மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக் கால 19-ஆம் ஞாயிறு
முதலாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
1 அரசர்கள் 19:9அ, 11-13அ; | உரோமையர் 9:1-5; | மத்தேயு 14:22-33

ser

வாழ்வோம் நம்பிக்கையின் எடுத்துக்காட்டுகளாய்.

இன்றிருந்து நாளை இல்லாமல் போகும் அதிகாரத்தைக் கொண்ட அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், ஆள்பவர்களும் அணுக முடியா ஆகாய உயரத்தில் இருக்கிறபோது, அகிலத்தைப் படைத்த ஆண்டவர் அணுகக் கூடியவரா? அல்லது அணுகினால் அழிப்பவரா? என்ற வினா நம்முடைய உள்ளத்தில் எழாமலில்லை.

இவ்வினாவிற்கு விடை தருவது இன்றைய இறைவார்த்தை. ஆண்டவர் அன்போடு தன்னை நோக்கி வர, தன் அருகில் இருக்கும் சுகத்தை அனுபவிக்க அழைக்கிறார் என்பதற்கு ஆயிரம் எடுத்துக்காட்டுகளைத் தரலாம். சீனாய் மலையில் மோசேயின் அனுபவம் (காண். வி.ப. 19:3), சிறுவன் சாமுவேலின் அனுபவம் (காண் 1 சாமு. 3:1-15). இங்ஙனம், தம்மை அணுகி வருகிறவர்களுக்கு வாழ்வின் வழிகாட்டுதல்களை நல்கும் ஆண்டவர் எக்குணம் கொண்டிருப்பார் ? கடுமனம் படைத்தோரையும், வலிமையால் வஞ்சிக்கிறவரையும் அறிவீனன் கூட அணுகமாட்டான். ஆனால், மென்மையான உள்ளமும், பாசமும், பண்பும் நிறைந்தவர்களை பைத்தியகாரர்கள் கூட அணுகிப் பக்குவப்படுவார்கள், பாசத்தால் நிரப்பப்பட்டு, மனம் நிறைந்தவர்களாய்ச் செல்வர். உலகைப் படைத்து, காத்து, வாழ்விக்கின்ற இறைவன் உருக்குலைக்கிறவர் அல்ல, மாறாக மென்மையானவர், அழிப்பவர் அல்ல, மாறாக வாழ்விப்பவர் என்பதை ஐயமற விளக்குவதுதான் எலியாசு அனுபவம். சுழற்காற்றிலல்ல, நிலநடுக்கத்திலல்ல, தீயிலல்ல, மாறாக மெல்லிய காற்றில், சுகமாக வருடி நம் சுமைகளைக் களைந்து, நம்மை வழிநடத்துகிறார்.

மென்மையான , இலேசான பொருட்கள் நீரில் மூழ்குவதுண்டோ ? மேன்மையான இறைவன் நீரின் மேல் நடக்கிறார். அவர் எதிலும் மூழ்கார். ஆனால், அவரில் மூழ்கித்
திளைக்க நமக்கு அழைப்பு விடுக்கிறார். மனிதருக்கு, தன்னை விடப் பெரியவர் எவரும் இல்லை என்கின்ற ஒரு அசாதாரண எண்ணம் உண்டு. எனவேதான், தான் செய்யாததை மற்றொருவ செய்கிறபோது அதில் சந்தேகமும், அதைச் சோதித்தறிய வேண்டும் என்ற ஆவலும் உருவாகிறது. இதைத்தான் இன்றைய நற்செய்தியில் பாக்கிறோம். நீரின் மேல் நடந்து வருகின்ற ஆண்டவரைக் கண்டவுடன் பேதுருவின் உள்ளத்தில் முதலில் சந்தேகம். எனவேதான் ஐயோ பேய் என்று அலறினார். இரண்டாவது சோதித்தறிய வேண்டும் என்ற ஆவல். எனவேதான், ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல் மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும் என்றார். சந்தேகத்தையும், சோதித்தறிந்ததையும் தாண்டி அவர் உள்ளத்தில் அச்சம் உருவானபோது நிலைகுலைந்து போகிறார். ஆண்டவரும் அவரைக் கடிந்து கொண்டு நம்பிக்கை கொள்ள அழைப்பு விடுக்கிறார்.

எனவே, எலியாசு வழியாகத் தான் மென்மையானவன் என்பதை வெளிப்படுத்தும் இறைவன், பேதுரு வழியாக தன்னில் நம்பிக்கை கொள்கிற எவரும் சந்தேகம் களைந்து, சோதித்தறிவதில் குறியாக இல்லாமல், அச்சம் நீங்கி வாழ அழைப்பு விடுக்கிறார். இறை நம்பிக்கை நம்மை வாழ்விக்கும் வாழ்வோம் நம்பிக்கையின் எடுத்துக்காட்டுகளாய்.

ser ser

கடவுளுக்கு மிகவும் பிடித்தமான மொழி எது?

ஒரு மதகுரு தினந்தோறும் கோயிலில் பல மணி நேரம் செபிக்கும் வயதான மனிதர் ஒருவரைப் பார்த்தார். ஒரு நாள் மதகுரு அவரிடம், கோவிலுக்குள் பல மணி நேரம் அமர்ந்திருக்கின்றாயே! என்ன செய்கின்றாய்? என்றார். அதற்கு அந்த வயதான மனிதர், செபிக்கின்றேன் என்றார்.

கடவுள் உன்னோடு பேசுவாரா? என்றார் மதகுரு. பேசமாட்டார் என்ற பதில் வந்தது. நீ கடவுளோடு பேசுவாயா என்றார்? மதகுரு. பேச மாட்டேன் என்ற பதில் வந்தது. பிறகு எப்படிச் செபிப்பாய்? என்றார் மதகுரு. மௌனம்தான் செபம் என்ற பதில் வந்தது. மதகுருவுக்கு செபத்தைப் பற்றிய உண்மையான அறிவு கிடைத்தது.

ஒருவரோடு நாம் பேசும்போது அவருக்குப் பிடித்தமான மொழியில் அவரோடு பேசுகின்றோம். கடவுளுக்கு மிகவும் பிடித்தமான மொழி மௌனம், அமைதி.

நாம் மௌனமாக இருக்கும்போது, நாம் அமைதியை அனுபவிக்கும்போது கடவுள் நம்மை, நமது உள்ளத்தை, நமது மனத்தை, நமது வாழ்க்கையைக் கடந்து செல்வார்.
இன்றைய முதல் வாசகத்தில் குகைக்குள்ளிருந்த இறைவாக்கினர் எலியாவைப் பார்த்து இறைவன், வெளியே வா. மலைமேல் என் திருமுன் வந்து நில். இதோ! ஆண்டவராகிய நான் கடந்து செல்லவிருக்கின்றேன் (1 அர 19:11அ) என்கின்றார். இப்படிச் சொன்ன ஆண்டவரை எலியா சுழற்காற்றில் சந்திக்கவில்லை ; நிலநடுக்கத்தில் சந்திக்கவில்லை ; தீயில் சந்திக்கவில்லை. மாறாக, அவர் அடக்கமான, அமைதியான மெல்லிய ஒலியில் இறைவனைச் சந்திக்கின்றார் (1 அர 19:12,13).

அன்று ஆறுதலைத் தேடி அலைந்த எலியாவுக்கும், காற்றிலிருந்தும், கடலிலிருந்தும் காப்பாற்றப்பட்ட பேதுருவுக்கும் (நற்செய்தி) காட்சி அளித்த இறைவன் இன்று நம்மைச் சந்தித்து நமக்கு வேண்டிய வரங்களைத் தர தயாராக இருக்கின்றார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே! நாம் அமைதியாக ஆண்டவர் பாதத்திலே அமர முன்வரவேண்டும். அமைதியில் இரண்டு வகையான அமைதி உண்டு ; ஒன்று வெளி அமைதி, மற்றொன்று உள் அமைதி! வெளிப்புலன்களான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்தையும் அமைதிப்படுத்துவதில் வெளி அமைதியும், ஆசை, அறிவு, நினைவு, கற்பனை, உணர்வு ஆகிய உள்புலன்களை அமைதிப்படுத்துவதில் உள் அமைதியும் அடங்கியுள்ளது.

அமைதியை அனுபவிக்க மூன்று அழகான வழிகள் உள்ளன :
கண்களை மூடி இறைவனின் திருநாமத்தை திரும்பத் திரும்பச் சொல்லலாம்.
கண்களை மூடி ஒரு பஜனைப் பாடலைப் திரும்பத் திரும்பப் பாடலாம்.
கண்களை மூடி மூச்சை உள்ளே இழுத்து, வெளியே விடலாம்.

அமைதியிலே, மௌனத்திலே, ஆண்டவரின் ஆவியாரால் நாம் தூண்டப்படுவோம் (இரண்டாம் வாசகம்). பேச்சு வெள்ளி என்றால் மௌனம் தங்கம் என்று வாழ அனைவரும் முன்வருவோம்.

மேலும் அறிவோம் :


அகர முதல எழுத்தெல்லாம், ஆதி
பகவன் முதற்றே உலகு (குறள்: 1).

பொருள் : எழுத்துக்கள் அனைத்திற்கும் அகரம் முதலாக அமைகிறது. அதுபோன்று உலக உயிர்கள் அனைத்திற்கும் இறைவன் முதல்வனாக விளங்குகிறான்.

ser ser

கடவுள் நம்பிக்கை

ஓர் ஆசிரியர் மாணவர்களிடம், "சூரியன் பூமியைச் சுத்துதா? அல்லது பூமி சூரியனைச் சுத்துதா?" என்று கேட்டார். அதற்கு ஒரு மாணவன், "தலை சுத்துது சார்." என்றான், நம்மிலும் நம்மைச் சுற்றிலும் அரங்கேறும் பல்வேறு அவலங்களைப் பார்க்கும்போது நமக்குத் தலை சுத்துகிறது. மயக்கம் வருகிறது.

ஒரு பெண்மணி மருத்துவரிடம் சென்று "டாக்டர்! காலையில் எழுந்தவுடன் அரைமணி நேரம் என் தலை சுத்துகிறது" என்றார். அதற்கு மருத்துவர், "அப்படியானால் அரைமணி நேரம் கழித்து எழுந்திரு" என்றார். மருத்துவர்கள் மருந்து கொடுக்கிறார்கள். அது நமது நோய்களைத் தற்காலிகமாக மட்டுமே குணப்படுத்தும். மீண்டும் நோய் நம்மைத் தாக்கும். நோய்க்கு, குறிப்பாக மனக் கவலைக்கு நிரந்தர மருந்து உண்டா ? கடவுளிடம் சரணடைவதே மனக்கவலைக்கு ஒரே மருந்து என்கிறார் வள்ளுவர்.

தனக்குவமை இல்லாதான் தான் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (குறள் 7)

இன்றைய தற்செய்தியில் இயேசுவின் சீடர்கள் ஓர் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இயேசு அப்பம் பலுகச் செய்த புதுமையைக் கண்ட சீடர்களும் மக்களும் அவரை அரசராக முடிசூட்ட முயன்றனர். ஆனால் இயேசுவோ அதை ஏற்க மறுத்து, சீடர்களிடம் அக்கரைக்குப் படகில் செல்லும்படி கட்டளையிட்டார். அவர் இக்கரையிலேயே தங்கிவிட்டார். இயேசுவால் தனிமைப்படுத்தப்பட்ட சீடர்கள் கடலில் செல்லும் போது கடல் கொந்தளிக்க, புயல் காற்று வீசுகிறது. பயத்து செத்துக் கொண்டிருந்த வேளையில் கடலில் இயேசு நடந்து வந்தார். அவர்கள் அவரைப் பேய் என்று கருதி பயத்தால் அலறினர். ஆனால் இயேசுவோ அவர்களிடம், "துணிவோடு இருங்கள். நான்தான். அஞ்சாதீர்கள்" என்கிறார்.

நம்முடைய வாழ்க்கைப் படகைப் பல்வேறு துன்பங்கள் அலைக்கழிக்கின்றன. அவ்வேளையில் கடவுள் நம்மைக் கைவிட்டுவிட்டார் என்று நினைக்கிறோம். ஆனால் இருள் நம்மைக் கவ்விக் கொள்ளும் வேளையிலும் கடவுள் தம்மோடு இருக்கிறார். "அஞ்சாதீர்கள்" என்று தைரியம் கொடுக்கிறார், துன்ப வேளையில் நமக்குக் கைகொடுக்கும் திருப்பா, "சாவின் இருள் சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சேன்" (திபா 23:4),

இயேசு சீடர்களிடம், "நான்தான்" என்று கூறியதில் ஆழமான ஓர் இறையியல் உண்யை பொதிந்துள்ளது. பழைய ஏற்பாட்டிலே மோசே கடவுளின் பெயர் என்னவென்று கேட்ட போது கடவுள் கூறிய பதில்! "இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே" (விப 3:14). கிறிஸ்து "நான்தான்" என்று கூறியதன் மூலம் தாம் கடவுள் என்பதை உணர்த்துகிறார். கடவுள் என்றும் இருப்பது போல் இயேசுவும் என்றும் இருக்கிறார். இன்றைய நற்செய்தியில், புயல் நின்றவுடன் படகில் இருந்தவர்கள் இயேசுவைப் பணிந்து, "உண்மையாகவே நீர் இறைமகன்” (மத் 14:33) என்று அறிக்கையிடுகின்றனர்.

இயேசு கிறிஸ்து என்றும் நம்மோடு இருக்கும் இம்மானுவேல் (மத் 1:22-23), உலகம் முடியும் வரை எந்நாளும் நம்மோடு இருக்கிறார் (மத் 28:20). அவரே நமது ஒளி, நமது மீட்பு. யாருக்கு நாம் அஞ்ச வேண்டும்? அவர் நமது அடைக்கலம், எனவே யாருக்கு நாம் நடுங்க வேண்டும் (திபா 27:1).

பேதுருவும், இயேசுவைப்போல் கடலில் நடக்க முற்பட்டபோது அவா காற்றின் வேகத்தைக் கண்டு அஞ்சி தண்ணீரில் மூழ்கப் போனபோது, "ஆண்டவரே என்னைக் காப்பாற்றும்" என்று அலறினார். இயேசு அவரது கையைப் பிடித்து, தம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?" என்று கூறி அவரைக் கடிந்து கொண்டார்.

ஓர் ஊரின் அருகாமையில் ஆறு ஓடியது. ஆற்றின் அக்கரையில் ஒரு சத்தியாசி இருந்தார். ஊரிலிருந்து ஒரு கைம்பெண் ஆற்றில் படகேறி அக்கரையில் இருந்த அவருக்கு பசும்பால் கொண்டுவந்து கொடுத்து வந்தார். அவர் ஒரு சில நாள்களில் படகோட்டித் தாமதமாக வந்தபோது தாமதமாகச் சந்நியாசிக்கு பால் கொண்டு போனார். இதை அறிந்த சந்நியாசி அவரிடம், "இனிமேல் படகில் வராதே, பகவான் பெயரைச் சொல்லி ஆற்றில் நடந்து வா" என்றார். அக் கைம்பெண்ணும் ஆற்றில் நடந்தார். இதைக் கண்ட சந்நியாசியும் அப்பெண் பின்னால் ஆற்றில் நடந்தபோது ஆற்றில் மூழ்கி இறந்துவிட்டார். சாதாரண எளிய கைம் பெண்ணுக்கு இருந்த கடவுள் நம்பிக்கை அச்சந்நியாசிக்கு இல்லாமற் போனது.

அதிகமாக படித்தவர்களிடம் இருக்கும் கடவுள் தம்பிக்கையைவிடச் சாதாரண பாமர மக்களிடமே அதிகமாகக் கடவுள் நம்பிக்கை காணப்படுகிறது என்பது உண்மையே. கடவுளும் விண்ணரசின் மறைபொருளை ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்து குழந்தைகளுக்கு வெளிப்படுத்துகிறார் என்பதும் உண்மையே (லூக் 10:21)

துன்பம் நம்மை வாட்டி வதைக்கும்போது கடவுள் தம்மிடம் கூறுவது: "அஞ்சாதே, நான் உன்னை மீட்டுக் கொண்டேன். உன் பெயரைச் சொல்லி உன்னை அழைத்தேன். நீ எனக்கு உரியவன், நீர்நிலைகள் வழியாக நீ செல்லும் போது நான் உன்னோடு இருப்பேன்; ஆறுகளைக் கடந்து போகும்போது அவை உன்னை மூழ்கடிக்க மாட்டா: தீயில் நடந்தாலும் சுட்டெரிக்கப்படமாட்டாய். நெருப்பு உன்மேல் பற்றி எரியாது. ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் நானே” (எசா 43:1-3).

படகு தண்ணீர் மீது சென்றால், அது உல்லாசம்,
தண்ணீர் படகுக்குள் சென்றால், அது கைலாசம்,
நமது வாழ்வு உல்லாசமா? கைலாசமா?
நாம் உலகை வென்றால் அது உல்லாசம்,
உலகம் நம்மை வென்றால் அது கைலாசம்,

கிறிஸ்து நமக்குக் கூறுவது: "உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள். தான் உலகின் மீது வெற்றி கொண்டுவிட்டேன் (யோவா 16:33).

ser ser

“துணிவோடிருங்கள்; நான்தான்; அஞ்சாதீர்கள்”

நிகழ்வு

அந்த ஊருக்கு வெளியே ஒரு துறவுமடம் இருந்தது. அந்தத் துறவுமடத்தில் ஒரு துறவியும், ஐம்பதுக்கும் மேற்பட்ட துறவிகளும் இருந்தார்கள். ஒருநாள் துறவுமடம் இருந்த பகுதியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் இருந்த பல கட்டடங்கள் இடிந்துவிழுந்து தரைமட்டமாயின; துறவுமடத்தில் இருந்த கோயிலும்கூட இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதனால் சீடர்கள் யாவரும் அச்சத்தில் உறைந்து போயிருந்தார்கள்.

அப்பொழுது அவர்கள்முன் வந்த துறவி, “இதற்கெல்லாமா அஞ்சி நடுங்குவது...? உண்மையான துறவி எதற்கும் அஞ்சுவதில்லை” என்றார். இப்படிச் சொல்லிவிட்டுத் தொடர்ந்து பேசினார்: “நீங்களெல்லாம் அஞ்சி நடுஞ்சிக் கொண்டிருந்தபொழுது, நானோ கொஞ்சம்கூட அஞ்சாமல், சமயலறைக்குச் சென்று, நீர்க்குவளையை எடுத்து, அதிலிருந்த நீர் முழுவதையும் குடித்து முடித்தேன். அப்படி நான் குடிக்கும்பொழுது, என்னுடைய கைகள் கொஞ்சம்கூட நடுங்கவில்லை. இதை யாராவது கவனித்திருந்தால் எனக்குக் கொஞ்சம்கூட அச்சமில்லை என்பது புரிந்திருக்கும்.”

துறவி இப்படிச் சொல்லி முடித்ததும், அவருக்கு முன்பு நின்றுகொண்டிருந்த சீடன் ஒருவன், தன் கையால் வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தான். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த துறவி அந்தச் சீடனிடம், “சீடனே! இப்பொழுது நீ எதற்காகச் சிரித்தாய் என்று நான் தெரிந்துகொள்ளலாமா?” என்றார். அதற்குச் சீடன், “குருவே! நீங்கள் சமயலறைக்குச் சென்று உங்களுடைய கையில் எடுத்தது, நீர்க்குவளை அல்ல; சாம்பார் சட்டி. உண்மையில் நீங்கள் குடித்தது நீர் அல்ல; சாம்பார். அச்சத்தில் எதையெதையோ செய்துவிட்டு, அஞ்சவே இல்லை என்று சொல்கின்றீர்களே!” என்றான். இதைச் சுற்றியிருந்து கேட்டுக்கொண்டிருந்த சீடர்கள் அனைவரும் சத்தமாகச் சிரித்துவிட்டு அங்கிருந்து தெறித்து ஓடிவிட்டனர்.

ஆம், இந்த நிகழ்வில் துறவியையும், அவருடைய சீடர்களையும் போன்றுதான் நாம் ஏதோ ஒன்றுக்கு அஞ்சி அஞ்சி வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். பொதுக்காலம் பத்தொன்பதாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தியில், சீடர்கள் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும்பொழுது, இயேசு அவர்களிடம், “துணிவோடிருங்கள்; நான்தான்; அஞ்சாதீர்கள்” என்கின்றார். இயேசு தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருளென்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மலைமீது ஏறிய இயேசு

கடந்த வார நற்செய்தி வாசகத்தில் (மத் 14: 13-21) இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு, ஐயாயிரம் பேருக்கு உணவளித்திருப்பார். அந்த நிகழ்வைத் தொடர்ந்து, இயேசு மக்கள்கூட்டத்தையும், பின் தன் சீடர்களையும் அங்கிருந்து அனுப்பிவிட்டு மலைமேல் ஏறுகின்றார். இயேசு ஏன் மக்கள் கூட்டத்தையும், தன் சீடர்களையும் அனுப்பிவிட்டு, மலைமேல் ஏறினார் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகத்தில், ஈசபேல் அரசி இறைவாக்கினர் எலியாவைக் கொன்றுபோட்டுவிடுவதாகச் சொன்னதும் (1 அர 19: 2), அவர் உயிருக்குப் பயந்து கடவுளின் மலையான ஒரேபு மலைமேல் ஏறுவார். இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த பிறகு, அவருடைய உயிருக்கு ஆபத்து வர, அதனால்தான் அவர் மலைமேல் ஏறினாரா? என்றால், நிச்சயமாக இல்லை. மாறாக, மக்கள் இயேசு செய்த அருமடையாளத்தைப் பார்த்துவிட்டு ‘உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே’ என்று அவரைப் பிடித்து அரசராக்க முயன்றார்கள் (யோவா 6: 15) அதனால்தான் அவர் மலைமேல் ஏறுகின்றார்.

மலைமேல் ஏறிய இயேசு, தந்தைக் கடவுளிடம் வேண்டுவதற்குத் தன்னுடைய நேரத்தைச் செலவிடுகின்றார். இயேசு தந்தைக் கடவுளிடம் வேண்டுகின்றபொழுது, அவர் தனக்காக மட்டும் வேண்டினாரா? அல்லது தன்னுடைய சீடர்களுக்கும் சேர்த்து வேண்டியிருப்பாரா? என்ற கேள்வி எழலாம். இயேசு தனக்காக மட்டுமல்ல, தன்னுடைய சீடர்களுக்காகவும் வேண்டியிருப்பார். இதைப் பெரிய குருவாம் இயேசுவின் இறைவேண்டலில் இடம்பெறும், “...தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென வேண்டுகிறேன்” (யோவா 17: 15) என்ற சொற்களில் மிக அழகாகக் காணலாம். இன்றும் கூட, இயேசு தந்தையின் வலப்பக்கம் அமர்ந்து நமக்காகப் பரிந்து பேசுகின்றார் (எபி 7: 25) என்பதை நாம் அறிகின்றபொழுது, இயேசு தன் சீடர்களாகிய நம்மீது எந்தளவுக்கு அக்கறை கொண்டிருக்கின்றார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

கடலில் நடந்து வந்த இயேசு

மலைமேல் ஏறிய இயேசு, தனக்காக மட்டுமல்ல, தன்னுடைய சீடர்களுக்காகவும் இறைவனிடம் வேண்டி, அவர்கள்மீது தனக்கிருந்த கரிசனையும் அன்பையும் வெளிப்படுத்தினார். இயேசுவின் அன்பும் கரிசனையும் அத்தோடு நின்றுவிடாமல், சீடர்கள் தொடர்ந்து வெளிப்படுகின்றது. அதை இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில் காணலாம்.

இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்த இயேசு, கடலில் பயணம் செய்துகொண்டிருந்த தன்னுடைய சீடர்கள், எதிர்க்காற்று அடித்து அலைகழிக்கப்படுவதையும், அவர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்தியதையும் அறிந்து (மாற் 6: 48) கடல்மீது நடந்து வருகின்றார். இதற்கு முன்பு ஒருமுறை சீடர்கள் கடலில் பயணம்செய்தபொழுது, இயேசு அவர்களோடு இருந்தார் (மத் 8: 23-27). ஆகையால், கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டத்தைக் கண்டு சீடர்கள் பதறினாலும், அவர் பதறாமல் தூங்கிக்கொண்டிருந்தார்; ஆனால், இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களோடு இல்லை. அதனால்தான் அவர் சீடர்கள் ஆபத்தில் இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்து, அவர்களுக்கு உதவக் கடலில் நடந்து வருகின்றார்.

இயேசு கடல்மீது நடந்து வருவதைக் கண்டு சீடர்கள், “ஐயோ, பேய்’ என்று அச்சத்தில் அலறியபொழுது, இயேசு அவர்களிடம், “துணிவோடிருங்கள்; நான்தான்; அஞ்சாதீர்கள்” என்கின்றார். இயேசு சீடர்களிடம் “நான்தான்” என்று சொல்வது, கடவுளாகிய நான் உங்களோடு என்றும் இருக்கின்றேன் என்ற உண்மையை உணர்த்துவதாக இருக்கின்றது (விப 3: 14; எசா 41:4, 43:10, 52:6). ஆம், கடல் உட்பட எல்லாவற்றின்மீதும் அதிகாரம் கொண்டிருக்கும் கடவுள் (யோபு 9:9; திபா 77: 19), நம்மோடு இருக்கின்றபொழுது நாம் எதற்கு அஞ்சவேண்டும்! துணிவோடு இருப்பதுதானே முறை!

தன்மீது – கடவுள்மீது - கண்களைப் பதிய வைக்கச் சொல்லும் இயேசு

கடல்மீது நடந்து வந்த இயேசுவைப் பார்த்துவிட்டு பேதுரு, “ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்” என்கிறார். இயேசுவும், “வா” என்கிறார். இதைத் தொடர்ந்து பேதுரு கடல்மீது நடந்து நட, பெருங்காற்று வீசியதைக் கண்டு, அவர் கடலில் மூழ்கத் தொடங்குகின்றார். உடனே இயேசு அவருடைய கையைப் பிடித்து அவரைப் படகில் ஏற்றுகொள்கின்றார்.

கடலில்மீது நடந்த பேதுரு திடீரென்று கடலுக்குள் மூழ்கக் காரணம், அவர் இயேசுவின் வைத்த பார்வையைப் பெருங்காற்றின்மீது வைத்ததுதான். நாம் நம்முடைய வாழ்க்கையில் எப்பொழுதும் ஆண்டவர்மீது கண்களைப் பதிய வைத்து வாழவேண்டும். ஏனெனில், நமக்கு வருகின்ற ஆபத்துகளை விடவும் ஆண்டவர் பெரியவர். எனவே, நாம் ஆண்டவர்மீது நம் கண்களைப் பதிய வைத்து, அவரிடம் நம்பிக்கை வைத்து வாழ்வோம். அதன்மூலம் எல்லா வகையான அச்சத்திலிருந்தும் விடுதலை பெறுவோம்.

சிந்தனை

‘நம்பிக்கை கொண்டோன் பதற்றமடையான்’ (எசா 28: 16) என்று ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக உரைப்பார். ஆதலால், நாம் ஆண்டவர்மீது நமது கண்களைப் பதிய வைத்து, அவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதனால் அச்சமில்லா வாழ்க்கை வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser ser

நொறுங்குண்ட மூவர்!

 

இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் நாம் மூன்று நொறுங்குண்ட மனிதர்களைச் சந்திக்கின்றோம்:

(அ) 'என் உயிரை எடுத்துக்கொள்ளும்!' - எலியா

பாகாலின் நானூறு பொய் இறைவாக்கினர்களைக் கொன்றழித்த எலியா, சீனாய் அல்லது ஒரேபு மலையில் ஆண்டவரைச் சந்திக்கின்றார். தன்னுடைய வெற்றியின் இறுதியில் விரக்தி அடைகின்றார் எலியா. 'ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும். என் உயிரை எடுத்துக்கொள்ளும்!' எனக் கண்ணீர் விடுகிறார். ஒரு நாளைக்கு முன் பெரிய ஹீரோவாக இருந்தவர், இப்போது ஜீரோ போல ஆண்டவர் முன் படுத்துக் கிடக்கின்றார்.

(ஆ) 'என் உள்ளத்தில் பெருந்துயரம் உண்டு!' - பவுல்

புறவினத்தாரின் திருத்தூதர் என்று புகழ்பெற்ற பவுல், தன் சொந்த மக்களைத் தன்னால் மீட்க முடியவில்லையே என்றும், நற்செய்தியின் பக்கம் அவர்களைத் திருப்ப முடியவில்லையே என்றும் வருந்துகின்றார். 'என் உள்ளத்தில் பெருந்துயரமும் இடைவிடாத வேதனையும் உண்டு' என அதைக் குறித்து ஆண்டவர் முன் புலம்புகின்றார். புறவினத்தார்முன் ஹீரோ போல விளங்கியவர், தன் சொந்த இனத்தாராகிய இஸ்ரயேல் மக்கள்முன் ஜீரோ போல ஆகின்றார்.

(இ) 'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்!' - பேதுரு

ஆண்டவர்தாம் கடல்மீது நடந்து வருகிறார் என அறிகிற பேதுரு, அவரை நோக்கித் தானும் கடல்மேல் நடந்துசெல்ல விழைகின்றார். 'வா!' என்ற இயேசுவின் கட்டளையை ஏற்று நடக்கத் தொடங்கியவர், பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி, 'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்!' என அலறித் துடிக்கின்றார். மற்ற திருத்தூதர்கள்முன்னும் இயேசுவின் முன்னும் ஒரு ஹீரோ போலத் தன் பயணத்தைத் தொடங்கியவர், புயலின் முன் ஜீரோவாக மாறுகின்றார்.

நம்பிக்கை மற்றும் நற்செய்தி ஆர்வத்தின் பிதாமாகன்கள் என்றழைக்கப்படுகின்ற இம்மூவரும் நொறுங்குண்ட நிலையில் இருக்கின்றனர். அல்லது தங்களின் வாழ்வில் நொறுங்குநிலையை அனுபவித்துள்ளனர்.

என்ன வியப்பு என்றால், அவர்களின் நொறுங்குநிலையில்தான் கடவுள் செயலாற்றுகின்றார்.

எலியாவுக்கு மெல்லிய ஒலியில் தோன்றுகிறார்.

பவுலுக்குத் தன் மாட்சியை வெளிப்படுத்துகின்றார்.

பேதுருவின் கரம் பிடித்துத் தூக்குகின்றார்.

ஆக, நம் வலுவின்மையில் இறைவனின் வல்லமை செயலாற்றுகிறது என்ற நற்பாடத்தைத் தருகின்றது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

நாம் செய்ய வேண்டியது என்ன?

(அ) என்னுடைய நொறுங்குநிலை மற்றும் வலுவின்மையைப் பட்டியலிடுவது. உடல்சார், உள்ளம்சார், உறவுசார் வலுவின்மைகளைக் கணக்கெடுக்க வேண்டும் முதலில்.

(ஆ) என் நொறுங்குநிலையிலிருந்து நான் வெளிவர வேண்டும் எனில், அதற்கு எதிர்ப்புறமாக என் முகத்தைத் திருப்ப வேண்டும். கார்மேல் மலையிலிருந்து எலியா சீனாய் பக்கம் திரும்ப வேண்டும். இஸ்ரயேலரிடமிருந்து பவுல் இயேசுவின் பக்கம் திரும்ப வேண்டும். புயலின் பக்கம் இருந்து பேதுரு தன் முகத்தை ஆண்டவரின் பக்கம் திருப்ப வேண்டும்.

(இ) கடவுள் தன் வல்லமையால் என் வலுவின்மையைக் களைந்தபின், நான் முந்தைய நிலையை உதறித் தள்ள வேண்டும். எலியா போல அவருடன் நடக்க வேண்டும். பவுல் போல அவர்மேல் ஆர்வம் கொள்ள வேண்டும். பேதுரு போல அவருடன் படகில் ஏற வேண்டும்.

இதையே,

மனித நொறுங்குநிலை இறைவனின் உறுதியையும்,

மனித வலுவின்மை இறைவனின் வல்லமைiயும் தழுவிக்கொள்வதை,

இன்றைய பதிலுரைப்பாடல் (காண். திபா 85) உருவகமாகப் பதிவு செய்கிறது:

'பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்.

நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.

மண்ணினின்று உண்மை முளைத்தெழும்.

விண்ணினின்று நீதி கீழ்நோக்கும்.

நல்லதையே ஆண்டவர் அருள்வார்.

நல்வினையையே நம் நாடு நல்கும்.'

கொரேனா காலத்தில், இதுவே நம் நம்பிக்கையாகவும் எதிர்நோக்காகவும் இருக்கட்டும்!

நொறுங்கிக் கிடக்கும் நம்மை நோக்கி அவர் வருகின்றார்.

சுழற்காற்று என்னும் ஊடகங்களில் அல்ல.

நிலநடுக்கம் என்னும் அரசியல்வாதிகளின் போலி வாக்குறுதிகளில் அல்ல.

தங்கள் முகங்களை மறைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு முகஒளி கொடுக்கும் மென்மையான தென்றல் ஒலியில் அவர் வருகின்றார்.

நம் படகிலிருந்து அவர் தூரமாகத் தெரிகிறார்.

சில நேரங்களில் அச்சுறுத்தும் கொரோனா என்னும் பேய்தான் கடவுளோ என்று பயமுறுத்துகின்றார்.

ஆனால், அருகில் அவர் வரும்போது, 'துணிவோடிருங்கள்! அஞ்சாதீர்கள்!' என்கிறார் அவர்.

ser

அமைதியில் இறைவனை அறிவோமா?

திருத்தொ. குழந்தைஇயேசு பாபு

ஆலயத்தில் திருப்பலி முடிந்தவுடனேயே வெளியே சென்றுவிடாமல் சில மணித்துளிகள் அமைதியாக அமர்ந்து ஜெபிக்கும் ஒரு இளைஞனை அருட்தந்தை தினமும் கவனித்துக்கொண்டிருந்தார். இந்த காலத்தில் இப்படி ஒரு இளைஞனா என்று மிகுந்த ஆச்சரியத்துடன், ஒருநாள் அந்த இளைஞனிடம் உரையாடினார். தம்பி உன் வயது இளைஞர்கள் ஆலயத்திற்கு வருவதே அபூர்வம். ஆனால் நீயோ தினமும் வந்து தனிமையில் அமைதியாக ஜெபிப்பது  என்னை வியக்க வைக்கிறது என்று கூற அந்த இளைஞன் மறுமொழியாக"பாதர் நான் ஒரு ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவன். மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்தேன். ஆயினும் நன்கு படித்தேன். துன்பங்கள் அதிகம் அனுபவித்ததால் கடவுள் மீது நம்பிக்கை சற்று குறைவுதான்.நான் வளர வளர என் குடும்பத்தின் தேவைகள் அதிகமாவதையும் அதை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் எனக்கு இருப்பதையும் உணர்ந்தேன்.பல முறை  பல இடங்களில் வேலை தேடி அலைந்தேன்.நேர்முகத்தேர்வுகளில் கலந்து கொண்டேன். ஆனால் வேலை கிடைத்த பாடில்லை. குடும்ப கஷ்டங்கள் பெருகப் பெருக பல குழப்பங்கள் என்னில் எழுந்தன. தளர்ந்து போய்விட்டேன். என்னை ஊக்கப்படுத்த யாருமில்லை. மாறாக வீட்டிலுள்ளவர்கள் கூட குறைகூற ஆரம்பித்தனர். ஒரு முறை ஒரு கம்பெனியில் வேலைக்காக நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தேன். ஆனால் மனதிலே . வேலை கிடைக்குமா கிடைக்காதா  என்ற ஒரு குழப்பம். அவநம்பிக்கை. அந்தக்குழப்பத்தில் நேர்முகத்தேர்வுக்காக நன்கு தயார் செய்த போதும் எனக்கு துணிவில்லாதது போன்ற உணர்வு. சரியாக ஆலயத்தை தாண்டி செல்லும் போது என்னை அறியாமலேயே ஆலயத்திற்குள் சென்றேன். ஒன்றும் ஜெபிக்கவில்லை. என்னையே அமைதிப்படுத்தினேன். எனக்குள் ஒரு புத்துணர்வு. மனத்தெளிவு. என் தோளைத்தட்டிக் கொடுத்து தைரியமாகப் போ. நானிருக்கிறேன் என்று யாரோ சொன்னது போன்ற ஒரு உணர்வு. அது நிச்சயமாக ஒரு இறைஅனுபவம் என அறிந்தேன். அந்த முறை நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றேன். நல்ல முன்னேற்றம் என் வாழ்வில் கண்டேன். அன்றிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு நாளும் அமைதியில் இறைவனை அனுபவித்து என் நம்பிக்கையில் வளர்ந்து கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.

இன்றைய வாசகங்கள் அமைதியில் இறைவனை அனுபவிக்க நம்மை அழைக்கின்றன. பரப்பரப்பான இன்றைய உலகில் துன்ப துயரங்கள் உலக பாரங்கள் நம்மை ஒருபுறம் அழுத்த, கேளிக்கைகளும் கொண்டாட்டங்களும் நம்மை ஒரு புறம் ஈர்க்க, எந்த நேரத்தில் எதை செய்வது என்ற குழப்பத்திலேயே நாம் நாட்களைக் கழிக்கிறோம். இந்நிலையில் அமைதியில் எவ்வாறு இறைவனைக் காண முடியும் என்ற கேள்வி நம்மில் எழலாம்.

தன் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள ஒரேபு மலையில் தஞ்சமடைந்த எலியாவிற்கு இடிமுழக்கத்திலும் நிலநடுக்கத்திலும் கடவுள் தன்னை வெளிப்படுத்தவில்லை. மாறாக மிருதுவான தென்றலிலே தன்னைக்காட்டினார். இதன் மூலம் குழப்பத்தையும் பயத்தையும் நீக்கி அமைதி கொள். நான் உன்னுடன் இருக்கிறேன் என கடவுள் எலியாவிற்கு உணர்த்துகிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு நாள் முழுதும்  செய்த தன் மக்கள்பணியை முடித்துக்கொண்டு தனிமையான இடத்திற்கு சென்று கடவுளோடு அமைதியாக உறவாடி தான்  மீண்டும் பணிசெய்ய தனக்கு உரமேற்றுவதையும் காண்கின்றோம்.

அதே வேளையில் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த சீடர்கள் மனக்குழப்பத்திலும் பயத்திலும் தங்களை நோக்கி வருவது இயேசு தான் என உணர இயலா நிலையையும் காண்கிறோம் . எனவே இன்று ஒரு முடிவெடுப்போம். எத்துணை பரபரப்பான நேரத்திலும், கவலையிலும், குழப்பத்திலும் கடவுளோடு சிலமணித்துளிகள் அமைதியாக உறவாடுவோம். அவரை அனுபவிப்போம். நம்பிக்கையையும் துணிவையும் அவர் தந்து நம்மோடு இருப்பார். 

நாம் வாழும் இந்த காலகட்டத்தில் எத்தனையோ குடும்பங்களில் பிரச்சனைகள் இருப்பதற்கு காரணம் அமைதியின்மையாகும். நான் ஒருமுறை திருச்சி மறைமாவட்டத்தில் ஒரு கிராமத்திற்கு களப்பணி அனுபவத்திற்காக  அனுப்பப்பட்டிருந்தேன்.  குடும்பங்களை சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. எனவே ஒரு குடும்பத்தை நான் சந்தித்தேன். அக்குடும்பத்தில் எப்பொழுதுமே சண்டையும் சச்சரவும் நிறைந்திருந்தது. ஒரு அமைதியற்ற சூழல் இருந்தது.  நான் அவர்களோடு பேசிய பொழுது "எங்களுக்கு அமைதியே இல்லை" என்று என்று கூறினர். அப்போது நான் "உங்களுக்கு இவ்வளவு பணமும் வசதியும் இருந்தும் மகிழ்ச்சியும் அமைதியும் இல்லை. இதற்கு காரணம் நீங்கள் அமைதியில் வாழ்வதில்லை என்பதேயாகும். மேலும் கோபம் வரும்போது சிறிதுநேரம் அமைதியை கடைபிடிக்கவும். அப்பொழுது நிறைவான அமைதியை பெற்றுக்கொள்ள முடியும்  "என்று கூறினேன் . அன்று முதல் இந்நாள் வரை சண்டை என்று வந்துவிட்டால் அமைதியாக தங்களுடைய தவற்றை உணர்ந்து ஒற்றுமையோடு வாழ்ந்து வருகின்றனர். இப்படிப்பட்ட அன்புள்ள மக்களாகத்தான் வாழ இன்றைய வாசகங்கள் அறிவுறுத்துகின்றன. எனவே  நம்முடைய வாழ்விலும் எவ்வளவு பிரச்சனைகளும் இன்னல்களும் வந்தாலும் அவற்றை அமைதியோடு கண்ணோக்கி நோக்கி வாழும் பொழுது இறைவனின் அமைதியை அனுபவிக்க முடியும்.  நம் தாய் அன்னை மரியாவும் அமைதியின் சிகரமாக இருக்கின்றார். அவர் இயேசுவின் மண்ணக பிறப்பு முதல் விண்ணக பிறப்பு வரை அனைத்தையும் அறிந்திருந்தார். அமைதியில் இறைவனை கண்டவர் தான் அன்னை மரியா . புனிதர்களான புனித பிரான்சிஸ் அசிசியார், அவிலா தெரசா, புனித  அன்னை தெரசா  போன்ற  எண்ணற்ற புனிதர்கள் தனிமையில் அமைதியை கொண்டவர்களாக வாழ்ந்தனர். இன்றைய காலகட்டத்தில் கொரோனா என்ற  தீநுண்மியின் காரணமாக எண்ணற்ற மக்கள் அமைதி இழந்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் இன்றைய வாசகங்கள் ஆறுதலை வழங்குவதாக இருக்கின்றன. எனவே நம்முடைய வாழ்விலும் பல பிரச்சனைகளை நினைத்து அமைதி இழந்துவிடாமல், அமைதியோடு கடவுளிடம் தஞ்சம் புகுவோம். நம்முடைய பலவீனத்தின் வழியாக பிரச்சினைகள் வரும்பொழுது அமைதி காத்து அதை சரி செய்ய இறைவனை ஞானத்தை வேண்டுவோம்.  

இறைவேண்டல்

அமைதியில் உறவாடும் தெய்வமே! எங்களுடைய பரபரப்பான அலுவல்களுக்கு மத்தியிலும், மனமும் உடலும் சோர்ந்த நிலையில் குழப்பத்தில் வாழ்ந்தாலும் உமக்கென்று சிறிதளவு நேரமாவது ஒதுக்கி அமைதியில் உம்மை அனுபவிக்க வரம் தாரும். அதன் மூலம் நாங்கள் நம்பிக்கையில் வேரூன்றி துணிவுடன் வாழ அருள் தாரும் ஆமென்

ser

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com