உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, "திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்: இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்: அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார். "அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்: காது கேளாதோரின் செவிகள் கேட்கும்.அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்: வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்: பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்: வறண்ட நிலத்தில் நீரோடைகள்" பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்: தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்:
என் சகோதர சகோதரிகளே, மாட்சி மிக்க நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவினிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் ஆள்பார்த்துச் செயல்படாதீர்கள். பொன் மோதிரமும் பளபளப்பான ஆடையும் அணிந்த ஒருவரும் அழுக்குக் கந்தையணிந்த ஏழை ஒருவரும் உங்கள் தொழுகைக் கூடத்தினுள் வருகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அப்பொழுது நீங்கள் பளபளப்பான ஆடை அணிந்தவர்மீது தனிக் கவனம் செலுத்தி அவரைப் பார்த்து, "தயவுசெய்து இங்கே அமருங்கள் " என்று சொல்கிறீர்கள். ஏழையிடமோ, "அங்கே போய் நில் " என்றோ அல்லது "என் கால்பக்கம் தரையில் உட்கார் " என்றோ சொல்கிறீர்கள். இவ்வாறு உங்களுக்குள்ளே வேறுபாடு காட்டி, தீய எண்ணத்தோடு மதிப்பிடுகிறீர்கள் அல்லவா? என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்: உலகின் பார்வையில் ஏழைகளாய் இருப்பவர்களை, நம்பிக்கையில் செல்வர்களாகவும் தம்மீது அன்பு செலுத்துபவருக்கு வாக்களிக்கப்பட்ட அரசை உரிமைப்பேறாகப் பெறுபவர்களாகவும் கடவுள் தேர்ந்து கொள்ளவில்லையா?
அக்காலத்தில் இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார். காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார். பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி "எப்பத்தா " அதாவது "திறக்கப்படு " என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன: நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார். இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள். அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய் , "இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காதுகேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே! " என்று பேசிக்கொண்டார்கள்.