மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி. ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்; இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய். அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்; "சீயோனே, அஞ்சவேண்டாம்; உன் கைகள் சோர்வடைய வேண்டாம். உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன்பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார். அது திருவிழாக் காலம்போல் இருக்கும். உனது துன்பத்தை அகற்றிவிட்டேன்;
சகோதரர், சகோதரிகளே! ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள். கனிந்த உங்கள் உள்ளம் எல்லா மனிதருக்கும் தெரிந்திருக்கட்டும். ஆண்டவர் அண்மையில் உள்ளார். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்.
அக்காலத்தில் திருமுழுக்கு யோவான் போதித்துக் கொண்டிருந்தபோது, "நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கூட்டத்தினர் அவரிடம் கேட்டனர். அதற்கு அவர் மறுமொழியாக, "இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்" என்றார். வரி தண்டுவோரும் திருமுழுக்குப் பெற வந்து, "போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?" என்று அவரிடம் கேட்டனர். அவர், "உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள்" என்றார். படைவீரரும் அவரை நோக்கி, "நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டனர். அவர், "நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்" என்றார். அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள். யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, "நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்" என்றார். மேலும் பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.