மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலம் 12ஆம் ஞாயிறு
முதலாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எரேமியா 20:10-13 | உரோமையர் 5:12-15 | மத்தேயு 10:26-33

ser

ஒரு முறை இங்கிலாந்து நாட்டைப்‌ பகைவர்கள்‌ தாக்கினார்கள்‌. இங்கிலாந்து அடியோடு அழிந்துவிடுமோ என்று மக்கள்‌ அஞ்சினார்கள்‌. அரசனோ அந்த நாட்டின்‌ சரித்திரத்தை அழியவிடக்‌ கூடாது எனக்‌ கருதி குழந்தைகளையெல்லாம்‌ பாதுகாப்பான இடத்திற்குக்‌ கொண்டு செல்ல ஆணையிட்டார்‌. எல்லாக்‌ குழந்தைகளும்‌ புகைவண்டியிலே ஏற்றப்பட்டார்கள்‌. ஆனால்‌ ஒரு ஐந்து வயது சிறுமி தேம்பித்‌ தேம்பி அழுதாள்‌. அவளது 8 வயது அண்ணன்‌ ஏன்‌ அழுகிறாய்‌ என்று கேட்டான்‌. எனக்குப்‌ பயமாக இருக்கிறது என்று சொன்னாள்‌ அந்தச்‌ சிறுமி. சிறிது நேரம்‌ யோசித்த சிறுவன்‌, தங்கச்சி! பயப்படாதே! நம்‌ அரசன்‌ பாதுகாப்பான இடத்திற்குக்‌ கொண்டு போகும்படி ஆணையிட்‌ டிருக்கிறார்‌. நானும்‌ உன்னோடு இருக்கிறேன்‌, பயப்படாதே! என்று தங்கையைத்‌ தட்டிக்‌ கொடுத்தான்‌. ஆம்‌! இந்த நிகழ்ச்சியை நம்‌ வாழ்வோடு இணைத்து ஒப்பிடலாம்‌. துன்பத்தால்‌ துயரத்தால்‌ அழுகின்ற இன்றைய சமுதாயத்தை அந்தச்‌ சிறுமிக்கு ஒப்பிடலாம்‌. ஆறுதல்‌ சொன்ன அண்ணன்தான்‌ நம்‌ மூத்த சகோதரர்‌ ஆண்டவர்‌ இயேசு கிறிஸ்து. வண்டியை ஓட்டிச்‌ செல்ல ஆணையிட்டவர்‌ நம்‌ வானகத்‌ தந்தை.

இன்றைய நற்செய்தியிலே, அஞ்சாதீர்கள்‌! காசுக்கு இரண்டு சிட்டுக்‌ குருவிகள்‌ விற்பதில்லையா? எனினும்‌ அவற்றில்‌ ஒன்று கூட உங்கள்‌ தந்தையின்‌ விருப்பமின்றி தரையில்‌ விழாது. உங்கள்‌ தலைமுடியெல்லாம்‌ எண்ணப்பட்டிருக்கிறது. சிட்டுக்‌ குருவிகள்‌ பலவற்றையும்‌ விட நீங்கள்‌ மேலானவர்கள்‌ (மத்‌. 10:29-81) என்கிறார்‌ நம்‌ ஆண்டவர்‌ இயேசு.

இன்றைய முதல்‌ வாசகத்திலே வாசிக்கக்‌ கேட்டதுபோல, இறைவனின்‌ செய்தியை எரேமியா, அரசனிடம்‌ எடுத்துரைத்த போது, அரசனோ அச்செய்திக்குச்‌ செவிமடுப்பதற்குப்‌ பதிலாக, எரேமியாவை தேசத்துரோகி என குத்தி, துன்புறுத்த ஆரம்பித்தான்‌. ஏன்‌! தன்‌ நண்பர்கள்கூட எரேமியாவின்‌ - வீழ்ச்சிக்காகக்‌ காத்துக்‌ கொண்டிருந்தார்கள்‌. ஆனால்‌ இந்தக்‌ கொடுரமான பிரச்சனைகள்‌ மத்தியில்‌ எரேமியா ஓடி ஒளிந்தாரா? இல்லை! இறைவன்‌ தன்னோடு இருப்பதை உணர்ந்தார்‌. உறுதியான மனநிலையோடு எதிர்கொண்டார்‌.

நான்‌ உன்னோடு இருப்பேன்‌ (வி.ப. 3:12) என்று கடவுள்‌ சொன்னதை ஏற்று நம்பியபோது மோசேயின்‌ அச்சம்‌ நீங்கியது.

கடவுளால்‌ ஆகாதது ஒன்றுமில்லை (லூக்‌. 1:37) என்பதை ஏற்றபோது, அன்னை மரியாவின்‌ பயம்‌ நீங்கியது.

கடவுள்‌ நம்‌ சார்பாக இருக்கும்போது நமக்கு எதிராக இருப்பவர்‌ யார்‌? கடவுளின்‌ அன்பினின்று நம்மைப்‌ பிரிப்பவன்‌ யார்‌? (உரோ. 8:31,35) என்று துணிந்து போதித்தார்‌ திருத்தூதராகிய புனித பவுல்‌ அடிகளார்‌.

கவிஞன்‌ பாரதி பாடினார்‌:

அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பதில்லையே! இச்சகத்தோரெல்லாம்‌ எதிர்த்து நின்ற போதிலும்‌ அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே!

பிரச்சனையற்ற மனித வாழ்வு இருக்க முடியாது. துன்பமில்லா வாழ்வு இன்பத்தை உணர வைக்க முடியாது. எனக்கு இனிப்புதான்‌ பிடிக்கும்‌ என்று தினமும்‌ அல்வாவை அல்லது லட்டை தின்றால்‌ நமக்கு என்ன ஆகும்‌ என்பது தெரியுமல்லவா! கொஞ்சம்‌ காரமும்‌ சாப்பிட்டால்தான்‌ முடியும்‌. எனவே பிரச்சனைகளைக்‌ கண்டு நாம்‌ பயந்து ஓடுவோமென்றால்‌ அது நாய்‌ துரத்துவதுபோல நம்மைத்‌ துரத்தும்‌. எதிர்த்து நின்றால்‌ அது நம்மை விட்டு விலகி ஓடும்‌. எனவே பிரச்சனைகளை எதிர்கொள்ள இரண்டு விதமான நிலைகள்‌ நமக்குத்‌ தேவை. முதலாவதாக நம்மிடம்‌ இறைவன்‌ ஆற்றல்களையும்‌, வல்லமையையும்‌ தந்துள்ளார்‌ என்பதை இனம்‌ காண வேண்டும்‌.

ஒருவன்‌ கோழியைக்‌ கண்டால்‌ பயந்து ஓடுவான்‌. எனவே மனநோய்‌ நிபுணரிடம்‌ கொண்டு வந்தார்கள்‌. ஏன்‌ பயப்படுகிறாய்‌ என்று நிபுணர்‌ கேட்டபோது, டாக்டர்‌ நான்‌ ஒரு புழு. என்னை எல்லோரும்‌ புழு என்றுதான்‌ அழைக்கிறார்கள்‌. எனவே கோழி என்னைக்‌ கொத்தித்‌ தின்ன வருகிறது. எனவே நான்‌ பயந்து ஓடுகிறேன்‌ என்றார்‌. மனநோய்‌ டாக்டர்‌ தன்‌ திறமைகளையெல்லாம்‌ பயன்படுத்தி நீ ஒரு புழு அல்ல, நீ ஒரு மனிதன்‌, பயப்படாதே என்று சொல்லி ஆற்றுப்படுத்தி வீடு அனுப்பினார்‌. ஆனால்‌ வீடு சென்றவர்‌ மறுபடியும்‌ கோழியைக்‌ கண்டு பயந்து ஓடினார்‌. எனவே திரும்பவும்‌ மனநோய்‌ டாக்டரிடம்‌ கொண்டு வந்தார்கள்‌. அப்போது டாக்டர்‌, நீ மனிதர்தானே, பின்‌ ஏன்‌ பயந்து ஓடுகிறாய்‌ என்று' கேட்டபோது, டாக்டர்‌! நான்‌ புழு அல்ல என்பது எனக்குத்‌ தெரிகிறது. ஆனால்‌ அந்தக்‌ கோழிக்குத்‌ தெரியாது அல்லவா என்றார்‌. இதேபோலத்தான்‌ மனிதர்‌ தன்‌ ஆற்றலையும்‌ ஆக்க சக்தியையும்‌ சுய அடையாளத்தையும்‌ அறியாத நிலை. இப்படிப்பட்டவர்‌ எண்ணிக்கை இன்று சமுதாயத்தில்‌ அதிகரித்துக்‌ கொண்டே வருகிறது. இறைவன்‌ நம்மோடு இருந்து தன்‌ ஆற்றலால்‌ நம்மைப்‌ பலப்படுத்திக்‌ கொண்டே. இருக்கிறார்‌ என்ற மனநிலையை நாம்‌ கொண்டிருக்க வேண்டும்‌. கடவுள்‌ நமக்கு அடைக்கலமும்‌, ஆற்றலுமாய்‌ உள்ளார்‌. இடுக்கண்‌ உற்ற வேளைகளில்‌ நமக்கு உற்ற துணையாக உள்ளார்‌ (திபா. 46:1) என்ற திருப்பாடல்‌ இந்த உண்மையை உறுதிப்படுத்துகிறது.

இன்றைய மனோதத்துவ அறிஞர்களின்‌ கருத்துப்படி மனிதரின்‌ உணர்வுகள்‌ இரண்டு மட்டுமே. ஒன்று அன்பு, இரண்டாவது அச்சம்‌. அன்பால்‌ அனைத்தையும்‌ வெல்கிறான்‌. அச்சத்தால்‌ அனைத்தையும்‌ இழக்கிறான்‌. அன்பு ஒருவரை மனிதராக்குகிறது. அச்சம்‌ ஒருவரைக்‌ கோழையாக்குகிறது. இறைவனின்‌ துணை நம்‌ பக்கம்‌ என்று எண்ணும்போது அச்சம்‌ மறைகிறது. ஆதிக்கிறிஸ்தவர்கள்‌ துன்புறுத்தப்பட்டார்கள்‌. ஆனால்‌ இயேசுவின்‌ விழுமியங்களும்‌, இறை சார்புத்‌ தன்மையும்‌ அவர்களை அஞ்சவிடவில்லை. இறைவனின்‌ ஆற்றலும்‌, பராமரிப்பும்‌ நிச்சயமாக நமக்கு உண்டு என்று உணர்ந்த ஆதிக்‌ கிறிஸ்தவர்கள்‌, உடலைக்‌ கொல்லுவோருக்காக அஞ்சவில்லை.

அச்சமின்றி வாழ நாம்‌ என்ன செய்ய வேண்டும்‌? விவிலியத்தில்‌ 365 முறை அஞ்சாதீர்கள்‌ என்ற ஆண்டவர்‌ வார்த்தை நமக்குத்‌ தரப்பட்டுள்ளது. ஆண்டவர்‌ என்‌ நல்லாயன்‌. பசும்புல்‌ தரையில்‌ சேர்ப்பார்‌. நீர்‌ நிலைகளுக்கெல்லாம்‌ அழைத்துச்‌ செல்வார்‌. காரிருள்‌ சூழ்ந்த பள்ளத்தாக்கில்‌ நான்‌ நடக்க நேர்ந்தாலும்‌ எனக்குப்‌ பயமே இல்லை (திபா. 23) என்பதை உணர்ந்தோம்‌ என்றால்‌ நாம்‌ தைரியம்‌ பெறுவோம்‌. ஏனெனில்‌ நம்‌ ஆண்டவர்‌ கண்ணுக்கு நாம்‌ விலையேறப்பட்டவர்கள்‌. மதிப்புக்குரியவர்கள்‌ (எசா. 43:4). எனவே இறைவனின்‌ மாறா அன்பில்‌ சந்தேகமின்றி நம்பிக்கை கொள்வோம்‌.

ser ser

நம்பிக்கை என்னும்‌ தீபத்தை ஏற்றி வைப்போம்‌ !

இன்றைய நற்செய்தியில்‌ இயேசு, அஞ்சாதிருங்கள்‌ [மத்‌ 10:31) என்கின்றார்‌. அஞ்சுதல்‌ என்றால்‌ பயப்படுதல்‌. நாம்‌ சாதாரணமாக எப்‌பொழுது பயப்படுகின்றோம்‌ ? நாம்‌ தனிமைப்படுத்தப்படும்போது பயப்படுகின்றோம்‌.

“தம்பி உடையான்‌ படைக்கு அஞ்சான்‌' என்பார்கள்‌. நமக்குத்‌ துணைபுரிய யாராவது நம்‌ அருகிலிருந்தால்‌, நாம்‌ எதைக்‌ கண்டும்‌, யாரைக்‌ கண்டும்‌ அஞ்சுவதில்லை. மாறாக தனிமை நம்மை பற்றிக்‌ கொள்ளும்போது அச்சமும்‌ நம்மை பற்றிக்‌கொள்கின்றது.

ஒருமுறை வேளாங்கண்ணித்‌ திருவிழாவின்போது தொண்ணூற்றெட்டு குழந்தைகள்‌ காணாமல்‌ போய்விட்டார்கள்‌. அத்தனை குழந்தைகளும்‌ கண்டுபிடிக்கப்பட்டார்கள்‌. ஆனால்‌ தங்களுடைய தாய்‌ தந்தையரை, உற்றாரை, உறவினரை, நண்பரை, அன்பரைக்‌ காண்பதற்கு முன்னால்‌ அந்தக்‌ குழந்தைகள்‌ அழுத அழுகை இருக்கின்றதே! அந்தோ பரிதாபம்‌! எத்தனையோ கங்கைகளும்‌, காவிரிகளும்‌ அந்தக்‌ குழந்தைகள்‌ காப்பகத்திலே ஆறாய்ப்‌ பெருக்‌கடுத்து ஓடின! அவர்கள்‌ ஏன்‌ அழுதார்கள்‌? பயப்பட்டதால்‌, அஞ்சியதால்‌ அவர்கள்‌ அழுதார்கள்‌! ஐயோ நான்‌ தனியாக இருக்கின்றேனே என்ற எண்ணம்‌ அவர்களை அழவைத்தது ! தாயையோ, தந்‌தையையோ அவர்கள்‌ கண்டதும்‌ அவர்கள்‌ அழுகை நின்றது.

இன்று இயேசு நம்மைப்‌ பார்த்து, காசுக்கு இரண்டு சிட்டுக்‌ குருவிகள்‌ விற்பதில்லையா? எனினும்‌ அவற்றில்‌ ஒன்று கூட உங்கள்‌ தந்தையின்‌ விருப்பமின்றித்‌ தரையில்‌ விழாது. உங்கள்‌ தலைமுடியெல்லாம்‌ எண்ணப்பட்டிருக்கின்றது. சிட்டுக்குருவிகள்‌ பலவற்றையும்‌ விட நீங்கள்‌ மேலானவர்கள்‌. எனவே அஞ்சாதீர்கள்‌ (மத்‌ 10:29-31) என்கின்றார்‌.

வறியோரின்‌ உயிரைத்‌ தீயோரின்‌ பிடியினின்று விடுவிக்கும்‌ ஆற்றல்‌ கடவுளுக்கு உண்டு (முதல்‌ வாசகம்‌]. நம்மைப்‌ படைத்த கடவுள்‌ நம்மை ஒரு போதும்‌ கைவிடமாட்டார்‌ என நாம்‌ நம்பும்போது நம்மை எப்படிப்பட்ட அச்சமும்‌ நெருங்காது. நான்‌ உன்னோடு இருப்பேன்‌ [விப 3:12௮) என்று கடவுள்‌ சசான்னதை ஏற்றுக்கொண்டபோது, மோசே மனத்திலிருந்த அச்சம்‌ நீங்கியது.

கடவுளால்‌ இயலாதது ஒன்றுமில்லை [லூக்‌ 1:37] என்பதை நம்பியபோது, அன்னை மரியா மனத்திலிருந்த பயம்‌ மறைந்தது.

கடவுள்‌ நம்‌ சார்பில்‌ இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர்‌ யார்‌? (உரோ 8:31) என்கின்றார்‌ பவுலடிகளார்‌.

நாம்‌ படும்‌ துன்பங்களையும்‌, துயரங்களையும்‌, நாம்‌ எதிர்கொள்ளும்‌ எதிரிகளையும்‌, ஆபத்துக்களையும்‌ பார்த்துக்கொண்டு நம்‌ கடவுள்‌ ஒருபோதும்‌ கைகட்டி நிற்கவும்‌ மாட்டார்‌, கைகொட்டி சிரிக்கவும்‌ மாட்டார்‌. நம்மீது கொண்ட அன்பினால்‌ தம்‌ ஒரே மகனை இந்த உலகிற்குக்‌ கடவுள்‌ அனுப்பிவைத்தார்‌ [யோவா 3:16) என்று யோவான்‌ கூறுகின்றார்‌. அந்தத்‌ திருமகனாகிய புதிய ஆதாமோ, நாமிழந்த வாழ்வை இறைவனிடமிருந்து நமக்குப்‌ பெற்றுத்‌ தந்தார்‌ என்கின்றார்‌ புனித பவுலடிகளார்‌ [இரண்டாம்‌ வாசகம்‌].

இன்று நமது இதயக்‌ கோயிலில்‌ கடவுள்‌ நம்பிக்கை என்னும்‌ தீபத்தை ஏற்றிவைப்போம்‌! ஏற்றி வைக்கப்பட்ட விளக்கு சந்தேகம்‌ என்னும்‌ காற்றால்‌ அணையாது காத்து நிற்போம்‌!

மேலும்‌ அறிவோம்‌ :

தனக்குவமை கல்லாதான்‌ தாள்‌சசர்ந்தார்க்‌(கு) அல்லால்‌ மனக்கவலை மாற்றல்‌ அரிது (குறள்‌ : 2).

பொருள்‌ : தன்னிகரற்ற அருளாளனாகிய இறைவன்‌ திருவடி சேர்வோர்‌ உள்ளத்தில்‌ துன்ப துயரங்கள்‌ நீங்கிவிடூம்‌. ஏனையோர்‌ மனக்கவலை மாறாது.

ser ser

ஒரு கணவர்‌ தினமும்‌ குடித்துவிட்டு தன்‌ மனைவி மக்களை அடித்துத்‌ துன்புறுத்தி வந்தார்‌. இதைக்‌ கேள்விப்பட்ட பங்குத்தந்தை ஓர்‌ இரவு பேய்‌ வேடம்‌ போட்டுக்‌ கொண்டு குடிகாரர்‌ வீட்டுக்குச்‌ சென்று அவரைப்‌ பயமுறுத்தினார்‌. ஆனால்‌ அக்குடீகாரர்‌ சிரித்துக்‌ கொண்டே, “நீ பேய்தானே! நீ பங்குசாமியாரோ என்று பயந்துவிட்டேன்‌” என்றார்‌.

சிலர்‌ எதற்கெடுத்தாலும்‌ பயப்படுவர்‌; “அஞ்சி அஞ்சிச்‌ சாவார்‌, இவர்‌ அஞ்சாத பொருளில்லை அவனியிலே” என்ற பாடலுக்கு உரியவர்கள்‌. சிலர்‌ எதற்குமே பயப்பட மாட்டார்கள்‌. “அச்சமில்லை அச்சமில்லை உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்‌ அச்சமில்லை” என்ற பாடலுக்குச்‌ சொந்தக்காரகள்‌. அஞ்சவேண்டிய காரியங்களுக்கு அஞ்சுபவர்கள்தான்‌ அறிவாளிகள்‌; மற்றவர்கள்‌ மடையர்கள்‌ என்கிறார்‌ வள்ளுவர்‌,

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல்‌ அறிவார்‌ தொழில்‌ (குறள்‌ 428)

இன்றைய நற்செய்தியில்‌ நாம்‌ யாருக்கு அஞ்சக்கூடாது; யாருக்கு அஞ்ச வேண்டும்‌ என்பதைத்‌ தெளிவுபடுத்துகிறார்‌ கிறிஸ்து. நாம்‌ மனிதர்களுக்கு அஞ்சக்கூடாது; ஏனேனில்‌ அவர்கள்‌ நமது உடலுக்கு மட்டுமே கேடு விளைவிக்க முடியும்‌; ஆனால்‌ ஆன்மாவை அழிக்க முடியாது. நாம்‌ கடவுளுக்கு அஞ்ச வேண்டும்‌. ஏனெனில்‌ அவர்‌ நமது உடலையும்‌ ஆன்மாவையும்‌ நரகத்தில்‌ அழிக்க முடியும்‌ (மத்‌ 10:28).

நாம்‌ மனிதருக்குப்‌ பயப்படக்கூடாது என்பதற்குக்‌ கிறிஸ்துவே நமக்கு வழிகாட்டியாகத்‌ திகழ்கிறார்‌. தம்மைக்‌ கொல்ல ஏரோது மன்னன்‌ திட்டமிட்டிருக்கிறான்‌ என்று தம்மிடம்‌ கூறியவர்களைப்‌ பார்த்து கிறிஸ்து, “இன்றும்‌ நாளையும்‌ பேய்களை ஓட்டுவேன்‌; பிணிகளைப்‌ போக்குவேன்‌; மூன்றாம்‌ நாளில்‌ என்‌ பணி நிறைவேறும்‌ என நீங்கள்‌ போய்‌ அந்த நரியிடம்‌ கூறுங்கள்‌” (லூக்‌ 13:32) என்று துணிவுடன்‌ கூறினார்‌. மன்னன்‌ ஏரோதை நரி என்று அழைக்க அவர்‌ தயங்கவில்லை; பயப்படவில்லை. ஆப்பிளை நறு (ரி)க்குப்‌ போட்டால்‌ என்ன செய்யும்‌? நரி அதைத்‌ தின்றுவிடும்‌! இது கடிஜோக்‌, ஆனால்‌ ஏரோது என்ற நரி பலருடைய உயிரைக்‌ குடித்தது என்பது உண்மை. கிறிஸ்துவைப்‌ பின்பற்றி அவருடைய சீடர்களும்‌ மனிதர்களுக்குப்‌ பயப்படவில்லை. கிறிஸ்துவைப்‌ பற்றிப்‌ பேசக்கூடாது என்று தலைமைக்‌ குருக்கள்‌ திருத்தூதர்களை அச்சுறுத்தியபோது அவர்கள்‌ கூறினார்கள்‌: “மனிதர்களுக்குக்‌ கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்‌” (திப 5:29). தலைமைக்‌ குருக்கள்‌ அவர்களை நையப்புடைத்தனர்‌. ஆனால்‌ அவர்களோ அதைப்பற்றி மகிழ்ச்சி அடைந்தனர்‌. கிறிஸ்துவைப்பற்றி அவர்கள்‌ தொடர்ந்து அஞ்சாமல்‌ போதித்தனர்‌ (திப 5:40-42).

16-ஆம்‌ நூற்றாண்டில்‌ இங்கிலாந்தை ஆண்ட மன்னர்‌ எட்டாம்‌ ஹென்றி போட்டித்‌ திருச்சபையை ஏற்படுத்தினார்‌. அவாது முதலமைச்சர்‌ தாமஸ்மூர்‌ அரசரை ஆதரிக்காமல்‌ எதிர்த்துப்‌ பேசினார்‌. மன்னர்‌ அவருக்கு மரண தண்டனை விதித்துச சிறையில்‌ அடைத்தார்‌. தாமஸ்மூரின்‌ மனைவி லூயிசா என்பவர்‌ தாமஸ்ஹர்‌ அரசரை ஆதரிக்க வேண்டுமென்று அவரிடம்‌ எவ்வளவோ கெஞ்சினாள்‌. ஆனால்‌ தாமஸ்மூர்‌ அவரிடம்‌. “அடி பைத்தியகாரி! உன்னுடன்‌ கொஞ்சநாள்‌ இன்பமாய்‌ வாழ்வதற்காக, முடிவில்லா நெருப்பில்‌ நான்‌ வேகவேண்டுமா?” என்று சொல்லி தனது முடிவை மாற்றாமல்‌ வேதசாட்சியாக உயிரைக்‌ கொடுத்தார்‌. இன்று அவர்‌ புனிதர்‌. பொதுநிலையினரின்‌ பாதுகாவலர்‌, மனிதருக்கு அல்ல, கடவுளுக்கே அஞ்ச வேண்டும்‌ என்பதற்குத்‌ தாமஸ்மூர்‌ இலக்கணமாகத்‌ திகழ்கிறார்‌.

நாம்‌ கடவுளுக்கு மட்டுமே கீழ்ப்படிய வேண்டும்‌; அவருக்கு மட்டுமே அஞ்ச வேண்டும்‌. “ஆண்டவரிடம்‌ கொள்ளும்‌ அச்சமே ஞானத்தின்‌ தொடக்கம்‌” (நீமொ 1:17). தூய ஆவியாரின்‌ கொடைகளில்‌ ஒன்று கடவுளைப்‌ பற்றிய அச்ச உணர்வ. கிறிஸ்துவின்மீது ஆண்டவரைப்‌ பற்றிய அச்ச உணர்வ; தரும்‌ ஆவி தங்கியது. அவரும்‌ ஆண்டவருக்கு அஞ்சி ஈடப்பதில்‌ மகிழந்திரூந்தார்‌ (எசா 11:2-87). கடவுளுக்கு அஞ்சி நடப்போருக்குத்‌ தலைமுறை தலைமுறையாய்‌ அவர்‌ இரக்கம்‌ காட்டி வருகிறார்‌ (லூக்‌ 1:50). “ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம்‌ தூதர்‌ சூழ்ந்து நின்று காத்திடுவர்‌” (திபா 34:7).

கடவுள்‌ பயம்‌ என்பது அடிமைக்குரிய பயமில்லை. மாறாக, பிள்ளைக்குரிய பயம்‌. நமது அன்புத்‌ தந்தையாகிய கடவுளை மனம்‌ நோகச்‌ செய்துவிடுவோமோ என்ற பயம்‌. இன்றைய அதி நவீன உலகில்‌ கடவுள்‌ பயமும்‌ பாவ உணர்வும்‌ குறைந்துகொண்டே. வருகிறது. எனவே மனிதர்‌ பாவத்தைப்‌ பயமின்றிச்‌ செய்கின்றனர்‌.

ஓருவர்‌ திருமணமான ஒரு பெண்ணைக்‌ கற்பழிக்க முயன்றபோது அப்பெண்‌, “கடவுளே! என்னைக்‌ காப்பாற்று!” என்று கதறினார்‌. அப்போது அந்த மனித மிருகம்‌, “இந்தச்‌ சின்ன விசயத்துக்குப்போய்‌ அவ்வளவு பெரிய ஆளை ஏன்‌ கூப்பிடு கிறாய்‌?” என்று கேட்டது. விபசாரம்‌ என்பது சின்ன விசயமா?

பள்ளி மாணவன்‌ ஒருவன்‌ அடிக்கடி அவனுடைய அம்மா இறந்துவிட்டதாகக்‌ கூறி விடுமுறை எடுத்தான்‌. வகுப்பு ஆசிரியர்‌ அவனிடம்‌, “உனக்கு எத்தனை அம்மாடா?” என்று கேட்டதற்கு அவன்‌, “சார்‌! என்னுடைய அப்பாவைப்பற்றி உங்களுக்குத்‌ தெரியாது” என்றான்‌.

மனிதர்களிடையே நிகழும்‌ அறநெறி ஒழுக்கச்‌ சிதைவால்‌ பாலியல்‌ நோய்கள்‌ கொள்ளை நோயாகப்‌ பரவிக்கொண்டு வருகின்றன. பாவத்தின்‌ சம்பளம்‌ மரணம்‌ என்றால்‌, பாவத்தின்‌ “போனஸ்‌” என்ன? அதுதான்‌ “எய்ட்ஸ்‌' என்னும்‌ உயிர்கொல்லி நோய்‌. ஆதாம்‌ வழியாகப்‌ பாவமும்‌ பாவத்தின்‌ கூலியான சாவும்‌ மனிதரைக்‌ கவ்விப்‌ கொண்டது என்கிறார்‌ புனித பவுல்‌ இன்றைய இரண்டாம்‌ வாசகத்தில்‌ (உரோ 5:2).

கடவுளுக்குப்‌ பயந்து வாழ்வோருக்குப்‌ பல துன்பங்கள்‌ வரும்‌. கடவுளுக்கு அஞ்சி நடந்த இறைவாக்கினர்‌ எரேமியா எவ்வாறு பல இன்னல்களுக்கு இலக்கானார்‌ என்பதை முதல்‌ வாசகத்தில்‌ எரேமியாவே எடுத்துரைக்கிறார்‌. ஆனாலும்‌ அவர்‌ பயப்படவில்லை. மாறாக “என்னைத்‌ துன்புறுத்துவோர்‌ இடறி விழுவர்‌. அவர்கள்‌ வெற்றி கொள்ள மாட்டார்கள்‌” (எரே 20:11) என்று நம்பிக்கை கொள்கிறார்‌. இறைவாக்கினர்‌ எரேமியா “துன்புறும்‌ ஊழியராகிய கிறிஸ்துவுக்கு முன்‌ அடையாளம்‌.” கிறிஸ்து எண்ணற்றத்‌ துன்பங்களுக்கு உள்ளானார்‌. ஆனால்‌ கடவுள்‌ அவரை எல்லாவிதத்‌ துன்பங்களிலிருந்தும்‌ விடுவித்து மகிமைப்படுத்தினார்‌.

நாம்‌ கடவுளுக்கு அஞ்சி வாழும்போது துன்புறுவோம்‌. அத்தகைய சூழலில்‌ கிறிஸ்து நமக்கு வழங்கும்‌ ஆறுதல்‌ அளிக்கும்‌ செய்தி: “உலகில்‌ உங்களுக்குத்‌ துன்பம்‌ உண்டு. எனினும்‌ துணிவுடன்‌ இருங்கள்‌. நான்‌ உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்‌” (யோவா 16:33).

ser ser

அஞ்சாதிருங்கள்; அஞ்சுங்கள்

நிகழ்வு

1989 ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள் 12 ஆம் நாள் அமெரிக்காவைச் சார்ந்த ரே ப்ளான்கென்ஷிப் (Ray Blankenship) என்பவருக்கு அமெரிக்க அரசாங்கம் ‘Cost Guard’s Silver LIfesaving Medal’ என்ற மிக உயரிய விருதை வழங்கிச் சிறப்பித்தது. இதற்கு முக்கியக் காரணமாக இருந்த நிகழ்வு இதுதான்:

ரே ப்ளான்கென்ஷிப், ஆற்றங்கரையோரமாக இருந்த தன்னுடைய வீட்டில் இருந்து, சாளரத்தின் வழியாக எதிரே இருந்த ஆற்றையே உற்றப் பார்த்துக்கொண்டிருந்தார். அன்றைய நாளில் ஆற்றில் நீர்வரத்து மிக அதிகமாக இருந்தது. அப்பொழுதுதான் அந்த எதிர்பாராத நிகழ்வு நடைபெற்றது. ஆம், ஆற்று வெள்ளத்தில் சிறுமி ஒருத்தி வேகமாக இழுத்துக் கொள்ளப்பட்டு வந்தாள் அதைப் பார்த்ததும் ரே ப்ளான்கென்ஷிப்பிற்கு ஒன்றும் ஓடவில்லை. பிறகு மனத்தில் துணிவை வரவழைத்துக் கொண்டு, ஆற்றில் குதித்தார். ஆற்றில் வேகமாக இழுத்துச் செல்லப்பட்ட சிறுமியைக் காப்பாற்றுவது ரே ப்ளான்கென்ஷிப்பிற்கு மிகவும் சிரமமாக இருந்தது. இருந்தாலும், தன்னுடைய உயிரை ஒரு பொருட்டாக எண்ணாமல், அந்தச் சிறுமியைக் காப்பாற்றி, கரைக்குக் கொண்டு வந்தார். இதனால்தான் ரே ப்ளான்கென்ஷிப்பிற்கு அமெரிக்க அரசாங்கம் மிக உயரிய விருதை வழங்கிச் சிறப்பித்தது.

இதில் வியப்பூட்டும் உண்மை என்னவென்றால், ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய ரே ப்ளான்கென்ஷிப்பிறகு நீச்சலே தெரியாது என்பதுதான். ஆம், தனக்கு நீச்சல் தெரியாதபோதும், ரே ப்ளான்கென்ஷிப் அதைப் பற்றிக் கவலைப்படாமல், அஞ்சாமல், ஆற்றில் குதித்து சிறுமியின் உயிரைக் காப்பாற்றினார். அதனாலேயே அவருக்கு உயரிய விருந்து வழங்கப்பட்டது. இயேசுவின் சீடராக இருக்கின்ற ஒவ்வொருவரும், யாருக்கும் அஞ்சாமல், இயேசுவுக்குச் சான்று பகர்ந்து வந்தால், ஆண்டவர் அதற்கேற்ற கைம்மாறு தருவார்! பொதுக்காலத்தின் பன்னிரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, அஞ்சாமல் ஆண்டவர் இயேசுவுக்குச் சான்று பகர்ந்து வாழவேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்திப்போம்.

மனிதர்களுக்கு அஞ்சாதிருங்கள்

இயேசு தன்னுடைய சீடர்களைப் பணித்தளங்களுக்கு அனுப்புகின்றார். அவ்வாறு அனுப்புகின்றபொழுது, அவர்களுக்கு என்ன மாதிரியான சவால்களும் ஆபத்துகளும் வரும்; அவற்றை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் என்பதைப் பற்றிப் பேசுகின்றார். அதுதான் இன்றைய நற்செய்தி வாசகமாக இருக்கின்றது.

இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லும் முதலாவது செய்தி, ‘உடலை மட்டுமே கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம்’ என்பதாகும். கடவுளின் வார்த்தையை எடுத்துரைக்கின்றபொழுது மனிதர்களிடமிருந்து எதிர்ப்புகள் வரலாம். ஏனெனில், அவர்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள் அல்லர்; அதனால் உலகம் அவர்களை வெறுக்கும், கொல்லவும் கொல்லவும் செய்யும் (யோவா 17: 14) அதனால்தான் இயேசு இவ்வுலகைச் சார்ந்தவர்களுக்கு அல்லது உடலை மட்டுமே கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம் என்கின்றார்.

இப்படி உடலை மட்டுமே கொல்பவர்களுக்கு அஞ்சாமல் ஆண்டவருக்குப் பணிசெய்தவர்கள், பணி செய்கின்றவர்கள் பலர் இருக்கின்றார்கள். இவர்களில் மிகவும் குறிப்பிடத்தகுந்தவர் புனித தெர்த்துலியன். இரண்டாம் நூற்றாண்டில் யாருக்கும் அஞ்சாமல், கடவுளுக்குப் பணிசெய்த இவர் சொல்லக்கூடிய வார்த்தைகள் மிகவும் கவனிக்கத்தக்கவை. “நீங்கள் எங்களைக் கொல்லலாம், துன்புறுத்தலாம், சித்திரவதை செய்யலாம். எந்தளவுக்கு நீங்கள் எங்களைத் துன்புறுத்துவீர்களோ, அந்தளவுக்கு நாங்கள் வளருவோம். ஏனெனில், மறைச்சாட்சிகளின் இரத்தம், திருஅவையின் வித்து. மறைச்சாட்சிகளின் ஒவ்வொரு துளி இரத்தத்திலிருந்தும் முப்பது மடங்காக, அறுபது, மடங்காக, நூறு மடங்காக நம்பிக்கையாளர்களை ஆண்டவர் பெருகச் செய்வார்.” ஆம், ஆண்டவர் நம்பிக்கையாளர்களைப் பெருகச் செய்துகொண்டே இருப்பார். நாம் செய்யவேண்டியதெல்லாம், உடலைக் கொல்பவர்களுக்கு அஞ்சாமல் அவருடைய பணிசெய்வதுதான்.

ஆண்டவருக்கு அஞ்சுங்கள்

ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டுமே கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம் என்று குறிப்பிட்ட இயேசு, ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கு அஞ்சுங்கள் என்கின்றார். இங்கு இயேசு கிறிஸ்து, ‘ஆண்டவருக்கு அஞ்சுகள்’ என்று சொல்வதன் பொருள் என்ன என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது. ஆண்டவருக்கு அஞ்சுதல் என்றால், அவரிடம் நம்மை முழுவதும் ஒப்படைத்துவிட்டு, அவருடைய திருவுளத்திற்குப் பணிந்து வாழ்தல் ஆகும். இன்றைய முதல் வாசகத்தில், கடவுளின் வார்த்தையை எடுத்துரைத்த இறைவாக்கினர் எரேமியாவிற்கு பலரிடமிருந்து எதிர்ப்புகள் வருகின்றன. அப்படிப்பட்ட சூழலில் அவர் யாருக்கும் அஞ்சாமல், “ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல் என்னோடு இருக்கின்றார்; அவர் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவிக்கின்றார்” என்று சொல்லி துணிவோடு தன்னுடைய பணியைச் செய்கின்றார்.

ஆம், நாம் ஆண்டவருக்கு அஞ்சி வாழ்கின்றோம் எனில், அவருடைய பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் நம்பிக்கை கொண்டு வாழ்க்கையை அணுகுகின்றோம் என்பதே பொருள். ஏனெனில், கடவுள் சாதாரண சிட்டுக் குருவிகளைக்கூட தரையில் விழாமல் பார்த்துக் கொள்கின்றார். அப்படிப்பட்டவர் தனக்கு அஞ்சி வாழ்வோரை எப்படி எல்லாம் பாதுகாப்பார் என்பதை நாம் சிந்தித்துப் பார்த்துக் கொள்ளலாம். ஆகையால், நாம் மனிதர்களுக்கு அல்ல, ஆண்டவருக்கு அஞ்சி வாழ்பவர்களாய் இருப்போம்.

மனிதர்களுக்கு அஞ்சாமல், ஆண்டவருக்கு அஞ்சி நடப்போருக்குக் கிடைக்கும் கைம்மாறு
மனிதர்களுக்கு அல்ல, ஆண்டவருக்கு அஞ்சி, அவருக்குப் பணிசெய்யச் சொல்லும் இயேசு, அப்படிப் பணிசெய்வோருக்கு என்ன கைம்மாறு கிடைக்கும் என்பதை இன்றைய நற்செய்தியின் இறுதியில் அழகாக எடுத்துக்கூறுகின்றார். ‘மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன்’ என்று இயேசு சொல்வதன் மூலம், அவர் தன்னை ஏற்றுக்கொண்டு, மக்கள் முன் அஞ்சாமல் சான்று பகர்கின்றவருக்குத் தகுந்த கைம்மாறு அளிப்பதாகக் கூறுகின்றார் .

நாம் கடவுளுக்கு அஞ்சி, அவருடைய பணியைச் செய்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம். பல நேரங்களில் நாம், ராபர்ட் ஜி.லீ என்ற எழுத்தாளர் குறிப்பிடுவது போன்று, கடவுளுக்கு அஞ்சாமல், மனிதர்களுக்கு அஞ்சி வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இந்நிலையை மாற்றிக்கொண்டு எல்லாம் வல்லவரும், தீமைகளிலிருந்து பாதுகாப்பு அளிப்பவருமான ஆண்டவருக்கு அஞ்சி, அவருடைய பணியைச் செய்வது சிறந்தது. நாம் ஆண்டவருக்கு அஞ்சி அவருடைய பணியைச் செய்யத் தயாரா? சிந்திப்போம்.

சிந்தனை

இரண்டாம் உலகப் போரின்பொழுது அமெரிக்கா இராணுவத்தின் தளபதியாக இருந்தவர் ஜார்ஜ் பேட்டான் என்பவர். இவர் சொல்லக்கூடிய செய்தி இது: “எப்பொழுது நீங்கள் அஞ்சத் தொடங்குகின்றீர்களோ, அப்பொழுதே நீங்கள் அழிவை நெருங்கிவிட்டீர்கள். இதற்கு மாறாக நீங்கள் அஞ்சாமல் இருக்கின்றபொழுது, எப்படிப்பட்ட சவாலையும் எதிர்கொள்கின்றவர்களாக இருக்கின்றீர்கள். இதைவிடவும் கடவுள் எப்பொழுதும் தன் மக்களைத் தனித்து விடுவதில்லை. அவர் அவர்களோடு இருந்து, எதிர்வரும் ஆபத்துகளை எதிர்கொள்வதற்கான ஆற்றலைத் தருகின்றார்.”

ஆம், ஆபத்துகள் மிகுந்த இந்த உலகில், ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு நாம் நடைபோட்டோமெனில், எப்படிப்பட்ட ஆபத்துகளையும் நாம் எதிர்கொள்ளலாம். ஆகையால், நாம் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, யாருக்கும் அஞ்சாமல் அவருக்குச் சான்று பகர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser ser

சிட்டுக்குருவிகளை விட

ழான் பால் சார்த் அவர்கள் எழுதிய 'நோ எக்ஸிட்' என்ற இருத்தியல் நாவலில் ஒரு வசனம் வரும். கதாநாயகன் தன்னுடைய காதலியைப் பற்றி, 'அவள் என்னைப் புழுவைப் போல உணரச் செய்கிறாள்' தன் நண்பனிடம் சொல்வான்.

இந்தக் கொரோனா காலத்தில் நாமும் ஏறக்குறைய புழுவைப் போல ஒருவர் மற்றவரால் கருதப்படுகிறோம். கைகொடுக்க கையை நீட்டிவிட்டு, அதைச் சட்டென இழுத்துக் கொள்வது, என் அறைக்குள் ஒருவர் வந்து சென்றவுடன் நான் அவர் கைவைத்த இடங்களை எல்லாம் துடைப்பது, மற்றவரைத் தள்ளி நிற்கச் சொல்வது, அருகில் வந்து யாராவது தும்மல் போட்டால் பதறி ஓடுவது என நிறையச் செய்கிறோம். ஆக, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் இன்று கொரோனா ஏந்தும் வாகனங்களாகப் பார்க்கப்படுகிறார்கள். அவ்வாறே நம்மையும் மற்றவர்கள் பார்க்கிறார்கள்.

ஆனால், இதற்கு நாம் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. நாம் வாழும் இச்சூழல் நம்மை இந்த நிலைக்கு ஆக்கிவிட்டது.

ஆக, நீங்களும் நானும் நம்மையே ஒரு புழுவைப் போல உணரும் இந்நாள்களில், இன்றைய இறைவார்த்தை வழிபாடு, நாம் புழு அல்ல என்பதை, 'நாம் சிட்டுக்குருவிகள் அல்ல' என்ற உருவகம் வழியாக எடுத்துச் சொல்கிறது.

இதைப் புரிந்துகொள்ளுமுன் மனித வாழ்க்கையின் நிலையை விவிலியம் சொல்லக் கேட்போம். சீராக்கின் ஞானநூல் ஆசிரியர், மனிதரின் பரிதாபத்துற்குரிய நிலையைப் பின்வருமாறு பதிவு செய்கிறார்: 'மேன்மைமிகு அரியணையில் அமர்ந்திருப்போர் முதல் புழுதியிலும் சாம்பலிலும் உழலத் தாழ்த்தப்பட்டோர் வரை ... எல்லாருக்கும் சீற்றம், பொறாமை, கலக்கம், குழப்பம், சாவுபற்றிய அச்சம், வெகுளி, சண்டை ஆகியவை உண்டு ... எல்லாருக்கும் எல்லா உயிரினங்களுக்கும் சாவு, படுகொலை, சண்டை, வாள், பேரிடர், பஞ்சம், அழிவு, நோவு ஆகியவை உண்டு' (காண். சீஞா 40:3-4,8-9). இதுதான் மானுடத்தின் நிலை. இதை மாற்ற முடியாது. இதை நாம் மாற்றிவிட்டதாக இறுமாந்திருக்க முடியாது.

ஆக, நாம் எல்லாருமே சிட்டுக்குருவிகள் போல, புழு போல உணரலாம்.

'ஓ பாசிட்டிவ்' இரத்த வகையினரைக் கொரோனா தீண்டாது என்றும், பெண்களைவிட ஆண்களைத்தான் கொரோனா தாக்குகிறது என்றும் சொன்னாலும், கொரோனா பற்றிய அச்சம் அனைவருக்கும் பொதுச்சொத்தாகவே இருக்கிறது.

'அச்சம்' அல்லது 'பயம்' - இது ஒரு கொடூரமான உணர்வு. உளவியலில், 'கோபம், பயம், தாழ்வு மனப்பான்மை, மற்றும் குற்றவுணர்வு' என்று நான்கு எதிர்மறை உணர்வுகளைக் குறிப்பிடுகிறார்கள். இந்த நான்கு உணர்வுகளில் மையமாக அல்லது அடிப்படையாக இருப்பது பயம். பயத்திற்கும் மற்ற மூன்று உணர்வுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது: எனக்கு இன்னொருவர் மேல் இருக்கிற பயம் அவர்மேல் கோபமாக வெளிப்படுகிறது, என்னை நான் முழுமையற்றவனாகக் கருதி பயம் கொள்வதால் தாழ்வு மனப்பான்மை பிறக்கிறது, மற்றும் நான் செய்த தவற்றின் விளைவு பற்றிப் பயப்படுவதால் குற்றவுணர்வு வருகிறது.

ஆனால், பயம் என்பது எதிர்மறை உணர்வு என்று சொல்லி நாம் ஒதுக்கிவைக்க முடியாது. பயத்திற்கு நேர்முகமான பண்புகளும் இருக்கின்றன. தேர்வைக் கண்டு பயப்படுகின்ற மாணவன் கடினமாக உழைக்கிறான். தன் குடும்பத்தின் எதிர்காலம் பற்றி அச்சப்படுகின்ற குடும்பத் தலைவர் தேவையான சேமிப்பை மேற்கொள்கிறார். கொரோனா பற்றிய பயத்தால் நாம் நிறைய சுகாதார முறைகளைக் கடைப்பிடிக்கிறோம். மறுவாழ்வு பற்றிய பயம் இருப்பதால்தான் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு வாழ்கிறோம். இப்படியாக பயத்தினால் நிறைய நல்விளைவுகளும் ஏற்படுவது உண்டு.

இன்றைய முதல் வாசகத்திலும், நற்செய்தி வாசகத்திலும் பயம் தவிர்த்தல் அல்லது அச்சத்தை மேற்கொள்தல் வலியுறுத்தப்படுகிறது. இணைச்சட்ட நூலில் போர்கள் பற்றி அறிவுரை வழங்குகின்ற மோசே, 'உங்களில் அச்சமுற்று உள்ளம் சோர்ந்திருப்பவன் தன் வீட்டிற்குத் திரும்பிப் போகட்டும். இல்லையெனில், அவன் தோழனும் அவனைப் போல ஊக்கம் இழந்து விடுவான்' (காண். இச 20:8) என்று கூறுகின்றார். நம்பிக்கையின் மிகப் பெரிய எதிரி பயம். பயத்தைப் போக்குவதற்கான மிக நல்ல மருந்து நம்பிக்கை.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 20:10-13), எரேமியாவின் ஒப்புகை அல்லது முறையீட்டின் இரண்டாவது பகுதியை வாசிக்கின்றோம். இது ஓர் இறைவேண்டல் போலவும், அருட்புலம்பல் போலவும் இருக்கிறது: 'ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர். நானும் ஏமாந்துபோனேன் ... என் நண்பர்கள்கூட என் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள் ... அவனைப் பழிதீர்த்துக்கொள்ளலாம் என்கிறார்கள்.' 'சுற்றிலும் ஒரே திகில்' என்னும் சொல்லாடல், ஆண்டவர் பஸ்கூர் என்ற குருவுக்குக் கொடுத்த பெயர். இவர் கோவில் காவலர்களின் தலைவர். இவர் எரேமியாவைப் பிடித்துச் சிறையில் அடைக்கின்றார். ஏன்? எரேமியா எருசலேம் நகர் அழிந்துவிடும் என்றும், நெபுகத்னேசர் அரசர் தலைமையில் பாபிலோனியர்கள் எருசலேமை முற்றுகையிட்டு, அதைச் சாம்பலாக்குவார்கள் என்றும் இறைவாக்குரைக்கின்றார். அப்படி அவர் நிறுத்திக்கொண்டால் பரவாயில்லை. தொடர்ந்து, எருசலேமின் அழிவுக்குக் காரணம் அதன் தலைவர்களும், அவர்களின் சிலைவழிபாடும் கீழ்ப்படியாமையும்தான் என்று சொல்கின்றார். இதனால் அவர் நாட்டின் அமைதியைக் குலைக்கிறார் என்று மக்கள் சொல்ல, அவர் சிறையில் அடைக்கப்படுகின்றார். பஸ்கூர் என்னும் குரு இவரைச் சிறையில் அடைத்ததால், அந்தப் பெயரைச் சொல்லியே, 'சுற்றிலும் ஒரே திகில்' என்று சொல்லியே மக்கள் இவரை ஏளனம் செய்கின்றனர். ஆக, இவரைப் பயம் ஆட்கொள்கிறது.

எரேமியா மூன்று காரணங்களுக்காக பயம் கொள்கின்றார்:

(அ) அவருடைய சொந்த ஊராரும், நண்பர்களும் அவருடைய சொற்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். ஆக, உச்சக்கட்ட புறக்கணிப்பை உணர்கின்றார்.

(ஆ) தான் இறைவாக்குரைப்பது நடக்காமல் போனால் என்ன ஆகும்? என்று கடவுள்மேல் உள்ள நம்பிக்கையிலும் தளர்கிறார். ஏனெனில், பல நேரங்களில் அப்படித்தான் நடந்திருக்கிறது. கடவுள் ஒரு நகரைத் தண்டிப்பதாகச் சொல்லி இறைவாக்கினர்களை அனுப்புவார். பின் அதைத் தண்டியாமல் விடுவார். அவர் நல்ல பெயர் எடுத்துக்கொள்வார். அவருக்காக வரிந்து கட்டிக் கொண்டு சென்ற இறைவாக்கினர் கொல்லப்படுவர் அல்லது விரக்திக்கு உள்ளாவர்.

(இ) உள்ளச் சோர்வு. தான் செய்கின்ற வேலைக்கான பயனை உடனே காண இயலாதபோது சோர்வு வருகிறது. இதை அருள்பணியாளர்கள் வாழ்வில் காணலாம். ஒரு கணவனும் மனைவியும் திருமணம் முடித்தவுடன் அவர்களின் அன்பின் கனி ஒரு வருடத்தில் குழந்தையாக மலர்கிறது. ஆனால், ஓர் அருள்பணியாளர் ஒரு பங்குத்தளத்தில் 5 ஆண்டுகள் வேலை செய்தாலும், அவர் செய்த வேலையின் பயனை அவர் காண இயலாது, அல்லது அதைக் காணுமுன் அவர் மாற்றலாகிச் செல்வார். சில நேரங்களில் இறந்தும் போவார். இக்காரணத்தால் அருள்பணியாளர்களுக்கு இயல்பாகச் சோர்வு வருவதுண்டு. எரேமியாவும் அப்படிப்பட்ட சோர்வைத்தான் உணர்கின்றார்.

எரேமியாவின் பயம் எப்படி மறைகின்றது?

அவருடைய நம்பிக்கையால். எப்படி?

'ஆனால், ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கிறார்' என்று நம்பிக்கை கொள்கின்றார் எரேமியா. ஆண்டவரின் உடனிருப்பு எரேமியாவுக்கு நம்பிக்கை கொடுக்கின்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 10:26-33), இயேசுவின் மறைத்தூதுப் பணி அறிவுரைப் பகுதியை வாசிக்கின்றோம். தன்னுடைய சீடர்களைப் பணிக்கு அனுப்புகின்ற இயேசு, அவர்கள் சந்திக்கப் போகும் தீமைகள் குறித்து எச்சரிக்கின்றார். தான் எதிர்கொள்ளும் சிலுவையைத் தன் சீடர்களும் எதிர்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றார்:

'காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பது இல்லையா? ... எனவே அஞ்சாதிருங்கள்!'

இயேசுவின் சமகாலத்தில் இருந்த ஒரு பறவை சிட்டுக்குருவி. செல்ஃபோன் கோபுரங்கள் வந்த நாள் முதல் சிட்டுக்குருவிகள் மறைந்துவிட்டன. சிட்டுக்குருவிகளைக் கொல்வதற்கு அம்புகளும் குச்சிகளும் தேவையில்லை. கண்ணுக்குத் தெரியாத வான் அலை கூட அதைக் கொன்றுவிடும். அந்த அளவிற்கு வலுவற்றவைகள். அதாவது, அவை தம்மிலே வலுவானவை என்றாலும், வலுவற்ற ஒன்றின்முன் அவை விரைவாக வலுவிழந்துவிடுகின்றன. சீடர்களின் நிலையும் அப்படிப்பட்டதே. அவர்கள் தம்மிலே நிறைய ஆற்றல்களையும் திறன்களையும் கொண்டிருந்தாலும் எதிரிகள்முன் அவர்கள் வலுவற்றவர்களே.

இந்த உருவகத்தின் பொருள் என்ன?

(அ) கொசுறுக் குருவி

நாம் காய்கறிக் கடையில் கொசுறு கேட்பது உண்டு. நிறையக் காய்கறிகளுக்கு கறிவேப்பிலை கொசுறுவாகக் கொடுப்பது உண்டு. நகைக்கடையில் நாம் வாங்கும் நகைக்கு பை கொசுறு. துணிக்கடையில் கட்டைப் பை கொசுறு. கொசுறு அல்லது இலவசமாக வருவதை நாம் கண்டுகொள்வது கிடையாது. நாம் விலைகொடுத்த வாங்கிய தக்காளியில் புழு இருந்தால் முகம் வாடும் நாம், கறிவேப்பிலை வாடி இருந்தால் ஒன்றும் சொல்வது கிடையாது. லூக்கா நற்செய்தியில் இயேசு, 'இரண்டு காசுகளுக்கு ஐந்து குருவிகள்' (காண். லூக் 12:6) என்கிறார். இங்கே, 'காசுக்கு இரண்டு குருவிகள்' என்கிறார். காசுக்கு இரண்டு குருவிகள் என்றால், இரண்டு காசுக்கு நான்கு குருவிகள்தானே. இந்த ஐந்தாவது குருவிதான் கொசுறுக் குருவி. இலவசமாக வந்த குருவியைப் பராமரிக்கின்றார் கடவுள்.

(ஆ) ஆய்வுக் குருவி

சந்தையில் குருவிகள் வாங்க வருவோர், குருவிகளின் தரத்தைச் சோதிப்பது உண்டு. அப்படிச் சோதிப்பதற்காக, ஒரு குருவியைப் பறக்க விடுவர். சில நேரங்களில் அது பறக்கும். அல்லது குஞ்சாக இருந்தால் அது தரையில் விழும். தரையில் விழும் குருவிகூட 'தந்தையின் விருப்பம் இன்றி தரையில் விழாது' என்கிறார் இயேசு. ஆக, நாம் ஆய்வுக் குருவியாக இருந்தாலும் அச்சப்படத் தேவையில்லை.

(இ) எடுப்பார் கைப்பிள்ளை

நம் இல்லங்களில் செல்லப் பிராணிகள் வளர்ப்போர் சில நேரங்களில் தங்களின் கோபத்தை அவற்றின்மேல் காட்டுவார்கள். ஊரெல்லாம் சுற்றி வரும் கிளியைப் பிடித்து வளர்க்கிறேன் என்று சொல்லிவிட்டு, நாம் கோபம் கொள்ளும் நாட்களில் அதற்கு உணவளிக்க மறுக்கும்போது, அக்கிளி எடுப்பார் கைப்பிள்ளை ஆகிவிடுகிறது.

இயேசு தன்னுடைய சீடர்கள் இந்த மூன்று நிலைகளிலும் அச்சத்தை உணரலாம் என்று அவர்களை எச்சரிக்கின்றார்: அவர்கள் மற்றவர்களின் பார்வையில் இலவசங்களாகவும், ஆய்வுப் பொருள்களாகவும், எடுப்பார் கைப்பிள்ளைகளாகவும் தெரிவார்கள். அப்படிப்பட்ட நிலையில் அவர்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாவார்கள். இந்த அச்சத்தைக் களைகின்றார் இயேசு.

'சிட்டுக்குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள்' என்கிறார்.

ஆக, நான் என்னுடைய இயல்பை விட நான் என்னையே பெரிதாக்கிப் பார்த்தால் இறுமாப்பு கொள்கிறேன், சிறியதாக்கிப் பார்த்தால் அச்சம் கொள்கிறேன். இறுமாப்பும் அச்சமும் ஆபத்தானவை.

நான் என் இயல்பு என்ன என்பதைப் புரிந்துகொண்டால் அங்கே அச்சத்திற்கு இடமில்லை.

ஆக, சீடர்கள் தங்களுடைய பணிவாழ்வில் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி அச்சம் கொள்ளும் சீடர்கள் கடவுளின் பராமரிப்பை உணர்ந்தால் அவர்களின் அச்சம் மறைந்துவிடும்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 5:12-15) பவுல் தன்னுடைய திருமடலில், நம்பிக்கை என்ற கருதுகோளிலிருந்து எதிர்நோக்கு என்ற கருதுகோளுக்குச் செல்கின்றார். 'குற்றத்தின் தன்மை வேறு, அருள்கொடையின் தன்மை வேறு' என்று எழுதுகின்றார். 'குற்றம்' என்பது ஆதாமை மையப்படுத்தியதாகவும், 'அருள்கொடை' என்பது கிறிஸ்துவை மையப்படுத்தியதாகவும் இருக்கிறது. 'குற்றம்' என்பதில் உள்ள பயம், 'அருள்கொடை' என்பதில் அது மறைகிறது.

இறுதியாக,

முதல் வாசகத்தில், தன்னைச் சிட்டுக்குருவி போல உணர்ந்தவர், ஆண்டவரைத் தன்னுடன் நிற்கும் வலிமை மிகுந்த வீரராகப் பார்த்து பயம் களைகின்றார்.

நற்செய்தி வாசகத்தில், பணியில் தாங்கள் சந்திக்கும் சவால்களால் தங்களைச் சிட்டுக்குருவிகள் போல உணர்ந்தவர்கள், கடவுளின் பராமரிப்பை உணர்ந்தவர்களாக அச்சம் தவிர்க்கின்றனர்.

இரண்டாம் வாசகத்தில், நம் அச்சம் அகன்றுபோகும் என்ற எதிர்நோக்கைத் தருகின்றார்.

கொரோனா காலத்தில் நாம் அனைவரும் சிட்டுக்குருவிகள்போலக் கையறுநிலையில் இருக்கின்றோம். கண்ணுக்குத் தெரியாத செல்ஃபோன் அலைகள் சிட்டுக்குருவிகளைக் கூட்டம் கூட்டமாகக் கொல்வதுபோல, இந்தக் கிருமி நம்மைக் கொல்கின்றது.

ஆனால், நாம் நினைவில் கொள்வோம்: 'சிட்டுக்குருவிகளைவிட நாம் மேலானவர்கள்.' ஏனெனில், திருப்பாடல் ஆசிரியர் கூறுவதுபோல, 'கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக!' (காண். திபா 69:32).

ser

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com