ஆண்டின் 11வது ஞாயிறு

முதலாம் வாசகம்
2 சாமு.12:7-10,13

அந்நாட்களில் நாத்தான் தாவீதிடம், "நீயே அம்மனிதன். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார். "நான் இஸ்ரயேலின் அரசனாய் உன்னைத் திருப்பொழிவு செய்தேன். நான் உன்னைச் சவுலின் கையிலினின்று விடுவித்தேன். உன் தலைவரிடம் வீட்டை உன்னிடம் ஒப்படைத்தேன்" அவன் மனைவியரையும் உனக்கு மனைவியர் ஆக்கினேன்" இஸ்ரயேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும் உனக்கு அளித்தேன்" இது போதாதென்றால் நான் மேலும் உனக்கு மிகுதியாய் கொடுத்திருப்பேன். பின் ஏன் நீ ஆண்டவரின் வார்த்தையைப் புறக்கணித்து அவர்தம் பார்வையில் தீங்கு செய்தாய்? இத்தியன் உரியாவை நீ வாளுக்கு இறையாக்கி, அவன் மனைவியை உன் மனைவியாய் ஆக்கிக் கொண்டாய்" அம்மோனியரின் வாளால் அவனை மாய்த்துவிட்டாய்! இனி உன் குடும்பத்தினின்று வாள் என்றுமே விலகாது. ஏனெனில் நீ என்னைப் புறக்கணித்து இத்தியன் உரியாவின் மனைவியை உன் மனைவியாய் ஆக்கிக் கொண்டாய். அப்போது தாவீது நாத்தானிடம், "நான் ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்துவிட்டேன்" என்று சொன்னார். நாத்தான் தாவீதிடம், "ஆண்டவரும் பாவத்தை நீக்கிவிட்டார்

.

இரண்டாம் வாசகம்
கலா.2:16,19-21

சகோதர சகோதரிகளே, திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசு கிறிஸ்துவின் மீது கொள்ளும் நம்பிக்கையால்தான் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகமுடியும் என நாம் அறிந்திருக்கிறோம். ஆதலால்தான் நாமும் சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, நம்பிக்கையால் இறைவனுக்கு எற்புடையவராகுமாறு கிறிஸ்து இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். ஏனெனில் சட்டம் சார்ந்த செயல்களால் எவருமே இறைவனுக்கு ஏற்புடையவர் ஆவதில்லை.திருச்சட்டத்தைப் பொறுத்தமட்டில் நான் இறந்தவன் ஆனேன். அதற்கு அச்சட்டமே காரணம். நான் கடவுளுக்காக வாழ்கிறேன். கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்.எனவே இனி வாழ்பவன் நான் அல்ல: கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார். இறைமகன்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நான் இவ்வுலகில் வாழ்கிறேன். இவரே என்மீது அன்புகூர்ந்தார். எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார்.நான் கடவுளின் அருள் பயனற்றுப்போக விட மாட்டேன். ஏனெனில் சட்டம் சார்ந்த செயல்களால் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகக்கூடுமானால் கிறிஸ்து இறந்தது வீண் என்றாகுமே!

நற்கெய்தி
லூக்.7:36-8:3

அக்காலத்தில் பரிசேயருள் ஒருவர் இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந்தார். அவரும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய்ப் பந்தியில் அமர்ந்தார்.அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரியவந்தது. உடனே அவர் நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார்.இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார்: அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, "இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்: இவள் பாவியாயிற்றே " என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். இயேசு அவரைப் பார்த்து, "சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும் " என்றார். அதற்கு அவர், "போதகரே, சொல்லும் " என்றார். அப்பொழுது அவர், "கடன் கொடுப்பவர் ஒருவரிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன்பட்டிருந்தனர். கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்? "என்று கேட்டார். சீமோன் மறுமொழியாக, "அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன் "என்றார். இயேசு அவரிடம்,"நீர் சொன்னது சரியே" என்றார். பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், "இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை: இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார். நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை: இவரோ நான் உள்ளே வந்தது முதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக் கொண்டே இருக்கிறார். நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை: இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன்: இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்"என்றார். பின்பு அப்பெண்ணைப் பார்த்து, "உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன " என்றார். "பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?"என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள். இயேசு அப்பெண்ணை நோக்கி, "உமது நம்பிக்கை உம்மை மீட்டது: அமைதியுடன் செல்க" என்றார். அதற்குப்பின் இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சிபற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தனர். பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும் ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.