இயேசுவின் திருவுடல்,ரத்தப் பெருவிழா

முதலாம் வாசகம்
விப.24:3-8

அந்நாள்களில், மோசே மக்களிடம் வந்து ஆண்டவர் சொன்ன அனைத்து வார்த்தைகளையும் விதிமுறைகளையும் அறிவித்தார். மக்கள் அனைவரும் ஒரே குரலாக; "ஆண்டவர் கூறிய வார்த்தைகள் அனைத்தையும் நாங்கள் செயல்படுத்துவோம்" என்று விடையளித்தனர்.மோசே ஆண்டவரின் வாக்குகள் அனைத்தையும் எழுதி வைத்தார். அதிகாலையில் அவர் எழுந்து மலையடிவாரத்தில் ஒரு பலிபீடத்தையும், இஸ்ரயேலின் பன்னிரண்டு குலங்களுக்காகப் பன்னிரண்டு தூண்களையும் எழுப்பினார்.அவர் இஸ்ரயேல் மக்களின் இளைஞர்களை அனுப்பி வைக்க, அவர்களும் ஆண்டவருக்கு எரிபலிகள் செலுத்தினர். மாடுகளை நல்லுறவுப் பலிகளாகவும் ஆண்டவருக்குப் பலியிட்டனர். மோசே இரத்தத்தில் ஒரு பாதியை எடுத்துக் கலங்களில் விட்டு வைத்தார். மறு பாதியைப் பலிபீடத்தின் மேல் தெளித்தார். அவர் உடன்படிக்கையின் ஏட்டைஎடுத்து மக்கள் காதுகளில் கேட்கும்படி வாசித்தார். அவர்கள், "ஆண்டவர் கூறிய அனைத்தையும் நாங்கள் செயல்படுத்திக் கீழ்ப்படிந்திருப்போம்" என்றனர்.அப்போது மோசே இரத்தத்தை எடுத்து மக்கள்மேல் தெளித்து, "இவ்வனைத்து வார்த்தைக்குமிணங்க, ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ" என்றார்.

இரண்டாம் வாசகம்
எபிரே.9:11-15

சகோதரர் சகோதரிகளே,கிறிஸ்து தலைமைக் குருவாக வந்துள்ளார். அவர் அருளும் நலன்கள் இப்போது நமக்குக் கிடைத்துள்ளன. அவர் திருப்பணி செய்யும் கூடாரம் முன்னதை விட மேலானது, நிறைவு மிக்கது. அது மனிதர் கையால் அமைக்கப்பட்டது அல்ல; அதாவது, படைக்கப்பட்ட இவ்வுலகைச் சார்ந்தது அல்ல.அவர் பலியாகப் படைத்த இரத்தம் வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் இரத்தம் அல்ல, அவரது சொந்த இரத்தமே. அவர் ஒரே ஒருமுறை தூயகத்திற்குள் சென்று எக்காலத்திற்குமென அதைப் படைத்து நமக்கு என்றுமுள்ள மீட்பு கிடைக்கும்படி செய்தார். வெள்ளாட்டுக்கிடாய்கள், காளைகள் இவற்றின் இரத்தமும் கிடாரியின் சாம்பலும் தீட்டுப்பட்டவர்கள்மீது தெளிக்கப்படும்போது, சடங்கு முறைப்படி அவர்கள் தூய்மை பெறுகிறார்கள்.ஆனால் கிறிஸ்துவின் இரத்தம், வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகிறது! ஏனெனில் என்றுமுள்ள தூய ஆவியினால் தம்மைத்தாமே கடவுளுக்கு மாசற்ற பலியாகக் கொடுத்தவர் அவரே. இவ்வாறு அவர் புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராயிருக்கிறார். கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் அவரால் வாக்களிக்கப்பட்ட என்றும் நிலைக்கும் உரிமைப்பேற்றைப் பெறுவதற்கென்று இந்த உடன்படிக்கை உண்டானது. இது ஒரு சாவின் மூலம் ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சாவு முந்திய உடன்படிக்கையை மீறிச் செய்த குற்றங்களிலிருந்து மீட்பளிக்கிறது.

நற்செய்தி
மாற்கு 14:12-16,22-26

புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர், "நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" என்று கேட்டார்கள். அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்; "நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள். அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், "நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே?" என்று போதகர் கேட்கச் சொன்னார்" எனக் கூறுங்கள்.அவர் மேல்மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள்." சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, "இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்" என்றார்.பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர்.அப்பொழுது அவர் அவர்களிடம், "இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை ஒருபோதும் குடிக்க மாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். அவர்கள் புகழ்ப்பாடல் பாடிவிட்டு ஒலிவமலைக்குச் சென்றார்கள்.