மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..


தவக்காலம் நான்காம் முதலாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
1சாமுவேல் 16: 1b, 6-7, 10-13 | எபேசியர் 5: 8-14 | யோவான் 9: 1-41

ser

இன்றைய நற்செய்தியானது குருடராகப் பிறந்தவரைப் பற்றியும், இயேசு அவரைக் குணமாக்கியதைப் பற்றியும் அழகாக விவரிக்கிறது. இந்த நிகழ்ச்சியை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். 1) அவன் குருடராக இருந்த நிலை 2) பார்வை பெற்ற பின் இருந்த நிலை குருடராக இருந்த நிலையில் அவர் பிறவிலேயே குருடர் என்பதால் உலகம், பொருட்கள் அனைத்தையும் அறியாது இருந்தார். எல்லாமே அவருக்கு வெற்றிடமாகத்தான் இருந்தது. சுய மதிப்பும் பிறரை மதிக்கும் தன்மையும் இழந்த நிலையில் இருந்தார். சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் குருட்டுத் தன்மையால் மனித மாண்பு இழந்து எல்லோராலும் கைவிடப்பட்டவராக இருந்தார். அவருடைய தனித்தன்மையை அவனால் உணர முடியவில்லை .

அதோ! ஒரு மகிழ்ச்சியான நாள் அவரது வாழ்வில். இயேசுவைச் சந்திக்கின்றார். இல்லை! இல்லை! இயேசு அவனைச் சந்திக்கின்றார். உமிழ்நீரைச் சேற்றில் கலந்து அவன் கண்களைத் தொட்டுப் பூசி சிலோவாம் குளத்தில் கழுவ வைக்கின்றார். அதனால் அவர் பார்வை அடைகின்றார். புதிய மனிதராகின்றார். சுய மதிப்பு அவருக்குக் கிடைக்கிறது. மகிழ்ச்சி அவரது உள்ளத்தில் நிறைந்துவிட்டது. இதைக் கண்ட சிலருக்கு வியப்பாகவும், சிலருக்குக் குழப்பமாகவும், சிலருக்கு எரிச்சலாகவும், சிலருக்குப் பொறாமையாகவும் ஆகிவிடுகிறது. எனவே அவரிடத்தில் பலவிதமான கேள்விகள் கேட்டு தொல்லை கொடுக்கின்றார்கள். இந்த யூத மக்கள் அவரது பெற்றோரிடம் வினவிய போது அவரையே கேட்டுக் கொள்ளுங்கள். எங்களுக்குத் தெரியாது என்று பயந்து சொல்லிவிடுகிறார்கள் அவரது பெற்றோர். அவரது அக்கம் பக்கத்தார் அந்த உண்மையைப் பற்றிக் கவலைப்படாது அலட்சியப்படுத்தித் தள்ளி விடுகிறார்கள். ஆனால் பரிசேயர்களும், யூத குருக்களும் உண்மையை மறுக்கவும், மூடி மறைக்கவும் தொடங்குகிறார்கள். ஆனால் பார்வை பெற்றவரோ நான் குருடராக இருந்தேன். இப்போது பார்வை பெற்றேன். என்னைத் தொட்டவர் ஓர் இறைவாக்கினராகத்தான் இருக்க வேண்டுமென்று ஆணித்தரமாகப் பயமின்றி உண்மையை எடுத்துரைக்கின்றார். ஏனெனில் ஆண்டவர் சொன்ன வார்த்தை நானே உலகின் ஒளி, என்னைப் பின் செல்பவர் இருளில் நடவார், உயிரின் ஒளியைக் கொண்டிருப்பார் (யோவா. 8:12) என்பது நிறைவேறுகிறது இவரின் வாழ்க்கையில் . இதுவரையிலும் குருடராக இருந்த இவருக்கு உடலின் பார்வை மட்டுமல்ல அவருடைய ஒழுக்க சம்பந்தமான, ஞான சம்பந்தமான , உள்ளம் சம்பந்தமான குருட்டுத் தன்மைகளினின்றும் அவர் மீட்கப்படுகிறார். இதனால் இவர் இயேசுவைக் கண்டுகொண்டது மட்டுமல்லாது இயேசுவை மெசியாவாகவும், இரட்சகராகவும் ஏற்றுக்கொள்கிறார். புனித பவுல் அடிகளார் எபேசிய மக்களுக்கு எழுதும்போது நீங்கள் ஒளியின் மக்களாக வாழுங்கள் என எழுதுகிறார். ஏனெனில் ஒரு காலத்தில் பவுல் அடிகளாரே ஞானக் குருடராக திருச்சபையை எதிர்க்கின்ற தீவிரவாதியாக கிறிஸ்தவர்களையே கொலை செய்யும் ஒரு கொலையாளியாக இருந்தவர். ஆனால் இயேசு அவரைத் தொட்டு குணமாக்கிப் பார்வை கொடுத்துத் தன்னுடைய ஒப்பற்றப் பாத்திரமாக மாற்றிக் கொண்டார்.

ஐந்து இளைஞர்கள் ஆற்றங்கரையோரத்தில் வாழ்ந்த ஒரு குருவிடம் சென்றனர். அவரை நோக்கி, நாடு கெட்டுவிட்டது. லஞ்சம் பெருகிவிட்டது. ஊழல் மலிந்துவிட்டது. எனவே இந்த ஊழல் பெரிச்சாளிகளையெல்லாம் நாங்கள் தொலைத்துக்காட்ட விரும்புகிறோர் எங்களுக்கு அனுமதி கொடும் என்று கேட்டார்கள். குரு பேசாது இருள் நிறைந்த ஒரு சுரங்கத்திற்கு அழைத்துச் சென்றார். உள்ளே நுழைந்தவுடன் இருளை நீக்குங்கள் என்று ஆளுக்கு ஒரு வாரியல் கொடுத்தார். அவர்களால் இருளை நீக்க முடியவில்லை . அடுத்து உரத்த குரலில் சத்தமிட்டு இருளே ஓடுங்கள் என்று சொல்லச் சொன்னார். அதற்கும் இருள் மறையவில்லை. கையில் ஒரு கோலைக் கொடுத்து இருளை அடித்து விரட்டுங்கள் என்றும் சொன்னார். அப்படியும் முடியவில்லை. எனவே இளைஞர்கள் சலிப்பு அடைந்தார்கள். குரு மீது கோபமும் பட்டார்கள். ஆனால் குரு அமைதியாகப் பார்த்தீர்களா! இந்த நிலையில் உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் இப்போது பாருங்கள் இருள் மறையப் போகிறது என்றார். ஓர் இளைஞனிடம் நெருப்புப் பெட்டியைக் கொடுத்து பற்ற வைத்தார். ஒரு நொடியில் இருளானது மறைந்துவிட்டது. இதேபோல பிறரைக் குறை கூறுவதை விட நமது குறையை நீக்குவோம். ஒளியாகத் திகழுவோம் என்றார்.

பிறவி குருடர், குருடராக இருக்கின்றவரையிலும் அவருக்கு எந்தப் பிரச்சனையும் வரவே இல்லை. ஆனால் என்று பார்வை பெற்றாரோ அன்று தொடங்கியது அவருக்கு ஆயிரம் பிரச்சனைகள். அதேபோல கிறிஸ்து என்ற ஒளியை நாம் அறியாது, இந்த ஒளியை பெறாத நிலையில் இருந்தால் ஒரு பிரச்சனையும் வராது. ஆனால் என்று கிறிஸ்துவை அறிகிறோமோ, கிறிஸ்துவாக மாறுகிறோமோ அன்று நமக்குப் பல பிரச்சனைகள் வரும். அதை எதிர்த்துப் போராடுவதுதான் நமது கிறிஸ்தவ வாழ்வு.

ser ser

கடவுள் யாரைத் தேர்ந்தெடுக்கின்றார்?

மனத் தூய்மையுள்ளவர்களைக் கடவுள் தேர்ந்தெடுத்து அவர்ளை ஆசிர்வதிப்பார். எப்போதும் நாம் மனத்தூய்மையுடையவர்களாய் வாழ நாம் என்ன செய்யவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்ட இதோ ஒரு கதை!

அவன் ஒரு பாவி! அவனுக்கு ஒருநாள் தான் ஒரு புனிதனாக வேண்டும், அக ஒளி பெற்றவனாக, தூய்மை நிறைந்த மனம் படைத்தவனாக மாற வேண்டும் என்ற ஆசை வந்தது.

எல்லாருக்கும் நல்வழி காட்டும் புனிதர் ஒருவர் காட்டுக்குள் வாழ்வதாக அவன் அறிந்து, அந்தப் புனிதரைத் தேடி காட்டுக்குள் சென்றான்.

அவரிடம் போய் அந்தப் பாவி, சுவாமி, நான் ஒரு பெரிய பாவி மனம் திரும்பி நல்லவனாக வாழ ஆசைப்படுகின்றேன். எனக்கு நல்வழி காட்டுங்கள் என்றான்.

அந்தப் பாவியைப் பார்த்து அந்த முனிவர், நீ போய் ஒரு வெங்காயத்தாமரைச் செடியைக் கொண்டு வா என்றார். அவனும் கொண்டு வந்தான். அந்த முனிவர், இந்தச் செடியைக் கொண்டுபோய் கடலில் எறிந்து விட்டு வா என்றார். அதை எடுத்துக்கொண்டு அவன் கடற்கரைக்குச் சென்றான். அவன் எத்தனைமுறை அந்தச் செடியை கடலுக்குள் எறிந்தாலும் அத்தனை முறையும் அந்தச் செடியைக் கரைக்குக் கொண்டுவந்து சேர்ந்தன அந்தக் கடலலைகள்.

பாவி திரும்பி வந்தான். நடந்ததை முனிவரிடம் சொன்னான். அதற்கு அந்த முனிவர், மகனே! அந்தக் கடலுக்கு நன்றாகத் தெரியும்.

ஒரு செடி கடலுக்குள் புகுந்தால் போதும்! அது வளர்ந்து, படர்ந்து கடல் முழுவதையும் அடைத்துவிடும். அதனால்தான் அந்தச் செடி உள்ளே வராதபடி அந்தக் கடல், கடலலைகளால் அதைத் தூக்கி எறிந்திருக்கின்றது.

உன் மனம் முழுவதையும் பாவத்தால் நிரப்ப ஒரு சிறுபாவம் போதும்! ஆகவே ஒரு சிறுபாவம் கூட உனக்குள் நுழையாமல் பார்த்துக் கொள், பாவம் உன் பக்கத்தில் வரும்போது அதைத்தூக்கி எறிந்துவிடு என்றார்.

அவனும் அவ்வாறே செய்தான். புனிதனானான்; கடவுளுக்கு ஏற்புடையவனானான். 

மேலும் அறிவோம்:

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற (குறள் : 34).

பொருள் : அறச் செயல்கள் அனைத்துக்கும் அடிப்படையாக அமைவது உள்ளம் தூய்மையாக விளங்குதல் ஆகும். பிற செயல்கள் எல்லாம் வெளி ஆடம்பரப் பகட்டுகள் எனலாம்.

ser ser

இரு விழிகளையும் இழந்த ஒருவர் தன் கையில் எரிகின்ற விளக்கைப் பிடித்துக் கொண்டு வீதியில் நடத்ததைக் கண்டவர்கள் அவரிடம், "விழி இழந்த உமக்கு விளக்கு எதற்கு?" என்று கேட்டனர். அதற்கு அவர், "விழி உள்ளவர்கள் என்மீது மோதாதபடி நான் இவ்விளக்கை கையில் பிடித்துச் செல்கிறேன்" என்றார். இக்காலத்தில் பார்வை அற்றவர்களைவிடப் பார்வை உள்ளவர்கள் தான் வீதியில் அதிகம் விபத்துக்கு உள்ளாகின்றனர் என்பது ஒரு கசப்பான உண்மை .

இன்றைய நற்செய்தியில் இரு விழிகளையும் இழந்த ஒருவர் கிறிஸ்துவால் பார்வை பெறுகின்றார். ஆனால் இரு விழிகளையும் கொண்ட பரிசேயர்களோ பார்வையை இழக்கின்றனர். கிறிஸ்துவின்மேல் அவர்கள் தம்பிக்கை கொள்ளவில்லை, எனவே கிறிஸ்து கூறுகின்றார்: "பார்வையற்றோர் பார்வை பெறவும், பார்வையுடையோர் பார்வையற்றோர் ஆகவுமே வந்தேன்” (யோவா 9: 39), பயங்கரமான கூற்று!

யோவான் தமது நற்செய்தியின் முன்னுரையில், கிறிஸ்து மனிதர்க்கு ஒளியாக வந்தார்; அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதனைப் புரிந்து கொள்ளவில்லை என்றும் (யோவா 1:5), அவர் தமக்குரியவர்களிடம் வந்தார்; அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை " (யோவா 1:11) என்றும் கூறியுள்ளார். பரிசேயர் கிறிஸ்துவை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை? ஏனெனில் அவர்கள் அவரை மனித முறையில் ஒரு தச்சனுடைய மகனாகவே பார்த்தனர், மாறாக அவரை மெசியாவாகப் பார்க்கவில்லை. இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் கூறுகிறார்: "மனிதர் பார்ப்பதுபோல நான் பார்ப்பதில்லை; மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர். ஆண்டவர் அகத்தைப் பார்க்கிறார்" (1 சாமு 16:7-9).

முகத்தின் கண்கொண்டு காணும் மூடர்காள் 
அகத்தின் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் -திருமூவர்

முகக் கண்கொண்டு பார்ப்பவர்கள் முட்டாள்கள்: அகக்கண் கொண்டு காண்பவர்களே அறிஞர்கள்; ஞானிகள்; ஆனந்தம் அடைபவர்கள்,

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு (குறள் 355 )

பொருளின் வெளித்தோற்றம் எப்படி இருந்தாலும் அதற்குள் இருக்கும் மெய்ப்பொருளைக் காண்பது அறிவுடைமையாகும்.

திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "நாங்கள் எவரையும் மனித முறையில் மதிப்பிடுவதில்லை; முன்பு நாங்கள் கிறிஸ்துவையும் மனித முறைப்படிதான் மதிப்பிட்டோம்; ஆனால் இப்போது அவ்வாறு செய்வதில்லை " (2 கொரி 5:16).

வெளித் தோற்றத்தைக் கண்டு எத்தனை பேர் ஏமாறுகின்றனர்? ஒரு மாமியார் கூறுகின்றார்: "மணப்பெண், நடிகை ஜோதிகாவைப் போல இருக்கிறாள் என்று அவளை என் மகனுக்குத் திருமணம் செய்து வைத்தேன். ஆனால் அவள் "சந்திரமுகி" திரைப்படத்தில் வருகின்ற பேய்பிடித்த ஜோதிகாவாய் இருக்கிறாள்," நடிகைகளைக் கண்டு ஏமாற வேண்டாம்!

சமாரியப் பெண் எவ்வாறு கிறிஸ்துவைப் படிப்படியாக அறிந்தாரோ, அவ்வாறே பார்வை இழந்தவர் கிறிஸ்துவை அறிவதில் படிப்படியாக முன்னேறி, இறுதியில் அவரிடம் சரணடைகின்றார். முதல் நிலையில் கிறிஸ்துவைச் சாதாரண மனிதராகக் கண்ட அவர் (யோவா 9:1), இரண்டாம் நிலையில் அவரை ஓர் இறைவாக்கினராகக் கண்டு (யோவா 9:17). இறுதி திலையில் கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டு அவரிடம் சரண் அடைகிறார். ஆண்டவரே நம்பிகை கொள்கிறேன் என்று கூறி அவரை வணங்கினார்" (யோவா 9:38). கிறிஸ்து வெறும் மனிதரோ அல்லது ஓர் இறைவாக்கினரோ மட்டுமல்ல, அவர் கடவுளிடமிருந்து வந்தவர், அருள் பொழிவு பெற்றவர், மீட்பர் என்பதைப் படிப்படியாக உணரச் செய்வதே மறைக்கல்வியின், மறையுரையின் இறுதிக் குறிக்கோள், இயேசு கிறிஸ்து இந்த அரும் அடையாளத்தின் மூலம், "நானே உலகின் ஒளி" (யோவா 9:5) என்னும் மாபெரும் உண்மையை உணர்த்துகிறார்.

கிறிஸ்துவால் ஒளிபெற்று பார்வை அடைந்தவர் கிறிஸ்துவுக்குச் சாட்சியம் பகர்கின்றார். பரிசேயர்கள் அவரை மிரட்டுகின்றனர்: பழித்துரைக்கின்றனர்; தங்களுடைய இனத்தினின்று அவரைத் தள்ளி வைக்கின்றனர். ஆனால், அவரோ கிறிஸ்துவின் தனித்தன்மையை எடுத்துரைக்கின்றார். கிறிஸ்துவைப் பின்பற்றுவோர் பல்வேறு இன்னல் இடையூறு களுக்கு இலக்காகி வருகின்றனர். ஆனால் கிறிஸ்தவர்கள் பார்வையற்றவரின் நெஞ்சுறுதியைப் பின்பற்றி "இயேசு கிறிஸ்துவே ஆண்டவா" என்று அறிக்கையிடத் தயங்கக்கூடாது.

- "நான் போனேன்; கழுவினேன்; பார்வை பெற்றேன்" (யோவா 9:11) என்று பார்வையிழந்தவர் தான் பார்வை பெற்ற விதத்தை எடுத்துரைப்பது நமது சிந்தனையைத் தூண்டி, தமது நம்பிக்கையை வளர்க்க வேண்டும். நாம் திருமுழுக்கால் கழுவப்பட்டு, புதிய பார்வை பெற்று, புதுப்படைப்பாக மாறியுள்ளோம். நமது பார்வை எவ்வாறு உள்ளது?

ஓர் இளைஞர் கண் டாக்டரிடம் சென்று, "எனக்குப் பெண்கள் மட்டும், அதுவும் இளம் பெண்கள் மட்டும் தெரிகின்றனர். என் பார்வை, கிட்டப்பார்வையா? அல்லது எட்டப்பார்வையா?" என்று கேட்டார். டாக்டர் அவரிடம், "உம் பார்வை கெட்டப்பார்வை" என்றார். பெரும்பாலும் நமது பார்வை கெட்டப் பார்வையாகவே உள்ளது. ஏனெனில் நாம் விரும்பியவர்களை மட்டும், விரும்புகின்ற விதத்தில் பார்க்கிறோம். நாம் ஒளியின் மக்களா? இருளின் மக்களா? பிறரை அன்பு செய்தால் நாம் ஒளியின் மக்கள்; பிறரை வெறுத்தால் இருளின் மக்கள் சான்கிறார் யோவான் (1 யோவா 2:9-11). நமது பார்வை உலகளாவிய சகோதரப் பார்வையாக மாறவேண்டும்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் ஒளியின் கனிகளைப் பட்டியலிடுகிறார். அவை: நன்மை, உண்மை , தீதி. நாம் உண்மையைப் பேசி, நீதியைக் கடைப்பிடித்து, நன்மை செய்ய வேண்டும். பொய் பேசுகின்றவர்கள் அலகையைச் சார்ந்தவர்கள், ஏனெனில் கிறிஸ்து கூறுவதுபோல, அலகை பொய்யன், பொய்மையின் பிறப்பிடம் (யோவா 8:44).

ஓர் அம்மா தன் மகனுடன் பேருந்தில் ஏறி, தன் மகனுக்கு 7 வயது என்றார். அச்சிறுவன் அம்மாவிடம், "அம்மா! என் வயது 12" என்றான். அதற்கு அம்மா அவனிடம், "கவலைப்படாதே! பேருந்தில் இருந்து கீழே இறங்கியவுடன் உனக்கு 12 வயது வந்துவிடும்" என்றார்! பெற்றோர்களே பொய்மையின் பிறப்பிடமாக இருப்பது கவலைக்குரியது. உலகில் எத்தனையோ விளக்குகள் இருப்பினும் பொய்யா விளக்கிற்கு இணையான விளக்கு எதுமில்லை!

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் 
பொய்யா விளக்கேவிளக்கு (குறள் 299) 

கிறிஸ்துவை நம் வாழ்வின் ஒளியாக ஏற்று, உலகளாவிய சகோதரப் பார்வை பெற்று, உண்மையை விளக்காகக் கையில் ஏந்தி, நன்மை செய்து நிறைவாழ்வை நோக்கிப் பயணிப்போம்.

ser ser

பார்வை அற்றவர் யார்?

கண் பார்வை இல்லாதவர் யார்?

பாதையின் நடுவே ஒரு பாறாங்கல். இளைஞன் ஒருவன் சைக்கிளில் வேகமாக வருகிறான். அவன் பார்வையில் அந்தக்கல் படுகிறது. சைக்கிளைச் சுற்றி வளைத்து ஏதோ வித்தை காட்டுபவனைப் போல் ஒரு ப டர்ன் போட்டுத் திரும்பி விரைகிறான். இன்னொருவர் நாளிதழைப் படித்துக் கொண்டே வருகிறார். கல்லில் அவரது வலது கால் இடிக்கிறது. வேதனையில் முகச்சுளிப்புடன் கால் விரலைத் தேய்த்துக் கொள்கிறார். 'பொறுப்பற்ற மனிதர்கள்' என்று முணுமுணுத்துக் கொண்டே போய் விடுகிறார். பலர் அந்த இடத்தைக் கடந்தும் பார்த்தும் பார்க்காதவர்கள் போலச் சென்று கொண்டிருக்கிறார்கள். டக் டக் என்ற ஒலியுடன் ஒரு கைத்தடி, தடி கல்லில் படுகிறது. உடனே தடியை கக்கத்தில் வைத்துக் கொண்டு மெதுவாகக் கல்லைத் தூக்கி எடுத்து ஓரமாக வைக்கிறார் கண்பார்வையற்ற அந்த மனிதர். பின் தடியால் தட்டிக் கொண்டே பயணத்தைத் தொடர்கிறார் டக் டக் ஒலியுடன். "யார் பார்வையாளன்?” என்ற தலைப்புடன் அந்தத் துண்டுப் படம் முடிகிறது.

பார்வையற்றராக மட்டுமல்ல, யார் அக்கல்லில் தட்டி விழுவார்கள், தடுமாறித் துடிப்பார்கள், பார்த்து ரசிக்கலாம் என்று சாலையோரத்தில் காத்துக் கிடக்கும் கொடுமனம் கொண்டவர்கள் கூட உண்டு .

காண முடியாதவர்கள் அல்ல, காண விரும்பாதவர்களே உண்மையான குருடர்கள். பார்வை இழப்பு என்பது கொடியது. ஆனால் பார்க்கக் கண்ணிருந்தும் பார்க்காமல் இருப்பது, பார்க்க மறுப்பது மிகமிகக் கொடியது.

“பார்வையற்றோர் பார்வை பெறவும் பார்வையுடையோர் பார்வை யற்றோர் ஆகவுமே நான் வந்தேன் என்றார் (யோ.9:39) இயேசு,

இரு விழிகளையும் இழந்த ஒரு மனிதர் கிறிஸ்து இயேசுவால் பார்வை பெறுகிறார்; ஆனால் இரு விழிகளையும் கொண்ட பரிசேயர் களோ பார்வை இழக்கின்றனர்!

பிறவிக் குருடனுடைய புறக்கண்கள் மட்டுமல்ல, அவனது அகக் தொன்களும் திறக்கப்படுகின்றன. சமாரியப் பெண்ணைப் போல தனக்குப் பார்வை அளித்தவர் யார் என்பதைப் படிப்படியாக அறிந்து உணர்ந்து அவரிடம் சரணடைகிறார். முதலில் கிறிஸ்துவைச் சாதாரண மனிதராகக் கண்ட அவர் அடுத்து இறைவாக்கினராகவும் முடிவில் ஆண்டவராகவும் ஏற்றுப் பின் இயேசுவின் சாட்சியாக மாறுகிறார்.

பிறவி முதல் பார்வையோடு இருந்த பரிசேயர்கள் இறுதிவரை குருடர்களாகவே இருக்கின்றனர். புறக் கண்களைத் திறந்துவிட்ட இறைமகனால் அந்தக் குருடர்களின் மனக்கண்களைத் திறக்க முடியவில்லையே, எப்படி? அங்கேதான் “இறைவனின் பலவீனம்" தெரிகிறது. தூங்கிக் கொண்டிருக்கும் கும்பகர்ணனைக்கூட ஓங்கித் தட்டி எழுப்பி விடலாம். ஆனால் தூங்குவதாகப் பாசாங்கு செய்பவனை, விழித்தெழ விரும்பாதவனை நம்மால் மட்டுமல்ல, இறைவனாலும் எழுப்ப முடியாது. கண்களற்ற குருடனுக்கு மாற்றுக் கண்கள் பொருத்தித் தீர்வு காணலாம். கண்ணிருந்தும் பார்க்க விரும்பதவனை என்ன செய்வது? "நீங்கள் பார்வையற்றோராய் இருந்திருந்தால், உங்களிடம் பாவம் இராது. ஆனால் நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள்” (யோ.9:41) என்ற பரிசேயர் பற்றிய இயேசுவின் தெளிந்த பார்வை சிந்திக்கத்தக்கது.

விசுவாசப் பாதுகாப்பு, விசுவாச மறுமலர்ச்சி என்ற பெயரில் விசுவாசம் என்ன ஆடா மாடா, பயிரா பச்சையா வளர்ப்பதற்கு? பெட்டியில் வைத்துப் பூட்டிப் பாதுகாக்கப்பட வேண்டியது என்ற கோணத்தில் காலத்துக்கேற்ற மாற்றங்களைக் கூட எதிர்ப்பது, புரிந்து கொள்ள மறுப்பது, மரபுகளா அவை மடையர்களின் சட்டங்கள் என்று திருச்சபையின் அற்புதமான மரபுகளைப் பழிப்பது, இழித்துரைப்பது - இப்படித் திருச்சபையில் எத்தனை பரிசேயக் குருடர்கள்!

தன்னைச் சுற்றியுள்ள மக்களின் பசியைத் துன்பத்தைக் காண விரும்பாது. ஏழை மக்களின் நலத் திட்டங்களில் கூட எதைச் சுரண்டலாம், பஞ்ச காலத்தில் எதைப் பதுக்கலாம் என்ற எண்ண த்திலேயே உழலும் பேர் வழிகள்... இப்படிச் சமுதாயக் குருடர்கள். தான், தனது பெயர், தனது பதவி, தனது இனம்... இவைகள் தாம் சிலர் கண்ணில் எப்போதும் படும். தனக்கு விருப்பமா, பிடிக்குமா என்றுதான் பார்ப்பார்களே தவிர, திருச்சபைக்கு, சமுதாயத்துக்கு எது நலம் என்று பார்க்க மாட்டார்கள்... “இவர்கள் கிட்டப் பார்வை யுடையோர் (2 பேதுரு 1:9)

கடவுள் மனிதனைப் படைத்த போது அவன் கழுத்தில் இரண்டு பைகளை மாட்டி விட்டார். ஒன்று முதுகிலும் மற்றது மார்பிலும் தொங்கின. “ஒரு பையில் உன் குற்றங்களையும் மற்றதில் பிறர் குற்றங்களையும் பொறுக்கி போட்டு வை என்றார் கடவுள். மனிதனோ மார்புப் பையில் பிறர் குற்றங்களையும் முதுகுப் பையில் தன் குற்றங்களையும் பொறுக்கிப் போட்டுக் கொண்டான் எதற்காக? தன் குற்றங்கள் ஒருபோதும் தன் கண்ணில் படலாகாது. பிறர் குற்றங்கள் எப்போதும் தன் கண்ணில் படவேண்டும் என்பதற்காகத்தான்... இவர்கள் தூரப் பார்வையுடையோர்.

காமாலைக் கண்ணனுக்குக் காண்பதெல்லாம் மஞ்சள். அவனுக்கு பார்ப்பதெல்லாம் குறையாக, கேட்பதெல்லாம் தவறாகவே தெரியும். எப்போதுமே எதிர்மறைப் பார்வை கொண்ட காமாலைக் கண்ணன்கள். பிறவியிலேயே பார்வைத் திறனோ கேள்வித் திறனோ இன்றி வரலாற்றில் சாதனைத் தடம் பதித்த ஹெலன் கெல்லார் சொல்வார்: “மனிதன் வாழ்க்கையில் சந்திக்கும் பேராபத்து பெரும் சோகம், பேரிழப்பு பார்வையற்றவனாகப் பிறப்பது அல்ல, கண்ணிருந்தும் காணத் தவறுவது”.

“ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்த தால் மனிதர் ஒளியை விட இருளையே விரும்பினர். இதில்தான் அவர் களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது". (யோ.3:19) வெளிச்சம் இல்லையென்றால் பார்வையால் கூடப் பயனில்லை.

ஆதவனைக் கண்டு எல்லா மலர்களுமா மலர்கின்றன? தாமரை மலர்ந்து சிரிக்கிறது. அல்லி வாடிக் கூம்புகிறது. இயேசு என்னும் தெய்வீகப் பேரொளி நம்மில் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது?

ser ser

உலகின் ஒளியாம் இயேசு

நிகழ்வு
பார்வையற்ற ஒருவர் தன்னுடைய நெருங்கிய நண்பருடைய வீட்டிற்குச் சென்றிருந்தார். நண்பரின் வீடோ ஊருக்கு வெளியே ஓரமாக இருந்தது. இருவரும் மனம்விட்டுப் பேசிக்கொண்டிருந்ததால், நேரம்போனதே தெரியவில்லை. தற்செயலாக பார்வையற்றவரின் நண்பர் வெளியே பார்த்தபொழுதுதான் தெரிந்தது, நன்றாக இருட்டிவிட்டது என்று. உடனே அவர் தன்னுடைய நண்பரிடம், “நண்பா! வெளியே நன்றாக இருட்டிவிட்டது. அதனால் இப்பொழுது நீ உன்னுடைய வீட்டிற்குத் திரும்பச் செல்வது அவ்வளவு நல்லதல்ல என்று நினைக்கின்றேன். அதனால் இன்றிரவு இங்கு தங்கிவிட்டு, நாளைக் காலை வீட்டிற்குச் செல்” என்றார்.

“என்ன, இருட்டிவிட்டதால் வீட்டிற்குச் செல்லவேண்டாமா...? எனக்கு எப்பொழுதும் ஒரே இருட்டாகத்தானே இருக்கின்றது. அதனால் நான் இப்பொழுதே வீட்டிற்குத் திரும்பிச் செல்கின்றேன்” என்றார் அந்தப் பார்வையற்ற மனிதர். “சரி, இப்பொழுதுதே நீ உன்னுடைய வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்; ஆனால், போகிறபொழுது இந்த விளக்கை கையோடு கொண்டுசெல்; எதிரே வரக்கூடியவர்கள் உன்மீது மோதாமல் இருப்பார்கள் அல்லவா” என்று ஒரு விளக்கை கையில் கொடுத்து அனுப்பி வைத்தார் பார்வையற்றவரின் நண்பர்.

இதற்குப் பின்பு பார்வையற்றவர் தன்னுடைய நண்பர் தன் கையில் கொடுத்த விளக்கை ஏந்திக்கொண்டு வீட்டை நோக்கி நடந்துவந்தார். வழியில் எதிரே வந்தவர் இவர்மீது மோத இவருக்குக் கடுமையான கோபம் வந்தது. “நான்தான் கையில் விளக்கை ஏந்தி வருகிறேனே! பிறகு எதற்கு என்மீது மோதினீர்கள்! பார்த்து வரக்கூடாதா...?” என்று கத்தினார். உடனே எதிரில் வந்த மனிதர், “நீங்கள் கையில் விளக்கை ஏந்தி என்ன புண்ணியம்! அது அணைந்து வெகுநேரமாகிவிட்டது போலும்” என்று சொல்லிவிட்டுக் கடந்துபோய்விட்டார். பார்வையற்ற மனிதரோ ‘விளக்கு அணைந்து வெகுநேரமாகிவிட்டது என்பதுகூடத் தெரியாமல் நடந்து வந்திருக்கின்றேனே!’ என்று வருத்தத்தோடு வீட்டிற்கு வந்தார்.

மேலே உள்ள நிகழ்வில் வரும் பார்வையற்ற மனிதர் பார்வையில்லாமல் இருந்தால், இடறி விழுந்தார்; ஆனால், பலர் பார்வையோடு இருந்தாலும் வாழ்க்கையில் இடறி விழுகின்றவர்களாக இருக்கின்றார்கள். தவக்காலத்தின் நான்காம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, உலகின் ஒளியான இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்தால் நாம் பார்வைபெற்றவர்களாக இருப்போம் என்ற செய்தியை நமக்கு எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

பார்வையற்றவர் பார்வைபெறுதல்

நற்செய்தியில், இயேசு பிறவியிலேயே பார்வையற்ற மனிதருக்குப் பார்வையளிக்கின்ற ஒரு நிகழ்வினைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசு, பார்வையற்ற மனிதருக்குப் பார்வையளிக்கின்ற இந்த நிகழ்வு நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்பாக, இயேசுவுக்கும் அவருடைய சீடர்களுக்கும் இடையே நடக்கின்ற உரையாடலைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

இயேசுவின் சீடர்கள் பார்வையற்ற மனிதரைப் பார்த்தும், அவரிடம், இவர் இவ்வாறு பிறக்கக் காரணம் இவர் செய்த குற்றமா? இவர் பெற்றோர் செய்த குற்றமா என்று கேட்கின்றார்கள். ஏனெனில் விடுதலைப் பயணநூல், “ஆண்டவர், தந்தையரின் கொடுமையைப் பிள்ளைகள் மேலும், பிள்ளைகளின் பிள்ளைகள் மேலும் மூன்றாம் நான்காம் தலைமுறை வரை தண்டித்துத் தீர்ப்பவர்” (விப 34:7) என்று கூறுகின்றது. இதனாலேயே அவர்கள் இப்படியொரு கேள்வியை இயேசுவிடம் கேட்கின்றார்கள்; ஆனால், இயேசு அவர்களிடம், “கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும் பொருட்டே இப்படிப் பிறந்தார்” என்று கூறுகின்றார்.

இங்கு கடவுளின் செயல் எது எனத் தெரிந்துகொள்ளவேண்டும். இதற்கு நாம் இறைவாக்கினர் எசாயா நூலில் இடம்பெறுகின்ற கீழ்காணும் இறைவார்த்தையை இணைத்துச் சிந்தித்துப் பார்க்கவேண்டும் (எச 29: 18, 35:5, 42:7). இப்பகுதியில் மெசியா வருகின்றபொழுது பார்வையற்றவர் பார்வைபெறுவர் என்று சொல்லப்பட்டிருக்கும். இயேசு நற்செய்தியில் வருகின்ற பார்வையற்ற மனிதருக்குப் பார்வையளித்தன் மூலம், நான் மெசியா என்பதையும் நானே உலகின் ஒளி (யோவா 8:12) என்பதையும் நிரூபிக்கின்றார். இயேசு பிறவிலேயே பார்வையற்றவராய் இருந்த மனிதர்மீது இரங்கிப் பார்வையளித்தன்மூலம் அவர் புறப்பார்வையைப் (கண்பார்வையைப்) பெற்றுக்கொண்டார். பிறகு அவர் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டதன்மூலம் (யோவா 9:38) அகப்பார்வையையும் பெற்றுக்கொள்கின்றார்.

பார்வையோடு இருந்தவர்கள் பார்வையை இழத்தல்

பிறவிலேயே பார்வையற்ற மனிதர் ஆண்டவர் இயேசுவால் புறப்பார்வையும் தன்னுடைய நம்பிக்கையினால் அகப்பார்வையையும் பெற்றுக்கொண்டதைக் குறித்து சிந்தித்துப் பார்த்தோம். இப்பொழுது பார்வையோடு இருந்த பரிசேயர்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசு பார்வையற்ற மனிதரை நலப்படுத்திய நாள் ஓர் ஓய்வுநாள் என்பதால், ஓய்வுநாள் சட்டத்தை மீறிய ஒருவர் கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது என்றும் பாவியான ஒருவரால் பார்வையற்ற மனிதருக்குப் பார்வையளிக்க முடியாது என்றும் இருவிதமாகப் பேசிக்கொள்கின்றார்கள். இவ்வாறு அவர்கள் இயேசுவை மெசியா என்றும் உலகின் ஒளி என்றும் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். மட்டுமல்லாமல், பார்வையற்றிருந்து பின்பு பார்வைபெற்ற மனிதரையும் துன்புறுத்தத் தொடங்குகின்றார்கள்.

இயேசு மக்கள் நடுவில் பெற்ற பெயரையும் புகழையும் செல்வாக்கையும் பரிசேயர்களால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. இதனால் அவர்கள் இயேசுவை மெசியா என நம்பி ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். இதன்பொருட்டே பார்வையோடு இருந்தும் அவர்கள் பார்வையற்றவர்களாய் இருந்தார்கள். இறைவாக்கினர் எசாயா கூறுவார், “கண்ணிருந்தும் குரடராய்” (எசா 43:8) என்று. அவருடைய வார்த்தைகள் பரிசேயர்களுக்கு அப்படியே பொருந்திப் போவதாக இருக்கின்றன.

பார்வை பெற என்ன செய்யவேண்டும்

பிறவிலேயே பார்வையற்ற மனிதர் பார்வை பெறுவதும் பார்வையோடு இருந்த பரிசேயர்கள் ‘பார்வையற்றவர்களாய்ப்’ போவதும் நமக்கு என்ன செய்தியைத் தருகின்றது என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது. பார்வையற்ற மனிதர் பார்வை பெறுவதற்கும் பார்வையோடு இருந்த பரிசேயர்கள் பார்வையற்றவர்களாய்ப் போவதற்கும் ‘நம்பிக்கையே’ காரணமாக இருக்கின்றது. பார்வையற்ற மனிதர் இயேசுவை நம்பினார், அதனால் புறப்பார்வையோடு அகப்பார்வையும் பெற்றார். பார்வையோடு இருந்த பரிசேயர்கள் இயேசுவை நம்பவில்லை, அவரை ஏற்றுக்கொள்ளவுமில்லை. இதனால் அவர்கள் பார்வையோடு இருந்தும் பார்வையற்றவர்களாய் ஆனார்கள்.

‘கிறிஸ்தவர்கள்’ என்று மார்தட்டிக் கொள்ளும் நாம் இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கைகொண்டிருக்கின்றோமா? அல்லது பரிசேயர்களைப் போன்று அவரை நம்பாமலும் ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம். “ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்” (திபா 37:3) என்கிறார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து, உலகின் ஒளியாம் அவர் வழியில் பார்வையுள்ளவர்களாய் நடப்போம்.

சிந்தனை

‘ரபூனி, நான் மீண்டும் பார்வைபெற வேண்டும்’ (மாற் 10:51) என்று நம்பிக்கையோடு கேட்ட பர்த்திமேயுக்கு இயேசு பார்வையளிப்பார். நாமும் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டு வாழ்ந்தோமெனில், புறப்பார்வை பெற்றவர்களாக மட்டுமல்லாமல், அகப்பார்வை பெற்றவர்களாகவும் இருப்போம்; இறைவனுக்கு உகந்த வழியிலும் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser ser

நாங்களுமா பார்வையற்றோர்?

இரண்டு வருடங்களுக்கு முன் மதுரை பேராயரின் செயலராக இருந்தபோது, ஒரு நாள் ஏறக்குறைய இரவு 9 மணிக்கு, 'ஃபாதர், பேராயரைப் பார்க்க ஒருவர் வந்திருக்கிறார். உடனே வாருங்கள்' என்று வாட்ச்மேன் அழைத்தார். 'யாராயிருக்கும்?' என்ற எண்ணத்தில் கீழே இறங்கினேன். வந்திருந்தவர் பார்வையற்றவர். 'இந்த நேரத்தில் என்ன அவசரம்?' என்ற கேட்டபோது, 'பேராயரைச் சந்திக்க வேண்டும்' என்று மட்டும் பதிலளித்தார். அன்றைய நாளில் பேராயர் இல்லாததால், 'நாளை காலை வாருங்கள். சந்திக்கலாம்' என்று சொல்லிவிட்டு, அவரை மெதுவாக மெயின் கேட் வரை அழைத்துச் சென்றேன். கேட்டைச் சாத்தும்போது, 'ஏன் இப்படி இரவில் வெளியில் நடமாடி கஷ்டப்படுகிறீர்கள்?' என்று கேட்டேன். 'எனக்கு பகலும் இரவுதான். வெளிச்சமும் இருள்தான்' என்றார். என்னை யாரோ கன்னத்தில் அறைந்தது போல இருந்தது.

பார்வையற்றோரின் உலகம் நிறைய ஆச்சர்யங்களைக் கொண்டிருக்கிறது' என்கிறார் ஹெலன் கெல்லர். பார்வையற்றோரின் ஆச்சர்யங்களைக் காண வேண்டுமென்றால், அந்த உலகத்திற்குள் நாம் நுழைய வேண்டும்.

தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு வாசகங்கள் பார்வை பெறுதலை மையமாக வைத்துச் சுழல்கின்றன.

இவ்வாசகங்களில் நான்கு வகையான பார்வையற்ற நிலையைப் பார்க்கிறோம்:

அ. பிறவியிலேயே கண்பார்வையற்ற நிலை - பார்வையற்ற நபர் - இவரை இயேசு குணமாக்குகின்றார்.

ஆ. கடவுள் பார்ப்பது போல பார்க்க இயலாத பார்வையற்ற நிலை - சாமுவேல் - ஆண்டவராகிய கடவுள் இவருக்கு அறிவுறுத்துகிறார்.

இ. இருளில் அல்லது தூக்கத்தில் இருக்கும் நிலை - எபேசு நகரத் திருஅவை - விழிப்போடிருக்குமாறு பவுல் அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.

ஈ. இயேசுவை மெசியா என்று ஏற்றுக்கொள்ளாத நிலை அல்லது பாவ நிலை - யூதர்கள் அல்லது பரிசேயர்கள் - இவர்களை இயேசு நற்செய்தியின் இறுதியில் எச்சரிக்கிறார்.

இன்றைய முதல் வாசகத்திலிருந்து (காண். 1 சாமுவேல் 16:1,6-7,10-13) நம்முடைய சிந்தனையைத் தொடங்குவோம். முதல் வாசகத்தின் தொடக்கத்தில் ஆண்டவர் சாமுவேலைக் கடிந்துகொள்கின்றார். ஏனெனில், ஆண்டவர் சவுலை வெறுக்கிறார் என்று தெரிந்தும் சாமுவேல் அவருக்காகத் தொடர்ந்து துக்கம் கொண்டாடுகின்றார். 'பால் கொட்டிடுச்சு' என்று கவலைப்பட்டு, கொட்டிய பாலையும் துடைக்காமல், காய்ந்த பாத்திரத்தையும் கழுவாமல் அமர்ந்திருந்த சாமுவேலை எழுப்பிவிடும் ஆண்டவர், 'புதிய பாத்திரமும், புதிய பாலும் வாங்கிக் காய்ச்சு! கொட்டியதைப் பற்றிக் கவலைப்படாதே! கொட்டியது கொட்டியதுதான்' என்று பெத்லகேமில் உள்ள ஈசாயின் இல்லத்திற்கு அனுப்புகின்றார்.

இஸ்ரயேலின் முதல் அரசராக சவுல் ஆண்டவரால் நியமிக்கப்படுகின்றார். ஆனால், தொடக்கமுதல் ஆண்டவருக்குக் கீழ்ப்படிய மறுக்கின்றார் சவுல். மனிதப் பார்வையில் சவுல் மிகவும் சிறந்த ஆளுமையாகத் தெரிந்தார்: 'அக்காலத்தில் சவுலை விட அழகும் பொலிவும் உடையவர் இஸ்ரயேலில் எவரும் இல்லை. மற்ற எல்லாரோடும் அவர் நின்றபோது மற்றெல்லாரையும் விட அவரே உயரமாக இருந்தார். மற்றவர்கள் அவருடைய தோள் உயரமே இருந்தனர்' (காண். 1 சாமு 9:2). மனித பார்வையில் அழகானவராகவும், பொலிவானவராகவும், உயரமானவராகவும் தெரிந்தாலும், அவருடைய கீழ்ப்படியாமையால் கடவுளின் பார்வையில் அழகற்றவராகவும், பொலிவற்றவராகவும், சிறியவராகவும் தெரிகின்றார் சவுல். அவரை அரசாட்சியிலிருந்து நீக்கிவிடுகின்ற கடவுள் அவருடைய இடத்தில் தான் நியமிக்க இருந்தவரைத் திருப்பொழிவு செய்யுமாறு இறைவாக்கினர் சாமுவேலை அனுப்புகிறார்.

எருசலேமிலிருந்த ஈசாயின் இல்லத்திற்கு ஆண்டவரின் கட்டளைப்படி வருகின்றார் சாமுவேல். ஈசாயின் முதல் மகன் எலியாபைப் பார்த்தவுடன், அவன் வாட்டசாட்டமாக இருக்கக் கண்டு, 'இவனே அவன்!' என்று சொல்லி, தைலக் குப்பியை எடுத்துக்கொண்டு ஓடுகின்றார். ஆண்டவர் குறுக்கிட்டு, 'தம்பி! பொறு! இவனல்ல அவன்! அவனுடைய தோற்றத்தையும் உயரத்தையும் கண்டு மதிப்பிடாதே. ஏனெனில் அவனை நான் ஒதுக்கி விட்டேன். மனிதர் பார்ப்பதுபோல கடவுள் பார்ப்பதில்லை. அவர்கள் புறத்தைப் பார்க்கின்றனர். ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்' என்று சொல்லி அமர்த்துகின்றார். சாமுவேல் சவுலுக்காக கொண்டாடிய துக்கத்தை மட்டுமல்ல, அவர் தன்னுடைய பார்வையையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றார் கடவுள். சாமுவேல் சவுலுக்காக அழுத கண்ணீரின் ஈரம் அவருடைய பார்வையை மங்கலாக்கிற்றோ என்னவோ? ஆண்டவர் பார்ப்பதுபோல அவர் பார்க்க வேண்டும். ஆண்டவருடைய பார்வை மனித புறத்தை ஊடுருவிப் பாய்கிறது. காணக்கூடியவற்றைத் தாண்டி காண முடியாதவை நோக்கிப் பயணிக்கும் அவருடைய பார்வை மனித இதயத்திற்குள் நுழைந்து அங்கே இருப்பதை ஆராய்கிறது. தாவீதைக் கடவுள் தெரிந்துகொள்வதன் பொருள் இதுதான். மேலோட்டமான பார்வையில் அவர் நிறைய தவறுகள் செய்தாலும், தன்னுடைய உள்ளத்தில் ஆண்டவருக்கு பிரமாணிக்கமாவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருக்கிறார்.

ஈசாயின் எட்டாவது மகனாக, வயல் வெளியில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த தாவீது அழைத்துவரப்பட்டபோது, தாவீது 'சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டிருந்தான்' என்று சொல்கிறது விவிலியம். தாவீதின் பிரமாணிக்கமான உள்ளம் அவருடைய ஒளிரும் கண்களில் தெரிந்தது.

ஆக, மனிதர் பார்ப்பதுபோல பார்த்த சாமுவேலின் பார்வையற்ற நிலையைக் குணமாக்குகின்ற ஆண்டவராகிய கடவுள், தான் பார்ப்பது போல சாமுவேலை மாற்றுகின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். எபே 5:8-14) இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கின்றது. முதல் பகுதியில், 'ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் ... ஒளிபெற்ற மக்களாய் வாழுங்கள்' என அறிவுறுத்துகின்றார் பவுல். இரண்டாம் பகுதியில், 'தூங்குகிறவனே விழித்தெழு! கிறிஸ்து உன்மேல் ஒளிர்கின்றார்' என்ற தொடக்கத்திருஅவையின் திருமுழுக்கு வழிபாட்டில் பயன்படுத்தப்பட்ட பாடல் வரிகளை மேற்கோள் காட்டுகின்றார். காணுதல் என்பதை ஒளி, ஒளிர்தல், இருள் போன்ற உருவகங்களாகப் பதிவு செய்கிறது இவ்வாசகம். 'ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவருக்குள் ஒளியாய் இருக்கிறீர்கள்' என்று சொல்கின்ற பவுல், அவர்களுடைய கடந்தகால வாழ்வையும், இப்போது பெற்றிருக்கின்ற புதிய வாழ்வையும் நினைவுபடுத்துகின்றார். இருள் என்பது இங்கே எபேசு நகர மக்களின் அறநெறிபிறழ் வாழ்வையும், பாவ வாழ்வையும் குறிக்கிறது. குறிப்பாக, சிலைவழிபாடு (காண். எபே 5:5) அவர்களுடைய பெரிய பாவமாக இருந்தது. இச்செயல்களால் எந்தவொரு பயனும் இல்லை என்கிறார் பவுல். 'ஒளி பெற்ற மக்களாக இருப்பது' என்பது நன்மையான, நேரிய, மற்றும் உண்மையான கனிகளைக் கொடுப்பதில் இருக்கிறது.

ஒளி பெற்ற மக்களாக வாழ்தல் நம்பிக்கையாளருக்கு மிகப்பெரிய சவால். ஏனெனில், அவர் 'ஆண்டவருக்கு உகந்தது எது?' என்று கண்டு அதன்படி வாழ வேண்டும். ஆண்டவருக்கு உகந்ததைக் கண்டறிய கூரிய பார்வையும், அவருடைய வார்த்தையால் உந்தப்பட்ட இறைவேண்டலும், ஒருவர் மற்றவரை நேர்மையாக நடத்துதலும் அவசியம். இவற்றின் வழியாகவே ஒருவர் ஒளிக்குள் வரவும், இருளோடு போராடவும் முடியும்.

ஆக, இருள் அல்லது தூக்கத்தில் இருக்கும் நிலையில் ஒருவர் தான் செய்கின்ற தவற்றை மீண்டும் செய்கிறார் அல்லது பயனற்ற செயல்களைச் செய்கின்றார். ஆண்டவருக்கு உகந்ததை நாடும், செய்யும் ஒருவர் பார்வை பெற்றவர் ஆகிறார். அவர் தூக்கத்திலிருந்து விழித்தெழுகிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 9:1-41), பிறவியிலேயே பார்வையற்ற நபர் பார்வை பெறும் நிகழ்வை வாசிக்கின்றோம். தன்னிடம் வருகின்ற பார்வையற்ற நபரின் கண்களில் தன்னுடைய உமிழ்நீரால் உருவாக்கிய சேறு பூசி, சிலோவாம் குளத்தில் கழுவுமாறு அவரை அனுப்பிவிடுகின்றார் இயேசு. இயேசுவின் சமகாலத்தில் உமிழ்நீரால் குணமாக்குவது வழக்கமாக இருந்தது. ஆக, வழக்கத்திற்கு உரிய செயலையே இயேசு செய்திருந்தாலும், தன்னைக் குணமாக்கியவர் இயேசு என்று அறிக்கையிடுகின்றார் பார்வையற்ற அந்த நபர். இன்றைய நற்செய்தி வாசகம் 'இயேசு - பார்வைற்ற நபர் - பரிசேயர்கள்' என்று மூன்று முதன்மையான கதைமாந்தர்களை மையமாகக் கொண்டும், 'பார்வையற்ற நபரின் பெற்றோர் - யூதர்கள்' என்னும் இரண்டு சிறுகதைமாந்தர்களைக் கொண்டும் நகர்கிறது. மேலும், இயேசு-பார்வையற்ற நபர், பார்வையற்ற நபர்-பரிசேயர்கள், பரிசேயர்கள்-பெற்றோர்கள், பார்வையற்ற நபர்-இயேசு, இயேசு-பரிசேயர் என்று கதைமாந்தர்கள் நாடகத்தின் அடுத்தடுத்த காட்சிகளாக அறிமுகம் செய்யப்படுகின்றனர். தொடர்ந்து, 'நம்பிக்கை-நம்பிக்கையின்மை, ஏற்றுக்கொள்ளுதல்-ஏற்றுக்கொள்ளாமை, அறிக்கையிடுதல்-நிராகரித்தல்' என்ற முரண்புள்ளிகளாவும் நகர்கிறது நிகழ்வு.

உடல் அளவில் பெறும் பார்வை என்ற நிலையில் நிகழ்வு தொடங்கினாலும், நம்பிக்கையின் வழியாக இயேசுவை மெசியா என ஏற்றுக்கொள்ளும் பார்வை என்று நிகழ்வு மாறுகிறது. இறுதியில், பார்வையற்ற நபர் உடலளவிலும் உள்ளத்தளவிலும் பார்வை பெற்றவராக இருக்கின்றார். பரிசேயரோ உடலளவில் பார்வை பெற்றிருந்தும், உள்ளத்தளவில் பார்வையற்றவர்களாக, பாவிகளாக இருக்கின்றனர். இயேசுவைப் பற்றிய இந்த மனிதரின் பார்வை ஐந்து நிலைகளில் வளர்கிறது: முதலில், 'இயேசு எனப்படும் மனிதர்' என்றும், இரண்டாவதாக, 'இயேசு' என்றும், மூன்றாவதாக, 'அவர் ஓர் இறைவாக்கினர்' என்றும், நான்காவதாக, 'இவர் கடவுளிடமிருந்து வந்தவர்' என்றும், இறுதியாக, 'ஆண்டவர்' என்றும் அறிக்கையிடுகின்றார் அவர். இன்னொரு பக்கம், இந்த மனிதரின் உடனடி கீழ்ப்படிதல் (இயேசு சொன்னபடி உடனே செய்வது), எதார்த்தமான வாழ்வியல் நிலை (தன்னுடைய பழைய வாழ்வை அப்படியே ஏற்றுக்கொள்கின்றார்), வெகுளித்தனம் (அறியாமை பற்றி வருந்தாத நிலை), மற்றும் துணிச்சல் (பரிசேயர்களை எதிர்த்துக் கேள்வி கேட்டல்) நமக்கு ஆச்சர்யம் தருகிறது.

ஆக, நற்செய்தி வாசகம் உடல் அளவில் பார்வையற்ற நபர் இயேசுவின் உடனிருப்பால் பார்வை பெற்றதையும், மேலும் அவர் இயேசுவை நம்பியதால் உள்ளத்தளவில் பார்வை பெற்றதையும், பரிசேயர்கள் இயேசுவை நம்பாததால் இறுதிவரை பார்வை பெறாமலேயே இருப்பதையும் நமக்குக் காட்டுகிறது.

அல்லது

கடவுள் பார்ப்பதுபோல பார்ப்பதே பார்வைபெற்ற நிலை என்று முதல் வாசகமும், ஆண்டவருக்கு உகந்ததைச் செய்வதே பார்வைபெற்ற நிலை என்று இரண்டாம் வாசகமும், இயேசுவை மெசியா என்று நம்புதலே பார்வைபெற்ற நிலை என்று நற்செய்தி வாசகமும் நமக்குச் சொல்கிறது.

தன்நிலை அறியாத பரிசேயர்கள், 'நாங்களுமா பார்வையற்றோர்?' எனக் கேட்கின்றனர். இம்மூன்று பார்வையும் இல்லாவிடில் ஒருவர் பார்வையற்றவரே என்று சொல்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு விடுக்கும் சவால் என்ன?

இன்று நான் என்னையும் மற்றவர்களையும் எப்படிப் பார்க்கிறேன்? இன்றைய உலகம் கடவுள் பார்ப்பது போல யாரையும் பார்ப்பது இல்லை. நான் மற்றவர்களை அவர்களுடைய வெளிப்புறத் தோற்றத்தையும், காணத்தகு விதத்தில் அவர் பெற்ற வெற்றிகளை வைத்தும் அவரை பல நேரங்களில் மதிப்பிடுகிறேன். இன்று தோற்றத்திற்கு நிறைய முக்கியத்துவம் தரப்படுகிறது: 'நான் எப்படி இருக்கிறேன்?' 'ப்ரசன்ட்டபிளாக இருக்கிறேனா?' 'நவநாகரீகத்தின் அடையாளங்கள் என்னில் இருக்கின்றனவா?' 'சந்தையில் மிகவும் அண்மையில் வெளிவந்த ஸ்மார்ட்ஃபோன் என்னிடம் இருக்கிறதா?' 'என்னுடைய வீட்டின் அழகையும் பிரமாண்டத்தையும் பார்த்து எத்தனை பேர் வியக்கிறார்கள்?' 'நான் பயன்படுத்தும் காஸ்மெடிக் பொருள்கள் எனக்கு அழகு தருகின்றனவா? அவற்றை நான் மாற்ற வேண்டுமா?' - இன்றைய உலகம் பார்ப்பதற்கு இப்படித்தான் சொல்லிக்கொடுக்கிறது. ஆனால், கடவுள் அப்படி அல்ல. கண்ணாடியைப் பார்க்க இந்த உலகம் கற்பிக்கிறது என்றால், உள்ளத்தைப் பார்க்க என்னை அழைக்கின்றார் கடவுள். என் தோலின் நிறத்தையோ, வழுவழுப்பையோ, தலைமுடியின் நிறத்தையோ, ஆளின் உயரத்தையோ அல்ல, மாறாகாக என்னுடைய இதயத்தின் உணர்வுகளை, பிரமாணிக்கத்தை, நம்பகத்தன்மையைக் காண அழைக்கிறார்.

நான் என்னையே மூன்று நிலைகளில் பார்க்க வாய்ப்பு இருக்கிறது: ஒன்று, எதிர்மறை பார்வை. 'நான் கெட்டவன். நான் பாவி. கடவுளுக்கு என்னைப் பிடிக்காது' என்று பார்க்கும் இந்த நிலையில் என்னுடைய பார்வை என்னுடைய நிழல்களை மையப்படுத்தியதாக இருக்கும். இரண்டு, ஏமாற்றுப் பார்வை. 'நான் மற்றவர்களை விட சிறந்தவன். கடவுளின் பார்வையில் சிறந்தவன். அவனிடம் இல்லாத பல என்னிடம் இருக்கின்றன' என்று மேட்டிமை உணர்வோடு பார்ப்பது. மூன்று, எதார்த்தப் பார்வை. 'மேன்மைக்கும் தாழ்மைக்கும், குறைவுக்கும் நிறைவுக்கும் இடைப்பட்டவன் நான்' என்று சொல்லி என்னுடைய வரையறைகளையும் வடுக்களையும் வலிந்து ஏற்றுக்கொள்ளும் நிலை இது. என்னைப் பற்றிய பார்வையே நான் மற்றவர்களையும், கடவுளையும் பார்ப்பதை நிர்ணயிக்கிறது.

இறுதியாக,

இன்று புறக்கண்களால் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் நாம், இவ்வாய்ப்பைப் பெறாத, அல்லது இவ்வாய்ப்பை நோயினாலும், முதுமையினாலும் இழந்து கொண்டிருக்கும் இனியவர்களை எண்ணிப்பார்ப்போம். 'ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா!' என்றழைத்த பாரதியின் வார்த்தைகள் நம் காதுகளில் ஒலிக்கின்றன. கடவுள் பார்ப்பதை போல நானும் பார்க்க முடிந்தால், தூக்கத்திலிருந்து இருளிலிருந்து நான் எழுந்து நின்றால், இயேசுவின் மேல் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்டால், நான் ஒளிபெறுவேன். ஒளிபெற்ற நான், திருப்பாடல் ஆசிரியரோடு நின்று, 'மேலும் சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்' (காண். திபா 23) என்று சொல்ல முடியும்.

இல்லையெனில், நாமும் கேட்க நேரிடும் - 'நாங்களுமா பார்வையற்றோர்?'

ser

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com