மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு
முதலாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
திருத்தூதர் பணிகள் 2: 14, 22-33 | 1 பேதுரு 1: 17-21 | லூக்கா 24: 13-35

ser

உயிருள்ள சாட்சியங்கள்

பரிசு சீட்டு வாங்குபவர், தனக்குப் பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாங்குகிறார். தேர்வு எழுதும் மாணவர், நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று நம்புகிறார். நாம் எழுதும் கடிதம், கண்டிப்பாகப் போய் சேரும் என்ற நம்பிக்கைதான், அதைத் தபால் பெட்டியில் போட வைக்கிறது. இந்த நம்பிக்கை நம் வாழ்வையே இயக்குகிறது.

போர் வீரன் அலெக்சாண்டர் போருக்குச் சென்றபோது, எதிரியோடு போர் புரிந்து நோய்வாய்ப்பட்டார். அது எதிரி நாட்டு பாரசீக மன்னனின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி. பாரசீக மன்னனின் அரண்மனை மருத்துவர், இவரை இந்த நோயிலிருந்து குணமாக்கிவிடுவார் என்று பலரும் சொன்னார்கள். அதற்கு அலெக்சாண்டரின் போர்வீரர்கள், அந்த மருத்துவரை எப்படி நம்புவது? என்று யோசித்தார்கள். ஆனால் அலெக்சாண்டர் மட்டும் தயங்கவில்லை. உடனே அந்த மருத்துவரை அழைத்து வாருங்கள் என்றார். அலெக்சாண்டரின் உடலை மருத்துவர் சோதித்து விட்டு இரண்டு நாட்களுக்குள் மூலிகை மருந்தைக் கொண்டு வந்து, நான் குணமாக்கி விடுகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார். அலெக்சாண்டரின் தளபதிகளில் ஒருவர், உங்களிடம் வந்திருந்த எதிரி நாட்டு மருத்துவரை நம்பாதீர்கள். அவர் உங்களுக்குக் கொடுக்க இருப்பது, விஷம் கலந்த மூலிகை , என்று அவசர கடிதத்தை அனுப்பினான். அதைப் படித்த அவர் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவில்லை. மருத்துவர் கொண்டு வந்து கொடுத்த மூலிகை மருந்தைச் சாப்பிட்டுக் குணமடைந்தார். குணமடைந்த பிறகு தளபதியின் கடிதத்தை மருத்துவரிடம் காட்டினார்.

தன் மீது அலெக்சாண்டர் வைத்திருந்த நம்பிக்கையைப் பார்த்து அப்படியே திகைத்துப் போனார் மருத்துவர். நம்பிக்கை என்ற அச்சாணியை ஆதாரமாக வைத்து தான், இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. பாரசீக மன்னன் எனக்குப் பகைவராக - இருந்தாலும், மிகவும் பெரியவர், அவரின் அரண்மனை மருத்துவர் தொழிலில் நேர்மை இல்லாதவராக இருக்கமாட்டார். அப்படி இருந்திருந்தால், அவரை அங்கே வைத்திருக்க மாட்டார்கள் என்று நம்பினேன். எனது நம்பிக்கை வீண் போகவில்லை என்றார். நம்பிக்கை இல்லாவிட்டால், இந்த உலகில் வாழவே முடியாது. அவநம்பிக்கை எப்போதும், அவஸ்தையைத்தான் தரும். எதையும் நம்பிதான், வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க வேண்டியுள்ளது.

இயேசுவின் உயிர்ப்பிலும் அவரது சீடர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை . அவரது சொல், செயல், சிந்தனைகளிலும் நம்பிக்கை கொள்ளவில்லை. ஆனால், இயேசு அப்பத்தை பிட்கின்றபோது, அவரை அடையாளம் கண்டுகொண்டு, நம்பிக்கை கொள்கிறார்கள். இயேசுவின் புதுமைகள், போதனைகள், செயல்பாடுகள், இவைகளனைத்தின் உச்சகட்ட வெளிப்பாடுதான், அவர் தன் சீடர்களோடு அப்பத்தையும், இரசத்தையும், தனது உடலாகவும், இரத்தமாகவும் அடையாள வடிவில் பகிர்ந்து கொடுத்தது. இதன் வழியாகவே, இயேசு தன்னை இறை மகனாகவும், மனித மீட்புக்காக தன்னை முழுவதுமாக இழப்பதையும் வெளிப்படுத்தினார். சீடர்கள் உள்ளத்தாலும், உணர்வாலும், புதுவாழ்வையும், நம்பிக்கையையும் பெற்று போதிக்கத் தொடங்கினார்கள்.

மனிதர் முதலில் தன்னை நம்ப வேண்டும். ஆனால், இறைவனின் அருள் துணை இல்லாமல் நம்பிக்கை மட்டும் பயன் தராது, மருத்துவர் மருந்து கொடுக்கிறார். இறைவன்தான் குணப்படுத்துகிறார். இதுதான் உண்மை . ஆனால் ஒருவர் குணம் பெற, மருந்தைவிட, நான் கண்டிப்பாகக் குணம் பெறுவேன் என்ற நம்பிக்கையே குணமடைய வைக்கிறது. மனிதர் சுவாசிப்பதால் மட்டும் உயிர் வாழ்வதில்லை. அவன் நம்பிக்கையைச் சுவாசிப்பதாலும் உயிர் வாழ்கிறார். உயிர்த்த இயேசுவை நம்பாத சீடர்கள், அவரைப் பார்த்ததால் மட்டும் நம்பவில்லை, அப்பத்தைப் பிட்கிறபோதுதான், அடையாளம் கண்டு நம்பிக்கையில் தங்களையே , உறுதிப்படுத்திக் கொண்டனர்.

வாழ்வு தரும் உணவு நானே, என்னிடம் வருபவருக்கு பசியே இராது. என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது (யோவா. 6:35) என்ற இயேசுவின் வார்த்தைகளில் முழுமையான நம்பிக்கை கொள்வோம்.

ser ser

நமக்கு மறுவாழ்வு உண்டு

ஒரு காட்டுக்குள்ளே ஒரு துறவற இல்லம். அங்கே மூன்று துறவிகள் வாழ்ந்து வந்தார்கள்.
அவர்கள் மூன்றுபேரின் முகங்களும் எங்கேயும், எப்போதும் மாலையில் மலரும் மல்லிகைப் பூ போல் சிரித்திருக்கும்.
அவர்கள் காட்டைவிட்டு நாட்டுக்குள் புகுந்தால், அவர்கள் இருக்கும் இடம் சிரிப்புக் கடலாக மாறிவிடும்.
இப்படிப்பட்ட மூவரில் ஒருவர் திடீரென ஒரு நாள் இறந்து விட்டார். மீதி இருந்த இருவரும் கொஞ்சம்கூட கவலைப்படவில்லை, அழவில்லை! ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் பாடையைக் கட்டினார்கள்.

ஊர் மக்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. இவர்களோடு சேர்ந்து சிரிப்பதா, இல்லை அழுவதா என்று அவர்களுக்குப் புரியவில்லை .)
ஆடிக்கொண்டே பாடையை சுடுகாட்டிற்குத் தூக்கிச் சென்றார்கள். இறந்தவரின் உடலுக்கு முகமலர்ச்சியோடு நெருப்பு வைத்தார்கள்.
அப்போது யாரும் எதிர்பாராத ஒன்று நடந்தது. பாடையோடு சேர்த்து அவர்கள் கட்டிவைத்திருந்த வெடிகள் வெடிக்கத் துவங்கின.
வெடிகள், வெடிக்க, வெடிக்க உயிரோடிருந்த இரண்டு துறவிகளும் ஆனந்தக் கூத்தாடினார்கள்.
மக்களோ, உங்கள் நண்பர் இறந்திருக்கின்றார். நீங்கள் வெடிவெடித்து விழா நடத்துகின்றீர்களா? என்றார்கள்.

அதற்கு அந்தத் துறவிகள் இருவரும் மக்களைப் பார்த்து, இறப்பு என்பது அழிவில்லா மறுவாழ்வுக்கு நம்மை அழைத்துச் செல்லும் வாயில்! முடிவில்லா வாழ்வை, மகிழ்ச்சி நிறைந்த மறுவாழ்வை இவர் அனுபவிக்கச் செல்கின்றார். அப்படிச் செல்கின்றவரை வருத்தத்தோடு அழுது கொண்டு அனுப்பச் சொல்கின்றீர்களா? என்று கேட்டார்கள். இப்படி கேட்டுவிட்டு அவர்கள் மக்களைப் பார்த்து, இறப்பை, சாவை கொண்டாடுங்கள் என்றனர்.

மேலும் அறிவோம்:

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ (டு) உயிரிடை நட்பு (குறள் : 338).

பொருள் : உடலுக்கும் உயிருக்கும் இடையே உள்ள உறவு நிலையற்றது! தான் தங்கியிருந்த கூடு அல்லது ஓடு தனித்துக் கிடக்க பறவைக் குஞ்சு நீங்கிச் செல்லும்நிலை சிந்திக்கத்தக்கது!

ser ser

கண்களைத் திறக்க

ஒரு திருமணத் திருப்பலியில் மணமகன் மணமகள் கழுத்தில் தாலிகட்டிய போது, தாலிக்கயிற்றில் இரண்டு முடிச்சுகளுடன் நிறுத்திக் கொண்டார், மூன்றாவது முடிச்சு ஏன் போடவில்லை? என்று கேட்டதற்கு அவர் கூறியது: "பெண் வீட்டார் வரதட்சணையாக மூன்று இலட்சம் ரூபாய் கொடுப்பதாகச் சொன்னார்கள். ஆனால் இதுவரை இரண்டு இலட்சம்தான் கொடுத்தார்கள், எப்போது மூன்றாவது இலட்சம் கொடுக்கிறார்களோ அப்போதுதான் மூன்றாவது முடிச்சு போடுவேன்." தாலிக்கயிற்றில் மணமகன் மூன்று முடிச்சுப் போடுவதின் ஆழமான பொருள்: மனம் (எண்ண ம்), வாக்கு (சொல்), காயம் (செயல்) ஆகிய மூன்றிலும் அவன் தன் மனைவியைத் தவிர வேறு யாரையும் தீண்டமாட்டான் என்று அவன் தனக்கு ஒரு வேலி அமைத்துக் கொள்கிறான்!

தாலிக்கயிற்றில் மூன்று முடிச்சுகள் இருப்பது போல, கிறிஸ்தவர்கள் வாழ்விலும் மூன்று முடிச்சுகள் உள்ளன, அவை முறையே திருவிவிலியம், திருவிருந்து, திருச்சபை, இவை மூன்றும் உறுதியாக இருத்தால்தான், கிறிஸ்தவ நம்பிக்கை இறுதிவரை உறுதியாக இருக்கும். இம் மூன்று முடிச்சுகளைப் பற்றி இன்றைய நற்செய்தி கூறுகிறது.

திருவிவிலியம்: கிறிஸ்து இறந்த பிறகு சீடர்கள் கதிகலங்கிப் போனார்கள், நம்பிக்கை இழந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டார்கள். அவ்வாறு நம்பிக்கை இழந்த இரு சீடர்கள் கிறிஸ்து உயிர்த்த ஞாயிறு அன்று எருசலேமிலிருந்து எம்மாவு என்ற ஊருக்குப் பயணித்தனர், உயிர்த்தக் கிறிஸ்து அவர்களுடன் நடந்து சென்றும் அவரைக் கண்டு கொள்ளாதவாறு அவர்கள் பார்வை தடை செய்யப்பட்டிருந்தது, அவர்கள் வாடிய முகத்துடன் காணப்பட்டனர்.

நல்ல பாம்பு ஒன்று வாட்டத்துடன் வழியில் படுத்திருந்தது. ஏன்? என்று கேட்டதற்கு, "நான் எடுத்த படம் ஓடவில்லை " என்றது. திரைப்படம் ஓடவில்லை என்றால் அதை எடுத்தவர்கள் வாடிப் போய் விடுகின்றனர். அவ்வாறே கிறிஸ்து எடுத்த "இறையாக" என்ற படம் பாதியிலேயே நின்றுவிட்டதே என்று அந்த இரண்டு சீடர்கள் முகவாட்டத்துடன் காணப்பட்டனர். உயிர்த்த கிறிஸ்து அவர்களுடைய முகவாட்டத்தைப் போக்கப் பயன்படுத்திய முதல் ஆயுதம் திருவிவிலியம். மெசியா பாடுபட்டே மாட்சிமை அடைய வேண்டும் என்பதை திருவிவிலியத்தைக் கொண்டு கிறிஸ்து விளக்கினார். "மறை நூலைப் புரிந்து கொள்ளுமாறு அவர்களுடைய மனக்கண்களைத் திறந்தார் (லூக் 24:45).

நமது வாழ்வில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க அனைவரும், குறிப்பாக இளைஞர்கள், திருவிவிலியத்தைப் பயன்படுத்த வேண்டும். திருப்பா கூறுகிறது: "இளைஞர்கள் தம் நடத்தையை மாசற்றதாய்க் காத்துக் கொள்வது எவ்வாறு? உம் வாக்கைக் கடைப்பிடிப்பதால் அன்றோ " (திபா119:9), இன்றைய நவீன உலகின் தீய சக்திகளிலிருந்து இளையோரைப் பாதுகாக்க, அவர்களைத் திரைப்பட உலகிலிருந்து திருவிவிலிய உலகத்துக்குக் கொண்டு வருவது காலத்தின் கட்டாயமாகும். திருவிவிலியத்தில் கிறிஸ்துவைச் சந்திக்கின்றோம். அவர் தமது மனக்கண்களைத் திறந்து நம்முடன் வழிதடப்பதை உணர்த்துகிறார். சேறும் சகதியும் நிறைந்த பாதையில் வழுக்கி விடாமல் நடக்க ஊன்று கோல் தேவைப்படுகிறது. அவ்வாறே வாழ்க்கையில் வழுக்கி விழாதிருக்க ஆன்றோரின் அருள்வாக்கு தேவை என்கிறார் வள்ளுவர்,

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் (குறள் 415)

 திருவிருந்து: இரண்டு சீடர்கள் கிறிஸ்துவின் விவிலிய விளக்கத்தைக் கேட்ட போது, அவர்களுடைய உள்ளம் பற்றி எரிந்தாலும் அவர்கள் அவரை இன்னும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. ஆனால் கிறிஸ்து அவர்களோடு அமர்ந்து, அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுக் கொடுத்தபோதுதான் அவர்கள் கண்கள் திறக்கப்பட்டன. அவரை அடையாளம் கண்டுகொண்டனர் (லூக் 24:30-31). எனவே, கிறிஸ்து தம்மை வெளிப்படுத்தப் பயன்படுத்திய இரண்டாவது ஆயுதம், திருவிருந்து (நற்கருணை),

தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் ஒன்றுகூடிய போதெல்லாம் அப்பம் பிட்டனர் (திப 2:42), நற்ருணையின்றித் திருச்சபை இல்லை ; திருச்சபை இன்றி நற்கருணை இல்லை. இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுவதுபோல, நற்கருணைதான் திருச்சபை வாழ்வின் மற்றும் உச்சியும் ஆகும் (திருச்சபை, எண் 11). உயிர்த்த கிறிஸ்து அப்பத்தைப் பிட்டு அந்த இரண்டு சீடர்களுக்குக் கொடுத்தபின் அவர்கள் பார்வையிலிருந்து மறைந்து விட்டார். ஏனெனில் அவரது இரண்டாம் வருகைவரை, அப்பம் பிடுவதில், அதாவது நற்கருணைக் கொண்டாட்டத்தில் நாம் அவரை அடையாளம் காண வேண்டும் என்பதே அவரது விருப்பம்,

திருச்சபை: கிறிஸ்தவர்களின் மூன்றாவது முடிச்சு திருச்சபை என்னும் சமூகமாகும். கிறிஸ்துவை அடையாளம் கண்டுகொண்ட அந்த இரண்டு சீடர்கள் உடனடியாக எருசலேம் திருச்சபைக்குத் திரும்பி அங்கிருந்த சீடர்களுடன் அவர்கள் அப்பம் பிடுகையில் கிறிஸ்துவை அடையாளம் கண்டுகொண்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர் (லூக் 24:33-35). அனைவரும் கிறிஸ்து உயிருடன் இருப்பதை  உணர்ந்தனர்.

திருச்சபையின் உறவு ஒன்றிப்பில் நிலைத்து இருந்துதான் திருவிவிலியம் படிக்க வேண்டும்: திருவிருந்தில் பங்கேற்க வேண்டும். திருச்சபையில் இருந்து பிரிந்து போலி சபைகளுக்குச் செல்லுபவர்களின் நிலை பரிதாபத்திற்குரியது. ஒரு விவசாயி ஒரு குளத்தில் இருந்த ஆமையிடம் தனது வீட்டில் குளத்துத் தண்ணீரை விட இதமான தண்ணீர் இருப்பதாகக் கூறி அதைத் தன் வீட்டுக்குக் கொண்டுபோனார். வீட்டில் ஓர் அடுப்பில் பானையில் தண்ணீரை நிரப்பி அதில் ஆமையை விட்டு அடுப்பைச் சூடுபடுத்தினார், இளஞ்சூட்டில் ஆமை ஆனந்தமாகத் துள்ளியது. ஆனால், சிறிது சிறிதாக இளஞ்சூடு கொதிக்கும் தண்ணீராக, ஆமை அதில் வெந்து செத்தது. விவசாயி அதைச் சாப்பிட்டு மகிழ்ந்தார்.

அவ்வாறே கத்தோலிக்கத் திருச்சபையில் இருந்து இதர சபைகளுக்குச் செல்லும்போது ஆரம்பத்தில் ஆனந்தம் அடைகின்றனர். ஆனால் இறுதியில் தங்கள் விசுவாசத்தை இழந்து, உடைமைகளையும் இழந்து, முகவரி இல்லாமல் பரிதாபமாகத் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்கின்றனர். இத்தகைய பேராபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள எப்பொழுதும் விழிப்பாயிருக்க வேண்டும்,

ஒவ்வொரு திருப்பலியிலும் கிறிஸ்து எம்மாவுசுக்குச் சென்ற சீடர்களின் கண்களைத் திறக்கப் பின்பற்றிய அதே வழிமுறையைத் திருச்சபை பின்பற்றுகிறது. முதற்பகுதி அருள்வாக்கு வழிபாடு, இரண்டாம் பகுதி நற்கருணை வழிபாடு, திருவிவிலியம், நற்ருணை விருந்து, திருச்சபையின் உறவு ஒன்றிப்பு ஆகிய முப்பெரும் கூறுகளில் ஒன்றை மட்டும் பிடித்துக் கொண்டு, மற்றவற்றை ஒதுக்கிவிடாமல் இருக்க விழிப்பாயிருப்போம்; மூன்றையும் முழுமையாகப் பயன்படுத்தி, இம்மையில் வளமுடன் வாழ்ந்து, முடிவில்லாப் பேரின்ப வாழ்வைப் பெற்று மகிழ்வோம்!

ser ser

தெருவிலே திருப்பலி


 இன்றைய நற்செய்திப் பகுதிக்கு ஏற்றதொரு தலைப்பிட வேண்டுமா? 'தெருவிலே ஒரு திருப்பலி' என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
- வீதியிலே வார்த்தை வழிபாடு
- வீட்டிலே பலி வழிபாடு.

“மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா!" (லூக்.24:26) இதுவன்றோ இறைவனின் திருவுளம்! வழிப்போக்கனாக வந்திணைந்த இயேசுவின் இந்தச் சொற்கள், இறைவனின் திட்டத்தை, விருப்பத்தை அறிந்து ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பே திருப்பலி என்பதை உணர்த்துகின்றன. மொழியில் சிறந்தது மௌனம், மருந்தில் சிறந்தது மன்றாட்டு' என்பார்கள். இறை மகிமையை அல்ல, இறை உள்ளத்தை அறிந்து கொள்ள முற்படுவது - இதுவே திருப்பலி!

“இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார். ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன” (லூக்.24;15,16). அதற்குக் காரணம்?

1. அச்ச உணர்வு சீடரின் கண்களை மூடியது, காணும் திறனை இழக்கச் செய்தது. |
2. நம்பிக்கைக் குறைவு அவர்களின் அறிவை மழுங்கடித்தது, மந்தமடையச் செய்தது.

இதைப் போலத்தான் நமது வாழ்விலும், அச்சமும் நம்பிக்கை இன்மையும் ஒன்று சேர்ந்து நமது விசுவாசக் கண்களை மறைத்துவிடும். அப்பொழுதெல்லாம் இறைவன் நம்மோடு இருப்பதை உணராமல் கண்டுபிடிக்காமல் போய் விடுகிறோம்.

இயேசுவை மறுதலிக்கும்படி தூய ஜான் கிறிசோஸ்டம் கட்டாயப் படுத்தப்பட்டார். அதற்குக் கிறிசோஸ்டம் மறுப்புத் தெரிவிக்க, அதனால் கோபமடைந்த அந்த நாட்டு ஆளுனர் “உன்னை நான் நாடு கடத்துவேன்” என்று அவரைப் பயமுறுத்தினான். அதற்குக் கிறிசோஸ்டம் "கடவுள் எங்கு இல்லையோ அங்கு என்னை நாடு கடத்தினால் மட்டுமே பயப்படுவேனே யொழிய வேறு எங்கு அனுப்பினாலும் நான் பயப்பட மாட்டேன்” என்றார்.

கொந்தளிக்கும் கடல். அதைக் கண்டு அஞ்சி நம்பிக்கை இழந்துவிட்ட சீடர்கள், நீரின் மீது நடந்து வந்த இயேசுவைக் கண்டு "ஐயோ பேய் என அச்சத்தினால் அலறினர்” (மத்.14:26, மார்க் 6:49) அச்சம் அவர்களைக் குருடர்களாக்கியது.

இயேசுவின் உடலைக் கல்லறையில் காணாது மரியா அழுகிறாள். இயேசு அங்கே வருகிறார். “ஆனால் அங்கு நிற்பவர் இயேசு என்று அவள் அறிந்து கொள்ளவில்லை" (யோவான் 20:14) இனி அவரை எங்கே காணப்போகிறோம் என்ற நம்பிக்கை இழப்பு அவளை நிமிர்ந்து ஏறெடுத்துப் பார்க்காதவாறு செய்து விடுகின்றது.

இதைப்போலவே எம்மாவு சென்ற சீடர்களும் உடன் நடந்த இயேசுவை இனம் காணாதபடி அவர்களின் “முகவாட்டம்” (லூக்.24:17) மனமுடைவு விரக்திக்குத் தள்ளியிருந்தது. “அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்” (லூக்.24:20) என்றார்கள். இப்போது அந்த நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். நம்பிக்கை என்னும் உயிரை இழந்துவிட்டவனுக்கு அறிவு எங்கே இருக்கும், எப்படி இயங்கும்? எனவே “அறிவிலிகளே, மந்த உள்ளத்தினரே" (லூக்.24:25) என்ற இயேசுவின் கடிந்துரைக்கு ஆளாகிறார்கள்.

வாழ்வு என்னும் ஓடம் எப்பொழுதும் அமைதி ஆற்றில் செல்வதில்லை. துன்பம் என்னும் கடலுக்குள் நுழையும் போது நம்பிக்கை தான் நமக்குக் கண்கள். அது இருந்தால் இறைவன் புயலிலும் இருப்பதை நாம் உணரலாம்.

எத்தனை பெரிய வெள்ளிக்கிழமைகளைச் சந்தித்தால் என்ன? உயிர்த்த ஞாயிறாய் - உதய சூரியனாய் இயேசு நம்மோடு இருக்கிறார் என்பதை இறைவார்த்தையும் இயேசு நிறுவிய திருவருள் சாதனமும் (நற்கருணை) நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும்.

உயிர்த்து உயிர்வாழும் இயேசுவை இனம் கண்டு சந்திக்க இரு வழிகளுக்கு எம்மாவு நிகழ்வு அழுத்தம் கொடுக்கிறது.

1. இறைவார்த்தையைக் கேட்கும் போது (in the spoken word)

“வழியிலே அவர் நம்மோடு பேசி மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா? (லூக்.24:32). சீடர்கள் இயேசுவை அடையாளம் காணாவிட்டாலும் இயேசுவின் வார்த்தைகள் ஆறுதல் அளித்தன. இறைவார்த்தைக்குத் தனி ஆற்றல் உண்டு.

ஞாயிறு வழிபாடு முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள் வயதான மூதாட்டி. அவளைக் கண்ட இளைஞர்கள் கிண்டலாக, “பாட்டி, இன்று மறையுரையில் சாமியார் என்ன சொன்னார்?” என்று கேட்டார்கள். வயதான பெண்மணி நினைத்துப் பார்த்தாள், ஒன்றும் நினைவுக்கு வரவில்லை. “சாமியார் சொல்வது ஒன்றும் நினைவில் பதிவதில்லை என்றால் எதற்காகக் கோவிலுக்குப் போகிறாய்?" என்று கேட்டுச் சிரித்தனர். ஒரு மூங்கில் கூடையை அவர்களிடம் கொடுத்து அருகில் உள்ள நீரோடையில் அமிழ்த்தித் தண்ணீர் கொண்டு வரச் சொன்னாள். அவர்கள் கொண்டு சென்று நீரில் அமிழ்த்தி வெறுங் கூடையைக் கொண்டு வந்தனர். “இந்தக் கூடையில் எத்தனை ஓட்டைகள். இதில் எப்படித் தண்ணீ ர் தங்கும்?" என்றனர். அவள் சொன்னாள்! “உண்மைதான். கூடையில் தண்ணீர் தங்காது. ஆனால் கூடையை இப்போது பாருங்கள். நீரில் நனைந்ததும் அதன் மேல் படிந்திருந்த தூசி அகலவில்லையா? கூடை இப்போது சுத்தமாக இல்லையா?" அதுபோல் இறைவார்த்தை எனக்குள்ளே பதியவில்லை என்றாலும் அதைக் கேட்கும் போது நான் தூய்மையாவதை உணருகிறேன்".

2. அப்பத்தைப் பிட்கும் போது (in the broken bread)

*அவர் அப்பத்தைப் பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது... அவர்களும் அவரை அடையாளம் கண்டு கொண்டார்கள்" (லூக்.24:30,31) இயேசுவை இனம் காண, உணர்ந்து ஏற்க இறைவார்த்தை மட்டும் போதாது. நற்கருணை என்னும் அருள்சாதனம் வேண்டும்.

இறைவார்த்தை
- மனித சொல்லுரு எடுத்தது. அது விவிலியம்
- மனித உடலுரு எடுத்தது. அது நற்கருணை

கத்தோலிக்குத் திருச்சபை வைத்திருக்கும் கருவூலம் திருவருள் சாதனம். எவ்வளவு பெருமைக்குரியது!

 

ser ser

பெறுவோம், தருவோம்

நிகழ்வு

சிறுவன் ஒருவன் ஒரு யூத இரபியிடம், “முன்பெல்லாம் மக்கள் கடவுளைக் கண்கூடாகக் கண்டார்கள். இப்பொழுது அது ஏன் முடியவில்லை” என்றான். உடனே இரபி அவனிடம், “முன்பு வாழ்ந்தவர்கள் மிகுந்த தாழ்ச்சியோடு இருந்தார்கள். அதனால் அவர்கள் கடவுளைக் கண்கூடாகக் கண்டார்கள்; இப்பொழுது உள்ளவர்களுக்குத் தாழ்ச்சி இல்லை. அதனால்தான் கடவுளைக் கண்கூடாகக் காண முடியவில்லை” என்றார்.

இப்படிச் சொல்லிவிட்டு அவர் அந்தச் சிறுவனிடம் தொடர்ந்து சொன்னார்: “இன்றைக்கு இருக்கக்கூடியவர்களுக்கு தாழ்ச்சி இல்லாவிட்டாலும்கூட, இறைவனே தன்னை வெளிப்படுத்துகின்றார்.”

ஆம், மக்களுடைய உள்ளத்தில் தாழ்ச்சி இல்லாவிட்டாலும், இறைவன் தன்னை வெளிப்படுத்துகின்றார். இன்றைய நற்செய்தியில் எம்மாவு நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்ற இரண்டு சீடர்களுக்கு இயேசு தன்னை வெளிப்படுத்துவதைக் குறித்து வாசிக்கின்றோம். பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு, இன்றைய நாளில் நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நமக்கு என்ன சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தேடி வரும் இயேசு

நற்செய்தியில் இயேசுவின் சீடர்கள் இருவர் எருசலேமிலிருந்து எவ்வாவு நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றார்கள். முன்னதாக இவர்கள் இருவரும் அன்று விடியற்காலையில் கல்லறைக்குச் சென்ற பெண்கள் கல்லறையில் இயேசுவின் உடல் இல்லாததையும் வானதூதர்கள் தோன்றி இயேசு உயிர்த்துவிட்டார் என்று அவர்களிடம் சொன்னதையும் சொல்லக் கேட்டிருந்தார்கள். அப்படியிருந்தாலும் உயிர்த்தெழுந்த இயேசுவைத் தேடவேண்டும் என்ற எண்ணம் சிறிதளவுகூட இல்லாமல், எம்மாவு நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் இயேசுவே இவர்களைத் தேடிவந்து, இவர்களுக்குத் தன்னை வெளிப்படுத்துகின்றார். இதன்மூலம் கடவுள் தன் மக்களைத் தேடி வந்திருக்கின்றார் (லூக் 7: 16) என்ற இறைவார்த்தையானது உண்மையாகின்றது.

இங்கு நாம் கவனிக்கவேண்டிய முக்கியமான செய்தி, தங்களைத் தேடி வந்த இயேசுவை சீடர்கள் இருவரும் கண்டுகொண்டது, இறைவார்த்தை விளக்கத்திற்குப் பின்பு வந்த அப்பம் பிடிக்கின்ற நிகழ்வில்தான். அப்படியானால் இறைவன் நம்மைத் தேடிவருவதை இறைவார்த்தையிலும் நற்கருணைக் கொண்டாட்டத்திலும் கண்டுகொள்ளலாம் என்று உறுதி.

பெற்ற இறையனுபவத்தைப் பிறரோடு பகிர்ந்துகொள்வோம்

உயிர்த்த அண்டவர் இயேசுவை, அவர் அப்பத்தைப் பிட்டுக்கொடுக்கையில் கண்டுகொண்ட இரண்டு சீடர்களும் அங்கேயே இருந்துவிடவில்லை. மாறாக, அவர்கள் தாங்கள், அனுபவித்தத்தை மற்றவர்களுக்கு அறிவிக்க எருசலேமிற்கு விரைந்து செல்கின்றார்கள. ஆம், உயிர்த்த ஆண்டவர் இயேசு நமக்குக் கொடுக்கும் மிக முக்கியமான கட்டளை, நற்செய்தி அறிவிப்பாகும். இன்றைய முதல் வாசகத்தில் பெந்தகோஸ்து நாளில் திருத்தூதர்களின் தலைவராகிய பேதுரு மற்ற பதினொருவருடன் சேர்ந்து ஆண்டவர் இயேசுவைப் பற்றி அறிவிப்பதைக் குறித்து வாசிக்கின்றோம்.

இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டதும், யூதர்களுக்கு அஞ்சி வாழ்ந்த சீடர்கள், இயேசுவின் உயிர்ப்புக்குப் பின்பு அவர்கள் துணிவோடு அவரைப் பற்றி அறிவிக்கின்றார்கள். அப்படியானால், நாம் இயேசுவைப் பற்றியை நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கவேண்டும். இந்த உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது.

ஒருமுறை வில்லிங்டனை ஆண்டுவந்த மன்னன் ஒருவன் தனக்குத் தெரிந்த ஓர் அருள்பணியாளரிடம், “கிறிஸ்துவைப் பற்றி அறியாமல் பலர் இங்கு இருக்கின்றபொழுது, எதற்காக ஒருசில குருக்கள் எங்கோ இருக்கின்ற ஒரு நாட்டிற்குச் சென்று நற்செய்தி அறிவிக்கவேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அந்த அருள்பணியாளர், “இயேசு தம் சீடர்களை விட்டுச் செல்வதற்கு முன்பாக, ‘நீங்கள் உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவியுங்கள் சொன்னார். அதனால்தான் குருக்கள் உலகெங்கும் சென்று நற்செய்தி அறிவிக்கின்றார்கள். மேலும் இயேசு ஒன்றைச் சொல்கின்றார் என்றால் அதைக் காரணமில்லாமல் சொல்வதில்லை. எல்லா மக்களும் இயேசுவை அறிந்துகொள்ளவேண்டும். அதற்காகத்தான் குருக்கள் உலகெங்கும் சென்று நற்செய்தி அறிவிக்கின்றார்கள்” என்றார்.

ஆம், இயேசு நமக்குக் கொடுத்திருக்கும் மிக முக்கியமான கட்டளை, அவருடைய நற்செய்தியை எல்லாருக்கும் அறிவிக்கவேண்டும் என்பதுதான். எனவே, நாம் அவரைப் பற்றி அறிந்து, அடுத்தவருக்கு அறிவிப்பது மிகவும் இன்றியமையாதது என்பதை மறந்துவிடக்கூடாது.

இவ்வுலகில் வாழும் காலமெல்லாம் ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோம்

இன்றைய இறைவார்த்தை நமக்குச் சொல்லும் மூன்றாவது மிக முக்கியமான் செய்தி. ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வதாகும். புனித பேதுருவின் முதல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் அவர், “இவ்வுலகில் நீங்கள் அன்னியராய் வாழும் காலமெல்லாம் ஆண்டவருக்கு அஞ்சி வாழுங்கள்” என்கின்றார். ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வது என்றால், ஓர் ஆபத்தை அல்லது ஒரு கொடியவரைக் கண்டு அஞ்சி வாழ்வதைப் போல் வாழ்வதா என்ற கேள்வி எழலாம். ஆண்டவருக்கு அஞ்சி வாழ்ந்தால் என்றால், அவரை முழுமையாக அன்புசெய்து, அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பதாகும். இக்கருத்தினை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு தொடக்க நூல் 22 ஆம் அதிகாரத்தில் வருகின்ற ஒரு நிகழ்வோடு இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

இப்பகுதியில் ஆண்டவராகிய கடவுள் ஆபிரகாமிடம் தன்னுடைய மகன் ஈசாக்கைப் பலியிடுமாறு சொல்வார். ஆண்டவருக்கு அஞ்சி வாழ்ந்த அபிரகாம் சிறிதும் தயங்காமல் தன் மகன் ஈசாக்கைப் பலியிடத் துணிவார். இதுதான் ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வதாகும். ஆபிரகாம் ஆண்டவருக்கு அஞ்சி வாழ்ந்தார் என்றால், அவரை முழுமையாய் அன்பு செய்து அவருடைய கட்டளையைக் கடைப்பிடித்து நடந்தார். நாம் அவருக்கு அஞ்சி வாழ்கின்றோம் என்றால், அவருடைய இறையன்பு, பிறரன்புக் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அதிலும் குறிப்பாக இன்றைய நாளில் அவர் தருகின்ற எல்லாருக்கும் நற்செய்தியை அறிவிக்கின்ற கட்டளையைக் கடைப்பிடித்து வாழவேண்டும்.

நீதிமொழிகள் நூல், ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம் (நீமொ 9: 10) என்றும் ஒருவரைத் தீமையின்று விலகச் செய்யும்” (நீமொ 16:6) என்றும் சொல்கின்றது. எனவே, நாம் ஆண்டவருக்கு அஞ்சி நடக்கின்றோம் என்பதை தீமையிலிருந்து விலகி நின்று, படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவிப்பதை நம்முடைய வாழ்வாலும் வார்த்தையாலும் காட்டுவோம். அதன்வழியாக இயேசுவின் உண்மையான சீடர்களாய்த் திகழ்வோம்.

சிந்தனை

ஜான் வெஸ்லி அடிக்கடி சொல்லக்கூடிய வார்த்தைகள இவை: “மண்ணுலகில் நமக்கென்று இருக்கின்ற தலையாய கடமை, ஆன்மாக்களை மீட்பதுதான்.” ஆகவே, நாம் கடவுள் நமக்குக் கொடுத்த இந்த வாழ்க்கையை அவரைப் பற்றி அறிந்துகொள்வதற்கும் அறிந்தவற்றை மற்றவர்களுக்கு நம்முடைய வாழ்வாலும் வார்த்தையாலும் அறிவிக்கப் பயன்படுத்துவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser ser

திசைதிரும்பிய எதிர்பார்ப்புக்கள்

'எதிர்பார்ப்பு' இல்லாமல் நம்மால் வாழ முடியுமா? என்ற ஒரு கேள்வியை நாம் எழுப்பும் அதே நேரத்தில், 'எதிர்பார்ப்பு இல்லை என்றால் ஏமாற்றம் இல்லை' என்று நம் மனம் சொல்லி முடிக்கிறது.

பெக்கி (Becky) மற்றும் கான் (Khan) தம்பதியினர் திருமணம் முடிந்து இருபது ஆண்டுகள் கழித்து, பெக்கி ஒரு நாள் தன் கணவன் கானிடம், 'நான் உங்களைப் பற்றிய எதிர்பார்ப்புக்களைக் குறைத்துக்கொள்ளலாம் ன நினைக்கிறேன்!' என்கிறாள். அதற்கு கான் அவளிடம், திருமணத்தில் வரும் பெரும்பாலான பிரச்சினைகளையும், மகிழ்ச்சியின்மையும் மூன்று வகையான எதிர்பார்ப்புக்களிலிருந்து வருகிறது என்கிறார்:

(அ) நியாயமற்ற எதிர்பார்ப்பு (unreasonable expectation). திருமணம் முடிக்கும்போது குடும்பத்தில் நிலவிய பணக்குறையை அறிந்த பெக்கி, கானிடம், தினமும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா வேலை செய்யுமாறு சொல்கிறாள். ஆனால் ஒன்றிரண்டு மாதங்களில் அவனிடம், 'நீங்கள் என்னுடன் நேரம் செலவழிப்பதே இல்லை. வேலை, வேலை என்று இருக்கிறீர்கள்' என்று குறைபட்டுக்கொள்கிறாள். இது பெக்கியின் நியாயமற்ற எதிர்பார்ப்பு. ஏனெனில், கான் ஒரே நேரத்தில் வேலைக்குச் செல்லவும், வீட்டில் இருக்கவும் முடியாது.

(ஆ) தெளிவற்ற எதிர்பார்ப்பு (unclear expectation). பத்தாவது திருமண நாளில் பெக்கிக்கு ஒரு பரிசு கொடுக்க விரும்புகிறான் கான். என்ன வேண்டும் எனக் கேட்கின்றான். அவள் சேலை, மோதிரம், நெக்லஸ் என நாளுக்கு ஒன்று சொல்கிறாள். குழம்பிப் போகிற கான் அவளுக்கு அழகான சேலை எடுத்துக்கொடுக்கிறான். அது அவளுக்குப் பிடிக்கும் என நினைத்து, ஆவலுடன் அதை அவளிடம் நீட்ட, 'ஐயோ! இதே மாடல், கலர் என்னிடம் ஏற்கனவே இருக்கிறதே!' என அழத் தொடங்குகிறாள் பெக்கி. இங்கே, பெக்கியின் எதிர்பார்ப்பு தெளிவற்றதாய் இருந்ததால் கான் அதை நிறைவேற்ற முடியவில்லை.

(இ) நிறைவேறாத எதிர்பார்ப்பு (unmet expectation). சில நேரங்களில் எதிர்ப்பார்ப்புகள் நியாயமானதாகவும், தெளிவானதாகவும் இருக்கும். ஆனால், நிறைவேறாமலேயே போய்விடும். எடுத்துக்காட்டாக, இவர்கள் காதல் செய்யும்போது இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், திருமணத்திற்குப் பின் நடந்த ஒரு விபத்தினால் கருத்தரித்தல் பாதிக்கப்படுகிறது. ஆக, அங்கே இவர்கள் இருவரின் எதிர்பார்ப்புக்களும் நிறைவேறாமலேயே போய்விடுகின்றன.

இவற்றை சொல்லி முடித்த கான், இனி 'எதிர்பார்ப்புக்களைக் குறைத்துக்கொள்ளலாம்' என நினைக்கிற பெக்கியைப் பாராட்டுகிறான்.

கானின் இந்தப் பட்டியலோடு நாம் இன்னும் மூன்று எதிர்பார்ப்புக்களை இணைத்துக்கொள்ளலாம்:

(ஈ) அதீத எதிர்பார்ப்பு (over-expectation). அதாவது, ஒருவருடைய ஆற்றலை அல்லது திறனை நாம் அறிந்தாலும் அதைவிட அதிகம் எதிர்பார்த்தல். இது நபர்களுக்கும் பொருந்தும், பொருள்களுக்கும் பொருந்தும். நினைவுத்திறன் குறைவாக உள்ள என்னுடைய மாணவர் தேர்வில் அனைத்தையும் நினைவுகூர்ந்து எழுதுவார் என நினைப்பதும், என்னுடைய குட்டிக் கார் மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்ல வேண்டும் என நினைப்பதும் அதீத எதிர்பார்ப்புக்களே.

(உ) தாழ்வான எதிர்பார்ப்பு (under-expectation). இது, அதீத எதிர்பார்ப்புக்கு முரணானது. ஒருவரின் ஆற்றலை அறியாத நாம் மிகவும் தாழ்வாக எதிர்பார்த்தல். சில நேரங்களில் இது ஆச்சர்யத்தையும் பல நேரங்களில் அதிர்ச்சியையும் கொடுக்கும். எடுத்துக்காட்டாக, பெலிஸ்தியன் கோலியாத்தைக் கொல்வதற்காக ஒரு கவனுடனும் சில கூழாங்கற்களோடும் அவரை எதிர்கொள்கின்ற தாவீது தன்னிடம் வருவதைப் பார்க்கின்ற கோலியாத், தாவீதிடம் கொண்டிருக்கின்ற எதிர்பார்ப்பு மிகவும் தாழ்வானது. விளைவாக, கோலியாத்து தன்னுடைய தாழ்வான எதிர்பார்ப்பாலேயே இறந்துவிடுகிறார்.

(உ) தவறான எதிர்பார்ப்பு (wrong expectation). இது ஏறக்குறைய நியாயமயற்ற எதிர்பார்ப்பை ஒத்திருக்கிறது. பொருந்தாத ஒன்றை எதிர்பார்ப்பது. கோழி முட்டையை அடைகாக்க வைத்துவிட்டு, மயில் குஞ்சுகளை எதிர்பார்ப்பது தவறான எதிர்பார்ப்பு.

இவ்வளவு பெரிய முன்னுரை எதற்கு?

'நாசரேத்து இயேசுவைப் பற்றியதான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். அவர் இஸ்ரயேலே மீட்கப் போகிறார் என நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம்.'

'... நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம்' - இப்படித்தான் தங்களுடைய எம்மாவு வழிப்பாதையில் தங்களோடு கரம் கோர்த்த முன்பின் தெரியாத வழிப்போக்கனின் கேள்விக்கு விடையளிக்கின்றார் கிளயோப்பா.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 24:13-35) எம்மாவு நிகழ்வை நம் கண்முன் கொண்டு வருகிறது.

'நாசரேத்து இயேசு இஸ்ரயேலை மீட்கப் போகிறார்' என சீடர்கள் எதிர்பார்த்ததை மேற்காணும் பட்டியலில் எந்த வகையில் சேர்க்கலாம்?

நியாயமற்ற எதிர்பார்ப்பு - ஏனெனில், இறைவாக்கினராக, வல்ல செயல்கள் செய்தவர் உரோமை அரசை எதிர்த்துச் சண்டையிடுவார் என நினைத்தது.

தெளிவற்ற எதிர்பார்ப்பு - இயேசுதரும் விடுதலை அல்லது மீட்பு என்பது அரசியல்சார் நிகழ்வா அல்லது ஆன்மீகம்சார் நிகழ்வா என்ற தெளிவில்லாமல் இருக்கின்றனர் சீடர்கள்.

நிறைவேறாத எதிர்பார்ப்பு - இவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. ஆகவே, எருசலேமை விட்டு எம்மாவு நோக்கிச் செல்கின்றனர்.

மேலும், இவர்களுடைய எதிர்பார்ப்பை அதீத மற்றும் தவறான எதிர்பார்ப்பு வகையிலும் சேர்க்க முடியும்.

இப்படியாக, இங்குமங்கும் அலைக்கழிக்கப்பட்ட அவர்களின் எதிர்பார்ப்புக்களின் திசையைத் திருப்புகின்றார் இயேசு. விளைவாக, அவர்கள் தாங்கள் எங்கிருந்து வந்தார்களோ அதே திசையை நோக்கித் திரும்பிச் செல்ல ஆரம்பிக்கிறார்கள்.

அவர்களின் எதிர்பார்ப்புகள் நியாயமற்றவை, தெளிவற்றவை, அதீதமானவை என நினைக்கின்ற இயேசு மறைநூலின் உதவியுடன் அவர்களுக்கு விளக்குகின்றார். இறுதியில், உணவு அருந்தும்போது அவர்கள் கண்கள் திறக்கப்பட்ட அந்த நேரத்தில், தங்களுடைய எதிர்பார்ப்புக்கள் தவறானவை என உணர்கின்றனர்: 'வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?'

சீடர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனதால் நடந்த சிலவற்றை இன்றைய நற்செய்தி நமக்குச் சுட்டிக்காட்டுகிறது:

அ. எதிர்திசை நோக்கிச் செல்கின்றனர்

சீடர்கள் எம்மாவு நோக்கிச் செல்கின்றனர். அவர்களுடைய இல்லம் அங்கே இருந்ததா அல்லது உறவினர்கள் அல்லது நண்பர்களின் இல்லம் அங்கே இருந்ததா என்று தெரியவில்லை. எருசலேமில் இருந்தால் தங்களுக்கும் ஆபத்து என்று தப்பி ஓடுகிறார்களா அல்லது இனி இங்கே இருந்து பயன் ஒன்றுமில்லை, எல்லாம் முடிந்துவிட்டது என்று தப்பி ஓடுகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், எருசலேமை தங்கள் முதுகின்பின் தள்ளி எதிர்திசையில் நடக்கின்றனர். இனி இங்கே வரவே கூடாது என்பதுதான் அவர்களுடைய எண்ண ஓட்டமாக இருந்திருக்கும்.

ஆ. நடந்து செல்கின்றனர்

ஏறத்தாழ 11 கிமீ நடந்துசெல்ல முயல்கின்றனர். ஒன்று, அவர்களால் கழுதை அல்லது குதிரை வாகனம் ஏற்பாடு செய்ய முடியாமல் போயிருக்கலாம். அல்லது, அதை எல்லாம் தேடாமல், ஓட்டமும் நடையுமாக யார் துணையுமின்றி ஓடிவிட முயல்கின்றார்கள். நம் ஊர்களிலும் இன்று லாக்டவுன் விரக்தி மற்றும் சோர்வில் 80 கிமீ சைக்கிளில், 103 கிமீ நடந்து என பலர் தங்கள் இல்லம் செல்வதைப் பற்றிக் கேள்வியுறுகிறோம். மனித விரக்திக்கும் ஆற்றல் உண்டு என்பது இதற்குச் சான்று.

இ. உரையாடிக்கொண்டு செல்கின்றனர்

அமைதியற்ற உள்ளம் நிறையப் பேசும். தாங்கள் இயேசுவால் ஏமாற்றப்பட்டதைப் பேசியே தீர்த்துக்கொள்ள நினைக்கின்றனர். ஊர் போய்ச் சேரும் வரை நன்றாகப் பேசிவிட்டு, உள்ளத்தில் உள்ளதை எல்லாம் கொட்டிவிட்டு, போய் ஒரு நல்ல குளியல் போட்டு, இயேசுவைத் தலைமுழுகி விட வேண்டும் என்பது இவர்களின் எண்ணமாக இருந்திருக்கலாம்.

ஈ. முகவாட்டம்

முன்பின் தெரியாத மற்றொரு வழிப்போக்கன் கேள்வி கேட்டாலும், தங்களுடைய உள்ளுணர்வுகளை மறைக்கத் தெரியாமல், அல்லது மறைக்க முடியாமல் நிற்கின்றனர் அப்பாவி சீடர்கள். அவர்களின் முகவாட்டம் அவர்கள் அடைந்த ஏமாற்றத்தின் அறிகுறி.

உ. கோபம்

'எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்கு மட்டும்தான் நிகழ்ந்தவை தெரியாதோ!' எனக் கோபம் கொள்கின்றனர். வழக்கமாக, ஏமாந்து போயிருப்பவர் எல்லார் மேலும் கோபப்படுவார். அதுதான் இங்கே நிகழ்கிறது.

ஊ. வரவேற்பு

இறுதியாக, ஏமாந்த உள்ளம் தன்னுடைய கதையைக் கேட்ட ஒருவரை உடனே அரவணைத்துக்கொள்ளும். அப்படித்தான் இங்கேயும் நடக்கிறது. முன்பின் தெரியாத ஒருவரை தங்களோடு இரவில் தங்குவதற்கு அழைக்கும் அளவிற்கு அவர்களுடைய மனம் சோர்ந்து போயிருக்கிறது. முன்பின் தெரியாத இந்த நபர் இரவில் கத்தியை எடுத்துக் குத்தினால் என்ன நடக்கும்? என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், அவர்கள் அடைந்த ஏமாற்றம் இந்தக் கேள்வியை அப்புறப்படுத்திவிடுகிறது.

அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாததால் அவர்கள் பெற்ற இந்த ஆறு உணர்வுகளையும் செயல்களையும் இயேசுவின் ஒற்றைச் செயல் புரட்டிப்போட்டுவிடுகிறது. அப்பத்தைப் பிட்கும்போது இயேசுவைக் கண்டுகொள்கின்றார்கள்.

'அவர்கள் அந்நேரமே திரும்பிப் போனார்கள்' எனப் பதிவு செய்கிறார் லூக்கா.

அதாவது, உணவருந்தி முடித்த அந்த இரவிலேயே, இரவோடு இரவாக எருசலேம் நோக்கித் திரும்புகிறார்கள். அவர்களுடைய எதிர்பார்ப்பின் திசையைத் திருப்பிவிடுகிறார் இயேசு.

அவர்களின் இந்த விரைவான பயணத்தில் அவர்கள் தங்களின் மனச்சோர்வு, விரக்தி, ஏமாற்றம் அனைத்தையும் மறந்துவிடுகிறார்கள். 'இயேசு இருக்கிறார்' என்ற அனுபவம் அவர்களின் எதிர்பார்ப்பின் திசையைத் திருப்பிவிடுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 2:14,22-33), பெந்தகோஸ்தே நிகழ்வுக்குப் பின் பேதுரு எருசலேமில் ஆற்றிய பேருரையின் ஒரு பகுதியை வாசிக்கிறோம். தாவீது அரசரின் திருப்பாடல் வரிகளை (காண். திபா 32:11, 2 சாமு 7:12,13) மேற்கோள் காட்டுகின்ற பேதுரு, அவர் தன்னைப் பற்றி அல்ல, மாறாக, தனக்குப் பின் வரும் மெசியா பற்றி முன்னுரைத்திருப்பதாக எழுதுகின்றார். பேதுருவின் உரையின் சாரம் என்னவென்றால், தன்னுடைய சமகாலத்து யூதர்களின் தாழ்வான எதிர்பார்ப்பை இயேசுவின் உயிர்ப்பு தவிடு பொடியாக்கியிருக்கிறது என்பதுதான். இயேசுவைக் கொன்றுவிடலாம் என்பது யூதர்களின் எதிர்பார்ப்பாக இருந்து, அவர்கள் இயேசுவைக் கொல்லவும் செய்கின்றனர். ஆனால், அவருடைய உடல் படுகுழியைக் காணவிடாமல் கடவுள் அவரை உயிர்த்தெழச் செய்கிறார். பாதாளத்தைப் பார்த்துக்கொண்டு தங்களின் எதிர்பவறு hர்ப்பு நிறைவேறிவிட்டதாக எண்ணிக்கொண்டிருந்த யூதர்களின் திசையைத் திருப்பி வான் நோக்கிப் பார்க்க அவர்களை அழைக்கின்றார் பேதுரு.

இரண்டாம் வாசகம் (காண். 1 பேது 1:17-21), பேதுருவின் கடந்த வார அறிவுரைப் பகுதியின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இயேசுவின்மேல் நம்பிக்கை கொண்டதால் தாங்கள் அனுபவித்த பல்வேறு துன்பங்களால் மனம் துவண்டு போன மக்களுக்கு ஆறுதல் சொல்லும் பேதுரு, அவர்கள் பெற்ற மீட்பின் மேன்மையை - 'விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை பொன்னும் வெள்ளியும் அன்று, கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள இரத்தம்' - எடுத்துக்காட்டி, கீழானவற்றிலிருந்து தங்கள் முகத்தை மேலானது நோக்கித் திருப்ப அழைக்கின்றார்.

இறுதியாக,

'நீ விழுந்து கிடக்கும் இடத்தை அல்ல, நீ வழுக்கிய இடத்தையே கவனிக்க வேண்டும்' என்பது பழமொழி. தங்களுடைய எதிர்பார்ப்புகளில், எதிர்பார்ப்புகளால் வழுக்கிய சீடர்களின் திசையைத் திருப்புகின்றனர் இயேசுவும், பேதுருவும்.

திசைதிரும்பிய எதிர்பார்ப்புகள் புதிய பயணத்தின் மைல்கற்கள்!

ser

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com