையின் முன்னால் அறிவு சமர்ப்பிக்கும் போது, எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் ஆயா சரி என்று சொல்லும் ; நாம் சரியான வழியில் நடப்போம்.
அறிவுத்தெளிவு என்றால் என்ன? என்பதை நமக்குக் கற்பிக்க நம் முன்னே காணாமற்போன மகன் (லூக் 15:11-32) வந்து நிற்கின்றான்.

ஊதாரி மகனின் மனமாற்றம் அறிவுத் தெளிவோடு துவங்குகின்றது (லூக் 15:17). அவன் எவ்வாறு அறிவுத்தெளிவு அடைந்தான் என்பதை ஆராய்ந்து பார்த்தால், அவன் ஆன்மிக வாழ்வில், மூன்று படிகளில் ஏறிச்சென்றதை நாம் காண்கின்றோம்.

  1.  அவன் தந்தையோடு வாழ்ந்த நாள்களை எண்ணிப் பார்க்கின்றான். தன்னுடைய மதிப்பையும், மரியாதையையும் இழந்துவிட்டதை உணர்கின்றான். இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன் ; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன் (லூக் 15:19) என்கின்றான்.
  2. அவன் எழுந்து தந்தையிடம் செல்ல முடிவெடுக்கின்றான் (லூக் 15:18). பன்றிகளா? இல்லை பண்பாடு நிறைந்த தந்தையா? அவன் ஒரு முடிவு எடுத்தான் : என் தந்தையே எனக்கு வேண்டும். இந்த முடிவை எடுக்க அவனைத் தூண்டியவை எவை? ஒன்று மீண்டும் தந்தையின் அன்பைச் சுவைக்க வேண்டும் என்ற எண்ணம்; மற்றொன்று அவனுடைய தந்தை அவனை ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கை.
  3. தாறுமாறான வாழ்க்கையை (லூக் 15:13ஆ) ஊதாரி மகன் விட்டுவிட்டான். அறிவுத் தெளிவு என்னும் விளக்கை ஊதாரி மகன் தனக்குள் ஏற்றியபோது அவனுக்கு ஆன்மிக விடுதலை, மனமாற்றம் கிடைத்தது.


நாம் மனம் திரும்ப விரும்பினால் ஊதாரி மகன் போல நம்முடைய அறிவை தெளிவான எண்ணங்களால், கருத்துக்களால் அலங்கரித்துக்கொள்ள வேண்டும்.


இயேசு பிறப்புப் பெருவிழாவின் போது நாம் யாரைச் சந்திக்கப்போகின்றோம்? ஆண்டவரால் அருள்பொழிவு செய்யப்பட்டவரை, நீதியின் தேவனை, நேர்மையின் அண்ணலை, அமைதியின் அரசரைச் சந்திக்கப் போகின்றோம் (எசா 11:1-10) என்ற எண்ண விதையை நாம் நமது அறிவு என்னும் நிலத்திலே தூவ வேண்டும். அந்த விதை முளைக்கும்போது இயேசுவோடு வாழவேண்டும் என்ற ஆசை என்னும் நீரை ஊற்றி, என் பாவங்களை இயேசு மன்னித்துவிடுவார் என்ற நம்பிக்கை என்னும் உரமிட்டு, புதிய வாழ்வு என்னும் பந்தலிட்டு, அறிவு நிலத்திலே வளரும் மனமாற்றம் என்னும் செடியை நாம் வளர்க்க வேண்டும்.


மனமாற்றத்திற்குத் தேவையானவை இரண்டு : ஒன்று மனமாற்றம் அடைந்தே தீருவேன் என்ற மன உறுதி ; மற்றொன்று ஆன்மிக வாழ்வில் உயர, உயரப் பறப்பேன் என்ற ஊக்கம். இவையிரண்டையும் கடவுள் தருவார் என்கின்றார் புனித பவுலடிகளார் (இரண்டாம் வாசகம்).


ஒரு மலைமீது ஓர் அழகிய வீடு. அந்த வீட்டுக்குள்ளே ஒரு பணக்காரப்பெண். அவர் வயது முதிர்ந்தவர். அவர் வீட்டை விட்டு வெளியே வருவது கிடையாது. அவரைப் பார்க்க விடுமுறையின் போது அவரது பேத்தி வந்தாள். சுகமா? என்றாள். எல்லாம் சுகமே! கண் பார்வைதான் மங்கிப் போய்விட்டது. இப்பொழுதெல்லாம் இயற்கையின் அழகை என்னால் இரசிக்க முடியவில்லை என்றார். பேத்தி வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். சன்னலிலிருந்த கண்ணாடிகளில் படிந்திருந்த தூசியைத் துடைத்தாள். பாட்டி இப்போது பாருங்கள் என்றாள். பாட்டி இயற்கையை இரசித்து ஆனந்தக் கூத்தாடினார்.


நமது அறிவு என்னும் கண்ணாடியிலிருக்கும் பாவத்தை மனமாற்றம் என்னும் துணிகொண்டு துடைத்து எல்லாம் வல்ல இறைமகன் இயேசுவைக் கண்டு மகிழ்ச்சி நிறை கிறிஸ்துமஸ் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்வோம்.


மேலும் அறிவோம் :


அறத்தான் வருவதே இன்பற்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல  (குறள்: 39).


`பொருள்: அறச் செயல்களால் வருவது மட்டுமே உண்மையான இன்பம் ஆகும்; புகழையும் தரும். அதற்கு மாறான வழியில் வருபவை இன்பம் போலத் தோன்றினாலும் துன்பம் ஆகும்; புகழையும் கெடுக்கும்!

ser ser

ஒரு பெண் தமக்குப் புதுமை செய்யும் வல்லமை இருப்பதாகச் சொன்னார். மக்கள் கூட்டம் அவருடைய வீட்டில் அலை மோதியது. இதைக் கேள்விபட்ட ஆயர், அப்பெண்ணிடம் உண்மையிலேயே கடவுளின் வல்லமை செயல்படுகிறதா என்பதை அறிந்து வரும்படி ஒரு குருவை அனுப்பினார். அக்குரு சேறும் சகதியும் நிறைந்த ஒரு பாதை வழியாக அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்று, அப்பெண்ணிடம் சகதி படித்த தனது செருப்பையும் கால்களையும் கழுவச் சொன்னார். அதற்கு அப்பெண் மறுத்துவிட்டார். அந்த குரு ஆயரிடம் திரும்பி வந்து அப்பெண்ணிடம் கடவுளின் வல்லமை கடுகளவும் இல்லை; ஏனெனில் அவரிடம் தாழ்ச்சி இம்மி அளவும் இல்லை என்று கூறினார்.

எங்கு தாழ்ச்சி இல்லையோ அங்கு கடவுளின் செயல்பாட்டை எதிர்பார்க்க முடியாது. தலை சிறந்த போதகராகிய திருமுழுக்கு யோவான் தாழ்ச்சிக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு. அவர் ஆடம்பரத்தை அகற்றி, எளிய உடை உடுத்தி, எளிய உணவு உண்டு நகரத்தில் ஆரவாரத்தை வெறுத்து, பாலை நிலத்தில் தமது பணியைத் தொடங்கினார். அவர் இன்றைய நற்செய்தியில் தம்மைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்: "எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வல்லமை மிக்கவர், அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை " (மத் 3:11), ஒரு குருவின் காலணியைச் சுத்தம் செய்து கொடுக்க மறுத்தத் தலைக் கனம் கொண்ட பெண் தம்மிடம் கடவுளுடைய வல்லமையுள்ளது என்று பெருமிதம் கொள்கிறார். ஆனால் கடவுளுடைய வல்லமை கொண்ட பெரிய இறைவாக்கினர் திருமுழுக்கு யோவான் மெசியாவின் காலணியைத் தூக்கிச் செல்லக்கூடத் தமக்குத் தகுதியில்லை என்று கூறித் தம்மைத் தாழ்த்துகிறார்,

பொற்கொல்லர்கள் தங்கத்தின் தரத்தை அறிய உரைக் கல்லைப் பயன்டுத்துகின்றனர். ஆனால் ஒரு மனிதரின் தரத்தை அறிய அவரது செயல்களை உரைகல்லாகக் கொண்டு முடிவு செய்ய வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்,

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக்கல் (குறள் 505)

ஒருவர் கடவுளுக்கு நெருக்கமானவரா அல்லது தூரமானவரா என்பதை அறிய நாம் பயன்படுத்தும் உரைகல் அவரிடத்தில் தாழ்ச்சி இருக்கிறதா அல்லது இல்லையா என்பதுதான். ஏனெனில் புனித பேதுரு கூறுகிறார்: "செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார், தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்" (1 பேதுரு 5:5).

திருமுழுக்கு யோவான் யூதர்களை மனமாற்றத்திற்கு அழைத்தார் (மத் 3:1). ஆனால் அவர்களோ ஆணவம் பிடித்தவர்களாக, ஆபிரகாம் பிள்ளைகள் என்ற தலைக்கனம் கொண்டவர்களாக இருந்தனர். அவர்களிடம் திருமுழுக்கு யோவான் கூறினார்: "ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை என உங்களிடையே சொல்லிப் பெருமிதம் கொள்ள வேண்டாம்" (மத் 3:9) ஆபிரகாமைப்போல அவர்கள் தங்களது நம்பிக்கையைச் செயல்களில் காட்டவில்லையென்றால், அதாவது கிறிஸ்துவை மெசியாவாக ஏற்றுக் கொள்ளவில்லையென்றால், நற்கனி கொடாத மரங்களைப் போல் வெட்டப்பட்டு எரி நெருப்பில் சுட்டெரிக்கப்படுவர் என எச்சரித்தார் திருமுழுக்கு யோவான்,

கடவுளால் சிறப்பாகத் தேர்ந்துகொள்ளப்பட்ட கிறிஸ்தவர்களாகிய நம்மிடம் ஆணவம் தலைகாட்டக் கூடாது. நாம் மீட்கப்பட்டவர்கள் என்பது உண்மையாயின் அதை நமது தற்செயல்களில் மூலம் என்பிக்க வேண்டும். குறிப்பாக, தாழ்ச்சியின் மூலம் காட்ட வேண்டும், நம்மிடையே போட்டிப் பொறாமை, சண்டைச் சச்சரவு இருக்கக் கூடாது, "நீங்கள் அனைவரும் ஒருமனப்பட்டுக் கடவுளைப் புகழுங்கள்; ஒருவர் ஒருவரை ஏற்றுக்கொண்டு கடவுளைப் பெருமைப்படுத்துங்கள்" (உரோ 15:7) என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் அறிவுறுத்துகிறார் புனித பவுல்,

ஒரு பங்குத் தந்தை ஒருநாள் காலையில் பங்கு வளாகத்தில் ஒரு கழுதை செத்துக்கிடப்பதைக் கண்டு அதைப்பற்றி நகராட்சி அலுவலகத்துக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்தார், தொலைபேசியை எடுத்த நகராட்சி அலுவலர் பங்குத் தந்தைக்கு எரிச்சல் ஊட்டும் வகையில், "இறந்தவர்களை நல்லடக்கம் செய்வது பங்குக் குருவின் கடமை' என்றார். பங்குக் குரு மிகவும் பொறுமையுடன், "இறத்தவர்களை அடக்கம் செய்யுமுன் சொந்தக்காரர்களிடம் தெரிவிக்க வேண்டாமா? அதனால்தான் உங்களுக்குத் தெரிவித்தேன்" என்றார். நகராட்சி அலுவலர் பங்குத் தந்தையை முட்டாள் ஆக்க, பங்குத் தந்தை தான் நகராட்சி அலுவலருக்குச் சற்றும் இனைத்தவர் அல்ல என்பதைக் காட்டினார். இவ்வாறு ஒருவர் ஒருவரை முட்டாளாக்கும் இவ்வுலகில், "மனத் தாழ்மையுடன் மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவர்களாகக் கருதுங்கள்" என்று அழைப்பு விடுக்கிறார் புனித பவுல் (பிலி 2:3)

ஒருவர் இரவில் கூடக் கண்ணாடி போட்டுக் கொண்டு தூங்கினார். ஏன்? என்று அவரைக் கேட்டதற்கு அவர், "இரவில் நான் காணும் கனவு சரியாகத் தெரிவதில்லை " என்றார். நாம் பற்பல கனவுகள் காண்கின்றோம். ஆனால் கடவுளின் கனவு என்ன என்பதை இன்றைய முதல் வாசகத்தில் இறைவனே இறைவாக்கினர் எசாயா வாயிலாகக் கூறுகிறார்: "கடவுளின் ஆட்சியில் நீதியும் நேர்மையும் கோலோச்சும். .. செம்மறியும் சிங்கமும் ஒன்றாகப் படுத்துறங்கும், எவரும் மற்றவர்க்குத் தீமையோ கேடோ விளைவிக்கமாட்டார்கள்' (எசா 11:4-9). இன்றைய பதிலுரைப் பாடலும், அவர் காலத்தில் நீதி தழைத்தோங்கும், மிகுந்த சமாதானம் நிலவும்” (திபா 72:7) எனக் கூறுகிறது.

இறையாட்சியின் தனித்தன்மை நீதியும் சமாதானமும், நீதியின் கனிதான் சமாதானம், இன்று வல்லரசுகள் ஏழை நாடுகளைப் பற்றிக் கவலைப்படாமல் ஏழை நாடுகளைச் சுரண்டுகின்றனர். செல்வத்தைக் குவிக்கின்றனர். அணு ஆயுதங்களைப் பெருக்குகின்றனர். வளரும் நாடுகளிலும்கூட ஒருவர் செல்வச் செருக்குடன் வாழ, பலர் வறுமையில் வாடுகின்றனர். இன்றைய உலகின் இருபெரும் தீமைகள்: தனியாள் ஆணவமும் குழுக்களின் ஆணவமும் ஆகும். இந்தத் திருவருகைக்காலம் நம்மைத் தனியான் ஆணவத்திலிருந்து விடுவித்து நம்மிடம் தாழ்ச்சி என்ற பண்பை வேரூன்றச் செய்ய வேண்டும். அவ்வாறே குழுக்கள் தங்களுடைய குழு ஆணவத்திலிருந்து விடுதலை பெற்று, ஏழை எளியவர்களுடன் தங்கள் செல்வத்தையும் அதிகாரத்தையும் பகிர்ந்து கொள்ள முன்வர வேண்டும். ஏனெனில் கடவுள் "தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியவர்களையும் விடுவிப்பார்; வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்" (திபா 72:12-13).

ser ser

கனவொன்று காண்கிறேன்


அமெரிக்காவில் கருப்பின மக்களின் சம உரிமைக்காகப் போராடியவர் மார்ட்டின் லூத்தர் கிங். அவரது கனவும் இறைவாக்கினர் எசாயாவின் கனவு (11:6-9) போன்றதே! கருப்பின மக்கள் அடிமைகளாகக் கொடுமைக்கு ஆளாகிய சூழ்நிலையில் அவர் நிகழ்த்திய உலகப் புகழ்பெற்ற "கனவொன்று காண்கிறேன்” என்ற பேருரை அவரின் கனவை நம் கண்முன் நிறுத்துகிறது. “எல்லோரும் சமம் என்ற உண்மையை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்ற வாய்மொழி அறிக்கையை இந்நாடு உண்மையிலேயே தன் வாழ்வாக்கும் என்று கனவு காண்கிறேன். ஜியார்ஜியா எனப்படும் இடத்தில் உள்ள செம்மலைகளில் அடிமைகளின் மகன்களும் அவர்களது முதலாளிகளின் மகன்களும் சமத்துவப் பந்தியில் ஒருநாள் அமர்வார்கள் என்று கனவு காண்கிறேன். அளவற்ற அநீதியாலும், அதீத அடக்குமுறையாலும் கொதித்துக் கொண்டிருக்கும் மிசிசிபி மாநிலம் சுதந்திரமும் நீதியும் திகழும் சோலையாக மாறும் எனக் கனவு காண்கிறேன். பள்ளத்தாக்குகள் எல்லாம் உயர்த்தப்படும் என்றும் மலைகள் குன்றுகள் தாழ்த்தப்படும் என்றும் மேடுபள்ளங்கள் சமதளமாகவும் கோணலானவை நேராகவும் மாறும் என்றும் கடவுளின் மாட்சி எல்லா இடங்களிலும் நிரம்பி இருப்பதை அனைவரும் கண்டுணர்வர் என்றும் கனவு காண்கிறேன். ஒருநாள் நாங்கள் அனைவரும் சுதந்திரமானவர்களாக இருப்போம் என்ற நம்பிக்கையில்தான் ஒன்றாக உழைக்கிறோம். ஒன்றாகச் செபிக்கிறோம். ஒன்றாகப் போராடுகிறோம்".


இந்தக் கனவு இன்று அமெரிக்க அதிபர் ஒபாமாவில் அரியணை கண்டுள்ளது.


அதுபோல் அன்று பாலைவனத்தில் ஒரு குரல் - இறைவனின் எச்சரிக்கையாக: “மனம் மாறுங்கள். ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” (மத்.3:2)


மெசியாவின் அரசு சமத்துவம், சகோதரத்துவம், அன்பு, நீதி நிலவும் அரசு, அந்த அரசு தமிழ் இலக்கிய அரசாக எப்படியெல்லாம் நிழலாடுகிறது!


- மிதிலையில் விசுவாமித்திரர் இராமனது குலப்பெருமையைப் பற்றி “புலிப்போத்தும் புல்வாயும் ஒரு துறையில் நீருண்ண...'' என்பார். அதாவது புலியும் மானும் ஒரு துறையில் நீர் அருந்துமாம். நளனது செங்கோல் சிறப்பைப் பற்றிப் புகழேந்தி பாடுவார்... “மாதர் அருகூட்டும் பைங்கிளியும் ஆடற்பருந்தும் ஒரு கூட்டில் வாழ உலகு” பருந்தும் பைங்கிளியும் ஒரு கூட்டில் குடியிருக்குமாம்.


இறைவாக்கினர் எசாயா முன்னுரைத்ததும் இதுதானே! “அந்நாளில் ஓநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும். அக்குட்டியோடு சிறுத்தைப்புலி படுத்துக் கொள்ளும்.... பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும்... பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும்... என் திருமலை முழுவதிலும் தீமை செய்வார் எவருமில்லை ...'" (எசா.11:6-9)


படிக்கப்படிக்க நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தும் வரிகள்!
எவ்வளவு பரவசமோ அவ்வளவு சந்தேகமும் கூட.

இங்கு எழும் கேள்வி: எசாயா கூறிய காலம் வந்து விட்டதா, அல்லது....? மெசியா வந்துவிட்டாரே, இன்னும் அநீதி தலைவிரித்துத் தாண்டவமாடத் தானே செய்கிறது! 'மனிதனை மனிதன் சாப்பிடுறாண்டா, தம்பிப் பயலே' என்ற அந்தப் பழைய பாட்டு இன்றும் பொய்த்துப் போய்விட வில்லையே! மனிதன் மனிதனுக்கு ஓநாய்' என்ற இலத்தீன் பழமொழி இன்றும் உண்மை அல்லவா! புலி புலியைத் தின்னாது. ஓநாய் ஓநாயைக் கடிக்காது. மனிதனோ மனிதனைக் கடித்துக் குதறுகிறான்.


மீட்பர் வந்து விட்டார். உலகுக்கு மீட்பும் விடுதலையும் தந்து விட்டார். ஆனால் அந்த மீட்பை, விடுதலையை உலகம் இன்னும் தனதாக்கிக் கொள்ளவில்லை. அந்த மீட்பின் நிறைவு காலம் இனிமேல் தான் வர இருக்கிறது. “இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது” (உரோமை.8:19) வான்மழை கொட்டோ கொட்டு என்று கொட்டினாலும் திறந்த நிலையில் பாத்திரத்தை நீட்டினால் தானே நீர் நிரம்பும்! என்று வரும் அந்தக்காலம் என்ற ஏக்கம் நிறைவுற திருமுழுக்கு யோவான் மனந்திரும்புதலுக்கு அழைக்கிறார்.


உரோமை மாநகரில் குருக்களின் கூட்டத்தில் உரையாற்றிய திருத்தந்தை 2ஆம் அருள் சின்னப்பர் “இப்போது ஆண்டவர் இயேசு என்ன செய்து கொண்டிருக்கிறார்?” என்று கேட்டாராம். ஒவ்வொரு குருவும் ஒவ்வொரு விதமாய் பதில் அளித்தனராம். இறுதியாக திருத்தந்தை மத்.3:12ஐ மேற்கோள்காட்டி தனது சொந்தக் களமாகிய திருச்சபையைத் தூய்மைப்படுத்தலில் ஈடுபட்டிருக்கிறார் என்று கூறிக் குருக்கள் எச்சூழ்நிலையிலும் தங்கள் அழைப்பின் பிரமாணிக்கத்தைக் காட்ட வேண்டிய அவசியத்தைப் பற்றி எடுத்துக் கூறினாராம். இறைமக்கள் அனைவருமே கவலையுடனும் கவனத்துடனும் சிந்தித்துச் செயல்படவேண்டிய அறிவுரை இது.


“ஏற்கனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று”. (மத்.3:10) - தீமையை வேரறுக்க.


மரங்களின் வேரடியில் கோடரி ஏன்? வேரை விட்டு வைத்தால் மீண்டும் தளிர்த்து விடும்.


இறையாட்சி வரப் போகிறது என்பதைக் காட்டும் செயல் என்ன? திருத்தூதர் பவுல் சொல்வார் : “கிறிஸ்து உங்களை ஏற்றுக் கொண்டது போல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளுங்கள். அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள்”. (உரோமை.15:7)

ser ser

மனமாற்றத்தைச் செயலில் காட்டுங்கள்

நிகழ்வு

1895 ஆம் ஆண்டில் ஒருநாள், அமெரிக்க அதிபராக இருந்த கிளீவ்லாண்ட்டிற்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது:

“மாண்புமிகு அதிபர் அவர்களே! வணக்கம். உங்கள் குடிமக்களில் ஒருவனாகிய நான் எழுதிக்கொள்வது.... சிலநாள்களாகவே எனக்கு நிம்மதியில்லை. எப்பொழுதும் அரசாங்கத்திற்கு எதிராக நான் செய்த தவறுதான் என்னுடைய நினைவுக்கு வந்துபோகின்றது. நான் செய்த தவறு இதுதான்: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மூன்று தபால்தலைகளை நான் மீண்டுமாகப் பயன்படுத்திவிட்டேன். அப்பொழுது எனக்குப் பதின்மூன்று வயது இருக்கும். ஏதோ அறியாமல் செய்துவிட்டான். இப்பொழுது நான் அதற்காக மனம்வருந்தி மன்னிப்புக் கேட்கின்றேன். மேலும், தவறாகப் பயன்படுத்திய அந்த மூன்று தபால்தலைகளுக்கு உண்டான பணத்தைக் காசோலையாக இந்தக் கடிதத்தோடு இணைத்துள்ளேன். அருள்கூர்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள். இப்படிக்கு உங்களில் குடிமக்களில் ஒருவன்.”

 இந்தக் கடிதத்தைப் படித்துப்பார்த்த அதிபர் கிளீவ்லாண்ட் அப்படியே வியந்துபோய் நின்றார். ‘செய்த தவறினை உணர்ந்து, அதற்குப் பரிகாரம் தேடிய இந்தச் சிறுவன் அல்லவா நாட்டின் உண்மையான குடிமகன்’ என்று அவர் அவனுடைய கடிதத்தை வெள்ளை மாளிகையில் பத்திரப்படுத்தி வைத்தார். அது இன்றைக்கும் அங்கு உள்ளது.

உண்மையான மனமாற்றம் தவறுக்காக மனம்வருந்துவது மட்டுமல்ல, செய்த தவறை இனிமேலும் செய்வதில்லை என்று உறுதியெடுத்துக்கொண்டு, நேர்வழியில் நடப்பது. இத்தகைய செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை மெசியாவின் வருகைக்காக நாம் நம்மையே தயாரிக்கும் விதமாக மனம்மாறி நல்வழியில் நடக்கவேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. நாம் எப்படி மனம்மாறி நல்வழியில் நடப்பது என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.


திருவருகைக்காலத்தின் கதாநாயகன் திருமுழுக்கு யோவான்


நற்செய்தியில், திருமுழுக்கு யோவான் மெசியாவின் வருகையின் பொருட்டு மக்களை மனமாற்றத்திற்கு அழைக்கின்றார். அவருடைய இந்த அழைப்பினை ஏற்று வரிதண்டுபவர்களும் பாவிகளும் அவரிடம் செல்கின்றார்கள், பரிசேயர்களும் சதுசேயர்களும் ‘தாங்கள் நேர்மையாளர்கள்... அதனால் தாங்கள் மனமாறத் தேவையில்லை’ என்று அப்படியே இருக்கின்றார்கள்.


இந்தத் திருமுழுக்கு யோவான் யார்? எந்த அதிகாரத்தால் அவர் மக்களை மனமாற்றத்திற்கு அழைத்தார்? அவருடைய அழைப்பிற்குச் செவிமடுப்பதன் தேவை என்ன? என்பவற்றைக் குறித்துத் தெரிந்துகொள்வது நல்லது. திருமுழுக்கு யோவான் எலியாவின் உளப்பாங்கைக் கொண்டவர் (லூக் 1: 16-17), இயேசுவின் வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால் அவர் எலியா (மத் 17:12). மட்டுமல்லாமல் அவர் மனிதராய்ப் பிறந்தவர்களுள் பெரியவர் (மத் 7: 11). இவையெல்லாவற்றிற்கும் மேலாக அவர் கடைசி இறைவாக்கினர் (லூக் 16:16). இத்தகைய சிறப்புகளைப் பெற்ற திருமுழுக்கு யோவான் தன்னுடைய சொந்த அதிகாரத்தால் போதிக்கவில்லை, திருமுழுக்குக் கொடுக்கவில்லை. மாறாக, விண்ணகத்திலிருந்து வந்த அதிகாரத்தாலேயே போதித்தார், திருமுழுக்குக் கொடுத்தார். அப்படிப்பட்டவருடைய போதனை எல்லாரும் கேட்டு மனம்மாறியிருக்கவேண்டும். ஆனால், மேலே நாம் பார்த்ததுபோல வரிதண்டுபவர்களும் பாவிகளும்தான் அவருடைய போதனையைக் கேட்டு மனம்மாறினார்கள். ஏனையோர் மனம்மாறத் தேவையே இல்லை என்பதுபோல் இருந்தார்கள். அதனால் அதற்குரிய தண்டனைக்குத் தங்களை உட்படுத்திக்கொண்டார்கள்.

உண்மையான மனமாற்றம் எது?

திருமுழுக்கு யோவான் மக்களிடம் போதித்தது இரண்டே இரண்டு செய்திகள்தான். ஒன்று, விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது. இரண்டு. மனம்மாறவேண்டும் என்பதாகும். இந்த இரண்டு செய்திகளும்,  ‘மெசியா வருகின்றார், ஆதலால் மனம்மாறுங்கள்’ என்ற ஒரே நேர்கோட்டில் வருகின்றன. திருமுழுக்கு யோவான் சொல்லக்கூடிய மனம்மாற்றம் எத்தகையது என்பதைத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

ஒருசிலர் மனமாற்றம் என்றால், பாவத்தை நினைத்து மனம்வருந்துதல் என்று நினைத்துக்கொள்கின்றார்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் சுருக்கிக்கொள்கின்றார்கள்.  உண்மையான மனமாற்றம் என்பது பாவத்தை நினைத்து மனம் வருந்துவது மட்டும் கிடையாது. அந்தப் பாவத்தை மீண்டுமாகச் செய்யாமல் இருந்து, நற்செயல்களைச் செய்வது. அதைத்தான் திருமுழுக்கு யோவான், “நீங்கள் மனம்மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்” என்கின்றார்.

இங்கு இன்னொரு முக்கியமான செய்தியையும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும். அது என்னவெனில், மனமாற்றம் அடைவது ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டும் கிடையாது. எல்லாரும் மனமாற்றம் அடையவேண்டும். திருமுழுக்கு யோவான மனமாற்றச் செய்தியை எடுத்துரைத்தபோது,  பரிசேயர்களும் சதுசேயர்களும் அவருடைய குரலைச் சட்டைசெய்யாமல் இருந்தற்குக் காரணம், ‘தாங்கள் ஆபிரகாமின் மக்கள்... அதனால் மனம்மாறத் தேவையில்லை’ என்ற எண்ணமாகும். ஆகையால்தான் திருமுழுக்கு யோவான் அவர்களைப் பார்த்து, “இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்ய கடவுள் வல்லவர்” என்று கூறுகின்றார். அப்படியென்றால், ‘அவர் மனம்மாறவேண்டும்’, ‘இவர் மனம்மாறவேண்டும்’ என்றில்லை. எல்லாரும் மனம்மாறவேண்டும். ஏனெனில், கடவுள் ஒருவரே நல்லவர் (மத் 19: 17). ஏனையோர் யாவரும் பாவிகளே!

கனிகொடாத மரம் வெட்டப்படும்

          திருமுழுக்கு யோவான், தன்னிடம் திருமுழுக்குப் பெற வந்தவர்களிடம் சொல்லக்கூடிய மிக முக்கியமான செய்தி, கனிகொடுக்கும் வாழ்க்கை வாழவேண்டும் என்பதாகும். இயேசுவும் இதே செய்தியைத்தான், ‘நீங்கள் மிகுந்த கனிதந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது’ (யோவா 15:8) என்று கூறுவார். அப்படியானால், மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் கனிகொடுக்கும் வாழ்க்கை வாழவேண்டும். அப்படிக் கனிகொடுக்காமல் இருக்கின்றபோது, கனிகொடாத மரங்களைப் போன்று தீயில் தள்ளப்படுவோம் அல்லது தண்டனையைப் பெறுவோம் என்பது உறுதி.

திருமுழுக்கு யோவான் இங்கு, மனமாற்றச் செய்தியைக் கேளாமலும், கேட்டு அதன்படி வாழாமலும் இருக்கக்கூடியவர்களுக்குக் கிடைக்கும் தண்டனைத் தீர்ப்பைக் குறித்துப் பேசுகின்றார். யாரும் அழிந்துபோகாமல், எல்லாரும் மீட்படையவேண்டும் என்பது கடவுளின் திருவுளமாக இருந்தாலும் (1திமொ 2:4; 2 பேது 3:9), ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்பக் கைம்மாறு அளிக்கின்ற கடவுள் (உரோ 2:6) மனம்மாறாமலும், மெசியாவின் வருகைக்காகத் தயாரில்லாமலும், வந்தவரை நம்பாமலும் அதன்படி வாழாமலும் இருந்தால், அதற்கானத் தண்டனையைத் தருவார் என்பது உறுதி.

ஆகையால், மெசியாவாம், இயேசுவின் வருகையை, அவருடைய பிறப்பு விழாவைக் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கும் நாம், நம்முடைய பாவத்திலிருந்து விலகி, அவர்மீது நம்பிக்கை வைத்து முற்படுவோம்.

சிந்தனை

           ‘அவள்/அவன் மனம்மாற வாய்ப்புக் கொடுத்தேன். அவளோ/ அவனோ மனம்மாறவில்லை’ (திவெ  2: 21) என்பார் ஆண்டவர். ஆகையால், கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் மனமாற்றத்திற்கான வாய்ப்பினைப் பயன்படுத்தி, நற்கனி கொடுப்பவர்களாவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser ser

இயல்பு மாற்றம்

ஈசோப் கதை ஒன்றோடு இன்றைய சிந்தனையைத் தொடங்குவோம்.

ஒரு ஆற்றங்கரையின் இந்தப் பக்கம் ஒரு தவளையும் ஒரு தேளும் வாழ்ந்து வந்தன. இருவரும் சில நாள்களில் நண்பர்களாயினர். தேளுக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை. ஆற்றின் அந்தக் கரைக்கு போக வேண்டும் என்ற ஆசை. ஒரு நாள் தவளையிடம், 'உன்னால்தான் நீந்த முடியுமே. நீ என்னைச் சுமந்துகொண்டு அக்கரைக்குச் செல்கிறாயா?' என்று கேட்கிறது. அதற்குத் தவளை, 'உன்னைத் தூக்கிச் செல்வதில் எனக்கு கஷ்டம் ஒன்றும் இல்லை. ஆனால், உன்னிடம் இருக்கும் கொடுக்குதான் எனக்கு பயமாக இருக்கிறது. பாதி வழியில் ஒருவேளை நீ என்னை உன் கொடுக்கினால் கொட்டிவிட்டால் நான் என்ன செய்வது?' என்று பதில் சொன்னது. உடனே தேள், 'ஐயயோ, நான் ஒருபோதும் அப்படிச் செய்யவே மாட்டேன். நீ எனக்கு எவ்வளவு பெரிய உதவி செய்கிறாய். நான் எப்படி உன்னை என் கொடுக்கால் கொட்டுவேன்!' என்று சொன்னது. சற்று நேரம் யோசித்த தவளை, 'இல்லை! வேண்டாம்! நீ கொட்டிவிடுவாய் என்று என் உள்மனம் சொல்கிறது!' என்று தேளைச் சுமக்கத் தயங்கியது. 'ஐயோ! நண்பா! இல்லவே இல்லை! என் அப்பா தேள், அம்மா தேள் சத்தியமா நான் சொல்றேன்! உன்னைக் கொட்டவே மாட்டேன்!' என்று சத்தியம் செய்தது தேள். தேளின் சத்தியத்தை நம்பிய தவளை, தன் முதுகில் தேளைச் சுமந்துகொண்டு ஆற்றுக்குள் இறங்கி அக்கரை நோக்கி நீந்த ஆரம்பிக்கிறது. ஏறக்குறைய பாதிதூரம் கடந்தவுடன் தேள் தவளையைத் தன் கொடுக்கால் கொட்டிவிடுகிறது. வலி பொறுக்க முடியாத தவளை, 'என்ன நண்பா! இப்படிச் செய்துவிட்டாயே? உன்னை நம்பி முதுகில் ஏற்றிக்கொண்டுவந்தேனே!' என்று கத்தியது. அதற்குத் தேள், 'என்னை மன்னித்துவிடு! கொட்டுவது என் இயல்பு. அதை என்னால் மாற்ற இயலாது!' தவளை சொன்னது, 'முட்டாள் நண்பனே! நீ இப்போது பாதி ஆற்றில் என்னைக் கொட்டியதால் நீயும்தானே மூழ்கப் போகிறாய்!'

சற்று நேரத்தில் தவளையும் தேளும் தண்ணீரில் மூழ்கி இறந்தன.

நம் வாழ்வில் சிலர் ஏன் இப்படி இருக்கிறார்கள்? அல்லது நான் ஏன் இப்படி இருக்கிறேன்? என்று கேட்கும்போதெல்லாம் விடையாக வருவது: 'நம்முடைய இயல்பு'

'இது என்னுடைய சுபாவம். இது என்னுடைய இயல்பு. என்னால் இப்படித்தான் இருக்க முடியும்!'

'நாய் ஏன் கடிக்கிறது?' 'கடிப்பது அதன் சுபாவம். அவ்வளவுதான்!'

நாயின் கடிக்கும் சுபாவத்தை எளிதாக ஏற்றுக்கொள்ளும் நாம் மனிதர்களின் சுபாவத்தை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்வதில்லை.

'

அவன் ஏன் என்னை ஏமாற்றினான்?' என்று கேட்கும் மனம், 'அது அவனுடைய சுபாவம். அப்படித்தான்!' என்று ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது.

தன்னுடைய இயல்பு அல்லது சுபாவத்தை மாற்றிக்கொள்தல் நாய்க்கும், தேளுக்கும் சாத்தியமில்லாமல் இருக்கலாம். ஆனால், மனிதர்களுக்குச் சாத்தியம் என்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

இயல்பு மாற்றம் என்றால் என்ன? இயல்பு மாற்றத்தை எப்படி அடைவது? 'விரியன் பாம்புக் குட்டிகளே!' - இப்படித்தான் தன்னிடம் வந்த பரிசேயர் மற்றும் சதுசேயரை அழைக்கின்றார் திருமுழுக்கு யோவான். திருமுழுக்கு யோவான் காட்டிலும் பாலைநிலத்திலும் அலைந்து திரிந்ததால் என்னவோ, எல்லாரையும் விலங்குகளின் பெயரிட்டே அழைக்கின்றார். இயேசுவைப் பார்த்து, 'இதோ! ஆடு! அல்லது ஆட்டுக்குட்டி!' என்கிறார் (காண். யோவா 1:36). இன்றைய நற்செய்தியில் இரு குழுவினரை, 'விரியன் பாம்புக் குட்டிகளே!' என அழைக்கிறார். மேலும், 'மரம்,' 'கோடரி,' 'நெருப்பு' போன்ற உருவகங்களையும் கையாளுகின்றார்

.

இயேசுவின் இயல்பைப் பார்த்து அவரை, 'ஆட்டுக்குட்டி' என்று அழைத்தாரா? இக்குழுவினரின் இயல்பைப் பார்த்து, 'விரியன் பாம்புக் குட்டிகளே' என அழைத்தாரா?
ஆம்.
இன்றைய முதல் வாசகம் (காண். எசா 11:1-10) மூன்று வகை இயல்பு மாற்றங்களைப் பதிவு செய்கின்றது:

அ. அடிமரத்திலிருந்து தளிர் ஒரு சில பூங்காக்களில் பட்டுப்போன மரங்களை வெட்டிவிட்டு அதன் வேரையும், சிறிய தண்டுப்பகுதியையும் வெட்டிவிட்டு, அதை நாற்காலி போல அமைத்திருப்பார்கள். அந்த நாற்காலி என்றாவது துளிர்க்குமா? 'துளிர்க்கும்' என உறுதியாக இறைவாக்குரைக்கின்றார் எசாயா. தாவீதின் மரபு மறைந்துவிட்டது. இனி தங்களை ஆள யாருமில்லை என்று நினைத்திருந்த மக்களுக்கு புதிய அரசரின் வருகையை முன்னுரைக்கும் எசாயா, வெறும் தண்டு தளிர்விடும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றார்.

ஆ. புதுவகை அருள்பொழிவு முதல் ஏற்பாட்டில் யாரெல்லாம் எண்ணெயால் அருள்பொழிவு பெறுகிறார்களோ அவர்களெல்லாம் குருவாக, இறைவாக்கினராக, அரசராக மாறுகின்றனர். தங்கள் வாழ்வில் புதிய திருப்பத்தைக் கண்டுகொள்கின்றனர். இன்றைய முதல் வாசகத்தில் வரும் அரசர் எண்ணெயால் அல்ல, மாறாக, ஆண்டவரின் ஆவியால் அருள்பொழிவு பெறுகின்றார். அந்த அருள்பொழிவு அவருக்குச் சில கொடைகளை அல்லது மதிப்பீடுகளை வழங்குகிறது. இறைவனின் திருவுளத்தை அறிய 'ஞானமும் மெய்யுணர்வும்,' அத்திருவுளத்தை நிறைவேற்ற 'அறிவுரைத் திறனும் ஆற்றலும்,' ஆண்டவருக்குப் பிரமாணிக்கமாய்ப் பணி செய்ய 'நுண்மதியும் அச்ச உணர்வும்' பெறுகின்றார் அரசர். இவ்வாறாக, நீதி, நேர்மை, மற்றும் உண்மை ஆகிய பண்புகளை மட்டுமே கொண்டிருப்பார். அரசருக்குரிய ஆற்றல், பெருமை, மற்றும் பொய்மை மறைந்து அவருடைய இயல்பு மாற்றம் பெறுகிறது.

இ. விலங்குகளின் செயல்பாடுகளில் மாற்றம் ஓநாய் செம்மறியோடு தங்குவதிலும், செம்மறியாட்டுக் குட்டியோடு சிறுத்தைப் புலி படுத்துக்கொள்வதிலும், சிங்கக்குட்டியும் கொழுத்த காளையும் கூடி வாழ்தலிலும், பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்தலிலும், பசுவும் கரடியும் ஒன்றாய் மேய்வதிலும், அவற்றின் குட்டிகள் சேர்ந்து படுத்திருப்பதிலும், சிங்கம் மாட்டைப் போல வைக்கோல் தின்பதிலும், பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பு வளையில் விளையாடுவதிலும், பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடுவதிலும் இயல்பு மாற்றங்கள் தெரிகின்றன. இவை அனைத்தையும், 'என் திருமலை முழுவதிலும் தீமை செய்வார் எவருமில்லை' என்று ஒரே வரியில் சுருக்கி வரைகிறார் எசாயா. மேற்காணும் உருவக இணைவுகளில் ஒன்று வன்மையாகவும் மற்றது மென்மையாகவும் இருக்கிறது. எசாயாவின் கனவில் வன்மை மென்மையாகவும், மென்மை வன்மையாகவும் இயல்பு மாற்றம் பெறுகிறது. இப்படிப்பட்ட இயல்பு மாற்றம் இருந்தால்தான் மேற்காணும் காட்சி சாத்தியமாகும்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 15:4-9) உரோமையருக்கு எழுதப்பட்ட திருமடலை ஏறக்குறைய நிறைவு செய்யும் பவுல், அவர்கள் பெற வேண்டிய இயல்பு மாற்றம் குறித்து - தங்களுடைய மேட்டிமை எண்ணங்களையும், பிளவு மனப்பான்மையையும் விட்டுவிட்டு, யூதர்களும் புறவினத்தாரும் ஒரே மனத்தினராய் இருந்து ஒருவாய்ப்பட கடவுளைப் புகழ்வது - எழுதி, கிறிஸ்து இயேசுவில் யூதர்களும் புறவினத்தாரும் ஒரே மீட்பில் பங்கேற்கின்றனர் என்றும் சொல்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகமும் (காண். மத் 3:3:1-12) மூன்று வகை இயல்பு மாற்றங்களைப் பதிவு செய்கிறது:

அ. யோவானின் வாழ்க்கை முறை ஒட்டக முடி ஆடை, தோல் கச்சை, வெட்டுக்கிளி, காட்டுத்தேன் என்ற எளிய உணவுப் பழக்கத்தையும், உடைப் பழக்கத்தையும் கொண்டிருக்கின்ற யோவான் அவருடைய சமகாலத்தவரிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவராக இருக்கின்றார். அவருடைய வாழ்விடமும் மாறுபட்டதாக இருக்கின்றது.

ஆ. மனம் மாறுவது என்பது செயலில் காட்டப்பட வேண்டும் தன்னுடைய பணியின் தொடக்கத்தில், 'மனம் மாறுங்கள்' என்று முழக்கமிடும் யோவான், 'மனம் மாறியதைச் செயலில் காட்டுங்கள்' என்று உள்ளத்திற்கும் செயலுக்கும் இருக்க வேண்டிய தொடர்பை விளக்குகின்றார். உள்ளுக்குள் ஒன்று, வெளியில் வேறு என்று வாழ்ந்த மனிதர்களுக்கு இது ஒரு இயல்பு மாற்றம்.

இ. பழைய பல்லவி பாடாதீர்கள் 'நாங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள். எங்களுக்கு ஆட்டோமேடிக்காக மீட்பு உண்டு' என்று பழம்பெருமையைப் பாடுவதை விடுங்கள் என்று அறிவுறுத்துகின்ற யோவான், இனியும் இயல்பு மாறவில்லை என்றால் வெட்டப்படுவது உறுதி என்று எச்சரிக்கின்றார்.

ஆக, மூன்று வாசகங்களும் இயல்பு மாற்றத்தை காட்சியாகவும், அறிவுரையாகவும், எச்சரிக்கையாகவும் முன்வைக்கின்றன.
இன்றைய நாளில் நாம் ஏற்றும் திரி அமைதி என்ற மதிப்பீட்டைக் குறிக்கிறது.
நாம் இயல்பிலேயே நம் உள்ளத்தில் அமைதியைக் கொண்டிருக்கின்றோம். நம்முடைய அதீத எண்ணங்களும், வெளிப்புறமிருந்து வருகின்ற தகவல்கள் நம் மனத்தில் ஏற்படுத்துகின்ற தாக்கங்களும் நம் அமைதியைக் குலைத்துவிடுகின்றன. காலையில் எழுந்தது முதல் அமைதியாக இருக்கின்ற மனம் ஆலயத்தில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கின் எண்ணெயின் ஒரு துளி சட்டையில் பட்டவுடன் குலைந்துவிடுகிறது. அடுத்தவரின் சிறிய சொல், செயல்கூட நம் அமைதியைக் குலைத்துவிடுகிறது.
இப்படி அன்றாடம் அமைதி இழந்து தவிக்கும் நாம் இதுவே நம் இயல்பு என நினைத்துக்கொண்டிருக்கின்றோம்.
ஆனால், நம் இயல்பு அமைதியின்மை அன்று. மாறாக, அமைதியே!
இந்த இயல்பு மாற்றத்தை நான் எப்படி அடைவது?
ரொம்ப எளிது!
கொஞ்சம் பாலைவனத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே யாரும், எதுவும் இல்லாமல் என்னை நானே பார்க்க வேண்டும். என் வேர்களில் நான் பெருமை கொள்கிறேனா? என்று ஆராய்ந்து என் வேர்களை விட வேண்டும். இறைவனின் ஆவி என்னை ஆட்கொள்ள இறைவேண்டல் செய்ய வேண்டும்.
இப்படிச் செய்யும்போது என் இயல்பு மாறும்.
என் விரியன் பாம்புக் குட்டி இயல்பு மாறும். என் தேள் இயல்பு மாறும். என் வன்மை மறைந்து மென்மை பிறக்கும்.
அப்படிப் பிறக்கும் நாளில்தான் எசாயா முன்னுரைக்கும் அரசர் என்னில் பிறப்பார்.
அவர் பிறந்த அந்நாளில் நானும் திருப்பாடல் ஆசிரியர் போல,
'அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக! நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக!' (காண். திபா 72:7) என்று பாட முடியும்.

ser

sunday homily


முகப்பு பக்கம்
வத்திக்கான் வானொலி
கத்தோலிக்க இதழ்கள்
ஞாயிறு வாசகம்
விருந்தினர் பக்கம்
உம் வாக்கே விளக்கு!
சென்னை பங்குதலங்கள்
நூலகம்
திருத்தலச் சுற்றுலா
தவக்கால சிந்தனைகள்
ஒலியும் ஒளியும்
அன்னை தெரேசா
கிறிஸ்மஸ் மலர்கள்
பொங்கல்
செபமாலை
பாடல்கள்
செபமே ஜெயம்A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com