மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

ஆண்டின் 20ஆம் ஞாயிறு
முதலாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா. 56:1, 6-7 | உரோமையர் . 11:13-15 | மத்தேயு 15:21-28

ser

கனானியப் பெண்

இன்றைய வார்த்தை வழிபாட்டிலே நம்மைச் சிந்திக்கத் தூண்டும் வகையிலே விசுவாசத்தைப் பற்றிய அழகிய ஒரு நிகழ்ச்சி தரப்பட்டுள்ளது.

விசுவாசம் பற்றிப் பல வகையிலே நாம் விளக்கம் பெறலாம். ஆனால் இன்றைய நற்செய்தி தரும் விசுவாசம் என்பது புதுமையாக உள்ளது. விசுவாசம் நம்பிக்கை என்பது நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை எனலாம். விசுவாசம் என்பது இரு துருவங்கள் ஒன்றாகச் சந்திப்பது. எப்படி? வாக்கு மாறாதவர் தேவன். தன் உடன்படிக்கையை நிறைவேற்றுவதில் தவறாதவர். நம்மை நோக்கி வருகிறார். எனவே உடன்படிக்கையில், நம் வாக்குறுதியில் தவறும் நாம் அந்த உன்னத தேவனை நெருங்க, அவரோடு ஒன்றிக்க நடக்கும் சந்திப்புத்தான் விசுவாசம்.

இதற்குத் தகுந்த சான்றுதான் இன்றைய நற்செய்தியில் தரப்பட்ட கனானேயப் பெண்ணின் விசுவாசம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக பாளை மறைமாவட்டம் புளியம்பட்டி என்ற திருத்தலத்திலே நான்கு குருக்களோடு சேர்ந்து ஒரு கடைசிச் செவ்வாய்க் கிழமை மதியம் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தேன். காணிக்கைப் பவனி முடிந்து எழுந்தேற்றம் தொடங்கும் முன்பாக நெற்றியிலே திருநீறு வார்த்த ஒரு அம்மா, பீடத்தில் வந்து சிறிது மலர்கள், இரண்டு ரூபாய், அதோடு ஒரு பாத்திரத்தில் அரிசி மாவும் பக்தியோடு பீடத்தில் வைத்து பக்கத்திலே அவருக்குத் தெரிந்த நிலையிலே மண்டியிட்டு செபித்தார். நடுவில் நின்ற குருவுக்கு இந்த நிகழ்ச்சியைக் கண்டு சிறிது கோபம், எரிச்சல் தென்பட்டது. கீழே தள்ளச் சொன்னார். அருகில் நின்ற ஒரு சிலர் குருக்களும் இப்படி காட்சி தந்தார்கள். ஆனால் யாரும் கீழே தள்ளவில்லை . ஆனால் பலி முடிந்தபின் அந்தப் பெண்மணி எங்களை நெருங்கி வந்து, சுவாமி! என் மீது கோபப்பட்டுவிடாதீர்கள். நான் ஒரு இந்துப் பெண். கடந்த ஆண்டு இதே நாளில் என் கணவன் என்னை விதவையாக விட்டுச் சென்றார். அதனால் இறைவனுக்கு ஏதாவது காணிக்கை ஒப்பு கொடுக்க விரும்பினேன் அவரது நினைவாக. இதற்குச் சரியான இடமும் நேரமும் நீங்கள் நிறைவேற்றும் பூசைதான் என நினைத்தேன். ஏனெனில் கடவுள் உங்கள் காணிக்கையை ஏற்றுக் கொள்ளும்போது என் காணிக்கையையும் ஏற்றுக்கொள்வார் அல்லவா! நான் செய்வது தவறுதலாக இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் என்றாள் அந்தப் பெண். இந்த வார்த்தைகள் எங்களை அப்படியே மவுனத்தில் ஆழ்த்தி, அவளது விசுவாசத்தை எண்ணி மகிழ்ச்சியும், பிரமிப்பும் அடைய வைத்தன.

சமயத்தில் நாம் கடவுளின் மக்கள். நமது விசுவாசமே உயர்ந்தது என எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம்மைச் சாராத சிலர் விசுவாசத்தில் ஊன்றியவர்களாய், அர்ப்பணத்தில் நிறைவுள்ளவர்களாய் இறைவனோடு இரண்டறக் கலந்தவர்களாக வாழ்வதை நாம் பார்க்க முடியும். அதற்குச் சான்றுதான் கனானியப் பெண். இவள் ஒரு புறவினத்தாள். கொச்சைத் தமிழிலே சொல்ல வேண்டுமானால் ஒரு அஞ்ஞானி . தன் எளிய விசுவாசத்தோடு இயேசுவை நெருங்குகிறாள். தன் அர்ப்பணக் காணிக்கையாக தன் மகளை முன் வைக்கிறாள். என் மகளை குணமாக்கும் என்று வேண்டுகிறாள்.

சீடர்களோ (குருக்களோ) முணு முணுக்கிறார்கள். கோபம் அடைகிறார்கள். எரிச்சல்படுகிறார்கள். இயேசு இல்லையென்றால் அடித்தே துரத்தியிருப்பார்கள். இவர்களையும் தொட வேண்டும் என்ற சிந்தனையில் நம் இறைவன் இயேசு ஒரு கொள்கையைச் சொல்லுகிறார். நான் இஸ்ரயேல் மக்களுக்கல்லவா சொந்தம். அவர்களே புதுமைப் பெறும் வரம் பெற்றவர்கள்.

ஆனால் அந்தப் பெண்ணின் விசுவாசத் தத்துவத்தைப் பாருங்கள். அவர்கள் உம் மக்கள் தான். நீ கூறியதுபோல நாங்கள் நாய்கள் தான். ஆனால் அந்த நாய்களுக்கு மேசையில் இருந்து கீழேவிழும் துண்டுகளைப் பொறுக்கித் தின்ன உரிமையில்லையா? என்று கேட்கிறாள்.

இயேசுவின் பதிலைப் பாருங்கள்: அம்மா! உன் விசுவாசம் பெரிது. நீ போகலாம். உன் மகள் குணமாகிவிட்டாள். எனக்குத் தெரிந்த மட்டும் விவிலியத்தில் உன் விசுவாசம் பெரிது என்று வேறுயாரையும் இயேசு வாழ்த்தியதாக நான் காணவில்லை. இந்த புறவினத்தாளை பற்றித்தான் கூறியுள்ளார்!

இன்று அதே ஆண்டவர் நம்மைப் பார்த்து ஜாண், அந்தோனி, ஆரோக்கியராஜ், பீட்டர் ராஜ், ஜெபமாலை உன் விசுவாசம் பெரிது என்று சொல்வாரா?

இன்றைய முதல் வாசகத்திலே இசையாஸ் கூறியதுபோல, தன்னை மதித்து, தன் உடன்படிக்கையின் மக்களாக வாழ விரும்பும் அனைவரின் காணிக்கைகளையும் செபங்களையும் ஏற்றுக் கொள்வதாக வாசிக்கின்றோம். இதையே 2-ம் வத்திக்கான் சங்கம் பிற சமயம் பற்றியக் கொள்கைத் திரட்டில் தன் மகிமையை வெளிப்படுத்தபிற மறைகளையும், வேதங்களையும் பயன்படுத்துகிறார் பழைய ஏற்பாட்டில் நிறைவேற்றியதுபோல. எனவே பரிசுத்த ஆவியானவர் செயல்பட வரையறைகள் இல்லை என்பது ஆணித்தரமாகத் தரப்படுகிறது. எனவே நம்மில் ஒருவகையான தற்பெருமையில் தோன்றும் திருப்தி நம் விசுவாசத்தை ஆழப்படுத்தாமல் விடலாம். அது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகக்கூட இருக்கலாம். எப்படி பரிசேயர் தாங்களே கடவுளின் மக்கள், தங்களுக்கே கடவுள் சொந்தம், வான் வீடும் அவர்களது பட்டா பூமி என்று கருதியது போல நம்மிலே அந்த உணர்வுகள் தோன்றலாம். அதனால் நாமே மிக நல்லவர் - நாமே எல்லாம் தெரிந்தவர் - நாமே வேதத்தை அனுசரிப்பவர் என்ற சிந்தனை மேலோங்கி ஆவியானவர் நம்மிலே செயல்பட நாம் தடையாக இருக்கலாம்.

  • இன்று ஆண்டவர் தரும் செய்தி, பிறவினத்தாரின் விசுவாசம் - அவர்களின் காணிக்கை அவர்களது பரிகார முயற்சி, உடன்படிக்கை செபம் போன்றவை, உன் பக்தி முயற்சிகளைவிட உயர்ந்த நிலையில் இருக்கும் கற்றுக்கொள்ளத் தவறாதே என்பதாகும்.
  • இந்தகனானேயப் பெண்ணைப் போல என்னை நெருங்கி வா, விலகி விடாதே. நீயும் நிறைவு பெறுவாய் எனக் கூறுகிறார். கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை (லூக். 1:37). விசுவாசத்தால் எல்லாம் கூடும் (மாற்கு 9:23).
ser ser

கடவுள் எல்லாருக்கும் எல்லாமுமாய்த் திகழ்பவர்

அதோ அந்தப் பறவைபோல வாழ வேண்டும்;
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்;
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்;
இல்லாதார் இல்லாத நிலை வேண்டும்
என்று ஆசைப்படுகின்றவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்களின் இனம், மொழி, நாடு அனைத்தையும் கடந்து நின்று, அனைவர்க்கும் வரம் தருபவர் இறைவன் என்ற உண்மையை இன்றைய திருப்பலி வாசகங்கள் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.

முதல் வாசகம்: இங்கே இறைவன், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைமன்றாட்டின் வீடு (எசா 56:7ஆ) என்கின்றார்.

இரண்டாம் வாசகம்: இங்கே புனித பவுலடியார் பிற இனத்தாராகிய உங்களுக்குச் சொல்கின்றேன் : உங்களுக்குத் திருத்தூதராய் இருக்கும் நான் என் பணியைக் குறித்துப் பெருமை கொள்கின்றேன் என்கின்றார்.

நற்செய்தி : இங்கே இஸ்ரயேல் குலத்தைச் சேராத பெண்ணொருத்தியைப் பார்த்து இயேசு, அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் என்கின்றார்.
இறைவன் எல்லாருக்கும் எல்லாமுமாய்த் திகழ்பவர்.
இதோ நமது காலத்திலே நடந்த இரு நிகழ்வுகள்!

அன்று தனது தாயின் சொல்லிற்கிணங்க தண்ணீரைத் திராட்சை இரசமாக்கிய இயேசு இன்றும் லூர்துநகர், பாத்திமா நகர், வேளை நகர், பூண்டி போன்ற இடங்களில் புதுமை செய்துவருகின்றார் என்பதை ஊரறியும், ஏடறியும்.
இதோ உலகெல்லாம் போற்றும் வேளாங்கண்ணியிலே தனது அன்னையின் வழியாக இயேசு செய்த இரு புதுமைகள் :

பால்காரப் பாலகனின் பானையிலிருந்த பாலைப் பொங்கச் செய்தது.
முடவனான மோர்காரச் சிறுவனை எழுந்து நடக்க வைத்தது.

பால்காரப் பாலகனும், மோர்காரச் சிறுவனும் கிறிஸ்தவர்கள் அல்லர். இருவரும் பிற மறையைச் சேர்ந்தவர்கள்!

ஆம். கடவுள் எல்லாரையும் தனது குழந்தைகளாகப் பாவித்து, எல்லாருக்கும் வரம் தரும் நல்லவர். இறைவனின் இனிய குழந்தைகளாக வாழ நாமும் வேற்றுமை பாராட்டாது எல்லாரையும் அன்பு செய்து, எல்லாருக்கும் உதவி செய்து வாழ்வோம்.


மேலும் அறிவோம் :

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு (குறள் : 215).

பொருள் : உலக மக்களால் போற்றப்படும் பொதுநல நாட்டம் கொண்ட சான்றோரின் செல்வமும் அறிவும் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் ஊருணியானது நீரால் நிறைந்து விளங்குவது போன்றதாகும்.

ser ser

நிறைவாகச் செபிக்கிறவர், நிறைவான ஆற்றல் பெற்றவர்.

ஒரு மனைவி தன் கணவரைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்: "என் கணவர் தெய்வம் மாதிரி. நான் சொல்லுற எதையும் காதிலே வாங்கிக்க மாட்டார்." கடவுளுக்குக் காது இருக்கிறதா? அவர் மனிதருடைய அபயக் குரலைக் காதில் வாங்கிக் கொள்கிறாரா? என்று பலர் நினைக்கின்றனர். இக்கேள்விக்கு விவிலியம் கூறும் பதில் : "செவியைப் பொருத்தியவர் கேளா திருப்பாரோ? கண்ணை உருவாக்கியவர் காணாதிருப்பாரோ?" (திபா 94:9). ஆனால் ஒரு சில நேரங்களில் கடவுள் நமது மன்றாட்டுகளுக்கு உடனடியாகச் செவிமடுக்காமல், காலம் தாழ்த்தி, நமது நம்பிக்கையைப் புடமிட்டுச் சோதிக்கிறார் என்கிறார் புனித பேதுரு. "அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப் படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள்" (1 பேது 1:7).

இன்றைய நற்செய்தியில் பிற இனத்தைச் சார்ந்த கனானியப் பெண்மணியின் நம்பிக்கை சோதிக்கப்படுகிறது. தன் மகளைக் குணப்படுத்த வேண்டுமென்று அவர் இயேசுவின் பின்னால் கத்திக்கொண்டு போகிறார். ஆனால் கிறிஸ்துவோ அவரது குரலைக் காதில் வாங்கிக் கொள்ளாதது போல் நடந்து கொள்கிறார். அது மட்டுமல்ல, பிற இனத்தாரை நாய்க்கு ஒப்பிடுகிறார். ஒருவர் தன் தாய்மாமனுக்குக் கடிதம் எழுதியபோது, அன்புள்ள தாய்மாமனுக்கு என்று எழுதுவதற்குப் பதிலாக தவறுதலாக, அன்புள்ள நாய்மாமனுக்கு' என்று எழுதிவிட்டார். அதனால் பயங்கரச் சண்டை மூண்டது.

இயேசுவின் காலத்தில் யூதர்கள் பிற இனத்தாரை நாய்கள் என்று அழைத்தனர். அந்த வழக்காற்றைப் பயன்படுத்துகிறார் இயேசு . ஆனால் அது அவர் அப்பெண்ணின் நம்பிக்கையைச் சோதிக்க வைத்த ஓர் அமிலப் பரிசோதனை. அப்பரிசோதனையில் அப்பெண் வெற்றி பெறுகிறார். இயேசுவின் சொல்லை வைத்தே அவர் இயேசுவின் மேல் வெற்றி கொள்கிறார். பிள்ளைகள் சாப்பிடும் போது சிதறி விழுகின்ற உணவை நாய்கள் சாப்பிடுவதில்லையா? என்று சொல்லி இயேசுவையே வியப்புக் கடலில் ஆழ்த்துகிறார். இயேசு அவரின் நம்பிக்கையைப் பாராட்டி, "அம்மா உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்" (மத் 15:28) என்று கூற, அப்பெண்ணின் மகள் குணமடைகிறாள்.

கடவுள் யூத இனத்தாருக்கு மட்டுமல்ல பிற இனத்தாருக்கும் கடவுள். இன்றைய முதல் வாசகத்தில் பிற இனத்தாரைக் குறித்து கடவுள் கூறுகிறார்: "அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன். இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச் செய்வேன்" ( எசா 56:7).

மீட்பின் வரலாற்றில் பிற இனத்தார் கிறிஸ்துவை மெசியாவாக ஏற்ற நிலையில், யூத இனத்தார் அவரை மெசியாவாக ஏற்றுக் கொள்ளாததற்கு உரிய காரணத்தை இன்றைய இரண்டாம் வாசகத்தில் ஆழமாக விளக்குகிறார் திருத்தூதர் பவுல். யூத இனத்தார், பிற இனத்தார் மீட்படைந்ததைக் கண்டு பொறாமைப்பட்டு அவர்களும் கிறிஸ்துவை ஏற்று மீட்படைவர் என்கிறார்.

ஒரு வீட்டில் நான்கு வயது சிறுவனுக்கு அம்மா ஒரு தட்டில் உணவு வைத்துக் கொடுக்கிறார். அவன் அதை உண்ண மறுக்க, அவனிடம், "உன் சாப்பாட்டை உன் அண்ணனுக்குக் கொடுக்கப் போகிறேன்" என்று சொல்கிறார். உடனே அச்சிறுவன் தன் சாப்பாட்டை அண்ணன் சாப்பிடுவதா? என்று பொறாமைப்பட்டு உடனடியாக சாப்பிடுகிறான். அவ்வாறே தாங்கள் பெறவேண்டிய மீட்பு பிற இனத்தாருக்குப் போய்விட்டதே என்று யூத இனத்தார் ஆதங்கம் அடைவர். அப்போது அவர்களும் கிறிஸ்துவை ஏற்று மீட்படைவர் என்கிறார் புனித பவுல். கடவுளுடைய மீட்பின் முழுமையான திட்டம் உரிய காலத்தில் திண்ணமாக நிறைவேறும். ஏனெனில் புனித பவுல் கூறுகிறார்: " கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள் கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை" (உரோ 11:25).

செபத்தின் வல்லமை பற்றி புனித ஜான் மரி வியான்னி பின்வருமாறு கூறியுள்ளார். கடவுள் உலகை ஆளுகிறார். ஆனால் செபிக்கத் தெரிந்த மனிதர் கடவுளை முடியும்' என்று சொல்ல வைக்கிறார். கனானியப் பெண்மணி இப்புனிதரின் கூற்றை எண்பிக்கின்றார். இயேசு முடியாது' என்று சொன்ன பிறகும் கனானியப் பெண் அவரை முடியும்' என்று சொல்ல வைக்கிறார்.

"வீட்டில் அப்பா பெரியவரா? அம்மா பெரியவரா?" என்று ஒரு சிறுவனைக் கேட்டதற்கு அவன் கூறிய பதில் : "அம்மாதான் பெரியவங்க. என் அப்பா அவருடைய தொழிற்சாலையில் வேலை செய்யும் ஆயிரம் பேரை அடக்கி ஆளுகிறார். ஆனால் வீட்டிலே என் அம்மா அப்பாவையே அடக்கி ஆளுறாங்க" கடவுள் உலகையே ஆளுகிறார். செபிக்கத் தெரிந்த மனிதர் கடவுளையே ஆளுகிறார்.

செபத்தின் வல்லமை பற்றி யாக்கோபு கூறுகிறார்: "நேர்மையாளருடைய மன்றாட்டு பயனளிக்கும். எலியா நம்மைப் போன்று எளிமையான மனிதர்தாம். அவர் மழை பெய்யக் கூடாது என்று உருக்கமாக இறைவனிடம் வேண்டினார். மூன்று ஆண்டு ஆறு மாதம் மழை இல்லாது போயிற்று மீண்டும் அவர் இறைவனிடம் வேண்டினார்; வானம் பொழிந்தது, நிலம் விளைந்தது" (யாக் 5:16-18).

  • நிறைவாகச் செபிக்கிறவர், நிறைவான ஆற்றல் பெற்றவர்.
  • குறைவாகக் செபிக்கிறவர், குறைவான ஆற்றல் பெற்றவர்.
  • செபிக்க மறந்தவர், ஆற்றல் அற்றவர்.
ser ser

நம்பிக்கை, தாழ்ச்சி, விடாமுயற்சி

நிகழ்வு 

சில ஆண்டுகளுக்கு முன்பு, இளைஞன் ஒருவன் தனக்குப் பிடித்த ஓர் எழுத்தாளர் எழுதிய குறிப்பிட்ட ஒரு நூலை எடுத்து வாசிப்பதற்காக, வத்திகானில் உள்ள நூலகத்திற்குச் சென்றான். அங்கு சென்றதும், அவன் நூலகரிடம் நூலாசிரியரின் பெயரையும், அவர் எழுதிய நூலின் பெயரையும் சொல்லி, அந்த நூலை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தான்.

இதில் வியப்புக்குரிய செய்தி என்னவெனில், அந்த நூலை அதுவரைக்கும் யாரும் வாங்கிப் படித்ததே இல்லை. இதனால் இளைஞன் அந்த நூலை மிகவும் உற்சாகமாகப் படிக்கத் தொடங்கினான்; ஆனால், அவன் எதிர்பார்த்த அளவுக்கு அந்த நூல் விறுவிறுப்பாக இல்லை; கொஞ்சம் சலிப்பூட்டுவதாக இருந்தது. இருந்தாலும் அவன் அந்த நூலை விடாமுயற்சியோடு முழுமூச்சில் படித்தான். அவன் அந்த நூலின் கடைசிப் பக்கத்திற்கு வந்தபொழுது, அதில் இப்படியொரு குறிப்பு இருந்தது. “இங்கு உள்ள குறிப்பை எடுத்துக்கொண்டு, வங்கிக்குச் சென்று, அங்கிருக்கும் வங்கி மேலாளரிடம் காண்பியுங்கள். அவர் உங்களுக்கு ஒரு கோப்பினைத் (File) தருவார். அதைப் பொறுமையாக வாசியுங்கள். கட்டாயம் உங்களுக்கு வெகுமதி இருக்கின்றது.”

இளைஞன் இந்தக் குறிப்பை வாசித்ததும், மிகுந்த மகிழ்ச்சியோடு வங்கிக்குச் சென்று, வங்கி மேலாளரிடம் அந்தக் குறிப்பைக் காட்டினான். அவர் அந்தக் குறிப்பினை வாசித்துவிட்டு, ஒரு கோப்பினை எடுத்து அவனிடம் கொடுத்தார். அவன் அந்தக் கோப்பினைத் திறந்து பார்த்தபொழுது, அதில் ஓர் உயில் இருந்தது. அந்த உயிலில், ‘குறிப்பிட்ட நூலில் எழுதப்பட்டிருக்கும் குறிப்போடு வருபவருக்கு என்னுடைய உடைமைகள் அனைத்தும் சொந்தம்’ என்று எழுதப்பட்டிருக்கின்றது. இதற்குப் பின்பு அந்த இளைஞன் எழுத்தாளரின் உடைமைகளுக்கெல்லாம் அதிபதியானான் (Aiming At Excellence – George Kaitholil).

இந்த நிகழ்வில் வருகின்ற இளைஞன், எழுத்தாளரின் நூல் விறுவிறுப்பாக இல்லாமல், சலிப்பூட்டுவதாக இருக்கின்றது என்பதற்காக அதைப் பாதிலேயே விட்டுவிடாமல், விடாமுயற்சி தொடர்ந்து படித்தான். அதனால் அவன் அதற்கான வெகுமதியைப் பெற்றான். பொதுக்காலம் இருபதாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தியில், விடாமுயற்சியோடு இயேசுவைப் பின்தொடர்ந்த கானானியப் பெண்மணியின் மகளிடம் பேய் நீங்குவதைக் குறித்து வாசிக்கின்றோம். இந்த நற்செய்திப் பகுதியும், இன்றைய இறைவார்த்தையும் நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கானானியப் பெண்மணியின் நம்பிக்கை

பரிசேயர்களும் இயேசுவுக்கும் இடையே மூதாதையர் மரபு பற்றிய சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இயேசு பிற இனத்தார் வாழ்ந்து வந்த தீர், சீதோன் ஆகிய பகுதிகளுக்கு வருகின்றனர். இந்த இரண்டு நகரங்களும் மத்தியத் தரைக்கடலை ஒட்டியிருந்த துறைமுக நகரங்கள். அதனால் இந்த இரு நகரங்களில் செல்வமும், அத்தோடு பாவமும் பெருகியிருந்தன. இப்படிப்பட்ட நகரங்களுக்குத்தான் இயேசு வருகின்றார். இயேசு அங்கு வந்த செய்தியைக் கேள்விப்பட்டு, கானானியப் பெண்மணி ஒருவர், பேய்பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கும் தன்னுடைய மகளிடமிருந்து இயேசு எப்படியும் பேயை ஓட்டிவிடுவார் என்ற நம்பிக்கையோடு வருகின்றார். அவர் இயேசுவின்மீது மிகுந்த நம்பிக்கை வந்தார் என்பதை, “ஐயா, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று அவர் இயேசுவைப் பார்த்துச் சொல்லக்கூடிய சொற்களிலிருந்தே அறிந்துகொள்ளலாம்.

இங்கு இந்தக் கானானியப் பெண்மணியின் நம்பிக்கையைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். இவர் இயேசுவை நேரில் கண்டதில்லை; அவரைக் குறித்துக் கேள்விப்பட்டிருந்தார். அவ்வளவுதான். ஆனாலும், இவர் இயேசுவை நேரில் கண்டவர்களை விடவும், இயேசுவின்மீது மிகுந்த நம்பிக்கைகொண்டு, அவரிடம் தனக்குக் இரங்குமாறு வருகின்றார். இயேசு தோமாவிடம் “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” (யோவா 20: 29) என்பரே, அதுபோன்று இந்தக் கானானியப் பெண்மணி, இயேசுவைக் காணாமலே, அவரைக் குறித்துக் கேள்விப்பட்டு அவர்மீது நம்பிக்கை கொள்கின்றார். அதனால் அவருடைய நம்பிக்கை உயர்ந்ததாக இருக்கின்றது.

கானானியப் பெண்மணியின் தாழ்ச்சி

கானானியப் பெண்மணி இயேசுவிடம் நம்பிக்கையோடு வந்தபொழுது, அவரோ அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழி சொல்லாமல் செல்கின்றார். இதைப் பார்த்துவிட்டு, சீடர்கள்கூட அவரிடம், “நமக்குப் பின்னால் கத்திக்கொண்டே வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்” என்கிறார்கள். இதற்கு இயேசு ஒருசில வார்த்தைகளைப் பேசியபொழுது, கானானியப் பெண்மணி இயேசுவின் முன் பணிந்து “ஐயா, எனக்கு உதவியருளும்” என்கின்றார்.

கானானியப் பெண்மணியிடம் நம்பிக்கை மட்டும் இருக்கவில்லை; தாழ்ச்சி இருந்தது. தாழ்ச்சி என்பது சாதாரண பண்பு அல்ல, அது ஆண்டவருடைய அருளைப் பெற்றுத் தருகின்ற பண்பு. இயேசு சொல்லும் பரிசேயர் – வரிதண்டுபவர் உவமையில் வரும் வரிதண்டுபவரின் வேண்டுதல் கேட்கப்பட்டதற்குக் காரணம், அவரிடம் இருந்த தாழ்ச்சியே (லூக் 18: 14). தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதலோ முகில்களை ஊடுருவிச் செல்லும் (சீஞா 35: 17) என்கிறது சீராக்கின் ஞானநூல். இத்தகைய சிறப்புமிக்க தாழ்ச்சியோடு கானானியப் பெண்மணி இயேசுவின் அருளை வேண்டி நிற்கின்றார்.

கானானியப் பெண்மணியின் விடாமுயற்சி

நற்செய்தியில் வருகின்ற கானானியப் பெண்மணி நம்பிக்கையோடும் தாழ்ச்சியோடும் மட்டுமல்ல, விடாமுயற்சியோடும் இருக்கின்றார். ஆம். இவர் “தாவீதின் மகனே எனக்கு இரங்கும்” என்று சொல்லும்பொழுது, இயேசு கண்டுகொள்ளாமல் போனபோதும், சீடர்கள், “நமக்குப் பின்னால் கத்திக்கொண்டே வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்” என்று சொன்னபோதும், “இஸ்ரயேல் குலத்தாருள் காணமல்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்” என்றும், “பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” என்று இயேசு சொன்னபோதும், மனந்தளராமல், விடாமுயற்சியோடு இயேசுவைப் பின்தொடர்கின்றார். இப்படி இவர் நம்பிக்கையோடும் தாழ்ச்சியோடும் விடாமுயற்சியோடும் இருந்ததைப் பார்த்துவிட்டுத்தான் இயேசு, “அம்மா, உமது நம்பிக்கை பெரிது, நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” என்கின்றார்.

இயேசு கானானியப் பெண்மணியின் மகளுக்கு நலமளித்த இந்த நிகழ்வு, இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில் இடம்பெறுகின்ற, “பிற இனத்து மக்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன்....” என்ற சொற்களுக்கு அர்த்தம் தருவதாக இருக்கின்றது. இதன்மூலம் கடவுள் யூதருக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமானவர் என்பது உறுதியாகிறது (திப 22:27; மத் 28: 19; உரோ 15: 19-21). மேலும் உரோமையருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் கூறும், (பிற இனத்து மக்களாகிய) நீங்கள் இப்பொழுது கடவுளுக்குக் கீழ்ப்படிவதால், அவரது இரக்கத்திற்கு உரியவர்களாக இருக்கிறீர்கள் என்ற வார்த்தைகளுக்கும் அர்த்தம் தருவதாக இருக்கின்றது. பிற இனத்து மக்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தார்கள். அந்தக் கீழ்ப்படிதல் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கையால் வருகின்றது.

ஆகையால், நாம் யூதருக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் இரங்கும் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து, அவரிடத்தில் கானானியப் பெண்மணியைப் போன்று நம்பிக்கைகொண்டு தாழ்ச்சியோடும் விடாமுயற்சியோடும் வாழ்வோம். அதன்மூலம் அவர் தரும் அருள்வாழ்வைப் பெற்றுக்கொள்வோம்.

சிந்தனை

‘நான் மெதுவாக நடப்பவனாக இருக்கலாம்; ஆனால், பின்னால் திரும்பிப் பார்க்காமல், தொடர்ந்து, விடாமுயற்சி நடக்கக்கூடியவன்” என்பார் ஆபிரகாம் லிங்கன். ஆபிரகாம் லிங்கனின் வெற்றிக்குக் காரணமாக இருந்தது, அவரிடம் இருந்த விடாமுயற்சி. நாம் இறைவனிடம் வேண்டுவதைப் பெற்றுக்கொள்வதற்குக் காரணமாக இருப்பதும்தான் இந்த (நம்பிக்கையுடன் கூடிய) விடாமுயற்சிதான். எனவே, நாம் இறைவனிடம் நம்பிக்கையோடும் மிகுந்த தாழ்ச்சியோடும், விடாமுயற்சியோடும் வேண்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser

"பொறுமையோடு இறைநம்பிக்கையா!"

திருத்தொ. குழந்தைஇயேசு பாபு

நம்பிக்கை வாழ்வு என்பது கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையாக இருக்கின்றது. நாம் நம்பிக்கையோடு இறைவனிடம் தஞ்சம் புகும் பொழுது நிச்சயமாக நிறைவான அருளை இறைவன் நமக்கு அருள்வார் என்பது மறுக்க முடியாத உண்மை. நான் கடந்த 5 நாட்களாக காய்ச்சல் மற்றும் சளி போன்றவற்றால் மிகவும் அவதிப்பட்டேன். தினமும் மாத்திரை மற்றும் ஊசி போட்டும் காய்ச்சல் தீர்ந்தபாடில்லை. நான் ஏன் இவ்வாறு நடக்கின்றது என யோசித்துக் கொண்டிருந்த பொழுது என்னுடைய இறைநம்பிக்கை குறைவாக இருப்பதை உணர முடிந்தது. நான்  ஓய்வு மேற்கொண்ட காரணத்தினால் ஆலயத்திற்கு சென்று இறைவேண்டல் செய்யவில்லை.  எனக்கு ஏன் இவ்வாறு காய்ச்சல் இருக்கின்றது என்பது பற்றி மட்டும்தான் சிந்தித்தேன். இறுதியில் கடவுள் மட்டுமே நல்ல உடல் உள்ளச்சுகத்தை அளிக்க முடியும் என்பதை உணர்ந்து நம்பிக்கையோடு எனக்குத் தெரிந்த சகோதர சகோதரிகளிடம் செபிக்கக் கேட்டுக்கொண்டேன். பலரும் நம்பிக்கையோடு செபித்ததாக எனக்கு குறுஞ்செய்தியை அனுப்பினார்கள். நான் செபிக்க கேட்டுக்கொண்ட நாள்முதல் என் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இப்பொழுது நலமுடன் இருக்கிறேன். இந்த உண்மையான அனுபவப்பகிர்வு எதார்த்தமாக இருக்கலாம்; ஆனால், இந்த அனுபவத்தில் அடங்கியுள்ள இறைநம்பிக்கை ஆழமானது. இறை நம்பிக்கையால் மட்டுமே இறைவனின் அருளையும் ஆசீரையும் வல்ல செயல்களையும் பெறமுடியும். இதைத்தான் இன்றைய வாசகங்கள் நமக்கு சிந்திக்க அழைப்பு விடுக்கிறது.

இன்றைய மூன்று வாசகங்களும் பிற இனத்தவரின் மீது நாம் கொள்ளவேண்டிய திறந்த மனப்பான்மையை சுட்டிக்காட்டுகின்றன. அவர்களின் இறைநம்பிக்கை வாழ்வு நாம் மீட்புப் பெற நமக்கு முன்னுதாரணமாக இருக்கின்றது.  யூதர்கள் பிற இனத்தவர்கள் அனைவரையும் ஒடுக்கப்பட்டவர்களாக வும் ஓரங்கட்டப்பட்டவர்களாகவும் மீட்புப் பெற தகுதி இல்லாதவர்களாகவும் கருதினர். அதிலும் குறிப்பாக பிற  இனத்தவர் மனிதர்களாக கூட மதிக்கப்பட தகுதி இல்லாதவர்கள் என்றும் அவர்கள் நாய்களுக்கு சமமானவர்கள் என்றும் கருதினர். எனவே தான் ஒவ்வொரு யூதரும் தங்களுடைய அன்றாட செபத்தில் " நான் புற இனத்தானாக பிறக்காதது குறித்து கடவுளே, உமக்கு நன்றி கூறுகிறேன் "என்று வேண்டினர். மேலும் "பிற இனத்தவர்களுக்கு மீட்புக் கிடையாது "என்ற மமதையில் யூதர்கள் இருந்தனர். இப்படிப்பட்ட சூழலில்தான் எசாயா இறைவாக்கினர் "பிற இனத்தவர்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன் ; இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச் செய்வேன் " என எடுத்துரைக்கின்றார். இத்தகைய பார்வை மீட்பு தங்களுக்கு மட்டுமே என்று மமதையோடு திரிந்த யூதர்களுக்கு சவுக்கடியாக இருக்கின்றது. யூதர்களிடையே இல்லாத நம்பிக்கை பிற இனத்தாரிடம் இருந்தது. எனவேதான் எசாயா இறைவாக்கினர் புறவினத்தார் பற்றி தனது நூலில் சுட்டிக்காட்டுகிறார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் யூத பாரம்பரியத்தில் பிறந்து வாழ்ந்து யூத அடிப்படைவாதியாக இருந்த பவுல் "பிற இனத்தாராகிய ....உங்களுக்குத் திருத்தூதராய்  இருக்கும் நான் என் பணியைக் குறித்துப் பெருமை கொள்கிறேன் " என்று கூறுமளவுக்கு பிற இனத்தாரின் நம்பிக்கை ஆழமாக இருந்தது. யூதர்கள் பிற இனத்தாரின் நம்பிக்கையைக் கண்டு மீட்புப் பெற வேண்டும் என்ற ஆவலில் புனித பவுல் இவ்வாறு கூறுகிறார். புனித பவுல் தனது பணி வாழ்வின் தொடக்கத்தில் யூதர்களுக்கு மட்டுமே அதிக பணி செய்யவேண்டும் என்று நினைத்தது உண்மைதான். ஆனால் யூதர்கள் நம்பிக்கையற்ற தன்மையைக் கண்டு புனித பவுல் இறைநம்பிக்கை மிகுந்த பிற இனத்தாரிடம்   நற்செய்திப்பணிச் செய்ய சென்றார் .

 திருத்தூதர் புனித பவுலைப் போல இயேசுவும் தொடக்கத்தில் தனது பணியை யூதர்களுக்கு மட்டுமே. அவர்கள் மீட்பு பெறவே காணாமல் போன ஆடுகளைத் தேடி அனுப்பப்பட்டதைப் போல தான் அனுப்பப்பட்டுள்ளதாக இயேசு கருதினார். இப்படிப்பட்ட பார்வை பிற இனத்தவராகிய கனானியப் பெண்ணின் ஆழமான இறைநம்பிக்கை இயேசுவை புதிய பார்வைக்கு மாற்றியதாக நாம் இன்றைய நற்செய்தி வழியாக அறிய வருகின்றோம்.  "தன் சொந்த இனமாகிய இஸ்ரயேலுக்கு தான் தன் முதன்மையான பணி " என்ற பார்வையை பிற இனத்தைச் சார்ந்த கனானியப் பெண் தன்னுடைய ஆழமான இறை நம்பிக்கையால் மாற்றியுள்ளார். இவரை நம்பிக்கையின் பொருட்டு பிற இனத்தாருக்கு முதன்முதலாக இயேசு வல்லச்செயலைச் செய்யத் தொடங்கினார்.   

இன்றைய வாசகங்கள்  மூன்றுமே  குறுகிய வட்டத்திற்குள் யோசித்து செயல்படாமல், திறந்த மனநிலையோடு எல்லோரையும்  ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தைப் பெற அழைப்பு விடுக்கின்றன. பிற இனத்தாரை பற்றிய திறந்த மனநிலையோடு இருக்கச் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றன. எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் கிறிஸ்தவர்களாகிய நம்மிடம் இருக்கும் இறைநம்பிக்கையை விட, கிறிஸ்தவர்கள் அல்லாத பிறசமய சகோதர சகோதரிகளிடம் ஆழமான இறைநம்பிக்கை இருப்பதைக் காணமுடிகின்றது. இவற்றை நாம் திறந்த மனநிலையோடு ஏற்றுக்கொண்டு அவர்களைப்போல இறைநம்பிக்கை வாழ்வுக்கு சான்று பகர அழைக்கப்பட்டுள்ளோம்.

மனவளர்ச்சி குறைவாக உள்ள குழந்தைகள் படிக்கின்ற சிறப்பு பள்ளியில் பணியாற்றுகின்ற அருட்சகோதரி ஒருவர் பிற சமயத்தைச் சார்ந்த ஒரு பெண்மணிக்கு எவ்வாறு கடவுள் அவரின் நம்பிக்கையின் பொருட்டு வல்ல செயலைச் செய்தார் என்பது  பற்றிபகிர்ந்து கொண்டார்.  அவர் கூறியதாவது  "திருமணமாகி 13 வருடங்களாக குழந்தை இல்லாத ஒரு பெண்மணி மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகள் படிக்கின்ற ஒரு பள்ளியில்  வேலை செய்து வந்தார். அவர் ஒரு பிற சமயத்தை பின்பற்றும்  பெண்மணியாக இருந்தாலும் இயேசுவின் மேல் அதிகம் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். குழந்தை இல்லையே என்ற மன வேதனை இருந்தாலும் முகமலர்ச்சியோடு இந்த குழந்தைகளுக்கு பணிவிடை செய்வார். ஒருமுறை ஆசிரியர்களிடம் தன்னுடைய மனவேதனையை அவர் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்த போது ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து ஒரு முடிவெடுத்தார்கள். தினமும் காலை செபத்தில் எல்லா குழந்தைகளோடும் இணைந்து அந்த ஆசிரியருக்கு இறைவன் ஒரு குழந்தை தர வேண்டும் என்று இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கையோடு  செபிக்க தொடங்கினர்.  இறைநம்பிக்கையோடு செபிக்க அவர்கள் முடிவு எடுத்ததற்கு ஏற்ப ஒவ்வொரு நாளும் காலையில் அந்த ஆசிரியரின் பெயர் சொல்லி அனைவரும் உருக்கமாக என அனைவரும் செபித்தார்கள். என்ன ஆச்சரியம் என்றால் கடவுள் யார்? செபம் என்றால் என்ன? என்று உணராத அந்த மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகள் கூட அவருக்காக உருக்கமாக செபித்தார்கள். அவர்கள் செபத்தை கேட்ட இறைவன் இன்று அவருக்கு ஒரு குழந்தையை பரிசாக கொடுத்து இருக்கின்றார் . ஆம் இது ஒரு உண்மை நிகழ்வு. குழந்தையைப் பெற்ற அந்த தாயானவள் உங்கள் அனைவரின் செபத்தையும் கடவுள் கேட்டு எனக்கு அருளினார் என்று  மகிழ்ச்சியுடன் பிற சமயத்தை சேர்ந்த பெண்மணி பகிர்ந்து கொண்டார்" என கூறினார். இந்த உண்மை நிகழ்வு பிற சமயத்தைப் பின்பற்றும் அந்தப் பெண்மணியின் ஆழமான இயேசுவின் மீது கொண்ட ஆழமான இறைநம்பிக்கையை நமக்குப் பாடமாக சுட்டிக் காட்டுவதாக இருக்கின்றது.

எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் கடவுளின் மீட்பை பெற்று நிலை வாழ்வைப் பெற்றிட இறைநம்பிக்கையில் வேரூன்றி இருப்போம். அப்பொழுது நாம் நிச்சயமாக கடவுளின் அருளையும் இரக்கத்தையும் அனுபவிக்க முடியும். அதற்கு கனானியப் பெண்ணைப் போல பொறுமையோடு இறைநம்பிக்கையில் வேரூன்றி இருக்க வேண்டும். அப்பொழுது நிச்சயமாக நாமும் இறைநம்பிக்கை வாழ்வுக்கு சாட்சிகளாக மாறமுடியும். இறைமகன் இயேசுவின் வல்லச் செயல்களை நம்முடைய வாழ்விலேயே ஒவ்வொரு நாளும் அனுபவிக்க முடியும். எனவே பொறுமையோடு இறைநம்பிக்கை வாழ்வுக்கு சான்று பகர்ந்திட  தேவையான அருளை இறைவேண்டல் செய்வோம்.

இறைவேண்டல் :
வல்லமையுள்ள இறைவா! திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவர்களாக வாழும் நாங்கள், உன் மீது பல நேரங்களில் நம்பிக்கை இல்லாதவர்களாக வாழ்ந்து வருகின்றோம். திருமுழுக்குப் பெறாத பிறசமய சகோதர சகோதரிகளின்  ஆழமான நம்பிக்கை கூட எங்களிடம் இல்லை. எனவே கொரோனா என்ற தீநுண்மி அச்சுறுத்தும் இந்த காலகட்டத்திலும் இறை நம்பிக்கையோடு நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர தேவையான அருளைத் தாரும்.ஆமென்.

ser

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com