மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

ஆண்டின் 18ஆம் ஞாயிறு
முதலாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 55: 1-3 | உரோமையர் 8: 35,37-39 | மத்தேயு 14 : 13-21

ser

பகிர்ந்துகொடுத்தவர்

ஒரு எட்டு வயது பெண் குழந்தை தன் தந்தையை இழந்தும், குடிசையிலே உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த தன் அம்மாவைக் காப்பாற்றக் கடவுளைக் கூவி அழைத்து, அழுது கொண்டிருந்தாள். இதைப் பார்த்த பக்கத்து வீட்டுப் பெண் ஒருத்தி இந்தக் குழந்தையின் நிலையைக் கண்டு இரக்கம் கொண்டு மூன்று மாம்பழங்களைக் கொடுத்து, இதை ஆலயத்தில் கொண்டுபோய் கடவுளுக்குக் காணிக்கையாகக் கொடுத்து வேண்டிக் கொள். உன் அம்மாவைக் கடவுள் காப்பாற்றுவார் என்றாள். இந்த சிறுகுழந்தை மூன்று மாம்பழங்களையும் எடுத்துக் கொண்டு கோரிக்கைகளையும் இதயத்தில் சுமந்தவளாய் ஆலயத்தை நோக்கி நடந்தாள். வழியிலே பசியால் மயங்கிக் கிடந்த ஒரு வயது முதிர்ந்த பாட்டிக்கு ஒரு பழத்தை வைத்துவிட்டு நடந்தாள். அடுத்து ஒரு சிறுவன் பசி மயக்கத்தால் தள்ளாடி நடந்து வந்தான். தன் பசியைப் போக்க ஒரு மாம்பழம் கேட்டான். அவளும் உடன் ஒரு பழத்தைக் கொடுத்தாள். இறுதியாக ஆலயத்தை நெருங்கிச் சென்றபோது அதன் வாயிலில் ஒரு பிச்சைக்காரன் படுத்திருப்பதைப் பார்த்த அந்தக் குழந்தை தன் கையில் மீதி இருந்த ஒரு பழத்தையும் கொடுத்துவிட்டு வெறும் கையோடு ஆலயம் நுழைந்தாள். கடவுளே என்னை மன்னியும் , உங்களுக்கு உரிய பழங்களை மற்றவருக்குக் கொடுத்துவிட்டேன். அம்மாவைக் காப்பாற்றுங்கள், எனத் தேம்பித் தேம்பி அழுதாள். அழாதே மகளே . உன் அம்மா சுகம் அடைந்துவிட்டாள். மகிழ்ச்சியோடு வீட்டிற்குப் போ. அந்தப் பழங்களை எனக்கேதான் கொடுத்தாய். சின்னஞ் சிறிய ஒருவருக்கு நீ செய்த போதெல்லாம் எனக்கே செய்தாய் (மத். 25:40) என்றார் இயேசு.
 
இன்றைய மூன்று வாசகங்களும் இறையன்பின் ஒரு பரிமாணமான இரக்கத்தைப் பற்றி எடுத்துரைக்கிறது. முதல் வாசகத்திலே பாபிலோனிய அடிமைத் தளையால் நசுக்கப்பட்டு வாடிய இஸ்ரயேல் மக்களுக்கு எசாயா ஆறுதல் கூறுகிறார். கொடுமைகள் களையப்படும். நீதி நிலை நாட்டப்படும். போர், பூசல் ஒழிக்கப்பட்டு அமைதி நிலவும் என நம்பிக்கை ஊட்டுகிறார். இந்த இரக்கத்தின், அன்பின் வரலாற்று சாட்சியம்தான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்று திருத்தூதர் பவுல் அடிகளார் இன்றைய இரண்டாம் வாசகத்தில் கோடிட்டுக் காட்டுகிறார். இன்றைய நற்செய்தி இயேசுவின் பரிவிரக்கத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. அப்பத்தைப் பகிர்தலால் ஆண்டவரின் அன்பும், இரக்கமும் மிகுதியாக 12 கூடைகளில் சேகரிக்கப்படுகின்றன.

இன்றைய நற்செய்திக்கு வாருங்கள். பாழ் வெளியாயிற்று, நேரமும் ஆகிவிட்டது. கூட்டத்தை அனுப்பிவிடும் (மத். 14:15-16) என்றார்கள் சீடர்கள். இது மனித சிந்தனை. மனித இயலாமையை நியாயப்படுத்துகிறது. ஆனால் இறைப் பார்வை - இயலாமையைப் போக்குகிறது. பந்தியில் அமரச் சொல்லுங்கள் என்று கூறி, அப்பத்தையும் மீனையும் எடுத்து ஆசீர்வதித்து பரிமாறச் சொல்கிறார் இயேசு (மத். 14:19). பின்பு மீதியான துண்டுகளை 12 கூடைகளில் நிறைய எடுத்தனர் (மத். 14:20).

விவிலியத்தில் பகிர்ந்துகொடுத்தவர்களைப் பார்க்கிறோம்
செல்வந்தர்கள் தங்கள் காணிக்கையை உண்டியல் பெட்டியில் போட்டார்கள். இவர்கள் தங்களுக்கு இருந்த மிகுதியான (Sudlus) செல்வத்திலிருந்து காணிக்கை போட்டார்கள் (லூக். 21:4).
சக்கேயு எழுந்து நின்று ஆண்டவரே என் உடைமையில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன். எதையாவது கவர்ந்திருந்தால் நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் (லூக். 19:8) என்றான்.
ஏழைக் கைம்பெண் ஒருத்தி தனக்குப் பற்றாக்குறை இருந்தும், தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தன் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டாள் (மாற். 12:42, 4 லூக். 21:4)
நான் ஆண்டவரின் அடிமை. உம் வார்த்தையின்படி எனக்கு நிகழட்டும் என்று தன்னையே கொடுத்தாள். அங்கே இயேசு உருப்பெறுகிறார் (லூக். 1:38).

நானே வழி, வாய்மை, வாழ்வு (யோவா. 14:6) என்றவர் அப்பத்தை எடுத்துப் பிட்டுக் கொடுத்து இதை வாங்கி உண்ணுங்கள். இது என் உடல் (மத். 26:26) என்று கூறி தன்னையே நமக்காகத் தந்துவிட்டார்.

இறைச் சாயலில் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரும் பகிர்தலை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதையே விவிலியம் நமக்குத் தெளிவாக்குகிறது. பகிர்தல் என்றால் உணவை மட்டும் மையப்படுத்துவதில்லை. மாறாக அறிவில் சிறந்து விளங்கினால், தெரியாதவருக்குச் சொல்லிக் கொடுத்தல் தேவை. பொருள் இருந்தால் அதை இல்லாதவருக்குக் கொடு. காயப்பட்டவருக்கு இரக்கத்தைக் காட்டு. உள்ளம் உடைந்தவனுக்கு உன் உடல் உழைப்பால் பகிர்ந்து கொடு என்பதாகும். தாகமாய் இருப்பவருக்குத் தண்ணீர் கொடுப்பவர் கைமாறு பெறாமல் போகார் என்பது வேதவாக்கு. பசியை ஒருவர் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் தாகத்தை ஒருவர் பொறுத்துக்கொள்ள முடியாது. எனவேதான் இயேசு , தாகமாய் இருக்கிறேன் (யோவா. 19:28) என்றார் கல்வாரியில், தாகமாய் இருப்போரே என்னிடம் வாருங்கள் (யோவா. 7:37-38) என்று கூறுகிறார்.

ஒரு ஊருக்கு ஒரு முனிவர் வந்தார். அவரைப் பார்த்து சில கேள்விகள் கேட்டார்கள் : சிலருக்கு மூன்று தலை முறைக்கு மேல் சொத்து உண்டு. பலருக்கு ஒரு வேளைச் சோத்துக்கே வழியில்லை . என்ன செய்வது?
அதற்கு அந்த முனிவர் :
ஓ என்னுடையதும் என்னுடையது. உன்னுடையதும் என்னுடையது என்பவன் கடையர், கயவர், திருடர் என்றார்.
என்னுடையது என்னுடையது. உன்னுடையது உன்னுடையது என்பவர் சாமானியர் - சந்தர்ப்பவாதி.
உன்னுடையது உன்னுடையது. என்னுடையதும் உன்னுடையது என்பவர் ஊதாரி.
ஆனால் என்னுடையதும், உன்னுடையதும் இல்லாதவனுக்கு உரியது என்பவர் பகுத்துண்பவர் - மாமனிதர் என்றார்.
இதைத்தான் இயேசு கூறுகிறார்: கொடுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும் (லூக். 6:38). பகிராமல் சேர்த்து வைத்தால் அங்கே பாவம் கூடு கட்டிவிடும் என்கிறார் வின்சென்ட் தே பவுல்.

இறுதியாக, கிணற்றில் இருக்கும் நீரை இறைத்து எடுத்தால்தான் அது பெருகும். இல்லையேல் இருப்பதும் கெட்டு விடும்.

ser ser

இருப்பதை ஈவது இனிய பண்பு

தொநூ 18:1-14 : மூன்று மனிதர்களுக்கு உணவு கொடுத்ததால் ஆபிரகாமுக்கு குழந்தை வரம் கிடைத்தது.
1 அர 17:8-16 : சாரிபாத்துக் கைம்பெண் இறைவாக்கினர் எலியாவுக்கு அப்பம் கொடுத்ததால் அவள் வீட்டில் புதுமை நடந்தது.
யோவா 2:1-11 : திருமண வீட்டார் ஆறு கற்சாடிகள் நிறைய இயேசுவுக்குத் தண்ணீர் கொடுத்ததால் அந்த வீட்டில் அற்புதம் நிகழ்ந்தது.
லூக் 19:1-10 : ஆண்டவரே, என் உடமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகின்றேன் என்று சக்கேயு சொன்னவுடன்தான் அவருக்கு மீட்பு அளிக்கப்படுகின்றது.

இன்றைய நற்செய்தியிலே புதுமை செய்யும் இயேசுவைச் சந்திக்கின்றோம். இயேசுவின் வாயிலிருந்து புறப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் தேனாய்த் தித்தித்தது. அவர் பேசியதைக் கேட்ட ஒவ்வொருவரும் வந்தேன், பார்த்தேன், சுவைத்தேன் - எங்கும், எப்பொழுதும், எதிலும் தேன், தேன், தேன் என்றார்கள்! இயேசுவை விட்டுப்பிரிய அந்த மக்களுக்கு மனமே இல்லை! அவரைச் சுற்றிச் சுற்றி வந்தனர்!

அன்று ஆயிரக்கணக்கான மக்கள் அவரைச் சூழ்ந்திருந்தனர். ஆண்கள் மட்டும் ஏறத்தாழ ஐயாயிரம் பேர் இருந்தனர்! அது ஒரு பாழ்வெளி. மாலை நேரமாகிவிட்டது! மக்களோ, பாழ்வெளியில் பாடவந்த பால்நிலவே! எங்கள் இயேசுவே! இந்தப் பாழ்வெளி, பால் வெளி ஆகிட பாடும்! என்றார்கள். அவர்கள் மீது மனமிரங்கி இயேசு அவர்களுக்கு உணவு படைக்க விரும்பினார். சீடர்களோ, எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை (மத் 14:17) என்றார்கள். இயேசு அவற்றைக் கேட்க, அந்தச் சீடர்களும் அவற்றைக் கொடுக்க, அங்கே புதுமை நடக்கின்றது. எஞ்சிய உணவைப் பன்னிரெண்டு கூடைகள் நிறைய எடுத்தார்கள்.
நமது கடவுள் தாராளமாகக் கொடுக்கும் கடவுள்; மாறாத அன்பை நமக்குக் கொடுக்க காத்துக்கொண்டிருப்பவர் (முதல் வாசகம்). அவர் இந்த உலகை எவ்வளவு அன்பு செய்தார் என்றால் தம் ஒரே மகனென்றும் பாராமல் இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பி வைத்தார் (யோவா 3:16). அவரோ தம்முடைய ஆவியை நமக்குள் ஊற்றி (உரோ 5:5) நம்மோடு இரண்டறக் கலந்து, நம்மோடு இணைந்து வாழ்கின்றார்; நமக்கு உதவி செய்ய, நம் வாழ்வில் புதுமை செய்யக் காத்துக்கொண்டிருக்கின்றார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே! நாம் கொடுக்க முன்வர வேண்டும்! சுயநலவாதிக்கும் சொர்க்கத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது!

மேகம் திரண்ட நேரத்திலே தாகம் எடுக்கவில்லை!
தாகம் எடுத்த நேரத்திலே மேகம் திரளவில்லை!
என்ற புலம்பல்கள் ஒருபுறம்!
ஊரெல்லாம் சிரிக்கும் ஓசை! ஆனால் உறங்காத கண்கள் இங்கே!
நாளெல்லாம் தனிமை இங்கே! நான் தேடும் வாழ்க்கை எங்கே?
என்ற கேள்விகள் மறுபுறம்!
புதுமைகள் நிறைந்த புது விடியல்கள் பிறக்க நம்மிடம் இருப்பதை மற்றவர்க்குக் கொடுக்க முன் வருவோம்!


மேலும் அறிவோம்:


பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (குறள் : 322).


பொருள் : ஒருவர் தமக்குக் கிடைத்த உணவைப் பிறருடன் பகிர்ந்து பல்வேறு உயிர்களையும் பேணிக்காத்தல் அற நூலார் தொகுத்துக் கூறிய அறங்கள் அனைத்திலும் மேலானதாகும்.

ser ser

ஓர் ஊரில் திருக்குறள் போதகரும் விவிலியப் போதகரும் இருந்தனர். ஒருநாள் பகல் 1 மணிக்கு திருக்குறன் போதகர் ஓர் ஆலமரத்தடியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு விவிலியப் போதகர் வந்தார், திருக்குறள் போதகர் தன்னுடைய உணவை விவிலியப் போதகருடன் பகிர்ந்து கொள்ளவில்லை. விவிலியப் போதகர் திருக்குறள் போதகரிடம் பின்வரும் குறளைக் கூறினார்.

விருந்து புறத்ததாத் தான் உண்டல் சாவா
மருந்து எனினும் வேண்டற்பாற் றன்று (குறள் 82)

விருந்தினரைக் காக்க வைத்துக்கொண்டு சாவா மருந்தாகிய அமிழ்தம் என்றாலும் தான் மட்டும் உண்பது விரும்பத்தக்கதல்ல. இக் குறளைக் கேட்டத் திருக்குறள் போதகர் சிறிதளவு உணவை விவிலியப் போதகருக்குக் கொடுத்து பின்வரும் குறளைச் சொன்னார்

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாகக்
கொள்வர் பயன் தெரிவார் (குறள் 104)

தினையளவு உதவியையும் பனையனவாக நினைத்துப் போற்ற வேண்டும். அதாவது திருக்குறள் போதகர் கொடுத்த சிறிதளவு உணவைப் பெரிய அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு மாதம் கழித்து விவிலியப் போதகர் அதே ஆலமரத்தடியில் பகல் ஒரு மணிக்கு உணவு அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த திருக்குறள் போதகர் விவிலியப் போதகரிடம் உணவு எதிர்பார்த்தார். ஆனால் அவர் கொடுக்கவில்லை. அந்நிலையில் குறன் போதகர், "நீ உன்னை அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்வாயாக" என்ற விவிலிய வசனத்தைச் சொன்னார். விவிலியப் போதகர் அவரிடம், "பிறர் உடைமையை விரும்பாதிருப்பாயாக" என்ற மற்றொரு விவிலிய வசனத்தைக் கூறினார்.

எல்லாச் சமயங்களும் பகிர்வு மனப்பான்மையை வலியுறுத்துகின்றன. ஆனால் இன்று சமயங்களின் கோட்பாடுகள் கட்டுரை எழுதவும், கவியரங்கு மற்றும் பட்டிமன்றங்கள் நடத்தவும் தான் பயன்படுகின்றன. அவை மனிதருடைய அன்றாட வாழ்வை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை; மனிதரின் மனத்தில் மனித நேயத்தை வளாப்பதில்லை. இன்று சமயங்களில் சாரமில்லை. வெறும் சக்கையே எஞ்சி உள்ளது. இப்பின்னணியில் இன்றைய அருள்வாக்கு வழிபாடு பகிர்வு மனப்பான்மையை வலியுறுத்துகிறது. பரந்த இவ்வுலகத்தில் எல்லார்க்கும் போதுமானது உள்ளது. ஆனால் ஒரு சிலரின் தன்னல மனப்பான்மையால் பலர் பசியும் பட்டினியுமாக வாடுகின்றனர். எவருமே வெறும் வயிற்றுடன் படுக்கைக்குச் செல்வது கடவுளுடைய விருப்பமன்று. எல்லாரும் வயிறார உண்டு மகிழ வேண்டும் என்பதே கடவுளுடைய விருப்பம்.

இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் கூறுகிறார்: "கையில் பணமில்லாதவர்களே வாருங்கள். தானியத்தை வாங்கி உண்ணுங்கள், காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள்" (எசா 55:1), இன்றைய பதிலுரைப் பாடல் கூறுகிறது: "எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மை நோக்குகின்றன; தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கிறீர்" (திபா 145:15). இன்றைய நற்செய்தியில் சீடர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட முயற்சி செய்கின்றனர். ஆனால் இயேசு அவர்களிடம் கூறுகிறார். அவர்கள் செல்ல வேண்டியதில்லை. நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் (மாற் 14:16). எனவே எல்லாரும் உண்ண வேண்டும் என்பதே இறைவனின் விருப்பம்.

கிறிஸ்து தம் சீடர்களிடமிருந்த அப்பங்களை வாங்கி, கடவுளைப் போற்றி, அப்பங்களைச் சீடர்களுக்குக் கொடுக்க, சீடர்கள் மக்களுக்குக் கொடுக்கின்றனர். ஐயாயிரம் பேர் வயிறார உண்டபின், எஞ்சியிருந்த அப்பங்களை பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். நமக்குள்ளதைப் பிறருடன் பகிர நாம் முன்வரும் போது அது குறைவுபடாது. மாறாக மேலும் மேலும் வளரும். இறைவாக்கினர் எலியாவுக்கு உணவு கொடுத்த ஏழைக் கைம்பெண் வீட்டிலிருந்த பானையில் மாவு எடுக்க எடுக்கக் குறையவில்லை; கலயத்தில் இருந்த எண்ணெய்யும் குறையவில்லை. மணிமேகலையின் அமுத சுரப்பியில் இருந்த உணவு எடுக்க எடுக்க வளர்ந்தது. ஒருவர் தமது உடைமையைச் சேமித்து வைக்க வேண்டிய வங்கி ஏழைகளின் வயிறு என்கிறார் வள்ளுவர்.

அற்றார் அழிபசி தீர்ப்பின் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி (குறள் 226)

பிறருக்குக் கொடுக்காமல் தனது விளைச்சலைப் பதுக்கி வைத்த அறிவற்றச் செல்வனுக்குக் கடவுள் கூறியது: "அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்? - (லூக் 12:20)

ஒரு பணக்காரன் படு கஞ்சன்; வருக்கும் ஈயாதவன். ஒருநாள் அவனுடைய வீட்டில் அவன் தனியாக இருந்தபோது, கொள்ளையர்கள் அவனது வீட்டில் நுழைந்து, அவனுடைய கையையும், காலையும் கட்டிப் போட்டு அவனுடைய உடைமைகைளைக் கொள்ளையடித்துச் சென்றனர். அப்போது அவன் அழுதுகொண்டு கூறியது: "நான் வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி சம்பாதித்ததை எல்லாம், இப்ப என் காலைக்கட்டிக் கையைக்கட்டி எடுத்துக்கிட்டு போறாங்களே!"

ஏழைகளுக்கு இரக்கம் காட்டாதவர்களுக்கு உரிய இடம் நரகம் (மத் 25: 41-45), பிச்சை கேட்பவர்களுக்குக் கொடுக்கும் ஈகைக்குணம் ஒரு சிலருக்கு உண்டு; அப்படி கொடுக்காமல் மறைப்பவர்களுக்குக் கடும் நரகம் காத்திருக்கிறது என்கிறார் அப்பர் அடிகளார், இரப்பவர்க்கு ஈய வைத்தார், கரப்பவர்க்கு கடும் நரகம் வைத்தார்.

தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் ஆலயத்தில் அப்பம் பிட்டனர் (திப 2:42), அதே நேரத்தில் வீடுகளிலும் கபடற்ற உள்ளத்துடன் உனவைப் பகிர்ந்து கொண்டனர் (திப 2:46), அவர்களுடைய வழிபாட்டிற்கும் வாழ்வுக்கும் இடையே எவ்விதப் பிளவும் இல்லை. நாம் இன்று அன்பியக் கூட்டங்கள் நடத்துகிறோம்; இறைவார்த்தையைப் பகிர்ந்து கொள்கிறோம்; கூடிச் செபிக்கிறோம், பாடுகிறோம். ஆனால் வசதி உள்ளவர்கள் தங்களுக்கு உள்ளதை வசதி இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்கிறார்களா? இல்லையென்றால், அன்பியங்கள் வெறும் கண்துடைப்போ பாட்டிகள் பேசும் பழங்கதையோ!

ser ser

எல்லா உயிர்களுக்கும் உணவளிக்கும் இறைவன்

நிகழ்வு

ஆதரவற்றவர்களுக்கும், பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்ட வயது முதிய பெற்றோருக்கும், ஏழைகளுக்கும் உணவளிக்கவேண்டும் என்பதற்காகத் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் ஒரு மனிதரை உங்களுக்குத் தெரியுமா? அவர் யாரென்று சொல்கிறேன். கேளுங்கள்.

திருச்சியில் உள்ள பீம் நகரைச் சார்ந்தவர் திரு. பாரதி. பொறியியல் படிப்பைப் படித்து முடித்தவரான இவர், சொந்தமாகத் தொழில் செய்து வருகின்றார். இவர் தான் வசித்து வரும் பகுதியில் ஆதரவற்றவர்களும், பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்ட வயதுமுதிர்ந்த பெற்றோர்களும், வறியவர்களும் உணவின்றிப் பட்டினி கிடப்பதைக் கண்டார். இதைப் பார்த்துவிட்டு, அவர்கள்மீது பரிவுகொண்ட இவர், அவர்களுக்கு உணவளிக்கவேண்டும் என்பதற்காக 2002 ஆம் ஆண்டு ‘உதவும் மனங்கள்’ என்றோர் அமைப்பைத் தொடங்கினார்.

இந்த அமைப்பின் மூலம் இவர் ஒவ்வொருநாளும் எழுபது பேர்களுக்கும் மேல் மதிய உணவு அளிக்கத் தொடங்கினார். ஆண்டுகள் மெல்ல உருண்டோடத் தொடங்கியபொழுது, இவருடைய வீட்டில் இருந்தவர்கள் இவரிடம், திருமணம் செய்துகொள்ளச் சொன்னபொழுது, இவர் அவர்களிடம், “திருமணம் செய்துகொண்டால் மனைவி, குழந்தைகள் என்று ஆகிவிடும். அதனால் பசியோடு இருக்கும் முதியர்களுக்கு உணவளிக்க முடியாமல் போய்விடும்” என்று சொல்லி திருமணம் செய்துகொள்ளலேயே பணிசெய்து வருகின்றார். சிலநேரங்களில் இவர் தயாரித்த உணவின் அளவை விடவும் மிகுதியான எண்ணிக்கையில் ஆள்கள் வந்துவிடுவார்கள். அப்படிப்பட்ட நேரங்களில் இவர் பக்கத்தில் உள்ள உணவகங்களில் உணவு வாங்கித் தந்து, அவர்களுடைய பசியை ஆற்றுவார்.

இப்படி 2002 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை ஆதரவற்றவர்களுக்கு உணவளித்து வரும் இவர், நற்செய்தியில் ஆண்டவர் இயேசு பசியோடு இருந்த மக்களுக்கு உணவளிப்பதை நமக்கு நினைவுபடுத்துபவராக இருக்கின்றார். பொதுக்காலம் பதினெட்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, எல்லா உயிர்களுக்கும் உணவளிக்கும் இறைவன் என்ற செய்தியை நமக்கு எடுத்துச் சொல்கின்றது. அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தனிமையைத் தேடி வந்தபோதும், தன்னிடம் வந்தவரிடம் பரிவுகொண்ட இயேசு

‘உண்மையின் உரைகல்லாக’ இருந்த திருமுழுக்கு யோவான், ஏரோது மன்னனிடம் தவற்றைச் சுட்டியதால், அவன் அவரைத் தலைவெட்டிக் கொன்றுபோட்டான். இச்செய்தியைக் கேள்விப்படும் இயேசு தனிமையான ஓர் இடத்திற்கு வருகின்றார். லூக்கா நற்செய்தியாளர் இயேசு வந்த அந்தத் தனியான இடம் பெத்சாய்தா (லூக் 9:10) என்று குறிப்பிடுவார். இப்படித் தனிமையான ஓர் இடம்தேடி வந்த இயேசுவைத் தேடி மக்கள் வருகின்றார்கள். அப்பொழுது இயேசு, ‘நாமோ தனிமையான இடம்தேடி வந்திருக்கின்றோம்...! இங்கேயும் இவர்கள் வந்துவிட்டார்களே!’ என்று அவர்கள்மீது சினம் கொள்ளவில்லை. மாறாக அவர்கள்மீது அவர் பரிவுகொண்டு, அவர்களிடம் இருந்த உடல் நலமற்றவர்களை நலப்படுத்துகின்றார்.

இயேசுவுக்கு, தான் இந்த மண்ணுலகத்தில் இருக்கப்போவது குறுகிய காலம்தான் என்று தெரிந்ததால், அவர் தனக்கு வாய்ப்புக் கிடைக்கும்பொழுதெல்லாம் மக்களுக்கு நன்மைகளைச் செய்துகொண்டே இருந்தார். இயேசு தனக்கு வாய்ப்புக் கிடைத்தபொழுதெல்லாம் நன்மை செய்துகொண்டே இருந்தார் எனில் (திப 10: 38), நாமும் நமக்கு வாய்ப்புக் கிடைக்கும்பொழுதெல்லாம் நன்மைகளைச் செய்ய கடமைப்பட்டவர்களாக இருக்கின்றோம் என்பதை நம் நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.

முடியாது என்று தயங்கிய சீடர்கள்

இயேசு தன்னைத் தேடி வந்த மக்கள் நடுவில் இருந்த உடல்நலம் குன்றியவர்களை நலப்படுத்தி, அவர்களுக்குப் போதித்துக்கொண்டிருக்கையிலேயே மாலை நேரம் ஆகிவிடுகின்றது. இதனால் சீடர்கள் இயேசுவிடம், மக்களை ஊர்களுக்குச் சென்று, தேவையான உணவை வாங்கிக்கொள்ளுமாறு அனுப்பி விடும் என்கிறார்கள்.

இயேசுவின் சீடர்கள் அவரிடம் இப்படிச் சொல்வது நமக்கு ஒரு செய்தியை மிகத் தெளிவாகச் சொல்கின்றது. அது என்னவெனில், பொறுப்பைக் கையில் எடுக்காமை அல்லது சாக்குப்போக்குச் சொல்லி பொறுப்பைத் தட்டிக் கழிப்பது. இயேசுவின் சீடர்கள், மக்கள் தங்களுடைய தலைவர் இயேசுவைத் தேடித்தான் வந்திருக்கின்றார்கள்... ஆகையால், அவர்களுக்கு உணவளிப்பது தங்களுடைய கடமை என்று மக்களுக்கு உணவளிக்க, ஏதாவது செய்திருக்க வேண்டும். அவர்களோ அது தங்களுடைய பொறுப்பல்ல என்று தங்களுக்கு இருந்த பொறுப்பைத் தட்டிக் கழிக்கின்றார்கள்.

இன்றைக்கும் கூட, பலர் தங்களுக்கு இருக்கின்ற சமுதாயக் கடமைகளை நிறைவேற்றாமலும், தாங்கள் தங்களுடைய சகோதர, சகோதரிகளுக்கும், வறியவர்களுக்கும் காவலாளிகள் (தொட 4:9) என்பதை உணராமலும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இது ஒரு பொறுப்பற்ற தன்மை என்றுதான் சொல்லவேண்டும். இயேசு தன்னுடைய சீடர்கள் இப்படிப் பொறுப்பற்ற தன்மையோடு, தங்களால் மக்களுக்கு உணவளிக்க முடியாது என்று இருந்ததைப் பார்த்துவிட்டு, அவர்களிடம், “நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்று சொல்லி பொறுப்பை அவர்கள் கையில் கொடுக்கின்றார்.

இயேசு தன்னுடைய சீடர்கள் கையில், ‘நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்’ என்று பொறுப்பினைக் கொடுத்தாலும், அவரே அதை முன்னின்று செய்து முடிக்கின்றார்.

முடியும் என்று மக்களுக்கு உணவளித்த இயேசு

‘தன்னை நம்பி மக்களைப் பசியோடு அனுப்பினால், அவர்கள் வழியில் மயங்கி விழுந்துவிடக்கூடும்’ என்பதை நன்றாகவே அறிந்த இயேசு, சிறுவன் கொடுத்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணார்ந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அவற்றைப் பிட்டு சீடர்களிடம் கொடுக்க, சீடர்கள் மக்களிடம் கொடுக்கின்றார்கள். இதனால் எல்லாரும் வயிறார உண்கின்றார்கள்.

இயேசு செய்த இந்த வல்ல செயல், நான்கு நற்செய்தி நூல்களிலும் இடம்பெறுகின்றது. இயேசுவின் உயிர்ப்புதான் நான்கு நற்செய்தி நூல்களில் சொல்லப்படும். அதற்கடுத்து நான்கு நற்செய்தி நூல்களிலும் சொல்லப்படுகின்ற ஒரே நிகழ்வு, இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தது. இதன்மூலம் இந்த நிகழ்வின் உண்மைத் தன்மையை நாம் உணர்ந்துகொள்ளலாம்.

இயேசு செய்த இந்த வல்ல செயல், திருப்பாடல் ஆசிரியர் சொல்வது போல் (திபா 145: 15) இறைவன் எல்லா உயிர்களுக்கும் தக்க வேளையில் உணவளிக்கின்றார் என்ற செய்தியை எடுத்துச்சொல்கின்றது. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், தாகமாய் இருப்பவர்களே, கையில் பணமில்லாதவர்களே! நீங்கள் என்னிடம் வாருங்கள் என்று கடவுள் அழைப்பார். இதற்கு அர்த்தம் தருகின்ற வகையில், நற்செய்தியில் இயேசு தன்னைத் தேடி வந்த மக்களுக்கு உணவளிக்கின்றார். மேலும் இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் கூறுவது போல, கிறிஸ்துவின் அன்பிலிருந்து, பட்டினிகூட நம்மைப் பிடித்துவிட முடியாது என்ற செய்தியையும் இயேசு செய்த வல்ல செயல் எடுத்துச்சொல்வதாக இருக்கின்றது.

ஆகையால், இயேசு மக்கள்மீது பரிவுகொண்டு அவர்களுக்குச் சீடர்கள் வழியாக உணவளித்து போன்று, பசியோடு இருக்கும் மக்களின் தேவைகள் நிறைவேற இயேசுவின் சீடர்களைப் போன்று நாம் கடவுளின் கைகளில் கருவியாய் இருந்து செயல்வோம். அதன்மூலம் இந்த மண்ணகத்தில் இல்லாமை இல்லாமல் ஆக்குவோம்.

சிந்தனை

“இறைவா! நீர் படைத்த மக்களில் பலரும் ஏன் பசியோடு இருக்கின்றார்கள்?” என்று விண்ணை நோக்கி முறையிட்ட ஓர் இளைஞனிடம், “அதற்குத்தான் நான் உன்னைப் படைத்தேன்” என்றாராம் இறைவன். ஆம், கடவுள் எல்லாருக்கும் உணவளிக்கிறார்; ஆனால், அதை நம் வழியாக அளிக்கின்றார். இந்த உண்மையை உணர்ந்தவர்களாய், வறியவர்களுக்கு உணவளித்து, அவர்களுடைய தேவைகளைப் பரிவுள்ளத்தோடு நிறைவேற்றுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser ser

பன்னிரண்டு கூடைகள்

ஆண்டவரே,

அந்தப் பன்னிரண்டு கூடைகள் அப்பம் என்னவாயிற்று?

பன்னிரண்டு சீடர்களும் ஆளுக்கு ஒரு கூடை எடுத்துக்கொண்டு போய்விட்டார்களா? அல்லது

அவை மீண்டும் மக்களுக்கே பிரித்துக் கொடுக்கப்பட்டனவா?

'அனைவரும் வயிறார உண்டனரே'

- உண்டவர்களுக்கும், உண்டு நிறைவுபெற்றவர்களுக்கும் அக்கூடைகள் சுமைகள்தாமே?

பன்னிரண்டு கூடைகளின் அப்பங்கள், அங்கிருந்த ஆலயங்களுக்குக் கொடுக்கப்பட்டு, அவை அப்படியே பூட்டி வைக்கப்பட்டன என்று சொல்லலாமா? அல்லது

பன்னிரண்டு கூடைகளின் அப்பங்கள், அங்கிருந்த நாட்டின் கருவூலத்தில் சேர்க்கப்பட்டு, எலிகளுக்கு இரையாயின என்று சொல்லலாமா? அல்லது

எங்கள் நாட்டு அரசியல்வாதிகள் சொல்வதுபோல, பன்னிரண்டு கூடைகள் அப்பங்கள், எத்தனால் தயாரிக்கவும், தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் பயன்படும். அந்த எத்தனாலைக் கொண்டு தயாரிக்கப்படும் சானிடைஸர் கொண்டு மக்கள் தங்கள் கைகளைக் கழுவிக்கொள்ளலாமாம். வயிற்றைக் கழுவவே முடியாத நிலையில் சானிடைஸர் கொண்டு கைகள் கழுவினால் என்ன? கழுவாவிட்டால் என்ன?

நீர் அப்பங்களைப் பெருக்கிய நிகழ்வில் பங்கேற்றவர்கள் தங்கள் கைகளை சானிடைஸர் கொண்டு கழுவிக் கொண்டார்களா?

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 55:1-3),

உம் தந்தையாகிய கடவுள், 'தாகமாய் இருப்பவர்களே, கையில் பணமில்லாதவர்களே வாருங்கள்!' என அழைக்கிறாhர். எங்களை அழைக்க யாருமில்லையே!

டிராஃபிக் சிக்னல்களிலும், பேருந்து நிறுத்தத்தின் நிழற்குடைகளிலும், இரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும், மர நிழல்களிலும் இன்றும் நாங்கள் நிற்கின்றோம், நடக்கின்றோம், கேட்கின்றோம். ஒன்றும் கிடைக்காமல் தூங்கிப் போகின்றோம். அந்தத் தூக்கத்திலிருந்து நாங்கள் எழுந்தவுடன் எங்கள் வாழ்க்கை மாறிவிடாது. நாங்கள் முந்தின நாள் எதிர்கொண்ட அதே சனியன்களை எதிர்கொள்ள வேண்டும்.

உம் வார்த்தையைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் பசியோடு வீடுதிரும்பக்கூடாது என்றீர்.

இதோ, நான் படுத்திருக்கும் இந்தச் சாலையில் உள்ள ஒரு ஆலயத்தில் மணிக்கொருமுறை உம் வார்த்தை ஒலிக்கிறது. ஆனால், நான் பசியோடுதான் தூங்கச் செல்கிறேன்.

என் பசியைப் பற்றி யாரும் எண்ணுவாரில்லை.

முகக் கவசம் அணிதல் பற்றியும்,

கைகளை மணிக்கொருமுறை கழுவுதல் பற்றியும்,

இரண்டு கஜ தொலைவு நிற்பது பற்றியும் எண்ணுகின்ற யாரும்

என்னைப் பற்றி எண்ணவில்லை.

அது என்ன ஆண்டவரே? 'கஜ தொலைவு'

யாருடைய மொழி இது?

பசியோடு மக்கள் பாடுபடும் இந்த நாள்களில்,

மும்மொழிப் படிப்புடன் கூடிய கல்விக் கொள்கை எதற்கு?

இடஒதுக்கீடு என்னும் கண்துடைப்பு எதற்கு?

மனிதர்களைப் பற்றிய தங்கள் அக்கறையை உதாசீனப்படுத்திவிட்டு, கடவுள் பற்றிய உரையாடல்கள் இங்கு எதற்கு?

இ.ஐ.ஏ. வரைவுத் திருத்தம் எதற்கு? எல்லாவற்றையும் அழித்துவிட்டு இரும்பைத் தின்று, கொஞ்சம் மீத்தேன் குடித்துக்கொள்ளவா?

எங்கள் நாட்டில், எங்கள் உலகில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

பேருந்தில் சென்றால் ஒட்டும் கொரோனா, ஒட்டுமொத்தமாக பைக் மற்றும் கார்களில், டிராஃபிக் சிக்னலில் குவிந்து கிடந்தால் ஒட்டாதா?

ஏழைகள் வெளியே வரக்கூடாது.

ஏழைகள் பயணம் செய்யக்கூடாது.

ஏழைகளுக்கென்று நல்லது, கெட்டது கிடையாது.

ஏன்? ஏழைகள் என்றால் அவர்கள் மனிதர்களே கிடையாது.

கொரோனா கண்டு பயந்தோம் முதலில்.

அந்தப் பயம், சில மாதங்களில், கொரோனா மேல் கோபமாக மாறியது.

அந்தக் கோபம், இப்போது விரக்தியாய் எங்கள் கண்களில் வழிகிறது.

எங்கும் செல்ல முடியவில்லை?

எதுவும் வாங்க முடியவில்லை?

காண்பவர் அனைவரும் கொரோனா தாங்கிகளாகத் தெரிகின்றனர்.

பாதி முகத்தை மறைத்தாயிற்று.

கண்கள் வழியாகவும் பரவும் என்று இன்னும் கொஞ்ச நாள்களில் சொல்லி, கண்களையும் மூடிவிடுவார்கள் என நினைக்கிறேன்.

எங்கள் குழந்தைகள் வீடுகளுக்குள் கிடந்து நம்பிக்கை இழக்கிறார்கள்.

எங்கள் இளைஞர்கள் எதிர்காலம் எதிர்நோக்கின்றி இருக்கிறது.

மாடுகள், பன்றிகள், கோழிகள் போல நாங்கள் எங்கள் கூட்டுக்குள்ளேயே எங்களை அடைத்துக்கொண்டோம்.

அங்குமிங்கும் ஓடி, அரிசி பருப்பு கொடுத்தவர்கள் எல்லாம் ஓய்ந்துவிட்டார்கள்.

அல்லது கொரோனாவில் மாய்ந்துவிட்டார்கள்.

கொடுப்பதற்கு அவர்களிடம் அட்சய பாத்திரமா இருக்கிறது?

அரசு என்னும் அட்சய பாத்திரம் தனக்குத் தானே பெருத்துக்கொண்டிருக்கிறது. தன்னைத் தானே விழுங்கும் பாம்பு போல அது தன்னையே அழித்துக்கொள்கிறது.

இதிகாச மனிதருக்குக் கோயில் கட்டினால் கொடிய நோயும் வராது என்ற மடைமையில்,

வேகமாக கோயில் பணிகள் வேறு.

எங்களை வீட்டிற்குள் இருக்கச் சொல்லிவிட்டு, வெளியே எங்கள் திண்ணைவரை அனைத்தும் விலை போய்க்கொண்டிருக்கின்றன.

உம் பரிவு எங்களுக்கு வேண்டாம் ஆண்டவரே!

நீர் எங்கள் வயிற்றை நிரப்ப வேண்டாம்!

நீர் உதவுவீர் என்ற எங்கள் நம்பிக்கை விளக்கு அணைந்துவிட்டது.

நாங்கள் எங்களையே காப்பாற்றிக் கொள்ள வேண்டாம்.

நீர் எங்களுக்கு வேண்டாம்!

அந்தப் பன்னிரண்டு கூடைகள் எங்கிருக்கின்றன என எங்களுக்குக் காட்டும்.

'ஆண்டவர் உங்கள் வயிறுகளை நிரப்புவார்' என்று எங்களால் ஒருவர் மற்றவருக்குச் சொல்ல முடியவில்லை.

அந்தக் கூடைகளைக் காட்டும். நாங்களே எடுத்துக்கொள்கிறோம்.

அல்லது அன்று எந்தக் கூடையும் மிஞ்சவில்லையா?

'12' என்ற எண் இறையியல் எண்ணா? நிறைவு எண்ணா? நற்செய்தியாளர்களின் கற்பனையா?

கூடைகள் மிஞ்சியது பொய் எனில்,

அவற்றின் எண்ணிக்கை பொய் எனில்,

அங்கிருந்தவர்கள் வயிறார உண்டதும் பொய்யா?

உம்முடைய பரிவும் பொய்யா?

உம் வார்த்தைகளும் பொய்யா?

பாபிலோனிய அடிமைத்தனத்தில் கிடந்த உம் மக்களுக்கு நீர் விருந்தை ஏற்பாடு செய்தீர்.

நாங்கள் உம் மக்கள் இல்லையா?

'கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக் கூடியது எது?

வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா?

எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்?'

என உம் திருத்தூதர் இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 8:35,37-39) கேட்கின்றார்.

பிரிக்க முடியாத அன்பு உம்மோடு எங்களுக்கு இருக்கலாம் ஆண்டவரே!

ஆனால், அந்த அன்பு எங்கள் பசி தீர்க்குமா?

தடுப்பூசி வரும், மாத்திரை வரும், பழைய வாழ்க்கை திரும்பும் என்ற நம்பிக்கை குறையக் குறைய,

நாங்களும் மெதுவாக உம் மலையிலிருந்து இறங்க ஆரம்பிக்கின்றோம்.

பன்னிரண்டு கூடைகளைத் தேடி!

'உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றும் நீர்' (பதிலுரைப் பாடல், திபா 145:16), எங்களை உயிரினமாகவும் மதிக்காதது ஏன்?

 

ser

"பகிர்வில் வாழ்வா! "

திருத்தொ. குழந்தைஇயேசு பாபு

ஒரு ஏழைத்தாய், தன் கணவனை இழந்த நிலையில் ஆதரிப்பார் யாருமின்றி, சாலை ஓரத்தில் சிறிய குடிசை வீட்டில் தனது ஒரே மகளுடன் வாழ்ந்து வந்தார். இருவரும் தங்களின் அன்றாட உணவிற்காக, சாலையில் ஆங்காங்கே கிடைக்கின்ற காலியான பாட்டில்களை  பொறுக்கி விற்று பசியை போக்கிக் கொண்டனர். அன்று ஒருநாள், பசியால் தளர்ந்துபோன தன் மகளிடம் இன்னும் ஓரிரு பாட்டில்கள் கிடைத்தால் இன்று நாம் சாப்பிடலாம் என்று ஆறுதல் கூறிவிட்டு காலியான பாட்டில்களை தேடும் பணியை தொடர்ந்தார். அப்போது காலியான பாட்டிலுடன் குப்பைத் தொட்டியை நோக்கி வரும் இளைஞனை கண்ட அந்தத்தாய், அதை தன்னிடம் தருமாறு கேட்டுக் கொண்டே  அவனருகே சென்றார். ஆனால் அந்த இளைஞன் பின்வாங்கி ,அந்தப் பெண்ணை ஏளனமாய் பார்த்து, அவள் அசுத்தமாக இருப்பதாக கூறி அருவருப்புடன் அந்த பாட்டிலை குப்பைத் தொட்டியிலே  போட்டான். இளைஞனின் செயலால் தான் மனவேதனை அடைந்தாலும் தன் குழந்தையிடம் தான் பட்ட அவமானத்தைக் காட்டிக்கொள்ளாமல் குப்பைத் தொட்டியிலிருந்து அந்த பாட்டிலைக் கையிலெடுத்தார் அந்த தாய். 

இதற்கிடையில் தாமதமாக தன் மகன் வருவதைக் கண்ட அந்த இளைஞனின் தாய், அதற்கான காரணத்தைக் கேட்க நடந்ததை அந்த இளைஞன் கூறினான். அதைக் கேட்ட அந்த தாய் முகவாட்டத்துடன், தானும் ஒரு காலத்தில் கணவனால் கைவிடப்பட்டு பிழைக்க வழியின்றி இருந்ததாகவும், இதேபோல் சாலையில் காலிப் பாட்டிலை பொறுக்கிக் கொண்டிருந்த  ஒரு பெண் தான் தனக்கு உதவி செய்ததாகவும் கூறினார். இதைக் கேட்ட அந்த இளைஞன் தான் நடந்துகொண்ட விதத்தை நினைத்து மனம் வருந்தி, தனது வாகனத்திலிருந்து வேறு ஒரு பாட்டிலை  எடுத்துக்கொண்டு அந்த ஏழைப் பெண்ணை நோக்கி ஓடினான். அவரிடம் மன்னிப்பு கேட்டு அந்த பாட்டிலை கொடுக்க, நன்றி உணர்வுடன் பெற்றுக்கொண்ட அவர் மகிழ்ச்சியுடன் தன் குழந்தையிடம் "உணவருந்த செல்லலாம்" என்று கூறினார். அப்போது அங்கு வந்த அந்த இளைஞரின் தாய், அந்த ஏழைத்தாய் தான் தனக்கு உதவி செய்தவர் என்பதை  உணர்ந்து, அவளிடம் தான் இந்நிலைக்கு வர காரணமான அவரை தன் வீட்டினுள் ஏற்றுக்கொண்டு அவரின் வாழ்வையே புதிய திசைக்கு மாற்றினார். இருப்பதில் பகிர்வதில் அல்ல, இருப்பதை பகிர்வதில் தான் கிறிஸ்தவம் அடங்கியிருக்கிறது. 

உணவு ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவையான ஒன்று. உணவிற்காகத் தான் ஒவ்வொரு மனிதரும்  நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து வருகின்றனர். சில மனிதர்கள் விருந்து, கேளிக்கைகள் என உணவை ஒருபுறம் வீணாக்க, மறுபுறம் ஆனால் எத்தனையோ ஏழை மனிதர்கள் உண்ண உணவில்லாமல் பட்டினியால் மடிந்து வருகின்றனர். இந்த நிலை மாறும் பொழுது நிச்சயமாக மனிதம் மலரும். இன்றைய வாசகங்கள் தம்மிடம் இருப்பதை பகிர்ந்து  பிறருக்கு உணவு கொடுக்க அழைப்பு விடுக்கிறது.  

"தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்ற புரட்சிக்கவிஞர் பாரதியின் வார்த்தைகள் உணவை பிறரோடு பகிர்ந்து வாழ வேண்டும் என்ற சிந்தனையை கொடுக்கின்றது.  நாம் ஜகத்தினை அழிக்க  வேண்டாம்; மாறாக பசி என்று நம்மிடம் வருபவருக்கு நம்மிடம் இருப்பதை பகிர்ந்து கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்வோம். 

இன்றைய முதல் வாசகத்தில் யாவே இறைவன் தன் மக்களை அழைத்து பணமின்றி, எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி  பாலும்,   திராட்சை இரசமும், உணவும் உண்டு மகிழ்ந்து மனநிறைவு கொள்ளுங்கள் என அழைப்பதை நாம்  பார்க்கிறோம். என்னிடம் வந்து வாழ்வு பெறுங்கள், தாவீதுக்கு காட்டிய அதே அன்பை நான் உங்களுக்கு காட்டுவேன் என்று ஆறுதல் மொழி கூறுகிறார்.

நற்செய்தி வாசகத்திலும் இயேசு தன் போதனைகளை கேட்க வந்த பெருந்திரளான மக்களைப் பசியுடன் இருப்பதை உணர்ந்து, பரிவுடன் கண்ணோக்கி அவர்களுக்கு உணவளிக்கிறார்.  வெறும் ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு, ஐயாயிரம் பேருக்கு உணவளித்தார் என்றால், தன்னிடமுள்ள தாராள குணத்தை தன் போதனையால் மக்களில் உயிர்பெறச் செய்து உணவைப் பகிர செய்கிறார். 

இறை சாயலில் படைக்கப்பட்ட மனிதர்களாகிய நாம் இயேசுவைப் போல பரிவு கொண்டவர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம். இதற்கு ஒருசில விவிலியப் பகுதிகளும் முன்னுதாரணமாக இருக்கின்றன. ஆபிரகாம் தனது இல்லத்திற்கு வந்த கடவுளின் மனிதர்கள் மூவரை அன்போடு வரவேற்று அவர்களுக்கு உணவளித்தார். "ஆபிரகாம் தன் இல்லத்துக்கு வந்த மூவருக்குத் தண்ணீரும் அப்பமும்  கொடுத்தார்." (தொ.நூ: 18: 1-10). இது இருப்பதை பகிர்தலுக்கு மிகச்சிறந்த ஒரு முன்மாதிரியாக நமக்கு இருக்கின்றது. நம்முடைய அன்றாட வாழ்விலும் நம்மை நாடித் தேடி வருகின்ற விருந்தினர்களை அன்போடு வரவேற்று அவர்களுக்கு உணவளிக்க அழைக்கப்பட்டுள்ளோம். வந்தவர்களை வரவேற்று விருந்து உபசரிக்கும் பழக்கம் இன்றைய காலகட்டத்தில் குறைந்து வருகின்றது. எனவே இப்பழக்கத்தை வளர்த்துக்கொள்ள ஆபிரகாமின் மனநிலையை நமதாக்குவோம்.

தொடக்ககால திருத்தூதர்கள் "தேவைக்கு அதிகமானதை இல்லாதவர்களோடு  பகிர்ந்துக் கொண்டனர்." (தி.ப: 2: 42-47). திருத்தூதர்களின் இந்த பகிர்வு மனப்பான்மை நமக்கு மிகச் சிறந்த பாடமாக இருக்கின்றது. இன்றைய கால கட்டத்தில் ஒரு சில மனிதர்கள் உண்ண போதுமான உணவு இல்லாமல் மடிந்து வருகின்றனர். இதற்கு முதல் காரணம் அளவுக்கு அதிகமாக இருப்பதை இல்லாதவர்களோடு  பகிர்ந்து கொள்ளாமையே ஆகும். இவ்வுலகில் வறுமை, பசி, பட்டினிக்கு காரணம் இல்லாமை அல்ல, பகிராமையே. எனவே நம்மிடம் அளவுக்கு அதிகமாக இருப்பதை பிறரோடு பகிர்ந்து கொள்ளும் நல்ல மனப்பக்குவத்தை நமதாக்க முயற்சி செய்வோம்.

லூக்கா நற்செய்தியில் சுட்டிக்காட்டப்படும் ஏழைக் கைம்பெண் தனது பிழைப்புக்காக வைத்திருந்த பணத்தைக் கூட கடவுளுக்கு கொடுக்க முன்வந்தார். "ஏழைக் கைம்பெண்ணோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டு விட்டார்." (லூக்: 21:4) என்ற வார்த்தைகள் ஏழைக் கைம்பெண்ணின் உச்சக்கட்டத் தியாகத்தை சுட்டிக்காட்டுகிறது. எனவே நம்முடைய அன்றாட வாழ்விலேயே ஏழைக் கைம்பெண்ணைப் போல உதவ முன் வரவில்லை என்றாலும் நம்மிடம் இருப்பதை இல்லாதவரை இனங்கண்டு பகிர முயற்சி செய்வோம்.

நல்ல சமாரியனுடைய   உதவும் மனநிலையையும் நமதாக்க அழைக்கப்பட்டுள்ளோம். "இதற்குமேல் செலவானால் திரும்பிவரும் போது கொடுத்து விடுகிறேன்." (லூக்: 10: 35) என்ற மனிதநேயச் செயல்பாடு நம்மிடம் இருப்பதை பிறருக்கு பகிர்ந்து வாழ்வு கொடுக்க அழைக்கின்றது.

பகிர்வு நிறைந்த மனநிலையை  மேற்கூறிய சில எடுத்துக்காட்டுக்கள் வழியாக நாம் அறிய வருகின்றோம். இந்த சிந்தனை இன்றைய நற்செய்தியிலும்  ஆழமாக அறிவுறுத்தப்படுகிறது.  "அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்." (மத்: 14:35) என்ற அப்பம் பகிரும் நிகழ்வு இயேசுவின் தாராள உள்ளத்தையும் இரக்கத்தையும் பகிர்வு மனப்பான்மையையும் சுட்டிக் காட்டுகிறது.

எனவே இன்றைய வாசகங்கள் சுட்டிக்காட்டுவது போல நம்மிடம் இருப்பதை பிறரோடு பகிர்ந்து, உண்ண உணவில்லாத மக்களுக்கு உணவளிக்கும் மனப்பக்குவத்தை பெற்றுக் கொள்வோம்.  அப்பொழுது நாமும், இயேசு கொண்டிருந்த பரிவு மனநிலையை கொண்டிருக்க முடியும். இத்தகைய மனநிலையை கொண்டிருக்கத்தான் நம் ஆண்டவர்  இயேசு அழைக்கிறார். பகிர்ந்து வாழ்வது தான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு என்பதை உணர்ந்து, பகிர்தலில் இயேசுவின் நற்செய்தி மதிப்பீடுகளுக்கு சான்றுப்பகர்வோம். பகிர்வு மனநிலை என்பது உடல் சார்ந்த உணவை மட்டும் பகிர்வது  அல்ல; மாறாக, ஆன்மா சார்ந்த இறை உணவையும் அறிவு சார்ந்த விழிப்புணர்வையும்  பகிர்வதாகும் . உதாரணமாக, நாம் தூய வாழ்வு  வாழ்ந்து பிறரும் தூய வாழ்வு வாழ வழிகாட்டுவது.  நாம் அறிவு திறமையில் சிறந்து விளங்கும் பொழுது பிறரும் அறிவுக்கூர்மையில் சிறந்து விளங்க வழிகாட்டுவது. இவ்வாறாக,  இன்றைய நாளில்  பகிர்வின் மனநிலையை பெற்று பிறரின் உடல், ஆன்மா மற்றும் அறிவு பசியினைப்  போக்கும் கருவிகளாக மாற முயற்சி செய்வோம் . மேலும் கொரோனா தீநுண்மியின் காரணமாக உண்ண போதிய உணவு இல்லாமல் வருந்துகின்ற நம்மோடு வாழக்கூடிய மக்களுக்கு பகிர்வு மனப்பான்மையோடு உதவி செய்வோம். பகிர்தலின்  வழியாக இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர தேவையான  இறையருளை வேண்டுவோம். 

இறைவேண்டல்:

வல்லமையுள்ள இறைவா ! உண்ண உணவில்லாமல் வருந்துகின்ற எத்தனையோ மக்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய நல்மனம் தரும். பிறரின் தேவைகளை பூர்த்தி செய்யும் மனநிலையோடு பகிர உமது அருளை தாரும். ஆமென்.

ser

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com