மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலம் ஆண்டின்15ஆம் ஞாயிறு
முதலாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 55:10-11 | உரோமையர் 8:18-23 | மத்தேயு 13:1-23

ser

கடவுளின் வார்த்தை செயல் மிக்கது.

1862- ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டிலே உள் நாட்டுப் போர் மூண்டது. வெர்ஜினியாவில் வட அமெரிக்கர் நம்பிக்கை இழந்து தோல்வியின் விளிம்பில் தள்ளப்பட்டார்கள். அமெரிக்க ஜனாதிபதியாகிய ஆபிரகாம் லிங்கன், ஜான் மார்க் மில்லன் என்பரை தளபதியாக நியமித்துத் தலைமை ஏற்று நடத்த பணித்தார். மற்ற அமைச்சர்கள் எதிர்ப்பு கொடுத்தாலும் ஆபிரகாம் துணிந்து இவரையே அனுப்பினார். தளர்ந்த உள்ளங்களையும், தள்ளாடிய கால்களையும் பலப்படுத்தி, உற்சாகமூட்டி யாரும் சொல்ல முடியாத வியத்தகு வெற்றியைத் தேடிக் கொடுத்தார் ஜான் மார்க் மில்லன்.

அன்பார்ந்தவர்களே , இஸ்ரயேலின் அரசை யார் நிறுவ வருவார் என்று அறியாது, ஒரு விதத்தில் கலங்கிப் போய் இருந்த சீடர்களுக்கு ஊக்கமும், நம்பிக்கையும் தேவைப்பட்டது. எனவே அழகான ஒரு கதையாக, ஓர் உவமையாக விதை விதைப்பவர் உவமையைத் தருகிறார் இயேசு. இந்த உவமை உங்களுக்குத் தெரிந்தது தான். பல முறை கேட்டிருக்கிறீர்கள். ஆனால் எக்கருத்தை இயேசு வலியுறுத்த விரும்புகிறார்?

விதைக்கும் விவசாயியின் கண்ணோட்டத்தில் பார்த்தால் சிந்தனை ஒன்று. விதைக்கப்படுகின்ற விதையின் கண்ணோட்டத்தில் பார்த்தால் வேறு சிந்தனை வெளிப்படும்.
விதையைப் பெற்றுக்கொண்ட பல்வேறு நிலங்களின் தன்மையில் பார்த்தால் மற்றொரு சிந்தனை வெளிப்படும்.
நல்ல பண்பட்ட நிலத்தில் விழுந்த விதை தரும் பலனைப் பார்த்தால் முற்றிலும் மாறுபட்ட சிந்தனை வெளிப்படும். ஏனெனில் பண்பட்ட நிலத்தில் விழுந்த விதைகள் கூட ஒரேமாதிரி 100 மடங்கு பலன் தரவில்லையே 60 மடங்கு , 30 மடங்கு அல்லவா தருகின்றன.

கதையைச் சொன்ன இயேசுவின் கண்ணோட்டத்தில் ஆராய்ந்தால் பல சிந்தனைகள் எழலாம்.

இறைவார்த்தையை ஏற்றவர்கள் பலர் உண்டு. அது அவர்களில் வெவ்வேறு பலனை ஏற்படுத்தியது.

 • இறை வார்த்தையை ஏற்ற ஆபிரகாம் இஸ்ரயேல் குலத்துக்கு தந்தையானார் (தொநூ. 17:25)
 • இறைவாக்கைக் கேட்டு அதை ஏற்ற தாவீது அரசன் மனம் மாறினார் (2 சாமு. 12:13)
 • இறைவார்த்தையைக் கேட்டு, ஆகட்டும் என்றுரைத்த மரியா இயேசுவின் தாயானாள் (லூக் 1:38)
 • இறையரசின் நற்செய்திக்குச் செவிமடுத்த சக்கேயு, சவுல் மனம் மாறி சீடர்களாக மாறினார்கள் (லூக். 19:8)
 • ஏன் நற்செய்தி கேட்ட யூதர்கள் மனம் வருந்தி திருமுழுக்குப் பெற்றனர் (தி.பணி. 2:41)

ஒரு முறை ஒரு சிறுவன், கல் சிலை உருவாக்கும் இடத்தில் செதுக்குவதை பார்த்துக்கொண்டே நின்றான். கல்லை செதுக்கும் போது கற்கள் சிதறி விழுவதை மட்டும்தான் பார்த்தான். வேறு எந்த உருவத்தையும் அவனால் பார்க்க முடியவில்லை. இரண்டு வாரம் சென்று சிற்பி செதுக்கி வைத்திருந்த சிலையைப் பார்க்க அவன் தந்தை அழைத்துச் சென்றார். கல்லில் உருவாகிய, உயிருள்ளது போல காட்சி தந்த . சிங்கம் போல உருவாக்கப்பட்ட அந்தச் சிலையைப் பார்த்துப் பிரமிப்பும் ஆச்சரியமும் கொண்ட சிறுவன் கேட்டான், ஐயா இந்தக் கல்லில் சிங்கம் இருக்கும் என்று உமக்கு எப்படித் தெரியும்? என்று.

அன்பார்ந்தவர்களே, இந்தச் சிறுவன் கேட்டதுபோல், நாமும் நம்மில் கடவுளின் வார்த்தையின் வல்லமை நம் வாழ்வில் செயலாக்குவதை உணர வேண்டும். இன்று எசாயா தீர்க்கத்தரிசி கூறுவது, மழை பெய்தால் பயிர் முளைத்துப் பலன் தருவதுபோல இறைவார்த்தை நம்மில் செயலாற்ற வேண்டும். ஏனெனில் கடவுளின் வார்த்தை (எபிரே. 4:12) செயல் மிக்கது.

ser ser

இறைவார்த்தை முள்ளை மலராக்கும், கல்லைக் கனியாக்கும்

புனித அகுஸ்தினார் இளைஞனாக இருந்தபோது, கொலை தவிர மற்ற எல்லாப் பாவங்களையும் செய்தார் எனக் கூறலாம். அவர் ஒரு பெரிய பாவி! அவர் மனம் திரும்பவேண்டுமென்று அவருடைய தாயார் தொடர்ந்து பதினைந்து ஆண்டுகள் அழுது மன்றாடினார்.

அகுஸ்தின் வாழ்க்கையிலே ஒரு நாள்! அவர் ஒரு தோட்டத்திலே அமர்ந்திருந்தார்! அவர் அமர்ந்திருந்த தோட்டத்திற்கு வெளியேயிருந்து எடு. படி என்று ஒரு சத்தம்! ஒரு வேளை அவை தாயொருத்தி தன் பிள்ளையைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகளாகவும் இருக்கலாம்! அவற்றைக் கடவுளால் தனக்குச் சொல்லப்பட்ட வார்த்தைகளாக நினைத்துக்கொண்டு அகுஸ்தின் விவிலியத்தைத் திறந்தார். அவருடைய கண்களில் பட்ட பகுதி (உரோ 13:13-14) பகலில் நடப்பது போல மதிப்போடு நடந்து கொள்வோமாக. களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைசச்சரவு ஆகியவற்றைத் தவிர்ப்போமாக! தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல் பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள் என்பதாகும். இந்த இறைவார்த்தைகள் அவருடைய வாழ்க்கையிலே மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. அவர் மாபெரும் புனிதரானார். இறைவார்த்தை முள்ளை மலராக்கியது ; கல்லைக் கனியாக்கியது : மனிதனைப் புனிதனாக்கியது.

இதோ இன்று நம்மிடையே நடந்த ஓர் உண்மை நிகழ்ச்சி!  ஓர் அருங்கொடை இயக்க செபக்கூட்டத்தில் ஒரு குடும்பத் தலைவர் தந்த சாட்சியம். அவர் ஒரு தொழிற்சாலையிலே வேலை பார்த்து வந்தார். திடீரென தொழிற்சாலை மூடப்பட்டது! வேலை போய்விட்டது!
வறுமையும், கொடுமையும் வீட்டில் தாண்டவமாடின! விடியலின் தூரம் வெகுதூரத்தில் கூட தெரியவில்லை! அந்த வீட்டிலே கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள். நாம் நான்கு பேரும் விஷம் குடித்துச் செத்துவிடலாம் என்றார் குடும்பத் தலைவர். அன்று இரவு அந்த நான்கு பேரின் நடுவிலே விஷமிருந்தது. எப்போதும் அந்த வீட்டுத் தலைவி, தூங்கச் செல்வதற்கு முன்னால், விவிலியத்திலிருந்து ஒரு பகுதியை வாசிக்க அனைவரும் தியானிப்பது வழக்கம். மனைவி, இன்று நாம் நித்தியத்திற்கும் உறங்கப்போகின்றோம். விவிலியத்திலிருந்து ஒரு பகுதியைப் படித்துவிட்டு, விஷத்தைக் குடிக்கலாமே என்றார். கணவரும் சரி என்றார். மனைவி வாசித்த பகுதி இதுதான் : மத் 6 : 25 - 34. அந்த வாசகம் முடிந்ததும் கணவர் சொன்னார் : நாம் விஷம் அருந்திச் சாக வேண்டாம். வானத்துப் பறவைகளைக் காப்பாற்றும் கடவுள் நம்மையும் காப்பாற்றுவார் என்றார். பொழுது விடிந்தது! அஞ்சலொன்று வந்தது! அது தொழிற்சாலையில் உனக்கு மீண்டும் வேலை என்ற செய்தியைத் தந்தது.

ஆம். சாவுக்குக்கூட சாவுமணி அடிக்கும் ஆற்றல், வல்லமை, சக்தி இறைவார்த்தைக்கு உண்டு! இதனால்தான் இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா வழியாக கடவுள் நம்மைப் பார்த்து, மழையும், பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன : அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவருக்கு விதையையும், உண்பவருக்கு உணவையும் கொடுக்காமல், அங்கு திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே. என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும் (எசா 55:10-11அ) என்கின்றார். இன்றைய நற்செய்தியிலே இயேசு, இறைவார்த்தை முப்பது மடங்கு, அறுபது மடங்கு, நூறு மடங்கு பலன் தரும் என்கின்றார்.

விவிலியம், இறைவார்த்தை, ஒரு கேள்விக்குறி அல்ல; மாறாகக் கேள்விகளுக்குப் பதில்! இன்றைய இரண்டாம் வாசகம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் துன்பங்களை நாம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்குப் பதில் கூறுகின்றது : இக்காலத்தில் நாம்படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகின்ற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை (உரோ 8:18).

 • விவிலியத்திலுள்ள ஒவ்வோர் இறைவார்த்தையும்
 • கோடை காலத்தின் குளிர்த் தென்றல்!
 • வசந்த காலத்தின் வண்ண மலர்!
 • கார்காலத்தின் கருணை முகில்!
 • போர்க்காலத்தின் அமைதிப் புறா!

ஆகவே, ஆண்டவரின் அருள்வாக்கு, அது என் வாழ்வின் செல்வாக்கு என்று நாம் ஒவ்வொருவரும் வாழ முன்வருவோம்!

மேலும் அறிவோம்:

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல் (குறள் : 198).

பொருள் : அரும்பெரும் பயன்களை ஆராய்ந்து அறியும் ஆற்றல் மிக்கவர், கேட்பவர்க்கு மிகவும் பயன்படாத எந்தச் சொற்களையும் ஒருபோதும் சொல்லமாட்டார்!

ser ser

வகுப்பு ஆசிரியர் மாணவர்களிடம், "கணக்கு வகுப்புக்கும் வரலாற்று வகுப்புக்கும் உள்ள வேறுபாடு என்ன?" என்று கேட்டார். ஒரு மாணவர் எழுந்து நின்று, "சார்! என்னைப் பொருத்தமட்டில், கணக்கு வகுப்பில் விட்டு விட்டுத் தூங்குவேன்; வரலாற்று வகுப்பில் விடாது தூங்குவேன்" என்றார்.

ஆசிரியர் சிறந்தவராக இருந்தால் மட்டும் போதாது, மாணவர்களும் ஆசிரியர் போதிப்பதைக் கேட்கக்கூடிய திறன் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். நன்னூல் சூத்திரம் மாணவர்களை முதல்நிலை மாணவர்கள், இடைநிலை மாணவர்கள், கடைநிலை மாணவர்கள் என்று மூன்று விதமாகப் பிரித்துக் காட்டியுள்ளது.

முதல்நிலை மாணவர்கள் அன்னப் பறவை மற்றும் பசு போன்றவர்கள். பாலையும் தண்ணீரையும் கலந்து கொடுத்தாலும் அன்னப் பறவை பாலை மட்டும் பருகும். பசு தான் உண்ட உணவை மீண்டும் வாயில் கொண்டு வந்து நன்றாக அசைபோட்டு ஜீரணிக்கும். அவ்வாறே முதல்நிலை மாணவர்கள் வகுப்பில் ஆசிரியர் சொல்லுவதில் தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொள்வர். மேலும் வீட்டுக்குச் சென்று வகுப்பில் கேட்டவற்றை திரும்பவும் படித்து உள்வாங்குவர்.

இடைநிலை மாணவர்கள் கிளியைப் போன்றவர்கள், ஆசிரியர் சொன்னதை மட்டும் திரும்பச் சொல்வார்கள்; சுயமாகச் சிந்திக்க மாட்டார்கள். கடைநிலை மாணவர்கள் ஓட்டைப் பானை போன்றவர்கள் கேட்ட எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள்; அவர்கள் புத்தியில் ஒன்றும் நிற்காது.

இன்றைய அருள்வாக்கு வழிபாடு, கடவுளுடைய வார்த்தைக்கு உள்ள ஆற்றல் பற்றியும், அதை கேட்போரின் பல்வேறுபட்ட மனநிலையைப் பற்றியும் எடுத்துரைக்கின்றது. முதல் வாசகம் கடவுளுடைய வார்த்தையை மழைக்கு ஒப்பிடுகிறது. மழை பூமியை நனைத்து உண்பவகுக்கு உணவும், விதைப்பவர்க்கு விதையும் கொடுக்கும். அவ்வாறே கடவுளுடைய வார்த்தையும் கடவுள் விரும்பும் பலனை விளைவிக்கும் (எசா 55:10-11).

ஆனால், கடவுளுடைய வார்த்தை ஏன் விழுமிய பயன் அளிப்பதில்லை? என்ற கேள்விக்கு இன்றைய நற்செய்தி பதில் அளிக்கிறது. நன்னூல் சூத்திரம் மாணவர்களை மூன்று வகையாகப் பிரித்துக் காட்டுவதுபோல, கிறிஸ்து கடவுளுடைய வார்த்தையைக் கேட்பவர்களை நான்கு வகையாகப் பிரித்துக் காட்டுகிறார். அவர்கள் முறையே பாதையோரத்தில் விழுந்த விதை போன்றவர்கள், பாறைமேல் விழுந்த விதை போன்றவர்கள், முட்செடிகள் நடுவே விழுந்த விதை போன்றவர்கள் மற்றும் நல்ல நிலத்தில் விழுந்த விதை போன்றவர்கள்.

பாதையோரத்தில் விழுந்த விதை போன்றவர்கள் யார்? அவர்கள் ஆலயத்துக்கு வந்தாலும் அவர்கள் மனம் வேறு எங்கேயோ அலைபாயும்; வெளியே நின்று கொண்டு புகைப் பிடித்துக் கொண்டும் அரட்டை அடித்துக் கொண்டும் இருப்பர்; அல்லது மறையுரையின் போது விட்டு விட்டும் விடாமலும் தூங்குவார்கள். கடவுளுடைய வார்த்தை அவர்கள் உள்ளத்தில் துழையா வண்ணம் தடை செய்பவர்கள். ஏரோது மன்னனையும் பரிசேயர்களையும் போன்றவர்கள். பாறை நிலத்தில் விழுந்த விதையைப் போன்றவர்கள் யார்? கடவுளுடைய வார்த்தையைக் கேட்டும் தங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்பவர்கள் (திபா 95:7-8), கடவுளுடைய வார்த்தையைக் கேட்க ஒரு சபையிலிருந்து மற்றொரு சபைக்கு ஒடுபவர்கள்; எந்த சபையிலும் திலைத்திருக்காதவர்கள். கொள்கைப்பிடிப்பு அற்றவர்கள்; இவர்கள் மாற்கு நற்செய்தியில் வரும் இளைஞரைப் போன்றவர்கள், அவர் உள்ளாடையின்றி உடம்பில் ஒரு துப்பட்டியைப் போர்த்திச் சிலுவை சுமந்து சென்ற கிறிஸ்துவுக்குப்பின் சென்றார். அவரைப் பிடித்தபோது, துப்பட்டியை விட்டு விட்டு நிர்வாணமாக ஓடினார்! அவ்வாறே துன்பம் வரும்போது கிறிஸ்துவை விட்டு விட்டு ஒரு சிலர் ஓடிவிடுவர்.

முட்செடிகளுக்கு நடுவே விழுந்த விதை போன்றவர்கள் யார்? இவர்கள் கடவுளுடைய வார்த்தையை மகிழ்ச்சியோடு கேட்டாலும், உலகக் கவலையாலும் செல்வ மாயையாலும் அதை நெருக்கி விடுபவர்கள், இவர்கள் நற்செய்தியில் வரும் செல்வரான இளைஞருக்கு ஒப்பானவர்கள். அவர் கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்பினார். கிறிஸ்து அவரிடம் அவருக்குள்ள உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு வெறுங்கையாய்த் தம்மைப் பின்பற்ற கேட்டார். ஆனால் அவரோ செல்வத்தை விட்டுவிட மனமின்றிக் கிறிஸ்துவை விட்டு விலகிச் சென்றார் (மத் 19:21-22), சிற்றின்பத்தை நாடி பேரின்பத்தை விட்டு விடுகின்றவர்கள். அவ்வாறு செய்வது முறையல்ல என்கிறார் வள்ளுவர்.

சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே
மற்று இன்பம் வேண்டுபவர் (குறள் 73)

நல்ல நிலத்தில் விழுந்த விதைக்கு ஒப்பானவர்கள் யார்? அவர்கள் மீட்பரின் அன்னை மரியா போன்றவர்கள். மரியா கடவுளுடைய வார்த்தையைத் திறந்த மனத்துடன் ஏற்று அதற்குத் தம்மை முற்றிலுமாக ஒப்புவித்தார் (லூக் 1:37). அதைத் தமது சீரிய செம்மனத்தில் பதிய வைத்துச் சிந்தித்தார் (லூக் 2:19). அதில் இறுதி வரை உறுதியாக இருந்து சிலுவை அடியில் நின்றவர் (யோவா 19:25). சாகாமலேயே மறைசாட்சிக்குரிய வெற்றிவாகை சூடியவர், மரியா கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடித்ததால் பேறுபெற்றவர் (லூக் 11:27-28). கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவர்கள் துன்புறுவார்கள்; பேறுகால வேதனை அடைவர்; ஆனால் இறுதியில் முழுமையான விடுதலை பெறுவர் என்கிறது இன்றைய இரண்டாம் வாசகம் (உரோ 8:18-23).

ஒரு ஞானியை ஒரு முரடன் கொல்லுவதற்காகக் சுத்தியை ஓங்கினான். ஞானியார் சிரித்துக் கொண்டே அவனிடம், "கடவுள் என்னைக் காப்பாற்றுவார்" என்றார். முரடன் கத்தியைக் கீழே போட்டு விட்டான். ஞானியாம் அக்கத்தியை எடுத்து முரடனைக் கொல்லப் போவதாக மிரட்டி, "இப்போது யார் உன்னைக் காப்பாற்றுவார்?" என்று கேட்டதற்கு அவன், நீங்கள் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்" என்றான். அந்த நேரத்தில்கூட அவனுக்குக் கடவுள் மேல் நம்பிக்கை வரவில்லை.

யார் நம்மைக் காப்பாற்றுவார்? மனிதர் அல்ல, கடவுளே "மனிதர் மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே மேல்" (திபா 118:8), கடவுளை நம்புவோம். அவருடைய வார்த்தைக்குச் செவிமடுப்போம். அதை தம் வாழ்க்கையில் கடைப்பிடிப்போம். நாம் யார்? பாதை நிலமா? கற்பாறையா? முட்புதரா? நல்ல நிலமா? என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும் (யோவா 8:31-32).

ser ser

“வாழ்வளிக்கும் (இறை)வார்த்தை”

நிகழ்வு

அது ஒரு கிராமப்புறப் பங்கு. அந்தப் பங்கில் இருந்த பங்குத்தந்தையைப் பார்க்க இளைஞன் ஒருவன் வந்தான். அவன் ஒருகாலத்தில் ஊதாரியாக வாழ்ந்தவன்; பங்குத்தந்தைதான் அவனைத் திருத்தி நல்வழிக்குக் கொண்டுவந்திருந்தார். அதனால் அவனுக்குப் பங்குத்தந்தையின்மீது தனிப்பட்ட பாசமும் மதிப்பும் இருந்தன.

பங்குத்தந்தை அவனைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பின் அவனிடம் அவர் நலம் விசாரித்துவிட்டு, அவன் வந்த நோக்கத்தைக் கேட்டார். அவனோ, “சுவாமி! நான் இயேசுவின் மலைப்பொழிவை பாராமல் சொல்வேன்” என்று உற்சாகமாகச் சொன்னான். “சொல், பார்க்கலாம்” என்று அவர் சொன்னதும், அவன் கொஞ்சம்கூட பிசிறு இல்லாமல், திருவிவிலியத்தில் இருப்பதுபோன்று அப்படியே சொல்லி முடித்தான். பங்குத்தந்தைக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. “தம்பி! அருமையாகச் சொன்னாய்! வாழ்த்துகள்” என்று அவர் அவனைப் பாராட்டிவிட்டு, “ஆனால், இறைவார்த்தையை மனப்பாடம் செய்வதோடு மட்டும் நின்றுவிடக்கூடாது; அதை உன்னுடைய வாழ்வில் கடைப்பிடித்து வாழவேண்டும்” என்றார்.

பங்குத்தந்தை இவ்வாறு சொன்னதற்கு அந்த இளைஞன், “சுவாமி! நான் இறைவார்த்தையை மனப்பாடம் செய்வதோடு மட்டுமல்லாமல், அதைக் கடைப்பிடித்து வாழ்கிறேன்” என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தான்: “வழக்கமாக நான் திருவிவிலியத்திலிருந்து ஓர் இறைவார்த்தைப் பகுதியை வாசித்தேன் என்றால், அதை நான் பணிசெய்யும் இடத்தில் இருக்கின்ற என்னுடைய நண்பனிடம் சொல்லிக்காட்டுவேன். அவன் பிற சமயத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும், இறைவார்த்தையைக் கேட்பதில் அவனுக்கு அவ்வளவு ஈடுபாடு! இப்படி நான் அன்றாடம் வாசிக்கக்கூடிய இறைவார்த்தையை அவனிடம் சொல்வதால் அந்த இறைவார்த்தை எனக்கு மனப்பாடம் ஆகிவிடுகின்றது. அத்தோடு, அந்த இறைவார்த்தை எனக்குள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. இந்த மாற்றத்தைக் காணும் என்னுடைய நண்பனும் இப்பொழுது நல்லதொரு வாழ்க்கை வாழத் தொடங்கிவிட்டான்.”

அந்த இளைஞன் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த பங்குத்தந்தை, “தம்பி! நீ இறைவார்த்தையை வாசிப்பதோடு மட்டுமல்லமல், அதை வாழ்ந்து காட்டி, மற்றவருக்கும் ஒளியாக இருக்கின்றாயே! அதை நினைக்கும்பொழுது மிகவும் பெருமையாக இருக்கின்றது. வாழ்த்துகள்” என்று சொல்லி, அவனை அனுப்பி வைத்தார்.

நாம் வாசிக்கின்ற, கேட்கின்ற இறைவார்த்தை முப்பது மடங்காக, அறுபது மடங்காக, நூறு மடங்காகப் பலனளிக்கவேண்டும். அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலத்தின் பதினைந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, கடவுளின் வார்த்தைக்கு இருக்கும் வல்லமையை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

திருவிவிலித்தைப் பற்றி அறிஞர் பெருமக்கள்

 • “கடவுள் மனிதர்களுக்குக் கொடுத்த பெரிய கொடை திருவிவிலியம்” – முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்.
 • “இங்கிலாந்து நாட்டிற்கு இரண்டு நூல்கள் மிகவும் முக்கியமானவை. ஒன்று திருவிவிலியம். மற்றொன்று, ஷேக்ஸ்பியரின் நூல்கள். இதில் வியப்புக்குரிய உண்மை என்னவெனில், ஷேக்ஸ்பியரை இங்கிலாந்து உருவாக்கியது. அந்த இங்கிலாந்தைத் திருவிவிலியம் உருவாக்கியது” –விக்டர் ஹுகோ.
 • ‘இறைவேண்டல் செய்யும்பொழுது, இறைவனிடம் நாம் பேசுகின்றோம்; திருவிவிலியத்தை வாசிக்கும்பொழுது, இறைவன் நம்மோடு பேசுகின்றார்” – மறைப்பணியாளர் டி.எல்.மூடி.
 • “திருவிவிலியத்தில் சொல்லப்பட்ட உயர்ந்த நெறிகளின்படி வாழ்ந்தால், மேலும் மேலும் நாம் வளர்ச்சியடைவோம். அதன்படி நாம் வாழவில்லை என்றால், நம்முடைய அழிவு எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது” –டானியல் வெப்ஸ்டர்.

திருவிவிலியத்தைக் குறித்து அறிஞர் பெருமக்கள் மேலே கூறியுள்ள வார்த்தைகள், திருவிவிலியம் எவ்வளவு வல்லமையானது என்பதை நமக்கு எடுத்துக்கூறுகின்றன. இத்தகைய வல்லமை நிறைந்த திருவிவிலியத்திற்கு அதில் உள்ள இறைவார்த்தைக்கு எப்படிப் பதில் தருகின்றோம் என்பதைப் பொருத்தே நம்முடைய வாழ்வும் தாழ்வும் இருக்கின்றது. அதை விளக்குவதாக இருப்பதுதான் இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லக்கூடிய விதைப்பவர் உவமை.

இறைவார்த்தையைக் கேட்டும் பலன்கொடுக்காதவர்கள்

இயேசு சொல்லக்கூடிய விதைப்பவர் உவமையில் ‘வழியோர நிலம், பாறைநிலம், முட்செடி நிலம், நல்லநிலம் என்று நான்கு வகையான நிலங்கள் இடம்பெறுகின்றன. இந்நான்கு வகையான நிலங்களையும், ஒருவர் இறைவார்த்தைக்குப் பதிலளிப்பதன் அடிப்படையில் அவருடைய உள்ளத்தோடு ஒப்பிடலாம். மேலும், இந்த நான்குவகையான நிலங்களைக்கூட, இறைவார்த்தைக் கேட்டும் பலன்கொடுக்காதவர்கள்; இறைவார்த்தைக் கேட்டுப் பலன்கொடுப்பவர்கள் என்று இருவகையாகப் பிரிக்கலாம்.

வழியோர நிலம் போன்ற மனதுடையவர்கள், இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களைப் போன்றவர்கள். இவர்கள் இறைவார்த்தை தங்களுடைய செவிகளில் விழாதவண்ணம், காதுகளை அடைத்துக்கொள்ளக்கூடியவர்கள். இப்படிப்பட்டவர்கள் பலன் கொடுக்கமாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லிவிடலாம். பாறைநிலம் போன்ற மனதுடையவர்கள், இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்களைப் போன்றவர்கள். இப்படிப்பட்டவர்கள் இறைவார்த்தையை முதலில் ஆர்வமாகக் கேட்பார்கள்; ஆனால், இவர்கள் இறைவார்த்தை தங்களை ஊடுருவ அனுமதிப்பதில்லை. ஆன்மாவையும் ஆவியையும் பிறக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவும் இறைவார்த்தை தங்களுடைய உள்ளத்தை ஊடுருவ அனுமதித்தல்தானே, அது பலன்கொடுக்கும். பாறை நிலம் போன்றவர்களோ இறைவார்த்தை தங்களுடைய உள்ளத்தை ஊடுருவ அனுமதிக்காததால் பலன்கொடுக்காதவர்களாகப் போய்விடுவார்கள்.

முட்செடி நிலம் போன்றவர்கள், இயேசுவின் பன்னிரு சீடர்களின் ஒருவனும், அவரைக் காட்டிக் கொடுத்தவனுமாகிய யூதாசு இஸ்காரியோத்து போன்றவர்கள். இவர்களுக்கு இறைவார்த்தையும் முக்கியம்; உலக இன்பமும் முக்கியம். வேடிக்கை என்னவெனில், உலக இன்பமும் உலகக்கவலையும் தங்களுடைய உள்ளத்தில் விழுந்த இறைவார்த்தையை நெருக்கிவிடுவதால், இவர்கள் கடைசியில் பலன் கொடுக்காமல் போய்விடுவார்கள். இவ்வாறு வழியோர நிலம் போன்ற மனம்கொண்டவர்களும், பாறைநிலம் போன்ற மனம்கொண்டவர்களும், முட்செடி நிலம் போன்ற மனம் கொண்டவர்களும் பலன் கொடுக்காமலே போய்விடுவார்கள்.

இறைவார்த்தையைக் கேட்டுப் பலன்கொடுப்பவர்கள்

ஜே.ஹச். ஸ்மித் என்ற எழுத்தாளர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “கிறிஸ்தவர்கள் அனைவரும் தங்களிடம் உள்ள திருவிவிலியத்தை ஒரே நேரத்தில் தட்டினால், அதிலிருந்து எழும் தூசு, உலகில் மிகப்பெரிய சூறாவளியை உருவாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.” எவ்வளவு வேதனை கலந்த உண்மையாக இருக்கின்றது. நாம் இறைவார்த்தையை வாசிப்பது இல்லை. வாசித்தாலும் அதன்படி வாழ்வதில்லை என்பதையே மேலே உள்ள வார்த்தைகள் நமக்கு எடுத்துக்கூறுகின்றன.

ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக இருப்பவர்கள் நல்லநிலம் போன்ற மனதுடையவர்கள். இவர்கள் புனித கன்னி மரியாவைப் போன்றவர்கள். காரணம், புனித கன்னி மரியா, இறைவார்த்தையைக் கேட்டார். கேட்டதோடு மட்டுமின்றி, அதைத் தன்னுடைய உள்ளத்தில் பதித்து வைத்து (லூக் 2: 51), அதன்படி வாழ்ந்தார். அதனால் மிகுந்த கனிதந்தார். நாமும் மரியாவைப் போன்று இறைவார்த்தையைக் கேட்டு, அதை வாழ்வாக்கினால் முப்பது மடங்காக, அறுபது மடங்காக, நூறு மடங்காகப் பலன்தருவோம். உறுதி. ஏனென்றால், இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிப்பது போன்று, இறைவார்த்தை மழையைப் போன்று, பனியைப் போன்று எதற்காக அனுப்பப்பட்டதோ, அந்த நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும. ஆகையால், நாம் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடந்து மிகுந்த பலன் தருபவர்கள் ஆவோம்.

சிந்தனை

‘இவ்வுலகில் இதுவரை அச்சடிக்கப்பட்ட நூல்களில் மிகவும் போற்றுதற்குரியதும் பயனுள்ளதுமான ஒரு நூல் உண்டெனில், அது திருவிவிலியம்தான்’ என்பார் பேட்ரிக் ஹென்றி (1736-1799) என்ற அறிஞர். ஆகையால், மிகவும் போற்றுதற்குரியதும் பயனுள்ளதும் வாழ்வளிப்பதுமான திருவிவிலியத்தில் உள்ள இறைவார்த்தை வாசித்து, வாழ்வாக்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser ser

ஆறுவகை நிலங்கள்

'விதைப்பவர் எடுத்துக்காட்டை' வாசிக்கும்போதெல்லாம், 'மனசே! ரிலாக்ஸ் ப்ளீஸ்' நூலில் இருக்கும் கதை ஒன்று நினைவிற்கு வரும். விவசாயி ஒருவர் இருந்தார். அவருக்குத் தக்காளித் தோட்டம் ஒன்று இருந்தது. சில தக்காளிப் பழங்கள் நன்றாகவும், சில பழங்கள் பூச்சி விழுந்தும் அல்லது வெடித்தும் இருந்தன. பூச்சி விழுந்த, வெடித்த, செடியிலே அழுகிய பழங்களைத் தூக்கி எறிய விரும்பாத அந்த விவசாயி, அவற்றைப் பன்றிகளுக்கு இடலாமே என நினைத்து, தன் தோட்டத்திலேயே சிறிய பன்றிக்கூடம் ஒன்றையும் வைத்தார். ஒரு முறை அவருடைய தக்காளித் தோட்டத்தில் நல்ல விளைச்சல். பக்கத்துத் தோட்டத்துக்காரர்கள் எல்லாம் இவரைக் கொஞ்சம் பொறாமையுடன் பார்த்தனர். 'உன் தோட்டத்தில் இந்த ஆண்டு தக்காளி விளைச்சல் நிறையவும், நன்றாகவும் இருக்கிறது' என்று அவரைப் பாராட்டினர். ஆனால், அந்த விவசாயியோ, 'ஐயோ! இந்த முறை நான் பன்றிகளுக்கு எதைப் போடுவேன்?' என்று நினைத்து அழத் தொடங்கினார்.

விதைப்பவர் எடுத்துக்காட்டைக் கேட்கின்ற எவருக்கும் ஒரு கேள்வி வரும்:

'எல்லா நிலங்களுமே பயன்தர வேண்டுமா என்ன?'

'எல்லாத் தக்காளிகளுமே நன்றாக இருக்க வேண்டுமா என்ன?'

'உடைந்த, அழுகிய, பூச்சி விழுந்த தக்காளிகளுக்கும் பயன் இருக்கத்தானே செய்கிறது. இல்லையா?'

ஃப்யோடோர் டாஸ்டாவ்ஸ்கி என்னும் ரஷ்ய நாவலாசிரியரின் சிறந்த புதினங்களில் ஒன்று, 'க்ரைம் அன்ட் பனிஷ்மெண்ட்' ('குற்றமும் தண்டனையும்'). ரஸ்கோல்நிகோவ் என்ற ஒரு இளவல்தான் இப்புதினத்தின் முதன்மைக் கதைமாந்தர். இந்த உலகத்தில் உள்ளவர்களை 'சாதாரணமானவர்கள்,' 'அசாதாரணமானவர்கள்' என இரண்டாகப் பிரிக்கலாம் என்று சொல்கின்ற அவன், 'சாதாரணமானவர்களுக்குத்தான்' சட்டங்கள் இருக்கின்றன என்றும், 'அசாதாரணமானவர்கள்' சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதில்லை, மாறாக, சட்டங்களே அவர்களுக்குக் கீழ்ப்படிகின்றன என்று, தன்னுடைய சமகாலத்து சமூகத்தின் அவலநிலையை எடுத்துச் சொல்கின்றான். 'சாதாரணமான' இவன், தானும் 'அசாதாரணமானவன்' என்று தனக்கும் மற்றவர்களுக்கும் காட்டுவதற்காக இரட்டைக்கொலை செய்கிறான். அந்தக் கொலைதான் அவன் செய்த குற்றம். அந்தக் கொலைக்குத் தண்டனை கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்பதுதான் கதையின் வேகம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 13:1-23), நாம் 'சாதாரணமான' மற்றும் 'அசாதாரணமான' மனிதர்களைச் சந்திக்கின்றோம். இவர்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிதலின் அடிப்படையில் அல்ல, மாறாக, இறைவார்த்தைக்குச் செவிமடுத்தலின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றனர்.

இன்றைய நற்செய்தி வாசகம் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது: (அ) விதைப்பவர் உவமை, (ஆ) உவமைகளின் நோக்கம், மற்றும் (இ) விதைப்பவர் உவமைக்கு இயேசு கொடுக்கும் விளக்கம். 'விதைப்பவர் உவமை' என்று இந்த எடுத்துக்காட்டு அறியப்பட்டாலும், இந்த எடுத்துக்காட்டு விதைகளைப் பற்றியது அல்ல. மாறாக, நிலங்களை அல்லது விதைகளை வாங்கும் தளங்களைப் பொருத்ததாக இருக்கிறது. ஆக, 'நிலங்களின் எடுத்துக்காட்டு' என்று சொல்வதே தகும்.

மேலோட்டமான வாசிப்பில் நான்கு வகை நிலங்கள் இருப்பதுபோலத் தெரிந்தாலும், மொத்தத்தில் ஆறுவகை நிலங்கள் இருக்கின்றன. முதல் மூன்று வகை நிலங்கள் சாதாரண நிலங்கள். இரண்டாவது மூன்று வகை நிலங்கள் அசாதாரணமானவை. முதல் வகை நிலங்கள் பலன் தரவில்லை - விதைப்பவருக்குத் தரவில்லை. ஆனால், அவற்றால் மற்ற பயன்கள் இருக்கவே செய்கின்றன. இரண்டாம் வகை நிலங்கள் பலன் தருகின்றன. ஆனால், இங்கே நிலங்கள் ஒன்றாக இருந்தாலும் பலன்கள், முப்பது, அறுபது, நூறு என வேறுபடுகின்றன.

ஆறுவகை நிலங்கள் எவை? (1) வழி என்னும் நிலம், (2) பாறை என்னும் நிலம், (3) முட்செடிகள் நிறைந்த நிலம், (4) முப்பது மடங்கு பலன்தரும் நிலம், (5) அறுபது மடங்கு பலன்தரும் நிலம், மற்றும் (6) நூறு மடங்கு பலன்தரும் நிலம்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 55:10-11), பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக் கிடந்த இஸ்ரயேல் மக்களுக்கு நாடுதிரும்பும் நம்பிக்கையின் செய்தியைத் தருகின்றார் ஆண்டவராகிய கடவுள். கடவுளுடைய வார்த்தையை எப்படி நம்புவது என்று மக்கள் தயக்கம் காட்டிய நேரத்தில் ஆண்டவர் அவர்களுக்கு தரும் உறுதி இதுதான்: 'மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன ... என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் அவ்வாறே இருக்கும்.' ஆக, எப்படி மழையும் பனியும் தாம் இறங்கி வந்த நோக்கத்தை நிறைவேற்றாமல் மேலே செல்லாதோ, அவ்வாறே ஆண்டவராகிய கடவுளும் தன் வார்த்தைகள் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றாமல் தன்னிடம் திரும்பாது என்கிறார்.

நற்செய்தி வாசகத்தில், இயேசுவும், இந்த எடுத்துக்காட்டைப் பயன்படுத்தி, இறைவார்த்தையை ஏற்றுப் பயன்தருதல் அல்லது பலன்தருதல் குறித்து விளக்குகின்றார்.

இரண்டு வாசகங்களையும் இணைத்தால், ஆண்டவரின் வார்த்தை நம்மிடம் விதைபோல இறங்கி வருகிறது. நாம் எப்படிப்பட்ட நிலமாக இருக்கிறோமோ, அப்படிப்பட்டதாக நாம் தரும் பயன் அல்லது பலன் இருக்கிறது.

நற்செய்தி நூல்களில் நாம் சந்திக்கும் சில கதைமாந்தர்களின் பின்புலத்தில் மேற்காணும் ஆறு நிலங்களைப் புரிந்துகொள்வோம்:

1. வழி என்னும் நிலம் - பெரிய ஏரோது

'பெரிய ஏரோது' (Herod the Great) என்னும் கதைமாந்தரை நாம் மத் 2:1-12இல் சந்திக்கிறோம். 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?' என்று கேட்டு அவரைத் தேடி வருகின்ற ஞானியர் வழியாக, 'மீட்பரின் பிறப்பு' என்னும் விதை அவருடைய உள்ளத்தில் விதைக்கப்படுகிறது. ஆனால், கொஞ்ச நேரத்தில், அந்த விதையானது, 'பொறாமை,' 'பகைமை,' 'பழிதீர்த்தல்,' 'வன்மம்' என்னும் வானத்துப் பறவையால் விழுங்கப்படுகிறது.

என் உள்ளத்திலும் இறைவார்த்தை வந்து விழலாம். ஆனால், என்னைச் சுற்றி வரும் மேற்காணும் பறவைகளால் அது விழுங்கப்படலாம்.

2. பாறை என்னும் நிலம் - ஏரோது அந்திப்பாஸ்

'சிறிய ஏரோது' அல்லது 'ஏரோது அந்திப்பாஸ்' (Herod Antipas) என்னும் கதைமாந்தரை நாம் மாற் 6:14-29இல் காண்கிறோம். திருமுழுக்கு யோவான் இவருடைய உள்ளத்தில் இறைவார்த்தையை விதைக்கின்றார். 'உன் சகோதரன் மனைவியை வைத்திருப்பது முறையல்ல!' என்கிறார். யோவானின் வார்த்தைகளைக் கேட்கின்ற ஏரோது, 'மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்க்கின்றார்.' ஆக, இறைவார்த்தையைக் கேட்டு வேகமாகவும், மகிழ்ச்சியோடும் ஏற்றுக்கொள்கின்றார். ஆனால், அவரில் வேர் இல்லை. கொஞ்சம் மது உள்ளே சென்றவுடன், தன்னுடைய மாதுவின் வஞ்சக வலையில் விழுந்து, இறைவார்த்தையைச் சொன்னவரையே கொன்றழித்துவிடுகிறார்.

என் உள்ளம் பாறையாக இருக்கும்போது, எனக்கு முதலில் ஆர்வமாக இருக்கும். ஆனால், பாறையின் வெப்பம் விதையை அல்லது விதையின் வளர்தலைச் சுட்டெரித்துவிடும்.

3. முட்செடிகள் நிறைந்த நிலம் - யூதாசு இஸ்காரியோத்து

இவரை நாம் நான்கு நற்செய்தி நூல்களில் காண்கிறோம். இயேசுவின் திருத்தூதர்களில் ஒருவர். இயேசு அன்பு செய்த சீடர் என யோவான் அழைப்பது இவரைத்தான் எனச் சிலர் சொல்கின்றனர். நிதி மேலாண்மையில் சிறந்தவர். இறையாட்சி இயக்கத்தின் பணப்பை இவரிடம்தான் இருந்தது. இயேசுவின் வார்த்தைகளை உடனிருந்து கேட்டவர் இவர். ஆனால், அவை கனி கொடுக்கா வண்ணம், உலகக் கவலை (உரோமை ஆட்சி எப்போது முடியும் என்னும் கவலை) மற்றும் செல்வ மயை (முப்பது வெள்ளிக்காசுகள்) அவரை நெருக்கிவிட்டதால், இறைவார்த்தையை அறிவித்தவரையே விலைபேசத் துணிகின்றார். யூதாசைப் பொருத்தவரையில், அவருக்கு எல்லாப் பொருள்களின் விலை தெரியும், ஆனால் அவற்றின் மதிப்பு தெரியாது. இயேசுவுக்கும் விலை நிர்ணயம் செய்தவர்.

இன்று என்னை நெருக்கும் முட்செடிகள் எவை? அகுஸ்தினார் தன் வாழ்வில் தன்னை நெருக்கிய முட்செடிகளாக, தன்னுடைய ஆணவம், உடலின்பம், மற்றும் பேரார்வம் என்னும் மூன்றைக் குறிப்பிடுகின்றார்.

4. முப்பது மடங்கு பலன்தரும் நிலம் - இயேசுவிடம் வந்த இளவல்

இயேசுவைப் பின்பற்ற விரும்பி அவரிடம் வந்த செல்வந்தரான இளவல் என்னும் கதைமாந்தரை நாம் மாற் 10:17-31இல் பார்க்கிறோம். 'நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?' என்ற கேள்வியுடன் இயேசுவிடம் வருகின்றார். 'கட்டளைகளைக் கடைப்பிடி!' என்று இயேசு சொன்னவுடன், 'இளமையிலிருந்தே கடைப்பிடிக்கிறேன்' என்கிறார். 'இன்னும் ஒன்று குறைவுபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும்' என்று இயேசு சொன்னவுடன், இளவல் முகவாட்டத்துடன் இல்லம் திரும்புகிறார். பாதி வழி வந்த அவருக்கு மீதி வழி வர இயலவில்லை. 'கட்டளைகளைக் கடைப்பிடித்தல்' என்னும் முப்பது மடங்குதான் அவரால் பலன்தர முடிந்தது. அவர் நல்ல நிலம்தான். எந்தத் தவறும் செய்யாதவர்தான். ஆனால், ஊட்டச்சத்து அந்த நிலத்தில் குறைவுபட்டது.

இயேசுவைப் பின்பற்றுவதில் நான் பாதி வழியாவது வந்துள்ளேனா? பாதி வழி வந்துவிட்டால், மீதி வழி நடக்கத் தயாரா? என் முகத்தை இயேசுவை நோக்கி எழுப்புகிறேனா? அல்லது முகவாட்டம் கொண்டு தாழ்த்துகிறேனா? முகவாட்டம் குறைய நிலத்திற்கு ஊட்டம் அவசியம்.

5. அறுபது மடங்கு பலன்தரும் நிலம் - இயேசுவின் பணிக்காலத்தில் திருத்தூதர்கள்

திருத்தூதர்கள் என்னும் எடுத்துக்காட்டை நாம் கவனமுடன் கையாள வேண்டும். இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் அவர்கள் நற்செய்தியின் பொருட்டும், இயேசுவின் பொருட்டும் இன்னுயிரை ஈந்தவர்கள். அவர்களால்தான் நாம் இன்று இயேசுவின் சீடர்களாக இருக்கிறோம். அவர்கள் நூறு மடங்கு பலன் தந்தவர்கள்தாம். ஆனால், இயேசுவின் பணிக்காலத்தில் அவர்கள் இயேசுவைப் புரிந்துகொள்ளவில்லை, தவறாகப் புரிந்துகொண்டனர், மற்றும் அவரை மறுதலிக்கவும் செய்தனர். இவர்கள் அறுபது மடங்குதான் பயன்தந்தனர். 'நீரே மெசியா! நீரே இறைமகன்!' என அறிக்கையிட்டனர். ஆனால், புயலைக் கண்டு பயந்தனர், சிலுவை வேண்டாம் என்றனர், அப்பம் எப்படிப் போதும் எனக் கணக்குப் போட்டனர். இறைவார்த்தையை இயேசுவின் வாய்மொழியாக அன்றாடம் கேட்டாலும், அவர்களால் உடனடியாக முழுமையான பயன் தரமுடியவில்லை. இயேசுவால் அனுப்பப்பட்டு பணிகள் நிறையச் செய்தனர். அவர்களின் பணி அறுபது மடங்குதான் பலன் தந்தது.

என்னால் ஏன் இயேசுவை முழுமையாக நம்ப முடியவில்லை? ஏன் என் நம்பிக்கை தளர்கிறது? அல்லது நம்பிக்கையில் தயக்கம் இருப்பது ஏன்?

6. நூறு மடங்கு பலன்தரும் நிலம் - மரியாள், யோசேப்பு, சிமியோன், அன்னா, சக்கேயு, நறுமணத் தையல்

இறைவார்த்தையைக் கேட்டு, மனத்தில் இருத்தி, கனவுகளில் வழிநடத்தப்பட்டு, ஆவியாரால் உந்தப்பட்டு, தன் வாழ்வையே இறைவேண்டலில் கழித்து, தன்னிடம் உள்ளதில் பாதியையும், ஏமாற்றியதை நான்கு மடங்காகவும், திருப்பி அளித்து, விலையுயர்ந்த நறுமணத் தைலக் குப்பியை அப்படியே உடைத்து, என பல்வேறு நிலைகளில் நூறு மடங்கு பலன்தந்தனர் மரியாள், யோசேப்பு, சிமியோன், அன்னா, சக்கேயு, நறுமணப் பெண் (தையல்) ஆகியோர். தன்னிடம் உள்ளதை முழுவதுமாக இழந்து, தாங்கள் விதையாக, விதை தாங்களாக என இவர்கள் உருமாறினர்.

என்னால் மேற்காணும் உருமாற்றம் அடைய முடிகிறதா? இறைவார்த்தை என்னுள் மடிந்து என் உயிரில் கலக்கவும், என் உயிர் மடிந்து இறைவார்த்தையில் கலக்கவும் செய்கிறதா?

இறுதியாக,

நீங்களும் நானுமே மேற்காணும் ஆறுவகை நிலங்கள். பலன்தருகின்ற நிலன்கள் பலன் தர இயலாத நிலங்களைக் குறித்து எந்தத் தீர்ப்பும் எழுதக் கூடாது. நம் ஒவ்வொருவரின் சூழல், வளர்ப்பு, விழுமியங்கள், மதிப்பீடுகள் ஆகியவற்றைப் பொருத்து நம் நிலம் அமைகிறது. ஒருவர் பலன் தருவதால் அவர் மேன்மையானவர் எனக் கொண்டாடவோ, பலன் தராததால் தீயவர் என்றோ முத்திரையிடத் தேவையில்லை. இயேசுவும் அப்படி எந்த முத்திரையும் இடவில்லை. நம்முடைய இருத்தலில் பயன் தந்து, அந்தப் பயனால் நாமும் மற்றவர்களும் கொஞ்சம் வளர்ந்தால் அதுவே போதும். இந்த உவமை நமக்கு நிறைய பரிவையும், தாழ்ச்சியையும், தாராள உள்ளத்தையும் கற்றுக்கொடுக்கிறது.

எல்லாக் கதைமாந்தர்களும் இணைந்தால்தான் நற்செய்தி. எல்லாத் தக்காளிகளும் இணைந்தால்தான் தோட்டம். எல்லா மனிதர்களும் இணைந்தால்தான் சமூகம். எல்லா நிலங்களும் இணைந்தால்தான் பூமி.

நாம் பேசும்போது, நம் வாயின்மேல் விரலை வைத்துக்கொண்டு பேசினால் நாம் என்ன உணர்கிறோம்? செய்து பாருங்கள்! வார்த்தைகளோடு இணைந்து நம் சூடான மூச்சும் வெளியே வருகிறது. இல்லையா? கடவுளின் வார்த்தையும் அப்படித்தான். அவர் பேசும்போது அவரின் மூச்சும் நம்மேல் படுகிறது.

அவரின் மூச்சு நம்மேல் படுவது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம், இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 8:18-23), ஒட்டுமொத்தப் படைப்பும் நாமும் பெருமூச்சு விடுவதாகப் பவுல் பதிவு செய்கிறார். இரு மூச்சுக்களும் இணைதல் கொரோனா காலத்தில் ஆபத்தாக இருக்கலாம். ஆனால், இறைமூச்சும் நம் பெருமூச்சும் இணைதல் நம் வாழ்வை மாற்றும். ஏனெனில், அவரே, 'ஆண்டு முழுவதும் தமது நலத்தால் நமக்கு முடிசூட்டுகின்றார்' (காண். பதிலுரைப்பாடல், திபா 65:11).

ser

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com