மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

ஆண்டின் இரண்டாம் ஞாயிறு
முதலாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 49:3,5-6 | 1கொரிந்தியர் 1:1-3 | யோவான் 1:29-34

ser

புனித வாழ்வு வாழ அழைப்பு

இந்த உலகில் மனிதர்கள், தங்கள் படிப்பால், பதவிகளால் தீர்மானிக்கப்படுகிறார்கள். இவர் எழுத்தாளர், இவர் மருத்துவர், இவர் விஞ்ஞானி, இவர் பேராசிரியர், இவர் அதிகாரி, இவர் தலைவர் என்றெல்லாம் மனிதர்கள் பிரிக்கப்படுகிறார்கள். ஆனால் இயேசுவோ இறைவனின் ஆட்டுக்குட்டி, உலகின் பாவங்களைப் போக்க வந்தவர் (யோவா. 1:29) என்று வருணிக்கப்படுகிறார். இயேசு தன்னையே பலியாக்க தலைநிமிர்ந்து சென்றார். தனது பெருமைக்காக அல்லாமல், தன்னால் மனித குலம் வாழ்வு பெறவே இதைச் செய்யத் துணிகிறார். இவரைத்தான் உயிர் கொடுக்கும் ஆட்டுக் குட்டியாக உலகிற்கு காட்டுகிறார் திருமுழுக்கு யோவான். ஆம்! திசை மாறிய ஆடுகளை நேரிய பாதையில், சரியான பாதையில் அழைத்துச் செல்லவே, பாவங்களைப் போக்கும் செம்மறியாகவும், சுமைகளை சுமக்கும் மனிதராகவும் தன்னையே உட்படுத்திக் கொண்டார் இயேசு. இதனால் சாதாரண விபச்சார பெண் அசாதாரண சூழ்நிலையில் புனிதையாகின்றாள். மனித குலம் பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்தது (உரோ. 3:23). இப்படிப்பட்ட சூழ்நிலையில் இயேசு செம்மறியாக, நமக்காகத் தம்மையே கையளித்தார். பாவத்தைச் சுமந்தவர் மட்டுமல்ல. பாவத்திலிருந்து புனித வாழ்வு வாழ அழைப்பு விடுக்கிறார் (எசாயா 53:5-6).

இந்தியாவை சிபி சக்கரவர்த்தி என்ற அரசன் ஆண்டு வந்தான். ஒரு பருந்து ஒரு புறாவை துரத்தி வந்தது. ஆனால் அந்த புறாவானது அடைக்கலம் தேடி சிபி சக்கரவர்த்தியின் மடியில் தஞ்சம் புகுந்தது. எனவே புறாவுக்கு முழு பாதுகாப்பு கொடுக்க விரும்பினார் அரசன். ஆனால் துரத்தி வந்த பருந்தோ , அந்தப் புறா எனது உணவு. அதை நீண்ட நேரமாகத் துரத்தி வந்திருக்கிறேன். நீங்கள் எப்படி அடைக்கலம் கொடுக்கலாம் என்று தர்க்கம் செய்தது. அதற்கு அரசன், புறாவுக்கு நான் அடைக்கலம் கொடுத்து விட்டேன். அது எவ்வளவு எடையோ அந்த அளவுக்கு என் உடலில் உள்ள தசையை வெட்டி உனக்குத் தருகிறேன் என்று சொல்லி புறாவை தராசின் ஒரு தட்டிலும், அடுத்த தட்டில் தன் தொடையில் இருந்து சதையை வெட்டி வைத்தார். ஆனால் புறாவின் எடைக்கு சதை ஒத்து வரவில்லை . கடைசியாக சிபி சக்கரவர்த்தி தராசில் ஏறி அமர்ந்தார். அப்போது தராசு சமநிலைக்கு வந்தது. புறாவுக்கு அடைக்கலம் கொடுக்கத் தன்னையே கொடுத்தார் அரசன். ஓர் உயிரைக் காப்பாற்ற தன்னையே கையளித்தார் சிபி சக்கரவர்த்தி.

ஆனால் உலகத்தின் பாவம் போக்கி, நமக்கு நிலைவாழ்வு கொடுக்க இயேசு பாவம் போக்கும் செம்மறியானார். நமது பாவங்களைப் போக்கி நமக்கு அடைக்கலம் கொடுக்கத் தனது காயங்களாலும், கல்வாரி இரத்தத்தாலும் தன்னையே செம்மறி யாக்கினார் இயேசு. நாம் அவருக்காக நம்மையே கொடுக்கத் தயாராக இருக்கிறோமா?

ser ser

உலகின் பாவங்களைப் போக்கும் செம்மறி இயேசு.

இன்றைய நற்செய்தியில் இயேசுவை உலகின் பாவங்களைப் போக்குகின்றவராக திருமுழுக்கு யோவான் அறிமுகப்படுத்துகின்றார்.

பாவம் என்றால் என்ன? இதோ கவிஞர் கண்ணதாசனின் கதையொன்று. ஒரு குளத்துக்குள்ளே பல மீன்கள். ஒரு நாள் அந்தக் குளத்திலே வாழ்ந்த பெரிய மீன் ஒன்று அதிலே வாழ்ந்த சின்ன மீன்களைப் பார்த்து: எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்றது. அதற்குச் சின்ன மீன்கள்: மிகப்பெரிய மீனாகிய உனக்கு எங்களால் எப்படி உதவி செய்ய முடியும்? நாங்களெல்லாம் மிக மிகச் சிறியவர்கள் என்றன. அதற்குப் பெரிய மீன்: உங்களால் எனக்கு உதவி செய்ய முடியவில்லையென்றால் நான் உங்களுக்கு உதவி செய்கின்றேன் என்று சொல்லி ஒவ்வொரு சிறிய மீனாகப் பிடித்து விழுங்கியது. விழுங்கியபோது, இனி உங்களுக்கு எந்தத் துன்பமும் இருக்காது; இனி என்றென்றும் உங்களுக்கு நிலையான ஓய்வே என்றது.

கதையிலே வந்த பெரிய மீன் புரிந்த செயலுக்குப் பெயர்தான் பாவம். பாவத்திற்கு மறுபெயர் சுயநலம்! பாவம், சுயநலம் எங்கெல்லாம் இருக்கின்றனவோ அங்கெல்லாம் நமக்கும் கடவுளுக்குமிடையே உள்ள உறவு முறியும்; கடவுளை நேருக்கு நேர் சந்திக்கப் பயந்து நாம் அவரைவிட்டு விலகிச் செல்வோம். சூரியனை விட்டு அகன்று செல்லச் செல்ல நம் நிழல் நீளமாவது போல, கடவுளை விட்டு நமது பாவத்தால், நாம் விலகிச் செல்லச் செல்ல நமது பாவ நிழல், பாவ இருள் அதிகமாகும்.

ஒரு காலத்தில் கடவுளின் நண்பர்களாக விளங்கிய ஆதாமும், ஏவாளும், பாவம் செய்த பிறகு ஆண்டவரின் திருச்சந்நிதியை விட்டு விலகி மரங்களுக்கிடையே ஒளிந்து கொண்டதை நாம் தொடக்க நூலிலே படிக்கின்றோம் (தொநூ 3:8). புதிய ஏற்பாட்டில் எரிகோ நகரிலே வாழ்ந்த சக்கேயு என்னும் செல்வர் தூயவராக விளங்கிய இயேசுவைச் சந்திக்க ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறி அமர்ந்திருந்தார் என்று லூக்கா நற்செய்தியில் படிக்கின்றோம் (லூக் 19:1-10). பாவம் எங்கு இருக்கின்றதோ அங்கே பயம் இருக்கும். பயமிருக்குமிடத்திலே பாசமிருக்காது ; பாசமிருக்குமிடத்திலே பயமிருக்காது! பாசம் எங்கு இல்லையோ அங்கே உறவு இருக்காது!

நாமெல்லாம் இறைவனோடும், நம் அயலாரோடும், நம்மோடும், இயற்கையோடும் நல்லுறவோடு வாழ ஆசைப்படுகின்றவர்கள். நமது ஆசை நிறைவேற வேண்டுமென்றால் நமது வாழ்வின் ஒளியாக (முதல் வாசகம்) விளங்குகின்ற ஆண்டவராம் இயேசுவின் பக்கம் நம் கண்களைத் திருப்ப வேண்டும்; அருளுக்கும், அமைதிக்கும் ஊற்றாக விளங்குகின்ற (இரண்டாம் வாசகம்) இயேசு கிறிஸ்துவின் பாதத்தில் நாம் சரணடைய வேண்டும்.

இயேசு என்னும் கலங்கரைத் தீபத்தை நோக்கி நமது வாழ்க்கைப் படகைச் செலுத்தினால், நாம் கரை சேர்வோம் - புதுவாழ்வு என்னும் கரையைச் சேர்வோம். அந்தக் கரையினிலே, என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன் என நாம் ஒவ்வொருவரும் பாடி மகிழ்வோம்; ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம் என ஆடி மகிழ்வோம்.

பாவ இருள் நம்மைவிட்டு அகன்ற நிலையிலே, நாம் ஒவ்வொருவரும் மனிதமும், புனிதமும் கமழ பூத்தப் புது மலராய், புண்ணியத் திருமலராய், புவியினுக்கு ஒரு மலராய் வாழ்ந்து மகிழ்ந்திருப்போம்.


மேலும் அறிவோம் :-

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்  (குறள் : 948).

பொருள் : வந்தநோய் எதுவென்று தெளிவாகத் தெரிந்துகொண்டு அது வந்த காரணத்தையும் அதைப்போக்கும் வழிமுறையினையும் ஆராய்ந்து, அதற்கு ஏற்றவாறு முறையான மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும்!

ser ser

இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி.

ஓர் இளம் பெண் மாலைக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். ஒருநாள் கல்லூரிக்குப் போன அவர் இரவு 11 மணிக்கு வீடு திரும்பினார். "ஏண்டி ரொம்ப லேட்டாக வந்தே?" என்று அவரை அவருடைய அம்மா கேட்டார். அதே கேள்வியை அவருடைய அப்பா ஆங்கிலத்திலும், அண்ணன் மலையாளத்திலும், தம்பி தெலுங்கிலும் கேட்டனர். ஏன்? ஏனென்றால் ஒரு வயசுப் பெண் லேட்டாக வந்தால் நாலுபேர் நாலுவிதமாகப் பேசுவார்களாம்!

கிறிஸ்துவைப் பற்றியும் நாலுபேர் நாலுவிதமாகத்தான் பேசினர். சிலர் அவரைப் பேய்பிடித்தவள், சமாரியன், குடிகாரன் என்றும் வரி தண்டுவோரின் நண்பர் என்றும் கூறினர். வேறுசிலர் அவர் தச்சரான யோசேப்பின் மகன் என்றனர்; மற்றும் சிலர் அவர் ஓர் இறைவாக்கினர் என்றனர். ஆனால் கிறிஸ்து யார்? அவரின் உண்மையான இயல்பு என்ன ?

கிறிஸ்துவின் முன்னோடியும். ஒளியைக் குறித்துச் சாட்சி சொல்ல வந்தவருமான திருமுழுக்கு யோவான் இன்றைய நற்செய்தியிலே கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டி, "இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி. (செம்மறி). ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்" (யோவா 1:29) என்று சிம்மக் குரலில் சான்று பகர்கின்றார். இன்றைய முதல் வாசகம் மெசியாவை (கடந்த ஞாயிறு போலவே) 'இறை ஊழியனாக'ச் சித்தரிக்கின்றது. “கருப்பையிலிருந்து ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார்" (எசா 49:5). இறை மாழியனின் சிறப்புப் பண்புகள்: "அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்படும் ஆட்டுக்குட்டி ... கத்தாத செம்மறி" (எசா 53:7). "அவர் தம் உயிரை குற்ற நீக்கப் பலியாகத் தந்தார்" (எசா 53:10).

இயேசு கிறிஸ்து பாஸ்கா செம்மறி. யூதர்கள் ஆண்டுதோறும் நீசான் மாதம் 14-ஆம் தேதி ஆலயத்தில் பாஸ்கா செம்மறியைப் பலி செலுத்தினர். நிசான் மாதம் 14-ஆம் தேதி யூத குருக்கள் ஆலயத்தில் பாஸ்கா செம்மறியைப் பலி செலுத்திய அதே நேரத்தில் கிறிஸ்து கல்வாரியில் சிலுவை மரத்தில் தமது இன்னுயிரைப் பலியாக ஒப்புக்கொடுக்கின்றார். பாஸ்கா செம்மறியின் எலும்பை முறிக்கக் கூடாது (விப 12:4-6), அவ்வாறே கிறிஸ்துவின் கால்களை முறிக்கவில்லை (யோவா 19:33). எனவே கிறிஸ்துவே உண்மையான பாஸ்கா செம்மறி; உலகின் பாவங்களைப் போக்கியவர். "நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்" (1 கொரி 5:7) என்கிறார் திருத்தூதர் பவுல்.

கிறிஸ்து தமது ஒரே பலியினால் முற்காலப் பலிகளை நிறைவு செய்தார். அவரே குருவும் செம்மறியாகவும் திகழ்ந்தார். நாம் திருப்பலியில் பங்கு பெறுவதால் நாமும் கிறிஸ்துவின் பலித் தன்மையில் பங்கு பெற வேண்டும். நம்மையே பிறர்க்குப் பிட்டுக் கொடுக்க வேண்டும்; பிறர்க்காக நமது இரத்தத்தைப் பிழிந்து கொடுக்க வேண்டும். அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமையாக்கிக் கொள்வர். ஆனால் அன்பு உடையவர்களோ தம் உடலையும் பிறர்க்குக் கையளிப்பர்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு (குறள் 72).

ஒரு காதலன் தன் காதலியிடம், 'அன்பே! உனக்காக நான் தாஜ்மஹாலையும் கட்டத் தயார்" என்றான். அதற்கு அவள், 'அறிவு கெட்ட முண்டம்! நான் மூணுமாசமாய் இருக்கிறேன். முதலில் என் கழுத்தில் தாலியைக் கட்டித் தொலை" என்றாள். காதலியின் கழுத்தில் தாலிகட்டத் துணியாதவன் தாஜ்மஹாலை எப்படிக் கட்டுவான்? சிறிய காரியங்களில் தியாக உணர்வு இல்லாதவர்கள் பெரிய காரியங்களில் எப்படித் தியாக உணர்வைக் காட்டுவார்கள்? "நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்" (1 யோவா 3:18).

திருமுழுக்கு யோவான் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்ந்தது போல நாமும் கிறிஸ்துவுக்குச் சான்று பகர வேண்டும், திருமுழுக்கு யோவான் யூதர்களிடம், "நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்" (யோவா 1:26) என்று கூறினார். மெசியா அவர்களிடையே நடமாடியும் யூதர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. கடவுள் பலவகையில் நம்மைச் சந்திக்கிறார். ஆனால் நாம் அவரைக் காணத் தவறிவிடுகிறோம். அன்றாட வாழ்வு ஓர் அடையாளம். கடவுளை நமது சாதாரன வாழ்வில், சாதாரண நிகழ்வுகளில் காணப் பழகிக் கொள்வதுதான் ஆழ்ந்த ஆன்மிகமாகும்.

நமது கடவுள் உண்மையிலேயே மறைவான கடவுள் (எசா 45:15). அவர் அனைத்திலும் இருக்கிறார்; அனைத்துமாய் இருக்கிறார் (கொலோ 3:1). அவரைக் காணாதபடி நமது பார்வை தடைபட்டுள்ளது (லூக் 24:16), நமது சுயநலம், ஆணவம், பொருளாசை, காம இச்சைகள் கடவுளைக் காணாதபடி நம் கண்களைக் குருடாக்கி விடுகின்றன. முகக் கண்களால் அல்ல, அகக் கண்கொண்டு கடவுளைக் காண வேண்டும். நம்பிக்கை கொண்டோர்க்கு ஒவ்வொரு முட்செடியும் மோசே கண்ட முட் செடி; கடவுளின் உடனிருப்பு: இறைவனின் திருக்காட்சி; புனித மான இடம்; காலனியைக் கழற்ற வேண்டிய இடம் (விப 3:2-5).

நமது வாழ்வில் நிகழும் சில கசப்பான நிகழ்வுகளால் நாம் இறைவனைக் காணத் தவறிவிடுகிறோம். கடவுள் மேல் தமக்கு வெறுப்பு ஏற்படுகிறது. ஒருவர் ஆலயம் செல்வதில்லை . ஏன்? அவர் தனது மனைவியை ஆலயத்தில் தான் முதல் முதலாகப் பார்த்தாராம். அவ்வளவு மோசமான பெண்ணை ஆலயத்தில் காட்டிய அந்த ஆண்டவர் முகத்தில்  ஆயுள் முழுவதும் முழிக்கமாட்டாராம்! பாவம்!! ஒரு சிலர் ஆலயத்தில் ஆம்பாளைத் தரிசிக்கச் செல்கின்றனா். வேறு சிலரே நமபாளைத் தரிசிக்கச் செல்கின்றனா். அவ்வாறு செல்வது அவர்கள் குற்றமே, ஆண்டவரின் குற்றமல்ல!

கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்பதை அறியாதவர்கள், கங்கையிலும், காவேரியிலும், கன்னியாகுமரியிலும் இந்துமகாகடலிலும் நீராடி என்ன பயன்? என்று கேட்கிறாா அப்பர் அடியளார்.

கங்கையாடிலென் காவிரியாடிலென்?
கொங்கு தென்குமரித் துறையாடிலென்?
ஒங்குமாகடல் ஒத நீராடிலென்?
எங்கும் ஈநன் எனாதவர்க்கு இல்லையே!

ஆலயத்தில் அருள்வாக்கிலும் அருள் அடையாளங்களிலும் ஆண்டவரைச் சந்திக்கத் தெரியாதது ஏன்?

ser ser

இயேசு என்னும் கடவுளின் ஆட்டுக்குட்டி

நிகழ்வு

ஒரு சமயம் மிகச்சிறந்த பிரசங்கியாரான - மறையுரையாளரான சார்லஸ் ஸ்பெர்ஜன் (C.H.Spurgeon), இலண்டனில் உள்ள கிறிஸ்டல் அரண்மனையில் மறையுரை ஆற்றுவதற்கு சிறப்பு அழைப்புப் பெற்றிருந்தார். மறையுரை ஆற்றுவதற்கு முந்தைய நாள் இவர் தன்னுடைய நெருங்கிய நண்பரைக் கூட்டிக்கொண்டு, மறையுரையாற்றும் அரங்கத்திற்குச் சென்றார். அரங்கத்தில் இவர் மறையுரை ஆற்றும் இடத்தில் நின்றுகொண்டு, தான் பேசுவது அரங்கத்தில் எங்கிருந்து கேட்டாலும் கேட்கிறதா என்று சோதித்துப் பார்ப்பதற்காகத் தன்னுடைய நண்பரை அரங்கத்தில் ஆங்காங்கே நிற்கச் சொல்லி, “இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகத்தின் பாவத்தைப் போக்குபவர்” என்ற வார்த்தைகளை மீண்டும் மீண்டுமாக உரக்கச் சொன்னார். சார்லஸ் ஸ்பெர்ஜனின் நண்பரும், “நீர் பேசுவது அரங்கத்தின் எந்தப் பகுதியிலிருந்து கேட்டாலும் நன்றாகக் கேட்கின்றது” என்று அவரிடம் சொன்னார்.

(இன்றைக்கு இருப்பதுபோன்று தெளிவான ஒலி அமைப்பு (Sound System) அன்றைக்குக் கிடையாது. இதனாலேயே சார்லஸ் ஸ்பெர்ஜன் தன்னுடைய நண்பரின் உதவியுடன் கிறிஸ்டல் அரண்மனையில் இருந்த அரங்கில், தான் பேசுவது எல்லா இடத்திலும் கேட்கின்றதா என்று சோதித்துப் பார்த்தார்.

சார்லஸ் ஸ்பெர்ஜனும் அவருடைய நண்பரும் அரங்கில் ஒலியமைப்பைக் குறித்துச் சோதித்துப் பார்த்த பின்னர், அங்கிருந்து நகர்ந்து சென்றனர். இதற்கிடையில், அந்த அரங்கின் கூரையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பணியாளர் ஒருவர் சார்லஸ் ஸ்பெர்ஜன் மீண்டுமாக மீண்டுமாகச் சொன்ன வார்த்தைகளால் தொடப்பட்டார். ‘இயேசு உலகின் பாவத்தைப் போக்குகின்றார் என்றால், அவர் என்னுடைய பாவத்தையும் போக்குவார்தானே! அப்படியானால், நான் என்னுடைய பாவ வாழ்க்கையிலிருந்து விலகி, இயேசுவிடம் சரணடைந்து, புதியதொரு வாழ்க்கை வாழவேண்டும்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டு, புதிய மனிதனாக வாழத் தொடங்கினார்.

இயேசு நம்முடைய பாவங்களை மன்னித்து நமக்குப் புதுவாழ்வு தருகின்றார். அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய இறைவார்த்தையும் குறிப்பாக நற்செய்தி வாசகமும் நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துக்கூறுகின்றது. ஆதலால் நாம், இயேசு எப்படி நம்முடைய பாவங்களைப் போக்கி, நமக்குப் புதுவாழ்வு தருகின்றார் என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

உலகின் பாவங்களைப் போக்கும் இயேசு

நற்செய்தியில், இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட திருமுழுக்கு யோவான், “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்” என்கின்றார். திருமுழுக்கு யோவான் இயேசுவைக் குறித்துத் தன் சீடர்களிடம் இவ்வாறு சொன்னது, அவர்களுக்குப் பாஸ்கா ஆட்டினையும் (விப 12) குற்றம்நீக்கப் பலிக்காக ஒப்புக்கொடுக்கப்படும் ஆட்டினையும் (லேவி 14: 12, 21,24; எண் 6:12) நினைவுபடுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

எருசலேம் திருக்கோயிலில் காலை, மாலை என இரண்டு வேளையிலும் குற்றம்நீக்கப் பலியாக ஆடுகள் பலிகொடுக்கப்பட்டன (விப 29: 38-42). திருமுழுக்கு யோவான் இயேசு கிறிஸ்துவைப் பற்றி மேலே சொன்ன வார்த்தைகள், இயேசுவை உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற ஆட்டுக்குட்டியாக நமக்கு எடுத்துக்கூறுகின்றன. இறைவாக்கினர் எசாயா நூலில் இடம்பெறுகின்ற “(அவர்) அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டி போலும்...” (எசா 53:7) என்ற வார்த்தைகள் இந்த உண்மையை இன்னும் தெளிவாக்குகின்றன.

இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய இன்னொரு முக்கியமான செய்தி, திருமுழுக்கு யோவான் இயேசு கிறிஸ்துவை, “கடவுளின் ஆட்டுக்குட்டி” என்று சொல்லிவிட்டு, “இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்” என்று சொல்கிறார் அல்லவா. இதில் “பாவத்தைப் போக்குபவர்” என்று என்பதை இரண்டு விதங்களில் புரிந்துகொள்ளலாம் என்பதுதான். ஒன்று, இயேசு உலகிலிருந்து பாவத்தை எடுத்துவிட்டதாகவும் (Take away) இரண்டு, இயேசு உலகின் பாவத்தை, துன்பத்தை எப்படிச் தன்மேல் சுமந்துகொண்டாரோ (எசா 53:4) அதுபோன்று சுமந்துகொண்டார் (Take Up) என்றும் புரிந்துகொள்ளலாம்.
ஆம், இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவருடைய பாவத்தை பாவத்தையும் தன்மேல் சுமந்துகொண்டு, நமக்கு மீட்பளித்தார்.

உலகிற்கு வாழ்வுதரும் இயேசு

இன்றைய நற்செய்தி வாசகம், இயேசுவை உலகின் பாவங்களைப் போக்குபவர் என்று சுட்டிக்காட்டுகின்ற அதே வேளையில், அவரை உலகிற்கு வாழ்வுதருபவராகச் சுட்டிக்காட்டுகின்றது. அது எப்படி என்று சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சான்று பகரும்பொழுது, நானோ தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கின்றேன்... இயேசுவோ தூய ஆவியாரால் திருமுழுக்குக் கொடுப்பார் என்று கூறுகின்றார். தூய ஆவியால் திருமுழுக்கு என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். இயேசு விண்ணேற்றம் அடைவதற்கு முன்பாகத் தன் சீடர்களிடம், “இன்னும் சில நாள்களில் நீங்கள் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள்” (திப 1:5) என்பார். இயேசு சொன்னது போன்றே அவர்கள் பெந்தக்கோஸ்து நாளில் தூய ஆவியால் திருமுழுக்குப் பெற்றார்கள். இங்கு தூய ஆவியால் திருமுழுக்கு என்பதை பழைய பாவவாழ்விற்கு இறந்து, கிறிஸ்துவின் உடலில் ஓர் உறுப்பாக மாறுவது என்று அர்த்தப்படுத்திக்கொள்ளலாம் (1கொரி 12:13). கிறிஸ்துவின் உடலில் ஒரு உறுப்பாக மாறிவிட்டோம் என்றால், நாம் புதுவாழ்வு அடைந்துவிட்டோம் என்பதுதான் உண்மையான அர்த்தமாக இருக்கின்றது.

ஆகையால், இயேசு தரும் தூய ஆவியினால் திருமுழுக்கின் மூலம் நாம் அனைவரும், அதிலும் குறிப்பாக அவர்மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் புதுவாழ்வினைப் பெறுவார்கள் என்பது உறுதி.

திருமுழுக்கு யோவானைப் போன்று இயேசுவைச் சுட்டிக்காட்ட அழைப்பு

இயேசுவை உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டியாக, தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுத்து நமக்கு வாழ்வளிப்பவராகச் சுட்டிக்காட்டும் இன்றைய நற்செய்தி வாசகம், நமக்கோர் அழைப்பினை விடுக்கின்றது. அது என்ன அழைப்பெனில் எனில், இயேசு கிறிஸ்துவை இவ்வுலகிற்குச் சுட்டிக்காட்டுவதாகும்.

திருமுழுக்கு யோவான் இயேசு கிறிஸ்துவை, “இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி” என்று தன்னுடைய சீடர்களுக்குச் சுட்டிக்காட்டினார். மட்டுமல்லாமல், இப்படிப்பட்ட பணியினை அவர் மிகுந்த தாழ்த்தியோடு செய்தார். அவர் நினைத்திருந்தால், “நான்தான் மெசியா” என்று சொல்லியிருக்கலாம். மக்களும் அதனை ஏற்றுகொள்ளத் தயாராக இருந்தார்கள் (யோவா 1:19); ஆனால், அவர் அப்படிச் செய்யாமல், மெசியாவைச் சுட்டிக்காட்டுபவராக செயல்படுகின்றார். அதுவும் தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு செயல்படுகின்றார்.

திருமுழுக்கு யோவானைப் போன்று ஆண்டவர் இயேசுவை இவ்வுலகிற்குச் சுட்டிக்காட்டுகின்றோமோ? அதுவும் தாழ்ச்சியான உள்ளத்தோடு சுட்டிக்காட்டுகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் இயேசுவை இவ்வுலகிற்குச் சுட்டிக்காட்ட மறந்து, நம்மைச் சுட்டிக்காட்டிக்கொண்டிருக்கின்றோம் அல்லது நம்மை முன்னிலைப்படுத்திக் கொண்டிருகின்றோம். இத்தகைய ஒரு தவறான போக்கினை நம்மிடமிருந்து அப்புறப்படுத்திவிட்டு, திருமுழுக்கு யோவானைப் போன்று இயேசுவைச் சுட்டிக்காட்டும் சுட்டுவிரல்களாக இருந்து செயல்படவேண்டும். அதுவே காலத்தின் கட்டாயம்.

சிந்தனை

‘சிலுவையின்மீது தம் உடலில் நம் பாங்களை அவரே சுமந்தார்’ (1 பேது 2: 24) என்பார் புனித பேதுரு. ஆகவே, நம்முடைய பாவங்களைத் தன்னுடைய உடலில் சுமந்த இயேசுவை, திருமுழுக்கு யோவானைப் போன்று இவ்வுலகிற்குச் சுட்டிக்காட்டி, அவர்களை இயேசுவிடம் அழைத்து வருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser ser

இரு கேள்விகள்

பாரக் ஒபாமா அவர்களின் துணைவியார் திருமதி. மிஷல் ஒபாமா அவர்கள் எழுதி புகழ்பெற்ற நூல், 'பிகமிங்' என்பது. குழந்தைகளிடம் நாம், 'நீ வயது வந்தபின் என்னவாகப் போகிறாய்?' எனக் கேட்கிறோம். ஆனால், வயது வந்தவர்களிடம், 'நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்?' என்று மட்டுமே கேட்கிறோம். குழந்தைப் பருவம் மட்டும்தான் மாற்றத்தின் பருவம் என்றும், வயது வந்த பருவம் இருத்தலின் பருவம் எனவும் நினைக்கிறோம். இது தவறு! நாம் ஒவ்வொரு பொழுதும் மாறிக்கொண்டே இருக்கிறோம் - 'வி ஆர் பிகமிங் எவ்ரி மொமண்ட்' - இப்படியாக எழுதுகிறார் மிஷல்.

நாம் எப்படி மாறுகிறோமோ அதுவேதான் நம்முடைய இருத்தலாக இருக்கின்றது என்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

வரலாற்றில் பெரிய முத்திரை பதித்த யாரை எடுத்தாலும் - மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர், ஆபிரகாம் லிங்கன், பெருந்தலைவர் காமராஜர் போன்றோர் - இவர்கள் தங்களுடைய வாழ்வில் இரண்டு கேள்விகளுக்கு விடை தெரிந்தவர்களாக இருந்தனர்:

ஒன்று, 'நான் யார்?'

இரண்டு, 'நான் யாருக்காக?'

இக்கேள்விகளில், 'நான் யார்?' என்பது ஒருவருடைய வேர் என்றால், 'நான் யாருக்காக?' என்பது அவருடைய கிளை என்று சொல்லலாம். இந்த இரண்டு கேள்விகள் கேட்பதும் ஒருவர் வளர்ந்துகொண்டே இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

உளவியல் மற்றும் மெய்யியலில் அதிகமாக வலியுறத்தப்படும் கேள்வி, 'நான் யார்?' என்பதுதான். இதற்கு விடையாக நாம் நம்முடைய பெயர், ஊர், பெற்றோர், குடும்ப பின்புலம், படிப்பு, வேலை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறோம். மெய்யிலாளர் சாக்ரடிசு, 'உன்னையே நீ அறிந்துகொள்!' என்றார். ஆனால், இதிலிருந்து புறப்பட்டு, 'நீ யாருக்காக என்பதை அறிந்துகொள்!' என்பதில்தான் மெய்ஞ்ஞானம் இருக்கிறது. இந்த மெய்ஞ்ஞானத்தை நோக்கியே கீழைத்தேய ஞானம் இருந்தது.

2020ஆம் ஆண்டை நம் தமிழகத் திருஅவை இளைஞர் ஆண்டாகக் கொண்டாடி மகிழ்கிறது. இந்த ஆண்டில் மையமாக வைத்துச் சிந்திக்கப்படும், நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், 'கிறிஸ்து வாழ்கிறார்' என்ற ஊக்கவுரையில், இளைஞர்களின் பாதைகளைப் பற்றிப் பேசுகின்ற இடத்தில், 'இளைஞர்கள் தங்களுடைய வாழ்வைச் சீராக அமைத்துக்கொள்ள இவ்விரு கேள்விகள் கேட்பது அவசியம்: 'நான் யார்?' அதைவிட, 'நான் யாருக்காக?'' என்கிறார். இக்கேள்விகளுக்கு விடைகள் காணும் இளைஞர்களே வெற்றியாளர்கள்.

இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் நாம் சந்திக்கும் மூன்று நபர்கள் - எசாயா, பவுல், இயேசு - இக்கேள்விகளுக்கு விடை தெரிந்தவர்களாக இருக்கின்றனர்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 49:3,5-6), முதல் பகுதி இஸ்ரயேல் மக்களைப் பார்த்துக் கடவுள் பேசுவதாகவும், இரண்டாம் பகுதி இறைவாக்கினர் அல்லது இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய அழைப்பு பற்றி தாங்களே பேசுவதாகவும் அமைந்துள்ளது. இஸ்ரயேல் அல்லது இறைவாக்கினர் யார்? 'அவர் ஊழியன். கருப்பையிலிருந்து ஊழியனாக உருவாக்கம் பெற்றவர். ஆண்டவர் பார்வையில் மதிப்பு பெற்றவர். ஆண்டவரைத் தன் ஆற்றலாக் கொண்டவர். இவர் யாருக்காக? யாக்கோபின் குலங்களுக்காக, இஸ்ரயேலில் சிதறடிக்கப்பட்டவர்களுக்காக. இறைவாக்கினர் தன்னுடைய முதல் கேள்விக்கு விடை கண்டதால், இரண்டாம் கேள்விக்கும் எளிதாக விடை காண்கின்றார். 'நான் யார்?' என்று அறிந்துகொண்ட அடுத்த நொடி, 'நான் யாருக்காக?' என்பதை அறிந்து தொடர்ந்து தன் பணியைச் செய்கின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 கொரி 1:1-3) புனித பவுல் கொரிந்து நகரத் திருஅவைக்கு எழுதும் முதல் திருமடலின் தொடக்கமாக இருக்கிறது. வருகின்ற ஏழு வாரங்கள் தொடந்து நாம் இத்திருமுகத்திலிருந்தே வாசிப்போம். பவுலைப் பொறுத்தவரையில் கொரிந்து நகரத் திருச்சபை அவருக்கு 'அடங்காத குழந்தை.' கொரிந்து நகரத் திருச்சபையில் விளங்கிய பிளவுகள், பரத்தைமை, சிலை வழிபாடு, வழிபாட்டுப் பிறழ்வுகள் ஆகியவற்றைப் பற்றிக் கேள்விப்படுகின்ற பவுல் அவர்களைக் கடிந்தும், அறிவுறுத்தியும் இம்மடலை எழுதுகின்றார். கடிந்துரைக்கும், அறிவுறுத்தும் இம்மடலை மிகவும் இனிமையான வார்த்தைகளால் தொடங்குகிறார்: 'கொரிந்து நகரிலுள்ள கடவுளின் திருச்சபைக்கு ... திருத்தூதனாக அழைக்கப்பட்ட ... இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்று, தூயோராக்கப்பட்டு, இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள உங்களுக்கு ...' பவுலின் வார்த்தைகளில் கோபமோ, மனவருத்தமோ, உளக்கசப்போ இல்லை. இத்தொடக்க வார்த்தைகளில் தான் யார் என்பதையும் தன்னுடைய பணி யாருக்கு என்பதையும் தெளிவாக உரைப்பதோடு, கொரிந்து நகர மக்கள் யார் என்பதையும் அவர்களுடைய பணி யாருக்கு என்பதையும் எடுத்துரைக்கின்றார். பவுல் யார்? திருத்தூதர். பவுல் யாருக்காக? கடவுளின் திருச்சபைக்காக, கடவுளுக்காக. கொரிந்து மக்கள் யார்? இறைமக்கள், தூயவர்கள். இவர்கள் யாருக்காக? கிறிஸ்துவுக்காக.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 1:29-34), இயேசு தன்னிடம் வருவதைக் கண்ட திருமுழுக்கு யோவான், 'அவர் யார்?' என்பதையும் - 'கடவுளின் செம்மறி', 'அவர் யாருக்காக?' - 'உலகின் பாவத்தைப் போக்க' என்பதையும் மிக அழகாகச் சுட்டிக்காட்டுகின்றார். இங்கே 'செம்மறி' என்ற உருவகம், பாவக்கழுவாய்க்குப் பயன்படுத்தப்படும் பலி ஆட்டையோ, அல்லது போக்கு ஆட்டையோ, அல்லது பாஸ்கா திருநாளன்று கொல்லப்படும் ஆட்டுக்குட்டியையோ குறிக்கும். மேலும், இப்பகுதியில் தான் யார் என்பதையும், தான் யாருக்கு என்பதையும் திருமுழுக்கு யோவானும் தெளிவாக உணர்ந்திருப்பதை நாம் காண்கின்றோம்.

இந்தக் கேள்விகளை நம் வாழ்வோடு எப்படி பொருத்திப் பார்ப்பது?

நம் வாழ்வில் பல நேரங்களில், 'நான் யார்?' என்ற கேள்வியைக் கேட்டிருப்போம். ஆனால், 'நான் யாருக்காக?' என்று நான் என்னையே கேட்கும் அத்தருணத்தில்தான் என்னுடைய வாழ்வு மாற்றம் பெறுகிறது.

இக்கேள்விகளுக்கான விடை மூன்று நிலைகளில் வரலாம்:

1. இறைவனிடமிருந்து

முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் அல்லது இறைவாக்கினர் எசாயாவுக்கு இக்கேள்விகளின் விடைகள் இறைவனின் வெளிப்பாட்டிலிருந்து வருகின்றன. ஆண்டவராகிய கடவுள்தாமே அவருக்கு இவற்றை வெளிப்படுத்துகின்றார். மேலும், ஆண்டவரின் வாக்குறுதிகள் எதிர்கால வாக்குறுதிபற்றியதாகவும் இருக்கின்றன.

2. தன் குழுமத்திலிருந்து

இரண்டாம் வாசகத்தில் பவுல் இக்கேள்விகளுக்கான விடைகளைதத் தன்னுடைய இலக்கு மக்களாகிய கொரிந்து நகரத் திருச்சபையிடமிருந்து பெற்றுக்கொள்கின்றார். தன்னுடைய குழுமத்தின்மேல் கோபமோ அல்லது மனத்ததாங்கலோ கொள்ளாமல் மிகவும் மனமுதிர்ச்சியோடு தேடுகின்றார் பவுல்.

3. தன் சகோதரர் அல்லது நண்பர்களிடமிருந்து

நற்செய்தி வாசகத்தில் இயேசு யார் என்ற அடையாளமும், அவர் யாருக்காக என்பதற்கான விடைகளும் திருமுழுக்கு யோவனிடமிருந்து வருகின்றன.

இன்றைய நாளில், நாம் இவ்விரண்டு கேள்விகளுக்கு விடை காண முயல்வோம்: 'நான் யார்?' 'நான் யாருக்காக?'

இக்கேள்விகளுக்கான விடைகள் தெரிந்தால், 'உமது திருவுளம் நிறைவேற்ற நானும் வருகிறேன் ஆண்டவரே' (காண். திபா 40) என்று திருப்பாடல் ஆசிரியர் போல (இன்றைய பதிலுரைப்பாடல்) நாமும் அவரிடம் சரணாகதி அடைய முடியும். இக்கேள்விகளுக்கான விடைகளில் அவருடைய உடனிருப்பும் உற்சாகமும் நிறைய இருக்கும்.

ser

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2020 | Email ID: anbinmadal at gmail.com