ஆண்டின் 12வது ஞாயிறு

முதல் வாசகம் செக் 12:10-11,13:1

ஆண்டவர் கூறியது: நான் தாவீது குடும்பத்தார் மேலும், எருசலேமில் குடியிருப்போர்மேலும் இரக்க உள்ளத்தையும் மன்றாடும் மனநிலையும் பொழிந்தருள்வேன். அப்போது அவர்கள் தாங்கள் ஊடுருவக் குத்தியவனையே உற்றுநோக்குவார்கள்: அவனை உற்று நோக்கி ஒரே பிள்ளையைப் பறிகொடுத்து ஓலமிட்டு அழுபவரைப் போலும், இறந்துபோன தம் தலைப் பிள்ளைக்காகக் கதறி அழுபவர் போலும் மனம் கசந்து அழுவார்கள்.அந்நாளில் எருசலேமில் எழும்பும் ஓலம் மெகிதோவின் சமவெளியில் அதத்ரிம்மோனின் புலம்பலைப்போலப் பெரிதாயிருக்கும். அந்நாளின் பாவத்தையும் தீட்டையும் நீக்கித் தூய்மையாக்கும் நீரூற்று தாவீதின் குடும்பத்தாருக்கெனவும் எருசலேமில் குடியிருப்போருக்கெனவும்" தோன்றும்.

இரண்டாம் வாசகம் கலா 3:26-29:

சகோதர சகோதரிகளே,, கிறிஸ்து இயேசுவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள்.அவ்வாறெனில், கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள்.இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை: ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை: கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்.நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்களும் ஆபிரகாமின் வழித் தோன்றல்களுமாய் இருக்கிறீர்கள். வாக்குறுதியின் அடிப்படையில் உரிமைப்பேறு உடையவர்களாயும் இருக்கிறீhகள்.

நற்செய்தி: லூக்கா 9: 18-24

அக்காலத்தில் இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம், "நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? " என்று அவர் கேட்டார்.அவர்கள் மறுமொழியாக, "சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர் " என்றார்கள். "ஆனால் நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்? " என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, "நீர் கடவுளின் மெசியா " என்று உரைத்தார்.இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.மேலும் இயேசு, "மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலைசெய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் " என்று சொன்னார்.பின்பு அவர் அனைவரையும் நோக்கி, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.ஏனெனில், தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார் என்றார்.