ஆண்டவர் சூறாவளியினின்று யோபுக்கு அருளிய பதில்கருப்பையினின்று கடல் உடைப்பெடுத்து ஓடியபொழுது அதனைக் கதவிட்டு அடைத்தவர் யார்? மேகத்தை அதற்கு மேலாடையாக்கி, காரிருளைப் பொதிதுணியாக்கி, எல்லைகளை நான் அதற்குக் குறித்து கதவையும் தாழ்ப்பாளையும் பொருத்தி 'இதுவரை வருவாய், இதற்குமேல் அல்ல: உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க!″ என்று நான் இயம்பியபோது எங்கிருந்தாய் நீ?
கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கிறது. ஏனெனில் ஒருவர் அனைவருக்காகவும் இறந்தார். அனைவரும் அவரோடு இறந்தனர். இது நமக்குத் தெரியும். வாழ்வோர் இனி தங்களுக்கென வாழாமல் தங்களுக்காக இறந்து உயிர்பெற்றெழுந்தவருக்காக வாழவேண்டும் என்பதற்காகவே அவர் அனைவருக்காகவும் இறந்தார். ஆகவே இனிமேல் நாங்கள் எவரையும் மனித முறைப்படி மதிப்பிடுவதில்லை: முன்பு நாங்கள் கிறிஸ்துவையும் மனித முறைப்படிதான் மதிப்பிட்டோம். ஆனால் இப்போது அவ்வாறு செய்வதில்லை. எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ!
ஒரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, "அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள் " என்றார்.அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன. அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக் கொண்டிருந்தது.அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள், "போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா? " என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்து கொண்டார். கடலை நோக்கி, ;இரையாதே, அமைதியாயிரு " என்றார். காற்று அடங்கியது: மிகுந்த அமைதி உண்டாயிற்று.பின் அவர் அவர்களை நோக்கி, "ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா? " என்று கேட்டார். அவர்கள் பேரச்சம் கொண்டு, ' காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ! ' என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.