ஆண்டின் 8வது ஞாயிறு

வாசகம் சீராக்கின் ஞானம் 27: 4-7

சலிக்கின்றபோது சல்லடையில் உமி தங்கிவிடுகின்றது; அவ்வாறே மனிதரின் பேச்சில் மாசு படிந்துவிடுகின்றது. குயவரின் கலன்களை, சூளை பரிசோதிக்கின்றது; மனிதரை, உரையாடல் பரிசோதிக்கின்றது. கனி, மரத்தின் கண்காணிப்பைக் காட்டுகின்றது; சொல், மனிதரின் உள்ளப் பண்பாட்டைக் காட்டுகின்றது. ஒருவர் பேசுவதற்கு முன்பே அவரைப் புகழாதே; பேச்சைக்கொண்டே அவரை அறிந்து கொள்ளலாம்.

இரண்டாம் வாசகம் 1 கொரி.15:54-58

சகோதரர் சகோதரிகளே, அழிவுக்குரியது அழியாமையையும், சாவுக்குரியது சாகாமையையும் அணிந்து கொள்ளும்போது மறைநூலில் எழுதியுள்ள வாக்கு நிறைவேறும்: ``சாவு முற்றிலும் ஒழிந்தது; வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே, உன் கொடுக்கு எங்கே?'' பாவமே சாவின் கொடுக்கு. பாவத்துக்கு வலிமை தருவது திருச்சட்டமே. ஆகவே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி! எனவே என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, உறுதியோடு இருங்கள்; நிலையாய் நில்லுங்கள். ஆண்டவருக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து ஆண்டவரின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள்.

நற்செய்தி லூக்.6:39-45

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்கு உவமையாகக் கூறியது: ``பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவர் அல்லவா? சீடர் குருவைவிட மேலானவர் அல்ல. ஆனால் தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப் போல் இருப்பர். நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்துகொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், `உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?' என்று எப்படிக் கேட்க முடியும்? வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும். கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை; முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை. நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.''