மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..


முதலாம் ஆண்டு

ஆண்டின் பொதுக்காலம் 23ஆம் ஞாயிறு
இன்றைய வாசகங்கள்:-
எசேக்கியேல் 33:7-9 | உரோமையர் 13:8-10 | மத்தேயு 19:15-20

ser

நமது நன்றியை இறைவனுக்கு அர்ப்பணிப்போம்

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகர்க்கு” என்பது குறள் .

“உன்னை அன்பு செய்வதுபோல உன் அயலானையும் அன்பு
செய் ” என்பது இறைவாக்கு.

நம்மைப் படைத்து, காத்து, பராமரித்து வருகின்ற கடவுளுக்கு  நாம் நமது நன்றியை முதலில் காணிக்கையாக்க வேண்டும் . எங்ஙனம் நமது நன்றியை இறைவனுக்கு அர்ப்பணிப்பது என்பதை விளக்குவதுதான் இன்றைய இறைவார்த்தைகள் .

நான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று எண்ணுவது சுயநலம் .  பிறர் மட்டும் நலமுடன் வாழ்ந்தால் போதும் என்று எண்ணுவது பொறுப்பற்ற செயல் . நானும் வாழ்ந்து பிறரும் வாழவேண்டும் என்று எண்ணி, செயல்படுவது பொது நலமாகும் ; அதுவே உலக நலமுமாகும் . இவ்வுலக நலம் பேணுதலில் நாம் ஒருவர் மற்றவருக்கு உறுதுணையாக, ஊன்றுகோலாக இருக்க வேண்டும் . “தோள் கொடுப்பான் தோழன் ” என்பார்கள் . ஆதியில் “எங்கே உன் சகோதரன் ” (தொநூ. 4 :9) என்று வினவப்பட்டபோது “அவனுக்கு நான் என்ன காவலாளியா?” (தொநூ. 4:9) என்ற பொறுப்பற்ற பதில் வந்தது. அது தொடக்கம் . அதிலிருந்து இறைவன் மனிதக் குலத்தைப் பண்படுத்தி, பக்குவப்படுத்தி வாழ்விக்க முயலுகின்றார் . அதன் பரிணாம வளர்ச்சிதான் பிறரைத் தீங்கிலிருந்து விலகி வாழ அறிவுறுத்தும் கடமையை ஒவ்வொரு மனிதனும் பெற்றுள்ளான் என்று இறைவாக்கினர் வழியாக  விளக்கப்படுகிறது.

திருச்சட்டங்கள் ஆயிரம் இருந்தாலும் , இயேசுவின் ஒரே சட்டம் அனைத்தையும் முழுமைக்கு அழைத்துச் செல்கிறது. அதைத்தான் புனித பவுல் அடிகளார் , “பிறரிடத்தில்   அன்புகூர்பவர் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவர் ஆவர் ” (உரோ.. 13:8) என்கிறார் .

கிறிஸ்துவினுடைய போதனைகளைக் கிரகித்துக்கொண்டு, அவரின் உயிர்ப்பின் மகிமையில் வாழ விழைந்த ஆதித் திருச்சபையில் ஒருவர் மற்றவருக்கிடையேயோான பிரச்சனைகளையும் , மனத்தாங்கல்களையும் எங்ஙனம் சுமூகமாகத் தீர்த்து வைப்பது என்பதை விளக்குவது நற்செய்தி. குறைகள் இல்லா மனிதர்கள் இல்லை. ஆனால் , குறைகளைச் சுட்டிக்காட்டும் பொழுது அதை நிவர்த்தி செய்கிறவர் உண்மையான சமூகப் பிரச்சினையுள்ள, உறவுகளை மதிக்கின்ற மனிதராகிறார் . பிரச்சனைகளுக்கு மேல் தனி மனித மாண்பு போற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நற்செய்தியின்படி வாழ முற்படுவோம் .

  • வழி. தவறினோரை வாஞ்சையுடன் அணுகுவோம் .
  • வன்சொல் தவிர்த்து வழிகாட்டி
  • வாழ்வுக்கு இலக்கணமாம் ஆண்டவரிடம் இணைந்து செல்வோம் !
ser ser

இருளைப் பழிக்காதே, ஒளியை ஏற்றிவை.

ஒரு நாள் குரு ஒருவர் தனது சீடர்களையெல்லாம் அழைத்து, அவர்களுள் மிகவும் சிறந்த சீடன் ஒருவனையும் , மிகவும் மோசமான சீடன் ஒருவனையும் தேர்ந்தெடுத்து, நீங்கள் இருவரும் நாட்டுக்குள் சென்று, மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்து வாருங்கள் எனச் சொல்லி அவர்களை நாட்டுக்குள் அனுப்பி வைத்தார் .

மக்களைச் சந்தித்து பத்து நாள்கள் கழித்து இருவரும் துறவற மடத்திற்குத் திரும்பினர் . நல்லவன் , நான் சந்தித்த எல்லாருமே நல்லவர்கள் என்றான் . தீயவனோ, நான் சந்தித்த எல்லாருமே தீயவர்கள் என்றான் . குருவோ, யாரும் நூற்றுக்கு நூறு நல்லவருமல்ல; நூற்றுக்கு நூறு தீயவருமல்ல. ஒவ்வொரு நல்ல மனிதருக்குள்ளிருக்கும் தீயதை நீக்குவதும் , தீய மனிதருக்குள்ளிருக்கும் நல்லதை வெளிக்கொண்டு வருவதும் துறவிகளாகிய நமது கடமையாகும் என்றார் .

கடவுள் தாம் படைத்த உலகத்தை நல்லது என்று கண்டார் [தொநூ 1:25]; தம் உருவிலே மானிடரைப் படைத்தார் [தொநூ 1:27]. மனிதர்கள் சோதனைக்கு உட்பட் டுத் தங்களது சுதந்தரத்தைத் தவறாகப் பயன்படுத்திய போது அவர்கள் மனம் காயப்பட்டது; அவர்களுக்குள் பாவம் புகுந்தது. அவர்களின் பாவம் அவர்களை ஆட்டிப்படைக்கத் தொடங்கியது. இயேசு கிறிஸ்துவினால் நேருக்கு நேர்   தடுத்தாட் கொள்ளப்பட்ட பவுலடிகளாரைக் கூட பாவச் சோதனை விட்டு  வைக்கவில்லை. அவர் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலே, நான் ஊனியல்பினன் ; பாவத்திற்கு அடிமையாக விற்கப்பட்டவன் ; நான் செய்வது என்னவென்று எனக்கே தெரிவதில்லை; எதைச் செய்ய  விரும்புகின்றேனோ அதை நான்   செய்வதில்லை : எதை  வெறுக்கின்றேனோ அதையே செய்கின்றேன் [உரோ 7:14-15]  என்கின்றார் .

ஆகவே நம்மில் யாரும் , நான் நூற்றுக்கு நூறு புனிதமானவன் , புனிதமானவள் என்று பெருமை பாராட்மக் கொள்ள முடியாது. நாம் அத்தனைபேரும் பாவிகளே [உரோ 3:9-18].

நாம் செய்ய வேண்டியிதல்லாம் ஒன்றே. இன்றைய நற்செய்தியும் , முதல் வாசகமும் சுட்டிக்காட்டுது போல, நம்மைச்   சுற்றியுள்ள பாவிகள் , தங்களது பாவங்களிலிருந்து வி டுதலை பெற அவர்களுக்கு உதவி செய்யவேண்டும் . இருளைப் பழிப்பதை விட விளக்கேற்றிவைப்பது நல்லது. இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் ' இறைவாக்கினர் எசேக்கியேலிடம் , மானிடா! நான் உன்னை இஸ்ரயேல்   வீட்டாருக்குக் காவலாளியாக ஏற்ப டுத்தியுள்ளேன் . என் வாயினின்று வரும் வாக்கைக் கேட்கும்போதெல்லாம் நீ என் பொருட்டு அவர்களை
எச்சரிக்க வேண் டும் [எசே 33:7] என்கின்றார் . நற்செய்தியிலே இயேசு, நமது சகோதர, சகோதரிகளின் குற்றங்களை எடுத்துக்காட்ட நம்மை அழைக்கின்றார் [மத் 18:15].

நாம் நம்மீது அன்புகூர்வது போல் , நம் அயலார் மீதும் அன்பு கூர  வேண்டும் [இரண்டாம் வாசகம் ].

மேலும் அறிவோம் :  

அறிவினான் ஆகுவ(து) உண்டா பிறிதின் நோய்
தம்சநாய்கபோல் போற்றாக் கடை (குறள் : 315).

பொருள் : பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பமாகக் கருதிப் பேணிப் போற்றாவிட்டால் ஒருவர் பெற்றுள்ள அறிவினால் பயன் எதுவும் இல்லை!

ser ser

உங்கள் எதிரிகளோடு உடன்பாடு

பயங்கரக் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட இளைஞனுடைய அப்பாவிடம் அவர் நண்பர் கேட்டார், "உங்கள் பையன் பயங்கரமாகக் குடிக்கிறானே அவனைக் கேட்டால் என்னr?"  அதற்கு அப்பா கூறினார். "நான் கேட்டால் அவன் கொடுக்கமாட்டான்." மகனைத் திருத்த வேண்டிய அப்பாவே மகனிடம் மதுபானத்தை எதிர்பார்க்கிறார். இது எப்படி இருக்குது?

பல தீய பழக்க வழக்கங்களில் ஈடுபட்டிருந்த ஒரு பையனை அனுடைய அப்பா திருந்தவில்லை. இறுதியில் அவன் சிறையில் அடைக்கப்பட்டான் அப்பா அவனைச் சிறையில் பார்க்கச் சென்றபோது மகன் அப்பாவிடம் சொன்னது

துள்ளி திரிகின்ற பருவத்தில் -என்
துடுக்கு அடக்கி -என்னைப்
பள்ளிக்கு அனுப்பாத - என்
தந்தையாகிய பாதகனே

உரிய காலத்தில் தன்னுடைய தவறுகளைச் கட்டிக்காட்டித் தன்னைத் திருந்தாத தகப்பனை அவனுடைய மகன் "பாதகனே" என்று அழைத்தான்.

தவறு செய்கிறவர்களைத் திருத்துவது நம்முடைய கடமை பெற்றோர்கள் பிள்ளைகளையும் நண்பர்கள் நண்பர்களையும் திருத்த வேண்டும். கூடிக் குடித்து  கும்மாளம் அடிப்பதற்காக நட்பு இல்லை. நண்பன் தவறு செய்யும்போது அவன் தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்துவதற்கே நட்பு உள்ளது

நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற்பொருட்டு (குறள் 784)

இவ்வுலகம் தீயவர்களால் கெடுவதில்லை. தீயவர்களின் தீச்செயல்களைக் கண்டு, கண்டனக் குரல் எழுப்பாமல்   இருப்பவர்களால் தான் உலகம் கெடுகிறது. இன்றைய அருள்வாக்கு வழிபாடு நாம் தீமை செய்பவர்களைத் திருத்த வேண்டும் என்று அறிவுறத்துகிறது. முதல் வாசகத்தில் கடவுள் இறைவாக்கினர் எசேக்கியேல் வாயிலாகக் கூறுகிறார். தீயவர்களை நாம் எச்சரித்தும் அவர்கள் தீமையில் செத்தால் அவர்கள் அழிவுக்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல. மாறாக தீயவர்களை நாம் எச்சரிக்காமல் அவர்கள் தீமையில்  இறந்தால், அவர்களுடைய அழிவுக்கு நாம் பொறுப்பாளிகள் .

இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து நாம் தீமை புரிபவர்களை எவ்வாறு திருத்த வேண்டுமென்று அறிவுறுத்துகிறார். தவறு இழைப்போரைத் தனிப்பட்ட முறையில் திருத்த வேண்டும் அது இயலவில்லை என்றால், ஒன்று அல்லது இரண்டு பேர் முன்னிலையில் அவரைத் திருத்த வேண்டும். அதுவும் நடக்கவில்லை என்றால், வழக்கைத் திருச்சபைக்குக் கொண்டுவரவேண்டும் திருச்சபையின் தீர்ப்புக்குக் கட்டுப்படாதவர் பிற இனத்தவருக்குச் சமம்! திருச்சபைக்குத தீர்ப்பு வழங்கும் அதிகாரம் உண்டு. அத்தீர்ப்புக்குக் கிறிஸ்தவர்கள் கட்டுப்பட்டவர்கள் என்பதை இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து வலியுறுத்துகிறார் கிறிஸ்தவர்களிடையே ஏற்படும் வழக்குகளைச் சிவில் நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்வதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறார் திருத்தூதர் பவுல் (1கொரி 6:1-8). மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டிய திருப்பணியாளர்களும் துறவறத்தாரும் சொத்துரிமைக்காக இன்று நீதிமன்றம் செல்வது நீதிபதிகளுக்கே அதிர்ச்சியூட்டுகிறது.

இருவர் ஒரு பொருள்மீது உரிமை பாராட்டி வழக்குமன்றம் செல்வதால் யார் பயனடைகின்றனர்? ஒரு பசுமாட்டின் மீது இருவர் உரிமை பாராட்டி நீதிமன்றம் செல்கின்றனர். ஒருவர் இது என் மாடு என்றுகூறிப் பசுவின் கொம்பைப் பிடித்து இழுக்கிறார். மற்றவர் "இது என் மாடு" என்றுகூறிப் பசுவின் வலைப் பிடித்து இழுக்க நடுவில் வழக்குரைஞர் பசுவின் மடியிலிருந்து பால் கரந்து குடித்துக் கொண்டிருக்கிறார்!. இருவர் நீதிமன்றத்துக்குப் போவதால் வழக்குரைஞர்களுக்குத் தான் இலாபம் இது தேவையா? நீங்கள் உங்கள் எதிரிகளோடு உடன்பாடு செய்யாமல் நீதிமன்றம் சென்றால், நடுவர் சிறையில் உங்களை அடைப்பார் கடைசிக் காசுவரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டர்கள்" (மத் 525-26) என்று கிறிஸ்து எச்சரித்துள்ளார் ஒரு காதலன் தன் காதலிக்கு எழுதிய கடிதத்தில் கொஞ்சம் தலைமுடியை வைத்து அனுப்பினான். ஏன்? என்று கேட்டதற்கு அவன் கூறினான் "என் காதலி என் கடிதத்தை மொட்டைக் கடிதம் என்று நினைக்கக்கூடாது" என்றான். இன்று திருச்சபையில் திருப்பணியாளர்கள் கூட ஒருவர் மற்றவருடைய பெயர் களங்கப்படும் விதத்தில் மொட்டைக் கடிதங்கள் எழுதுகின்றனர்; சுவரொட்டிகளில் பிறருடைய அந்தரங்க வாழ்வை அம்பலத்திற்குக் கொண்டுவந்து ஆனந்தம் அடைகின்றனர். இவர்களுடைய வக்கிரப் புத்தியால் தூய ஆவியாருக்கே மன உளைச்சல் ஏற்பட்டு மருந்துவ விடுப்பில் சென்று விட்டாராம்!

கிறிஸ்தவர்களிடையே தலைதூக்கும் பொறமை, மனக்கசப்பு கட்சி மனப்பான்மை பேய்த்தன்மை வாய்ந்தது என்கிறார் திருத்தூதர் யாக்கோபு (யாக் 3:13-16). திருச்சபையில் இடறலை உருவாக்கும அலகையின் கையாட்களின் "கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டித் தொங்கவிட்டு ஆழ்கடலில் அமிழ்த்துவது அவர்களுக்கு நல்லது" என்கிறார் ஆண்டவர் (மத் 18:6-7). ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் அமைதிக்குழு இருக்க வேண்டும் இக்குழு சமரச முயற்சியில் இடுபட வேண்டும் இக்குழுவின் நியாமான தீர்ப்புக்குக் கட்டுப்படாதவர்களைத் திருச்சபையிலிருந்து நீக்கிவிட வேண்டும். எத்தனை சட்டங்கள் இயற்றினாலும் அன்புதான் உச்சச் சட்டம். இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் கூறுகிறார் "அன்பே திருச்சட்டத்தின் நிறைவு (உரோ 13:10, பிறரைக் குறை கூறுவதிலும் பிறரை விமர்சனம் செய்வதிலும் அன்பே முதலிடம் பெற வேண்டும்.

அன்பே இல்லாத விமர்சனம் தவறு. விமர்சனமே இல்லாத அன்பும் தவறு. அன்போடு கூடிய விமர்சனமே சரியாகும்!

ser ser

அன்போடு நல்வழிப்படுத்துவோம்

நிகழ்வு

திருவிவிலிய அறிஞரான வில்லியம் பார்க்லே (William Barclay) சொல்லக்கூடிய நிகழ்வு இது. நகர்ப்புறத்தில் வளர்ந்த மூன்று இளைஞர்கள், தங்களுடைய படிப்பு தொடர்பாக சிற்றூரில் இருந்த ஒரு வீட்டில் தங்க வேண்டியிருந்தது. அந்த வீட்டை ஒட்டிப் பண்ணை நிலம் ஒன்று இருந்தது. அந்த வீட்டில் கோழி, ஆடு, மாடு என்று பலவும் இருந்தன. அவற்றுக்கு நடுவில் இருப்பது நகர்ப்புறத்திலிருந்து வந்திருந்த அந்த மூன்று இளைஞர்களுக்கும் புதிய அனுபவமாக இருந்தது.

ஒருநாள் அந்தப் பண்ணை நிலத்திலிருந்த இளங்கன்று ஒன்று எப்படியோ தப்பித்து பண்ணை நிலத்திலிருந்து ஊருக்குள் ஓடிவிட்டது. அதைப் பார்த்த நகர்ப்புறத்திலிருந்து வந்திருந்த மூன்று இளைஞர்களும் அதைப் பிடித்துக்கொண்டு வருவதற்கு அதன் பின்னாலேயே ஓடினார்கள். ஒருவழியாக அவர்கள் அதைப் பிடித்தும் விட்டார்கள்.

அவர்கள் அந்த இளங்கன்றைப் பிடித்ததும், அதைப் பண்ணை நிலத்திற்குக் கொண்டு வருவதற்கு பின்னாலிருந்து இருவர் தள்ளியும், முன்னாலிருந்து ஒருவர் அதன் கொம்பைப் பிடித்து இழுத்தும் பார்த்தார்கள். இளங்கன்றோ ஓர்அடிகூட நகராமல், அப்படியே முரண்டு பிடித்துக்கொண்டிருந்தது. அந்நேரத்தில் அங்கு வந்த கன்றுக்குச் சொந்தக்காரப் பெண்மணி அதன் வாயில் தன் விரல்களைச் சப்பக் கொடுத்துக்கொண்டு, மறுகையில் இருந்த வைக்கோலை அதன்முன் காட்டிக்கொண்டே முன்னால் நடந்துசென்றார். கன்றோ அவர் பின்னாலேயே சென்று, பண்ணை நிலத்தை அடைந்தது.

நடந்த எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த நகர்ப்புற இளைஞர்கள் அவரிடம், “நாங்கள் மூன்று பேரும் சேர்த்து இழுக்கும்பொழுது வராத கன்று, நீங்கள் அதன் வாய்க்குள் விரலைச் சப்பக் கொடுத்து, முன்னால் நடந்துசென்றதும், உங்கள் பின்னாலேயே வந்துவிட்டதே! அது எப்படி?” என்றார்கள். அதற்கு அந்தப் பெண்மணி, “இந்தக் கன்று உட்பட வழிதவறிப் போன யாரையும் கட்டாயப்படுத்தினால் அவர்கள் முரண்டுதான் பிடிப்பார்கள். மாறாக, அவர்களிடம் அன்போடு சொல்லிப் பார்த்தால், அவர்கள் மிக எளிதாக நல்வழிக்கு வந்துவிடுவார்கள்” என்றார்.

ஆம். அதிகாரத்தினாலோ, அடக்குமுறையினாலோ ஒருவரை நல்வழிக்குக் கொண்டுவர முடியாது; அன்பால்தான் ஒருவரை வழிக்குக் கொண்டுவர முடியும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலம் இருபத்து மூன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக் கேட்ட இறைவார்த்தை நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துச் சொல்கின்றது. ஆகையால், நாம் நெறிதவறி வாழக்கூடிய ஒருவரை எப்படி நல்வழிக்குக் கொண்டு வருவது...? நெறிதவறி வாழக்கூடிய ஒருவரை நல்வழிக்குக் கொண்டுவருவதில் நமக்கு இருக்கின்ற கடமை என்ன...? என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

நாம் ஒவ்வொருவரும் காவலாளியே!

இன்றைய நற்செய்தி வாசகம், நமக்கெதிராக ஒருவர் தவறு செய்கின்றபொழுது அல்லது ஒருவர் நெறிதவறிப் போகின்றபொழுது, அவரை எப்படி நல்வழிக்குக் கொண்டு வரலாம் என்பதைக் குறித்துப் பேசுகின்றது. இது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்பாக, நெறிதவறிப் போன ஒருவரை நல்வழிப்படுத்துவதில் நமக்கு இருக்கின்ற சமுதாயக் கடமை என்ன என்பதைக் குறித்து இன்றைய முதல்வாசகம் எடுத்துச் சொல்வதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

முதல் வாசகத்தில் ஆண்டவராக கடவுள் இறைவாக்கினர் எசேக்கியேலிடம், “நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்கும் காவலாளியாக ஏற்படுத்தியுள்ளேன்” என்கின்றார். “காவலாளியாக ஏற்படுத்தியுள்ளேன்” என்று ஆண்டவர் எசேக்கியேலிடம் சொல்லக்கூடிய சொற்கள், காயின் ஆண்டவரிடம் சொல்லக்கூடிய, “நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?” (தொநூ 4: 9) என்ற சொற்களை நமக்கு நினைவுபடுத்துபவையாக இருக்கின்றன. உண்மையில் நாம் ஒவ்வொருவரும் நம்மோடு இருப்பவர்களையும், இந்தச் சமூகத்தையும் எல்லாவிதமான ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றும் காவலாளிதான்.

ஆண்டவராகிய கடவுள் எசேக்கியேலிடம், நான் உன்னைக் காவலாளியாக ஏற்படுத்தியுள்ளேன் என்று சொல்லக் காரணம், இஸ்ரயேல் மக்கள் நெறிதவறி நடக்கின்றபொழுது, அவர்களுடைய தவற்றைச் சுட்டிகாட்டி, எச்சரிக்கவேண்டும் என்பதால்தான். ஆண்டவர் சொன்னதுபோன்று, இறைவாக்கினர் எசேக்கியேல் இஸ்ரயேல் மக்கள் தவறுசெய்கின்றபொழுது, அவர்களுடைய தவற்றைச் சுட்டிக்காட்டி, அவர்களை எச்சரிக்காவிட்டால், அவர்களுடைய இரத்தப்பழி அவர்மேல் விழும் என்றும், அவர் அவர்களுடைய தவற்றைச் சுட்டிக்காட்டி, அவர்களை எச்சரித்தால், அவர் தம் உயிரைக் காத்துக்கொள்வார் என்றும் கூறுகின்றார் ஆண்டவர்.

ஆம், ஓர் இறைவாக்கினர் அல்லது தலைவர் என்பவர் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்குக் காவலாளியாக இருந்து, அவர்கள் நெறிதவறிப் போய்விடாமல் காத்துக்கொள்ளவேண்டும்.

அன்போடு நல்வழிப்படுத்த வேண்டும்

நெறிதவறிச் செல்வோரை எச்சரித்து, அவரை நல்வழிக்குக் கொண்டுவரவேண்டும் என்று ஆண்டவர் எசேக்கியேலிடம் சொன்னார் எனில், இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடர்களிடாகிய நம்மிடம், நெறிதவறிச் செல்கின்ற ஒருவரை எந்தெந்த வழிகளில் எச்சரித்து, நல்வழிக்குக் கொண்டு வரலாம் என்று சொல்கின்றார்.

நெறிதவறிச் செல்லும் ஒருவரை நல்வழிக்குக் கொண்டு வருவதற்கு இயேசு மூன்று விதமான வழிமுறைகளைச் சொல்கின்றார். ஒன்று, தனியாகச் சென்று நெறிதவறியவரின் தவற்றைச் சுட்டிக்காட்டி, அவரை நல்வழிக்குக் கொண்டுவருதல். இரண்டு, இருவர் அல்லது மூவராகச் சென்று, நெறிதவறியவரை நல்வழிக்கு கொண்டு வருதல். இணைச்சட்ட நூல், ‘எந்தவொரு குற்றமும் இருவர் அல்லது மூவரது சாட்சியத்தாலேயே உறுதி செய்யப்படும்’ என்பதை (இச 19:5) இயேசு இங்கு இணைத்து, இருவர் அல்லது மூவர் மூலம் நெறிதவறிய ஒருவரை நல்வழிக்குக் கொண்டு வரலாம் என்கின்றார்.

நெறிதவறியவரைத் திருஅவை மூலம் எச்சரித்து, அவரை நல்வழிக்குக் கொண்டு வருதல் இயேசு சொல்லும் மூன்றாவது வழிமுறை. இதற்கும் ஒருவர் செவிசாய்க்காவிடில் அவர் வேற்றினத்தார் போலவும், வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும் என்கின்றார் இயேசு. ஆம், ஒருவர் நெறிதவறிப் போய்விடக்கூடாது என்பதற்காக இன்னொருவர் எச்சரிக்கின்றபொழுது, அதைக் கேட்டு, அவர் நல்வழிக்கு வந்தால் அவருக்கு நல்லது. அதை விடுத்து, விடுத்த எச்சரிப்பையும் கேளாமல், தொடர்ந்து நெறிதவறி நடந்தால், முதல் வாசகத்தில் நாம் வாசிக்கக் கேட்டது போன்று, அவர் தன் குற்றத்திலேயே சாகவேண்டியததான். நெறிதவறிச் செல்வோரை மேலே சொல்லப்பட்ட மூன்றுவிதமான வழிமுறைகளைப் பின்பற்றி, ல்வழிக்குக் கொண்டுவருகின்றபொழுது, இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் சொல்வது போன்று, திருச்சட்டத்தின் நிறைவான அன்போடு நல்வழிப்படுத்தினால், அது நலம்பயக்கும்.

மனமொத்து இருக்கின்ற இடத்தில் இறைவன் இருக்கின்றார்

நெறிதவறிச் செல்வோரை அன்போடு நாம் நல்வழிப்படுத்தும்பொழுது, அவரும் நல்வழிக்கு வந்தார் எனில், அதைவிட மகிழ்ச்சியான செயல் வேறொன்றும் கிடையாது. ஏனெனில் நெறிதவறி நடக்கின்ற ஒருவர் நல்வழிக்கு வருகின்றபொழுது அங்கு மனமொத்த நிலை ஏற்படும். அப்படி மனமொத்த நிலை ஏற்படும்பொழுது, நாம் வேண்டுவது கேட்கப்படும். மட்டுமல்லாமல், அங்கு இறைவனின் உடனிருப்பும் இருக்கும். இதைத்தான் இயேசு இன்றைய நற்செய்தியின் இறுதியில், “இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கின்றேன்” என்கின்றார்.

ஆகையால், நெறிதவறிச் செல்லும் ஒருவர் நல்வழிக்கு வரவேண்டும். அப்படி அவர் நல்வழிக்கு வரும்பொழுது, எல்லாரும் மனமொத்திருந்தால் அங்கே இறைவன் குடிகொண்டிருப்பார் என்பது உறுதி. நாம் நல்வழியில் நடந்து, மனமொத்து வாழத் தயாரா? சிந்திப்போம்.

சிந்தனை

‘ஒரு நல்ல தலைவர் யாரெனில், தனக்குக் கீழுள்ள ஒருவர் தவறு செய்கின்றபொழுது, அவர் மனம்நோகாவாறு அவருடைய தவற்றைச் சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துபவரே’ என்பார் ஜான் வுடன் என்ற அறிஞர். ஆகையால், நாம் பிறர் தவறு செய்கின்றபொழுது, அவரை அன்போடு திருத்தி நல்வழிப்படுத்துவோம். நாமும் நல்வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser ser

உங்கள் உறவு தொடரும்!

கிளாடியேட்டர் திரைப்படத்தில், தன் மாணவனை அரங்கத்திற்குள் அனுப்புகின்ற அவனுடைய ஆசிரியர், 'உனக்கு விடுதலை வேண்டுமென்றால், மக்களை வெற்றி கொள்!' என்று சொல்லி அனுப்புவார். மக்களை அல்லது மனிதர்களை வெற்றிகொள்தல் என்பது அவர்கள்மேல் உரிமை பாராட்டுதல். ஆனால், நாம் சொல்வது போல இது எளிதல்ல. ஏனெனில், மனிதர்கள் (அ) மாறக்கூடியவர்கள், (ஆ) விருப்பும் வெறுப்பும் பாராட்டுபவர்கள், மற்றும் இவற்றுக்கும் மேலாக (இ) அவர்கள் மறைபொருள்கள், ஏனெனில், அவர்களது உள்ளத்தில் இருப்பது அடுத்தவருக்குத் தெரியாது. ஆனால், நம் குடும்ப மற்றும் குழும உறவுகளில் நாம் பெருந்தன்மையோடு இல்லையென்றால், உறவு பல நேரங்களில் முறிந்துவிடும். பெருந்தன்மையோடு இருக்கும் ஒருவர் அனைவர்மேலும் உரிமை பாராட்டுவார்.

இன்றைய இரண்டாம் வாசகத்திலிருந்து (காண். உரோ 13:8-10) நம் சிந்தனையைத் தொடங்குவோம். புனித பவுல் உரோமையருக்கு எழுதும் தனது கடிதத்தின் நிறைவில், கிறிஸ்தவ வாழ்வு பற்றிய அறிவுரையைத் தருகின்றார். அதில், 'நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும்' என்றும், 'அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. அன்பே திருச்சட்டத்தின் நிறைவு' என்கிறார். ஆக, பவுலைப் பொருத்தவரையில், அன்பு செய்யும் ஒருவர் அனைத்துத் திருச்சட்டங்களையும் கடைப்பிடிப்பவர் ஆகிறார். இந்த வார்த்தைகளின் பின்புலத்தில்தான், புனித அகுஸ்தினாரும், 'அன்பு செய். பின்னர் என்ன வேண்டுமானாலும் செய்!' என்கிறார். ஆக, நாம் அன்பு செய்யும் ஒருவருக்கு நாம் ஒருபோதும் தீங்கு நினைக்கவோ, தீங்கிழைக்கவோ செய்யாது. ஏனெனில், 'அன்பு இழிவானதைச் செய்யாது, தன்னலம் நாடாது, எரிச்சலுக்கு இடம் கொடாது, தீங்கு நினையாது ... அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும், அனைத்தையும் நம்பும், அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும், அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்' (காண். 1 கொரி 13:5,7).

ஆக, அன்பு என்னும் சொல், வெறும் உணர்வு என்ற நிலையில் இல்லாமல், செயல்வடிவம் பெற பவுல் அழைக்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 18:15-20), நம்பிக்கையாளர்களின் குழுமத்தில் ஏற்படும் உறவு உரசல்களை எப்படி சரி செய்வது என்பதை இயேசு எடுத்துரைப்பதாக மத்தேயு பதிவு செய்கிறார். இது மூன்று நிலைகளில் நடக்கிறது: (அ) ஒற்றைக்கு ஒற்றை சந்தித்து உரையாடுவது. (ஆ) ஒன்று அல்லது இரண்டு பேரைக் கூட்டிச் சென்று உரையாடுவது. (இ) திருச்சபையிடம் சொல்வது. இந்த மூன்று படிகளுக்கும் அடிப்படையாக இருக்கின்ற காரணிகள் மூன்று: (அ) அடுத்தவரை இழப்பது அல்ல, மாறாக, வெற்றி கொள்வதே நம்  முதன்மையான இலக்காக இருக்க வேண்டும், (ஆ) நான்தான் ஒப்புரவுக்கான முயற்சியை முன்னெடுக்க வேண்டும். (இ) தனிமனித மாண்பும் தனியுரிமையும் மதிக்கப்பட வேண்டும்.

மேற்காணும் மூன்று காரணிகளும் அமைய வேண்டுமென்றால், 'நான் ஒரு காவலாளி' என்ற எண்ணம் எனக்கு வேண்டும். அதாவது, நான் மற்றவருக்கு பொறுப்பாளர். ஏறக்குறைய கடவுள்போலச் சிந்திக்க வேண்டும். ஒரு பறவையின் இறகு கீழே விழுந்தாலும், அதற்கு தான் பொறுப்பு என உணர்பவர் கடவுள். அதுபோல, என்னோடு உறவுநிலையில் இருக்கும் அனைவர்மேலும் உரிமை பாராட்டுவதுதான் காவலாளி நிலை. இந்த நிலைக்கு இறைவாக்கினர் எசேக்கியேலை அழைக்கிறார் கடவுள் (காண். முதல் வாசகம், எசே 33:7-9). காவலாளியாக நியமிக்கப்பட்டுள்ள எசேக்கியேல் கடவுளின் வாக்கைக் கேட்டு, மக்களை எச்சரிக்க வேண்டும். அதாவது, மக்கள் அழிந்துபோகாமல் பார்த்துக்கொள்வது காவலாளியின் வேலை.

ஆக, அன்பு என்ற ஒற்றைச் சொல்லால் கட்டப்பட்டு, அடுத்தவரை வெற்றி கொள்வதை மட்டுமே தன் இலக்காகக் கொண்டு, மற்றவருக்கான காவலாளியாகத் தன்னையே அடையாளப்படுத்தும் ஒருவரால்தான் உறவு தொடரும். உறவு தொடரும் அந்த இடத்தில் இறைவன் இருக்கிறார்.

இறுதியாக, கடின உள்ளமும் பிடிவாத குணமும் உறவை நீட்டிக்க விடாமல் செய்யும் காரணிகள். ஆகையால்தான், 'உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்!' (காண். திபா 95) என எச்சரிக்கிறது இன்றைய பதிலுரைப் பாடல்.

கொரோனா கால லாக்டவுன் முடிந்து ஆலயங்கள் திறக்கப்படும் இந்த வாரத்தில், உறவுகள் தொடரட்டும் ... சமூக இடைவெளியோ! முகக்கவசங்கள் அணிந்து அடுத்தவரின் முகத்திற்கே கவசமானால் உறவுகள் கைவசம்!

ser

அன்புடன் கடிந்து கொள்வதா?

ஒரு ஊரில்  மதன்  பாலு என்ற நண்பர்கள் இருவர் வாழ்ந்து வந்தனர். இருவருமே சிறுவயது முதல் ஒன்றாகப்படித்தவர்கள். இணை பிரியா தோழர்களாக வலம் வந்த இவர்களை ஊரே மெச்சியது. இவர்கள் தங்கள் பள்ளிப் படிபை முடித்து கல்லூரிக்குச் சென்ற பிறகும் இவர்களது நட்பு தொடர்ந்தது.இவ்வாறு நாட்கள் கடந்தன. கல்லூரியில் இவர்களுக்கு மேலும் சில நண்பர்கள் கிடைத்தனர். ஆனால் ஒருசிலருடைய தவறான வழிகாட்டுதலால் பாலு சில தாகாத பழக்கங்களுக்கு அடிமையாவதை மதன் அறிந்தான். தன் நண்பனை அப்படியே விட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த மதன் , பாலுவிடம் அவன் தனியாக இருக்கின்ற சமயத்தில் அவன் தவறுகளை சுட்டி காட்டி தீய நண்பர்களை விட்டு விலகுமாறு கூறினான். தன் நண்பன் தன்னுடைய நன்மைக்காகத்தான் சொல்கிறான் என்பதை பாலு உணரவே இல்லை. மதனுக்கு தன் மேல் இருந்த அன்பு குறைந்து விட்டதாலேயே தன்னை குறை கூறுகிறான் என எண்ணினான்.இருவருக்கும் உறவு விரிசல் அதிகமானது. பாலுவின் தீய பழக்கங்கள் அதிகமானது. மதன் தட்டிக் கேட்பதை நிறுத்தவில்லை. ஒருமுறை பாலு தன் தவறின் பொருட்டு மாட்டிக்கொண்டான். அவனைத் தவறு செய்ய தூண்டிய நண்பர்கள் யாரும் அவனருகில் இல்லை. அப்போது தன் நண்பன் மதனிடம் சென்று மன்னிப்பு கேட்ட பாலு தட்டிக்கொடுப்பதில் மட்டுமல்ல தட்டிக் கேட்பதிலும் உண்மையான அன்பு இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன் என்று கூறினான். அவன் வாழ்வின் திசை மீண்டும் சரியானது.இருவரின் நட்பும் ஆழமானது.

உங்கள் சகோதர சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும் போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள் என்று இயேசு
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூறுவதை நாம் வாசிக்கிறோம். அவ்வாறு செய்யும் போது குற்றம் செய்தவர் தன்னிலை உணரவும் தன் தவறைத் திருத்திக்கொண்டு புது வாழ்வு வாழவும் இருவருக்கும் இடையேயான உறவு வளரவும் வாய்ப்பிருக்கிறது என்பதையே இயேசு சுட்டிக்காட்டுகிறார். ஆனால் பல சமயங்களில் பிறரின் தவறுகளை அவரிடம் முதலில்  கூறாமல் மற்றவர்களிடம் கூறி பகிரங்கப்படுத்தி விடுகிறோம்.அப்படியே தனியாக அவரிடமே எடுத்துக்கூறினாலும் நம்முடைய மொழி அன்புடையதாய் அல்லாமல் கடினமானதாகவே இருக்கிறது. இதனால் மிஞ்சுவது பகையே.  ஒருவர் செய்த குற்றத்தை எடுத்துக்காட்டுவதன் நோக்கம் நம்மை நாமே நல்லவர் என்று காட்டுவதாக அமையக் கூடாது. மாறாக நாம் அவர்மீது  நாம் கொண்டுள்ள அன்பையும் அக்கறையும் எடுத்துக்காட்டி உறவை சரிசெய்ய அழைப்பு விடுப்பதாகவே அமைய வேண்டும் என்பது தான் இயேசு இன்று நமக்கு கூறும் செய்தி.

அனைவரும் நல்வாழ்வு அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் நம் விண்ணகத் தந்தை.எவ்வாறு தாய் தந்தையர் தன் பிள்ளைகள் தவறு செய்யும் போது கண்டித்துதத் திருத்துவார்களோ அவ்வாறே அவரும் பிள்ளைகளாகிய நாம் தீய வழி செல்லும் போது நம்மைக் கண்டித்துத் திருத்துகிறார். அது அவருடைய அன்பின் வெளிப்பாடு. அதே மனநிலை பெற்றவர்களாய் நாமும் வாழ வேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பம். இன்றைய முதல்வாசகத்தில் இறைவாக்கினர் எசேக்கியேல் மூலமாக அவர் விடுக்கும் அழைப்பு இதுதான். நம் கண்முன் ஒருவர் தீய வழியில் செல்லும் போது அவருடைய தவறை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்த வேண்டியது நம்முடைய கடமை. வாய்ப்பு கிடைத்தும் நாம் அதை செய்யா விட்டால் அத்தீமையில் நமக்கும் பங்குண்டு என்பதை நாம் மறந்து விடக்கூடாது. யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற எண்ணத்தோடு பிறர் நம் கண்முன் அழிந்து போவதைப் பார்த்துக் கொண்டிருந்தால் அவர் அழிவிற்கு நம் காரணமாகிவிடுவோம் என்பதையும் நாம் உணர வேண்டும்.அதே போல் நம்முடைய தவறுகளை யாராவது சுட்டிக்காட்டி மனம்மாறி வாழ வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்போது அதை அன்போடு ஏற்றுக்கொள்ளக்கூடிய மன்ப்பக்குவம் நம்மிடமும் இருக்க வேண்டும்.

அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும் என்று புனித பவுல் இரண்டாம் வாசகத்தில் கூறுகிறார். உண்மையான அன்பு நல்லவற்றை தட்டிக்கொடுக்கும். தீயவற்றை தட்டிக் கேட்கும். பிறருக்கு என்றுமே தீங்கிழைக்காது. அனைவரையும் நல்வழிப்படுத்தி இறைவனை நம்முள் உணரச்செய்யும்.

 இன்றைய வழிபாடு காட்டும் இந்த அன்பு வழிப்பாதையில் வாழ நாம் தயாராக இருக்கிறோமா? உண்மையான அன்பு நம்மை ஒழுக்கத்தின் பாதையில் நடத்துகிறது என்பதை உணர்கிறோமா?

அன்புடன் பிறர் நம் தவற்றை கடிந்து கொள்ளும்போது அதை ஏற்றுக்கொள்கிறோமா?
அதே அன்புடன் பிறர் செய்த குற்றங்களை பக்குவமாய் எடுத்துக்கூறி அவரை நல்ழிப்படுத்த முயல்கிறோமா? சிந்திப்போம்.  இறையருள் இறைஞ்சுவோம்.

இறைவேண்டல்

அன்போடு எம்மை கண்டித்துத் திருத்தும் தந்தையே!  உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள் உமது அன்பை மனதிலே கொண்டு எம்முடன் வாழ்வோரின் தவறுகளை பக்குவமாய்  எடுத்துக்கூறி நல்வழிப்படுத்தவும்,எம்முடைய தவறுகளை பிறர் திருத்தும் போது நாங்கள் நல்வழி வாழ நீர் எங்களுக்குத் தந்த அரிய வாய்ப்பாக கருதி எங்களைத் திருத்திக் கொள்ளவும், இதன் மூலம் ஒருவருக்கொருவர்  அன்புறவில் ஆழமாக வளரவும் அருள்தாரும். ஆமென்.

ser

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com