மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு
முதலாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
திருத்தூதர்பணி 2:42-47 | 1 பேதுரு 1:3-9 | யோவான் 20:19-31

ser

இயேசு உயிர்த்தார். உயிர்த்து தன் சீடர்களுக்குக் காட்சித் தந்தார் என்பதை இன்றைய நற்செய்தி பறை சாற்றுகிறது.

உயிருள்ளவரை இறந்தோரிடையே தேடுவானேன். அவர் இங்கு இல்லை . உயிர்த்துவிட்டார் (லூக் 24:5-6). கழுமரத்தில் அவரை ஏற்றிக் கொன்றுபோட்டார்கள்.

கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிர்ப்பித்தார். அவரோடு உண்டு குடித்த நாங்களே சாட்சிகள் என்றனர் (அப். பணி 10:40-42).

ஆம் இன்றைய வார்த்தை வழிபாடு மூன்று நிலைகளில் நம் வாழ்வை அமைக்க அழைப்பு விடுக்கிறது.

  • மன்னிப்பின் மூலம் சமாதானம் : என் தந்தை என்னை அனுப்பியது போல நான் உங்களை அனுப்புகிறேன். நான் கொண்டு வந்த சமாதானத்தை உலகிற்குக்கொடுங்கள் என்கிறார்.
  • மன்னிப்பின் மூலம்தான் சமாதானம் உண்டாகும். எனவே ஒப்புரவாகும் திருவருட்சாதனத்தை வழங்கி யாருடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும்.
  • நாம் நமது விசுவாசத்தை வெளிப்படுத்த வேண்டும்.

புனித தோமையாரின் விசுவாச வாழ்வையும், சிறந்த மனிதத் தன்மையையும் விவிலியத்தில் நாம் காண முடியும்.

நாமும் செல்வோம், அவரோடு இறப்போம் (யோவா. 11:16) என்று இயேசுவோடு இணைகின்ற மனப்பக்குவம்.

தன் தந்தையைப் பற்றி கூறிய இயேசுவிடம், நீ எங்கு செல்கிறீர் என்பதே தெரியாது இருக்க நீர் போகும் வழியை எப்படி அறிவோம் (யோவா. 14:5). இது அவரது திறந்த உள்ளம்.

சீடர்கள் தாம் இயேசுவைக் கண்டோம் என்ற போது நான் அவரது தழும்பைப் பார்த்து, விலாவில் விரலை விட்டால் ஒழிய நான் நம்பமாட்டேன் (யோவா. 20:25) என்றது - இவரது திறந்த மனம்.

ஆண்டவர் இயேசு காட்சி தந்தபோது தன் இதய கண் திறக்கப்பட என் ஆண்டவரே என் தேவனே என்று விசுவாச அறிக்கையிட்டார் (யோவா. 20:28).

இந்த விசுவாசம்தான் பிறரோடு பகிர்ந்துகொள்ள அவரை இந்தியாவுக்குக் கொண்டு வந்தது.

நம் விசுவாசம் நம்மில் இருப்பதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்

இன்றைய முதல் வாசகம் இதைத்தான் காட்டுகிறது. ஆதி கிறிஸ்தவர்கள் திருத்தூதர்களின் போதனைகளுக்குச் செவிமடுத்தார்கள். கூடிச் செபித்தார்கள்.

அப்பத்தைப் பிட்பதிலும் இறை வேண்டலிலும் உறுதியாக இருந்தார்கள். தங்கள் உடைமைகளை விற்று அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்கு ஏற்பப் பகிர்ந்தளித்தனர்.

பகிர்வதே கிறிஸ்தவ வாழ்வு - இயேசு தன்னையே நமக்குப் பிட்டுக் கொடுத்தார் - பகிர்ந்தளித்தார்.

தன்னையே வெறுமையாக்கி, சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குத் தன்னைப் பகிர்ந்தளித்தார். ஆதலால் வானகத் தந்தை எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அளித்து அவரை உயர்த்தினார் (பிலி. 2:7-9).

இன்றைய திருச்சபை ஒரு சவாலாக அமைய அழைக்கப் படுகிறது. அதிகாரத்தின் நிறுவனமாக அல்ல. மாறாக பகிந்தளிக்கும் திருச்சபையாக இது தன்னையே வெறுமை யாக்குவதின் மூலம் தான்.

  • உலகப் பொருட்களைப் பகிர்வது
  • திருவருட்சாதனங்களைப் பகிர்ந்தளிப்பது
  • அதோடு நாம் பெற்ற விகவாசத்தைப் போதித்துப் பிறருக்குக் கொடுப்பது.
ser ser

நம்பிக்கை விடுதலை அளிக்கும்

கபிரியேல் மார்சல் என்னும் பிரான்சு நாட்டு தத்துவ ஞானி, நம்பிக்கை என்றால் என்ன என்பதை விளக்க ஓர் அழகான உவமையை நம் கண்முன் வைக்கின்றார். நாம் நமது நண்பரை இரயிலில் ஏற்றிவிட இரயில் நிலையத்திற்குச் செல்கின்றோம் என்று வைத்துக்கொள்வோம். அவர் இரயிலுக்குள் ஏறிய பிறகு கூட அவரோடு பேசிக்கொண்டு நிற்கின்றோம். வண்டி புறப்படுகின்றது. நாம் கையசைக்கின்றோம். மெல்ல, மெல்ல நமக்கும், நமது நண்பருக்குமிடையே உள்ள தூரம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. ஒரு கட்டத்திலே நமது நண்பரை நம்மால் பார்க்க முடியவில்லையென்றாலும் நமது மனம் முழுவதும் அவரது பிரசன்னம் நிறைந்திருக்க, அவரோடு நமது மனம் பயணம் செய்கின்றது.

இந்த உவமையிலிருந்து நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய ஓர் உண்மை உண்டு. நமது மனத்திற்கு நமது உடலைத் தாண்டிச் செல்லும், கடந்து செல்லும், பிரிந்து செல்லும், பறந்து செல்லும் ஆற்றல், வல்லமை, சக்தி உண்டு! இந்த ஆற்றலைப் பயன்படுத்தி நாம் கடவுளுடைய பாதத்தைத் தொடலாம். இப்படிக் கடவுளின் திருவடிகளைத் தொட நாம் மேற்கொள்ளும் திருப்பயணத்திற்குப் பெயர்தான் நம்பிக்கை. கடவுளின் பாதத்தில் நாமிருக்கின்றோம் என்ற எண்ணம், நம்பிக்கை நமது மனத்தில் எழும்போது அங்கே அச்சமிருக்காது, அங்கே அவநம்பிக்கையிருக்காது (நற்செய்தி). மாறாக அங்கே மாறாத மகிழ்ச்சி இருக்கும் (இரண்டாம் வாசகம்).

இன்றையச் சூழலிலே பலருடைய மனங்களில் அச்ச உணர்வுகள்! கடற்கரையிலிருக்கும் காகங்கள் ஊர் பக்கம் பறந்தால்கூட மீண்டும் சுனாமி என்னும் அரக்கன் வந்துவிடுவானோ என்ற பயம். அனைத்தையும் இழந்த எங்கள் வாழ்க்கையில் இனியொரு இனிய உதயம் பிறக்குமா? என்ற சந்தேகம் பலருடைய மனதிலே எழுந்து மறைந்து கொண்டிருக்கின்றது. இப்படி கலங்கி நிற்கும் மக்களுக்கு ஆண்டவர் தரும் ஆறுதல் என்ன?

எனதருமைச் செல்வங்களே! நம்பிக்கையால் ஆகாதது ஒன்றுமில்லை! முதலில் நீங்கள் முதல் கிறிஸ்துவர்களைப் போல் ஒருவரையொருவர் நம்புங்கள். நம்பிக்கை உங்களை ஒரே குடும்பமாக்கும். எங்கே தனிமை இல்லையோ அங்கே அச்சமுமிருக்காது, அவநம்பிக்கையுமிருக்காது.

இரண்டாவதாக எனது சீடர்களைப் போல் என்மீது நம்பிக்கை வையுங்கள். இன்றைய நற்செய்தியிலே என் சீடர் தோமா கூறுவது போல, நான் ஆண்டவர், இந்த உலகத்தை ஆண்டவர், ஆள்பவர். ஆளப் போகின்றவர். நான் கடவுள். நான் எல்லாத் துன்பங்களையும் துயரங்களையும் கடந்து நிற்பவர்.

எனது காலடியில் நீங்கள் இருப்பதாக நினையுங்கள் - நம்புங்கள். உங்கள் நினைவு - உங்கள் நம்பிக்கை உங்களுக்கு விடுதலை அளிக்கும்.

மேலும் அறிவோம் :

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் (குறள் 3).

பொருள் : அன்பால் இறைவனை நினைந்து போற்றுபவர் உள்ளமாகிய தாமரையில் வீற்றிருப்பவன் இறைவன். அந்த இறைவன் திருவடிகளைப் பின்பற்றி, நல்ல நெறியில் செல்வோர் பூவுலகில் நெடுங்காலம் புகழுடன் வாழ்வர்.

ser ser

ஓர் அப்பா தனது 12 வயது மகனிடம் தன் வீட்டுக்கு முன்னால் இருந்த ஒரு வேப்ப மரத்தில் ஏறி, அதன் ஒரு கிளையில் அமர்ந்து கீழே குதிக்கச் சொன்னார். முதலில் அச்சிறுவன் மறுத்தாலும், அவன் அப்பா அவனைப் பிடித்துக் கொள்வதாக உறுதிமொழி அளித்ததால் அச்சிறுவன் குதித்தான். ஆனால் அப்பா அவனைத் தாங்கிப் பீடிக்கவில்லை ; சிறுவன் கீழே விழுந்து, கால் பிசகி அழுதான். அவன் அப்பா அவனிடம், "மகளே! உனக்கு நான் ஒரு முக்கியமான பாடம் சுற்றக் கொடுக்க விரும்பினேன். அது என்னவென்றல், உலகில் எவனையும் நம்பாதே; உன் அப்பனையும் நம்பாதே" என்று சொல்லிச் சிரித்தார்.

இன்றைய காலக்கட்டத்தில் உலகில் யாரும் எவரையும் முழுமையாக நம்ப முடியவில்லை. நண்பர்கள் தங்களது நண்பர்களை நம்புவதில்லை . ஒருவர் கடவுளை நோக்கி, "சுடவுளே, எனது நண்பர்களிடமிருந்து என்னைப் பாதுகாத்தருளும்; என் எதிரிகளை நான் சமாளித்துக் கொள்கிறேன்" என்று செபித்தார் இந்நிலையில் கடவுள் நம்பிக்கையும் தேய்ந்த கொண்டு போகிறது. "மானிட மகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?" (லூக் 18:8) என்று பெரிய கேள்வியைக் கேட்டுள்ளார் கிறிஸ்து.

இன்றைய நற்செய்தியில், அறிவியல் மூளை கொண்ட தோமா, கிறிஸ்துவை கண்ணால் கண்டு அவரைக் கையால் தொட்டுப் பார்த்தால் மட்டுமே அவர் உயிர்த்தார் என்பதை நம்புவதாகச் சொல்லுகிறார். ஆனால் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைக் கண்ணால் கண்டபோது, "நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்" (யோவா 20:28) என்று நம்பிக்கை அறிகையிடுகின்றார். அவநம்பிக்கையின் அதாலப் பாதாளத்தில் விழுந்த தோமா, நம்பிக்கையின் சிகரத்தைத் தொடுகிறார். தோமாவின் அவநம்பிக்கை நமது நம்பிக்கைக்கு வித்தாக அமைந்துள்ளது. தோமாவின் அவநம்பிக்கையைக் கண்டித்து கிறிஸ்து அவரிடம், "நீ என்னைக் கண்டதால் நம்பினாய், காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” (யோவா 20:29) எனக் கூறினார். நாம் தோமாவைவிடப் பேறுபெற்றவர்கள். ஏனெனில் நாம் கிறிஸ்துவைக் காணாமலேயே அவரை நம்புகிறோம்.

மேலும் தோமாவின் நம்பிக்கை, கிறிஸ்துவின் பாடுகளுக்கும் அவருடைய உயிர்ப்புக்கும் இடையேயுள்ள பிரிக்க முடியாத தொடர்பை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறது. உயிர்த்த ஆண்டவர் தம் உடலில் இருந்த பாடுகளின் தழும்பைக் காட்டுகின்றார். வரலாற்று இயேசு வேறு, நம்பிக்கையின் கிறிஸ்து வேறு என்று ஒரு சிலர் கிறிஸ்துவைக் கூறுபோடுகின்றனர். கிறிஸ்து தமது உடலில் இருந்த தமும் புகளைக் காட்டியதன் மூலம் வரலாற்று இயேசுவே நம்பிக்கையின் கிறிஸ்து என்பதை எண்பிக்கிறார்,

நம்பிக்கையின் உச்சக்கட்டம் கடவுளிடம் சரணடைவதாகும். தோமா, என் ஆண்டவரே என் கடவுளே!" என்று கூறிக் கிறிஸ்துவிடம் சரணடைந்தார். அவ்வாறு செய்ய நமது நம்பிக்கை நமக்குக் கை கொடுக்கிறதா? நமது நம்பிக்கை உயிரோட்டம் உள்ள நம்பிக்கையா?

ஒருவர் ஒரு மலை உச்சியின் விளிம்பில் நடந்தபோது, கால் இடறிக் கீழே விழுந்தார். நல்ல வேளையாக மலையின் இடையிலிருந்த ஒரு மரத்தின் கிளையைப் பிடித்துக் கொண்டு, "கடவுளே என்னைக் காப்பாற்றும் என்று கத்தினார். இறுகப் பற்றிக் கொண்டிருந்த மரக் கிளையிலிருந்து கைகளை எடுத்துவிட்டுக் கீழே குதிக்கும்படி கடவுள் அவரைக் கேட்டார். ஆனால் அவர் கிளையைப் பிடித்துக் கொண்டே "கடவுளே என்னைக் காப்பாற்று" என்று கத்தினார். அவரைப் போலவே நாமும் பணம், பதவி, பாலின்பம் போன்ற கினைகளைப் பற்றிக் கொண்டு கடவுள் நம்மைக் காப்பாற்றும்படி கேட்கின்றோம். ஆனால் கடவுள் கூறுவது " நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது" (மத் 6:24), நம்பிக்கையின் தந்தை எனப்படும் ஆபிரகாம், "தாம் எங்கே போகவேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார்" (எபி 11:8), எனவே அவர் சரியான பாதையில் சென்றார். "நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது" (எபி 11:4).

நமது நம்பிக்கை சோதிக்கப்பட வேண்டும். பொன் எவ்வாறு நெருப்பில் புடமிடப்படுகிறதோ அவ்வாறே நமது நம்பிக்கையும் புடமிடப்பட வேண்டும் என்று இன்றைய இரண்டாவது வாசகத்தில் கூறுகிறார் தூய பேதுரு, நாம் துன்புறும் போது, "நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுகிறவர்கள் பேறு பெற்றோர்" (மத் 5:10) என்ற ஆண்டவரின் அருள்வாக்கை நினைவுகூர வேண்டும். கடவுள் நம்மைக் கண்டிப்பாரா? ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்" (எபி 12:8). எனவே, நாம் துன்புறும்போது அதைக் கடவுளின் சாபமாகக் கருதாமல், கடவுளின் அன்பின் வெளிப்பாடாகக் கருத வேண்டும்.

நம்பிக்கை மட்டும் போதாது: நம்பிக்கை அன்பு மூலம் எண்பிக்கப்பட வேண்டும். கிறிஸ்தவ மதத்தின் சுருக்கம், " அன்பின் வழியாய்ச் செயலாற்றும் நம்பிக்கை" (கலா 5:6), தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட வாழ்க்கை முறையை இன்றைய முதல் வாசகம் விவரிக்கிறது. "நம்பிக்கை கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர். எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர்" (திப 2:44). அவர்களிடம் நம்பிக்கையும் அன்பும் இணைந்திருந்தது. மன ஒற்றுமையும் பகிர்வும் கோலோச்சியது. திருச்சபையை ஆவியின் இயக்கமாக, அன்பியமாகக் கட்டி எழுப்புவது காலத்தின் கட்டாயமாகும்.

திருமணமான ஒரு பெண்ணிடம், "அன்பு பெயர்ச் சொல்லா? வினைச் சொல்லா? " என்று கேட்டதற்கு அவர் கூறியது: "என் கணவர் உள்ளூரில் இருக்கும்போது அன்பு வினைச் சொல்; அவர் வெளியூர் போய்விட்டால் அன்பு வெறும் பெயர்ச் சொல்," அன்பு என்ற பெயர்ச் சொல்லை வினைச் சொல்லாக மாற்றுவதே நமது கிறிஸ்தவ அழைத்தலாகும். "நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்" (யோவா 3:18).

ஒரு நோயாளிக்குக் கழுத்தில் கட்டி இருக்கிறது. ஆனால் மருத்துவர் அறுவைச் சிகிச்சையை அவர் வயிற்றில் செய்கிறார். ஏன்? "தன்னை நம்பினவர்களின் கழுத்தில் கத்தி வைக்க மாட்டார்" அந்த மருத்துவர். மனிதர்கள் தங்களை நம்பினவர்களின் கழுத்தில் ஒருவேளை கத்தி வைக்கலாம். ஆனால் கடவுள் ஒருபோதும் அவ்வாறு செய்யமாட்டார். கடவுளை முழுமையாக நம்புவோம். நமது நம்பிக்கை வீண் போகாது. "நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி. கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை" (எபி 11:1).

ser ser

ஐயுறுவது பயனுள்ளது

"உதட்டளவில் மறையுண்மைகளை நம்பிக்கை அறிக்கை செய்வதைவிட, தேவையான அளவு நியாயமான வகையில் ஐயுறுவது பயனுள்ளது'', அறிஞர் டென்னிசனின் இந்தக் கூற்று ஆழமான சிந்தனைக்குரியது. இறை நம்பிக்கையை ஆய்வுக்கும் கேள்விக்கும் உட்படுத்துவது தவறல்ல.

திருத்தூதர்களிலேயே சற்று வித்தியாசமானவர் தோமா. கிறிஸ்தவ விசுவாசத்தின் ஒரு மாறுபட்ட பரிமாணம்.

சிறுவன் ஒருவன் தன் தந்தையின் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு உற்சாகமாகச் சொன்னானாம். "அப்பா, அப்பா, நான் உங்க அம்மாவைக் கட்டிக்கப் போறேன்” என்று. சற்று அதிர்ச்சி அடைந்த தந்தை அதட்டினார். "சீச்சீ, என்ன பேச்சு இது? அதுவும் இந்த வயதில் மகன் கேட்டான் : "நீங்க மட்டும் என் அம்மாவைக் கட்டிக்கலாம், நான் உங்க அம்மாவைக் கட்டிக்கக் கூடாதோ!" என்ன பதில் சொல்வது?

நம்பிக்கை தொடர்பாக நாம் எழுப்பும் கேள்வி, இப்படிச் சிறுபிள்ளைத்தனத்தால் அல்ல, விளையாட்டு வேடிக்கைக்காக அல்ல, கிண்டல் ஏளனத்துக்காக அல்ல. வலுப்படுத்திக் கொள்வதற்காக நம்பிக்கையை வளப்படுத்திக் கொள்வதற்காக!

துன்பப்படாதவன் வாழவே இல்லை
தோல்வியுறாதவன் முயலவே இல்லை
விம்மியழாதவன் சிரித்ததே இல்லை
சந்தேகப்படாதவன் சிந்தித்ததே இல்லை

தட்டுத்தடங்கல் இல்லாத தார்ச் சாலையில் அலுங்காமல் குலுங்காமல் செல்லும் சொகுசுப் பேருந்து அல்ல நம்பிக்கை வாழ்வு. மாறாக அது காட்டுப் பாதையில் செல்லும் மாட்டுவண்டி. கடல் அலைகளில் தத்தளித்து மிதக்கும் கட்டுமரம்.

"அழியக் கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள்'' (1பேதுரு 1:7). இறை நம்பிக்கை சோதிக்கப்பட வேண்டும் என்று தேவையோ நியதியோ இல்லை. இருப்பினும்,
சோதனையும், துன்பமும் சந்தேகமும் ஊடுருவாத நம்பிக்கை வாழ்வு ஒன்று இல்லை. “என் அன்பார்ந்த மைந்தர் இவரே” (மத்.3:17) என்று இறைத்தந்தையைப் பூரிக்க வைத்த இயேசுவும் “என் இறைவா... ஏன் என்னைக் கைவிட்டீர்?" (மத்.27:46) என்ற கதறும் காலமும் இருந்தது.

"அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கைகளை இட்டாலன்றி நான் நம்ப மாட்டேன்” (யோவான். 20:25) என்று கூறிய தோமாவை மட்டமாகக் கருதத் தேவையில்லை. அந்த சந்தேகத்தில் கூட அவருடைய எளிய உள்ளமும், உண்மையை அரியத் துடிக்கும் ஆர்வமும் மிளிரவில்லையா? இங்குகூட தோமா ஐயுற்றது இயேசுவை அல்ல. உயிர்த்த இயேசு பற்றி அவருடைய தோழர்கள் கொடுத்த தகவலைத்தான். அவர் தனது சொந்த அனுபவத்தில் தன் இறை நம்பிக்கையைக் கட்டி எழுப்ப விரும்பினார். அதில் என்ன தவறு? 'இயேசுவின் மீது தோமாவுக்கு அபார அன்பு இருந்தது. “நாமும் செல்வோம். அவரோடு இறப்போம்” (யோவான் 11:16) என்று வீரமுழக்கம் செய்தவர்தானே அவர்!

“காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்று இயேசு சொன்னாரே தவிர “காண ஆசைப்படுவது தவறு'' என்று கூறவில்லையே! ஏனோதானோவென்று பட்டும்படாமலும் தொட்டும் தொடமலும் வாழும் வாழ்வைவிட, இயேசுவையும் அவருடைய போதனை களையும் சந்தேகித்துக் கேள்விகேட்டு ஆய்ந்தறிந்து பின் அவருக்கு அடி பணிந்து முற்றிலும் சரணடைந்து வாழும் வாழ்வு பன்மடங்கு மேலானது. “நீரே என் ஆண்டவர். நீரே என் கடவுள்” (யோவான் 20:28) என்ற தோமாவின் சொற்கள் அதைத்தானே உணர்த்துகின்றன! விசுவாசத்துக்கு விடைதேடுவதோ, விளக்கம் கேட்பதோ அப்படி ஒன்றும் பெரிய தவறல்ல. “நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள் " (1 பேதுரு 3:15)

சந்தேகம், சோதனை, துன்பம் இவற்றால் பதம் பார்த்துப் பக்குவம் பெற்ற நம்பிக்கை வாழ்வு கனிகள் நிறைந்தது (தி.ப.2:42-47) தொடக்கக் கால கிறிஸ்தவர்களின் இறைநம்பிக்கை வாழ்வு அதற்குச்
சிறந்த எடுத்துக்காட்டு. அவர்கள் தங்கள் முழு வாழ்வையும் மீட்கப்பட்ட வாழ்வாகக் கருதினர். செய வாழ்வு, சமூகப் பொருளாதார வாழ்வு என்றெல்லாம் பிளவுபடுத்திப் பார்த்ததில்லை. அவர்களுடைய கொள்கை களுக்கும் செயல்களுக்கும் இடையே எவ்வித இடைவெளியும் இருந்த தில்லை. அகவாழ்வுக்கும் புறவாழ்வுக்கும் இடையே பெரிய மலையோ பள்ளத்தாக்கோ இல்லை.

சுவாமி அ.ம. வரப்பிரசாதம், சே.ச. (ஒரு காலத்தில் தமிழக இயேசு சபை மாநிலத் தலைவராக இருந்தவர்) ஆழமான சிந்தனையாளர். “உள்ளதைச் சொன்னால்" என்ற அருமையான அவரது நூலில் ஒரு கார்ட்டூன். உறுத்தலுக்கும் வருத்தத்துக்குமிடையே நான் மிகவும் இரசித்த கேலிச் சித்திரம்.

அழகான ஒரு மேசை. அதன்மேலே முகம் பார்க்கும் பெரிய கண்ணாடி. மேசை முழுவதும் பரப்பிக் கிடந்தன அழகுச் சாதனங்கள். கண்ணாடிக்கு முன்னே எலும்பும் தோலுமாக இருமிக் கொண்டிருக்கும் ஒரு நோயாளி. அந்த மனிதன் தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருக்கிறான்: “எனக்குக் காசநோய் என்கிறார்கள். சாதிவெறி, வரதட்சனை, அநீதின்னு எத்தனையோ வியாதி எனக்கு இருக்காம். நான் பார்க்க அகோரமாயிட்டேனாம். அதனால் இப்ப என்ன கெட்டுப் போச்சு? இதோ அழகுச் சாதனங்கள். இவற்றைக் கொண்டு என்னை அழகுபடுத்திக் கொள்வேன். இவையெல்லாம் இருக்கிற வரை எனக்குக் கவலை இல்லை” நோயாளியின் முதுகில் “இறை நம்பிக்கை” என்று பொறிக்கப்பட்டிருந்தது.

பவுடர் என்ற நவநாள், சென்ட் என்ற பூசை, லோஷன் என்ற திருவிழா, திருப்பயணம் போன்ற வெறும் அழகுச் சாதனங்களைக் கொண்டு, எலும்புருக்கி நோயை - விசுவாச வாழ்வில் காணக்கூடாத அநீதி, வரதட்சனை, சாதி முதலியவற்றைக் குணப்படுத்த முடியாது.

நம்பிக்கையில் தடுமாறலாம். ஆனால் தடம் (பாதை) மாறக்கூடாது.
யூதாஸ் தடுமாறினான். முடிவில் தடம் மாறினான்.
பேதுரு தடுமாறினார். ஆனால் தடம் மாறவில்லை.

ser ser

நம்பிக்கையும் நம்வாழ்வும்

நிகழ்வு
ஜெர்மனியில் பிறந்து, தெற்காசியாவில் உள்ள சுமத்ராத் தீவில் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவித்து, ஆயிரக்கணக்கான மக்களை அவர்மீது நம்பிக்கை கொள்ளச் செய்தவர் மிகப்பெரிய மறைப்பணியாளரான லுத்விக் நோம்மென்சென் (Ludwig Nommensen 1834-1918). இவர் 1862 ஆம் ஆண்டு, சுமத்ராத் தீவில் உள்ள படாக் மொழி பேசக்கூடிய மக்கள் நடுவில் நற்செய்தியை அறிவித்த வந்தபொழுது, அந்த மக்கள்கூட்டத்தின் தலைவர் இவரிடம், “எங்களுக்கென்று ஒரு மதம் உண்டு; பக்தி முயற்சிகளும் உண்டு. எங்களுடைய மதத்தை விடவும் பக்திமுயற்சிகளையும்விடவும் உங்களுடைய மதம் எந்தவிதத்தில் உயர்ந்தது?” என்றார். அதற்கு லுத்விக், “எங்களுடைய மதத்தைக் குறித்துப் பேசவேண்டும் என்றால், மணிக்கணக்காகப் பேசவேண்டும்” என்றார்.

உடனே அந்த மக்கள்கூட்டத்தின் தலைவர், “சரி, உங்களுக்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் தருகின்றேன். இந்த இரண்டு ஆண்டுகளில் நீங்கள் உங்களுடைய மதத்தைப் பற்றி இங்கு போதிக்கலாம். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மக்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தால், நீங்கள் இங்கேயே இருந்து தொடர்ந்து உங்கள் மதத்தைப் பற்றிப் போதிக்கலாம். ஒருவேளை மக்களுடைய வாழ்க்கையில் எந்தவொரு மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால், நீங்கள் இங்கு இருக்கக்கூடாது” என்றார். லுத்விக்கும் அவர் சொன்னதற்குச் சரியென்று ஒத்துக்கொண்டு ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அந்த மக்களுக்கு அறிவிக்கத் தொடங்கினார்.

லுத்வித் முதலில் அவர்கள் பேசிய படாக் மொழியைக் கற்றுக்கொண்டார். பின்னர் இவர் அவர்களுக்கு அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார். இயேசுவைப் பற்றியும் அவருடைய போதனையைப் பற்றியும் கேள்விப்பட்ட அந்த மக்கள் மிகவும் வியந்தார்கள். லுத்விக் இதோடு நின்றுவிடாமல், மாலைநேரங்களில் அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று, அவர்களோடு பேசினார்கள்; அவர்களிடம் இருந்த நோயாளர்களைத் தனக்குத் தெரிந்த மருத்துவத்தைக் கொண்டு நலப்படுத்தினார்; எல்லாரிடத்திலும் அன்போடு பழகினார். இவையெல்லாம் அந்த மக்களுடைய வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின.

லுத்விக் சுமத்ராத் தீவிற்கு வந்து ஆறுமாதங்கள் இருக்கும். ஒருநாள் அந்த மக்கள்கூட்டத்தின் தலைவர் இவரிடம் வந்து, “உங்களுக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கொடுத்தேன்; ஆனால், நீங்கள் இங்கு வந்த ஆறு மாதங்களிலேயே இந்த மக்களுடைய வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதைப் பார்க்கின்றேன். இப்பொழுது சொல்கிறேன், எங்களுடைய மதம், வழிபாடு, பக்தி முயற்சிகளை விட உங்களுடைய மதமும் போதனையும் மிக உயர்ந்தவை. இதனால் நீங்கள் இங்கேயே இருந்து, தொடர்ந்து நற்செய்தியை அறிவியுங்கள்” என்றார். லுத்விக்கும் அந்த மக்களோடு இருந்து, ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை தன்னுடைய வாழ்வாலும் வார்த்தையாலும் அறிவித்து ஆயிரக்கணக்கான மக்களை ஆண்டவர் இயேசுவை ஏற்றுக்கொள்ளச் செய்தார்.

ஆம், நம்முடைய நம்பிக்கை பெயரளவில் இல்லாமல், ஆண்டவரில் வேரூன்றியதாக, செயல்வடிவம் பெறக்கூடியதாக இருந்தால், மற்றவர்களும் நம்மால் ஈர்க்கப்படுவார்கள். இதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டுதான் மேலே உள்ள நிகழ்வு. பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நம்முடைய நம்பிக்கையும் வாழ்வும் எப்படி இருக்கவேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

காணாமலே நம்பவேண்டும்

யோவான் எழுதிய நற்செய்தி நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகம், நம்பிக்கையின் முதல்நிலையை நமக்கு எடுத்துச் சொல்கின்றது. அதுதான் காணாமலேயே நம்புவதாகும். ஆம், கண்டால்தான் நம்புவேன் என்பது நம்பிக்கையல்ல, காணாமலேயே நம்பவேண்டும் (எபி 11:1) அதுதான் நம்பிக்கையாகும்.

உயிர்த்த இயேசு தங்களுக்குத் தோன்றிய செய்தியை மற்ற சீடர்கள் தோமாவிடம் சொல்கின்றபொழுது, அவர் நம்ப மறுக்கின்றார். பின்னர் உயிர்த்த ஆண்டவரை அவர் கண்டபிறகு நம்புகின்றார். அப்பொழுதுதான் இயேசு அவரிடம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய்; காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்று கூறுகின்றார். ஆம், நாம் காணாமலே நம்பினோம் என்றால் பேறுபெற்றோர் ஆவோம். இது கடவுள் அவரை நம்புகின்றவருக்குக் கொடுக்கும் மிகப்பெரிய ஆசி. இன்றைகுப் பலர் கடவுளைக் கண்டால்தான் நம்புவோம் என்று அவநம்பிக்கையோடு பேசித் திரிக்கின்றார்கள். இத்தகையோர் கடவுள்மீது நம்பிக்கைகொண்டு, அவர் தருகின்ற ஆசியைப் பெற்றுக்கொள்வது நல்லது.

நம்பிக்கை செயலில் வெளிப்படவேண்டும்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், நம்பிக்கையின் இரண்டாவது நிலையை, அதாவது நம்பிக்கையானது பெயரளவில் இருந்துவிடாமல், செயல்வடிவில் இருக்கவேண்டும் என்பதை எடுத்துச் சொல்கின்றது.

தொடக்கக்காலக் கிறிஸ்தவர்கள் திருத்தூதர்கள் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம்பிடுவதிலும் இறைவேண்டலிலும் நிலைத்திருந்தார்கள் என்று வாசிக்கின்றோம். இவர்கள் இப்படி இருந்ததால் இவர்களிடம் ஒன்றிப்பும் பகிர்வும் பெருகின. இதன் பயனாக இவர்கள் மக்களுடைய நன்மை மதிப்பைப் பெற்றார்கள். இறுதியில் மற்ற மக்கள் இவர்களோடு சேர்ந்தார்கள். ஆம், தொடக்கக்காலக் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையில் வேரூன்றிய வாழ்வு அல்லது நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுத்த வாழ்வு, கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை மேலும் மேலும் உயர்த்தியது. அப்படியானால், நாம் கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றோம் என்றால், அந்த நம்பிக்கைக்கு ஏற்றாற்போல் வாழவேண்டும். அப்பொழுதுதான் நம்மைப் பார்க்கக்கூடிய மக்கள் கிறிஸ்துவின் பால் ஈர்க்கப்படுவார்கள். ஏனென்றால் சொற்களை விட செயலே உரக்கப் பேசும்.

நம்பிக்கையில் நிலைத்திருக்கவேண்டும்

திருத்தூதர் புனித பேதுரு எழுதிய முதல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகம், நம்பிக்கையின் மூன்றாம் நிலையை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. அதுதான் இயேசுவின் மீதுகொண்ட நம்பிக்கையில் துன்பங்களுக்கு நடுவிலும் நிலைத்திருப்பதாகும். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, அவருடைய வழியில் நடக்கின்றபோது அல்லது நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுத்து வாழ்கின்றபோது துன்பங்கள் வரலாம்; சோதனைகள் வரலாம். இவற்றைக் கண்டு துவண்டுபோய்விடக் கூடாது. எப்படி பொன் நெருப்பினால் புடமிடப்படுகின்றதோ, அதைப் போன்று துன்பங்களால் நம்முடைய நம்பிக்கை புடமிடப்படும். அத்தகையே வேளையில் நாம் மனம் சோர்ந்துவிடாமல், உறுதியாக இருக்கவேண்டும் என்று புனித பேதுரு ஒவ்வொருவருக்கும் அறிவுரை கூறுகின்றார். இன்றைக்குப் பலர் ஒரு துன்பத்திற்குக்கூட, கிறிஸ்துவை விட்டு விலகிவிடுகின்றார்கள். இது உண்மையான கிறிஸ்துவ வாழ்க்கையாக இருக்காது. எத்தகைய துன்பம் வந்தாலும் கிறிஸ்துவில் உறுதியாக இருக்கவேண்டும். அதுதான் உண்மையான கிறிஸ்துவ வாழ்க்கையாகும்.

ஆகையால், நாம் நமது நம்பிக்கை வாழ்வில் எதிர்வருகின்ற துன்பங்களைக் கண்டு துவண்டுவிடாமல், இயேசு சொல்வதுபோல், இறுதிவரை மனவுறுதியுடன் இருப்போம். (மத் 24: 13) நம்முடைய வாழ்வாலும் வார்த்தையாலும் இயேசுவுக்குச் சான்று பகர்வோம். அதன்மூலம் இயேசுவின் உண்மையான சீடர்களாவோம்.

சிந்தனை

‘கிறிஸ்துவ வாழ்க்கை கலங்கரை விளக்கு போன்றது. கலங்கரை விளக்கு எப்படி கடலில் பயணிப்பவர்களைத் தன் பக்கம் ஈர்க்கின்றதோ, அதுபோன்று கிறிஸ்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையால் மற்றவர்களைத் தன் பக்கம் ஈர்க்கவேண்டும். அதுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை’ என்பார் புகழ்பெற்ற மறைப்பணியாளராகிய டி.எல். மூடி என்பவர். ஆகையால், கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்ற நாம், அந்த நம்பிக்கை பெயரளவுக்கு இல்லாமல், பெயர் சொல்லக்கூடிய அளவுக்கு இருக்குமாறு செய்வோம். நம்பிக்கையை வாழ்வாக்குவோம்; மற்றவரையும் ஆண்டவர் இயேசுவில் நம்பிக்கை கொள்ளச் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser ser

நம்பிக்கைகொள்!

நேற்றைய தினம் எங்கள் அருள்பணியாளர்களில் ஒருவர் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஓர் இறையியலாளர் பற்றிப் பகிர்ந்துகொண்டிருந்தார். இங்கிலாந்து நாட்டில் இறையியல் பேராசிரியராக பணிபுரிந்த ஓர் அருள்பணியாளரின் பெயர் சார்லஸ் டேவிஸ். அவருடைய அறிவாற்றலைக் கண்டு மாணவர்கள் வியந்தனர். உடன் பணியாற்றும் பேராசிரியர்கள் பொறாமை கொண்டனர். தான் கற்றதைச் சொல்வதோடல்லாமல், அவர் அன்றாடம் தேடித் தேடி பல புது விடயங்களைக் கற்றுக்கொண்டும், அவற்றை மாணவர்களோடும் பகிர்ந்துகொண்டும் இருந்தார். ஒரு நாள், அவர் இறையியல் கல்லூரியிலிருந்து பணித்துறப்பு செய்ததாகவும், மேலும், அருள்பணியாளர் நிலையிலிருந்து விலகியதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அதிர்ச்சி. 'இவர் எப்படி இப்படிச் செய்யலாம்?' சார்லஸ் டேவிஸின் நண்பர்கள் பேராசிரியர் சிலர், அவரைச் சந்திக்க அவருடைய இல்லம் சென்றனர். 'ஏன் சார்லஸ் நீங்க இந்த இரண்டு பெரும் முடிவுகளை எடுத்தீர்கள்?' என்று கேட்க, சார்லஸ் இப்படி விடையளித்தார்: 'இறையியல் கற்றுக்கொடுக்க அடிப்படையான தேவை இறைநம்பிக்கை. இந்த நம்பிக்கை என பல ஆண்டுகளாக இல்லை. நான் கற்றுக்கொடுத்தது எல்லாமே என் அறிவிலிருந்து வந்தவை. நான் என்னை நானே ஏமாற்றிக்கொண்டிருக்க முடியவில்லை. ஆகவேதான், இம்முடிவை எடுத்தேன்.' உடன் சென்ற பேராசிரியர்களில் ஒருவர், 'இறைநம்பிக்கை கொள்வது எளிதுதானே!' என்றார். அதற்கு சார்லஸ், 'இல்லை! இறையனுபவம் இல்லாமல் இறைநம்பிக்கை சாத்தியமல்ல.'

நிற்க.

இறையனுபவத்திலிருந்து இறைநம்பிக்கை, இறைநம்பிக்கையிலிருந்து இறையியல் என்பது சார்லஸ் டேவிஸின் எண்ணமாக இருக்கிறது.

உயிர்ப்புக் காலத்தின் இரண்டாம் ஞாயிற்றை நாம் இறை இரக்கத்தின் ஞாயிறு என்று கொண்டாடுகிறோம். இறைஇரக்கத்தின் படங்கள் அல்லது திருவுருவங்களை நாம் பார்த்தால், அதன் அடியில், 'இயேசுவே, என் நம்பிக்கையை உம் மேல் வைக்கிறேன்' என்று எழுதியுள்ளதைப் பார்த்திருப்போம். ஏன் இந்தப் படத்தில் மட்டும் இப்படி எழுதியிருக்கிறது? - என்று பல நாள்கள் நான் கேட்டுள்ளேன். இன்று எனக்கு விடை கிடைப்பதுபோல தெரிகிறது. 'நம்பிக்கை கொள்ளும் ஒருவரே இறைவனின் இரக்கத்தை உணர முடியும். தொடர்ந்து, இறை இரக்கத்தை உணர்ந்த அவருடைய நம்பிக்கை வலுப்பெறும்.'

ஆக, இறையனுபவம், இறைநம்பிக்கை, இறைஇரக்கம் என்னும் மூன்று கோணங்களைக் கொண்ட முக்கோணத்திற்குள் நாம் இருக்கிறோம் என நமக்கு உணர்த்துகிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 20:19-31) மூன்று பிரிவுகளாக உள்ளது. முதலில், வாரத்தின் முதல் நாள் மாலையில் இயேசு தன் சீடர்களுக்குத் தோன்றுகின்றார். அவர்களோடு தோமா இல்லை. இரண்டாவது, எட்டு நாள்களுக்குப் பின் இயேசு மீண்டும் தோன்றுகிறார். அவர்களோடு தோமா இருக்கிறார். மூன்றாவது, நற்செய்தி நூலின் நோக்கம் வரையறுக்கப்படுகிறது.

தோமாவின் அடைமொழி 'திதிம்' என்று கொடுக்கப்பட்டுள்ளது. திதிம் என்றால் 'இரட்டை' அல்லது இரட்டைத்தன்மை.

'ஐயம்' மற்றும் 'நம்பிக்கை' என்னும் இரட்டைத்தன்மை,

'அவர்களோடு' மற்றும் 'அவரோடு' என்னும் இரட்டைத்தன்மை,

'நான் நம்பமாட்டேன்' மற்றும் 'நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்' என்னும் இரட்டைத்தன்மை.

தோமாவில் எப்படி இப்படிப்பட்ட ஒரு நம்பிக்கை அறிக்கை செய்ய முடிந்தது?

தோமா இயேசுவின் கைகளில் விரலை விட்டதாகவும், விலாவில் கையை விட்டதாகவும் நற்செய்தி வாசகத்தில் இல்லை. அவருடைய விருப்பமாக அது இருந்ததாகவே பதிவு செய்யப்படுகின்றது.

'நான் என் உடன் சீடர்களிடம் சொன்ன வார்த்தைகளை - அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன் - இவர் எப்படிச் சொன்னார்?' - என்ற கேள்வியில்தான் தோமா உடனடியாக சரணடைகின்றார் என எடுத்துக்கொள்ளலாம். அதாவது, தோமா தன்னுடைய மனத்தில் எண்ணியதையும், தனக்கு நெருக்கமான சீடர்களிடம் சொன்ன இந்த மறைவான செய்தியையும் இயேசு எல்லார் முன்னாலும் சொல்கின்றார்.

'ஆண்டவரே! என் வாயில் சொல் உருவாகுமுன்பே அதை முற்றிலும் அறிந்திருக்கின்றீர்' (காண். திபா 139:4) என்னும் திருப்பாடல் வரிகளை அடிக்கடி செபித்த தோமாவுக்கு, ஒருவரின் எண்ணங்களையும் வார்த்தைகளையும் அறிபவர் கடவுளே என்ற நம்பிக்கை இருந்திருக்க வேண்டும். இல்லையா?

இதுதான் இவருடைய இறையனுபவம் என நினைக்கிறேன்.

ஆக, கடவுளைப் பற்றி நான் நினைக்கின்ற ஒன்று, அப்படியே எனக்கு நடந்தால் அது இறையனுபவாக இருக்கிறது என, இறையனுபவத்தை நாம் வரையறுக்கலாம்.

ஆனால், மோசே, எரேமியா, எசாயா, பவுல் ஆகியோர் பெற்ற இறையனுபவங்கள் எந்தவொரு முன்நினைவும் இல்லாமலேயே நடந்தேறுகின்றன.

ஒன்று மட்டும் உறுதி. தோமா இறையனுபவம் பெற்றார். அதை உடனடியாக நம்பிக்கை அறிக்கையாக வெளிப்படுத்துகின்றார். 'என் ஆண்டவரே! என் கடவுளே!' என்று சரணாகதி அடைகின்றார்.

'ஏற்றுக்கொள்ளப்படாத நற்செய்தி நூல்கள்' என்னும் திரட்டில், 'தோமாவின் நற்செய்தி' என்று ஒன்று உண்டு. அதில், இயேசு தோமாவுக்கு மட்டும் தன்னை ஆண்டவர் என வெளிப்படுத்தும் பகுதி ஒன்று உண்டு. மேலும், அந்த இடத்தில் இயேசு தோமாவிடம், 'நீ வழிப்போக்கன் போல இரு!' என அறிவுறுத்துகின்றார். வழிப்போக்கன் போல இருக்க இரண்டு விடயங்கள் அவசியம்: ஒன்று, அச்சம் அகற்ற வேண்டும். அச்சப்படுகிற எவரும் வீட்டைவிட்டு வெளியே புறப்பட முடியாது. குறிப்பாக, இயேசுவின் சமகாலத்து பாலஸ்தீனத்தில். இரண்டு, நம்பிக்கை கொள்ள வேண்டும். தன்மேல், தனக்கு அடுத்தவர் மேல், தன் உடன் பயணியின்மேல், தன் இறைவன்மேல். நம்பிக்கை இல்லாமல் எந்தப் பயணமும் சாத்தியமில்லை.

அச்சம் களைந்து ஆனந்தம் பெற சீடர்களையும், ஐயம் களைந்து நம்பிக்கை பெற தோமாவையும் அழைக்கிறார் இயேசு.

மேலும், தோமாவின் செயலைக் கடிந்துகொள்ளாத இயேசு, அவரின் ஐயத்தைப் போக்க இறங்கி வருதலே இறை இரக்கம். ஆண்டவரின் இதயத்தையே தொட்டுப் பார்க்கும் அளவிற்குக் கடவுள் மனுக்குலத்திற்கு நெருக்கமாகிறார்.

ஆனால், இது கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. சில நேரங்களில், கடவுள் கண்ணுக்கெட்டாத தூரத்தில் நிற்பது போல, அல்லது அவர் இல்லாததுபோலவே இருக்கிறது.

அப்படிப்பட்ட ஒரு பிரச்சினையில் இருக்கிறது பேதுருவின் திருச்சபை. அந்தத் திருச்சபைக்கு மடல் வரைகின்ற பேதுரு (இரண்டாம் வாசகம், காண். 1 பேது 1:3-9), அவர்கள் அனுபவிக்கும் சோதனைகள், துன்பங்கள், மற்றும் வேதனைகள் அனைத்தும் அவர்களுடைய நம்பிக்கையில் தளர்வை ஏற்படுத்த, அவர், 'குன்றா நோக்கோடு வாழவும்,' 'நீங்கள் அவரைக் கண்டதில்லை எனினும் நம்பிக்கை கொண்டு சொல்லொண்ணா, ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து பேருவகை கொள்கிறீர்கள்' என்றும் அறிவுறுத்துகின்றார்.

ஆக, இறையனுபவத்திலிருந்து நம்பிக்கை பிறக்கிறது.

நம்பிக்கை வேதனைகளில் உறுதி செய்யப்படுகிறது.

உறுதி செய்யப்பட்ட நம்பிக்கை, நம்பிக்கையாளர்களால் வாழ்வாக்கப்படுகிறது இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 2:42-27). 'நம்பிக்கை கொண்டவர்கள் திருத்தூதர் கற்பித்தவற்றிலும், நட்புறவிலும், அப்பம் பிடுவதிலும், இறைவேண்டலிலும்' நிலைத்திருப்பவர்கள், 'கடவுளைப் போற்றியும்' 'மற்ற மக்களுடைய நல்லெண்ணத்தைப் பெற்றும்' வருகிறார்கள்.

இறுதியாக,

இன்றைய சூழலில், சீடர்கள் யூதர்களுக்கு அஞ்சியதுபோல, நாம் கொரோனாவுக்கு அஞ்சி கதவுகளை அடைத்து வைத்துள்ளோம். பூட்டிய அறைக்குள் அன்று வந்த அவர் இன்றும் வருகின்றார். அவர் வருமுன்னே தோமோ போல, என் உள்ளறையில் இறைவனைக் கண்டால் அவரின் அனுபவம் பெறுவேன்.

இன்றைய பதிலுரைப் பாடல் சொல்வது போல, 'ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது. நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று' (காண். திபா 118:23) என்று எல்லாவற்றிலும், அவரின் கரம் காணுதலே இறைஅனுபவம். அதில் புறப்படும் இறைநம்பிக்கை. அந்த நம்பிக்கையில் உதயமாவும் இறைஇரக்கம்.

'நம்பிக்கை கொள்!' 'ஏனெனில், ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது!'

ser

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com