மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..


தவக் கால 3-ஆம் ஞாயிறு -முதலாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
விடுதலைப் பயணம் 17: 3-7 | உரோமையர் 5: 1-2, 5-8 | யோவான் 4: 5-42

ser

இறைவன் இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து வழியாகத் தேனும் பாலும் பொழியும் கானான் தேசத்தில் கொண்டு வந்து சேர்த்துக் காப்பாற்ற விரும்பினார். அதற்காகச் செங்கடலை இரண்டாகப் பிளந்து வழிநடத்திக் கொண்டு வந்தார். பசியாக இருந்தவர்களுக்கு வானத்திலிருந்து மன்னாவைப் பொழில் ஆனால் குடிக்கத் தண்ணீர் கிடைக்கவில்லையே என்பதும் இந்த மக்கள் மோசேயுக்கு எதிராக எழுந்தனர். அவரைக் கல்லால் எறிந்து கொல்லும் அளவுக்கு மக்கள் மோசேயைக் கொடுமைப் படுத்தினார்கள். ஆனால் கடவுள் அந்த மக்களை அவர்கள் பாவத்திற்காக தண்டிக்க விரும்பவில்லை. மாறாகப் பாறையை உடைத்து தண்ணீர் வெளிப்படச் செய்து அவர்களின் தாகத்தை தீர்த்தார் (வி.ப.17:6). கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை (லூக் 1:37) என்ற வானதூதர் கபிரியேலின் கூற்றுப்படி, ஒன்றும் நடக்காது என்று நினைத்த மக்கள் மத்தியில் கடவுளால் எல்லாம் கூடும் என்பதைக் கடவுள் காண்பித்தார்.

இப்படிப்பட்ட அன்பே உருவான கடவுள் ஒரு நாள் மனிதரோடு நேருக்கு நேர் மனித உருவில் பேச விரும்பினார். இதைக் குறித்துதான் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலில் (எபி. 1:1) அதன் ஆசிரியர் பற்பல முறையிலும், பல வகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாட்களில் தன் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார் என்பது நிறைவு பெறுவதை இன்றைய நற்செய்தி நன்றாகப் படம் பிடித்துக்காட்டுகிறது.

இயேசு கடவுளின் அன்பின் உருவம். கடவுள், எவரும் அழியாமல் நிலை வாழ்வு பெறும் பொருட்டுத் தன் மகனையே அளிக்கும் அளவுக்கு உலகின் மீது அன்புகூர்ந்தார் (யோவா. 3:16) என வாசிக்கிறோம். கங்கையும் காவிரியும் இணைந்தாலும் அவை கடவுளின் கருணைக்கு ஈடாகாது. அன்புதான் இன்ப ஊற்று. அன்புதான் உலக மகாசக்தி. கோழி தன் குஞ்சுகளை இறக்கைக்குள் ஒன்று சேர்ப்பதுபோல (லூக். 13:34) தன் மக்களை ஒன்று சேர்க்க வந்த தந்தையின் அன்பின் வடிவம்தான் இயேசு.

இன்றைய நற்செய்தி இயேசுவின் அன்புக்குச் சான்று பகர்கிறது. சமாரியர்கள் என்றாலே. ஒதுக்கப்பட்டவர், தீட்டுப்பட்டவர் என்று புறம்பாக்கி வைக்கப்பட்ட சமுதாயம். எனவே எந்த யூதரும் சமாரியர்களோடு உறவு கொள்வதும் இல்லை , பேசவும் கூடாது. இந்த நிலையில், தன் சமூகத்தில் மனிதப் பிறப்பு எடுத்த இயேசு முதல் எந்த ஒரு யூதனும் சமாரியருடன் பேசுவது கூடாது. இரண்டாவது ராபி எனப்படும் இயேசு ஒரு சமாரியப் பெண்ணுடன் பேசுவது பெருங்குற்றம். ஏன்! ஆறு ஆடவருடன் வாழ்க்கை நடத்திய ஒரு சமாரிய விபச்சாரியுடன் பேசுவது என்பது மாபெரும் குற்றம். ஆனால் இயேசுவோ பட்டப் பகலில் மதிய வேளையில் இந்த சமாரியப் பெண்ணோடு உரையாடல் நடத்துகிறார். இவள் ஒரு சமாரியப் பெண் அதுவும் பெரும் பாவி என்று தெரிந்தும் அவளை வெறுக்கவில்லை, புறக்கணிக்கவும் இல்லை . அவளைச் சபிக்கவும் இல்லை . மாறாக ஓர் அன்பான உரையாடல் வழியாக, ஆற்றுப்படுத்துதல் வழியாக அவள் மனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுகின்றார். அவளிடத்தில் உறைந்து கிடந்த சாதி, மத, சட்ட ரீதியான, ஒழுக்கக் கேடான தடைகளையெல்லாம் ஒவ்வொன்றாக வெளியே கொண்டுவர, முழுவதும் திருந்தியவளாய் தண்ணீர் மொள்ள வந்ததை மறந்து, குடத்தைக் கிணற்றங்கரையிலே விட்டு விட்டு, ஜீவ ஊற்றாம் இயேசுவை இதயத்தில் ஏந்தி ஊருக்குள் சென்று இயேசுவைப் பற்றிய உண்மையை அறிக்கையிடுகின்றாள்.

ஒரு நல்ல குடம், ஒரு கீறல் விழுந்த குடம். ஒரு தொழிலாளி தினமும் இரு குடங்களையும் தூரத்தில் இருக்கும் கிணற்றில் உள்ள நல்ல தண்ணீரைத் தோளில் சுமந்து ஊருக்குள் கொண்டு வந்து காசு பெறுவது வழக்கம். ஒரு குடம் நிறைய இருப்பதால் முழுமையாகப் பணம் கிடைத்தது. ஆனால் இன்னொரு குடம் கீறல் இருந்ததால் தண்ணீர் சுமந்து வரும் வழியெல்லாம் வழிந்து குறைந்த குடமாக இருந்ததால் பணமும் குறைவாகக் கிடைத்தது. அவன் நடந்து வரும் பாதையோ ஒரு முதலாளியின் இடமாகும். ஒருநாள் கீறல் விழுந்த குடம் இந்த தொழிலாளியைப் பார்த்து, ஐயா! என்னால் ஒரு பயனுமில்லையே! வரும் வழியெல்லாம் தண்ணீரை ஒழுக விட்டு உங்களுக்குப் பணம் சம்பாதித்துத் தர போகிறது என்றார். ஓர் இளைஞனிடம் நெருப்புப் பெட்டியைக் கொடுத்து பற்ற வைத்தார். ஒரு நொடியில் இருளானது மறைந்துவிட்டது. இதேபோல பிறரைக் குறை கூறுவதை விட நமது குறையை நீக்குவோம். ஒளியாகத் திகழுவோம் என்றார்.

பிறவி குருடர், குருடராக இருக்கின்றவரையிலும் அவருக்கு எந்தப் பிரச்சனையும் வரவே இல்லை. ஆனால் என்று பார்வை பெற்றாரோ அன்று தொடங்கியது அவருக்கு ஆயிரம் பிரச்சனைகள். அதேபோல கிறிஸ்து என்ற ஒளியை நாம் அறியாது, இந்த ஒளியை பெறாத நிலையில் இருந்தால் ஒரு பிரச்சனையும் வராது. ஆனால் என்று கிறிஸ்துவை அறிகிறோமோ, கிறிஸ்துவாக மாறுகிறோமோ அன்று நமக்குப் பல பிரச்சனைகள் வரும். அதை எதிர்த்துப் போராடுவதுதான் நமது கிறிஸ்தவ வாழ்வு.

ser ser

இயேசுவே எப்பொழுதுமே உண்மை பேசிய உமது மனத்தை எனக்குக் கடனாகத் தாரும்

 
இயேசுவின் காலத்தில் பாலஸ்தீன நாட்டை அல்லது இஸ்ரயேலை மூன்று பகுதிகளாகப் பிரித்திருந்தார்கள். வடக்கே கலிலேயா, தெற்கே யூதேயா; கலிலேயாவுக்கும், யூதேயாவுக்கும் நடுவே சமாரியா இருந்தது. அந்தச் சமாரியா பகுதியில் சிக்கார் என்னும் ஊர். அந்த ஊரிலே ஈசாக்கின் மகன் யாக்கோபு அவருடைய மகன் யோசேப்புக்குக் கொடுத்த கிணறு இருந்தது. ஒருமுறை நான் புண்ணிய பூமிக்குச் சென்றபோது இந்தக் கிணற்றின் கரைக்குச் சென்றிருக்கின்றேன். இந்தக் கிணற்று நீரை நான் குடித்திருக்கின்றேன். இஸ்ரயேல் நாட்டிலேயே இந்தக் கிணற்றின் தண்ணீர்தான் மிகவும் சுவையானது. இந்தக் கிணற்றுக்கு அந்த ஊர்ப்பெண்கள் தண்ணீர் எடுக்க வருவார்கள். அவர்களில் ஒருத்தி மாபெரும் பாவி. அந்தப் பாவியைச் சந்திப்பதற்காக ஊதாரிப் பிள்ளை உவமையில் வரும் ஊதாரிப் பிள்ளைக்காக காத்திருந்த தந்தையைப் போல இயேசு காத்திருந்தார். யாருக்காக இயேசு காத்திருந்தாரோ அந்தப் பெண் வந்தாள்.

அவள் 5 ஆண்களோடு குடும்பம் நடத்தியவள். இயேசுவைச் சந்தித்தபோது அவள் ஆறாவது ஆணோடு வாழ்ந்துகொண்டிருந்தாள்.

தண்ணீர் எடுக்க வந்தவளிடம் இயேசு, பெண்ணே , நான் உனக்கு தாகமே எடுக்காத தண்ணீரைத் தருகின்றேன் என்றார். அவர் தாகமே தராத தண்ணீர் என்று குறிப்பிட்டது வரங்களையும் கனிகளையும் தரும் ஆற்றல்மிக்க தூய ஆவியாரையே.

அந்தப் பாவியோ, அப்படிப்பட்ட தண்ணீரை எனக்கு உடனே தாரும் என்றாள். இயேசுவோ, நான் தருகின்றேன். ஆனால் முதலில் நீ போய் உன் கணவரை அழைத்து வா என்றார். அவள் நினைத்திருந்தால் அவள் யாரோடு சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தாளோ அவனை அழைத்து வந்து இவர்தான் என் கணவர் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் அவள் இயேசுவிடம் பொய் சொல்ல விரும்பவில்லை.

அவள் ஒரு பெரிய பாவியாக இருந்தாலும் அவளிடம் உண்மையைச் சொல்லும் குணம் இருந்தது. எனக்குக் கணவரென்று யாருமில்லை என்று கூறிவிட்டாள். இயேசுவுக்கு உண்மை என்றால் மிகவும் பிடிக்கும். பிலாத்து இயேசுவைப் பார்த்து, நீ எதற்காக இந்த உலகத்தில் பிறந்தாய்? என்று கேட்டான். அதற்கு இயேசு, உண்மைக்குச் சான்று பகரவே, சாட்சி சொல்லவே, நான் உலகத்தில் பிறந்தேன் (யோவா 18:37-38) என்றார்.

ஆக, இயேசு பிறந்தது உண்மையை எடுத்துரைக்க, இயேசு வளர்ந்தது உண்மையை எடுத்துரைக்க, இயேசு இறந்தது உண்மையை எடுத்துரைக்க, இயேசு உயிர்த்தது உண்மையை எடுத்துரைக்க. ஆகவே, உண்மை என்றால் இயேசுவுக்கு மிகவும் பிடிக்கும்.

சமாரியப் பெண் பெரிய பாவியாக இருந்தாலும், அவளிடம் உண்மை பேசும் குணமிருந்ததால் இயேசு அவளுடைய பாவங்களையெல்லாம் மன்னித்து அவளுக்கு முதல் நற்செய்தியாளர் என்னும் பட்டத்தை அளித்தார். முதன் முதலில், இயேசுதான் மெசியா, இயேசுதான் கிறிஸ்து, இயேசுதான் ஆண்டவர் என்பதை உலகுக்கு அறிக்கையிட்டவள் அந்தச் சமாரியப் பெண்தான்.

அவள் சொன்ன உண்மைக்கு முன்னால் அவள் செய்த பாவங்களெல்லாம் ஒன்றுமில்லாமல் போயின. இது தவக்காலம். இந்த தவக்காலத்தில் நாம் இயேசுவிடமிருந்து பாவ மன்னிப்பு பெற ஓர் அருமையான வழி நீங்களும் நானும் உண்மை பேச முன் வருவதாகும். இயேசு உண்மை விரும்பியாக இருப்பதால் பொய் சொல்கின்றவர்களை அவர் ஒருபோதும் ஆசிர்வதிப்பதில்லை.

இதோ இந்த உண்மையை எடுத்துச்சொல்ல கதை ஒன்று! காட்டுக்குள் விறகு வெட்டி ஒருவன் விறகு வெட்டிக்கொண்டிருந்தான். அவன் விறகு வெட்டிக்கொண்டிருந்த இடத்திற்குப் பக்கத்தில் ஓர் ஆழமான கிணறு! கை நழுவி கோடரி கிணற்றுக்குள் விழுந்தது! செய்வதறியாது கலங்கிநின்ற விறகு வெட்டியின் முன்னால் கடவுள் தோன்றினார்! கடவுள் விறகு வெட்டியைப் பார்த்து, என்ன பிரச்சினை? என்றார்! விறகு வெட்டி நடந்ததைச் சொன்னான்! நான் உனக்கு உதவி செய்கின்றேன் எனச் சொல்லி, கடவுள் முதலில் ஒரு தங்கக் கோடரியை எடுத்துக்காட்டினார். விறகுவெட்டி, இது இல்லை என்று சொல்லிவிட்டான்! பிறகு வெள்ளிக் கோடரி ஒன்றைக் கடவுள் எடுத்துக் காட்டினார். இதுவும் என்னுடையது இல்லை என்று சொல்லிவிட்டான். கடவுள் மூன்றாவதாக இரும்புக்கோடரி ஒன்றை எடுத்துக் காட்டினார். விறகு வெட்டி, இதுதான் என்னுடையது என்றான். கடவுளோ, நீ உண்மை பேசியதால், தங்கக் கோடரியையும், வெள்ளிக் கோடரியையும் உனக்குப் பரிசாகத் தருகின்றேன் என்று சொல்லி, தங்கக் கோடரியையும், வெள்ளிக் கோடரியையும் விறகு வெட்டியிடம் கொடுத்து மறைந்துவிட்டார். உண்மை பேசுகிறவர்களைக் கடவுளுக்கு மிகவும் பிடிக்கும்.

இயேசு மலைப் பொழிவிலே (மத் 5:37) நீங்கள் பேசும்போது ஆம் என்றால் ஆம் என்று இருக்கட்டும், இல்லை என்றால் இல்லை என்று இருக்கட்டும்; இதைத்தவிர மற்ற அனைத்தும் சாத்தானிடமிருந்து வருகின்றன என்று கூறுகின்றார்.

ஆம். இயேசு நாம் எப்பொழுதும் உண்மையைப் பேச வேண்டும் என்று விரும்புகின்றார். உண்மையைப் பேசுகின்றவர்களின் பாவங்கள் அனைத்தையும் அவர் மன்னிக்கத் தயாராக இருக்கின்றார்.

யோவா 8:1-11-இல் பாவத்தில் பிடிபட்ட பெண், தான் ஒரு பாவி என்ற உண்மையை ஏற்றுக்கொண்டதால் அவளுக்குப் பாவ மன்னிப்புக் கிடைத்தது.

லூக் 19:1-10-இல் சக்கேயு தான் பாவி என்ற உண்மையை ஏற்றுக்கொண்டதால் அவனுக்குப் பாவ மன்னிப்பு கிடைத்தது.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதற்குப் பெயர்தான் பொய்!

இந்தத் தவக்காலத்திலே பொய்யைத் தவிர்த்து உண்மைக்கு முதலிடம் கொடுப்போம்! அப்போது நமது பாவங்கள் செந்தூரம் போல சிவப்பாக இருந்தாலும் இயேசு அவற்றைக் கழுவி வெண்பனியிலும் நம்மை வெண்மையாக்குவார்.

இன்று இதுவே நமது மன்றாட்டாக இருக்கட்டும்: எங்கும், எப்பொழுதும், எதிலும் உண்மையைப் பேசிய இயேசுவே! உமது மனத்தை சற்றுக் கடனாகத் தாரும்! நாங்கள் உம்மிடம் வரும்போது அதை உம்மிடம் திருப்பிக் கொடுத்துவிடுகின்றோம். ஆமென். 

மேலும் அறிவோம்:

தன்நெஞ்(சு) அறிவது பொய்யற்க ; பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும் (குறள் : 293). 

பொருள் : தன் உள்ளத்தில் தெளிவாகத் தெரிந்த உண்மையை மறைத்துப் பொய் சொல்லக் கூடாது! அவ்வாறு பொய் பேசினால் பின்னர் அவன் நெஞ்சே அவனைக் குற்றம் சாட்டித் துன்புறுத்தும்!

ser ser

காதலர் இருவர் ஓர் ஆழமான கிணற்றுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். ஏன்? என்று அவர்களைக் கேட்டதற்கு, "எங்கள் காதல் ஆழமான காதல்" என்றனர், யோவான் நற்செய்தி மிகவும் ஆழமான நற்செய்தி. மற்ற ஒத்தமை நற்செய்தியாளர்களைவிட யோவான் நற்செய்தி கிறிஸ்துவின் தனித்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இத்தனித்தன்மையை இந்த ஆண்டு தவக்கால மூன்று ஞாயிறுகளும் மையப்படுத்துகின்றன.

சமாரியப் பெண்ணுடன் கிறிஸ்து உரையாடி, "வாழ்வு தரும் தண்ணீர் நானே" (காண்: யோவா 4:10) என்ற உண்மையை வெளிப்படுத்துகிறார் (தவக்காலம் 3-ஆம் ஞாயிறு) பிறவியிலேயே பார்வையற்ற ஒருவர்க்குப் பார்வை அளித்து, "நானே உலகின் ஒளி" (யோவா 9:5) என்ற உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார் (தவக்காலம் 4-ஆம் ஞாயிறு), இலாசரைக் கல்லறையிலிருந்து உயிர்த்தெழச் செய்து. "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே" (யோவா 11:25) என்னும் மாபெரும் உண்மையை உயர்த்திப் பிடிக்கிறார் (தவக்காலம் 5-ஆம் ஞாயிறு). எனவே கிறிஸ்துவின் தனித்தன்மையை உணர்த்துவதே யோவான் நற்செய்தியின் குறிக்கோள். இந்தப் பின்னணியை மறந்து மறையுரை ஆற்றுவது யோவானின் நற்செய்தியைப் பிரதிபலிக்காது; அது நுனிப்புல்லை மேய்வதாகும்.

இன்றைய முதல் வாசகத்தில் பாலைதிலத்தில் தண்ணீர் கேட்டு முறையிட்ட இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுள் பாறையிலிருந்து தண்ணீர் கொடுக்கிறார். கிறிஸ்துவே அந்தப் பாறை (1 கொரி 10:4) என்று விளக்கம் கூறுகிறார் பவுல், விவிலியம் முழுவதுமே கிறிஸ்துவையே மையமாகக் கொண்டுள்ளது. அவருக்கு வெளியே ஒன்றுமில்லை. சமாரியப் பெண் படிப்படியாக கிறிஸ்து யார் என்ற முழு உண்மையை அறிகிறார். முதல் நிலையில் அவர் கிறிஸ்துவை "ஐயா" என்று அழைக்கிறார்; அவரைச் சாதாரண மனிதராக, ஒரு யூதனாகப் பார்க்கிறார், இரண்டாம் நிலையில் அப்பெண் கிறிஸ்துவை "ஓர் இறைவாக்கினராகக் காண்கிறார்" (யோவா 4:19), மூன்றாம் திலையில் அவர் அவரை "மெசியாவாக" இனம் காண்கிறார் (யோவா 4:29). இறுதி திலையில் அவரும் மற்றச் சமாரியரும் கிறிஸ்துவை "உலக மீட்பராக"க் (யோவா 4:42) கண்டு ஏற்றுக் கொள்கின்றனர்.

சமாசியப் பெண்ணுடன் கிறிஸ்து நடத்திய உரையாடல் மறைக்கல்வி முறையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. கிறிஸ்து யார் என்பதைப் படிப்படியாக உணர்த்துவதே மறைக்கல்வியின் இலக்கு. 

கிறிஸ்துவை 'உலக மீட்பராக ஏற்றுக் கொள்வதற்கு வழிவகுப்பதே மறைக்கல்வியின் இறுதிப்பயன். திருச்சபை எந்தவொரு கோட்பாட்டியலையும் முன்வைக்காமல், கிறிஸ்து என்ற ஆளை முன்வைக்கிறது.

மனமாற்றம் அடைந்த சமாரியப் பெண் ஓர் ஊர் முழுவதையும் கிறிஸ்துவிடம் கொண்டுவந்த ஒரு நற்செய்திப் பணியாளராக உருவெடுக்கின்றார். "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையுடன் செயல்படுகின்றார். உண்மையான மறைக்கல்வி, மறைக்கல்வி பயிலுகின்றவர்களிடம் நற்செய்திப்பணி ஆர்வத்தையும் உருவாக்க வேண்டும். இல்லையென்றால், அது முழுமையான மறைக்கல்வி ஆகாது.

சமாரியப் பெண் சுற்றி வளைத்துக் கொண்டு கிறிஸ்துவுடன் விவாதிக்கின்றார். சாதிப்பிரச்சினை, வழிபாடு, ஆலயம் ஆகிய பலவற்றைப் பற்றி கிறிஸ்துவுடன் பேசித் தன்னைப் பற்றி ஒன்றுமே கூறவில்லை. கிறிஸ்து அவருடைய அந்தரங்க வாழ்வைச் சுட்டிக் காட்டுகின்றார். 'உம் கணவரைக் கூட்டிக்கொண்டு வாரும்" (யோவா 4:16) என்று கூறி அப்பெண் தன்னுணர்வு பெறச் செய்கின்றார். அந்நிமிடமே அவர் புதுப்பிறவி எடுக்கின்றார். புதுப்படைப்பாக மாறுகிறார். கிறிஸ்துவின் உரையாடல் அப்பெண்ணின் வாழ்வை மாற்றியது. இன்று விவாதம் செய்யப் பலர் உள்ளனர்; ஆனால் உரையாடல் நடத்தத்தான் ஆள்கள் இல்லை!

ஓர் இளைஞன் தன்னுடைய 'பேண்ட்' பின்பக்கம் கிழிந்திருத்ததால் சட்டையை வெளியேவிட்டு அந்தக் கிழிசலை மறைப்பான். முன்பக்கம் சட்டை கிழிந்திருந்தால் சட்டையைப் 'பேண்ட்'க்குள்ளே விட்டு அந்தக் கிழிசலை மறைப்பான். ஒருமுறை அவனுடைய 'பேண்ட்' பின்னாலும் சட்டை முன்னாலும் கிழிந்து போய்விட்டது. பின்பக்கம் சட்டையை வெளியேவிட்டு 'பேண்ட்ஸின் கிழிசலையும், முன்பக்கம் சட்டையை பேண்ட்ஸ்'க் குள்ளே விட்டுச் சட்டையின் கிழிசலையும் மறைத்தான்.

அவ்வாறே நமது வாழ்க்கையின் கிழிசல்களை மூடி மறைக்கின்றோம்; பல்வேறு மூடிகளை அணிந்து மிகத் திறமையுடன் நடிக்கிறோம். மற்றவர்களைப் பற்றியும் மற்றக் காரியங்களைப் பற்றியும் விமர்சனம் செய்கின்றோம். இவ்வாறு திசை திருப்பும் யுக்தியைக் கையாளுகின்றோம். சமாரியப் பெண்போல் நமது உண்மை நிலையை என்று ஏற்றுக்கொள்கின்றோமோ அன்று தான் நமது மனமாற்றம் தொடங்கும். மற்றவர்களுடைய குற்றத்தை நாம் காண்பது போன்று நமது குற்றத்தையும் கண்டால் நமக்குத் தீமை எதுவும் வராது.

ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின்
தீதுஉண்டோ மன்னும் உயிர்க்கு (குறள் 190)

இறுதியாக நாம் கடவுளை எந்த இடத்தில் (சமாரியாவில் அல்லது எருசலேமில்) வழிபடுகின்றோம் என்பது முக்கியமல்ல, மாறாக உள்ளார்ந்த வழிபாடு நடத்துவதே முக்கியம் என்ற உண்மையைக் கிறிஸ்து சமாரியப் பெண் வழியாக நமக்கு வெளிப்படுத்துகின்றார். "கடவுளை அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்" (யோவா 4:23).

நெஞ்சமே கோவில் நினைவே சுகந்தம் அன்பே 
மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே. - தாயுமானவர்

நெஞ்சத்தைக் கோவிலாக்கி, நினைவை மல்லிகையாக்கி, அன்பை மஞ்சள் நீராக்கிக் கடவுளை வழிபடும் காலம் எக்காலம்!

ser ser

தண்ணீர்! தண்ணீர்!

 

அன்னை தெரசாவின் அன்புப் பணியை அடையாளப்படுத்தும் வகையில் அன்னை நிறுவிய கன்னியர் இல்லங்களில் பளிச்செனக் கண்ணில் படுபவை இரண்டு ஆங்கில வரிகள். 1) இல்ல முகப்பில் "Let us ilosomething beautiful for God'கடவுளுக்காக ஏதாவது அழகானது செய்வோம். இது அவரது துறவுப் பயணத்துக்கான இலக்கு! 2) சிற்றாலயத்தில் பாடுபட்ட திரு உருவம். அதன் அருகில் "I thirst” தாகமாய் இருக்கிறது. இது அவரது அருள் பணிக்கான உந்து சக்தி.

கல்வாரியின் "தாகமாய் இருக்கிறது'' (யோ.19:28) - இயேசு வாழ்நாளெல்லாம் கொண்டிருந்த தாகத்தின் கொடுமுடி. இயேசுவின் அன்பர்களது வாழ்வுக்கும் பணிக்கும் உந்துதலும் அர்த்தமும் உணர்வும் நிறைவும் தரும் எழுச்சி முழக்கம்.

தாகம் கொடியது. நீரில்லா வறட்சி கொடியது. (ஆமோ.8:11) 'மனிதர் மட்டுமல்ல, செடி கொடிகளும் 'தண்ணீர் தண்ணீர்' என்று தாகத்தினால் கதறுகின்றன. தண்ணீர் தேவைப்படுகிற போது வினாடிக்கு 10 இலட்சம் வீதம் மிக உயர் அதிர்வெண்களைக் கொண்ட மூலியை எழுப்புகின்றன” என்று விவசாய நிபுணர் ஹாம்லின் ஜோன்ஸ் தன் ஆராய்ச்சியில் தெளிவுபடுத்துகிறார் (தினமணி 1989 ஜூன் 3) தள்ளணீர் இல்லாத போது பூமி காய்ந்து வெடித்துப் பிளக்கிறது – மனித உதடுகள் கூடத்தான்.

"தண்ணீர்! தண்ணீர்! - இது தமிழ்த்திரைப்படத்தில் அத்திப்பட்டு மக்களின் தாகக் குரல் மட்டுமல்ல. பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்களின் முணுமுணுப்பாக எழுந்த முறையீடும் கூட. இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து விடுவித்து எப்படியெல்லாம் வழிநடத்தினார் இறைவன்! அத்தனையும் மறந்து குடிக்கத் தண்ணீ ர் கிடைக்கவில்லை என்பதற்காக மோசேக்கு எதிராக முறுமுறுத்து எழுந்தனர். பாவம், “மோசே ஆண்டவரிடம் இந்த மக்களோடு நான் பான்ன செய்வேன்? இன்னும் கொஞ்சம் போனால் என்மேல் கல்லெறி வார்களே' என்று கதறினார்" (வி.ப.17:4). அது மட்டுமல்ல, கடவுள் அவர்கள் நடுவே இருக்கிறாரா இல்லையா என்று சந்தேகப்படத் தொடங்கினார் (வி.ப.17:7)

ஆனால் கடவுள் அந்த மக்களை அவர்கள் பாவத்துக்காகத் தண்டிக்கவில்லை. மாறாகப் பாறையிலிருந்து நீர் ஊற்றெடுக்கச் செய்து அவர்களின் தாகத்தைத் தணித்தார். தாகத்தைத் தீர்த்தது மட்டுமல்ல, இறைவனின் உடனிருப்பையும் உணர்த்தியது. “கிறிஸ்துவே அப்பாறை" (1 கொரி.10:4) என்கிறார் திருத்தூதர் பவுல்.

இந்தத் தண்ணீர்ப் பிரச்சனையை வைத்தே ஆன்மீகத்தாகப் பிரச்சனையை எழுப்பித் தீர்வு காணும் இயேசுவின் அற்புதச் செயல் வியப்புக்குரியது!

"குடிக்க எனக்குத் தண்ணீ ர் கொடும்” (யோ.4:8) என்று சமாரியப் பெண்ணை இயேசு கேட்டது தனது தாகத்தைத் தணித்துக் கொள்ளவா? அவர் தண்ணீர் பருகினாரா? ஆன்மதாகத்தின் முன் அவரது உடல்தாகம் எப்பொழுதோ பறந்துவிட்டது. தொலைந்த ஆடுகளைத் தேடும் பண்பு, உயர்ந்தவனோ, தாழ்ந்தவனோ, புனிதனோ பாவியோ, ஆணோ, பெண்ணோ , மனித மாண்புடன் செயல்படும் தீரம், தனக்கு உணவும் பானமும் தந்தையின் திருவுளமே என்ற உறுதிப்பாடு போன்ற வழக்கமான கருத்துக்களுக்கிடையே இழையோடும் எண்ணம் தாகம் தீர்க்கும் “வாழ்வு தரும் தண்ணீர் பற்றியது.

அந்தச் சமாரியப் பெண்ணின் ஆன்மா வறண்டு காய்ந்து வெடித்துக் கிடந்தது. அவளது ஆன்மதாகம் நொடிக்கு நொடி மிக உயர் அதிர்வெண்களைக் கொண்ட ஒலியை எழுப்பியது. அது மற்ற மனிதர்களின் காதில் விழவில்லை. இறைமகன் இயேசுவின் மென்மை யான செவிகளில் எதிரொலித்தது. அவளது ஆன்மீகத் தேவையை உணர்ந்தார். ஆற்றுப்படுத்தும் கலையை அற்புதமாக வெளிப்படுத்தினார்.

"நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது. நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்"(யோ.4:14) என்று இயேசு சொன்னதன் உட்பொருளை அவள் உணரவில்லை. அதன் சொற்பொருளை மட்டுமே எடுத்துக் கொண்டாள். "வாழ்வு தரும் தண்ணீர்”. இயேசு தரும் வெளிப்பாட்டை, இறை னத்தை, தெய்வீக உயிரோட்டத்தைக் குறிக்கும்.

"யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும். என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும்... அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்து ஓடும்” என்ற இயேசுவின் கூற்று, அது தூய ஆவியைக் குறித்தே சொன்னது என்ற நற்செய்தியாளர் யோவானின் விளக்கம் ஒப்பீட்டுச் சிந்தனைக்குரியது (யோ.7:37-39). இந்த வாழ்வு தரும் தண்ணீ ரைப் பெற்றதன் அடையாளமே சமாரியப் பெண்ணின் மனமாற்றம்.

சமாரியப் பெண்ணைப் பொருத்தவரை அவள் வழியாகவே கடவுளை நோக்கி ஒரு சாலை அமைக்கிறார் இயேசு. சுய தரிசனம் நிச்சயமாகத் தெய்வ தரிசனத்தில் கொண்டு போய் நிறுத்தும்.

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை 
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தான் இருந்தானே. - திருமூலர் 

நம்மைப் பற்றி நாம் அறிந்திருப்பது, நம்மைப் பற்றிப் பிறர் அறிந்திருப்பது, நம்மைப் பற்றி இறைவன் அறிந்திருப்பது. மூன்றையும் தெரிந்து கொள்ளும் போது முழுமையாகத் தெரிந்து கொள்கிறோம்.

என்று சமாரியப் பெண் மனம் மாறினாளோ, அன்று தன்னையே முழுமையாகப் புரிந்து கொண்டாள் - தனது தனி வாழ்வு பற்றி, தனது இனத்தைப் பற்றி, தனது சமயத்தைப் பற்றி. என்று தன்னைப் புரிந்து கொண்டாளோ அன்று ஆண்டவனையும் அறிந்து கொள்கிறாள் - சாதாரண யூதராக என்று தொடங்கி அவரை மெசியாகவாக, உலக மீட்பராக. இயேசுவின் சாட்சியாகவும் மாறுகிறாள்.

சுயதரிசனமும் தெய்வ தரிசனமும் நம் தாகத்தைத் தணிக்கும், பிறர் தாகத்தைத் தீர்க்கப் பணிக்கும்.

ser ser

பாவிகளுக்கு வாழ்வளிக்கும் தண்ணீரைத் தரும் மெசியாவாம் இயேசு

நிகழ்வு

சில மாதங்களுக்கு முன்பாக திருத்தந்தை பிரான்சிஸ் உரோமையிலுள்ள ஒரு பங்கிற்குச் சென்றிருந்தார். பங்கில் திருப்பலியை நிறைவேற்றிவிட்டு, அங்கிருந்த சிறுவர் சிறுமியரிடம், “உங்களுக்கு என்னிடத்தில் ஏதாவது கேள்வி கேட்கவேண்டும் என்றால், கேட்கலாம்” என்றார். உடனே இம்மானுவேல் என்ற சிறுவன் எழுந்தான். அவனுக்கு எல்லாருக்கும் முன்பாகத் திருத்தந்தையிடம் கேள்வி கேட்பதற்குச் சற்று அச்சமாக இருந்ததால், திருத்தந்தையின் அருகில் சென்று, அவருடைய காதுகளில் மெல்லக் கிசுகிசுத்து விட்டு, தன்னுடைய இடத்தில் வந்து அமர்ந்துகொண்டான்.

கோயிலில் இருந்தவர்களெல்லாம் சிறுவன் இம்மானுவேல், திருத்தந்தையிடம் என்ன கேட்டிருப்பான் என்பதைத் தெரிந்துகொள்ள மிகவும் ஆவலோடு இருந்தார்கள். அப்பொழுது திருத்தந்தை அவர்களிடம் பேசத் தொடங்கினார். “என்னிடத்தில் வந்த சிறுவன் இம்மானுவேல் ஒரு கேள்வியைக் கேட்டுச் சென்றிருக்கின்றான். அவன் கேட்ட கேள்வி இதுதான்: ‘என்னுடைய தந்தை கடவுள்மீது நம்பிக்கை இல்லாதவர். இருந்தாலும், அவருக்குப் பிறந்த என்னையும் என்னோடு பிறந்த மூன்று சகோதர சகோதரிகளையும் திருமுழுக்குப் பெற வைத்து, இறைவழியில் வளர்த்திருக்கின்றார். அப்படிப்பட்டவர் சில நாள்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். இப்பொழுது அவர் விண்ணகத்தில் இருப்பாரா? பாதாளத்தில் இருப்பாரா..?’ இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

மக்கள் யாவரும், “சிறுவன் இம்மானுவேலுவின் தந்தை விண்ணகத்தில் இருப்பார்” என்று ஒருமித்த குரலில் சொன்னார்கள். இதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ், சிறுவன் இம்மானுவேலிடம் எல்லாருக்கும் கேட்கும் விதமாக, “இம்மானுவேல்! உன்னுடைய தந்தை கடவுள்மீது நம்பிக்கை இல்லாதவராக இருந்திருக்கலாம்; ஆனால், நீங்கள் பிறந்தபிறகு, அவர் ‘நாம்தான் கடவுள்மீது நம்பிக்கை இல்லாமல் இருந்துவிட்டோம். நம்முடைய பிள்ளைகளாவது கடவுள்மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கட்டும்’ என்று தன்னுடைய தவற்றை உணர்ந்து, உங்களைத் திருமுழுக்குப் பெற வைத்திருக்கின்றார். அப்படிப்பட்ட ஒரு நல்ல தந்தை நிச்சயம் விண்ணகத்தில்தான் இருப்பார்” என்றார். இதைக் கேட்டு சிறுவன் இம்மானுவேல் ஆனந்தக் கண்ணீர் வடித்தான்.

செய்த குற்றத்தை உணர்ந்த பாவிகளுக்கு நிலைவாழ்வை அல்லது வாழ்வளிக்கும் தண்ணீரை இறைவன் அளிப்பார் என்ற உண்மையை இந்த நிகழ்வு எடுத்துரைக்கின்றது. தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துக்கூறுகின்றது. நாம் அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

பாவிகளைத் தேடிச் செல்லும் இயேசு

நற்செய்தி வாசகத்தில் இயேசுவுக்கும் சமாரியப்பெண்ணும் இடையே ஒரு சந்திப்பு அல்லது நீண்ட நெடிய உரையாடலானது நடைபெறுகின்றது. இந்தச் சந்திப்பின் முக்கியத்துவை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும் என்றால், இது நடந்த சூழலை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.

இயேசு, சமாரியப் பெண்ணைச் சந்திப்பதற்கு முன்பாக யூதேயாவில் இருந்தார் (யோவா 3:22). அங்கிருந்து அவர் கலிலேயாவிற்குச் செல்லவிருந்தார். இங்கு நாம் கவனிக்கவேண்டிய முக்கிய செய்தி, இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவிற்குச் செல்வதற்குச் சமாரியா வழியாகச் செல்லும் பாதையைத் தேர்ந்தெடுத்துதான். ‘பிறவினத்தார் வாழுகின்ற சமாரியப் பகுதி வழியாகச் சென்றால் தாங்கள் தீட்டுப்பட்டுவிடுவோம்’ என்று கருதும் ‘தூய்மைவாதம் பேசும்’ எந்தப் பரிசேயரும் கலிலேயாவிற்குச் செல்கின்றபொழுது, சமாரியா வழியாகச் செல்வதில்லை; அவர் யோர்தான் ஆற்றங்கரை வழியாகவே செல்வார் (இத்தனைக்கும் அந்த வழியாகச் சென்றால் நீண்ட நேரம் எடுக்கும் என்றாலும்); ஆனால், பிறப்பால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாடு பார்க்காத இயேசு, சமாரியப் பகுதியாகச் சென்று, கிணற்றில் நண்பகலில் நீர் எடுக்க வந்த பாவிப்பெண்ணோடு உரையாடுகின்றார். இதுவே அவர் பாவிகளைத் தேடிவந்தார் (லூக் 19:10) என்ற உண்மையை உரக்கச் சொல்வதாக இருக்கின்றது.

பொதுவாகப் பெண்கள் கிணற்றில் நீர் எடுக்க காலையிலோ அல்லது மாலையிலோ வருவார்கள். ஆனால், நற்செய்தியில் வருகின்ற சமாரியப் பெண்ணோ நண்பகல் வேளையில் வருகின்றார். காரணம், நண்பகல் வேளையில் வந்தால், யாரும் இருக்கமாட்டார்கள். இது பாவியாகிய தனக்கு வசதியாக இருக்கும் என்று அவர் வருகின்றார். இப்படிப்பட்ட ஒரு பெண்ணைத்தான் இயேசு சந்திக்கின்றார்; அவரிடம் தண்ணீர் கேட்கின்றார்.

வாழ்வளிக்கும் தண்ணீரை அளிக்கும் இயேசு

யூதர்கள் சமாரியர்களோடு உறவு வைத்துக்கொள்வதில்லை. அப்படி அவர்கள் உறவு வைத்துக்கொண்டால் அது தீட்டு என்று கருதினார்கள் என்று மேலே பார்த்தோம். இதற்கு முக்கியமான காரணம், கிமு 722 ஆம் ஆண்டு நடந்த அசிரியப் படையெடுப்புப் பிறகு, அந்த மக்களோடு சமாரியப்பகுதியில் இருந்தவர்கள் கலப்புமணம் செய்துகொண்டார்கள் என்பதால்தான். இதற்குப் பின்பு குரு எஸ்ராவின் காலத்தில் எருசலேம் திருக்கோயில் மீண்டுமாகக் கோயில் கட்டப்பட்டபொழுதும் (எஸ் 4: 1-5) நெகேமியாவின் காலத்தில் சுற்றுச் சுவர் எழுப்பட்டபொழுதும் (நெகே 4: 1-3) சமாரியர்களின் உதவியை யூதர்கள் மறுத்தார்கள். இதனால் இரண்டு பிரிவினருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு, உறவு இல்லாமலே போனது. இந்நிலையில்தான் இயேசு சமாரியப்பெண்ணிடம் குடிக்கத் தண்ணீர் கேட்கின்றார்.

இயேசு அப்பெண்ணிடம் தன்னிடம் கேட்டதும், அவர், “நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?” என்கின்றார். உடனேதான் இயேசு அவரிடம் தான் வாழ்வளிக்கும் தண்ணீரைக் கொடுப்பவர் என்று கூறுகின்றார். திருவிவிலியம் ஆண்டவரை வாழ்வளிக்கும் நீரூற்றாக எடுத்துக்கூறுகின்றது (எரே 17:13; எசே 12:3 44:3; யோவா 7: 37-39). இங்கு இயேசு தன்னை வாழ்வளிக்கும் தண்ணீரைக் கொடுப்பவர் அல்லது நிலைவாழ்வைக் கொடுப்பவர் என்று குறிப்பிடுவது நமது கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது. இப்பொழுது இயேசு அளிக்கும் வாழ்வளிக்கும் தண்ணீரை அல்லது நிலைவாழ்வைப் பெற நாம் என்ன செய்வது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

வாழ்வளிக்கும் தண்ணீரைப் பெற இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளவேண்டும்

இயேசு அளிக்கும் வாழ்வளிக்கும் தண்ணீரைப் பெற ஒருவர் இரண்டு செயல்களைச் செய்யவேண்டும். ஒன்று, இயேசுவை யாரென அறிந்துகொள்ளவேண்டும். இரண்டு, அறிந்த பின்பு அவர்மீது நம்பிக்கை கொள்ளவேண்டும். நற்செய்தியில் வருகின்ற சமாரியப்பெண் இயேசுவை முதலில் ஒரு யூதராகத்தான் அறிந்திருந்தார். பின்னர் அவருடைய அறிதல் ஐயா, இறைவாக்கினர், மெசியா, மீட்பர் என்று செல்கின்றது. இறுதியில் அவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்கின்றார். மற்றவர்களும் அவர்மீது நம்பிக்கை கொள்ளக் காரணமாக இருக்கின்றார். இவ்வாறு பாவியாக இருந்த அப்பெண்மணி இயேசுவின்மீது நம்பிக்கை வைப்பதன்மூலம் வாழ்வளிக்கும் தண்ணீரைப் பெற்றுக்கொள்பவராக இருக்கின்றார்.

இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம், இயேசுவை யாரென அறிந்து, அவர்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம். புனித பவுல் உரோமையருக்கு எழுதிய மடலில் இவ்வாறு கூறுவார்: “ ‘இயேசுவே ஆண்டவர்’ என வாயார அறிக்கையிட்டு இறந்த அவரைக் கடவுள் உயர்த்தெழச் செய்தார் என உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள்.” (உரோ 10:9). ஆகையால், நாம் இயேசுவில் நம்பிக்கைகொண்டு அவர் தருகின்ற வாழ்வளிக்கும் தண்ணீராம் நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வோம்.

சிந்தனை

‘அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்’ (யோவா 3:15) என்பார் யோவான் நற்செய்தியாளர். ஆகையால், நாம் வாழ்வு தரும் தண்ணீராம் நிலைவாழ்வை அளிக்கும் இயேசுவிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser ser

குடிக்க எனக்கு தண்ணீர் கொடு!

ஒரு வாளியில் நான்கு லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். இந்த நான்கு லிட்டர் தண்ணீருக்குள் நீங்கள் அன்றாடம் காஃபிக்கு சுகர் கலக்கும் சிறிய கரண்டியை எடுத்து, அக்கரண்டியால் ஒரு கரண்டி தண்ணீரை எடுங்கள். இப்போது இந்தக் கரண்டியில் உள்ள தண்ணீரை உங்கள் ஆள்காட்டி விரலால் தொட்டு ஒரு சொட்டு தண்ணீரை எடுங்கள்.

நம்முடைய பூமியில் உள்ள எல்லா தண்ணீர் வளங்களும் நான்கு லிட்டர் தண்ணீர் போன்றவை. இவற்றில் ஒரு கரண்டி தவிர மற்றெல்லா தண்ணீரும் பயன்படுத்த முடியாதவாறு கடல்நீராக இருக்கின்றது. அந்த ஒரு கரண்டித் தண்ணீரில் ஒரு சொட்டு தவிர மற்ற தண்ணீர் முழுவதும் பனிப்பாறைகளாக பூமியின் இரு துருவங்களிலும், மலைகளிலும் உறைந்து கிடக்கின்றன. ஆள்காட்டி விரலில் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த ஒற்றைத் துளி தண்ணீர்தான் நீங்களும் நானும் பயன்படுத்துவதற்கு இந்த பூமிப் பந்து வழங்கும் தண்ணீர்.

 

இந்த ஒற்றைத் துளித் தண்ணீரை பச்சை நீர், நீல நீர், சாம்பல் நீர் என மூன்றாகப் பிரிக்கலாம். பச்சை நீர் என்பது நாம் சுவாசிக்கும் காற்றில், விழும் பனித்திவலைகளில், நிலத்திற்கு அடியில் இருக்கும் தண்ணீர், நீல நீர் என்பது ஆறுகள், குளங்கள், மற்றும் ஏரிகளில் இருக்கும் தண்ணீர், சாம்பல் நீர் என்பது நம்முடைய வீட்டின், தொழிற்சாலையின் கழிவாக வெளியேறும் தண்ணீர். இந்த பூமிப்பந்து உருவானபோது தண்ணீர் எந்த அளவு இருந்ததோ, அதே அளவு தண்ணீர்தான் இன்றும் பூமியில் இருக்கிறது. தண்ணீர் சுழன்றுகொண்டே இருக்கின்றது.

நம்முடைய தமிழர் பண்பாடு நீர்ப் பண்பாடு. மேற்கத்திய அல்லது ஆரியப் பண்பாடு நெருப்பு பண்பாடு. தட்பவெப்ப அடிப்படையில் நாம் அதிகமாக வெயில் அடிக்கும் பகுதியில் இருக்கிறோம். வெயிலில் வாடுபவர்களுக்கு தண்ணீர்தான் அவசியம். ஆகையால்தான், நம்முடைய சைவ வழிபாட்டில் தெய்வங்களுக்கு நீராட்டுகிறோம். பூப்பெய்த பெண்ணுக்கு நீராட்டுகிறோம். அடிக்கடி நம்முடைய இல்லங்களைத் தண்ணீர்விட்டுக் கழுவுகிறோம். மேலும், நீர்ப்பண்பாட்டில் நீர் தெய்வமாகக் கருதப்பட்டது. ஆகையால்தான், 1900ஆம் ஆண்டுகளில் காலரா போன்ற தண்ணீர் நோய்கள் வந்தபோது மக்கள் தண்ணீரைச் சுடவைக்க அஞ்சினர். தெய்வத்தை நெருப்பால் சுடுவதைவிட காலராவால் மடிவது மேல் என்று சொல்லி உயிர்விட்ட மக்களைப் பற்றி 'காவல் கோட்டம்' என்ற நூலில் பதிவுசெய்கிறார் திரு. சு. வெங்கடேசன். ஆனால், ஆரியப் பண்பாடு நெருப்பு பண்பாடு. ஆகையால்தான் தெய்வங்களுக்கு அவர்கள் நெருப்பு காட்டுகின்றனர், ஆரத்தி எடுக்கின்றனர், ஹோமம் குண்டம் வளர்க்கிறார்கள். அவர்கள் குளிர்நாட்டிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கு தண்ணீர் எதிரி. இன்று, இவர்கள் தண்ணீரை மட்டுமல்ல, தண்ணீர்ப் பண்பாட்டைக் கொண்டிருக்கும் தமிழர்களையும் எதிரிகளாகப் பார்க்கின்றனர்.

மூன்றாம் உலகப் போர் என ஒன்று நடந்தால் அது தண்ணீருக்கான போராகத்தான் இருக்கும் என்று அரசியல் அறிஞர்கள் எச்சரிக்கின்றனர். தண்ணீர் அரசியல்தான் இன்று எங்கும் நடக்கிறது.

மேலும், நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் தண்ணீர் மறைநீராக இருக்கிறது. ஒரு முட்டையில் 20 லிட்டர் மறைநீரும், ஒரு கிலோ அரிசியல் 5000 லிட்டர் மறைநீரும், நாம் அணியும் ஒரு ஜீன்ஸ் பேண்ட்டில் ஏறக்குறைய 10000 லிட்டர் மறைநீரும் இருக்கிறது. அதாவது, இவை என் கைக்கு வர இவ்வளவு தண்ணீர் செலவழிக்கப்பட வேண்டும். இன்று மேற்கத்திய நாடுகள் கீழைத்தேய நாடுகளின் தண்ணீர் ஆதாரத்தை தங்களுடைய மூலதனமாகக் கொண்டு வாழ முற்படுகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 4:5-42), சமாரியாவில் உள்ள சிக்கார் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்த இயேசு, பயணக் களைப்பால் கிணற்றருகே அமர, அங்கு வந்த சமாரிய இளவல் ஒருத்தியிடம், 'குடிக்க எனக்கு தண்ணீர் கொடு!' என்று கேட்கின்றார். இன்றைய முதல் வாசகத்தில் (காண். விப 17:3-7), தாகத்தால் பாலைநிலத்தில் அலைக்கழிக்கப்படுகின்ற இஸ்ரயேல் மக்கள், மோசேயிடமும் அவர் வழியாக ஆண்டவரிடமும், 'எங்களைத் தண்ணீர் இல்லாமல் சாகடிக்கவா எங்களை அழைத்து வந்தீர்?' என முணுமுணுக்கின்றனர்.

நம் வாழ்வின் மையமாக இருக்கும் தண்ணீர் இன்றைய இறைவார்த்தை வழிபாட்டின் மையமாகவும் இருக்கிறது.

இரண்டு வாரங்களாக யூட்யூபில் அழகான விளம்பரம் ஒன்று வருகிறது. 'எங்க ஊருக்கு நடுவுல ஒருநாள் ஒருத்தர் ஷவர் வைத்த பாத்ரூம் கட்டினார்' என்று தொடங்கும் ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் அந்த விளம்பரத்தின் இறுதியில், 'நகரத்தில் ஒரு நபர் ஒரு நேரம் குளிக்கப் பயன்படுத்தும் ஷவர் தண்ணீரில் ஒரு கிராமம் முழுவதும் ஒருநாள் தண்ணீர் பருகும்' என்ற வாசகம் தண்ணீரின் அருமையை, அவசியத்தை நமக்கு உணர்த்துகிறது.

டைலர் ரீவர் என்பவர் சுத்தமான தண்ணீர் கிடைக்காத நாடுகளைப் பார்வையிட்டு, 'தண்ணீர் அன்பு' காட்ட அனைவருக்கும் அழைப்பு விடுகிறார். 'இந்த மூன்று கதைகளை நீங்கள் கேட்டால் தண்ணீரைப் பற்றிய உங்கள் பார்வை மாறிவிடும்' என்று தலைப்பிட்டு அவர் தன்னுடைய வலைப்பூவில் பதித்துள்ள மூன்று கதைகளை அவருடைய வார்த்தைகளில் மொழிபெயர்க்கிறேன்.

கதை ஒன்று: பாலைவனத்தில் வாழ்க்கை

அந்த 26 வயது இளவலின் பெயர் ஃபதூம். அவளுடைய நாள் எப்படி இருக்கிறது என்று பார்க்க அவளோடு பேச்சுக் கொடுத்தே. கதிரவன் எழுமுன் தண்ணீர் எடுக்கச் செல்தல், காலை உணவு சமைத்தல், மறுபடியும் நீர் எடுக்கச் செல்லுதல், மதிய உணவிற்கு தானியம் குத்துதல், மறுபடியும் நீர் எடுத்தல் எனச் சொன்னாள். ஆனால், இவை தவிர இன்னும் நிறைய வேலைகளையும் அவள் செய்தாள். மகள்களுக்கு நீராட்டி உடை உடுத்துவது, ஆடுகளுக்கு உணவு தருவது, வீட்டைக் கூட்டிப் பெருக்குவது. ஆனால், 'இதல்லாம் வேலையா!' என்று அலட்டிக்கொள்ளவில்லை அவள். 'நீ ஓய்வெடுப்பது எப்போது?' எனக் கேட்டேன். 'ஓய்விற்கெல்லாம் நேரமில்லை' என்றாள் சிரித்துக்கொண்டே. 'ஒரு நாளில் உனக்குப் பிடித்த பொழுது எது?' எனக் கேட்டேன். 'நான் தண்ணீர் எடுக்காத நேரம்தான்' என்று சட்டென்று பதில் தந்தாள் - வேகமாகவும், நிதானமாகவும், அழுத்தமாகவும்.

கதை இரண்டு: தண்ணீருக்காக நடந்து செல்வதன் ஆபத்து

உகாண்டாவில் நான் சந்தித்த அந்தக் குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள். தண்ணீர் எடுக்க நெடுந்தூரம் நடந்து சென்றபோது இவர்கள் இருவருமே வன்புணர்வு செய்யப்பட்டவர்கள். 14 மற்றும் 17 வயதினராய் கர்ப்பம் தரித்தார்கள் இவர்கள். இருவருமே குழந்தைகளை வைத்துக்கொள்ள விரும்பினர். இருவருமே பள்ளியிலிருந்து வெளியே அனுப்பப்பட்டனர். இன்று தனித்தாய்மாராய், தங்களுடைய இளவயதுக் கனவுகளை எல்லாம் தொலைத்துவிட்டு நிற்கின்றனர். இவர்கள் இருவருமே பலிகடாக்கள். ஆனால், இவர்களுடைய மனம் வாடவில்லை. மனப்பாங்கு உயர்ந்து நின்றது. தனித்தாய்மார்களையும், திருமணத்திற்குப் புறம்பே குழந்தை பெற்றவர்களையும் தாழ்வாகப் பார்க்கும் சமூகத்தில் அவர்களுடைய குடும்பம் அவர்களை அன்பு செய்தது. தங்களுடைய நாட்டில் மற்றவர்கள் சுத்தமான தண்ணீர் பெற முடியும் என்றால், மங்கையர் இனி பயமின்றி வெளியில் நடக்க முடியும் என்றால் எங்களுடைய கதைகளை எழுதுங்கள் என்று அவர்கள் சொன்னார்கள்.

கதை மூன்று: 15 வயது பிரசிடென்ட்

மொசாம்பிக்கில் உள்ள அந்த கிராமத்தை நாங்கள் நெருங்கியபோது, அங்கு அப்போதுதான் வந்த சுத்தமான தண்ணீர் பற்றி அனைவரும் பேசிக்கொண்டு நின்றனர். இதற்கு காரணமான ஐந்து இளவல்கள் நீல நிற டிசர்ட் அணிந்து நின்றிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களை ப்ளம்பர், வரி வசூலிப்பவர், சுகாதாரத்துறை அலுவலர், நகர்மன்ற உறுப்பினர் என அறிமுகம் செய்தனர். இறுதியாக நின்ற 15 வயது நத்தாலியா, 'நான் தான் பிரசிடென்ட்' என்றாள். தண்ணீர் கொண்டு வரக் காரணமாக இருந்த இந்த பிரசிடென்ட் எனக்கு ஆச்சர்யக்குரியாகத் தெரிந்தாள். சுத்தமான தண்ணீர் கிடைத்ததால் அவளுக்கு பாதுகாப்பும், கல்வியும் உறுதிசெய்யப்பட்டது. இன்று அவள் தலைவியாகிவிட்டாள். 'அவளுடைய ஆசை ஆசிரியை ஆவது' என்று அருகில் நின்ற தாய் சொன்னாள். 'இல்லை. இல்லை. தலைமையாசிரியை ஆவது' என்று உடனடியாக குரல் கொடுத்தாள் நத்தாலியா. சுத்தமான தண்ணீர் ஒரு குழந்தையின் வாழ்வில் இவ்வளவு தன்னம்பிக்கை தர முடியும் என்றால், எல்லாருக்கும் தண்ணீர் கிடைத்தால் எல்லாரும் தன்னம்பிக்கை பெற்றுவிடலாமே. நலமான குழந்தைகள் பள்ளியில் நீண்ட நேரம் படிக்க முடியும். நலமான குடும்பங்கள் மருத்துவச் செலவைக் குறைக்க முடியும். வறுமை ஒழியும். தண்ணீரில்தான் எல்லாம் தொடங்குகிறது. நல்ல தண்ணீரைப் பெற முடிந்த 90 சதவிகித நாம், அதைப் பெற முடியாத 10 சதவிகித (748 மில்லியன்) மக்களை நினைத்துப் பார்க்கலாமே!

நிற்க.

இந்த மூன்று கதைகளும் தண்ணீரைப் பற்றிய நம் பார்வையை மாற்றக் கூடியவை.

இன்றைய இறைவார்த்தை வழிபாட்டிலும் இரண்டு கதைகளைப் பார்க்கிறோம்.

முதல் கதையில் இஸ்ரயேல் மக்கள் செங்கடலைக் கடந்து சீனாய் மலை நோக்கிச் செல்லும் பாலைநிலத்தில் நிற்கின்றனர். அங்கு தண்ணீர் இல்லை. சில மாதங்களுக்கு முன்தான் அவர்களுடைய கடவுள் செங்கடலை இரண்டாகப் பிளந்து கட்டாந்தரையில் அவர்களை நடக்கச் செய்து பாரவோனின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்தார். பசி வந்தால் பற்றும் பறக்கும் என்பார்கள். ஆனால், தாகம் வந்தால் தன்னைப் படைத்தவரையே கேள்விக்குள்ளாக்குகிறது மானுடம். அதுதான் இங்கேயும் நடக்கிறது. 'நீர் எகிப்திலிருந்து எங்களை வெளியேறச் செய்தது எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் கால்நடைகளையும் தாகத்தால் சாகடிக்கவா?' எனக் கேட்கின்றனர். இவர்களின் கேள்வி மேலோட்டமாக தண்ணீருக்கான தேடலாக இருந்தாலும், இவர்களின் ஆழ்மனதில், 'நம் ஆண்டவர் நம்மோடு இருக்கிறாரா?' என்ற கேள்வியே நிரம்பி நிற்கிறது. 'ஆண்டவர் நம்மோடு இருந்தால் நமக்குத் தாகம் எடுக்காதே. அப்படி தாகம் எடுத்தாலும் அவர் நமக்குத் தண்ணீர் தருவாரே' என்ற எண்ணத்தில்தான் ஆண்டவரின் இருப்பைச் சந்தேகிக்கின்றனர் மக்கள்.

இரண்டாவது கதையில், இயேசு சமாரிய இளவல் ஒருவரிடம், 'குடிக்க எனக்கு தண்ணீர் கொடும்' எனக் கேட்கின்றார். முதலில் இவள் ஒரு பெண். இயேசுவின் சமகாலத்தில் இரண்டாம் தரமாக நடத்தப்பட்ட பாலினம் பெண் இனம்.இவள் ஒரு சமாரியப்பெண். பூகோள அடிப்படையில் பார்த்தால் யூதேயாவிற்கும் கலிலேயாவிற்கும் இடையே உள்ள பகுதியே சமாரியா. கிமு 732ல் அசீரியர்கள் இஸ்ரயேல் மீது படையெடுத்த அவர்களைத் தங்கள் நாட்டுக்கு அடிமைகளாகக் கடத்திச் செல்கின்றனர். அங்கிருந்து மீண்டு வந்த மக்கள் அசீரியர்களுடன் திருமண உறவிலும் ஈடுபடத் தொடங்குகின்றனர். இப்படியாக யூதர்களும், அசீரியர்களும் இணைந்து உருவானதுதான் சமாரிய இனம். யூத ரத்தத்தை மற்றவர்களுடன் கலந்ததால் மற்ற யூதர்கள் இவர்களைத் தீண்டத்தகாதவர்கள் என்றும் தீட்டுப்பட்டவர்கள் எனவும் கருதினர். மேலும் சமாரியர்கள் யூத விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களை மட்டுமே தங்கள் விவிலியமாகக் கொண்டவர்கள். யூத மக்கள் இறைவனை எருசலேமில் வழிபட்டதுபோல சமாரியர்கள் கெரிசிம் என்ற மலையில் யாவே இறைவனை வழிபடுகின்றனர். இப்படியாக கடவுள் வேறு, விவிலியம் வேறு, தூய்மையில் குறைவு என இருந்த மக்களில் ஒருவரான சமாரியப் பெண்ணைச் சந்திக்கின்றார் இயேசு. இதில் இயேசு இரண்டு மரபுமீறல்களைச் செய்கின்றார்: ஒன்று, யூதர்கள் சமாரியர்களோடு பண்ட பாத்திரங்களில் கையிடுவதில்லை. ஆனால் இயேசு அதையும் மீறி சமாரியப்பெண்ணிடம் 'தண்ணீர்' கேட்கின்றார். இரண்டு, யூத ஆண்கள், இன்னும் அதிகமாக யூத ரபிக்கள் பெண்களிடம் பொதுவிடங்களில் பேசுவது கிடையாது. அதையும் மீறி பெண்ணிடம் உரையாடுகின்றார் இயேசு. இவள் 'ஒரு மாதிரியான பெண்.' பெண்கள் காலை அல்லது மாலையில்தான் நீர் எடுக்க கிணற்றுக்கு வருவர். இந்தப் பெண் நண்பகலில் வருகின்றார். 'யாரும் தன்னைப் பார்த்துவிடக்கூடாது' என்பதற்காகவா? அல்லது ஊர் வாயில் விழக்கூடாது என்பதற்காகவா? அல்லது மற்ற பெண்களும் அவரை ஒதுக்கிவிட்டார்களா? இந்தப் பெண்ணின் அறநெறி பற்றி நற்செய்தியில் ஒன்றும் குறிப்பிடப்படவில்லை. 'இவர் ஐந்து கணவரைக் கொண்டிருந்தார்' என்பதிலிருந்து இவர் அறநெறி பிறழ்வில் இருந்தவர் என நாம் முடிவுசெய்யக்கூடாது. ஏனெனில் 'லெவிரேட் திருமணம்' என்னும் 'கொழுந்தன் திருமணமுறையில்' இவர் திருமணம் செய்திருக்கலாம். இருந்தாலும், இவரின் நண்பகல் வருகை நமக்கு நெருடலாக இருக்கிறது.

ஆக, பிறப்பாலும், பின்புலத்தாலும், பிறழ்வாலும் காலியான குடமாக தண்ணீர் எடுக்க வருகின்றார் இவர். இயேசுவுக்கு இந்தப் பெண்ணின் பிறப்பும், பின்புலமும், பிறழ்வும் கண்களுக்குத் தெரியவில்லை. அவரின் கண்களுக்குத் தெரிவதெல்லாம் இந்தப் பெண்ணின் இடுப்பில் இருந்த காலிக்குடம் மட்டும்தான். 'குடிக்க எனக்கு தண்ணீர் கொடும்!' என்கிறார் இயேசு. ஏற்கனவே கிணற்றருகில் இருப்பவர் இயேசு. ஆனால் இந்தப் பெண்ணோ இப்போதுதான் வருகின்றார். முறைப்படி பெண்தான் இயேசுவிடம் தண்ணீர் கேட்டிருக்க வேண்டும். அல்லது இந்தப் பெண் தண்ணீர் இறைப்பதை இயேசு பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு, 'கொஞ்சம் வாட்டர் ப்ளீஸ்' என்று கேட்டிருக்கலாம்.

'தண்ணீர்' என்ற வார்த்தையை மையமாக வைத்து உரையாடல் தொடங்கி தொடர்கிறது.

'நீர் எப்படி தண்ணீர் கேட்கலாம்?'

'தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை'

'நான் தரும் தண்ணீர்'

'தாகம் எடுக்காது'

'அந்த தண்ணீரை எனக்குத் தாரும்'

என தண்ணீரே உரையாடலின் முக்கிய வார்த்தையாக இருக்கிறது.

வெகு சில நிமிடங்களே தாகம் தீர்க்கும் மிகச் சாதாரண தண்ணீரை எடுக்கச் சென்ற இளவலிடம் இயேசு இறையியல் பேச ஆரம்பிக்கின்றார். இதுதான் கடவுளின் பண்பு. நாம் ஒரு தேவை என அவரிடம் சென்றால், அந்த தேவையைக் கடந்து அடுத்தடுத்த நிலைக்கு அவர் நம்மை அழைத்துச் செல்கின்றார். 'உனக்கு ஐந்து கணவர்கள் உண்டு' என இயேசு சொல்வதை 'உனக்கு ஐந்து கடவுளர்கள் உண்டு' எனவும் மொழிபெயர்க்கலாம். ஏனெனில் இயேசுவின் காலத்துச் சமாரியர்கள் ஐந்து கடவுளர்களை வழிபட்டனர் (காண். 2 அரசர்கள் 17:24). அத்தோடு விடவில்லை இயேசு. 'இந்த மலையிலும் அல்ல. அந்த மலையிலும் அல்ல. கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்பிற்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர்' எனச் சொல்கிறார் இயேசு. 'நீர் இறைவாக்கினர் என நான் கண்டுகொண்டேன்' என அறிக்கையிட்ட சமாரியப்பெண்ணிடம், 'நானே அவர் - நானே கிறிஸ்து' என தன்னை வெளிப்படுத்துகிறார் இயேசு.

நிக்கதேம் என்ற யூத ஆணுக்கு இரவில் கிடைக்காத இந்த வெளிப்பாடு, பெயரில்லாத இந்த சமாரியப் பெண்ணுக்கு நண்பகலில் கிடைக்கிறது. இதுவும் கடவுளின் செயல்பாடே.

இறைவனின் அருள்நிலையைத் தாங்கமுடியாத அந்த கண்ணீர் குடம் தான் கொண்டுவந்த தண்ணீர் குடத்தை அப்படியே போட்டுவிட்டு ஊருக்குள் ஓடுகிறது. இந்த இளவல் யாரிடமிருந்து தன்னை மறைத்துக்கொள்ள நினைத்தாளோ அவர்களை நோக்கி ஓடுகிறாள். அதாவது, 'என்னை ஏற்றுக்கொள்ள ஒருவர் இருக்கிறார்' என்ற உறுதி வந்தவுடன், 'என்னை ஏற்றுக்கொள்ளாமல் எத்தனை பேர் இருந்தாலும் அவர்களைப் பற்றிக் கவலையில்லை' என அவர்களை நோக்கி ஓடுகின்றாள் இளவல்.

இதற்கிடையில் உணவு வாங்க ஊருக்குள் சென்ற சீடர்கள் திரும்பி வருகின்றார்கள். தான் இதுவரை பேசிக்கொண்டிருந்ததை விட்டுவிட்டு சம்பந்தமேயில்லாத ஒரு டாபிக்கை எடுத்துப் பேசிகின்றார் இயேசு. 'அறுவடை இருக்கு, அரிவாள் இருக்கு, கதிர்கள் முற்றி இருக்கு, வேலைக்காரங்க சம்பளம் வாங்குறாங்க' என்ற இயேசுவின் பேச்சு நகைச்சுவையைத் தருகின்றது.

ஊருக்குள் சென்ற இளவல், 'நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து பாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ?' என மக்களுக்கு அறிவிக்கின்றார். 'வந்து பாருங்கள்' என்ற வார்த்தையை இயேசு தன் முதற்சீடர்களைப் பார்த்துச் சொல்கிறார். மேலும், பிலிப்பு நத்தனியேலிடம் சொல்லும் வார்த்தையும் இதுவே. இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். 'இவர்தான் மெசியா' என உறுதியாக அறிவிக்காமல், 'இவராக இருப்பாரோ!' என தயக்கம் காட்டுகிறார் இளவல். இறையனுபவத்தில் தயக்கம் மிக அவசியம். சில நேரங்களில், 'இதுதான் இறைவன். இதுதான் இறையனுபவம்' என கடவுளுக்கு செக்ரட்டரி மாதிரி அவரை முற்றிலும் அறிந்தவர்போல நாம் பேசுகிறோம். பல மதங்கள் தொட்டில் கட்டி ஆடும் நம் இந்திய மரபில் இந்த தயக்கம் இன்னும் அதிகம் அவசியமாகிறது. இல்லை என்றால், 'என் கடவுள்தான் பெரியவர்' என நாம் அடுத்தவரை தள்ளிவைக்க ஆரம்பித்துவிடுவோம்.

இளவலின் பேச்சைக் கேட்டு சமாரிய நகரத்தார் அனைவரும் இயேசுவிடம் வருகின்றனர். அந்த மக்களின் தாராள உள்ளத்தையும் நாம் பார்க்க வேண்டும்.'யார் சொன்னா?' என்பது முக்கியமல்ல. 'என்ன சொன்னாள்?' என்பதுதான் முக்கியம் என இயேசுவை நோக்கி புறப்படுகின்றனர். தங்கள் ஊரில் தங்குமாறு இயேசுவிடம் கேட்கின்றனர். தாங்கள் இறையனுபவம் பெற்றவர்களாக, 'இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை. நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம். அவர் உண்மையில் உலகின் மீட்பர்' என அறிந்துகொண்டோம் என நம்பிக்கை அறிக்கை செய்கின்றனர்.

நம் நம்பிக்கை வாழ்வும் இப்படித்தான் இருக்க வேண்டும். குருக்களின் மறையுரை, வழிபாடு, ஞாயிறு மறைப்போதனை, வகுப்புகள் என நிறைய வழியில் நாம் இயேசுவைப் பற்றி அறிந்திருக்கலாம். ஆனால், அந்த அறிவு முழுமையானது அல்ல. அனுபவம் வழியாக இயேசுவை அறிய புறப்பட வேண்டும்.

'இறைவாக்கினர்,' 'கிறிஸ்து,' 'மீட்பர்' என அடுத்தடுத்த அடையாளத்தைப் பெறுகின்றார் இயேசு.

இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களும், நற்செய்தி வாசகத்தில் சமாரியப் பெண்ணும் அவருடைய ஊராரும் தண்ணீர் கேட்பவர்களாக மாறுகின்றனர். இவர்களின் மற்றும் நமது தாகத்தைத் தீர்ப்பவர் கடவுள் ஒருவரே. இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 5:1-2,5-8), தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம்மேல் பொழியப்பட்டுள்ளது என்கிறார் பவுல்.

'எனக்கு தாகமாய் இருக்கிறது' என்பதை இயேசு இங்கே மறைமுகமாகவும், சிலுவையில் நேரிடையாகவும் (காண். யோவா 19:28) சொல்கிறார் இயேசு. இன்று நாமும் தாகமாய் இருக்கிறோம் - நேரிடையாக, மறைமுகமாக. என் தாகம் தணிக்க நான் சில நேரங்களில் கானல் நீரை நோக்கிச் சொல்கிறேன். ஆனால், கானல்நீர் ஒருபோதும் தாகம் தணிக்காது. சில நேரங்களில் அழிவைத் தரும் கசப்பு நீரையும் நான் குடித்துக்கொண்டிருக்கிறேன். வாழ்வின் ஊற்றாம் இறைவனை அருகில் வைத்துக்கொண்டு சாவின் சாக்கடை நீரை நான் ஏன் குடிக்க வேண்டும்? வாழ்வின் நீரைப் பெற்ற நான் என்னுடைய காலிக்குடத்தை அப்படியே போட்டுவிட்டு என் ஊரை நோக்கிப் புறப்பட வேண்டும்.

தண்ணீர் எடுக்கச் சென்றவள் வாழ்வின் ஊற்றைக் கண்டுகொள்கிறாள். தண்ணீர் கேட்டு முணுமுணுத்தவர்கள் இறைவனின் இருப்பை உறுதிசெய்துகொள்கின்றனர்.

'குடிக்க தண்ணீர் கொடு!' என்ற இயேசுவின் வேண்டுதலில் தண்ணீர் எதற்காக என்ற தெளிவு இருக்கிறது. தெளிவு இருக்கும் இடத்தில் தண்ணீர் வீணாவதில்லை. இதுவே என்னுடைய இறைவேண்டலாக இருந்தால், நான் ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன் (காண். திபா 95).

ser

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com