கிறிஸ்துப்பிறப்பு அதிகாலைத் திருப்பலி
நள்ளிரவு திருப்பலி|பகல் திருப்பலி

முதலாம் வாசகம் எசாயா 62:11-12

உலகின் கடைக்கோடி வரை ஆண்டவர் பறைசாற்றியது: “மகள் சீயோனிடம் சொல்லுங்கள்: இதோ, உன் மீட்பு வருகின்றது, அவரது வெற்றிப்பரிசு அவருடன் உள்ளது: அவரது செயலின் பயன் அவர் முன்னே உள்ளது. 'புனித மக்களினம்' என்றும் 'ஆண்டவரால் விடுதலை அடைந்தவர்கள்' என்றும் அவர்கள் அழைக்கப்படுவார்கள்: நீயோ, 'தேடிக் கண்டுபிடிக்கப்பட்டவன்' என்றும் இனி 'கைவிடப்படாத நகர்' என்றும் பெயர் பெறுவாய்.

இரண்டாம் வாசகம் தீத்து 3:4-7

நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது, நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப் பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார். அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்தார். நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகி, நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை உரிமைப்பேறாகப் பெறும் பொருட்டே இவ்வாறு செய்தார்.

நற்செய்தி லூக். 2:15-20

வானதூதர் அவர்களைவிட்டு விண்ணகம் சென்றபின்பு, இடையர்கள் ஒருவரையொருவர் நோக்கி, “வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கின்ற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்” என்று சொல்லிக்கொண்டு, விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள்.

அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார். இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.