மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..


முதலாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
சீராக்கின் ஞானம் 27: 30-28:7 | உரோமையர் 14: 7-9 | மத்தேயு 18: 21-35

ser

 மன்னிப்பு வழங்க மனம் தேவை

  • கணினிமயமாகிக் கொண்டிருக்கும் இன்றைய உலகில்‌, கணக்கிட்டு பார்க்காமல் எதையும் செய்யாதே என்ற செய்தியானது எல்லா பக்கங்களிலும் ஒங்கி ஒலிக்கும் காலம் இது.
  • மன்னிப்பு என்பதே மனித பலவீனம் என்று அர்த்தம் கொள்ளும் காலம் இது.  
  • மன்னிப்பவர்களையும்‌, மன்னிக்கச் சொல்பவர்களையும் இவ்வுலகில் நடைமுறை தெரியாதவர்கள் என ஏளனமாகப் பார்க்கும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்‌.  
  • அதே நேரத்தில் இந்த மனிதர் இந்தத் தீங்கு செய்தானே இவனையா நான் மன்னிக்க என்று நினைக்கும் மனிதர்கள் நம்மில் உண்டு.  
  • நான் மன்னிக்கத்தான் விரும்புகிறேன்‌. ஆனால் என்னால் முடிவில்லையே என்று கூறுபவர்களும் நம்மில் பலர் உண்டு.
  • நான் மன்னித்துவிட்டேன்‌. ஆனால் மறக்கத்தான் முடியவில்லை அந்தக் காயப்பட்ட மனதால் என்று கூறுபவர்களும் நம்மில் உண்டு.  

 
 என்னிடம் ஏது, வன்மம்‌, வைராக்கியம்‌. எனவே மன்னிக்கும் கடமை எனக்கு இல்லையே என்று தங்களையே அதிதூதர்களாக ஆக்கிக் கொள்பவர்களும் உண்டு. மனிதனாக இருப்பவன் இப்படி பைத்தியக்காரத்தனமாகக் கூறலாமா என்பதை உணராது பிதற்றுபவர்களும் உண்டு.  
 
 சிறிது கல்வாரி மலைக்கு வருவீர்களா? அங்கே மூன்று சிலுவை மரங்களில் தொங்குபவர் மூவர் என்பதை அறிவீர்‌. இடது புற கள்ளன் நீர் மெசியாதானே, உன்னையும் எங்களையும் காப்பாற்றும் என்று பழித்துரைத்தான் (லூக்‌. 23:39). இது சாபத்தின் சிலுவை. வலது புறக் கள்ளரோ, இயேசுவே நீர் ஆட்சி உரிமைக்கு வரும்போது என்னை நினைவில் கொள்ளும் என்றார் (லூக்‌. 23:42).   இது பரிகாரத்தின் சிலுவை. ஆனால் இயேசுவோ தந்தையே இவர்களை மன்னியும்‌. இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் என்றார் (லூக்‌. 23:34)
 
 அந்த மீட்பர் இயேசு கிறிஸ்துதான் இன்றைய வார்த்தையின் வழியாக நமது செபம் கேட்கப்பட வேண்டுமானால் நமக்கு விதிக்கும் நிபந்தனை மிக முக்கியமானது. நம் அயலாரை நாம் மன்னிக்க வேண்டும்‌. ஒரு மனிதர் சாதாரணமாக விரும்புவது இரண்டு விதமான விடுதலை. (1) பசியில் இருந்து விடுதலை (2) பாவத்தில் இருந்து விடுதலை (மத்‌. 6:11-18). ஆனால் தன் அயலாரை மன்னிக்காத எவருக்கும் விடுதலை கிடைக்காது என்பதை இன்றைய நற்செய்தி தெளிவாக அறிவிக்கிறது.
 
 எப்படியெனில் மன்னிக்கப்பட்ட ஊழியர் அவருக்குக் கடன்பட்ட ஒருவரை மன்னிக்க மறுத்ததை அறிந்த அரசன்‌, மன்னிக்கப்பட்டவரை அழைத்து பொல்லாதவரே! நீ என்னை வேண்டிக் கொண்டதால் உன் கடன் முழுதும் மன்னித்தேனே! உனக்கு இரக்கம் காட்டினேனே. நீயும் உன் உடன் பணியாளருக்கு இரக்கம் காட்டி இருக்க வேண்டுமென்று சொல்லி, பரம தந்தையும் தன் அயலாரை மன்னிக்காதவரை இப்படியே தண்டிப்பார் என்றார்‌.
 
 பழிவாங்குவோர் ஆண்டவரிடமிருந்து பழிக்குப் பழி பெறுவர் (சீராக்‌. 28:1)  
 பேதுருவை நோக்கி உன் வாளை உறையில் திரும்பப் போடு. ஏனெனில் வாளை எடுப்பவன் வாளாலே அழிந்து போவான் (மத்‌. 26:52) என்றார்‌.
 
 நிகழ்ச்சி
 
 அன்பார்ந்தவர்களே! இத்தாலி தேசத்திலே இரு பக்கத்து வீட்டுக்காரர்களின் சண்டை கொலையில் முடிந்தது. கொலை செய்தவரைப் பிடிக்க அடுத்த வீட்டுக்காரர் ஓடினார்‌. ஆனால் கொலை செய்தவரோ இவர்தான் கொலை செய்தவர் என்று போலீஸில் பிடித்துக் கொடுத்து, மாசற்றவரைக் குற்றவாளியாக்கி ஆயுள் தண்டனை 14 ஆண்டுகள் பெற்று, விடுதலைப் பெற்று வீடு திரும்பினார்‌. ஆனால் அவன் வீடு திரும்பிய போது அவரது தந்தையும்‌, தாயும் மன உடைந்து இறந்து போனதை அண்டை வீட்டுக்காரர் சொல்லி அறிந்துகொண்டார்‌. என்ன செய்யப் போகிறாரோ எனப் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆவலோடு நோக்க,  இவர் சொன்ன வார்த்தைகள் இறைவன் வழி மகத்தானது. மனிதரால் அறிய முடியாத ஒன்று. அவர் விருப்பப்படியே நடக்கட்டும் என்றான்‌. ஆம்‌! தன் அயலானைப் பழிவாங்கும் எண்ணம் இல்லை என்பது தெளிவாகியது.
 
 புனித பவுல் அடிகளார் (உரோ. 14:7-9) கூறுவதுபோல நாம் வாழ்வது இயேசு கிறிஸ்துவுக்காக. இயேசுவின் விருப்பமோ, நம் அயலாரை மன்னித்துப் பரம தந்தையின் மன்னிப்பிற்கு ஏற்புடையவர்களாக நாம் வாழ வேண்டும் என்பதே.

  •  நமது தெய்வம் அன்பின் தெய்வம்‌. அன்பின் கடவுள் (1 யோவா. 4:9). இத்தகைய அன்பு எரிச்சலுக்கு இடம் தராது. பாவிகளை மீட்க வந்தார் ( 1 திமொ. 1:15)
  •  நமது தெய்வம் மன்னிக்கும் கடவுள் (யோவா. 3:16-17).
  •  நமது தெய்வம் சமாதானத்தின் கடவுள் (யோவா. 14:27)
  •  நமது தெய்வம் இரக்கத்தின் தெய்வம் (லூக்‌. 6:36) 

 எப்போது நாம் மன்னிக்க வேண்டும்‌? புனித பவுல் அடிகளார் கூறுவதுபோல, பொழுது சாய்வதற்குள்‌, உங்கள் சினம் தணியட்டும் (எபே. 4:26). அப்படியென்றால் எவ்வளவு சீக்கிரம் பிறரை மன்னிக்க முடியுமோ அப்போதுதான் நம்மில் அமைதி உண்டாகும்‌.
 
 எத்தனைத் தடவை மன்னிப்பது? எழுபது தடவை, ஏழு தடவை (மத்‌. 18:22) என்று இயேசு இன்றைய செய்தியில் அறிவிக்கிறார்‌. அப்படியென்றால் மன்னிப்பதற்கு எல்லை இல்லை என்பதைத் தான் அறிவுறுத்துகின்றார்‌.
 
 என் இதயத்தில் மட்டும் மன்னித்தால் போதுமா? இல்லை. நீ ஆலயத்தில் காணிக்கை செலுத்த வரும்போது உன் சகோதரனுக்கு உன் மீது மனத்தாங்கல் இருந்தால் முதலில் உன் காணிக்கையை வைத்துவிடு. உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள்‌. பின் வந்து காணிக்கை செலுத்து (மத்‌. 5:23-24) என்றார் இயேசு.
 
 பரலோகத்தில் இருக்கிற: எங்கள் பிதாவே என்ற செபத்தில் எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் என்று செபிக்கின்றோம்‌! அதன் பொருள் புரிந்து செபிக்கின்றோமா! பிறரை மன்னிக்க அல்லது மறுத்தால் நம் குற்றங்களையும் மன்னிக்க வேண்டாம்‌  என்று தானே அர்த்தம்‌.  
 
 மன்னிக்க மறுப்பது, உள்ளத்தில் வெறுப்பை வளர்ப்பது, தன்னை அழிப்பதற்காக முயற்சியை நாமே தொடங்கும் ஈனச் செயலுக்குச் சமம்‌.   
 வெறுப்பும்‌, பகைமையும் ஒருவனைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லக் கூடியது என்பதை உளவியலார் கூறுகின்றார்‌.   
 பழிவாங்குவோர்‌, ஆண்டவரிடமிருந்து பழிக்குப் பழியே பெறுவர் என்பது இன்றைய முதல் வாசகம் எச்சரிக்கிறது.  
 மன்னிக்க மறுத்த ஊழியனுக்குக் கிடைத்தது பரிதாபத் தண்டனை. வெறுப்பும்‌, பழிவாங்கும் எண்ணமும் கொண்டவன் இறைவனின் மன்னிப்பைப் பெறத் தகுதியற்றவன்‌.  
 
 மன்னிப்பு வழங்க மனமில்லையெனில்‌, மன்னிப்புப் பெறுவதற்குத் தகுதியில்லை என்பதே இன்றைய நற்செய்தியின் பாடம் ஆகும்‌.

ser ser

மன்னிப்பு என்னும் சிறகை வீரிப்போம்‌

இருபுறமும் எரியும் கொள்ளிக்கட்டை ! சிறகு முளைத்த எறும்போ நடுவில் மரண பயத்தில் அலறியது. இங்கும் அங்கும் அலைந்தது. தன்னுடைய சிறகுகளால் வாயிலும்‌, வயிற்றிலும் அடித்துக்‌கொண்டது. ஐயோ! ஐயோ! நான் சாகப்போகின்றேனே! என்னைக் காப்பாற்ற இங்கே யாருமே இல்லையா? என்றது. அருகில் அமர்ந்திருந்த சிட்டுக்குருவிக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. அது எறும்பைப் பார்த்து, எறும்பே நீ ஏன் கதறுகிறாய்‌? உன்னால் எளிதில் நெருப்பிடமிருந்து தப்பமுழியும் என்றது. எறும்பு பரபரப்பானது. சிட்டுக்குருவியைப் பார்த்து, எப்படி? எப்படி? என்றது. சிட்டுக்குருவி சொன்னது : உன்னையே நீ நன்றாகப் பார்‌. சிறகை விரி! பற! என்றது. எறும்பு விழித்துக் கொண்டது. சிறகை விரித்தது, பறந்தது, தப்பித்தது.

நமது வாழ்க்கையிலே பல சமயங்களில் பல ஆபத்தான  சூழ்நிலைகளில் தத்தளித்துத் தநமாறுகின்றோம்‌; சோதனைக்கும் வேதனைக்குமிடையே,  கவலைக்கும் கண்ணீருக்குமிடையே,
இழப்புக்கும் இல்லாமைக்குமிடையே, தனிமைக்கும் எகொடுமைக்குமிடையே அகப்பட்டு அல்லலுறுகின்றோம்‌!

கவிஞர் கண்ணதாசனோடு சேர்ந்து,

எப்படி அழுதால் தெரிந்து கொள்வார் - நான்‌
எதைச் சொன்னால் அவர் புரிந்து கொள்வார்‌?
அப்படி அழுதும் பயனில்லை - இங்கு
யாருக்கும் என்னிடம் தயவில்லையே! எனப் பாடத் தோன்றுகின்றது!

நம்மைத் தாக்கும் துன்ப, துயரச் சுனாமிகளிடமிருந்து தப்பித்து வாழ வழியே இல்லையா? ஏன் இல்லை, இருக்கின்றது என்கின்றன இன்றைய வாசகங்கள்‌. அவை, உங்கள் மன்னிப்பு என்னும் சிறகை விரித்துப் பறங்கள்‌. அப்போது நீங்கள் உயரப் பறந்து, உங்களையே நீங்கள் காப்பாற்றிக் கொள்வீர்கள் என்கின்றன.

இயேசு தமது சீடர்களுக்குக் கற்றுக்கொடுத்த மன்றாட்டில் [மத் 6:9-13) நாம் நமக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களை மன்னித்தால்‌, நாம் கேட்கும் வரங்களை, ஆசிகளை விண்ணகத் தந்தை
நமக்குத் தருவார் எனக் கூறுகின்றார்‌. இதே கருத்தைத்தான் இன்றைய முதல் வாசகமும்‌, நற்செய்தியும் நமக்கு எடுத்து இயம்புகின்றன..

கடவுள் இரக்கமே உருவானவர்‌. நீதியின்பழ ஆதாமையும்‌, ஏவாளையும் தண்மித்தாலும்‌, இரக்கத்தின்படி மீட்பர் ஒருவரை அவர்களுக்கு வாக்களித்தார் [எதாநூ 3:15). கல்வாரியிலே இயேசு தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களை மன்னிக்குமாறு தம் தந்தையிடம் மன்றாடனார் [லூக் 23:34). இப்படிப்பட்ட இறைவன் நம்மிடமிருந்து மன்னிப்பை எதிர்பார்ப்பது இயற்கைதானே!

இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடிகளார் நாம் அனைவரும் இயேசுவுக்கு உரியவர்கள் [உரோ 14:8) என்கின்றார்‌. இயேசுவைப் போல வாழ்ந்து இறைவனின்‌, வானகத் தந்தையின்‌
ஆசிகள் அனைத்தையும் பெற்று வளமுடன் வாழ, மற்றவரை மனமார மன்னித்து வாழ நற்கருணை ஆண்டவர் அருள்புரிவாராக.

மேலும் அறிவோம் :

கண்ணிற்‌(கு) அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்‌
புண் என்‌(று)உறைம் படும் (குறள் : 575).

பொருள் : பரிவிரக்கம் காட்டுபவருடைய கண்களே அழகிய கண்களாகப் போற்றப்படும்‌. அத்தகு பரிவிரக்கம் இல்லாத கண் புண்ணாகவே எண்ணப்படும்‌!

ser ser

மன்னிப்பவரின் உள்ளம்  ஒரு மாணிக்கக் கோவில்

கடவுளிடம் ஒருவர் "கடவுளே! உங்கள் அடையாள அட்டையைக் காட்டுங்கள்" என்று கேட்டாராம். கடவுளின் அடையாள அட்டை என்ன? புனித யோவான் கூறுகிறார் கடவுள் அன்பாய் இருக்கிறார்" (1 யோவா 4:18) மனிதரிடம் அன்பு என்பது ஒரு சிறிய துளி. ஆனால் கடவுளோ அன்புக் கடல் அவருடைய அன்புக்கு ஆழம், அகலம், நீளம் உயரம் என்பது கிடையாது கடவுள் அன்பின் முழுமை. அவரிடம் அன்பைத் தவிர வேறெதுவும் கிடையாது.

கடவுளின் தனிப் பண்பைப் பற்றி இன்றைய பதிலுரைப் பாடல் பின்வருமாறு கூறுகிறது "ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர். பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் நம் குற்றங்களை எல்லாம் மன்னிக்கிறார்" (திபா 103) கடவுள் தம் மகன் கிறிஸ்துவை இவ்வுலகிற்கு அனுப்பியதன் நோக்கத்தைத் திருத்தூதர் பவுல் பின்வருமாறு கூறுகிறார். "கடவுள் உலகினரின் குற்றங்களை பொருட்படுத்தாமல் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்" (2 கொரி 5:19) எனவே கடவுள் நம் பாவங்களுக்கு ஏற்றபடி நம்மைத் தண்டிக்கவில்லை நமது பாவங்களைக் கடவுள் கிறிஸ்துவின்மேல் சுமத்த அவர் நம் பாவங்களுக்குக் கழுவாய் ஆனார்.

 கடவுள் நம் குற்றங்களை கணிக்காமல் நம்மை மன்னித்தார் என்றால், நாமும் பிறருடைய குற்றங்களைப் பொருட்படுத்தாமல் மன்னிக்க வேண்டுமென்பது இன்றைய அருள்வாக்கு வழிபாட்டின் மையக்கருத்தாகும். இன்றைய முதல் வாசகம் கூறுகிறது "உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு. அவ்வாறெனில் நீ மன்றாடும்போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும்" (சீஞா 23:2). இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் கூறுகிறார் உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதர சகோதரிகளை மனமாற மன்னிக்காவிட்டால்,விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார்" (மத் 18:35)

நமக்கெதிராகக் குற்றம் புரிகின்றவர்களை ஏழுமுறை மட்டுமல்ல, எழுபதுமுறை வழுமுறை மன்னிக்க வேண்டுமெனப் பணிக்கிறார் கிறிஸ்து (மத் 1822). மன்னிப்பதற்கு ஒரு வரையறை இல்லை. இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து கூறும் உவமை வாயிலாகக் கிறிஸ்து நமக்கு உணர்த்தும் உண்மை "கடவுள் நம்முடைய கனமான பாவங்களை மன்னிக்கிறார். அப்படியிருக்க நாம் நமக்கு எதிராகச் சிறுசிறு குற்றங்களை இழைக்கின்றவர்களை மன்னிக்காமல் இருப்பது முறையா?"

ஓர் இளம் பெண் திருமணமாகி ஒரு சில நாள்களே தன் கணவருடன் வாழ்ந்தார். அதன் பிறகு கணவரின் கொடுமை தாங்கமுடியாமல் அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார். மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ மறுத்து, மண முறிவு கேட்டார் அவரிடம், "உங்கள் கணவரை மன்னித்து அவருக்காகச் செபியுங்கள்" என்றேன். அதற்கு அவர் "என் கணவரை மன்னிக்கத் தயார் ஆனால் அவருக்காகச் செபிக்கச் சொல்லுவது கொஞ்சம் “ஓவராகத் தெரியவில்லையா?" என்று கேட்டார்.

கிறிஸ்து சிலுவையில் தொங்கியபோது தம்மைச் சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்ததுடன், அவர்களுக்காகத் தம் தந்தையிடம் வேண்டிக்கொண்டார். அவரது இச்செயல் மனிதக் கணிப்பின்படி கொஞ்சம் "ஒவராகத்தான்" தெரிகிறது. ஆனால் அவரது செயல் அவர் உண்மையிலேயே கடவுள் என்பதை வெளிப்படுத்துகிறது. ஏனெனில் தவறிழைப்பது மனிதத்தன்மை. மன்னிப்பது தெய்வத்தன்மை.

பகைவர்களை மன்னிப்பதுடன் அவர்களுக்காகச் செபிக்கும்படி கிறிஸ்து நமக்கு அறிவுறுத்துகிறார் "உங்கள் பகைவர்களிடம் அன்பு கூருங்கள் உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுகள்" (மத் 5:44)

நாம் பகைவர்களுக்கு நன்மை செய்வதில் நிலத்தைப் போன்று இருக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர் நிலமானது தன்னை வெட்டிக் காயப்படுத்துபவர்களைத் தாங்குவதோடு அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் கொடுக்கிறது.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை (குறள் 151)

ஒரு பெண்மணிக்கு நீண்ட காலமாக ஆஸ்த்மா நோய். அவள் பல மருத்துவர்களை அணுகியும், பல செபக்கூட்டங்களில் கலந்து கொண்டும் அவருக்குக் குணம் கிடைக்கவில்லை. ஏனெனில் அவர் ஒருவரை மன்னிக்க மறுத்துவிட்டார் என்று அவர் தனது பகைவரை மனப்பூர்வமாக மன்னித்தாரோ அன்று அவருக்குப் பூரண குணம் கிடைத்தது. பிறரை மன்னிக்காவிட்டால், நம் மனப்புண் ஆறாது.

மன்னிப்பவரின் உள்ளம்  ஒரு மாணிக்கக் கோவில். மன்னிக்காதவரின் வாழ்வு தடமே இல்லாமல் மறைந்து போகும் என்கிறது ஒரு திரைப்படப் பாடல்.
மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம்
மாணிக்கக் கோயிலடா - அதை
மறந்தவன் வாழ்வு தடம் தெரியாமல்
மறைந்தே போகுமடா.

"மன்னியுங்கள், மன்னிப்புப்பெறுவீர்கள்" (லூக்கா 6:37)

ser ser

மன்னிப்பு என்னும் மாமருந்து

நிகழ்வு

மத்தியப் பிரதேச மாநிலம், தெவாஸ் மாவட்டத்தில் ஆன்மிகப் பணியோடு சமூகப் பணியையும் செய்துவந்தவர் அருள்சகோதரி இராணி மரியா. இவர் 1995 ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 25 ஆம் நாள் சமந்தர் சிங் என்பவனால் குத்திக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து சமந்தர் சிங் என்ற அந்த மதவெறியன் கைது செய்யப்பட்டு இந்தூர் சிறையில் அடைக்கப்பட்டான்.

இது நடந்து ஏறக்குறைய எட்டு ஆண்டுகள் கழித்து, அதாவது 2003 ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 24 ஆம் நாள், அருள்சகோதரி இராணி மரியாவின் தாய் எலிசாவும், அவருடைய சகோதரி செல்மியும், சகோதரர் ஸ்டீபனும் இந்தூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமந்தர் சிங்கைப் பார்க்கச் சென்றார்கள்.

‘நான் நாற்பது முறைக்கும் மேலாகக் கத்தியால் குத்திக்கொன்ற இராணி மரியாவின் குடும்பத்திலிருந்தா என்னைப் பார்க்க வந்திருக்கின்றார்கள்...? அவர்களை எப்படி நான் எதிர்கொள்வது...? அவர்களிடத்தில் நான் என்ன பேசுவது...?’ என்ற ஒருவிதமான பதைபதைப்புடனே அவர்களைப் பார்க்கச் சென்றான் சமந்தர் சிங். அவர்களைப் பார்த்த மறுவினாடி அவன் தன் இரு கைகளையும் கூப்பிக்கொண்டு விம்மி விம்மி அழத் தொடங்கினான்.

அப்பொழுது அருள்சகோதரி இராணி மரியாவின் தாய் எலிசா யாரும் நினைத்துப் பார்த்திராத ஒரு செயலைச் செய்தார். ஆம், எந்தக் கைகள் தன்னுடைய மகளைக் கத்தியால் குத்திக் கிழித்தனவோ, அந்தக் கைகளை அவர் அன்போடு முத்தமிட்டு, ‘என்னுடைய மகளைக் குத்திக்கொன்ற உன்னை நான் மனதார மன்னிக்கின்றேன்’ என்பதைச் சொல்லாமல் சொன்னார். இதனால் அருள்சகோதரியின் குடும்பமும், சமந்தர் சிங்கின் குடும்பமும் ஒன்றானது.

தன் மகளைக் கத்தியால் குத்திக் கொன்றவனை மன்னித்ததன் மூலம், அருள்சகோதரி இராணி மரியாவின் தாயாரும், அவருடைய குடும்பத்தினரும் மன்னிப்பிற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தார்கள். பொதுக்காலம் இருபத்து நான்காம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நாம் நம் விண்ணகத் தந்தையைப் போன்று தாராளமாய், நிபந்தனையின்றி மன்னித்து வாழவேண்டும் என்ற செய்தியை எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

எத்தனை முறை மன்னிப்பது?

நற்செய்தியில் சீமோன் பேதுரு இயேசுவிடம், “என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்து வந்தால், நான் எத்தனை முறை மன்னிக்கவேண்டும்? ஏழு முறை மட்டுமா?” என்றொரு கேள்வியோடு வருகின்றார். பேதுரு இயேசுவிடம் இப்படியொரு கேள்வியோடு வருவதன் மூலம், ‘மன்னிப்பதில் தான் தாராளமானவான்’ என்பதை நிரூபித்துக் காட்ட விழைகின்றார். காரணம், யூத இரபிகள் தவறு அல்லது பாவம் செய்கின்ற ஒருவரை மூன்றுமுறை மன்னிக்கலாம் என்று போதித்து வந்தார்கள். பேதுரு இதை உள்வாங்கிக் கொண்டு, மூன்றோடு மூன்றைச் சேர்த்து, அத்தோடு இன்னொன்றைச் சேர்த்து, இயேசுவிடம் ஏழு முறை மட்டுமா? என்று கேட்கின்றார்.

பேதுரு இயேசுவிடம் இப்படிச் கேட்பதன் மூலம், அவர் தன்னைப் பாராட்டுவார் என்று நினைத்திருக்கக் கூடும். காரணம் ஏழு என்பது முழுமையைக் குறித்து நிற்பதால்; ஆனால், இயேசு பேதுருவைப் பாராட்டவில்லை. மாறாக, அவர் பேதுருவிடம், அதைவிடப் பெரிதான ஒரு செயலைச் செய்யச் சொல்கின்றார். அது என்ன என்று தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

நிபந்தனையின்றி மன்னிக்க வேண்டும்

“...ஏழுமுறை மட்டுமா?” என்று கேட்ட பேதுருவிடம் இயேசு, “ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை” என்கின்றார் இதன் மூலம் இயேசு பேதுருவிடம், ‘உனக்கெதிராகப் பாவம் செய்யும் சகோதரர், சகோதரியை நிபந்தனையின்றி மன்னிக்க வேண்டும்’ என்று சொல்கின்றார். இதற்காக இயேசு ஓர் உவமையையும் சொல்கின்றார்.

இந்த உவமையில் வருகின்ற மன்னர் தன்னிடம் மிகுதியாகக் கடன்பட்டிருந்த பணியாளரின் கடனை முழுவதும் தள்ளுபடி செய்கின்றார். இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், மன்னர் தன்னிடம் பணிபுரிந்து வந்த பணியாளரை முழுவதும் மன்னிக்கின்றார் என்று சொல்லலாம். ஆனால், மன்னரிடமிருந்து மிகுதியாக மன்னிப்பைப் பெற்ற பணியாளரோ, தன்னிடம் குறைந்த அளவே கடன்பட்டிருந்த பணியாளரின் கடனைத் தள்ளுபடி செய்யாமல், அவரை மன்னிக்காமல், சிறையில் அடைக்கின்றார். இதை அறிய வரும் மன்னர், மன்னிக்க மறுத்த பணியாளரைச் சிறையில் அடைக்கின்றார்.

இந்த உவமையில் வருகின்ற மன்னர், நம்முடைய விண்ணகத் தந்தை போன்று. எப்படி இந்த மன்னர் தாராளமாய், நிபந்தனையின்றி மன்னிக்கின்றாரோ, அப்படி விண்ணகத் தந்தை நம்மைத் தாராளமாய், நிபந்தனையின்றி மன்னிக்கின்றார். விண்ணகத் தந்தை மட்டும் நாம் செய்த குற்றங்களை மன்னியாது இருப்பார் எனில், திருப்பாடல் ஆசிரியர் சொல்வது போன்று, அவருக்கு முன்பாக யாரும் நிலைத்திருக்க முடியாது (திப 130: 3). கடவுள் நம் குற்றங்களை மன்னிக்கின்றார் என்பதற்குச் சான்றே, நாம் இன்றைக்கும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதுதான்.

விண்ணகத்தந்தை நம்மைத் தாளராமாய் மன்னிக்கின்றார்; ஆனால், நாம்தான் நம்மோடு இருப்பவர்கள் செய்யும் தவறுகளை மன்னிக்கத் தயாராத இல்லை. அதைத்தான் உவமையில் வரும் மன்னிக்க மறுத்த பணியாளர் நமக்கு உணர்த்துகின்றார். விண்ணகத் தந்தை நம்மைத் தாரளாமாய் மன்னித்தும், நாம் நம் சகோதரர், சகோதரிகள் செய்யும் குற்றங்களை மன்னிக்காமல், பழிவாங்கத் துடித்தால், நமக்கு என்ன நேரும் என்பதை இன்றைய முதல் வாசகம் எடுத்துச் சொல்கின்றது. அதைக் குறித்து தொடர்ந்து நாம் சிந்திப்போம்.

நீங்கள் அளக்கும் அளவையாலேயே உங்களுக்கும் அளக்கப்படும்

சீராக்கின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், “உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்து விடு; அவ்வாறெனில் நீ மன்றாடும்போது, உன் பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று வாசிக்கின்றோம். ஆம், எப்பொழுது நாம் பிறருடைய குற்றங்களை மன்னிக்கின்றோமா, அப்பொழுதுதான் இறைவனால் நம்முடைய குற்றங்களும் பாவங்களும் மன்னிக்கப் படுகின்றன. இதையேதான் இயேசு தன் சீடர்களுக்குக் கற்றுத்தரும் இறைவேண்டலில் குறிப்பிடுகின்றார் (மத் 6:14).

இன்றைக்குப் பலர் பிறர் செய்த குற்றங்களை மன்னியாமல், பழிக்குப் பழி என வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். வழிவாங்குவோர் ஆண்டவரிடமிருந்து பழிக்குப் பழியே பெறுவர் என்கின்றார் சீராக்கின் ஞான நூல் ஆசிரியர். ஆகையால், நாம் பழிக்கு பழி என்ற எண்ணத்தை விட்டொழித்து, பிறர் செய்யும் குற்றங்களை நம் விண்ணகத் தந்தையைப் போன்று தாராளாமாய் மன்னித்து, அவர் நமக்கு அருளுகின்ற மன்னிப்பையும், நலவாழ்வையும் பெற்று மகிழ்வோம்.

சிந்தனை

‘மன்னிப்பு என்பது ஒரு கைதியைச் சிறையிலிருந்து விடுவிப்பதற்கு இணையானது. அந்தக் கைதி வேறு யாருமல்ல, நீங்களே’ என்பார் லெவிஸ் பி.ஸ்மெதஸ் (Lewis B.Smedes) என்ற அறிஞர். ஆகையால், நமக்கு விடுதலையும், நலமும் தருகின்ற மன்னிப்பு என்ற பண்பை நமது வாழ்வில் கடைப்பிடித்து வாழ்வோம்; விண்ணகத் தந்தையைப் போன்று தாராளமாய் ஒருவர் செய்த குற்றத்தை மன்னிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser ser

மன்னிப்பு தேவை!

விவிலியத்தின் நீதித் தலைவர்கள் நூலில் வரும் சிம்சோன் நிகழ்வை வாசிக்கும்போதெல்லாம் எனக்குள் ஒரு கேள்வி எழுவதுண்டு. சிம்சோன் தன்னுடைய வாழ்வில் ஒரே ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். அந்தப் பெண் அவரை எதிரிகளிடம் விற்றுவிடுகின்றார். தன் வாழ்வில் ஒரே ஒரு முறை நிம்மதியாகத் தூங்கும் சிம்சோனுக்கு அந்த நொடி மடித்தூக்கமே இறுதித் தூக்கமாகிப் போகிறது. ஒருவேளை, சிம்சோன் மீண்டும் தெலீலாவைச் சந்தித்தால் அவரை மன்னித்திருப்பாரா? தெலீலா அவரை எப்படி எதிர்கொள்வார்? இப்படி நாம் நிறையக் கேள்விகளை விவிலியத்தில் எழுப்ப முடியும். தன்னை ஏமாற்றி தன்னிடமிருந்து ஆசியைப் பறித்துச் சென்ற யாக்கோபை ஈசாக்கு மன்னிப்பாரா? தன் மனைவியோடு உறவு கொண்டதோடு தன் உயிரையும் எடுத்துக் கொண்ட தாவீதை உரியா மன்னிப்பாரா? இயேசு கூட, தன் இறுதித் துன்பத்தின்போது, 'தந்தையே இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள்' (காண். லூக் 23:34) என்று சொல்கிறாரே தவிர, 'நான் இவர்களை மன்னிக்கிறேன்' என்று அவர் சொல்லவில்லையே? அது ஏன்?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 18:21-35), நான் எத்தனை முறை மன்னிக்க வேண்டும் எனப் பேதுரு இயேசுவிடம் கேட்கிறார். ஆக, மன்னிக்கும் உள்ளம் பேதுருவுக்கு இருக்கிறது. எத்தனை முறை என்பதுதான் அவரது கேள்வியாக இருக்கிறது. 'ஆண்டவரே, நான் மன்னிக்க வேண்டுமா?' அல்லது 'என்னால் மன்னிக்க முடியுமா?' என்ற கேள்வியை நாம் இப்போது எழுப்புகிறோம்.

நம்மால் ஏன் மற்றவர்களை மன்னிக்க முடிவதில்லை? மூன்று காரணங்கள்: (அ) நினைவாற்றல் - மனநலம் குறைந்தவர்கள் பேறுபெற்றவர்கள் என்றே நான் நினைப்பேன். ஏனெனில், அவர்கள் எதையும் நினைவில் வைத்துக்கொள்வதில்லை. தன்னைக் கடிக்க வரும் நாய்மேலும் அவர்கள் கல்லெறிவதில்லை. தன்னைக் கேலி பேசிய சிறுவர்களையும் அவர்கள் பழிதீர்ப்பதில்லை. நினைவு இல்லாமல் இருப்பது நலம் பல நேரங்களில். (ஆ) நீதியுணர்வு - நான் கஷ்டப்பட்டு ஒரு வேலை செய்கிறேன். அந்த வேலையை யாராவது குலைத்துவிட்டால் என்னால் மன்னிக்க இயலாமல் போய்விடுகிறது. நான் யாருக்கும் தீங்கு நினைக்கவில்லை, ஆனால், மற்றவர்கள் எனக்கு தீங்கு இழைக்கிறார்கள். இது நீதியல்லவே! என்ற கேள்வி மன்னிப்புக்குத் தடையாக இருக்கிறது. (இ) நொறுங்குநிலை உணராமை. தன் நொறுங்குநிலையை உணர்ந்த ஒருவர் அடுத்தவரை எளிதாக மன்னித்துவிடுவார். பேருந்து நிறுத்தம் ஒன்றில் மதுபாட்டில்கள் நிறையச் சிதறிக்கிடக்கின்றன. அங்கே நிற்பவர்களில் ஒருவர், 'இதைச் செய்தவனுகள சும்மா விடக்கூடாது!' எனப் பொங்குகிறார். இன்னொருவரோ, 'பாவம் ஒதுங்க இடம் இல்லாம இங்க உக்காந்து குடிச்சுருக்காங்க!' எனப் புன்முறுவல் பூக்கிறார். இரண்டாமவர், தன் வலுவின்மையை உணர்ந்தவராக இருப்பதால் மற்றவரின் நொறுங்குநிலையை அவரால் ஏற்றுக்கொள்ள முடிகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் வரும் பணியாளர் தன் சக பணியாளரை மன்னிக்க இயலாமல் போகக் காரணம் மேற்காணும் மூன்றாவது காரணமே. தன் கடன் மன்னிக்கப்பட்டவுடன் தன் வலுவின்மையை மறந்துவிடுகிறான். தானே அரசன் என்பதுபோல நினைத்து மற்றவனது கழுத்தை நெரிக்கிறான்.

முதல் வாசகம், நம் நீதியுணர்வை நெறிப்படுத்துகிறது. அதாவது, நான் வெஜிடேரியன் என்பதற்காக மாடு என்னை முட்டாது என நினைப்பது தவறு. நான் நீதியோடு நடந்தாலும் எனக்கு அநீதி நடக்காது என நினைப்பது அப்படிப்பட்டதுதான். அநீதியை மன்னித்துவிடுமாறு அழைக்கிறார் ஆசிரியர். மன்னிப்பதற்கு மிக எளிய வழியைக் காட்டுகிறது முதல் வாசகம்: 'உன் முடிவை நினைத்துப் பார்.' ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக நினைத்து வாழ்பவர்கள் எளிதாக மன்னித்துவிடுவர். ஏனெனில், 'நாளை பழிவாங்கலாம்' என்று அவர்கள் கோபத்தைத் தக்கவைப்பதோ, அல்லது 'நாளை மன்னிக்கலாம்' என மன்னிப்பைத் தள்ளிப்போடுவதோ இல்லை.

பவுல் இரண்டாம் வாசகத்தில் இன்னொரு வழியைக் கற்றுக்கொடுக்கிறார்: 'எனக்கென வாழாமல் ஆண்டவருக்கென வாழ்வது.' ஆக, என்னை எவரும் இழிவுபடுத்தவோ, பெருமைப்படுத்தவோ இயலாது. ஏனெனில், எதையும் நான் பற்றிக்கொள்வதில்லை. ஏனெனில், நான் எனக்குரியவன் அல்லன்.

இறுதியாக, நன்றிகூறும் உள்ளம் எளிதில் யாரையும் மன்னித்துவிடும். ஆகையால்தான், 'என் உயிரே! ஆண்டவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே!' என்கிறார் திருப்பாடல் ஆசிரியர் (காண். திபா 103).

ser ser

மன்னித்து மறக்கும் மாந்தர்களா நாம்!

அண்ணன் பிரபுவும் தங்கை சாந்தியும் தங்கள் விடுமுறையைக் கழிப்பதற்காக வயது முதிர்ந்த தங்களின் பாட்டி தாத்தாவிடம் சென்றனர்.பாட்டி வீட்டில் அழகிய தோட்டம் இருந்ததால் இருவரும் அங்கு சென்று விளையாடுவது வழக்கம். விளையாடும் போது இருவரும் சண்டையிட்டுக்கொள்வார்கள். ஒருமுறை பிரபு கற்களை பொறுக்கிக் கொண்டு குறிபார்த்து வீசி குறிப்பிட்ட இலக்கை அடையுமாறு எறிந்தான். அன்று ஏனோ அவனால் இலக்கை அடைய முடியவில்லை. கோபமடைந்தான். அச்சமயம் பாட்டி உணவருந்த அவர்களை அழைக்கவே விரக்தியோடு சென்றான். அப்போது அவன் கண் முன்னே தன் பாட்டி ஆசையாய் வளர்த்த முயல்குட்டி குறுக்கிடவே தன் கையில் உள்ள கல்லை குறிபார்த்து அதன் மீது எறிய தலையிலே காயமடைந்து அந்த முயல் குட்டி இறந்தது.இதை சற்றும் எதிர்பாராத பிரபு அதிர்ந்து போனான். பாட்டி பார்ப்பதற்குள் அதை எப்படியாவது மறைத்துவிட வேண்டும் என்று எண்ணிய பிரபு இறந்த முயல் குட்டியை ஒரு புதருக்குள் மறைத்தான். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சாந்தி தன்னிடம் சண்டையிடும் அண்ணனை பழிவாங்க சரியான தருணம் என்று எண்ணினாள். எனவே பாட்டியிடம் சொல்லிக்கொடுத்துவிடுதாக மிரட்டி தனக்கு கொடுக்கப்பட்ட எல்லா வேலைகளையும் பிரபுவை செய்யச் சொன்னாள். ஒருநாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நடந்ததை பாட்டியிடம் சொன்னான் பிரபு. அதைக்கேட்ட பாட்டி அவனை அன்போடு அணைத்து முத்தமிட்டு "நடந்ததெல்லாம் எனக்கு ஏற்கனவே தெரியும். நீயாக எப்போது வந்து கூறுவாய் எனக் காத்திருந்தேன். நான் உன்னை மன்னித்துவிட்டேன் "என்று கூறியதோடு " "நான் உன்னை மன்னித்தது போல உன் தங்கை உன்னை பழிவாங்க நினைத்து உன்னை வேலை வாங்கியதையும் நீ மன்னிக்க வேண்டும்" என்று கூறினார். மன அமைதியுடன் மீதமுள்ள விடுமுறை நாட்களும் மகிழ்வானது.

மன்னிப்பு என்பது அன்பின் மற்றொரு பரிமாணம். இரக்கத்தின் வெளிப்பாடு. மன்னிக்கும் குணம் நம்மில் குடி கொண்டால் மனஅமைதியும் மகிழ்வும் நம்வாழ்வில் நிறைந்திருக்கும். பகைவரின் எண்ணிக்கை குறைந்து நட்பு வட்டாரம் பெரிதாகும். இத்தகைய மன்னிப்பு என்ற அரிய பண்புக்கு சொந்தக்காரர்களாக வாழவே நம்மை இயேசு அழைக்கிறார்.

மனிதர்களாகிய நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறோம். சேர்ந்து வாழ்கிறோம். ஆயினும் ஒவ்வொருவருமே தனித்துவம் மிக்கவர்கள். ஒருவருடைய எண்ணங்களும் சொல்லும் செயலும் மற்றவருக்கு முரண்பாடாகவும் ஏற்றுக்கொள்ள இயலாதவையாகவும் ஏன் காயப்படுத்துபவையாகக் கூட அமையலாம். அவற்றை எல்லாம் நாம் கருத்தில் எடுத்துக்கொண்டோமேயானால் பறிபோவது நம்முடைய மன நிம்மதியே. அது நம்மனதில் அவர்பால் நாம் கொண்டுள்ள நல்ல எண்ணங்களை சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல் கோபத்தையும் நாளடைவில் பகையையும் உண்டாக்கும். இதைத்தவிர்க்க பல சமயங்களில் நாம் கண்டும் காணாமல் இருக்கக் கூடிய மனநிலை பெற்றவர்களாய் இருக்க வேண்டும்.ஆங்கிலத்தில் இதை "over look"என்று கூறுவர். சீராக் ஞானநூலின் ஆசிரியர் இதைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் "பிறர் குற்றங்களை பொருட்படுத்தாதே" என்று கூறுகிறார்.

இத்தைகைய பண்புதான் மன்னிக்கும் மனநிலைக்கு முதற்படி. இன்றைய நற்செய்தியில் இயேசு நம் அனைவரையும் நமக்கெதராக குற்றம் செய்தவரை பெருந்தன்மையுடன் மன்னிக்க அழைக்கிறார். ஒருவர் நம்மிடம் மன்னிப்பு கேட்கும் போது, நாம் கடவுளிடமிருந்தும் பிறரிடமிருந்தும் பெற்று மகிழ்ந்த மன்னிப்பை நன்றியுடன் உணர்ந்து அதை பகிரக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்ற கருத்தை "தான் பெற்ற மன்னிப்பை பகிர மறுத்த பணியாளர் "உவமை மூலமாக தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறார்.

"ஆண்டவரே நீர் எம் குற்றங்களை மனதில் கொண்டிருந்தால் யார்தான் நிலைத்து நிற்கமுடியும்? " (தி.பா 130:3) என்று திருப்பாடல் ஆசிரியரோடு இணைந்து நாமும் பல முறை ஜெபிக்கிறோம். நம்முடைய தவறுகளை கணக்கில் வைத்துக்கொள்ளாதபடி கடவுளிடம் மன்றாடும் நாம் பல சமயங்களில் பிறருடைய குற்றங்களை கணக்கில் வைத்துக்கொண்டு வாழ்கிறோம் . நாம் இந்த மனநிலையை முற்றிலுமாக தூக்கி எறிய வேண்டும். அதற்கு இயேசு கொடுத்த சிறந்த வழிதான் "எழுபது தடவை ஏழு முறை " என்ற எண்ணிக்கை. கணக்ககு பார்க்காமல் மன்னிக்க வேண்டும். மன்னிப்பதோடு அக்குற்றத்தை மறந்தும் விட வேண்டும் என்பதே அதன் ஆழமான கருத்து.

இரக்கமும் அருளும் பேரன்பும் பொறுமையும் கொண்டவர் ஆண்டவர் என்பதை இன்றைய பதிலுரைப்பாடலில் நாம் தியானிக்கிறோம். அந்த கடவுளின் சாயலாய் படைக்கப்பட்ட நாம் அனைவரும் அவரைப்போல மன்னிக்கும் மக்களாய் வாழ்வோம். மன்னிப்பதே கிறிஸ்தவத்தின் அடையாளம். கிறிஸ்து நமக்கு மன்னிக்க கற்றுத்தந்திருக்கிறார். அதை வாழ்ந்தும் காட்டியிருக்கிறார். அவரைப் பின்பற்றி நாம் மன்னிப்போம். மறப்போம்.வாழ்ந்தாலும் இறந்தாலும் கிறிஸ்துவுக்கு உரியவர்களாவோம்.

இறைவேண்டல்

இரக்கமும் அருளும் பேரன்பும் பொறுமையும் கொண்ட ஆண்டவரே! நீர் எங்கள் பலவீனங்களைப் பொருட்படுத்துவதில்லை. எங்கள் குற்றங்களை கணக்குப் பார்ப்பதில்லை என அறிவோம். உம்மைப் போல நாங்களும் எமக்கு எதிராய் தவறு செய்பவர்களை மன்னிக்கவும் அக்குற்றங்களை நினைவில் கொள்ளாமல் மறக்கவும் வரம் தாரும். ஆமென்.

ser

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com