ஆண்டின் 26வது ஞாயிறு

முதல் வாசகம் ஆமோ 6:1,4-7

"சீனோன் குன்றின்மீது இன்பத்தில் திளைத்திருப்போரே! சமாரியா மலைமேல் கவலையற்றிருப்போரே! மக்களினங்களுள் சிறந்த இனத்தின் உயர்குடி மக்களே! இஸ்ரயேலின் மக்கள் தேடி வருமளவுக்குப் பெருமை வாய்ந்தவர்களே! உங்களுக்கு ஐயோ கேடு! தந்தத்தாலான கட்டிலில் பஞ்சணைமீது சாய்ந்து கிடப்போருக்கும் கிடையிலிருந்து வரும் ஆட்டுக் குட்டிகளையும் மந்தையிலிருந்து வரும் கொழுத்த கன்றுகளையும் உண்போருக்கும் ஐயோ கேடு! அவர்கள் வீணையொலி எழுப்பி அலறித் தீர்க்கின்றார்கள், தாவீதைப்போல புதிய இசைக்கருவிகளைக் கண்டுபிடிக்கின்றார்கள். கோப்பைகளில் திராட்சை இரசம் குடிக்கின்றார்கள்: உயர்ந்த நறுமண எண்ணெயைத் தடவிக் கொள்கின்றார்கள். ஆகையால் அவர்கள்தான் முதலில் நாடு கடத்தப்படுவார்கள்: அவர்களது இன்பக் களிப்பும் இல்லாதொழியும்."

இரண்டாம் வாசகம் 1திமொ 6:11-16

கடவுளின் மனிதனாகிய நீ, இவற்றிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மனஉறுதி, பணிவு ஆகியவற்றை நாடித்தேடு. விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் பொந்தியு பிலாத்துவின்முன் விசுவாசத்தைச் சிறப்பாக அறிக்கையிட்ட இயேசு கிறிஸ்துவின் முன்னிலையிலும் உனக்குக் கட்டளையிடுகிறேன். நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து தோன்றும் வரையில் குறைச் சொல்லுக்கு இடந்தராமல் இந்தக் கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா. உரிய காலத்தில் பேரின்பக் கடவுள் அவரைத் தோன்றச் செய்வார். கடவுள் ஒருவரே வேந்தர், அரசருக்கெல்லாம் அரசர், ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவர். அவர் ஒருவரே சாவை அறியாதவர்: அணுக முடியாத ஒளியில் வாழ்பவர்: அவரைக் கண்டவர் எவருமிலர்: காணவும் முடியாது. அவருக்கே என்றென்றும் மாண்பும் ஆற்றலும் உரித்தாகுக! ஆமென்.

நற்செய்தி லூக்கா 16: 19-31

"செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும். அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார். அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார். அவர், "தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்: இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன் " என்று உரக்கக் கூறினார். அதற்கு ஆபிரகாம், "மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்: அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறாய்: நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது " என்றார். "அவர், "அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே " என்றார். அதற்கு ஆபிரகாம், "மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும் " என்றார். அவர், "அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள் " என்றார். ஆபிரகாம், "அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்பமாட்டார்கள் " என்றார். "