மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

திருவருகைக் காலம் முதல் ஞாயிறு
முதலாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 2: 1-5 | உரோமையர் 13: 11-14 | மத்தேயு 24: 37-44

ser

விழிப்பாய் இருக்கவும்!

அனிஸ் என்ற ஏழு வயது சிறுவன் பெங்களூரில் ஓர் ஆங்கிலப் பள்ளியிலே 3ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவன் அப்பா ஒரு பொறியாளர், அமெரிக்காவில் பணி செய்து கொண்டிருந்தார். அவன் அம்மா, அக்காள் இந்தப் பையன் மூவரும் விடுமுறையில் அப்பாவோடு இருவாரங்கள் தங்கி வர, அமெரிக்காவைப் பார்த்து வர பாஸ்போர்ட், விசா எல்லாம் ஒழுங்கு செய்து புறப்பட இரண்டு நாட்கள் இருந்தன. அப்பாவுக்கு இந்தியா லாலா மிட்டாய் வாங்கிக் கொண்டு போக வேண்டும் என்று விரும்பி அருகில் இருந்த கடைக்குச் சென்று ஒரு கிலோ லாலா மிட்டாய் வாங்கி வரும்போது, தரையில் அறுபட்டுக்கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்து அங்கே பிணமானான் சிறுவன். ஒரு வாழ்வு மலருமுன்னே மறைந்து, எல்லோரையும் துயரத்தின் கடலிலே ஆழ்த்தியது. ஆம் எதிர்பாராத சோக நிகழ்ச்சி!

இன்றைய நற்செய்தியில் நாம் விழிப்பாய் இருக்கவும், ஆயத்தமாக இருக்கவும் அழைப்பு விடுக்கிறார் இயேசு. இதற்காக ஒரு நிகழ்வையும், ஓர் உவமையையும் தருகிறார். மக்கள் கடவுளை மறந்து சிற்றின்ப வாழ்வில் மூழ்கினார்கள். வெள்ளப் பெருக்கைக் கொண்டு அம்மக்களை அழிக்க விரும்பினார். நீதிமான் நோவாவை நோக்கிக் கப்பல் கட்டச் சொன்னவுடன், பணிந்து வேலையை ஆரம்பிக்கிறார். மற்றவர்கள் அவரைப் பார்த்து தண்ணீர் இல்லையே! ஏன் இந்தப் பெரிய கப்பல் என்று ஏளனம் செய்கின்றனர். பெட்டக வேலை முடிந்தவுடன் பெருமழை வந்தது. நோவாவின் குடும்பம் காப்பாற்றப்பட்டது. ஆனால் தயாரின்றி இருந்த மற்றவர் அனைவரும் அழிந்தனர் (மத்: 24:37-44).

இரண்டாவது, இயேசு சொல்கிறார், இருவர் வயலில் இருப்பர், ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார், மற்றவர் விடப்படுவார். புனித பேதுரு கூறுவதுபோல ஆண்டவருடைய நாள் திருடனைப்போல் வரும் (2பேதுரு 3:10). ஆண்டவருடைய நாள் என்பது பழைய ஏற்பாட்டிலே கடவுளின் வாக்குறுதியின் நிறைவாக, மெசியாவின் வருகையைக் குறிப்பதாக இருந்தது. ஆனால் புதிய ஏற்பாட்டிலே இயேசுவில் நாம் பெறும் மீட்பைப் பற்றியதாக, இயேசுவை நம் இரட்சகராக ஏற்று நாம் பெறும் நித்திய வாழ்வைப் பற்றியதாக உள்ளது. இன்றைய முதல் வாசகத்திலே எசாயா இறைவாக்கினர் கூறுவது போல நாம் அனைவரும் பயணிகள், நமது நோக்கம் எருசலேம் தேவாலயம் அல்ல. மாறாக இறைவனோடு என்றும் வாழ்வுக்கு, அந்த உன்னத வாழ்வுக்கு, சீயோன் மலைக்குச் செல்லத் தயாராக இருக்க அழைப்பு விடுக்கிறார். சிறுவன் அனிஸ் வாழ்வு திடீரென முடிவுக்கு வந்தது போல, நமது வாழ்வு என்று முடிவு பெறும் என்று தெரியாததால் நாம் என்றும் விழிப்போடும், தொடர்ந்த ஆயத்தத்தோடும் வாழ வேண்டும் என்பதை இயேசு நற்செய்திலே வலியுறுத்துகிறார் (மத்: 24:43-44).

இன்றைய சமுதாயத்தை ஆட்டிப்படைப்பது மனவிரக்தியும், மனச்சோர்வும் ஆகும். இத்தகைய மனவிரக்தியிலும், மனச்சோர்விலும் வாழும் நமக்குப் புனித பவுல் அடிகளாரின் இன்றைய இரண்டாம் வாசகம் (உரோ. 13:11-14), நம்பிக்கையையும், ஆற்றலையும், ஊட்டவல்லவையாக அமைகின்றன. தீமைகளும், அநீதிகளும், இரவின் செயல்களும் முடியப்போகின்றன என்று முன்னறிவிக்கிறார். மீட்பு அண்மையில் உள்ளது. இரவு முடியப்போகிறது. பகல் நெருங்கி வந்துவிட்டது என்றும் உற்சாகமூட்டும் வார்த்தைகளைத் தருகிறார்.

அன்பார்ந்தவர்களே!
புதிய சமுதாயத்தைப் படைக்க நம்மிடத்தில் முதலாவது இருக்க வேண்டியது துணிவும், தளராத மனமும், விடாமுயற்சியும், இலட்சியத் தெளிவும் ஆகும்.

ஆண்டவரின் நாள் எப்போது வரும் என்று நமக்குத் தெரியாததால் நாம் மனப்பக்குவத்துடன் தயாராக இருக்க வேண்டும். நாளை மனம் திரும்பலாம், என்று தள்ளிப்போடும் மடமை, முட்டாள்தனத்திற்கு இன்று முடிவு கட்டியாக வேண்டும். கடந்த கால வாழ்வை எண்ணிக் கவலைப்பட்டு, எதிர்காலத்தை நினைத்து அச்சத்துடன் வாழ்வதை விட்டு, நிகழ்காலத்தில் நாம் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இருளின் ஆட்சிக்குரிய செயல்களான களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டை சச்சரவுகளை நாம் தவிர்க்க வேண்டும் (உரோ. 13:11).

இறுதியாக ஒளியின் படைக்கலன்களாக அன்பு, விசுவாசம், நம்பிக்கை ஆகிய கொடைகளை (1தெச.5:8) அணிந்து கொண்டு, (உரோ.13:14) நம்மைச் சந்திக்க வரும் இயேசுவோடு நாம் நம்மையே ஒன்றித்து, உறவை வளர்த்து அவரோடு பயணம் செய்வோம்.

ser ser

எப்பொழுதும் விழித்திருப்போம்

நம் வீட்டிற்கு ஒரு புனிதரோ, புனிதையோ வருகின்றார் என்று வைத்துக்கொள்வோம். அப்படி வந்தால் நமது வீட்டைத் தூய்மையாக, சுத்தமாக வைத்துக்கொள்வோம் அல்லவா?

இன்னும் சில வாரங்களிலே புனிதர்களையும், புனிதைகளையும் படைத்த படைப்பின் தலைவர் கடவுள், இயேசுவின் உருவிலே நம்மைத் தேடி வரப்போகின்றார். அவர் தூய்மையே உருவானவர். அவரை வரவேற்க நமது உள்ளத்தையும், இல்லத்தையும் தூய்மையாக, சுத்தமாக வைத்துக்கொள்வோம்!

நமது மனத்தை, உள்ளத்தை, வாழ்க்கையை அழுக்காக்குவது எது? பாவம்!

பாவம் என்றால் என்ன? இலக்கைத் தவறவிடுவதற்கு அல்லது மறப்பதற்குப் பெயர்தான் பாவம்!

இலக்கு என்பது இறைவனால் நமக்கு நிர்ணயிக்கப்பட்ட குறிக்கோள்! ஆக, குறிக்கோளை மறந்து. வழிதவறி நடப்பதற்கு, வாழ்வதற்குப் பெயர்தான் பாவம்!

செபத்திலும், தவத்திலும் ஈடுபட்டு தேர்ந்து தெளிதல் வழியாக (உரோ 12 : 1-2) நமது அழைத்தலின் தன்மைக்கு ஏற்றவாறு நமது இலக்கை, குறிக்கோளை நிர்ணயித்த பிறகு அதைநோக்கி நாம் ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும். இதோ ஒரு கதை!

ஞானம் தேடி இளைஞன் ஒருவன் இமயமலை நோக்கிப் பயணம் செய்தான். அவன் கங்கை நதிக் கரையிலிருந்த ஒரு பாறையின் மீது அமர்ந்து தியானம் செய்தான்!

அப்போது கங்கை நதி அவனோடு பேசியது!

கங்கை அவனைப் பார்த்து, “உன் கண்ணோரத்தில் கங்கை எதற்கு? உன் முகத்தில் ஏனிந்த சோக ரேகைகள்?" என்றது.

அதற்கு அந்த இளைஞன், “நான் எடுக்கும் எந்த முயற்சியிலும் எனக்கு வெற்றி கிட்டுவதில்லை. முன்னேற்றம் என்ற சொல்லுக்கே என் வாழ்வில் இடமில்லை !" என்றான். அதற்குக் கங்கை நதி அவனைப் பார்த்து, “என்னைப் பார்! என் இலக்கு கடல் கடலை அடையும்வரை என் பயணம் ஓயாது! என்னைச் சுற்றி எத்தனையோ அழகான செடிகள், கொடிகள், மரங்கள், மலர்கள்! எதையும் நான் பற்றிக்கொள்ள நினைப்பதில்லை! என் இலக்கான கடலை நோக்கி என் பயணம் தொடர்கின்றது! என்னைப் போல நீயும் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு உன் பயணத்தைத் தொடங்கு. உனக்கு வெற்றி கிடைக்கும்" என்றது!

அவனும் அவ்வாறே செய்தான்! தன் வாழ்க்கையின் இலக்கை நிர்ணயித்தான்! "இந்த இலக்கை அடையும் வரை நான் எதையும் திரும்பிக்கூட பார்க்க மாட்டேன்" என்று முடிவெடுத்தான்! அவன் பயணத்தில் வெற்றிபெற்றான்!

கயிற்றின்மீது நடக்கும் கலைஞனுக்கு இலக்கு எது? கயிற்றின் மறுபக்கத்தை அடைவது!

தூண்டில் போடுகின்றவனுக்கு இலக்கு எது? தக்கை தண்ணீருக்குள் செல்லும்போது மீனை கரைக்குக் கொண்டுவருவது!

ஊர்தியை இயக்கும் ஓட்டுநருக்கு இலக்கு எது? சேர வேண்டிய ஊரை அடைவது!

கிறிஸ்தவர்களாகிய நமது இலக்கு எதுவாக இருக்க வேண்டும்?

இந்த கேள்விக்குப் புனித பவுலடிகளார் இன்றைய இரண்டாவது வாசகத்தில் பதில் கூறுகின்றார்! இருள் என்னும் பாவத்தை விட்டுவிட்டு பகல் என்னும் புண்ணியத்தை நமதாக்கிக்கொண்டு இயேசுகிறிஸ்துவை அணிந்துகொள்ள வேண்டும்! இதுவே கிறிஸ்தவ வாழ்வின் இலக்கு!

பாவத்தை விட்டுவிடும் வழிகளை, நன்னெறிகளை நமக்கு ஆண்டவர் கற்பிப்பார் (எசா 2 : 3).

நமது இலக்கை அடைய கயிற்றில் நடப்பவரைப் போல, தூண்டில் போடுகின்றவனைப் போல, ஊர்தி ஓட்டுநரைப் போல நாமும் விழிப்பாய் இருக்க வேண்டும்.

இன்றைய நற்செய்தி (மத் 24 : 42) எடுத்துரைப்பது போல எப்போதும் நாம் விழிப்பாயிருக்கவேண்டும்.

மேலும் அறிவோம் :

தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார் குறள் 433

பொருள் : பழி பாவங்களுக்கு அஞ்சுபவர், தினையளவு குற்றத்தையும் பனையளவு பெரியதாகக் கருதி, அதனைச் செய்யாது தங்களைக் காத்துக்கொள்வர்!

ser ser

ஒரு மாணவன் தேர்வில் தூங்கிக் கொண்டிருந்தான். ஆசிரியர் அவனை எழுப்பிவிட்டு அவன் என் தூங்கிக் கொண்டிருக்கிறான் என்று கேட்டதற்கு அவன் கூறினான்: "தேர்வில் கேள்விக்குப் பதில் தெரியாவிட்டால் முழிச்சிக்கிட்டு இருக்காதே' என்று அப்பாதான் சொன்னார்". தேர்வில் கேள்விக்குப் பதில் தெரியாவிட்டால் மாணவர்கள் தூங்குகின்றனர், தேர்வு என்பது என்ன? - அறிந்தும் அறியாததும். வாழ்க்கைத் தேர்வில் பல கேள்விகளுக்குப் பதில் தெரியாத மனிதர்கள் தூங்குகின்றனர். மனிதரின் வாழ்வு: "தூக்கத்தில் பாதி, ஏக்கத்தில் பாதி,

இத்தகைய சூழலில் நாம் இன்று திருவருகைக் காலத்தைத் தொடங்குகிறோம். இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து "விழிப்பாயிருங்கள்" (மத் 24:42) என்றும் ஆயத்தமாய் இருங்கள்" (மத் 24:44) என்றும் அறிவுறுத்துகிறார். இன்றைய இரண்டாம் வாசகத்திலும் "உறக்கத்தினின்று விழித்தெழும் நேரம் ஏற்கெனவே வந்துவிட்டது" (உரோ 13:11) என்கிறார் திருத்தூதர் பவுல்.

நாம் உறக்கத்திலிருந்து விழிக்க வேண்டும். "தூங்குகிறவனே, விழித்தெழு" (எபே 5:14), ஏனெனில் நாம் இரவின் மக்கள் அல்ல ஒளியின் மக்கள். நாம் பகலில் நடப்பதுபோல மதிப்போடு நடக்க வேண்டும். இருளின் செயல்களைக் களைந்துவிட்டுக் கிறிஸ்துவை அணிந்து கொள்ள வேண்டும். ஊனியல்பின் செயல்கள்: களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச் சச்சரவு என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார் திருத்தூதர் பவுல் (உரோ 13:3). இந்த அருள் வாக்குத்தான் தூய அகுஸ்தினாரின் மனமாற்றத்திற்கு உந்துதலாக இருந்தது. -

இன்றைய விளம்பர உலகம், ஊடக உலகம், திரைப்படம் மற்றும் தொலைக் காட்சி உலகம் மனிதர்களைக் குடிவெறியிலும் காமத்திலும் தள்ளிவிட்டுப் பணத்தைக் குவிக்கிறது. அந்தக் காலத்தில் திரைப்படங்களில் கதை இருந்தது; ஆனால் இக்காலத் திரைப்படங்களில் கதை இல்லை; சதைதான் இருக்கிறது. இதன் விளைவாக இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 'பாஸ்மார்க்" வாங்காவிட்டாலும் "டாஸ்மாக்கில் வேலை கிடைக்கிறது. பட்டதாரிகளாக மாற வேண்டிய இளைஞர்கள் பட்டைதாரிகளாக மாறிவருகின்றனர், பல்வேறு பால்வினை நோய்களுக்குப் பலிக்கிடாக்களாகி வருகின்றனர்.

காய்ச்சல் வரும், போய்விடும்; வயிற்று வலி வரும், போய்விடும்; காச நோய் வரும், போய்விடும்; ஆனால் ஒரு நோய் மட்டும் வந்தால் மறையுரை மொட்டுக்கள் போகவே போகாது. அதுதான் 'எய்ட்ஸ்' என்னும் உயிர்க்கொல்லி நோய். இந்நோயைத் தடுக்க மனக்கட்டுப்பாடு தேவை, ஒருவனுக்கு ஒருத்தி என்ற வரைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். எந்தவொரு தீமையையும், அது வருமுன்பே அதைத் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால், வைக்கோல் புல்லை நெருப்பு எரிப்பது போல அது தம்மை எரித்துவிடும் என்று எச்சரிக்கின்றார் வள்ளுவர்.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.குறள் 435

அரசர் ஏன் தள்ளாடித் தள்ளாடி வருகிறார்? ஏனெனில் அவர் போருக்குப் போகாமல் பாருக்குப் போனாராம்". இன்று அரசே 'பார்' வசதியுடன் மதுபானக் கடைகளை நடத்துகிறது. குடி குடியைக் கெடுக்கும் என்ற எச்சரிக்கையுடன் மதுபான விற்பனை கொடி கட்டிப் பறக்கிறது. இந்நிலையில் குடிவெறியைக் குழிதோண்டிப் புதைக்கும்படி அறிவுறுத்துகிறார். பவுல், தோவா காலத்தில் வரப்போகும் வெள்ளப் பெருக்கைப் பற்றி அறியாத மக்கள் உண்டும் குடித்தும் வந்தது போலவே உலக முடிவில் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போதும் மக்கள் உண்டு குடித்துக் களியாட்டம் புரிவர்; அப்போது கிறிஸ்து நினையாத நேரத்தில் வருவார் என்று இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து எச்சரிக்கிறார்.

வீட்டில் யார் கை ஓங்கும்? அப்பா கை ஓங்கும், அம்மா கை வீங்கும். குடிகார அப்பா அம்மாவை ஓங்கி அடிக்கிறார்; அம்மா கை வீங்குகிறது. குடிகாரக் கணவர்களால் பல பெண்கள் துன்புறுகின்றனர், அவர்களிடதிலிருந்து பெண்களைப் பாதுகாக்க "குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தை" அரசு கொண்டு வந்திருக்கிறது. ஆனால் சட்டத்தால் மனிதனைத் திருத்த முடியுமா? ஒவ்வொருவரும் தனக்குத்தானே சட்டமாக இருந்து, தன்னைத் தானே திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், "திருந்தாத சென்மம் இருந்தென்ன இலாபம்?" என்று கூற வேண்டியுள்ளது.

மேலும், சண்டைச் சச்சரவுகளைத் தவிர்க்க வேண்டுமென்றும் திருத்தூதர் பவுல் கேட்கின்றார். இன்று எங்கு பார்த்தாலும் சண்டையும் சச்சரவும், போரும் பாலும் நடந்து கொண்டிருக்கின்றன. இத்திலையில் கடவுளுடைய விருப்பம் என்னவென்பதை இன்றைய முதல் வாசகம் கூறுகின்றது. நாடுகளுக்கிடையே போர் இருக்கக் கூடாது; போர்ப்பயிற்சியும் கூடாது. போர்க் கருவிகளை எல்லாம் விவசாயக் கருவிகளாக மாற்ற வேண்டும் (எசா 2:1-5). கிறிஸ்து தான் நமது அமைதி. அவர் யூத இனத்துக்கும் பிற இனத்துக்கும் இடையே நின்ற பகைமை என்னும் தடைச் சுவரைத் தகர்த்து இரு இனத்தையும் ஓரினமாக இணைத்துள்ளார் (எபே 2:13-16).

கிறிஸ்துவின் பிறப்புப் பெருவிழாவுக்காகத் தயாரிக்கும் இக்காலத்தில் நாம் சண்டைச் சச்சரவுகளைத் தவிர்ப்போம். இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன, இரண்டு வாகனங்களின் ஓட்டுனர்களும் கடுமையாகச் சண்டையிட்டுக் கொண்டனர். அப்போது அங்கு கூடிய கூட்டம் இரண்டு வாகனங்களில் இருந்தப் பொருள்களைச் சூரையாடினர். நாம் மற்றவர்களுடன் சண்டை போடுவதால் நமது அமைதி கொள்ளையடிக்கப்படுகிறது. நாம் ஒருவர் மற்றவரை அழிக்கின்றோம். "நீங்கள் ஒருவர் ஒருவரைக் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால், ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள். எச்சரிக்கை " (கலா 5:15).

விழித்தெழுவோம்; ஏனெனில் நமது மீட்பு அண்மையில் உள்ளது. ஊனியல்பின் இச்சைகளை அழித்துவிட்டு, கிறிஸ்துவையே அணிந்து கொள்வோம். இத்திருவருகைக் காலம் தமக்கு மீட்பின் காலமாக, மனமாற்றத்தின் காலமாக அமைவதாக!

ser ser

போராடு

“செவன் சமுராய்” என்று ஜப்பான் நாட்டுத் திரைப்படம்.
ஏழு சமுராய் வீரர்கள் ஒரு கிராம மக்களைக் கொள்ளையர் களிடமிருந்து காப்பாற்றி, சிதைந்த கிராமத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் நான்கு சமுராய்கள் இறந்துபட எஞ்சியது மூன்று பேர். போர் முடிய, உழவர்கள் மகிழ்ச்சியோடு நாற்று நடும் பாடலுடன் வேலையைத் தொடங்குகின்றனர்.

நான்கு பேரின் சமாதிக்கருகில் நின்றபடி ஒரு சமுராய் சொல்கிறான்: “போர் முடிந்து விட்டது. உழவன் பாடுகிறான். என்னால் பாட முடியுமா? முடியாது. அடுத்த போர் எங்கே என்று போக வேண்டும். உழுது உண்டு உட்கார்ந்திருக்கும் சுகம் என்னால் தாங்க முடியாது. எனக்குப் போர் வேண்டும். போராளிக்குச் சுகம் தேடுபவன் போராளி இல்லை ” நெஞ்சில் தாக்கும் படக்காட்சி!

போர் தேடும் வாழ்க்கை என் வாழ்க்கை. இராட்டைச் சக்கரமாய்ச் சுற்றாது காட்டாறாய்ப் பரவ ஆசைப்படுகிறேன். எனக்குப் போர் வேண்டும். அதுதான் என் இடம். அதுதான் என் வாழ்க்கை . எல்லா நோமும் விழிப்பாய் இருக்கிற நிலை வேண்டும். உண்டு களிக்கும் சுகமல்ல.

திருத்தூதர் பவுலுக்கு நிறைவு தந்தது எது? “நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன்... விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன்" (II திமோ.4:7) என்ற உணர்வு தானே! விசுவாசத்தைக் காக்கும் போராட்ட மனநிலையில் திருவருகைக் காலத்தில் அடியெடுத்து வைக்கிறோம். எனவே “அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாம் எனக் கர்ச்சிக்கும் சிங்கம் போலத் தேடித் திரிகிறது'' (1 பேதுரு 5:8) “அலகையின் ஏமாற்று வழிகளை எதிர்த்து நிற்கும் வலிமை பெறும்படி கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் அணிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் நாம் மனிதர்களோடு மட்டும் போராடுவதில்லை. ஆட்சி புரிவோர், அதிகாரம் செலுத்துவோர், இருள் நிறைந்த இவ்வுலகின்மீது ஆற்றல் உடையோர் வான்வெளியில் உள்ள தீய ஆவிகள் ஆகியவற்றோடும் போராடுகிறோம்” (எபேசி.6:11,12)

இறுதி அறிவுரையாகத் திருதூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதுவது இதுதான்: “விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு. நிலைவாழ்வைப் பற்றிக் கொள். அதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறாய்” (1 திமோ .6:12)

2000 ஆண்டுகளுக்கு முன் நம் மீட்பராக வந்த இயேசு இரண்டாம் முறையாக வரும்போது நம்நடுவராக வருவார். எப்பொழுது வருவார் என்பது தெரியாது என்பதனால் நாம் மெத்தனமாக இருக்கலாமா? 'எதிலும் மெத்தனம்' என்பது தானே சாத்தானின் வலிய ஆயுதம்! “தலைவர் வந்து பார்க்கும் போது தன் பணியைச் செய்து கொண்டிருக்கும் பணியாளர் பேறுபெற்றவர்” (லூக்.12:43)

எதுவாக இருந்தேன் என்பதோ, எதுவாக இருப்பேன் என்பதோ அல்ல, இன்று எதுவாக இருக்கிறேன் என்பதே முக்கியம் பெற வேண்டும். என்ன செய்தேன் என்பதோ, என்ன செய்வேன் என்பதோ அல்ல, இப்பொழுது என்ன செய்கிறேன் என்பதே முதன்மை காண வேண்டும். மீட்பராக வந்தவர் (வரலாற்று வருகை), நடுவராக வர இருப்பவர் (மகிமையின் வருகை), இங்கே வாழ்வு தருபவராக வருகிறாரே, அவரைக் காலத்தின் அறிகுறிகளில், இறைவனின் திருவார்த்தையில், அருள்சாதன கொண்டாட்டங்களில், சுற்றிவாழும் ஏழை எளியோரில் என்னால் இனம் காண முடிகிறதா? இதுதான் வர இருப்பவரைச் சந்திக்க நம்மைத் தயார் செய்யும், தகுதிப்படுத்தும்.

அப்படியானால் திருவருகை எதிர்பார்ப்பது என்ன? ஒரு போர் வீரனுக்குரிய விழிப்புணர்ச்சியையும் எச்சரிக்கை உணர்வையுமே!

விழிப்புணர்ச்சி : “ஊழியன் உறங்கிவிட்ட காரணத்தால் பகைவன் களைகளை விதைத்து விட்டுச் சென்றான்” (மத். 13:25) நாளை என்பது விடியலில் அல்ல, விழித்தலில் உள்ளது. இடைவிடாத விழிப்புணர்வு ஒன்றே ஏற்றமிகு மீட்புக்கான விலை.

எச்சரிக்கையுணர்வு : அபாயச் சங்கு ஒலிக்கிறதா? உடனே பாதுகாப்பான இடத்தைத் தேடிச் செல்ல வேண்டாமா? இல்லையென்றால் பரிதாபத்துக்குரிய அழிவுதானே காத்திருக்கும்! அதனால்தான் இயேசு நோவாவை இன்று நம் கண்முன் நிறுத்துகிறார்.

ஆபிரகாமின் விசுவாசம் சோதனைக்கு ஆளானது நோவாவின் விசுவாசம் கிண்டலுக்கு ஆளானது

கட்டாந்தரையில் கப்பல் கட்டியதைக் கண்டு பலர் நகைத்தாலும் இறைவன் தந்த எச்சரிக்கையன்றோ கேலிக்கும் கிண்டலுக்கும் இடையே நோவாவைச் செயல்பட வைத்தது!

“நோவாவின் காலத்தில் இருந்தது போலவே மானிட மகனின் வருகையின் போதும் இருக்கும் (மத்.24:37) என்றால் கடவுளின் வருகை அறத்தை நிலைநாட்டவரும். (தொ.நூ.6:5-6, 11-13)

திருத்தூதர் பவுலின் மூன்று அம்சத் தயாரிப்பைச் சிந்தையில் கொள்வோம்.

1. உறக்கத்தினின்று விழித்தெழு. இருளின் ஆட்சிக்கு உரியவற்றைக் களைந்து விடு. (ரோமை. 13:11-12)

2. இயேசுவை - கடவுள் தரும் படைக்கலன்களை அணிந்து கொள். (எபேசி.6:13, 1தெச.5:8)

3. கிறிஸ்துவில் வாழ்வு என்ற இலக்கு மீது கண்பதித்து ஆண்டவரின் மலைக்குச் செல். (எசா.2:3). அவரது பாதையில் நட, (1திமோத்.6:12, 2 கொரி.10:3).

“நாங்கள் நம்பியிருக்கும் பேரின்ப வாழ்வையும் எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையையும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்.'

ser ser

ஆண்டவர் வருகின்றார்... அணியமாய் இருங்கள்

நிகழ்வு
முன்பொரு காலத்தில் அரசர் ஒருவர் இருந்தார். அவரிடத்தில் விகடகவி ஒருவர் இருந்தார். அந்த விகடகவி அரசருக்கு நெருங்கிய நண்பராக வேறு இருந்தார். இரண்டுபேரும் பலவற்றைக் குறித்துப் பேசி மகிழ்வார்கள், கலந்துரையாடுவார்கள். இப்படியிருக்கையில் ஒருநாள் விகடகவி ஒரு முட்டாள்தனமான ஒரு செய்தியை அரசரிடம் சொன்னார். அதைக் கேட்டு அரசருக்குச் சிரிப்பை அடக்கமுடியவில்லை. “இப்படியொரு முட்டாள்தனமான செய்தியை என் வாழ்நாளில் இதுவரைக்கும் நான் கேள்விப்பட்டதே இல்லை... உண்மையில் நீர் பெரிய முட்டாள்” என்று சொல்லி, அரசர் விகடகவியிடம் ஒரு கோலைக் கொடுத்துவிட்டுச் சொன்னார்: “உம்மைவிடப் பெரிய முட்டாளை எப்பொழுது நீர் பார்க்கின்றீரோ, அப்பொழுது அவரிடம் இந்தக் கோலைக் கொடுத்துவிடும்.” இப்படிச் சொல்லிவிட்டு அரசர் அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.

இதற்குப் பின்பு விகடகவி தன்னைவிடப் பெரிய முட்டாளைத் தேடித் பார்க்கத் தொடங்கினார். நாள்கள் மாதங்களாகி, மாதங்கள் ஆண்டுகளானதே ஒழிய, அவரால் தன்னைவிடப் பெரிய முட்டாளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கு நடுவில் அரசருக்கு வயதாகிக்கொண்டே போனது. ஒருநாள் அவர் உடல்நிலை சரியில்லாமல் படுக்கையில் விழுந்தார். அவரைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், அவர் நீண்ட நாள்களுக்கு உயிர்வாழமாட்டார் என்று சொல்லிவிட்டார்கள். இதனால் அரசர் அரண்மனையில் இருந்த முக்கியமானவர்களை அழைத்து, அவர்களிடம் இறுதியாக ஒருசில வார்த்தைகளைப் பேச விரும்பினார். இதைத் தொடர்ந்து செய்தி அரண்மனையில் இருந்த முக்கியமானவர்களுக்குச் சொல்லப்பட்டு, அவர்கள் அனைவரும் அரசருக்கு முன்பாக வந்து கூடினார்கள். அவர்களோடு விகடகவியும் அங்கு வந்து நின்றார்.

அப்பொழுது அரசர் அவர்களிடம், “அன்பார்ந்தவர்களே! நானொரு நீண்ட பயணம் மேற்கொள்ளப் போகிறேன். இந்தப் பயணத்திற்குப் பின்னால் நான் உங்களைப் பார்ப்பானே என்றுகூட எனக்குத் தெரியாது. அதனால்தான் உங்களிடம் சொல்லிவிட்டுப் போகலாம் என்று உங்களைக் கூப்பிட்டேன்” என்றார். இதைக் கேட்டு எல்லாரும் கண்ணீர் வடித்து அழுதார்கள். பின்னர் விகடகவி அரசரிடம், “அரசே! உங்களிடம் ஒருசில வாத்தைகள் பேசவேண்டும்... வழக்கமாக நீங்கள் எந்தவொரு நாட்டிற்குப் பயணம் செய்தாலும் உங்களுடைய தூதரை அந்நாட்டு அரசரிடம் அனுப்பி, தங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்வீர்கள்தானே...! இப்பொழுது நீங்கள் சந்திக்கப்போவதோ அரசருக்கெல்லாம் அரசர்! அவரோடு தங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டீர்களா...? அவரைச் சந்திப்பதற்கு நீங்கள் அணியமாகிவிட்டீர்களா...?” என்றார். அரசருடைய முகத்தில் பெரிய ஏமாற்றம் தெரிந்தது. உடனே விகடகவி அவரிடம், “அரசருக்கெல்லாம் அரசரைச் சந்திக்கப்போகும்போது எந்தவோர் ஏற்பாடும் செய்யாமல் போகும் நீங்கள்தான் மிகப்பெரிய முட்டாள். இதோ இந்தக் கோலைப் பிடித்துக்கொள்ளுங்கள்” என்றார். அரசர் அப்படியே அதிர்ந்து போனார்.

இந்த நிகழ்வில் வருகின்ற, அரசருக்கெல்லாம் அரசரான ஆண்டவரைச் சந்திக்க அணியமில்லாமல் (ஆயத்தமாக இல்லாமல்) இருக்கும் அரசரைப் போன்றுதான் பலரும் ஆண்டவரைச் சந்திப்பதற்கு அணியமில்லாமல் இருக்கின்றார்கள். இந்நிலையில், இன்றைய இறைவார்த்தை ஆண்டவரின் வருகைக்காக அணியமாக இருக்கவேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது. நாம் எப்படி அணியமாக இருப்பது என்று இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவரை மறந்து, உலக வாழ்க்கையில் மூழ்கிப்போகும் மக்கள்
திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசகத்தில், இயேசு மானிடமகனுடைய வருகையின்போது என்னென்ன நடக்கும் என்பதைக் குறித்துப் பேசுகின்றார். அதற்காக அவர் கையில் எடுக்கும் அடையாளம் அல்லது எடுத்துக்காட்டுதான் நோவா. நோவாவின் காலத்தில் மக்கள் உண்டும் குடித்தும் தீமையில் வீழ்ந்தும் கிடந்தார்கள் (தொநூ 6:5). நோவாவோ வரப்போகின்ற கேட்டினைக் குறித்து மக்களிடம் எடுத்துச் சொன்னார் (2 பேது 2:5). அப்படியிருந்தும் மக்கள் அவருடைய குரலைக் கேளாமல், தீமையில் வீழ்ந்துகிடந்ததால், வெள்ளப்பெருக்கினால் அழிந்துபோனார்கள்.

இன்றைக்கும் கூட பலர் நோவாவின் காலத்தில் வாழ்ந்த மக்களைப் போன்று, ‘கண்டதே காட்சி, கொண்டதே கோலம்’ என்று வாழும் காலத்தில் எல்லாவற்றையும் அனுபவித்துவிடவேண்டும் என்ற நோக்கில் மேலுலகு சார்ந்த வாழ்க்கை வாழாமல், மண்ணுலகு சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இத்தகையோர் புனித பவுல் சொல்கின்ற, “இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள்’ (கொலோ 3: 2) என்ற சொற்களைத் தங்களுடைய சிந்தனைக்கு உட்படுத்திப் பார்ப்பது நல்லது.

எடுத்துக்கொள்ளப்படுதலும் விட்டுவிடப்படுதலும்

ஆண்டவர் இயேசு மானிடமகனுடைய வருகையின்போது என்ன நடக்கும் என்பதை விளக்கப் பயன்படுத்தும் இரண்டாவது அடையாளம்தான் ‘எடுத்துக்கொள்ளப்படுதலும்... விட்டுவிடப்படுதலும்’ ஆகும். இதனை நாம் எப்படிப் புரிந்துகொள்வது என்றால், கடவுளுக்கு ஏற்புடையவராய் வாழ்ந்து வந்த நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் பேழைக்குள் சென்றதால் அல்லது எடுத்துக்கொள்ளப்பட்டதால், அழிவிலிருந்து காக்கப்பட்டார்கள். அதைப்போன்று யாரெல்லாம் கடவுளுக்கு ஏற்புடையவற்றை நாடி, அவர் வழியில் நடக்கின்றார்களோ அவர்களெல்லாம் அழிவிலிருந்து காக்கப்படுவார்கள் அல்லது எடுத்துக்கொள்ளப்படுவார்கள்(மத் 24: 31).

அதே நேரத்தில் நோவாவின் காலத்தில் வாழ்ந்து வந்த மக்களைப் போன்று யாரெல்லாம் சிற்றின்ப நாட்டங்களிலும் தீமையிலும் வீழ்ந்து, தங்களுடைய வாழ்வைத் தொலைத்துக்கொள்கின்றார்களோ அவர்கள் அந்த மக்களைப் போன்று அழிவிற்கும் தண்டனைத் தீர்ப்புக்கும் உள்ளாவர்கள் (மத் 24:2; 2 பேது 3:10) என்பது உறுதி. நாம் எடுத்துக்கொள்ளப்படப் போகின்றோமா? அல்லது விட்டுவிடப்போகிறோமா?. நாம் அழிவிலிருந்தும் ஆபத்திலிருந்தும் காப்பாற்றப்படுவதற்கு அல்லது எடுத்துக்கொள்ளப்படுவதற்கு என்ன செய்யலாம் என்பதை இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

அணியமாய் இருப்போம் இயேசு கிறிஸ்து, மானிட மகனுடைய வருகையைக் குறித்துப் பேசுகின்றபோது பயன்படுத்துகின்ற மூன்றாவது எடுத்துக்காட்டு, வீட்டு உரிமையாளரும் திருடனும் ஆகும். திருடன் எப்பொழுது வருவான் என்று யாருக்கும் தெரியாது. அதனால் திருடனிடமிருந்து தன்னுடைய உடைமைகளைப் பாதுகாக்க நினைக்கும் வீட்டு உரிமையாளர் எப்பொழுதும் அணியமாக (ஆயத்தமாக) இருக்கவேண்டும். அதுபோன்றுதான் மானிடமகன் எப்பொழுது வருவார் என்று தந்தை ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது (மத் 24: 36). அப்படியானால், எவர் ஒருவர் எல்லாச் சூழ்நிலையிலும் கடவுளுக்கு உகந்தவற்றைச் செய்து அவருக்கு ஏற்புடையவராகின்றாரோ (கொலோ 1:10) அவரே கடவுடமிருந்து ஆசியையும் மேலே ‘எடுத்துக்கொள்ளப்பட்டு’ விண்ணகத்தில் நிலையான இன்பத்தைப் பெறுவார். இதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.

நாம் எப்பொழுதும் அணியமாய் இருந்து, ஆண்டவருக்கு உகந்தவற்றைச் செய்து, அவருக்கு ஏற்புடையவர்களாக இருக்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை ‘ஆண்டவரைத் தேடுங்கள். நீங்கள் வாழ்வடைவீர்கள்’ (ஆமோ 5:4) என்பார் ஆமோஸ் இறைவாக்கினர். ஆகையால், நாம் உலக நாட்டங்களில் மூழ்கிப்போய் அழிந்துபோகாமல், ஆண்டவரைத் தேடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser ser

ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்!

ஸ்மார்ட்ஃபோன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் பயன்படுத்தும் அனைவரும் பயன்படுத்தியிருக்கும் ஒரு ஆப்ஷன் 'டைமர்' ('timer'). அதாவது, ஒரு குறிப்பிட்ட நேரத்தைக் குறித்து அந்த நேரம் முடிந்தவுடன் நம்மை அலர்ட் செய்யும் இயக்கியே டைமர். குட்டித்தூக்கம், நினைவூட்டல், தியானம், நீராவி பிடித்தல் என எல்லாவற்றுக்கும் இந்த இயக்கியை நாம் பயன்படுத்துகிறோம். நம்மை அறியாமலேயே நாம் டைமர் போட்டு இயங்கிக்கொண்டிருக்கிறோம். எப்படி?

குழந்தையைக் கருவில் தாங்கியிருக்கும் ஒரு பெண் குழந்தை பிறக்கும் தேதி குறிக்கப்பட்டவுடன் அந்த நாள் மற்றும் நேரத்தை மையமாக வைத்து தன்னுடைய வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கிறாள். அந்த நாளுக்கேற்றாற்போல உணவு வகை, உடற்பயிற்சி, உடல் இயக்கம் என அனைத்தையும் ஒழுங்கு செய்கிறார். ஒவ்வொரு நாளும் கடக்க கடக்க அவளுடைய உள்ளத்தில் இனம் புரியாத மகிழ்ச்சியும் பயமும் ஒருசேர தோன்றி மறைகிறது. நாள் நெருங்க நெருங்க இந்த இரண்டு உணர்வுகளும் அதிகமாகின்றன. குழந்தை பிறக்கும் நாள் வந்தவுடன் அவள் இன்னும் கவனமாக இருக்கிறாள். தன் உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிக்கிறாள். தன் அம்மா மற்றும் உடன்பிறப்புக்களை துணைக்கு வைத்துக்கொள்கிறாள். வாகனத்தை முன்பதிவு செய்கிறாள். உணவு, தண்ணீரில் மிகக் கவனமாக இருக்கிறாள். தன்னுடைய இயக்கத்தை வீ;ட்டிற்குள் மட்டும் என வரையறுத்துக்கொள்கிறாள்.

திருமணத் தயாரிப்பு, அருள்பணி திருப்பொழிவு தயாரிப்பு, வேலைக்கான தயாரிப்பு, அறுவடைக்கான தயாரிப்பு என அனைத்தும் நாள் குறிக்கப்பட்டு 'டைமர்' ஓடுவதன் பின்புலத்தில்தான் நடைபெறுகின்றன. இப்படி நாம் செயல்படும்போது நம்மையே நன்றாக மேலாண்மை செய்ய முடிகிறது, முக்கியமானவற்றுக்கு மட்டும் நேரம் ஒதுக்கக் கற்றுக்கொள்ள முடிகின்றது.

புதிய திருவழிபாட்டு ஆண்டிற்குள் நுழைகிறோம். இந்த முதல்நாளில் நமக்குத் தரப்படும் வாசகங்கள் கடவுளின் டைமர் பற்றி நமக்கு விளக்குகின்றன.

அது என்ன கடவுளின் டைமர்?

'ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு. பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்' என முன்மொழிகின்ற சபை உரையாளர் அப்பகுதியின் இறுதியில், 'கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார். காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார். ஆயினும், கடவுள் தொடக்கமுதல் இறுதிவரை செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது' (காண். சஉ 3:1-2,11) என எழுதுகின்றார்.

காலம் என்றும் கடவுள் கையில் இருக்கிறது என்பது நமக்கு மிகப்பெரிய நினைவூட்டலாக இருக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 2:1-5), 'இறுதி நாள்களில்' ஆண்டவர் என்ன செய்வார் என்பதை எசாயா இறைவாக்கினர் எடுத்துரைக்கிறார். இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 13:11-14), 'இறுதிக்காலம் இதுவே,' 'விழித்தெழும் நேரம் வந்துவிட்டது' என்கிறார் பவுல். நற்செய்தி வாசகத்தில் 'எந்த நாளில் வருவார் என்று உங்களுக்குத் தெரியாது' என்றும், 'நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்' என்றும் மொழிகின்றார் இயேசு.

ஆக, மூன்று வாசகங்களிலும் காலத்தைப் பற்றிய குறிப்பு, 'நாள்,' 'நேரம்,' 'காலம்' போன்ற வார்த்தைகளில் காணப்படுகின்றது.

ஒவ்வொரு டைமரிலும் நேரத்துளிகள் முடிந்தவுடன் நாம் ஒரு வேலையைத் தொடங்குகிறோம். இறுதிநாளில், அல்லது வந்துவிட்ட இந்த நேரத்தில், நினையாத நேரத்தில் நாம் செய்ய வேண்டிய வேலை ஒன்றே ஒன்றுதான்: 'ஆண்டவரின் இல்லத்திற்குப் போவது!'

திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிற்றின் செய்தி இதுதான்: 'ஆண்டவரின் இல்லத்திற்கு அல்லது மலைக்குப் போவோம்!'

ஆண்டவரின் இல்லத்திற்கு நாம் போக வேண்டும் என்று இன்றைய முதல் வாசகத்தில் எசாயாவும், பதிலுரைப்பாடலில் திருப்பாடல் ஆசிரியரும் கூறுகின்றார் என்றால் நாம் இப்போது இருக்கும் இல்லத்தில் என்ன பிரச்சினை? ஏன் இந்த இல்லத்தை விட்டுவிட்டு ஆண்டவரின் இல்லத்திற்குப் போக வேண்டும்?

நாம் இப்போது வாழும் இந்த உலகம் அல்லது இல்லத்தில் உள்ள மூன்று பிரச்சினைகளைப் பதிவு செய்கின்றன:

அ. ஆண்டவரின் நெறியை விட்டு நம் நெறியில் வாழ்வது
நீதித்தலைவர்கள் நூலில் ஒரு வாக்கியம் அடிக்கடி வரும்: 'அந்நாள்களில் இஸ்ரயேலுக்கு அரசன் கிடையாது. ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் நேர்மையெனப்பட்டதைச் செய்துகொண்டிருந்தனர்' (காண். நீத 21:25). இவர்கள் நேர்மையெனப்பட்டதைச் செய்தார்கள் என்றால் நேர்மையானவற்றைச் செய்தார்கள் என்று பொருள் அல்ல. மாறாக, தங்களுக்கு நேர்மையெனப்பட்டதைச் செய்தனர். இறுதிநாள்களில், 'நாம் ஆண்டவரின் நெறியில் நடப்போம்' என்று மக்கள் சொல்வதாக எசாயா எழுதுகின்றார். அப்படி என்றால், இப்போது அவர்கள் தங்கள் நெறியின்படி வாழ்கின்றனர். திருச்சட்டத்தை மறந்தவர்களாகவும், வன்முறை, போர் போன்றவற்றால் அலைக்கழிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

ஆ. இருளின் செயல்களை அணிந்திருத்தல்
உரோமைத் திருச்சபையில் உள்ளவர்கள் இருளின் செயல்களை - அதாவது, களியாட்டம், குடிவெறி, கூடாஒழுக்கும், காமவெறி, சண்டைசச்சரவு - அணிந்துகொண்டிருக்கின்றனர். இருளின் செயல்கள் இவை மட்டுமல்ல. நம் தனிப்பட்ட வாழ்வில் நாம் கொண்டிருக்கின்ற தாழ்வு மனப்பான்மை, கோபம், பயம், தன்மதிப்பு குறைவு போன்றவையும் இருளின் செயல்களே.

இ. தயார்நிலை அல்லது விழிப்புநிலை இல்லாமல் இருத்தல்
நோவாகாலத்து மக்கள் உலகம் அழியப்போகிறது என்ற விழிப்புநிலை இல்லாமல் இருந்ததால் அவர்கள் அதற்கென எதுவும் தயாரிக்கவில்லை. மேலும், தயார்நிலை அல்லது விழிப்புநிலையில் இல்லாதவரின் வாழ்வு சூறையாடப்படும். அவர் மானிடமகனால் தேர்ந்துகொள்ளப்பட மாட்டார்.

இந்த மூன்று பிரச்சினைகளிலிருந்து நாம் விடுபட்டால்தான் ஆண்டவரின் இல்லம் நோக்கி நாம் திரும்ப முடியும். மேற்காணும் மூன்று பிரச்சினைகளும் இன்று நம் இல்லத்தில் அல்லது உள்ளத்தில் இருந்தால் அவற்றை நாம் அப்படியே விட்டுவிட்டுச் செல்தல் அவசியம்.

அப்படி நாம் ஆண்டவரின் இல்லத்திற்குச் செல்வதால் நாம் அடையும் பயன்கள் எவை?

அ. தலைகீழ் மாற்றம்
தலைகீழ் மாற்றத்தை உருவகமாகப் பதிவுசெய்கின்றார் எசாயா: 'வாள்கள் கலப்பைக் கொழுக்களாகும். ஈட்டிகள் கருக்கரிவாள்களாகும். போர்ப்பயிற்சி நடைபெறாது.' ஆக, முந்தைய நிலை முற்றிலும் மாறிப்போகிறது. மேலும், அழிவின் காரணிகளாக இருந்தவை விவசாயத்தின், ஆக்கத்தின் கருவிகளாக மாறுகின்றன. ஆண்டவரின் இல்லத்தை நோக்கி நாம் பயணத்தைத் திருப்பும்போது நம்முடைய வாழ்விலும் தலைகீழ் மாற்றம் நிகழும்.

ஆ. கிறிஸ்துவை அணிந்துகொள்வோம்
'அணிந்துகொள்தல்' என்பது முற்றிலும் ஆட்கொள்ளப்படுதலைக் குறிக்கும். இருளை அணிந்துகொண்டவர்கள் இனிமேல் கிறிஸ்துவை அணிந்துகொள்ளவேண்டும். நாம் அணியும் எதுவும் நமக்கு மதிப்பு தருகிறது. ஆகையால்தான் சிறந்தவற்றையும், சிறந்த பிராண்ட்களையும் நாம் அணிந்துகொள்ள விரும்புகிறோம். பார்க் அவென்யு, க்ரோகொடைல் போல 'கிறிஸ்து' என்ற பிராண்டை நாம் அணிந்துகொண்டால், நம் வெளி இயல்பும் உள்ளே உள்ள இயல்பும் ஒன்றாக இருக்க வேண்டும்.

இ. மானிடமகனால் எடுத்துக்கொள்ளப்படுதல்
வயலில் இருக்கும் இருவரில் ஒருவர், மாவரைக்கும் இருவரில் ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுகின்றார். மற்றவர் விடப்படுகின்றார். எடுத்துக்கொள்வது இறைவனின் தெரிவு. ஆனால், ஆயத்தமாய் இருப்பவர்களையே அவர் எடுத்துக்கொள்கின்றார். ஆயத்தம் இல்லாதவர் தொடர்ந்து வயலிலும் திரிகையிலும் வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும். ஆண்டவரின் மலைக்குச் செல்ல நாம் என்ன செய்ய வேண்டும்?
அ. அவர் நெறியில் நடக்க வேண்டும்
ஆ. விழித்தெழ வேண்டும்
இ. தயார்நிலையில் இருக்க வேண்டும்

''ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்' என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்' என்று பாடுகின்றார் திருப்பாடல் ஆசிரியர் (காண். 122:1). அந்த இல்லத்தில் நீதியும், அமைதியும், நல்வாழ்வும் இருக்கிறது.

நமக்கு முன் நிறைய நேரம் இருக்கிறது என நினைத்து நம் வாழ்வை வாழ்ந்துகொண்டிருப்பதை நிறுத்துவோம். ஆண்டுகள் நிறையத் தெரியலாம். ஆனால், பத்தாண்டுகளாகப் பிரித்தால் நம் வாழ்வு வெறும் ஏழு அல்லது எட்டு பத்தாண்டுகளே. நம்முடைய வாழ்வின் நேரம் குறைவு என்று நினைக்கத் தொடங்கும் அந்த நாளில்தான் நாம் புதிதாய்ப் பிறக்கிறோம். இந்த எண்ணம் நமக்கு பயத்தை அல்ல, எதிர்நோக்கையே தர வேண்டும்.

'ஆண்டவரின் இல்லத்திற்குப் போவதை' நான் என்னுடைய வாழ்வின் இலக்காக நினைத்து, அதற்கான டைமர் ஓடிக்கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு, வாழ்வை நான் அன்றாடம் வாழ்ந்தால் வீண் சண்டை சச்சரவுகளில் நேர மற்றும் ஆற்றல் விரயமும், பயமும், கோபமும், பாதுகாப்பின்மையும், வன்மமும், தீய இச்சையைத் தூண்டும் ஊனியல்பும், சோம்பலும், தூக்கமும் இருக்காது.

நாம் இன்று ஏற்றும் 'எதிர்நோக்கு' என்னும் மெழுகுதிரி 'ஆண்டவரின் இல்லத்திற்குப் போவோம்!' என்ற எதிர்நோக்கை நம் உள்ளத்தில் ஏற்றுவதாக!

ser

sunday homily


முகப்பு பக்கம்
வத்திக்கான் வானொலி
கத்தோலிக்க இதழ்கள்
ஞாயிறு வாசகம்
விருந்தினர் பக்கம்
உம் வாக்கே விளக்கு!
சென்னை பங்குதலங்கள்
நூலகம்
திருத்தலச் சுற்றுலா
தவக்கால சிந்தனைகள்
ஒலியும் ஒளியும்
அன்னை தெரேசா
கிறிஸ்மஸ் மலர்கள்
பொங்கல்
செபமாலை
பாடல்கள்
செபமே ஜெயம்A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com