ஆண்டின் 19வது ஞாயிறு

முதலாம் வாசகம் 1 அர. 19:4-8

அவர் பாலை நிலத்தில் ஒரு நாள் முழுதும் பயணம் செய்தார். அங்கே ஒரு சூரைச் செடியின் அடியில் அமர்ந்து கொண்டு, தாம் சாகவேண்டுமெனப் பின்வருமாறு மன்றாடினார்: "ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும்: என் உயிரை எடுத்துக் கொள்ளும்: நான் என் மூதாதையரைவிட நல்லவன் அல்ல: "பின்னர் அச்சூரைச் செடியின் அடியில் அவர் படுத்துறங்கினார். அப்போது வானதூதர் அவரைத் தட்டி எழுப்பி, "எழுந்து சாப்பிடு " என்றார்.அவர் கண் விழித்துப் பார்க்கையில், இதோ! தணலில் சுட்ட ஒரு அப்பமும் ஒரு குவளையில் தண்ணீரும் தம் தலைமாட்டில் இருக்கக் கண்டார். அவற்றை அவர் உண்டு பருகியபின் திரும்பவும் படுத்துக் கொண்டார்.ஆண்டவரின் தூதர் இரண்டாம் முறை வந்து, அவரைத் தட்டி எழுப்பி, "எழுந்து சாப்பிடு: ஏனெனில் நீ நீண்ட பயணம் செய்ய வேண்டும் " என்றார்.அப்பொழுது அவர் எழுந்து உண்டு பருகினார். அவ்வுணவினால் வலிமை அடைந்த அவர், நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்.

இரண்டாம் வாசகம் எபேசியர் 4:30-5:2

கடவுளின் தூய ஆவியார்க்குத் துயரம் வருவிக்காதீர்கள். மீட்பு நாளை முன்னிட்டு உங்கள்மீது பொறிக்கப்பட்ட முத்திரையாக அவர் இருக்கிறார். மனக்கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள். ஒருவருக்கொருவர் நன்மைசெய்து பரிவு காட்டுங்கள்: கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்ததுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள். ஆகவே நீங்கள் கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாய் அவரைப்போல் ஆகுங்கள். கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.

நற்செய்தி யோவான் 6:41-51

"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே " என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள். "இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? அப்படியிருக்க, 'நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்' என இவர் எப்படி சொல்லலாம்? " என்று பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: "உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம். என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். '"கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்தருவார்' என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது. தந்தைக்குச் செவிசாய்ந்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர். கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக்கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். வாழ்வுதரும் உணவு நானே. உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர். உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திpலிருந்து இறங்கிவந்த இந்த உணவே. "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். "