மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பாஸ்கா கால 4-ஆம் ஞாயிறு
முதலாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
திருத்தூதர் பணிகள் 2: 14a, 36-41|1 பேதுரு 2: 20b-25|யோவான் 10: 1-10

ser


காட்டுப் பகுதியிலே தனியாகப் பயணம் செய்த ஒருவன் பாதையை மறந்துவிட்டு வழிதவறி மூன்று நாட்களாகச் சுற்றித் திரிந்தான். அடுத்த நாள் ஒரு மனிதனைப் பார்த்தான். தனக்கு வழிகாட்ட ஒருவன் கிடைத்துவிட்டான் என்று மிக்க மகிழ்ச்சி அடைந்து அவனிடம் சென்று, பாதை தவறி அலைகிறேன் என்றும் தனக்கு வழிகாட்டும்படியும் வேண்டினான். அவனும் வழிகாட்டி அவனது எல்லையை அடைய உதவினான்.

ஆம்! யூத மக்கள் வழிகாட்டி இல்லாத சூழ்நிலையில் அலைந்து திரிந்தபோது இவர்களை ஒன்றுபடுத்த இறைவன் விரும்புகிறார். எனவே தன்னையே நல்ல ஆயனாக வெளிப்படுத்துகிறார் இயேசு. நல்ல ஆயன் தன் ஆடுகளை அறிந்திருக்கிறார். "பசும்புல்வெளி மீது அவர் இளைப்பாறச் செய்வார். அமைதியான நீர்நிலைக்கு அழைத்துச் செல்வார்" (திபா. 23:2) என்றும் திருப்பாடல் வெளிப்படுத்துகிறது.

"நல்ல ஆயன் நானே. நல்ல ஆயன் ஆடுகளுக்காகத் தம் உயிரையும் கொடுப்பார்" (யோவா. 10:11) என்றும் இயேசு அறிவிக்கிறார். இயேசு வழிநடத்தும் பணி என்பது தலைசாய்க்கவும் இடமின்றி, ஓய்வு உறக்கமின்றி உழைப்பதாகும். இயேசு சுய சிந்தனையோடும் தொலைநோக்குப் பார்வையோடும் செயல்பட்டார். சுய சிந்தனை என்பது, இரவில் தந்தையோடு செபத்தில் நிலைத்திருத்தல் என்பதாகும். தொலைநோக்குப் பார்வை என்பது புதுமைகள், போதனைகள், வழிகாட்டுதல் வழியாக மக்களை ஒன்று சேர்ப்பதாகும். எனவேதான், "ஆடுகள் வாழ்வு பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாழ்வைப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்" (யோவா. 10:10) என்கிறார் இயேசு.

ஒரு அரசன் வயதாகிவிட்ட காரணத்தால் நாட்டு மக்களை வழிநடத்தத் திறமையான ஆட்சி செய்யத் தன் ஒரே மகனை அரசனாக்க விரும்பினான். அவனுக்குப் போதுமான அனுபவம் இல்லாத காரணத்தால் ஒரு துறவியிடம் பயிற்சிப் பெற அனுப்பினான்.

துறவி , இளவரசனை நோக்கி, இந்தக் காட்டில் ஒரு வாரம் தங்கி, உன் அனுபவத்தை எனக்குச் சொல்ல வேண்டும் என்று பணித்தார். ஒரு வாரம் கடந்து என்ன அனுபவம் பெற்றாய் என்று துறவி இளவரசனிடம் கேட்க, "நான் பறவைகள் பாடுவதையும், விலங்குகள் சத்தமிடுவதையும் கண்டேன்" என்றான். அதற்குத் துறவி நீ இன்னும் ஒரு வாரம் காட்டில் தங்கி உன் அனுபவத்தை எனக்குத் தெரிவிக்க வேண்டும் எனப் பணித்தார். ஒரு வாரம் கடந்து வந்த இளவரசன், "நான் நீரோடையின் சத்தம் கேட்டேன். தாகத்திற்குத் தண்ணீர் தேடும் மான்களைப் பார்த்தேன்" என்றான். அதற்குத் துறவி நீ இன்னும் ஒரு வாரம் காட்டில் தங்க வேண்டும் என்றார். ஒரு வாரம் கடந்து திரும்பி வந்த இளவரசனைப் பார்த்து உன் அனுபவம் என்ன என்று கேட்க, தாகத்திற்குத் தண்ணீர் தேடும் புள்ளிமான்களையும், இரை தேடி அலையும் பறவைகளையும், வழி தவறித் திரியும் சிறு விலங்குகளையும் பார்த்தேன். அவைகளுக்கு எப்படி வழிகாட்டுவது என்ற ஆழ்ந்த தியானத்தில் இருந்தேன் என்றான். ஆம்! நீ அரசனாகி மக்களை வழிநடத்தலாம் என்று இளவரசனை அரண்மனைக்கு துறவி அனுப்பி வைத்தார்.

எந்த மனிதன் மற்ற மனிதர்களின் உள் உணர்வுகளை, துன்பங்களை, இதயக் குமுறல்களை, இதயச் சுமைகளைப் புரிந்து, அதைத் தனதாக்கிக் கொண்டு வழிநடத்துகிறானோ, அவனே சுயநலமில்லாத தலைவன், ஆயன், வழிகாட்டியாவான். ஆயன் என்பவன் சிதறிப்போன மந்தையை ஒன்று சேர்ப்பவன் (எசே. 34 :11-12). காயமுற்றவனுக்குக் கட்டுப் போடுபவன் (எசே .34 : 16). உயிரைக் கொடுப்பவன் (யோவா. 10:10). அன்பில் நிலைத் திருப்பவன் (1 கொரி 13:12).

நாம் அனைவரும், நாம் பெற்ற திருமுழுக்கால் மக்களுக்கு வழிகாட்ட, ஒன்று சேர்க்க, ஆயனாக, தலைவனாகச் செயல்பட அழைக்கப்பட்டிருக்கிறோம். இயேசுவின் சுய சிந்தனையும், தொலைநோக்குப் பார்வையும் பெற்று, மற்றவருக்கு வழிகாட்டியாகச் செயல்பட முன் வருவோம். இருப்பதைக் கொடுப்போம். பிறருக்காக நம்மையே இழப்போம். ஆமென்.

ser ser

இன்று எங்கு பார்த்தாலும் நேசப் பஞ்சம்!


இல்லறத்தில் வாழ்ந்த நல்லவன் ஒருவனைத் துறவி ஒருவர் சமூகப்பணி செய்யத் தூண்டினார். எனக்கு வீட்டை விட்டு வர ஆசைதான். ஆனால், என் மனைவியும், மக்களும் என்னை உயிருக்கு உயிராக நேசிக்கின்றார்கள்; அவர்கள் என்னை விடமாட்டார்கள் என்றான் இல்லறவாசி. உனது வீட்டாரின் அன்பை சற்று சோதித்துப் பார்க்கலாம். இறந்தவன் போல் நடிக்கும் இரகசியம் ஒன்றை உனக்கு கற்றுத்தருகின்றேன். நீ செத்தவன் போல நடி. அப்போது என்ன நடக்கின்றது என்று பார்ப்போம் என்றார் துறவி.

துறவி சொன்னபடி இல்லத் தலைவன் நடித்தான். அவன் குடும்பத்தார் தேம்பித் தேம்பி அழுதார்கள். துறவி அங்கே தோன்றினார். குடும்பத்தாரைப் பார்த்து, உங்களில் யாராவது ஒருவர் இவருக்குப் பதிலாக சாவதற்கு முன்வந்தால், இவருக்கு என் தவ வல்லமையால் உயிர்ப்பிச்சை அளிக்கின்றேன் என்றார். இறந்தவன் மனைவியோ, இவருக்குப் பதில் எங்களில் யாரும் சாக வேண்டிய அவசியமில்லை. இவரில்லாமல் எங்களால் வாழமுடியும் என்று சொல்லிவிட்டாள்.

வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை , கடைசிவரை யாரோ? என்றான் கவிஞன். நமக்காக உயிரைக்கொடுக்க முன்வருபவர்கள் நம் நடுவே யாராவது உண்டா ?
இயேசு இன்று நம் அனைவரையும் பார்த்து, இந்த உலக அன்பிலிருந்து வேறுபட்டது, மாறுபட்டது என் அன்பு. நான் எதையும் பெறுவதற்காக இந்த உலகத்திற்கு வரவில்லை ; என் ஆடுகளாகிய உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் கொடுக்கவே வந்தேன் என்கின்றார். தமது ஆடுகளின், அன்பு மக்களின் நலம் காக்க, அவற்றிற்கு, அவர்களுக்கு இயேசு உண்ண உணவைக் கொடுத்தார் (யோவா 6:1-13); குடிக்க இரசத்தைக் கொடுத்தார் (யோவா 2:1-11); நோயுற்றோருக்கு உடல் நலத்தைக் கொடுத்தார் (மத் 9:27-31); பாவம் செய்தோர்க்குப் பாவ மன்னிப்பைக் கொடுத்தார் (லூக் 7:36-50); இறந்தவருக்கு உயிர்ப்பைக் கொடுத்தார் (யோவா 11:1-44); பேய் பிடித்தவருக்கு விடுதலையைக் கொடுத்தார் (மாற் 9:14-29); காற்றையும், நீரையும் கடிந்து பாதுகாப்பைக் கொடுத்தார் (லூக் 8:22-25).

இறுதியாக, பெரிய வியாழக்கிழமை தமது உடலைக் கொடுத்து (மத் 26:26-29) பெரிய வெள்ளிக்கிழமை தமது உயிரைக் கொடுத்தார் (மத் 27:50). அவரது வாழ்நாளில் வன்செயல் எதுவும் செய்ததில்லை (இரண்டாம் வாசகம்). இப்படி அன்று அனைத்தையும் உலக மக்களுக்குக் கொடுத்த இயேசு, இன்று ஆண்டவரும், மெசியாவுமாகத் திகழ்கின்றார் (முதல் வாசகம்); நமது ஆன்மாக்களின் ஆயராகவும், கண்காணிப்பாளராகவும் அவர் விளங்குகின்றார். பல சமயங்களிலே நாம் யாரை நேசிக்கிறோமோ அவர்கள் நம்மை நேசிப்பதில்லை ; யார் நம்மை நேசிக்கிறார்களோ அவர்களை நாம் நேசிப்பதில்லை. இன்று எங்கு பார்த்தாலும் நேசப் பஞ்சம்.

இன்றைய அருள்வாக்கின் வழியாக இயேசு நம்மைப் பார்த்து, நிபந்தனையில்லாமல் நேச மழையை உங்கள் மீது பொழிகின்றேன்; உங்கள் நம்பிக்கை நிறைந்த கண்களை என் பக்கம் திருப்புங்கள் என்கின்றார்.

மேலும் அறிவோம்:

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும் (குறள் : 71).

பொருள் : ஒருவர் உள்ளத்தில் கொண்டிருக்கும் அன்பினைத் தாழ்ப்பாள் இட்டு அடைத்து வைக்க இயலாது. அன்பரின் துன்பத்தைக் காணும்போது சிந்திடும் கண்ணீர்த்துளியே அந்த அன்பைப் பலரும் அறியச் செய்து விடும்.

ser ser

நியூயார்க்கில் மாபெரும் இசைமேதை ஒருவர் நல்லாயன் திருப்பாவிற்கு (திப 23) இசை அமைத்து இசை நயத்துடன் ஒரு கலையரங்கில் பாடி அனைவருடைய கைதட்டுதலையும் பெற்றார். அவரை அடுத்து அதே திருப்பாடலை ஒரு பங்குக்குரு பாடினார். அவர் அவ்வளவு இசை நயத்துடன் பாடவில்லையென்றாலும், உணர்வுப் பூர்வமாக நெஞ்சம் நெகிழப் பாடினார். அதைக் கேட்டு மக்கள் கைதட்டுவதற்குப் பதிலாகக் கண்ணீர் சிந்தினர். முதலில் பாடிய இசைமேதை கலையரங்கின் மேடையில் ஏறி மக்களைப் பார்த்து. * அன்பர்களே! நான் நல்லாயன் திருப்பாவை மட்டும் அறிந்திருக்கிறேன். ஆனால் பங்குக்குருவோ அந்த நல்லாயனையே அறிந்திருக்கிறார்" என்றார்.

இன்று நல்லாயன் ஞாயிறு. இன்றைய பதிலுரைப் பாடல் நல்லாயன் திருப்பா: "ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை " (திபா 23:1), இன்றைய இரண்டாம் வாசகத்தில் பேதுரு கூறுகிறார்: 'நீங்கள் வழிதவறி அலையும் ஆடுளைப்போல் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது உங்கள் ஆன்மாக்களின் ஆயரும் கண்காணிப்பாளருமாய் இருப்பவரிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள்" (1போது2:25). இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து நல்லாயன் உவமையைக் கூறுகிறார் (யோவா 10:1-10).

நல்லாயனைப் பற்றிய பாடல்களைத் திருவழிபாட்டில் பாடுகிறோம். ஆனால், நல்லாயனாகிய கிறிஸ்துவை ஆள் சார்ந்த முறையில் ஆழமாக நாம் அறிந்திருக்கின்றோமா? அவர் தமது பெயரைச் சொல்லி அழைக்கிறார்; தம்மைத் தனிப்பட்ட முறையில் அறிந்திருக் கிறார். இறைவாக்கினர் வாயிலாகக் கடவுள் நமக்குக் கூறுவது: "இதோ என் உள்ளங்கையில் உன்னை நான் பொறித்துள்ளேன்" (எசா 49:16), சிலருக்கு நினைவாற்றல் குறைவு. ஒரு கணவர் தன் மனைவியைப் பார்த்து, "நீ யார்? உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குது" என்றாராம்! ஆனால் நல்லாயன் கிறிஸ்து நம்மை மறப்பதில்லை; அவர் நமக்கு முன் நடக்கிறார்.

கிறிஸ்துவே ஆட்டுக் கொட்டிலின் வாயில், அவரே வழியும் உண்மையும்; அவர் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் செல்ல முடியாது (யோவா 14:8). கிறிஸ்து வழியாக ஆடுகள் உள்ளே போகும்; வெளியே வரும். சுதந்திரமாக நடமாடும். அவர் தான் விண்ணையும் மண்ணையும் இணைக்கும் ஏணி (யோவா 1:51). அவரே கடவுளையும் மனிதரையும் இணைப்பவர் (1 திமொ 2:5).

கிறிஸ்துவுக்கு வெளியே உள்ள வழிகாட்டிகள் திருடர்கள்; கொள்ளையர்கள், அவர்கள் மந்தையிலிருந்து ஆடுகளைத் திருடுவதற்கும் கொல்வதற்கும் வருகின்றனர். இன்று மக்களைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுள்ள அரசியல்வாதிகளில் பெரும்பான்மையினர் பொதுப்பணத்தைக் கொள்ளை அடிக்கின்றனர், திருடனுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? திருடன் ஓட்டைப் பிரித்துத் திருடுகிறான்; அரசியல்வாதி "ஓட்டை" வாங்கித் திருடுகிறான்!

அரசியலில் மட்டுமல்ல, சமயங்களிலும் கொள்ளையர்கள் பெருகி வருகின்றனர். திருத்தூதர் பவுல் கூறுவதுபோல, "போதனை என்ற பெயரில் பொருள் பறிக்கின்றனர்" (1 தெச 2:5). ஆட்டுத்தோலைப் போர்த்திய ஓநாய்கள் மந்தையில் நுழைந்து ஆடுகளைத் தாக்குகின்றனர்; சீடர்களைத் திசை திருப்புகின்றனர்; உண்மையைத் திரித்துக் கூறுகின்றனர் (காண். திப 20:29). இவற்றைக் கண்டும் காணாதது போல மௌனம் காக்கும் திருப்பணியாளர்களைக் "குரைக்க இயலா ஊமை நாய்கள்" என்று கடவுளே கடிந்துரைக்கின்றார் (எசா 56:10), இந்நிலையில், கடவுளின் மந்தையை மேய்த்துப் பேணும் படியும், இழிவான ஊதியத்தை எதிர்பார்த்துப் பணிபுரியாமல், மக்களை அடக்கி ஆளாமல், மந்தைக்கு முன்மாதிரியாக இருக்கும்படியும் பேதுரு மேய்ப்பர்களுக்கு அறிவுரை வழங்குகிறார் (1 பேது 6:2-3),

நல்ல ஆடுகளின் பண்பு மேய்ப்பரின் குரலுக்குச் செவிசாய்க்கும் தன்மை (யோவா 10:3). இன்று பல்வேறு திசைகளிலிருந்து பல்வேறு குரல்கள் ஒலிக்கின்றன. அக்குரல்கள் நமது காதுகளைச் செவிடாக்குகின்றன. இந்நிலையில் நாம் கிறிஸ்துவின் குரலைக் கேட்கின்றோமா?
 
ஓர் ஊரில் ஓங்கி வளர்ந்த, பசுமையான இலைகள் நிறைந்த, ஆண்டு முழுவதும் பழம் கொடுத்த ஒரு மரம் இருந்தது. அதன் அழகைக் கண்டு ரசிக்கவும் அதன் பழங்களை ருசிக்கவும் ஆண்டு முழுவதும் மக்கள் வந்தார்கள். ஒருநாள் அம்மரம் திடீரெனப் பட்டுப் போய்விட்டது. மக்கள் அம்மரத்தைப் பார்க்க வரவில்லை, இந்நிலையில் பட்டுப்போன அம்மரத்தின் ஒரு கிளையில் சிட்டுக்குருவி கூடுகட்டி அழகாகப் பாடிக்கொண்டிருந்தது. மரம் அக்குருவியிடம், "நான் பசுமையாக இருந்த காலத்தில் என்னிடம் நீ வரவில்லை; நான் பட்டுப் போன நிலையில் என் என்னிடம் வந்து பாடுகிறாய்? ” என்று கேட்டது. அதற்கு அக்குருவி அம்மரத்திடம் "நான் தொடக்கத்தில் இருந்தே உன் கிளையில் கூடுகட்டிப் பாடினேன், ஆனால் நீதான் உன் அழகில் மயங்கி உன்னைப் புகழ்ந்தவர்கனின் குரலை மட்டும் கேட்டு என் குரலைக் கேட்கவில்லை " என்று கூறியது.

நாம் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை போன்ற சமூக ஊடகங்களின் குரலில் மயங்கி நமது மனச்சாட்சியில் கடவுள் பேசும் மென்மையான குரலைக் கேட்கத் தவறுகின்றோம். கடவுளது குரலைக் கேட்டாலும் நமது இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்கின்றோம். நல்லாயன் கிறிஸ்துவின் குரலைக் கேட்டு அவரைப் பின்பற்றக் கவனம் உள்ளவர்களாய் இருப்போம்,
நாம் வாழ்வு பெறவும். அதை நிறைவாகப் பெறவும் (யோவா 10:10) தல்லாயன் கிறிஸ்து தமது இன்னுயிரைக் கையளித்தார். கிறிஸ்துவே பலி ஒப்புக்கொடுக்கும் குருவாகவும், பலிப்பீடமாகவும், பலிப்பொருளாகவும் திகழ்கின்றார். திருத்தூதர் பவுல் உணர்வுப் பூர்வமாகக் கூறினார்: "கிறிஸ்து என்மீது அன்பு கூர்ந்தார். எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார்” (கலா 2:20). இத்தகைய இறை அனுபவம் பெற முயலுவோம்.

நல்லாயன் ஞாயிறு இறை அழைத்தல் ஞாயிறு. "அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுவோம்" (மத் 9:37-38).

ser ser

நல்ல ஆயன் யார்?

ஒரு காட்டில் புள்ளிமான் கூட்டம் வாழ்ந்து வந்தது. அந்த மான்களின் தலைவன் “மின்னல் அழகன்”. பாதுகாப்பற்ற காட்டு வாழ்க்கையில் அந்தத் தலைவனது வழிகாட்டல், முடிவு எல்லாமே மின்னல் வேகத்தில் இருக்கும்.

ஒருநாள் மேய்ச்சலின் போது அருகில் சலசலப்பு ஓசை. மோப்பம் பிடித்த மின்னல் தலைவன், சிங்கம் ஒன்று நெருங்கி வருவதை உணர்ந்தது. மின்னல் வேகத்தில் எச்சரிக்கை கொடுத்தது. மான் கூட்டம் துள்ளிப் பாய்ந்து ஓடியது.

காட்டுப் பாதையில் குறுக்கே நீண்ட பள்ளம் ஒன்று இருந்தது. சில கிழ மான்களும் சிறுகுட்டிகளும் பள்ளத்தைத் தாண்ட முடியாமல் திகைத்து நின்றன. திரும்பிப் பார்த்த தலைவன் திடுக்கிட்டு நின்றது. உடனடியாகப் பள்ளத்தில் இறங்கித் தன்னையே பாலமாக்கித் தன் முதுகில் அனைவரும் மிதித்துத் தாண்டிச் செல்லுமாறு சொன்னது. இயலாத மான்கள் தலைவன் முதுகின் மேல் ஏறித்தாவித் தப்பித்து ஓடின. ஆனால் தலைவனால் கரையேற முடியாதபடி முதுகெலும்பு முறிந்து போயிருந்தது. சில நொடிகளில் தலைவன் மான், சிங்கத்தின் பசிக்கு இரையானது.

தன்னலமற்ற அந்த மான் கூட்டத் தலைவன் போல இயேசு நம் பாவங்களையும் துன்பங்களையும் தம்மேல் ஏற்றுக் கொண்டார். "சிலுவையின் மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள்” (1 பேதுரு 2:24). பிரச்சனைகளே வாழ்க்கை என்றாகிப் போன காலம் இது. வாழ வகையறியாமல், வாழ்க்கைப் பாதையில் சரியான வழிதெரியாமல் வாடித் தவிக்கும் ஆடுகளாகிய நமக்கு முடிவில்லா வாழ்வின் “நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை” (யோவான் 10:9) என உறுதிமொழி தந்து நம் உள்மனக் காயங்களுக்கு மருந்திடும் உண்மையான மருத்துவராகத் திகழ்கிறார் இயேசு. “ஆயனைப்போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார். ஆட்டுக் குட்டியைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார். அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார். சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்” (எசா.40:11)

இன்றைய நற்செய்தி, பார்வை இழந்த மனிதனுக்கு இயேசு பார்வை கொடுத்த நிகழ்ச்சியைத் தொடர்வது. மக்களின் தலைவர் களாய் இருந்த அன்றையப் பரிசேயர்களை குருட்டு வழிகாட்டிகள் என்று குறிப்பிட்டு “திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன். நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்” (யோவான் 10:10,11) (எசேக்.34இல் போலி ஆயர்கள் பற்றிய கடுமையான வார்த்தைகளையும் கவனத்தில் கொள்க)

உரோமை நகரில் காணப்படும் Catacomb (அது பூமிக்கடியில் அமைந்துள்ள தொடக்ககாலக் கிறிஸ்தவர்களின் கல்லறை. அங்கு போகச் சுரங்கப் பாதைகள் உண்டு. பழங்காலத்தில் கொடுங்கோலர் களால் துன்பத்திற்கு ஆளான கிறிஸ்தவர்கள் தங்கள் இறந்தோரை அடக்கம் செய்ய இத்தகைய கல்லறைகளைப் பயன்படுத்தினார்கள் ) ஒன்றில் மிகப்பழமையான ஓர் ஓவியம் உண்டு. அந்த ஓவியத்தில் நல்லாயனாகிய கிறிஸ்து, தவறிப் போய்க் காயப்பட்ட ஆடு ஒன்றினைக் கனிவோடு தன் தோள்மேல் தூக்கிவரும் காட்சியைக் காணலாம். இது துன்பத்தில் உழலும் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து மக்களுக்கும் ஆறுதலும் மனத்திடனும் அளிக்க வல்லது.

இன்றைய நற்செய்தியில் இரண்டு சித்தரிப்புக்கள் - இயேசு தன்னைப் பற்றிக் கூறிய இரண்டு உருவகங்கள்.

1. நல்ல ஆயன் நானே. (யோ.10:11). இயேசுவின் இந்தச் சொற்கள். இன்றையத் திருவழிபாட்டின் மையம். ஆடுமாடுகள் மேய்த்து வந்த இஸ்ரயேல் மக்கள் தங்கள் கடவுளையே ஆயனாகக் கண்டனர். (தி.பா.23:1, 77:20, 80:1, 95:7, 100:3) இந்த மரபைப் பின்பற்றியே இயேசுவும் ஓர் ஆயனாகத் தன்னை வெளிப்படுத்துகிறார். (மத்.18:12, மார்க் 6:34, 14:27, லூக்.12:32). மக்கள் செய்து வந்த தொழிலிருந்தே கடவுளும், பின்னர் இயேசுவும், இன்று திருச்சபைத் தலைவர்களும், இப்பெயரைப் பெறுகின்றனர்.

ஒரு குடையைப் பார்த்துக் கவிஞன் கேட்டான்: “குடையே, உனக்கு மழையில் நனைய விருப்பமா? வெயிலில் காய விருப்பமா?'' அதற்குக் குடை “நான் மழையில் நனைந்தாலும் வெயிலில் காய்ந்தாலும் கவலையில்லை. ஆனால் என்னைப் பயன்படுத்தும் மக்கள் அனைவரும் மழையில் நனையவும் கூடாது. வெயிலில் காயவும் கூடாது என்றதாம். இப்படித் தன்னை மறந்து, தன்னை இழந்து நம்மை அன்பு செய்பவர் நல்லாயன் இயேசு!

2. மந்தைக்கு வாயில் நானே. (யோவான் 10:9). தூய கிறிசோஸ்தம் கூறுவது போல, யூதர்கள் இயேசுவைப் பின்பற்றாததன் காரணம் இயேசுவை ஆயனாகக் காண முடியாததினால் அல்ல, இவர்கள் நல்ல ஆடுகளாக இல்லாமல் இருந்ததினால்தான். அதனால் இயேசு அவர்களைத் “திருடரும் கொள்ளையரும்” (யோவான் 10:8) என்கிறார்.

விவிலியம் உவமைகளின் கருவூலம். ஆட்டுக் கொட்டில் பற்றிய உவமை வழியாக நமக்கும் ஆடுகளாக இருக்க அல்ல ஆயர்களாக இருக்க அழைப்பு விடுக்கின்றார் இயேசு. ஏனெனில் தன்னறிவின்றி கும்பல் மன நிலையோடு செயல்படும் ஆடுகளோடு இன்றையக் கிறிஸ்தவர்களை ஒப்பிடுவது திருச்சபையில் அவர்களுக்குள்ள கூட்டுப் பொறுப்பையும் தலைமைப் பணியையும் பிரதிபலிக்குமா? இயல்பாக எழும் கேள்வி இது. இன்று தேவை நல்ல தலைவர்கள்.

“உங்களுக்காக நான் ஆயனாக இருக்க, உங்களுடன் நான் ஒரு கிறிஸ்தவனாக இருக்கிறேன்" என்று சொன்ன தூய அகுஸ்தினார். தமது ஹிப்போ மறைமாவட்ட மக்களைப் பார்த்து மேலும் கூறியது: “திருமுழுக்குப் பெற்ற நல்ல ஆடுகளாக நீங்கள் அனைவரும் இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் எதார்த்தமோ திருமுழுக்குப் பெற்ற ஓநாய்களும் உங்களுக்கு மத்தியிலே இருப்பதை அறிகின்றேன். அது மட்டுமல்ல கிறிஸ்தவத்துக்கு வெளியே இருக்கின்ற ஓநாய்கள் மத்தியிலும் திருமுழுக்குப் பெறாத நல்ல ஆடுகள் இருப்பதையும் நான் அறிவேன். நீங்களும் அறிவீர்கள்”.

நான்காம் நூற்றாண்டில் எடுத்தியம்பிய மேற்கூறிய வார்த்தைகள் 21ஆம் நூற்றாண்டில் இருக்கின்ற நமக்கும் எவ்வளவு பொருந்தும்!

 

ser ser

‘ஆண்டவரே நம் ஆயன்; நமக்கேதும் குறையில்லை’

நிகழ்வு

ஒரு வயதான கிறிஸ்தவத் தம்பதியர், தங்களுடைய கடைசிக் காலத்தை அமைதியாகக் கழிக்கவேண்டும் என்பதற்காக, நகரின் நடுவில் இருந்த தங்களது வீட்டை விட்டு, நகருக்கு வெளியே, எந்தவொரு சத்தமும் சந்தடியும் இல்லாத ஒரு வாடகை வீட்டில் வந்து குடியேறினர். தொடக்கத்தில் பிள்ளைகள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று யாவரையும் விட்டுப் பிரிந்திருப்பது அவர்களுக்குச் சிரமமாகத்தான் இருந்தது; ஆனாலும், அந்த இடம் மிகவும் அமைதியாக இருந்ததால், எல்லாரையும் விட்டுப் பிரிந்திருப்பது அவர்களுக்கு ஒன்றும் பெரிய சிரமமாக இல்லை.

கடவுள்மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்த இந்தத் தம்பதியருக்குத் திடீரென்று ஒரு சிக்கல் வந்தது, அது என்ன சிக்கல் எனில், அவர்கள் இருந்த வீட்டின் தலைவாசற் கதவு சரியாகப் பூட்டவில்லை. இதனால் அந்த வயதான தம்பதியர் தாங்கள் இருந்த வீட்டிற்குச் சற்றுத் தள்ளியிருந்த ஓர் ஒப்பந்ததாரரிடம் (Contractor), “தலைவாசற் கதவு சரியாகப் பூட்டுவதில்லை; அதைச் சரிசெய்து தாருங்கள்” என்று கெஞ்சிக் கேட்டார்கள். அவரோ, ‘இந்தா, அந்தா’ என்று நாள்களை இழுத்தடித்தாரே ஒழிய, கதவைச் சரிசெய்து தரவில்லை. இடைப்பட்ட நாள்களில் இந்தத் தம்பதியர், “ஆண்டவரே நம் ஆயன்; நமக்கேதும் குறையில்லை’ என்ற வார்த்தைகளைத் திரும்பித் திரும்பச் சொல்லி, தங்களை உற்சாகப்படுத்திக் கொண்டார்கள்.

இவர்கள் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டதன் பேரில், ஒருநாள் ஒப்பந்ததாரர் இவர்களுடைய வீட்டிற்கு வந்து, ‘பெயருக்கு’ ஒரு பூட்டை வாங்கி, மாட்டிவிட்டுச் சென்றார். அதுவும் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் இந்த வயதான தம்பதியர், ‘”தனியாக இருக்கின்றோம்... ஏதாவது ஆபத்து வந்தால் என்ன செய்வது...?” என்று சற்று வருந்தினார்கள். ஆனாலும், “ஆண்டவர் நம் ஆயர்; நமக்கேதும் குறையில்லை” என்ற வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி வந்தார்கள்.

இப்படியிருக்கையில் ஒருநாள் ‘ஒப்பந்ததாரர் அனுப்பி வைத்தார்’ என்று சொல்லிக்கொண்டு, தச்சர் ஒருவர் இந்த வயதான தம்பதியரின் வீட்டிற்குக் கையில் பலகைகள் மற்றும் தேவையான உபகரணங்களோடு வந்தார். வந்தவர் சிறிதுநேரத்தில் தலைவாசல் கதவைச் சரிசெய்தார். அவர் கதவைச் சரிசெய்த மறுவினாடி அவருடைய அலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது.

அதை அவர் எடுத்துப் பேசுகையில் மறுமுனையில் இருந்தவர், “கதவைச் சரிசெய்யச் சொல்லிக் கூப்பிட்டிருந்தோம்; நேரம் ஆகிக்கொண்டே இருக்கின்றது; எப்பொழுது நீங்கள் இங்கு வருவீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அந்தத் தச்சர், “ஐயா! கதவை இப்பொழுதுதான் சரிசெய்து முடித்தேன்” என்று சொல்ல, மறுமுனையில் இருந்தவர், “நான் வீட்டுக்கு முன்னால்தான் இருக்கின்றேன்; நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள்?” என்று கேட்டார். அப்பொழுதுதான் தச்சர் வீடுமாறி வந்ததை உணர்ந்தார். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அந்த வயதான தம்பதியர், நல்லாயன் தங்களைக் குறையில்லாமல் பார்த்துக்கொண்டார் என்று அவருக்கு நன்றி சொன்னார்கள். பின்னர் அவர்கள் அந்தத் தச்சருக்கு உரிய பணத்தைக் கொடுத்து, அவரை நன்றியுணர்வோடு வழியனுப்பி வைத்தார்கள்.

ஆம், ஆண்டவர் நம் ஆயனாய் இருப்பதால், நமக்கேதும் குறையிருப்பதில்லை. அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக் கூறுகின்றது. பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு, ‘நல்லாயன் ஞாயிறு’ என்பதால், இன்றைய இறைவார்த்தை இயேசு எப்படி நல்லயானாக இருக்கின்றார் என்பதை எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசு வாயிலாக இருப்பதால், நல்லாயன்

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, “ஆடுகளுக்கு வாயில்நானே” என்கின்றார். ஆடுகளுக்கு வாயில் நானே என்றால், ஆட்டுப்பட்டியில் இருக்கக்கூடிய ஆடுகள் அவர் வழியாகத்தான் உள்ளே போகவும் வெளியே வரவும் முடியும். இதன்மூலம் இயேசு, தானே விண்ணகத்திற்குள் செல்வதற்கான நுழைவாயில் என்றும் தன் வழியாக அன்றி எவரும் விண்ணகத்திற்குள்ளோ அல்லது தந்தையிடமோ செல்ல முடியாது (யோவா 14: 6) என்று மிக உறுதியாகச் சொல்கின்றார்.
இயேசு தன்னை வாயில் என்று சொல்வதன்மூலம், வாயில் வழியாக நுழையாமல், வேறு வழியாக ஏறிக் குதித்து, மந்தையிலிருந்து ஆட்டைத் திருடிய போலியான ஆயர்களைக் (மத் 24:5; யோவா 5:43) குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற அழைப்பினையும் தருகின்றார். ஆகையால், இயேசுவின் மந்தையைச் சார்ந்த ஒருவர் அவர் வழியாகவே விண்ணகத்திற்கு நுழையவேண்டும்; அவரை விடுத்து மற்ற போலியான ஆயர்களைக் குறித்து எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும். இந்த இரண்டையும் நம்முடைய கவனத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.

இயேசு வழிநடத்துபவராக இருப்பதால், நல்லாயன்

இயேசு, ஆடுகளுக்கு வாயிலாக இருப்பதால் மட்டுமல்ல, அவற்றை நல்லமுறையில் வழிநடத்துபவராக இருப்பதாலும், அவர் நல்லாயனாக இருக்கின்றார். இயேசுவின் காலத்திற்கு முன்பாக இருந்த மேய்ப்பர்ளும் சரி, இயேசுவின் காலத்தில் இருந்த மேய்ப்பர்களும் சரி மூடர்களாக இருந்தார்கள் (எரே 10: 21). ஏன் அவர்கள் மூடர்களாக இருந்தார்கள் எனில், கடவுளின் சொற்களுக்குச் செமடுக்க மறுத்து (எரே 12: 10), தங்களுடைய விருப்பத்தின் படி நடந்தார்கள். பாதைக்கு ஒளியாக இருக்கும் இறைவனிடம் சொல்லைக் கேட்டால்தான் நல்வழியில் நடக்க முடியும் (திபா 119: 105). தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தையை நல்லமுறையில் வழிநடத்தவும் முடியும். இவர்கள் கடவுளின் சொல்லுக்குச் செவிமடுக்க வில்லை; அதனாலேயே இவர்கள் மந்தையை நல்லமுறை வழிநடத்த முடியாத மூடர்களாய் இருந்தார்கள்.

ஆனால், நல்லாயனாம் இயேசு அப்படியில்லை, அவர் தந்தையின் சொல்கேட்டு அவருடைய அன்புக்குரிய மகனாக இருந்ததார் (மத் 3: 17; 17:5). தூய ஆவியாரால் நிரப்பப்பட்டவராகவும் (திப 10:38) இதனால் அவர் மக்களை நல்லமுறையில் வழிநடத்தக்கூடிய நல்லாயனாக விளங்கினார். அவர் மந்தையை நல்லமுறையில் வழிநடத்துகின்றார் என்பதற்கு இன்னொரு சான்று, ஆடுகளின் பெயரைத் தெரிந்து வைத்திருப்பது. ஆடுகளைப் பற்றித் தெரிந்திருந்தால்தானே, அவற்றை நல்ல முறையில் வழிநடத்த முடியும்! (எசா 40: 1-11) இயேசு ஆடுகளை நன்கு தெரிந்ததன் மூலமாகவும் தூய ஆவியாரால் நிரப்பட்டதன் மூலமாகவும் அவற்றை நல்லமுறையில் வழிநடத்தி, நல்லாயனாக விளங்குகின்றார்.

இயேசு வாழ்வளிப்பவராக இருப்பதால், நல்லாயன்

இயேசு ஆடுகளுக்கு வாயிலாக இருப்பதால் மட்டுமல்ல, ஆடுகளை வழிநடத்துபவராக இருப்பதால் மட்டுமல்ல; அவர் ஆடுகளுக்காக வாழ்வை அளிப்பவராகவும் இருப்பதாலும்தான் அவர் நல்லாயனாக இருக்கின்றார். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இருந்த மேய்ப்பர்கள், பெயருக்கு மேய்ப்பர்களாக இருந்து, கொழுத்ததைத் தின்று மந்தையைச் சிதறடித்தார்கள். மேலும் அவர்கள் ஆடுகளை மேய்ப்பதற்குப் பதில் ஆடுகளை மேய்ந்தார்கள். (எசே 33: 3,8). இவ்வாறு அவர்கள் ஆடுகளுக்கு வாழ்வைக் கொடுப்பதற்குப் பதில் அவற்றின் வாழ்வை எடுத்தார்கள். இயேசுவின் காலத்தில் இருந்த தலைவர்கள்கூட ஆடுகளாகிய மக்களுக்கு வாழ்விற்கான வாயிலை அடைப்பவர்களாக இருந்தார்கள்; சட்டங்களால் கொடுமைப்படுத்தினார்கள் (மத் 23: 13). இவர்களுக்கு முற்றிலும் மாறாக இருந்தவர்தான் ஆண்டவர் இயேசு. ஆம், நல்லாயனாம் இயேசு ஆடுகளுக்கு வாழ்வினைக் கொடுப்பவராக இருந்தார் (யோவா 10:10). அதனாலேயே அவர் நல்லயானாக இருக்கின்றார்.

இந்த உலகத்தில் ஆடுகள் என்னும் மக்களுக்காக உயிரைக் கொடுத்தவர்கள் அரிதிலும் அரிது. ஆனால், ஆண்டவர் இயேசு ஆடுகளுக்காக உயிரைக் கொடுத்து, நமக்கு வாழ்வைக் கொடுத்தார். அதனால்தான் அவர் நல்லாயனாக இருக்கின்றார். இந்த நல்லாயனின் மந்தையாக இருக்க நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான், அதுதான் அவருடைய குரல் கேட்டு நடப்பது (யோவா 10:3). ஆகையால், நமக்கு வாயிலாகவும் வழிகாட்டியாகவும் வாழ்வளிப்பவராகவும் இருக்கும் நல்லாயனின் குரல் கேட்டு நாம் நடந்து, அவருடைய அன்பு மக்களாக, மந்தையாக வாழ்வோம்.

சிந்தனை

‘ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழுங்கள். ஏனெனில் அவரே நல்லாயன். அவருக்குத்தான் ஆடுகளைத் தெரியும். ஆடுகளுக்கும் நல்லாயனாம் அவரைத்தான் தெரியும்’ என்பார் ரஸ்ஸல் பல்லார்ட் என்ற எழுத்தாளர். ஆகையால், நல்லாயனாம் இயேசுவின்மீது நாம் நம்பிக்கை வைத்து, அவருடைய வழிகாட்டுதலில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

 

ser ser ser

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com