மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

ஆண்டின் ஆறாம் ஞாயிறு
முதலாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
சீராக் ஞானம் 15:16-21 | 1கொரிந்தியர் 2:6-10 | மத்தேயு 5: 17-37

ser

ஆடு மேய்க்கும் ஒருவர் புல்வெளிக்கு பக்கத்தில் இருந்த நடை பாதையில் ஒரு குடிசை போட்டு ஆடுகளைக் கவனிக்க விரும்பினார். அதற்கு அடுத்தவர் அனுமதிக்கவில்லை . இது நடை பாதை . இதில் குடிசை போடக்கூடாது எனத் தடுத்தார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு நீதிமன்றம் நோக்கி நடந்தார்கள். ஆனால் நீதிபதி தண்ணீர்க் குடத்தைச் சுமந்து எதிரே வருவதைக் கண்ட இவர்கள் எங்கள் பிரச்சனையை உங்களிடம் சொல்ல வந்துள்ளோம். முதலில் உங்கள் தண்ணீர்க் குடத்தை கீழே இறக்கி வையுங்கள். நிதானமாகப் பேசுவோம் என்றான் குடிசை போட விரும்பிய ஆடு மேய்ப்பவன். அதற்கு நீதிபதி, இது நடை பாதை. இதை கீழே இறக்கி வைத்தால் இந்த வழியாய்ப் போகும் வழிப் பயணிகளுக்குத் தடையாக இருக்கும். எனவே நான் கீழே இறக்க விரும்பவில்லை. உங்கள் பிரச்சனையைச் சொல்லுங்கள் என்றார் நீதிபதி. குடிசை போடத் திட்டமிட்ட மனிதன் நீதிபதிக்கு நன்றி சொல்லிவிட்டு, தன் நண்பனிடம் மன்னிப்புக் கேட்டு சமாதானம் செய்து கொண்டான். ஏனெனில் நீதிபதி குடத்தைக் கீழே இறக்காமல் இருந்ததே நடை பாதையில் குடிசை போட முடியாது என்ற பதிலைத் தந்தது.

ஆம்! உன் சகோதரனோடு மனத்தாங்கல் இருந்தால், முதலில் சமாதானம் செய்து கொள். பின்னர் வந்து உன் காணிக்கையைச் செலுத்து என்கிறார் இயேசு (மத். 5:24-25).

இன்றைய நற்செய்தியிலே ஏழு கட்டளைகள் கொடுக்கப் பட்டுள்ளன. 1. சினம் கொள்ளாதே. 2. சமாதானம் செய். 3. பெண்களை இச்சையோடு நோக்காதே . 4. ஐம்புலன்களால் இடறல் படாமல் இரு. 5. மணமுறிவைத் தேடாதே. 6. தீர்ப்பிட வேண்டாம். 7. உண்மையை மட்டும் பேசு. கோபம் இரண்டு வகைப்படும். ஒன்று மற்றவர்களை அழித்து, தான் மட்டும் உயர வேண்டும் என்பது. இரண்டாவது சுயநலமற்ற, அன்பு கலந்த அக்கறை உணர்வோடு உண்டாகும் கோபம். இந்த இரண்டாம் வகை கோபத்தைத்தான் ஆண்டவர் இயேசு பரிசேயர்களிடமும், ஆலயத்திலும் வெளிப்படுத்தினார் (யோவா. 2:13-17).

இன்று மனித உறவுகளில் பல்வேறு நோய்களுக்கும் அடிப்படை, முதன்மை காரணம் யோசிக்காமல், திட்டமிடாமல் தவறு நடந்த பிறகு கோபப்படுவதாக அமைகிறது. யாருக்கும் பயன்படாத செடியை வேரோடு பிடுங்கி விடுவதே நல்லது. இதேபோலத்தான் கோபமும் அடியோடு நீக்கப்பட வேண்டும்.

தன் சகோதரனிடம் கோபம் கொள்பவர் தீர்ப்புக்கு உள்ளாவார் (மத். 5:22).

ஆகவே கோபம், பகை, வெறுப்பு இவைகளை அடியோடு ஒழிக்க முயல்வோம். மற்றவர்களைப் பற்றிய இனிமையான நினைவுகளை மட்டும் மனதில் கொள்வோம்.

ser ser

இயேசுவின் கட்டளைகள் இனியவை!

ஒருவன் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து, வாழ்நாள் முழுவதும் கடவுளுக்கு விருப்பமுள்ளவனாய் வாழ்ந்தால், அவன் கடைப்பிடிக்கும் கட்டளைகள் அவனைக் காப்பாற்றும் என இன்றைய முதல் வாசகம் கூறுகின்றது.

கடவுளின் ஒவ்வொரு கட்டளையும் அவரது அன்பை மனித குலத்திற்குப் பிரதிபலிக்கும் காலக் கண்ணாடி. ஆகவே ஒருவன் கடவுளை அன்பு செய்தால் அவர் தரும் கட்டளைகளைக் கடைப்பிடிப்பான். இதனால்தான் இயேசு, நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால், என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள் (யோவா 14:15) எனக் கூறியுள்ளார்.


புதிய ஏற்பாட்டில் இயேசு இறைமக்களுக்கு அளிக்கும் கட்டளைகளில் சில இன்றைய நற்செய்தியில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவர் அருளும் ஏழு கட்டளைகள் :
1. சினம் கொள்ளக்கூடாது.
2. உன் சகோதரனோடு சமாதானமாக வாழ்.
3. பெண்களை இச்சையோடு நோக்காதே.
4. உன் ஐம்புலன்களும் உனக்கு இடறலாயிராதபடி பார்த்துக்கொள்.
5. மணமுறிவைத் தேடாதே.
6. ஆணையிடவே வேண்டாம்.
7. எப்பொழுதும் உண்மையே பேசு.


நமது சிந்தனைச் சக்கரத்தை முதல் கட்டளையைச் சுற்றி சற்று ஓடவிடுவோம். சினம் கொள்ளக்கூடாது என்கின்றார் இயேசு. சினம் ஒரு வகையில் கொலையைவிடப் பெரிய பாவம்! கொலை உடலுக்கு ஊறு விளைவிக்கின்றது. ஆனால் ஒருவனின் சினம் உடலைவிட உயர்ந்த ஆன்மாவிற்குத் துயரத்தைக் கொடுக்கக்கூடும். அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறளொன்று, தீயினால் சுட்டபுண் உள் ஆறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு என்று கூறியிருப்பதை நாமறிவோம். இதனால்தான் இயேசு, ஒருவன் மற்றவனைப் பார்த்து முட்டாள் என்றோ, மதிகெட்டவனே என்றோ சொல்லுதல் கூடாது என்று கூறுகின்றார்.

சினம் கொள்ளவே கூடாதா? என்ற கேள்வி சிலர் உள்ளத்தில் எழலாம். இந்த கேள்விக்குப் பதிலை, புனித பவுலடிகளார் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் கொடுக்கின்றார். எபே 4:26 அ-இல் சினமுற்றாலும் பாவம் செய்யாதீர்கள் என்று கூறுகின்றார். இந்த அறிவுரை, நம்மைப் பாவத்திற்கு உட்படுத்தாத சினமொன்று இருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது.

சினத்தில் இரண்டு வகைகள் உள்ளன: ஒன்று கட்டுக்கடங்காத சுயநலத்துடன் மற்றவர்களை அடியோடு அழிக்கின்ற கோபம்; மற்றொன்று அடக்கமான, சுயநலமற்ற, மற்றவர்களை உருவாக்குகின்ற கோபம். இரண்டாம் வகை சினத்தைத்தான் இயேசு பரிசேயர்களிடமும் (மாற் 3:5), கோயிலிலும் (யோவா 2:13-17) வெளிப்படுத்தினார். அர்த்தமுள்ள சினத்திற்கு விளக்கம் தரும் கதை ஒன்று உண்டு. ஆடு மாடுகளை மேய்க்கச் சென்ற சிறுவர், சிறுமிகள் சிலர் காட்டில் வாழ்ந்த நாகமொன்றிற்குப் பெருந்தொல்லை கொடுத்தனர். சினம் கொண்ட நாகம் அவர்களில் சிலரைக் கடித்துக் காயப்படுத்தியது. காட்டின் வழியே பயணம் செய்த துறவி ஒருவர் அந்தப் பாம்பைப் பார்த்து, இனி யாரையும் கடிக்காதே என்றார். அதற்கு பாம்பு, அவர்களும் எனக்கு எந்தத் துன்பத்தையும் கொடுக்கக் கூடாது என்று சொல்லிச் செல்லுங்கள் என்றது.

பாம்பு துறவி கேட்டபடி கடிக்கவே மாட்டேன் என்று சத்தியமும் செய்து கொடுத்தது. இதையறிந்த சிறுவர்களும், சிறுமிகளும் பாம்பின் சத்தியத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, பாம்பை அடித்துத் துன்புறுத்தி அதன் மண்டையை உடைத்தார்கள். காயப்பட்ட பாம்பு எலும்பும், தோலுமானது. ஆறு மாதத்திற்குப் பிறகு அதைப் பார்க்கச் சென்ற துறவி அதன் நிலைகண்டு மனம் வருந்தி, உனக்கு ஏன் இந்நிலை? என்றார். அதற்கு அந்தப் பாம்பு நடந்ததைச் சொன்னது. அப்பொழுது துறவி, நீ மற்றவர்களைக் கொத்தக்கூடாது என்றுதான் கூறினேனேயொழிய, சீற வேண்டாம் என்று கூறவில்லையே! என்றார். பின் பாம்பு எப்படி வாழ்ந்திருக்கும் என்பதை நாம் யூகித்துக்கொள்ளலாம்.

கடின மனம், அநீதி, அக்கிரமம், வஞ்சகம், சூழ்ச்சி இவற்றை மாற்ற சினம் கொள்ளலாம். ஆனால் எது நீதி, எது அநீதி, எது சரி, எது தவறு என்பதை எப்படி அறிவது? அதற்கு இரண்டாம் வாசகம் பதில் கூறுகின்றது. இறைவனால் அன்பு செய்யப்பட்ட நம் அனைவருக்கும் திருமுழுக்கின் வழியாக கடவுளின் ஞானமாகிய இயேசு அருளப்பட்டிருக்கின்றார். அவரின் அருள் துணையோடு நாம் சரியானவற்றைக் கண்டுணர்ந்து, இறைவனின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரின் பாதுகாப்பிற்கு உரியவர்களாக வாழ்வோம்.


மேலும் அறிவோம் :

சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும்
ஏமப் புணையைச் சுடும் (குறள் : 306).

பொருள் : கோபம் ஆகிய தீ தன்னைக் கொண்டவரை ஒழிப்பதோடு, அவருக்குத் துன்ப வேளையில் பாதுகாப்பாக உதவும் தோணி போன்ற சுற்றத்தார் அனைவரையும் அழித்து விடும் |

ser ser

ஓர் இந்து ஆசிரமத்தில் பூசை நடத்தபோதெல்லாம் பூசை அறையில் நுழைந்து தொந்தரவு கொடுத்த ஒரு பூனையை பூசை நடக்கும்போது பூசை அறைக்கு எதிரிலிருந்த ஒரு மரத்தில் கட்டவேண்டுமென்று கட்டளையிட்டார் ஆசிரமத்தின் குரு. அந்த குருவும் அந்த பூனையும் இறந்த பின்னும், பூசை நடத்தபோது மற்றொரு பூனை பூசை அறைக்கு எதிரிலிருந்த அதே மரத்தில் கட்டப்பட்டது. தசை நடக்கும்போது பூனையைக் கட்டி வைப்பது ஓர் இன்றியமையாத சடங்காகிவிட்டது.

கிறிஸ்துவின் காலத்தில் பரிசேயர்கள் ஒரு சில சடங்குகளை அவற்றின் பொருள் புரியாமல் இயந்திரமயமாகக் கடைப்பிடித்து வந்தனர். திருச்சட்டங்களைக்கூட அவற்றின் உள் நோக்கம் புரியாமல் குருட்டுத்தனமாகக் கடைப்பிடித்து வந்தனர். அவர்களின் ஒழுக்கம் வெறும் புற ஒழுக்கமாகிவிட்டது; அக ஒழுக்கத்தைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. பரிசேயர்களின் இந்தப் போக்கைக் கிறிஸ்து கண்டித்து, தம் சீடர்களிடம் இன்றைய நற்செய்தியில் கூறுகிறார்: "மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில் நீங்கள் விண்ணரசுக்குள் புகமுடியாது" (மத் 5:20).

கிறிஸ்தவர்களுடைய ஒழுக்கம் சட்டம் சார்ந்த புற ஒழுக்கமாக மட்டும் அமையாமல், ஆவியாரால் நெறிப்படுத்தப் படும் அகொழுக்கமாக அமைய வேண்டுமென வலியுறுத்துகிறார் கிறிஸ்து, இன்றைய நற்செய்தி மலைப் பொழிவின் தொடர்ச்சி யாகும். இதில் கிறிஸ்து சட்டங்களை நாம் எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டுமென விளக்குகிறார்.

ஒரு நோயை முற்றிலுமாகக் குணமாக்கவேண்டுமெனில், அந்நோயின் தன்மை, அதன் காரணம், அதற்கான மருந்து ஆகியவற்றை அறிந்து, மருந்தை நோயாளிக்குப் பொருந்தும்படி கொடுக்கவேண்டும் என்கிறார் வள்ளுவர்.


"நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாயப்பச் செயல் (குறள் 948)

அவ்வாறே, ஒரு பாவச் செயலை அல்லது தீச்செயலை தடுக்க வேண்டுமென்றால், அதன் காரணத்தை அறிந்து அதைக் களைய வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் கிறிஸ்து. கொலையைத் தடுக்க வேண்டுமென்றால், அதற்குக் காரணமான கோபத்தைக் குழிதோண்டிப் புதைக்க வேண்டும் (மத் 5:21). விபசாரத்தை விலக்க வேண்டுமென்றால், அதற்குக் காரணமான காம இச்சை நிறைந்த பார்வைக்கு வேகத்தடை போட வேண்டும் (மத் 5:27-28), கொலை செய்பவர்கள் மட்டும் கொலைக்காரர்கள் அல்ல. பிறர் மீது கோபம் கொள்பவர்களும் பிறரைப் பகைக்கிறவர்களும் கொலைக்காரர்கள், "தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் அனைவரும் கொலையாளிகள்" (1 யோவா 3:15), சினத்தை நாம் அடக்காவிட்டால், அச்சினமே நம்மைக் கொன்று அடக்கம் செய்துவிடும் என்று எச்சரிக்கிறார் வள்ளுவர்.

'தன்னைத்தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்" (குறள் 305)

ஒரு வீட்டில் கணவனும் மனைவியும் எப்போதும் சிரித்துக் கொண்டே இருந்தனர். இது எப்படி சாத்தியமாகும் மனைவிக்குக் கோபம் வரும்போது கணவர் மீது கரண்டியைத் தூக்கி எறிவாள். அது கணவர் மீது விழுந்தால் அவள் சிரிப்பாள். அது அவர்மேல் படாமல் கீழே விழுந்துவிட்டால் கணவம் சிரிப்பார். இது எப்படி இருக்குது? எத்தனையோ திருமணங்கள் தம்பதியரின் கோபத்தால், சகிப்புத்தன்மை இல்லாததால் மணமுறிவில் முடிவடைகின்றன. கோபப்பட்டாலும் கதிரவன் மறையும்முன் கோபம் மறைந்து விடவேண்டும் (எபே 4:26).

விபசாரம் செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது: பெண்களைக் காம இச்சையுடன் நோக்கக்கூடாது. தாவீது மன்னர் உரியாவின் மனைவியுடன் விபசாரம் செய்யக் காரணம், அவன் குளித்துக் கொண்டிருந்தபோது அவளைக் காம இச்சையுடன் நோக்கியதே ஆகும் (2 சாமு 11:2-4), கண் போன போக்கிலே கால் போகலாமா? கால்போன போக்கிலே மனம் போகலாமா? மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா? அடுத்தவரின் மனைவியை நோக்காமல் இருப்பதுதான் ஆண்மைக்கு அழகு அண்; ஆன்ற ஒழுக்கம்.

“பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு" (குறள் 148)

 
ஒவ்வொரு நாளும் திருமணமான ஒருவர் பூக்காரியிடம் ஒரு கொத்து மல்லிகைப் பூ வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போவார். 'மனைவியின்மீது கொண்ட அன்பினாலா?' என்று அவரைக் கேட்டதற்கு அவர் கூறினார்: "இல்லை; பூக்காரிமீது கொண்டுள்ள அன்பினால், காலப்போக்கில் திருமண அன்பு திசைமாறித் திருட்டுத்தனமான அன்பாகிவிடுகிறது.

மனிதருக்குக் கடவுள் மனச் சுதந்திரம் கொடுத்துள்ளார். அதை அவர்கள் பயன்படுத்தும் விதம் அவர்கள் கையில் உள்ளது என்கிறது இன்றைய முதல் வாசகம். "மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும்" (சீஞா 15:17).

ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்" என்று பதிலுரைப் பாடல் கூறுகிறது (திபா 119:1). திருச்சட்டங் களைக் கிறிஸ்து மலைப் பொழிவில் விளக்கியுள்ள படி கடைப் பிடித்தால் நாம் பேறுபெற்றவர்கள். சட்டங்களை எழுத்து வடிவில் அல்ல, அவற்றின் உள்ளுயிரில் கடைப்பிடித்தல் வேண்டும். ஏனெனில், திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "எழுதப்பட்ட சட்டத்தால் விளைவது சாவு: தூய ஆவியால் விளைவது வாழ்வு" (2 கொரி 3:6).

ser ser

உங்கள் நெறி சிறந்திருக்கட்டும்

நிகழ்வு

சீனாவைச் சார்ந்த செங்கிஸ்கான் என்ற மன்னன் ஒருநாள் தன்னுடைய செல்லப் பறவையான கழுகோடு, குதிரையில் அமர்ந்துகொண்டு காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். செல்லும்வழியில் அவனுக்குக் கடுமையான தாகம் எடுத்தது. தண்ணீருக்காக அவன் எங்கெல்லாமோ அலைந்தான். நீண்டநேரத்திற்குப் பிறகு ஒரு பாறையிலிருந்து லேசாகத் தண்ணீர் வருவதைக் கண்ட அவன் குதிரையிலிருந்து இறங்கி, கழுகின் தலையில் மாட்டி வைத்திருந்த வெள்ளிக் குல்லாவைக் கழற்றி அதில் தண்ணீர் பிடிக்கத் தொடங்கினான். அந்நேரத்தில் அவனுடைய கழுகு வானத்தில் வட்டமடிக்கத் தொடங்கியது.

ஒருவழியாக வெள்ளிக் குல்லாவில் தண்ணீர் நிரம்பியதும், அதைக் குடிப்பதற்காக செங்கிஸ்கான் தன் வாயருகே கொண்டுசென்றான். அப்பொழுது வேகமாகப் பறந்துவந்த அவனது கழுகு அதனைத் தட்டிவிட்டது. செங்கிஸ்கானுக்கு கடுஞ்சினம் வந்தது. ‘இது ஏன் இப்படிச் செய்தது?’ என்று மனத்திற்குள் அதனைத் திட்டித் தீர்த்தான். பிறகு மீண்டுமாக அந்த வெள்ளிக் குல்லாவில் தண்ணீர் பிடிக்கத் தொடங்கினான். தண்ணீர் அதில் சொட்டுச் சொட்டாக விழுந்தது நிரம்பியதும், குடிப்பதற்குத் தன் வாயருகில் கொண்டு சென்றான். இந்த முறையும் கழுகு வேகமாகப் பறந்து வந்து, அவனுடைய கையில் இருந்த வெள்ளிக் குல்லாவைத் தட்டிவிட்டது. அவனுக்குச் சினம் தலைக்கேறியது. உடனே அவன், “இனிமேல் நீ என்னுடைய கையிலிருந்து தண்ணீரைத் தட்டிவிட்டால், வாளுக்கு இரையாவது” என்றான்.

இதற்குப் பின்பு அவன் மிகவும் பொறுமையிழந்தவனாய் வெள்ளிக் குல்லாவில் தண்ணீர் பிடிக்கத் தொடங்கினான். தண்ணீர் வெள்ளிக் குல்லாவில் நிறைந்ததும் அதை குடிப்பதற்கு அவன் தன் வாயருகில் கொண்டு சென்றபொழுது, முன்புபோல் வேகமாகப் பறந்து வந்த கழுகு, அதைத் தட்டிவிடப் பார்த்தது. அதற்குள் அவன் தன் இடையிலிருந்த வாளை உருவி, கழுகை ஒரே வெட்டாக வெட்டினான். அப்பொழுதும்கூட கழுகு அவனுடைய கையில் இருந்த வெள்ளிக் குல்லாவைத் தட்டிவிட்டே தரையில் விழுந்தது. அவன் ஒன்றும் புரியாதவனாய், தண்ணீர் வந்துகொண்டிருந்த பாறையின்மீது ஏறிப்பார்த்தான். அங்கு ஒரு கருநாகம் செத்துக் கிடந்ததைக் கண்டு, ‘சினத்தில் நம்முடைய செல்லப் பறவையை இப்படித் தேவையில்லாமல் கொன்றுபோட்டுவிட்டோமே!’ என்று மிகவும் வருந்தினான்.

பின் அரண்மனைக்குத் திரும்பிய அவன் தங்கத்தால் ஒரு கழுகினைச் செய்து, அதற்குக் கீழ், “சினத்தில் செய்யப்படும் யாவும் துயரத்தையே தரும்” என்று பொறித்து, அதனை மக்கள் பார்வைக்கு வைத்தான்.

ஆம், சினத்தால் ஏற்படுகின்ற விளைவு மிகக் கொடூரமானது. பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, சினத்தால் ஏற்படுகின்ற விளைவுகள் எத்தகையவை, அதன் மாற்று என்ன ஆகியவற்றைக் குறித்து எடுத்துக்கூறுகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

நமக்கு முன்பாக வாழ்வும் சாவும்

சீராக்கின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், “மனிதர் முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகின்றார்களோ அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும்” என்கின்றது. இவ்வார்த்தைகளை இன்றைய நற்செய்தி வாசகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் வாழ்வு எது, சாவு எது என்று நமக்குப் புரிந்துவிடும். சாவு என்று நற்செய்தியில் இயேசு குறிப்பிடுவது சினமாகும். வாழ்வு என்று இயேசு குறிப்பிடுவது நல்லுறவாகும். நல்லுறவும் சினமும் எப்படி வாழ்வாக, சாவாக இருக்கின்றன என்பதைக் சற்று விரிவாகச் சிந்தித்துப் பார்ப்போம்.

சாவுக்கு இட்டுச் செல்லும் சினம்

‘கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்’ (விப 20:13) என்பது பழைய (ஏற்பாட்டுச்) சட்டமாக இருந்தது. ஆண்டவர் இயேசுவோ, “தம் சகோதர் சகோதரிகளிடம் சினங்கொள்கின்றவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்.....” என்ற புதிய சட்டத்தைத் தருகின்றார். எதற்காக இயேசு, சினங்கொள்கின்றவர் தண்டனைக்குத் தீர்ப்பு ஆளாவார் எனச் சொல்கின்றார் என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

புனித யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில் இவ்வாறு கூறுவார்: “மனிதரின் சினம் கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள் நிறைவேறத் தடையாய் இருக்கின்றது.” (யாக் 1:20). கடவுளுக்கு ஏற்புடையது அல்லது விரும்புவது எல்லாம், இப்புவியில் அன்பும் அமைதியும் பெருகுவதைதான். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், இவ்வுலகம் அமைதிப் பூங்காவாக இருக்கவேண்டும் என்றே இறைவன் விரும்புகின்றார் (எசாயா 11). அதற்குத் தடையாக இந்தச் சினம் இருக்கின்றது. ஏனெனில், வெளியே காட்டப்படாமல், உள்ளே அடக்கி வைக்கப்பட்டிருக்கின்ற சினம் நாளாக நாளாக முற்றி கொலைசெய்வதற்கும் இன்னும் பல்வேறு தீமைகளைச் செய்வதற்கும் காரணமாக அமைந்துவிடும். இவ்வாறு சினம் பல்வேறு தீமைகளுக்குக் காரணமாக இருப்பதால்தான் இயேசு சினம் கொள்கின்றவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார் என்று கூறுகின்றார்.

வாழ்வுக்கு இட்டுச்செல்லும் நல்லுறவு

சினம் சாவுக்கு இட்டுச் செல்லும் என்று குறிப்பிட்ட இயேசு, வாழ்வுக்கு இட்டுச் செல்லும் வழி ஒன்றைக் குறிப்பிடுகின்றார். அதுதான் நல்லுறவாகும். தன் சகோதர் சகோதரியோடு நல்லுறவு ஏற்படுத்திக்கொண்டு செலுத்தப்படும் பலியே சிறந்தது என்று குறிப்பிடும் இயேசு, எதிரியோடு நீதிமன்றத்திற்குச் செல்கின்றபோதும் நல்லுறவு ஏற்படுத்திக்கொண்டால் நலம்பயக்கும் என்று குறிப்பிடுகின்றார். ஏன் இயேசு நல்லுறவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகின்றார் எனில், அவர் நல்லுறவின் கடவுளாக இருக்கின்றார் (யோவா 17:11) மேலும் நல்லுறவோடு இருக்கின்ற இடத்தில் அவர் இருக்கின்றார் (மத் 18: 20). அதனால்தான் நாம் நல்லுறவோடு இருக்கவேண்டும் என்று கூறுகின்றார். ஆகையால் நாம் சாவுக்கு இட்டுச் செல்லும் சினத்தை நம்மிடமிருந்து அகற்றிவிட்டு, வாழ்வுக்கு இட்டுச் செல்லும் நல்லுறவின் வழியில் நடப்போம்.

ரால்ப் வோனர் சொல்லக்கூடிய ஒரு சிறு கதை. ஒரு காட்டில் இருந்த சிங்கமும் மலை ஆடும் ஒரே நேரத்தில் ஓர் ஓடையில் தண்ணீர் குடிக்க வந்தன. இரண்டும் அங்கு வந்தபொழுது தண்ணீர் மிகக் குறைவாக இருப்பதைப் பார்த்துவிட்டு, ‘நான்தான் முதலில் நீர் அருந்துவேன்’ என்று ஒன்று மற்றொன்றோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டது. ஒருகட்டத்தில் அவற்றுக்கிடையே வாக்குவாதம் முற்றவே, ஒன்று மற்றொன்றின்மீது பாய்ந்து தக்கத் தொடங்கியது. அப்பொழுது வானத்தில் வல்லூறு கூட்டம் வட்டமடிப்பதைக் கண்ட அந்த இரண்டு விலங்குகளும், “நாம் இருவரும் இப்படிச் சண்டைபோட்டுக் கொண்டிருந்தால் நமக்கு மேலே பறந்துகொண்டிருக்கும் அந்த வல்லூறுக்களுக்கு இரையாக வேண்டியதுதான். அதனால் நாம் இருவரும் சமரசமாகி, இருக்கின்ற தண்ணீரைப் பாதி பாதி குடித்துவிட்டுப் போவோம்’ என்ற முடிவுக்கு வந்தன.

ரால்ப் வோனர் இந்தச் சிறுகதையைச் சொல்லிவிட்டு பகைமையும் வெறுப்பும் அல்ல, நல்லுறவே எப்பொழுதும் நன்மை பயக்கும் என்று கூறுவார். ஆகவே, நாம் சினம் என்ற தவறான நெறியை நம்மிடமிருந்து அகற்றிவிட்டு, நல்லறவு என்ற உயர்ந்த நெறியின் படி வாழ்வதற்கு முயற்சி செய்வோம்.

சிந்தனை

‘உணர்ச்சிகளுள் சினமே எவ்வித வலுவும் இல்லாதது. அதனால் பயனொன்றும் விளைவதில்லை. எதிரியைக் காட்டிலும், அதைக் கொண்டவனுக்கே அது அதிகத் தீங்கிழைக்கும்’ என்பார் கிளாரண்டன் என்ற எழுத்தாளர். ஆகையால், நாம் நம்முடைய வாழ்வில் தேவையற்ற சினத்தைத் தவிர்த்துவிட்டு, ஒருவர் ஒருவரோடு நல்லுறவோடு இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser ser

இதய உருவாக்கம்!

ஜென் துறவுமடத் தலைவரைப் பார்க்க பார்வையற்ற நபர் ஒருவர் வருகின்றார். அது மாலை நேரம். பேசிமுடித்துவிட்டு அவர் புறப்படும் நேரம் இருட்ட ஆரம்பிக்கிறது. அவர் புறப்படும்போது அவரிடம் விளக்கு ஒன்றைக் கொடுக்கின்ற தலைவர், 'ஐயா! இந்த விளக்கை கையோடு எடுத்துச் செல்லுங்கள்! இரவாகிவிட்டது!' என்கிறார். பார்வையற்ற நபரோ, 'நானே பார்வையற்றவன்! எனக்கு பகல், இரவு எல்லாம் ஒன்றுதான். எனக்கு விளக்கு வேண்டாம்' என்றார். தலைவர் மீண்டும் அவரிடம், 'இது உமக்கு பாதை காட்ட அல்ல. யாராவது உம்மேல் மோதிவிடாமல் இருக்க! ஆகவே, எடுத்துச் செல்லும்!' என்று விளக்கை கொடுத்து அனுப்பிவிடுகின்றார். விளக்கை எடுத்துக்கொண்டு சற்று தூரம் சென்ற அவர்மேல் ஒருவர் மோதிவிடுகிறார். மோதியவரைப் பார்த்து பார்வையற்ற நபர், 'மூடனே! உனக்குக் கண் தெரியாதா? என் கையில் விளக்கிருந்தும் என்மேல் மோதுகிறாயே?' என்று கோபப்படுகின்றார். மோதியவரோ, 'உன் கையில் விளக்கு இருக்கிறது. ஆனால், அது அணைந்து கிடக்கிறது' என்றார் சாந்தமாக. ஞானம் பெற்றார் பார்வையற்ற நபர்!

இயேசுவின் சீடர்கள் தங்களுடைய நம்பிக்கையை இந்த உலகத்தில் வாழ்வாக்கி உப்பாக இவ்வுலகோடு கலந்து அதற்குச் சுவையூட்டவும், ஒளியாகக் கடந்து நின்று தன்னகத்தே ஈர்க்கவும் செய்கிறார்கள் என்பது கடந்த வார ஞாயிறு வழிபாடு (நற்செய்தி வாசகம்) நமக்கு நினைவூட்டியது. நம்முடைய பிரசன்னம் வெளிப்புறத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் குறித்து இது நமக்கு அறிவுறுத்தியது. அதன் தொடர்ச்சியாக வரும் இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 5:17-27) இயேசுவின் மேல் கொண்டுள்ள நம்பிக்கை சீடரின் உள்ளத்தில் உள்ளார்ந்த மாற்றத்தை எப்படி ஏற்படுத்துகிறது என்பதை எடுத்தியம்புகிறது. அல்லது இதய உருவாக்கமே சீடத்துவத்தின் நோக்கம் என்று சொல்கிறது. மேற்காணும் கதையின் பின்புலத்தில் பார்த்தோமென்றால், நம்முடைய உள்ளத்தில் அணைந்து போய்க்கிடக்கும் விளக்கைத் தூண்டு எழுப்புவது எப்படி? என்று நமக்குக் கற்பிக்கிறது.

இன்றைய முதல் வாசகம் (காண். சீஞா 15:15-20) சீராக்கின் ஞானநூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இணைத்திருமுறை நூல்களில் ஒன்றாகவும், ஞானநூல்களில் ஒன்றாகவும் உள்ளது இந்நூல். 'ஞானம்' என்பதை இப்படி வரையறுக்கலாம்: 'நம்முடைய நலத்திற்கும், வளத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் ஏற்றபடியான தெரிவுகளைச் செய்யும் கலை.' ஒவ்வொரு மனிதரும் தான் விரும்புவதைச் செய்யும் விருப்புரிமை பெற்றிருக்கின்றார் எனவும், நன்மை எது தீமை எது என்பதைப் பகுத்தாய்ந்து தீமையை விலக்கி நன்மையைப் பற்றிக்கொள்ளும் ஆற்றல் அவருக்கு உண்டு என்றும், தன்னுடைய நடத்தை பற்றிய தெரிவுகளை மேற்கொள்ளும் முழுச் சுதந்திரத்தை அவர் பெற்றிருக்கின்றார் என்றும் ஞானநூல்கள் ஏற்றுக்கொள்கின்றன. மேலும், 'ஞானம்' மற்றும் 'மதிகேடு' என்ற இரு பெரும் பிரிவுகளாக மனித தெரிவுகளைப் பிரித்து, 'ஞானம்' நிறைவான மற்றும் ஆசீர்பெற்ற வாழ்வுக்கும் ஒருவரை அழைத்துச் செல்கிறது என்றும், 'மதிகேடு' இறப்பிற்கு அழைத்துச் செல்கிறது என்றும் கற்பிக்கின்றன. இப்படிப்பட்ட கற்பித்தலைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் காண்கிறோம்.

இன்றைய வாசகத்தின் பாடச் சூழல் மனிதர்கள் கொண்டிருக்கின்ற விருப்புரிமை என்ற மேலான கொடையைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாசகத்தின் முதல் பகுதி மனிதர்கள் பெற்றிருக்கின்ற விருப்புரிமையையும் தன்னார்வ மனத்தையும் அடிக்கோடிடுகிறது. கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் ஒவ்வொரு மனிதருக்கும் சுதந்திரம் உண்டு. 'நீர் - நெருப்பு,' 'வாழ்வு - சாவு' என்னும் இரண்டு எதிர்துருவங்கள் நம் முன் நிற்க, நான் கையை நீட்டி எனக்கு 'விருப்பமானதை' நான் தெரிவு செய்ய வேண்டும். வாசகத்தின் இரண்டாம் பகுதி கடவுளுக்கு ஏற்ற வழிகளைத் தெரிவு செய்ய என்னைத் தூண்டுகிறது. இதையே 'ஆண்டவரின் ஞானம்' என்கிறார் ஆசிரியர். இது திருச்சட்டங்களில் காணப்படுகிறது. மனிதர்களுக்கு சுதந்திரத்தைக் கொடுத்த கடவுள் அவர்கள் தீமையில் உழல வேண்டும் என்று கட்டளையிடவோ, பாவம் செய்ய அனுமதிகொடுக்கவோ இல்லை. இந்த உலகின் இயக்கத்தை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் அவர் மனித தெரிவுகள் அவர்களுக்கு அதற்கேற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உறுதி செய்கிறார்.

ஆக, ஆண்டவரின் ஞானத்தைப் பெறுதலும், அந்த ஞானத்தின் பின்புலத்தில் 'நீரை,' 'வாழ்வைத்' தெரிவு செய்தலே இதய உருவாக்கம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 2:6-10), கொரிந்து நகரத் திருஅவையில் இருந்த பிரிவுகளையும் வேறுபாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் களையுமாறும், அவர்களுடைய குழந்தைத்தனமான வழிகளை விட்டுவிட்டு பிரிவுகளைக் கடந்து நிற்குமாறும் அறிவுறுத்தும் பவுல், தன் கருத்தை வலியுறுத்த கடவுளின் ஞானம் என்னும் கருதுகோளை முன்னெடுக்கின்றார். யூத ஞான இலக்கியம் சொல்வதுபோல, கடவுளின் ஞானம் எல்லாவகை மனித புரிதல்களுக்கும் அப்பாற்பட்டது என்றும், அது மறைபொருளாய் ஒளித்துவைக்கப்பட்டுள்ளது என்றும் ஏற்றுக்கொள்கின்றார். படைப்பின் தொடக்கத்திலிருந்தே ஞானம் கடவுளோடு இருந்தது. கடவுள் தாம் விரும்புகிறவருக்கு அந்த ஞானத்தை வெளிப்படுத்துகின்றார். கடவுளின் ஞானம் உலகுசார் வாழ்க்கைமுறையையும் தாண்டி, எல்லாவற்றின் இறுதியை நோக்கியதாக இருக்கிறது. மேலும், இவ்வகை ஞானம் மனித வாழ்க்கையை மாட்சியை நோக்கி - அதாவது, கடவுளின் வாழ்விலேயே நாம் பங்குபெற - நகர்த்துகிறது.

இப்படிப்பட்ட மேன்மையை அல்லது மாட்சியை நோக்கி நகரும் கொரிந்து நகரத் திருஅவை தனக்குள் பிளவுகளையும் பிரிவினைகளையும் எப்படி வைத்துக்கொள்ள இயலும்? என்று அவர்களைச் சிந்திக்க அழைக்கின்ற பவுல், ஒளிந்திருக்கும் மறையுண்மையான ஞானத்தைக் கண்டடையும் வழியையும் சொல்கின்றார்: 'இந்த ஞானமும் அறிவும் நமக்கு தூய ஆவியாரிடமிருந்து வருகிறது.' தூய ஆவியாரின் செயல்பாட்டின்படி வாழ்பவர் முதிர்ச்சி அடைகிறார். இந்த உலகின் ஞானத்தின்படி வாழ்வோரிடமிருந்து உயர்ந்து நிற்கிறார். இவ்வுலக ஞானத்தின்படி வாழ்பவர்களின் வாழ்க்கை வேகமாக ஓடிக் கரைந்துவிடும். ஆக, தூய ஆவியாரின் இயக்கத்தின்வழி வாழ்பவர் இறைஞானத்தைப் பெற்றவராக இருப்பார். அவருடைய வாழ்க்கை அவர் அடையப் போகும் மாட்சியை நோக்கியதாக இருக்கும்.

ஆக, கடவுளுடைய ஞானத்தின்படி வாழுமாறு தூய ஆவியாரின் இயக்கத்திற்கு நம்மையே கையளிப்பதே இதய உருவாக்கம்.

மலைப்பொழிவின் ஒரு நீண்ட பகுதியை இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 5:17-37) வாசிக்கின்றோம். முதலில், இயேசு, 'திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ அழிக்க வரவில்லை, மாறாக, நிறைவேற்றவே வந்தேன்' என்பதை வலியுறுத்துகின்றார். ஆக, இயேசுவின் பணி ஏற்கனவே கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குத் தொடங்கியுள்ள வெளிப்பாட்டின் நீட்சியே தவிர, அதன் அழித்தல் இல்லை என்பதை உறுதி செய்கிறார். இயேசுவின் பணியின் புதுமை என்பது மனித வாழ்வின் வழிகாட்டுதலுக்கான புதிய நெறிமுறைகளை வழங்குவதில் அல்ல, மாறாக, ஏற்கனேவே உள்ள வழியின் தொடர்ச்சியாக இருக்கிறது. ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள மூன்று கட்டளைகளை எடுத்து, அவற்றின் பின்புலத்தில் சரியான வழி என்ன என்பதை வரையறை செய்கிறார் இயேசு. இந்த மூன்று கட்டளைகளும் மனித வாழ்வின் சவால் நிறைந்த பகுதிகள்: கோபம், பாலுணர்வு, மற்றும் தனிநபர் நாணயம்.

'கொலை செய்யாதே!' என்ற கட்டளையோடு தொடங்குகிறார் இயேசு. மனித உயிர்களை அழிக்கும் குழுமங்களைச் சிதைக்கும் முதன்மையான காரணி வன்மம் அல்லது வன்முறை. இது சமூகத்தின் ஒருமைப்பாட்டையும் அமைதியையும் நலனையும் சீர்குலைக்கிறது. வன்முறையின் வேர் கோபம். கோபமின்றி வன்முறையும், கொலையும் நிகழ்வதில்லை. கோபத்தைத் தடுப்பதன் வழியாக வன்முறை மற்றும் கொலையைத் தடுக்க முடியும். மேலும், சின்னச் சின்ன மனத்தாங்கல்கள், உள்ளக்கீறல்கள் ஆகியவற்றையும் சரி செய்தபின் பலி செலுத்துதலே சால்பு என்றும் அறிவுறுத்துகிறார் இயேசு.

இரண்டாவதாக, 'விபச்சாரம் செய்யாதே!' கட்டுப்படுத்தப்படாத பாலுணர்வு குடும்ப உறவைச் சிதைக்கிறது. பாலுணர்வுப் பிறழ்வின் அடிப்படையான உணர்வு காமம் என்பதை அடையாளம் காட்டுகிறார் இயேசு. 'கண்களைப் பிடுங்குதல் மற்றும் கைகளை வெட்டுதல்' போன்ற உருவகங்கள் வழியாக, காமஉணர்வைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் அது குடும்ப உறவைப் பிடுங்கி எரிந்தும், வெட்டியும் விடும் என எச்சரிக்கின்றார். மேலும், மணமுறிவு அல்லது மணவிலக்கும் குடும்ப உறவைப் பாதிக்கும் என்பது இயேசுவின் தொடர்பாடமாக இருக்கிறது.

தொடர்ந்து, 'பொய்யாணை இடாதீர்!' அல்லது 'பொய்ச்சான்று சொல்லாதே!' என்ற கட்டளை பற்றிப் பேசுகின்றார் இயேசு. இயேசுவின் சமகாலத்தில் ஆணையிடுதல் என்பது ஒரு சாதாரண செயலாக, நிகழ்வாக இருந்தது. ஒருவர் தான் சொல்வது உண்மை என்று உறுதி செய்யவும், அல்லது தான் ஒரு செயலைச் செய்வது உறுதி என்று அறிக்கையிடவும் ஆணையிடுவது மரபு. இதில் என்ன பிரச்சினை என்றால், இப்படி ஆணையிடுபவர் தன்னுடைய தனிநபர் நாணயத்தன்மையை மறந்து, தன் நாணயத்தன்மையை உறுதிசெய்ய கடவுளையோ, இன்னொருவரையோ துணைக்கு அழைக்கிறார். மேலும், தன் ஆணையை நிறைவேற்ற முடியாமற்போக அவர் கடவுளையும் மற்றவரையும் கூட பொய்யராக்கிவிடுகிறார். இதற்கு மாற்றாக, ஆணையிடுதலையே தவிர்க்குமாறு அழைக்கிறார் இயேசு. ஒருவரின் தனிநபர் நாணயம்தான் உண்மையையும் நம்பகத்தன்மையையும் உறுதிசெய்ய வேண்டுமே தவிர, வெளிப்புறத்திலிருந்து வரும் ஒருவர் அல்ல என்று அறிவுறுத்துகிறார்.

ஆக, இந்த மூன்று கட்டளை நீட்சிகளிலும் ஒன்று மட்டும் பொதுவாக இருக்கிறது. அல்லது இவற்றை ஒரே கருத்துருக்குள் அடக்கிவிடலாம்: 'இதய உருவாக்கம்' - கட்டளைகள் செயல் வடிவம் பெறவேண்டுமெனில் இதயம் உருவாக்கம் அவசியம். கோபத்தையும் காமத்தையும் உள்ளத்திலிருந்து அகற்றும்போது கொலை மற்றும் விபச்சாரம் என்னும் ஆபத்துக்கள் மறைந்துவிடும். தனிநபர் நாணயம் என்பதும் இதய உருவாக்கத்தின் ஓர் அங்கமே. இதையே மனப்பாங்கு புதுப்பித்தல் என்கிறோம். மனப்பாங்கு புதுப்பிக்கப்படாமல் வெறும் செயல்களை மட்டும் சரி செய்தல் நீண்ட பலனைத் தராது. ஆனால், ஆண்டவரின் ஞானத்தின் வழிகளுக்கேற்ப உள்ளம் உருவாக்கம் அடைந்தால் கட்டளைகளை நிறைவேற்றுவது எளிதாகும். இயேசு கட்டளைகளை மாற்றவில்லை. ஆனால், இதயம் மற்றும் மனப்பாங்கு புதுப்பித்தல் வழியாக கட்டளைகளை நிறைவேற்ற முடியும் என்று சொல்வதன் வழியாக கடவுளின் கட்டளைகளை புதிய மற்றும் ஆழமான நிலைக்கு எடுத்துச் செல்கிறார் இயேசு.

இவ்வாறாக,

கட்டளைகளைக் கடைப்பிடிக்க இதய உருவாக்கம் அவசியம் என்பதை நற்செய்தி வாசகமும், நன்மையைத் தேர்ந்து தெளிதல் இதய உருவாக்கத்தின் முதல் படி என்பதை முதல் வாசகமும், தூய ஆவியாரின் உடனிருப்பு அதன் இரண்டாம் படி என்பதை இரண்டாம் வாசகமும் நமக்குச் சொல்கின்றன.

இன்று நம்முடைய இதயங்கள் உருவாக்கப்படுகின்றனவா? என்பதுதான் கேள்வி.

இன்று நாம் பல நேரங்களில் மேலோட்டமாகவே வாழ்கிறோம். மேற்காணும் கதையில் வரும் அந்த பார்வையற்ற மனிதர்போல நம்முடைய விளக்கு அணைந்திருப்பது தெரியாமலேயே நடந்துகொண்டிருக்கின்றோம். விளக்கு இருப்பது முக்கியமல்ல. விளக்கு எரிந்துகொண்டிருக்கிறதா? என்பதுதான் முக்கியம்.

நல்லா இருக்கணும், நல்லதே செய்யணும், கோபப்படக் கூடாது, தவறான அல்லது தீய எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் இடம் கொடுக்கக் கூடாது, பொய் பேசக்கூடாது என்றெல்லாம் நினைக்கிறோம். அதன்படி நடக்கவும் செய்கிறோம். ஆனால், நம்முடைய வாழ்வின் பேட்டரி விரைவாக தீர்ந்துவிடுகிறது. மீண்டும் செய்த தவறுகளையே செய்ய ஆரம்பிக்கின்றோம். விரைவாகத் தீர்ந்துவிடும் பேட்டரிகளை அகற்றிவிட்டு, நீடித்த இறைவனோடு தொடர்பில் இருப்பதுதான் இதயத்தைப் புதுப்பிப்பது, அல்லது இதயத்தை உருவாக்குவது. இதயம் உருவாக்கப்பட்டுவிட்டால் நம்முடைய செயல்கள் நற்செயல்களாகத் துலங்க ஆரம்பிக்கும்.

இன்று இதய உருவாக்கம் பெற நாம் சந்திக்கும் சவால்கள் எவை?

1. நம்மையே சூழ்நிலைக் கைதி என உணர்வது

சில நேரங்களில் நான் என்னுடைய வாழ்வு இப்படி இருக்கக் காரணம் என்னுடைய சூழல் அல்லது வளர்ப்பு அல்லது சேர்க்கை என என் பொறுப்புணர்வைத் தட்டிக்கழிக்கிறேன். நான் இப்படி இருக்குமாறு கடவுள்தான் எழுதிவைத்துள்ளார் என்று கடவுள்மேல் பழிசுமத்தும் மனநிலையும் சில நேரங்களில் இருக்கிறது. ஆனால், இன்றைய முதல் வாசகம் தெளிவாகச் சொல்கிறது. நெருப்பையோ அல்லது நீரையோ கைநீட்டித் தேர்ந்துகொள்வது நான்தான். ஆக, தீதும் நன்றும் பிறர்தர வருவதில்லை. நான் என் வாழ்வின் சூழல் கைதி என்னும் மனநிலை விடுக்க நான் என் வாழ்விற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும்.

2. குறுகிய எண்ணம் கொண்டு வாழ்வது

கொரிந்து நகர திருஅவையினர் கிறிஸ்துவின்மேல் தாங்கள் கொண்ட நம்பிக்கையால் அடைந்த மாட்சியை மறந்துவிட்டு, தங்களுக்கு நற்செய்தி அறிவித்த பவுல், கேபா, அப்பொல்லோ ஆகியோரின் பெயர்களைக் கொண்டு சிறு சிறு குழுக்களாகப் பிரிந்துகொண்டு ஒருவர் மற்றவர்மேல் பகைமை பாராட்டுகின்றனர். குறுகிய எண்ணம் கொண்டவர்கள் வாழ்வின் முழுப்படத்தைப் பார்க்க மாட்டார்கள். மற்றவர்களையும் மிகவும் குறைத்தே மதிப்பிடுவார்கள். ஆக, குறுகிய எண்ணத்திலிருந்து நான் விடுபட்டு பரந்த உள்ளம் கொண்டிருக்க வேண்டும்.

3. மேலோட்டமாக வாழ்வது

நான்தான் யாரையும் கொலை செய்வதில்லையே? விபச்சாரம் செய்வதில்லையே? பொய்யாணை இடுவதில்லையே? என்று நான் மேலோட்டமாகப் பெருமை பாராட்டிக்கொண்டு, என் உள்ளத்தில் பகைமை, எரிச்சல், கோபம், காம உணர்வு, பேராசை, பொய் ஆகியவற்றை ஏந்திக்கொண்டு நடந்தால் நான் மேலோட்டமாக வாழ்கிறேனே அன்றி ஆழமாக வாழ்வதில்லை. கடலில் மூழ்கிக் கிடக்கும் பனிப்பாறையின் மேல்பகுதி போல, வெளியே தெரிகின்ற பகுதியை மட்டும் நன்றாக வாழ்ந்துவிட்டு உள்ளுக்குள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்ற மனநிலை பெறுகிறேன். அப்படி இருந்தால் மறைந்திருக்கும் அந்த 95 சதவிகித பாறையின்மேல் மோதுகின்ற வாழ்க்கை என்ற டைட்டானிக் கப்பல் உடைந்து தரைதட்டிவிடும்.

இறுதியாக,

'என் உள்ளத்தில் பகைவர்கள் இல்லையென்றால் வெளியிலிருக்கும் பகைவர்கள் என்னைக் காயப்படுத்த முடியாது!' என் உள்ளத்தின் பகைவர்களை அழிக்கும் ஒவ்வொரு நாளும் என் இதயம் உருவாக்கம் பெறுகிறது. அந்தப் பயணத்தில் நானும் திருப்பாடல் ஆசிரியர்போல, 'உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்!' (காண். திபா 119:5).

ser

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com