மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

ஆண்டின் 17ஆம் ஞாயிறு
முதலாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
1 அரசர்கள் 3:5-12 | உரோமையா 8:28-31 | மத்தேயு 13:44-52

ser

புதையலைப் போல இறையரசைக் கண்டுபிடி..

ஒரு நடுநிலைப் பள்ளியிலே ஆசிரியர் மாணவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆம் அல்லது இல்லை என்று மட்டுமே பதில் கூற வேண்டும் என்று அறிவித்துக் கேள்விகள் கேட்டார். மாணவர்களும் கேட்கப்பட்ட கேள்விகளுக்குத் தகுந்த முறையில் ஆம், இல்லை என்று கூறிக் கொண்டே இருந்தார்கள். கடைசியாக ஒரு மாணவன் எழுந்தான். சார்! அரை மணி நேரம் கேள்வி கேட்டீங்க. நான் இப்போது ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கிறேன். ஆம்! அல்லது இல்லை என்று பதில் சொல்வீர்களா என்றான் மாணவன். கேள் என்றார் ஆசிரியர்.

சார் இப்ப நீங்க குடிக்கிறதை நிறுத்திட்டீங்களா? என்றான். ஆம் என்றால் இதுவரை குடித்தார் என்றாகிவிடும். இல்லை என்றால் இன்னும் குடிப்பழக்கத்தை நிறுத்தவில்லை என்றாகிவிடும். எனவே ஆசிரியர் பதில் சொல்லத் தெரியாது திகைத்தார். பார்த்தீர்களா மாணவருடைய ஞானமுள்ள கேள்வியை! ஆனால் நாம் ஞானத்தோடு எதைத் தேட வேண்டும் எதற்கு ஆம் என்று பதில் கூற வேண்டும் என்பதற்காக இயேசு அழகாக புதையல், முத்து பற்றிய உவமைகள் தருகிறார். எதை எப்பொழுது சொல்ல வேண்டும், செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்திருப்பவன்தான் ஞானி. அறிவுள்ளவனாக மட்டும் இருந்தால் பற்றாது. ஞானியாகவும் இருக்க வேண்டும். இன்றைய முதல் வாசகத்தில் (1 அரச 3:5-12) கூறப்பட்ட சாலமோன் மன்னனை நோக்குங்கள். தாவீதுக்குப் பின் அவரது மகனான சாலமோன் அரியணை ஏற , ஆண்டவர் கனவில் தோன்றி, உனக்கு என்ன வேண்டும்? கேள் என்றார். பொன்னோ, பொருளோ எதிரிகளை வெற்றி கொள்ள படைபலமோ கேட்காமல் மக்களுக்கு நீதி வழங்கவும் நன்மை எது, தீமை எது என்று (1 அரச 3:9) பகுத்தறியவும் தேவையான ஞானத்தைக் கொடும் என்றார். எதை எப்பொழுது, எப்படிச் சொல்ல வேண்டும், செய்ய வேண்டும் என்று தெரிந்திருந்ததால் சாலமோனை ஞானி என்று அழைக்கிறோம்.

இயேசு சொன்ன புதையல், விலையுயர்ந்த முத்து உவமைகளும் இதே கருத்தைத்தான் வலியுறுத்துகின்றன. கூலிக்காரன் நிலத்தை உழும்போது புதையல் காண்கிறான். அதை மூடி மறைத்துவிட்டு தனக்குள்ளதெல்லாம் விற்றுப் புதையலைத் தனதாக்கிக் கொள்ள அந்த நிலத்தை வாங்குகிறான். விலையுயர்ந்த முத்தைக் கண்ட வியாபாரி அதை வாங்கத் தனக்குள்ளதெல்லாம் விற்றுவிடுகிறான். அதனை வாங்கிக் கொள்கிறான். இந்த இரண்டு உவமைகளும் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும் கருத்தில் வித்தியாசம் உண்டு. கூலிக்காரன் தற்செயலாகப் புதையலைக் காண்கிறான். அதைப் பெறப் புறப்பட்டவன் ஞானியாக மாறி இறையாட்சியின் பண்புகளைச் சிக்கெனப் பற்றிக் கொள்கிறான்.

ஆனால் வியாபாரியோ முத்துக்காகத் தேடுகிறார். தேடுதலின் முடிவாக அவர் முத்தை அடைகிறார். இருவரும் வித்தியாசமான வழிகளைப் பின்பற்றி இறையாட்சியை அடைகிறார்கள். பல ஆண்டுகள் தேடுதலுக்குப் பின் பவுல் அடிகள் தமாஸ்கு செல்லும் வழியில் இறையரசைக் காண்கிறார். நல்ல கள்ளன் சிலுவையில் ஒரு சில நிமிடங்களிலே இறையரசைக் கண்டான்.

இந்த இரண்டு உவமைகளும் தீர்க்கமான முடிவை எடுக்கும் செயல்பாட்டைச் சுட்டிக்காட்டுகிறது. புதையுண்டு கிடக்கும் புதையலைப் போல இறையரசைக் கண்டுபிடிக்க வேண்டும். அதேபோல் விலையுயர்ந்த முத்தைத் தேடுவது போல இறையரசை நாம் தேட வேண்டும். உழவனும், வியாபாரியும் உடனே செயல்படுகின்றனர். இவ்வாறு நாமும் செயல்பட வேண்டும்.

இன்று நாம் எதைத் தேடுகிறோம், எதற்கு முன் உரிமை கொடுக்கிறோம் என்பதைப் பரிசோதிக்க வேண்டும். களஞ்சியத்தைக் கட்டி கோதுமை சேர்த்து வைத்த அறிவு கெட்ட மதியீனனைப்போல் (லூக். 12:20) அல்ல நமது வாழ்வு. உயர்ந்த உன்னத வாழ்வான இறையரசு என்ற புதையலுக்காக, விலையுயர்ந்த முத்தாக உள்ள இறையரசுக்காக அழைக்கப் படுகிறோம்.

மரியாவை நோக்குங்கள். ஆம்! இல்லை என்று கூறக்கூடிய ஒரு நிர்ப்பந்த நிலை. கணவன் இன்றி நான் குழந்தைப் பெற முடியாது என்று நினைத்தால் இல்லை என்று பதில் கூறி இருக்கலாம். அதனால் உலக மீட்பரைத் தர மறுத்திருக்கலாம். ஆனால் உலகம் மகிழ ஆம் என்று இறையரசுக்கு அர்ப்பணித்தாள் மரியா. ஏனெனில் சரியாக விடையளிக்கத் இறைஞானம் கிடைத்தது. நாம் மரியா மூலமாகத் இறைஞானம் கிடைக்க செபிப்போம்.
மரியாள் ஆண்டவரை நோக்கிச் சொன்னது இதோ உமது அடிமை (லூக் 1:38) என்று. மரியா நம்மை நோக்கிச் சொல்வது அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள் (யோவா. 2:5).

ser ser

யாருக்கு விண்ணரசு கிடைக்கும்?

நேர்மையாளர்களுக்கு மட்டுமே விண்ணரசு கிடைக்கும் என்பதை நற்செய்தி தெளிவாக்குகின்றது (மத் 13:49). நேர்மையாளர்கள் எனப்படுபவர் யார் என்பதற்கு மத் 25:31-40 விளக்கம் தருகின்றது. நேர்மை என்பது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இயேசுவைக் கண்டு, அவர்களுக்கு உதவி செய்வதாகும்.

உண்மையான உதவி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கு இதோ ஓர் உண்மை நிகழ்ச்சியின் வழியாக ஒரு விளக்கம்.

மதுரையிலிருந்து வெளிவரும் தினமலரில் (மே, 31,2005) வெளிவந்த செய்தி இது. உத்தரப் பிரதேச மாநிலம், காஜிப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவநாத் சிங். அவரின் மனைவி பெயர் புலாரி தேவி. இவர்களுக்கு ஒரு மகள். அந்த மகளுக்குச் சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நிச்சயித்திருந்தார்கள். சிவநாத்சிங் டில்லியில் கட்டுமானப் பணியில் வேலை செய்துவந்தார். ஒரு நாள் அவர் சற்றும் எதிர்பாராத வேளையிலே சாலை விபத்தில் சிக்கினார். அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பயனளிக்கவில்லை. அவர், தான் இறப்பது உறுதி எனத் தெரிந்துகொண்டார்.

ஒரு நாள் டாக்டர் வேணுகோபாலைப் பக்கத்தில் அழைத்து இவ்வாறு கூறினார் : ஐயா, நான் எப்படியும் சாகப்போகின்றேன். என் கண்கள், இருதயம், கல்லீரல், சிறுநீரகம் என்று எல்லா உறுப்புகளையும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குப் பொருத்துங்கள். அவர்களாவது பிழைக்கட்டும் என்றார். இந்த ஏழைத் தொழிலாளிக்கு இவ்வளவு நல்லகுணமா என்று வியந்தார் டாக்டர். பத்திரத்தில் கைரேகை வாங்கப்பட்டது. அடுத்த நாளே சிவநாத்சிங் இறந்து விட்டார். அவருடைய முக்கிய உறுப்புகள் பாதுகாக்கப்பட்டன.

இந்தத் துயரச் சம்பவம் நடந்த மறுநாள், துணை ஜனாதிபதியை அலுவலக ஊழியர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரின் இருதயம் சரியாக வேலை செய்யவில்லை! அவருக்கு சிவநாத்தின் இருதயம் பொருத்தப்பட்டது! சில நாள்களுக்குப் பிறகு துணை ஜனாதிபதிக்கு இருதயத்தைக் கொடுத்தது யார் என்று தெரியவந்தது! எப்படியோ சிவநாத்தின் முகவரியைக் கண்டுபிடித்து, துணை ஜனாதிபதி சிவநாத்தின் பெண் திருமணத்திற்கு ஐந்து புடவைகளையும், ஒரு இலட்சம் ரூபாய் பணத்தையும் அனுப்பி வைத்தார். அந்தப் பெண்ணின் திருமணம் இனிதே நடந்தது. சிவநாத் ஒரு நேர்மையாளர்.

நாலுகாலு கட்டிலிலே நித்தம் நித்தம் தூக்கம்!
நான்குபேர் தூக்கையிலே நித்தியத்திற்கும் தூக்கம்!

நித்தியத் தூக்கத்திற்குப் பிறகு நாம் எழுவோம்! எழும்போது நம்முன்னே மோட்சத்தையும், நரகத்தையும் (மத் 13:50) பார்ப்போம். அன்று நாம் விண்ணகத்துக்குள் நுழைவதும், நுழையாமலிருப்பதும் இன்று, இந்த மண்ணகத்திலே நாம் வாழும் வாழ்வைப் பொருத்திருக்கின்றது.

நம்மை நேர்மையாளர்களாக வாழவிடாமல் தடுப்பது எது? அறியாமை! இந்த அறியாமையை நம்மிடமிருந்து போக்கி, எது சரி? எது தவறு? எது நீதி? எது அநீதி? எது இவ்வுலகைச் சார்ந்தது? எது மறுவுலகைச் சார்ந்தது? எது பாவம்? எது புண்ணியம்? என்பதைச் சுட்டிக்காட்டி, நம்மைக் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக்க (இரண்டாம் வாசகம்), சாலமோன் பெற்ற ஞானத்தை நமக்குத் தர (முதல் வாசகம்) என்றும் தூய ஆவியார் தயாராக இருக்கின்றார். கேட்பவர்களுக்குத் தூய ஆவியார் உதவி செய்வார் (லூக் 11:9-13).

மேலும் அறிவோம்:

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல் (குறள் : 461).

பொருள் : எந்த ஒரு செயலை மேற்கொண்டாலும் அந்தச் செயலால் உண்டாகும் கேட்டையும் ஆக்கத்தையும் தொடர்ந்து வரும் பயனையும் நன்றாக ஆராய்ந்து தொடங்க வேண்டும் .

ser ser

கிறிஸ்து என்னும் முத்து..

கடவுள் ஒரு பக்தருடைய வீட்டுக்குச் சென்று மூன்று வரங்கள் கேட்கச் சொன்னார். பக்தர் தனது வீட்டிலிருந்த மர நாற்காலியைத் தங்க நாற்காலியாக மாற்றச் சொன்னார். கடவுள் தமது ஆள்காட்டி விரலை நீட்டி நாற்காலியைத் தங்க நாற்காலியாக மாற்றினார். பக்தர் கடவுளிடம் தன் வீட்டிலிருந்த மேஜையையும் தங்க மேழையாக மாற்றும்படி இரண்டாம் வரம் கேட்டார். கடவுளும் தமது ஆள் காட்டி விரலை நீட்டி மேஜையையும் தங்க மேஜையாக மாற்றினார். மூன்றாவது வரம் என்ன வேண்டும் என்று கடவுள் பக்தரைக் கேட்டார். பக்தர் கடவுளிடம், *கடவுளே! உங்கள் ஆள்காட்டி விரலைக் கொடுங்கள்" என்றார். பக்தருடைய பேராசைக்கு அளவே இல்லை,

நாம் கடவுளிடம் கேட்கும் வரங்கள் எல்லாமே இம்மை நலன்களே. எடுத்துக்காட்டாக, நல்ல வேலை, நல்ல மனைவி மக்கள், நிலபுலம், நீடிய ஆயுள் போன்றவை. ஆனால் இன்றைய முதல் வாசகத்தில் சாலமோன் கடவுளிடம் நன்மை தீமையைப் பகுத்தறிய தேவையான ஞானத்தைக் கேட்கிறார். கடவுள் சாலமோனுக்கு ஞானத்தையும் அத்துடன் மற்ற இம்மை நலன்களையும் அளிக்கின்றார்

கல்வியை நாம் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், நூல்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் பெறமுடியும். ஆனால் ஞானம் என்பது தூய ஆவியாரின் முதற் கொடையாகும். செல்வத்துள் தலைசிறந்த செல்வம் கேட்டறியும் செல்வம் என்றார் வள்ளுவர்,

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை (குறள் 411)

கடவுள் தமக்கு வழங்கும் பெரிய செல்வம் அவரது வார்த்தையைக் கேட்டுப் பெறுகின்ற ஞானமாகிய செல்வம். இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து விண்ணரசை புதையலுக்கும் முத்துக்கும் ஒப்பிடுகிறார். இந்தச் செல்வத்தைப் பெறுவதற்காக மற்றச் செல்வங்களை விட்டுவிட ஒருவர் தயாராக இருத்தல் வேண்டும். அதுவே உண்மை ஞானம்!

விண்ணரசு என்பது ஒரு பொருள் அல்ல; மாறாக, அது ஓர் ஆள்; அந்த ஆள் இயேசு கிறிஸ்துவே. கிறிஸ்து கூறுகிறார் “இறையாட்சி கண்ணுக்குப் புலப்படும் முறையில் வராது. இதோ இங்கோ அல்லது அதோ அங்கோ எனச் சொல்ல முடியாது. ஏனெனில் இறையாட்சி உங்கள் நடுவில் செயல்படுகிறது” (லூக் 17:20-21), மக்கள் நடுவில் நிற்பவர், செயலாற்றுபவர் கிறிஸ்துவே. "அவரே கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்” (1 கொரி 1:24).

கிறிஸ்து எல்லாச் செல்வங்களையும் இரண்டாம் நிலைக்குத் தள்ளி விடுகிறார். கிறிஸ்துவை உடைமையாக்கிக் கொள்ள மற்ற அனைத்தையும் குப்பையென உதறித் தள்ளிவிட்டார் புனித பவுல், "கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். .... கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்” (பிலி 3:8). கிறிஸ்துவுக்காக அவருடைய சீடர்கள் அனைத்தையும் துறந்தனர். "நாங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே" (மாற் 10:28) என்று பேதுருவால் கூற முடித்தது.

காதல் ஒருவரை பைத்தியமாக்குகிறது. ஒரு காதலன் தன் காதலிக்கு பின்வருமாறு கடிதம் எழுதினார்: “நான் அமாவாசையாக இருந்தேன், என்னைப் பெளர்ணமி ஆக்கினாய், நான் அஃறிணையாக இருந்தேன், என்னை உயர்திணை ஆக்கினாய். நான் உயிரற்ற மெய்யாய் இருந்தேன், என்னை உயிர்மெய் ஆக்கினாய். நான் தெளிவாக இருந்தேன், என்னைப் பைத்தியமாக்கினாய் மனிதக் காதல் மட்டுமல்ல, தெய்வீகக் காதலும் ஒருவரைப் பைத்தியமாக்குகிறது. திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "நாங்கள் கிறிஸ்துவின் பொருட்டு மடையர்கள்" ( 1 கொரி 4:10), புனித பிரான்சிஸ்கு அசிசியார் தனது சொத்துரிமையை துறந்து, "என் கடவுளே! என் எல்லாமே!" என்றார். இது உலகின் பார்வையில் மடமை.

கிறிஸ்துவையும் இறை ஆட்சியையும் தேடிக் கொண்டிருந்தால், இவ்வுலக நலன்களைப் பெறுவது எப்படி? இக்கேள்விக்குக் கிறிஸ்து தரும் பதில்: அனைத்துக்கும் மேலாகக் கடவுளது ஆட்சியைத் தேடினால், மற்றனைத்தும் சேர்த்துக் கொடுக்கப்படும் (மத் 6:33), மற்றனைத்தும் என்றால் நமக்குத் தேவையான உணவு, உடை, இல்லிடம் ஆகியவை. இம்மையில் கிறிஸ்துவுக்காகத் துறந்து விடுபவர்கள், அவர்கள் துறந்தவற்றை யெல்லாம் நூறு மடங்காக இம்மையில் பெறுவதோடு மறுமையில் நிலைவாழ்வையும் பெறுவர் (காண், மாற் 10:29-30).

எல்லாவற்றையும் உரிய காலத்தில் துறந்து விட்டால், இங்கு பெறக்கூடிய இன்பங்கள் பல உண்டு என்கிறார் வள்ளுவர்,

வேண்டின் உண்டாகத் துறக்க; துறந்தபின்
கண்டு இயற்பால பல (குறள் (342)

இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு முன்பாகத் திருச்சபை பின்வருமாறு கடவுளிடம் மன்றாடியது: "இறைவா! நாங்கள் விண்ணக நலன்களை விருப்புமுடன் நாடவும், மண்ணக நலன்களை வெறுக்கவும் அருள்புரியும். ஆனால் இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப்பின் திருச்சபைச் சற்று வித்தியாசமாக மன்றாடுகிறது. "இறைவா! நாங்கள் விண்ணக நலன்களை விருப்பமுடன் நாடவும், மண்ணாக நலன்களை ஞானத்துடன் சீர்தூக்கிப் பார்க்கவும் அருள்புரியும்."

எனவே நாம் மண்ணக நலன்களை வெறுக்காமல் அவற்றை ஞானத்துடன் சீர்தூக்கிப் பார்க்க அழைக்கப்படுகின்றோம். புனித பவுல் கூறுவதுபோல, உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ... அவற்றை மனத்தில் இருத்துவோம் (பிலி 4:8).

ஒரு குழந்தை தன் கையில் ஒரு கத்தியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அதைக் கொடுக்க மறுத்தது. பளபளக்கும் ஒரு 'நெக்லசைக்' காட்டியபோது, கத்தியைக் கீழே போட்டுவிட்டு, 'நெக்லசைப்' பிடித்துக் கொண்டது. அக்குழந்தை போல் நாம் பலவற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், கிறிஸ்து என்னும் முத்தைப் பற்றிக் கொள்ளும் வண்ணம் மற்றவற்றை இழக்க வேண்டும்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் கூறுகிறார்: கடவுள் தாம் அழைத்தவர்களைத் தமக்கு ஏற்புடையவராக்கி, அவருடைய மாட்சிமையில் பங்குபெறச் செய்கிறார் (உரோ 8:30), கடவுள் தரும் இறைமாட்சிமையை இழக்காமல் இருக்க ஞானம் தேவை.
பொருட் செல்வமும் தேவை; அருட் செல்வமும் தேவை. பொருட் செல்வம் இல்லாதோர் இவ்வுலக இன்பத்தை அடைய முடியாது. அருட் செல்வம் இல்லாதோர் மறுமை இன்பத்தை அடைய முடியாது.

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகியங்கு (குறள் 247)

ser ser

விண்ணரசும் புதையலும்

நிகழ்வு

ஆற்றங்கரையோரமாய்த் துறவி ஒருவர் இருந்தார். அவரிடத்தில் இரண்டு சீடர்கள் இருந்தார்கள். துறவிக்கு வயதாகிக்கொண்டு போனதால், அவர் இந்த மண்ணுலகில் வாழப் போவது இன்னும் சிறிதுகாலம்தான் என்பதை உணர்ந்த அவருடைய இரண்டு சீடர்களும் அவரிடம், “சுவாமி! நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்துபோவதற்கு முன்பாக, எங்களுக்கு ஓர் அறிவுரை சொல்லிவிட்டுப் போங்கள்” என்றார்கள். உடனே துறவி அவர்களிடம், “இந்த இடத்தில் புதையல் ஒன்று இருக்கின்றது. தேடி எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார். இப்படிச் சொல்லிவிட்டு அவர் ஓரிரு நாள்களில் இறந்துபோனார்.

துறவி இறந்தபின்பு, அவருடைய இரண்டு சீடர்களும் அவர் சொன்னதுபோன்று புதையலைத் தேடத் தொடங்கினார்கள். ஒரு சீடர் கையில் கடப்பாரை, மண்வெட்டியை எடுத்துக்கொண்டு, துறவி இருந்த இடத்தில் ஆழமாகக் குழிதோண்டிப் புதையலைத் தேடத் தொடங்கினார். அவர் தோண்டிய குழி ஆழமாகவும் அகலமானதும் ஆனதே ஒழிய, புதையல் கிடைத்தபாடில்லை. இன்னொரு சீடரோ, துறவி இருந்த இடத்திற்குச் சற்றுத் தள்ளி, ஒரு துண்டை விரித்து, அதில் அமர்ந்து தியானம் செய்யத் தொடங்கினார்.

இப்படியிருக்கையில் அந்த வழியாக வானதூதர் ஒருவர் வந்தார். அவர் இரண்டு சீடர்களும் செய்துவந்த செயலைப் பார்த்துவிட்டு, “புதையலை ஒருவர் மண்ணுக்குள் தேடுகின்றார்; இன்னொருவரோ தனக்குள் தேடுகின்றார். இறுதியில், தனக்குள் தேடுபவருக்கே புதையல் கிடைக்கும்” என்று சொல்லிவிட்டுப் போனார். ஆம், புதையலைத் தனக்குள் தேடிய இரண்டாவது சீடருக்கே கிடைத்தது.

இறையாட்சி - விண்ணரசு - உங்கள் நடுவே, உங்குக்குகுள்ளே செயல்படுகின்றது என்று இயேசு சொல்வாரே! (லூக் 17: 21). அது போன்று விண்ணரசு நம் நடுவே, நமக்குள்ளே இருக்கின்றது. இந்த உண்மையை உணர்ந்து, எவர் ஒருவர் தூய ஆவியார் தங்கும் கோயிலான தனக்குள் (1 கொரி 6: 19) தேடுதலைத் தொடங்குகின்றாரோ, அவர் புதையலைக் கண்டுகொள்வார். இத்தகைய செய்தியைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலம் பதினேழாம் ஞாயிறான இன்று, நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை விண்ணரசு விலைமதிக்கப்பெறாத புதையலுக்கு ஒப்பானது என்ற செய்தியைத் தருகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

விண்ணரசு, புதையலைப் போன்று விலைமதிப்பற்றது

வீட்டை விட்டுக் கடற்கரையோரமாய் வரும் இயேசு (மத் 13: 1), மக்களிடம் விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பல்வேறு உவமைகள் வழியாகப் விளக்கத் தொடங்குகின்றார். விண்ணரசைக் கடுகுவிதைக்கும் புளிப்பு மாவுக்கும்... ஒப்பிட்டுப் பேசிய இயேசு, இன்றைய நற்செய்தியில் விண்ணரசைப் புதையலுக்கு ஒப்பிட்டுப் பேசுகின்றார். இயேசு எதற்கு விண்ணரசைப் புதையலுக்கு ஒப்பிடுகின்றார் என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது.

பழங்காலத்தில் இன்றைக்கு இருப்பது போன்று பணத்தையும் நகைகளையும் பொருள்களையும் சேர்த்துவைக்க வங்கிகள் கிடையாது. அதனால் நிலம்தான் மக்கள் தங்களுடைய பொருள்களைச் சேமித்து வைப்பதற்கான ‘வங்கியாக’ இருந்தது. இதற்கு நடுவில் எதிரி நாட்டினர் தங்களுடைய நாட்டின்மீது போர்தொடுக்கும்பொழுது, அவர்களிடமிருந்து தாங்கள் சேர்த்து வைத்த விலையுயர்ந்த பொருள்களைப் பாதுகாக்கும் வண்ணம், ஒரு பெரிய பானையில் பொருள்களைப் போட்டு, அதை மண்ணைத் தோண்டிப் புதைத்து வைத்தார்கள். எதிரிகள் படையெடுப்பின்பொழுது ஒருவேளை அவர்கள் கொல்லப்படலாம் அல்லது நாடுகடத்தப்படலாம். இதனால் திரும்ப எடுத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட புதையல் அப்படியே இருக்கும். பின்னாளில் மண்ணைத் தோண்டிப் பார்க்கின்றவருக்கே அந்த விலைமதிக்கப்பெறாத புதையல் கிடைக்கும்.

இத்தகைய விலைமதிக்கப்பெறாத, யாருக்கும் அவ்வளவு எளிதாகக் கிடைக்காத, இன்னும் சொன்னால் சிரமப்பட்டுத் தோண்டுகின்றவருக்கே கிடைக்கக்கூடிய புதையலை இயேசு விண்ணரசிற்கு ஒப்பிடுவதன் வழியாக, விண்ணரசு விலைமதிக்கப்பெறாதது, அகலமான வாயில் வழியாக அல்ல, இடுக்கமான வாயில் வழியாக நுழைவோருக்கு அது கிடைக்கக்கூடியது என்பதைச் சொல்லாமல் சொல்கின்றார்.

இழப்பதின் மூலமே விண்ணரசைப் பெற முடியும்

இயேசு, விண்ணரசைப் புதையலை ஒப்பிடுவதன் வழியாக ஒரு முக்கியமான செய்தியை நமக்குச் சொல்கின்றார். அது என்னவெனில், நற்செய்தியில் வரும் புதையலைக் கண்டுபிடித்த நபர், தமக்குள்ள யாவற்றையும் விற்று அல்லது தமக்குள்ள எல்லாவற்றையும் இழந்து புதையல் இருந்த நிலத்தைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டதுபோல, நாமும் நம்மிடம் இருப்பதை; ஏன் நம்மையே இழக்கத் தயாராய் இருந்தோமெனில் விண்ணரசை உரித்தாக்கிக் கொள்ளலாம். இது இயேசு சொல்லும் செய்தியாகும்.

இயேசு தன்னைப் பின்பற்றுகிறவர், எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லும்பொழுதுகூட, “தன்னலம் துறந்து, தன் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றவேண்டும்” (மாற் 8: 34) என்றே சொல்கின்றார். ஆகையால், இயேசுவின் சீடராக இருப்பதற்கு எப்படித் தன்னலத்தை துறப்பது அல்லது இழப்பது அவசியமானதாக இருக்கின்றதோ, அப்படி விண்ணரசை நம் உரித்தாக்கிக் கொள்வதற்கு நம்மிடம் இருப்பதை இழக்கத் தயாராக இருக்கவேண்டும்.

விண்ணரசை அடையும்பொழுது எல்லாவிதமான ஆசியும் கிடைக்கும்

நாம் நம்மை இழந்து, விலை மதிக்கப்பற்ற புதையலாகிய விண்ணரசை அடைகின்றபொழுது, எல்லா விதமான ஆசிகளையும் பெற்றுக்கொள்கின்றோம் என்கின்ற இன்னோர் உண்மையையும் இன்றைய இறைவார்த்தை எடுத்துக்கூறுகின்றது. இந்த உண்மையை நாம் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு இன்றைய முதல் வாசகத்தை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்போம்.

முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் சாலமோன் மன்னனிடம், “உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்கின்றபொழுது, அவர், “ஞானம் நிறைந்த உள்ளத்தைத் தந்தருளும்” என்பார். இதனால் உவமை அடையும் கடவுள், அவருக்கு அவர் கேட்ட ஞானத்தை மட்டுமல்லாது, அவர் கேளாத செல்வத்தையும் புகழையும் தருவதாக வாக்களிப்பார் (1அர 3: 13). ஆம், நாம் நம்மை இழந்து விண்ணரசை அடைகின்றபொழுது விண்ணரசில் இறைவன் நமக்கு எல்லாவிதமான ஆசிகளையும் தருவார். இயேசுகூட, “ஆகவே, அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுகள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்” (மத் 6: 33) என்றுதான் கூறுவார். ஆகையால், நாம் நம்மிடம் இருப்பதையும் நம்மையும் இழந்து, விண்ணரசை உரித்தாக்கிகொண்டு, அதன்மூலம் எல்லா ஆசிகளையும் பெற்றுக்கொள்ள முயல்வோம்.

பல நேரங்களில் நாம் நம்மிடம் இருப்பதை இழக்கத் தயாராக இல்லை என்பது வேதனை கலந்த உண்மை. எப்பொழுது நாம் நம்மை இழக்கத் துணிகின்றோமோ, அப்பொழுது நாம் நம்மைக் கண்டுகொள்கின்றோம். ஆகையால், நாம் விண்ணரசுக்காக நம்மையே இழக்கத் தயாராவோம்.

சிந்தனை

“உன்னைக் கண்டுகொள்வதற்கான மிகச்சிறந்த வழி, மற்றவர்களுக்குச் சேவை செய்வதில் உன்னை இழப்பதே” என்பார் காந்தியடிகள். ஆகையால், நாம் விண்ணரசை அடைய மற்றவர்களுக்குச் சேவை செய்வதன் வழியாகவும், இயேசுவின் வழியில் நடப்பதன் வழியாகவும் நம்மை இழப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser ser

புதையல்

'பட்டினத்தார்' என்று பலரால் அறியப்படுகின்ற, கி.பி. 10 முதல் 12ஆம் நூற்றாண்டுகளில், காவேரிபூம்பட்டினத்தில் வாழ்ந்த, திருவெண்காடர் என்னும் இரண்டாம் பட்டினத்தாரின் வாழ்வில் நடந்த நிகழ்வு இது. குழந்தை பாக்கியம் இல்லாத அவர், பக்கத்து ஊரில் பிறந்த ஒரு குழந்தையை, எடைக்கு எடை தங்கம் கொடுத்து வாங்கிக்கொள்கின்றார். அவரும் அவருடைய மனைவியும், அக்குழந்தைக்கு, 'மருதவாணன்' என்ற பெயர் சூட்டி பாசமழை பொழிகின்றனர். குழந்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, இளவல் ஆகின்றார். தான் செய்த கடல் வாணிகத்திலேயே தன் இளவலையும் ஈடுபடுத்துகின்றார் திருவெண்காடர். ஒருமுறை மருதவாணன் தன்னுடைய நண்பர்களுடன் கடல் வாணிபத்திற்குச் செல்கின்றார். ஏறக்குறைய ஆறு மாதங்கள் வாணிபத்தில் ஈடுபட்டு, அனைவரும் ஊர் திரும்புகின்றனர். மகன் ஊர் திரும்பிய செய்தி, கடையில் வியாபாரத்தில் அமர்ந்திருந்த திருவெண்காடருக்குத் தெரிவிக்கப்படுகின்றது. மகனைக் காணத் தெருவில் ஓடி வருகின்றார். வழியில் அவரைக் கண்டவர்கள் எல்லாம், 'உன் மகனுக்கு பித்து பிடித்துவிட்டது. எங்கள் பிள்ளைகள் எல்லாம் தங்கமும் வெள்ளியும் கொண்டுவர, உன் மகனோ சாண எருக்களைத் தட்டுக்களாகக் கொண்டுவந்திருக்கிறான்' என்கின்றனர். வீட்டிற்கு ஓடி வந்த திருவெண்காடர், தன் வாசலில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த மூடைகளை ஆவலோடு திறந்து பார்க்க, அங்கே சாண எருக்களே இருக்கின்றன. வீட்டிற்குள் செல்கின்றார். ஆறு மாதகாலம் பிரிந்திருந்த மகனை ஆரத் தழுவாமல், சாண எருக்கள் பற்றி முறையிட்டு, அவருடன் சண்டையிடுகிறார். மகனைக் கடிந்துகொண்ட அவர் மீண்டும் கடைக்குத் திரும்புகிறார். சற்று நேரத்தில், 'உடனே வாருங்கள்!' என்று மனைவி செய்தி அனுப்ப, வீட்டிற்கு வருகின்றார் திருவெண்காடர். வீட்டின் உள்ளே விலையுயர்ந்த முத்துக்களும், வைரங்களும், மாணிக்கங்களும் கொட்டிக் கிடக்கின்றன. 'இவை எப்படி?' என்று அவர் கேட்க, 'எல்லாம் மருதவாணன் கொண்டுவந்த மூடைகளில் இருந்தவை. யாரும் திருடிவிடா வண்ணம் அவற்றை அவர் எருக்களில் மறைத்து வைத்திருக்கின்றார்' என்று மனைவி பெருமிதம் கொள்கிறார். 'ஐயோ! அவன் எங்கே! என் மகன் எங்கே!' என்று ஒவ்வொரு அறையாக வீட்டிற்குள் தேடுகின்றார். மகன் இல்லை. அந்த நேரத்தில், அவரிடம், மனைவி ஒரு ஓலைச்சுவடியைக் கொடுக்கின்றார். 'காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே' என்று அந்தச் சுவடியில் எழுதப்பட்டிருக்கிறது. மருதவாணன் மறைந்துவிடுகிறார். அப்போதுதான், திருவெண்காடருக்குத் தெரிகிறது, தன் மகனாக இவ்வளவு நாள்கள் தன்னுடன் இருந்தது சிவபெருமான் என்று. சிவபெருமானே, தன் மகனாக வந்து, 'காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே' என்று சொல்லித் தன்னைத் துறவிற்கு அழைக்கிறார் என உணர்ந்த அவர், அந்த நொடியே துறவு பூணுகின்றார்.

'காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே' என்னும் வாக்கியத்திற்கு இரு பொருள்கள் உண்டு. ஒன்று, 'காதற்ற ஊசி' 'கடைத் தெருவில்' விலை போகாது. இரண்டு, 'காதற்ற ஊசி கூட உன் வாழ்வில் கடைசிவரை அல்லது உன் கடைசிப் பயணமான விண்ணகப் பயணத்தோடு உடன் வராது.'

இவ்வாறாக, பொருள்களின் நிலையாமை மற்றும் பயனின்மையை பட்டினத்தாருக்கு வெளிப்படுத்துகின்றார் சிவபெருமான்.

திருவெண்காடர் என்ற பட்டினத்தாருக்கு,

குழந்தை இல்லாத போது, மகன், 'புதையலாக' தெரிந்தான்.

கடல்வாணிகம் முடித்து அவன் திரும்பியபோது, அவன் நுட்பமாகக் கொணர்ந்த, முத்துக்கள், 'புதையலாக' தெரிந்தன.

'காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே' என அறிந்தவுடன், இறைவன் மட்டுமே 'புதையலாக' தெரிகின்றார்.

நம் வாழ்வின் புதையலை, அடையாளம் காணவும், ஆய்ந்து பார்க்கவும், தேர்ந்து தெளியவும், விரும்பி வாங்கவும் நம்மை அழைக்கின்றது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

'இறைவனும் இறைவன் சார்ந்தவை மட்டுமே புதையல்' என்பதை எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லாமல் முன்வைக்கின்றன வாசகங்கள். ஆக, என் புதையல் எது என்பதை நான் வரையறுக்க வேண்டியதில்லை. அது ஏற்கனவே வரையறுத்தாயிற்று. நான் செய்ய வேண்டியதெல்லாம், அதை அடையாளம் காண்பதும், ஆய்ந்து பார்ப்பதும், தேர்ந்து தெளிவதும், விரும்பி வாங்குவதும்தான்.

எப்படி?

இன்றைய முதல் வாசகம் (காண். 1 அர 3:5,7-12), கடவுள், சாலமோனுக்குக் கனவில் தோன்றிய நிகழ்வைத் தாங்கி நிற்கிறது. சாலமோன், மிகவும் இக்கட்டான நிலையில் ஒருங்கிணைந்த இஸ்ரயேலின் அரசராகின்றார். தாவீது முதுமைப் பருவம் அடைகின்றார். அவருடைய முதுமைப் பருவத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்கின்ற அவருடைய மகன் அதோனியா, 'நானே அரசனாவேன்' எனச் சொல்லி, தனக்கென ஒரு குழுவைக் கூட்டி, தன்னை அரசனாக்கிக் கொள்கின்றான். இந்நிலையில்தான், பத்சேபா, நாத்தானுடன் இணைந்து அரசியல் செய்து, தன் மகன் சாலமோனை அரசனாக்குகிறாள். இந்த நிகழ்வில் மிகவும் பரிதாபத்துற்குரியவராக தாவீது இருக்கிறார். அதாவது, தான் செய்த அந்த ஒற்றைத் தவற்றுக்காக, இறுதிவரை துன்பம் அனுபவிக்கின்றார். பத்சேபாவும் இந்த நிகழ்வில், மிகப்பெரிய சந்தர்ப்பவாதியாக மாறுகிறாள். 'வாழ்வில் எதுவும் இலவசம் இல்லை. எல்லாவற்றுக்கும் ஒரு விலை இருக்கிறது' என்று உணர்கின்ற தாவீது, தான் தழுவிய பத்சேபாவின் பொருட்டு, மிகவும் வேதனைப்படுகின்றார். பாவம்! பரிதாபத்திற்குரியவர் அவர்! இறுதியில் அனைவரும் அவரைப் பயன்படுத்திக்கொள்கின்றனர், அல்லது பயமுறுத்திக் கொல்கின்றனர்! தாவீதை விட்டுவிட்டு, சாலமோனிடம் வருவோம்.

சாலமோன் அரசனானபோது அவருக்கு வயது ஏறக்குறைய 15 முதல் 20 அல்லது, அதற்கும் குறைவாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால், தான் அரசனானவுடன் இரண்டு நற்காரியங்கள் செய்கின்றார். ஒன்று, கிபயோனுக்குச் சென்று ஆண்டவருக்குப் பலி செலுத்துகின்றார். இப்படிச் செலுத்தியதன் வழியாக, தன்னை அரசனாக ஏற்படுத்திய ஆண்டவராகிய கடவுளுக்கு, தன் தந்தையைப் போல, பிரமாணிக்கமாக இருந்து, கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதாக வாக்களிக்கின்றார். இரண்டு, நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ, எதிரிகளின் சாவையோ ஆண்டவரிடம் வரமாகக் கேட்காமல், ஆண்டவராகிய கடவுளின் மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை வரமாகக் கேட்டுப் பெற்றுக்கொள்கின்றார். இவ்விரண்டு நற்காரியங்களிலும், சாலமோன், ஆண்டவரை, தன்னுடைய புதையலாக, முதன்மையாக, முழுமையாக, முறைமையாகத் தெரிந்துகொள்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 13:44-52), விண்ணரசு பற்றிய மூன்று, குட்டிக் குட்டி உவமைகளை வாசிக்கின்றோம். முதல் இரண்டு உவமைகளும் விண்ணரசு பற்றியதாக மட்டும் இருக்க, இறுதி உவமை, விண்ணரசு பற்றியதாகவும், இறுதிக்கால நிகழ்வு பற்றியதாகவும் இருக்கிறது.

நிலத்தில் புதையலைக் கண்டுபிடித்த ஒருவர், அந்தப் புதையலை மட்டும் எடுத்துச் செல்லாமல், அல்லது அந்தப் புதையல் இருக்கும் இடத்தை மட்டும் விலைக்கு வாங்காமல், தமக்குள்ள யாவற்றையும் விற்று, அங்கிருந்து கருவேல மரங்கள், முட்செடிகள், கட்டாந்தரை என முழுமையான நிலத்தையும் வாங்கிக்கொள்கின்றார். நிதி மேலாண்மை என்ற அடிப்படையில் பார்த்தால் அவர் செய்தது மடைமையாகத் தெரிகின்றது. ஆனால், நிறையப் புதையல்கள் அந்த நிலத்தில் இருக்கலாம் என நம்பிக்கை பார்வை கொண்டிருக்கிறார் அவர். மேலும், புதையலைக் கண்ட நொடியில் அவர் கணக்குப் போட்டுப் பார்க்கின்றார். தன்னிடம் ஏற்கனவே உள்ள சொத்தின் மதிப்பைவிட, இதன் மதிப்பு உயர்ந்தது என்று அறிந்தவுடன்தான் தன் உடைமைகளை விற்கத் துணிகின்றார். அல்லது, சேமித்து வைத்த காசு எல்லாம் செல்லாக் காசு ஆன கதையாகிவிட வாய்ப்பிருக்கிறது.

விலையுயர்ந்த முத்தைத் தேடி அலையும் வணிகரும் தமக்குள்ள அனைத்தையும் விற்கின்றார். முத்தை வாங்கிக்கொள்கின்றார். இப்படிச் செய்யும்போது அவர் 'இடர்வரவு' அல்லது 'மறையிடர்' ('ரிஸ்க்') எடுக்கின்றார். ஏனெனில், முத்தை வாங்கியபின், அது வெறும் பிளாஸ்டிக் பாசி என்று இருந்தால் என்ன செய்வது?

கடலில் வலை வீசும் ஒருவர், நல்ல மீன்களைக் கூடையில் சேர்த்து, கெட்ட மீன்களை வெளியே எறிகின்றார். ஏனெனில், கெட்டவற்றை நல்லவற்றோடு வைத்திருப்பது, இடத்தை அடைத்துக்கொள்வதோடு, சுமையாக இருப்பதோடு, இருக்கின்ற நல்ல மீன்களையும் கெடுத்துவிடும். ஆக, மெதுவாக அமர்ந்து, பொறுமையுடன், நேரம் எடுத்து, கெட்டவற்றிலிருந்து நல்லவற்றைப் பிரித்தெடுக்கின்றார்.

புதையல், முத்து, நல்ல மீன்கள் என்னும் மூன்றுமே புதையல்கள்தாம். அவற்றை ஒருவர் முழுமையாக வாங்க வேண்டும் (நிலம் போல), முதன்மையாகத் தேட வேண்டும் (முத்து போல), முறைமையாகப் பிரித்தெடுக்க வேண்டும் (நல்ல மீன்கள் போல).

மேலும், மேற்காணும் புதையல்களைப் பெற, ஒருவர், (அ) சரியாகக் கணக்கிட அல்லது மதிப்பிட வேண்டும், (ஆ) மறையிடர் ('ரிஸ்க்') எடுக்க வேண்டும், (இ) தேர்ந்து தெளிந்து, தெரிவு செய்ய வேண்டும்.
புதையல்களைப் பெறுவது எளிதா? எளிதல்ல.

பட்டினத்தாரிடம் வந்த சிவபெருமான்போல, கடவுள் நம்மிடம் வருவதில்லை. சாலமோனுக்குக் கனவில் தோன்றியது போல நமக்குத் தோன்றுவதில்லை. பின் எப்படித்தான் புதையலைப் பெறுவது?

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். உரோ 8:28-30) நமக்கு விடை சொல்கிறது. 'தூய ஆவி அருளும் வாழ்வு' என்னும் பகுதியை நிறைவு செய்கின்ற பவுல், 'சினர்ஜி' ('ஒருங்கியக்கம்' அல்லது 'கூட்டொருமை') மிக அழகான மேலாண்மையியல் சொல்லாடலைப் பயன்படுத்துகின்றார்: 'கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார்.' அல்லது ஆவியார் அனைத்தையும் 'ஒருங்கியக்கம்' செய்கிறார். ஆக, நாம், நம்முடைய புதையலை, முழு மூச்சோடு தேடினால், இந்த உலகமே நமக்கு ஒத்துழைக்கும். அந்தப் புதையல் எதுவாக இருந்தாலும்!

எடுத்துக்காட்டாக, வாடகைக்கு வீடு தேடிப் போகிறோம். ஒரு வீடும் அமைவதில்லை. நாம் எதிர்பாராத நேரத்தில், திடீரென நாம் சந்திக்கும் ஒருவர் வழியாக அந்த வீடு நமக்குக் கிடைக்கிறது. நிலம் வாங்க வேண்டும் என நினைக்கிறோம். ஒன்றும் அமையாமல் இருக்கின்றது. திடீரென எல்லாம் கைககூடுகிறது. பெண் பார்க்க, திருமணம் முடிக்க, குழந்தை பிறக்க என எல்லா மங்களகரமான நிகழ்வுகளும் நமக்குத் திடீரென கைகூடுகின்றன. இதைத்தான், 'ஆள் செய்யாததை நாள் செய்யும்' என்கின்றனர் பெரியவர்கள். சபை உரையாளரோ, இதையே, 'கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்' (காண். சஉ 3:11) என்கிறார்.

நம்முள் இருக்கும் ஆவியாரோடு நாம் இணைந்துகொண்டு, கடவுளின் திட்டப்படி நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, நம் அன்றாட வாழ்வு நகர்ந்துகொண்டே இருந்தால் போதும், அவர் நமக்காக யாவற்றையும் செய்து முடிப்பார்.

மேற்காணும் வாசகங்களின் பின்புலத்தில் சில வாழ்வியல் சிந்தனைகள்:

(அ) தூக்கத்திலும் தெளிவு

சாலமோனுக்குக் கடவுள் தூக்கத்தில் தோன்றுகின்றார். ஆனால், தூக்கத்திலும் தெளிவாக இருக்கின்றார் சாலமோன். என் வாழ்வின் இலக்கு எனக்கு தெளிவாக இருக்கிறதா? தூக்கத்திலும், 'இதுதான் அது!' என்று நான் சொல்ல முடியுமா? அல்லது நேற்றைக்கு ஒரு பக்கம், இன்றைக்கு ஒரு பக்கம், நாளைக்கு இன்னொரு பக்கம் என நான் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றேனா?

(ஆ) மகிழ்ச்சி

புதையலைக் கண்டவர் மகிழ்ச்சியோடு தனக்குள்ளதை இழக்கின்றார். முத்தைக் கண்டவர் மகிழ்ச்சியோடு, தன் பழைய முத்துக்களை இழக்கின்றார். நல்ல மீன்களைக் கண்டவர், மகிழ்ச்சியோடு கெட்டவற்றை வெளியே வீசுகின்றார். இங்கே இரண்டு விடயங்கள்: எனக்கு எது மகிழ்ச்சி தருகிறதோ அதுவே என் வாழ்வின் புதையல். இன்பம் தருவது அல்ல. இன்பம் சில நிமிடங்களில் மறைந்துவிடும். மகிழ்ச்சி தராதவை அனைத்தும் சுமைகளாக மாறிவிட வாய்ப்பு உண்டு. வெறும் சாண எருக்களை சாக்கு மூடைகளில் பார்த்த திருவெண்காடருக்கு முதலில் அவை தேவையற்ற சுமைகளாகவே தெரிந்தன. ஆனால், அவற்றை உடைத்து முத்துக்களைக் கொட்டியபின்தான் அவை புதையல் என்று அவருக்குத் தெரிகின்றது. இரண்டு, மகிழ்ச்சியை நான் அடைய, இன்பத்தை இழக்க முன்வர வேண்டும். நன்முத்தைப் பெற, பிறமுத்துக்களை இழக்க வேண்டும். அப்படி இழக்காமல் நான் நன்முத்தை உரிமையாக்க முடியாது. நன்முத்து வந்தவுடன், பிறமுத்துக்களுக்கு மதிப்பில்லை. மதிப்பற்றவற்றை நான் ஏன் தூக்கித் திரிய வேண்டும்? வீடு காலியாக இருக்கிறது என்பதற்காக, வைக்கோலை அதில் நிரப்பலாமா?

(இ) ஆவியாரோடு இணைந்திருத்தல்

எந்த நேரமும் நான் என்னுடைய தொப்புள்கொடியை எனக்கு மேல் இருக்கின்ற இறையோடு இணைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், அவரிடம்தான் என் முதல் உறவு தொடங்கியது (காண். எபே 1:4). இந்த உலகில் நான் புதையல்களைக் காணுமுன் எனக்குப் புதையலாக இருந்தவர் அவர். இந்த உலகின் புதையல்கள் மறைந்தவுடன், 'காதற்ற ஊசிகளாக' அவை கரைந்தவுடன், என் புதையலாக இருப்பவர் அவரே.

இறுதியாக, பதிலுரைப்பாடலில் (காண். திபா 119), ஆசிரியர் கூறுவதுபோல, 'ஆண்டவரே! நீரே எனக்குரிய பங்கு!' என்று முதன்மையாக, முழுமையாக, முறைமையாக, அவரைப் பற்றிக்கொள்தல் நலம்!

ser

"அறிவா?  ஆன்மாவா?"

திருத்தொண்டர்குழந்தைஇயேசு பாபு

"எனக்கு எல்லாம் தெரியுமென்று நினைத்திருந்தேன். ஆனால் அதிகம் படிக்க படிக்க எனக்கு தெரிந்தது 'கொஞ்சம்' என்பதை உணர்ந்து கொண்டேன். " என்று  உலக தத்துவ மேதை சாக்ரடீஸ் கூறியுள்ளார். இதுதான் ஞானத்தின் வெளிப்பாடு. நாம் வாழ்கின்ற இந்த உலகத்திலே பலவற்றைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். ஆனால் தேடல் இவ்வுலகம் சார்ந்த தேடலாக இல்லாமல் ஆன்மா சார்ந்த தேடலாக இருக்க வேண்டும். ஞானத்திற்கு முன்னால் அறிவு குறையுள்ளதேயாகும். எனவே அறிவார்ந்த சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விடஞானத்தைப் பெற்றுக் கொள்ள நாம் தேடலைத் தொடங்க முயற்சி செய்ய அழைக்கப்பட்டுள்ளோம். அப்பொழுதுதான் இறைவன் நமக்குத் தரும் ஞானத்தைப் பெறமுடியும்.  தனக்கு ஒன்றும் தெரியாது என்று எப்பொழுது உணர்ந்துகொண்டு ஒன்றைக் கற்றுக்கொள்ள நினைக்கிறோமோ, அப்பொழுது நாம் ஞானத்தை நோக்கிய தேடலைத் தொடங்கி விட்டோம் என்று அர்த்தம்.  அறிவிற்கும் ஞானத்திற்கும் இடையே உள்ளவேறுபாட்டைப் புரிந்து ஞானமுள்ளவர்களாகவாழ அழைக்கப்பட்டுள்ளோம். ஞானத்திற்கும் அறிவுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை புரிந்துக் கொண்டு ஞானமுள்ளவர்களாக மாற இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.

அறிவுக்கும் ஞானத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை பின்வரும் நிகழ்வு  நமக்கு விளக்குகின்றது. ஒரு குருவிடம் மூன்று மாணவர்கள் பாடம் படித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அறிவு, ஞானம் பற்றி ஐயம் இருந்தது.  அறிவு என்றால் என்ன? ஞானம் என்றால் என்ன? என்று குருவிடம் கேட்டனர். அவர் அறிவு, ஞானம் பற்றி பல நாட்கள் பாடமெடுத்தும் அவர்கள் மூவருக்கும் விளங்கவில்லை  .

குரு மூன்று மாணவர்களையும் அழைத்து, "இன்று உங்களுக்கு ஞானம் என்பது எது? என்பதை ஒரு செயல் மூலம் விளக்கப் போகிறேன் "என்று சொல்லிவிட்டு மூவரையும் ஒரு அறையில் உட்கார வைத்தார்.

பின்பு குரு மாற்று அறைக்குச் சென்று சிறிது நேரத்தில் வெளியே வந்தார். அறையின் கதவுகளை மூடிவிட்டு அவரின் அருகில் வந்தமர்ந்தார். முதல் மாணவனைப் பார்த்து, "நான் போய் வந்த அறையினுள் மூன்று தம்ளர் பால் உள்ளது. அதில் நீ ஒரு தம்ளர் பாலை பருகிவிட்டு வா "என்றார்.  அவன் உள்ளே சென்றான். தங்கம்,  வெள்ளி, வெண்கலம்   ஆகிய மூன்று தம்ளர்களில் பால் இருந்தது. தங்க தம்ளரில் இருந்த  பாலை எடுத்து மிகுந்த மகிழ்ச்சியோடு பருகினான். பிறகு வெளியே வந்தான்.

அடுத்து இரண்டாவது மாணவன் உள்ளே சென்றான். தங்கத் தம்ளரில் பால் இல்லாததை பார்த்த அவன் அதிலிருந்து பால் தனக்குக் கிடைக்கவில்லையே என்று  ஆதங்கமுற்றான். ஆயினும் அதற்கடுத்த மதிப்பினைக் கொண்ட வெள்ளி  தம்ளரில் இருந்த பாலை எடுத்து குடித்துவிட்டு ஓரளவு நிறைவோடு வெளியே வந்தான்.

மூன்றாவது மாணவன் உள்ளே சென்றதும் காலியாகக் கிடந்த தங்க, வெள்ளி தம்ளர்களைப் பார்த்ததும் கோபம் தலைக்கேறியது.  எனக்கு வெண்கலத் தம்பளர் பாலா? யாருக்கு வேண்டும் இது? நான் என்ன அவ்வளவு கேவலமானவனா ?  எந்த விதத்தில் நான் தாழ்ந்தவன் ஆகிவிட்டேன்? என்று அவன் மனதில் எண்ணங்கள் ஓடின. ஆயினும் குரு பாலைக் குடித்து வா என்பதை நினைவில் கொண்டு வருத்தத்தோடு குடித்து விட்டு வெளியே வந்தான். அவர் முகத்தில் மகிழ்ச்சியே இல்லை.

குரு மூவரையும் பார்த்து, " பாலைக் குடித்தீர்களா? " என்றார். முதல் மாணவன் மகிழ்ச்சிப் பூரிப்புடன், "தங்கத் தம்பளரில்  பால் குடித்தேன். நான் மிகவும் பாக்கியசாலி, குருவே! " என்றான்.    

இரண்டாவது மாணவன், "எனக்கு தங்கத் தம்பளரில் பால் கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் வெள்ளி  தம்பளரிலாவது கிடைத்ததே என்கிற மகிழ்ச்சி ஓரளவு இருக்கிறது,  குருஜி "என்றான்.  மூன்றாம் மாணவன் பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன்பே அழுகை வந்துவிட்டது. பின்பு அவன் "இந்த மூன்று பேர்களை நான்தான் சிறப்பு இல்லாதவன். எனக்கு வெண்கலத் தம்பளரில் தான் பால் கிடைத்தது"  என்றான்.

குரு அமைதியாக எல்லாவற்றையும் கேட்டார். அதன்பின்பு பேச ஆரம்பித்தார். " மாணவர்களே!  தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய மூன்று தம்பளர்களிலும் ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்து சுண்டக் காய்ச்சிய சுவையான பசும்பால் தான் ஒரே  அளவில் இருந்தது.  அதில் எந்தவொரு வேறுபாடும் இல்லை.

பாலை பருகப் போகிற மூவருக்குமே  அதில் இருந்து ஒரே மாதிரியான சுவையும்,  சத்துவ குணமும் தான் கிடைக்கப்போகிறது. அதிலும் வேறுபாடில்லை. ஆனால் நீங்கள் மூவருமே நினைத்தது வேறு.

பால் ஊற்றி வைத்திருக்கும் தம்பளர்களின் மதிப்பை பற்றியே உங்கள் மனம் யோசித்தது. பாலின் குணம், சுவை, ருசி  ஆகிய  அனைத்தும் ஒரே மாதிரி தான் இருக்கும் என்பதை யோசிக்கவே இல்லை. ஆகவே நீங்கள் பண்டத்தை  விட்டுவிட்டு பாத்திரத்தையே பார்த்துள்ளீர்கள்!.  

பாத்திரத்தைப்  பார்த்து மகிழ்ச்சிப்படுவது அறிவு. அதிலுள்ள பண்டத்தைப் பார்த்து  மகிழ்ச்சிப்படுவது ஞானம்.  ஞானிகள் பண்டத்தை பற்றியும் அதன் பயன் பற்றியுமே பார்ப்பார்கள். பாத்திரங்களுக்கு மதிப்புத் தரமாட்டார்கள். மண் சட்டியில் ஊற்றிக் கொடுத்தால்கூட ஆனந்தமாக பருகிச் செல்வார்கள்.

"நீங்கள் அறிவு கொண்டு பார்க்காமல் ஞானம் கொண்டு பார்த்திருந்தால் மூவருமே ஒரே மாதிரியான மனோநிலையை எட்டி இருப்பீர்கள் ". குரு சொல்லி முடித்ததும் மூன்று மாணவர்களும் அறிவிற்கும் ஞானத்திற்கும்  உள்ள வேறுபாட்டை தெளிவாகப் புரிந்து கொண்டனர்.  எனவே அவர்கள்  அறிவார்ந்த சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஆழமான ஆன்மா சார்ந்த ஞானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினர்.

இன்றைய முதல் வாசகத்தில் சாலமோன் அரசர் கடவுளிடம் ஞானத்தைப் பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி தரப்பட்டுள்ளது. ஞானம் என்பது தூய ஆவியின் உயரிய கொடை. ஞானமுள்ள எவரும், நன்மை தீமையை உணர்ந்து நன்மைக்கான வழிகளைத் தேர்ந்தெடுத்து, உலகம் சார்ந்த அற்பக் காரியங்களுக்கு இடம் தராமல், ஆன்மா சார்ந்த உயரிய காரியங்களில் மனதை செலுத்துவார்கள் என்பதை விவிலியத்திலும் சரி, நம் வாழ்க்கை அனுபவங்களிலும் சரி, பல்வேறு மனிதர்கள் மூலமாகவும், அவர்களின் வாழ்க்கையை அனுபவப் பகிர்வுகள் மூலமாகவும் நாம் அறிந்திருப்போம்.

இந்த ஞானத்தை நாம் எப்படிப் பெற்றுக் கொள்வது? "ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே ஞானத்தின் தொடக்கம் "(சீரா :1:14). ஆண்டவரிடம் கொள்ள வேண்டிய அச்சம் என்பது பயத்தை குறிப்பதல்ல. மாறாக, ஆண்டவரிடம் கொண்டிருக்க வேண்டிய உயர்ந்த அன்பு, அவர் நமக்கு தந்த நன்மைகளுக்காக நன்றி உணர்வு, அவரோடு உடனிருக்க வேண்டும் என்ற ஆர்வம், அவர் குரலைக் கேட்க வேண்டும் என்ற தேடல், எல்லாவற்றிற்கும் மேலாக படைத்தவர் முன்னிலையில் நான் வெறும் படைப்பு பொருளே என்று தாழ்ச்சி. அதுதான் உண்மையான தெய்வ பயம். அதுதான் ஞானத்தின் தொடக்கம். சாலமோன் அரசரிடம் இவை அனைத்தும் இருந்ததால்தான் அவர் ஞானத்தை வரமாகக் கேட்டார்.

இன்றைய நற்செய்தியும் விண்ணரசு (அ) இறையாட்சி என்னும் ஞானத்தை புதையலுக்கும், விலையுயர்ந்த முத்துக்கும் ஒப்புமைப்படுத்தி, அவற்றை அடைய உலகம் சார்ந்த  எல்லாவற்றையும் இழக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறது.

புனித பவுலும் கிறிஸ்துவைப் பற்றிய அறிவை ஒப்பிடும் பொழுது இந்த உலக அறிவை நான் குப்பை என கருதுகிறேன் என கூறுவார். நாம் சிந்தித்து பார்ப்போம். எதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கின்றோம்? உலக அறிவிற்கும் செல்வத்திற்குமா?அல்லது ஞானம் என்ற ஆவியாரின் கொடைக்கா?
சாலமோன் அரசரைப் போல ஞானத்தை விரும்பினோம் என்றால் மற்ற எல்லாமே நமக்கு தானாக வந்து சேரும் என்பதையும் நாம் தெரிந்து கொள்வோம்.

கடவுள் தம் மக்களை ஞானம் மிகுந்தவர்களாக, புதையலைப் போன்றவர்களாக, விலையுயர்ந்த முத்துக்களைப் போல அனைவராலும் வேண்டி விரும்பி தேடப்படுபவர்களாகவேவாழ, நம்மை முன்குறித்து வைத்துள்ளார். நம்மை அழைத்துள்ளார். நம்மை ஏற்புடையவர்களாக்கவும்   காத்திருக்கிறார். நாம் நம்மை அச்சத்தோடு கடவுளுடன் ஒப்படைத்தால் தன் தூய ஆவியாரால் நம்மை திடப்படுத்துவார். எனவே அவரிடம் நம்மை முழுமையாக ஒப்படைத்து ஞானத்திற்காய் வேண்டுவோம்.

இறைவேண்டல் :
அன்பு இறைவனே, ஞானத்தின் ஊற்றே!  உமக்கு என்றும் அஞ்சி, இவ்வுலகம் சார்ந்த அற்ப அறிவை தேடுவதை விட்டுவிட்டு ஞானத்தின் மீது தாகம் கொண்டவர்களாய் வாழவும், உமக்கும்  ஏற்புடையவர்களாய் வாழ்ந்து , விண்ணரசின் முத்துக்களாய் திகழவும் தூய ஆவியாரின் கொடையை தாரும். ஆமென்.


A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com